Showing posts with label டைம்பாஸ். Show all posts
Showing posts with label டைம்பாஸ். Show all posts

Thursday, June 25, 2009

ஸ்பெஷல் எஃபெக்ட்ஸோடு கிரிக்கெட் வெளையாடுதல்

"வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ். இருடா கூச் போட்டுக்கிட்டு வந்துடறேன். கூச் இல்லாம சரியா ரன் வர மாட்டேங்குது". எங்க வீட்டு மொட்டை மாடில நானும் என் தம்பியும் அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் ஆடும் போது பேசப்படற வசனம் தான் மேல பாத்தது. அது என்னா கூச்? முன்னாள் இங்கிலாந்து கேப்டன் க்ரஹாம் கூச்சைப்(Graham Gooch) பத்தி தான் என் தம்பி சொல்றது. அது சரி? அது என்ன கூச் போட்டுக்கிட்டு விளையாடறது? 1980-கள்ல டிவில கிரிக்கெட் உன்னிப்பா நீங்க கவனிச்சிருந்தீங்கன்னா - பேட்ஸ்மேன் க்ளவ்ஸ்(Gloves) போட்டுக்கிட்டு வெளையாடும் போது சில வகை க்ளவ்ஸ்ககளில் ஆட்காட்டி விரலும் நடு விரலும் சேர்ந்தாப் போல ஒரே விரலா இருக்கற மாதிரி இருக்கும். இந்த மாதிரி க்ளவ்ஸை நாங்க முதன் முதல்ல பார்த்தது க்ரஹாம் கூச் போட்டுக்கிட்டு வெளையாடும் போது தான். அதனால அதுக்கு கூச்னே பேரு வச்சிட்டோம். நானும் என் தம்பியும் கிரிக்கெட்டைக் கவனிக்கிறோமோ இல்லையோ, கிரிக்கெட் வீரர்கள் உபயோகிக்கிற உபகரணங்களையும் அவங்க செய்யற சேஷ்டைகளையும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். குறிப்பா எந்தெந்த பேட்ஸ்மேன் எந்தெந்த பேட் உபயோகிக்கிறாங்கன்னு கவனிக்கிறது எங்க ரெண்டு பேருக்குமே ரொம்ப புடிக்கும். ஏன்னா அதை எல்லாம் நாங்க மொட்டை மாடியில கிரிக்கெட் விளையாடும் போது பண்ணலாமில்ல அதுக்குத் தான். அப்போல்லாம் அப்படி ஒரு அல்ப சந்தோஷம். இந்த மாதிரி கிரிக்கெட்டில் நாங்க நோட் பண்ண கடைபிடிச்ச எட்செட்ரா சமாச்சாரங்களைப் பத்தினது தான் இந்தப் பதிவு. கிரிக்கெட் நுணுக்கங்கள் பத்தி இதுல எதுவும் இருக்காது. ஏன்னா அத பத்தி எனக்கு எதுவும் தெரியாது :)

கூச் னு சொன்னேன் இல்லை? அது எப்படி இருக்கும்? கீழே கூச்சோட படத்துல அவரோட க்ளவ்ஸை உன்னிப்பா பாருங்க.


இதுல சரியாத் தெரியலைன்னா அதுக்குக் கீழே இருக்கற அலன் பார்டர் படத்தைப் பாருங்க.



இந்தப் படத்துல நான் சொல்ற 'கூச்' தெளிவாத் தெரியும். எந்த பேட்ஸ்மேன் போட்டிருந்தாலும் இந்த மாதிரி க்ளவ்ஸ் போட்டிருந்தாங்கன்னா அது எங்களை பொறுத்த வரை 'கூச் வச்ச க்ளவ்ஸ்' தான். "சரி நான் கூச் போட்டுக்கிட்டு வரேன்"னு மேல என் தம்பி சொன்னாருல்ல? அதுக்கு என்ன அர்த்தம்னு தானே கேக்கறீங்க. பந்தை உருட்டிப் போட்டு மொட்டை மாடில நாங்க கிரிக்கெட் விளையாடுனாலும், கிரிக்கெட் வீரர்கள் கடை பிடிக்கிற அத்தனை ஸ்டைலையும் பந்தாவையும் நாங்களும் கடைபிடிப்போம். எங்க தாத்தா ஏர் ஃபோர்ஸ்ல பஞ்சாப்ல இருந்த போது அவருக்குக் கிடைச்ச ஒரு நீல கலர் கம்பளி க்ளவ்ஸ் ஒன்னு தான் எங்க கிரிக்கெட் க்ளவ்ஸ். மெட்ராஸ்ல அடிக்கிற வெயிலுக்கு கம்பளி க்ளவ்ஸ் எல்லாம் போட்டா உள்ளங்கைல வேர்த்துக் கொட்டும். ஆனாலும் நாங்க க்ளவ்ஸ் இல்லாம கிரிக்கெட் ஆடுனதே கெடையாது. க்ளவ்ஸ் ஏற்பாடு பண்ணியாச்சு. க்ளவ்ஸ்ல கூச் இல்லாம வெளையாடுனா ரன் சரியா அடிக்க முடியாதே? அதுக்கு என்ன பண்ணறது? சைக்கிள் பிராண்ட் த்ரீ இன் ஒன் ஊதுபத்தி அட்டை பெட்டி இருக்கில்ல. அது நீளமா இருக்கும். அதை சரிசமமா மூனு துண்டுகளா அகல வாக்குல கத்திரிகோலால வெட்டிப்போம். அதுல ஒரு துண்டு எங்களுக்கு கூச் செய்யப் போதும். அந்த அட்டைப் பெட்டி துண்டை எடுத்து அது மேல ஒரு வெள்ளை பேப்பரைச் சுத்தி "Power" லோகோ வரைஞ்சுக்கிட்டா கூச் தயார்.

அதை அப்படியே எடுத்து வலது கையில க்ளவுஸை மாட்டிக்கிட்டு முதல் ரெண்டு வெரல்ல எடுத்து சொருகிக்க வேண்டியது தான். இது தான் கூச்.

இப்பவே கண்ணைக் கட்டுதா? அட...இன்னும் இருக்குங்க. கூச் வச்ச க்ளவ்ஸ் போட்டுக்கிட்டா மட்டும் போதாதுன்னு என்னோட தம்பி பேட்(Pad) எல்லாம் கால்ல கட்டுவாரு. அது எப்படின்னு கேக்கறீங்களே? முன்னெல்லாம் க்ரீம் பிஸ்கெட் டப்பாக்குள்ள பிஸ்கெட் நமத்து போகாம இருக்க வெள்ளை கலர்ல வரி வரியா ஒரு காகிதம் வெப்பாங்க தெரியுமா? அது தான் என் தம்பியோட கிரிக்கெட் பேட். கால்ல வச்சா அந்த பேப்பர் முட்டிக்குக் கீழே ஒரு நாலு இன்ச் தான் வரும். இருந்தாலும் அதை மறக்காம ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கிட்டுத் தான் வெளையாடுவாரு. இதுக்கே மொட்டை மாடி கிரிக்கெட்ல LBW எல்லாம் கெடையாது, வெளையாடறதும் எழுபத்தியஞ்சு பைசா சின்ன ரப்பர் பந்தை வச்சு தான். இந்த கிரிக்கெட் மேட்ச்ல எல்லாம் 50 ரன்னோ 100 ரன்னோ அடிச்சா பேட்ஸ்மேன் பேட்டை உயரத் தூக்கி காட்டுவாரு பாத்துருக்கீங்களா? அதே மாதிரி நானும் என் தம்பியும் மட்டும் ஆடற மேட்ச்ல 50-ஓ, 100-ஓ அடிச்சா மொட்டை மாடில பேட்டை எல்லாம் தூக்கிக் காப்போம். யாரும் பாக்கலைன்னாலும் கை தட்டுலன்னாலும் பேட்டைத் தூக்கி தான் காமிப்போம். அப்போ பிரபலமா இருந்த அசாருதீன் ஒவ்வொரு முறை பந்தை அடிக்கறதுக்கு முன்னாடியும் தன்னோட கழுத்துல இருக்கற ஒரு கறுப்பு கலர் தாயத்தை வெளியில இழுத்துத் தொட்டுப்பாரு. அது மாதிரி எங்களுக்கும் செய்யனும்னு ஆசை. தாயத்து வேணும்னு வீட்டுல கேட்டா எங்களை மந்திரிச்சு விட்டுடுவாங்க இல்லை. அதுக்காக பழைய கயிறு ஒன்னை எடுத்து அதுல அம்மன் டாலரையோ முருகன் டாலரையோ கோத்துக்கிட்டு அதை கழுத்துல மாட்டிக்கிறது. ஒவ்வொரு பந்தையும் அடிக்கிறதுக்கும் முன்னாடி சட்டைக்குள்ளிருந்து டாலரை இழுத்து இழுத்து தொட்டுப் பாத்துப்போம். இதுவாச்சும் பரவால்லை. சில சமயம் பேட்ஸ்மென் பிட்சை சமப் படுத்தறதுக்காக பேட்டை வச்சி தரையில குத்துவாங்க பாத்துருக்கீங்களா? அதை கூட நாங்க மொட்டை மாடில செஞ்சிருக்கோம். "யாருடா மொட்டை மாடில லொட்டு லொட்டுன்னு தட்டுறது"ன்னு கீழே இருந்து அம்மாவோ அப்பாவோ வந்து திட்டுன்னாலும் அந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் எல்லாம் குடுக்காம கிரிக்கெட் வெளையாடலன்னா வெளையாடுன மாதிரியே இருக்காது.

(ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தொடரும்...)

பி.கு: 'க்ளவ்ஸ்'னு இருக்கற இடத்துல எல்லாம் 'க்'-க்குப் பதிலா 'ப்' போட்டு படிச்சிட்டு கமெண்ட் போட்டால் மிக மிகக் கொடூரமான முறையில் தயவு தாட்சண்யமின்றி மட்டுறுத்தப் படும் என எச்சரிக்கப்படுகிறது.