Sunday, February 05, 2006

தடிப்பசங்க!

உங்க வீட்டுல நீங்க ரெண்டே புள்ளைங்களா? கூடப் பொறந்த அக்காவோ தங்கச்சியோ கிடையாதா? என்னது உங்களுக்கும் ஒரே ஒரு தம்பியா? அட! உங்க அம்மாவுக்கும் ஒரு பொம்பளைப் புள்ள இல்லியேனு ஏக்கமா? வாங்க சார் வாங்க! ரொம்ப நெருங்கி வந்துட்டீங்க. சரி மேலே படிங்க.

காட்சி1:
நீங்களும் உங்க தம்பியும் உக்கார்ந்து காலையில டிபன் சாப்பிட்டுட்டு இருக்கீங்க. அம்மா அடுப்படியில தோசை போட்டுக்கிட்டு இருக்காங்க.

உங்க தம்பி ஒரு குரல் வுடறாரு "அம்மா! சட்னி காரம். சீக்கிரமா தண்ணி கொண்டு வாங்க".

“தோசை அடுப்புல தீயுது நீயே வந்து எடுத்து குடிச்சுக்க...” - இது அம்மா.

“ஐயோ காரம் தாங்கலை. சீக்கிரம் தண்ணி..” - மறுபடியும் இளவல் சவுண்டு

“பக்கத்துல தானே இருக்கு தண்ணி, உள்ள வேலையா இருக்கறவளைக் கூப்பிடுறியே.” ஆனாலும் அம்மா கோபமாக சமையல் கட்டிலிருந்து வெளியே வந்து - “இந்தா தண்ணி”

தீஞ்ச தோசை உங்கள் தட்டில் விழுகிறது. அதுவும் ஒரு தனி டேஸ்டு தான், அட்வைசோடு தொட்டு சாப்பிடுவதற்கு நல்லாருக்கும். அட்வைசா? எங்கே?

இதோ - “இவ்வளோ பெரிய பசங்க ஆயிட்டீங்க! சாப்பிடுறதுக்கு முன்னாடி தண்ணி எடுத்து வச்சுக்கிட்டு உக்காரணும்னு தெரியாது?”

காரம் கொஞ்சம் அடங்கனதும் இளவல் எகத்தாளத்தில் இறங்குகிறார் -”சாப்பிட குடுக்கறதுக்கு முன்னாடி தண்ணி வைக்கனும்னு உங்களுக்குத் தெரியாது?”

“நல்லா வாய் கிழிய கூடக் கூட பேசுங்க”. நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர் - "பேசுங்க". நீங்க பரிதாபமா பார்த்துட்டு இருக்கீங்க.

“இதுக்கு தான் வீட்டுல ஒரு பொட்டைப்புள்ள வேணுங்கறது. தன் வேலையையும் தானே செஞ்சுக்கிட்டு அம்மாவுக்கும் உதவியா இருக்கும். இப்படி தடிப்பசங்களாட்டம் உக்காந்த இடத்துலேருந்து அம்மாவை வேலை வாங்காது”

“ஆமா கிழிச்சாளுங்க! நீங்க தான் பார்த்தீங்களா பொண்ணுங்க எல்லா வீட்டு வேலையையும் செய்றாங்கனு?” தம்பி போருக்கு ஆயத்தம் ஆகிறார்.

“ஆமா!நீங்க மட்டும் என்ன கிழிச்சுட்டீங்களாம்?”

“நேத்து கூட நாட்டார் கடையிலே மூணு கிலோ கோதுமை வாங்கிட்டு வந்தேன்ல. முந்தா நேத்து வேகாத வெயில்ல போய் காய் யார் வாங்கிட்டு வந்தாவாம்?” - “பேசுங்க” என்ற சொல் தங்களைக் காயப்படுத்தியதால் புள்ளிவிவரத்தில் சூரப்புலியான தாங்கள், தம்பிக்குத் துணையாகப் போரில் இறங்குகிறீர்கள்.

“ஆமா!தோ தெரு முகனையில இருக்கு நாடார் கடை. என்னிக்கோ ஒரு நாள் காய் வாங்கி கொடுத்துட்டு மூணு வருஷத்துக்குச் சொல்லிக் காட்டுவீங்களே?” - உங்களைப் பெத்த அம்மாவாச்சே, உங்களை மேய்க்கிற வித்தை அவங்களுக்குத் தெரியாதா என்ன?

“வேலையில் ஒன்னும் இல்லன்னாலும், வாயில பாரு...காது வரைக்கும் நீளுது” - இது கொசுறு.

சுமூகமான பேச்சுவார்த்தையில் பயனில்லை எனக் கருதும் இளவல் போரைத் துவக்குகிறார்-”ஹலோ!மேடம் என்ன கூடக் கூட பேசறீங்க. சும்மா ஒரு தண்ணி கொண்டாந்ததுக்கு இவ்ளோ பேச்சா? டாக் லெஸ் வர்க் மோர்(Talk Less Work More)” என்று சொல்லிவிட்டு விளைவுகளை எதிர்பார்த்தவராய் ஒரு மூணு அடி நகர்ந்து கொள்ளுகிறார்.

உங்களுக்கு அவ்ளோ விவரம் பத்தாதுங்களே, தம்பியின் சொற்திறமையை ரசித்து புளகாங்கிதம் அடைவதற்கு முன்னாலேயே அம்மா கையில் இருக்கும் தோசை திருப்பி தங்களை வீறு கொண்டு தாக்குகிறது.

“அவன் தானேம்மா சொன்னான். என்ன ஏன் அடிக்கறீங்க?” - விழுந்த அடிக்கு ஒத்தடமாய் ஒரு கேள்வி.

“இரு அவனை மட்டும் உட்டுட்டேனா? அவனுக்கும் இருக்குது” - தோசை திருப்பியின் படையெடுப்பு சோபா மேல் ஏறி நின்னுக் கொண்டு இருக்கும் இளவலை நோக்குகிறது.

“டேய்! நீ அடி வாங்கிட்டு என்னையுமா போட்டுக் குடுக்கறே?” - இளவல் தன் சகோதர பாசத்தைக் காட்டுகிறார்.

“ஏன் அவன் சொல்லலைனா எங்களுக்குத் தெரியாதா?”. சோபா மேலே ஏறி அன்னையார் தன் அன்பை தோசைதிருப்பியின் வாயிலாகத் தன் இரண்டாம் குழவிக்கும் எடுத்துரைக்கிறார். “நாய்ங்களா! காலங்காத்தாலே ரெண்டு பேரும் சேர்ந்து தொண்டை தண்ணியை இப்படி வாங்குறீங்களே?”

“ஆ..ஐயோ! இப்படி தண்ணி கேட்டதுக்கு அடிச்சு கொல்றாங்களே!” - தங்களைக் காட்டிலும் ஓரிரு விழுப்புண் கூடுதலாகப் பெற்ற இளவலின் அக்குரலைக் கேட்டு எல்லையில்லா ஆனந்தம் கொள்கிறீர்களா?

கையைக் குடுங்க, “தடிப்பசங்க” கிளப்பில் உங்களை மனமாற வரவேற்கிறோம்!

காட்சி 2,3,4ஐ வேணும்னா இங்கே பின்னூட்டமாத் தொடருங்க, இல்லை இன்னும் கொஞ்ச நாள் நம்ம உளறலுக்காகப் பொறுத்துக்கங்க!

30 comments:

அனுசுயா said...

அய்யா இது பசங்கஇருக்கற வீட்டுல மட்டும் இல்ல. பசங்க பொண்ணுங்க இருவரும் இருக்கிற வீட்டிலும் நடைபெறும். என்ன பையனுக்கு வெறும் அடி மட்டும், பொண்ணுக்கு கொஞ்சம் திட்டு தூக்கலாக இருக்கும் அவ்வளவுதான்.

கைப்புள்ள said...

//பசங்க பொண்ணுங்க இருவரும் இருக்கிற வீட்டிலும் நடைபெறும். //

வாங்க அனுசுயா!
வீட்டுக்கு வீடு வாசப்படினு சொல்லுங்க.

rv said...

:)))

ரொம்ப நல்லாருக்கு கைப்புள்ள.. நீங்களும் நம்ம கேஸுதானா???

கைப்புள்ள said...

//நீங்களும் நம்ம கேஸுதானா??? //

ஆமா இராமநாதன்! ஆனா இளவலிடம் அடி வாங்கிய பாக்கியம் எல்லாம் உங்களுக்கு இருக்காது என நினைக்கிறேன்.
:))-

குமரன் (Kumaran) said...

படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு கைப்புள்ள. நாங்களும் ரெண்டு பசங்க தான் - நானும் என் தம்பியும். இது எங்க வீட்டுலயும் நடந்திருக்கும் அம்மா இருந்திருந்தாங்கன்னா...அவங்க தான் எங்க தொல்லை தாங்க முடியாம நான் பத்தாவது படிக்கிறப்பவே சொல்லாம கொள்ளாம சாமிகிட்ட போயிட்டாங்களே...

கைப்புள்ள said...

வாங்க குமரன்,
கேட்கறதுக்கே கஷ்டமா இருக்கு. நிஜமாவே என்ன சொல்றதுன்னு தெரியலை. அம்மாவின் பிரிவை வளர்ற வயசில் தாங்கிக்கறது ரொம்ப கஷ்டமா தான் இருந்திருக்கும்.

G.Ragavan said...

தடிப்பசங்கன்னு சொல்லீட்டீரு கைப்புள்ள...ம்ம்ம்ம்....லைட்டா வலிக்குது..

நான் சின்னப்புள்ளைல சொல் பேச்சே கேக்க மாட்டேனாம். ஆத்திரம் எக்கச்சக்கமா வருவாம். பின்னே...அப்பல்லாம் சண்டாளச் சட்டினி இல்லைன்னா தொண்டக்குழிக்குள்ள இட்டிலி தோச எறங்காதுல்ல....

வம்புன்னா வம்பு...படு வம்பு....வீட்டுல நிமிட்டாம்பழமாத் தின்னு தொட செவந்து போச்சு. படிப்பும் ரொம்பப் பிரமாதம். வருசம் கூடக் கூட ரேங்கும் கூடிச்சு. ஒன்னாபுல மொத ரேங்க்கு. ரெண்டாப்புல ரெண்டாவது ரேங்குங்குற மாதிரி.

ஆத்திரம் வந்துருச்சுன்னா பச்சத் தண்ணி தொண்டைல எறங்காது. ரொம்பவே ரோசமா இருந்தேனாம்.

அப்புறம் என்னவோ அப்பிராணியாயிட்டேன்னு சொல்றாங்க. என்னாலயே நம்ப முடியலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட ஊருல யாரோ அவரஞ்சிக் கொடியாட்டாம் ஆயிட்டான்னு நான் முன்னாடி வம்புக்காரனா இருந்தேன்னு சொல்லிக் காமிச்சாக.

இருந்தாலும் இன்னமும் அந்தப் பிடிவாதம் உள்ளதான் இருக்கு.

G.Ragavan said...

// அவங்க தான் எங்க தொல்லை தாங்க முடியாம நான் பத்தாவது படிக்கிறப்பவே சொல்லாம கொள்ளாம சாமிகிட்ட போயிட்டாங்களே... //

குமரன் மதுரைல நாங்க இருந்தப்ப டீ.ஆர்.வோ காலனில பக்கத்துல ஒரு அப்பார்ட்மெண்ட்டுல இதுதான் ஆச்சு.

அந்த வயசுல அம்மா இல்லைன்னா யாரு சாப்பாடு போடுவா..துணி தொவைப்பான்னுதான் மனசு போச்சு.

இப்பத்தான் உண்மையிலேயே அம்மா-அப்பான்னா என்னான்னு தெரியுது.

சின்னப்புள்ளைல அம்மா அப்பா ஊருக்குப் போனா எனக்குக் காச்ச வந்துரும். இத்தனைக்கும் தங்கச்சிங்க பாட்டீன்ன்னு எல்லாரும் இருப்பாங்க. அந்தக் காச்சல் அம்மா-அப்பா வந்ததும் சரியாப் போகும்.

இப்ப அம்மா அப்பா சென்னைல பாதி நாளு பெங்களூருல பாதி நாளுன்னு இருக்காங்க.

எனக்கு ஏதாச்சும் காச்ச கீச்ச வந்தா...மனசு மொதல்ல அம்மான்னுதான் தேடும்.

Gnaniyar @ நிலவு நண்பன் said...

படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு கைப்புள்ள

Ram.K said...

பொண்ணுங்கள எப்பிடி திட்டுவாய்ங்க ?

அதச் சொன்னா நல்லாயிருக்கும்ல?

:))

கைப்புள்ள said...

//கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட ஊருல யாரோ அவரஞ்சிக் கொடியாட்டாம் ஆயிட்டான்னு நான் முன்னாடி வம்புக்காரனா இருந்தேன்னு சொல்லிக் காமிச்சாக.//

வாங்க ராகவன்! விருமாண்டியா இருந்தவரு அன்பே சிவம்னு ஆயிட்டீருன்னு சொல்லுங்க!

கைப்புள்ள said...

//அந்த வயசுல அம்மா இல்லைன்னா யாரு சாப்பாடு போடுவா..துணி தொவைப்பான்னுதான் மனசு போச்சு.//

அதுக்கும் மேலே நம்ம வாழ்க்கையே மாறிடுதுன்றது என்னோட கருத்து. எனக்கு தெரிஞ்சவரு ஒருத்தரோட தம்பி அவங்க அம்மா தவறி போனதும் தன்னோட இஞ்சினியரிங் படிப்பையே பாதியில் விட்டுட்டாரு. அந்த அளவுக்கு ஈடுகட்ட முடியாத இழப்பு அது.

கைப்புள்ள said...

//படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருந்துச்சு கைப்புள்ள //

வாங்க ரசிகவ். ஒரு கவிஞரே நம்மள பாராட்டறாருன்னும் போது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நன்றி.

கைப்புள்ள said...

//பொண்ணுங்கள எப்பிடி திட்டுவாய்ங்க ?

அதச் சொன்னா நல்லாயிருக்கும்ல?//

யாராச்சும் விஷயம் தெரிஞ்சவங்க பச்சோந்தி சாரோட சந்தேகத்தை தீர்த்து வைங்கப்பா!

Anonymous said...

சூப்பர் போஸ்ட்

கைப்புள்ள said...

//சூப்பர் போஸ்ட்//

வாங்க உமா! உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Paavai said...

Ponnungala eppadi thittuvaangala -nalla kelvippa - engalai ellam kuchhi illa visiri kattai kondu vara solli - vegama vaannu vera instruction kuduthu, anda kucchiyalaye pottu saathuvaanga

கைப்புள்ள said...

//vegama vaannu vera instruction kuduthu, anda kucchiyalaye pottu saathuvaanga//

அன்பின் மிகுதியால லைட்டா அடிச்சிருப்பாங்கன்னு நெனக்கிறேன். இல்லன்னா நீங்க அநியாயத்துக்கு வாலா இருந்திருப்பீங்க போலிருக்கு. :)-
எங்க வீட்டுல எல்லாம் பொண்ணுங்களுக்கு ரொம்ப செல்லம். ரெண்டும் தடிப்பசங்கன்றதால எங்க அம்மா எங்க வீட்டுக்கு வர்ற பொண்ணுங்களுக்கு கிளிப்,ஹேர் பேண்டு, தோடு இதெல்லாம் கொடுப்பாங்க. இதுக்குன்னு ஒரு டப்பால இதெல்லாம் சேர்த்து வைப்பாங்கன்னா பார்த்துக்குங்களேன். எங்கப்பா பொண்ணுங்களை வாடி போடினு பேசுனா தோலை உரிச்சுடுவாரு...அது ஒரு strict no-no எங்க வீட்டுல. சித்தப்பா பொண்ணுங்க வந்தா பேரைச் சொல்லி கூப்பிடலாம், இல்லை வாம்மா, போம்மானு பேசலாம்.

சரி! ஒரு கேள்வி விசிறி கட்டைன்னா என்ன? விசிறி மட்டையைச் சொல்றீங்களா? Hand Fan?

பிரதீப் said...

கலக்கிப் போட்டீங்கய்யா..
எங்க வீட்டுல இரண்டோட ஒண்ணு மூணு தடிப்பசங்க இருக்குற கதை. ஆனா எந்த பூகோள விதிக்கும் பொருந்தும் படி கடைசி இளவல்தான் எப்போதும் இது போன்ற போராட்டங்களில் தலைவர்.

அதாவது ஏற்றிவிட்டுத் தான் மட்டும் கொஞ்சமாய் அடிவாங்கி மற்றவரை தர்ம அடி தின்ன வைப்பது.

கைப்புள்ள said...

//ஆனா எந்த பூகோள விதிக்கும் பொருந்தும் படி கடைசி இளவல்தான் எப்போதும் இது போன்ற போராட்டங்களில் தலைவர்.//

வாங்க பிரதீப்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. நீங்க சொல்ற மாதிரி வீட்டு கடைக்குட்டிக்கு எப்பவும் கொஞ்சம் வாய் ஜாஸ்தியா தான் இருக்கும்.
:)-

Arulvakku said...

வந்துட்டாண்யா வந்துட்டாண்யா
நாங்க வூட்டுல ஐந்து (தடி) பசங்க.
(எங்க அண்ணாச்சிங்க இத பார்த்தாங்கனா எனக்கு இப்பவே அடி வுளும். முதுகு ஒரு மாதிரியா இருக்கு)
என்ன பண்ண இளவல் வாய் நீண்டு போக பெரிசுக எங்கள போட்டு அடிக்க
நடுவுல நிக்கற நாங்க தானே இளப்பம்.
ஆனாலும் அந்த வாழ்க்கை மீண்டும் வராதா. ரொம்ப fபிலிங்கா இருக்குப்பா

கைப்புள்ள said...

//என்ன பண்ண இளவல் வாய் நீண்டு போக பெரிசுக எங்கள போட்டு அடிக்க
நடுவுல நிக்கற நாங்க தானே இளப்பம்.
ஆனாலும் அந்த வாழ்க்கை மீண்டும் வராதா. ரொம்ப fபிலிங்கா இருக்குப்பா//

வாங்க அடைக்கலராசா,
தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி. உண்மை தாங்க.
"அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்"
:)

பொன்ஸ்~~Poorna said...

எங்க வீட்லயும் இதே கதை தான். என்ன, ஒரு சின்ன மாற்றம். "ரெண்டு பொம்பிளைப் பிள்ளைங்கன்னு தான் பேரு. எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு." - இது தான் எங்க வீட்டு famous டயலாக்.

சிறில் அலெக்ஸ் said...

கைப்பு,
வேணாம் அழுதுருவேன்.

எங்கிருந்தையா இப்படி எழுத ஐடியா கிடைக்குது. அருமை.

Radha Sriram said...

haa......open aayidichu..romba nalla irukku ....ongalukkum onga thambikkum vayasu vidhyasam romba kammiyo??.appadi irundhal sibiling rivalry romba irukkum nnu kelvi paatrukken....

Radha

SP.VR. SUBBIAH said...

வீடு, அம்மான்னு இருந்தா இதெல்லாம் இல்லைன்னா சுவைக்காது சாமி. அடி மனசுல சுவை தங்கியிருக்கிறதுனலதான இன்னிக்கு இந்தூர்ல இருந்திகிட்டு உங்களால் இந்தமாதிரி பதிவெல்லாம் போடமுடியுது!
என்ன நான் சொல்றது சரிதானே ராசா?

கைப்புள்ள said...

//எங்க வீட்லயும் இதே கதை தான். என்ன, ஒரு சின்ன மாற்றம். "ரெண்டு பொம்பிளைப் பிள்ளைங்கன்னு தான் பேரு. எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியதா இருக்கு." - இது தான் எங்க வீட்டு famous டயலாக்.//

வாங்க பொன்ஸ்,
உங்க பின்னூட்டம் ரொம்ப நாளைக்கு முன்னாடி வந்தாலும், அதை பப்ளிஷ் பண்ணதுக்கப்புறம் என்னோட பதிவை என்னாலேயே திறக்க முடியலை ப்ளாக்கர் பிரச்னையால. நீங்க சொன்ன டயலாக்கை மொதல்ல எங்கம்மா கிட்ட சொல்லணும்...அப்ப அவங்க ரியாக்ஷன் எப்படி இருக்குன்னு பாக்கணும்.ஆனா அப்பவும் பொண்ணுங்களை விட்டு கொடுக்க மாட்டாங்க
:)-

கைப்புள்ள said...

//எங்கிருந்தையா இப்படி எழுத ஐடியா கிடைக்குது. அருமை.//

வாங்க சிறில்,
இது எங்க வீட்டுல தெனமும் நடக்கற கூத்து தான். அம்மாவை வம்புக்கிழுக்கலைன்னா 'தடிப்பசங்க' எங்க ரெண்டு பேருக்கும் எங்கிருந்து தூக்கம் வரும்?

கைப்புள்ள said...

//ongalukkum onga thambikkum vayasu vidhyasam romba kammiyo??.appadi irundhal sibiling rivalry romba irukkum nnu kelvi paatrukken....//

வாங்க மேடம்,
வயசு வித்தியாசம் ரொம்ப கம்மியெல்லாம் இல்லை. மூணு வயசு வித்தியாசம். எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருந்த 'அளவு கடந்த பாசத்தை' விவரிக்க சிப்லிங் ரைவல்ரிங்கிற வார்த்தை ரொம்ப எளிமையானதா எனக்குத் தோணுது. எத்தனை பாக்சிங் மேட்ச் ரெண்டு பேரும் ஆடியிருக்கோம்னு எனக்குத் தான் தெரியும்.
:)-

கைப்புள்ள said...

//அடி மனசுல சுவை தங்கியிருக்கிறதுனலதான இன்னிக்கு இந்தூர்ல இருந்திகிட்டு உங்களால் இந்தமாதிரி பதிவெல்லாம் போடமுடியுது!
என்ன நான் சொல்றது சரிதானே ராசா?//

வாங்க சுப்பையா சார்,
கண்டிப்பாங்க. நீங்க சொல்றது ரொம்ப சரிங்க. இந்த நினைவுகள் தானே இவ்வளவு தூரம் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சிருந்தாலும் நம்மளை நாமே மகிழ்ச்சியா வச்சுக்க உதவுது.