Showing posts with label பயணம். Show all posts
Showing posts with label பயணம். Show all posts

Monday, September 19, 2011

ஒரு செப்டம்பர் மாசப் புலரியில்...




"My momma always said, Life is like a box of chocolates. You never know what you're gonna get".
அது ஒரு செப்டம்பர் மாத திங்கட் கிழமை. எல்லா திங்கட்கிழமைகளைப் போலத் தான் அன்றும் இருநாட்கள் விடுமுறை கழிந்து அலுவலகம் செல்வது அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. அவன்...நம் எல்லோரையும் போல ஒருவன். தன்னுடைய மொபைல் ஃபோனின் இயர்ஃபோனைக் காதில் செருகும் போது "Forrest Gump" திரைப்படத்தின் அவ்வசனம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. எந்த ஒரு பயணமுமே, வாழ்க்கை என்னும் பெரும்பயணத்தின் ஒரு infinitesimal part என்பதும் ஒவ்வொரு சிறிய பயணத்தையும் நினைவு தெரிந்த நாள் முதல் மண்ணோடு மண்ணாகிற நாள் வரை "over the years integrate" செய்தால் கிடைக்கும் net result ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் அவனுடைய நம்பிக்கை. பயணத்தின் போது மெல்வதற்கு எந்த நேரத்தில் எந்த சுவையுடைய சாக்லேட் கிடைக்கும் என்று தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையினைச் சுவாரசியமாக வைத்திருக்க உதவுவது என்பது அவனுடைய கருத்து. அக்காரணத்தினாலேயே, தான் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணத்தின் போதும் தான் கேட்கும் பாடல்கள் ஒரே சுவையுடையதாக இல்லாமல் இருப்பதற்காக shuffle play மோடில் ஒலிக்க விடுவான். தான் தோன்றித் தனமாகப் பாடல்கள் ஒலிக்கும் போது வாழ்க்கையோட அந்த சிறு பகுதியில் எப்போ எந்த சுவையுடைய சாக்லேட் வரும் என்று தெரியாதென்பதால் எத்தனை முறை கேட்ட பாட்டானாலும் ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும்.

"காலம்... நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் உன் காதில் வந்து அன்று சொன்ன வேதம்" என்று டிஎம்எஸ் பாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை வந்துவிட்டான். ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது. டிரைவருடன் சீட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். காலியாய் இருந்த பின் சீட்டில் திருவான்மியூர் என்று சொல்லி விட்டு ஏறி அமர்ந்து கொண்டான். அதன்பிறகு கொஞ்ச தூரம் வரை ஆட்டோவில் யாரும் ஏறவில்லை...அமைதி. அதன் காரணம் எம்எஸ்வி இசையமைத்த அந்த பாட்டு முடிந்திருந்தது. அடுத்த பாட்டு தானா வந்திருக்கனுமே ஏன் வரவில்லை என்று செல்ஃபோனைப் பாத்த போது தான் அந்த பாட்டை அவன் ஞாயிற்றுக் கிழமை இரவு பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து கேட்டது நினைவுக்கு வந்தது. அன்று ஏனோ அவனுக்கு 'என் உயிர் தோழன்' படத்தில் வரும் "ஏ ராசாத்தி" பாடல் கேட்க வேண்டும் போலிருந்தது. எப்போது கேட்டாலும் ஃபாஸ்ட் பார்வர்டு செய்யாமல் முழுவதுமாக அவன் விரும்பிக் கேட்கும் பாடல்களில் அதுவும் ஒன்ற. திருவான்மியூரில் ECR பஸ்ஸில் உட்கார்ந்து செல்ல இடம் கிடைக்குமா? எட்டரை மணிக்கு முன் ஷேர் ஆட்டோ காரர் திருவான்மியூரில் இறக்கி விட்டு விடுவாரா என்று பலவாறாக நினைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போதே 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்' என்று நெற்றிக்கண்ணைத் திறக்க ஆரம்பித்திருந்தார் ஜேசுதாஸ்.

அவன் கண் முன்னே ஒரு பெரியார் பஸ்...சாரி...விழுப்புரம் அரசுப் பேருந்து கல்பாக்கத்திலிருந்து வந்து அவனுடைய ஆட்டோவைக் கடந்து செல்லத் தொடங்கியிருந்தது. பஸ் அவ்வளவு கூட்டமில்லாமலும் இருந்தது. "கொஞ்சம் சீக்கிரம் போங்க அந்த பஸ்ஸைத் தான் நான் பிடிக்கனும்" என்று மனசுக்குள் நினைத்ததை அவன் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லவில்லை. அந்த நேரம் பார்த்து ஆட்டோவிலிருந்து ஒருவர் இறங்கினார். சில்லறை இல்லை என்று வீட்டுக்குப் போய் ஆளிடம் கொடுத்தனுப்புகிறேன் என்று விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். "அட பாவி மனுஷா காலங்காத்தால வண்டியில ஏறுறவன் ஒரு ஏழு ரூபாய் சில்லறை காசு எடுத்துட்டு வரக் கூடாது. அவனவனுக்கு எவ்வளவு ஆத்திரம் அவசரம் இருக்கும்?" என்று நினைத்துக் கொண்டான். நினைத்ததை விட சீக்கிரமாய் ஒரு ஆள் ஓடி வந்து சில்லறையைத் தரவும் ஆட்டோ புறப்பட்டது. 'ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்' என்று ஜேசுதாஸ் பாடுவதில் மனம் கொஞ்சமும் ஒட்டவில்லை. "சே! கண்ணு முன்னாடி ஒரு காலியான பஸ்ஸை மிஸ் பண்ணிட்டோமே" என்ற நினைப்பு தான் அவனுக்கு மேலோங்கியிருந்தது. ஆட்டோ திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றதும் கண் முன்னே ஒரு ஆச்சர்யம். கல்பாக்கம் பேருந்து இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆட்டோவுக்குப் பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு மடிகணினி அடங்கிய பையையும் சாப்பாட்டு பையையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு ஓடி பேருந்தில் ஏறிக் கொண்டான்.

நடத்துனரிடம் எதுவும் சொல்லாமல் பத்து ரூபாய் எடுத்து நீட்டினான். அவரும் எதுவும் சொல்லாமல் திருவான்மியூர் டு சென்னை என மின்னணு
இயந்திரத்தில் அச்சிட்டு வெளிவந்த பயணச்சீட்டை அவனிடம் கொடுத்தார். திருவான்மியூர் டு சென்னைன்னா அப்போ திருவான்மியூர் என்ன சென்னைக்கு வெளியிலா இருக்கு என நினைத்துக் கொண்டான். "ஷிவஷக்தியா யுக்தோ யதி பவதி ஷக்த ப்ரபவிதும்" என இளையராஜா ஜனனி ஜனனி பாடலைத் துவங்கி விட்டிருந்தார். பேருந்தும் கிடைத்து, உட்கார இடமும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் பாட்டில் கவனத்தைச் செலுத்தினான். 2005ஆம் ஆண்டு நேரு உள்விளையாட்டரங்கில் 'அன்றும் இன்றும் என்றும்' என பெயரிடப்பட்ட தன்னுடைய கச்சேரியை இளையராஜா இப்பாட்டுடன் தொடங்கிய போது பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கியதை ஜெயா தொலைக்காட்சியில் கண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்பாடலின் துவக்கத்தில் வரும் சமஸ்கிருத சுலோகம் ஆதிசங்கரர் பாடிய சவுந்தர்ய லஹரி எனும் கோவையில் உள்ள ஒரு பாடல் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. "மேகம் கொட்டட்டும்" பாடல் ஆரம்பிக்கும் போது பஸ் டைடல் பார்க் சிக்னலில் திரும்பி ராஜிவ் காந்தி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. துள்ளலான அப்பாடலை அதிவேகமாகப் பயணிக்கும் ஒரு பேருந்தில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து இளஞ்சூடான மெல்லிய காலை நேரக் காற்று முகத்தில் மோதும் போது மனதில் பொங்கும் உவகையை விவரிக்க வார்த்தைகள் ஏதும் வராமல் சிம்பிளாக "Simple pleasures of Life" என்று நினைத்துக் கொண்டான்.

மத்திய கைலாஷ் ஸ்டாப்பில் பஸ் நின்றது. எட்டே முக்காலுக்கு முன்னராக பஸ் அங்கு வந்து சேர்ந்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே "லல்லு பிரசாத் யாதவ்" தன்னுடைய வழக்கமான briefcase பெட்டியுடன் ஏறினார். தன்னுடைய வழக்கமான கடைசி இருக்கையின் இடது கை சன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார். "லாலு பிரசாத்" என அவருக்கு அவன் பெயர் வைக்க காரணம் லாலு மாதிரியே அவருக்கும் தலையில் சட்டி கவிழ்த்தது போன்றதான ஒரு ஹேர்ஸ்டைல், லாலு மாதிரியே அவருக்கும் 'காதோரம் நரைச்ச முடி கன்னத்துல சொக்குது சொக்குது' தான். அவனுடைய லாலு, பேண்ட் சர்ட் அணிந்திருப்பார், ஆனால் சட்டையை இன் செய்ய மாட்டார், அந்த காலத்து ஜெமினி கணேசன் போல மிக மிக மெல்லிய மீசை ஒன்று வைத்திருப்பார். "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி" என்று கமல் பெண் பார்க்கும் போது பாட்டி வெற்றிலை வரக் வரக் என்று இடித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தில் பெருத்த கூட்டம் ஏறியிருந்தது. மத்திய கைலாயத்தில் பேருந்து நிற்கும் போது பெரும்பாலும் முதலில் ஏறுபவர் லாலுவாகத் தான் இருப்பார், பெரும்பாலும் அவருக்கு அவருடைய சீட் கிடைத்துவிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். "சிறு கண்ணே செந்தமிழ்த் தேனே தந்தையின் பாசம் வென்றதடி" என்று கமல் பாடிக் கொண்டிருக்கும் போது சன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு தந்தை வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் தன் மகளை ஸ்கூட்டரில் கூட்டிச் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டர் பின்சீட்டில் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து படித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணைப் பார்த்ததும் பரீட்சைக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு வெகு நேரம் ஆகவில்லை. அவனுடைய சிறுவயதில் அவன் பெரிதும் ரசித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த படித்த பள்ளி அது என்பதால் வித்யா மந்திரையும் அதன் சீருடையையும் நன்கு நினைவில் கொண்டிருந்தான்.

காந்தி மண்டபம் நிறுத்தத்தில் இறங்குவதற்காக பேருந்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்கூட்டியே எழுந்து கூட்டத்தில் முன்னேறி இறங்குமிடம் அருகே நின்று கொள்வது வழக்கம். அவனுக்கு இரு இருக்கைகளுக்கு முன்னர் இருவர் எழுந்து கொண்டனர். கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு பெண் விரைவாகச் சென்று அமர்ந்து கொண்டாள். தன் பக்கத்தில் காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் தன் இடது கையை வைத்து இடம் பிடித்துக் கொண்டு "மாமா! சீக்கிரம் இங்கே வாங்க...சீட் இருக்கு" என்று பின்னால் நின்று கொண்டிருந்த தன் கணவனை அழைத்ததை அவன் உட்பட பேருந்தில் இருந்த பலரும் கவனித்திருந்தார்கள். தன் கணவர் தன் பக்கத்தில் வந்தமர்ந்ததும் அவள் முகத்தில் தோன்றிய உண்மையான மகிழ்ச்சியையும் அவள் உதட்டில் தவழ்ந்த மெல்லிய புன்னகையையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. தன் அன்பின் வெளிப்பாட்டை மற்றவர்கள் கண்டுவிட்டதை அவள் கண்டுகொண்டதாக அவனுக்குத் தோன்றவில்லை. "அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்" என்று நினைத்துக் கொண்டான் அவன். "ஒரு சிரி கண்டால் கனி கண்டால் அது மதி" என்று மலையாளத்தில் பாடிக் கொண்டிருந்தனர் விஜய் யேசுதாசும் மஞ்சரியும். தன்னுடைய வாழ்வில் சினிமாவும், சினிமா பாடல்களும், சினிமா இசையும், சினிமா வசனங்களும் எந்தளவு வியாபித்துள்ளது என நினைத்துக் கொண்டான் அவன். காதல் என்ற உணர்வை அவனுக்கு அறிமுகப்படுத்தியது சினிமா தான், பலவிதமான எண்ணங்களைத் தூண்டும் சினிமா பாடல்களின் இசை அவனை பல விஷயங்களிலும் இன்ஸ்பையர் செய்துள்ளதை அவன் நினைவுகூர்ந்தான். வடிவேலு என்ற கலைஞன் வந்ததன் பின்னர் முயன்றும் கிடைக்காத ஒரு விஷயத்தை "வடை போச்சே" என்று பலரும் கூறுவதையும் நோட் செய்திருக்கிறான்.

ராஜ்பவனைப் பேருந்து தாண்டியதும் "உழைப்பால் உயர்ந்த உத்தமர் P.ஆறுமுக நாயக்கர்" என்று ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்குமே அவ்விடத்தைக் கடந்து விட்டோமா என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். வேளச்சேரி சிக்னலுக்கு முன் Shepherd அண்ட் கம்பெனிக்கு அருகில் அவன் தேடியது கிடைத்தது. "வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என்று யேசுதாஸ் பாடியதைக் கேட்ட போது எதை குறிப்பதற்காக பாரதி "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என நினைத்துக் கொண்டான். செல்லம்மாள் மகளிர் கல்லூரி வாயிலில் "Abstinence Club" என்றிருந்த தட்டியைப் பார்த்ததும் "அடங்கொன்னியா! கட்டுன புருஷனைக் கஷ்டப்படுத்த இப்பெல்லாம் காலேஜ்லேயே கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என அவனுடைய கிரிமினல் புத்தி யோசித்தது. அதே தட்டியில் சிகப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருந்த ரிப்பனைப் பார்த்ததும் தான் இது ஏதோ எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சமாச்சாரமாக இருக்கும் என சமாதானம் ஆனான் அவன். கிண்டி ரயில்நிலையம் நிறுத்தத்தில் வழக்கம் போல லாலு முதலில் இறங்கினார். இறங்கியதும் சிட்டாகப் பறந்து விடுவார்...பலமுறை அவர் அங்கிருந்து எங்கு செல்கிறார் எனப் பார்க்க முயற்சித்திருக்கிறான். ஆனால் அவன் அதில் வெற்றியடைந்ததில்லை. அவன் இறங்க வேண்டிய நிறுத்தமும் அது தான். பேருந்தினின்று இறங்கினான். காவலர்கள் விரட்டுவதைப் பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஒன்றில் ஏறிக் கொண்டான். ஆட்டோ அங்கேயே நிரம்பி விட்டது. அவன் முதுகுக்குப் பின்னர் பின்னிருக்கையில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முன்னிருக்கையில் அவனுடைய இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். முன்புறம் டிரைவருடன் இரண்டு பேர்...மொத்தம் எட்டு பேருடைய பாரத்தையும் சுமந்த பொதி கழுதையாக எந்த ஜென்மத்திலோ எந்த பிறவியிலோ செய்த பாவத்துக்குப் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோ.

புனித தோமையார் மலை தேவாலயத்துக்குச் செல்லும் வழிக்கு மிக அருகாமையில் பட் ரோட்டில் அமைந்திருக்கும் புனித ஹெலன்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி அருகே ஆட்டோ நின்றது. அப்பள்ளியின் காவலாளி சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த பிள்ளைகளைச் சாலையைக் கடக்க உதவி செய்து கொண்டிருந்தார். குண்டான வயதான மனிதர். காதில் இயரிங் எய்ட் அணிந்திருப்பார். இயக்குனர் பாலுமகேந்திரா போல ஒரு தொப்பி அணிந்திருப்பார். சில நாட்களாக அவ்விடத்தில் ஒரு போக்குவரத்து காவலர் நின்று அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை நெறிபடுத்திக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். போக்குவரத்து காவலர் இல்லாத காலத்திலும் அவ்வயதான பள்ளி காவலாளி கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் சாலையைக் கடக்க உதவி செய்வார். சாலையைக் கடக்காமல் மறுபுறம் 'மசமச்'வென நிற்கும் குழந்தைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு "வாம்மா! நின்னுக்கிட்டிருக்காதே" என்று மிரட்டுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஆனால் அம்மிரட்டலில் பிள்ளைகள் பத்திரமாகச் சாலையைக் கடக்க வேண்டுமே என்ற உண்மையான அக்கறையை மட்டுமே கண்டிருக்கிறான் அவன். நாயகி என்னும் மிகவும் அபூர்வமான ராகத்தில் அமைந்த "வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்த போது மவுண்ட் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்ய யுத்த கல்லறைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது அவனது ஆட்டோ. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வந்து இறுதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த முதலாம் உலகப் போர் வீரர்கள் "யார் பெத்த பிள்ளைகளோ?" என நினைத்துக் கொண்டான்.

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்துக்கு எதிரில் உள்ள கவிதா டிரைவிங் ஸ்கூலின் பெயர் பலகையில் ஒரு பெரியவரின் படம் வரையப்பட்டிருக்கும். அவர் தான் டிரைவிங் ஸ்கூலின் ஓனரோ? தன் மகளின் பெயரில் டிரைவிங் ஸ்கூலைத் துவங்கியிருப்பாரோ என்று யோசித்திருக்கிறான். "கிறுக்குப் பயலாடா நீ" என்று அவனை அவனே பலமுறை கேட்டுக் கொண்டுள்ளான். அதற்கான விடை தான் கிடைத்தபாடில்லை. ஆனால் அந்த கிறுக்குத்தனமும் அவனுக்குப் பிடித்து தானிருந்தது. திருவான்மியூருக்கு எட்டு மணிக்கு முன்னர் வந்து சேர்ந்திருந்தால் அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடிய M49 பேருந்து அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. "அஞ்சு ரூபா பஸ் டிக்கட்டுல முடிய வேண்டியது, தேவையில்லாமல் 20 ரூபா ஷேர் ஆட்டோவுக்குக் கொடுக்கறோம்" என நினைத்துக் கொண்டான்...ஆனால் குற்ற உணர்வெல்லாம் இல்லை. வருத்தப்பட நிறைய விஷயங்கள் இருக்கும் போது இதை பற்றியெல்லாம் கவலை படத் தொடங்கினால் கவலை மட்டுமே மிஞ்சும் என உணர்ந்திருந்தான் அவன். "காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன்வழி போனாளே கனிமொழி எங்கே" என யேசுதாஸ் ரஜினி அங்கிளுக்காக மீனாவைத் தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அவனுடைய ஆட்டோ L&T Infotech வளாகத்துக்கு அருகில் இருந்தது. அவனுக்கு மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவ்வளாகத்துக்குள்ளே தான் கறுப்பு நிற பல்சர் பைக்கை ஓட்டிச் சென்ற ஒரு பெண் செல்வதைத் தன்னுடைய பைக்கிலிருந்து அவன் கவனித்திருக்கிறான். சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி ஒருகாலத்தில் "Definitely male" என்று விளம்பரப்படுத்தப் பட்ட பைக் ஒன்றினை tame செய்து படு லாவகமாக ஓட்டிச் சென்றதையும் அவள் ஓட்டிய வேகத்தினையும் கண்டு வியந்திருக்கிறான். ஸ்டீரியோடைப்பை உடைத்தெறியும் அந்தப் பெண்ணின் துணிச்சல், பல ஸ்டீரியோடைப்களை இன்னும் கட்டிக் காத்து சோறு போடும் அவனுக்குப் பிடித்திருந்தது என்பது நகைமுரண். ஆனால் அவனைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்ள மாட்டான். அக்காட்சியில் கண்ட காண்ட்ராஸ்ட் எனக்குப் பிடித்திருந்தது என்று வாதிடுவான்.

"கோடி கோடி அடியவரில் நான் தான் கடைகோடி ஐயா" என நெக்குருகி ராஜா பாடும் போது அவனுடைய அலுவலகம் வந்திருந்தது. அவனை ஒத்த இயர்ஃபோன் பாவிப்பவர்கள் பலரும் தத்தம் ஷேர் ஆட்டோக்களிலிருந்தும் பேருந்துகளிலிருந்தும் இறங்கி அடுத்து என்ன சுவையுள்ள சாக்லேட் கிடைக்கிறது எனத் தெரிந்து கொள்ள அலுவலகத்துக்கு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.

Sunday, July 13, 2008

ஒரு ஆண்டன் செகோவ் கதையும் ஒகேனக்கல் பயணமும்

பல வசந்தங்களுக்கு முன்னதான ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அது. வீடு வாசல், தோட்டம் துறவு, கன்னுக்குட்டி பன்னிக்குட்டி இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு புது தில்லியில் வேலை பார்க்கும் என்னை போன்ற பேச்சிலாத பையன்கள் தங்குவதற்காக எங்கள் அலுவலகத்தினர் கொடுத்திருந்த அந்த வீட்டில், எனது அப்போதைய உற்றத் தோழியான வெறுமையுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். வெறுமைக்கும் என் துணையானது சலிப்பினை உண்டாக்க, தொலைக்காட்சியின் துணையினைத் தேடிக் கொள்ளும் படி என்னை பணித்தாள். நோக்கம் ஏதுமின்றித் தொலைக்காட்சியின் அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்த போது தான் தூர்தர்ஷனின் அவ்வலைவரிசை கண்ணில் பட்டது. ஆண்டன் செகோவ் எனும் புகழ்பெற்ற உருசிய(உக்ரேனிய என்பதே சரியானது) எழுத்தாளரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்தி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. "செகோவ் கி துனியா"(Chekhov ki Duniya) எனும் பெயருடைய அத்தொடரை நான் சிறுவனாக இருந்த போது சென்னையில் பார்த்திருந்ததும் நினைவுக்கு வந்தது. இத்தொடரில் செகோவ் எழுதிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதை வரும். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகான மறு ஒளிபரப்பு என்றாலும், ஏனோ அத்தொடரைப் பார்ப்பது அன்று எனக்கும் என் தோழிக்கும் பிடித்திருந்தது.

சரியாக அத்தொடர் ஆரம்பிக்கும் வேளையில், என்னுடன் அவ்வீட்டில் தங்கியிருந்த என்னைப் போன்ற இன்னொரு பேச்சிலன் ஞாயிறு மதியத் தூக்கத்திற்குப் பின் துயிலெழுந்து வந்தான். வந்தவனது பார்வை நான் பார்த்துக் கொண்டிருந்த அத்தொடரின் மீது படிந்தது. தூர்தர்ஷன் என்பது ஏதோ கேவலமான சேனல் என்று நினைத்தானோ என்னவோ தெரியலை, என்னிடம் எதுவும் கேட்காமல் ரிமோட்டினை எடுத்து அலைவரிசை மாற்றத் துவங்கினான். கடுப்பான நான்"என்ன பண்ணறே?" என்று கேட்டேன். "சேனல் மாத்திக்கிட்டிருக்கேன்"என்றான் சர்வசாதாரணமாக. "நான் பாத்துக்கிட்டிருக்கிறது உனக்கு தெரியலையா?" என்றேன். "வீ சேனல் வைக்கப் போறேன். இதையா பாக்கப் போறே?"என்று ஏளனமாகக் கேட்டான். "ஆமாம், இதை தான் பாக்கனும். உனக்கு வேணும்னா அரை மணி நேரம் கழிச்சு வா" என்று சற்று கோபமாகவே சொன்னேன். ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் அத்தொடரை என்னோடு சேர்ந்து அவனும் பார்த்தான். பார்த்து முடித்து விட்டு "செம டச்சிங்கா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கில்ல? வீ-சேனல்ல பாத்த பாட்டையே பாக்கறதுக்காக, நல்ல ஒரு கதையை மிஸ் பண்ண இருந்தேன்"என்று மிகவும் நெகிழ்ந்து போய் சொன்னான்.

அவனை அந்தளவு நெகிழச் செய்ய கதை இது தான். எழுத்தாளர் ஒருவர் இருப்பார். அவருடைய வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பார். ஒரு மனமாறுதலுக்காக ஒரு நாள் மாலை வேளையில் கடற்கரைக்குச் செல்வார். எதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும் அவரை ஒரு குரல் திரும்பிப் பார்க்கச் செய்யும். நீளமான கோட்டும் தொப்பியும் அணிந்த ஒரு மனிதன் "ஐயா! இந்த இனிய மாலை வேளையில் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு காட்டட்டுமா?"என்று கேட்பார். இந்த கோட் அணிந்த மனிதனாக நடித்தவர் லில்லிபுட் என்ற நடிகர். கமல்ஹாசன் நடித்த 'சாகர்' என்ற இந்தித் திரைப்படத்தில் "ஓ மாரியா" என்ற பாடலில் கமலுடன் ஆடுவாரே குள்ளமான ஒரு ஆள், அவர் தான் இந்த லில்லிபுட். "எனக்கு ஆயிரம் பிரச்சினைகள். என்னை கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள். பொழுதுபோக்கெல்லாம் எனக்குத் தேவையில்லை" என்பார் எழுத்தாளர். "இல்லை சார்! நானும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கும் பணம் மிகவும் அவசியமாகத் தேவை படுகிறது. இரண்டு ரூபிள் கொடுத்தால் போதும். உங்கள் பொழுதுபோக்குக்கு வழிசெய்கிறேன். உங்கள் மனதுக்கு நான் காட்டும் பொழுதுபோக்கு வித்தை பிடித்திருந்தால் மட்டுமே பணம் கொடுக்கவும்" என்பார் கோட் மனிதர். "இரண்டு ரூபிளுக்கு என்ன வித்தை காட்டுவீர்கள்" என வேண்டாவெறுப்பாகக் கேட்பார் எழுத்தாளர். "அதோ தெரிகிறதே கடல், அதில் மூச்சை அடக்கி நீண்ட நேரம் மூழ்கி இருக்கும் வித்தையை உங்களுக்குக் காட்டுகிறேன்"என்பார். "நீங்கள் கடலில் மூழ்குவதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை" என்று கூறுவார் எழுத்தாளர்.

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ரொம்ப கஷ்டமான நிலையில இருக்கேன். நான் காட்டும் வித்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால் போதும்" என்று எழுத்தாளரைக் கெஞ்சுவார் கோட் மனிதர். "சரி! உங்கள் வித்தையைக் காட்டுங்கள். நீங்கள் கூறியது போல எனக்கு உங்கள் வித்தை பிடித்திருந்தால் மட்டுமே இரண்டு ரூபிள் தருவேன்" என்று சொல்வார் எழுத்தாளர். அவர் கூறியதற்கு உடன்பட்டு விட்டு கடலில் குதிப்பார் கோட் மனிதர். மூச்சினைப் பிடித்துக் கொண்டு ஒரு சில மணித்துளிகள் கடலில் மூழ்கி இருந்துவிட்டு, மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார். கரையில் நின்று கொண்டிருக்கும் எழுத்தாளரை நோக்கி "ஐயா! என் வித்தை பிடித்திருந்ததா?"என்பார். "இதில் ஒன்றும் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என பதிலிறுப்பார் எழுத்தாளர். "சரி ஐயா"என்று கூறிவிட்டு மறுபடியும் கடலில் மூழ்குவார் கோட் மனிதர். முன்னை விட நீண்ட நேரம் கடலில் மூழ்கியிருந்து விட்டு மறுபடியும் மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார் கோட் மனிதர். எழுத்தாளரோ "உங்கள் வித்தையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை" என்பார். இது போல இன்னுமிரண்டு மூன்று முறை, கோட் மனிதர் நீண்ட நேரம் கடலில் மூழ்குவதும், எழுத்தாளர் "உங்கள் வித்தை எனக்கு பிடிக்கவில்லை"என்று சொல்வதும் நடக்கும். இதற்குப் பின் மூச்சு வாங்குவதற்காக மேலே வரும் போது கோட் மனிதருக்கு மிகப் பலமாக மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். "ஐயா! இந்த முறை நான் காட்டும் வித்தை உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காமல் இருக்காது. வருகிறேன்" என்று கூறிவிட்டு கடலில் மூழ்குவார் கோட் மனிதர். கடலில் மூழ்கிய மனிதன் நீண்ட நேரமாகியும் மூச்செடுக்க மேலே வரமாட்டார். நேரம் சென்று கொண்டேயிருக்கும். எழுத்தாளரும் "வழக்கத்திற்கு மாறாக வெகு நேரம் ஆகியும் இம்மனிதர் ஏன் மேலே வரவில்லை" என யோசிக்கத் துவங்குவார். காலமும் சென்று கொண்டேயிருக்கும். அது வரை பெரிதாக அம்மனிதரைப் பற்றி அக்கறை காட்டாத எழுத்தாளரின் மனம் கவலை கொள்ளத் தொடங்கும். கடற்கரையில் குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்குவார். "ஐயா! நீங்கள் காட்டிய வித்தை போதும். தயவு செய்து மேலே வாருங்கள். நீங்கள் கேட்ட இரண்டு ரூபிளைக் கொடுத்து விடுகிறேன். மேலே வந்துவிடுங்கள்" எனக் கடலை நோக்கிக் கத்துவார் எழுத்தாளர். தொடர்ச்சியான அவருடைய கத்தலுக்கும் கதறலுக்கும், கடல் அலைகளின் ஓசையைத் தவிர எந்தவொரு பதிலும் இருக்காது. இவ்வாறாக முடியும் அக்கதை. "The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல விதமான எண்ணங்களையும், இரு கனத்த இதயங்களையும் அம்மாலை வேளையில் விட்டுச் சென்றது தொலைக்காட்சியில் கண்ட அக்கதை.

சமீபத்தில்(இவ்வாண்டு மே மாதத்தின் கடைசி நாள்) ஓகேனக்கல் சென்றிருந்தேன். உயர்ந்த பாறைகளுக்கு இடையில் காவிரி ஆறு நீர்வீழ்ச்சியாகிச் சீற்றத்துடன் கீழே விழுந்து ஓடுவதைக் காண்பதற்காகவும் பரிசலில் பயணிப்பதற்காகவும் ஏராளமானச் சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள். புகைப்படம் எடுப்பதற்காகப் பைத்தியக்காரர்கள் போல அலையும் என்னை போன்றோரின் கவனத்தை உடனடியாகக் கவருபவர்கள், பாறையின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள். பரிசலில் வருபவர்களைப் பார்த்ததும் "சார்! ஃபைவ் ருபீஸ் ஒன்லி, ஜம்ப்" என்று சைகை காட்டுவார்கள். நீங்கள் சரி என்றால் போதும், உடனே பாறை மீதிருந்து ஆற்றில் குதிப்பார்கள். பின்னர் உங்கள் பரிசல் அருகில் நீந்தி வந்து காசை வாங்கிக் கொண்டுச் சென்று விடுவார்கள்.

ஐந்து ரூபாய் தருவதாக வாக்களித்து இச்சிறுவர்களை பாறையின் மீதிருந்து குதிக்கச் செய்து எடுத்த படங்கள் கீழே. இவை எல்லாமே பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது எடுத்தவை.

பாறை மீது குதிக்கத் தயாராக இருக்கும் சிறுவன்.

குதிக்கும் போது...

என்னுடைய Flickr பக்கத்தில் நான் இட்டிருக்கும் படம் - பிற்தயாரிப்பு செய்தது.

குதிப்பதில் ஒவ்வொருவருக்கும்...

ஒவ்வொரு ஸ்டைல்

குதித்து விட்டு நீந்தி வந்த ஒரு சிறுவன். அவனுடன் பேச்சு கொடுத்த போது எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இது போல பாறை மீது குதிப்பதை விளையாட்டு போல செய்து வருவதாகவும் சொன்னான்.

நிற்க. ஒகேனக்கல்லில் அச்சிறுவர்களைப் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பும் போது, பாறை மீதிருந்து இச்சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து குதிக்கிறார்களே, எவ்வளவு அபாயகரமானது அது? அவர்களுடைய உயிருக்கு யார் பொறுப்பு என்று மனம் யோசிக்கத் தொடங்கியது. ஒரு நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருக்கும் போது மிகச் சிறிய ஆபத்து உள்ள பணியில் ஈடுபடுவது என்றால் கூட தலைகவசம் அணிய வேண்டும், உங்கள் பேரில் PF கணக்கு இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட வரைமுறைகள். ஐந்து ரூபாய் சில்லறை காசுக்காகப் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கும் இச்சிறுவர்களுடைய உயிரின் விலை என்ன என்று எண்ணத் தொடங்கினேன். போதாக் குறைக்குச் சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் கண்ட அந்த ஆண்டன் செக்கோவ் கதையும் நினைவுக்கு வந்தது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இது குறித்து பதிவெழுதும் எண்ணமும் அப்போதே உதித்தது. சற்று நேரம் கழித்து, இவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை, பையன்கள் பாக்கெட் மணிக்காக ஜாலியாகக் குதிக்கிறார்கள், நாமும் நம் மனதுக்குப் பிடித்த வண்ணம் படங்களை எடுத்து வந்துவிட்டோம். இதற்கு மேல் இது குறித்து அதிகமாக யோசித்து கவலை பட வேண்டியதில்லை என்று நினைத்து இச்சிறுவர்களைக் குறித்தான நினைப்பைக் கிடப்பில் போட்டேன்...

...Flickrஇல் வேறொரு புகைப்படக்காரர் எடுத்த ஒகேனக்கல் பாறை மீதிருந்து குதித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் படத்தைக் காணும் வரை. அதில் ஒரு வெளிநாட்டவர் சொல்லியிருந்த கருத்து மிகவும் வருத்தமடையச் செய்தது. பாறை மேலிருந்து குதிப்பதற்கு இச்சிறுவர்கள் ஐந்து ரூபாய் வாங்குவார்கள் என அறிந்த அவர் "எல்லாவற்றிற்கும் இக்காலத்தில் காசு வாங்குகிறார்கள். Its a sick world we live in" என்று சொல்லியிருந்தார். அதைப் படித்ததும் "Sick comment of a heartless westerner" என்று தான் எனக்கு தோன்றியது. அதோடு பல எண்ணங்களையும் கிளப்பி விட்டது அந்த கமெண்ட். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு அபாயகரமானச் செயலில் யாரும் இறங்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். வெளிநாடு செல்லும் போது டாலருக்கும் யூரோவுக்கும் நாம் ரூபாய் கணக்கு போடுவது போல, இந்த ஐந்து ரூபாய்க்கு டாலர்/யூரோ கணக்கு போட்டோமானால் ஒன்-டென்த் ஆஃப் எ அமெரிக்கன் டாலர் என்றோ ஒன்-ஃபிஃப்டீன்த் ஆஃப் எ யூரோ என்று தான் வரும். ஒரு மனித உயிரின் விலை ஐந்து ரூபாய்க்குக் கூட ஈடானதில்லையா? இல்லை எனில் இந்தியர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? இதே மாதிரி பாறை மீது குதிப்பதை அமெரிக்காவிலோ, அல்லது வேறொரு ஐரோப்பிய நாட்டிலோ ஒரு சிறுவன் செய்கிறான் என்றால், வெறும் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு செய்வானா? இல்லை அந்த கமெண்ட் இட்ட அவ்வெளிநாட்டவர் எதிர்பார்ப்பது போல ஓசியில் தான் குதிப்பானா? பாறை மீதிருந்து குதிக்கும் அபாயகரமான விளையாட்டுக்குத் துணை போக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மேலே நான் சொல்லியிருப்பதைப் படித்தாலே அது புரியும். அவ்வளவு அபாயகரமானச் செயலை அச்சிறுவர்கள் செய்வதை ரசித்துத் தானே பலரும் படம் எடுக்கிறார்கள். அபாயகரமான அச்செயலுக்கு வெறும் ஐந்து ரூபாய் கொடுப்பதற்குக் கணக்கு பார்க்கும் அந்த மனப்பான்மையைத் தான் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

ஒரு மனிதன் உயிரைப் பணயம் வைத்து செய்யும் சாகசங்கள் தான் இன்னொரு மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஹூடினி, டேவிட் ப்ளெயின் போன்ற சாகசக்காரர்களின் புகழே இதற்கு சான்று. அதே போல சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் தொடங்கி இக்கால வடிவேல், விவேக் வரை காமெடியன்கள், அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்கு செய்யும் மிக எளிமையான உத்தி, அடிவாங்கி/அடிபட்டு விழுவது. ஒருவன் அடிவாங்கி விழுவதை நினைத்துச் சிரிக்கும் மனித மனது, அவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு உதவ மறுக்கிறது. நான் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு உதவி செய் என்றொருவன் கேட்பதை பிச்சை என்று வரையறுக்கிறோம், சாகசம்/வித்தை காட்டி ஒருவன் பொருள் செய்ய நினைத்தலையும் பிச்சை என்கிறோம். கோட் மனிதன் இரண்டு ரூபிள் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டிருந்தாலோ, அல்லது ஓகேனக்கல்லில் சிறுவர்கள் ஐந்து ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வந்திருந்தாலோ அதற்கு என்ன பெயர் கொடுப்போம் என நாம் அனைவரும் அறிவோம். இரண்டு ரூபிள் என்பது செக்கோவ் கதையில் வரும் எழுத்தாளருக்குப் பொழுதுபோக்குக்கு செலவழிக்கும் ஒரு சிறு தொகை, ஆனால் அதுவே அந்த கோட் மனிதருக்கு வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் விஷயம். அதே போல ஐந்து ரூபாய் என்பது என்னைப் போன்றவனுக்கு ஃபோட்டோ எடுப்பதற்குச் செலவாகும் சில்லறை காசு. ஆனால் அதுவே வேறொருவனுக்கு அன்றாடம் அடுப்பெரிய வழிசெய்யும் பொருளாக இல்லாது போனாலும், சில்லறை காசை விட அதிக முக்கியத்துவம் உடைய ஒன்றாகவே இருக்கின்றது, எனவே தான் அபாயம் பற்றி எல்லாம் ஏதும் யோசிக்காமல் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கிறான்.

கோர்வையற்ற பல எண்ணங்களையும், என் கோபத்தையும் கொட்டுவதாகவும் இப்பதிவு அமைந்துவிட்டது. சில மாதங்களாக எதையும் எழுதாத நான், இன்று இரவு இரண்டு மணியாகியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், என் மூளையின் வசம் நானில்லாமல், என் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று தான் பொருள். பதிவு நீளமாத் தான் இருக்கு, முடிஞ்சாப் படிச்சிட்டு உங்கக் கருத்துகளையும் சொல்லிட்டுப் போங்க.

Sunday, March 09, 2008

531 பங்காரப்பேட் பாசெஞ்சர்

கடைசியா இதுக்கு முன்னாடி பயணிகள் தொடர்வண்டியில எப்போ பயணம் செய்தேன்னு ஞாபகம் இல்லை. அநேகமா பயணிச்சதே இல்லைன்னு தான்னு நெனக்கிறேன். ஆனா நேற்று எந்த வித முன்னேற்பாடோ, அவசியமோ இல்லாமல் பயணிகள் தொடர்வண்டியில் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுத்தான் 'அவன்'. மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காகப் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்திற்கு நேற்றுச் சென்றிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியாக இருந்த போதிலும் சனிக்கிழமை ஆதலால் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ஒரு பெட்டியில எத்தனை பேர் முன்பதிவு செய்திருக்காங்களோ அதை விட இரண்டு மடங்கு பேர் முன்பதிவு பெட்டியில முன்பதிவு செய்யாமல் ஏறுகிறார்கள். பகலில் சென்று இரவில் திரும்பி விடும் பிருந்தாவன், லால்பாக் ஆகிய தொடர்வண்டிகளில் வர வர நிலைமை மோசம் ஆகிக் கொண்டே செல்கிறது. முன்பதிவு செய்யப்பட்டப் பெட்டிகளில் அத்துமீறி ஏறுபவர்களைத் தடுக்க யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லும் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் அம்மா இரண்டு பைகளை எடுத்துக் கொண்டுத் தனியாக ஏறி அமர்வது கடினம் என்று எண்ணி நானும் ஏறினேன். ஆனால் ரயிலுக்குள் ஏறுவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. அதற்கு பின் அம்மாவுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரை எழுப்பி அம்மாவை அமர வைப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. நான் இறங்க முற்படும் போது யாருமே வழிவிடவில்லை. எடம் இல்லை, ஆவறதில்லை என்று சொல்லி என்னையும் ரயிலிலேயே பயணப் படுத்தினார்கள். சரி அடுத்த ஸ்டேஷனான வைட்ஃபீல்ட்டில் இறங்கிவிடலாம் என்று நினைக்க, அதிலும் விழுந்தது மண். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வைட்ஃபீல்டில் நிற்காது அடுத்தபடியாக பங்காரப்பேட்டில் தான் நிற்கும் என்று சொன்னார்கள். விதியை நொந்து கொண்டு பங்காரப்பேட் வரை டிக்கெட் இல்லாமல் நின்று கொண்டே பயணம் செய்தேன். ஏற்றிவிட வந்தவன் ரயிலில் பயணமான அனுபவமும் நமக்கு வாய்த்திருக்கிறதே என எண்ணி பின்னால் பெருமை பட்டுக் கொண்டேன். ஆக மொத்தம் இன்னும் நான் அனுபவிக்க நிறையவே இருக்கிறது :)

முக்கால் மணி நேரத்தில் அதிவேக விரைவு வண்டியில் கடந்தத் தூரத்தை பயணிகள் வண்டியில் கடப்பதற்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்திருந்த போதிலும் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பேருந்தைப் பிடிக்க ஏனோ தோன்றாததால் அங்கு நின்று கொண்டிருந்த 531 பங்காரப்பேட் பெங்களூர் பாசெஞ்சர் ரயிலில் ஏறிக் கொண்டேன். பாசெஞ்சர் ரயில் என்றதும் மரத்தினால் ஆன இருக்கைகளே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். எல்லாப் பெட்டிகளிலும் குஷன் இருக்கைகளே பொருத்தப்பட்டிருந்தன. உட்கார இடம் தேடிக் கொண்டிருக்கும் போது உண்ட களைப்பில் இருக்கைகளில் காலை நீட்டி சில பேரிளம்பெண்களும் மற்றும் சில பேரிளஆண்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்களுடைய சயனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் எப்படியோ ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்த நிலையிலேயே வண்டி புறப்பாட்டிற்காக 45 நிமிடங்கள் காத்திருந்தேன், எழுந்து நடமாடினால் உள்ள இடமும் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் தான். இது வரையிலான என்னை வளர்த்து ஆளாக்கிய, என்னுள் இருக்கும் இண்ட்ரோவெர்ட் அமர இடம் கிடைத்ததும் உயிர்த்தெழுந்தான். அது முதல் வண்டியிலிருந்து இறங்கும் வரை பல விதமான எண்ணங்களுக்கும் மன ஓட்டங்களுக்கும் காரணம் ஆனான். கோர்வையற்ற அம்மனவோட்டங்களின் பிரதிபலிப்பே இப்பதிவு.

"இந்த அம்மா மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தா இப்படி காரணம் இல்லாம பாசெஞ்சர் டிரெயினில் பயணிக்கிற நெலமை நமக்கு வந்திருக்குமா" என்று நினைத்தது என் மனம். ஏசி சேர் காரில் முன்பதிவு செய்கிறேன் என்ற கூறியதற்கு "வேணாம் வேணாம் ஏசியில எல்லாம் பண்ணாதே...எனக்கு ஏசி ஒத்துக்காது. குளுருல நடுங்கிக்கிட்டே போவனும்"னு சொன்னாங்க. "குளுருல நடுங்கற மாதிரி எல்லாம் இருக்காது...24 டிகிரி தான் மெயிண்டெயின் பண்ணுவாங்க"ன்னும் சொல்லிப் பார்த்தேன். "வேணாம்ப்பா, செகண்ட் க்ளாஸ்லேயே பண்ணு அப்படியே ஜன்னலோரம் உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டே போய்டுவேன், ஏசி எல்லாம் எனக்கு பழக்கமில்ல"ன்னு வந்தது பதில். "பழக்கமில்லன்னா என்ன? எப்பவுமே செகண்ட் க்ளாஸ்லே தானே போறீங்க? ஏசியில போனா தானே பழக்கம் ஆகும்" அப்படின்னேன். அதுக்கு வந்த பதிலான "நீ என்னப்பா பெரிய கம்பெனியில பெரிய வேலையில இருக்கே? எங்க வீட்டுக்காரரு ரிட்டையர்டு வாத்தியார் தானே?" என்னை யோசிக்க வைத்தது. நான் கூட வாத்தியார் பிள்ளையாக மட்டும் இருந்த நேரத்தில், தில்லியிலிருந்து சென்னைக்கு அனல் கக்கும் மே மாத வெயிலில் அச்சம் மடம் நாணம் இதை எல்லாம் மறந்து சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வெறும் பனியனோடு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தவன் தானே நானும். இப்போது சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்குக் கூட யோசிக்காமல் ஐராவதத்தில் டிக்கெட் எடுக்கிறேன். கையில் பொருள் சேரும் போது மனிதனின் தேவைகளும் அவன் நாடும் வசதிகளும் அதிகரிக்கிறது.

தமிழ் துணைப்பாட நூலில் படித்த ஒரு கதை "கலையின் விலை". ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதியது. கதையில் ஒரு எழுத்தாளர். திறம்பட எழுதக் கூடியவர். ஆனால் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வறுமையில் உழல்பவர். அவர் மனைவியும் மக்களும் அவருடைய இவ்வறுமையின் காரணமாக பல இன்னல்களை அனுபவிப்பர். யாரோ ஒருவர் வேலை தருகிறேன் நேர்காணலுக்கு வாருங்கள் என்று ரயில் டிக்கெட்டும் அனுப்பி அழைப்பார். தான் மிகவும் காதலிக்கும் எழுத்தைத் தியாகம் செய்கிறோமே என்ற வருத்தம் இருந்தாலும் தன் குடும்பத்தின் நிலையைக் கண்டு வெளியூர் செல்லத் தயாராகி ரயிலில் பயணப்படுவார். ரயில் எங்கோ ஒரு ஸ்டேஷனில் நிற்கும் போது யாரோ ஒருவர் - இவருடைய நெடுநாளைய வாசகராம், இவரை அடையாளம் கண்டு கொண்டு இவர் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார் "ஐயா! நான் உங்களுடைய பரம விசிறி..."இத்யாதி இத்யாதி என்று. வாசகர் சென்றதும் தன் கையைப் பார்ப்பார் எழுத்தாளர். அதில் அவர் காண்பது ஒரு துளி கண்ணீர். "ஆஹா! இதுவல்லவோ கலையின் விலை. இதற்கு எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும் ஈடாகுமா? பால்காரன் பாக்கியையும் மளிகைக் கடைகாரன் பாக்கியையும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். மனைவியை எதாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம். கலையை விடலாகாது"என்றெண்ணி அந்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிச் சென்று விடுவார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே இந்த கதை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. கலையின் மீது அவ்வளவு பற்றிருக்கும் போது எதற்காக ஐயா கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க? உங்களை நம்பி இருக்கும் உங்க மனைவியும் மக்களும் வறுமையில் வாடுவது எந்த விதத்தில் நியாயம்? நீ நேசிக்கும் தொழிலின் மூலமாக மனைவி மக்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை எனும் போது வேறு வேலை தேடிக் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே அழகு? அதையெல்லாம் வுட்டுட்டு கடனையெல்லாம் பாத்துக்கலாம் மனைவியை ஏமாத்திடலாம்னு இவரும் இறங்கிப் போய்டுவாராம். சுத்த ஹம்பக்கா இருந்தது படிக்கிறப்போ. ஒரு வேளை யாராச்சும் என்னை எங்கேயாச்சும் அடையாளம் கண்டுக்கிட்டு "ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"ன்னு சொல்லி என் கையில ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினா ஒரு வேளை நான் பொட்டித் தட்டறதை எல்லாம் வுட்டுப் போட்டு முழு நேர ப்ளாக்கர் ஆயிடுவேனோ என்னவோ? ஏனோ நேத்து இந்த கதை ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

ரயிலில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே மட்டும் வேடிக்கை பார்க்காமல் உள்ளே உட்கார்திருக்கும் மனிதர்களைக் கவனிப்பதும் ஒரு பொழுதுபோக்கு தான். ரயிலில் ஏறியதும் பசிக்கத் தொடங்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். எட்டு பழங்கள் பத்து ரூபாய்க்கு விற்கப் படும் சப்போட்டா பழங்களை அங்கேயே தின்று அதன் விதைகளை சீட்டுக்குக் கீழே போடுபவர்களையும், இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்ற அவித்த வேர்கடலை செவிக்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போகவே இன்னும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி அதன் குப்பைகளையும் பெட்டிக்குள்ளேயே போடுகிறவர்களையும் பார்த்துக் கொண்டே சென்றேன். எனக்கு எதிர் சீட்டில் ஒரு அப்பா, அம்மா, மகள் அடங்கிய மூவர் குழு வந்தமர்ந்தது. ரயில் பயணத்தில் வழி நெடுகத் தின்றுக் கொண்டே செல்பவர்கள் ஒரு ரகம் என்றால், ஏறி அமர்ந்ததும் தூங்கத் தொடங்குபவர்கள் இன்னொரு ரகம். நடுவில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த தந்தையின் மடியில் தலை வைத்து மகள் படுக்க, கணவரின் தோளில் சாய்ந்து மனைவி கண்ணயர்ந்தார். அம்மனிதர் இதை ஒரு பெருமையான நிகழ்வாகக் கருதியிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வளவு அசவுகரியமான நிலையிலும் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உயர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாரே ஒழிய, மகளிடமும் மனைவியிடமும் தன் அசவுகரியத்தைக் குறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. இன்னொன்னு கவனிச்சேன். மகளும் மனைவியும் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிக் கொண்டு வந்தாலும் மனிதர் சிறிது நேரம் கூட கண் அயரவில்லை. பொறுப்புகளைச் சுமக்கும் போது தூக்கம் எல்லாம் வராது என்பது உண்மை தானோ?

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போகும் சிறு ஸ்டேஷன்களிலும் நேற்று ரயில் நின்று நின்று சென்றது. அத்தகைய சிறு ஸ்டேஷன்களை நம்பியும் கிராமங்கள் இருக்கின்றன என்பதும் அதை நம்பி மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கைகளும் இருக்கின்றன என்பதும் புலனானது. ஒரு சனிக்கிழமை மதியம் பங்காரப்பேட்டை என்னும் ஊருக்கும் மாலூர் என்னும் ஊருக்கும் இடையே பாசெஞ்சர் ரயிலில் பயணிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என்றும் அவனுடைய சிந்தனைகள் எத்தகையதாக இருக்கும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். வாரத்தில் சில நாட்கள் ஒரு ஏசி ஆஃபீசில் உட்கார்ந்து பெட்டி தட்டிப் பிழைப்பை நடத்தும் என்னைப் போன்றவனுக்கு அது மட்டும் தானே செய்ய முடியும்?

பயணம் தொடரும்...

Thursday, January 04, 2007

கார்மரண்டுகளுடன் புதுவருட ஏவாள்

01.01.2000-2004 : புது தில்லி
01.01.2005-2006 : இந்தூர்
01.01.2007 : அகமதாபாத்

இதனால சகலமானவர்களுக்கும் தெரிவிச்சிக்கறது என்னன்னா, கடந்த ஏழாண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் 'வடக்கப் பாக்க' நம்ம புத்தாண்டு அமைஞ்சு போச்சுங்க. ஒன்னாம் தேதி வேலை நாள்ங்கிறதாலே 'ஒன்னாம் தேதி கூட ஆபிஸ் வந்து கடமை கருப்பசாமியா வேலை செய்யறான்பா'ன்னு புத்தாண்டு வாழ்த்து சொல்ல ஃபோன் செஞ்சவங்க கிட்டேருந்து ஒரு நல்ல பேரு, ஒரு சர்டிபிகேட் ...ஒரு...ஒரு...பரிதாபம்...ஒரு...ஒரு...பச்சாதாபம் (எப்படி வேணா வச்சிக்கலாம்) இதெல்லாம் கெடச்சதுங்க. அதை தவிர்த்து கொட்டாய்ல தான் பாக்க முடியலை, ஓசியிலே டிவியிலயாச்சும் பாக்கலாம்னு நெனச்சி வச்சிருந்த 'எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி' கூட பாக்க முடியாம...அட சன் டிவி பக்கமே தலை வைக்க முடியாம, எல்லா நாளையும் போலத் தான் போச்சு புத்தாண்டு நாள். ஆனாலும் 2006 ஆம் ஆண்டின் கடைசி நாள் செம சூப்பரா அமைஞ்சதுங்க. இதுக்கு முன்னாடி நினைவு வச்சிக்கிற மாதிரி அமைஞ்ச டிசம்பர் 31ன்னு பாத்தா, 1994ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்னிக்குச் சென்னை தேவி தியேட்டரில் சாயங்கால ஆட்டம் பாத்த 'தேவர் மகன்' படத்தைச் சொல்லலாம். படத்தைப் பாத்துட்டுத் திரும்ப வரும் போது என்னமோ நாமளே ரெண்டு தலையைச் சீவிட்டு நடந்து வர்ற ஃபீலிங் தான் போங்க. அங்கேருந்து வேகமா ஃபாஸ்ட் பார்வர்டு செஞ்சி ஒரு 'ட்வெல்வ் இயர்ஸ்' ஓட்டுனா இந்தப் பதிவோட சிச்சுவேசனான 31 டிசம்பர் 2006 வருதுங்க. இந்த வட்டம் தலையைச் சீவற ஃபீலிங் எல்லாம் வரலைன்னாலும் மனதில் சந்தோஷச் சீவல்களைச் சில்லறையாய் சிதறச் செய்தச் சில்லென்ற டிசம்பர் மாத அந்திப் பொழுதா அமைஞ்சதுங்க அது.

பில்டப்பு போதுங்க...மேட்டர் என்னன்னா முப்பத்தொன்னாம் தேதி வடக்கு அகமதாபாத்ல இருக்கற காங்கரியா ஏரிக்கு(Kankaria Lake), நானும் என்னோட தமிழ் நண்பரும் போனோம்ங்க. சும்மா என்ன தான் இருக்குன்னு பாத்துட்டு வரலாம்னு போனது, பல தரப்பட்ட அனுபவங்களை ஒரே மாலைப் பொழுதில் ஒரு நான்கு-ஐந்து மணி நேரத்துக்குள் தருவதாக அமைஞ்சது.

காங்கரியா ஏரி இருக்கறது, நாங்க இருக்கற எடத்துலேருந்து ஒரு 15 கி.மீ.தூரத்துல. வீட்டுலேருந்து ஆட்டோல போறப்ப, வண்ணம் தீட்டுன யானையைப் படம் புடிக்கலாம்னு ஓடற ஆட்டோலேருந்து அவசர அவசரமா ஃபோகஸ் பண்ணி எடுத்த படம்.


ஜனவரி 14 நாடெங்கும் மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப் படுகிறது. எப்போதும் நம்ம பொங்கலும், மகர சங்கராந்தியும் ஒரே நாள்ல தான் வரும். ஆனா இந்த வாட்டி மகர சங்கராந்தி பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடியே வந்துடுச்சு. மகர சங்கராந்தி அன்னிக்கு இந்தப் பக்கம் பின்பற்றப்படுகிற சடங்கு/வழக்கம் அப்படின்னு பாத்தா அது பட்டம் விடறதுங்க. போன பொங்கலுக்கு ஐதராபாத் போயிருந்த போதும் இதப் பாக்க முடிஞ்சது. தீபாவளிக்குப் பட்டாசு கடை போல இந்தப் பக்கம் எல்லாம் கீழே பாக்கற மாதிரி அங்கங்கே 'பட்டம்' விக்கிற கடைங்க முளைச்சுடுது.


பட்டம் விடற நூலுக்காக 'மாஞ்சா' போடறாங்க.


காங்கரியா ஏரியில் 'புலி'யுடன் மகிழ்ச்சியாக விளையாடி மகிழும் குழந்தைகள். ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கும்.


ஏரியில் சூரியன் மறையும் ஒரு சில்ஹுவெட் படம்.


இன்னொரு சில்ஹுவெட் படம். க்ளிக் செஞ்சு பாத்தீங்கன்னா படம் பெருசாத் தெரியும். இந்தப் படம் மட்டுமில்ல...எல்லாப் படங்களுமே.


மேற்கு பக்கத்தில் சில்ஹுவெட். கிழக்குப் பக்கம் திரும்பிப் பார்த்தால் ஏரியின் நடுவில் ஒரு ஃபவுண்டேனும், படகுகளும். நாங்களும் தோணியிலே ஏரியைச் சுத்தி ஒரு ரவுண்டு போனோம்.


மரத்தின் மீது அமர்ந்திருக்கும் கார்மரண்ட்(Cormorant) பறவைகள். இந்த வகை பறவைகளை இதற்கு முன் நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் எதோ ஒரு வித்தியாசமான பறவை தான், அநேகமாக குளிர்காலத்தில் இனப் பெருக்கத்திற்காக வேற்று கண்டங்களுக்கு வரும் 'migratory' பறவைகளாக இருக்கக் கூடும் என்று படம் பிடித்துத் தள்ளினேன்.


மேற்கு புறம் திரும்பியதும், ஏரியில் ஒரு கொம்பின் மீது அமர்ந்திருந்த ஒரு கார்மரண்ட் குடும்பம்.


கார்மரண்ட் பறவை பற்றித் தெரிந்து கொள்ள விகிபீடியாவைப் பார்த்ததில் அறிந்து கொண்டது : குளிர்காலத்தில் இடம் பெயரும் பறவைகள் ஆனாலும் கார்மரண்டு பறவைகள் உலகம் முழுவதும் காணப் பெறுகின்றனவாம். ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் இப்பறவைகளை மீன்களைப் பிடித்து வரப் பழக்குவார்களாம். மீனை கார்மரண்ட் விழுங்கி விடாமல் இருக்க அதன் கழுத்தில் ஒரு வளையத்தை அணிவிப்பார்களாம்.


ஒன்பது மீட்டர் ஆழம் வரை மூழ்கி அருமையாக மீன் பிடிக்குமாம் இப்பறவை. படத்தைப் பெரிதாக்கிப் பார்த்தால், ஒரு கார்மரண்ட் நீரில் நீந்துவதைக் காணலாம்.


வாத்து போல நீந்தினாலும், மிக அருமையாகப் பறக்கவும் செய்யுமாம் கார்மரண்ட். இப்பறவையின் அறிவியல் பெயரான 'Phalocrocorax என்பதன் பொருள் லத்தீன் மொழியில் 'நீர் காகம்'(Water Raven) என்பதாகும்.


இறக்கைகளை விரித்து காற்றில் உலர்த்தும் பழக்கத்தினை உடையது கார்மரண்ட். விகிபீடியாவில் எழுதியிருந்தது போலவே இறக்கை விரித்து படம் பிடிக்கக் கார்மரண்ட் பறவை போஸ் கொடுத்ததும் நம் அதிருஷ்டம் என்றே கொள்ள வேண்டும்.


கார்மரண்ட்களைப் போதும் போதும் எனும் அளவிற்குப் படம் எடுத்துவிட்டு அங்கேயே நடைபெற்ற ஒலி-ஒளி லேசர் கண்காட்சியையும் கண்டுகளித்தோம்.


காங்கரியா ஏரிக்கு எதிரிலேயே ஒரு மீன் கண்காட்சியகம் இருந்தது. அங்கே எடுத்த சில படங்கள் கீழே. மீன் பெயரைச் சரியாகக் கவனிக்கவில்லை.


உதட்டழகி. பேர் தெரியாததால் இந்த சப்பை கட்டு.


கேமராவின் ஃபிளாஷை நிறுத்தாததால் பாழான பல படங்களில் இதுவும் ஒன்று. பிரன்ஹா(Piranha) என்று பெயர் இடப் பட்டிருந்தது இந்த மீன் தொட்டியின் மீது. பிரன்ஹா ஆளைக் கடிக்கிற ஒரு முரட்டு மீனுன்னு கேள்வி பட்டுருக்கேன். ஆனா இதைப் பாத்தா அப்படி எதுவும் தெரியலை இல்லை?


இது நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்ச தங்க மீன். தொட்டியின் மேல் வைக்கப்பட்டிருந்தப் பெயர் பலகையில் இருந்த பெயர் 'Bubble eyed Gold fish'.


இப்படியாக யானை, பட்டம், மாஞ்சா, குழந்தைகள், கார்மரண்ட், ஏரி, ஒலி-ஒளி, மீன் கண்காட்சி அப்படின்னு பலவிதமான அனுபவங்களோடு செவிக்கும் விழிக்கும் மகிழ்ச்சியூட்டக் கூடிய ஒரு மாலை பொழுதாக அமைஞ்சதுங்க 31 டிசம்பர் 2006.

(பி.கு : New Year Eveக்கு 'புதுவருட ஏவாள்'னு மொழிபெயர்ப்பு பண்ணிக் குடுத்தது யாருன்னு மட்டும் கேக்காதீங்க. நான் தலை போனாலும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் பண்ணி கிள்ளி ரைட்டு போட்டுருக்கேன்.)

Thursday, December 28, 2006

ராஜஸ்தான் - ஒரு போட்டோ பயணம்

போன பிராஜெக்ட் அப்போ ராஜஸ்தான்ல பாத்த சில விஷயங்களை அதிகமாகப் பேசாம(வளவளனு எழுதாம) சுமாரான, படுசுமாரான சில படங்களை வச்சு விஷுவலாச்(!) சொல்லற ஒரு முயற்சி தான் இந்தப் பதிவு.


நாத் த்வாரா(Nathdwara) என்னும் இடத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீநாத்ஜி எனும் இறைவனின் படம். ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரிலிருந்து 50 கி.மீ.தொலைவில் உள்ளது இத்தலம். படத்தின் கீழே குஜராத்தி மொழியில் எழுதியிருப்பது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா", ஆகஸ்ட் 9,2006


ஸ்ரீநாத்ஜியின் இன்னுமொரு திரு உருவம், , ஆகஸ்ட் 9,2006


ஜிலேபி சுடறாங்க. நாத்த்வாரா, ஆகஸ்ட் 9,2006


சலவைக்கல்(மார்பிள்) தொழிற்சாலை, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006


உங்களுக்கு எத்தனை கன அடி வேணும்?, நாத் த்வாரா - உதய்பூர் சாலை, ஆகஸ்ட் 9,2006


"அழகான சரி சோடி, ஆனை மேல அம்பாரி...", உதய்பூர் பேலஸ் செல்லும் வழியில், ஆகஸ்ட் 9,2006


மகாராணா பிரதாப் சிங் தன்னுடைய தாத்தாவின் நினைவாக உருவாக்கிய உதய்பூர் நகரிலுள்ள, உதய்பூர் மாளிகையின்(சிட்டி பேலஸின்) முகப்பு, ஆகஸ்ட் 9,2006


அருங்காட்சியகத்தைத் தன்னகத்தே கொண்ட சிட்டி பேலஸின் இன்னுமொரு படம், ஆகஸ்ட் 9,2006


சூரியவம்சத்தினரின் முதற் கடவுளான சூரியனார் மீசையோடு, ஆகஸ்ட் 9,2006


முகலாயர்களுடன் நடைபெற்ற ஹல்திகாட்டி யுத்தத்தில் (Battle of Haldighati), காலில் பலத்த காயங்கள் ஏற்பட்ட போதும் தன் தலைவனான மகாராணா பிரதாப்சிங்கைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுச் சேர்த்து விட்டப் பின்னரே தன் உயிரை விட்ட சேத்தக்(Chetak) குதிரையின் உருவ பொம்மை. யானைப்படைகளையும் கொண்டு போரிட்ட முகலாய ராணுவத்தைப் போலல்லாமல், ராஜபுத் வீரர்கள் குதிரைகளை மட்டுமே கொண்டு போரிட்டனர். குட்டி யானை போலத் தோன்றி தாக்க வரும் முகலாய யானைகளை ஏமாற்றுவதற்காகத் தும்பிக்கை போன்ற முகமூடி அணிந்திருக்கும் சேத்தக். உதய்பூர் சிட்டி பேலஸ் அருங்காட்சியகம், அகஸ்ட் 9,2006


தாஜ் லேக் பேலஸ் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதி. உதய்பூர் அருங்காட்சியகத்திலிருந்து காணக் கிடைக்கும் கோணம், ஆகஸ்ட் 9,2006


தார் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்படக் காரணமாயிருந்த அபரிமிதமான மழையினால் தளும்பி நிற்கும் உதய்பூர் ஏரி, ஆகஸ்ட் 9,2006


தங்களுடைய நாட்டுப்புறப் பாடலான "நிம்பூடா நிம்பூடா" பாடும் பார்மேர் மாவட்ட இசை கலைஞர்கள். "ஹம் தில் தே சுகே சனம்" படத்தில் வரும் பாடல் இவர்களுடைய இசையிலிருந்து தான் திருடப்பட்டது என வருத்தத்துடன் தெரிவித்தார்கள்(ஏனெனில் காலம் காலமாக அவ்விசையைப் பாதுகாத்து வரும் இவர்களுக்கு ஒரு கிரெடிட்டும் கிடைக்கவில்லையாம்). திரைப்படத்தில் வரும் பாடலைப் போலவே இப்பாடலும், துள்ளல் இசையோடே அமைந்திருந்தது, சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006


ஸ்பிக் மேகே நடத்திய இக்கலாச்சார நிகழ்ச்சியில் 'கல்பேலியா'(Kalbeliya) நடனம் ஆடும் பெண், சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006


'கல்பேலியா' பாரம்பரிய நடனம் - இன்னொரு படம். பளிச்சிடும் பரோட்டாவையும், செங்கண் குறைப்பையும்(Red Eye Reduction) கவனிக்காம விட்டதுக்கு அடிக்க வந்துடாதீங்கப்பா:), சித்தூர்கட், ஆகஸ்ட் 8,2006

Sunday, October 29, 2006

நாகா சாதுக்களும் ஒரு அறிவாளியும்

"சித்தூர்கட் செலவு" காட் ப்ராமிஸா...இத்தோட முழுசா செலவாவுதுங்க. இதுக்கு முந்தைய செலவுகள்

எனது சித்தூர்கட் செலவு
தொண்டையில் தண்ணி பாக்கலாம்

தீபாவளிக்குச் சென்னைக்குப் போயிட்டு அகமதாபாத் திரும்ப வந்து ரெண்டு நாளாவுது. எப்பவுமே லீவுக்கு வூட்டுக்குப் போயிட்டுத் திரும்பி வர்ற மொத சில நாளு கொஞ்சம் ஃபீலிங்ஸ் ஆஃப் பாகிஸ்தானா(எல்லாம் ஒரு சேஞ்சுக்குத் தான்...ஹி...ஹி...) இருக்கும். ஆனா கொஞ்ச நாள்லேயே, இங்க நமக்குன்னு வைக்கிற ஆப்புலயும், அடிக்கிற ரிவெட்லயும் இந்த ஃபீலிங்ஸ் எல்லாம் பஞ்சா பறந்துடும். புது பிராஜெக்ட் இப்போ தானே ஆரம்பிச்சிருக்கு...அதுனால ரெண்டு நாளா ஒரே மீட்டிங்ஸ் ஆஃப் குஜராத் தான். மீட்டிங்ஸையும் நாங்கல்லாம் ரொம்ப எஞ்சாய் மாடறோம்னு நெனச்சிக்கிட்டாங்களோ என்னவோ...பசங்க வேலை செய்யிறாங்களா இல்லையான்னு பாக்க வந்த எங்க கம்பெனியோட பெரிய தலை ஒருத்தரு(ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் மேல) நேத்து ஒரு மணி நேரம் ஒக்கார வச்சி ஒரே அட்வைஸ் மழை பொழிஞ்சிட்டாரு. நீங்கல்லாம் நெறய படிக்கணும், நெறைய தெரிஞ்சிக்கனும் அப்படின்னவரு திடீர்னு உங்கள்ல யாராச்சும் "தி கோல்" புஸ்தகம் படிச்சிருக்கீங்களான்னு கேட்டாரு. எல்லாரும் திரு திருன்னு முழிச்சோம். "I want, all my Client facing Consultants(அலைகடலென திரண்டு வரும் ஆப்புகளை வோல்சேலாக வாங்கிய பின்னும் வலிக்குதான்னு கேட்டா 'லைட்டா'ன்னு சொல்ற வீராதி வீர பரம்பரை) to go to Crossword, pick up a copy of 'The Goal' and start reading it. Its a very good book, you guys should know what has been written in it"அப்படின்னாரு. "சும்மா சொல்லிட்டு விட்டுட்டேன்னு நெனக்காதீங்க, அடுத்த வாரம் அதுலேருந்து கேள்வி கேப்பேன்"னு வேற பயமுறுத்திட்டு போயிருக்காரு. அத எழுதுனவரு பேரு கூட எதோ "தங்க எலி"யாம்(Goldrat). புக்கோட வெலை 350 ரூவா தானாம். நான் கேக்குறேன்...இல்ல தெரியாமத் தான் கேக்கறேன்...350 ரூவா காசு போட்டு புஸ்தகம் வாங்கி படிக்கிற வயசாய்யா இது? எதோ ப்ளாக்கைப் படிங்க, பின்னூட்டம் போடுங்கன்னு சொன்னா பெருந்தன்மையா பண்ணிட்டுப் போறோம்? அத விட்டுப் போட்டு கோலைப் படிங்க, கோலியைப் படிங்கன்னு என்னப் பேச்சு இது சின்னப்பில்லத் தனமா? கொஞ்சம் யோசிக்க வேணாம்? இருந்தாலும் இதெல்லாம் வயித்துப் பொழப்பு மேட்டரு...யாருன்னா அந்த பொஸ்தகத்தைப் படிச்சிருந்தா தங்கஎலி சொல்லிருக்குற கதையைக் கொஞ்சம் சொல்லுங்கய்யா...ஒங்களுக்குப் புண்ணியமா போவும்.


'முகத்தில் முகம் பாக்கலாம்'ங்கிற மாதிரி 'தொண்டையில் தண்ணி பாக்கலாம்'னு கிண்டலா போனப் பதிவுக்குப் பேரை வச்சிட்டாலும் ராணி பத்மினியோட வரலாறை எழுதுனதுனால ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு. மே மாசம் மொத மொதலா சித்தூர்கட் போனதுலேருந்து கோட்டைக்கு நாலு வாட்டி போயிருக்குறேங்க. அப்பவும் சில இடங்களை இன்னும் பாக்கலை(ஜெயின் தீர்த்தங்கரர்களின் கோயில்கள்). ஒவ்வொரு வாட்டியும் கோட்டையைப் பத்தி எதாச்சும் புதுசா ஒன்னு தெரிஞ்சிக்க முடிஞ்சுது. குறிப்பா ராணி பத்மினியைப் பத்தி ஒவ்வொரு தடவையும் எதாச்சும் ஒரு புது தகவல் கெடைக்கும். அதான் கெடச்சது எல்லாத்தையும் போன பதிவுல கொண்டாந்து கொட்டியாச்சு. கீழே இருக்குறது சித்தூர்கட் அரசு அருங்காட்சியகம். 1950கள்ல அரச பரம்பரையைச் சேர்ந்த யாரோ ஒருத்தரு இந்த மாளிகையைக் கட்டுனாராம்...ஆனா அதுல யாரும் வசிக்க ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அருங்காட்சியகம் ஆகிடுச்சாம். ஏழடி உயரம் உள்ள துப்பாக்கி, ஆளையே கூறு போடும் வல்லமை கொண்ட பல பயங்கரமான கத்திகள், கவசங்கள், கேடயங்கள், அலாவுதீன் கில்ஜி அழித்த சிலைகளின் மிச்சங்கள் ஆகியவை அங்கிருந்தன. சாஃப்ட்வேர் கம்பெனியெல்லாம் வர்றதுக்கு முன்னாடி ஆ ஊன்னா ஆன்சைட்டுக்குக் கத்தி தூக்கிட்டு கெளம்பிடுவாங்க போலிருக்கு.


ராணி பத்மினியின் மாளிகைக்கு அருகாமையில், ஒட்டக சவாரி செய்றதுக்கு வசதி இருக்கு. பாரம்பரிய ராஜஸ்தானி டிரெஸ் போட்டுக்கிட்டு ஒட்டகத்து மேல ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம். கீழே இருக்குற படத்துல இருப்பது ஒட்டகமும் நானும். இப்பவே சொல்லிட்டேன் லெஃப்ட் சைடுல இருக்குறது தான் ஒட்டகம்:). இந்த படம், கடைசி தரம் கோட்டைக்குப் போன போது ஃபிரெண்டு ஒருத்தன் எடுத்தது. படம் எடுத்துட்டு இருக்கும் போதே படம் எடுத்தவன் கூட நின்னுட்டிருந்த இன்னொருத்தன் "டேய் டேய் பின்னாடி திரும்பி பாருடா பாருடா"னு ஒரு பேய் கத்து கத்துனான். எனக்கா ஒரு பக்கம் பயம்... எப்படியோ பயப்படாத மாதிரி நடிச்சி படத்துக்குப் போஸ் குடுத்துட்டு வந்து படத்தைப் பாத்தா...ஐயோ சாமி! ஒட்டகத்துக்கு மம்புட்டி மம்புட்டியா பல்லு! நல்லா காலம்...நான் திரும்பி கிரும்பி பாக்கலை. அந்த ஒட்டகம் இந்தியன் படத்துல வர்ற சீலோ மாதிரி எங்கயாச்சும் கடிச்சி கிடிச்சி வச்சிருதுச்சுன்னா என்னாகியிருக்கும் என் நெலமை?



முதல் முறை மே மாசம் கோட்டைக்குப் போன போது, வெயிலுக்குப் பயந்துக்கிட்டு, சாயந்திரம் 6.30 மணிக்குக் கிளம்பி கீழே படத்துல இருக்குற கோயிலுக்கு மட்டும் போயிட்டு வந்தோம். இந்த கோயிலோட பேரு 'காலிகா மந்திர்'. இந்த கோயிலைக் கட்டிருக்குறதைப் பாத்தா நம்ம ஊரு பக்கத்து வேலைபாடு மாதிரி இருந்தது. பொதுவா வட இந்தியாவுல கோயில்களைப் பாத்தா கல் வேலைபாடு எல்லாம் அவ்வளவா இருக்காது. ஆனா இந்த கோயிலைப் பாத்ததும் தமிழ்நாட்டு கோயில்கள் தான் நியாபகம் வந்துச்சு. இந்த கோயில் உள்ள படம் எடுக்க அனுமதி இல்லை. அதனால கோயில் வெளியே இருந்து எடுத்த ஒரு படம்.


இந்த கோயிலை நிர்வாகம் பண்ணறவங்க நாகா சாதுக்கள்னு எங்க கைடு சொன்னாரு. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம். எதோ நாகா சாதுக்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்சி கரை கண்டுட்டா மாதிரி "நாகா சாதுன்னு சொல்லறீங்க? இங்க இருக்குறவங்க டிரெஸ் எல்லாம் போட்டுருக்காங்க?"னு கேட்டுத் தொலைச்சிட்டேன். எங்க கைடு என்ன படுகேவலமா ஒரு லுக் விட்டுட்டு "அரே பாய்! ஹமாரி மா பெஹ்னோன் கோ இதர் நஹி ஆனா ஹை கியா?(நம்ம வீட்டு பெண்கள்(அம்மா, தங்கச்சி) அவுங்கல்லாம் வர்ற எடத்துல எப்படி டிரெஸ் இல்லாம இருப்பாங்க)ன்னு கேட்டுட்டாரு. இதை கேட்டுட்டு கூட இருந்தவனுங்க எல்லாம் சிரிச்சிட்டானுங்க. அவனுங்க சிரிச்சதும் எனக்கு ஒரே வெக்க வெக்கமாப் போச்சு. இதை எழுதும் போது, எங்க கூட வந்த தோஸ்த் ஒருத்தன் இந்த மாதிரி கைடு கிட்ட நாகா சாதுவைப் பத்தி கேள்வி கேட்டான், அத கேட்டு நாங்கல்லாம் வுழுந்து வுழுந்து சிரிச்சோம்னு எழுதலாமான்னு கூட ஒரு நிமிஷம் நெனச்சேன். நாம இம்புட்டு யோசிச்சி, இல்லாத மூளையெல்லாம் செலவழிச்சி ஒரு புத்திசாலித்தனமானக் கேள்வி கேட்டுருக்கோம், நாம கேட்ட கேள்விக்காக யாரு பெத்த புள்ளையோ...வேற ஒருத்தன் பேரை ஏன் ரிப்பேர் ஆக்கனும்னு நெனச்சி அந்த ஐடியாவைக் கைவிட்டுட்டேன்.


கோயில் வாசல்லயும் கோட்டை மேல பல எடங்கள்லயும் இந்த நீளமான வால் உள்ள கறுப்பு முகம் கொண்ட குரங்குகளைப் பெரும் எண்ணிக்கையில பாக்கலாம். இந்தூர்ல இருக்கும் போது எங்க ஆபிஸ்ல புகுந்ததுன்னு சொன்னேனே...அதுவும் இதே மாதிரியான குரங்கு தான்...ஆனா கொஞ்சம் பெரிய சைஸு.



ராணா கும்பாங்கிற மகாராஜா(மீரா பாயோட வீட்டுக்காரரு) குஜராத் சுல்தான் மேல படை எடுத்து ஜெயிச்ச வெற்றியைக் கொண்டாடுறதுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச் சின்னம், கீழே இருக்குற "விஜய் ஸ்தம்ப்". இது அக்காலத்துல ஒரு காவல் கோபுரமாவும் பயன் பட்டுருக்கு. ஏழு மாடி கொண்ட இந்த 53மீ உயரமுள்ள கோபுரத்தின் உச்சிக்கு படிக்கட்டுகளின் மூலமாகச் செல்லலாம். இக்கோபுரத்தின் ஏழாவது தளத்திலிருந்து பாத்தால் சித்தூர்கட் கோட்டையின் நால் புறங்களும் வெகு அழகாகத் தெரியும்.



விஜய் ஸ்தம்ப் எதுக்கு கட்டுனாங்கன்னு கீழே படிச்சிக்கோங்க.



11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட "சம்வித்தேஷ்வரா கோயில்" சித்தூர்கட் கோட்டையில் காண வேண்டிய ஒரு முக்கியமான பாயிண்ட்(கைடு பாஷையில). முதல் இரு முறைகள் கோட்டைக்கு கைடு இல்லாமல் சென்றதால் போது சம்வித்தேஷ்வரா கோயில், மீரா கோயில் போன்ற முக்கியமான இடங்களைக் காணாமல் வந்து விட்டோம், மூன்றாம் முறை கைடுடன் சென்ற போது அவ்விடங்களின் வரலாற்றுச் சிறப்பைத் தெரிந்து கொண்டதோடு இவ்விடங்களைக் காண்பதும் நன்றாக இருந்தது. ஆனா நாலாவது முறை புதிதாக வந்த நண்பருடன் சென்ற போது அதான் நீ இருக்கியே அப்புறம் எதுக்கு கைடுன்னு சொல்லி, கைடுக்குக் கொடுக்க வேண்டிய அந்த காசை மிச்சம் புடிச்சிட்டாங்க :(



சம்வித்தேஷ்வரா கோயிலின் வாசலில் உள்ள ஒரு கல்வெட்டு.



பிரம்மா, சிவன், விஷ்ணு - சம்வித்தேஷ்வரா கோவிலின் உள்ளே



கோயிலின் சுவற்றில் யானை, குதிரை, ஒட்டகம் மூன்றுடனும் போருக்குச் செல்லும் வீரர்கள். இது எதோ "குட்லக் சைன்" அப்படின்னு கைடு சொன்னாரு. க்ளிக் பண்ணிப் பாத்தீங்கன்னா பெருசாத் தெரியும்.



மாலையில், இருட்டும் நேரத்தில் எடுத்த படம் இது. இந்த குளத்தின் பெயர் "கோமுக்"(Gaumukh). கோ என்றால் பசு, முக் என்றால் முகம். இதை ஒரு புனித தீர்த்தமாகக் கருதுகிறார்கள். நாங்கள் இருந்ததே மலை உச்சி தான். மலை உச்சியின் மீது அவ்வளவு வேகமாகக் கொட்டுகிற நீர் எங்கிருந்து வருகிறது என்று யாருக்கும் தெரியாதாம்.



கும்மிருட்டில் எதை எடுக்கிறோம் என்றே தெரியாமல், கேமரா ஃப்ளாஷினை மட்டுமே நம்பி எடுத்த ஒரு படம். கோமுக் தீர்த்தத்தில் மிக வேகமாகத் தண்ணீர் கொட்டுகிறது. மழை காலத்தில் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் தீர்த்தத்தின் அருகில் இருந்த சிவலிங்கம் நீரில் மூழ்கி விட்டது.

கோமுக் என்ற பெயரைக் கேட்டதும் பள்ளியில் படித்த ஆபுத்திரன்(மணிமேகலையின் மகன்) கதை நினைவுக்கு வந்தது. சாவகம்(அக்காலத்து ஜாவா) செல்லும் வழியில் மணிபல்லவம் என்ற தீவில் தவறுதலாக இறங்கி விடும் ஆபுத்திரன், "கோமுகி" என்னும் ஆற்றில் அமுதசுரபி பாத்திரத்தை எறிந்து விட்டு உண்ணா நோன்பு இருந்து உயிர் துறந்ததாகப் படித்த நினைவு.



கோமுக் தீர்த்தத்தில் தான் ராணியர் நீராடுவார்களாம். நீராடிவிட்டு மேலே சொன்ன சிவலிங்கத்தை வழிபடுவார்களாம். அதை வழிபட்டு முடித்ததும் சதி தேவியின் கோவிலில் பூஜிப்பார்களாம். கீழே சதி தேவியின் கோயிலுக்குள்ளே தற்போது இருக்கும் "ராணி பத்மினியின் கற்பனை உருவம்"(Imaginary Statue). "என்னுடைய இந்த அழகினால் தானே என் நாடு அழிந்தது, என்னுடைய மக்கள் மாண்டார்கள்" என ராணி பத்மினி தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து வருந்துவது போல அமைக்கப் பட்டுள்ளதாம் இச்சிலை.



சித்தூர்கட்டின் முழு வரலாற்றையும் இப்பலகையில் எழுதியிருக்கிறார்கள். படித்துப் பாருங்கள்.




ஜோதிகா புடவை, நயந்தாரா புடவைன்னு நம்ம ஊருல புடவைளுக்குப் பெயர் வைப்பது போல இங்கிருக்கும் கைவினைப் பொருட்கள் கடையில் "ராணி பத்மினி புடவை" என்ற ஒன்றை விற்கிறார்கள். அப்புடவையில் லேசாகத் தண்ணியைத் தெளித்து முகர்ந்து பார்த்தால் நறுமணம் வீசும் என்கிறார்கள். அப்போதைக்கு அவர்கள் செய்து காட்டும் போது நறுமணம் வீசத் தான் செய்கிறது. இது உண்மையாகவே நீடிக்குமா இல்லை ஏமாற்று வேலையா எனத் தெரியவில்லை. ஆனால் கிடைக்கும் கலர்கள் என்னமோ அடிக்கும் கலர்களான ரத்த சிவப்பு, கரும்பச்சை ஆகியவை. அதோடு ஹிந்துஸ்தான் ஜின்க் நிறுவனம் வெகு அருகில் இருப்பதால் ஜிங்க்கினால்(துத்தநாகம்) ஆன வளையல்கள், துத்தநாகத் தூள் தூவி புனையப்பட்ட சேலைகள் ஆகியவற்றை இங்கு வாங்கிக் கொள்ளலாம். ஆண்களுக்குன்னு குறிப்பா வாங்குற மாதிரி ஒன்னும் இந்த கடைகளில் இல்ல...அதுனால எதுவும் சொல்லலை. ஒடனே என்கூட சண்டைக்கு வந்துடாதீங்கப்பா. மொத்தத்தில்...சித்தூர்கட்டுக்குப் பணி நிமித்தம் சென்றாலும், அங்கு சென்று கண்டவை, கேட்டவை யாவும் மிக மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது. அதைத் தங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் கூடுதல் மகிழ்ச்சியே.

-------------------சுபம்------------------------