Wednesday, August 12, 2009

ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது?

டிவியில எதோ ஒரு நிகழ்ச்சிக்கு இடையில விளம்பரம் ஒன்னு வந்தது. ஹேப்பிடெண்ட் Happydent சூயிங் கம்முக்கான விளம்பரம் அது. ஹேப்பிடெண்ட் சூயிங் கம் மென்னுட்டு யானையோட தந்தமெல்லாம் பளிச்சுன்னு வெளிச்சம் அடிக்கிற மாதிரி வரும்.

"அம்மா! பேசாம நம்மளும் இந்த மாதிரி ஒரு யானை வளர்க்கலாமா?"

"ஏன்?" - இது மை த மம்மி.

"நம்ம வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் இருட்டா இருக்குல்ல? இந்த மாதிரி யானை இருந்துச்சுன்னா வழியெல்லாம் தந்தத்தால வெளிச்சம் கொடுத்துக்கிட்டே வருமில்ல கார் ஹெட்லைட் மாதிரி?"

"யானைக்கு சாப்பாடு?"

"அதான் அர்ச்சனாக்கு(என்னோட பொண்ணு) தெனம் மத்தியானம் மம்மம் ஊட்டறீங்கல்ல? அதை தான் அவ முழுசா சாப்பிடாம மிச்சம் வெச்சிடறால்ல? அதை தெனமும் ஒரு வேளை அந்த யானைக்குப் போட்டா அதை சாப்பிட்டுக்கிட்டு தானா ஒரு ஓரமா நம்ம வீட்டுல வளர்ந்துக்கிட்டு போவுது"

அந்த நேரம் பாத்து சீன்ல எண்ட்ரி ஆன எங்கப்பா சொன்னது "நாங்க உன்னை அடிக்கிறோமோ இல்லையோ, கண்டிப்பா இந்த மாதிரி ஐடியா கொடுக்கிறதுக்காக யானை வந்து உன்னை பொடறியிலேயே அடிக்கும்"

ஒரு வேளை நாம உண்மையிலேயே 'born ahead of time'ஓ? யாருமே நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே?

****************************************************

கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸோட மைசூர்பா எல்லாரும் வாங்கி சாப்பிடுங்க. உடம்புக்கு நல்லதோ இல்லையோ...மூளைக்கு ரொம்ப நல்லது. சமீபத்துல எங்க ஆஃபிசு நண்பர் ஒருவர் தன் சொந்த ஊரான கோவைக்குப் போயிட்டு வரும் போது கிருஷ்ணா ஸ்வீட்ஸ்லேருந்து மைசூர்பா வாங்கிட்டு வந்து எல்லாருக்கும் தந்தாரு.

நான் அதை அதிகமா கூட சாப்பிடலைங்க. கொஞ்சமா கிள்ளி தான் வாயில போட்டேன். திடீர்னு எனக்கு ஒன்னு தோனுச்சு. பஞ்சதந்திரம் படத்துல நாயர் கேரக்டர்ல வர்ற ஜெயராம் சொல்லுவார்ல - "என் பையனுக்கு ஹார்ட்ல தொளா" அப்படின்னு. அந்த மாதிரி ஹார்ட்ல துளை இருக்கறவங்க, தினமும் நெய், வெண்ணை மற்றும் இதர கொழுப்பு சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளையோ இல்ல இனிப்புகளையோ சாப்பிட்டா என்னன்னு?

ஏன்னா அதிகக் கொழுப்புச் சத்தும் கொலஸ்டராலும் உள்ள உணவுகளைச் சாப்பிட்டா இதயத்துல அடைப்பு ஏற்படும்ல? ஏற்கனவே இதயத்துல ஓட்டை இருந்துச்சுன்னா இது மாதிரி சாப்பிடறதுனால அது அந்த ஓட்டையைப் போய் அடைச்சிடும்ல?

ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, பை பாஸ் சர்ஜரி இதெல்லாம் பண்ணறதுக்குப் பதிலா மைசூர்பா தெரபி பண்ணலாம் தானே? இந்த கண்டுபிடிப்புக்கு காசு பணம் எல்லாம் வேணாம்ங்க. ஏதோ ஒரு நோபல் பரிசோ, ஒரு பாரத் ரத்னாவோ இல்லை ஒரு ஆஸ்கர் அவார்டோ பாத்து போட்டு குடுத்தா நல்லாருக்கும்.

****************************************************

நேத்து காலையில ஆஃபிசு போறதுக்கு பஸ்சுக்காகத் திருவான்மியூர் டெர்மினஸ் கிட்ட நின்னுக்கிட்டிருந்தேன். ஃபுல் ஷர்ட், ஃபுல் பேண்ட் போட்டு டக் இன் பண்ணிக்கிட்டு, கால்ல பாலிஷ் செஞ்ச ஷூ போட்டுக்கிட்டு காதுல இயர்ஃபோன் மாட்டிக்கிட்டு மொபைல் ஃபோன்ல பாட்டு கேட்டுக்கிட்டு நின்னுக்கிட்டிருந்தேன். போதாக்குறைக்கு முதுகுல லேப்டாப் பேக் வேற மாட்டிருந்தேன். வெள்ளை வேட்டியை மடிச்சி கட்டிக்கிட்டு ஒரு பச்சை கலர் துண்டைக் கழுத்துல போட்டுக்கிட்டு, அவ்வை ஷண்முகி படத்துல ஷண்முகி மாமி சொல்ற மாதிரி காதெல்லாம் குசுகுசுன்னு வெள்ளை முடியோட ஒரு பெரியவர் என்கிட்ட வந்தாரு.

பஸ் டெர்மினஸ் பக்கம் கையைக் காட்டி "உள்ள பஸ் இருக்குங்களா தம்பி"னு கேட்டார்.

பஸ் டெர்மினஸுக்குள்ள பஸ் இல்லாம எப்படி இருக்கும். இவரு எந்த நம்பர் பஸ்ஸைப் பத்தி கேட்கறாருன்னு நெனச்சிக்கிட்டே என் காதுல மாட்டிருந்த இயர் ஃபோனைக் கழட்டிட்டு கொஞ்சம் குனிஞ்சு கேட்டப்போ தான் அவர் கேட்டது தெளிவா காதுல விழுந்தது "உள்ளுக்குள்ள கக்கூஸ் இருக்குங்களா தம்பி"

"உள்ளே போய் கேட்டு பாருங்க" அப்படின்னேன். அதுக்கப்புறம் பஸ் வந்தது, நான் அதுல ஏறி ஆஃபிசு போயிட்டேன்.

ஆஃபிஸ் முடிஞ்சு நண்பர் ஒருத்தர் தன்னோட கார்ல அடையாறுல டிராப் பண்ணார். கார்ல CDல எதோ பாட்டு ஓடிட்டிருந்தது. அது புடிக்காம எஃப் எம் ரேடியோ வச்சாரு. சூரியன் எஃப் எம்ல புதுசா சினிமா நகைச்சுவை காட்சிகளின் ஒலி வடிவத்தை ஒலிபரப்பறாங்க போல. சொன்னா நம்ப மாட்டீங்க. அவரு ரேடியோ வச்ச நேரம் "என்ன பாத்து ஏண்டா அந்த கேள்வியைக் கேட்டே? இத்தனை பேரு இருக்காங்கல்ல அவங்களை எல்லாம் கேட்டிருக்கலாம்ல? அது ஏண்டா என்னை பாத்து கேட்டே? ஒரு வித்வானைப் பாத்து கேக்கற கேள்வியாய்யா இது"ன்னு செந்திலைக் கவுண்டர் திட்டிக்கிட்டிருந்தாரு. அதை கேட்டுட்டு அப்படியே எனக்கு புல்லரிச்சு போச்சு.

****************************************************

தேசதுரோக கேசுங்கிற சந்தேகத்துல தில்லி போலீஸ் என்னை விசாரிச்சு இன்னையோட சரியா எட்டு வருஷம் முடியுதுங்க. "தேச துரோக கேஸ் அளவுக்கெல்லாம் நான் வர்த் இல்லைய்யா"ன்னு எவ்வளவோ சொல்லியும் நம்ப மறுத்துட்டாங்க. இப்போ பாருங்க அதை பத்தியெல்லாம் பதிவெழுதி பெருமை பட்டுக்க வேண்டியிருக்கு?

****************************************************

என் தம்பி(எங்க சித்தி பையன்) அவனுக்கும் எனக்கும் 18 வய்சு வித்தியாசம்னு ஏற்கனவே சொல்லிருக்கேன். அவன் ஆரம்பத்துலேருந்து வட இந்தியாவுலேயே செண்ட்ரல் ஸ்கூல்ல படிச்சதுனால அவனுக்குத் தமிழ் அதிகமா தெரியாது. வீட்டுல நல்லா தமிழ் பேசுவான்னாலும் சில செந்தமிழ் வார்த்தைகள் எல்லாம் சொன்னா அவனுக்குப் புரியாது. சில வருஷங்கள் முன்னாடி வரைக்கும் அவனை வலுக்கட்டாயமா உக்கார வச்சி - "டேய்! இப்ப நீயே இருக்குறே...நாளைக்கே நீ படிச்சி வளர்ந்து பெரியவனாகி நம்ம நாட்டோட பிரதம மந்திரியாவோ, முதல் குடிமகனாவோ ஆயிட்டேன்னு வை, அப்போ நம்மளோட சமூகத்துல மலிந்து கிடக்கிற கொடுமைகளையும் மூட பழக்க வழக்கங்களையும் போக்குறதுக்காகவும், மத நல்லிணக்கம் ஏற்படறதுக்காகவும் நீ என்ன பண்ண போறே"ன்னு கேப்பேன். அவனும் "மத நல்லிணக்கம்னா என்னண்ணா?" அப்படின்னுவான். நானும் எதோ எனக்கு தெரிஞ்ச அளவுக்கு லைட்டா விளக்கம் கொடுப்பேன். அவனும் யோசிச்சு பாத்துட்டு "தெரியலியேண்ணா" அப்படின்னுவான். "ஒரு இந்திய நாட்டு பிரஜையா இருந்துக்கிட்டு உன்னை வளர்த்து ஆளாக்குன சமுதாயத்துக்காக ஒன்னும் செய்யாம தெரியலியேன்னு பதில் சொல்றியே. தெரியலியேங்கிறதெல்லாம் ஒரு பதிலாடா"ன்னுவேன்.

நான் இந்த மாதிரி அவனை பாக்கறப்பெல்லாம் கேக்க ஆரம்பிச்சதை பாத்து கொஞ்ச நாள்ல அவனும் உஷாராயிட்டான். நான் "இப்ப நீயே இருக்கறே" அப்படின்னு ஆரம்பிச்சாலே "அண்ணா அம்மா கூப்பிடறாங்க, தண்ணி தாகம் எடுக்குது" அப்படின்னுட்டு ஓடிடுவான். ஓட முடியாத படி இக்கட்டான சூழ்நிலையில மாட்டிக்கிட்டான்னா "ஏழைகளுக்கு உதவி செய்வேன்" அப்படின்னுவான். "என்ன உதவிடா"ன்னு நானும் குடைஞ்சா "வயசான பாட்டிகளுக்கெல்லாம் இலவசமா கண்ணாடி வாங்கி தருவேன், ஸ்கூல்ல படிக்கிற பசங்களுக்கெல்லாம் இலவசமா புக்ஸ் வாங்கி தருவேன்" அப்படின்னு எதாச்சும் சொல்லிட்டு ஓடிடுவான்.

சமீபத்துல ஒரு நாள் பஸ்சுல ஜன்னலோர சீட்டுல அவன் உக்காந்துருந்தான், அவன் பக்கத்துல நான். தப்பிச்சு ஓட முடியாத படி என் கஸ்டடிக்குள்ள இருந்தான். மேலே கேட்ட மாதிரியே ஒரு கேள்வி கேட்டேன். "அண்ணா! ஏற்கனவே மெட்ராஸ்ல வெயில் ரொம்ப அதிகமா இருக்குது. நீங்க வேற வறுத்தெடுக்காதீங்க" அப்படின்னான்.

இந்த காலத்து பசங்க எவ்வளவு சீக்கிரம் பெரியவங்களாயிடுறாங்க? இல்லீங்களா? :)

****************************************************

ஆறு வருஷ கொடுமைக்கு கடைசியா ஒரு நல்ல விடிவுகாலம் கெடைக்கப் போவுதுன்னு நெனக்கிறேன். கன்னியாஸ்திரி வேடத்துல இருக்கற அபி ஆதியைப் பாத்து "டேய்! இது வரைக்கும் நான் உன் கிட்ட சண்டை கூட போட்டதில்லைடா. நான் செஞ்சதெல்லாம் தற்காப்பு தான். இனி நடக்கப் போறது தான் போர்" அப்படீங்கறாங்க. உடனே ஆதியும் "இறுதிக்கட்ட போரா"ன்னு கேக்கறாரு. அபியும் "ஆமாம்டா இறுதிக் கட்ட போர்"னு கன்ஃபர்ம் பண்ணியிருக்காங்க. ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடியே கோலங்கள் இயக்குனர் திருச்செல்வத்துக்கு சினிமா இயக்கற வாய்ப்பு கெடைக்கிருக்குன்னு குங்குமம் பத்திரிகைல போட்டுருந்துச்சு. அதனால சீக்கிரமே கோலங்கள் சீரியலை முடிக்கப் போறதாவும் சொல்லிருந்தாங்க. இதை உண்மைன்னு நம்பி கோலங்களால் பாதிக்கப்பட்ட என்னை போன்ற இன்னொரு அலுவலக நண்பர் கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னேன். அவரும் சந்தோஷமா இந்த விஷயத்தைப் போய் வீட்டுல சொல்லி வாங்கி கட்டிக்கிட்டாராம். இப்போ அபியும் ஆதியுமே கன்ஃபர்ம் பண்ணிட்டாங்க...இறுதிக் கட்ட போர்னு. எப்படியும் இன்னும் ஒரு வருஷத்துல இறுதிக் கட்ட போர் முடிஞ்சிடாதுங்க?

****************************************************