Thursday, February 02, 2006

ஆப்பிள் பாயாசம்

முதன்முதலா என் வலைப்பதிவில் சமையல்குறிப்பு கொடுக்கறேன். செஞ்சு பார்த்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லணும் சரியா? வலைப்பதிவில் சமையல் குறிப்பு போடலாம்னு ஐடியா வர்ற காரணம் ராகவனோட சுவைக்கச் சுவைக்க. அவருக்கு முதல்ல என் நன்றி. நமக்கு தனியா சமையலுக்கு பதிவு போடற அளவுக்கு அறிவும் கிடையாது, பொறுமையும் கிடையாது. அதனால கைப்புள்ளையே வேட்டியை மடிச்சு கட்டி கோதாவில் குதிக்கிறார் உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - அரை கிலோ
(வட இந்தியாவுல ஆப்பிளை நிறுத்து தான் கொடுக்கிறாங்க. நல்ல தெறிப்பான பழமா 3 எடுத்துக்கிட்டா போதும்)
பால் - ஒரு கிலோ/ஒரு லிட்டர்
சர்க்கரை - 3 கப் (கிட்டத்தட்ட அரை கிலோ)
நெய் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் - 4

செய்முறை:
ஆப்பிளை தண்ணி ஊத்தி நல்லா கழுவிக்கங்க(சரி...ஒரு தமாசுக்கு தான்). நல்லா தோல் சீவி சிறு சிறு துண்டுகளா நறுக்கிக்கங்க. ஒரு வாணலியில் 4 தேக்கரண்டி நெய் விட்டு சூடுபடுத்திக்கோங்க. இதுல நறுக்கி வச்சிருக்கற ஆப்பிள் துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வதக்கணும். இதை வதக்கும் போதே ஏலக்காயையும் தட்டி போட்டு வதக்கிடலாம். ஏலக்காய் வேணும்னா போட்டுக்கலாம். வேணாம்னா விட்டுடலாம். போடலன்னாலும் நல்லா தான் இருக்கும். டெல்லியில நண்பர்களுக்கு செஞ்சு கொடுத்த போது அவங்க ஏலக்காய் சுவையை அவ்வளவா விரும்பலை. அதனால சொன்னேன்.

ஆப்பிள் துண்டுகள் பொன்னிறமா வதங்கனதும் அதை தனியா எடுத்து மூடி போட்டு வச்சுடுங்க. இப்ப பாலை ஒரு பாத்திரத்துல ஊத்தி அதையும் மிதமான தீயில் காய வைக்கணும். கொஞ்சமா காய்ஞ்சதும் சர்க்கரையைக் கொஞ்சம் கொஞ்சமா கொட்டி கிளறிக்கிட்டே இருங்க. இந்த பாயாசம் செய்ய நேரம் ஆகற விஷயம் இந்த பால் காய்ச்சறது மட்டும் தான். அது தான் இதோட சுவைக்கு முக்கிய காரணம். கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் சர்க்கரையைக் கொட்டி கிளறிட்டே இருந்தீங்கனா பால் நல்லா சுண்டி வரும். 3 கப் சர்க்கரை கூடுதலா தெரிஞ்சுதுனா வேணா கொஞ்சம் குறைச்சுக்கலாம். இப்ப பாலை ஒரு கரண்டியில் எடுத்து பார்த்தீங்கனா கொஞ்சம் திக்கா இருக்கும். இது தான் பதம். அடுப்பிலேர்ந்து பாலை இறக்கி கொஞ்சம் நேரம் அப்படியே வச்சுடுங்க. லேசா சூடு ஆறுனதும் வதக்கி வச்சிருக்குற ஆப்பிள் துண்டுகளை அதுல கொட்டி ஒரு கிளறு கிளறி நல்லா ஆற விட்டுருங்க.

அதுக்கப்புறம் இதை எடுத்து பிரிஜ்ல அரை மணி நேரம் வச்சிருந்து எடுத்தீங்கனா ஆப்பிள் பாயாசம் தயார். சரி! வதக்குன ஆப்பிளை எதுக்கு ஆறனதும் போட்டு கிளற சொன்னேன்னா சூடா இருக்கும் போதே போட்டு கிளறுனீங்கனா, நெய் போட்டிருக்கறதுனால பால் திரிஞ்சுடும். அப்புறம் ஆப்பிள் பாயாசம் கிடைக்காது...ஆப்பிள் பனீர் தான் கிடைக்கும். இது அனுபவத்துல பட்டு தெரிஞ்சிக்கிட்டது. அதுவும் சாப்பிட மோசமா இல்லன்னாலும் பார்க்க அவ்ளோ நல்லா இருக்காது. நான் தான் லூஸுத்தனமா இப்படி பண்ணா நீங்களுமா பண்ண போறீங்க? இருந்தாலும் சொல்லிட்டேன்.

டேஸ்ட்ல ரசமலாயை நினைவு படுத்தற மாதிரி இருக்கும். சில்லுனு சாப்பிட்டீங்கனா ஆப்பிள் போட்டிருக்கறதுக்கும் அதுக்கும் ரொம்ப நல்லாருக்கும். மங்கையர்மலரிலிருந்ததோ டிவியிலிருந்தோ அம்மா கற்று வைத்திருந்ததை நானும் கற்றுக் கொண்டு - அட! ஸ்வீட் ஐட்டம் கூட நல்லா பண்ணறியே அப்படினு பேர் வாங்கி கொடுத்த ஐட்டம். சாப்பிட்டு பார்த்துட்டு எப்படியிருக்குனு சொல்லுங்க.

சரி! இதுக்கு குழந்தைகளைக் கவறுகிற மாதிரி ஏதாவது ஒரு ஃபேன்சி பேரு யாராவது சொல்லுங்களேன். 'ஆப்பிள் புட்டிங்' எப்படியிருக்கு?

8 comments:

G.Ragavan said...

அட! நான் போட்ட சமையல் குறிப்புகள் உங்களை இவ்வளவு தூண்டியிருக்குன்னா சந்தோஷந்தான் கைப்புள்ள. தொடரட்டும் தொடரட்டும். சமையல் இல்லாம வாழ முடியுமா!

ஆப்பிளை நெய்யில வதக்கனுமா! சரி. சரி. அது செவீர்னு கலர் மாறாதா?

அதுக்கு பதிலா நெய்யில வதக்காம, ஆப்பிள் துண்டுகளையும் பால்ல போட்டுக் காச்சினா? ஏன்னா எனக்கு நெய்யோட கொமட்டுற வாட பிடிக்காது.

கைப்புள்ள said...

வாங்க ராகவன்,
சமையல் செய்யறது நமக்கு பிடிச்ச விஷயம்னாலும், பதிவா சமையல் குறிப்பையும் போடலாம்னு உங்க கிட்டேருந்து தான் கத்துக்கிட்டேன்.

நெய்யில் வதக்காம நான் இதுவரைக்கும் முயற்சி பண்ணதில்லை. ஆனா கொஞ்சமா நெய்யில், லேசா ஆப்பிள் சுணங்கறா மாதிரி வதக்குனீங்கனா டேஸ்ட் நல்லாவே இருக்கும். நீங்க சொல்லற மாதிரி பண்ணா லேசா பச்சை வாசனை வரும்னு தோணுது. நீங்க வேணா கொஞ்சமா அந்த மாதிரி செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க.

ILA (a) இளா said...

ஆப்பிலெல்லாம் வசதியானவங்க்ளுக்குதான் சாமி, நமக்கு(ஏழை விவசாயி) ஏத்தபடி ஏதும் சொல்லபடாதா?

Unknown said...

மாப்பி கல்யாணம் எதுவும் முடிவாயிடுச்சா... வேட்டியை எல்லாம் மடிச்சிட்டு களத்துல்ல இறங்கிட்டிங்க....

கைப்புள்ள said...

என்னங்க இளா!
ட்ராக்டர் எல்லாம் வச்சுக்கிட்டு ஏழை விவசாயினு சொல்றீங்க? நம்பற மாதிரி இல்லையே? சரி! உங்களுக்கு ஆப்பிள் புடிக்காதா?

கவலையில்லை...இரண்டு கைப்பிடி அரிசியை தண்ணியில களைஞ்சு, மிதமான தீயில் கொதிக்கிற பாலில கொட்டி(மேலே சொன்ன மாதிரி) கிளறினீங்கனா கீர்(Kheer) தயார்.

இதுல பாதாம் எசென்சோ இல்ல MTR பாதாம் மிக்சோ போட்டு கிளறி இறக்குனீங்கனா பாதாம் கீர் ரெடி.

கைப்புள்ள said...

//மாப்பி கல்யாணம் எதுவும் முடிவாயிடுச்சா...//

இல்லீங்கணா,
நமக்கு இன்னும் டீன் ஏஜே முடியலை. சின்ன பையன் கிட்ட கல்யாணம் அது இதுனு சொல்லி அவன் மனசைக் கெடுக்காதீங்க! பால்ய விவாஹம் தடை சட்டத்தின் கீழே உங்களை மாமியார் வீட்டுக்கு அனுப்பிட போறாங்க!

G.Ragavan said...

// நீங்க சொல்லற மாதிரி பண்ணா லேசா பச்சை வாசனை வரும்னு தோணுது. நீங்க வேணா கொஞ்சமா அந்த மாதிரி செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்க. //

எனக்கு நெய் வாசனையை விட பச்சை வாசனை தேவலாம்.

ஏற்கனவே கடந்த மூனு மாசத்துல ஏறுன வெயிட்டைக் குறைக்க முடிஞ்ச வரைக்கும் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுல இதையெல்லாம் செஞ்சு தின்னா...அம்புட்டுதான். ஆனா கண்டிப்பா நண்பர்கள் வர்ர அன்னைக்கு இதச் செஞ்சிர வேண்டியதுதான்.

கைப்புள்ள said...

//இதுல இதையெல்லாம் செஞ்சு தின்னா...அம்புட்டுதான்//

என்னிக்காச்சும் ஒரு நாள் தின்னீங்கனா ஒன்னும் ஆகாது ராகவன். இது ஓடற பாம்பை மிதிக்கிற வயசில்லியா? கல்லைத் தின்னாலும் கரைஞ்சிடுமே!