Tuesday, January 17, 2006

ச்சு...ச்சு...பின்னிட்டாருய்யா!

இன்றைய தமிழ் திரைப்படங்களை நாம் எவ்வளவு தான் சாடினாலும், அவ்வப்போது பாலைவனச் சோலை போல சில இயக்குனர்கள் தங்கள் திறமையையும் தனித்தன்மையையும் நிலைநாட்டிக் கொண்டு தான் வந்து இருக்கிறார்கள். அப்படி என்னைக் கவர்ந்த, உச்சு கொட்ட வைத்த சில தமிழ் திரைப்படக் காட்சிகள்:

1. அழகன் திரைப்படத்தில் மறைந்த தங்களது தாயைக் காண அந்த வீட்டில் உள்ளக் குழந்தைகள் ஏங்கிக் கிடக்கும். ஆனால் வீட்டில் அம்மாவின் நினைவாக ஒரே ஒரு புகைப்படம் தான் இருக்கும். அதுவும் கதவைத் திறக்க முயற்சி செய்வது போல பின்பக்கம் திரும்பி நிற்பது போல் இருக்கும் புகைப்படம். தாயின் முகத்தைக் காண ஏங்கும் அந்த வீட்டின் கடைக்குட்டிக் குழந்தை, சோபாவின் மீது ஏறி நின்று புகைப்படத்தைத் திருப்பி பார்க்கும் தாயின் முகம் தெரிகின்றதா என்று. பல காட்சிகளில் விளக்கப் பட வேண்டிய ஒரு ஆழ்மன ஏக்கத்தை ஒரு ஷாட்டில் வடித்திருப்பார் பாலச்சந்தர். உண்மையிலேயே காமிராவைக் கொண்டு ஒரு கவிதை புனைந்திருப்பார்.

2. மகாநதி திரைப்படத்தில் ஜெயிலில் இருக்கும் தன் தந்தையைக் காண வரும் பெரிய மனுஷியாகி விட்ட மகள் ஷோபனா, ஆசி பெற தந்தையின் காலைத் தொடுவதற்கு குனிந்து ஜெயில் சுவரைத் தொடும் காட்சி. அதைக் கண்ட கமல்ஹாசன் கண்கலங்குவதும், அவர் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளும் கல்லையும் கரையச் செய்யும் காட்சி. இக்காட்சியை இயக்குனர் சந்தானபாரதி அமைத்தாரா அல்லது சினிமா வட்டாரத்தில் பேசப்படுவது போல இயக்கத்தில் தலையிட்டு கமல் தன் கற்பனையைப் புகுத்தினாரா தெரியாது. ஆனால் யார் அமைத்திருந்தாலும் ஒரு வகுப்பின் தொடல் அக்காட்சியில் புலப்படுகிறது. (புரியலையா...அதாங்க 'A Touch of Class')

3. மூன்றாவது காட்சி முந்தைய இரண்டினைப் போல விஷுவலாக இல்லாமல், ஒரு மனிதனின் தன்மை மாறுப்படுவதை அழகாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டமில்லாத காட்சி. படம் பதினாறு வயதினிலே. கிராமத்தில் கோமணம் கட்டிய சிறுவர்கள் ஒரு ஓணானை அடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த வழியாக வரும் சப்பாணி(கமல்)"டேய்!பாவம்டா அது அதை அடிக்காதீங்கடா" என்பார். அதைக் கேட்ட சிறுவர்கள் "போடா சப்பாணி! ஒனக்கு ஒன்னுமே தெரியாது. இராமரு காட்டுக்கு போகும் போது அணில் கல்லைக் கொண்டாந்து குடுத்துச்சு. ஆனா இந்த ஓணான் இருக்கே அது ஒன்னுக்கு தான் விட்டுக் குடுத்துச்சு" என்பார்கள். இதைக் கேட்ட சப்பாணி "டேய் விட்டுருங்கடா! ஓணான் இனிமே ஒன்னுக்கே விடாதுடா!" என்பார். சப்பாணி சொல்வதைப் பொருட்படுத்தாமல் சிறுவர்கள் ஓணானை அடித்துக் கொல்வார்கள். இந்த காட்சியைப் பார்க்கும் போது வெறும் சிரிப்புக் காட்சியாகத் தோன்றினாலும், கிளைமாக்ஸுக்கு மிகவும் உதவும் ஒரு காட்சி. ஒரு ஓணானைக் கூடக் கொல்ல விரும்பாத அப்பாவி சப்பாணி தான் விரும்பும் பெண்ணைக் காப்பதற்காகத் தன்னை விட வலிமையான பரட்டையின் தலையில் கல்லைப் போட்டுக் கொல்வதை ஒரு அற்புதமான காண்டிராஸ்டாகப் பயன்படுத்தியிருப்பார் இயக்குனர் பாரதிராஜா.
உங்களுக்கு தெரிந்த உச்சு கொட்டச் சொல்லும் காட்சிகளையும் சொல்லுங்களேன்.

15 comments:

Anonymous said...

அவ்வப்போது வருகின்றன என சொல்லி விட்டு, 15, 20 வருடங்களுக்கு முன் வந்த படங்ளின் உதாரண்ங்களை சொல்கிறீர்களே?

இப்போது சமீபத்தில் வந்த படங்கள் ஏதும் உங்கள் மனதை கவரவில்லையா? அல்லது இப்போதெல்லாம் அப்படி எங்கே என சொல்கிறீர்களா?

கைப்புள்ள said...

இவை அனைத்தும் பழைய படங்கள் என்பது உண்மை தான் Anonymous(உங்க பேரைச் சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும்). ஆனால் தற்போதைய படங்களில் இத்தகைய காட்சிகள் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஏனோ பதிவிடும் போது புது படங்கள் ஏதும் எனக்கு நினைவுக்கு வரவில்லை. நியூ படத்தைப் பற்றி தனி பதிவிட்டு விட்டதால் அதை இதில் சேர்க்கவில்லை. புது படக் காட்சிகள் உங்கள் நினைவிலிருந்தால் சொல்லுங்கள்!

கைப்புள்ள said...

தலைவா! பிச்சு உதறுறீங்களே!

Anonymous said...

Kamal sappani character explanation was classic mohanraj.. I have seen this movie many times, but never thought in that manner. Really classic.. your art of writing and interest in blog--- really great--Hats off to u....

சிவா said...

கைப்புள்ள! மூனு காட்சியும் அழகா சொல்லிருக்கீங்க. சட்டுன்னு ஒன்னும் நினைவுக்கு வரலை. வரும்போது சொல்லறேன்.

Anonymous said...

பெயர் சொல்லுவதில் எந்த பிர்சினையும் இல்லை. சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதால் சொல்லவில்லை.

எனக்கு பிடித்தது - இந்தியன் படத்தில் வரும் ஒரு காட்சி (இதுவும் அவ்வளவு புதுசு இல்லை தான்).

தாத்தா கமலை போலீஸ் கண்டு பிடித்தவுடன், இந்தியன் தாத்தா தன் மனைவி சுகன்யாவை ஒரு பார்வை பார்ப்பார். உடனே கிழவி காய்ந்து கொண்டு இருக்கும் துணியை எல்லாம் பைக்குள் வைப்பார்கள். ஒரு சிறிய விசயம் தான் என்றாலும் கணவரின் குறிப்பறிந்து செய்வதை அழகாக சொல்லி இருப்பார் ஷங்கர்.

இப்படிக்கு
ஷ்ங்கர் (உண்மை பெயர் தான்).

கைப்புள்ள said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஷங்கர்!

Chandravathanaa said...

வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.

நட்புடன்
சந்திரவதனா

கைப்புள்ள said...

//வணக்கம் மோகன்ராஜ்
இணைப்பைத் தந்ததற்கு நன்றி.
மகாநதி படத்தில் இன்னும் பல காட்சிகள் மனதைத் தொடுவதாய் உள்ளன.
மகளை விபச்சார விடுதியில் காணும் தந்தை... அந்தக் காட்சியும் என்னைப் பாதித்தது.
சிறைச்சாலைக்குள் கமலும் வெளியில் உறவுகளுமாய்.. அவைகளும்தான்.//

வாங்க மேடம்! தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. மகாநதி எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்...அது சரியாக ஓடவில்லை என்பதில் வருத்தம் எனக்கு இன்றும் உண்டு. இந்த படம் வரும் போது நான் பள்ளி மாணவன்...அப்போ அவ்வளவா புரியலை...ஆனா இப்ப வளந்ததுக்கப்புறம் புரியுது அது எவ்வளவு நல்ல படம்னு.

G.Ragavan said...

நல்ல காட்சிகளை நினைவு படுத்தீருக்கீங்க ஐயா....பிரமாதமான காட்சிகள்.

மகாநதி காட்சிய சந்தானபாரதி அமைச்சிருக்கவும் வாய்ப்பிருக்கு. அவரும் ஒரு நல்ல தரமான இயக்குனரே.

இன்னும் நிறைய இருக்கு கைப்புள்ள. பரீட்ச்சைக்கு நேரமாச்சு படத்தில் ஐயங்காராக வரும் சிவாஜி சிக்கன் 65 வாங்கும் காட்சி. மகனுக்காக போலி கேள்வித்தாளை வாங்கி அவமானப்படும் காட்சி.

கருத்தம்மா படத்தில் "காடு பொட்டக்காடு" பாட்டு முழுவதுமே.

பொற்காலம் படத்தில் முரளியின் தங்கச்சி இறந்ததும் முரளியை வடிவேலு நாக்கைப் பிடுங்கிக்கிறாப்புல கேள்வி கேட்கும் காட்சி.

அக்னி சாட்சி படத்துல குழந்தை பொம்மை போல இருக்கும் மெழுகுவர்த்தியைக் கொழுத்தும் பொழுது சரிதா ஆவேசப்படும் காட்சி. அதே படத்தில் வரும் "கணாக்காணும் கண்கள் மெல்ல" பாடல் காட்சி.

இன்னும் நிறைய சொல்லலாம்.

கைப்புள்ள said...

வாங்க ராகவன்,
நீங்களும் நல்ல அருமையான காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.

அதே போல அழகி படத்தில் நந்திதா தாசின் மகன் அடிபட்டு ரோட்டில் கிடக்கும் போது பார்த்திபனின் முகபாவம், அதே படத்தில் வரும் சிறுவர்களின் பள்ளிக்கூட காட்சிகள் இவற்றையும் சொல்லலாம்.

தமிழ் தாசன் said...

நீங்கள் தேர்ந்தெடுத்த காட்சிகளும், விளக்கங்களும் மிக அருமை.

இதோ மற்றொன்று...

"ரமணா" படத்தில் ரமணாவிற்காக் ( விஜயகாந்த் ) மக்கள் போராட்டம் செய்யும் போது, அந்த காவல்துறை அதிகாரி தமிழர்களை "Sentimental Idiots" என்று சொல்லி "உங்கள் ஊரில் எல்லாருக்கும் பின்னாடி ஒரு கூட்டம்" என்பார். பின்பு கைது செய்யப்பட்டவர்களின் பெற்றோர்கள் வந்து அழும் போது, ஒரு தாய் தன் மகனிடம் "அய்யா... அடிச்சாங்கன்னா..தாங்கிக்கோயா.. பேர மட்டும் சொல்லாதே" என்பார். அப்போது யூகிசேது சொல்வார்.

" Sir, We are not Sentimental Idiots sir. தமிழர்கள் அவ்வளவு சீக்கிரம் யார் மேலேயும் அன்பு வைக்க மாட்டாங்க. அப்படி வச்சுட்டா, கடைசி வரைக்கும் மாத்திக்க மாட்டாங்க. இங்க தொண்டர்களைத் தப்பா பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் உண்டு. ஆனா தலைவர்களைத் ஏமாத்தின தொண்டர்கள் இல்லை சார் ".

மிக மிக தெளிவான, உண்மையான வாக்கியங்கள்...

கைப்புள்ள said...

வாங்க தமிழ்தாசன்,
முதல் முறையா நம்ம பதிவுக்கு வரீங்க. நீங்க சொன்ன காட்சியும் மிக அருமையானது.

//இங்க தொண்டர்களைத் தப்பா பயன்படுத்திக்கொண்ட தலைவர்கள் உண்டு. ஆனா தலைவர்களைத் ஏமாத்தின தொண்டர்கள் இல்லை சார்//
இது நூத்துக்கு நூறு உண்மை.

VSK said...

'மகாநதி' படத்தில் ஆளாளுக்கு ஒரு காட்சி சொன்னீர்கள்!
என்னை மிகவும் நெகிழ வைத்த காட்சி,

தூங்கும் மகளை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கமல்
கனவிலும் வந்து மிரட்டும் அந்தக் கயவர்களை கண்டு பயந்து,
வங்காளத்திலும், தமிழிலும் 'விட்டுர்றா, தே.....பயலெ, வலிக்குதடா'
என்று பிதற்றும் போது, குபீரென ஒரு அழுகையைக் கொண்டு வருவாரே,
இரு முறையும் அழுதிருக்கிறேன் நானும்.
இதற்கெனவே, அந்த ஒரு 'மிகவும் பிடித்த' படத்தை
இது நாள் வரை பார்க்காமல் இருந்தேன்
முந்தா நாள் சன் TV-யில் போடும் வரை.

அற்புதமான படம், அர்புதமான நடிகர்!

கைப்புள்ள said...

வாங்க SK,
மிகவும் நெகிழ்ந்து எழுதியிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன். முன்பெல்லாம் திரைப்படங்களில் வரும் காட்சிகளைப் பார்த்து பெரிதாக எந்த ஒரு பாதிப்பும் வராது. குறிப்பாக மேலே சொன்ன மாதிரியான காட்சிகள் வரும் போது 'நெஞ்சை நக்குறாங்கடா' என்று கமெண்ட் அடித்துவிட்டு சென்று விடுவதுண்டு. பாசமலர் படத்தில் 'கை வீசம்மா கைவீசு'என்று சிவாஜி பேசி அழும் காட்சியைப் பார்த்து தந்தையார் கண்கலங்கியதைக் கண்டு பரிகசித்ததும் உண்டு. ஆனால் இப்போதெல்லாம் இம்மாதிரி காட்சிகளைக் காணும் மாத்திரத்திலேயே கண்களில் ஈரம் துளிக்கிறது. அதே காட்சி தான்...அதை காண்பதும் அதே ஆள் தான்...ஆயினும் அன்று இல்லாத தாக்கம் இன்று ஏற்படுகிறது...இதற்கு காரணம் சொல்லத் தெரியவில்லை...வயதாகிவிட்டதால் நமக்கு வந்த புரிதலா?