Monday, December 24, 2007

'தலை'நகரம் - 4 (வாழ்த்துகள்)

தபால் தலைகள் மூலமா பல விஷயங்களைத் தெரிஞ்சிக்க முடியும். அவை அங்குல அளவுள்ள அகராதிகள் என்பதும் உண்மை தான். ஆனால் கண்டதும் காண்பவர்க்கு மகிழ்ச்சியை உண்டு பண்ணும் ஒரு வேலையையும் தபால் தலைகள் செய்கின்றன. அவை வாழ்த்து தெரிவிப்பது. அஞ்சல் உறையில் ஒட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய வண்ணமிகு காகிதத்தில் அழகிய படங்களையும் நல்வாழ்த்துச் செய்தியையும் கண்டால் யாருக்குத் தான் மனதில் மகிழ்ச்சி பிறக்காது? அவ்வாறு வாழ்த்து தெரிவிப்பதற்காக பல நாட்டுத் தபால்துறைகளாலும் வெளியிடப்பட்ட தபால் தலைகளை இப்பதிவில் காண்லாம்.

சிறு வயதில் 'Season's Greetings' என்ற வாழ்த்தைக் காணும் போதெல்லாம் குழப்பம் ஏற்படும். எந்த பண்டிகையினை ஒட்டி வாழ்த்துவதற்காக இப்படி வாழ்த்துகிறார்கள் என்று? ஆனால் டிசம்பர் கடைசியிலும், புத்தாண்டு துவக்கத்திலும் வரும் அனைத்து திருநாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக வாழ்த்து தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தப் பெறும் சொற்றொடர் தான் 'Season's Greetings'. அமெரிக்கா வெளியிட்டுள்ள வாழ்த்து தபால்தலை கீழே.


கிறிஸ்துமஸ் வரும் டிசம்பர் மாதத்தில் தான் யூதர்களின் எட்டு நாள் பண்டிகையான ஹனுக்கா(Hanukkah) கொண்டாடப்படுகிறது. வருடத்திற்கு வருடம் இந்த எட்டு நாட்களின் தேதிகள் மட்டும் மாறுபடுகிறது. நவம்பர் கடைசியிலும் டிசம்பர் துவக்கத்திலோ இவ்வெட்டு நாட்கள் அமைகின்றது. டென்மார்க் நாட்டுத் தபால் தலையைக் கீழே காணுங்கள். டேவிட்டின் நட்சத்திரத்தை(Star of David) ஒரு சிறுவன் தன் வீட்டு வாசலில் தொங்க விடுகிறான். பனிமழையையும் மகிழ்ச்சியான சிறுவனையும் பார்க்கறதற்கு நல்லா இருக்குதில்ல?


கீழே இருப்பது கணடா நாட்டுத் தபால் தலை. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது நடக்கும் சாண்டாக்ளாஸின் ஊர்வலத்தைச் சித்தரிக்கும் வண்ணம் இத்தபால் தலை அமைந்திருக்கிறது. அத்துடன் ப்ரெஞ்சு மொழியில் கிறிஸ்துமஸ் திருநாளை 'நோயல்'(Noel) என்று அழைப்பார்கள் என்றும் தெரிந்து கொண்டேன். அத்துடன் கிறிஸ்துமஸ் பரிசு கொண்டு வரும் தாத்தாவான சாண்டா க்ளாஸையும் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். உதாரணமாக
ஃப்ரான்சு நாட்டில் 'Le Père Noël ' அல்லது க்றிஸ்துமஸ் தந்தை
ஸ்பெயினில் 'Papa Noël'
துருக்கியில் 'Noël Baba'
ஸ்விட்சர்லாந்தில் 'Christkind'
முழு பட்டியலும் வேண்டும் என்றால் இங்குச் சுட்டுங்கள்.


க்றிஸ்துமஸ் பண்டிகையையும் ஏசு க்றிஸ்துவின் அவதரிப்பையும் சித்தரிக்கும் அழகிய தபால்தலைகளை ராயல் மெயில் வெளியிட்டுள்ளது.

க்றிஸ்துமஸ் மரத்துடன் விக்டோரியா காலத்து உடைகள்(Victorian Dress) அணிந்து குதூகலிக்கும் குடும்பத்தினர்.


பிறை நிலவு வடிவில் சாண்டா கிளாஸ். அவருடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டிருக்கும் குழந்தைகள்.


குழந்தை ஏசுவிற்கு மஜாய் மன்னர்களின் பரிசு(Gifts of Magi).


நட்பு புன்னகை பூக்கும் சாண்டா க்ளாஸ்.


கிழக்கு திசையில் இருந்து ஏசுவைக் காண வந்த மஜாய் மன்னர்கள்(Magi or 'Three Wise Men from the East') ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி ஏசுவை வந்தடைந்தார்களாம்.

'Lo, the star which they saw in the east'

குழந்தை ஏசுவைச் சித்தரிக்கும் இன்னொரு படம்.


புனித மரியாளும் பரிசுத்த ஆவியும்.

'Blessed is thou amongst women'

புனித மரியாளும் குழந்தை ஏசுவும் - ஹங்கேரி நாட்டுத் தபால் தலை. மக்யார்(Magyar) என்பது அவர்களுடைய மொழியில் அந்நாட்டின் பெயர். அவர்களுடைய மொழியின் பெயரும் மக்யார் தான்.


ஜமைக்கா நாட்டின் க்றிஸ்துமஸ் தபால் தலை.


1993 ஆம் இலங்கையினால் வெளியிடப்பட்ட க்றிஸ்துமஸ் தபால் தலை. க்றிஸ்துமஸ் திருநாளை 'நத்தார்' என்றும் அழைக்கிறார்கள் என்று இத்தபால் தலையைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். ஒரு வேளை இலங்கையில் மட்டும் நத்தார் என்று அழைக்கிறார்களோ என கூகிளில் தேடியதில் 2006இல் எழுதப்பட்ட பாஸ்டன் பாலாவின் பதிவும் மலைநாடான் ஐயாவின் பதிவும் சிக்கியது. இன்று காலை பதிவர் மாயாவும் 'நத்தார்' வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். எல்லாருக்கும் தெரிந்த சொல்லான இது எனக்கு மட்டும் தான் பரிச்சயம் இல்லாது போய் விட்டது போலிருக்கு. இதிலிருந்து என்ன தெரியுதுன்னா 'கற்றது கைம்மண்ணளவு கல்லாதது ஸ்டாம்ப் அளவு".

சரி இத்தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது. அது என்னவென்று கண்டுபிடிக்க முடிந்தவர்கள் கண்டுபிடித்துச் சொல்லுங்கள். அடுத்த பதிவு இதனைப் பற்றியது தான்.

க்றிஸ்துமஸ் திருநாளுக்கு மட்டுமின்றி புத்தாண்டுக்கும் வாழ்த்து தெரிவிக்க பலநாட்டு தபால்துறைகளும் தபால்தலைகளை வெளியிடுகின்றன. 2008 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக இந்திய தபால்துறை 15 டிசம்பர் 2007 அன்று வெளியிட்டுள்ள ஐந்து அழகிய தபால் தலைகள் கீழே.






நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய க்றிஸ்துமஸ் திருநாள்(நத்தார் தினம்) வாழ்த்துகளையும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Saturday, December 22, 2007

'தலை'நகரம் - 3

சென்ற பதிவில் பயன்பாட்டு முறைகளினால் தபால்தலைகளின் வகைகளைப் பார்த்தோம். அவை Definitive மற்றும் Commemorative என இரு வகைப்படும். இதை தவிர தபால்தலை சேகரிப்பாளர்கள்(Stamp Collectors அல்லது Philatelists)தபால்தலைகளை இரு வகைபடுத்துகின்றனர். அவையாவன -
1. பயன்படுத்தப்பட்ட தபால்தலைகள்(Used Stamps)- அஞ்சல் சேவையில் பயன்படுத்தப்பட்ட பின் தபால்தலை சேகரிப்பாளர்களால் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Used Stamps' என்கின்றனர். இவ்வகை தபால்தலைகளில் அனுப்பப்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் அலுவலக முத்திரை இருக்கும். அத்துடன் பயன்படுத்தப்பட்டமையால் தபால்தலையின் பின்புறம் பசையின் அடையாளம் இருக்கலாம்.

2. பயன்படுத்தப்படாத புதிய தபால்தலைகள்(Unused or Mint Stamps)- அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டதும் உபயோகப் படுத்தப்படாமல் சேகரிக்கப்படும் தபால்தலைகளை 'Mint Stamps'என்கின்றனர். தபால்தலையின் மதிப்பைப் பொறுத்தவரை பயன்படுத்தப்படாத தபால்தலைகளுக்கு சேகரிப்பாளர்களிடம் அதிக மதிப்புள்ளது. எனினும் பிரபலங்கள் பயன்படுத்திய தபால்தலைகளுக்கு இன்றளவும் பெருமதிப்புள்ளது. உதாரணமாக மார்ட்டின் லூதர் கிங்கோ, மகாத்மா காந்தியோ எழுதிய பழைய கடிதத்தில் உள்ள பயன்படுத்தப்பட்ட தபால்தலைக்கோ அல்லது அஞ்சல் உறைக்கோ அதிக மதிப்புள்ளது.

கீழே இருப்பது சவுதி அரேபிய நாட்டு தபால்துறையால் மெக்காவில் உள்ள 'காபா'வைச் ((Kaaba)சித்தரிக்கும் தபால் தலை. புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் ஹாஜிக்கள் காபாவை ஏழு முறை சுற்றி வருவார்கள் எனத் தெரிந்து கொண்டேன். தபால்தலையைப் பார்த்த மாத்திரத்திலேயே இது ஒரு பயன்படுத்தப்பட்ட அஞ்சல் வில்லை எனப் புரிந்திருக்கும்.


ஃபின்லாந்து நாட்டின் நூல்கண்டு அஞ்சல் வில்லை.

தபால்தலைகளில் உள்ள தகவல்களைக் கவனமாகக் கவனிக்கத் தொடங்கி விட்டால் அதை விட சிறந்த பொழுதுபோக்கு வேறில்லை. தபால்தலைகள் சொல்லும் கதைகளும் ஏராளம். பல சமயங்களில் இவை ஒரு அங்குல அளவுள்ள அகராதிகளாகவும் விளங்கும். கதைகளை முழுமையாகச் சொல்ல முடியாவிட்டாலும் ஒரு விஷயத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை இவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உறுதி.

உதாரணமாக உருகுவே நாட்டுத் தபால்துறையினரால் 1999ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இத்தபால்தலையைப் பாருங்கள்.

'Los Ultimos Charruas'என்றால் ஸ்பேனிஷ் மொழியில் 'கடைசி சருவாக்கள்' எனப் பொருள். என்னவென்று தெரிந்து கொள்ள நேற்று விகிபீடியாவையும் கூகிளையும் தேடியதில் தெரிந்த விஷயங்கள் ஆச்சரியப்பட வைத்தன. உருகுவே நாட்டில் 16ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களான ஸ்பேனிஷ் நாட்டவர்கள் கால்பதிப்பதற்கு முன் வாழ்ந்த பழங்குடியின மக்கள் தான் சருவாக்கள்(Charruas). வேட்டையாடுவதும் மீன்பிடிப்பதும் இவர்களுடைய தொழில்களாக இருந்து வந்துள்ளன. இவர்களை உருகுவே இந்தியர்கள்(Uruguay Indians) என்றும் அழைக்கின்றனர். அம்மண்ணின் மைந்தர்களான சருவாக்கள் ஸ்பேனியர்கள் கால்பதிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னர் பல்லாண்டு காலம் ஸ்பேனியர்களுடன் போர் நடந்து வந்துள்ளது. அப்பகுதியில் மற்ற பழங்குடியினருடன் இவர்களுக்கு இருந்த பகையின் காரணத்தாலும், ஐரோப்பியர்களுடன் இருந்த விரோதத்தின் காரணத்தாலும், இவ்வின மக்கள் பல்லாயிரக் கணக்கில் மடியத் தொடங்கினர். அத்துடன் ஸ்பேனியர்கள் இவர்களைத் தேடிக் கண்டுபிடித்தும் அழித்து வந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெறும் 18 சருவாக்கள் மட்டுமே இருந்துள்ளனர். கேள்விப்படவே மிக விநோதமாக இருந்தது. மிருகங்களில் அழிவுநிலையில் உள்ள ஜீவராசிகள்(endangered species) எனச் சொல்வோமே அது போல இருந்தது. மண்ணாசையின் காரணமாக ஒரு இனத்தையே இன்னொரு இனம் அழித்த செய்தி நம்புவதற்குச் சற்று கடினமாகவும் வருத்தமளிக்க வைப்பதாகவும் இருந்தது.

1833 ஆம் ஆண்டு மொத்தம் நான்கு சருவாக்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர். அவர்களையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசிற்கு நாடு கடத்தியுள்ளனர். அங்கும் மிருகங்களை விட கீழ்தரமாக இவர்களை நடத்தியுள்ளனர். பாரிசில் இவர்களைக் காட்சி பொருட்களைப் போல கண்ட ஒரு ஓவியர் வரைந்த படம் தான் தபால்தலையாக வெளியிடப்பட்டுள்ளது. இதே காட்சியைச் சித்தரிக்கும் வண்ணம் உருகுவே நாட்டு தலைநகரான மாண்டிவீடியோவில் இதே போன்றொரு சிலையையும் நிறுவியிருக்கிறார்கள். மேலும் விபரம் தேவையானால் இத்தபால்தலை வெளியீட்டை ஒட்டி உருகுவே தபால்துறையின் வலைதளத்தில் வெளியான விபரங்களைப் பாருங்கள்.
தபால்தலையின் ஒரு மூலையில் "J.Cowles Prichard" என எழுதப்பட்டிருப்பதை கண்டு கூகிளில் தேடியதும் இவர் ஒரு Anthropologist(மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் குறித்து ஆய்வு செய்பவர்) எனத் தெரிந்தது. இவர் எழுதியுள்ள 'The Natural History of Man' எனும் புத்தகத்திலும் இவ்வினத்தினரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தகத்தின் 450ஆவது பக்கத்தில் இதே தபால்தலையை ஓவியமாகக் காணலாம்.

Text not available

மேலே உள்ளது அப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி.

உருகுவே என்றதும் உங்களுக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருவது யார்? தமிழ்கூறு இவ்வலைப்பூவுலகில் ஒரே ஒருத்தர் தான். ஆமாங்க, சருவாக்களின் கதையை அறிந்து கொள்ள காரணமாக இருந்த இந்த Mint stamp - காஞ்சித் தமிழ்மகன், தென்னமேரிக்க தென்றல், டெக்ஸால் ஷகீலா...சே...டகீலா, வருங்கால உருகுவே ஜனாதிபதி, ஸ்பேனிஷ் மொழிஞாயிறு, ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவர் அவர்களுடைய உபயம் என்று நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையே இருக்கும் சானல் தீவுகளின்(Channel Islands) ஒரு பகுதியான அல்டெர்னி(Alderney) நாட்டின் வண்ணமிகு தபால்தலைகளைப் பாருங்கள். அல்டெர்னியில் உள்ள காட்சிகளையும் அத்தீவின் பெருமைகளையும் தெரியப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள தபால்தலை தொடர்(series) கீழே. இத்தபால்தலைகளில் இருந்து தெரிந்து கொண்டது - இங்கிலாந்து ராணியின் குடியாட்சியின் கீழ் இன்னும் சில பகுதிகள் உள்ளன - அல்டெர்னி, குவெர்ன்சி, சார்க் ஆகிய தீவுகள் சானல் தீவுகளில் அடக்கம், இதை தவிர பசிபிக் பெருங்கடலிலும் பல தீவுகள் உள்ளன. கவுண்டி(County), ஷெரீஃப்(Sheriff) போன்று பெய்லிவிக்(Bailiwick) என்றொரு administrative division(தமிழ்ல என்னங்க?) இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.




கீழே இருப்பது எகிப்து நாட்டின் பயன்படுத்தப்பட்ட தபால்தலை ஒன்று. புராதனச் சின்னம் என்று தெரிகிறது, என்னவென்று தெரியவில்லை...அரபிக் மொழியில்(?) ஏதோ எழுதியிருக்கிறது. அதை படிக்கத் தெரிந்தவர்கள், தெரிந்து சொன்னால் நன்றியுடையவனாவேன்.

பசிபிக் பெருங்கடலில் உள்ள துவாலு எனும் தீவின் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான ஃபட்டேலேவைச்(Fatele) சித்தரிக்கும் மிண்ட் தபால்தலை கீழே. வாடிகனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிகச்சிறிய நாடு என்பது துவாலு தீவின் சிறப்பு.

அடுத்த பதிவு : வாழ்த்தும் தலைகள்

Monday, December 10, 2007

எதப்'பூ' அனுப்பலாம்?

கன்ஃபீசன்ஸ்...மனுஷனா பொறந்தா ஒரே கன்ஃபீசன்ஸ் தான்யா. ஒரு கலைஞனுக்கு/ஒரு படைப்பாளிகளுக்கு அவனுடைய படைப்புகள் எல்லாம் கொழந்தைங்க மாதிரின்னு சொல்லுவாய்ங்க. அதே மாதிரி நம்ம படங்கள் எல்லாம் நமக்கு கொழந்தைங்க மாதிரி. (யாரும் இந்த மாதிரி எல்லாம் சொல்ல மாட்டீங்க...அதனால நானே சொல்லிக்கிறேன்...ஹி...ஹி...). வழக்கம் போல ஒரே கன்ஃபீஷன்ஸ்..எந்த கொழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பலாம்னு...

கொழந்தைங்கன்னா பெத்தவங்க பேரைக் காப்பாத்தணுமா இல்லியா? சொல்லுங்க? இது வரைக்கும் ஸ்கூலுக்கு ஒரு ஏழேட்டு கொழந்தைங்களை அனுப்பிருக்கேன். பேரை வாங்கிட்டு வாங்கடான்னா வாத்தியாரு கிட்ட மண்டைல கொட்டு வாங்கிட்டு ஃபெயிலாகி நிக்கிதுங்க ஒன்னொன்னும். இந்த தடவையாவது அட்லீஸ்ட் பார்டர் பாஸ் வாங்கற கொழந்தையா பாத்து அனுப்பனும்னு ஆசை. இதுல எதப்'பூ' அனுப்பலாம்...பாத்துச் சீக்கிரம் சொல்லுங்க.

பிற்தயாரிப்பு செய்யப்பட்ட கீழே உள்ள இருபடங்களும் (படம் 1 மற்றும் 5)புகைப்படப் போட்டிக்கானவை. தேர்ந்தெடுக்க உதவியாகக் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி!! கொயந்தை பார்டர் மார்க்ல 5வதோ 6வதாவோ வந்தாக்கா அங்கிளுங்க கிட்டயும் ஆண்ட்டி கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க அனுப்பி வக்கிறேன் :)




1. சங்கு புஷ்பம்

2. கீழே இருக்கற படங்கள் 2,3,4,5,6 மட்டும் தான் போட்டிக்கின்னு தனியா எடுத்தது...மத்ததெல்லாம் பழைய சரக்கு தான்.

3. எடுத்த இடம் - லால் பாக்? கப்பன் பார்க்? மலர் கண்காட்சி? இல்லீங்கோ? பெங்களூர் ஜி.பி.ஓ(General Post Office). போஸ்ட் ஆப்பீஸ்ல பூவைப் படம் புடிக்கிற அளவுக்கு முத்திப் போச்சு.

4.

5.

6.

7. வெள்ளை செம்பருத்தி

8. பட்டிப்பூ - வேற பேரு இருந்தா சொல்லுங்கய்யா

9. பால்சம்

10. கேக்டஸ் மலர்

11. பேரெல்லாம் கேக்கப்பிடாது

12. கல் வாழை

13. சாமந்தி சூழ்ந்த தடாகத்தில் ரோஜா

Tuesday, November 27, 2007

தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சி

தசரதர்கள் வாழ்வதில்லை பதிவின் தொடர்ச்சி. பத்து ரதங்களை ஒன்றாகப் பூட்டிச் செலுத்தக் கூடிய பேராற்றல் படைத்த அரசனையும் சாய்க்கக் கூடியது புத்திர சோகம். சோகங்களில் கொடியது புத்திர சோகம் என்று தமிழ் கற்பிக்கும் போது எங்கள் மிஸ் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் 'seeing is believing' இல்லையா? அப்படி ஒரு அனுபவமும் சென்ற வருடம் எனக்கு கிடைத்தது. உற்பத்தி தொழிற்சார்ந்த நிறுவனத்தில் 5ஆண்டு காலம் பணியாற்றி விட்டு 'கன்சல்டிங் ஜாப்' என்ற மாயச்சொல் சுண்டியிழுக்க இப்போதுள்ள நிறுவனத்தில் சேர்ந்த புதிது. என்னுடைய ஒரு வருடம் முந்தைய பதிவுகளைப் படித்தவர்கள் மால்கேட் எனும் ஊரின் பேரைக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஐதராபாத்தில் 120 கி.மீ. தொலைவில் வட கர்நாடகாவில் குல்பர்கா எனும் இடத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் ஐதராபாத்-மும்பை ரயில் பாதையில் இருக்கும் ஒரு சுண்ணாம்புக் கல் சுரங்கம் தான் மால்கேட்(Malkhed). நான் சேர்ந்த போது மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது எங்கள் ப்ராஜெக்ட். என் வாழ்வில் முதல்முறையாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வாரத்தில் ஏழு நாட்களும் 12-14 மணி நேரம் பல வாரங்கள் வேலை பார்த்த இடம் மால்கேட். இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்ட இடத்தில் வசதிகள் என்று பார்த்தாலும் மிகக் குறைவு தான். பணம் எடுக்க ஒரு ஏடிஎம்மிற்குச் செல்ல வேண்டும் என்றாலும் 60 கி.மீ தொலைவில் உள்ள குல்பர்காவிற்குத் தான் செல்ல வேண்டும். 46டிகிரி கடுமையான வெயில் தகிக்கும் அனல் கக்கும் பூமி. இப்படியாக பல அசௌகரியங்கள். உலகத்தில் உள்ள கஷ்டங்கள் எல்லாவற்றையும் நான் மட்டுமே அனுபவிப்பது போல உணர்ந்திருந்த சமயம் அது.


அழுத்தும் வேலையின் பளுவின் காரணமாக எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்தோஷமில்லாமல் இருந்தோம் எங்கள் ப்ராஜெக்டில் இருந்த அனைவரும். ஒரு நாள் காலை டிபன் சாப்பிடச் சென்றோம். மணி பையா (தமிழ் பையா அல்ல இந்தி Bhaiyaa - அண்ணன் என்று பொருள்) என்றொருவர் நாங்கள் சாப்பிடப் போகும் இடத்தில் உணவு பரிமாறுபவர். கலகலப்பான மனிதராகத் தான் அவரை அனைவரும் அறிந்திருந்தோம். 12 மணி நேரம் SAPஉடன் வாழ்ந்து விட்டுச் சாப்பிடப் போகும் போது ஒரு ஐந்து நிமிடம் பொது விஷயங்களைப் பேசுவது அவருடன் தான். தொங்கிப் போன எங்கள் முகங்களைக் கண்டு "என்னாச்சு. ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க?" என்று கேட்டார். "தினமும் காலையில எழறோம், குளிக்கிறோம், சாப்பிடறோம், ஆஃபிஸ் போறோம்-வர்றோம். என்மோ மெஷின் மாதிரி போகுது. வாழ்க்கையில் ஒரு சந்தோஷமும் இல்லை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. Zindagee badi mushkil hai Bhaiyaa" அப்படின்னு சொன்னோம். அதுக்கு அவர் சொன்னார் "அப்னே ஹி பேட்டே கா ஜனாஜா ஜாதே ஹுவே ஏக் பாப் தேக்தா ஹை...உஸ்சே படி முஷ்கில் க்யா ஹோ சக்தி ஹை?" அப்படின்னு ஐதராபாத் காரரான அவர் உருது கலந்த இந்தியில் பேசியது கேட்டு வாயடைத்துப் போனோம். "சொந்த மகனின் இறுதி ஊர்வலம் போவதை ஒரு அப்பா பார்ப்பதை விட ஒரு மனுஷனுக்கு என்ன கஷ்டமப்பா இருக்க முடியும்"அப்படின்னு கேட்டார். அதை கேட்ட அந்த ஒரு கணம் நாங்கள் அனைவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப் போனோம். எதுவும் பேசாமல் அப்படியே ஒரு நொடி அவரைப் பார்த்தோம். "பஸ் ஜிந்தா ஹைன் - எதோ வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்" அப்படின்னார். அவர் முகத்திலும் குரலிலும் ஒரு தாங்க முடியாத வேதனை தெரிந்தது. அந்த வலிக்கு முன்னாடி எங்களுடைய கஷ்டங்களின் தன்மை ஒன்றுமில்லாதது என்று அனைவரும் வெளியே வந்து எங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது ஒத்துக் கொண்டோம். நாங்கள் எதோ வேலை சம்பந்தப் பட்ட கஷ்டத்தைச் சொன்னோம், அந்த நேரத்திலும் இறந்த தன் மகனைப் பற்றி நினைத்திருக்கிறார் என்றால், அந்த பிரிவு மறக்க முடியாதது ஈடு செய்ய முடியாதது என்பதும் புரிந்தது. அதே போல தன் மகனின் நினைவுகளோடு வாழ மகன் எழுதிய ப்ளாக்கைத் தொடர்ந்து எழுதும் ஒரு தாயையும் நான் அறிவேன். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் கமெண்ட் போடாமல் இருந்திருந்தாலும் அவ்வப்போது அங்கு எட்டிப் பார்ப்பதுண்டு.

"கல்லாத எளியோரின் உள்ளம் ஒரு ஆலயமோ" என டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடியுள்ள முருகன் பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அதன் பொருள் என்னவாக இருக்கும் என அறிய முயன்றதில்லை...உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகில் நிதாரி என்னும் ஊரில் சிறு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அந்த இரு கயவர்களைப் பற்றி கேள்வி படும் வரை. எங்கோ ஒரு குக்கிராமத்தில் கல்வியறிவு இல்லாத மூடனாய் வெளி உலகத் தொடர்பு இல்லாதவனாய் இருந்திருந்தால் இத்தகைய விஷயங்களைக் கேள்வி பட்டு மனம் அழுக்கடையாமல் இருந்திருக்குமே என்று தோன்றியது. இப்படியும் நடக்குமா? இதெல்லாம் உண்மை தானா? என முதல் முறை இந்நிகழ்வைப் பற்றி கேள்வி படும் போது தோன்றிய ஒரு செயல். என் மன அழுக்குகள் டேட்டாபேஸில் இத்துடன் இன்னொரு அழுக்கும் கூடிப் போனது. யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் முதல்முறை கேள்விபடும் போது தான் விந்தையாக இருக்கும். மனதில் அந்த "விஷயத்தின் knowledge" என்ற அழுக்கு படிந்துவிட்டால் அதன் பிறகு மிகச் சாதாரணமாகி விடுகிறது. 9/11 சம்பவத்தையே எடுத்துக் கொண்டோம் ஆனால் விமானங்களை வைத்துக் கொண்டு கட்டிடங்களைத் தகர்த்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல வழி இருக்கிறது என அதற்கு முன் கனவிலும் நினைத்திருப்போமா? ஆனால் இப்போது அத்தகைய ஒரு வழி இருக்கு என அறிகிறோம் தானே? என் அப்பாவின் நண்பர்களையும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களையும் கிட்டத்தட்ட என் அப்பாவின் இடத்தில் வைத்து "அங்கிள்" என்றோ "மாமா" என்றோ மரியாதையாகப் பழகியதாகவே நினைவு. அத்தகைய மரியாதைக்குரிய இடத்தில் இருக்க வேண்டிய இருவர், தங்கள் சொந்தப் பிள்ளைகள் இடத்தில் இருக்க வேண்டிய குழந்தைகளைச் சீரழித்துச் சாகடிக்கிறார்கள் என்றால் எப்பேர்ப்பட்ட கிராதகர்களாக அவர்கள் இருப்பார்கள். ஓடி விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய குழந்தையை சாக்க்டையிலிருந்து மண்டை ஓடாகவோ எலும்பாகவோ எடுப்பதைப் பார்க்கும் போது பெற்றவர்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். கோர்ட் வளாகத்தில் அவ்விருவரையும் வக்கீல்களே தாக்கிய செய்தியை அறிந்து மனம் மிக மகிழ்ச்சியடைந்தது. "அடிச்சுக் கொல்லுங்கடா" என்று டிவியில் பார்க்கும் போதே கத்தி விட்டேன். அப்போது என் முகம் எப்படியிருந்திருக்கும் என கண்ணாடியில் பார்க்க வில்லை. ஆனால் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தில் தன்னை ஏமாற்றிய ஆனந்த்ராஜைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறி சார்லி காட்டுவாரே ஒரு முகபாவம்...கிட்டத்தட்ட அப்படி தான் இருந்திருக்கும்.

பிள்ளைகளின் பிரிவு பெற்றோரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று நான் பேசும் அதே வேளையில், பிள்ளையாய்ப் பிறந்தவர்களின் பேச்சினால் "கொல்லப்படும்" பெற்றோர்களைப் பற்றியும் பேசத் துணிகிறேன். இயக்குனர் மணிரத்னத்தின் படங்களைப் பற்றிய என் அபிப்ராயத்தைப் பதிய எண்ணுகிறேன். அறுசுவை விருந்து பரிமாறி ஓரத்தில் ஒரு துளி விஷம் பரிமாறும் இயக்குனர் எனும் அபிப்ராயம் நெடும் நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் 'மௌன ராகம்' திரைப்படம் பார்க்கும் போது ஊர்ஜிதமானது. ஏனெனில் அந்த காட்சியை அதற்கு முன் ஆழமாகக் கவனித்ததில்லை. திருமணம் செய்ய வற்புறுத்தும் தன் தந்தையைப் பார்த்து திவ்யா(ரேவதி) பேசுவதாக அமைந்த ஒரு காட்சி "என்னை விக்கப் பாக்கறீங்களாப்பா?"ன்னு. அதெப்படி தான்னு தெரியலை, படத்தில் ஒரு வில்லன் இருந்தால் இவருடைய படங்களில் இன்னொரு வில்லனாக எப்போதும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பம்பாய் படத்தில் சேகர்(அரவிந்த் சாமி) தன் தந்தையைப் பார்த்து பேசுவதாக அமைந்த இன்னொரு வசனம் "நீங்க எப்ப சாவீங்க?", அதே மாதிரி கன்னத்தில் முத்தமிட்டால் அமுதா(பேபி கீர்த்தனா) சிம்ரனைப் பார்த்து பேசுவதாக வரும் ஒரு வசனம் "நீ எங்க அம்மா இல்லை". கதையின் protagonistஐ fiercely independent, rebellious, self-madeனு காண்பிக்க வேறு வழியே இல்லையா? ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் குஞ்சு குலுவாணியா இருந்தாலும் எப்பவுமே அப்பா அம்மாவோட போட்டி போடற மாதிரி தான் காட்டணுமா?. அன்றாட வாழ்வில் நடக்காததை எதையும் அவர் சொல்லவில்லை, உண்மை தான். அது மாதிரி பேசும் பிள்ளைகள் இருக்கத் தான் செய்கிறார்கள், கதையின் contextஇலும் அத்தகைய காட்சிகள் சரியாகப் பொருந்தி வரலாம். ஆனால் தன்னுடைய பல படங்களிலும் அதே பாணியைக் கையாண்டு பிள்ளைகள் பெற்றோர்களை எடுத்தெறிந்து பேசுவதை 'glorify' செய்து காண்பிக்கத் தான் வேண்டுமா?

மேலை நாடுகளைப் போல 14-15 வயது ஆனால் நீயே உன் வழியைப் பார்த்து கொள் என்று கூறி பிள்ளைகளை வெளியே அனுப்பி விடும் பெற்றோர்களின் மத்தியில், நம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகங்கள் அளப்பிட முடியாதது. மனைவியுடனோ கணவனுடனோ கருத்து வேறுபாட்டின் காரணமாக பிள்ளைகளைக் கவனியாமல் வேறொரு குடும்பத்தை அமைத்து கொண்டு வாழும் பெற்றோர்கள் அங்கு ஏராளம். இங்கும் அத்தகையவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மை என்பது அதில்லை. தன்னுடைய வாழ்க்கையை மட்டும் பற்றி சிந்திக்கும் தகப்பனின் மரணத்தை "The old man kicked his bucket" என்று ஒரு அமெரிக்க மகன் 'as-a-matter-of-fact' தொனியில் கூறுவானே ஆனால் வியப்பு பெரிதாக ஒன்றும் இருக்க முடியாது. ஆனால் பிள்ளைகளுக்காக தங்களுடைய ஆசைகள், சந்தோஷங்கள் இவற்றை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு கஷ்டப் பட்டு வளர்க்கும் நம்முடைய பெற்றோர்களைப் பார்த்து தன்னுடைய சுயநலத்திற்காக "நீங்க எப்ப சாவீங்க?"ன்னு அந்த ஈரமில்லாமல் கேட்பது உண்மையிலேயே வருத்தத்துக்குரியது. Our parents certainly don't deserve that!!

"பொல்லாதவன்" படத்தில் ஒரு காட்சி. தனுஷைப் பார்த்து நடிகர் முரளி சொல்வார் "நாளைக்கு உன் பையன் உன் சட்டை பையிலிருந்து பணத்தைத் திருடுவான் இல்ல? அப்ப தெரியும்டா அந்த வலியும் வேதனையும்"என்று. சத்தியமான வார்த்தைகள். சிங்கிள் விண்டோ சிஸ்டம் இல்லாத 1995ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக் கவுன்சலிங்கின் போது "திருச்சியிலயோ கோயம்புத்தூர்லயோ இருந்து படிச்சின்னா நீ கேக்கற ப்ராஞ்ச் கிடைக்கும். காலேஜுக்காக ப்ராஞ்சைக் காம்ப்ரமைஸ் செஞ்சுக்காதே" என்று என் தந்தையார் கூறியதைக் கேட்டு கிட்டத்தட்ட மௌன ராகம் திவ்யா போல நான் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. "நான் மெட்ராஸ்ல இருந்து படிக்கிறது உங்களுக்கு புடிக்கலையா?" எத்தனை harshஆன வார்த்தைகள். இது போல என் மகன் என்னிடம் பேசியிருப்பான் ஆயின் அதை என்னால் ஜீரணித்துக் கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. எனக்கு மகனும் இல்லை, அவன் என் சட்டை பையிலிருந்து திருடவும் இல்லை...ஆனால் ஏனோ இது போன்ற விஷயங்களை நான் அனுபவிக்கா விட்டாலும், உணர முடிகிறது. ஏன் என்றும் தெரியவில்லை.

நிறைவு பெற்றது.

Monday, November 26, 2007

தசரதர்கள் வாழ்வதில்லை

"You are reading this letter since Iam not alive" என்று தொடங்கி தெளிவான சரளமான ஆங்கிலத்தில் ஆறு பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்த கடிதத்தைப் படிக்கும் போது - "இது நிஜமாகவே என் வாழ்க்கையில் தான் நடக்கிறதா? ஒரு மனிதனின் வாழ்வின் கடைசி மணித்துளிகளில் எழுதப்பட்ட அந்த எழுத்துகளைப் படிப்பது நான் தானா?" போன்ற எண்ணங்கள் மேலோங்கியது. எது எப்படியோ முதன்முதலாக ஒரு 'suicide note'ஐப் படிக்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு ஏற்பட்டது. அது பரபரப்பா? ஆர்வமா? வருத்தமா? கனவா நிஜமா என்ற சந்தேகமா? என்னவென்று சொல்லத் தெரியவில்லை. மேலே உள்ள வரிகள் யாவும் நான் எழுதப் போகும் கற்பனை கதையின் முதல் வரிகள் என்று நினைப்பீர்களாயின் அது தவறு. துரதிருஷ்டவசமாக நான் சொன்னதும் சொல்லப் போவதும் கற்பனை இல்லை. உண்மை.

அப்போது நான் தில்லியில் வேலைக்குச் சேர்ந்த புதிது. ஒரு முறை விடுமுறையில் சென்னைக்கு வந்து விட்டுத் திரும்பச் செல்வதற்கு முன்னர் பெங்களூரில் இருக்கும் தாத்தாவையும் பார்த்து விட்டுச் செல்லலாம் என்று பெங்களூர் சென்றிருந்தேன். அவருடன் பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய நண்பரின் மறைந்த மகனைப் பற்றிச் சொன்னார். அவர் இறந்தது ஒரு லவ் மேட்டரில் தற்கொலை செய்து கொண்டாம். அத்தோடு அந்த பையனின் மரணத்திற்குப் பிறகு போலீஸ் விசாரணையின் போது கிடைத்த அந்த இறுதி கடிதத்தின் நகலையும் எனக்கு காட்டினார். அக்கடிதத்தின் முதல் வரி தான் இப்பதிவின் முதல் வரி. விறுவிறுவென ஒரே மூச்சில் படித்தேன்.

நன்கு படித்து நல்ல வேலையில் இருந்த அந்த பையன், வேலை நிமித்தமாக ஐதராபாத் சென்ற பொழுது காதல் வயப்படுகிறான். அந்த பெண்ணும் இவளை விரும்புகிறாள். உயிருக்குயிராய் காதலித்த பெண்ணின் குடும்பத்தார் மொழி, இனம் போன்றவற்றைக் காரணம் காட்டி இவர்கள் காதலுக்குத் தடை விதிக்கிறார்கள். "என் வீட்டார் சம்மதம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நாம் எங்காவது சென்று திருமணம் செய்து கொள்ளலாம்" என்று சொல்லியிருக்கிறாள் அப்பெண். "என் வீட்டில் நம் காதலுக்குத் தடை ஏதுமில்லை, கொஞ்சம் பொறு ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வதைக் காட்டிலும் ஊரறிய உன்னை திருமணம் செய்து கொள்ளவே நான் விரும்புகிறேன்" எனச் சொல்லியிருக்கிறான் அவன். வீட்டிலும் தனக்கு வேறு ஒரு வரன் பார்ப்பதனாலும், காதலனும் பொறுமை காக்கச் சொன்னதனாலும் அவனுக்குத் தன் மேல் அன்பில்லையோ என எண்ணி "இறுதி கடிதம்" ஒன்றை எழுதி வைத்து விட்டுத் தன் உயிரை விடுகிறாள் அப்பெண். இது வரை காதலுக்கு எதிரியாக இருந்த அப்பெண்ணின் பெற்றோர், மகளின் சாவுக்கு அந்த பையனே காரணம் என எண்ணி அவன் உயிருக்கும் அவன் குடும்பத்தார் உயிருக்கும் தாங்களே எமன் என எச்சரிக்கை விடுக்கிறார்கள். காதலித்த பெண்ணின் நிரந்தரப் பிரிவின் துயர் ஒரு புறம் இருக்க, அப்பெண்ணின் மரணத்தினால் தன் குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து என்று அறிந்து விரக்தியின் எல்லைக்கே செல்கிறான் அவன். ஐதராபாத்தில் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு பெங்களூருக்குத் திரும்புகிறான். அங்கே ஊருக்கு ஒதுக்குப்புறமாக யாருக்கும் தெரியாமல் ஒரு வாடகை வீட்டை எடுத்துக் கொண்டு சிறிது நாள் தங்கி, பெண்ணின் குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டு தன் பக்க நிலையை விளக்க முயற்சித்திருக்கிறான். அதை கேட்டு அவர்கள் சமாதானம் அடையாததால் இந்த 'extreme step'ஐத் தான் எடுத்ததற்கு காரணம் என்னவென்று ஆறு பக்கங்களுக்கு இன்னுமொரு "இறுதி கடிதம்" எழுதி விட்டு தன் உயிரை விடுகிறான்.

"அக்கா அக்கான்னு பாசமா இருப்பாப்பான் சங்கர். மாரதஹள்ளி நம்ம வீட்டுலேருந்து எவ்வளவு தூரம்? இங்கேயே தான் இருந்திருக்கான். எங்க யாருக்கும் ஒன்னும் தெரியாது. கடைசியா பாய்சன் சாப்பிட்டுட்டு பையன் செத்துட்டான்னு அவங்க அப்பா கரூர்லேருந்து வந்து தகவல் சொல்லும் போது தான் தெரியும். இங்கே தான் இருக்குறேன்னு ஒரு தகவல் குடுத்துருந்தா அவனைச் சாக விட்டுருப்போமா?" என்று கூறியவர் என் சித்தி. பக்கத்து வீட்டுப் பையனின் மரணத்தாலேயே ஒருத்தருக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படும் போது, அப்பையனைப் பெற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும், அவர்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என இப்போது நினைத்து பார்க்கிறேன். அவர்கள் நிலையிலிருந்து நினைத்து பார்க்க எனக்கு பயமாக இருக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன் அக்கடிதத்தை படிக்கும் போது எனக்கு அப்படியேதும் தோன்றவில்லை. இந்தளவுக்கு பாதிப்பும் எனக்கு ஏற்படவில்லை.

முப்பது வயதை நெருங்கிக் கொண்டு வாழ்க்கையின் "நடு செண்டரில்" நின்று கொண்டு என்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும் போதும், எங்கோ யாருடைய வாழ்விலோ நடப்பதை பத்திரிகைகள்/இணையத்தின் மூலமாகப் படிக்கும் போதும் - அன்பு, பாசம், உறவுகள் என்றால் என்ன? அவற்றின் அருமை என்ன என சிறிது சிறிதாக உணரத் தொடங்கியிருக்கும் நேரத்தில் - என்னால் பாதிக்கப் படாமல் இருக்கமுடியவில்லை. "You are reading this letter since Iam not alive" என்று மரண வாக்குமூலத்தையும் impressiveஆக creativeஆக எழுதத் தெரிந்தவர், தன் வாழ்க்கை பிரச்னைகளையும் சற்று creativeஆக அணுகியிருப்பாரே ஆனால் அப்பெண்ணின் உயிரையும், தன் உயிரையும் காப்பாற்றி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. எது எப்படியோ, அப்பெண்ணின் பெற்றோரும் அப்பையனின் பெற்றோரும் "தசரத வாழ்வை" வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. தன் மறைவிற்குப் பிறகு தன் பெற்றோர் படும் துயரங்கள் என்னவென்று தற்கொலை செய்யத் துணிபவர்கள் நினைப்பார்கள் ஆயின் சிறிதேனும் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யக் கூடும்.

இதை எல்லாம் எழுதத் தூண்டியது சில மாதங்களுக்கு முன் தினமலர் வாரமலரில் "இது உங்கள் இடம்" பகுதியில் வாசகர் ஒருவர் எழுதியதை படித்தது. தன் காதலிக்கு செல்போன் வாங்கித் தர பணம் இல்லையென வருந்தி ஃபினாயில் குடித்துத் தன் நண்பனின் மகன் தற்கொலைக்கு முயன்றதை எண்ணி மிகவும் வருந்தி அவர் எழுதியிருந்தார். அதை படித்ததும் உயிரின் விலை எவ்வளவு மலிவாகப் போய்விட்டது? என நினைத்துக் கொண்டேன். அன்று மாலையே தொலைக்காட்சியில் "மாறன்" திரைப்படம் ஒளிபரப்பானது. மகனை இழந்து வாடும் தந்தையின் கதாபாத்திரத்தை உணர்ந்து நிறைவாகச் செய்திருப்பார் சத்யராஜ். படத்தின் பிற்பகுதி மட்டும் மிக comicalஆக முடிக்கப்படாவிட்டால் நல்ல படமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன். அப்போதில் இருந்தே இத்தலைப்பில் எழுத வேண்டும் என எண்ணியிருந்தேன். சொல்ல நினைத்தவை இன்னும் கொஞ்சம் இருக்கிறது. பதிவின் நீளம் கருதி இப்பதிவை இத்துடன் முடிக்கிறேன்.

தொடரும்...

Friday, November 23, 2007

'தலை'நகரம் - 2

சார்லி சாப்ளின் - ஆமாங்க. போன பதிவுல கேட்டிருந்த ராயல் மெயிலினால் 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலையில் இருந்த பிரபலம் சார்லி சாப்ளினே தாங்க. சரியாகக் கண்டுபிடிச்சு சொன்ன தம்பி ராயல் ராம்சாமிக்கு ஒரு ராயல் 'ஓ' போடுங்கங்கோ. பதினைஞ்சு வருஷத்துக்கும் மேலா அந்த தபால் தலை என்கிட்ட இருந்தாலும், அதுல இருக்கறது யாருன்னு தெரிஞ்சிக்க முயற்சி பண்ணலை. சமீபத்துல ஒரு நாள் எதேச்சையா என்னோட ஸ்டாம்ப் ஆல்பத்தை எடுத்துப் பாக்கும் போது அதுல இருக்கறது 'வின்ஸ்டன் சர்ச்சில்' மாதிரி இருந்துச்சு. ஆனா அந்த ஸ்டாம்ப்லேயே கையெழுத்து ஒன்னு இருக்கு...அதை உத்துப் பாக்கும் போது சார்லி சாப்ளின்னு எழுதியிருக்கற மாதிரி இருந்துச்சு. சரி யாரா இருக்கும்னு நெட்ல தேடும் போது தான் தெரிஞ்சது அது சாட்சாத் சார்லி சாப்ளினே தான்.

ஒட்டிப் போன முகம், குட்டி மீசை, டெர்பி தொப்பி இப்படின்னு பாத்து பழக்கப்பட்ட சார்லி சாப்ளினை இப்படி கொஞ்சம் பூசனாப்பல பாத்ததுல பயங்கர ஆச்சரியம். ஆச்சரியம் ஒரு பக்கம் இருந்தாலும், நம்மளோட முதல் ரியாக்ஷன் என்னன்னா"மனுஷன் செமத்தியா தண்ணி அடிப்பான் போலிருக்கு"ங்கறது தான் :). இவரைப் பத்தி விகிபீடியால படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டது இவரோட முழு பெயர் சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் ஜூனியர்(Charles Spencer Chaplin Jr.). அடுத்ததா வந்தது இன்னொரு சந்தேகம். உலகப் புகழ் பெற்ற இவர் ஜுனியர்னா சீனியர் யாருன்னு தான்? சீனியரும் ஜூனியர் மாதிரியே புகழ் பெற்றவரா அப்படிங்கறது அடுத்த கேள்வி? தேடிட்டிருக்கேன். தெரிஞ்சா சொல்றேன். உங்களுக்குத் தெரிஞ்சாலும் சொல்லுங்க. விகிபீடியால கண்ணுல பட்ட இன்னொரு விஷயம் இவரோட 'லிஸ்ட் ஆஃப் பொண்டாட்டிஸ்". இந்த மனுசன் வாங்குன அவார்டு லிஸ்டு மாதிரியே இந்த லிஸ்டும் ரொம்ப பெருசா இருக்கு. படிச்சிட்டு வாயை மூடிட்டு சும்மா இருந்துருக்கலாம். தலைவர் டுபுக்கு மாதிரி தங்கமணி வாயைக் கெளறி எதாச்சும் ப்ளாக்ல எழுதனும்னு அந்த பாழாப் போன நேரத்துல மண்டைக்குள்ள மணியடிச்சுது. விதி வலியதாச்சே? எங்க வூட்டு அம்மா கிட்ட "ஒன்னே ஒன்னை வச்சிக்கிட்டே அவனவன் திண்டாடறான், இந்தாளு எப்படி தான் சமாளிச்சானோ'ன்னு வாயை விட்டேன். ப்ளாக் எழுதறதுக்காக விழுப்புண் பெற்றவன் என்ற பெயரும் பெற்றேன் :(

சரி அதை விடுங்க. மறுபடியும் விஷயத்துக்கு வருவோம். பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் காரணத்தைப் பொறுத்து தபால் தலைகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். அன்றாடப் பயன்பாட்டிற்கு வெளியிடப்படும் தபால் தலைகளை Definitive Stamps என்று சொல்கிறார்கள். உதாரணத்துக்கு கீழே உள்ள 25 பைசா டிராக்டர் ஸ்டாம்பைப் பாருங்களேன். ரொம்பவும் பழக்கப்பட்டதா இருக்கில்ல? அதே மாதிரி தான் இந்த 5 ரூபா ரப்பர் மர ஸ்டாம்பும். இவை ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அன்றாடப் பயன்பாட்டிற்காக பெரும் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படுபவை.



இங்கிலாந்து(அல்லது யூ.கே) நாட்டின் ராணி தலை ஸ்டாம்புகளும் Definitive வகையைச் சேர்ந்தது தான். அப்புறம் பாலராஜன்கீதா சார் சொன்னது மாதிரி, முதன் முதலில் தபால் தலைகளை வெளியிட்ட நாடு என்பதனால் ஐக்கிய ராசாங்கத்தின்(நன்றி : சூடான் புலி) தபால் தலைகளில் நாட்டின் பெயர் இருக்காது. விக்டோரியா மகாராணியின் தலையின் சிறிய Motif மட்டுமே இருக்கும்.


மக்களின் பொது பயன்பாட்டிற்காகத் தான் என்ற போதிலும் ஒரு நிகழ்ச்சியையோ, ஒரு பிரபலம்/தலைவரையோ சிறப்பிக்க வெளியிடப்படும் தபால் தலைகளை Commemorative Stamps என்று அழைக்கிறார்கள். உதாரணத்திற்கு சமீபத்தில் ஐதராபாத்தில் உலக ராணுவ விளையாட்டுகள்(World Military Games) நடந்ததில்லையா? அந்நிகழ்ச்சியினைப் பற்றி வெளி உலகுக்கு அறிவிக்க இந்திய தபால் துறையினரால் சில தபால் தலைகள் வெளியிடப்பட்டன். Definitive தபால் தலைகள் போல் அல்லாமல் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அச்சிடப்பட்டு குறுகிய காலத்துக்குள் மட்டும் புழக்கத்தில் இருப்பவை Commemorative வகை தபால் தலைகள்.

கீழே இருப்பவை Commemorative வகை தபால் தலைகள் சில.

1985 ஆம் ஆண்டு சார்க் உச்சி மாநாட்டின் போது பூட்டான் நாட்டினால் வெளியிடப்பட்ட தபால் தலை.


அதே நிகழ்ச்சியைக் குறிப்பதற்காக இந்தியாவால் வெளியிடப்பட்ட தபால் தலை.


முதல் தபால் தலை வெளியிடப்பட்டு 125 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி இலங்கையினால் 1982 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை. இலங்கையின்(அந்நாள் சிலோன்) முதல் தபால் தலையையும் இதில் காணலாம். இவ்வகை தபால் தலையினை "Stamp on Stamp" என்று சேகரிப்பாளர்கள் கூறுகிறார்கள். இவ்வகை தபால் தலைகளைத் தேடித் தேடிச் சேகரிப்பவர்களும் இருக்கிறார்கள்.



1985ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவர்களின் மறைவிற்குப் பிறகு Crusader for World Peace என்ற தலைப்பில் அவரைச் சிறப்பிக்க, இந்திய தபால் துறையினரால் வெளியிடப் பட்ட தபால் தலை.


வெவசாயி இளா சொல்லிருக்கற மாதிரி உங்களோட புகைப்படத்தை கொடுத்தீங்கன்னா அந்த புகைப்படத்தை வச்சி தபால் தலை அச்சிட்டு கொடுக்கறாங்க. இந்த வசதியினை பல நாட்டு தபால் துறைகளும் வழங்குகின்றன. இதப் பத்தியும் இண்டர்நெட் புரட்சியால் தபால் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பற்றியும் வர்ற பதிவுகள்ல பாப்போம்.

Thursday, November 22, 2007

'தலை'நகரம் - 1

'தலை'எழுத்து, 'தலை'புராணம், 'தலை' சொல்லும் கதை இப்படியாக பல பேர்களை யோசிச்சி கடைசியா 'தலை'நகரம்னு பேர் வச்சாச்சு. நிற்க. இது வைகைப்புயல் வடிவேலுவைப் பத்தின பதிவோ காதல் மன்னன் அஜித் குமாரைப் பத்தினப் பதிவோ கெடையாது. சின்ன வயசுல ஆரம்பிச்ச ஒரு பழக்கம்...அதை பத்தின பதிவு தான் இது. பொழுதுபோக்குன்னு சொல்றதை விட பழக்கம்னு சொல்றது தான் பொருத்தமா இருக்கும். சரி பில்டப்பு போதும்...அதாவதுங்க சின்ன வயசுல ஆரம்பிச்சி இடையில ஒரு பத்து வருஷம் விட்டுப் போய் இப்ப மறுபடியும் புது உத்வேகத்தோட ஆரம்பிச்சிருக்கற தபால் தலை சேகரிப்பு(Philately) பத்தி எழுதலாம்னு ஒரே
ஆர்வங்கா உந்தி. அதி கோசம் ஈ ரோஜு கடுமையான ஓய்வுலேருந்து எழுந்து வந்திருக்கேன். தபால் தலைகளைப் பத்தியும் தபால் தலை சேகரிப்பு கலையில் நான் தெரிஞ்சுக்கிட்ட விஷயங்களை எழுதலாம்னு ஒரு சின்ன எண்ணம் இருக்கு. இதை எழுதுவதன் மூலமாக நானும் உங்களிடமிருந்து பல விஷயங்களைத் தெரிஞ்சிக்கலாம்னு நெனைக்கிறேன்.

சரி...முதல்ல உலகின் முதல் தபால் தலை பத்தி பார்ப்போம். இதோட பேரு பென்னி ப்ளாக்(Penny Black). வெளியிட்ட நாடு யுனைட்டெட் கிங்டம்(U.K.- தமிழ்ல என்னங்க?). தபால்களைப் பல இடங்களுக்கும் அனுப்பும் போது அஞ்சல் அலுவலகங்களில் பணம் செலுத்தி அனுப்பும் முறையை மாற்றுவதற்காக, அந்நாட்டின் அஞ்சல் முறை சீர்திருத்தங்களின்(U.K.Postal reforms) ஒரு பகுதியாக சர்.ரோலண்ட் ஹில்(Sir.Rowland Hill) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது தான் தபால் தலை(Postage stamp). உலகின் முதல் தபால் தலையான பென்னி ப்ளாக் விக்டோரியான மகாராணியின் படத்தைத் தாங்கி மே 1, 1840 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

தபால் தலை சேகரிப்பாளர்களால்(Philatelists) மிகவும் போற்றப்படும் இத்தபால் தலையின் அப்போதைய மதிப்பு ஒரு பென்னி. ஆனால் பயன்படுத்தப் படாத(unused அல்லது mint) பென்னி ப்ளாக்கின் தற்போதைய மதிப்பு 3000-4000 பவுண்டுகள் ஆகும்.

பென்னி ப்ளாக்கின் முழு வரலாறையும் படிக்க இங்கு சுட்டுங்கள்.

கறுப்பு நிறத்தில் அச்சிடப்பட்ட தபால் தலைகளின் மீது குத்தப்படும் அஞ்சல் முத்திரைகள் சரிவர தெரிவதில்லை என்ற குறையைப் போக்க பென்னி ப்ளாக்கிற்குப் பிறகு 1841 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை தான் கீழே உள்ள பென்னி ரெட்(Penny Red). பென்னி ப்ளாக்கைப் போல அல்லாமல் ஒரு தாளில் உள்ள தபால் தலைகளுக்கிடையே துளைகள்(perforations) உடன் வெளிவந்தது பென்னி ரெட்டின் சிறப்பு.



சரி, ராயல் மெயிலினால்(இங்கிலாந்து நாட்டு தபால் துறை-Royal Mail) 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கீழே உள்ள தபால் தலையில் உள்ள இந்த பிரபலம் யார்? இவர் உலகப் புகழ் பெற்றவர். சொல்லுங்க பாப்போம்.


வரும் நாட்களில் தபால் தலை சேகரிப்பில் பயன்படுத்தப் பெறும் கலைச்சொற்கள்(Philatelic Terms), என்னிடம் உள்ள தபால் தலைகளிலிருந்து அவை சொல்லும் கதைகள் முதலானவற்றை எழுத எண்ணியுள்ளேன். நம்ம பதிவர்கள்ல தபால் தலை சேகரிப்பில் ஆர்வம் உள்ளவங்கன்னு பாத்தா இராமச்சந்திரன் உஷா மேடம் இருக்காங்கனு நினைக்கிறேன்(அப்படி அவங்க சொன்னதா எங்கேயோ படிச்ச ஞாபகம்). வேற யாருக்காச்சும் இதுல ஆர்வம் இருந்தாலும் சொல்லுங்களேன். தெரிஞ்சிக்கலாம்னு ஒரு ஆசை தான். சீக்கிரம் சந்திப்போம்னு சொல்லி கடுமையான ஓய்வெடுக்கச் செல்லுவது உங்கள் உங்கள் உங்கள் டேஷ் டேஷ் டேஷ் :)