Monday, December 29, 2008

மூனைத் தொட்டது யாருடா? - குவிஜ் பதிவு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி பதில் பதிவு இது.

1. மகாபாரதம் மற்றும் பாப்ர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு. ( இந்த கேள்வியின் இரண்டாம் பாதியை நேற்று தவறோடு வெளியிட்டு விட்டேன். நேற்று இக்கேள்வியின் முதல் பாதியைச் சரியாகச் சொல்லியவர்கள், இதனை மீண்டும் முயலும் தேவையில்லை. தவறுக்கு வருந்துகிறேன்)
4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்? சினிமா இல்லாமே குவிஜே இல்லையான்னு ஒவ்வொரு தரமும் கேக்கற நம்ம கொத்ஸுக்காகவாக்கும் இந்த கேள்வி.

பல பதிவுகள்ல பதிவோட தலைப்புக்கும் பதிவுக்கும் உள்ள தொடர்பை எக்கச்சக்க பில்டப்பு எல்லாம் குடுத்து கடைசியிலே சொல்லிருக்கேன். இந்த பதிவோட தலைப்புக்கும் மூனாவது கேள்விக்கும் சம்மந்தம் இருக்குன்றதுனாலே இந்த தலைப்பை வைக்கலை. பின்ன?..."மூனைத் தொட்டது யாருடா"ன்னு நான் உங்களை யாரையும் மரியாதை குறைவா கேட்டேன்னும் நெனச்சிக்காதீங்க. அப்படியே கேட்டுட்டாலும் மூனைத் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங்க் இல்லை அமிர்தலிங்கம்னு நீங்கல்லாம் ரொம்பச் சரியாச் சொல்லிடுவீங்கன்னும் எனக்குத் தெரியும். அப்புறம் மூனைத் தொட்டது யாருடான்னு எதுக்குடா தலைப்பை வைச்சேன்னு தானே கேக்கறீங்க? ஹி...ஹி...அதொன்னுமில்லீங்கண்ணா...இன்னையோட கைப்புள்ளக்கு மூனு வயசாச்சு. டிசம்பர் 29, 2005 அன்னிக்கு தமிழ் ப்ளாக் எல்லாம் நான் ஆரம்பிக்க சான்ஸே இல்லை, அதெல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலைன்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட கூகிள் சாட்ல வாய்ச் சவடால் விட்டுட்டு அன்னிக்கு சாயந்திரமே ஆரம்பிச்சது தான் இந்த கைப்புள்ள காலிங் ப்ளாக். இவ்வளவு நாளா எனக்கும் ஆதரவு தந்துட்டிருக்கற உங்க எல்லாத்துக்கும் என் மனமார்ந்த நன்றிங்கங்கோ.

Wednesday, December 24, 2008

'தலை'நகரம் - 6 : FDC மற்றும் M/s

ஃபிலாட்டெலி(Philately) என ஆங்கிலத்தில் வழங்கப்படும் பொழுதுபோக்கை நாம் தமிழில் "தபால் தலை சேகரிப்பு" என்று மொழிபெயர்த்தாலும், தபால் தலை அல்லது அஞ்சல் வில்லைகள் மட்டும் சேகரிப்பது தான் இப்பொழுதுபோக்கா என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இப்பதிவில் "தபால் தலை சேகரிப்பு" எனும் பொழுதுபோக்கில்வேறு என்னென்ன அடக்கம் என்பதைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றைச் சொல்கிறேன்.

அதற்கு முன்னாடி ஒரு நன்றி நவிலல். ரொம்ப நாளா வலைப்பூ பக்கமே வராம இருக்கோமே, இன்னிக்கு எதாச்சும் எழுதுவோம்னு நெனச்சேன். ஆனா அதே நேரம் சோம்பல் என்னை ஆட்கொண்ட காரணத்தால், போன வருடம் இதே நேரம் எழுதிய பதிவு எதையாவது எடுத்து மீள்பதிவு செய்திடுவோம்னு நெனச்சேன். அப்போ தான் போன வருடம் டிசம்பர் மாதம் "சருவாக்கள்" என்ற மனித இனம் அழிக்கப்பட்டதை நினைவு கூறும் உருகுவே நாட்டுத் தபால்தலை பற்றி எழுதியிருந்த "தலை நகரம் -3"என்ற பதிவைப் பார்த்தேன். அப்பதிவை விக்னேஸ்வரன் வலைச்சரத்தின் ஆசிரியராக செப்டம்பர் மாதம் இருந்த போது பொழுதுபோக்குகள் பற்றிய தன்னுடைய பதிவில் இணைத்திருந்ததையும் என் பதிவுகளைப் பற்றி எழுதியிருந்ததையும் கண்டேன். அதை கண்டதும், சோம்பல் பறந்து மனதில் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது. தபால்தலை சேகரிப்பு பற்றிய ஒரு புதிய பதிவை எழுதும் எண்ணமும் அப்போதே தோன்றியது. இவ்வேளையில் நண்பர் விக்னேஸ்வரனுக்கு காலம் கடந்ததாய் இருந்த போதிலும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தபால் தலை சேகரிப்பு என்றால் வெறும் அஞ்சல் உறைகளின் மீது ஒட்டப்பட்டு வெளிவரும் ஸ்டாம்ப்களைச் சேகரித்தல் என்று தான் நானும் ஐந்தாண்டுகள் முன்பு வரை நம்பி வந்தேன். ஆனால் தபால் தலை சேகரிக்கும் பொழுதுபோக்கில் தபால்தலைகளைத் தவிரவும் சேகரிக்கக் கூடிய வேறு பொருட்களும் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை -
1. முதல் நாள் அஞ்சல் உறை (First Day Cover)
2. குறுந்தாள் தபால் தலைகள் (Miniature Sheet)

சேகரிப்பிற்கான தபால் தலைகளை(Philately Stamps) வெளியிடும் போது ஒவ்வொரு நாட்டு தபால்துறையும் அவ்வாண்டில் என்னென்ன தபால்தலைகளை வெளியிடப் போகிறார்களோ, அதை மாதவாரியாக அட்டவணை படுத்தி ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள். இவ்வகை தபால் தலைகளை முதல் முறையாகப் பயன்பாட்டிற்காக வெளியிடும் போது ஒரு சிறப்பு அஞ்சல் உறையையும் வெளியிடுவார்கள். இவ்வஞ்சல் உறையை முதல் நாள் அஞ்சல் உறை(First Day Cover)என்கிறார்கள். கீழே உள்ளது 2 ஆகஸ்டு 2008 அன்று இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்ட அல்டாப்ரா ஆமைகளைப் பற்றிய தபால்தலையுடன் வெளியிடப்பட்ட சிறப்பு முதல் நாள் அஞ்சல் உறை. இவ்வுறையைப் பார்த்தீர்கள் ஆனால் சாதாரண உறை போல அல்லாமல், வெளியிடப்படும் தபால்தலையுடன் தொடர்புடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்றும் சாதாரண அஞ்சல் உறைகள் போல அல்லாது வண்ணமயமாக இருக்கும். இச்சிறப்பு அஞ்சல் உறையின் மீது, அன்று வெளியிடப்படும் தபால்தலைகளை ஒட்டி அன்றைய தேதியுள்ள ஒரு சிறப்பு முத்திரையையும் குத்தி தபால்துறையினர் வெளியிடுவர். தபால் தலைகளின் மீது குத்தப்படும் முத்திரைகளை, தபால் துறையினரும் Philately ஆர்வலர்களும் "Cancellation" என்று அழைக்கின்றனர். இம்முத்திரை குத்தப்பட்டதும் பாவிக்கப்படாத தபால் தலையாக இருப்பது பாவிக்கப்பட்ட தபால் தலையாக மாறுவதன் காரணமாக, இம்முத்திரை குத்துதலை "Cancelling" என்று அழைக்கிறார்கள். முதல் நாள் அஞ்சல் உறைகளின் மீது குத்தப்படும் இம்முத்திரைகளை Special Cancellation என்று அழைக்கின்றனர். இந்த சிறப்பு முத்திரையும் தபால் தலை முதன்முதலில் வெளியிடப்படும் அந்தவொரு நாள் மட்டுமே பயன்படுத்தப்படும். அல்டாப்ரா ஆமைகளைப் பற்றிய தபால்தலை வெளியீட்டின் போது ஆமை வடிவிலான முத்திரை பயனபடுத்தப்பட்டதையும், அது வெளியான தேதியான 2 ஆகஸ்ட் 2008 என்பதனையும் முத்திரையில்(Cancellation) காணலாம். தபால்தலைகள் மட்டும் அல்லாது, இம்முதல் நாள் அஞ்சல் உறைகளுக்குகாகவும் அதன் மேல் குத்தப்படும் சிறப்பு முத்திரைகளின் அழகுக்காகவும் First Day Covers(FDC)களை சேகரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.


புதிதாய் வெளியிடப்படும் தபால்தலைகளைப் பற்றிய தகவல்களைத் தாங்கிய ஒரு செய்தித்தொகுப்பானையும்(Brochure) தபால்துறை வெளியிடும். இத்தொகுப்பில் தபால் தலை சொல்லும் செய்தியையும், அதன் வரலாற்றையும், மற்றும் சில டெக்னிக்கல் குறிப்புகள்(அச்சான முறை, அச்சிடப்பட்ட எண்ணிக்கை, வடிவமைத்தவர் பெயர்) முதலியனவற்றையும் குறிப்பிட்டு இருப்பார்கள். அல்டாப்ரா ஆமையினைப் பற்றிய செய்தித் தொகுப்பான் கீழே உள்ள இரு படங்களில்.


இத்தொகுப்பில் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்த "அத்வைத்யா"வினைப் (Adwaitya) பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்டாப்ரா ராட்சத ஆமையினத்தைச் சேர்ந்த இவ்வாமை 2006 ஆம் ஆண்டு இறக்கும் போது அதன் வயது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாம். இந்திய பெருங்கடலில் உள்ள அல்டாப்ரா எனும் தீவில் இருந்து பெறப்பட்ட இவ்வாமை, 1757ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் க்ளைவ் என்பவருக்குப் பரிசளிக்க வேண்டி ஆங்கிலேய மாலுமிகளால், இன்னும் மூன்று ஆமைகளுடன் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் வழியில் கொண்டு வரப்பட்டதாம். 1857இல் நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போர், 1905இல் நடந்த பெங்கால் பிரிவினை, இரண்டு உலக யுத்தங்கள், இந்தியா விடுதலை அடைந்தது போன்ற இருநூறு ஆண்டுகளைக் கடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளதாம். அலிப்பூர் ஜூவில் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாமையைக் கண்டிருக்கிறார்களாம்.

இந்திய இராணுவத்தின் சீக்கிய படையின் 14வது பிரிவான நாபா அகால் பிரிவின் 250ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி 21 ஜூலை 2008 அன்று இந்திய தபால் துறையினரால் வெளியிடப்பட்ட தபால் தலையும் முதல் நாள் அஞ்சல் உறையும் கீழே.


சிறப்பு முத்திரை குத்தப்பட்ட முதல்நாள் அஞ்சல் உறையைக் கண்டதும் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். இவ்வஞ்சல் உறைகளை, மற்ற அஞ்சல் உறைகளைப் போன்று கடிதப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியுமா என்று. இதற்கான பதில் - ஆம், முடியும். முதல் நாள் அஞ்சல் உறையினுள் தங்கள் கடிதத்தை வைத்து வேறொருவருக்கு அனுப்ப முடியும். ஆனால் உறையின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் தபால்தலை வெளியிடப்படும் அன்று மட்டும் தான் இதைச் செய்ய முடியும். ஏனென்றால் தபால் தலையின் மீது குத்தப்பட்டிருக்கும் சிறப்பு Cancellation முத்திரையில் வெளியீட்டு நாள் குறிக்கப் பட்டு இருக்கிறது பாருங்கள், அதன் காரணத்தால். வெளியீட்டு நாள் அன்று கடிதப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பெறும் அஞ்சல் உறையினை சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றை Real Posted FDC என்று சொல்கிறார்கள். கீழே இருக்கும் படம் சீனாவைச் சேர்ந்த சேகரிப்பாளர் ஒருவருக்கு, அவருடைய முகவரியை எழுதி இந்தியாவிலிருந்து வெளியீட்டு நாள் அன்று அனுப்பி வைக்கப்பட்ட "மல்லிகைப்பூ" பற்றிய தபால் தலையும் முதல் நாள் அஞ்சல் உறையும். ஏப்ரல் 2008இல் வெளியிடப்பட்ட இந்த குறிப்பிட்ட "மல்லிகைப்பூ" தபால் தலை நறுமணம் மிக்க தபால் தலை (Perfumed Stamp) என்பது அதன் சிறப்பு. இத்தபால் தலையினை முகர்ந்து பார்த்தீர்கள் ஆனால் மல்லிகைப்பூ நறுமணம் கமழும்.


தபால் தலைகளை அச்சிடும் போது, அதன் நீள அகலத்தைக் கருத்தில் கொண்டு 100 அல்லது 150 தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக அச்சிடுவது வழக்கம். ஆனால் சேகரிப்பிற்கான தபால் தலைகளை இவ்வாறான பல தபால் தலைகளைக் கொண்ட ஒரு தாளாக அச்சிடாமல், சில தபால் தலைகள் அடங்கிய ஒரு சிறிய தாளாகவும் அச்சிடுவார்கள். இதனை "Miniature Sheet" என்கிறார்கள். குறுந்தாள் தபால்தலைகள் என்பது இதனைத் தமிழில் குறிப்பிடுவதற்காக நானே செய்த மொழிபெயர்ப்பு :)

மினியேச்சர் தாள்களும் வண்ணம் மிக்கவை, காண்போர் மனதைக் கவறுபவை. இவைகளையும் தபால் தலை சேகரிப்பின் போது சேகரிக்கலாம். இந்த மினியேச்சர் ஷீட்களில் இருந்து தபால் தலைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தோ அல்லது முழு தாளையுமே அஞ்சல் உறையின் மீது ஒட்டியோ, கடிதப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சேகரிப்பிற்காகக் குறைந்த எண்ணிக்கையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இத்தாள்களை யாரும் மேற்கூறியவாறு பயன்படுத்துவதில்லை.

கீழே இருப்பது இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் எழுதிய "டாக் கர்" எனும் நாடகத்தினை நினைவு கூறுவதற்காக வெளியிடப்பட்ட ஒரு குறுந்தாள் தபால் தலை. தபால் தலையைப் பிரித்தெடுப்பதற்கான perforation தாளுக்குள்ளே இருப்பதைக் காணுங்கள்.


இந்தியாவில் உள்ள பண்டிகைகளைப் பற்றிய ஒரு மினியேச்சர் தாள். இதில் ஒரே தாளில் மூன்று வெவ்வேறு தபால் தலைகள் இருப்பதைக் கவனியுங்கள். சில தபால் தலைகள் மினியேச்சர் ஷீட்களாக மட்டும் கிடைக்கும், சில பெரிய தாள்களாக மட்டுமே அச்சிடப்பட்டு வெளிவரும்(அவற்றிற்கு மினியேச்சர் இருக்காது), சில தபால் தலைகள் இரண்டு வகையாகவும் அச்சிடப்பெறும். பண்டிகைக்களைப் பற்றிய இம்மூன்று தபால் தலைகளும் தனித்தனியாகவும் பெரிய தாள்களிலும் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது.


இந்தியத் தபால் துறையும் சீனத் தபால் துறையும் கூட்டாக வெளியிட்ட "பௌத்த கோயில்கள்" பற்றிய இரு தபால் தலைகளைக் கொண்ட ஒரு மினியேச்சர் தாள் கீழே. இந்தியாவில் உள்ள மகாபோதி ஆலயமும், சீனாவில் உள்ள வெள்ளை குதிரை ஆலயமும் இத்தபால் தலைகளில் காட்டப்பட்டிருக்கின்றன.


அடுத்த கட்டமாக, தபால் தலைகளைச் சேகரிக்கும் முறைகள் என்னென்ன என்பதனைப் பற்றி வரும் பதிவுகளில் சொல்கின்றேன். வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.