Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

Monday, September 19, 2011

ஒரு செப்டம்பர் மாசப் புலரியில்...




"My momma always said, Life is like a box of chocolates. You never know what you're gonna get".
அது ஒரு செப்டம்பர் மாத திங்கட் கிழமை. எல்லா திங்கட்கிழமைகளைப் போலத் தான் அன்றும் இருநாட்கள் விடுமுறை கழிந்து அலுவலகம் செல்வது அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. அவன்...நம் எல்லோரையும் போல ஒருவன். தன்னுடைய மொபைல் ஃபோனின் இயர்ஃபோனைக் காதில் செருகும் போது "Forrest Gump" திரைப்படத்தின் அவ்வசனம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. எந்த ஒரு பயணமுமே, வாழ்க்கை என்னும் பெரும்பயணத்தின் ஒரு infinitesimal part என்பதும் ஒவ்வொரு சிறிய பயணத்தையும் நினைவு தெரிந்த நாள் முதல் மண்ணோடு மண்ணாகிற நாள் வரை "over the years integrate" செய்தால் கிடைக்கும் net result ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் அவனுடைய நம்பிக்கை. பயணத்தின் போது மெல்வதற்கு எந்த நேரத்தில் எந்த சுவையுடைய சாக்லேட் கிடைக்கும் என்று தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையினைச் சுவாரசியமாக வைத்திருக்க உதவுவது என்பது அவனுடைய கருத்து. அக்காரணத்தினாலேயே, தான் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணத்தின் போதும் தான் கேட்கும் பாடல்கள் ஒரே சுவையுடையதாக இல்லாமல் இருப்பதற்காக shuffle play மோடில் ஒலிக்க விடுவான். தான் தோன்றித் தனமாகப் பாடல்கள் ஒலிக்கும் போது வாழ்க்கையோட அந்த சிறு பகுதியில் எப்போ எந்த சுவையுடைய சாக்லேட் வரும் என்று தெரியாதென்பதால் எத்தனை முறை கேட்ட பாட்டானாலும் ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும்.

"காலம்... நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் உன் காதில் வந்து அன்று சொன்ன வேதம்" என்று டிஎம்எஸ் பாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை வந்துவிட்டான். ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது. டிரைவருடன் சீட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். காலியாய் இருந்த பின் சீட்டில் திருவான்மியூர் என்று சொல்லி விட்டு ஏறி அமர்ந்து கொண்டான். அதன்பிறகு கொஞ்ச தூரம் வரை ஆட்டோவில் யாரும் ஏறவில்லை...அமைதி. அதன் காரணம் எம்எஸ்வி இசையமைத்த அந்த பாட்டு முடிந்திருந்தது. அடுத்த பாட்டு தானா வந்திருக்கனுமே ஏன் வரவில்லை என்று செல்ஃபோனைப் பாத்த போது தான் அந்த பாட்டை அவன் ஞாயிற்றுக் கிழமை இரவு பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து கேட்டது நினைவுக்கு வந்தது. அன்று ஏனோ அவனுக்கு 'என் உயிர் தோழன்' படத்தில் வரும் "ஏ ராசாத்தி" பாடல் கேட்க வேண்டும் போலிருந்தது. எப்போது கேட்டாலும் ஃபாஸ்ட் பார்வர்டு செய்யாமல் முழுவதுமாக அவன் விரும்பிக் கேட்கும் பாடல்களில் அதுவும் ஒன்ற. திருவான்மியூரில் ECR பஸ்ஸில் உட்கார்ந்து செல்ல இடம் கிடைக்குமா? எட்டரை மணிக்கு முன் ஷேர் ஆட்டோ காரர் திருவான்மியூரில் இறக்கி விட்டு விடுவாரா என்று பலவாறாக நினைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போதே 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்' என்று நெற்றிக்கண்ணைத் திறக்க ஆரம்பித்திருந்தார் ஜேசுதாஸ்.

அவன் கண் முன்னே ஒரு பெரியார் பஸ்...சாரி...விழுப்புரம் அரசுப் பேருந்து கல்பாக்கத்திலிருந்து வந்து அவனுடைய ஆட்டோவைக் கடந்து செல்லத் தொடங்கியிருந்தது. பஸ் அவ்வளவு கூட்டமில்லாமலும் இருந்தது. "கொஞ்சம் சீக்கிரம் போங்க அந்த பஸ்ஸைத் தான் நான் பிடிக்கனும்" என்று மனசுக்குள் நினைத்ததை அவன் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லவில்லை. அந்த நேரம் பார்த்து ஆட்டோவிலிருந்து ஒருவர் இறங்கினார். சில்லறை இல்லை என்று வீட்டுக்குப் போய் ஆளிடம் கொடுத்தனுப்புகிறேன் என்று விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். "அட பாவி மனுஷா காலங்காத்தால வண்டியில ஏறுறவன் ஒரு ஏழு ரூபாய் சில்லறை காசு எடுத்துட்டு வரக் கூடாது. அவனவனுக்கு எவ்வளவு ஆத்திரம் அவசரம் இருக்கும்?" என்று நினைத்துக் கொண்டான். நினைத்ததை விட சீக்கிரமாய் ஒரு ஆள் ஓடி வந்து சில்லறையைத் தரவும் ஆட்டோ புறப்பட்டது. 'ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்' என்று ஜேசுதாஸ் பாடுவதில் மனம் கொஞ்சமும் ஒட்டவில்லை. "சே! கண்ணு முன்னாடி ஒரு காலியான பஸ்ஸை மிஸ் பண்ணிட்டோமே" என்ற நினைப்பு தான் அவனுக்கு மேலோங்கியிருந்தது. ஆட்டோ திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றதும் கண் முன்னே ஒரு ஆச்சர்யம். கல்பாக்கம் பேருந்து இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆட்டோவுக்குப் பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு மடிகணினி அடங்கிய பையையும் சாப்பாட்டு பையையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு ஓடி பேருந்தில் ஏறிக் கொண்டான்.

நடத்துனரிடம் எதுவும் சொல்லாமல் பத்து ரூபாய் எடுத்து நீட்டினான். அவரும் எதுவும் சொல்லாமல் திருவான்மியூர் டு சென்னை என மின்னணு
இயந்திரத்தில் அச்சிட்டு வெளிவந்த பயணச்சீட்டை அவனிடம் கொடுத்தார். திருவான்மியூர் டு சென்னைன்னா அப்போ திருவான்மியூர் என்ன சென்னைக்கு வெளியிலா இருக்கு என நினைத்துக் கொண்டான். "ஷிவஷக்தியா யுக்தோ யதி பவதி ஷக்த ப்ரபவிதும்" என இளையராஜா ஜனனி ஜனனி பாடலைத் துவங்கி விட்டிருந்தார். பேருந்தும் கிடைத்து, உட்கார இடமும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் பாட்டில் கவனத்தைச் செலுத்தினான். 2005ஆம் ஆண்டு நேரு உள்விளையாட்டரங்கில் 'அன்றும் இன்றும் என்றும்' என பெயரிடப்பட்ட தன்னுடைய கச்சேரியை இளையராஜா இப்பாட்டுடன் தொடங்கிய போது பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கியதை ஜெயா தொலைக்காட்சியில் கண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்பாடலின் துவக்கத்தில் வரும் சமஸ்கிருத சுலோகம் ஆதிசங்கரர் பாடிய சவுந்தர்ய லஹரி எனும் கோவையில் உள்ள ஒரு பாடல் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. "மேகம் கொட்டட்டும்" பாடல் ஆரம்பிக்கும் போது பஸ் டைடல் பார்க் சிக்னலில் திரும்பி ராஜிவ் காந்தி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. துள்ளலான அப்பாடலை அதிவேகமாகப் பயணிக்கும் ஒரு பேருந்தில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து இளஞ்சூடான மெல்லிய காலை நேரக் காற்று முகத்தில் மோதும் போது மனதில் பொங்கும் உவகையை விவரிக்க வார்த்தைகள் ஏதும் வராமல் சிம்பிளாக "Simple pleasures of Life" என்று நினைத்துக் கொண்டான்.

மத்திய கைலாஷ் ஸ்டாப்பில் பஸ் நின்றது. எட்டே முக்காலுக்கு முன்னராக பஸ் அங்கு வந்து சேர்ந்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே "லல்லு பிரசாத் யாதவ்" தன்னுடைய வழக்கமான briefcase பெட்டியுடன் ஏறினார். தன்னுடைய வழக்கமான கடைசி இருக்கையின் இடது கை சன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார். "லாலு பிரசாத்" என அவருக்கு அவன் பெயர் வைக்க காரணம் லாலு மாதிரியே அவருக்கும் தலையில் சட்டி கவிழ்த்தது போன்றதான ஒரு ஹேர்ஸ்டைல், லாலு மாதிரியே அவருக்கும் 'காதோரம் நரைச்ச முடி கன்னத்துல சொக்குது சொக்குது' தான். அவனுடைய லாலு, பேண்ட் சர்ட் அணிந்திருப்பார், ஆனால் சட்டையை இன் செய்ய மாட்டார், அந்த காலத்து ஜெமினி கணேசன் போல மிக மிக மெல்லிய மீசை ஒன்று வைத்திருப்பார். "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி" என்று கமல் பெண் பார்க்கும் போது பாட்டி வெற்றிலை வரக் வரக் என்று இடித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தில் பெருத்த கூட்டம் ஏறியிருந்தது. மத்திய கைலாயத்தில் பேருந்து நிற்கும் போது பெரும்பாலும் முதலில் ஏறுபவர் லாலுவாகத் தான் இருப்பார், பெரும்பாலும் அவருக்கு அவருடைய சீட் கிடைத்துவிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். "சிறு கண்ணே செந்தமிழ்த் தேனே தந்தையின் பாசம் வென்றதடி" என்று கமல் பாடிக் கொண்டிருக்கும் போது சன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு தந்தை வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் தன் மகளை ஸ்கூட்டரில் கூட்டிச் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டர் பின்சீட்டில் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து படித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணைப் பார்த்ததும் பரீட்சைக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு வெகு நேரம் ஆகவில்லை. அவனுடைய சிறுவயதில் அவன் பெரிதும் ரசித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த படித்த பள்ளி அது என்பதால் வித்யா மந்திரையும் அதன் சீருடையையும் நன்கு நினைவில் கொண்டிருந்தான்.

காந்தி மண்டபம் நிறுத்தத்தில் இறங்குவதற்காக பேருந்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்கூட்டியே எழுந்து கூட்டத்தில் முன்னேறி இறங்குமிடம் அருகே நின்று கொள்வது வழக்கம். அவனுக்கு இரு இருக்கைகளுக்கு முன்னர் இருவர் எழுந்து கொண்டனர். கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு பெண் விரைவாகச் சென்று அமர்ந்து கொண்டாள். தன் பக்கத்தில் காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் தன் இடது கையை வைத்து இடம் பிடித்துக் கொண்டு "மாமா! சீக்கிரம் இங்கே வாங்க...சீட் இருக்கு" என்று பின்னால் நின்று கொண்டிருந்த தன் கணவனை அழைத்ததை அவன் உட்பட பேருந்தில் இருந்த பலரும் கவனித்திருந்தார்கள். தன் கணவர் தன் பக்கத்தில் வந்தமர்ந்ததும் அவள் முகத்தில் தோன்றிய உண்மையான மகிழ்ச்சியையும் அவள் உதட்டில் தவழ்ந்த மெல்லிய புன்னகையையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. தன் அன்பின் வெளிப்பாட்டை மற்றவர்கள் கண்டுவிட்டதை அவள் கண்டுகொண்டதாக அவனுக்குத் தோன்றவில்லை. "அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்" என்று நினைத்துக் கொண்டான் அவன். "ஒரு சிரி கண்டால் கனி கண்டால் அது மதி" என்று மலையாளத்தில் பாடிக் கொண்டிருந்தனர் விஜய் யேசுதாசும் மஞ்சரியும். தன்னுடைய வாழ்வில் சினிமாவும், சினிமா பாடல்களும், சினிமா இசையும், சினிமா வசனங்களும் எந்தளவு வியாபித்துள்ளது என நினைத்துக் கொண்டான் அவன். காதல் என்ற உணர்வை அவனுக்கு அறிமுகப்படுத்தியது சினிமா தான், பலவிதமான எண்ணங்களைத் தூண்டும் சினிமா பாடல்களின் இசை அவனை பல விஷயங்களிலும் இன்ஸ்பையர் செய்துள்ளதை அவன் நினைவுகூர்ந்தான். வடிவேலு என்ற கலைஞன் வந்ததன் பின்னர் முயன்றும் கிடைக்காத ஒரு விஷயத்தை "வடை போச்சே" என்று பலரும் கூறுவதையும் நோட் செய்திருக்கிறான்.

ராஜ்பவனைப் பேருந்து தாண்டியதும் "உழைப்பால் உயர்ந்த உத்தமர் P.ஆறுமுக நாயக்கர்" என்று ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்குமே அவ்விடத்தைக் கடந்து விட்டோமா என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். வேளச்சேரி சிக்னலுக்கு முன் Shepherd அண்ட் கம்பெனிக்கு அருகில் அவன் தேடியது கிடைத்தது. "வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என்று யேசுதாஸ் பாடியதைக் கேட்ட போது எதை குறிப்பதற்காக பாரதி "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என நினைத்துக் கொண்டான். செல்லம்மாள் மகளிர் கல்லூரி வாயிலில் "Abstinence Club" என்றிருந்த தட்டியைப் பார்த்ததும் "அடங்கொன்னியா! கட்டுன புருஷனைக் கஷ்டப்படுத்த இப்பெல்லாம் காலேஜ்லேயே கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என அவனுடைய கிரிமினல் புத்தி யோசித்தது. அதே தட்டியில் சிகப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருந்த ரிப்பனைப் பார்த்ததும் தான் இது ஏதோ எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சமாச்சாரமாக இருக்கும் என சமாதானம் ஆனான் அவன். கிண்டி ரயில்நிலையம் நிறுத்தத்தில் வழக்கம் போல லாலு முதலில் இறங்கினார். இறங்கியதும் சிட்டாகப் பறந்து விடுவார்...பலமுறை அவர் அங்கிருந்து எங்கு செல்கிறார் எனப் பார்க்க முயற்சித்திருக்கிறான். ஆனால் அவன் அதில் வெற்றியடைந்ததில்லை. அவன் இறங்க வேண்டிய நிறுத்தமும் அது தான். பேருந்தினின்று இறங்கினான். காவலர்கள் விரட்டுவதைப் பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஒன்றில் ஏறிக் கொண்டான். ஆட்டோ அங்கேயே நிரம்பி விட்டது. அவன் முதுகுக்குப் பின்னர் பின்னிருக்கையில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முன்னிருக்கையில் அவனுடைய இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். முன்புறம் டிரைவருடன் இரண்டு பேர்...மொத்தம் எட்டு பேருடைய பாரத்தையும் சுமந்த பொதி கழுதையாக எந்த ஜென்மத்திலோ எந்த பிறவியிலோ செய்த பாவத்துக்குப் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோ.

புனித தோமையார் மலை தேவாலயத்துக்குச் செல்லும் வழிக்கு மிக அருகாமையில் பட் ரோட்டில் அமைந்திருக்கும் புனித ஹெலன்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி அருகே ஆட்டோ நின்றது. அப்பள்ளியின் காவலாளி சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த பிள்ளைகளைச் சாலையைக் கடக்க உதவி செய்து கொண்டிருந்தார். குண்டான வயதான மனிதர். காதில் இயரிங் எய்ட் அணிந்திருப்பார். இயக்குனர் பாலுமகேந்திரா போல ஒரு தொப்பி அணிந்திருப்பார். சில நாட்களாக அவ்விடத்தில் ஒரு போக்குவரத்து காவலர் நின்று அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை நெறிபடுத்திக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். போக்குவரத்து காவலர் இல்லாத காலத்திலும் அவ்வயதான பள்ளி காவலாளி கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் சாலையைக் கடக்க உதவி செய்வார். சாலையைக் கடக்காமல் மறுபுறம் 'மசமச்'வென நிற்கும் குழந்தைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு "வாம்மா! நின்னுக்கிட்டிருக்காதே" என்று மிரட்டுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஆனால் அம்மிரட்டலில் பிள்ளைகள் பத்திரமாகச் சாலையைக் கடக்க வேண்டுமே என்ற உண்மையான அக்கறையை மட்டுமே கண்டிருக்கிறான் அவன். நாயகி என்னும் மிகவும் அபூர்வமான ராகத்தில் அமைந்த "வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்த போது மவுண்ட் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்ய யுத்த கல்லறைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது அவனது ஆட்டோ. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வந்து இறுதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த முதலாம் உலகப் போர் வீரர்கள் "யார் பெத்த பிள்ளைகளோ?" என நினைத்துக் கொண்டான்.

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்துக்கு எதிரில் உள்ள கவிதா டிரைவிங் ஸ்கூலின் பெயர் பலகையில் ஒரு பெரியவரின் படம் வரையப்பட்டிருக்கும். அவர் தான் டிரைவிங் ஸ்கூலின் ஓனரோ? தன் மகளின் பெயரில் டிரைவிங் ஸ்கூலைத் துவங்கியிருப்பாரோ என்று யோசித்திருக்கிறான். "கிறுக்குப் பயலாடா நீ" என்று அவனை அவனே பலமுறை கேட்டுக் கொண்டுள்ளான். அதற்கான விடை தான் கிடைத்தபாடில்லை. ஆனால் அந்த கிறுக்குத்தனமும் அவனுக்குப் பிடித்து தானிருந்தது. திருவான்மியூருக்கு எட்டு மணிக்கு முன்னர் வந்து சேர்ந்திருந்தால் அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடிய M49 பேருந்து அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. "அஞ்சு ரூபா பஸ் டிக்கட்டுல முடிய வேண்டியது, தேவையில்லாமல் 20 ரூபா ஷேர் ஆட்டோவுக்குக் கொடுக்கறோம்" என நினைத்துக் கொண்டான்...ஆனால் குற்ற உணர்வெல்லாம் இல்லை. வருத்தப்பட நிறைய விஷயங்கள் இருக்கும் போது இதை பற்றியெல்லாம் கவலை படத் தொடங்கினால் கவலை மட்டுமே மிஞ்சும் என உணர்ந்திருந்தான் அவன். "காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன்வழி போனாளே கனிமொழி எங்கே" என யேசுதாஸ் ரஜினி அங்கிளுக்காக மீனாவைத் தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அவனுடைய ஆட்டோ L&T Infotech வளாகத்துக்கு அருகில் இருந்தது. அவனுக்கு மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவ்வளாகத்துக்குள்ளே தான் கறுப்பு நிற பல்சர் பைக்கை ஓட்டிச் சென்ற ஒரு பெண் செல்வதைத் தன்னுடைய பைக்கிலிருந்து அவன் கவனித்திருக்கிறான். சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி ஒருகாலத்தில் "Definitely male" என்று விளம்பரப்படுத்தப் பட்ட பைக் ஒன்றினை tame செய்து படு லாவகமாக ஓட்டிச் சென்றதையும் அவள் ஓட்டிய வேகத்தினையும் கண்டு வியந்திருக்கிறான். ஸ்டீரியோடைப்பை உடைத்தெறியும் அந்தப் பெண்ணின் துணிச்சல், பல ஸ்டீரியோடைப்களை இன்னும் கட்டிக் காத்து சோறு போடும் அவனுக்குப் பிடித்திருந்தது என்பது நகைமுரண். ஆனால் அவனைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்ள மாட்டான். அக்காட்சியில் கண்ட காண்ட்ராஸ்ட் எனக்குப் பிடித்திருந்தது என்று வாதிடுவான்.

"கோடி கோடி அடியவரில் நான் தான் கடைகோடி ஐயா" என நெக்குருகி ராஜா பாடும் போது அவனுடைய அலுவலகம் வந்திருந்தது. அவனை ஒத்த இயர்ஃபோன் பாவிப்பவர்கள் பலரும் தத்தம் ஷேர் ஆட்டோக்களிலிருந்தும் பேருந்துகளிலிருந்தும் இறங்கி அடுத்து என்ன சுவையுள்ள சாக்லேட் கிடைக்கிறது எனத் தெரிந்து கொள்ள அலுவலகத்துக்கு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.

Tuesday, June 30, 2009

ஜீஜாபாய் கதைகள் : இந்த காலத்துப் பொண்ணுங்க!

ஜீஜாபாய் யாருன்னு எல்லாருக்கும் தெரியும் தானே? மராட்டிய மாமன்னர் சிவாஜியின் அம்மா தான் ஜீஜாபாய். சிறுவயது முதலே தன் மகனுக்குக் கதைகள் சொல்லி அவரை ஒரு அறிவாளியாகவும், நீதிமானாகவும், வீரனாகவும் வளர்த்தார். கதை கேட்டா அறிவாளி ஆவறோமா, நீதிமான் ஆகறோமா இல்லை வீரனாகறோமான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா கதை கேக்கறது எனக்கு ரொம்ப புடிக்கும், அதுல இருக்கற ஃபேண்டஸி எலிமெண்ட்டுக்காக. அதுவும் எங்க வீட்டு ஜீஜாபாய் சொன்னா ரொம்ப சுவாரசியமா இருக்கும். ஆ...ன்னு வாயைப் பிளந்துக்கிட்டு கேப்பேன். நான் மாவீரன் சிவாஜின்னா எங்கம்மா ஜீஜாபாய் தானே...ஹி...ஹி... எங்கம்மா அதுவும் கதையைச் சொன்னா சும்மா சொல்ல மாட்டாங்க, திரைக்கதையோட வசனத்தோட ஏற்ற இறக்கத்தோட கிட்டத்தட்ட நடிச்சே காட்டுவாங்க. அப்படி எங்கம்மா கிட்ட கேட்ட ஒரு கதை/நிகழ்வு/உரையாடல் தான் இது.

என் மகள் பிறந்திருந்த நேரம் அது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவியையும் மகளையும் பார்ப்பதற்காக நானும் என் அம்மாவும் அப்பாவும் அம்பத்தூர் சென்று விட்டு ஒரு மாலை வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். திருவான்மியூர் செல்லும் 47D பேருந்தில் மூவரும் ஏறினோம். மூவருக்கும் வெவ்வேறு இடங்களில் உட்கார இடம் கிடைத்தது. அம்மாவுக்கு ஒரு பழக்கம். வீட்டில் இருக்கும் போது பொதுவாகத் தூங்க மாட்டாங்க. ஆனா எங்கேயாச்சும் வெளியே பேருந்துலேயே ரயிலிலேயோ போறதுன்னா போதும் ஏறி உக்காந்ததுமே தூக்கம் வந்துடும். ஆனா பக்கத்துல யாராச்சும் உக்காந்து பேச்சு குடுத்துக்கிட்டே வந்தாங்கன்னா தூங்க மாட்டாங்க. அப்படி ஒரு விநோதமான பழக்கம். எங்கம்மா மகளிர் இருக்கைகள் இருக்கற இட புறத்துலயும் நானும் எங்கப்பாவும் வலது புறத்துலயும் உக்கார்ந்துருந்தோம். அன்னிக்கு எங்கம்மா பக்கத்துல ஒரு 20 வயசு மதிக்கத் தக்க பொண்ணு உக்கார்ந்துருந்துச்சு. ஏறி உக்காந்ததும் தூங்குவாங்களே என்ன பண்ணறாங்கன்னு திரும்பி பார்த்தேன். அந்த பொண்ணு கிட்டே பேசிட்டு வந்துட்டு இருந்தாங்க. இன்னும் கொஞ்ச தூரம் போனதும் மறுபடியும் பார்த்தேன். இப்போ முன்னைவிட சுவாரசியமா சிரிச்சி சிரிச்சி ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்தாங்க. அட! என்னடா இவ்வளோ ஆழமா பேசிக்கிட்டு வராங்களேன்னு நானும் கவனிச்சிக்கிட்டே வரேன். ஆனா அவங்க சிரிச்சி பேசிக்கிறது மட்டும் குறையவே இல்லை. என் பக்கத்துல உக்காந்துருந்தவன் என்னை மாதிரியே காதுல (ஐ-பாட்) மாட்டிக்கிட்டு இருந்ததுனால என் கிட்ட யாரும் பேச வேற இல்லை. அதனால எனக்கு வேற ஒரே பொறாமை. கடைசியா அந்த பொண்ணு தி.நகர் பேருந்து நிலையத்து கிட்ட இறங்கி எங்கம்மாவுக்கு கை காட்டிட்டு போற வரைக்கும் அவங்க பேசிக்கிட்டே தான் வந்தாங்க. அந்த பொண்ணு இறங்கிப் போனதும் தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.

வீட்டுக்குப் போனதும் முதல் வேலையா அப்படி என்ன அவ்வளவு இண்டெரெஸ்டிங்கா சிரிச்சி சிரிச்சி பேசிக்கிட்டே வந்தாங்கன்னு தெரிஞ்சிக்க எனக்கு ஒரே ஆர்வம். எங்கம்மா எனக்கு மிமிக்ரியோட ஏற்ற இறக்கத்தோட சொன்ன கதையோட உரையாடல் வடிவம் தான் கீழே.

"டைம் என்னங்க ஆச்சு"

"ஆறு நாப்பதுமா"

"நீங்க எது வரைக்கும் போறீங்க ஆண்ட்டி?"

"திருவான்மியூர் வரைக்கும்மா"

என்னை காட்டி "அந்த அங்கிள் கூடத் தான் வந்தீங்களா?" :(

"அங்கிள் முன்னாடி உக்கார்ந்துருக்காரு பாரு அவரு தான். அது என் பையன்". இதை சொல்லிட்டு எங்கம்மா என் கிட்ட சொன்னது "இருபது வயசு பொண்ணே உன்னை அங்கிள்ங்கிறா. முதல்ல தொப்பையைக் குறைச்சிக்க" அதுக்கு நான் சொன்னேன்"இனிமே தொப்பை இருந்தா என்ன இல்லாட்டி என்ன, அதான் கல்யாணம் ஆகி குழந்தை கூட பொறந்துடுச்சே"ன்னு. நறுக்குன்னு மண்டையில ஒரு கொட்டு விழுந்துச்சு.

"சாரி ஆண்ட்டி"

"அம்பத்தூர்ல தான் உங்க வீடா?"

"இல்லம்மா, மருமகளுக்குக் குழந்தை பொறந்துருக்கு. அதை பாத்துட்டு வீட்டுக்குப் போயிக்கிட்டிருக்கோம்"

"எங்க வீடு எங்கேருக்கு சொல்லுங்க பாப்போம்"

"தெரியலையேம்மா"

"நீங்க போற வழில தான்"

"நாங்க போற வழில நெறைய இடம் இருக்கு. நான் எதைன்னு சொல்லறது?"

"சும்மா ஒரு கெஸ் பண்ணுங்களேன்"

"சைதாப்பேட்டையா?"

"அதான் இல்லை. டி.நகர்ல தான் எங்க வீடு. டி.நகர் பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி ஒரு ரோடு போகுதில்லை. அதுல செக்கண்ட் லெஃப்ட் திரும்புனா ஒரு அபார்ட்மெண்ட் வரும். அதுல ஃபிஃப்த் ஃப்ளோர்ல தான் எங்க வீடு"

"ஓஹோ"

"அம்பத்தூர்ல என் ஃப்ரெண்டு வீடு இருக்கு. அங்கே தான் போயிட்டு வரேன்"

"அப்படியா? என்னம்மா பண்ணறே நீ"

"நான் கரெஸ்ல B.C.A.படிக்கிறேன் ஆண்ட்டி"

"கரெஸ்னா என்னம்மா?"

"என்னது உங்களுக்கு கரெஸ்னா என்னன்னு தெரியாதா?"

"தெரியாதும்மா"

"கரெஸ்பாண்டென்ஸ்ல போஸ்டல்ல படிக்கிறதை தான் ஷார்ட்டா கரெஸ்னு சொல்லுவாங்க"

"அப்படியாம்மா"

"ஆண்ட்டி! நான் ரொம்ப குண்டா இருக்கேனா ஆண்ட்டி?"

"ஏம்மா! உனக்கு என்ன? நல்லா ஸ்லிம்மா அழகாத் தானே இருக்கே?"

"போங்க ஆண்ட்டி. நீங்க பொய் சொல்றீங்க. நான் குண்டா இருக்கேன்னு எனக்கே தெரியும். இப்போ என்னோட வெயிட் எவ்வளோ தெரியுமா 46 கேஜி. நான் 40 கேஜி யைத் தாண்டுனதேயில்லை".

"இதெல்லாம் போய் ஒரு வெயிட்டுன்னு சொல்லறியேம்மா. இந்த வயசுல நல்லா சாப்பிட்டு உடம்பைப் பாத்துக்க வேணாமா?"

"என் வெயிட் அதிகமாயிடுச்சுன்னு நான் அஞ்சு மாடி படிக்கட்டுல தான் ஏறிப் போறேன். லிஃப்ட் எல்லாம் கூட யூஸ் பண்ணறதில்லை. டி.நகர் பஸ் ஸ்டாண்டுலேருந்து எங்க வீட்டுக்குப் போக 15 நிமிஷம் ஆகும். அது கூட நான் ஆட்டோல போகாம நடந்தே தான் போறேன்"

"ஹ்ம்ம்ம்"

"என் பேரு என்னன்னு சொல்லுங்க பாப்போம்?"

"...."

"என்னை பாத்து நான் க்றிஸ்டியன்னு நீங்க நெனச்சிருப்பீங்க. அதான் இல்லை. நான் ஹிண்டு தான். ஃப்ரெண்டு வீட்டுலேருந்து வரும் போது என் பொட்டு கீழே விழுந்துடுச்சு. என் பேரு பத்மப்ரியா"

"இல்லைம்மா. அப்படியெதுவும் நான் நெனக்கலை"

"எங்க வீட்டுலேயே நானும் எங்கப்பாவும் தான் கறுப்பு. எங்கப்பாவுக்கும் அம்மாவுக்கும் லவ் மேரேஜ். எங்கம்மா மலையாளி. என் தம்பி எங்கம்மா மாதிரி நல்லா சிவப்பா இருப்பான். எங்கப்பா கறுப்பா இருந்தாலும் தங்கம் தெரியுமா?"

"தம்பி என்னம்மா பண்ணறான்"

"இப்போ தான் லெவெந்த் படிக்கிறான் ஆண்ட்டி"

"திருவான்மியூர்ல இறங்கப் போறதாச் சொன்னீங்களே? உங்க வீடு அங்கே தானா?"

"இல்லம்மா. இன்னும் கொஞ்சம் தூரம் போகனும் ECRல இருக்கு"

"ஹை! ECRஆ. அங்கே தான் விஜய் வீடு கூட இருக்கு இல்லை"

"ஆமாம்மா. உனக்கு விஜய்ன்னா ரொம்ப பிடிக்குமா?"

"ஆமாம் ஆண்ட்டி! விஜய் படம்ன்னா ஒன்னு விடாமப் பாத்துடுவேன்"

"அப்போ ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாயேன். அப்படியே விஜயையும் பாத்துட்டுப் போ"

"அதெல்லாம் வேணாம் ஆண்ட்டி. இப்படியே தூரத்துலேருந்து விஜயைப் பாக்கறது தான் எனக்கு புடிச்சிருக்கு."

"ஆனா கல்யாணம்னு ஒன்னு பண்ணிக்கிட்டா விஜய் மாதிரி நல்லா ஹைட்டா அழகா இருக்கற பையனைத் தான் பண்ணிப்பேன் ஆண்ட்டி. அதுக்கு தான் என் வெயிட்டைக் கூட குறைச்சிக்கிட்டு இருக்கேன். எங்க சித்தி பொண்ணு ஒருத்தி இருக்கா. அவ தோனின்னா உயிரையே விடுவா. தோனி மாதிரி மாப்பிள்ள தான் வேணும்னு இப்பவே சொல்லிக்கிட்டு இருக்கா."

"ஆண்ட்டி! நீங்க ஃப்ரீ டைம்ல என்ன ஆண்ட்டி பண்ணுவீங்க?"

"வீட்டு வேலையே சரியாயிருக்கும்மா. அப்படி கொஞ்சம் டைம் கெடைச்சதுன்னா டிவி பார்ப்பேன்"

"மதியானம் தூங்க மாட்டீங்களா?"

"இல்லம்மா"

"நானும் தூங்க மாட்டேன். ஆனா எங்கம்மாவுக்கு மத்தியானம் தூங்கல்லைன்னா சாயந்திரம் எல்லாம் ரொம்ப கஷ்டப் படுவாங்க"

"நீ என்னம்மா பண்ணுவே ஃப்ரீ டைம்ல"

"டிவி பாப்பேன், பாட்டு கேப்பேன். ஃப்ரெண்ட்சுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவேன்".

"ஹ்ம்ம்ம்"

"ஆண்ட்டி உங்க மொபைல் நம்பர் குடுங்க. நான் உங்களுக்கும் இனிமே எஸ்எம்எஸ் அனுப்பறேன்"

"என் கிட்ட மொபைல் இல்லையேம்மா"

"அங்கிள் கிட்ட சொல்லி ஒரு மொபைல் வாங்கிக்கங்க ஆண்ட்டி. மொபைல் ரொம்ப யூஸ்ஃபுல்"

"சரிம்மா"

"நான் எறங்க வேண்டிய எடம் வந்துடுச்சு ஆண்ட்டி. அப்புறம் பாக்கலாம். டாட்டா"

"சரிம்மா"

இந்த முழு கதையையும் கேட்டுட்டு, எனக்கும் என் தம்பிக்கும் நல்ல டைம்பாஸ் ஆச்சு. கதையைச் சொல்லிட்டு எங்கம்மா சொன்னது "இந்த காலத்து பொண்ணுங்களும் அவங்க நெனப்புங்களும்"

Wednesday, June 17, 2009

அபி அப்பா ஒரு நிஷ்கலங்கன்

இது இரு நபர்கள் கூகிள் டாக்கில் தனியாக பேசிக் கொண்டதை பொதுவில் வைத்து அம்பலப்படுத்தும் ஒரு Scoop பதிவு. அந்த இரு நபர்கள் - நான் கைப்புள்ள மற்றும் நீங்கள் எல்லாரும் அறிந்த மாயவரம் ஷேக் அபி அல்-அப்பா. நாங்கள் இருவரும் தனிமையில் பேசிக் கொண்டதைப் படித்து விட்டு உங்களை நீதி சொல்லுமாறு அழைக்கிறேன். யார் பக்கம் தவறு இருக்கிறது, யார் தவறிழைத்தது, யாருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

அபி அப்பாவுடன் எனக்கு ஆயிரம் மோதல்களும், வருத்தங்களும் இருந்தாலும், இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருடைய இளைய மகன் நடராஜுக்கு என்னுடைய இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "நட்டு கண்ணா, வளர்ந்து படிச்சி பெரியவனாய் எல்லா விஷயத்துக்கும் அப்பாவை ஃபாலோ பண்ணு, ஆனா சாட் பண்ணற விஷயத்துல மட்டும் அவரை ஃபாலோ பண்ணாதே, அவரு கிட்ட சாட் செய்யவும் கத்துக்காதே."

எல்லாத்துக்கும் முன்னாடி ஒரு விஷயம். கீழே இருக்கற படங்களைப் பாருங்க. இந்த படங்களைப் பாத்து தெளிவடையறது Scoop புரியறதுக்கு மிக அவசியம்.


மேலே உள்ள படத்தில் இருப்பவர் தான் பிரபல கடம் வித்வான் திரு.விக்கு வினாயக்ராம் அவர்கள். இவரிடம் தான் என் தம்பி மிருதங்கம் கற்றுக் கொண்டான். விநாயக்ராம் அவர்கள் தான் என் தம்பியோட 'குரு'ன்னும் சொல்லலாம்:)


இவர் திரு.V.செல்வகணேஷ் - திரு.வினாயக்ராம் அவர்களின் மூத்த மகன். இவர் கஞ்சீரா வித்வான். ஏ.ஆர்.ரகுமான் உடன் சில திரைப்படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். "வெண்ணிலா கபடிகுழு" திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவர்.


இவர் திரைப்படப் பின்னனி பாடகர் - திரு.மாணிக்க விநாயகம். பல பிரபல திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார்.

எனக்கும் அபி அப்பாவுக்கும் நடந்த சாட் உரையாடலை அப்படியே காப்பி-பேஸ்ட் செஞ்சி போட்டிருக்கேன். இந்த மாதிரி Scoop நடத்த வேண்டி வரும் என்று நான் நினைக்கலை. தெரிஞ்சிருந்தால் நானும் கொஞ்சம் தெளிவா தமிழ்லேயே தட்டச்சியிருப்பேன். கீழே இருக்கற சாட் உரையாடல்ல அபிஅப்பா தமிழ்லயும் நான் தங்கிலிஷ்லயும் தட்டச்சியிருக்கோம். நல்லா கவனமாப் படிச்சி ஒரு நியாயமான தீர்ப்பைச் சொல்லுங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அபிஅப்பா நட்டுமுட்டுஅப்படின்னு ஒரு பதிவு போட்டாரு. அதுல அவரு கல்யாணத்துக்கு சாக்ஸபோன் இசை கலைஞர் கதிரி கோபால்நாத் வந்திருந்ததாக எழுதியிருந்தார். அதுக்கப்புறம் நான் அவரைச் சாட்ல புடிச்சேன். இனி மேல படிங்க.

me: unga kalyanathukku Kadri vandhaaraa
?

அபி அப்பா: அது 3 நாள் கல்யாணம்

me: ok

அபி அப்பா: முதல் நாள் திருவிழா ஜெய்சங்கர் வலையபட்டி கச்சேரி

me: hmm

அபி அப்பா: இரண்டாவது நாள் சிவமணி ஏ கே பி கச்சேரி

me:Drums Sivamaniyaa?

அபி அப்பா: என் ரிஷப்ஷனுக்கு தான் கத்ரி சாக்ஸ். கன்யாகுமரி வயலிம். வினாயக்ராம் கடம், பெங்ககூர் ராசசேகர் மோர்சிங், தவில் ஏ கே பி
ஆமாம் டிரம்ஸ் சிவமணி அப்ப இப்ப போல பேமஸ் இல்லை

me:Vinayakram dhaan en Thambiyoda Guru

அபி அப்பா: அட

me: aamaa

அபி அப்பா: என் கல்யாணத்துக்காகவே ஜெர்மன்ல இருந்து அவரும் பழனிவேலும் அவரும் கன்யாகுமரியும் வந்தாங்க

me: enna romba neramaa typing???
oho
unga kudumbam isai kudumbamaa?

அபி அப்பா: ஒரு கையால டைப்பிங்

me: oh
ennachu innoru kaile?

அபி அப்பா: தூங்கிட்டு இருக்கேன்

me: innoru kaiyaale thoongareengalaa? :-o

அபி அப்பா: ஒருக்களிச்சு படுத்து கிட்டு ஒரு பக்கமா டைப்புரேன்

me: hmmm
Vennila Kabadi Kuzhunnu oru padam vandhuchu theriyumaa?

அபி அப்பா: நான் வேலைக்கு போயே 10 நநள் ஆச்சே

me: hmmm
Vennila Kabadi Kuzhunnu oru padam vandhuchu theriyumaa?

அபி அப்பா: வெண்ணிலா கபடி குழு நான் ரசித்து பார்த்த படம்

me: andha padathoda music director...
V.Selvaganesh Vinayakram Siroda paiyan

அபி அப்பா: விஜை ஆண்டணியா

me: illai
V.Selvaganesh

அபி அப்பா: ஒ

me: aamaa

அபி அப்பா: சரி
அவருக்கு என்ன ஆச்சு

me: aiyo
avaru Vinayakramoda paiyan
ippo puriyudhaa?

அபி அப்பா: என் மனைவிய தான் கேட்கனும்

me: aiyoooooooooooooo
saami kolreengale ippadi

அபி அப்பா: என் கல்யானத்து அப்ப கனேசன்னு ஒருத்தன் இருந்தான்

me: V.Selvaganesh Vinayakramoda paiyannu ungalukku naan sollaren
ungalai kekkalai

அபி அப்பா: சின்ன பய

me: Ganesan yaaru Vinayakram troupelayaa?

அபி அப்பா: இருங்க கேக்குறேன்
2 நிமிஷம்

அபி அப்பா: கனேசன் தான் செல்வகனேஷாம்

me: illeenga
naan ungaloda chatle pesi mandai kaainjadhai blogle podanum pola
appo dhaan neenga sari paduveenga
:(

அபி அப்பா: என்னாது
வழுவூர் ராமையா பிள்ளைக்கு 4 பையன்

me: aiyoooooo
vitrunga
naan thappu pannitten

அபி அப்பா: இதிலே கடைசி பையன் வழுவூர் மாணிக்க வினாயகம்

me: sari
avarkkum Vinayakramukkum enna sambandham?

அபி அப்பா: முதல் பையன் பேர் வழுவூர் சாம்ராஜ்
இரண்டாவது பையன் பேர் குரு
மாணிக்க வினாயகம் 4 வது பையன்

me: neenga sonnadhai ellam blogle podalaamaa?

அபி அப்பா: வேண்டாம்

me: sooda vyaparam aavum unga perai solli copy paste pannaa
en venaam?

அபி அப்பா: குரு IOBல மேனேஜர்
செத்து போயாச்சு
சாம்ராஜ்ம் செத்து போயாச்சு

me: hmm

அபி அப்பா:இப்ப இருப்பது மாணிக்க வினாயகம் மட்டும் தான்

me: neenga aarambathule Vinayakram pathi sonneenga

அபி அப்பா:வழுவூர் ராமையா பிள்ளை பிரபல பரத நாட்டிய கலைஞர்

me: aamaa Padminiyoda Guru
Nattiya Peroli

அபி அப்பா:ஆமாம் ஆமாம்
வைஜெயந்திமாலாவுக்கும் கூட

me: naan Vinayakram pathi sonnadhai padicheengalaa illaiyaa?

அபி அப்பா:அந்த கணேசனா இருக்கலாம்ன்னு என் வீட்டிலே கிருஷ்ணா சொன்னது
மத்தபடி எனக்கு டேடெய்ல் தரியலைன்னு தான் சொன்னேனே

me: //மத்தபடி எனக்கு டேடெய்ல் தரியலைன்னு தான் சொன்னேனே// idhu varai sollalai :(
nalla mandai kaaya vechitteenga
naan sonnadhai neenga note panneengalaa illaiyaane enakku idhu varaikkum theriyalai

அபி அப்பா:அய்யோ எழுந்துட்டேன்
இப்ப சொல்லுங்க

me: sari vidunga freeyaa
:(
naan idhai postaa podaren
appo paathu purinjikkanga
sariyaa?

me: எனக்கு மண்டை காய்ஞ்சிடுச்சு :)

அபி அப்பா: இப்ப ஆரம்பம் முதல் கேளுங்க

me: naan onnum kekkalai

அபி அப்பா: இல்லை நான் முழிச்சாச்சு
கேளுங்க

me: naan kekka varalai
naan unga kitte solla vandhen
unga Kalyanathukku Vinayakram vandharunnu sonneenga illai?

அபி அப்பா: அவரு தான் மாசம் ஒரு தடவை வருவாரே

me: hmmm :(

படிச்சீங்களா? இப்போ நீங்களே சொல்லுங்க. வினாயக்ராம்னு முதல் வரில இவர் சொல்லிட்டு, அவரைப் பத்தி நான் பேசும் போது இவரு மாணிக்கவிநாயகத்தைப் பத்திப் பேசியிருக்காரு. அதோட நான் பேசுனதுக்கு எதுக்குமே பதில் இல்லை. இதுலேருந்து என்னா தெரியுதுன்னா அபி அப்பாவுக்குத் தூக்கத்துல சாட் செய்யற வியாதி இருக்குன்னு. இவரை என்ன பண்ணலாம்னு சொல்லுங்க. ஒரு விஷயம் சொல்லப் போய நான் மண்டை காய்ஞ்ச அனுபவத்தைப் படிச்சா உங்களுக்கே பாவமா இல்லியா? ஒரு நேர்மையான நியாயமான தீர்ப்பாச் சொல்லுங்க. Scoopனு போட்டாலும் பல்பு வாங்குனது என்னமோ நான் தான்.

(டிஸ்கி: பதிவுக்கும் தலைப்புக்கும் என்ன தொடர்புன்னா கேக்கறீங்க? யாருக்குத் தெரியும்? அபி அப்பாவை இணைச்சு புதுசா வந்த மலையாளப் படப் பேருல தலைப்பு வச்சாலும் சூடா வியாபாரம் ஆகும்னு ஒரு நம்பிக்கை தான்)