ஃபிலாட்டெலி(Philately) என ஆங்கிலத்தில் வழங்கப்படும் பொழுதுபோக்கை நாம் தமிழில் "தபால் தலை சேகரிப்பு" என்று மொழிபெயர்த்தாலும், தபால் தலை அல்லது அஞ்சல் வில்லைகள் மட்டும் சேகரிப்பது தான் இப்பொழுதுபோக்கா என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும். இப்பதிவில் "தபால் தலை சேகரிப்பு" எனும் பொழுதுபோக்கில்வேறு என்னென்ன அடக்கம் என்பதைப் பற்றி எனக்கு தெரிந்தவற்றைச் சொல்கிறேன்.
அதற்கு முன்னாடி ஒரு நன்றி நவிலல். ரொம்ப நாளா வலைப்பூ பக்கமே வராம இருக்கோமே, இன்னிக்கு எதாச்சும் எழுதுவோம்னு நெனச்சேன். ஆனா அதே நேரம் சோம்பல் என்னை ஆட்கொண்ட காரணத்தால், போன வருடம் இதே நேரம் எழுதிய பதிவு எதையாவது எடுத்து மீள்பதிவு செய்திடுவோம்னு நெனச்சேன். அப்போ தான் போன வருடம் டிசம்பர் மாதம் "சருவாக்கள்" என்ற மனித இனம் அழிக்கப்பட்டதை நினைவு கூறும் உருகுவே நாட்டுத் தபால்தலை பற்றி எழுதியிருந்த "தலை நகரம் -3"என்ற பதிவைப் பார்த்தேன். அப்பதிவை விக்னேஸ்வரன் வலைச்சரத்தின் ஆசிரியராக செப்டம்பர் மாதம் இருந்த போது பொழுதுபோக்குகள் பற்றிய தன்னுடைய பதிவில் இணைத்திருந்ததையும் என் பதிவுகளைப் பற்றி எழுதியிருந்ததையும் கண்டேன். அதை கண்டதும், சோம்பல் பறந்து மனதில் ஒரு புதிய உற்சாகம் பிறந்தது. தபால்தலை சேகரிப்பு பற்றிய ஒரு புதிய பதிவை எழுதும் எண்ணமும் அப்போதே தோன்றியது. இவ்வேளையில் நண்பர் விக்னேஸ்வரனுக்கு காலம் கடந்ததாய் இருந்த போதிலும், என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தபால் தலை சேகரிப்பு என்றால் வெறும் அஞ்சல் உறைகளின் மீது ஒட்டப்பட்டு வெளிவரும் ஸ்டாம்ப்களைச் சேகரித்தல் என்று தான் நானும் ஐந்தாண்டுகள் முன்பு வரை நம்பி வந்தேன். ஆனால் தபால் தலை சேகரிக்கும் பொழுதுபோக்கில் தபால்தலைகளைத் தவிரவும் சேகரிக்கக் கூடிய வேறு பொருட்களும் உள்ளன.
அவற்றில் முக்கியமானவை -
1. முதல் நாள் அஞ்சல் உறை (First Day Cover)
2. குறுந்தாள் தபால் தலைகள் (Miniature Sheet)
சேகரிப்பிற்கான தபால் தலைகளை(Philately Stamps) வெளியிடும் போது ஒவ்வொரு நாட்டு தபால்துறையும் அவ்வாண்டில் என்னென்ன தபால்தலைகளை வெளியிடப் போகிறார்களோ, அதை மாதவாரியாக அட்டவணை படுத்தி ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள். இவ்வகை தபால் தலைகளை முதல் முறையாகப் பயன்பாட்டிற்காக வெளியிடும் போது ஒரு சிறப்பு அஞ்சல் உறையையும் வெளியிடுவார்கள். இவ்வஞ்சல் உறையை முதல் நாள் அஞ்சல் உறை(First Day Cover)என்கிறார்கள். கீழே உள்ளது 2 ஆகஸ்டு 2008 அன்று இந்திய தபால் துறையால் வெளியிடப்பட்ட அல்டாப்ரா ஆமைகளைப் பற்றிய தபால்தலையுடன் வெளியிடப்பட்ட சிறப்பு முதல் நாள் அஞ்சல் உறை. இவ்வுறையைப் பார்த்தீர்கள் ஆனால் சாதாரண உறை போல அல்லாமல், வெளியிடப்படும் தபால்தலையுடன் தொடர்புடையதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்றும் சாதாரண அஞ்சல் உறைகள் போல அல்லாது வண்ணமயமாக இருக்கும். இச்சிறப்பு அஞ்சல் உறையின் மீது, அன்று வெளியிடப்படும் தபால்தலைகளை ஒட்டி அன்றைய தேதியுள்ள ஒரு சிறப்பு முத்திரையையும் குத்தி தபால்துறையினர் வெளியிடுவர். தபால் தலைகளின் மீது குத்தப்படும் முத்திரைகளை, தபால் துறையினரும் Philately ஆர்வலர்களும் "Cancellation" என்று அழைக்கின்றனர். இம்முத்திரை குத்தப்பட்டதும் பாவிக்கப்படாத தபால் தலையாக இருப்பது பாவிக்கப்பட்ட தபால் தலையாக மாறுவதன் காரணமாக, இம்முத்திரை குத்துதலை "Cancelling" என்று அழைக்கிறார்கள். முதல் நாள் அஞ்சல் உறைகளின் மீது குத்தப்படும் இம்முத்திரைகளை Special Cancellation என்று அழைக்கின்றனர். இந்த சிறப்பு முத்திரையும் தபால் தலை முதன்முதலில் வெளியிடப்படும் அந்தவொரு நாள் மட்டுமே பயன்படுத்தப்படும். அல்டாப்ரா ஆமைகளைப் பற்றிய தபால்தலை வெளியீட்டின் போது ஆமை வடிவிலான முத்திரை பயனபடுத்தப்பட்டதையும், அது வெளியான தேதியான 2 ஆகஸ்ட் 2008 என்பதனையும் முத்திரையில்(Cancellation) காணலாம். தபால்தலைகள் மட்டும் அல்லாது, இம்முதல் நாள் அஞ்சல் உறைகளுக்குகாகவும் அதன் மேல் குத்தப்படும் சிறப்பு முத்திரைகளின் அழகுக்காகவும் First Day Covers(FDC)களை சேகரிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
புதிதாய் வெளியிடப்படும் தபால்தலைகளைப் பற்றிய தகவல்களைத் தாங்கிய ஒரு செய்தித்தொகுப்பானையும்(Brochure) தபால்துறை வெளியிடும். இத்தொகுப்பில் தபால் தலை சொல்லும் செய்தியையும், அதன் வரலாற்றையும், மற்றும் சில டெக்னிக்கல் குறிப்புகள்(அச்சான முறை, அச்சிடப்பட்ட எண்ணிக்கை, வடிவமைத்தவர் பெயர்) முதலியனவற்றையும் குறிப்பிட்டு இருப்பார்கள். அல்டாப்ரா ஆமையினைப் பற்றிய செய்தித் தொகுப்பான் கீழே உள்ள இரு படங்களில்.
இத்தொகுப்பில் கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்த "அத்வைத்யா"வினைப் (Adwaitya) பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். அல்டாப்ரா ராட்சத ஆமையினத்தைச் சேர்ந்த இவ்வாமை 2006 ஆம் ஆண்டு இறக்கும் போது அதன் வயது கிட்டத்தட்ட 250 ஆண்டுகளாம். இந்திய பெருங்கடலில் உள்ள அல்டாப்ரா எனும் தீவில் இருந்து பெறப்பட்ட இவ்வாமை, 1757ஆம் ஆண்டு அப்போதைய கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் க்ளைவ் என்பவருக்குப் பரிசளிக்க வேண்டி ஆங்கிலேய மாலுமிகளால், இன்னும் மூன்று ஆமைகளுடன் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வரும் வழியில் கொண்டு வரப்பட்டதாம். 1857இல் நடைபெற்ற இந்தியாவின் முதல் விடுதலைப் போர், 1905இல் நடந்த பெங்கால் பிரிவினை, இரண்டு உலக யுத்தங்கள், இந்தியா விடுதலை அடைந்தது போன்ற இருநூறு ஆண்டுகளைக் கடந்த வரலாற்று நிகழ்வுகளைக் கண்டுள்ளதாம். அலிப்பூர் ஜூவில் பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் இவ்வாமையைக் கண்டிருக்கிறார்களாம்.
இந்திய இராணுவத்தின் சீக்கிய படையின் 14வது பிரிவான நாபா அகால் பிரிவின் 250ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி 21 ஜூலை 2008 அன்று இந்திய தபால் துறையினரால் வெளியிடப்பட்ட தபால் தலையும் முதல் நாள் அஞ்சல் உறையும் கீழே.
சிறப்பு முத்திரை குத்தப்பட்ட முதல்நாள் அஞ்சல் உறையைக் கண்டதும் நம் மனதில் ஒரு கேள்வி எழலாம். இவ்வஞ்சல் உறைகளை, மற்ற அஞ்சல் உறைகளைப் போன்று கடிதப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்த முடியுமா என்று. இதற்கான பதில் - ஆம், முடியும். முதல் நாள் அஞ்சல் உறையினுள் தங்கள் கடிதத்தை வைத்து வேறொருவருக்கு அனுப்ப முடியும். ஆனால் உறையின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் தபால்தலை வெளியிடப்படும் அன்று மட்டும் தான் இதைச் செய்ய முடியும். ஏனென்றால் தபால் தலையின் மீது குத்தப்பட்டிருக்கும் சிறப்பு Cancellation முத்திரையில் வெளியீட்டு நாள் குறிக்கப் பட்டு இருக்கிறது பாருங்கள், அதன் காரணத்தால். வெளியீட்டு நாள் அன்று கடிதப் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பெறும் அஞ்சல் உறையினை சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள். இவற்றை Real Posted FDC என்று சொல்கிறார்கள். கீழே இருக்கும் படம் சீனாவைச் சேர்ந்த சேகரிப்பாளர் ஒருவருக்கு, அவருடைய முகவரியை எழுதி இந்தியாவிலிருந்து வெளியீட்டு நாள் அன்று அனுப்பி வைக்கப்பட்ட "மல்லிகைப்பூ" பற்றிய தபால் தலையும் முதல் நாள் அஞ்சல் உறையும். ஏப்ரல் 2008இல் வெளியிடப்பட்ட இந்த குறிப்பிட்ட "மல்லிகைப்பூ" தபால் தலை நறுமணம் மிக்க தபால் தலை (Perfumed Stamp) என்பது அதன் சிறப்பு. இத்தபால் தலையினை முகர்ந்து பார்த்தீர்கள் ஆனால் மல்லிகைப்பூ நறுமணம் கமழும்.
தபால் தலைகளை அச்சிடும் போது, அதன் நீள அகலத்தைக் கருத்தில் கொண்டு 100 அல்லது 150 தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக அச்சிடுவது வழக்கம். ஆனால் சேகரிப்பிற்கான தபால் தலைகளை இவ்வாறான பல தபால் தலைகளைக் கொண்ட ஒரு தாளாக அச்சிடாமல், சில தபால் தலைகள் அடங்கிய ஒரு சிறிய தாளாகவும் அச்சிடுவார்கள். இதனை "Miniature Sheet" என்கிறார்கள். குறுந்தாள் தபால்தலைகள் என்பது இதனைத் தமிழில் குறிப்பிடுவதற்காக நானே செய்த மொழிபெயர்ப்பு :)
மினியேச்சர் தாள்களும் வண்ணம் மிக்கவை, காண்போர் மனதைக் கவறுபவை. இவைகளையும் தபால் தலை சேகரிப்பின் போது சேகரிக்கலாம். இந்த மினியேச்சர் ஷீட்களில் இருந்து தபால் தலைகளைத் தனியாகப் பிரித்தெடுத்தோ அல்லது முழு தாளையுமே அஞ்சல் உறையின் மீது ஒட்டியோ, கடிதப் போக்குவரத்துக்கும் பயன்படுத்தலாம். ஆனால் சேகரிப்பிற்காகக் குறைந்த எண்ணிக்கையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இத்தாள்களை யாரும் மேற்கூறியவாறு பயன்படுத்துவதில்லை.
கீழே இருப்பது இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் எழுதிய "டாக் கர்" எனும் நாடகத்தினை நினைவு கூறுவதற்காக வெளியிடப்பட்ட ஒரு குறுந்தாள் தபால் தலை. தபால் தலையைப் பிரித்தெடுப்பதற்கான perforation தாளுக்குள்ளே இருப்பதைக் காணுங்கள்.
இந்தியாவில் உள்ள பண்டிகைகளைப் பற்றிய ஒரு மினியேச்சர் தாள். இதில் ஒரே தாளில் மூன்று வெவ்வேறு தபால் தலைகள் இருப்பதைக் கவனியுங்கள். சில தபால் தலைகள் மினியேச்சர் ஷீட்களாக மட்டும் கிடைக்கும், சில பெரிய தாள்களாக மட்டுமே அச்சிடப்பட்டு வெளிவரும்(அவற்றிற்கு மினியேச்சர் இருக்காது), சில தபால் தலைகள் இரண்டு வகையாகவும் அச்சிடப்பெறும். பண்டிகைக்களைப் பற்றிய இம்மூன்று தபால் தலைகளும் தனித்தனியாகவும் பெரிய தாள்களிலும் அச்சிடப்பட்டு வெளியிடப் பட்டது.
இந்தியத் தபால் துறையும் சீனத் தபால் துறையும் கூட்டாக வெளியிட்ட "பௌத்த கோயில்கள்" பற்றிய இரு தபால் தலைகளைக் கொண்ட ஒரு மினியேச்சர் தாள் கீழே. இந்தியாவில் உள்ள மகாபோதி ஆலயமும், சீனாவில் உள்ள வெள்ளை குதிரை ஆலயமும் இத்தபால் தலைகளில் காட்டப்பட்டிருக்கின்றன.
அடுத்த கட்டமாக, தபால் தலைகளைச் சேகரிக்கும் முறைகள் என்னென்ன என்பதனைப் பற்றி வரும் பதிவுகளில் சொல்கின்றேன். வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
Wednesday, December 24, 2008
'தலை'நகரம் - 6 : FDC மற்றும் M/s
Wednesday, February 13, 2008
'தலை' நகரம் - 5 : ஷ்ரீ லங்கா?!
தபால் தலைகள் குறித்த பதிவான 'தலை' நகரம் - 4இல் கீழே உள்ள நத்தார் தின(கிறிஸ்துமஸ் நாள்) தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது என்றும் அது என்னவென்றும் கேட்டிருந்தேன். அதை பற்றித் தான் இந்தப் பதிவு. 
ஒரு நாட்டின் தபால் தலையை எடுத்துக்கிட்டோம்னா, அதை வேறு ஒரு நாட்டுத் தபால் தலையோடு ஒப்பிடும் போது வேறுபடுத்திக் காட்டுவது - அத்தலையில் அச்சிடப்பட்டிருக்கும் அந்நாட்டின் பெயர். சில நாடுகள் தங்கள் நாட்டின் பெயரை ஆங்கிலத்திலும், அதிகாரப்பூர்வப் பெயரை தங்கள் சொந்த மொழியிலும் அச்சிடுவர். உதாரணத்திற்கு இந்தியா. INDIA என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தாலும் தேசிய மொழியான இந்தியில் எழுதப்பட்டிருப்பது "பாரத்" என்று தான். சில நாடுகள் தங்கள் சொந்த மொழியில் மட்டுமே நாட்டின் பெயரை அச்சிடுவர். உதாரணமாக ஸ்வீடன் நாட்டுத் தபால் தலைகளைக் கண்டோம் ஆனால் SVERIGE என்று தான் அச்சிடப்பட்டிருக்கும், அதே போல நார்வே(NORGE), சுவிட்சர்லாந்து(HELVETIA). வேறு சில நாடுகள் ஆங்கில எழுத்தையும் தவிர்த்து தங்கள் சொந்த மொழி எழுத்திலேயே நாட்டின் பெயரை அச்சிடுவர். உதாரணமாக கொரியா, க்ரோஏஷியா ஆகியவை. இவற்றிலும் சில நாடுகள் சில சமயங்களில் ஆங்கிலத்திலும் தங்கள் நாட்டின் பெயரை அச்சிடுவது உண்டு.
மேலே உள்ள இலங்கை தபால்தலையைப் பாருங்கள். நாட்டின் பெயரைக் கவனித்தீர்களா? ஆங்கிலத்தில் SHRI LANKA என்றும் தமிழில் இலங்கை என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது. இலங்கையை SRI LANKA என்ற பெயரிலும் CEYLON என்ற பெயரிலும் அறிந்திருக்கிறோம். இவ்விரு பெயர்களையும் தவிர இலங்கைக்கும் இன்னும் பல பெயர்களும் இருக்கின்றன. அதற்காகவே விக்கிபீடியாவில் தனியாக ஒரு பக்கமும் உள்ளது.
இலங்கையின் மற்ற பெயர்கள் :
இலக்திவா - Lakdiva
சிலோன் - Ceylon
சிஹலம் - Sihalam
சீலா கே - Siela Keh
செரண்டிப் - Serendip
ஹெலாதிவா - Heladiva
தாமிரபரணி - Tamraparni
மேலே உள்ள பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒவ்வொரு காரணம் உள்ளது. முழுவிபரமும் வேண்டுமென்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள விக்கிபீடியா சுட்டியைச் சுட்டுங்கள். முக்கியமான சிலவற்றைப் பற்றி மற்றும் இங்கே கூறுகிறேன். Serendip என்ற பெயர் அரேபிய மூலத்தைக் கொண்டது. இப்பெயரைக் கொண்டு எழுதப்பட்ட 'The Three Princes of Serendip' என்கின்ற கதையின் வழியாக, ஆங்கில மொழிக்கு 'Serendipity' என்ற சொல் கிடைத்தது. த்ரீ ப்ரின்சஸ் கதையில் மூன்று இளவரசர்களும் தற்செயலாகப் பல புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். அது போல தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் அல்லது கண்டறியப்படும் செயலை ஆங்கிலத்தில் 'Serendipity' என்கின்றனர்.
அசோக மன்னரின் வழி வந்தவரான 'விஜயன்' என்ற அரசர், இலங்கையை தாமிரபரணி என்று அழைத்தாராம். அதற்கு தாமிர(Copper) நிறம் கொண்ட இலை என்று பொருளாம். தென் தமிழ்நாட்டில் ஓடும் நதிக்கு இப்பெயர் இருப்பதை அறிந்திருப்போம், ஆனால் இலங்கைக்கும் இப்பெயர் முன்பு இருந்திருக்கிறது என்று அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. தாமிரபரணி என்ற பெயர் கிரேக்கர்களால் 'Taprobane' என்று அழைக்கப்பட்டது. உலகின் முதல் வரைபடம் இயற்றிய ப்டாலமி(Ptolemy) என்ற கிரேக்க அறிவியலாளரும் அவ்வரைபடத்தில் இலங்கையை 'Taprobane' என்றே அழைக்கிறார்.
சரி...இத்தனை பெயர்கள் இந்த நாட்டுக்கு இருக்கு. ஆனால் அத்தபால் தலையில் உள்ளது போல 'SHRI LANKA' என்ற பெயரில் இலங்கை அறியப்பெற்றதில்லை என வினவுகிறீர்களா? ஆம்...இலங்கையின் தபால் தலைகள் அனைத்திலும் 'SRI LANKA' என்றும் பழைய தபால் தலைகளில் 'CEYLON' என்று மட்டுமே அச்சடிக்கப் பட்டிருக்கும். ஆனால் 'SHRI LANKA' - ஷ்ரீ லங்கா என்று அச்சிடப்பட்டிருப்பது இத்தபால் தலையின் சிறப்பு. அப்படியென்றால் இது போலி தபால் தலையா என்றால் அதுவுமில்லை. இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தபால் தலை தான்.
இலங்கையின் முன்னாள் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் பெயர் SRI LANKA என்று இருந்தால் நாட்டின் தலைவரின் உயிருக்கு ஆபத்து வரலாம் என ஒரு ஜோசியர் சொன்னாராம். அதை கேட்ட பிரேமதாசா அரசியல் சாசன மாற்றம் எதையும் செய்யாமல் தபால் தலைகளிலும், அரசாங்கக் கடிதத் தாள்களிலும்(Letterheads) SRI LANKA என்பதை SHRI LANKA என்று மாற்றிவிட்டாராம். SHRI LANKA என்ற பெயர் தாங்கிய இன்னொரு தபால் தலை கீழே. 
ஆனால் இப்பெயர் 1992ஆம் ஆண்டிற்கும் 1993ஆம் ஆண்டிற்கும் இடையில் தான் நடைமுறையில் இருந்திருக்கின்றது. மே 1, 1993 ஆம் ஆண்டு தற்கொலைப்படைத் தாக்குதலினால் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்ட பிறகு மறுபடியும் நாட்டின் பெயரை SHRI LANKAவில் இருந்து SRI LANKA ஆக்கிவிட்டார்கள். SRI என்பது SHRI ஆனதையும், அது 1993க்குப் பிறகு மறுபடியும் SRI ஆனதையும் யாரும் கண்டுகொள்ளவுமில்லை :)
Monday, December 24, 2007
'தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)
தபால் தலைகள் மூலமா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடியும். அவை அங்குல அளவுள்ள அகராதிகள் என்பதும் உண்மை தான். ஆனால் கண்டதும் காண்பவர்க்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வேலையையும் தபால் தலைகள் செய்கின்றன. அவை வாழ்த்து தெரிவிப்பது. அஞ்சல் உறையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய வண்ணமிகு காகிதத்தில் அழகிய படங்களையும் நல்வாழ்த்துச் செய்தியையும் கண்டால் யாருக்குத் தான் மனதில் மகிழ்ச்சி பிறக்காது? அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதற்காக பல நாட்டுத் தபால்துறைகளாலும் வெளியிடப்பட்ட தபால் தலைகளை இப்பதிவில் காண்லாம்.
சிறு வயதில் 'Season's Greetings' என்ற வாழ்த்தைக் காணும் போதெல்லாம் குழப்பம் ஏற்படும். எந்த பண்டிகையினை ஒட்டி வாழ்த்துவதற்காக இப்படி வாழ்த்துகிறார்கள் என்று? ஆனால் டிசம்பர் கடைசியிலும், புத்தாண்டு துவக்கத்திலும் வரும் அனைத்து திருநாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக வாழ்த்து தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப் பெறும் சொற்றொடர் தான் 'Season's Greetings'. அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்து தபால்தலை கீழே.
கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதத்தில் தான் யூதர்களின் எட்டு நாள் பண்டிகையான ஹனுக்கா(Hanukkah) கொண்டாடப்படுகிறது. வருடத்திற்கு வருடம் இந்த எட்டு நாட்களின் தேதிகள் மட்டும் மாறுபடுகிறது. நவம்பர் கடைசியிலும் டிசம்பர் துவக்கத்திலோ இவ்வெட்டு நாட்கள் அமைகின்றது. டென்மார்க் நாட்டுத் தபால் தலையைக் கீழே காணுங்கள். டேவிட்டின் நட்சத்திரத்தை(Star of David) ஒரு சிறுவன் தன் வீட்டு வாசலில் தொங்க விடுகிறான். பனிமழையையும் மகிழ்ச்சியான சிறுவனையும் பார்க்கறதற்கு நல்லா இருக்குதில்ல?
கீழே இருப்பது கணடா நாட்டுத் தபால் தலை. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடக்கும் சாண்டாக்ளாஸின் ஊர்வலத்தைச் சித்தரிக்கும் வண்ணம் இத்தபால் தலை அமைந்திருக்கிறது. அத்துடன் ப்ரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸ் திருநாளை 'நோயல்'(Noel) என்று அழைப்பார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். அத்துடன் கிறிஸ்துமஸ் பரிசு கொண்டு வரும் தாத்தாவான சாண்டா க்ளாஸையும் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உதாரணமாக
ஃப்ரான்சு நாட்டில் 'Le Père Noël ' அல்லது க்றிஸ்துமஸ் தந்தை
ஸ்பெயினில் 'Papa Noël'
துருக்கியில் 'Noël Baba'
ஸ்விட்சர்லாந்தில் 'Christkind'
முழு பட்டியலும் வேண்டும் என்றால் இங்குச் சுட்டுங்கள்.
க்றிஸ்துமஸ் பண்டிகையையும் ஏசு க்றிஸ்துவின் அவதரிப்பையும் சித்தரிக்கும் அழகிய தபால்தலைகளை ராயல் மெயில் வெளியிட்டுள்ளது.
க்றிஸ்துமஸ் மரத்துடன் விக்டோரியா காலத்து உடைகள்(Victorian Dress) அணிந்து குதூகலிக்கும் குடும்பத்தினர்.
பிறை நிலவு வடிவில் சாண்டா கிளாஸ். அவருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்கும் குழந்தைகள்.
குழந்தை ஏசுவிற்கு மஜாய் மன்னர்களின் பரிசு(Gifts of Magi). 
நட்பு புன்னகை பூக்கும் சாண்டா க்ளாஸ்.
கிழக்கு திசையில் இருந்து ஏசுவைக் காண வந்த மஜாய் மன்னர்கள்(Magi or 'Three Wise Men from the East') ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி ஏசுவை வந்தடைந்தார்களாம். 
'Lo, the star which they saw in the east'
குழந்தை ஏசுவைச் சித்தரிக்கும் இன்னொரு படம்.
புனித மரியாளும் பரிசுத்த ஆவியும்.
'Blessed is thou amongst women'
புனித மரியாளும் குழந்தை ஏசுவும் - ஹங்கேரி நாட்டுத் தபால் தலை. மக்யார்(Magyar) என்பது அவர்களுடைய மொழியில் அந்நாட்டின் பெயர். அவர்களுடைய மொழியின் பெயரும் மக்யார் தான்.
ஜமைக்கா நாட்டின் க்றிஸ்துமஸ் தபால் தலை.
1993 ஆம் இலங்கையினால் வெளியிடப்பட்ட க்றிஸ்துமஸ் தபால் தலை. க்றிஸ்துமஸ் திருநாளை 'நத்தார்' என்றும் அழைக்கிறார்கள் என்று இத்தபால் தலையைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஒரு வேளை இலங்கையில் மட்டும் நத்தார் என்று அழைக்கிறார்களோ என கூகிளில் தேடியதில் 2006இல் எழுதப்பட்ட பாஸ்டன் பாலாவின் பதிவும் மலைநாடான் ஐயாவின் பதிவும் சிக்கியது. இன்று காலை பதிவர் மாயாவும் 'நத்தார்' வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். எல்லாருக்கும் தெரிந்த சொல்லான இது எனக்கு மட்டும் தான் பரிச்சயம் இல்லாது போய் விட்டது போலிருக்கு. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ஸ்டாம்ப் அளவு". 
சரி இத்தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது. அது என்னவென்று கண்டுபிடிக்க முடிந்தவர்கள் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். அடுத்த பதிவு இதனைப் பற்றியது தான்.
க்றிஸ்துமஸ் திருநாளுக்கு மட்டுமின்றி புத்தாண்டுக்கும் வாழ்த்து தெரிவிக்க பலநாட்டு தபால்துறைகளும் தபால்தலைகளை வெளியிடுகின்றன. 2008 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக இந்திய தபால்துறை 15 டிசம்பர் 2007 அன்று வெளியிட்டுள்ள ஐந்து அழகிய தபால் தலைகள் கீழே.




நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய க்றிஸ்துமஸ் திருநாள்(நத்தார் தினம்) வாழ்த்துகளையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Saturday, December 22, 2007
'தலை'நகரம் - 3
சென்ற பதிவில் பயன்பாட்டு முறைகளினால் தபால்தலைகளின் வகைகளைப் பார்த்தோம். அவை Definitive மற்றும் Commemorative என இரு வகைப்படும். இதை தவிர தபால்தலை சேகரிப்பாளர்கள்(Stamp Collectors அல்லது Philatelists)தபால்தலைகளை இரு வகைபடுத்துகின்றனர். அவையாவன -
1. பயன்படுத்தப்பட்ட தபால்தலைகள்(Used Stamps)- அஞ்சல் சேவையில் பயன்படுத்தப்பட்ட பின் தபால்தலை சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Used Stamps' என்கின்றனர். இவ்வகை தபால்தலைகளில் அனுப்பப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் அலுவலக முத்திரை இருக்கும். அத்துடன் பயன்படுத்தப்பட்டமையால் தபால்தலையின் பின்புறம் பசையின் அடையாளம் இருக்கலாம்.
2. பயன்படுத்தப்படாத புதிய தபால்தலைகள்(Unused or Mint Stamps)- அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டதும் உபயோகப் படுத்தப்படாமல் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Mint Stamps'என்கின்றனர். தபால்தலையின் மதிப்பைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படாத தபால்தலைகளுக்கு சேகரிப்பாளர்களிடம் அதிக மதிப்புள்ளது. எனினும் பிரபலங்கள் பயன்படுத்திய தபால்தலைகளுக்கு இன்றளவும் பெருமதிப்புள்ளது. உதாரணமாக மார்ட்டின் லூதர் கிங்கோ, மகாத்மா காந்தியோ எழுதிய பழைய கடிதத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட தபால்தலைக்கோ அல்லது அஞ்சல் உறைக்கோ அதிக மதிப்புள்ளது.
கீழே இருப்பது சவுதி அரேபிய நாட்டு தபால்துறையால் மெக்காவில் உள்ள 'காபா'வைச் ((Kaaba)சித்தரிக்கும் தபால் தலை. புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் ஹாஜிக்கள் காபாவை ஏழு முறை சுற்றி வருவார்கள் எனத் தெரிந்து கொண்டேன். தபால்தலையைப் பார்த்த மாத்திரத்திலேயே இது ஒரு பயன்படுத்தப்பட்ட அஞ்சல் வில்லை எனப் புரிந்திருக்கும்.

ஃபின்லாந்து நாட்டின் நூல்கண்டு அஞ்சல் வில்லை.

தபால்தலைகளில் உள்ள தகவல்களைக் கவனமாகக் கவனிக்கத் தொடங்கி விட்டால் அதை விட சிறந்த பொழுதுபோக்கு வேறில்லை. தபால்தலைகள் சொல்லும் கதைகளும் ஏராளம். பல சமயங்களில் இவை ஒரு அங்குல அளவுள்ள அகராதிகளாகவும் விளங்கும். கதைகளை முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.
உதாரணமாக உருகுவே நாட்டுத் தபால்துறையினரால் 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்தபால்தலையைப் பாருங்கள்.

'Los Ultimos Charruas'என்றால் ஸ்பேனிஷ் மொழியில் 'கடைசி சருவாக்கள்' எனப் பொருள். என்னவென்று தெரிந்து கொள்ள நேற்று விகிபீடியாவையும் கூகிளையும் தேடியதில் தெரிந்த விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன. உருகுவே நாட்டில் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களான ஸ்பேனிஷ் நாட்டவர்கள் கால்பதிப்பதற்கு முன் வாழ்ந்த பழங்குடியின மக்கள் தான் சருவாக்கள்(Charruas). வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் இவர்களுடைய தொழில்களாக இருந்து வந்துள்ளன. இவர்களை உருகுவே இந்தியர்கள்(Uruguay Indians) என்றும் அழைக்கின்றனர். அம்மண்ணின் மைந்தர்களான சருவாக்கள் ஸ்பேனியர்கள் கால்பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் பல்லாண்டு காலம் ஸ்பேனியர்களுடன் போர் நடந்து வந்துள்ளது. அப்பகுதியில் மற்ற பழங்குடியினருடன் இவர்களுக்கு இருந்த பகையின் காரணத்தாலும், ஐரோப்பியர்களுடன் இருந்த விரோதத்தின் காரணத்தாலும், இவ்வின மக்கள் பல்லாயிரக் கணக்கில் மடியத் தொடங்கினர். அத்துடன் ஸ்பேனியர்கள் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்தும் அழித்து வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெறும் 18 சருவாக்கள் மட்டுமே இருந்துள்ளனர். கேள்விப்படவே மிக விநோதமாக இருந்தது. மிருகங்களில் அழிவுநிலையில் உள்ள ஜீவராசிகள்(endangered species) எனச் சொல்வோமே அது போல இருந்தது. மண்ணாசையின் காரணமாக ஒரு இனத்தையே இன்னொரு இனம் அழித்த செய்தி நம்புவதற்குச் சற்று கடினமாகவும் வருத்தமளிக்க வைப்பதாகவும் இருந்தது.
1833 ஆம் ஆண்டு மொத்தம் நான்கு சருவாக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசிற்கு நாடு கடத்தியுள்ளனர். அங்கும் மிருகங்களை விட கீழ்தரமாக இவர்களை நடத்தியுள்ளனர். பாரிசில் இவர்களைக் காட்சி பொருட்களைப் போல கண்ட ஒரு ஓவியர் வரைந்த படம் தான் தபால்தலையாக வெளியிடப்பட்டுள்ளது. இதே காட்சியைச் சித்தரிக்கும் வண்ணம் உருகுவே நாட்டு தலைநகரான மாண்டிவீடியோவில் இதே போன்றொரு சிலையையும் நிறுவியிருக்கிறார்கள். மேலும் விபரம் தேவையானால் இத்தபால்தலை வெளியீட்டை ஒட்டி உருகுவே தபால்துறையின் வலைதளத்தில் வெளியான விபரங்களைப் பாருங்கள்.
மேலே உள்ளது அப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.
உருகுவே என்றதும் உங்களுக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருவது யார்? தமிழ்கூறு இவ்வலைப்பூவுலகில் ஒரே ஒருத்தர் தான். ஆமாங்க, சருவாக்களின் கதையை அறிந்து கொள்ள காரணமாக இருந்த இந்த Mint stamp - காஞ்சித் தமிழ்மகன், தென்னமேரிக்க தென்றல், டெக்ஸால் ஷகீலா...சே...டகீலா, வருங்கால உருகுவே ஜனாதிபதி, ஸ்பேனிஷ் மொழிஞாயிறு, ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவர் அவர்களுடைய உபயம் என்று நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே இருக்கும் சானல் தீவுகளின்(Channel Islands) ஒரு பகுதியான அல்டெர்னி(Alderney) நாட்டின் வண்ணமிகு தபால்தலைகளைப் பாருங்கள். அல்டெர்னியில் உள்ள காட்சிகளையும் அத்தீவின் பெருமைகளையும் தெரியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள தபால்தலை தொடர்(series) கீழே. இத்தபால்தலைகளில் இருந்து தெரிந்து கொண்டது - இங்கிலாந்து ராணியின் குடியாட்சியின் கீழ் இன்னும் சில பகுதிகள் உள்ளன - அல்டெர்னி, குவெர்ன்சி, சார்க் ஆகிய தீவுகள் சானல் தீவுகளில் அடக்கம், இதை தவிர பசிபிக் பெருங்கடலிலும் பல தீவுகள் உள்ளன. கவுண்டி(County), ஷெரீஃப்(Sheriff) போன்று பெய்லிவிக்(Bailiwick) என்றொரு administrative division(தமிழ்ல என்னங்க?) இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.


கீழே இருப்பது எகிப்து நாட்டின் பயன்படுத்தப்பட்ட தபால்தலை ஒன்று. புராதனச் சின்னம் என்று தெரிகிறது, என்னவென்று தெரியவில்லை...அரபிக் மொழியில்(?) ஏதோ எழுதியிருக்கிறது. அதை படிக்கத் தெரிந்தவர்கள், தெரிந்து சொன்னால் நன்றியுடையவனாவேன்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலு எனும் தீவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஃபட்டேலேவைச்(Fatele) சித்தரிக்கும் மிண்ட் தபால்தலை கீழே. வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகச்சிறிய நாடு என்பது துவாலு தீவின் சிறப்பு.

அடுத்த பதிவு : வாழ்த்தும் தலைகள்
Friday, November 23, 2007
'தலை'நகரம் - 2
சார்லி சாப்ளின் - ஆமாங்க. போன பதிவுல கேட்டிருந்த ராயல் மெயிலினால் 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலையில் இருந்த பிரபலம் சார்லி சாப்ளினே தாங்க. சரியாகக் கண்டுபிடிச்சு சொன்ன தம்பி ராயல் ராம்சாமிக்கு ஒரு ராயல் 'ஓ' போடுங்கங்கோ. பதினைஞ்சு வருஷத்துக்கும் மேலா அந்த தபால் தலை என்கிட்ட இருந்தாலும், அதுல இருக்கறது யாருன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலை. சமீபத்துல ஒரு நாள் எதேச்சையா என்னோட ஸ்டாம்ப் ஆல்பத்தை எடுத்துப் பாக்கும் போது அதுல இருக்கறது 'வின்ஸ்டன் சர்ச்சில்' மாதிரி இருந்துச்சு. ஆனா அந்த ஸ்டாம்ப்லேயே கையெழுத்து ஒன்னு இருக்கு...அதை உத்துப் பாக்கும் போது சார்லி சாப்ளின்னு எழுதியிருக்கற மாதிரி இருந்துச்சு. சரி யாரா இருக்கும்னு நெட்ல தேடும் போது தான் தெரிஞ்சது அது சாட்சாத் சார்லி சாப்ளினே தான்.
ஒட்டிப் போன முகம், குட்டி மீசை, டெர்பி தொப்பி இப்படின்னு பாத்து பழக்கப்பட்ட சார்லி சாப்ளினை இப்படி கொஞ்சம் பூசனாப்பல பாத்ததுல பயங்கர ஆச்சரியம். ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மளோட முதல் ரியாக்ஷன் என்னன்னா"மனுஷன் செமத்தியா தண்ணி அடிப்பான் போலிருக்கு"ங்கறது தான் :). இவரைப் பத்தி விகிபீடியால படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டது இவரோட முழு பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஜூனியர்(Charles Spencer Chaplin Jr.). அடுத்ததா வந்தது இன்னொரு சந்தேகம். உலகப் புகழ் பெற்ற இவர் ஜுனியர்னா சீனியர் யாருன்னு தான்? சீனியரும் ஜூனியர் மாதிரியே புகழ் பெற்றவரா அப்படிங்கறது அடுத்த கேள்வி? தேடிட்டிருக்கேன். தெரிஞ்சா சொல்றேன். உங்களுக்குத் தெரிஞ்சாலும் சொல்லுங்க. விகிபீடியால கண்ணுல பட்ட இன்னொரு விஷயம் இவரோட 'லிஸ்ட் ஆஃப் பொண்டாட்டிஸ்". இந்த மனுசன் வாங்குன அவார்டு லிஸ்டு மாதிரியே இந்த லிஸ்டும் ரொம்ப பெருசா இருக்கு. படிச்சிட்டு வாயை மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம். தலைவர் டுபுக்கு மாதிரி தங்கமணி வாயைக் கெளறி எதாச்சும் ப்ளாக்ல எழுதனும்னு அந்த பாழாப் போன நேரத்துல மண்டைக்குள்ள மணியடிச்சுது. விதி வலியதாச்சே? எங்க வூட்டு அம்மா கிட்ட "ஒன்னே ஒன்னை வச்சிக்கிட்டே அவனவன் திண்டாடறான், இந்தாளு எப்படி தான் சமாளிச்சானோ'ன்னு வாயை விட்டேன். ப்ளாக் எழுதறதுக்காக விழுப்புண் பெற்றவன் என்ற பெயரும் பெற்றேன் :(
சரி அதை விடுங்க. மறுபடியும் விஷயத்துக்கு வருவோம். பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் காரணத்தைப் பொறுத்து தபால் தலைகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அன்றாடப் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் தபால் தலைகளை Definitive Stamps என்று சொல்கிறார்கள். உதாரணத்துக்கு கீழே உள்ள 25 பைசா டிராக்டர் ஸ்டாம்பைப் பாருங்களேன். ரொம்பவும் பழக்கப்பட்டதா இருக்கில்ல? அதே மாதிரி தான் இந்த 5 ரூபா ரப்பர் மர ஸ்டாம்பும். இவை ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அன்றாடப் பயன்பாட்டிற்காக பெரும் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படுபவை.

இங்கிலாந்து(அல்லது யூ.கே) நாட்டின் ராணி தலை ஸ்டாம்புகளும் Definitive வகையைச் சேர்ந்தது தான். அப்புறம் பாலராஜன்கீதா சார் சொன்னது மாதிரி, முதன் முதலில் தபால் தலைகளை வெளியிட்ட நாடு என்பதனால் ஐக்கிய ராசாங்கத்தின்(நன்றி : சூடான் புலி) தபால் தலைகளில் நாட்டின் பெயர் இருக்காது. விக்டோரியா மகாராணியின் தலையின் சிறிய Motif மட்டுமே இருக்கும்.
மக்களின் பொது பயன்பாட்டிற்காகத் தான் என்ற போதிலும் ஒரு நிகழ்ச்சியையோ, ஒரு பிரபலம்/தலைவரையோ சிறப்பிக்க வெளியிடப்படும் தபால் தலைகளை Commemorative Stamps என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு சமீபத்தில் ஐதராபாத்தில் உலக ராணுவ விளையாட்டுகள்(World Military Games) நடந்ததில்லையா? அந்நிகழ்ச்சியினைப் பற்றி வெளி உலகுக்கு அறிவிக்க இந்திய தபால் துறையினரால் சில தபால் தலைகள் வெளியிடப்பட்டன். Definitive தபால் தலைகள் போல் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு குறுகிய காலத்துக்குள் மட்டும் புழக்கத்தில் இருப்பவை Commemorative வகை தபால் தலைகள்.
கீழே இருப்பவை Commemorative வகை தபால் தலைகள் சில.
1985 ஆம் ஆண்டு சார்க் உச்சி மாநாட்டின் போது பூட்டான் நாட்டினால் வெளியிடப்பட்ட தபால் தலை.
அதே நிகழ்ச்சியைக் குறிப்பதற்காக இந்தியாவால் வெளியிடப்பட்ட தபால் தலை.
முதல் தபால் தலை வெளியிடப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இலங்கையினால் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை. இலங்கையின்(அந்நாள் சிலோன்) முதல் தபால் தலையையும் இதில் காணலாம். இவ்வகை தபால் தலையினை "Stamp on Stamp" என்று சேகரிப்பாளர்கள் கூறுகிறார்கள். இவ்வகை தபால் தலைகளைத் தேடித் தேடிச் சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.
Thursday, November 22, 2007
'தலை'நகரம் - 1
'தலை'எழுத்து, 'தலை'புராணம், 'தலை' சொல்லும் கதை இப்படியாக பல பேர்களை யோசிச்சி கடைசியா 'தலை'நகரம்னு பேர் வச்சாச்சு. நிற்க. இது வைகைப்புயல் வடிவேலுவைப் பத்தின பதிவோ காதல் மன்னன் அஜித் குமாரைப் பத்தினப் பதிவோ கெடையாது. சின்ன வயசுல ஆரம்பிச்ச ஒரு பழக்கம்...அதை பத்தின பதிவு தான் இது. பொழுதுபோக்குன்னு சொல்றதை விட பழக்கம்னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும். சரி பில்டப்பு போதும்...அதாவதுங்க சின்ன வயசுல ஆரம்பிச்சி இடையில ஒரு பத்து வருஷம் விட்டுப் போய் இப்ப மறுபடியும் புது உத்வேகத்தோட ஆரம்பிச்சிருக்கற தபால் தலை சேகரிப்பு(Philately) பத்தி எழுதலாம்னு ஒரே
ஆர்வங்கா உந்தி. அதி கோசம் ஈ ரோஜு கடுமையான ஓய்வுலேருந்து எழுந்து வந்திருக்கேன். தபால் தலைகளைப் பத்தியும் தபால் தலை சேகரிப்பு கலையில் நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம் இருக்கு. இதை எழுதுவதன் மூலமாக நானும் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாம்னு நெனைக்கிறேன்.
சரி...முதல்ல உலகின் முதல் தபால் தலை பத்தி பார்ப்போம். இதோட பேரு பென்னி ப்ளாக்(Penny Black). வெளியிட்ட நாடு யுனைட்டெட் கிங்டம்(U.K.- தமிழ்ல என்னங்க?). தபால்களைப் பல இடங்களுக்கும் அனுப்பும் போது அஞ்சல் அலுவலகங்களில் பணம் செலுத்தி அனுப்பும் முறையை மாற்றுவதற்காக, அந்நாட்டின் அஞ்சல் முறை சீர்திருத்தங்களின்(U.K.Postal reforms) ஒரு பகுதியாக சர்.ரோலண்ட் ஹில்(Sir.Rowland Hill) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் தபால் தலை(Postage stamp). உலகின் முதல் தபால் தலையான பென்னி ப்ளாக் விக்டோரியான மகாராணியின் படத்தைத் தாங்கி மே 1, 1840 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
தபால் தலை சேகரிப்பாளர்களால்(Philatelists) மிகவும் போற்றப்படும் இத்தபால் தலையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி. ஆனால் பயன்படுத்தப் படாத(unused அல்லது mint) பென்னி ப்ளாக்கின் தற்போதைய மதிப்பு 3000-4000 பவுண்டுகள் ஆகும்.
பென்னி ப்ளாக்கின் முழு வரலாறையும் படிக்க இங்கு சுட்டுங்கள்.
கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட தபால் தலைகளின் மீது குத்தப்படும் அஞ்சல் முத்திரைகள் சரிவர தெரிவதில்லை என்ற குறையைப் போக்க பென்னி ப்ளாக்கிற்குப் பிறகு 1841 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை தான் கீழே உள்ள பென்னி ரெட்(Penny Red). பென்னி ப்ளாக்கைப் போல அல்லாமல் ஒரு தாளில் உள்ள தபால் தலைகளுக்கிடையே துளைகள்(perforations) உடன் வெளிவந்தது பென்னி ரெட்டின் சிறப்பு.
சரி, ராயல் மெயிலினால்(இங்கிலாந்து நாட்டு தபால் துறை-Royal Mail) 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீழே உள்ள தபால் தலையில் உள்ள இந்த பிரபலம் யார்? இவர் உலகப் புகழ் பெற்றவர். சொல்லுங்க பாப்போம்.

வரும் நாட்களில் தபால் தலை சேகரிப்பில் பயன்படுத்தப் பெறும் கலைச்சொற்கள்(Philatelic Terms), என்னிடம் உள்ள தபால் தலைகளிலிருந்து அவை சொல்லும் கதைகள் முதலானவற்றை எழுத எண்ணியுள்ளேன். நம்ம பதிவர்கள்ல தபால் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ளவங்கன்னு பாத்தா இராமச்சந்திரன் உஷா மேடம் இருக்காங்கனு நினைக்கிறேன்(அப்படி அவங்க சொன்னதா எங்கேயோ படிச்ச ஞாபகம்). வேற யாருக்காச்சும் இதுல ஆர்வம் இருந்தாலும் சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கலாம்னு ஒரு ஆசை தான். சீக்கிரம் சந்திப்போம்னு சொல்லி கடுமையான ஓய்வெடுக்கச் செல்லுவது உங்கள் உங்கள் உங்கள் டேஷ் டேஷ் டேஷ் :)



