Tuesday, November 27, 2007

தசரதர்கள் வாழ்வதில்லை...தொடர்ச்சி

தசரதர்கள் வாழ்வதில்லை பதிவின் தொடர்ச்சி. பத்து ரதங்களை ஒன்றாகப் பூட்டிச் செலுத்தக் கூடிய பேராற்றல் படைத்த அரசனையும் சாய்க்கக் கூடியது புத்திர சோகம். சோகங்களில் கொடியது புத்திர சோகம் என்று தமிழ் கற்பிக்கும் போது எங்கள் மிஸ் கூறியதும் நினைவுக்கு வருகிறது. ஆனால் 'seeing is believing' இல்லையா? அப்படி ஒரு அனுபவமும் சென்ற வருடம் எனக்கு கிடைத்தது. உற்பத்தி தொழிற்சார்ந்த நிறுவனத்தில் 5ஆண்டு காலம் பணியாற்றி விட்டு 'கன்சல்டிங் ஜாப்' என்ற மாயச்சொல் சுண்டியிழுக்க இப்போதுள்ள நிறுவனத்தில் சேர்ந்த புதிது. என்னுடைய ஒரு வருடம் முந்தைய பதிவுகளைப் படித்தவர்கள் மால்கேட் எனும் ஊரின் பேரைக் கேள்வி பட்டிருப்பீர்கள். ஐதராபாத்தில் 120 கி.மீ. தொலைவில் வட கர்நாடகாவில் குல்பர்கா எனும் இடத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் ஐதராபாத்-மும்பை ரயில் பாதையில் இருக்கும் ஒரு சுண்ணாம்புக் கல் சுரங்கம் தான் மால்கேட்(Malkhed). நான் சேர்ந்த போது மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது எங்கள் ப்ராஜெக்ட். என் வாழ்வில் முதல்முறையாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வாரத்தில் ஏழு நாட்களும் 12-14 மணி நேரம் பல வாரங்கள் வேலை பார்த்த இடம் மால்கேட். இவ்வளவு கஷ்டங்களை எதிர்கொண்ட இடத்தில் வசதிகள் என்று பார்த்தாலும் மிகக் குறைவு தான். பணம் எடுக்க ஒரு ஏடிஎம்மிற்குச் செல்ல வேண்டும் என்றாலும் 60 கி.மீ தொலைவில் உள்ள குல்பர்காவிற்குத் தான் செல்ல வேண்டும். 46டிகிரி கடுமையான வெயில் தகிக்கும் அனல் கக்கும் பூமி. இப்படியாக பல அசௌகரியங்கள். உலகத்தில் உள்ள கஷ்டங்கள் எல்லாவற்றையும் நான் மட்டுமே அனுபவிப்பது போல உணர்ந்திருந்த சமயம் அது.


அழுத்தும் வேலையின் பளுவின் காரணமாக எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சந்தோஷமில்லாமல் இருந்தோம் எங்கள் ப்ராஜெக்டில் இருந்த அனைவரும். ஒரு நாள் காலை டிபன் சாப்பிடச் சென்றோம். மணி பையா (தமிழ் பையா அல்ல இந்தி Bhaiyaa - அண்ணன் என்று பொருள்) என்றொருவர் நாங்கள் சாப்பிடப் போகும் இடத்தில் உணவு பரிமாறுபவர். கலகலப்பான மனிதராகத் தான் அவரை அனைவரும் அறிந்திருந்தோம். 12 மணி நேரம் SAPஉடன் வாழ்ந்து விட்டுச் சாப்பிடப் போகும் போது ஒரு ஐந்து நிமிடம் பொது விஷயங்களைப் பேசுவது அவருடன் தான். தொங்கிப் போன எங்கள் முகங்களைக் கண்டு "என்னாச்சு. ஏன் இவ்வளவு டல்லா இருக்கீங்க?" என்று கேட்டார். "தினமும் காலையில எழறோம், குளிக்கிறோம், சாப்பிடறோம், ஆஃபிஸ் போறோம்-வர்றோம். என்மோ மெஷின் மாதிரி போகுது. வாழ்க்கையில் ஒரு சந்தோஷமும் இல்லை. ரொம்ப கஷ்டமாயிருக்கு. Zindagee badi mushkil hai Bhaiyaa" அப்படின்னு சொன்னோம். அதுக்கு அவர் சொன்னார் "அப்னே ஹி பேட்டே கா ஜனாஜா ஜாதே ஹுவே ஏக் பாப் தேக்தா ஹை...உஸ்சே படி முஷ்கில் க்யா ஹோ சக்தி ஹை?" அப்படின்னு ஐதராபாத் காரரான அவர் உருது கலந்த இந்தியில் பேசியது கேட்டு வாயடைத்துப் போனோம். "சொந்த மகனின் இறுதி ஊர்வலம் போவதை ஒரு அப்பா பார்ப்பதை விட ஒரு மனுஷனுக்கு என்ன கஷ்டமப்பா இருக்க முடியும்"அப்படின்னு கேட்டார். அதை கேட்ட அந்த ஒரு கணம் நாங்கள் அனைவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்துப் போனோம். எதுவும் பேசாமல் அப்படியே ஒரு நொடி அவரைப் பார்த்தோம். "பஸ் ஜிந்தா ஹைன் - எதோ வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்" அப்படின்னார். அவர் முகத்திலும் குரலிலும் ஒரு தாங்க முடியாத வேதனை தெரிந்தது. அந்த வலிக்கு முன்னாடி எங்களுடைய கஷ்டங்களின் தன்மை ஒன்றுமில்லாதது என்று அனைவரும் வெளியே வந்து எங்களுக்குள் பேசிக் கொள்ளும் போது ஒத்துக் கொண்டோம். நாங்கள் எதோ வேலை சம்பந்தப் பட்ட கஷ்டத்தைச் சொன்னோம், அந்த நேரத்திலும் இறந்த தன் மகனைப் பற்றி நினைத்திருக்கிறார் என்றால், அந்த பிரிவு மறக்க முடியாதது ஈடு செய்ய முடியாதது என்பதும் புரிந்தது. அதே போல தன் மகனின் நினைவுகளோடு வாழ மகன் எழுதிய ப்ளாக்கைத் தொடர்ந்து எழுதும் ஒரு தாயையும் நான் அறிவேன். அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியாமல் கமெண்ட் போடாமல் இருந்திருந்தாலும் அவ்வப்போது அங்கு எட்டிப் பார்ப்பதுண்டு.

"கல்லாத எளியோரின் உள்ளம் ஒரு ஆலயமோ" என டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்கள் பாடியுள்ள முருகன் பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். அதன் பொருள் என்னவாக இருக்கும் என அறிய முயன்றதில்லை...உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகில் நிதாரி என்னும் ஊரில் சிறு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அந்த இரு கயவர்களைப் பற்றி கேள்வி படும் வரை. எங்கோ ஒரு குக்கிராமத்தில் கல்வியறிவு இல்லாத மூடனாய் வெளி உலகத் தொடர்பு இல்லாதவனாய் இருந்திருந்தால் இத்தகைய விஷயங்களைக் கேள்வி பட்டு மனம் அழுக்கடையாமல் இருந்திருக்குமே என்று தோன்றியது. இப்படியும் நடக்குமா? இதெல்லாம் உண்மை தானா? என முதல் முறை இந்நிகழ்வைப் பற்றி கேள்வி படும் போது தோன்றிய ஒரு செயல். என் மன அழுக்குகள் டேட்டாபேஸில் இத்துடன் இன்னொரு அழுக்கும் கூடிப் போனது. யோசித்துப் பார்த்தால் இதெல்லாம் முதல்முறை கேள்விபடும் போது தான் விந்தையாக இருக்கும். மனதில் அந்த "விஷயத்தின் knowledge" என்ற அழுக்கு படிந்துவிட்டால் அதன் பிறகு மிகச் சாதாரணமாகி விடுகிறது. 9/11 சம்பவத்தையே எடுத்துக் கொண்டோம் ஆனால் விமானங்களை வைத்துக் கொண்டு கட்டிடங்களைத் தகர்த்து ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்ல வழி இருக்கிறது என அதற்கு முன் கனவிலும் நினைத்திருப்போமா? ஆனால் இப்போது அத்தகைய ஒரு வழி இருக்கு என அறிகிறோம் தானே? என் அப்பாவின் நண்பர்களையும் பக்கத்து வீட்டில் இருப்பவர்களையும் கிட்டத்தட்ட என் அப்பாவின் இடத்தில் வைத்து "அங்கிள்" என்றோ "மாமா" என்றோ மரியாதையாகப் பழகியதாகவே நினைவு. அத்தகைய மரியாதைக்குரிய இடத்தில் இருக்க வேண்டிய இருவர், தங்கள் சொந்தப் பிள்ளைகள் இடத்தில் இருக்க வேண்டிய குழந்தைகளைச் சீரழித்துச் சாகடிக்கிறார்கள் என்றால் எப்பேர்ப்பட்ட கிராதகர்களாக அவர்கள் இருப்பார்கள். ஓடி விளையாடிக் கொண்டிருந்த தன்னுடைய குழந்தையை சாக்க்டையிலிருந்து மண்டை ஓடாகவோ எலும்பாகவோ எடுப்பதைப் பார்க்கும் போது பெற்றவர்களின் மனம் என்ன பாடுபட்டிருக்கும். கோர்ட் வளாகத்தில் அவ்விருவரையும் வக்கீல்களே தாக்கிய செய்தியை அறிந்து மனம் மிக மகிழ்ச்சியடைந்தது. "அடிச்சுக் கொல்லுங்கடா" என்று டிவியில் பார்க்கும் போதே கத்தி விட்டேன். அப்போது என் முகம் எப்படியிருந்திருக்கும் என கண்ணாடியில் பார்க்க வில்லை. ஆனால் "வெற்றி கொடி கட்டு" திரைப்படத்தில் தன்னை ஏமாற்றிய ஆனந்த்ராஜைப் பழி வாங்க வேண்டும் எனக் கூறி சார்லி காட்டுவாரே ஒரு முகபாவம்...கிட்டத்தட்ட அப்படி தான் இருந்திருக்கும்.

பிள்ளைகளின் பிரிவு பெற்றோரை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்று நான் பேசும் அதே வேளையில், பிள்ளையாய்ப் பிறந்தவர்களின் பேச்சினால் "கொல்லப்படும்" பெற்றோர்களைப் பற்றியும் பேசத் துணிகிறேன். இயக்குனர் மணிரத்னத்தின் படங்களைப் பற்றிய என் அபிப்ராயத்தைப் பதிய எண்ணுகிறேன். அறுசுவை விருந்து பரிமாறி ஓரத்தில் ஒரு துளி விஷம் பரிமாறும் இயக்குனர் எனும் அபிப்ராயம் நெடும் நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் 'மௌன ராகம்' திரைப்படம் பார்க்கும் போது ஊர்ஜிதமானது. ஏனெனில் அந்த காட்சியை அதற்கு முன் ஆழமாகக் கவனித்ததில்லை. திருமணம் செய்ய வற்புறுத்தும் தன் தந்தையைப் பார்த்து திவ்யா(ரேவதி) பேசுவதாக அமைந்த ஒரு காட்சி "என்னை விக்கப் பாக்கறீங்களாப்பா?"ன்னு. அதெப்படி தான்னு தெரியலை, படத்தில் ஒரு வில்லன் இருந்தால் இவருடைய படங்களில் இன்னொரு வில்லனாக எப்போதும் பெற்றவர்கள் இருக்கிறார்கள். பம்பாய் படத்தில் சேகர்(அரவிந்த் சாமி) தன் தந்தையைப் பார்த்து பேசுவதாக அமைந்த இன்னொரு வசனம் "நீங்க எப்ப சாவீங்க?", அதே மாதிரி கன்னத்தில் முத்தமிட்டால் அமுதா(பேபி கீர்த்தனா) சிம்ரனைப் பார்த்து பேசுவதாக வரும் ஒரு வசனம் "நீ எங்க அம்மா இல்லை". கதையின் protagonistஐ fiercely independent, rebellious, self-madeனு காண்பிக்க வேறு வழியே இல்லையா? ஆணா இருந்தாலும் பொண்ணா இருந்தாலும் குஞ்சு குலுவாணியா இருந்தாலும் எப்பவுமே அப்பா அம்மாவோட போட்டி போடற மாதிரி தான் காட்டணுமா?. அன்றாட வாழ்வில் நடக்காததை எதையும் அவர் சொல்லவில்லை, உண்மை தான். அது மாதிரி பேசும் பிள்ளைகள் இருக்கத் தான் செய்கிறார்கள், கதையின் contextஇலும் அத்தகைய காட்சிகள் சரியாகப் பொருந்தி வரலாம். ஆனால் தன்னுடைய பல படங்களிலும் அதே பாணியைக் கையாண்டு பிள்ளைகள் பெற்றோர்களை எடுத்தெறிந்து பேசுவதை 'glorify' செய்து காண்பிக்கத் தான் வேண்டுமா?

மேலை நாடுகளைப் போல 14-15 வயது ஆனால் நீயே உன் வழியைப் பார்த்து கொள் என்று கூறி பிள்ளைகளை வெளியே அனுப்பி விடும் பெற்றோர்களின் மத்தியில், நம் பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகச் செய்யும் தியாகங்கள் அளப்பிட முடியாதது. மனைவியுடனோ கணவனுடனோ கருத்து வேறுபாட்டின் காரணமாக பிள்ளைகளைக் கவனியாமல் வேறொரு குடும்பத்தை அமைத்து கொண்டு வாழும் பெற்றோர்கள் அங்கு ஏராளம். இங்கும் அத்தகையவர்கள் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பான்மை என்பது அதில்லை. தன்னுடைய வாழ்க்கையை மட்டும் பற்றி சிந்திக்கும் தகப்பனின் மரணத்தை "The old man kicked his bucket" என்று ஒரு அமெரிக்க மகன் 'as-a-matter-of-fact' தொனியில் கூறுவானே ஆனால் வியப்பு பெரிதாக ஒன்றும் இருக்க முடியாது. ஆனால் பிள்ளைகளுக்காக தங்களுடைய ஆசைகள், சந்தோஷங்கள் இவற்றை எல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு கஷ்டப் பட்டு வளர்க்கும் நம்முடைய பெற்றோர்களைப் பார்த்து தன்னுடைய சுயநலத்திற்காக "நீங்க எப்ப சாவீங்க?"ன்னு அந்த ஈரமில்லாமல் கேட்பது உண்மையிலேயே வருத்தத்துக்குரியது. Our parents certainly don't deserve that!!

"பொல்லாதவன்" படத்தில் ஒரு காட்சி. தனுஷைப் பார்த்து நடிகர் முரளி சொல்வார் "நாளைக்கு உன் பையன் உன் சட்டை பையிலிருந்து பணத்தைத் திருடுவான் இல்ல? அப்ப தெரியும்டா அந்த வலியும் வேதனையும்"என்று. சத்தியமான வார்த்தைகள். சிங்கிள் விண்டோ சிஸ்டம் இல்லாத 1995ஆம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழக் கவுன்சலிங்கின் போது "திருச்சியிலயோ கோயம்புத்தூர்லயோ இருந்து படிச்சின்னா நீ கேக்கற ப்ராஞ்ச் கிடைக்கும். காலேஜுக்காக ப்ராஞ்சைக் காம்ப்ரமைஸ் செஞ்சுக்காதே" என்று என் தந்தையார் கூறியதைக் கேட்டு கிட்டத்தட்ட மௌன ராகம் திவ்யா போல நான் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. "நான் மெட்ராஸ்ல இருந்து படிக்கிறது உங்களுக்கு புடிக்கலையா?" எத்தனை harshஆன வார்த்தைகள். இது போல என் மகன் என்னிடம் பேசியிருப்பான் ஆயின் அதை என்னால் ஜீரணித்துக் கொண்டிருக்க முடியுமா என்பது சந்தேகமே. எனக்கு மகனும் இல்லை, அவன் என் சட்டை பையிலிருந்து திருடவும் இல்லை...ஆனால் ஏனோ இது போன்ற விஷயங்களை நான் அனுபவிக்கா விட்டாலும், உணர முடிகிறது. ஏன் என்றும் தெரியவில்லை.

நிறைவு பெற்றது.

40 comments:

கப்பி | Kappi said...

ரொம்ப யோசிக்க வச்சுட்டீங்க தல!

படிச்சிட்டிருக்கும்போது ஏதோ சொல்லனும்னு தோண alt+tab அடிச்சு சாட் விண்டோவை தேடிட்டிருந்தேன்...உங்க கூட பேசிட்டிருக்கேன்னு நினைச்சு...


நன்றி!

Anonymous said...

//உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா அருகில் நிதாரி என்னும் ஊரில் சிறு குழந்தைகளைப் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அந்த இரு கயவர்களைப் பற்றி கேள்வி படும் வரை//

இது என்ன பிரமாதம்!?. குஜராத்தில் பிறக்கவே இல்லாத கருவை சிக்கன் ஃபிரை பண்ணிய காவிக்கும்பலைவிடவா..?. தெஹெல்க்கா பார்க்கவில்லையா?

கதிரவன்...

கைப்புள்ள said...

//ரொம்ப யோசிக்க வச்சுட்டீங்க தல! //
அடடா! கேக்கவே ரொம்ப நல்லாருக்கு. நன்றி கப்பி.

//படிச்சிட்டிருக்கும்போது ஏதோ சொல்லனும்னு தோண alt+tab அடிச்சு சாட் விண்டோவை தேடிட்டிருந்தேன்...உங்க கூட பேசிட்டிருக்கேன்னு நினைச்சு...//
படுபாவிங்க கூகிள் டாக்கை நேத்துலேருந்து ப்ளாக் பண்ணிட்டாய்ங்கப்பா.
:(

கைப்புள்ள said...

//இது என்ன பிரமாதம்!?. குஜராத்தில் பிறக்கவே இல்லாத கருவை சிக்கன் ஃபிரை பண்ணிய காவிக்கும்பலைவிடவா..?. தெஹெல்க்கா பார்க்கவில்லையா?

வாங்க கதிரவன்,
நீங்க சொல்ற விஷயத்தை உண்மையிலேயே நான் கேள்வி பட்டதில்லை. லிங்க் தர முடியுங்களா?

குட்டிபிசாசு said...

பழச கிளரி விட்டது!! நெகிழ வச்சிட்டிங்க!! வாழ்த்துக்கள்!!

நாகை சிவா said...

கப்பி சொன்னதை போல தான் ரொம்பவே யோசிக்க வைத்து விட்டீர்கள்.

சில சமயம் சே... இந்த சின்ன விசயத்துக்கு எல்லாமா சண்டை போட்டு இருக்கோம் என்று தோணும். ஆனால் இது வரை பெற்றோர்களை ரொம்ப மனக் கஷ்டம் அடைய வைத்தது இல்லை என்பது வரை மகிழ்ச்சியே.

//மனதில் அந்த "விஷயத்தின் knowledge" என்ற அழுக்கு படிந்துவிட்டால் அதன் பிறகு மிகச் சாதாரணமாகி விடுகிறது.//

சத்தியமான உண்மை. இன்று வாடிக்கையாகி போன வெடிகுண்டு தாக்குதல்களை கேட்கும் போது அப்படி தான் ஆகி போச்சு

Anonymous said...

கைப்புள்ளெ...


http://thiravidam.blogspot.com/

கதிரவன்.

கைப்புள்ள said...

//http://thiravidam.blogspot.com///

கதிரவன்,
படித்தேன். காறி உமிழ வேண்டிய ஒரு செயல். உண்மையிலேயே மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிச் செயலைத் தான் மதத்தின் போர்வையில் செய்திருக்கிறார்கள். கண்டனத்துக்குரிய வெறுக்கத்தக்க செயல்.

கைப்புள்ள said...

//பழச கிளரி விட்டது!! நெகிழ வச்சிட்டிங்க!! வாழ்த்துக்கள்!!//

வாழ்த்துகளுக்கு நன்றிங்க குட்டிபிசாசு.

கைப்புள்ள said...

//கப்பி சொன்னதை போல தான் ரொம்பவே யோசிக்க வைத்து விட்டீர்கள்.//
நன்றி சிவா.

//சில சமயம் சே... இந்த சின்ன விசயத்துக்கு எல்லாமா சண்டை போட்டு இருக்கோம் என்று தோணும். ஆனால் இது வரை பெற்றோர்களை ரொம்ப மனக் கஷ்டம் அடைய வைத்தது இல்லை என்பது வரை மகிழ்ச்சியே//
பெற்றோர் மெச்சும் நல்ல பிள்ளையாக நீ இருப்பதை அறிந்து மகிழ்ச்சியே புலி
:)

//மனதில் அந்த "விஷயத்தின் knowledge" என்ற அழுக்கு படிந்துவிட்டால் அதன் பிறகு மிகச் சாதாரணமாகி விடுகிறது.//

சத்தியமான உண்மை. இன்று வாடிக்கையாகி போன வெடிகுண்டு தாக்குதல்களை கேட்கும் போது அப்படி தான் ஆகி போச்சு//

இப்பல்லாம் சின்ன பசங்களுக்குக் கூட இதெல்லாம் தெரிஞ்சுடுது. வருந்தத்தக்க உண்மை.
:(

ambi said...

ஹூம்ம்ம். உங்களுக்கு இப்படி ஒரு சீரியஸ் முகம் இருக்கும்னு நான் எதிர்பாக்கலை, முப்பதை நெருங்கி கொண்டிருக்கும் கைப்பு அங்கிள். :p


//மனதில் அந்த "விஷயத்தின் knowledge" என்ற அழுக்கு படிந்துவிட்டால் அதன் பிறகு மிகச் சாதாரணமாகி விடுகிறது.//

உண்மை, இப்ப எல்லாம் அங்க குண்டு, இங்க குண்டுனு வர செய்தி எல்லாம் ரொம்ப பழகி போன மாதிரி இருக்கு. :(

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்????? சிலபேருக்குத் திருமணம் ஆனதுமே, வயசாயிடுச்சுனு ஒரு ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா'வா ஆயிடறாங்களே? அது ஏனுங்க?????

Sathiya said...

நெஞ்ச நக்கிட்டீங்க;) ஆனா இந்த மாதிரி நாம பேசுறத எல்லாம் நம்ம அப்பா அம்மா ஞயாபகம் வச்சுக்க மாட்டாங்க. ஏன்னா இதெல்லாம் நம்ம மனசுல இருந்து வரதில்ல. நம்ம அப்பா அம்மா நம்மளை விட அனுபவசாலிகள். அவங்களுக்கு இது புரியும். சில அப்பாக்கள் தன் மகனை கோபத்தில், "ஏன்டா எனக்கு வந்து பிள்ளையா பொறந்து இப்படி உயிரை வாங்கற"னு திட்டுவாங்க. அதெல்லாம் சும்மா வாய் வார்த்தை தான். தெளிவான புள்ளையா இருந்தா அது நம்ம நல்லதுக்கு தான்னு புரியும்.

கைப்புள்ள said...

//ஹூம்ம்ம். உங்களுக்கு இப்படி ஒரு சீரியஸ் முகம் இருக்கும்னு நான் எதிர்பாக்கலை//
சீரியஸ் முகம் சீராத முகம்னு தனித்தனியா ஒன்னும் இல்லை...எல்லாம் ஒரே முகரக்கட்டை தான். பேசிக்கலா ஐ ஆம் எ மரண கடியன் யூ நோ? அதான் இப்ப நீங்க பாக்கறது.
:))

// முப்பதை நெருங்கி கொண்டிருக்கும் கைப்பு அங்கிள். :p//
இது டூ மச். ஐ ஹேட் யூ:) (இந்தி பட ஹீரோயின் ஸ்டைல்ல படிச்சிக்கோங்க)

வருகைக்கும் கருத்துக்கும் டேங்ஸுங்ணா.

கைப்புள்ள said...

//ம்ம்ம்ம்ம்ம்ம்????? சிலபேருக்குத் திருமணம் ஆனதுமே, வயசாயிடுச்சுனு ஒரு ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா'வா ஆயிடறாங்களே? அது ஏனுங்க?????//

ஐ...யாரது? யாரது? யார்டா அது எங்க தலைவி கைல ஃபீலிங்ஸ் காட்டறது? கீச்சிடுவேன் கீச்சி...தலைவியாரே சவுண்டு விட்டுட்டேன்...இனிமே திருமணம் ஆனாலும் ஃபீலிங்ஸ் ஆஃப் பெங்களூர் எல்லாம் காட்டமாட்டானாம்.
:)

கைப்புள்ள said...

//நெஞ்ச நக்கிட்டீங்க;)//
வாங்க வடக்குப்பட்டி ராமசாமி,
எனக்கு கூட அப்படித் தான் படுதுங்கோ
:) அப்புறம் கவுண்டர் கிட்ட வாங்குன கடனை மட்டும் திரும்பக் கொடுத்துடுங்க.


//ஆனா இந்த மாதிரி நாம பேசுறத எல்லாம் நம்ம அப்பா அம்மா ஞயாபகம் வச்சுக்க மாட்டாங்க. ஏன்னா இதெல்லாம் நம்ம மனசுல இருந்து வரதில்ல. நம்ம அப்பா அம்மா நம்மளை விட அனுபவசாலிகள். அவங்களுக்கு இது புரியும். சில அப்பாக்கள் தன் மகனை கோபத்தில், "ஏன்டா எனக்கு வந்து பிள்ளையா பொறந்து இப்படி உயிரை வாங்கற"னு திட்டுவாங்க. அதெல்லாம் சும்மா வாய் வார்த்தை தான். தெளிவான புள்ளையா இருந்தா அது நம்ம நல்லதுக்கு தான்னு புரியும்//
அத தான் பெரியவங்க குஞ்சு மிதிச்சு கோழி சாவுமான்னு சொல்லி வச்சிருக்காங்க...சே...கோழி மிதிச்சு குஞ்சு சாவுமான்னு சொல்லி வச்சிருக்காய்ங்க. நீங்க சொல்றது வாஸ்தவம் தாங்க. புள்ளைங்க பண்ற தப்பெல்லாம் மன்னிக்கற பெரிய மனசு பெத்தவங்களுக்கு இருக்கத் தான் செய்யுது.
:)

Geetha Sambasivam said...

ம்ம்ம்? இதுக்குத் தான் 2 பின்னூட்டம் கொடுத்தேன், வரலை இன்னொண்ணு, போகட்டும் பயம் இருக்கில்லை??? அது!!!!!!!!!!!! :P

இலவசக்கொத்தனார் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அவனவனுக்கு அவன் கஷ்டம் பெருசாத் தெரியும் அடுத்தவனைப் பார்க்கும் வரை.

Sathiya said...

//அப்புறம் கவுண்டர் கிட்ட வாங்குன கடனை மட்டும் திரும்பக் கொடுத்துடுங்க//
நாங்க சுட்ட வாக்கும் சுட்ட பொருளும் திருப்பி கொடுக்குற பழக்கமில்லை;)

ambi said...

//வருகைக்கும் கருத்துக்கும் டேங்ஸுங்ணா.
//

அண்ணாவா? அட, என் லேட்டஸ்ட் ப்ரோபல் படத்தை பாத்துமா உங்களுக்கு சந்தேகம்? :p

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கடா. கார்த்திக் அம்மா வலைப்பதிவை பாத்தேன். டைம் போனதே தெரியமா ஆழ்ந்து படிச்சுட்டு இருந்தேன். இப்போதான் Last Holiday ஒரு (Comedy) படம் பாத்தேன். அதுல சொல்லப் பட்ட தீம் கூட இந்த மாதிரிதான். தான் ஒரு குணப்படுத்த முடியாத வியாதியால (cancer illa) சாகப் போறோம்னு தெரிஞ்சு அந்தக் கதாநாயகி கண்ணாடியப் பார்த்து பேசும் வசனம், ''அடுத்த முறை, நிறைய சிரிப்போம், நிறைய அன்பு காட்டுவோம் - எதுக்கும் பயப்படமா வாழ்க்கைய வாழ்வோம்". அதத்தான் செய்யணும், இப்பவே.

சரி, சரி - மக்கள் சந்தோஷப்பட நல்லதா ஒரு சிரிப்பு பதிவு போட்டுடு. நீ ஒரு "சிரிப்பு ப்ளாகர்" தானே...

கைப்புள்ள said...

//ம்ம்ம்? இதுக்குத் தான் 2 பின்னூட்டம் கொடுத்தேன், வரலை இன்னொண்ணு, போகட்டும் பயம் இருக்கில்லை??? அது!!!!!!!!!!!! :P//

தலைவியைப் பகைச்சுக்க முடியுமா?
எந்நாளும் நான் உங்கள் தொண்டன் தானே?
:)

கைப்புள்ள said...

//ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. அவனவனுக்கு அவன் கஷ்டம் பெருசாத் தெரியும் அடுத்தவனைப் பார்க்கும் வரை//

உங்க பின்னூட்டத்தைப் படிச்சதும் "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு" இது தான் நினைவுக்கு வருது.

கைப்புள்ள said...

//நாங்க சுட்ட வாக்கும் சுட்ட பொருளும் திருப்பி கொடுக்குற பழக்கமில்லை;)//

ஹி...ஹி...அதனால் தான் நல்ல படங்களா உங்களால சுட முடியுதுன்னு நெனைக்கிறேன்.
:)

கைப்புள்ள said...

//அண்ணாவா? அட, என் லேட்டஸ்ட் ப்ரோபல் படத்தை பாத்துமா உங்களுக்கு சந்தேகம்? :p//

மாவரைக்கிறதுல நீங்க தானே என் குரு? அதான் அண்ணா. பாசமிகு மாவண்ணா.
:)

கைப்புள்ள said...

//ரொம்ப நல்லா எழுதி இருக்கடா. //
தேங்க்ஸ் மச்சான்.

//கார்த்திக் அம்மா வலைப்பதிவை பாத்தேன். டைம் போனதே தெரியமா ஆழ்ந்து படிச்சுட்டு இருந்தேன்//
ஆமாம்டா. சில பதிவுகள் ரொம்ப உணர்ச்சிவசப் படற மாதிரி இருக்கும்.

//இப்போதான் Last Holiday ஒரு (Comedy) படம் பாத்தேன். அதுல சொல்லப் பட்ட தீம் கூட இந்த மாதிரிதான். தான் ஒரு குணப்படுத்த முடியாத வியாதியால (cancer illa) சாகப் போறோம்னு தெரிஞ்சு அந்தக் கதாநாயகி கண்ணாடியப் பார்த்து பேசும் வசனம், ''அடுத்த முறை, நிறைய சிரிப்போம், நிறைய அன்பு காட்டுவோம் - எதுக்கும் பயப்படமா வாழ்க்கைய வாழ்வோம்". அதத்தான் செய்யணும், இப்பவே.//
நல்ல கருத்து. பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

//சரி, சரி - மக்கள் சந்தோஷப்பட நல்லதா ஒரு சிரிப்பு பதிவு போட்டுடு. நீ ஒரு "சிரிப்பு ப்ளாகர்" தானே...//
அப்படியே செஞ்சிடறேன்.
:)

இராம்/Raam said...

அட்டகாசம் தல..

இடையிலே இடையிலே ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து இருந்தீங்கன்னா ரொம்பவே நல்லா இருந்துருக்கும்..... :)

Geetha Sambasivam said...

// முப்பதை நெருங்கி கொண்டிருக்கும் கைப்பு அங்கிள். :p//
இது டூ மச். ஐ ஹேட் யூ:) (இந்தி பட ஹீரோயின் ஸ்டைல்ல படிச்சிக்கோங்க)

வருகைக்கும் கருத்துக்கும் டேங்ஸுங்ணா.

ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கு, அம்பியை நீங்க "அங்கிள்"னோ இல்லை, "தாத்தா"ன்னோ கூப்பிடலாம், தப்பில்லை!!!!

பாச மலர் / Paasa Malar said...

உங்கள் இந்தத் தொடர் இன்றுதான் படித்தேன்..மிகவும் அருமை..

//ஆனால் ஏனோ இது போன்ற விஷயங்களை நான் அனுபவிக்கா விட்டாலும், உணர முடிகிறது. ஏன் என்றும் தெரியவில்லை.//

இது இப்படித்தான்..இந்த உணர்வு நிறைய தருணங்களில் தோன்றும்..அம்மா ஆகும்போது அம்மாவின் அருமை புரியும் என்பார்கள்..

பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் நல்லது..

எம்டன் மகன் பரத் பாத்திரம் ஏனோ இபோது நினைவுக்கு வந்தது..

Dyeaneshwaran K said...

Maamaa...
Kya hua... Enna Aachu... Ippadi oru senti'yaana blog... Onnu mattum nichayam... ellarum sonnadha pola.. who ever reads will definitely think... Good one

Dyeany

கைப்புள்ள said...

//அட்டகாசம் தல..
//

நன்றிப்பா ராயல்.

//இடையிலே இடையிலே ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து இருந்தீங்கன்னா ரொம்பவே நல்லா இருந்துருக்கும்..... :)//
இனிமேல் ஞாபகம் வச்சிக்கிறேன்.

கைப்புள்ள said...

//ஹிஹிஹி, ரொம்ப சந்தோஷமா இருக்கு, அம்பியை நீங்க "அங்கிள்"னோ இல்லை, "தாத்தா"ன்னோ கூப்பிடலாம், தப்பில்லை!!!!//

அப்பா...ரெண்டு பேருக்கும் சிண்டு முடிஞ்சு விடறதில 16 வயசு சின்னப் பொண்ணுக்கு என்ன ஒரு சந்தோசம்??
:)

கைப்புள்ள said...

//உங்கள் இந்தத் தொடர் இன்றுதான் படித்தேன்..மிகவும் அருமை..//

உங்களுக்குப் பிடித்திருந்ததை அறிந்து மிக்க மகிழ்ச்சி பாசமலர்.

//ஆனால் ஏனோ இது போன்ற விஷயங்களை நான் அனுபவிக்கா விட்டாலும், உணர முடிகிறது. ஏன் என்றும் தெரியவில்லை.//

இது இப்படித்தான்..இந்த உணர்வு நிறைய தருணங்களில் தோன்றும்..அம்மா ஆகும்போது அம்மாவின் அருமை புரியும் என்பார்கள்..

பெற்றோரை முதியோர் இல்லம் அனுப்புபவர்கள் இதைக் கவனத்தில் கொண்டால் நல்லது..

எம்டன் மகன் பரத் பாத்திரம் ஏனோ இபோது நினைவுக்கு வந்தது..//

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//Maamaa...
Kya hua... Enna Aachu... Ippadi oru senti'yaana blog...//
என்னைப் பத்தி நல்லா தெரிஞ்சிருந்தும் இந்த கேள்வியைக் கேக்குறே பாத்தியா? சந்தோசம், சோகம் ரெண்டும் வாழ்க்கையில ஜகஜம் தானே?

// Onnu mattum nichayam... ellarum sonnadha pola.. who ever reads will definitely think... Good one//
டேங்க்ஸ் மாம்ஸ்.

Anonymous said...

Suicide letters from a blogger who tried committing suicide for more than 2 times this year. He records all his life's journey with depression

http://allthatiam-allthatieverwas.blogspot.com/2007/11/what-happened-in-october-day-i-tried-to.html

http://allthatiam-allthatieverwas.blogspot.com/2007/11/my-suicide-letters-from-may-and-october.html

மங்கை said...

அருமை கைப்ஸ்..மனச என்னவீ பண்ணுது.. குழந்தைகளை பேசவிட்டு பார்ப்பதில் எனக்கும் சுத்தமாக உடன்பாடு இல்லை... குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும்.. நம்ம நாட்டுல கூட இந்த ''மழலை'' கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சுட்டே வருது..
ஊடகங்களாவது இந்தப்போக்கை உணர்ந்து ஏதாவது செய்யவேண்டும்.. ஆனால் அவர்களே நெருப்புல எண்ணை ஊத்தற வேலௌ தான் செய்துட்டு வராங்க

எல்லாரும் படிக்க வேண்டிய பதிவு.. அருமை கைப்ஸ்

கைப்புள்ள said...

//Suicide letters from a blogger who tried committing suicide for more than 2 times this year. He records all his life's journey with depression//

நண்பா,
படிச்சுப் பாத்தேன். ஏன் அப்படி செஞ்சோம்னு இப்ப அவங்க வருத்தப்படறது தெரியுது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

கைப்புள்ள said...

//அருமை கைப்ஸ்..மனச என்னவீ பண்ணுது.. குழந்தைகளை பேசவிட்டு பார்ப்பதில் எனக்கும் சுத்தமாக உடன்பாடு இல்லை... குழந்தைகள் குழந்தைகளாகத்தான் இருக்க வேண்டும்.. நம்ம நாட்டுல கூட இந்த ''மழலை'' கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சுட்டே வருது..//

ஆமாங்க மேடம். புத்திசாலித் தனமா பேசறதுக்கும் அளவுக்கதிகமா தேவையில்லாததை பேசறதுக்கும் இருக்கற வித்தியாசத்தைப் பெற்றோர்களே உணராமல் வேடிக்கை பார்ப்பது தான் இந்த மறைந்து வரும் மழலைக்குக் காரணம்னு நெனக்கிறேன்.

//
ஊடகங்களாவது இந்தப்போக்கை உணர்ந்து ஏதாவது செய்யவேண்டும்.. ஆனால் அவர்களே நெருப்புல எண்ணை ஊத்தற வேலௌ தான் செய்துட்டு வராங்க//
வருந்தத்தக்க உண்மை.

//எல்லாரும் படிக்க வேண்டிய பதிவு.. அருமை கைப்ஸ்//
தங்கள் பாராட்டு மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. நன்றி மேடம்.

cheena (சீனா) said...

மனம் நெகிழ்ந்தது - பெற்ற மகனை இழந்த தாய் - இறுதி ஊர்வலத்தைக் கண்ட தந்தை - இதயத்தின் அடித்தளத்திருந்து வராத , உதட்டின் நுனியிலிருந்து, எந்த வித பிண்ணனியும் இல்லாத, சில தவிர்க்க வேண்டிய, புண்படுத்தும் சொற்கள் - ம்ம்ம் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாகத் தான் இருக்கிறது.

கைப்புள்ள said...

//மனம் நெகிழ்ந்தது - பெற்ற மகனை இழந்த தாய் - இறுதி ஊர்வலத்தைக் கண்ட தந்தை - இதயத்தின் அடித்தளத்திருந்து வராத , உதட்டின் நுனியிலிருந்து, எந்த வித பிண்ணனியும் இல்லாத, சில தவிர்க்க வேண்டிய, புண்படுத்தும் சொற்கள் - ம்ம்ம் வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியாகத் தான் இருக்கிறது//

வாங்க சீனா சார்,
நான் சொல்ல வந்த கருத்துகள் ஒவ்வொன்னையும் நல்லா உள்வாங்கி ஆழமா படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. ரொம்ப மகிழ்ச்சியாயிருக்கு சார். நன்றி.