Friday, January 12, 2007

பொங்கல் ஸ்பெஷல் - குவிஸ் பதிவு

பதினைந்து பொது அறிவு கேள்விகளைக் கொண்ட ஒரு குவிஸ் பதிவு இது. முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே!
1. மென்பொருள் துறைக்கும், BPO துறைக்கும் மிகப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் பஞ்சப் பாண்டவர்கள் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றனர். ஊரின் பெயர் என்ன?
2. ஃபவுஜி(Fauji) எனும் இந்தித் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக அறிமுகமான பிரபல நடிகர் யார்?
3. AJJ எனும் குறியீட்டைக்(Station Code) கொண்டு இந்திய இரயில்வே துறையினரால் அறியப்பெறும் ஊர் எது?
4. மேக்யார்(Magyar) எனும் இயற்பெயர் கொண்ட ஐரோப்பிய நாட்டை நாம் எவ்வாறு அறிகிறோம்?
5. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தற்போதைய கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்து இறைவன் 'சென்ன மல்லிகார்ஜுனா'வின் பால் தீராத காதல் கொண்டு பற்றுகளைத் துறந்து நிர்வாண நிலை எய்திய பெண் துறவியின் பெயர் என்ன?
6. செளத்ரி எனும் கதாபாத்திர பெயர் ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தத் தமிழ் திரைப்படம் எது?
7. முதலாம் உலகப் போரின் போது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஜெர்மானிய கப்பலின் பெயர் என்ன?
8. பூ வேலைப்பாட்டினைப் பற்றிய ஜப்பானிய கலையின் பெயர் என்ன?
9. 'உலகின் மிகப் பெரிய வைரம்' எனும் அறியப்பெறும் வைரக்கல்லின் பெயர் என்ன?
10. நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'ஒரு தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
11. கப்பல்களில் அதிகப் படியான சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கப்பலின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் பெயர் என்ன?
12. உலகின் மிகச்சிறிய நாய் இனத்தின் பெயர் என்ன?
13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
14. 17ஆம் நூற்றாண்டில், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்டிரேடிவேரி(Stradivari) குடும்பத்தினர் தயாரித்த இக்கருவிகள்(ஸ்டிரேடிவேரியஸ் Stradivarius என்று அறியப்படுபவை) தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 700 மட்டுமே உள்ளன. பல்லாயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்டவை இக்கருவிகள். எந்த கருவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?
15. இஸ்ரேல் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் என்ன?

Thursday, January 04, 2007

கார்மரண்டுகளுடன் புதுவருட ஏவாள்

01.01.2000-2004 : புது தில்லி
01.01.2005-2006 : இந்தூர்
01.01.2007 : அகமதாபாத்

இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிச்சிக்கறது என்னன்னா, கடந்த ஏழாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 'வடக்கப் பாக்க' நம்ம புத்தாண்டு அமைஞ்சு போச்சுங்க. ஒன்னாம் தேதி வேலை நாள்ங்கிறதாலே 'ஒன்னாம் தேதி கூட ஆபிஸ் வந்து கடமை கருப்பசாமியா வேலை செய்யறான்பா'ன்னு புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஃபோன் செஞ்சவங்க கிட்டேருந்து ஒரு நல்ல பேரு, ஒரு சர்டிபிகேட் ...ஒரு...ஒரு...பரிதாபம்...ஒரு...ஒரு...பச்சாதாபம் (எப்படி வேணா வச்சிக்கலாம்) இதெல்லாம் கெடச்சதுங்க. அதை தவிர்த்து கொட்டாய்ல தான் பாக்க முடியலை, ஓசியிலே டிவியிலயாச்சும் பாக்கலாம்னு நெனச்சி வச்சிருந்த 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' கூட பாக்க முடியாம...அட சன் டிவி பக்கமே தலை வைக்க முடியாம, எல்லா நாளையும் போலத் தான் போச்சு புத்தாண்டு நாள். ஆனாலும் 2006 ஆம் ஆண்டின் கடைசி நாள் செம சூப்பரா அமைஞ்சதுங்க. இதுக்கு முன்னாடி நினைவு வச்சிக்கிற மாதிரி அமைஞ்ச டிசம்பர் 31ன்னு பாத்தா, 1994ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்னிக்குச் சென்னை தேவி தியேட்டரில் சாயங்கால ஆட்டம் பாத்த 'தேவர் மகன்' படத்தைச் சொல்லலாம். படத்தைப் பாத்துட்டுத் திரும்ப வரும் போது என்னமோ நாமளே ரெண்டு தலையைச் சீவிட்டு நடந்து வர்ற ஃபீலிங் தான் போங்க. அங்கேருந்து வேகமா ஃபாஸ்ட் பார்வர்டு செஞ்சி ஒரு 'ட்வெல்வ் இயர்ஸ்' ஓட்டுனா இந்தப் பதிவோட சிச்சுவேசனான 31 டிசம்பர் 2006 வருதுங்க. இந்த வட்டம் தலையைச் சீவற ஃபீலிங் எல்லாம் வரலைன்னாலும் மனதில் சந்தோஷச் சீவல்களைச் சில்லறையாய் சிதறச் செய்தச் சில்லென்ற டிசம்பர் மாத அந்திப் பொழுதா அமைஞ்சதுங்க அது.

பில்டப்பு போதுங்க...மேட்டர் என்னன்னா முப்பத்தொன்னாம் தேதி வடக்கு அகமதாபாத்ல இருக்கற காங்கரியா ஏரிக்கு(Kankaria Lake), நானும் என்னோட தமிழ் நண்பரும் போனோம்ங்க. சும்மா என்ன தான் இருக்குன்னு பாத்துட்டு வரலாம்னு போனது, பல தரப்பட்ட அனுபவங்களை ஒரே மாலைப் பொழுதில் ஒரு நான்கு-ஐந்து மணி நேரத்துக்குள் தருவதாக அமைஞ்சது.

காங்கரியா ஏரி இருக்கறது, நாங்க இருக்கற எடத்துலேருந்து ஒரு 15 கி.மீ.தூரத்துல. வீட்டுலேருந்து ஆட்டோல போறப்ப, வண்ணம் தீட்டுன யானையைப் படம் புடிக்கலாம்னு ஓடற ஆட்டோலேருந்து அவசர அவசரமா ஃபோகஸ் பண்ணி எடுத்த படம்.


ஜனவரி 14 நாடெங்கும் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப் படுகிறது. எப்போதும் நம்ம பொங்கலும், மகர சங்கராந்தியும் ஒரே நாள்ல தான் வரும். ஆனா இந்த வாட்டி மகர சங்கராந்தி பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்துடுச்சு. மகர சங்கராந்தி அன்னிக்கு இந்தப் பக்கம் பின்பற்றப்படுகிற சடங்கு/வழக்கம் அப்படின்னு பாத்தா அது பட்டம் விடறதுங்க. போன பொங்கலுக்கு ஐதராபாத் போயிருந்த போதும் இதப் பாக்க முடிஞ்சது. தீபாவளிக்குப் பட்டாசு கடை போல இந்தப் பக்கம் எல்லாம் கீழே பாக்கற மாதிரி அங்கங்கே 'பட்டம்' விக்கிற கடைங்க முளைச்சுடுது.


பட்டம் விடற நூலுக்காக 'மாஞ்சா' போடறாங்க.


காங்கரியா ஏரியில் 'புலி'யுடன் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் குழந்தைகள். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.


ஏரியில் சூரியன் மறையும் ஒரு சில்ஹுவெட் படம்.


இன்னொரு சில்ஹுவெட் படம். க்ளிக் செஞ்சு பாத்தீங்கன்னா படம் பெருசாத் தெரியும். இந்தப் படம் மட்டுமில்ல...எல்லாப் படங்களுமே.


மேற்கு பக்கத்தில் சில்ஹுவெட். கிழக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தால் ஏரியின் நடுவில் ஒரு ஃபவுண்டேனும், படகுகளும். நாங்களும் தோணியிலே ஏரியைச் சுத்தி ஒரு ரவுண்டு போனோம்.


மரத்தின் மீது அமர்ந்திருக்கும் கார்மரண்ட்(Cormorant) பறவைகள். இந்த வகை பறவைகளை இதற்கு முன் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் எதோ ஒரு வித்தியாசமான பறவை தான், அநேகமாக குளிர்காலத்தில் இனப் பெருக்கத்திற்காக வேற்று கண்டங்களுக்கு வரும் 'migratory' பறவைகளாக இருக்கக் கூடும் என்று படம் பிடித்துத் தள்ளினேன்.


மேற்கு புறம் திரும்பியதும், ஏரியில் ஒரு கொம்பின் மீது அமர்ந்திருந்த ஒரு கார்மரண்ட் குடும்பம்.


கார்மரண்ட் பறவை பற்றித் தெரிந்து கொள்ள விகிபீடியாவைப் பார்த்ததில் அறிந்து கொண்டது : குளிர்காலத்தில் இடம் பெயரும் பறவைகள் ஆனாலும் கார்மரண்டு பறவைகள் உலகம் முழுவதும் காணப் பெறுகின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இப்பறவைகளை மீன்களைப் பிடித்து வரப் பழக்குவார்களாம். மீனை கார்மரண்ட் விழுங்கி விடாமல் இருக்க அதன் கழுத்தில் ஒரு வளையத்தை அணிவிப்பார்களாம்.


ஒன்பது மீட்டர் ஆழம் வரை மூழ்கி அருமையாக மீன் பிடிக்குமாம் இப்பறவை. படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால், ஒரு கார்மரண்ட் நீரில் நீந்துவதைக் காணலாம்.


வாத்து போல நீந்தினாலும், மிக அருமையாகப் பறக்கவும் செய்யுமாம் கார்மரண்ட். இப்பறவையின் அறிவியல் பெயரான 'Phalocrocorax என்பதன் பொருள் லத்தீன் மொழியில் 'நீர் காகம்'(Water Raven) என்பதாகும்.


இறக்கைகளை விரித்து காற்றில் உலர்த்தும் பழக்கத்தினை உடையது கார்மரண்ட். விகிபீடியாவில் எழுதியிருந்தது போலவே இறக்கை விரித்து படம் பிடிக்கக் கார்மரண்ட் பறவை போஸ் கொடுத்ததும் நம் அதிருஷ்டம் என்றே கொள்ள வேண்டும்.


கார்மரண்ட்களைப் போதும் போதும் எனும் அளவிற்குப் படம் எடுத்துவிட்டு அங்கேயே நடைபெற்ற ஒலி-ஒளி லேசர் கண்காட்சியையும் கண்டுகளித்தோம்.


காங்கரியா ஏரிக்கு எதிரிலேயே ஒரு மீன் கண்காட்சியகம் இருந்தது. அங்கே எடுத்த சில படங்கள் கீழே. மீன் பெயரைச் சரியாகக் கவனிக்கவில்லை.


உதட்டழகி. பேர் தெரியாததால் இந்த சப்பை கட்டு.


கேமராவின் ஃபிளாஷை நிறுத்தாததால் பாழான பல படங்களில் இதுவும் ஒன்று. பிரன்ஹா(Piranha) என்று பெயர் இடப் பட்டிருந்தது இந்த மீன் தொட்டியின் மீது. பிரன்ஹா ஆளைக் கடிக்கிற ஒரு முரட்டு மீனுன்னு கேள்வி பட்டுருக்கேன். ஆனா இதைப் பாத்தா அப்படி எதுவும் தெரியலை இல்லை?


இது நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச தங்க மீன். தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தப் பெயர் பலகையில் இருந்த பெயர் 'Bubble eyed Gold fish'.


இப்படியாக யானை, பட்டம், மாஞ்சா, குழந்தைகள், கார்மரண்ட், ஏரி, ஒலி-ஒளி, மீன் கண்காட்சி அப்படின்னு பலவிதமான அனுபவங்களோடு செவிக்கும் விழிக்கும் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒரு மாலை பொழுதாக அமைஞ்சதுங்க 31 டிசம்பர் 2006.

(பி.கு : New Year Eveக்கு 'புதுவருட ஏவாள்'னு மொழிபெயர்ப்பு பண்ணிக் குடுத்தது யாருன்னு மட்டும் கேக்காதீங்க. நான் தலை போனாலும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் பண்ணி கிள்ளி ரைட்டு போட்டுருக்கேன்.)