Friday, July 22, 2016

தோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...

"எண்டே கண்ட்ரி யுனைட்டெட் கிங்டம், எண்டே சிட்டி லண்டன், எண்டே அம்மே எலிசபெத் அம்மே, எண்டே ஆஹாரம் ஃபிஷ் அண்ட் சிப்ஸ்" அப்படீங்கற விஷயங்கள் எல்லாம், கடையை மூடிட்டுப் போய் சில வருஷம் ஆனாலும் என்னோடு தொடர்புல இருக்கற சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்.  "டேய்! நீ இருக்கற ஊரு லண்டனா?" அப்படின்னு விஷயம் தெரிஞ்சவங்க சிலர் கேக்கலாம்.  லண்டன்னா லண்டனே இல்லை...லண்டனுக்குப் பக்கத்துல...லண்டனுக்கு மிக அருகாமையில்...லண்டனின்  திருவள்ளூர்னு சொல்லலாம்.

அப்படியாகப் பட்ட லண்டன் மாநகரிலே...சரி...சரி...லண்டனின் திருவள்ளூர் நகராட்சியில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்னு நெனைக்கிறேன்.  சம்பவம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆனதுக்கப்புறம் இப்ப ஏன்...?

இவ்வளோ நாளா எழுதாம இருந்ததுக்குக் காரணம் "Writer's Block" அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்.  ஆனா "ரைட்டர்ஸ் ப்ளாக்" எல்லாம் ரைட்டருங்களுக்குத் தானே..."பீட் காண்ஸ்டபிள்" ஒனக்கு என்ன கேடுன்னு என் மனசாட்சி வந்து லந்து பண்ணுது.  இருந்தாலும் பீட் காண்ஸ்டபிளுக்கும் ப்ளாக் வரும்னு எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துன ஆண்டிப்பட்டிக்காரங்க சில பேரோட ஒரே மன உறுதியைப் பாராட்டி கம்பெனி தர்ற அன்புப் பரிசு தான் இந்தப் பதிவு.

"ஹலோ! உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?" - எதோ ஒரு வேலையா தெருவுல நடந்துப் போயிட்டு இருந்த என்னை நிறுத்திப் பேச்சுக் கொடுத்தது ஒரு நாற்பத்தஞ்சு வயசு மதிக்கத் தக்க ஒரு வெள்ளைக்காரர்.

கண்ணாடி போட்டு தாடி வச்சிருந்த அந்த மனிதர் எதுவும் முகவரி கேக்கத் தான் நம்மக் கிட்ட பேசப் போறாருன்னு நெனைச்சேன்.  நானே வெளிநாட்டுக்காரன்...அது ஏன் என்னைப் பாத்து பேசனும்ங்கிறாருங்கிற ஒரு வித சந்தேகத்தோடயே பேச ஆரம்பிச்சேன்.

"யெஸ்! ப்ளீஸ் டெல் மீ" - இது நான்,

"இந்த ஊருல யாருக்கும் மனுசங்க மேலே மரியாதையே இல்லை" அப்படின்னாரு.

முகவரி தான் கேக்கப் போறாருன்னு நெனைச்சுப் பேச ஆரம்பிச்ச எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு.  அதுக்கு மேலே அவர் கிட்ட பேசனுமா வேணாமான்னு ஒரு சந்தேகம் வேற.
இருந்தாலும் "ஏன் அப்படி சொல்றீங்க"ன்னு கேட்டு வச்சேன்.

"இங்கே இங்கிலாந்துல யார் கிட்டயாச்சும் சும்மா பேசப் போனா, பேசக் கூட மாட்டேங்கிறாங்க"

வெறுமனே தலையாட்டிக்கிட்டு அவர் சொல்றதை கேட்டுட்டு இருந்தேன்.  "உன் கிட்ட யாரும் பேசலைன்னா அதுக்கு நான் என்னய்யா பண்ணறது?"ன்னு மனசுக்குள்ளே நெனச்சுக்கிட்டேன்.

"இங்கே பணக்காரங்களுக்கு மட்டும் தான் மரியாதை.  நல்ல பணம் இருந்து ஒரு ஃபெராரி கார் ஓட்டிக்கிட்டு வந்தா இந்த ஊரு பொண்ணுங்க பேசுவாங்க"

"அடப் பாவி மனுஷா! இங்கிலாந்துப் பொண்ணுங்க உன் கிட்ட பேசலைங்கிற ஆதங்கத்தை ஒரு இந்தியா காரனைப் புடிச்சு மொக்கைப் போட்டுத் தீர்த்துக்கிட்டிருக்கியா?"ன்னு ஹை பிட்ச்சுல கேட்டது என் மைண்ட் வாய்ஸ் தான்.

"எங்க நாட்டுல எல்லாம் அப்படி கெடையாது தெரியுமா?"

"நீங்க எந்த நாடு?

"இத்தாலி.  ஐ ஆம் ஃப்ரம் மிலன்.  நீங்க?" அப்படின்னாரு அவரு.

இந்தியான்னு சொன்னா சண்டைக்கு வருவாரோன்னு ஒரு சின்னப் பயம் வேற இருந்தது.  ஏன்னா இத்தாலி கடற்படையைச் சேர்ந்த ரெண்டு வீரர்கள் கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு கைது பண்ணி வச்சு அப்போ கொஞ்ச நாள் தான் ஆகி இருந்தது.

இருந்தாலும் உண்மையைச் சொன்னேன்.

"இந்தியா ரொம்ப அழகான நாடு"

"நீங்க இந்தியாக்குப் போயிருக்கீங்களா?"ன்னு கேக்க நெனைச்சாலும் கேக்கலை.  சோனியா காந்தியோட சொந்தக்காரரா இருப்பாருன்னு நெனைச்சிக்கிட்டேன்.

"இத்தாலியும் அழகான நாடு தான். நான் ரோமுக்கும் பைசாவுக்கும் போயிருக்கேன்"அப்படின்னேன்.

"ஓ! அப்படியா" அதுக்கு மேல அவரு நாட்டைப் பத்திப் பேசறதுல விருப்பம் காட்டலை.  மறுபடியும் சமுதாயப் பிரச்சினைக்கே திரும்ப வந்தாரு.

"ஒருத்தன் கிட்டப் பணம் இருக்கான்னு மட்டும் தான் இந்த ஊருப் பொண்னுங்க பாக்கறாங்க.  அவன் கிட்ட இருக்கற நல்ல மனசை அவங்க பாக்கறதில்லை.  தே டோண்ட் சீ த குட் ஹாற்ட்ட்(Heart)"

ஹார்ட்ங்கிறதை அவர் 'ஹாற்ட்ட்'னு சொல்றப்போ தான் கவனிச்சேன் இத்தாலி மொழி பேசறவங்க ஆங்கிலம் பேசும் போது அதிகமா வல்லினம் உபயோகிக்கறாங்கன்னு.

"எங்க நாட்டுல பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா அட்லீஸ்ட் பேசவாவது செய்வாங்க.  புடிக்கலியா ஒதுங்கிக்குவாங்க.  I respect that. ஆனா இங்கேயோ நம்மைப் பார்த்ததும் நீ இங்கிலாந்து நாட்டவன் கெடையாது.  உன் கிட்டெல்லாம் பேச முடியாது"ன்னு சொல்லுவாங்க.

"அதையும் மீறிப் பேச முயற்சிப் பண்ணா I will call the Police"ன்னு கத்துவாங்க.

இங்கே வந்தப் புதுசுல வெள்ளையா இருக்கிறவன் எல்லாம் இங்கிலீஷ் பேசுவான்னு பல முறை நினைச்சதுண்டு.  ஆனா இங்கிலாந்துல குறிப்பா லண்டன் சுத்துவட்டாரத்துல ஆங்கிலம் தெரியாத மத்த ஐரோப்பிய நாட்டவர்கள் பலர் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.  ஆனா வெள்ளையா இருக்கறவனைப் பாத்து இவன் இங்கிலாந்து காரனா இல்லை மத்த ஐரோப்பிய நாட்டவனான்னு கண்டுபிடிக்கிற தெறமை இன்னும் எனக்கு வரலை.  ஆனா அப்படி கண்டுபிடிக்க முடியும்னு இங்கேயே பல வருஷங்களா இருக்கற சில இந்தியர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.

"ஒருத்தர் கிட்டப் பேசாமலேயே அவன் நல்லவனா கெட்டவனான்னு எப்படி சொல்ல முடியும்?  பேசிப் பாருங்க...புடிக்கலைன்னா விட்டுடுங்க.  They are very rude and they have hurt me many times"அப்படின்னு தன்னோட ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.

"இந்தாளு இதையே ஒரு வேலையா வச்சிட்டுத் தான் சுத்தறாரு போல"ன்னு நெனச்சிக்கிட்டேன்.

"உங்க நாட்டுல எப்படி? பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா பேசுவாங்களா?  Are they friendly?"அப்படின்னு கேட்டார்.

"Yes! Yes! எங்க நாட்டுல எல்லாம் பொண்ணுங்கக் கிட்டப் போய் பேசுனீங்கன்னா உடனே பேசிடுவாங்க" அப்படின்னு சும்மா அடிச்சு விட்டேன்.
நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை.

பின்னே"போய் பேசித் தான் பாரேன்.  சப்பல்ஸ் பிஞ்சிப் போயிடும்டா படுவா"ன்னு உண்மையையாச் சொல்ல முடியும்?

"பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்" - அப்படிங்கிறது உண்மை தான் போலிருக்கு?

"Thanks for your time.  Thanks for speaking to me.  Have a nice day" அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா பேரன் பேத்திக்கெல்லாம் பேறு காலம் நடந்திட்டு இருக்கும்.  அப்பேர்ப்பட்ட ஒரு ஆள் சுயமா தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத, அம்மா அப்பா பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச ஒரு பையனைப் பார்த்துப் புலம்பிவிட்டுப் போவதை காலக் கொடுமை என்று சொல்லாமல் என்ன சொல்வது?

"தனி ஒருவனுக்கு கேர்ள் ஃப்ரெண்டு இல்லையெனில் தனி ஒருவனாக இல்லாது துணைக்கு ஆள் சேர்த்துப் புலம்பிடுவோம்"னு இத்தாலியின் பாரதியார் யாராச்சும் எழுதி வச்சிருக்காங்களா தெரியலையே? :)

Friday, July 26, 2013

கொம்பன் சுறா வேட்டையாடும்...

கடந்த சனியன்று மரியான் படம் பார்த்தேன். முதல் பாதியில் நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ள காதலையும் இரண்டாம் பாதியில் நாயகனை ஆபத்தான/இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வருவது அவனுடைய அந்த காதல் தான் என மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். டிஸ்கவரி அலைவரிசையில் 'I shouldn't be alive' என்ற பெயர் கொண்ட உண்மை கதைகள் அடங்கிய நிகழ்ச்சி ஒன்று வரும். எனக்கு இது போன்று இக்கட்டுகளில் இருந்து மீண்டு வரும் கதைகளைப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஏனெனில் அதில் நமக்கும் ஏதாவது ஒரு பாடம் இருக்கும்.
உதாரணமாக அந்நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டில் கண்ட கதை ஒன்றில், அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் உறவினர்களைப் பார்த்து விட்டு ஒரு கணவனும் மனைவியும் தங்கள் கைக்குழந்தையுடன் வேறொரு மாகாணத்தில் உள்ளத் தங்கள் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருப்பர். அப்போது வழி மாறிச் சென்று பனிப்புயல் வீசிக் கொண்டிருக்கும் இடத்தில் சிக்கிக் கொள்வர். அதோடு கடும் குளிரின் காரணமாகக் காரில் பழுது ஏற்பட்டு அது நின்று விடும். அச்சமயத்தில் அக்கணவர் ஒரு முக்கியமான முடிவொன்று எடுப்பார்.

தன் மனைவியையும் குழந்தையையும் அந்த அத்துவானப் பிரதேசத்தில் சற்று பாதுகானப்பதாக உள்ள ஒரு குகையொன்றில் தங்க வைத்துவிட்டு உதவி தேடி கடும் குளிரில் பல மைல்கள் நடந்துச் செல்வார். அச்சமயத்தில் அவர் எடுத்த அந்த முடிவு தான் அவர்கள் மூவர் உயிரையும் காப்பாற்றும். மனைவியையும் கைக்குழந்தையையும் யாருமில்லா இடத்தில் தனியாக விட்டுச் செல்கிறோமே என்ற தயக்கமும் வருத்தமும் அவருக்கு இருந்தாலும் அம்முடிவை அவர் எடுக்கவில்லை என்றால் மூவரும் மடிவது உறுதி என்பதை அவர் உணர்வார்.

அதோடு பசியோடும் நீர்வேட்கையோடும் கடுங்குளிரில் நெடுந்தூரம் நடந்துச் செல்கையில் உடல் அயர்ச்சியினால் அவ்வப்போது சோர்ந்து விழுவார். அந்நிலையில் அவரை மீண்டும் எழுந்து நடக்கச் சொல்லித் தூண்டுவது தன் மனைவி மகனுடைய உயிரைக் காக்க வேண்டும் என்ற அக்கறையும் அன்பும் மட்டுமே. ஆக இக்கட்டானச் சூழ்நிலையில் இருந்து தப்பிக்க வேண்டும் எனில் அதில் இருந்து எப்படியாவது மீள வேண்டும் என்ற பலமான உந்துதலும் வழக்கத்திற்கு மாறாகச் சிந்தித்து செயல் படுத்தத் துணியும் முயற்சிகளுமே என்பது நான் அந்த டிஸ்கவரி நிகழ்ச்சியில் இருந்தும் மரியான் படத்திலும் அறிந்து கொள்ளும் பாடம். அவ்வகையில் மரியான் படம் எனக்குப் பிடித்திருந்தது சொல்ல வந்த கதையை இயக்குனர் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன். டிஸ்கவரி அலைவரிசையில் நான் கண்ட அந்த நிகழ்ச்சியைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள‌ இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.
http://en.wikipedia.org/wiki/Snowbound:_The_Jim_and_Jennifer_Stolpa_Story

நிற்க. மரியான் படம் பார்த்து நான் கற்றுக் கொண்டதை மேலே எழுதியிருக்கிறேன். ஆனால் அப்படத்தைப் பார்ப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே அப்படத்தோடு தொடர்புடைய ஒரு தகவலைத் தெரிந்து கொண்டேன். அறிந்து கொண்ட இடம் சென்னை கலங்கரை விளக்கத்திற்குப் பின்புறம் உள்ள ஒரு மீன் கடையில் :) வஞ்சிரம் மீன் வாங்கிக் கொண்டிருந்த அக்கடையில் சுறா மீனும் இருந்தது. அக்கடையில் இருந்த சுறா மீன் ஒன்றின் தலைப் பகுதி மற்ற சுறாக்களைப் போன்று அல்லாமல் தட்டையாக இருந்தது. அவ்வகை சுறாக்களை நான் NatGeo, Animal Planet நிகழ்ச்சியில் கண்டிருக்கிறேன். அதன் ஆங்கிலப் பெயர் Hammerhead Shark. அதன் தமிழ்ப் பெயரைத் தெரிந்து கொள்வதற்காக மீன் விற்கும் அப்பெண்ணிடம் "இதுவும் சுறா தானா?" என்றேன். அதற்கு அவ‌ர் சொன்னார் "ஆமா இதுவும் சுறா தான்...கொம்ப‌ன் சுறா" 
undefined

http://en.wikipedia.org/wiki/Hammerhead_shark

அத‌ன் பிற‌கு வீட்டுக்கு வ‌ந்த‌ பின் இந்த‌ கொம்ப‌ன் சுறா என்ற‌ பெய‌ரை எங்கோ கேள்வி ப‌ட்டிருக்கிறோமே என‌ நினைத்த‌ போது ம‌ரியான் ப‌ட‌த்தில் யுவ‌ன்ச‌ங்க‌ர் ராஜா பாடிய‌ "கொம்ப‌ன் சுறா வேட்டையாடும் க‌ட‌ல் ராசா நான்" என்ற‌ பாட‌ல் நினைவுக்கு வ‌ந்த‌து. இந்த‌க் கொம்ப‌ன் சுறாவைப் ப‌ற்றிப் ப‌டித்த‌ போது தெரிந்து கொண்ட‌ இன்னொரு த‌க‌வ‌ல் சுத்திய‌ல் போன்ற‌ த‌ட்டையான‌ அத‌ன் த‌லையின் இரு புற‌மும் உள்ள‌ அத‌ன் க‌ண்க‌ளைப் ப‌ற்றிய‌து. அதாவ‌து கொம்ப‌ன் சுறாவின் க‌ண்க‌ள் ம‌ற்ற‌ சுறாக்க‌ளைப் போல‌ இல்லாம‌ல் வித்தியாச‌மான‌ அமைப்பு கொண்டுள்ள‌ கார‌ண‌த்தால் விழிக‌ளைச் சுழ‌ற்றி இச்சுறாவினால் 360 டிகிரியில் பார்க்க‌ முடியும் என்ப‌து. ஆனால் இந்த‌ச் சிற‌ப்பை மீறி இம்மீனிட‌ம் மிக‌ப்பெரிய‌ ஒரு குறைபாடு ஒன்று உள்ள‌து. வித்தியாச‌மான‌ அமைப்பு கொண்ட‌ அத‌ன் க‌ண்க‌ளே அத‌ன் குறைபாடு...இச்சுறாவினால் த‌னக்கு நேர் எதிரில் இருப்ப‌வ‌ற்றைப் பார்க்க‌ முடியாது என்ப‌தே அது.

சுறா மீன் கிட்டப் போனா க‌டிச்சி வ‌ச்சிரும்னு எல்லாருக்கும் தெரிஞ்ச‌து தான் ஆனா இந்த‌ கொம்ப‌ன் சுறா மீனின் முக‌த்துக்கு நேராப் போயி நின்னு "நீ என்ன‌ பெரிய‌ புலியா?"ன்னு கேட்டாக் கூட‌ அது ஒன்னும் ப‌ண்ணாது :)

Wednesday, March 06, 2013

தோழி உண்டு தோழன் இல்லை

கடந்த ஞாயிறன்று சன் டிவியில் ஓரியோ சன் சிங்கர் பாட்டுப் போட்டியில் இரண்டு குழுந்தைகள் "தூது செல்ல ஒரு தோழி இல்லை எனத் துயர் கொண்டாயோ தலைவி" என்றப் பாடலைப் பாடினர்.

அதைப் பார்த்ததும், தமிழ் இலக்கியத்தில் தலைவியின் உள்ளக்கிடக்கையைத் தலைவனுக்கு உணர்த்தவும் தலைவியின் சார்பாகத் தூது செல்லவும் 'தோழி' ஒருத்தி இருந்திருக்கின்றாள், ஆனால் தலைவனின் சார்பாகத் தூது செல்ல 'தோழன்' என்பவன் இருந்ததில்லையே... அது ஏன் என்று ஒரு ஐயம் மனதில் தோன்றியது? :)

பழந்தமிழர் வாழ்வில் காதலை எடுத்துச் சொல்ல உண்மையில் 'தோழி' என்று ஒருத்தி இருந்தாளா இல்லையா என்று அறிந்து கொள்ள வரலாற்றுச் சான்றுகள் இல்லாது போனாலும் (அவ்வாறு இருந்தாலும் நான் கேள்விப் பட்டதில்லை), தமிழ் இலக்கியங்களில் 'தோழி' எனும் ஒரு பாத்திரம் உள்ளது.
தலைவிக்கு ஒரு 'தோழி' போல தலைவனுக்கு ஒரு 'தோழன்' ஏன் இல்லை? தோழியைப் போல தூது செல்ல தோழன் நம்பகமானவன் இல்லையா?
உங்கள் கருத்து என்ன?