Tuesday, June 23, 2009

குழந்தைகளுக்கான கிராமியப் பாடல்கள்

தலைப்பைப் பாத்துட்டு பெரிசா திறனாய்வுக் கட்டுரை மாதிரி எதையும் எதிர்பாக்காதீங்க. ஏதோ எனக்கு தெரிஞ்ச சில விஷயங்களைச் சொல்றேன். குழந்தைகளுக்குப் பாடற பாட்டுன்னா நமக்கு எந்த பாட்டு நியாபகத்துக்கு வரும்? "நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான். ஏன்னா இந்தப் பாடல்கள் மிகப் பிரபலமான பாடல்கள். நம்மில் பலரும் இதை பத்தி கேள்வி பட்டிருப்போம்.

நான் சின்ன வயசுலே எங்க அம்மா பாடி கேட்ட ரெண்டு பாடல்களைப் பத்தி இங்கே சொல்றேன். பாடல்னு சொல்ல முடியாது. இதப் பாடற பெரியவங்க குழந்தையோட குழந்தையா ஒன்றிப் போகற மாதிரியான ஒரு உரையாடல்னு சொல்லலாம். அஞ்சாறு வரிகள் கொண்ட சின்னப் பாடல்கள் தான். இது ஏன் இவ்வளோ நாள் கழிச்சு இப்போ எனக்கு நியாபகம் வருதுன்னா எனக்காகவும் என் தம்பிக்காகவும் எங்க அம்மா பாடுனதை இப்போ என் பொண்ணுக்காக அதாவது அவங்க பேத்திக்காகப் பாடறாங்க. இதெல்லாம் எங்கம்மாவுக்கு எப்படி தெரியும்னு கேட்டேன், அவங்களுக்கும் சரியா நியாபகம் இல்லை. இதுக்கே எங்கம்மா முழுசும் கிராமத்துலேயே வளர்ந்தவங்க கிடையாது. ஏர் ஃபோர்ஸில் வேலை செஞ்ச எங்க தாத்தா கூட கல்கத்தா, நாக்பூர், பஞ்சாப், பெங்களூர் இப்படின்னு இந்தியாவிலேயே பல இடம் போனவங்க தான். எங்க தாத்தாவோட(அம்மாவைப் பெத்த அப்பா) ஊரு தென்னாற்காடு மாவட்டம் திட்டக்குடி தாலுகாவில் இருக்கற ஒரு சின்ன கிராமம். எங்க ஆயாவோட(அம்மாவைப் பெத்த அம்மா) ஊரு சிதம்பரம். அநேகமா இந்த ரெண்டு பகுதிகள்ல எங்கேயோ குழந்தைகளுக்குக் கிராமத்துப் பெண்கள் பாடற பாட்டாத் தான் இருந்திருக்கும். ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)

பாடல் 1:
நிலாவ நிலாவ எங்கெங்க போன?
வண்ணாங்கொளத்துக்கு மண்ணள்ளப் போனேன்
மண்ணு யான்?
வீடு கட்ட
வீடு யான்?
புள்ள பெற
புள்ள யான்?
கோரைப் பாய்ல குதிச்சு வெளையாட
தாழம் பாய்ல தவழ்ந்து வெளையாட

அதோ பாரு
உங்க அம்மாவும் அப்பாவும்
கட்டுச்சோறு கட்டிக்கிட்டு
கருவாடு சுட்டுக்கிட்டு
நாயை முன்னால வுட்டு
பூனையைப் பின்னால வுட்டு
அதோ பாரு
அங்க வர்றாங்க...

இதை பாடறவங்க தரையில மல்லாக்கப் படுத்துக்கிட்டு, கால் ரெண்டையும் கோபுரம் மாதிரி(ஆங்கில எழுத்து A மாதிரி) வச்சிக்கிட்டு குழந்தையை கால் மேல சாய்ச்சிக்கிட்டு முன்னேயும் பின்னேயும் ஆட்டிப் பாடற பாட்டு. மேல பாத்தீங்கன்னா "மண்ணு யான்"னு தான் எழுதிருக்கேன். "மண்ணு ஏன்"னு எழுதுனாலோ பாடுனாலோ அந்த ஃபீல் வராது. நாயை முன்னால வுட்டு பூனையைப் பின்னால வுட்டு
அதோ பாரு அங்க வர்றாங்க...ன்னு சொல்லிட்டு மேலே பாக்கனும். அப்போ குழந்தையும் மேல பாக்கும், அப்போ குழந்தைக்கு கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைப்பாங்க.

பாடல் 2:
ஈச்சங்காட்டுக்குப் போயி வாரேன்
வீட்டைப் பாத்துக்க சின்னாயி
பந்த மேல பனங்கா(பலகை) கெடக்குது
அதையும் பாத்துக்க சின்னாயி
ரத்தம் எல்லாம் இங்கே போ
சக்தி எல்லாம் இங்கே வா
கோழி முட்டை பொரிச்சு தரேன்
கோழி கிட்ட சொல்லாதே
வாத்து முட்டை பொரிச்சு தரேன்
வாத்து கிட்ட சொல்லாதே
காக்கா முட்டை பொரிச்சு தரேன்
காக்கா கிட்ட சொல்லாதே...

இந்த பாட்டுக்குன்னு ஒரு தனி ரிதம் இருக்கு. கொஞ்சம் வேகமாப் பாடனும், எதுகை மோனையோட நல்லாருக்கும். குழந்தையை உட்கார வச்சி கால் ரெண்டையும் நீட்டி ரத்தம் "எல்லாம் இங்கே போ சக்தி எல்லாம் இங்கே வா"ன்னு சொல்லும் போது ரெண்டு காலையும் நல்லா நீவி விடுவாங்க. என் பொண்ணுக்கு எங்கம்மா இந்த மாதிரி பண்ணும் போது ரொம்பப் பிடிக்கும். "கோழி முட்டை பொரிச்சு தரேன்
கோழி கிட்ட சொல்லாதே"ன்னு சொல்லிக்கிட்டே கால் விரல்கள்ல நெட்டி முறிப்பாங்க. ரெண்டு கால்லயும் இருக்கற பத்து விரல்களுக்கும் ஒவ்வொரு பறவை பேர் சொல்லுவாங்க. சில சமயம் பத்து பறவை பேர் நியாபகம் வரலைன்னா ஆட்டு முட்டை, யானை முட்டை எல்லாம் கூட பாட்டுல வந்துடும் :)

இன்னொரு விஷயம். வீட்டுல ஒரு சின்ன குழந்தை வந்துடுச்சுன்னு வையுங்களேன். நீங்க இத்தனை நாள் இத்தனை வருஷம் வளர்ந்து பெரியவனானப்போவெல்லாம் உங்களுக்குப் பாக்க கெடைக்காத உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும். உதாரணத்துக்குக் கல்லூரி பேராசிரியரா இருந்து ஓய்வு பெற்ற எங்க அப்பான்னா எனக்கு எப்பவும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்துக்கிட்டே இருக்கும். என்னோடயும், என் தம்பியோடயும் சிரிச்சிப் பேசி ஜோக் எல்லாம் அடிப்பாருன்னாலும், தன்னோட பேத்தியைத் தூக்கிக்கிட்டு வாசல்ல நின்னுக்கிட்டு "கா...கா..."ன்னு கத்தி காக்காவைக் காட்டறப்போ அவரு குழந்தையோட குழந்தை ஆகறதைப் பாத்தா எனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு. அதோட தாத்தாக்களுக்கும் பேத்திகளுக்கும் நடுவில் எப்போவும் இந்த விளையாட்டுத் தனங்கள் இருக்கும் போலிருக்கு. எங்கம்மாவோட சின்ன வயசுல அவங்க தாத்தா(அம்மாவைப் பெத்த அப்பா) எங்கம்மாவைப் பாத்து பாட்டு பாடுவாராம்.
"பஞ்சாப் லேடி கொஞ்சம் கஞ்சு இருந்தா தாடி"ன்னு :)

அதே மாதிரி நாம நம்ம பெத்தவங்க கிட்ட பேச முடியாததை பேரக்குழந்தைகள் தாத்தா/பாட்டி வயசுள்ளவங்க கிட்ட சுலபமாப் பேசிடுதுங்க. அதுங்களுக்கு அந்த வயசு வித்தியாசம் எல்லாம் புரியறதில்லை. அவங்க வித்தியாசமா எதாச்சும் பேசுனாலும் பெரியவங்க கண்டுக்கறதில்லை. இதை நானே கண்கூடாப் பாத்துருக்கேன். என்னோட தாத்தா(அம்மாவோட அப்பா) ஏர்ஃபோர்ஸ்லேருந்து ஓய்வு பெற்றதும் பெங்களூர்ல துணிக்கடை வச்சிருந்தாரு. டொம்லூர் பகுதியில் ஒரு சின்னக் கடை தான். அந்த கடைக்குப் பக்கத்துல இருக்கற வீடுகள்லேருந்து சில சின்னக் குழந்தைகள் சாயந்திர வேளைகள்ல எங்க தாத்தா கடைக்கு வந்து வெளையாடும்ங்க. அப்போ நான் காலேஜ் முடிச்சிட்டு வேலைக்குச் சேந்துருந்த சமயம். ஒரு நாள் நானும் தாத்தா கூட கடைக்குப் போயிருந்தேன். ராஷ்மின்னு ஒரு சின்னப் பொண்ணு அடிக்கடி எங்க தாத்தா கடைக்கு வரும். அந்த பொண்ணு கன்னடப் பொண்ணு, பெங்களூர்ல இருக்கறதுனால தமிழ் புரியும்னாலும் தமிழ் பேச வராது. எங்க தாத்தா பல வருஷமா பெங்களூர்ல இருந்தாலும் அவருக்குக் கன்னடம் பேச வராது. இவரு தமிழ்ல கேக்கற கேள்விகளுக்கு அந்தப் பொண்ணு புரிஞ்சிக்கிட்டு கன்னடத்துல பதில் சொல்றதை பாக்கறதுக்கே சுவாரசியமா இருக்கும். ஸ்கூலுக்குப் போனது, போயிட்டு வந்து டிபன் சாப்பிட்டது இதை பத்தி எல்லாம் கேள்வி கேட்டுட்டு எங்க தாத்தா அந்த பொண்ணு ராஷ்மி கிட்ட கேட்ட கேள்வி - "என்னை கட்டிக்கிறியாடி?". அந்த ஆறு வயசு பொண்ணுக்கு அது என்னா புரிஞ்சுதோ தெரியாது. ஆனா அது சொன்ன பதில் "ஐ...நிம் தலே" :)

31 comments:

ஆயில்யன் said...

/தன்னோட பேத்தியைத் தூக்கிக்கிட்டு வாசல்ல நின்னுக்கிட்டு "கா...கா..."ன்னு கத்தி காக்காவைக் காட்டறப்போ அவரு குழந்தையோட குழந்தை ஆகறதைப் பாத்தா எனக்கே கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு///

எங்க அப்பா, என் அண்ணன் பொண்ணை தூக்கி வைச்சுட்டு கொஞ்சுனப்ப நான் இதே மாதிரிதான் ஃபீல் பண்ணுனேன்! :)

கைப்புள்ள said...

ஆயில்ஸ்!
யூ தி ஃபர்ஸ்டுங்கோ.
:)

கோபிநாத் said...

அண்ணே...அப்படியே வுட்டுக்கு போயிட்டு வந்தது போல இருக்கு...இப்ப நம்ம வுட்டுலையும் இதே கூத்து தான் - எங்க அப்பாவும் அக்கா பெண்ணும் அடிக்கிற கூத்தை கேட்டு அட அவரா இப்படின்னு!! தோணுது ;)

\\உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும்.\\

இந்த வார்த்தையை படிக்கும் போதே ஒரு புன்னகை வருது...உங்களுக்கு ஒரு ரீப்பிட்டே ;)

கோபிநாத் said...

\\இதை பாடறவங்க தரையில மல்லாக்கப் படுத்துக்கிட்டு, கால் ரெண்டையும் கோபுரம் மாதிரி(inverted A shape) வச்சிக்கிட்டு குழந்தையை கால் மேல சாய்ச்சிக்கிட்டு முன்னேயும் பின்னேயும் ஆட்டிப் பாடற பாட்டு. \\

சின்ன வயசுல எங்க அம்மா இந்த மாதிரி பண்ணுவாங்க கூட பாட்டு தான் (சாஞ்சாடம்மா சாஞ்சாடு..) நான் எப்போ போயி அம்மா மேல ஏறியவுடன் எங்க அக்காவுக்கும் அப்பதான் ஆசை வரும்...ஆசை வந்தா சும்மாவா இருப்போம் கூட சண்டை...ஆகா..ஆகா.....;)

அண்ணே அர்ச்சனா குட்டிக்கு இதை எல்லாம் கண்டிப்பாக செய்யுங்க ;) இது வேண்டுக்கோள் இல்ல...கட்டாளை..கட்டளை ;))

கோபிநாத் said...

அண்ணே..நேரம் கிடைக்கும் போது இங்கையும் போயி பாருங்க..தாலாட்டுக்கு ஒரு ஸ்பெசல் பதிவு வச்சிருக்காங்க

http://thalatu.blogspot.com

;)

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.............;இதை நான் எப்டி நேத்து மிஸ் பண்ணேன்.

//வாசல்ல நின்னுக்கிட்டு "கா...கா..."ன்னு கத்தி காக்காவைக் காட்டறப்போ//

இப்டி நான் கத்தும்போது பாத்த, எங்கக்காக்கு ஒரு காக்காயோட கத்தும் இன்னொரு காக்காவா நான் தெரிஞ்சேனாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

அபி அப்பா said...

முதல் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. குருவி குருவி குழந்தைக்கு பூ கொண்டுவா என்கிற பாட்டு மாதிரி இருக்கு. அடுத்த பாட்டு கேட்டதில்லை! நல்ல பதிவு கைப்ஸ்!

நாகை சிவா said...

கலக்கல்ஸ் :)

நாகை சிவா said...

இந்த அளவுக்கு கஞ்சி போட்ட மாதிரி இருக்குற இந்த அப்பா மாருங்க எல்லாமே பேரன் பேத்தி அப்படியே மடிச்சு வச்சு துணி மாதிரி அடக்கமா இருக்காங்க.. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை எஜமான்!

நாகை சிவா said...

நீங்க பாடின பாட்டு எல்லாம் ஐ மீன் டைப்பிய பாட்டு எல்லாம் இது வரை நான் கேட்டது இல்லை. :))))

Iyappan Krishnan said...

hmm

கைப்புள்ள said...

//அண்ணே...அப்படியே வுட்டுக்கு போயிட்டு வந்தது போல இருக்கு...இப்ப நம்ம வுட்டுலையும் இதே கூத்து தான் - எங்க அப்பாவும் அக்கா பெண்ணும் அடிக்கிற கூத்தை கேட்டு அட அவரா இப்படின்னு!! தோணுது ;)//
வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போலிருக்கு.
:)

\\உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும்.\\

இந்த வார்த்தையை படிக்கும் போதே ஒரு புன்னகை வருது...உங்களுக்கு ஒரு ரீப்பிட்டே ;)//
நன்றி...நன்றி...நன்றி கோபி.
:)

கைப்புள்ள said...

//சின்ன வயசுல எங்க அம்மா இந்த மாதிரி பண்ணுவாங்க கூட பாட்டு தான் (சாஞ்சாடம்மா சாஞ்சாடு..) நான் எப்போ போயி அம்மா மேல ஏறியவுடன் எங்க அக்காவுக்கும் அப்பதான் ஆசை வரும்...ஆசை வந்தா சும்மாவா இருப்போம் கூட சண்டை...ஆகா..ஆகா.....;)
//

ஆகா...நல்ல நினைவுகள் கோபி. பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

//

அண்ணே அர்ச்சனா குட்டிக்கு இதை எல்லாம் கண்டிப்பாக செய்யுங்க ;) இது வேண்டுக்கோள் இல்ல...கட்டாளை..கட்டளை ;))//

அழகிய தமிழ்மகனே காட்டாறா வந்து கட்டளளயிடும் போது மீற முடியுமா? செய்யறேன்...செய்யறேன்...செய்யறேன்.
:)

கைப்புள்ள said...

//அண்ணே..நேரம் கிடைக்கும் போது இங்கையும் போயி பாருங்க..தாலாட்டுக்கு ஒரு ஸ்பெசல் பதிவு வச்சிருக்காங்க

http://thalatu.blogspot.com

;)//

பகிர்ந்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க.
:)

கைப்புள்ள said...

//இப்டி நான் கத்தும்போது பாத்த, எங்கக்காக்கு ஒரு காக்காயோட கத்தும் இன்னொரு காக்காவா நான் தெரிஞ்சேனாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..//

யூ தி ஃபிஃப்டீந்த். மத்தபடி நோ கமெண்ட்ஸ்.
:)

கைப்புள்ள said...

//முதல் பாட்டு கேட்ட மாதிரி இருக்கு. குருவி குருவி குழந்தைக்கு பூ கொண்டுவா என்கிற பாட்டு மாதிரி இருக்கு. அடுத்த பாட்டு கேட்டதில்லை! நல்ல பதிவு கைப்ஸ்!//

நன்றி அப்பாஜி.
:)

கைப்புள்ள said...

//இந்த அளவுக்கு கஞ்சி போட்ட மாதிரி இருக்குற இந்த அப்பா மாருங்க எல்லாமே பேரன் பேத்தி அப்படியே மடிச்சு வச்சு துணி மாதிரி அடக்கமா இருக்காங்க.. அது என்ன மாயமோ மந்திரமோ தெரியலை எஜமான்!//

ஆமாம்ம்ப்பா புலி. நம்மளைத் திட்டன விஷயங்களுக்குக் கூட பேரன் பேத்தியைத் திட்ட மாட்டாங்க.
:)

கைப்புள்ள said...

//hmm//

நன்றிங்க அண்ணாச்சீ.
:)

துபாய் ராஜா said...

//"நாம நம்ம பெத்தவங்க கிட்ட பேச முடியாததை பேரக்குழந்தைகள் தாத்தா/பாட்டி வயசுள்ளவங்க கிட்ட சுலபமாப் பேசிடுதுங்க."//

உண்மைதான் தல.

ஊட்டுக்கு ஊடு வாசப்படிங்கோ.

நல்லதொரு பகிர்வு.

சந்தனமுல்லை said...

//"நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடிவா மலை மீதேறிவா" இல்லன்னா "சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு" இந்த பாடல்கள் தான்.//

அப்புறம் கைவீசம்மா கைவீசு! :-)

//ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)
//

அவ்வ்வ்..முடியலை...என்னா ஆராய்ச்சி..என்னா ஆராய்ச்சி! :-)

சந்தனமுல்லை said...

//இத்தனை நாள் இத்தனை வருஷம் வளர்ந்து பெரியவனானப்போவெல்லாம் உங்களுக்குப் பாக்க கெடைக்காத உங்க அம்மா அப்பாவோட இன்னொரு முகம் உங்களுக்குப் பாக்க கெடைக்கும்//

100% வழிமொழியறேன்!!! :-)

சந்தனமுல்லை said...

நல்ல இடுகை..தாத்தா பாட்டிகளின் இந்த அன்பும், நம்மை சில சமயங்களில் அம்மா அப்பாக்கிட்டேயிருந்து காப்பாத்தி அடைக்கலம் தர்றதும், அலுக்காம கதைகள் சொல்றதும்...அதுவும் சொன்ன கதையையே எத்தனை தடவை சொல்லச் சொன்னாலும் சொல்றதும்..சான்ஸே இல்ல...ஆயா-தாத்தாக்கள் வாழ்க!! :-)

Iyappan Krishnan said...

http://kaladi.blogspot.com/2009/06/blog-post_25.html

பரிசல்காரன் said...

மிகச் சிறந்ததொரு இடுகை நண்பரே...

கைப்புள்ள said...

//உண்மைதான் தல.

ஊட்டுக்கு ஊடு வாசப்படிங்கோ.

நல்லதொரு பகிர்வு.//

வெல்கம் பேக் துபாய் ராஜா. வளர நன்னி.
:)

கைப்புள்ள said...

//அப்புறம் கைவீசம்மா கைவீசு! :-)

//ஏன் இவ்வளவு உறுதியாச் சொல்றேன்னா கண்டிப்பா எங்கம்மா இதையெல்லாம் பஞ்சாப்ல கத்துக்கிட்டிருக்க முடியாது :)
//

அவ்வ்வ்..முடியலை...என்னா ஆராய்ச்சி..என்னா ஆராய்ச்சி! :-)//

ஹி...ஹி...நன்றிங்கங்கோ.

:)

கைப்புள்ள said...

//நல்ல இடுகை..தாத்தா பாட்டிகளின் இந்த அன்பும், நம்மை சில சமயங்களில் அம்மா அப்பாக்கிட்டேயிருந்து காப்பாத்தி அடைக்கலம் தர்றதும், அலுக்காம கதைகள் சொல்றதும்...அதுவும் சொன்ன கதையையே எத்தனை தடவை சொல்லச் சொன்னாலும் சொல்றதும்..சான்ஸே இல்ல...ஆயா-தாத்தாக்கள் வாழ்க!! :-)//



நானும் ஒருக்கா உங்களோட சேர்ந்து சொல்லிக்கிறேன்...ஆயா தாத்தாக்கள் வாழ்க.
:)

கைப்புள்ள said...

//மிகச் சிறந்ததொரு இடுகை நண்பரே...//

பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க கிருஷ்ணா.
:)

சாந்தி மாரியப்பன் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_05.html

ADHI VENKAT said...

அன்புடையீர்,

உங்கள் தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன்.

http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_12.html

தங்கள் தகவலுக்காக!

நட்புடன்

ஆதி வெங்கட்
திருவரங்கம்

Kasthuri Rengan said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

வலைச்சரம் மூலம் வந்தேன்...

நன்றி