Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Sunday, December 19, 2010

தூர்தர்ஷனும் இசைப்புயலும்

கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னர் வந்த தொலைக்காட்சி விளம்பரங்களை நினைவு படுத்திப் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம் உதித்தது. விளம்பரங்களின் பட்டியல் பெரியதாக இருந்ததால் அவற்றை எதாவது ஒரு வகையில்(criterion) கொண்டு பகுக்கலாமே என்று தோன்றியது.
ரோஜா படம் மூலமாகத் தான் முதன்முதலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களைக் கேட்டது என்றாலும், டிவி விளம்பரங்களின் மூலமாக மக்களிடம் நெருக்கமாகத் தான் இருந்துள்ளார் எனத் தெரிந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னர் அவர் விளம்பரப் படங்களுக்குத்(ad jingles) தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் என பலரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் பழைய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது, அக்காலத்தில் நாம் ரசித்த பல விளம்பரப் படங்களுக்கும் அவர் இசையமைத்திருப்பது தெரிய வந்தது. "அட! இந்த விளம்பரத்துக்கும் இவர் தான் இசையமைத்தாரா?" என ஆச்சரியமாய் இருந்தது. அதை எல்லாம் பதிந்து வைக்கலாமே எனத் தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு. சில விளம்பரங்கள் தூர்தர்ஷன் மட்டும் அல்லாமல் வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் வந்திருக்கலாம்.

Leo Coffee
ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் "லியோ காஃபி" விளம்பரம் என்று சொல்கிறார்கள். இவ்விளம்பரத்தைப் பார்த்து தான் இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார் என்று இணணயத்தில் படித்தேன். மணிரத்னத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது அப்போது விளம்பரப் படங்களில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் மேனன். இந்த விளம்பரம் வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுவன். எப்போது வந்தாலும் நின்று பார்த்து விட்டுச் செல்லும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. அவ்விளம்பரத்தில் வரும் அர்விந்த் சுவாமிக்கும் இப்போது இருக்கும் அர்விந்த் சுவாமிக்கும் எத்தனை மாற்றங்கள்? லியோ காஃபியின் தற்காலத்து விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா வருகிறார். ஆனால் பழைய விளம்பரம் ஏற்படுத்தும் பாதிப்பும் கிளறும் நினைவுகளும் இப்புதிய விளம்பரத்தில் இல்லை. ஆண்ட்ரியா வரும் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இங்கு சுட்டுங்கள்.


Old Cinthol
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக இருக்கும் சோப் "பழைய சிந்தால் சோப்". அட, இதுலயும் அர்விந்த் சுவாமி தான் வருகிறார். இந்த சோப்பின் விளம்பரத்தைப் பார்த்தால் எப்போதும் மிகைப்படுத்தப் படாமல் சிம்பிளாக இருக்கும். பல சமயங்களில் விளம்பரங்களே கூட இருக்காது. சிகப்பு நிற அட்டையில் வெளிவரும் சோப் இது, புதிய சிந்தால் சோப்புக்குச் சற்று கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் கோத்ரெஜ் நிறுவனம். பல வருடமாக உபயோகத்தில் இருக்கும் சோப் என்பதால் அந்த நற்பெயரிலேயே இன்னும் இந்த சோப் விற்றுக் கொண்டிருக்கிறது. தோல்நோய் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உண்மையிலேயே நல்ல சோப் இது. அத்தகையதொரு சோப்புக்கு, மிகையில்லாத மெல்லிய இசை சேர்த்திருப்பது இவ்விளம்பரத்தின் சிறப்பு, இன்றளவும் நினைவில் நிலைக்கச் செய்திருப்பது இசையமைப்பாளரின் திறமை.


Asian Paints - Pongal
சில நிறுவனங்கள், தனித்து நிற்கும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு பெயர் போனவை. அத்தகைய ஒரு நிறுவனம் தான் ஏசியன் பெயிண்ட்ஸ். கையில் பெயிண்ட் ப்ரஷுடன் நிற்கும் பையனின் மேஸ்காட்டைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாண்டு காலம் உபயோகித்து வந்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். அந்த சிறுவனின் பெயர் "கட்டூ(Gattu)". அவனை உருவாக்கியவர் பிரபல் கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள். இணையத்தில் தேடினால் ஏசியன் பெயிண்ட்ஸின் மார்க்கெட்டிங்கைப் பற்றி பல கேஸ் ஸ்ட்டிகள் கிடைக்கும், அந்த அளவுக்கு தங்களுடைய ப்ராண்ட்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தும் நிறுவனம் இது. பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் நம்ம ஊர் பழக்கத்தைக் குறி வைத்து, தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரமிது. இவ்விளம்பரத்தின் துவக்கத்தில் வரும் அதே "ஏலேலோ" இசையை ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலில் ஹோகேனக்கல்லில் பரிசல்கள் செல்லும் காட்சியிலும் பார்க்கலாம்.



Titan
முந்தைய மூன்று விளம்பரங்களும் தமிழ்நாட்டு ஆடியென்சை மட்டும் தொடுவன என்றால், இவ்விளம்பரமும் இனி வரும் விளம்பரங்களும் இந்தியா முழுவதும் பிரபலமானவை. "சாந்தி" என்னும் இந்தி சீரியலில் ராஜ்.ஜி.ஜே.சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அமர் தல்வார் தான் இவ்விளம்பரத்தில் வரும் தந்தை. மால்குடி சுபா பாடி வெளிவந்த "வால்பாறை வட்டப்பாறை" ஆல்பமில் நடித்த சம்யுக்தா தான் இதில் மகளாக வருபவர். இவர் முன்னாள் தூர்தர்ஷன் ஆங்கில செய்தி வாசிப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். இது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தது என்பதனை youtube பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.


MRF
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனம் MRF. Madras Rubber Factory என்று ஒருகாலத்தில் இருந்த பெயர் தான் MRF ஆனது. ஆயினும் இப்போது பழைய பெயரை எங்கும் அவர்கள் பிரபல படுத்துவதில்லை. ஏசியன் பெயிண்ட்ஸைப் போலவே விளம்பரங்களில் வெகுவாக கவனம் செலுத்தும் நிறுவனம் இது. இவ்விளம்பரம் வந்து கொண்டிருந்த காலங்களில், அதில் கடைசியில் வருவது போலவே கீபோர்டில் சர்ரென்று விரல்களைத் தேய்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டாலும், வெகுகாலம் கழித்து இந்த விளம்பரத்தைப் பார்த்த போது அந்த ஆசை எங்கிருந்து வந்தது என நினைவில் வந்தது :)


Garden Vareli
லிசா ரே(Lisa Ray) தோன்றும் இவ்விளம்பரத்தின் இசை வெகு பிரபலம். சிறுவயதில் கார்டன் புடவைகளை எல்லாரும் அணிவது போல அணிய முடியாது, இதில் காட்டுவது போல காற்றில் பறக்க விடுவது போல தான் அணிய முடியும் எனப் பல காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். லிசா ரே ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சமீபத்தில் அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.


Premier Pressure Cooker
"பாசமான அன்னை பரிசாய் தந்த ப்ரீமியர் ஆசை ஆசையாய் கணவர் வாங்கித் தந்த ப்ரீமியர்" என ஆரம்பிக்கும் விளம்பரம், டிவியில் அதிகமாக இவ்விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இருப்பினும் இப்போது பார்த்த போது நன்றாக இருப்பதாகத் தோன்றியது.


Spirit of Unity Concerts
முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும். இதில் துவக்கத்தில் வரும் title music கேட்பதற்காகவே காத்து கிடப்பேன். அந்நிகழ்ச்சியில் வரும் மற்ற கச்சேரிகள் எதையும் கூர்ந்து கவனித்ததில்லை. இந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.


கடைசியாக ரோஜா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பின் சுரபி என்னும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பேட்டியைக் காணலாம். இதில் அவருடைய பெயரை அப்துல் ரகுமான் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம் காலம் செல்ல செல்ல குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெகுவாகப் பிரபலம் ஆவதற்கு முன் வந்த முதல் சில விளம்பரங்களில் ஒன்று இது.

Thursday, March 11, 2010

பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவு

வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)

நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்

1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"

2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"

3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"

4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"

5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.

மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.


ஆங்கிலம்

1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!

2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’

3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."

4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"

5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.

உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.

Wednesday, January 27, 2010

This Day That Age

"The Hindu" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

நாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(

சொல்றோம்ல : மல்லிகட்டாணி

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?

மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.

இதனை விக்கிபீடியாவிலும் காணலாம்.

டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.

Tuesday, July 07, 2009

IV Std 'E' Section

சில பள்ளிக்கூட நினைவுகள்...ஆணி புடுங்கற நேரத்துல சட்டுன்னு மனசுல வந்தது.

****************************************************

"உன் ரப்பரைக் கொஞ்சம் கொடேன், அழிச்சிட்டுத் தரேன்"
"ஐ...அஸ்கு புஸ்கு"

இப்ப யாராச்சும் என்கிட்ட எதாச்சும் கேக்கனும், அவங்களுக்கு நான் அஸ்கு புஸ்கு சொல்லனும்னு ரொம்ப ஆசையா இருக்கு :(

உதாரணத்துக்கு "கேன் ஐ பாரோ யுவர் லேப்டாப் அடாப்டர் ஃபார் சம்டைம்?" - "Can I borrow your Laptop Adaptor for sometime?"
"ஐ...அஸ்கு புஸ்கு"ன்னு சொன்னா மனசுக்கு எவ்வளவு இதமாயிருக்கும்? நம்ம மனசுக்குத் தான் :)

****************************************************

"வாட் இஸ் தி நாய்ஸ் ஓவர் தேர்"(What is the noise over there?)
"மிஸ் திஸ் பாய் இஸ் கில்லிங் மீ மிஸ்"

****************************************************

"ரப்பர் எப்படி செய்வாங்க தெரியுமாடா?"
"தெரியாதே"
"பென்சில் தோல் சீவி அதை பாத்திரத்துல போட்டு பால் ஊத்தி
மறு நாள் காலைல பாத்தா ரப்பர் வந்துருக்கும்"

இதை உண்மைன்னு நம்பி பென்சில் சீவி பென்சில் பாக்ஸ்ல போட்டு வீட்டுக்குப் பல தடவை எடுத்துட்டு போயும் பாம்புக்கு...சே...பென்சில் தோலுக்குப் பால் ஊத்த விட்டதில்லை :(

****************************************************

"மயில் றெக்கை இருக்கில்ல அத புக்குக்குள்ள வெச்சி அரிசி போட்டேன்னு வை...மறு நாள் மயில் குட்டி கிடைக்கும்"
"நெஜமாவாடா?"
"ஆமாம்டா...எங்க வீட்டுல அந்த மயில் குட்டி பெருசாயி முட்டை கூட போட்டுச்சே"

****************************************************

"டேய்! அவன் ஷுல சாணியை மிதிச்சிட்டு வந்திருக்காண்டா"
"சீத்தாங்கோல் விடுடா"

ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு -
"ஐயயே...சாணி மிதிச்சிட்டு வந்திருக்கான்...சீத்தாங்கோல்"

- ஸ்கூலைத் தவிர இந்த சீத்தாங்கோலை எங்கேயுமே பயன்படுத்துனது இல்லை. அதுக்கு என்ன அர்த்தம்னு இன்னிக்கு வரைக்கும் தெரியாது.

****************************************************

ரிங்கா ரிங்கா ரோஸஸ்
பாக்கெட் ஃபுல் ஆஃப் போஸஸ்
ஹஷ்ஷா புஷ்ஷா
ஆல் ஆஃப் யூ டவுன்(வீ ஆல் ஃபால் டவுன்)

Ring-a Ring-a roses,
Pocket full of poses.
Husha, Busha.
We all fall down.

- ஸ்கூலை விட வீட்டு பக்கத்துல இருக்கற பசங்களோடயும் (பொண்ணுங்களோடயும் தான்:) ) இந்தப் பாட்டைப் பாடிக்கிட்டு கையைப் புடிச்சிக்கிட்டு ரவுண்டு சுத்தி கீழே விழுந்த நியாபகம் அதிகமா இருக்கு.

****************************************************

"நேத்து ஒலியும் ஒளியும்ல புன்னகை மன்னன் படத்துலேருந்து பாட்டு போட்டான் பாத்தியா?"
"ஆமா, நானும் பாத்தேன்"
"அதுல சப்பாத்திக்கு குருமா குருமா பாட்டுல சார்லி சாப்ளின் வேஷம் போட்டுக்கிட்டு கமல் ஓடி வந்து திடீர்னு ரேவதி கன்னத்தைக் கிள்ளி முத்தம் குடுப்பான் பாத்தியா?"
"அட பாவி...இரு இரு மிஸ் கிட்ட சொல்றேன்"
"டேய் சொல்லாதடா"
"நான் சொல்லத் தான் போறேன்"
"நீயும் தானே லேஸ் கட்ட கீழே குனியும் போது பதினாறும் பெற்று ப்ளாட்ஃபாரத்தில் வாழ்கன்னு சொன்னியே அதை நான் மிஸ் கிட்ட சொல்லுவேன்"
"சொல்லிக்கோ"
"அப்போ நீயும் சொல்லிக்கோ"
"மிஸ் மேல உனக்கு பயம் இல்லையா?"
"உனக்கு பயம் இல்லையா?"
"நான் சொன்னதை விட நீ சொன்னது தான் பெரிய விஷயம்"

கலைஞானியோட படத்தை ரசிச்சி ஒரு வார்த்தை சொல்லிட்டதுக்காக நாலாவதுலேருந்து
அஞ்சாவது போற வரைக்கும் இப்படியே ஒருத்தன் என்னை ப்ளாக்மெயில் பண்ணிக்கிட்டே
இருந்தான். ப்ளாக்மெயில் பண்ணவன் பேரு ரஜினிகாந்த். உண்மையாவேங்க.

****************************************************

ஹ்ம்ம்ம்...வயசானாலும் மனசு இன்னும் குழந்தையாவே இருக்கே...என்ன பண்ணறது? :(

Thursday, June 18, 2009

கிண்டி டைம்ஸ் : GCT நினைவுகள் - Reloaded

"ஹலோ! நான் ஒண்டிபுதூர், கோயமுத்தூர்லேருந்து சாரதா பேசுறேன். நல்லாருக்கீங்களா"னு தொடங்கி படபடனு ஒரு அம்மா நேத்து பெப்சி உமாவோடயும் நடிகர் ஜீவாவோடவும் சன் டிவி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சில பேச ஆரம்பிச்சதும், அட ஒண்டிபுதூர்ங்கிற ஊர் பேர நாம எங்கேயோ கேள்வி பட்டிருக்கோமேணு தோணிச்சு. 'கட்' பண்ணா சில வருசத்துக்கு முன்னாடி பால்மணம் மாறாத பையனா இருக்கும் போது(கவனிக்கணும் சில வருசம் தான்) கோயமுத்தூருக்கும் போயி ஒரு வாரம் நம்ம ஆட்டையைப் போட்டது திடீர்னு ஞாபகம் வந்துச்சு. காலேஜ் கொசுவர்த்தி சுருள் சுத்தலாம்னு நெனச்சு கல் தோன்றி மண் தோன்றா காலத்துல 'கிண்டி டைம்ஸ்'னு ஒரு பதிவைத் தொடங்குனதும் ஞாபகத்துக்கு வந்துச்சு. எல்லாரும் உசுப்பேத்தி வுடறாங்களே நாம தான் பெரிய இவுரு('வெண்ரு'னு படிங்க)ஆயிட்டமே, இனிமே கதை எழுதுனா சேப்டர் சேப்டராக் கோர்வையாத் தான் எழுதணும்னு நெனச்சு கிண்டி டைம்ஸைக் கெடப்புல போட்டதும் ஞாபகம் வந்துச்சு. சரிங்க மிஸ்டர் வெண்ரு, கிண்டி டைம்ஸுக்கும் ஒண்டிபுதூருக்கும் என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்க...அதானே? சம்பந்தம் இருக்குங்களே? கோயம்புத்தூர் இல்லாம நம்ம வாழ்க்கையில அண்ணா யுனிவர்சிடியே இருந்திருக்காது.

ப்ளஸ்2 முடிச்சதும் மொத மொதல்ல நம்ம 'தெறம'ய புரிஞ்சிக்கிட்டு சீட் குடுத்தது கோயமுத்தூர் GCT(Government College of Technology) தான். கொளுத்துற ஜூன் மாச வெயில்ல மெட்ராஸ்லேருந்து கோயமுத்தூர் போனா, ராத்திரி நீலகிரி எக்ஸ்பிரஸ்ல குளுரு பின்னு பின்னுன்னு பின்னுது. 1-C ஒண்டிபுதூர் டு வடவள்ளி போற சேரன் பஸ் தான் அந்த ஊர்ல நம்ம ஆஸ்தான வாகனம். கோயமுத்தூர் ஜங்சன்ல 1-Cயைப் புடிச்சா நேரா லாலி ரோடுங்கிற எடத்துல எறக்கி வுட்டுருவாங். அங்கண எறங்கி கொஞ்சம் முன்ன நடந்தா ஜிசிடி வந்துரும். ஆர்.கே.நாராயணனோட 'மால்குடி டேஸ்' புக்லயும் லாலி ரோடுன்னு ஒரு ரோடு வரும்... ஆனா இந்த சமாச்சாரம் அப்பால தான் தெரிஞ்சுது நமக்கு. ஒரு வேளை ஆர்.கே.நாராயணனுக்குப் பேர் வைக்க ஐடியா கொடுத்த எடமோ? எது எப்படியோ...அந்த எடம் பார்க்க நல்லா அழகாத் தான் இருந்துச்சு. ஜிசிடிக்கு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி தடாகம் ரோட்டுல(அதான்னு நெனக்கிறேன்)தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம். நீ கிழிச்ச கிழிக்கு எங்கே ஒனக்கு இஞ்சினியரிங் சீட் கெடக்கப் போவுதுன்னு எங்க அப்புச்சி பயங்காட்டுனதுல B.Sc(Agri)க்கும் அப்ளை பண்ணி வச்சிருந்தேன். புல் பூண்டுக்கெல்லாம் பாடனிகல் பேரை தெரிஞ்சு வச்சிருந்த ஒரு விவசாய மேதை இஞ்சினியரிங் சீட் கெடச்சதால இப்ப கம்பூயட்டரைக் கட்டி மாரடிக்கிற கூலி வேலை பாத்துக்குனு இருக்காரு.

'சின்னப் பையனாச்சே!' தனியா வூட்டை வுட்டு மொத மொறையா போறானேனு அப்புச்சியும் என்னைய காலேஜ்ல சேத்து வுட அடம்புடிச்சு வர்றாரு(!). நம்மள செண்ட்ரல் ஸ்டேசன்ல வழி அனுப்புறதுக்கு ஒரு பெரிய கூட்டம் வேற. இதுக்கே இப்பிடின்னா நாலு வருசம் படிச்சி முடிச்சிட்டு வந்துருந்தா ஒரு வேளை 'பாட்டி சொல்லைத் தட்டாதே' படம் ரேஞ்சுக்குத் மாலை மரியாதை எல்லாம் செஞ்சு வரவேத்துருப்பாங்களோ என்னவோ? காலேஜ்ல சேர போகும் போது ஒழுங்கு மரியாதையா மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கிட்டு ஒரேயடியா போயிருக்கலாம். ஆனா காலேஜ் எப்படியிருக்கு, நம்ம பயலுக்கு அங்க வசதியெல்லாம் எப்படி இருக்கும்னு மொதல்ல ஒரு reconaissance survey உட்டுக்கலாம்(நான் சிவில் இஞ்சினியரிங் படிச்சவன்னு நீங்க நம்பணும் இல்லியா...அதுக்குத் தான் இந்த பீட்டரு), அப்புறமா வந்து மூட்டை முடிச்சி கட்டிக்கலாம்னு ஒரு அரிதி பெரும்பான்மை முடிவை அம்ஸும் அப்ஸும் சேந்து எடுத்துட்டாங்க.

அங்கே சுத்து வட்டாரப் பதினெட்டு பட்டியிலயும் நல்ல பேருள்ள காலேஜ் நம்ம ஜிசிடி. கிட்டத்தட்ட அம்பது பர்செண்ட் 'புள்ளங்க' இருந்ததுனால 'கேர்ள்ஸ் காலேஜ் ஆப் டெக்னாலஜி'னு ஒரு பட்டப் பேரு வேற. சரினு அங்கப் போனா சேந்த மூணு நாள்லேயே காலேஜ் ஆரம்பிக்குதுங்கறாங்க. ஆஸ்டல் ரூமை மட்டும் வாங்கிக்கிட்டு ஒடனே திரும்பவும் வண்டியை வுடு மெட்ராஸுக்கு. பையன் கஷ்டப் படக்கூடாதுன்னு நம்மளைப் பெத்தவங்க மூட்டை கட்டுனாங்க பாருங்க நமக்காக...அடடடா இன்னிக்கெல்லாம் சொல்லிக்கிட்டே இருக்கலாம் அதப் பத்தி. நான் கொண்டு போன சாமாஞ் செட்டப் பாத்து பயலுவ எல்லாம் நம்மள ஒரு மார்க்கமாத் தான் பாத்தானுவ. க்ளோசப் டூத்பேஸ்ட் - ஆறு, சிந்தால் சோப் - 4, ரின் சோப் - 6, சன்சில்க் ஷாம்பூ - 3, இது போக தின்றதுக்கு முறுக்கு சீடை, மிச்சரு இத்தியாதி...இப்படின்னு மளிகை கடை லிஸ்ட் தோத்துச்சு போங்க.எதோ அங்க கடைபோடுற லெவலுக்குத் தான் போனேன்.

சீனியர் பயலுங்க ராகிங் எல்லாம் பண்ணுவானுங்கன்னு கேள்வி பட்டிருந்தாலும், ஆஸ்டல்ல போய் சேந்த அன்னிக்கு ஒன்னும் பெருசா நடக்கலை. ஆனா பொழுது விடிஞ்சதும் குலை நடுங்க வச்ச ஒரு சேதி என்னன்னா அதுக்கு முத நாள் ராத்திரி ரெண்டு எமகாதக சீனியருங்க ஃபர்ஸ்ட் இயர் ஆஸ்டல் டிரெய்னேஜ் பைப்பைப் புடிச்சு ரெண்டு மாறி மாங்கு மான்குன்னு ஏறி ஜன்னல் கம்பியைப் புடிச்சு வெளியில் தொங்கிட்டு பச்ச புள்ளங்களை ராகிங் பண்ணிருக்கானுவங்கிறது. அதோட அந்நியன் மாதிரி இதே கதி தான் எல்லாருக்கும்னு வார்னிங் வேற குடுத்துட்டுப் போயிருந்தானுவ. சீனியர் பசங்கக் கிட்டேருந்து காப்பாத்தறதுக்காகப் பட்டியில அடைச்ச ஆடுங்களைத் தெறந்து வுடற மாதிரி காலைல எட்டு மணிக்கு ஆஸ்டல் வாச்மேன் பிகில் அடிச்சி கூப்பிடுவாரு...அதுக்கு முன்னாடி யாரும் வெளியே போவ முடியாது. ஃபர்ஸ்ட் இயருங்கிறதால நாங்களும் சொன்ன பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு வாச்மேன் பிகிலே கதின்னு கெடந்தோம்.

மொத நாள் க்ளாஸ்லே எல்லாரும் அவுங்க அவுங்க ஊரு பேரையெல்லாம் சொல்றாங்க. ஒரு பய சத்தியமங்கலம்ங்கிறான், ஒரு புள்ள சிறுமுகைங்குது இன்னொரு பய பண்ணாரி கேம்ப்ங்கிறான்...அப்ப தான் வீரப்பன் சிறுமுகைல ரெண்டே ரெண்டு எளநி சீவிருந்தாரு...என்னடா படிக்கிற பயலுகளும் வீரப்பனுக்கு மாமன் மச்சான் மொறயா இருப்பானுங்க போலிருக்கேனு நெனச்சிக்கிட்டு ஒக்காந்திருக்கும் போதே வாத்தியார் ஒரு பையனை எழுப்பறாரு...'தம்பி நீ மெட்ராசா' அப்டீங்கறாரு. அவனும் ஆமாங்கையாங்கிறான். எப்பிடிரா சரியா சொல்றாருன்னு யோசிக்கும் போதே 'காலேஜ் மொத நாளே டீ சர்ட்டும் ஸ்போர்ட்ஸ் ஷூ மாட்டிட்டு வந்துருக்கியே! அத வச்சு சொன்னேன். தம்பி நீங்கல்லாம் ப்ரொபஷனல் கோர்ஸ் படிக்கிற பசங்க...இந்த படிப்புக்குன்னு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு. அதை புரிஞ்சு நடந்துக்குங்க' அப்பிடீங்கறாரு. ஆஹா! இந்த ஊர்ல ஆட்டம் ஆடுனா நம்மளைக் குத்தி உக்கார வச்சுடுவாங்க போலிருக்கே...நம்ம அப்புச்சி தீர்க்கதரிசி தான்...ஒரு வாத்தியார் எப்பிடி யோசிப்பாருன்னு தெரிஞ்சு தான் நமக்கு எப்பிடி உடுத்தணும் எப்பிடி நடக்கணும்னு சொல்லி அனுப்பிச்சிருக்காரு. இதெல்லாம் காலேஜ் வாத்தியார் புள்ளயா இருக்கறதோட பலன்னு நெனச்சிக்கிட்டேன்.

என்னிக்குடா நம்ம கைல மாட்டுவானுங்கன்னு ரெண்டு நாள் பொறத்துப் பொறுத்து பாத்த பைப் ஏற முடியாத சீனியர் பசங்க கிளாஸ் ரூமுக்கு வாச்மேன் பின்னாடி வரிசையா போறதப் பாத்துட்டு 'போங்கடி போங்க...இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பிகில் வேலையெல்லாம் நடக்குதுன்னு நாங்களும் பாக்கறோம்'னு நாங்க போகும் போது சவுண்டு வுட ஆரம்பிச்சிட்டானுங்க. என்னத்தப் பண்றது...நாம ஃபர்ஸ்ட் இயரா பொறந்த பாவத்துக்கு இந்தப் பேச்செல்லாம் கேட்க வேண்டியிருக்கு, ராகிங்ல நாம மாட்டாத வரைக்கும் எல்லாம் சரி தான்னு நம்பி... கொஞ்சூண்டு சந்தோஷப் பட்டதுக்கு வேட்டு வச்சாரு ஒரு சாமியாரு...

(டிஸ்கி : இது மார்ச் 24, 2006 அன்னிக்கு ஏற்கனவே பதிப்பிச்ச பதிவு தான். நினைவுகளைத் தொடரலாம்னு திரும்பவும் இன்னிக்கு பப்ளிஷ் செஞ்சிருக்கேன்)

Sunday, March 08, 2009

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்

"ராமகிருஷ்ணன்"

"வரது குட்டி"

நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".

நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"

7:59:56

7:59:57

7:59:58

7:59:59

8:00:00

ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா
"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா சீரியல்னும், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னும், 'லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ்'னும் இந்தியாவில் தொலைக்காட்சி பார்த்தல் என்பது சிக்கலாய் இல்லாமல் இருந்த காலக்கட்டத்து நினைவுகள் தான் நான் மேலே சொன்னது. போட்டியில்லாத, உலகமயமாக்கல் இல்லாத, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏதுமில்லா அக்காலக் கட்டத்தில் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான 'தூர்தர்ஷன்' கோலோச்சிக் கொண்டிருந்தது. நம்முடைய வளர்கின்ற பருவத்தில் நாம் காணும், தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்பது பல காலம் நம் நினைவில் இருக்கும். அதை பின்னொரு நாளில் நினைவு மீட்டும் பொழுது அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவங்களை நம் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு தூர்தர்ஷனின் ஆர்ப்பாட்டமில்லாத, சிம்பிளான செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிய நினைவு வந்தது. இப்போ தான் எதுவா இருந்தாலும் இணையத்துல தேடிப் பார்க்கலாமே...அதனால தூர்தர்ஷன்னு தட்டச்சு செய்து ஆங்கிலத்துலயும், தமிழ்லயும் தேடிப் பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க...வளர்ற வயசுல வெறுத்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு அப்படியொரு ரசிகர் வட்டம் இருக்கறது தெரிஞ்சது. அந்த ரசிகர்களில் பெரும்பாலானவங்க தூர்தர்ஷனின் பொற்காலத்தின் போது பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளா இருந்தவங்க. அவங்க எழுதியிருக்கற பதிவுகளைப் படிச்சா அந்த நினைவுகள் இப்போது நினைவுகளாக மட்டும் இருக்கிறதே என்று கண்டிப்பாக ஏக்கப் பெருமூச்சும் தோன்றும். முதல் பத்தியில இருக்கற admiration, adulation எல்லாம் இப்போ தான். அப்போல்லாம் நான் கூட சே...என்னடா இது சொத்தை டிவி சேனல்னு வெறுத்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பாத்தா அந்த ஒத்தை சொத்தை டிவி சேனல் மூலமா நான் கத்துக்கிட்டதும் தெரிஞ்சிக்கிட்டதும் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு புரியுது.

தூர்தர்ஷனின் தமிழ் செய்தி வாசிப்பாளர்களை நினைவு கூர்ந்தால் அவர்களில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் திரு.H.ராமகிருஷ்ணன். 1985ல எங்க வீட்டுல முதன் முதல்ல டிவி வாங்குன காலத்துலேருந்து '90களின் இறுதி வரை இவரை நான் செய்தி வாசிப்பாளராகப் பார்த்த நியாபகம். சில சமயம் வானொலியிலும்(ஆகாசவாணி) இவர் செய்தி வாசிப்பதை கேட்டிருக்கிறேன்.

1990களில் வெளிவந்த 'வானமே எல்லை' படம் வெளிவரும் வரை இவர் போலியோவினால் ஊனமுற்றவர் என்பது எனக்கு தெரியாது. ஏன்னு தெரியலை...என்னால அதை நம்பறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த படத்துக்காக எதாச்சும் ட்ரிக் செய்து அந்த மாதிரி எடுத்துருப்பாங்களோன்னு ரொம்ப நாள் நெனச்சிட்டிருந்தேன். அவரைப் பத்தி இணையத்துல தேடும் போது அவரு தன்னோட சொந்த வலைதளத்தையும் வச்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவருன்னும் பல இசை கச்சேரிகள்ல பாடியிருக்காருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். கர்நாடக இசை வித்வான்களை எல்லாம் நோண்டி நொங்கெடுக்கிற இசை விமர்சகர் சுப்புடு அவருக்கு பக்க வாத்தியமா கீபோர்டு வாசிக்கற படத்தையும் அவரோட வலைதளத்தில் பார்க்கலாம்.

செய்தி வாசிப்பாளர்கள்ல ராமகிருஷ்ணன் என் தம்பிக்கு ஃபேவரிட்னா என்னோட ஃபேவரிட் திரு.வரதராஜன். அப்போல்லாம் அவரை 'வரதுகுட்டி'னு தான் சொல்லுவேன். ஏன்னு சரியா நியாபகம் இல்லை. 1980களில் சிவாஜி கணேசன் நடிச்சி வெளிவந்த "பரிட்சைக்கு நேரமாச்சு"ங்கிற படம். அதுல சிவாஜியோட பையனா ஒரு கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரமா வரதராஜனே நடிச்சிருக்கிறாரா இல்லை ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சிருக்கிறாரான்னு நியாபகம் இல்லை.
ஆனா அந்த கேரக்டரோட பேரு "வரதுகுட்டி"னு நியாபகம். அதுலேருந்து வரதராஜனை "வரதுகுட்டி"ன்னு கூப்பிடறது பழக்கமாயிடுச்சு. இரவு எட்டு மணி செய்திகள்ல "வரதுகுட்டி" வருவாருன்னு தான் நான் அதிகமா பெட் வச்சிருக்கேன் :) இவர் ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி வந்த சன் டிவி தொலைக்காட்சித் தொடர் ஒன்னில் அப்பா கேரக்டரிலும் நடித்தார். அவரோட படமும் இன்னிக்குக் கெடைச்சிடுச்சு :) அதையும் வலையேத்தியாச்சு. இப்போது இவர் ஒரு பிரபலமான நாடக நடிகராவும் இருக்கிறார். இவருக்கு http://tvvvaradharajen.com எனும் சொந்தமான வலைத்தளம் ஒன்று உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்ல ஒரு ஸ்டார் அந்தஸ்து இருக்குன்னா...அது கண்டிப்பா இவருக்குத் தான். அவர் ஷோபனா ரவி. இவர் செய்தி வாசிக்கும் போது ரொம்ப தன்னம்பிக்கையோட வாசிக்கிறா மாதிரி தெரியும். பொதுவாக இவர் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். செய்திகளை முடிச்சிட்டு வணக்கம் சொல்லும் போது கூட பெரும்பாலும் புன்னகைக்க மாட்டார். ஆனா பெண்களுக்கு இவர் கட்டும் புடவைகளின் மீது ஒரு தனி கண்ணு இருக்கும். "நேத்து ஷோபனா ரவி கட்டியிருந்த புடவையின் கலர்..." அப்படின்னு மேல் வீட்டு ஆண்ட்டி ஆரம்பிச்சாங்கன்னா அந்த பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடும்.

இவர் ஒரு புடவையை ஒரு முறைக்கு மேல் கட்டுவதில்லை அப்படின்னும் இவர் வீட்டில் புடவைகளை அடுக்கி வைக்க ஒரு மிகப் பெரிய பீரோ இருக்கு அப்படின்னு அவங்க வீட்டு சுத்து வட்டாரத்துல பேசிக்குவாங்கன்னு ஒரு இணைய நண்பர் எழுதிருக்கறதை படிச்சேன். இவரும் ராமகிருஷ்ணனும் மட்டும் தான் தூர்தர்ஷனின் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் செய்தி வாசித்ததாகத் தெரிந்து கொண்டேன். இவருடைய மகள் ராஜ் டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்னு நெனைக்கிறேன்.

ஷோபனா ரவிக்கு அடுத்தபடியா பெண்கள்ல பிரபலமா இருந்தவங்க சந்தியா ராஜகோபாலும், ஃபாத்திமா பாபுவும். இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கும் தனியார் சேனல்களில் செய்தி வாசிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க. மத்த செய்தி வாசிப்பாளர்கள்னு பாத்தா பாலசுப்பிரமணியன், செந்தமிழ் அரசு(நன்றி : நிலாக்காலம்/ஸ்ரீ), தமிழன்பன், இனியன் சம்பத், ஸ்ரீதர், ஹெலன் ப்ரமிளா, நிஜந்தன், நசீமா சிக்கந்தர், கண்ணாத்தாள், நிர்மலா சுரேஷ் இவங்க பேரெல்லாம் ஞாபகம் இருக்கு. இதுல தமிழன்பன் ரொம்ப திருத்தமாகவும் அழுத்தமாகவும் வாசிப்பார். எதோ ஒரு காரணத்துக்காக "இந்திய தேசிய கொடியை கோமணமாக அணிவேன்"ன்னு இவர் சொன்னதால இவரைத் தூக்கிட்டாங்கன்னு அப்பல்லாம் சொல்லுவாங்க.



நிஜந்தன் இன்னும் ராஜ் டிவியில செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். ஸ்ரீதரின் குரலை அவர் தொலைக்காட்சியிலிருந்து காணாத போன பின்பும் வானொலியில் கேட்டிருக்கிறேன். இணையத்தில் ஒருவர், ஸ்ரீதர் செய்தி வாசித்து முடித்து விட்ட பின் புன்னகைப்பதை பார்ப்பதற்காகவே அவருடைய அம்மா அடுப்படி வேலையில் ஈடுபட்டிருந்தாலும் வந்து தொலைக்காட்சியைப் பார்ப்பார் என்று எழுதியிருக்கிறார். இதை தவிர 'கல்யாண அகதிகள்' அப்படீங்கற கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படத்துலயும் அவர் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராவே நடிச்சிருப்பாரு. அவர் பேரு சௌந்தர்னு நெனக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் அவரை தொலைக்காட்சியில் அதிகமாப் பாக்க முடியலை.

சென்னை தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கறா மாதிரி தில்லி தூர்தர்ஷன்ல ஆங்கில செய்தி வாசிப்பாளர்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருக்கு. கீழே சில ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள் படங்களைத் தேடிப் பிடிச்சிப் போட்டிருக்கேன். யாராச்சும் உங்க நியாபகத்துக்கு வர்றாங்களான்னு பாருங்க.

தேஜேஷ்வர் சிங்(Tejeshwar Singh) - இவர் போன வருஷம் காலமாயிட்டார். ஒரு ஆழமான குரலுக்குச் சொந்தக்காரர். "Sage Publications" எடிட்டராகவும் இருந்திருக்கிறார்.

சுனித் டண்டன்(Sunit Tandon) - இவருக்கும் இணையத்தில் ஏகப்பட்ட விசிறிகள் இருக்காங்க.

ரினி கன்னா(Rini Khanna) - இவங்க Facebookலயும் இருக்காங்க பாருங்க.

உஷா அல்புகெர்க்(Usha Albuquerque) - ரொம்ப சாந்தமான முகம் இவருக்கு. மத்தவங்க அளவுக்கு இவர் அவ்வளவு பிரபலம் இல்லைன்னாலும், இவர் முகமும் பெயரும் எனக்கு இன்னும் நல்லா நினைவில் இருக்கு.

நிர்மல் ஆண்ட்ரூஸ்(Nirmal Andrews) - இவரும் அவ்வளவு பிரபலமானவரு கிடையாது. ஆனா இவரோட பேரை வச்சித் தேடும் போது இணையத்துல இவரோட படம் கெடைச்சது. இப்போ ஐ.நா. சம்பந்தப்பட்ட ஒரு பணியில் வெளிநாட்டில் இருக்கிறார்.

ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள்ல பிரபலமானவங்கன்னு பாத்தீங்கன்னா சுகன்யா பாலகிருஷ்ணன், கோமல் ஜி.பி.சிங், கீதாஞ்சலி ஐயர், மீனு, நீத்தி ரவீந்திரன் (நன்றி: திரு.மாலன்), ரினி கன்னா(திருமணத்துக்கு முன் ரினி சைமன்), சங்கீதா பேடி(திருமணத்துக்கு முன் சங்கீதா வர்மா). இதுல சுகன்யா பாலகிருஷ்ணன் டெல்லியில் செட்டில் ஆகிவிட்ட தமிழர். நான் தில்லியில் இருந்த போது "The Asian Age" என்னும் பத்திரிகையில் தில்லி தமிழர்களைப் பற்றிய ஒரு ரிப்போர்ட் வந்தது. அதில் சுகன்யாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக தில்லியில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. கல்கட்டா தூர்தர்ஷனில் என்.விஸ்வநாதன் என்பவர் பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் என்று இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார். அநேகமாக இவர் "மூன்று முடிச்சு" படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்த நடிகர் கல்கட்டா விஸ்வநாதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவரை தூர்தர்ஷனில் கல்லூரி மாணவர்களுக்காக ஒளிபரப்பாகும் யூ.ஜி.சி(UGC) நிகழ்ச்சியில் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். அத்துடன் திரைப்படங்களிலேயே இவர் அருமையாக ஆங்கிலம் பேசுவார்.

'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் P.C.ராமகிருஷ்ணா(நன்றி : திரு.மாலன்)
மால்குடி சுபா 'வால்பாறை வட்டப்பாறை' என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார் தெரியுமா? அந்த ஆல்பத்தின் வீடியோவில் நடித்த பெண் P.C.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். 'மே மாதம்' திரைப்படம் வெளிவந்த காலத்தில் இவரை அடிக்கடி சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பார்த்த ஞாபகம். தமிழ் நியூஸ் பாத்தாச்சு, ஆங்கில நியூஸ் பாத்தாச்சு. காது கேளாதோருக்கான நியூஸ் பாத்துருக்கீங்களா? நானும் என் தம்பியும் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான செய்தி அறிக்கையை தவறாமல் பார்ப்போம். அந்த செய்தி அறிக்கையின் வாசிப்பாளர்கள்ல ஷஷி பால்(Shashi Pal), சங்கீதா இவங்க ரெண்டு பேரு பேரும் நியாபகம் இருக்கு. அப்போல்லாம் ஒரு சில சைகைகளக் கத்து வச்சிக்கிட்டு அம்மா கிட்ட வம்பு பண்ணதுண்டு. சில சைகைகள் இன்னும் நியாபகம் இருக்கு. நெத்தியில பொட்டைத் தொட்டைக் காட்டுனா "இந்தியா"ன்னு அர்த்தம். கையோட முன் பாதி, பின் பாதியை முறையே முற்பகல், பிற்பகல் இதை தெரிவிக்க உபயோகிப்பாங்க.

திரு.மாலன் அவர்களின் பின்னூட்டம் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக :

>>'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் இப்போது நினைவில் வர மாட்டேன் என்கிறது<<

அவரது பெயர் பி.சி.ராமகிருஷ்ணா. சென்னையில் பிரபலமான ஆங்கில நாடகக் குழுவான The Madras Playersஐச் சேர்ந்தவர். இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டம் வரை ஆங்கிலச் செய்தி என்பதும் அந்தந்த மாநிலச் செய்தியறிக்கைகள் போல அந்தந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது சென்னைத் தொ.கா.வில் ராமகிருஷ்ணா, விசாலம் (தாமஸ் குக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார்)சசிகுமார் (பின்னாளில் ஏசியாநெட்டை ஆரம்பித்தவர், இப்போது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தின் தலைவர்) ஆகியோர் ஆங்கிலச் செய்திகளை வாசித்து வந்தார்கள். தில்லி ஆங்கிலச் செய்தியாளர்களில் நீதி ரவீந்திரன் பெயரை மறந்து விட்டீர்கள்.

நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.

தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளருக்கான தேர்வில் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு.தேர்வுக்கு வருகிறவர்களை தொழிலாளி என்ற சொல்லை உச்சரிக்கச் சொல்வார்கள்.ஏனெனில் ழ,ள,ல மூன்றும் வருகிற ஒரு சொல் அது (நான் அந்தத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன்) ஆரம்ப நாள்களில் வானொலி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். வானொலி அறிவிப்பாளர்கள் என்பதால் உச்சரிப்பில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

அதுபோல சட்ட மன்ற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களுக்கும் வானொலி/தொலைக்காட்சிதான் நம்பத்தகுந்த ஆதாரம். அந்த செய்திகளை வழங்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் சட்டமன்றமே தண்டிக்க முடியும். அதனால் அச்சுப் பத்திரிகைக்கள் அந்த செய்தியாளர்களையும் consult செய்து கொள்வார்கள். அதில் ராமகிருஷ்ணன்தான் கிங்.

மாலன்


தூர்தர்ஷன் பத்தி எழுதுறதுன்னா கண்டிப்பா எக்கச்சக்கமா இருக்கு. செய்தி வாசிப்பாளர்களுக்காக மட்டுமே தனியா ஒரு கொசுவத்தி பதிவு போடுவேன்னு நானே நெனைக்கலை. எனக்கு எழுதும் போது ஒரு சுகமான நினைவு மீட்டலா இருந்தது. படிச்சவங்களுக்கு எப்படின்னு தான் தெரியலை :). வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.