Showing posts with label News readers. Show all posts
Showing posts with label News readers. Show all posts

Sunday, March 08, 2009

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்

"ராமகிருஷ்ணன்"

"வரது குட்டி"

நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".

நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"

7:59:56

7:59:57

7:59:58

7:59:59

8:00:00

ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா
"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா சீரியல்னும், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னும், 'லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ்'னும் இந்தியாவில் தொலைக்காட்சி பார்த்தல் என்பது சிக்கலாய் இல்லாமல் இருந்த காலக்கட்டத்து நினைவுகள் தான் நான் மேலே சொன்னது. போட்டியில்லாத, உலகமயமாக்கல் இல்லாத, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏதுமில்லா அக்காலக் கட்டத்தில் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான 'தூர்தர்ஷன்' கோலோச்சிக் கொண்டிருந்தது. நம்முடைய வளர்கின்ற பருவத்தில் நாம் காணும், தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்பது பல காலம் நம் நினைவில் இருக்கும். அதை பின்னொரு நாளில் நினைவு மீட்டும் பொழுது அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவங்களை நம் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு தூர்தர்ஷனின் ஆர்ப்பாட்டமில்லாத, சிம்பிளான செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிய நினைவு வந்தது. இப்போ தான் எதுவா இருந்தாலும் இணையத்துல தேடிப் பார்க்கலாமே...அதனால தூர்தர்ஷன்னு தட்டச்சு செய்து ஆங்கிலத்துலயும், தமிழ்லயும் தேடிப் பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க...வளர்ற வயசுல வெறுத்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு அப்படியொரு ரசிகர் வட்டம் இருக்கறது தெரிஞ்சது. அந்த ரசிகர்களில் பெரும்பாலானவங்க தூர்தர்ஷனின் பொற்காலத்தின் போது பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளா இருந்தவங்க. அவங்க எழுதியிருக்கற பதிவுகளைப் படிச்சா அந்த நினைவுகள் இப்போது நினைவுகளாக மட்டும் இருக்கிறதே என்று கண்டிப்பாக ஏக்கப் பெருமூச்சும் தோன்றும். முதல் பத்தியில இருக்கற admiration, adulation எல்லாம் இப்போ தான். அப்போல்லாம் நான் கூட சே...என்னடா இது சொத்தை டிவி சேனல்னு வெறுத்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பாத்தா அந்த ஒத்தை சொத்தை டிவி சேனல் மூலமா நான் கத்துக்கிட்டதும் தெரிஞ்சிக்கிட்டதும் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு புரியுது.

தூர்தர்ஷனின் தமிழ் செய்தி வாசிப்பாளர்களை நினைவு கூர்ந்தால் அவர்களில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் திரு.H.ராமகிருஷ்ணன். 1985ல எங்க வீட்டுல முதன் முதல்ல டிவி வாங்குன காலத்துலேருந்து '90களின் இறுதி வரை இவரை நான் செய்தி வாசிப்பாளராகப் பார்த்த நியாபகம். சில சமயம் வானொலியிலும்(ஆகாசவாணி) இவர் செய்தி வாசிப்பதை கேட்டிருக்கிறேன்.

1990களில் வெளிவந்த 'வானமே எல்லை' படம் வெளிவரும் வரை இவர் போலியோவினால் ஊனமுற்றவர் என்பது எனக்கு தெரியாது. ஏன்னு தெரியலை...என்னால அதை நம்பறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த படத்துக்காக எதாச்சும் ட்ரிக் செய்து அந்த மாதிரி எடுத்துருப்பாங்களோன்னு ரொம்ப நாள் நெனச்சிட்டிருந்தேன். அவரைப் பத்தி இணையத்துல தேடும் போது அவரு தன்னோட சொந்த வலைதளத்தையும் வச்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவருன்னும் பல இசை கச்சேரிகள்ல பாடியிருக்காருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். கர்நாடக இசை வித்வான்களை எல்லாம் நோண்டி நொங்கெடுக்கிற இசை விமர்சகர் சுப்புடு அவருக்கு பக்க வாத்தியமா கீபோர்டு வாசிக்கற படத்தையும் அவரோட வலைதளத்தில் பார்க்கலாம்.

செய்தி வாசிப்பாளர்கள்ல ராமகிருஷ்ணன் என் தம்பிக்கு ஃபேவரிட்னா என்னோட ஃபேவரிட் திரு.வரதராஜன். அப்போல்லாம் அவரை 'வரதுகுட்டி'னு தான் சொல்லுவேன். ஏன்னு சரியா நியாபகம் இல்லை. 1980களில் சிவாஜி கணேசன் நடிச்சி வெளிவந்த "பரிட்சைக்கு நேரமாச்சு"ங்கிற படம். அதுல சிவாஜியோட பையனா ஒரு கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரமா வரதராஜனே நடிச்சிருக்கிறாரா இல்லை ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சிருக்கிறாரான்னு நியாபகம் இல்லை.
ஆனா அந்த கேரக்டரோட பேரு "வரதுகுட்டி"னு நியாபகம். அதுலேருந்து வரதராஜனை "வரதுகுட்டி"ன்னு கூப்பிடறது பழக்கமாயிடுச்சு. இரவு எட்டு மணி செய்திகள்ல "வரதுகுட்டி" வருவாருன்னு தான் நான் அதிகமா பெட் வச்சிருக்கேன் :) இவர் ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி வந்த சன் டிவி தொலைக்காட்சித் தொடர் ஒன்னில் அப்பா கேரக்டரிலும் நடித்தார். அவரோட படமும் இன்னிக்குக் கெடைச்சிடுச்சு :) அதையும் வலையேத்தியாச்சு. இப்போது இவர் ஒரு பிரபலமான நாடக நடிகராவும் இருக்கிறார். இவருக்கு http://tvvvaradharajen.com எனும் சொந்தமான வலைத்தளம் ஒன்று உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்ல ஒரு ஸ்டார் அந்தஸ்து இருக்குன்னா...அது கண்டிப்பா இவருக்குத் தான். அவர் ஷோபனா ரவி. இவர் செய்தி வாசிக்கும் போது ரொம்ப தன்னம்பிக்கையோட வாசிக்கிறா மாதிரி தெரியும். பொதுவாக இவர் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். செய்திகளை முடிச்சிட்டு வணக்கம் சொல்லும் போது கூட பெரும்பாலும் புன்னகைக்க மாட்டார். ஆனா பெண்களுக்கு இவர் கட்டும் புடவைகளின் மீது ஒரு தனி கண்ணு இருக்கும். "நேத்து ஷோபனா ரவி கட்டியிருந்த புடவையின் கலர்..." அப்படின்னு மேல் வீட்டு ஆண்ட்டி ஆரம்பிச்சாங்கன்னா அந்த பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடும்.

இவர் ஒரு புடவையை ஒரு முறைக்கு மேல் கட்டுவதில்லை அப்படின்னும் இவர் வீட்டில் புடவைகளை அடுக்கி வைக்க ஒரு மிகப் பெரிய பீரோ இருக்கு அப்படின்னு அவங்க வீட்டு சுத்து வட்டாரத்துல பேசிக்குவாங்கன்னு ஒரு இணைய நண்பர் எழுதிருக்கறதை படிச்சேன். இவரும் ராமகிருஷ்ணனும் மட்டும் தான் தூர்தர்ஷனின் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் செய்தி வாசித்ததாகத் தெரிந்து கொண்டேன். இவருடைய மகள் ராஜ் டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்னு நெனைக்கிறேன்.

ஷோபனா ரவிக்கு அடுத்தபடியா பெண்கள்ல பிரபலமா இருந்தவங்க சந்தியா ராஜகோபாலும், ஃபாத்திமா பாபுவும். இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கும் தனியார் சேனல்களில் செய்தி வாசிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க. மத்த செய்தி வாசிப்பாளர்கள்னு பாத்தா பாலசுப்பிரமணியன், செந்தமிழ் அரசு(நன்றி : நிலாக்காலம்/ஸ்ரீ), தமிழன்பன், இனியன் சம்பத், ஸ்ரீதர், ஹெலன் ப்ரமிளா, நிஜந்தன், நசீமா சிக்கந்தர், கண்ணாத்தாள், நிர்மலா சுரேஷ் இவங்க பேரெல்லாம் ஞாபகம் இருக்கு. இதுல தமிழன்பன் ரொம்ப திருத்தமாகவும் அழுத்தமாகவும் வாசிப்பார். எதோ ஒரு காரணத்துக்காக "இந்திய தேசிய கொடியை கோமணமாக அணிவேன்"ன்னு இவர் சொன்னதால இவரைத் தூக்கிட்டாங்கன்னு அப்பல்லாம் சொல்லுவாங்க.



நிஜந்தன் இன்னும் ராஜ் டிவியில செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். ஸ்ரீதரின் குரலை அவர் தொலைக்காட்சியிலிருந்து காணாத போன பின்பும் வானொலியில் கேட்டிருக்கிறேன். இணையத்தில் ஒருவர், ஸ்ரீதர் செய்தி வாசித்து முடித்து விட்ட பின் புன்னகைப்பதை பார்ப்பதற்காகவே அவருடைய அம்மா அடுப்படி வேலையில் ஈடுபட்டிருந்தாலும் வந்து தொலைக்காட்சியைப் பார்ப்பார் என்று எழுதியிருக்கிறார். இதை தவிர 'கல்யாண அகதிகள்' அப்படீங்கற கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படத்துலயும் அவர் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராவே நடிச்சிருப்பாரு. அவர் பேரு சௌந்தர்னு நெனக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் அவரை தொலைக்காட்சியில் அதிகமாப் பாக்க முடியலை.

சென்னை தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கறா மாதிரி தில்லி தூர்தர்ஷன்ல ஆங்கில செய்தி வாசிப்பாளர்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருக்கு. கீழே சில ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள் படங்களைத் தேடிப் பிடிச்சிப் போட்டிருக்கேன். யாராச்சும் உங்க நியாபகத்துக்கு வர்றாங்களான்னு பாருங்க.

தேஜேஷ்வர் சிங்(Tejeshwar Singh) - இவர் போன வருஷம் காலமாயிட்டார். ஒரு ஆழமான குரலுக்குச் சொந்தக்காரர். "Sage Publications" எடிட்டராகவும் இருந்திருக்கிறார்.

சுனித் டண்டன்(Sunit Tandon) - இவருக்கும் இணையத்தில் ஏகப்பட்ட விசிறிகள் இருக்காங்க.

ரினி கன்னா(Rini Khanna) - இவங்க Facebookலயும் இருக்காங்க பாருங்க.

உஷா அல்புகெர்க்(Usha Albuquerque) - ரொம்ப சாந்தமான முகம் இவருக்கு. மத்தவங்க அளவுக்கு இவர் அவ்வளவு பிரபலம் இல்லைன்னாலும், இவர் முகமும் பெயரும் எனக்கு இன்னும் நல்லா நினைவில் இருக்கு.

நிர்மல் ஆண்ட்ரூஸ்(Nirmal Andrews) - இவரும் அவ்வளவு பிரபலமானவரு கிடையாது. ஆனா இவரோட பேரை வச்சித் தேடும் போது இணையத்துல இவரோட படம் கெடைச்சது. இப்போ ஐ.நா. சம்பந்தப்பட்ட ஒரு பணியில் வெளிநாட்டில் இருக்கிறார்.

ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள்ல பிரபலமானவங்கன்னு பாத்தீங்கன்னா சுகன்யா பாலகிருஷ்ணன், கோமல் ஜி.பி.சிங், கீதாஞ்சலி ஐயர், மீனு, நீத்தி ரவீந்திரன் (நன்றி: திரு.மாலன்), ரினி கன்னா(திருமணத்துக்கு முன் ரினி சைமன்), சங்கீதா பேடி(திருமணத்துக்கு முன் சங்கீதா வர்மா). இதுல சுகன்யா பாலகிருஷ்ணன் டெல்லியில் செட்டில் ஆகிவிட்ட தமிழர். நான் தில்லியில் இருந்த போது "The Asian Age" என்னும் பத்திரிகையில் தில்லி தமிழர்களைப் பற்றிய ஒரு ரிப்போர்ட் வந்தது. அதில் சுகன்யாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக தில்லியில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. கல்கட்டா தூர்தர்ஷனில் என்.விஸ்வநாதன் என்பவர் பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் என்று இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார். அநேகமாக இவர் "மூன்று முடிச்சு" படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்த நடிகர் கல்கட்டா விஸ்வநாதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவரை தூர்தர்ஷனில் கல்லூரி மாணவர்களுக்காக ஒளிபரப்பாகும் யூ.ஜி.சி(UGC) நிகழ்ச்சியில் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். அத்துடன் திரைப்படங்களிலேயே இவர் அருமையாக ஆங்கிலம் பேசுவார்.

'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் P.C.ராமகிருஷ்ணா(நன்றி : திரு.மாலன்)
மால்குடி சுபா 'வால்பாறை வட்டப்பாறை' என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார் தெரியுமா? அந்த ஆல்பத்தின் வீடியோவில் நடித்த பெண் P.C.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். 'மே மாதம்' திரைப்படம் வெளிவந்த காலத்தில் இவரை அடிக்கடி சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பார்த்த ஞாபகம். தமிழ் நியூஸ் பாத்தாச்சு, ஆங்கில நியூஸ் பாத்தாச்சு. காது கேளாதோருக்கான நியூஸ் பாத்துருக்கீங்களா? நானும் என் தம்பியும் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான செய்தி அறிக்கையை தவறாமல் பார்ப்போம். அந்த செய்தி அறிக்கையின் வாசிப்பாளர்கள்ல ஷஷி பால்(Shashi Pal), சங்கீதா இவங்க ரெண்டு பேரு பேரும் நியாபகம் இருக்கு. அப்போல்லாம் ஒரு சில சைகைகளக் கத்து வச்சிக்கிட்டு அம்மா கிட்ட வம்பு பண்ணதுண்டு. சில சைகைகள் இன்னும் நியாபகம் இருக்கு. நெத்தியில பொட்டைத் தொட்டைக் காட்டுனா "இந்தியா"ன்னு அர்த்தம். கையோட முன் பாதி, பின் பாதியை முறையே முற்பகல், பிற்பகல் இதை தெரிவிக்க உபயோகிப்பாங்க.

திரு.மாலன் அவர்களின் பின்னூட்டம் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக :

>>'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் இப்போது நினைவில் வர மாட்டேன் என்கிறது<<

அவரது பெயர் பி.சி.ராமகிருஷ்ணா. சென்னையில் பிரபலமான ஆங்கில நாடகக் குழுவான The Madras Playersஐச் சேர்ந்தவர். இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டம் வரை ஆங்கிலச் செய்தி என்பதும் அந்தந்த மாநிலச் செய்தியறிக்கைகள் போல அந்தந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது சென்னைத் தொ.கா.வில் ராமகிருஷ்ணா, விசாலம் (தாமஸ் குக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார்)சசிகுமார் (பின்னாளில் ஏசியாநெட்டை ஆரம்பித்தவர், இப்போது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தின் தலைவர்) ஆகியோர் ஆங்கிலச் செய்திகளை வாசித்து வந்தார்கள். தில்லி ஆங்கிலச் செய்தியாளர்களில் நீதி ரவீந்திரன் பெயரை மறந்து விட்டீர்கள்.

நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.

தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளருக்கான தேர்வில் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு.தேர்வுக்கு வருகிறவர்களை தொழிலாளி என்ற சொல்லை உச்சரிக்கச் சொல்வார்கள்.ஏனெனில் ழ,ள,ல மூன்றும் வருகிற ஒரு சொல் அது (நான் அந்தத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன்) ஆரம்ப நாள்களில் வானொலி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். வானொலி அறிவிப்பாளர்கள் என்பதால் உச்சரிப்பில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

அதுபோல சட்ட மன்ற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களுக்கும் வானொலி/தொலைக்காட்சிதான் நம்பத்தகுந்த ஆதாரம். அந்த செய்திகளை வழங்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் சட்டமன்றமே தண்டிக்க முடியும். அதனால் அச்சுப் பத்திரிகைக்கள் அந்த செய்தியாளர்களையும் consult செய்து கொள்வார்கள். அதில் ராமகிருஷ்ணன்தான் கிங்.

மாலன்


தூர்தர்ஷன் பத்தி எழுதுறதுன்னா கண்டிப்பா எக்கச்சக்கமா இருக்கு. செய்தி வாசிப்பாளர்களுக்காக மட்டுமே தனியா ஒரு கொசுவத்தி பதிவு போடுவேன்னு நானே நெனைக்கலை. எனக்கு எழுதும் போது ஒரு சுகமான நினைவு மீட்டலா இருந்தது. படிச்சவங்களுக்கு எப்படின்னு தான் தெரியலை :). வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.