Showing posts with label குவிஸ். Show all posts
Showing posts with label குவிஸ். Show all posts

Thursday, March 11, 2010

பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவு

வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)

நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்

1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"

2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"

3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"

4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"

5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.

மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.


ஆங்கிலம்

1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!

2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’

3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."

4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"

5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.

உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.

Thursday, January 01, 2009

மூனைத் தொட்டது யாரு - பதில்கள்

முதல்ல நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்போ, போன பதிவுல கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லிக்கிறேன்.

1. மகாபாரதம் மற்றும் பாபர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
பானிபத்(Panipat). முன்னொரு காலத்தில் கைத்தறி போட்டு நெசவுத் தொழில் நடந்து கொண்டிருந்த காலத்தில் பானிபத் நகரம், புகழ்பெற்று விளங்கியது. பானிபத்தில் நெய்யப்படும் 'பாஞ்சா' எனப்படும் Dhurries(ஜமக்காளங்கள்), உலகெங்கிலும் புகழ்பெற்றவை.

2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
ஈமு(Emu)எனும் பறவை, சிகப்பு கங்காரு(Red Kangaroo) எனும் விலங்கு, நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா எனும் நாடு எப்போதும் முன்னோக்கியே செல்லும்(Advance Australia), எப்போதும் பின்னடைவு பெறாது என்பதை குறிப்பதனால், இவை தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு.
பஸ் ஆல்ட்ரின்(Buzz Aldrin). அப்போலோ 11 எனும் விண்கலத்தில் 20 ஜூலை 1969 ஆம் ஆண்டு, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் உடன் முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ம்ஸ்ட்ராங் அளவு திறமையும் அனுபவமும் வாய்ந்தவராக இவர் விளங்கிய போதிலும், ஆர்ம்ஸ்ட்ராங் இவரை விட பொறுமை மிக்கவராகவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தன்மையுடையவராகவும் விளங்கிய காரணத்தால், நிலவில் முதல் அடி எடுத்து வைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டவில்லை. இவருடைய பெயருக்குப் பின்னால் ஒரு "என் தங்கை கல்யாணி" கதை இருக்கிறது. எட்வின் யூஜின் அல்ட்ரின் ஜுனியர்(Edwin Eugene Aldrin Jr.) என்ற தன்னுடைய இயற்பெயரை இவர் பஸ் அல்ட்ரின் என்று பல ஆண்டுகள் கழித்து மாற்றிக் கொண்டார். இப்பெயருக்கான காரணம் - சிறுவயதில் அவருடைய தங்கை மழலை மொழியில் "Brother" என்று அழைக்க முற்படும் போது "Buzzer" என்று கூறுவாராம். பஸ்ஸர் என்பதனைச் சுருக்கி பஸ் என்று 1988 ஆம் ஆண்டு தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்.

4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
நியுசிலாந்து. 1893 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு இது. அச்சமயத்தில் இந்நாடு இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கும் முன்னதாகவே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கி விட்டது. இச்சமயத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது. பாரதியார் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததைப் பற்றித் தமிழ் வகுப்பில் எங்கள் தமிழாசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இந்நேரத்தில் நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமை பட்டிருக்கின்றேன். என் நண்பன் ஒருவன் "பாரதியார் காலத்துல வேணா ஆணாதிக்கம் இருந்திருக்கலாம். இப்பல்லாம் அப்படி எதுவும் கெடையாது. நீங்க வேணா பாருங்க, லேடீஸ்க்காக தனி பஸ் விட்டுருக்கோம். எல்லாருக்கும் பொதுவான பஸ்ல கூட லேடீஸ் சீட் தனியா குடுத்துருக்கோம். எங்கேயாச்சும் ஜெண்ட்ஸ் பஸ், ஜெண்ட்ஸ் சீட்னு தனியா எங்கேயாவது இருக்குன்னு கேள்வி பட்டுருக்கீங்களா மிஸ். இதுக்கு மேல இன்னும் என்ன குடுக்கனும்னு எதிர்பார்க்கறீங்க"னு கேட்டான். அதுக்கு மிஸ் சொன்ன பதில் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. "நீ சொல்றதெல்லாம் சரிதாம்பா. ஆனா இதெல்லாம் நீங்க குடுத்து தான் பெண்கள் எடுத்துக்கனும்னு நெனக்கிறே பாரு அது தான் ஆணாதிக்கம்" அப்படின்னாங்க. ஏனோ அதை இன்னும் மறக்க முடியலை. இதெல்லாம் கேட்டுத் திரிந்திட்டோம்னு மட்டும் நெனச்சிக்காதீங்க...இன்னும் தம்பி புலிக்குட்டி நாகை சிவாவைச் சேர்ந்த எம்சிபி தான் நாங்களும் :)

5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
டேவிட் ஒகில்வி(David Ogilvy). இங்கிலாந்தில் பிறந்த இவர், விளம்பரத்துறையின் ஜாம்பவானாக ஆவதற்கு முன்னர் ஒரு சமையல்காரராகவும், ஒரு விற்பனை பிரதிநிதியாகவும், ஒரு காப்பி ரைட்டராகவும் பணியாற்றியிருக்கிறார். மேற்கண்ட இக்கூற்று ஒரு விளம்பரம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகச் சுலபமான மொழியில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லியிருக்கிறார் என்பது என் எண்ணம். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சுட்டவும்.

6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
டெல்டியாலஜி(Deltiology). நினைத்தது போலவே பலரும் தபால் அட்டைகளை தபால் தலைகள் என்றெண்ணி "Philately" என்று பதில் அளித்திருந்தனர். உலகிலேயே மூன்றாவது பிரபலமான பொழுதுபோக்கு இது. வண்ணமிகு படங்கள் கொண்ட Picture Postcards சேகரிப்பதில் ஃபின்லாந்து நாட்டினர் மிக அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இதை பற்றி விரிவாக வேறொரு சமயத்தில் எழுதுகிறேன்.

7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
சதாவதானி செய்குத் தம்பி பாவலர். எட்டாவது படிக்கும் போது என நினைக்கிறேன் - அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மாலை 7.30 அல்லது 8 மணியளவில் "உலாவரும் ஓளிக்கதிர்" எனும் நிகழ்ச்சி ஒன்று வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிய செய்தி தொகுப்பு தான் இந்நிகழ்ச்சி. அதில் ஒரு நாள் "சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்களுக்கான விழா" பற்றிய செய்தி வந்தது. அதில் அப்போது என்ன சொன்னார்கள் என்றெல்லாம் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய பெயர் ஏனோ நினைவில் நின்றுவிட்டது. பின்னொரு நாள் அதே தூர்தர்ஷனில் "தசாவதானம்" நிகழ்ச்சியை ஒருவர் செய்துக் காட்டினார். ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு செயல்களைச் செய்யக் கூடிய திறமை படைத்தவரை "தசாவதானி" என்றுச் சொல்வர். அப்போது தான் தசாவதானியே இவ்வளவு திறமையானவர் என்றால் நூறு வெவ்வேறு செயல்களைச் செய்யக் கூடிய "சதாவதானி" எத்தகையவர் என்ற வியப்பு மேலிட்டது. இணையம் என்ற ஒன்று வந்த பின் தான் சதாவதானி செய்குத் தம்பி பாவலர் குறித்து தேடினேன். தேர்ந்த தமிழறிஞரான இவர் வள்ளலார் எழுதிய திருவருட்பா அருளுடையது அன்று அது ஒரு "மருட்பா" எனும் யாழ்ப்பாணம் ஆறுமுகத்து நாவலர் கருத்தை மறுதலித்து திருவருட்பா மருட்பா அன்று என வாதிட்டுப் பேசி அதன் பெருமையையும் நிலைநிறுத்தினார்.

வள்ளலார் பற்றிய ஒரு வலைத்தளத்தில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து ஒரு பத்தியை எல்லோரும் படிப்பதற்காக இங்கு தருகிறேன். முழுவதும் வாசிக்க இங்குச் சுட்டுங்கள்.

"ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி ' தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர். காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை 'மருட்பா' என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ' அவை அருட்பாதாம் ' என்று சொற்பொழிவாற்றினார். அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுது என் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார் என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்"


8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
வெட்டிவேர். இதன் தாவரவியல் பெயர் Vetiveria zizanioides. வாசனாதி திரவியங்கள் தயாரிக்கவும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் புல் வகையைச் சார்ந்த இத்தாவரம் பெரிதும் பயன்பெறுகிறது. வெட்டிவேரின் பயன்களைக் குறித்து தமிழ்மணத்தில் வின்செண்ட் எனும் பதிவர் எழுதியிருக்கும் பதிவுகளைக் காணலாம். உண்மையில் வின்செண்ட் அவர்களின் பதிவுகளைப் பார்த்த பின்னர் தான் வெட்டிவேரைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது. வெட்டிவேர் என்பது ஏதோ வெட்டித் தனமான ஒரு வேர் என்று இருந்த கருத்து அதன் பின்னர் பல நாடுகளிலும், வெட்டிவேர் எந்தளவுக்கு பயன்பாட்டில் இருக்கிறது எனத் தெரிந்ததும் தகர்ந்து போனது.

9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஸ்கன்க் வர்க்ஸ்(Skunk Works). இக்கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை. போதுமான அளவு க்ளூ கொடுத்திருக்கேன்னு தான் நெனச்சேன். க்ளூவை வச்சே பாப்போமா? போர் விமானம் அதுவும் அமெரிக்கப் போர் விமானம் என்றால் சட்டென்று எது நினைவுக்கு வரும்? F-16 வருமா? F-16 தயாரிக்கும் நிறுவனம் என்று கூகிளினால் Lockheed Martin என்று பதில் வரும். Lockheed Martin+Secrecy+Bureaucracy என்று கூகிளில் தேடினால முதல் பக்கத்தில் இரண்டாவது ரிசல்ட்டே "Skunk works" தான். லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தில் 1943ஆம் ஆண்டிலிருந்தே இப்பதம் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. கட்டுப்பாடுகள் குறைவாகவும், அதிக ரகசியத்தன்மை உடைய ப்ராஜெக்ட்களை லாக்ஹீட் நிறுவனத்தில் "ஸ்கன்க் வர்க்ஸ்" எனும் இத்துறை குறைந்த கால அவகாசத்தில் முடித்துக் கொடுத்திருக்கின்றது. இந்நிறுவனத்துக்கு மட்டும் ப்ரத்யேகமாக இருந்த இப்பதம், இப்போது மற்ற நிறுவனங்களாலூம் பயன்படுத்தப் படுகிறது. லாக்ஹீட் நிறுவனத்தின் ஸ்கன்க் வர்க்ஸ் லோகோ கீழே.

ஸ்கன்க் வர்க்ஸ் எனும் இப்பெயர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த "Skonk Works" எனும் காமிக் தொடரிலிருந்து வந்ததாகும்.

10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்?
ஜானி வாக்கர்(Johnny Walker). இந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இவர் விளங்கினார். மும்பையில் பெஸ்ட் பேருந்தில் நடத்துனராய் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், மக்களை மகிழ்விக்க சிலபல செயல்களைச் செய்வாராம். ஒரு முறை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பல்ராஜ் சஹானி எனும் கதாசிரியரின் பார்வை இவர் மேல் படிந்த காரணத்தால் இவர் நடிகரானார். தன்னுடைய முதல் திரைப்படத்தில் ஒரு குடிகாரனுடைய வேடமேற்று நடித்தார். அதன் பின் புகழ்பெற்ற ஸ்காட்ச் விஸ்கி மதுபான பிராண்டான ஜானி வாக்கர் என்பதே இவருடைய பெயரானது.


ரொம்ப நாளா, குவிஸ் பதிவுகளைப் பத்தி ஒரு விஷயம் சொல்லணும்னு நெனச்சி வச்சிருந்தேன். அது என்னன்னா இத்தகைய குவிஸ்களின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் உருவாக வேண்டியது அவசியம். தனக்கு தெரிஞ்சதை எல்லாம் காட்டிக் கொள்வதை போல ஒரு குவிஸ் பதிவு இருக்கக் கூடாது என்பதில் முடிந்த வரை கவனமாக இருந்து வருகிறேன். குவிஸ் என்றால் ஒரு 'teasing quality' இருக்க வேண்டும். எங்கோ கேள்வி பட்டது மாதிரி இருக்கே, க்ளூக்களைக் கொஞ்சம் யோசித்தால் பதில் தெரிந்து விடும் போலிருக்கே என்று முயற்சி செய்யத் தூண்ட வேண்டும். என்னுடைய குவிஸ் பதிவுகள் குறித்து மேலும் தங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நான் குவிஸ்ஸில் கேட்கும் கேள்விகள் எல்லாமே குவிஸ் புக்குகளிலிருந்தோ அல்லது இணைய தளத்திலிருந்து எடுப்பது கிடையாது. சில கேள்விகள் எங்கோ எப்போதோ கேள்வி பட்டவையாக இருக்கும், நான் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதை பார்க்கிறேன். உதாரணத்திற்கு பஸ் ஆல்ட்ரின் குறித்த கேள்வி. அப்போலோ 13 என்பது வெற்றிபெறாத ஒரு நிலவுப் பயணம். அப்போலோ 13 என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தை மிகவும் விரும்பி ரசித்துப் பார்த்தேன். அப்பயணத்தில் பங்கேற்ற விமானிகளின் பெயர் அனைத்தும் நெடுநாட்கள் வரை நினைவில் இருந்தது. ஏனோ அப்போலோ 11 பயணத்தில் பங்கேற்ற பஸ் ஆல்ட்ரினின் பெயரை அப்போலோ 13 பயணத்துடன் தொடர்பு படுத்திவிட்டேன். ஒவ்வொரு முறையும் குவிஸ் பதிவினன வலையேற்றுவதற்கு முன்பும் சில மணி நேரங்கள் செலவிட்டு விபரங்களைச் சரி பார்ப்பேன். இம்முறை அதை ஸ்ட்ரிக்டாகச் செய்யாத காரணத்தால் கேள்வியில் பிழைகள் புகுந்து விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல இன்னும் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

அப்படியே இன்னொரு விஷயம் - பெங்களூரில் என்னுடைய ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்துவிட்டது. 1 ஜனவரி 2009 முதல் வேலை நிமித்தமாகவும் அடியேன் சென்னைவாசி என்பது நியூஸ்.

Monday, December 29, 2008

மூனைத் தொட்டது யாருடா? - குவிஜ் பதிவு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி பதில் பதிவு இது.

1. மகாபாரதம் மற்றும் பாப்ர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு. ( இந்த கேள்வியின் இரண்டாம் பாதியை நேற்று தவறோடு வெளியிட்டு விட்டேன். நேற்று இக்கேள்வியின் முதல் பாதியைச் சரியாகச் சொல்லியவர்கள், இதனை மீண்டும் முயலும் தேவையில்லை. தவறுக்கு வருந்துகிறேன்)
4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்? சினிமா இல்லாமே குவிஜே இல்லையான்னு ஒவ்வொரு தரமும் கேக்கற நம்ம கொத்ஸுக்காகவாக்கும் இந்த கேள்வி.

பல பதிவுகள்ல பதிவோட தலைப்புக்கும் பதிவுக்கும் உள்ள தொடர்பை எக்கச்சக்க பில்டப்பு எல்லாம் குடுத்து கடைசியிலே சொல்லிருக்கேன். இந்த பதிவோட தலைப்புக்கும் மூனாவது கேள்விக்கும் சம்மந்தம் இருக்குன்றதுனாலே இந்த தலைப்பை வைக்கலை. பின்ன?..."மூனைத் தொட்டது யாருடா"ன்னு நான் உங்களை யாரையும் மரியாதை குறைவா கேட்டேன்னும் நெனச்சிக்காதீங்க. அப்படியே கேட்டுட்டாலும் மூனைத் தொட்டது ஆர்ம்ஸ்ட்ராங்க் இல்லை அமிர்தலிங்கம்னு நீங்கல்லாம் ரொம்பச் சரியாச் சொல்லிடுவீங்கன்னும் எனக்குத் தெரியும். அப்புறம் மூனைத் தொட்டது யாருடான்னு எதுக்குடா தலைப்பை வைச்சேன்னு தானே கேக்கறீங்க? ஹி...ஹி...அதொன்னுமில்லீங்கண்ணா...இன்னையோட கைப்புள்ளக்கு மூனு வயசாச்சு. டிசம்பர் 29, 2005 அன்னிக்கு தமிழ் ப்ளாக் எல்லாம் நான் ஆரம்பிக்க சான்ஸே இல்லை, அதெல்லாம் தேவை இல்லாத வெட்டி வேலைன்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட கூகிள் சாட்ல வாய்ச் சவடால் விட்டுட்டு அன்னிக்கு சாயந்திரமே ஆரம்பிச்சது தான் இந்த கைப்புள்ள காலிங் ப்ளாக். இவ்வளவு நாளா எனக்கும் ஆதரவு தந்துட்டிருக்கற உங்க எல்லாத்துக்கும் என் மனமார்ந்த நன்றிங்கங்கோ.

Sunday, January 13, 2008

Scribbles on Akka

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு இது:) 12 ஜனவரி, 2007 அன்னிக்கு அகமதாபாளையத்துல ஒரு க்யூஸ் போஸ்டைப் போட்டுட்டு பொங்கலுக்காக சென்னை கெளம்பி வந்தாச்சு. அந்தப் பதிவுக்கான பதில்களை எல்லாம் தொகுத்து சரியா ஒரு வருஷம் கழிச்சு ஒரு பதிவு போடனும்னு தோனுனதே அது வரலாற்றுச் சிறப்பு இல்லாம வேற என்னங்க? யாருப்பா அங்கேருந்து அடங்குடான்னு சவுண்ட் விடறது? கிட்டத் தட்ட நாலஞ்சு மாசமா டிராஃப்ட் மோட்ல என்னுடைய சோம்பேறித் தனத்துக்கெல்லாம் விட்னெஸா இருந்துட்டு சரியா ஒரு வருஷம் கழிச்சு வெளி வர்ற சீக்வெல் பதிவு இது. சீக்வெல் பதிவுங்கிறதை தவிர்த்து இன்னுமொரு வரலாற்றுச் சிறப்பும் இந்தப் பதிவுக்கு உண்டு. அதை கடைசியா சொல்றேன்...இப்ப 2007ல கேட்ட கேள்விகளுக்கான பதில்களை நல்ல புள்ளையா ஒரு தடவை படிச்சிடுங்க பாப்போம்.

1. மென்பொருள் துறைக்கும், BPO துறைக்கும் மிகப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் பஞ்சப் பாண்டவர்கள் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றனர். ஊரின் பெயர் என்ன?
குர்காவ்(Gurgaon). குரு துரோணாச்சாரியாரின் பூர்வீகமாக அறியப் பெறும் இவ்வூர் ஹரியானா மாநிலத்தில் தில்லிக்கு வெகு அருகாமையில் உள்ளது. தில்லியின் கிளைநகரங்களில்(Satellite Town) ஒன்றாகவும் அறியப் பெறுகிறது. குரு கிராம் எனச் சமஸ்கிருத மூலத்தைக் கொண்ட இவ்வூரின் பெயர் நாளடைவில் குர்காவ் ஆனது.

2. ஃபவுஜி(Fauji) எனும் இந்தித் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக அறிமுகமான பிரபல நடிகர் யார்?
ஷாருக் கான். இத்தொடரில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கமாண்டோ அபிமன்யூ ராய்.


3. AJJ எனும் குறியீட்டைக்(Station Code) கொண்டு இந்திய இரயில்வே துறையினரால் அறியப்பெறும் ஊர் எது?
அரக்கோணம் சந்திப்பு. ரயில்வே முன்பதிவு சிஸ்டெத்தில்(சிஸ்டெம்-தமிழ்ல என்னங்க?) இந்த ரயில் நிலைய குறியீட்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அத்துடன் இந்திய ரயில் விசிறிகள் என்று ஒரு சாரார் இருக்கின்றனர். முறைபடுத்தப்பட்ட ஒரு குழுமமாக ரயில் விசிறிகளால்(Rail fans or Rail enthusiasts) நடத்தி வரும் இக்குழுமத்துக்குப் பெயர் IRFCA - Indian Railways Fan Club. இங்கு ரயில்வே துறையைப் பற்றியும், ரயில்களின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள். இரயில் நிலையக் குறியீட்டை அறிந்து கொள்ளும் ஆர்வலர்களும் இருக்கிறார்கள். Rail fanning என்னும் ஒரு பொழுதுபோக்கும் உள்ளது. அதாவது ஓடுகின்ற ரயிலின் அழகை ரசிப்பதும்(தமாஷ் இல்லீங்க...உண்மையாத் தான்), ரயிலை வாடகைக்கு அமர்த்தி அது செல்லுகின்ற இடங்களை ரசிப்பதும் இரெயில் ஃபேனிங்கின் ஒரு பகுதி. "She chugged into Dadar Station" அப்படின்னெல்லாம் ரயிலைப் பார்த்து சிலாகிப்பவர்களை எல்லாம் இங்கு காணலாம்.

4. மேக்யார்(Magyar) எனும் இயற்பெயர் கொண்ட ஐரோப்பிய நாட்டை நாம் எவ்வாறு அறிகிறோம்?
விக்கிபீடியாவில் ஹங்கேரி. மேக்யார் என்பது தான் ஹங்கேரி நாட்டின் மொழியின் பெயரும் என்பது கூடுதல் தகவல்.

5. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தற்போதைய கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்து இறைவன் 'சென்ன மல்லிகார்ஜுனா'வின் பால் தீராத காதல் கொண்டு பற்றுகளைத் துறந்து நிர்வாண நிலை எய்திய பெண் துறவியின் பெயர் என்ன?
அக்கா மகாதேவி. இப்பதிவுக்குத் தலைப்பு கொடுத்த கேள்வி இது. இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படங்களைப் பற்றி ஒரு நாள் இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது, மதுஸ்ரீ தத்தா என்ற இயக்குநர் இயக்கிய 'Scribbles on Akka' என்ற குறும்படத்திற்கு இசையமைத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். அக்கா மகாதேவி எனும் துறவியின் பாடல்களை (வசனாஸ் என அறியப்படுபவை) இசை படுத்தியிருக்கிறார் ராஜா. யாரிந்த அக்கா என அறிய முற்பட்ட போது தெரிந்து கொண்ட விஷயங்கள் பல. மேலும் விபரங்களுக்கு விகிபீடியாவைப் பாருங்கள். கன்னடத்தில் அக்கா மகாதேவி பாடிய வசனப் பாடல் ஒன்றில் ஆங்கில் மொழிபெயர்ப்பு கீழே.

You can confiscate
money in hand;
can you confiscate
the body's glory?

Or peel away every strip
you wear,
but can you peel
the Nothingness, the Nakedness
that covers and veils?

To the shameless girl
wearing the white jasmine Lord's
light of morning,
you fool, where's the need for cover and jewel?



6. செளத்ரி எனும் கதாபாத்திர பெயர் ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தத் தமிழ் திரைப்படம் எது?
தங்கப்பதக்கம். நடிகர் திலகத்தின் மிடுக்கையும் கம்பீரத்தையும் கண்டு நான் வியந்த படம். சௌத்ரி கதாபாத்திரத்தின் இமேஜ் இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை :(

7. முதலாம் உலகப் போரின் போது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஜெர்மானிய கப்பலின் பெயர் என்ன?
எம்டன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு மூலையில் ரிசர்வ் வங்கி சப்வே அருகில் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. செந்தில் அவர்களின் ஆங்கிலப் பதிவிலிருந்து எடுத்தப் படம் கீழே.
http://chennaitriviae.blogspot.com/2005/10/chennai-trivia-1.html

8. பூ வேலைப்பாட்டினைப் பற்றிய ஜப்பானிய கலையின் பெயர் என்ன?
இகிபானா. ஜப்பானிய துறவி ஒருவர் இக்கலையை அறிமுகப்படுத்தியதாக அறிகிறோம்.


9. 'உலகின் மிகப் பெரிய வைரம்' எனும் அறியப்பெறும் வைரக்கல்லின் பெயர் என்ன?
கல்லினன் ஜனவரி 26, 1905 அன்று தென்னாப்பிரிக்காவில் கல்லினன் எனும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இவ்வைரம் 3106.75 காரட்(கிட்டத்தட்ட 622 கிராம்) எடைகொண்டிருந்ததாம்.


10. நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'ஒரு தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
சலில் சவுத்ரி. ஜி.ராகவன் மிகச் சரியாக பதில் அளித்ததோடு, கூடுதல் தகவலையும் தந்திருந்தார். அதனால் அவர் அப்பதிவில் இட்ட பதிலையே இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.

ஒரு கிடையாது. தூரத்து இடி முழக்கம்-தான் படத்தின் பெயர். பி.விஜயன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை சலீல்தா என்றழைக்கப்படும் சலீல் சௌத்ரி. இந்தப் படத்தில் இவரது மனைவியான சபீதா சௌத்ரி ஜெயச்சந்திரனோடு சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளார். அழியாத கோலங்கள் படத்திற்கும் இசை சலீல் சௌத்ரிதான். அதில் ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய "பூவண்ணம் போல மின்னும்" என்ற பாடல் மிகப் பிரபலம். இவர் கரும்பு என்ற வெளிவராத திரைப்படத்திற்காக சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்களுக்கு பி.சுசீலாவையும் ஏசுதாசையும் பாட வைத்து இசையமைத்தார். பி.சுசீலா பாடியது மகிழ்ச்சியான மெட்டில். ஏசுதாஸ் பாடியது சோக மெட்டில்.

11. கப்பல்களில் அதிகப் படியான சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கப்பலின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் பெயர் என்ன?
ப்ளிம்சால் கோடுகள்(Plimsoll Lines) கப்பலின் பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச தரக்கோட்பாடாகவும் ப்ளிம்சால் கோடுகள் அறியப் பெறுகின்றன.

12. உலகின் மிகச்சிறிய நாய் இனத்தின் பெயர் என்ன?
சிஹுவாஹுவா. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு மாநிலமான சிஹுவாஹுவாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த நாயினம் ஆறு முதல் ஒன்பது அங்குலம் மட்டுமே உயரம் கொண்டது. மிகவும் துறுதுறுப்பான நாயினமாக இது அறியப் பெறுகிறது.


13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
குமாரசாமி என்பது இயற்பெயர் என்று பல தளங்கள் சொல்கின்றன. சிவத்தையா என்ற பெயராலும் அறியப்பெறுகிறார். கட்டபொம்மன் கருத்தையா என்ற பெயரால் அறியப்பெற்றார். தகவல்களை வழங்கிய வவ்வால் அவர்களுக்கு மிக்க நன்றி. துரைசிங்கம் என்பது இன்னொரு சகோதரரின் பெயர். முன்னர் குறிப்பிட்டது போல ஊமைத்துரையின் இயற்பெயர் துரைசிங்கம் அல்ல. வரலாற்று ஆசிரியர்களுக்குக் கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அவருடைய இளைய சகோதரரான ஊமைத்துரையின் வீரத்தையும் திறமையையும் பற்றிப் பெருமையாகவே சொல்கிறார்கள்.

14. 17ஆம் நூற்றாண்டில், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்டிரேடிவேரி(Stradivari) குடும்பத்தினர் தயாரித்த இக்கருவிகள்(ஸ்டிரேடிவேரியஸ் Stradivarius என்று அறியப்படுபவை) தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 700 மட்டுமே உள்ளன. பல்லாயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்டவை இக்கருவிகள். எந்த கருவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?
வயலின் அண்டோனியோ ஸ்டிரேடிவாரி என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வயலின்கள் தங்களின் உன்னதமான இசைக்காக உலகப்புகழ் பெற்றவை. வயலின் தயாரிக்கப்படும் மரத்தினைப் பதப்படுத்துவதில் உபயோகப்படுத்தப் படும் விசேட முறையால் இத்தனித்துவமான இசை உருவாகுவதாகச் சொல்கிறார்கள். வயலினைத் தவிர ஸ்டிரேடிவாரி குடும்பத்தினர் தயாரித்த செல்லோ, வயோலா இசைக்கருவிகளும் தங்கள் தனித்துவமான இசைக்காகப் புகழ்பெற்றவை.


15. இஸ்ரேல் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் என்ன?
எல் அல்(El Al) ஹீப்ரூ மொழியில் எல்-அல்லை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் 'Skyward' எனப் பொருள்படும். அதையே தமிழ்ல மொழிபெயர்த்தால் "மானத்தைப் பாத்த...". மானம் பாத்த ஏர்லைன் தான் எல்-அல்.


இன்னொரு வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி இருக்கேன்னு சொன்னேனே...அது என்னன்னா இந்தப் பதிவை ஜனவரி 12, 2007 அன்று அகமதாபாத்தில் போட்டு விட்டு ஜனவரி 13,2007 அன்று பொண்ணு பாக்க போனேன். கொஞ்சம் பின்நவீனத்துவமா சொல்லனும்னா நான் இப்ப ரங்கமணியா வேலை பாத்துக்கிட்டு இருக்கறவங்க கிட்ட போய் என்னை காட்டிட்டு வந்த நாளு:). பொண்ணு பாக்க போறதுக்கு முன்னாடி கூட அந்த குவிஸ் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்திக்கிட்டு இருந்தேன். அது தான் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய செய்தி.

Friday, January 12, 2007

பொங்கல் ஸ்பெஷல் - குவிஸ் பதிவு

பதினைந்து பொது அறிவு கேள்விகளைக் கொண்ட ஒரு குவிஸ் பதிவு இது. முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களே!
1. மென்பொருள் துறைக்கும், BPO துறைக்கும் மிகப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் பஞ்சப் பாண்டவர்கள் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றனர். ஊரின் பெயர் என்ன?
2. ஃபவுஜி(Fauji) எனும் இந்தித் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக அறிமுகமான பிரபல நடிகர் யார்?
3. AJJ எனும் குறியீட்டைக்(Station Code) கொண்டு இந்திய இரயில்வே துறையினரால் அறியப்பெறும் ஊர் எது?
4. மேக்யார்(Magyar) எனும் இயற்பெயர் கொண்ட ஐரோப்பிய நாட்டை நாம் எவ்வாறு அறிகிறோம்?
5. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தற்போதைய கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்து இறைவன் 'சென்ன மல்லிகார்ஜுனா'வின் பால் தீராத காதல் கொண்டு பற்றுகளைத் துறந்து நிர்வாண நிலை எய்திய பெண் துறவியின் பெயர் என்ன?
6. செளத்ரி எனும் கதாபாத்திர பெயர் ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தத் தமிழ் திரைப்படம் எது?
7. முதலாம் உலகப் போரின் போது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஜெர்மானிய கப்பலின் பெயர் என்ன?
8. பூ வேலைப்பாட்டினைப் பற்றிய ஜப்பானிய கலையின் பெயர் என்ன?
9. 'உலகின் மிகப் பெரிய வைரம்' எனும் அறியப்பெறும் வைரக்கல்லின் பெயர் என்ன?
10. நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'ஒரு தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
11. கப்பல்களில் அதிகப் படியான சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கப்பலின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் பெயர் என்ன?
12. உலகின் மிகச்சிறிய நாய் இனத்தின் பெயர் என்ன?
13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
14. 17ஆம் நூற்றாண்டில், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்டிரேடிவேரி(Stradivari) குடும்பத்தினர் தயாரித்த இக்கருவிகள்(ஸ்டிரேடிவேரியஸ் Stradivarius என்று அறியப்படுபவை) தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 700 மட்டுமே உள்ளன. பல்லாயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்டவை இக்கருவிகள். எந்த கருவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?
15. இஸ்ரேல் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் என்ன?

Friday, November 24, 2006

சென்னையின் ஜீரோ...பதில்கள்

நேற்று முன் தினம் இட்ட பொது அறிவு கேள்வி பதிவுக்கான விடைகள் இதோ:
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?
ரஜினிகாந்த் Die Hard சூப்பர் ஸ்டார் ரசிகர்களான சிபி, கப்பி ஆகியோர் இக்கேள்விக்கு வெகு விரைவாக சரியான பதிலைச் சொல்லி விட்டார்கள்:)

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?
நைக்கி(Nike) Nikeயை "நைக்கி"ன்னு சொல்லனும்னு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டது தான். (ஒரு காலத்துல நமக்கு அது நைக் தான்). Nike நைக்கின்னா Spike ஸ்பைக்கியான்னு யாரும் என்னைய கேக்கப்பிடாது. ஏன்னா...ஏன்னு எனக்கு தெரியாது :)
http://en.wikipedia.org/wiki/Nike%2C_Inc.

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?
லெம்மிங்ஸ்(Lemmings). ஆர்க்டிக் கடலைக் கடக்க முடியாமல் லெம்மிங்குகள் மூழ்கி உயிர் விடுவதைத் தற்கொலை எனத் தவறாகக் குறிப்பிடுவதாக சில அறிஞர்கள் கூறுகிறார்கள். நல்ல காலம்...இந்த லெம்மிங் நாங்க சின்னப் பசங்களா இருக்கும் போது எங்க கண்ணுல படலை...இல்லன்னா "அம்மா ப்ளீஸ்மா! நாம ஒரு லெம்மிங் வளர்க்கலாம்மா"ன்னு நச்சரிச்சிருப்போம்.

http://en.wikipedia.org/wiki/Lemming

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.
போர்னியோ(Borneo) இது உலகின் மூன்றாவது பெரிய தீவு என்பது கூடுதல் தகவல்.
http://en.wikipedia.org/wiki/Borneo

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?
சாக்சி(Sakchi) ஜம்ஷேட்ஜி நசர்வான்ஜி டாட்டா அவர்கள் நிறுவிய சாக்சி என்ற பெயருடன் இந்நகரத்தை, 1919 ஆம் ஆண்டு கெம்ஸ்போர்டு துரை(Lord Chelmsford) "ஜம்ஷேட்பூர்" எனப் பெயர் மாற்றம் செய்தார்.
http://en.wikipedia.org/wiki/Jamshedpur

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?
Self Contained Underwater Breathing Apparatus என்பதின் சுருக்கமே SCUBA
http://en.wikipedia.org/wiki/Scuba_diving

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?
ம்ருகநயனி(Mriganayani)க்வாலியர் நகரின் ராஜா மான்சிங்கின் மனைவியின் பெயர் தான் ம்ருகநயனி("மான் போன்ற கண்களை உடையவள்" என்பது இப்பெயருக்குப் பொருள்). நம்ம ஊருல மீனு அவங்க ஊருல மானு போலிருக்கு?:)ம்ருகநயனி என்ற பெயரில் தூர்தர்ஷனில் ஒரு இந்தி சீரியல் வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
http://www.mptourism.com/dest/gwa_ms.html (நன்றி : பாலராஜன் கீதா)

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?
கோவா புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரியான BITS, Goa(BITS Pilaniஇன் கிளை) ஜூவாரி நதியருகில் அமைந்திருப்பதாக அங்கு பணிபுரியும் என் நண்பர் ஒரு முறை தெரிவித்தார்.
http://en.wikipedia.org/wiki/Zuari

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?
சுபேதார் நாயக். பாணா சிங்(Nb.Sub. Bana Singh). உயிரோடு இருக்கும் போதே பரம்வீர் சக்ரா வாங்கிய 14 வீரர்களில் இவரும் ஒருவர். அவருடைய நிகரற்ற சேவையைப் பாராட்டி Quaid Post என்னும் சிகரத்தின் பெயர் பாணா டாப்(Bana Top) என்று மாற்றியமைக்கப் பட்டது.
http://www.hindustantimes.com/2005/Apr/23/
5922_1332688,0015002500020000.htm


10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?

சொர்க்கத்தின் பறவை(Bird of Paradise) இந்தோனேசியா, நியூ கினீ மற்றும் வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் காணப்படும் இப்பறவை, தன்னுடைய வண்ணமயமான இறகுகளுக்காக மிகப் புகழ்பெற்றது. பெண் பறவையைக் கவர ஆண் பறவை ஆடும் நடனமும்(mating dance) பார்க்க நன்றாக இருக்கும்(நானும் டிஸ்கவரில பாத்தது தானுங்க). சரியாகப் பதில் அளித்தவர் துளசியக்கா மட்டுமே. கலக்கல். எப்படி கண்டுபிடிச்சீங்க?
http://en.wikipedia.org/wiki/Bird_of_paradise

11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?
ராஜீவ் காந்தி. ஜூலை 29,1987இல் இலங்கை ஒப்பந்தத்தில் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயுடன் கையெழுத்திட்டு விட்டு, மறுநாள்(ஜூலை 30 அன்று) வீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது துப்பாக்கியால் ராஜீவைத் தாக்கிய இலங்கை கப்பல் படைவீரரின் பெயர் தான் விஜிதமுனி ரோஹனா டிசில்வா மன்னிக்கனும்...நான் பெயரைத் தவறுதலாக விஜிதரோஹனா விஜயமுனி என்று குறிப்பிட்டு விட்டேன். நேற்று கூகிளில் தேடித் தேடி அலுத்துப் போனவர்களிடத்தில் எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் :( அப்படியிருந்தும் சில நண்பர்கள் சரியான பதிலளித்து விட்டார்கள்.
http://www.dailynews.lk/2001/11/03/wor03.html

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.
பாலராஜன்கீதா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சரியான பதிலை அவர் மட்டுமே கூறியிருக்கிறார். அவருடைய பதிலையே இங்கு பிரசுரிக்கிறேன். "சென்னை மருத்துவக் கல்லூரி விளையாட்டு மைதானத்திற்கு சற்று வெளியே, பொது மருத்துவமனை சாலை / பெரியார் சாலை(பூந்தமல்லி நெடுஞ்சாலை)யும், வலது பக்கத்தில் அண்ணா சாலையின் ஆரம்பத்திலிருந்து பூங்கா - கோட்டை இரயில் நிலையங்களுக்கிடையில் ஒவர்ப்ரிட்ஜ் வழியாக வரும் சாலையும் (முத்துசாமி சாலை என்றால் எங்கே என்று கேட்பீர்கள் - அதனால் இப்படி) சந்திக்கும் இடத்தில் ஒரு மைல்கல் உள்ளது. அங்குதான் சென்னையின் ஜீரோ பாயிண்ட் ஆரம்பிக்கிறது என்று எப்பவோ படித்த நினைவு"


13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழகத்தின்(சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அப்போதைய மெட்ராஸ் ப்ரெசிடென்சி) பதினோறாவது முதலமைச்சர் இவர்.
http://en.wikipedia.org/
wiki/List_of_Chief_Ministers_of_Tamil_Nadu


14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?
ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்(Hershey's Kisses) பென்சில்வேனியாவைச் சேர்ந்த என்ற ஹெர்ஷே நிறுவத்தினரால் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட்டுகளை, உற்பத்தி செய்யும் போது, இயந்திரங்கள் ஏற்படுத்தும் முத்தமிடுதல் போன்ற ஒலியினை முன்னிட்டு "ஹெர்ஷேஸ் கிஸ்ஸஸ்" எனப் பெயர் வந்ததாக இருக்கலாம் என்கிறார்கள் :)
http://www.hersheys.com/kisses/

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?
சேஷாத்ரி சுவாமிகள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இவர், தன்னுடைய 19ஆம் அகவையில் துறவு பூண்டார். இவர் தொட்டதெல்லாம் விளங்கியதால் இவருக்கு "தங்கக்கை சேஷாத்ரி" என்ற பெயரும் இருப்பதாகத் தெரிந்து கொண்டேன்.
http://www.arunachalasamudra.org/seshadri.html தளத்தில் படித்தது "Sometimes Sri Seshadri Swamigal, the older by ten years would be called ‘elder Seshadri’ (anna) and Sri Ramana ‘younger Seshadri’ (thambi). One time a devotee told Sri Ramana that everyone called Seshadri a mad man. Ramana smilingly replied that there were three mad men in Arunachala. One was Seshadri, the second was Arunachaleswarar and the third was himself."
இதையும் பாருங்கள் - http://www.omarunachala.com/seshadri.asp

கலந்து கொண்டு பதிலளித்த நண்பர்கள் அனைவருக்கும், என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சென்னையின் ஜீரோ?...க்யூஸ் பதிவு

பதினைந்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு க்யூஸுங்க(Quiz தான்) இது. முயற்சி பண்ணுங்களேன் ப்ளீஸ்.
1. "அந்தா கானூன்" என்ற திரைப்படம் எந்த பிரபல நடிகரின் முதல் இந்தி திரைப்படம்?

2. வெற்றியின் தேவதையாகக் கருதப் பெறும் கிரேக்க கடவுளின் பெயரைத் தழுவி அமைந்துள்ள விளையாட்டு பொருட்கள் நிறுவனத்தின் பெயர் என்ன?

3. ஆர்க்டிக் கடல் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கடலில் விழுந்து கூட்டுத் தற்கொலை(mass suicide) செய்து கொள்ளும் விலங்கினத்தின் பெயர் என்ன?

4. மலேசியா, புரூனை, இந்தோனேசியா இம்மூன்று நாடுகளினாலும் பங்கிடப் பட்டுக் கொள்ளும் தீவின் பெயர் என்ன? அதாவது இத்தீவில் ஒரு பகுதி மலேசியாவைச் சேர்ந்தது, ஒரு பகுதி புரூனையைச் சேர்ந்தது ஒரு பகுதி இந்தோனேசியாவைச் சேர்ந்தது.

5. கெம்ஸ்போர்டு துரையினால் 1919ஆம் ஆண்டு ஜம்ஷெட்ஜி டாட்டா அவர்களின் நினைவாக ஜம்ஷேட்பூர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஊரின் இயற்பெயர் என்ன?

6. ஸ்கூபா டைவிங் பற்றி கேள்வி பட்டிருப்போம்? ஆக்சிஜன் பிராணவாயுவை சிலிண்டருக்குள் நிரப்பி முதுகில் கட்டிக் கொண்டு ஆழ்கடலுக்குள் மூழ்குவதை ஸ்கூபா டைவிங் என்கிறோம். இதில் ஸ்கூபா (SCUBA) என்ற பதத்தின் விரிவாக்கம் என்ன?

7. மத்திய பிரதேச மாநிலத்தின் அரசு கைவினைப் பொருட்கள் அங்காடியின்(Handicrafts emporium) பெயர் என்ன?

8. மாண்டோவி, ஜுவாரி இவ்விரண்டும் எந்த இந்திய மாநிலத்தில் அமைந்துள்ள நதிகளின் பெயர்கள்?

9. Quaid Post(க்வெய்ட் போஸ்ட்) என அழைக்கப்படும் பனிச் சிகரத்தை இந்திய ராணுவம் கைப்பற்ற அருஞ்சேவையாற்றி, அச்சேவைக்காக இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம்வீர் சக்ரா வழங்கப் பட்ட ராணுவ வீரரின் பெயர் என்ன? அச்சிகரம் இப்போது எந்த பெயரில் அறியப் பெறுகிறது?

10. கீழே உள்ள படத்தில் இருக்கும் பறவையின் பெயர் என்ன?


11. விஜிதரோஹனா விஜயமுனி - இப்பெயரை எந்த இந்திய தலைவரோடு தொடர்பு படுத்துவீர்கள்? ஏன்?

12. சென்னை 150 கி.மீ., 350 கிமீ என மைல்கல்களில் பார்த்திருப்போம். அதற்கு அடிப்படையாக அமைந்துள்ள பெஞ்ச்மார்க் மைல்கல் எங்குள்ளது? அதாவது சென்னையின் ஜீரோ பாயிண்ட் எங்குள்ளது? அதாவது இந்த இடம் சென்னையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் இருக்கிறது எனச் சொல்ல வேண்டும் என்றால், சென்னையில் ஒரு இடத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் இல்லையா? அந்த இடம் சென்னையில் எங்கிருக்கிறது? மிகத்துல்லியமான இடத்தைச் சொல்ல வேண்டும்.

13. மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 06, 1949 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் யார்?

14. முத்தங்களோடு தொடர்பு படுத்தப்படும் உலகப் புகழ்பெற்ற சாக்லெட்டுகளின் பெயர்(Brand Name) என்ன?

15. திருவண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த போது கரையான்களால் உடல் அரிக்கப் பட்ட நிலையில் இருந்த ரமண மகரிஷியைக் கண்டறிந்து உலகுக்கு அறிமுகப் படுத்திய துறவியின் பெயர் என்ன?

Friday, August 25, 2006

குயி...குயி...குயிஜு பதில்கள்

குயி...குயி..குயி...குயிஜு பதிவின் பதில்கள் கீழே.

1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக் கண்டத்தவர் யார்?
பர்மாவைச் சேர்ந்த திரு.மஹா த்ராய் சித்து யூ.தாண்ட்(Maha Thray Sithu U Thant). ஐ.நா.பொதுச் செயலாளர்களாக இது வரை இருந்தவர்களில், ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் இவர் ஒருவர் தான். பஹ்ரைன், யெமன் நாடுகளுக்குள் உள்நாட்டுப் போர் மூளாமல் தடுக்க சமாதான முயற்சிகளையும், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த ஆறு நாள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் தனது பணிக் காலத்தின் போது தாண்ட் பணியாற்றினார்.

http://en.wikipedia.org/wiki/Thant

2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின் திரைப்பெயர் என்ன?
'லஜ்ஜாவதி' கோபிகா தானுங்கோ...

நண்பர் பவன் தரும் கூடுதல் தகவல் : 'கேர்ளி ஆண்டோ' என்ற கோபிகாவின் இயற்பெயரை மாற்றி 'கோபிகா' என வைத்தவர் மலையாள திரைப்பட இயக்குநர் துளசிதாஸ்.

http://www.hinduonnet.com/thehindu/mp/2005/08/20/
stories/2005082003450100.htm


3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். எனக்கு பிடித்த ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. சரி! இப்ப கேள்வி...இப்படத்தில் 'பாட்சா' ரஜினி அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?
Pince-nez - பே நே என்று உச்சரித்தல் வேண்டும். இவ்வகை கண்ணாடிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாக இருந்தன. காதின் மீது அமராமல் அணிபவரின் மூக்கின் மீது ஒரு சிறிய முட்டுக் கொடுத்து அமருவதால் இக்கண்ணாடிகளுக்கு ஆங்கிலத்தில் "Pinch nose" என்ற பொருள்படும் பிரெஞ்சு மொழிச் சொல்லான "Pince-nez" கொண்டு அறியப் பெறுகிறது.(காது மேலே உக்காறது, மூக்கு மேல முட்டு அப்படி இப்படின்னு எழுதும் போது எனக்கே காமெடியாத் தான் இருக்கு...ஆனாலும் எப்படி எழுதுறதுன்னு தெரியாததுனால அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கிறேன்)


பாட்சா படத்தில் ரஜினி அணியும் இக்கண்ணாடியை, நிஜ வாழ்வில் முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட்டும்(Theodore Roosevelt), திரையில் மேட்ரிக்ஸ் ஆங்கிலத் திரைபடத்தில் மொட்டைபாஸ் மார்ஃபியஸ் ஆக வரும் லாரென்ஸ் ஃபிஷ்பர்னும்(Laurence Fishburne) அணிந்து பிரபலப் படுத்தியிருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Pince-nez

4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுவது என்ன?
வருவேன் அல்லது வரமாட்டேன் என்று பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. Respondevu Sil vou plait என்ற பிரெஞ்சு மொழி சொற்றொடரின் சுருக்கம் தான் RSVP. வரவேற்பைத் தங்களுக்கு அனுப்பியவர், எத்தனை விருந்தினர்கள் வருவார்கள் எத்தனை பேர் வரமாட்டார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படையில் திட்டமிடுதலுக்காகவும் தங்களை பதில் அளிக்கக் கோருகிறார்.

http://dictionary.reference.com/search?q=RSVP

5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?
சௌரி சௌரா சம்பவம். 1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கெதிரான அடக்குமுறை சட்டமான ரௌலத் சட்டத்தையும், மற்றும் சில உரிமை மீறல் சட்டங்களையும் எதிர்ப்பதற்காகவே காந்தியடிகள் பொது ஒத்துழையாமை இயக்கத்திற்கு அரைகூவல் விடுத்தார். இவ்வியக்கம் உச்சத்தில் இருந்த போது, பிப்ரவரித் திங்கள் 1922 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு அருகில் உள்ள சிறிய ஊரான சௌரி சௌராவில், ஒரு காவல் சாவடியைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் 22 போலிசார் பலியாயினர். அஹிம்சை வழியைத் தம்முடைய ஆதரவாளர்கள் இன்னும் சரி வரப் புரிந்து கொள்ளாததை உணர்ந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். அதன் விளைவாக அவருடைய ஆதரவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டனர். அதன் பிறகு காந்தியடிகள், வெள்ளையர்களால் ஆறாண்டு காலம் சிறை வைக்கப் பட்டார்.

http://en.wikipedia.org/wiki/Chauri_Chaura

6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."

---------- = "சத்தி முத்த வாவியுள்"

நாரைவிடு தூது - முழுபாடலும் கீழே.

நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!

மன்னருக்குக் குறிப்பால் தம்முடைய வறுமை நிலையை உணர்த்த புலவர், நாரையைத் தூதாக விடுவதாக அமைந்த ஒரு பாடல். எழுதியவர் பெயர் 'சத்திமுத்தப் புலவர்' என நினைவு. இது புறநானூற்றுப் பாடலா என நினைவில்லை. நம்ம தளபதி சிபி புறம் தான்னு சொல்றாரு...சரியாத் தான் இருக்கும். இப்பாடலின் சுட்டியை மேற்கோள் காட்டிய ப்ரியன் மற்றும் கொத்ஸ் இருவருக்கும் நன்றி. இக்கேள்வியை எழுதுவதற்கு முன் இப்பாடல் வரிகளை நானும் திரு.சங்கர் அவர்களின் பதிவில் தான் சரி பார்த்தேன்.

நன்றி : திரு.சங்கர் - சுவடு

7. இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?
ரியோ டி ஜெனிரோ(Rio de Janeiro) நகரம், பிரேசில் நாடு. 2330 அடி உயரம் கொண்ட கார்கோவாடோ(Corcovado) மலையின் மீது இச்சிலை 1931 ஆம் ஆண்டு நிர்மானிக்கப் பட்டது. சிலையின் பெயர் 'Christ the Redeemer' (மீட்பர் இயேசு - சரி தானுங்ளே?). கிறித்தவ சமய சின்னமாக காணப் படுவதுடன் ரியோ நகரத்திற்கு அடையாளம் வழங்கும் ஒரு சின்னமாகவும், இயேசுவின் விரிந்த கைகள் பிரேசில் மக்களின் நேசத்தைக் குறிப்பதாகவும் திகழ்கிறது.


கொசுறு : இந்தச் சிலையை நான் முதன்முதலில் பார்க்க நேர்ந்தது ஜீ-எம்ஜிஎம் சேனலில் கண்ட 'Blame it on Rio' என்ற ஆங்கிலப் படத்தில் தான். டெமி மூரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. டெமி மூர் போன்ற புகழ் பெற்ற நடிகைக்கே இந்தப் படத்தில் ஒரு சின்ன சைடு ரோல் தான்னா பாத்துக்கங்களேன். படம் அங்கங்கே மெதுவா நகர்ந்தாலும் "ஜில்" டைப்பு தான் :)
http://en.wikipedia.org/wiki/Christ_the_Redeemer_(statue)

8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?
'தா' அல்லது தைவதம். இசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ஏழு. "ஸ ரி க ம ப த நி". ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு இயற்கையில் ஒரு மிருகத்தாலோ அல்லது ஒரு பறவையாலோ எழுப்பப் படும் ஒலியை ஆதாரமாகக் கொண்டது. இதில் 'த' என்னும் ஸ்வரம்குதிரையின் கணைப்பை அடிப்படையாகக் கொண்டது. மற்ற ஸ்வரங்கள் எந்த ஒலியை அடிப்படையாகக் கொண்டது என்று அறிந்து கொள்ள ப்ரியன் கொடுத்த கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.

நன்றி : http://janhaag.com/NP23thats.html


9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?
பிகினி. 1940களில் ஆணுஆயுத பரிசோதனைகளை பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்கு மேற்கே உள்ள தீவுக் கூட்டங்களில் அமெரிக்கா மேற்கொண்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப் பட்ட ஒரு தீவுக் கூட்டத்தின் பெயர் தான் பிகினி(Atoll of Bikini). 1946இல் லூயி ரியாட்(Louis Reard) என்ற பிரெஞ்சு நாட்டு கார் பொறியாளர்(பாருங்கைய்யா பாருங்க!!) இரத்தினச் சுருக்கமான(!?) ஒரு பெண்கள் நீச்சலுடையை வடிவமைத்தார். அதே சமயத்தில் அமெரிக்கா தன்னுடைய அணுஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததால் அதை போன்றே ஒரு பெரிய பரபரப்பை இவ்வுடை ஏற்படுத்தும் என்று எண்ணி அதற்கு 'பிகினி' என்று பெயர் சூட்டினார்.

ஆமா...இதுக்கு சுட்டி கொடுத்து தான் நீங்க வெவரம் தெரிஞ்சிக்கனுமாக்கும்? :)

10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?
ஜெர்ரி லூயிஸ். இவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காமெடி நடிகர். நாகேஷ் இவரைத் தன் ரோல் மாடலாகக் கருதினாலும், மனோரமா ஆச்சி என்ன சொல்லிருக்காங்கன்னு கொஞ்சம் படிச்சுப் பாருங்க.

http://www.hindu.com/2005/08/01/stories/2005080113040200.htm

கேள்விகளுக்குப் பதில் அளித்து இப்பதிவைக் கலகலப்பாகக் கொண்டுச் சென்ற நண்பர்கள் மகேந்திரன், மின்னல், பவன், பொன்ஸ், ப்ரியன், சின்னத்தம்பி, வணக்கத்துடன், தேவ், தளபதி சிபி, கோவி.கண்ணன், தம்பி, கப்பி, இலவசக் கொத்தனார், ராம் மற்றும் ஹிட்களை எகிறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களும் நன்றிகளும்.

Wednesday, August 23, 2006

குயி...குயி...குயி...குயிஜு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி-பதில் பதிவுங்க. முயற்சி செஞ்சு பாருங்க.

1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக்
கண்டத்தவர் யார்?

2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின்
திரைப்பெயர் என்ன?

3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இப்படத்தில் 'பாட்சா' ரஜினி
அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?


4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து
எதிர்பார்க்கப் படுவது என்ன?

5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?

6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."

---------- = ???

7. புகழ்பெற்ற இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?


8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?

9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?

10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?

பதிவு தலைப்பு உபயம் : கெக்கேபிக்குணி அக்கா

Thursday, August 03, 2006

கயவன் பதில்கள் (அ) ஹாய் கயவன்!

ஹலோ! நான் தாங்க கயவன் பேசறேன். கேள்வி எல்லாம் பெருசா கேட்டுப் புட்டு பதிலும் சொல்லாம, ரிசால்டும் சொல்லாம பசிக்குதுன்னு நைட்டு எட்டரை மணிக்கே ஓடிப் போன அதே கயவன் தானுங்க. இப்ப நேத்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதா சொல்லி ஒரேடியா ஒரு பதிவு கயமைத்தனமும் பண்ணிக்கிறேனுங்க.

1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?
பதில் : அன்னை தெரசா(Mother Teresa). இவர் அல்பேனியா(Albania) நாட்டைச் சேர்ந்தவர். பலர் சரியான பதிலைக் கூறியிருந்தார்கள்.


2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?
பதில் : முதல் மாஸ்டர் கம்போசர்களில் ஒருவர் என அழைக்கப்படும் மோசார்ட்(Wolfgang Amadeus Mozart). இசை கோர்வையின் பெயர் 'தி ரிகொய்ம்'(The Requiem'). தன்னுடைய இறப்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறு ஒருவருடைய மனைவியின் நினைவு நாள் அன்று இசைக்க தேவை என்று ஒரு தூதுவர் வந்து கேட்க, The Requiem முயற்சியில் ஈடுபட்டார் மோசார்ட். ஆனால் முழுதும் எழுதி முடிப்பதற்கு முன்னர் மோசார்ட் மர்மமான ஒரு காய்ச்சல் கண்டு காலம் ஆனார். மோசார்ட்டின் சிறந்த படைப்புகளில்(Master piece) ஒன்றாகக் கருதப்படுவது 'The Requiem'. இசையமைப்பாளரின் பெயரைச் சிலர் கூறியிருந்தாலும், இசை கோர்வையின் பெயரை யாரும் சொல்லவில்லை.

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)

பதில் : வியட்நாம் போரின் போது விமானப்படையின் நபாம்(Napalm) என்ற ரசாயனத் தாக்குதலின் போது தன் உடம்பு பாதி எரிந்த நிலையில் ஓடி வரும் சிறுமியின் படம் அது. இப்போரின் அவலங்களையும், கொடுமைகளையும் உலகத்தினவர்களைத் திரும்பி பார்க்கச் செய்த படம். சிறுமியின் பெயர் ஃபான் தி கிம் ஃபுக்(Phan Thi Kim Phuc), படம் எடுக்கப்பட்ட நாள் ஜூன் 8, 1972. புகைப்படம் எடுத்தவர் Associated Pressஐச் சேர்ந்த நிக் உட்(Nick Ut). ஒடம்பு எரிஞ்ச நெலையில ஒடியாற புள்ளையைப் படம் எடுத்துருக்கானே பாவி, காப்பாத்தக் கூடாதுன்னு என்னைப் போலவே நெனக்கிறவங்களுக்கு அந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரைக் காப்பாற்றியதும் நிக் தான்.

4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?
பதில் : டீபீ(Teepee). Red Indians என்று அழைக்கப் பட்டுக் கொண்டிருந்த இவர்களைத் தற்போது American Indians என்றோ Apache Indians என்றோ அழைக்கிறார்கள்.

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?
பதில் : கென்னத் பெயின்பிரிஜ்(Kenneth Bainbridge). மென்ஹட்டன் பிராஜக்ட்(Manhattan Project) என்று பெயர் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த அணுகுண்டு சோதனைகளின் முடிவுகளைப் பார்த்து பிராஜெக்டின் இயக்குநர் ஓபன்ஹெய்மரிடம்(J.Robert Oppenheimer) கூறியது. பலரும் ஓபன்ஹெய்மர் என்று பதிலளித்திருந்தனர். ஓபன்ஹெய்மர் கூறியது வேறு ஒரு மிகப் பிரபலமான வாக்கியம், பகவத் கீதையிலிருந்து எடுத்தாண்டது "I am become Death, the destroyer of worlds".

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?
பதில் : செப்புகு(Sepukku) அல்லது ஹராகிரி(Hara Kiri). எதிரியிடம் மாட்டிக் கொள்வதை விட மரணிப்பதே ஒரு சமுராய் வீரனுக்கு அழகு என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. எப்படி தற்கொலை செஞ்சிப்பாங்கன்னா கேக்கறீங்க? ரொம்ப சுலபம் ஜெண்டில்மென், உங்க வயித்தை நீங்களே கிழிச்சிக்கிட்டா நீங்களும் ஹரா கிரி செஞ்சிக்கிட்ட ஒரு சமுராய் வீரர் தான்.

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?
பதில் : கர்சன் துரை(Lord Curzon). கிழக்கு வங்காளம் என்றும் மேற்கு வங்காளம் என்றும் பிரிவினை நடந்த ஆண்டு 1905. கிழக்கு வங்காளத்தின் தற்போதைய பெயர் பங்கிளாதேஷ்.

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?
பதில் : பிரேணாக்(Brannock). ரொம்ப கடினமானதுன்னு நான் நெனச்ச கேள்வி. இதுக்கும் பல பேர் சரியான பதில் சொல்லிட்டாங்க. முதலில் விடை தந்தவர் ஒரு அனானிமஸ். அப்பா அனானிமஸுங்களா! உங்க பேரையும் கூட போட்டுக்கக் கூடாதா? தாவு தீந்துடுச்சு.

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.
பதில் : இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Leonard Spencer Churchill). உலகத் தலைவர்களின் பேச்சுகளிலேயே மிகவும் தாக்கத்தை(inspirational) ஏற்படுத்திய ஒரு உரை.
http://www.winstonchurchill.org/i4a/pages/index.cfm?pageid=391

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?
பதில் : பவேரியா மோட்டர் வர்க்ஸ்(Bavaria Motor Works). ஜெர்மன் மொழியில் 'Bayerische Motoren Werke AG'

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?
பதில் : இந்திய மேலாண்மை கழகம்(Indian Institute of Management, Ahmedabad).

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?
பதில் : கே.பி.சுந்தராம்பாள். படத்தின் பெயர் 'நந்தனார்'. ஒளவையார் என்று பலரும் கூறியிருந்தார்கள். பெண் வேடமிட்டு ஆண்கள் நடித்த அக்காலத்தில் ஆண் வேடமிட்டு கதாநாயகனாக(!) ஒரு பெண் நடித்தப் படம். இப்படத்தில் நடிப்பதைத் தவிர்க்க ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென்று கே.பி.சு கேட்க, தயாரிப்பாளரும் ஒத்துக் கொண்டதால் இப்படத்தில் இவர் நடித்தார் என்று எப்போதோ கேள்வி பட்டது.

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?
பதில் : ஸ்கிராபிள்(Scrabble). சிலர் விளையாட்டின் பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப் படுகிறது என்று எண்ணிவிட்டனர் என நினைக்கிறேன்.

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?
பதில் : மொதல்ல என்னை மன்னிக்கனும். படத்தோட பேரு "Steam Boat Willie". நான் தவறுதலா 'Free Boat Willy'னு கொடுத்துட்டேன். இப்படத்தில் தோன்றிய அந்த ஹாலிவுட் கதாபாத்திரம் 'மிக்கி மவுஸ்'(Mickey Mouse)

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?
பதில் : ஜெனரல் நார்மன் ஸ்வார்ஸ்காஃப்(Gen.Norman Schwarzkopf)

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)
பதில் : டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி(Danish East India Company). எங்கோ இருக்கும் ஸ்கேண்டினேவிய நாடான டென்மார்க்கிலிருந்தும் தமிழ்நாட்டில் வந்து வணிகம் செய்திருக்கிறார்கள் என நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஆயினும் ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகளைப் போல டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் பலநாள் நிலைக்க இயலவில்லை. பலரும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்று கூறியிருந்தனர்.

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?
பதில் : ஒட்டகம். ஹி..ஹி...

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?
பதில் : திலிப் குமார். கொத்ஸ் சொன்னது போல 'மருதநாயகம்'(வரலாற்று நாயகன்) இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதும் அவர் பெயர் முகமது யுசுப் கான் என்றானது.

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த வரலாற்றுச் சம்பவத்தினைத் தழுவி எடுக்கப் பட்டது?
பதில் : ஃபிரெஞ்சு அதிபரான சார்ல்ஸ் டி கால்(Charles de Gaulle)இன் மீது ஏற்பட்ட கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது.

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?
பதில் : சுப்பிரமணிய பாரதி. மிகச் சிலரே முயன்றிருந்தனர். சரியான பதில் அளித்தவர் ஒருவரே- அவர் நண்பர் முத்துகுமரன். சூப்பருங்க. இது எங்கோ எப்போதோ படித்தது. எனக்கும் மேற்கோள் எதுவும் நினைவில்லை. பாரதியாருக்கு அவருடைய இளைய சகோதரர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியதும் அதை கண்டு 'நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக்க அயலானின் மொழியான ஆங்கிலத்தில் ஏன் கடிதம் எழுதினாய். வேண்டுமானால் சம்ஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று தன் சகோதரருக்கு அறிவுறுத்தி பதில் மடல் இட்டார்.

கேள்வியைப் படித்ததும் தமிழை இகழ்ந்து சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது என்று பாரதியார் கூறியது போல தோன்றினாலும், இங்கு பாரதியார் அவ்வாறு எழுதியதின் காரணத்தை(context) ஆராய்வது நலம். பதினான்கு மொழிகளை அறிந்த ஒரு தமிழ் கவிஞன், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று நவின்றவன் சமஸ்கிருதத்தில் காயிதம் எழுதச் சொல்வதன் காரணம் என எனக்குப் படுவது - நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கும் மாற்றானின் மொழியான ஆங்கிலத்தைப் பேசுவதிலும் வளர்ப்பதையும் காட்டிலும் நம்மவர்களின் மொழியினை அறிந்து கொள்வதும் வளர்ப்பதும் தேசப் பற்றையும் வளர்க்கும் என்ற சிந்தனை இருந்திருக்க வேண்டும். I also feel that Bharathiar tries to strike a right balance between மொழிப் பற்று(Linguistic fervour) and தேசப் பற்று(Patriotism). ரெண்டு வரி தாங்க சொல்லிருக்கேன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

என்னடா நேத்து க்யூஸ் ப்ரோக்ராம், இன்னிக்கு திடீர்னு அறிவுரை - என்னாச்சு இவனுக்கு? எதனால இப்படி பிளேடு போடுறான்னு தானே நெனக்கிறீங்க? ப்ளாக்கர் சொல்லுது இது என்னோட நூறாவது பதிவாம். சந்தோஷ் தன்னோட நூறாவது பதிவுல கார்கில் வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நல்ல பதிவு போட்டது போல நாமும் எதாச்சும் உருப்படியா செய்யனும்னு ஒரு ரோசனை இருந்துச்சுங்க...அதுக்குத் தான் கொஞ்சம் பீட்டரைக் கலந்து வுட்டு ஒரு கருத்து சொல்லிருக்கொம்ங்க. நீங்கல்லாம் நெனக்கிற மாதிரி இன்னும் முழுசா முத்தலீங்கோ.

அப்புறம் குவிஸ்ஸில் யார் ஜெயிச்சாங்கனு ஒரு கேள்வி வரும். நூறாவது பதிவைச் சாக்கா வெச்சு இன்னுமொரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன். நம்பர் ஒன்னு, ரெண்டுன்னு யாரும் இல்லீங்கோ. க்யூஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நாம புதுசா என்ன தெரிஞ்சிக்கிட்டோம்ங்கிறதை மட்டும் தான் கணக்குல எடுத்துக்கனும்...நான் அப்படி தான் எடுத்துக்கிருவேன். படுவா! நீ வெளியே வாடா எங்களை எல்லாம் மாங்கு மாங்குன்னு ஒக்காந்து பதில் போட வச்சிட்டு பெலசாஃபியா பேசுறே...ஒனக்குன்னு ஆட்டோ வருதுடின்னு மக்கள்ஸ் சவுண்டு வுடறது கேக்குதுங்க. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்க. எனக்கு இன்னும் புள்ளக்குட்டி கூட இல்லீங்க. அதுனால பாவம் பாத்து வுட்டுடுங்க. அப்பிடியே தலை மேல துண்டைப் போட்டுக்கிட்டு குதிச்சு ஓடிப் போயிடுறேன்.

க்யூஸ்(குவிஸ் தான்) நடத்தறது எம்புட்டு கஷ்டம்னு புரிஞ்சிடுச்சுங்க. அமோக ஆதரவு தந்த நண்பர்கள் மகேந்திரன், மோகன் தாஸ், வியாபாரி, இளா, தேவ், கொத்தனார், உங்கள் நண்பன் சரவணன், மா.சிவகுமார், கோவி.கண்ணன், மின்னல், குமரன் எண்ணம், நியூஸ் ஃப்ரம் ப்ரசன்னா, லப்டப், மங்கை, ராசா, சிபி, நன்மனம், கப்பி பய, முத்துகுமரன், பிரபு ராஜா, ராம், ஹரிஹரன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நாலு அப்ரெண்டிசுங்க...சே அனானிமஸ்கள் அனைவருக்கும் எனது நன்றி. வின்னர், ரன்னர் தான் சொல்லலை எங்க பேரைக் கூட ஏன் சொல்லலைனு கேட்கற மாதிரி யாரு பேராவது வுட்டுப் போயிருந்தா உங்க பேரையும் சேத்துக்கங்க. நூறு பதிவுகள் வரை என்னை வளர வைத்து அழகு பார்த்த அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.

Wednesday, August 02, 2006

ஜிகே குவிஸ்(சிரிப்புக்காக இல்லீங்கோ...)

பாஸ்டன் பாலாவும், நம்ம வெங்கட்ரமணியும் கண்ணைக் காட்டி புதிர் எல்லாம் போட்டாங்க...அதப் பாத்து நமக்கும் ஒரு ஆசை. யாரையாச்சும் கேள்வி கேக்கனுமின்னு. ஆசை யாரை விட்டுச்சு சொல்லுங்க? சரி! இங்கே ஒரு 20 கேள்வி கேட்டிருக்கேன். இங்கண இருக்குற மண்டைங்க எல்லாம் அத நிமிசத்துல ஊதித் தள்ளிடுவாங்கன்னு தெரியும். அதுனால எல்லோரும் பங்கு பெறனும் என்ற நல்ல எண்ணத்தில்(குறிப்பா இந்திய குடிமகன்கள்) ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணிட்டு விடைகளை வெளியிடலாம்னு ஒரு எண்ணம்.

சரி இப்ப கேள்விகள்.
1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?

2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)


4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த பிரபலத்தின் மீது நடைபெற்ற கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது?

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?

Sunday, January 22, 2006

ஒரு சின்ன குவிஸுங்கோ - பதில்

சொன்னா ஆச்சரியப்படுவீங்க! இந்த இவேசுபிரான் சிலை இருப்பது நமது சென்னையில் தான். அட! எங்கப்பா? எங்களுக்கு தெரியாம? என்று கேட்பவர்களுக்காக - பரங்கிமலை என்று அழைக்கப்படும், புனித தோமையார் மலையின் (St.Thomas Mount)மேல் கிட்டத்தட்ட 300 அடி உயரத்தில் உள்ளது.

என்னப்பா? நாங்க எத்தனை வாட்டி போயிருக்கோம் நாங்க பார்த்ததேயில்லியே? எனக் கேட்பவர்களுக்கு - இவ்வாலயத்தின் பிரதான நுழைவாயில் நந்தம்பாக்கம், போரூர் செல்லும் பட் சாலை(Butt Road) வழியாக உள்ளது. வந்த வழியாகவே திரும்பிச் சென்றால் இச்சிலையைக் காண முடியாது. பட் சாலை வழியாக தேவாலயத்துக்கு வந்து், வடகிழக்கு புறமாக சற்று கீழிறங்கினீர்களானால் இச்சிலை தெரியும். இல்லையெனில் பரங்கிமலை ஆபீசர்ஸ் ட்ரெயினிங் அகாடெமி(OTA) அருகாமையில் ஒரு சிறிய பாதை உள்ளது, அவ்வழியாகச் சென்றால் முதலில் இச்சிலையைக் கண்டபின் தான் ஆலயத்துக்குச் செல்ல முடியும். படத்தில் சிறியதாகத் தோன்றினாலும் கிட்டத்தட்ட 15அடி உயரமுள்ள சிலை இது.

சரி அவ்வளவு தூரம் போய் சிலையைப் பார்த்துட்டீங்க! சிலைக்குப் பக்கத்துல் நின்னு பார்த்தா மீனம்பாக்கம் விமான நிலையத்து ஓடுபாதை அழகாகத் தெரியும். விமானம் மேலெழுந்து பறப்பதையும் பார்க்கலாம். கீழே இருக்கும் படத்தைப் பாருங்க. மலை மேலிருந்து எடுத்த புகைப்படம் இது. விமானம் take-off ஆகறதைத் தான் நான் எடுத்தேன். ஆனா அது இந்த படத்துல இங்க தெரியலை. படத்துல சமதளமாகக் கீழே தெரிவது தான் சென்னை விமான நிலைய ஓடுபாதை(ரன்வே).

எதிர் பார்த்த அளவு இதில் யாரும் பங்கு கொள்ளவில்லை எனினும் முயற்சி செய்த ராமநாதனுக்கு ஒரு "ஓ..."

Thursday, January 19, 2006

ஒரு சின்ன குவிஸுங்கோ!

கீழே இருக்குற இந்த படத்தைப் பாருங்க.


இந்த அழகிய இயேசுபிரானின் சிலை எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம். டாய் வெண்ரு! என்ன விளையாடறியா? இது கூட எங்களுக்கு தெரியாதானு பல பேர் கேக்கலாம். இத சாக்கா வச்சு தெரியாதவங்க நாலு பேர் தெரிஞ்சுக்குவாங்க இல்லியா?

(சே! பாழாப் போன பின்னூட்டம் வாங்கறதுக்கு என்னென்ன டகாய்த்தி வேலை, டயலாக் எல்லாம் விட வேண்டியிருக்கு. இதுக்காச்சும் யாருனா எதனா சொல்றாங்களானு பார்ப்போம்)