Tuesday, February 28, 2006

The Bossஉம் ஜூலியர்களும்


Inviting all Julians to be a folio in The Boss’ Universal History.

சூப்பர் ஸ்டாரின் பிரபஞ்ச வரலாற்றில் ஒரு பகுதியாக ஜூலியர்களுக்கு ஓர் அரிய அழைப்பு.

Wednesday, February 22, 2006

எச்சரிக்கை: புதிய தற்கொலை படை


கொஞ்ச நாளைக்கு தந்தூரி வேணாமுங்க!...70 டிகிரியில நல்லா சமைச்சு சாப்புடலாமாம்...ஒன்னும் பண்ணாதாம்.
(நன்றி:எண்டிடிவி செய்திகள்)

Sunday, February 19, 2006

தடிப்பசங்க : #2

காட்சி 2: சிவாஜியும் ரஜினியும்

ஒரே வீட்டில் ஒருத்தரு தீவிர சிவாஜி ரசிகனா இருக்காரு, இன்னொருத்தர் அதிதீவிர ரஜினி ரசிகனா இருக்காரு...அப்படி இருந்தா என்னாவும்? மூணாவதா ஒரு கமல் ரசிகரு இருக்காரு பாருங்க அவருக்கு தான் ஒரே கொன்டாட்டம். ரெண்டு பேரையும் நெண்டி விட்டுட்டு வேடிக்கை பாக்குறதுல ஒரு பரமானந்தம் கெடைக்குது பாருங்க...வா ரே வா!

"மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த..."
நாட்டிய பேரொளி பத்மினி மயில் போல தோகை விரித்தாட கம்பீரமாய் நடந்து வருகிறார் சோழ மன்னன் சிவாஜி கணேசன். "ஆகா! அங்க பாருங்கடா எங்க ஆளை! ஸ்டைலைப் பாருங்கடா! அந்த நடையை இன்னிய தேதிக்கு ஒரு பய நடக்க முடியுமாடா!" சிதம்பரம் வடுகநாதா தியேட்டரில் தான் தன் நண்பர்களுடன் பார்த்து ரசித்த பாட்டை ஏதோ ஒரு சேனலில் கண்டதும் எல்லையில்லா சந்தோஷத்தில் அப்ஸ் சொல்கிறார்.

"டேய் மோகன்ராஜ்! நிறுத்துடா அந்த டிவியை! எனுமோ இவுங்க ஆளு வாத்து மாதிரி நடந்து வருவாராம் அதெல்லாம் நாங்க பாக்கணுமாம். எல்லாம் நம்ம நேரம்!" ஒப்பன் பண்ணா ரஜினி ரசிகர் நச்சுனு போடறாரு ஒரு போடு.

தம்பி சொல்லுக்கு மறுபேச்சு ஏது? எக்ஸ்ட்ராவா கைப்பு ஒரு உள்குத்து- "அதானே! உங்காளு பெரியாளுன்னா அது உங்களோட! ஏன் அவரை மத்தவங்களோட கம்பேர் பண்ணனும்?"

"எவனாவது டிவி மேல கையை வச்சீங்க? நடக்கறதே வேற!"

"ஏன் என்னா பண்ணுவீங்களாம்? இந்த பிளேடையெல்லாம் எங்களால தாங்கிக்க முடியாது! இதுக்கு டிஸ்கவரியே பாக்கலாம்" - இது ரஜினி ரசிகரான தம்பி.

"எது! இது பிளேடா! அதானே நல்லதெல்லாம் உங்களுக்கு எங்க புடிக்கும். மண்டையிலே பூசணிக்காயை உடைச்சு அஜக்குன்னா அஜக்கு குமுக்குன்னா குமுக்குன்னா தான் நீங்கல்லாம் பார்ப்பீங்க?"

"ஆமா! எங்காளு கிட்ட நிக்க முடியுமா உங்காளால? அந்த பாட்டை தியேட்டர்ல போயி பாருங்க எத்தனை பேரு எந்திரிச்சு ஆடறாங்கன்னு தெரியும்!"

"ஆமா! இப்படி கையைக் காலை உதைச்சுக்கறதெல்லாம் தியேட்டரில் போய் பாக்கணுமாக்கும்?"

சபாஷ் சரியான போட்டி. கைப்புள்ள நீ எஞ்சாய்மா.

"பின்ன கைவீசம்மா கைவீசு கடைக்கு போலாம் கைவீசுன்னு கண்ணு போயி அழுவறதை தான் போயி பார்ப்பாங்களா?" பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்சுல அட்டாக்குறார் இளவல்.

"அது தான்டா நடிப்பு! ஒரு பயலால அழுது நடிக்க முடியுமா அந்த மாதிரி?"

"கமலகாசன் கூட தான் அழுதிருக்காரு இந்த மாதிரி எத்தனையோ படத்துல?" - இது நான்.

"எல்லாம் சிவாஜியைப் பார்த்து கத்துக்கிட்டது தான். இன்னிய தேதிக்கு சிவாஜியோட இன்ஃப்ளூயன்ஸ் இல்லாம யாராலுமே நடிக்க முடியாது. அவரு நடிக்காத வேஷம் கெடையாது"

"சிவாஜியால இந்தியன் தாத்தா மாதிரி வேஷம் போட்டு நடிக்க முடியுமா?"

"அதெல்லாம் ஏற்கனவே சிவாஜி செஞ்சது தான். திருவருட்செல்வர்லேயே அப்பரா வருவாரு பாரு. முகத்துல சா டஸ்ட் (மரத் தூள்) ஒட்டிக்கிட்டு கண்ணைச் சுருக்கிக்கிட்டு ஒரு பார்வை பாப்பாரே...அந்த மாதிரி கஷ்டமான வேஷமெல்லாம் அப்பவே பண்ணது தான். ஒன்னும் தெரியாம வந்துட்டானுங்க பேசறதுக்கு?" சிவாஜியின் எல்லா படத்தையும் பாத்து புள்ளிவிவரத்தை மனப்பாடமா வச்சுருக்குற அப்புச்சி முன்னாடி கமல் ரசிகர் கைப்புள்ள கப்சிப்.

ஆனா புள்ளிவிவரம் இல்லன்னாலும் ரஜினி ரசிகரு எதப் பத்தியும் கவலை படற ஆளில்லை"எங்காளு இந்த மாதிரியெல்லாம் அழுதுட்டு உக்காந்திருக்க மாட்டாரு. மொதல்ல எங்காளுக்கு கண்ணே போகாது. கண்ணு போறதுக்கு முன்னாடி அடிக்க வர்றவனுங்க எல்லாம் காலியாயிருப்பானுங்க".

"நீ படத்தையும் ஒழுங்கா பாக்கலை. ஒனக்கு நடிப்புன்னாலும் என்னன்னு தெரியாது. உன்னை மாதிரி முட்டாப்பசங்க இருக்குறதுனால தான் லூசுத்தனமா என்ன நடிச்சாலும் படம் ஓடுது"

"அதானே?" இது நான்.

"ஸ்டைல் ஸ்டைலுங்கிறியே! புதிய பறவைல சிவாஜி சிகரெட்குடிக்குற ஸ்டைல் யாராச்சும் பண்ண முடியுமா? செயின் ஸ்மோக்கர்சே தோத்துடுவானுங்க"

"அது எல்லாம் ஒரு ஸ்டைலா? சிகரெட் தூக்கி போட்டு உங்காளால பிடிக்க முடியுமா?" ரஜினி ரசிகரு.

"அதானே?" இது உள்குத்துக்குள்ள உள்குத்து. குத்துபவர் கைப்ஸ்.

"அந்த மாதிரி லூசுப் பயலுங்க தான் புடிப்பானுங்க. எஜீக்கேட்டட் ஆளு எவனும் இந்த மாதிரி கோமாளித்தனமெல்லாம் செய்ய மாட்டான்"

"அலோ! என்னைப் பத்தி எது வேணாலும் பேசுங்க. எங்க தலைவரைப் பத்தி பேசுனீங்க சும்மா இருக்க மாட்டேன்"

"உண்மையத் தானே சொல்றேன். நீ தானே ஆரம்பிச்சே நான் சிவாஜி பாட்டைப் பத்திப் பேசுனதும் டிவியை நிறுத்த சொன்னே!"

"அதானே!"

"நீங்க தானே ஆரம்பிச்சீங்க இந்த மாதிரி நடக்க முடியுமா அப்படி இப்படின்னு"

"அதானே?"

"முரளி! கொஞ்சம் இரு! ரொம்ப நேரமா அதானே அதானேனு ஒரு நண்டு கிண்டிக்கிட்டே கெடக்குது" - ஆகா! அப்ஸு உஷாராயிட்டாரு.

"ஆமாங்க டாடி! இவன் தான் ரொம்ப நேரமா கிண்டி வுட்டுக்கிட்டே இருக்குறான்?" - லேசா கைப்சுக்கு புளி கரைக்குது. பின்ன ரஜினி ரசிகர் கையில் கெடச்சா அப்பளமாக்கிடுவாரே!

நெஜ சிவாஜி ரசிகரும் 'வர்றப் போற சிவாஜி' ரசிகரும் ஒன்னா சேர்ந்துக்குறதுக்கு முன்னாடி கிடைச்ச சைக்கிள் கேப்ல கைப்புள்ள எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.

Friday, February 17, 2006

3டி திருவிழா - 6

பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது...???

Thursday, February 16, 2006

ஆண்கள் மட்டும்

மத்திய பிரதேசத்துல இருக்குற எனக்கே இந்த உண்மை தெரிஞ்சிருக்கு...உலகத் தமிழர்கள் உங்களுக்கெல்லாம் தெரியலைன்னா எப்படி?

நான் இருக்கும் போது எப்படி உங்களுக்குச் சொல்லாம விட்டுடுவேன்? கேட்டுக்கங்க சாமி! அப்புறம் கைப்பு சொல்லாம விட்டுட்டான்னு யாரும் சொல்லப்படாது...ஆண்களுக்காகவே பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்ட SMS தத்துவமாம்.

"நாமளா அடிச்சா அது மொட்டை...அதுவா விழுந்தா அது சொட்டை"

இந்த சிதம்பர ரகசியத்தை இப்ப எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டீங்களா?...உடு ஜூட்.

வெளியூரு சிரிப்பு

வரிசையில் வாங்க!


ஸ்மைல் ப்ளீஸ்


ஐயா...வணக்கம்ங்க!


திருடர்கள் ஜாக்கிரதை


அண்ணே...அண்ணே!


அம்மா பால்


ஆ...ஆ...ஆ...


அபாயமா அப்படின்னா?

Tuesday, February 14, 2006

கேலிகிராஃபி(Calligraphy)

கேலிகிராஃபி(Calligraphy) பற்றி நம்மில் பலரும் கேள்வி பட்டிருப்போம். கேலிகிராஃபி என்பது அழகிய கையெழுத்து கலை. "கேலோஸ்"(Kallos) = 'அழகு' மற்றும் "கிராஃபி(Graphy)='கையெழுத்து' எனும் கிரேக்க சொற்களின் கூட்டினால் வந்ததே கேலிகிராஃபி எனப்படும் அழகிய கையெழுத்து கலை.

எது கேலிகிராஃபி?
கையினைக் கொண்டு எழுதப்படும் அழகிய எழுத்துகள் அனைத்துமே கேலிகிராஃபிக்குள் அடக்கம். மேலும் அறிய இங்கு சுட்டவும். இச்சுட்டியில் கேலிகிராஃபியின் வகைகள், பல நாட்டு பாணிகள்,கேலிகிராஃபி வல்லுநர்கள் போன்றவற்றைப் பற்றி விரிவாகக் காணலாம். சரி! கேலிகிராஃபிக்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாமா? பேனாவினைக் கொண்டு கையால் எழுதப்பட்ட இவ்வெழுத்துகளைக் காணுங்கள். இட்டாலிக்(Italic) எனப்படும் எழுத்து பாணியில்(Writing style) அமைந்துள்ள ஒரு மாதிரி இது.


பார்த்ததும் என்ன தோன்றுகிறது?
1. அச்சடித்தது போல் உள்ள இவ்வெழுத்துகளை எவ்வாறு கையினால் எழுதுகிறார்கள்?
2. எழுத்துகளுக்கு இடையே ஒரு ஒழுங்கும் அழகும் தெரிகிறதே...அது எவ்வாறு சாத்தியமாகிறது?
3. எவ்வாறு பயில்வது?
4. கேலிகிராஃபியினால் யாருக்கு என்ன புண்ணியம்?
இந்தக் கேள்வியெல்லாம் தோன்றுகிறதா?

இது பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள், எனக்கு தெரிந்ததைச் சொல்லுகிறேன். நட்பு குறித்து நான் ஆங்கிலத்தில எழுதிய ஒரு வாசகத்தையும் கீழே காணுங்கள்.

3டி திருவிழா - 5

இன்னிக்கு ரெண்டு படம். முதல் படம் நாம பார்த்து பழக்க பட்ட ரகம் தான்(SIRDS). ஆனாலும் என்ன ஒளிஞ்சுட்டு இருக்குன்னு சரியாச் சொல்லணும்.

க்ளூவா?:"வல்லவன் வகுத்ததடா! கர்ணா"

இரண்டாவது படமும் SIRDS தான். ஆனா இதுல ஒரு வித்தியாசம். பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரிஞ்சுடும்.

க்ளூ: ஆங்கிலமா, ஆங்கிலேயர் அல்லாதவர் இதுல ஒளிஞ்சுட்டு இருக்காரு. யார் அவரு?

அப்புறம் இரண்டு படத்தையும் தொடர்பு படுத்தி இன்னைய தேதிக்கு ரொம்ப பிரபலமான ஒரு வாசகம் சொல்லணும். இது ரொம்ப ரொம்ப சுலபம். யார் மிகச் சரியா சொல்றாங்கன்னு பார்ப்போம்?

Monday, February 13, 2006

PABT - பைலட் ஆக ஆசையா?

என்னோட இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து - 2 பதிவைப் படிச்சவங்களுக்கு PABT தேர்வு பத்தி தெரிஞ்சிருக்கும். கீழே உள்ள சுட்டிக்கு போங்க. அதுல உள்ள சவால் கண்டிப்பா உங்களை மண்டையைப் பிச்சுக்க வச்சிடும்.

PABT போல ஒரு சவால்

சரி என்ன செய்யணும்?
அந்த சுட்டி கொண்டு போற தளத்துல ஒரு படம் இருக்கு. அங்கே செவப்பு கலர் கட்டம் இருக்குல்ல அதை நீல கலர் கட்டத்திலேயோ இல்ல கறுப்பு சுவர் இருக்கு பாருங்க அதுல இடிக்காம சுத்தி சுத்தி வேலை காட்டிக்கிட்டே இருக்கணும். 18 வினாடிகளுக்கு மேலே தாக்கு பிடிச்சீங்கன்னா உண்மையிலேயே நீங்க பெரிய ஆளு தான்.

அமெரிக்க விமானப்படை பைலட்களுக்கு இந்த தேர்வு தரப்பட்டு அதன் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவதாக் கேள்வி. அமெரிக்க விமானப்படை பைலட் ஆகணும்னா அதிகமில்லை ஜென்டில்மேன்...ரெண்டே ரெண்டு நிமிஷம் தாக்கு பிடிக்கணும்.

சைக்கிள் கேப்ல உங்களால விமானம் ஓட்ட முடியுதானு முயற்சி பண்ணி பாருங்க. எத்தனை பேர் பைலட் ஆனீங்க?

Saturday, February 11, 2006

3டி திருவிழா - 4 (கலைடஸ்கோப்)

ஒன்னரை கண்ணால பார்த்தா தான் தெரியுமாம் இந்த கலைடஸ்கோப்(Kaleidoscope). இதுவரைக்கும் என்னால பார்க்க முடியலை. யாராவது பார்த்துட்டு சொல்லுங்க.

சின்ன வயசுல கலைடஸ்கோப் பாக்குறதுல எம்புட்டு சந்தோஷம்...Small pleasures of life...

Friday, February 10, 2006

இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...2

இந்திய விமானப் படை அகாடெமியிலிருந்து...1ஐ படிங்க முதல்ல.

ஆங்...எங்கே விட்டேன்...எனக்கே நெனப்பு இல்லியே...ஆங்...போர் விமானப் பைலட்கள் துண்டிகலிலும், ஹெலிகாப்டர்/சரக்கு விமானப் பைலட்கள் பெங்களூரை அடுத்து உள்ள யெலஹங்காவிலும் மேலும் ஒரு ஆண்டுக்கு தங்கள் பயிற்சியைத் தொடர்கிறார்கள். துண்டிகலில் உள்ள அகாடெமியில் விமானப் படையைத் தவிர கடற்படை(Navy) விமான ஓட்டிகள், கரையோரக் காவல் படையின்(Coast Guard) விமான ஓட்டிகள் மற்றும் நம் நாட்டின் நேச நாடுகளைச் சேர்ந்த விமானப் படையினருக்கும் பயிற்சி அளிக்கிறார்கள்.

சரி! விமான ஓட்டி(Pilot) பயிற்சியைத் தவிர இங்கு அளிக்கப்படும் மற்ற பயிற்சிகளில் சில:
1. தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பயிற்சி(Ground duty officers)
2. விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் பயிற்சி(Air Traffic control)
3. விமானப்படை மருத்துவப் பயிற்சி(Aviation medicine)
4. பராமரிப்பு(Maintenance)

எனக்கு HPT-32 பயிற்சி விமானத்தைப் பற்றிக் கூறிய அதிகாரியிடம்(பார்க்க முதல் பாகம்) நான் கேட்டறிந்த மற்ற விஷயங்கள் - ஒவ்வொரு விமானத்திலும் விமானத்தின் உயரத்தை அறிய ஒரு கருவி பொருத்தப்பட்டிருக்கும்(பார்ப்பதற்கு கார் ஸ்பீடோமீட்டர் போல இருந்தது), இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் விமானம் நிற்கும் இடத்தின் கடல் மட்டத்துக்கு மேலான உயரம்(Height above mean sea level) ஏற்கனவே கணிக்கப்பட்டு(calibrated) இருக்கும். உதாரணமாக விமானம் ஐதராபாத் விமானத் தளத்தில் நிற்கிறது என்றால், இக்கருவி ஐதராபாத்தின் கடல்மட்டத்திற்கு மேலான உயரமான 300மீட்டர் என்பதனைக் காட்டும். அத்துடன் மாடல் பைலட்(Model Pilot) என்ற கருவி விமானத்தின் நடுவுநிலமையினை(equilibrium) அறிய உதவுகிறது. உதாரணமாக விமானம் பறக்கும் போது வலப் புறமாகச் சாய்ந்தபடி பறக்கிறது என்றால் மாடல் பைலட்டின் முள்ளும் வலப்புறமாகச் சாய்ந்திருக்கும். விமானத்துக்குள் இருந்தபடியே விமானம் எந்நிலையில் இருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனினும் இது புதிதாகப் பயிற்சி பெறும் வீரர்களுக்கே உதவுவதாகவும் அனுபவம் மிகும் போது தானாகவே விமானத்தின் போக்கையும் நிலையையும் யூகித்து விடலாம் எனத் தெரிவித்தார். அதைத் தவிர காற்றழுத்தத்தை அறிய ஒரு உபகரணமும் உண்டு.இது விமானத்தின் காற்றழுத்தத்தை Bars(பார்ஸ்)அளவைகளில் காட்டுகிறது.

விமானங்களின் இருக்கைகள் மெத்தென இல்லாமல் எப்போதும் சற்று கடினமாகவே இருக்கும். ஏனெனில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது பழுது ஏற்பட்டு விபத்துக்குள்ளாகும் பட்சத்தில் அவ்விருக்கையே பாதுகாப்பு இருக்கையாகவும்(Ejection seat)ஆகவும் பயன்படும். அதாவது விபத்துக்குள்ளாகும் போது விமானத்திலிருந்து இவ்விருக்கை(விமானியுடன்) தனியாகப் பெயர்த்து ஆகாயத்தில் வீசப்படும். பின்னர் பாராசூட் உதவி கொண்டு பாதுகாப்பாகக் கீழிறங்க முடியும். இருக்கை பெயர்த்து வீசப்படும் போது விமானியின் உடல் பூமியைக் காட்டிலும் கிட்டத்தட்ட 19 மடங்கு அதிக புவியீர்ப்பு விசைக்கு (Acceleration due to gravity)ஆட்படுத்தப் படுகிறது. இத்தகைய விசையினைத் தாங்கா மாட்டாமல் விமானியின் முதுகெலும்பு நொறுங்கும் ஆபத்து உள்ளதால், அதைக் காக்கும் பொருட்டு இருக்கைகள் கடினமானதாக வடிவமைக்கப் படுகின்றன.

நான் ஐதராபாத் சென்ற நாள்(13.01.2006) வார நாள் என்பதால், என்னுடைய தம்பி(சித்தி பையன்), பள்ளிக்கூடத்திற்குச் சென்றிருந்தான். காலையில் விமானப் படை அதிகாரியின் உதவியுடன் நிஜ விமானத்தைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம் தெரிந்து கொண்டேன். இந்திய விமானப் படை விமானத்திற்குள் நான் உட்கார்ந்து பார்த்தது(அது குட்டியூண்டு பயிற்சி விமானமே ஆயினும்), ஒரு மறக்க முடியாத மகிழ்ச்சியான விஷயம். இவ்வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்காது தானே. மாலையில் தம்பி பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும், சித்தியின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு அகாடெமியைச் சுற்றி பார்க்கக் கிளம்பினோம். பரந்து விரிந்து கிடக்கும் வளாகத்தைப் பற்றி என்ன சொல்ல - அகலமான சாலைகள், சாலைகளின் இரு மருங்கிலும் மரங்கள், ஆங்காங்கே விமானங்களின் மாதிரிகள், அவ்வப்போது காணக்கிடைக்கும் மிடுக்கான அதிகாரிகள்...அத்தனையும் அழகு.

ஒரு விமான மாதிரியை தூரத்திலிருந்து பார்த்து தம்பி கேட்டான்"அண்ணா! இது என்ன Plane?". நான் சொன்னேன் "இது மிக்(Mig-21) என்று. "மிக்கா?" என்றான். "ஆமாம், மிக் தான்" என்றேன். கிட்ட போய் பார்த்தும் தான் தெரிந்தது "அது ஸுகாய்-7(Sukhoi-7) என்ற விமானம் என்று. "மிக்னு சொன்னீங்களே?" என்றான். "ஓ! அதுவா? பின்னாடிலேருந்து பார்க்கறதுக்கு மிக் மாதிரி இருந்துச்சு" என்று விமானங்களின் சாமுத்திரிகா லட்சணம் அறிந்தவன் போல அளந்து விட்டேன். அவனும் போனா போகுது என்று என்னை விட்டு விட்டான். அப்படியே பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் போது மாலை உடற்பயிற்சிக்காக வளாகத்தில் ஓடிக் கொண்டிருந்த கேடட்ஸ்களைக் கண்டோம். அவர்களை மஞ்சள், பச்சை, சிவப்பு என வெவ்வேறு இல்லங்களாகப்(ஹவுஸ்களாக) பிரித்து இருந்தார்கள். ஒவ்வொரு இல்லத்துக்கும் Brar,Aquino என்று வெவ்வேறு பெயர். அவர்களையும் புகைப்படம் எடுக்கலாம் என்று தோன்றியது, ஆனால் பெண் பயிற்சி அதிகாரிகளும் இருந்ததால் எங்கே வம்பாகிவிடுமோ என்று அவ்வெண்ணத்தைக் கைவிட்டேன். ஓடிக் கொண்டிருந்தவர்களில் சிலர் ஓட மாட்டாமல் மெதுவாகக் குழுவிலிருந்து விலகி நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து தம்பி சொன்னான்"இவனுங்க தீந்தானுங்க!". "ஏன்? என்னாச்சு" என்று நான் கேட்டேன். "இப்ப ஓடறாங்களே அவங்க எல்லாம் நேரா ஸ்விம்மிங் பூலுக்குத் தான் போறாங்க, லேட்டா வர்றவனுங்களை 18 அடி உயரத்திலிருந்து தண்ணியில குதிக்கச் சொல்லுவாங்க. நான் ஸ்விம்மிங் பண்ணும் போது பார்த்திருக்கேன்" என்றான்.

விமானப் படை பயிற்சி என்பது உண்மையிலேயே மிகக் கடினமான ஒன்று தான். நாட் ஜியோவில் பார்த்ததில் தெரிந்தது. விமானிகளின் கால்கள் விமானத்தின் ரட்டர்(Rudder) கால் பகுதியில் இருப்பது...அதனை எட்டும் அளவிற்கு நீளமாக இருக்க வேண்டும். மற்றும் கண நேரத்தில் யோசித்துச் செயல் படும் துரிதச் செயல்பாடு அவசியம். விமானப் படை பயிற்சி பெற விரும்புபவர்கள் பன்னிரண்டாம் வகுப்பிற்கு பிறகு UPSC நடத்தும் NDA(National Defence Academy) பரிட்சை எழுதி தேர்வு பெற வேண்டும். மேலும் விமானிகளுக்கான PABT(Pilot Aptitude Battery Test) என்ற சிறப்பு தேர்விலும் தேர்வு பெற வேண்டும். PABT தேர்வு கண்டிப்பாக ஒருவர் ஒரு முறைக்கு மேல் வழங்க முடியாது. எனவே விமானியாவது என்பது உண்மையிலேயே கடினமான ஒரு விஷயம் தான். PABTயில் ஒரு முறை தோற்றாலும் பைலட் ஆகும் கனவைத் துறக்க வேண்டியது தான்.

இந்திய விமானப் படை அகாடெமி,வழங்கப்படும் பயிற்சி மற்றும் தேர்வு முறை குறித்து அறிய இங்கு சுட்டவும்.

டண்டணக்கா ... டணக்கு ... டணக்கு

கடல்ல ஒரு கப்பல் போயிட்டிருக்கு. அந்த கப்பல்ல ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்டியன்
ஒரு ஹிந்து மூணு பேரு போயிட்டிருக்காங்க. அப்ப திடீர்னு கப்பல்ல ஓட்டை விழுதுடுது. கப்பல் கொஞ்சம் கொஞ்சமா மூழ்க ஆரம்பிக்குது. கப்பலோட மேல் தளத்துக்கு நம்மாளுங்க மூணு பேரும் ஓடியாராங்க.

முஸ்லிம் "யா அல்லா! என்னை காப்பாத்து" அப்படின்னுட்டு கடல்ல குதிச்சுடறாரு. அல்லா அவரைக் காப்பாத்திடறாரு. அவரும் பத்திரமா கரையேறிடறாரு. கிறிஸ்டியன் "ஏசுவே! எம்மை இரட்சியும்" அப்படின்னுட்டு கடல்ல குதிக்கிறாரு. ஏசுவும் அவரை பத்திரமா கரை சேர்த்திடறாரு. கடைசியா ஹிந்து"புள்ளையாரப்பா! என்ன காப்பாத்தப்பா" அப்படின்னுட்டு கடல்ல குதிக்கிறாரு. திடீர்னு டண்டணக்கா..டணக்கு...டணக்குன்னு ஒரு குத்தாட்டம் பீட்டு ஸ்டார்ட் ஆகுது. மூழ்கிட்டிருக்குற ஹிந்து ரொம்ப கஷ்டப்பட்டு தலையைத் தூக்கி பார்க்கறாரு. பார்த்தா கரையில் நின்னுக்கிட்டு புள்ளையார் ஐத்தலக்கா..ஐ..ஐ...ஆ...இந்தா...ஆ...இந்தான்னு சூப்பரா ஒரு டப்பாங்கூத்து ஸ்டெப் போட்டு ஆடிக்கிட்டு இருக்காரு.

ஹிந்து "புள்ளையாரப்பா ஒன்ன நம்பி தானே கடல்ல குதிச்சேன். என்ன காப்பாத்தறத உட்டுட்டு அங்கே கரையிலே நின்னு டப்பாங்கூத்து ஆடிட்டிருக்கியே"னு கேக்கறாரு. அதுக்கு புள்ளையாரு"டாய்! நிறுத்துடா. ஒவ்வொரு வருஷமும் புள்ளையார் சதுர்த்தி முடிஞ்சதும் என்னை மெரினா பீச்சுல கொண்டு போய் விசிறி விட்டிட்டு நீங்க இப்படி தானேடா ஆடுவீங்க. அப்ப எனக்கு எப்படி இருக்கும்"அப்படின்னுட்டு திரும்பவும் அட்டத்தை கண்டினியூ பண்ணறாராம்.

ஸ்கூல்ல ரொம்பவே ரசிச்ச இந்த ஜோக் இன்னிக்கு காலையிலே கம்பெனி பஸ்ஸூல வரும் போது திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு. கொஞ்சம் பழசு தான்...

Thursday, February 09, 2006

3டி திருவிழா - 3

நண்டு ஊறுது...நரி ஊறுது...???
என்ஸாய்

நியாயந்தே...

கொஞ்சம் போல அசைவம் கலந்துருக்கு இந்தப் பதிவுல. சைவப் பிராணிகள் எல்லாம் அப்படியே ஓடிப் போயிடுங்க. படிச்சுப்புட்டு என்னைய வையப்படாது...இப்பவே சொல்லிப்புட்டேன்...ஆமா!

ஒரு கிராமத்து பள்ளிக்கூடத்துல வாத்தியார் வகுப்பெடுத்துட்டு இருக்காரு. மகாபாரதக் கதையில கிருஷ்ணரு அவதரிச்சதையும் கம்சனோட வதத்தையும் விளக்கறாரு.

"ராஜா கம்சன் வசுதேவரோட எட்டாவது குழந்தை தான் தன்னைக் கொல்ல போகுதுன்னு அசரீரி சொன்னதைக் கேட்டு கொதிச்சு போறான். கட்டுக்கடங்காத கோபம் கொண்ட அவன் தன் சகோதரி தேவகியையும் அவ கணவன் வசுதேவரையும் சிறையில அடைச்சுடுறான். முதல் குழந்தை பிறக்குது...அதுக்கு விஷம் கொடுத்து கொன்னுடுறான். இரண்டாவது குழந்தை பிறக்குது...அதை மலை உச்சியிலிருந்து தூக்கி போட்டு கொன்னுடறான் அந்த பாவி. மூணாவது குழந்தை..."

"சார்...சார்...எனக்கு ஒரு சந்தேகம்!" ராமுங்கற சூட்டிகையான ஒரு பையன் எழுந்திரிச்சு நிக்கறான்.

"என்னப்பா உனக்கு சந்தேகம்?" வாத்தியாரு கேக்கறாரு.

"சார்! எட்டாவது குழந்தை தான் தன்னை கொல்ல போகுதுன்னு தெரிஞ்ச கம்சன் தேவகியையும்,வசுதேவரையும் என் சார் ஒரே ஜெயிலில வச்சான்?"

ஹி...ஹி...அதிகப் பிரசங்கித் தனம்னாலும் கேள்வி நியாயமாத் தே இருக்கு.

Tuesday, February 07, 2006

ஒரு மாற்று சிந்திப்பு(Lateral Thinking) கேள்வி

Lateral Thinkingஐ 'மாற்று சிந்திப்பு' அப்படினு சொல்லலாங்களா? நண்பன் ஒருவன் நேற்று என்னை ஒரு கேள்வி கேட்டான். எங்கோ ஒரு இடத்தில் நேர்காணலின் போது கேட்கப்பட்ட Lateral Thinking கேள்வியாம். கேள்வி சாதாரணமாகத் தெரிந்தாலும் பதில் வித்தியாசமானது. பதில் எனக்கு தெரிந்திருக்கவில்லை தான்(அவ்ளோ மசாலா இல்லீங்களே மண்டையிலே...என்ன பண்ண?). பதிலை பின்னர் கேட்டு அசந்து போனேன். நீங்கள் அக்கேள்வியை முயற்சிக்கிறீர்களா?

"ஒரு மனிதன் ஒரு பலமாடிக் கட்டிடத்தின் பத்தாம் தளத்தில் வசிக்கிறான். தினம் காலை அலுவலகத்திற்கு செல்லும் போது 10வது தளத்தில் உள்ள தன் இல்லத்திலிருந்து லிஃப்ட்(மின் தூக்கி தானே?)உதவி கொண்டு கீழே இறங்கிச் சென்று விடுவான். ஆனால் மாலை வீடு திரும்பும் போது ஏழாவது தளம் வரை லிஃப்டில் செல்வான். பின்னர் ஏழாவது தளத்திலிருந்து தன் வீடு உள்ள பத்தாவது தளம் வரை மாடிப்படி ஏறிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஏன் அப்படி செய்கிறான்?

மாடிப்படி கொண்டு கீழே இறங்குவது சுலபம். அப்போது லிஃப்ட் பயன்படுத்துபவன், மாலையில் மாடிப்படி கொண்டு மேலே ஏற முற்படுவது ஏன்? அதுவும் ஏழாவது மாடியிலிருந்து பத்தாவது மாடி வரை மட்டுமே ஏறிச் செல்வதேன்?"

உடற்பயிற்சி,அவன் இஷ்டம் அப்படினு எல்லாம் பதில் சொல்லக் கூடாது. சரியா?

ஐயோ...நான் இல்லை!

எஸ் எம் எஸ்ல வந்ததுங்க. படிச்சுட்டு என்னைய உதைக்க வராதீங்க.

பஸ் எலெக்ட்ரிக் ட்ரெயினைப் பார்த்து கேட்டுச்சாம் "எப்படி மச்சான் இவ்ளோ வேகமா போறே?"

எலெக்ட்ரிக் ட்ரெயின் சொல்லுச்சாம் "போடாங் கொய்யாலே! நல்லா வருது வாயிலே! கரெண்ட் கம்பியைப் பிடிச்சு பாரு தெரியும்!"

ஐயோ...நான் இல்லை!

Sunday, February 05, 2006

தடிப்பசங்க!

உங்க வீட்டுல நீங்க ரெண்டே புள்ளைங்களா? கூடப் பொறந்த அக்காவோ தங்கச்சியோ கிடையாதா? என்னது உங்களுக்கும் ஒரே ஒரு தம்பியா? அட! உங்க அம்மாவுக்கும் ஒரு பொம்பளைப் புள்ள இல்லியேனு ஏக்கமா? வாங்க சார் வாங்க! ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க. சரி மேலே படிங்க.

காட்சி1:
நீங்களும் உங்க தம்பியும் உக்கார்ந்து காலையில டிபன் சாப்பிட்டுட்டு இருக்கீங்க. அம்மா அடுப்படியில தோசை போட்டுக்கிட்டு இருக்காங்க.

உங்க தம்பி ஒரு குரல் வுடறாரு "அம்மா! சட்னி காரம். சீக்கிரமா தண்ணி கொண்டு வாங்க".

“தோசை அடுப்புல தீயுது நீயே வந்து எடுத்து குடிச்சுக்க...” - இது அம்மா.

“ஐயோ காரம் தாங்கலை. சீக்கிரம் தண்ணி..” - மறுபடியும் இளவல் சவுண்டு

“பக்கத்துல தானே இருக்கு தண்ணி, உள்ள வேலையா இருக்கறவளைக் கூப்பிடுறியே.” ஆனாலும் அம்மா கோபமாக சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து - “இந்தா தண்ணி”

தீஞ்ச தோசை உங்கள் தட்டில் விழுகிறது. அதுவும் ஒரு தனி டேஸ்டு தான், அட்வைசோடு தொட்டு சாப்பிடுவதற்கு நல்லாருக்கும். அட்வைசா? எங்கே?

இதோ - “இவ்வளோ பெரிய பசங்க ஆயிட்டீங்க! சாப்பிடுறதுக்கு முன்னாடி தண்ணி எடுத்து வச்சுக்கிட்டு உக்காரணும்னு தெரியாது?”

காரம் கொஞ்சம் அடங்கனதும் இளவல் எகத்தாளத்தில் இறங்குகிறார் -”சாப்பிட குடுக்கறதுக்கு முன்னாடி தண்ணி வைக்கனும்னு உங்களுக்குத் தெரியாது?”

“நல்லா வாய் கிழிய கூடக் கூட பேசுங்க”. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர் - "பேசுங்க". நீங்க பரிதாபமா பார்த்துட்டு இருக்கீங்க.

“இதுக்கு தான் வீட்டுல ஒரு பொட்டைப்புள்ள வேணுங்கறது. தன் வேலையையும் தானே செஞ்சுக்கிட்டு அம்மாவுக்கும் உதவியா இருக்கும். இப்படி தடிப்பசங்களாட்டம் உக்காந்த இடத்துலேருந்து அம்மாவை வேலை வாங்காது”

“ஆமா கிழிச்சாளுங்க! நீங்க தான் பார்த்தீங்களா பொண்ணுங்க எல்லா வீட்டு வேலையையும் செய்றாங்கனு?” தம்பி போருக்கு ஆயத்தம் ஆகிறார்.

“ஆமா!நீங்க மட்டும் என்ன கிழிச்சுட்டீங்களாம்?”

“நேத்து கூட நாட்டார் கடையிலே மூணு கிலோ கோதுமை வாங்கிட்டு வந்தேன்ல. முந்தா நேத்து வேகாத வெயில்ல போய் காய் யார் வாங்கிட்டு வந்தாவாம்?” - “பேசுங்க” என்ற சொல் தங்களைக் காயப்படுத்தியதால் புள்ளிவிவரத்தில் சூரப்புலியான தாங்கள், தம்பிக்குத் துணையாகப் போரில் இறங்குகிறீர்கள்.

“ஆமா!தோ தெரு முகனையில இருக்கு நாடார் கடை. என்னிக்கோ ஒரு நாள் காய் வாங்கி கொடுத்துட்டு மூணு வருஷத்துக்குச் சொல்லிக் காட்டுவீங்களே?” - உங்களைப் பெத்த அம்மாவாச்சே, உங்களை மேய்க்கிற வித்தை அவங்களுக்குத் தெரியாதா என்ன?

“வேலையில் ஒன்னும் இல்லன்னாலும், வாயில பாரு...காது வரைக்கும் நீளுது” - இது கொசுறு.

சுமூகமான பேச்சுவார்த்தையில் பயனில்லை எனக் கருதும் இளவல் போரைத் துவக்குகிறார்-”ஹலோ!மேடம் என்ன கூடக் கூட பேசறீங்க. சும்மா ஒரு தண்ணி கொண்டாந்ததுக்கு இவ்ளோ பேச்சா? டாக் லெஸ் வர்க் மோர்(Talk Less Work More)” என்று சொல்லிவிட்டு விளைவுகளை எதிர்பார்த்தவராய் ஒரு மூணு அடி நகர்ந்து கொள்ளுகிறார்.

உங்களுக்கு அவ்ளோ விவரம் பத்தாதுங்களே, தம்பியின் சொற்திறமையை ரசித்து புளகாங்கிதம் அடைவதற்கு முன்னாலேயே அம்மா கையில் இருக்கும் தோசை திருப்பி தங்களை வீறு கொண்டு தாக்குகிறது.

“அவன் தானேம்மா சொன்னான். என்ன ஏன் அடிக்கறீங்க?” - விழுந்த அடிக்கு ஒத்தடமாய் ஒரு கேள்வி.

“இரு அவனை மட்டும் உட்டுட்டேனா? அவனுக்கும் இருக்குது” - தோசை திருப்பியின் படையெடுப்பு சோபா மேல் ஏறி நின்னுக் கொண்டு இருக்கும் இளவலை நோக்குகிறது.

“டேய்! நீ அடி வாங்கிட்டு என்னையுமா போட்டுக் குடுக்கறே?” - இளவல் தன் சகோதர பாசத்தைக் காட்டுகிறார்.

“ஏன் அவன் சொல்லலைனா எங்களுக்குத் தெரியாதா?”. சோபா மேலே ஏறி அன்னையார் தன் அன்பை தோசைதிருப்பியின் வாயிலாகத் தன் இரண்டாம் குழவிக்கும் எடுத்துரைக்கிறார். “நாய்ங்களா! காலங்காத்தாலே ரெண்டு பேரும் சேர்ந்து தொண்டை தண்ணியை இப்படி வாங்குறீங்களே?”

“ஆ..ஐயோ! இப்படி தண்ணி கேட்டதுக்கு அடிச்சு கொல்றாங்களே!” - தங்களைக் காட்டிலும் ஓரிரு விழுப்புண் கூடுதலாகப் பெற்ற இளவலின் அக்குரலைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறீர்களா?

கையைக் குடுங்க, “தடிப்பசங்க” கிளப்பில் உங்களை மனமாற வரவேற்கிறோம்!

காட்சி 2,3,4ஐ வேணும்னா இங்கே பின்னூட்டமாத் தொடருங்க, இல்லை இன்னும் கொஞ்ச நாள் நம்ம உளறலுக்காகப் பொறுத்துக்கங்க!

காப்பாத்துங்க!

நேத்து காலையிலேருந்து Blogger பயலுக படுத்தி எடுக்குறானுங்கப்பா! உஷா மேடம் சொன்ன மாதிரி மெயிலில் வரும் பின்னூட்டத்தை பப்ளிஷ் என்று க்ளிக்கினால் We're sorry, but we were unable to complete your request என்று வருகிறது. அதை தவிர எனக்கு இன்னுமொரும் பிரச்சனையும் இருக்குது. கிண்டி டைம்ஸ் பதிவுக்கு முதலில் வந்த மூணு பின்னூட்டம் மட்டும் தான் இப்போ பதிவில இருக்குது. அதுக்கு நான் கொடுத்த மறுமொழியும் அதுக்கப்புறம் வந்த ஒரு பின்னூட்டமும் காணாமப் போய்கிட்டே இருக்கு. நானும் வந்த பின்னூட்டத்தையும் என் பதிலையும் மயிலிலிருந்து எடுத்து எடுத்து போட்டுக்கிட்டே இருக்கேன், யாரோ சளைக்காம அதை எல்லாம் காலி பண்ணிட்டே இருக்காங்களே? ஒன்னும் புரியலியே? அநேகமா இதே பிரச்சனை ரசிகவ் ஞானியாருக்கும் இருக்கும்னு நினைக்கிறேன். அவரோட பதிவுல பார்த்த பின்னூட்டத்தையும் இப்ப காணலை.யாருக்காச்சும் எதாச்சும் தெரிஞ்சா சொல்லக் கூடாதா? தமிழ்மணத்துல யாருக்காச்சும் தெரிஞ்சாலும் சொல்லுங்கையா! உங்களுக்கு புண்ணியமாப் போகும்.

Friday, February 03, 2006

கிண்டி டைம்ஸ்

"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே!"

மேலே உள்ள பாடல் வரிகளை கிண்டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் காலத்தில் எங்கள் சீனியர் ரஷீத் தன் ஃபேர்வெல்லின் போது முதன் முதலில் பாட கேட்டதும், நான் கண்டபடி உணர்ச்சிவசப் பட்டு போனேன்.

மனித உறவுகள் முடியற மாதிரி தெரிஞ்சாலும் அது ஒரு முடிவில்லாத தொடர்கதை, அதை உருவாக்கற உணர்வுகள் எல்லாம் சிறுகதை. இந்த தொடர்கதை இப்ப முடியற மாதிரி தெரிஞ்சாலும், அந்த முடிவிலிருந்து இன்னொரு கதை தொடங்கலாம். இந்த ஃபேர்வெல் கூட வர்ற போற ஒரு புது உறவுக்கான ஆரம்பம் தான். அடேங்கப்பா! என்னம்மா யோசிச்சிருக்காருப்பா கவிஞரு...ஃபேர்வெல்லுக்கு இதைவிட சிறப்பா ஒரு பாட்டு இருக்க முடியுமா அப்படினு கன்னா பின்னான்னு நானே அர்த்தம் கற்பிச்சுக்கிட்டு உணர்ச்சிவசப் பட்டிருக்கிறேன். அப்புறமா ரொம்ப நாளைக்கப்புறம் தான் தெரிஞ்சது அது "அவள் அப்படித் தான்" படத்துல சிவச்சந்திரன்(லட்சுமி வீட்டுக்காரரு)வர்ற ஒரு மேட்டர் பாட்டுன்னு. அது தெரிஞ்சதுக்கப்புறம் அட சே! இதுக்காடா இப்படி உருகனோம்னு ஆகிப்போச்சு.

எது எப்படியோ! அந்த சமயத்துல அந்த பாட்டைக் கேட்ட மாத்திரத்துல கபக்னு தொண்டையை வந்து அடைச்சது பாருங்க...அதை என்னான்னு சொல்றது? இன்னும் ஒரு வருஷம் தான் கண்ணா! அடுத்த வருஷம் நீயும் இப்படி தான் பாட்டை பாடிக்கிட்டோ ஆட்டோகிராப் எழுதிக்கிட்டோ நிக்கப் போறே அப்படினு அந்த நேரத்துல ஒரு அசரீரி. அதுக்கப்புறம் வந்த ஒரு வருஷம் அப்பப்போ உனக்கும் ஃபேர்வெல்னு ஒன்னு வரும்னு ஞாபகப் படுத்திக்கிட்டே இருப்பேன். 12 வருஷம் ஸ்கூலில் படிச்ச போது இல்லாத ஒரு நட்பு...ஒரு நெருக்கம்...நாலே நாலு வருஷம் படிச்ச நண்பர்களோட. கொஞ்சம் வளந்து பெரியவங்க ஆனதுனாலையா அது? காரண காரியங்களைச் சொல்ல தெரியலை. ஆனா அது என்னம்மோ தெரியலை...காலேஜைப் பத்தி நினைச்சாலே மனசுல ஒரு சந்தோஷம். அதே சமயம் இன்னும் கொஞ்ச நாள் காலேஜிலேயே இருந்திருக்கக் கூடாதா அப்படினு ஒரு ஏக்கம் ரெண்டும் சேர்ந்து வந்து தொத்திக்கும்.

அந்த பசுமையான நினைவுகளைப் பதிவதற்காக, ஈ-மெயில் ஃபார்வர்டுகளாகப் போட்டு ஓட்டிக் கொண்டிருந்த என் ஆங்கில வலைப்பதிவைக் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு கைப்புள்ளையை உசுப்பி விட்டேன். சரி...வலைப்பூவை ஆரம்பிச்சாச்சு நோஸ்டால்ஜியாவை எப்படி வார்த்தையில கொண்டு வர்றதுனு நினனச்சா ஒன்னும் தோண மாட்டேங்குது. போதாக்குறைக்கு இங்க தமிழ் வலைப்பதிவர்கள் தங்கள் நினைவுகளை ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் கவிதை நடையில் விவரிப்பதை பார்த்ததும் கைப்புள்ளைக்கு ஒரு சின்ன காம்ப்ளெக்ஸ். ஆரம்பக் கோளாறு அதாங்க ஸ்டார்டிங் டிரபிள் வந்து வேற பாடாப் படுத்துது. எப்படியாச்சும் ஆரம்பிச்சுடனும்னு ஒவ்வொரு நாளும் உக்காருவேன். ஆனா 'க', 'அ','உ','கி' இப்படி ஏதாவது எழுதறதோட நின்னுடும் நம்ம கல்லூரி நினைவுகள்.

இன்னிக்கு எழுதுனாலே உண்டு அப்படினு நாலு வரி உக்கார்ந்து தட்டிட்டேன். இதுல காலேஜில் நான் சந்திச்ச நண்பர்கள், எதிர்கொண்ட அனுபவங்கள், கத்துக்கிட்ட பாடங்கள்...அப்படின்னு எதாச்சும் எழுதணும்னு எண்ணம். ஆனா இந்நேரம் வரைக்கும் அடுத்து இதைப் பத்தி என்ன எழுதப் போறேன்னு எனக்கே தெரியாது. அட தூ! இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பானு கேக்கறீங்களா? என்னங்க பண்றது... கைப்புள்ளையோட கெபாகிடி அவ்ளோ தான்!

சரி. மூன்றாம் ஆண்டு படிக்கும் போது நண்பன் தியானேசுவரன் 'ட்ரான்ஸ்போர்டேசன் என்சினியரிங்' வகுப்பின் போது பென்சில் கொண்டு தீட்டிய என் பின்னழகு(!?) ஓவியத்துடன் கிண்டி டைம்சுக்கு புள்ளையார் சுழி.

கண்டிப்பா சீக்கிரமே தொடருவேன்.

(பி.கு: நான் படிச்ச காலத்தில் சில மாதங்களுக்கு ஒரு முறை வந்த ஒரு மாத(!)இதழின் பேர் 'கிண்டி டைம்ஸ்')

Thursday, February 02, 2006

ஆப்பிள் பாயாசம்

முதன்முதலா என் வலைப்பதிவில் சமையல்குறிப்பு கொடுக்கறேன். செஞ்சு பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லணும் சரியா? வலைப்பதிவில் சமையல் குறிப்பு போடலாம்னு ஐடியா வர்ற காரணம் ராகவனோட சுவைக்கச் சுவைக்க. அவருக்கு முதல்ல என் நன்றி. நமக்கு தனியா சமையலுக்கு பதிவு போடற அளவுக்கு அறிவும் கிடையாது, பொறுமையும் கிடையாது. அதனால கைப்புள்ளையே வேட்டியை மடிச்சு கட்டி கோதாவில் குதிக்கிறார் உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - அரை கிலோ
(வட இந்தியாவுல ஆப்பிளை நிறுத்து தான் கொடுக்கிறாங்க. நல்ல தெறிப்பான பழமா 3 எடுத்துக்கிட்டா போதும்)
பால் - ஒரு கிலோ/ஒரு லிட்டர்
சர்க்கரை - 3 கப் (கிட்டத்தட்ட அரை கிலோ)
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 4

செய்முறை:
ஆப்பிளை தண்ணி ஊத்தி நல்லா கழுவிக்கங்க(சரி...ஒரு தமாசுக்கு தான்). நல்லா தோல் சீவி சிறு சிறு துண்டுகளா நறுக்கிக்கங்க. ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்திக்கோங்க. இதுல நறுக்கி வச்சிருக்கற ஆப்பிள் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வதக்கணும். இதை வதக்கும் போதே ஏலக்காயையும் தட்டி போட்டு வதக்கிடலாம். ஏலக்காய் வேணும்னா போட்டுக்கலாம். வேணாம்னா விட்டுடலாம். போடலன்னாலும் நல்லா தான் இருக்கும். டெல்லியில நண்பர்களுக்கு செஞ்சு கொடுத்த போது அவங்க ஏலக்காய் சுவையை அவ்வளவா விரும்பலை. அதனால சொன்னேன்.

ஆப்பிள் துண்டுகள் பொன்னிறமா வதங்கனதும் அதை தனியா எடுத்து மூடி போட்டு வச்சுடுங்க. இப்ப பாலை ஒரு பாத்திரத்துல ஊத்தி அதையும் மிதமான தீயில் காய வைக்கணும். கொஞ்சமா காய்ஞ்சதும் சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி கிளறிக்கிட்டே இருங்க. இந்த பாயாசம் செய்ய நேரம் ஆகற விஷயம் இந்த பால் காய்ச்சறது மட்டும் தான். அது தான் இதோட சுவைக்கு முக்கிய காரணம். கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் சர்க்கரையைக் கொட்டி கிளறிட்டே இருந்தீங்கனா பால் நல்லா சுண்டி வரும். 3 கப் சர்க்கரை கூடுதலா தெரிஞ்சுதுனா வேணா கொஞ்சம் குறைச்சுக்கலாம். இப்ப பாலை ஒரு கரண்டியில் எடுத்து பார்த்தீங்கனா கொஞ்சம் திக்கா இருக்கும். இது தான் பதம். அடுப்பிலேர்ந்து பாலை இறக்கி கொஞ்சம் நேரம் அப்படியே வச்சுடுங்க. லேசா சூடு ஆறுனதும் வதக்கி வச்சிருக்குற ஆப்பிள் துண்டுகளை அதுல கொட்டி ஒரு கிளறு கிளறி நல்லா ஆற விட்டுருங்க.

அதுக்கப்புறம் இதை எடுத்து பிரிஜ்ல அரை மணி நேரம் வச்சிருந்து எடுத்தீங்கனா ஆப்பிள் பாயாசம் தயார். சரி! வதக்குன ஆப்பிளை எதுக்கு ஆறனதும் போட்டு கிளற சொன்னேன்னா சூடா இருக்கும் போதே போட்டு கிளறுனீங்கனா, நெய் போட்டிருக்கறதுனால பால் திரிஞ்சுடும். அப்புறம் ஆப்பிள் பாயாசம் கிடைக்காது...ஆப்பிள் பனீர் தான் கிடைக்கும். இது அனுபவத்துல பட்டு தெரிஞ்சிக்கிட்டது. அதுவும் சாப்பிட மோசமா இல்லன்னாலும் பார்க்க அவ்ளோ நல்லா இருக்காது. நான் தான் லூஸுத்தனமா இப்படி பண்ணா நீங்களுமா பண்ண போறீங்க? இருந்தாலும் சொல்லிட்டேன்.

டேஸ்ட்ல ரசமலாயை நினைவு படுத்தற மாதிரி இருக்கும். சில்லுனு சாப்பிட்டீங்கனா ஆப்பிள் போட்டிருக்கறதுக்கும் அதுக்கும் ரொம்ப நல்லாருக்கும். மங்கையர்மலரிலிருந்ததோ டிவியிலிருந்தோ அம்மா கற்று வைத்திருந்ததை நானும் கற்றுக் கொண்டு - அட! ஸ்வீட் ஐட்டம் கூட நல்லா பண்ணறியே அப்படினு பேர் வாங்கி கொடுத்த ஐட்டம். சாப்பிட்டு பார்த்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.

சரி! இதுக்கு குழந்தைகளைக் கவறுகிற மாதிரி ஏதாவது ஒரு ஃபேன்சி பேரு யாராவது சொல்லுங்களேன். 'ஆப்பிள் புட்டிங்' எப்படியிருக்கு?

3டி திருவிழா -2 (ஒரு குவிஸ்)

ஒரு குவிஸ் 3டி படத்துலேயே போடலாம்னு தோணுச்சு. கீழே இருக்குற படத்துல நம் தமிழ் வலைப்பதிவர்களில் ஒருத்தர் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு.இந்த படத்துல 3டி படம் பார்க்கறதுக்கு இன்னொரு உத்தி இருக்கு. அதை பத்தி சொல்றேன். இந்த படத்துக்கு மேலெ ரெண்டு சின்ன பச்சை நிற புள்ளியிருக்கறது தெரியுதா? அந்த ரெண்டு புள்ளிகளையும் கவனமா பார்த்துட்டே இருந்து ஒன்னு மேலே ஒன்னு கொண்டு வந்தீங்கன்னாலும் 3டி படம் தெரியும்.

யாருன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!

யார் ஃபர்ஸ்ட் சொல்லறீங்களோ அவருக்கு ஒரு...

யோசிப்பவரைப் போலவே...

யோசிப்பவரோட பதிவுகள்ல வர்ற மாதிரி நிறைய எஸ் எம் எஸ் கடிகள் எனக்கும் சமீபகாலமா வருது. நிறைய பேர் படிக்கிறாங்கனு நினைக்கிறேன். ஒரே டார்ச்சர் போங்க. அதை நான் மட்டும் அனுபவிச்சா நல்லாருக்குமா? யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

"நீ எவ்வளவு பெரிய பருப்பா இருந்தாலும் உங்க வீட்டு சாம்பாருக்கு கடையிலே தான் பருப்பு வாங்கணும்"

"என்ன தான் நாய் நன்றியுள்ள பிராணின்னாலும் அதனால தாங்க்யு சொல்ல முடியுமா?"

"என்ன தான் அஹிம்சாவாதியா இருந்தாலும் சப்பாத்தியை சுட்டு தான் சாப்பிடணும்"

மேலே உள்ளது எல்லாம் தத்துவம்னா, கீழே உள்ளது ஒரு சூப்பர் வேண்டுதல்.

"சாமி! எனக்கு மெசேஜ் அனுப்பாதவங்க செல் எல்லாம் காணாமப் போயிடணும் சாமி"