Friday, February 03, 2006

கிண்டி டைம்ஸ்

"உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்

இனி எல்லாம் சுகமே!"

மேலே உள்ள பாடல் வரிகளை கிண்டி பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் காலத்தில் எங்கள் சீனியர் ரஷீத் தன் ஃபேர்வெல்லின் போது முதன் முதலில் பாட கேட்டதும், நான் கண்டபடி உணர்ச்சிவசப் பட்டு போனேன்.

மனித உறவுகள் முடியற மாதிரி தெரிஞ்சாலும் அது ஒரு முடிவில்லாத தொடர்கதை, அதை உருவாக்கற உணர்வுகள் எல்லாம் சிறுகதை. இந்த தொடர்கதை இப்ப முடியற மாதிரி தெரிஞ்சாலும், அந்த முடிவிலிருந்து இன்னொரு கதை தொடங்கலாம். இந்த ஃபேர்வெல் கூட வர்ற போற ஒரு புது உறவுக்கான ஆரம்பம் தான். அடேங்கப்பா! என்னம்மா யோசிச்சிருக்காருப்பா கவிஞரு...ஃபேர்வெல்லுக்கு இதைவிட சிறப்பா ஒரு பாட்டு இருக்க முடியுமா அப்படினு கன்னா பின்னான்னு நானே அர்த்தம் கற்பிச்சுக்கிட்டு உணர்ச்சிவசப் பட்டிருக்கிறேன். அப்புறமா ரொம்ப நாளைக்கப்புறம் தான் தெரிஞ்சது அது "அவள் அப்படித் தான்" படத்துல சிவச்சந்திரன்(லட்சுமி வீட்டுக்காரரு)வர்ற ஒரு மேட்டர் பாட்டுன்னு. அது தெரிஞ்சதுக்கப்புறம் அட சே! இதுக்காடா இப்படி உருகனோம்னு ஆகிப்போச்சு.

எது எப்படியோ! அந்த சமயத்துல அந்த பாட்டைக் கேட்ட மாத்திரத்துல கபக்னு தொண்டையை வந்து அடைச்சது பாருங்க...அதை என்னான்னு சொல்றது? இன்னும் ஒரு வருஷம் தான் கண்ணா! அடுத்த வருஷம் நீயும் இப்படி தான் பாட்டை பாடிக்கிட்டோ ஆட்டோகிராப் எழுதிக்கிட்டோ நிக்கப் போறே அப்படினு அந்த நேரத்துல ஒரு அசரீரி. அதுக்கப்புறம் வந்த ஒரு வருஷம் அப்பப்போ உனக்கும் ஃபேர்வெல்னு ஒன்னு வரும்னு ஞாபகப் படுத்திக்கிட்டே இருப்பேன். 12 வருஷம் ஸ்கூலில் படிச்ச போது இல்லாத ஒரு நட்பு...ஒரு நெருக்கம்...நாலே நாலு வருஷம் படிச்ச நண்பர்களோட. கொஞ்சம் வளந்து பெரியவங்க ஆனதுனாலையா அது? காரண காரியங்களைச் சொல்ல தெரியலை. ஆனா அது என்னம்மோ தெரியலை...காலேஜைப் பத்தி நினைச்சாலே மனசுல ஒரு சந்தோஷம். அதே சமயம் இன்னும் கொஞ்ச நாள் காலேஜிலேயே இருந்திருக்கக் கூடாதா அப்படினு ஒரு ஏக்கம் ரெண்டும் சேர்ந்து வந்து தொத்திக்கும்.

அந்த பசுமையான நினைவுகளைப் பதிவதற்காக, ஈ-மெயில் ஃபார்வர்டுகளாகப் போட்டு ஓட்டிக் கொண்டிருந்த என் ஆங்கில வலைப்பதிவைக் கொஞ்சம் ஓரமாக வைத்துவிட்டு கைப்புள்ளையை உசுப்பி விட்டேன். சரி...வலைப்பூவை ஆரம்பிச்சாச்சு நோஸ்டால்ஜியாவை எப்படி வார்த்தையில கொண்டு வர்றதுனு நினனச்சா ஒன்னும் தோண மாட்டேங்குது. போதாக்குறைக்கு இங்க தமிழ் வலைப்பதிவர்கள் தங்கள் நினைவுகளை ஆங்கிலம் கலக்காத சுத்தத் தமிழில் கவிதை நடையில் விவரிப்பதை பார்த்ததும் கைப்புள்ளைக்கு ஒரு சின்ன காம்ப்ளெக்ஸ். ஆரம்பக் கோளாறு அதாங்க ஸ்டார்டிங் டிரபிள் வந்து வேற பாடாப் படுத்துது. எப்படியாச்சும் ஆரம்பிச்சுடனும்னு ஒவ்வொரு நாளும் உக்காருவேன். ஆனா 'க', 'அ','உ','கி' இப்படி ஏதாவது எழுதறதோட நின்னுடும் நம்ம கல்லூரி நினைவுகள்.

இன்னிக்கு எழுதுனாலே உண்டு அப்படினு நாலு வரி உக்கார்ந்து தட்டிட்டேன். இதுல காலேஜில் நான் சந்திச்ச நண்பர்கள், எதிர்கொண்ட அனுபவங்கள், கத்துக்கிட்ட பாடங்கள்...அப்படின்னு எதாச்சும் எழுதணும்னு எண்ணம். ஆனா இந்நேரம் வரைக்கும் அடுத்து இதைப் பத்தி என்ன எழுதப் போறேன்னு எனக்கே தெரியாது. அட தூ! இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பானு கேக்கறீங்களா? என்னங்க பண்றது... கைப்புள்ளையோட கெபாகிடி அவ்ளோ தான்!

சரி. மூன்றாம் ஆண்டு படிக்கும் போது நண்பன் தியானேசுவரன் 'ட்ரான்ஸ்போர்டேசன் என்சினியரிங்' வகுப்பின் போது பென்சில் கொண்டு தீட்டிய என் பின்னழகு(!?) ஓவியத்துடன் கிண்டி டைம்சுக்கு புள்ளையார் சுழி.

கண்டிப்பா சீக்கிரமே தொடருவேன்.

(பி.கு: நான் படிச்ச காலத்தில் சில மாதங்களுக்கு ஒரு முறை வந்த ஒரு மாத(!)இதழின் பேர் 'கிண்டி டைம்ஸ்')

10 comments:

Anonymous said...

கிண்டி டைம்ஸ்னதும் நான் ரொம்ப ஆர்வமா வந்தேன். (எங்க ஊரும் கிண்டிதாம்ல :) )

ஹ்ம்.. கடந்த கால நினைவுகள் எல்லாமே ரொம்ப பசுமையானது.. அழிவில்லாதது.. அழகா சொல்லணும்னா "அது ஒரு வசந்த காலம்" ம்ம்.. எழுதுங்க எழுதுங்க..

படிப்போம்

அன்புடன்
கீதா

பினாத்தல் சுரேஷ் said...

//(பி.கு: நான் படிச்ச காலத்தில் சில மாதங்களுக்கு ஒரு முறை வந்த ஒரு மாத(!)இதழின் பேர் 'கிண்டி டைம்ஸ்') //

pdf??

Karthik Jayanth said...

நல்லா இருக்கு.

அனந்த புலம்பல் - ஆஹா இப்படி எல்லாரும் கொசுவதிய்ய காட்டுனா இஙா office la எப்படி வேலை செயிரது.(இல்லண்ண மட்டும்னு..யாரு சொல்லுரது.)

சும்மாவே ஊரு நினப்பு வரும். இதுல்ல இது வேர.

கைப்புள்ள said...

Naveen Prakash has left a new comment on your post "கிண்டி டைம்ஸ்":

கைப்புள்ளேக்கு காம்ப்ளெக்ஸா ? never ! என்ன கைபுள்ளே 'வருத்தப் படாத வாலிபர் சங்கத்துக்கு' தலைவரா இருந்துட்டு டமிள் நடையப்பத்தி கவலைப் படலாமா ? இப்படியே continue பண்ணுங்க! இன்னமும் இந்த ஊரே உங்களை நம்பித்தான் இருக்கு !

கைப்புள்ள said...

//கிண்டி டைம்ஸ்னதும் நான் ரொம்ப ஆர்வமா வந்தேன்.//

அடடா! அம்மா வீட்டு ஞாபகங்களை அசை போடலாம்னு வந்த உங்களை நான் ஏமாத்திட்டேனோ?

//"அது ஒரு வசந்த காலம்" ம்ம்.. எழுதுங்க எழுதுங்க..

படிப்போம்//
உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. ஆனா இவ்வளவு ஆர்வமா கேக்கற உங்களோட எதிர்பார்ப்பை நிறைவு செய்யணும்னு நினைச்சா லைட்டா உதறுது

கைப்புள்ள said...

//pdf?? //

வாங்க சுரேஷ். இல்லீங்க pdf இல்லை. புத்தகம் தான். அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே 5ரூபாய்க்கு கிடைக்கும்.

இப்போ அது PDF வடிவத்தில் கிடைக்குதா என்னான்னு தெரியலை. என் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கிற நண்பன் ஜனாவைக் கேட்டு சொல்றேன்.

கைப்புள்ள said...

கார்த்திக்,
உங்க கருத்துகளுக்கு ரொம்ப நன்றி.

//office la எப்படி வேலை செயிரது.(இல்லண்ண மட்டும்னு..யாரு சொல்லுரது.)//

நம்ம கதையும் இதே தான். தமிழ் பதிவுகளைப் படிக்க ஆரம்பிச்ச நாளா எங்கே வேலை நடக்குது? என்னிக்கு ஆபிஸ்ல இண்டெர்நெட் அக்செஸ்ஸை புடுங்க போறானுங்களோ தெரியலை?

//சும்மாவே ஊரு நினப்பு வரும். இதுல்ல இது வேர. //
:)-

கைப்புள்ள said...

வாங்க நவீன்,
காலைலேருந்து Bloggerல எதோ பிரச்னை போல. நான் கொடுத்த பதில்களும் உங்க பின்னூட்டமும் காணாமப் போயிடிச்சு.அதை தான் நான் என் மயிலிலிருந்து ஒட்டியிருக்கேன்.

//இப்படியே continue பண்ணுங்க! இன்னமும் இந்த ஊரே உங்களை நம்பித்தான் இருக்கு ! //
ஆஹா! நீங்க தானா அவரு? பார்த்திபனுக்கு பக்கத்துவீட்டு காரரு? ஒரு க்ரூப்பா தான் கிளம்பிருப்பீங்க போலிருக்கு.

Deekshanya said...

arumaiyana padal athu. enaku romba pudikum.. walkman/mp3playerla night ketaa, superaa irukum. great minds think alike :)

கைப்புள்ள said...

//arumaiyana padal athu. enaku romba pudikum.. walkman/mp3playerla night ketaa, superaa irukum. great minds think alike :)//

வாங்க தீக்ஷ்,
எனக்கும் இந்த பாட்டு கேக்க ரொம்ப புடிக்கும். தங்கள் பாராட்டுக்கும் நன்றி.
:)