Sunday, March 05, 2006

நானும் ஒரு அன்பே சிவம் பதிவிடுகிறேன்.

கடந்த இரு வாரங்களில் பலரும் 'அன்பே சிவம்' பற்றி எழுதித் தள்ளிவிட்டார்கள். காலந்தாழ்த்தி நானும் அன்பே சிவம் பற்றி எழுத இன்று எத்தனித்துள்ளேன். பெரியவங்க எல்லாம் எழுதாததை நான் என்ன எழுதிடப் போறேன்? ஆனாலும் ஒரு எட்டு வந்து படிச்சு பாருங்க. ஏன்னா இந்த பதிவு 'அன்பே சிவம்' படத்தைப் பற்றியல்ல.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் என் கல்லூரி நண்பர் திருமுருகன், தன் ஆங்கில வலைப் பதிவில், ரசிகர்களுக்கு கைப்பட கடிதம் எழுதுவதாக அறிவித்திருந்தார். எனக்கும் ஒரு கடிதம் எழுதுடா என்று கேட்டுக் கொண்டேன். ரொம்ப நாளாய் அதை பற்றி பேச்சுமூச்சு இல்லாத காரணத்தால் சரி அவ்ளோ தான் என்று நானும் நினைத்துக் கொண்டேன். சமீபத்தில் பெங்களூர் சென்றுவிட்டு இந்தூர் திரும்பியதும், பக்கத்து வீட்டு ஆண்ட்டி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு கடிதத்தை எனக்கு கொடுத்தார். ஆஹா! கைப்பட எழுதப்பட்ட கடிதங்களைப் படிப்பதில் தான் எத்தனை சுகம்? சரி, சும்மா ஹை, ஹலோ என்று நாலு வரி எழுதி அனுப்புவார் என்று எண்ணியிருந்த எனக்கு ஒரே ஆச்சரியம். கையினால் செய்யப்பட்ட ஒரு வாழ்த்து அட்டையும், தமிழ் புத்தாண்டு வாழ்த்தும், ஏழு பக்கங்களைக் கொண்ட கடிதமும் என்னை திக்குமுக்காடச் செய்தது.




ஸ்கேன் செய்த வாழ்த்து அட்டையில் உள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரியாததனால் கீழே தந்திருக்கிறேன்.
Dear Mohanraj,

I believe within each of us is the capacity to express love, show compassion, share a magic moment and make a difference.

Share love. Share magic.

With love,
Thirumurugan

இதைப் படித்ததும் சத்தியமாக அன்பே சிவம் படமும், ராஜேஷ் கண்ணா நடித்த பாவர்ச்சி(Bawarchi) என்ற இந்தி படமும் தான் நினைவுக்கு வந்தது. படத்தின் கதாநாயகர்களான கமல்ஹாசனும், இராஜேஷ் கண்ணாவும் இப்படங்களின் வாயிலாக மேற்கண்ட கருத்தையே வலியுறுத்தியொறுப்பார்கள். திருமுருகனின் பதிவான Keep Walkingஇல் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் அன்பு மற்றும் inspiration ஆகியவற்றை உள்ளடக்கியதேயாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் சக மனிதர்களிடத்தில் அன்பு காட்டுவது என்று தீர்மானித்து விட்டால் உலகம் எவ்வளவு அழகானதாகி விடும்?நண்பனின் உயர்ந்த எண்ணத்தை ஊக்குவிக்கவும் அதில் பங்குபெறவும் என்னால் ஆன ஒரு சிறிய முயற்சியே இந்த பதிவு.

அவர் எனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே கீழே வழங்கியுள்ளேன். சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் யாவும் உயரியனவாகவும் சமூக நோக்குடனும் அமைந்துள்ள காரணத்தினால் வலை உலகில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது.

அன்பு நண்பா,
அடடா, தமிழில் எழுதி எத்தனை நாளாயிற்று? எப்படியிருக்கிறாய்? எங்கேயிருந்து ஆரம்பிக்க? எங்கே முடிப்பது?



ஏழு வருடங்கள் தான் ஆகிறது நாம் கல்லூரி விட்டு வந்து. ஏனோ எழுபது வருடங்கள் போல் அசதி - நினைத்து மீண்டால். நிறையவே மாறியிருக்கிறேன். குறிக்கோள் என்ற ஒன்று இல்லாமல் சுற்றி அலைந்த வருடங்கள், அந்த நான்கு வருடங்கள். கல்லூரியில் 'அடுத்து என்ன' என்று கேட்டால், சிரித்து நழுவி விடுவேன். ஆனால், மனதுக்குள் எதிர்காலம் பற்றிய பயத்தையும் மீறி, ஒரு பெரிய ஆசை. ஏதாவது செய்ய வேண்டும். மற்றவர்களைப் போலல்லாமல். ஒரு குறுகிய வாழ்க்கைக்குள் சிக்காமல், எல்லோருக்கும் உதவும்படி, எளிய மக்களுக்காக ஒரு மாற்றம் ஏற்படுத்தினால் - அது என் வெற்றி எனக் குறித்துக் கொண்டேன். என்ன செய்யலாம்? சரி, படிப்போம். இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதலாம் என்று முடிவெடுத்தேன். மிகவும் மறக்கமுடியாத ஒரு வருடம் அது. எனக்காக பொருள், ஊக்கம் கொடுத்து உதவியவர்களை மறக்கமுடியாது. நிறைய படித்தேன், நிறைய பேருடன் பழகினேன். நிறைய கவனித்தேன். உலகம் தெரியாமல் வெளிவந்த எனக்கு அந்த ஒரு வருடம் நிறையவே கற்றுக்கொடுத்தது. கடுமையாகப் படித்தேன். எல்லோரும் சொன்னார்கள், 'கண்டிப்பாக நீ வெற்றி பெற வேண்டும் என்று. 'தோல்வி. பெரிதாக வருத்தம் இல்லை.

யோசிக்க ஆரம்பித்தேன். ஒரு வகையில் இதுவும் நல்லதே. என்னை எந்த ஒரு நிலைக்கும் தயார்படுத்திக் கொள்ள வந்த ஒரு வாய்ப்பு எனத் தேற்றிக் கொண்டேன். என்ன செய்வது அடுத்து? நிறைய படித்து என்ன பயன்? என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இத்தனை வருடம் என் கல்விக்காக செலவு செய்த அப்பாவுக்கும் என்னால் முடிந்தளவுக்கு செய்ய வேண்டும். வேலையில் சேரலாம் என முடிவெடுத்தேன். கிடைத்த இரண்டு வாய்ப்புகளில், அரசு வேலையைத் தேர்ந்தெடுத்து பெங்களூர்(ரு) வந்தேன். ஒரு முடிவையெடுக்கும் போது அது எவ்வள்வு நல்ல முடிவு என்று தெரிவதில்லை. காலம் கடந்தபின் அதை நினைத்து மகிழ்ந்துள்ளேன்.(நிறைய முறை).

இதுவும் அப்படியே. சிறிய அரசு நிறுவனம் என்பதால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. நான்கு வருடங்களில் 'அ' முதல் 'ஃ' வரை தெரிந்தது. நிறைய உயர் அதிகாரிகளுடன் கூட்டங்களுக்கு(Meetings), செல்ல நேர்ந்த போது ஒன்று புரிந்தது. எப்படி அவர்களை திருப்திபடுத்துவது, எப்படி கேள்விகளை எதிர்கொள்வது முதலியன. அந்த புரிந்த ஒன்று - என்ன தான் தலைமைச் செயலக அதிகாரிகளாயினும்(IAS), உண்மையான அதிகாரம் இருப்பது, முடிவுகள் எடுப்பது அரசியல்வாதிகள் தான். அடுத்து மந்திரிகளையும்(முதல் மந்திரி கிருஷ்ணா உட்பட), MLAக்களையும் புரிய வேண்டியிருந்தது. புரிந்துகொண்டோம். நான்கு வருடங்களில் என் கண் முன்னே ஒரு பெரிய நிறுவனமாய் வளர்ந்து நின்றது. ISROவும் கவனிக்க ஆரம்பித்தது எங்களை. இதற்கெல்லாம் காரணம் எங்கள் மேலாளரின்(Director) கடுமையான உழைப்பும், திறமையான ஆளுமையும் தான்.

என்ன தான் நிறைய நலத் திட்டப் பணிகள், மென்பொருள்கள் தயார் செய்தாலும், ஒரு குறை. நாங்கள் செய்யும் பணி அடிமட்ட விவசாயிகளை, குடிமக்களைத் தொடுவதில்லை. அதற்கென்று சில செயல்பாட்டு நிறுவனங்கள்(Implementation Agencies), எங்களால் செயல்படுத்த முடிந்தாலும் 'அது தவறு' என்று குறை கூறின. யாருக்கும் அடிமட்டத்தில் இருப்பவர்களை பற்றிக் கவலையில்லை. அவரவர்க்கு அவரது பணியைக் காத்துக் கொள்வது வேலையாகிவிட்டது.

எப்போதோ படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ராஜா வித்தை காட்டி பணம் சம்பாதிக்க யானை வாங்கினாராம். அதற்கு இரண்டு பாகன்கள். பயிற்றுவிக்க ஒரு கலைஞன். வைத்தியம் பார்க்க இரண்டு வைத்தியர்கள். காவல் காக்க நான்கு பேர். அந்த யானை வித்தையும் காட்டவில்லை. காசு கொடுத்துப் பார்க்கவும் யாரும் வரவில்லை. அரசாங்கமும் நாம் காசு கொடுத்து வாங்கிய யானையோ என்று தோன்றுகிறது. தோன்றியது.

மற்ற நாடுகள் எப்படி? அப்படி என்ன தான் குறை? அதையும் பார்த்து விடலாம் என்று தான் அடுத்த யோசனை. எப்படி போகலாம். அமெரிக்காவை முதலில் பட்டியலிலிருந்து எடுத்துவிட்டேன். ஏனோ பிடிக்கவில்லை. சுலபமாக, படிப்பதற்கு மட்டுமே விசா கிடைக்கும் எனத் தெரிந்து, அதற்கே விண்ணப்பித்தேன். பணத்தேவைக்கு உதவித்தொகை. அடடா, சில வருடங்களுக்கு முன் B.E.(Geo-Informatics) என்று நல்ல முடிவாய் ஏன் எடுத்தேன். இப்போது சுலபமாக உதவித்தொகை கிடைத்த போது இனித்தது.

ஆஸ்திரேலியா வந்து இறங்கிய ஆறு மாதம், எல்லா தேசிகளைப் போல மிகச் சுலபமாய் இந்திய நாட்டைப் பொரிந்து தள்ளினேன். இதையே தான் எல்லோரும் பேசித் தீர்ந்து, ஓய்ந்து போகிறார்கள். அமைதியாய் அசை போட ஆரம்பித்தேன், கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தன - ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்.


நம்முடைய ஒவ்வொரு பிரச்சினைகளும்(Caste, Untouchability, Corruption) பல காலமாய் ஊன்றிக் கிடக்கின்றன. இந்த 50 வருடங்களாய் தான் ஒரு தேசமாய் சிந்திக்கத் தொடங்கியிருக்கிறோம். மூவாயிரம் வருடங்கள் வரலாறு நம்முடையது. இங்கு 50 வருடங்கள் முன் தான் அரசாங்கம் தொடங்கியுள்ளனர்(குடியேற்றமும் சில நகரங்களில்)

ஆனால், சமீப பத்தாண்டு காலமாய் இந்தியாவின் ஆதிக்கத்தைக் கண்டு எல்லோரும் மிரண்டு போயிருப்பது உண்மை. எந்த நாடும் இந்தியாவை ஒதுக்கிவிட்டு எதிர்காலத் திட்டங்களை சிந்திக்க தயாரில்லை. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய சில நாடுகள் இந்தியாவுக்காக சில பல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டு விட்டன.

எந்த ஒரு Conferenceஇலும் சொல்லப்படும் விஷயங்கள் மேற்சொன்னவை. நான் படித்தவை, கேட்டவை, பார்த்தவை. இன்னும் நாம் அடிமட்டத்தை(Grassroots) தொட்டு விடவில்லை. நகரங்களில் மட்டுமே வண்ணம். நிறைய எண்ணங்கள் மனதில் ஓடுகிறது. இந்தியா வரவேண்டும் - படித்து முடித்த பின் ஏதாவது செய்ய வேண்டும். பயத்தை மீறிய ஒரு ஆசை - இருக்கத்தான் செய்கிறது.

இனிமேல் நாம்தான்.

அன்புடன்
திருமுருகன்

தாமதமாய் கடிதம் எழுதியதற்கு வருந்துகிறேன். மன்னிப்பாயாக.




கடைசியாக "மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே, பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே!" என வேண்டி நண்பரின் நல்லெண்ணத்தினை நிரைவேற்ற இறைவன் அவருக்கு மன உறுதியும் ஆரோக்கியத்தையும் அளிக்க மனமாற பிரார்த்திக்கிறேன்.

15 comments:

தருமி said...

உயர்ந்த மனம் கொண்ட உங்கள் நண்பர் அவரது பரந்த நோக்குகளையும், லட்சியங்களையும் விரைவில் அடைய வாழ்த்துகிறேன்.

G.Ragavan said...

கைப்புள்ளை..........எனக்கு என்னுடைய இனிய நண்பனின் நினைவு வருகிறது. நல்ல நட்புதான். நெருங்கிய நட்புதான். என்னவோ ஒரு ஈகோவில் பிரிந்தோம்....டெட்ராய்ட்டில் இருக்கும் அவன் நினைவுகள் வருவதுண்டு. ஆனால் அழைத்ததில்லை. என்னை மறந்திருப்பானோ! இருந்தால் என்ன செய்ய முடியும். முருகன் காப்பாத்தட்டும்.

Geetha Sambasivam said...

very touchable. really very proud of your friend and you.India will win in the coming days in all aspects.

கைப்புள்ள said...

வாங்க தருமி சார், கீதா மேடம்,
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. இந்த விஷயத்தைப் பத்தி நாங்க காலேஜ்ல ஒரு வாட்டி கூட பேசுனதில்லை. கடிதத்துல அவரோட எண்ணங்களைப் படிச்சு உண்மையிலேயே நெகிழ்ந்து போயிட்டேன்.

கைப்புள்ள said...

//கைப்புள்ளை..........எனக்கு என்னுடைய இனிய நண்பனின் நினைவு வருகிறது. நல்ல நட்புதான். நெருங்கிய நட்புதான். என்னவோ ஒரு ஈகோவில் பிரிந்தோம்....டெட்ராய்ட்டில் இருக்கும் அவன் நினைவுகள் வருவதுண்டு. ஆனால் அழைத்ததில்லை. //

வாங்க ராகவன்,
என் பதிவைப் படித்து தங்களுக்கு தங்கள் நண்பனின் நினைவு வந்தது குறித்து மகிழ்ச்சி. தங்களுடைய நட்பு என்றாயினும் திரும்ப மலர வேண்டும் என்பதே என் விருப்பமும் வேண்டுதலும்.

Anonymous said...

Really classic and touched my soul.. then keep moving raj.. nice blog..

கைப்புள்ள said...

//Really classic and touched my soul.. then keep moving raj.. nice blog.. //

வாம்மா மின்னலு! எப்ப தமிழ்ல எழுதப் போறே?
:)-

குமரன் (Kumaran) said...

நல்ல பதிவு கைப்புள்ள. நம் இளைஞர்களிடம் இந்த மாதிரி எண்ணங்கள் எப்போதும் இருக்கின்றன. ஆனால் வயதாக வயதாக சுயநலம் மிகுந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. கீழே சுட்டியில் கொடுத்தவற்றைப் படித்திருக்கிறீர்களா?

http://koodal1.blogspot.com/2006/02/150.html

http://abtdreamindia2020.blogspot.com/

கைப்புள்ள said...

வாங்க குமரன்,
நீங்க சொல்றது உண்மை தான். சின்ன வயசுல எதப் பத்தியும் நமக்குக் கவலையில்ல...அதனால நம்ம சிந்தனையெல்லாம் பரந்து விரிஞ்சிருக்கு. ஆனா வயசாக வயசாக படிப்பு, வேலை, கல்யாணம் இப்படினு கவலைகளோடு peer pressureஉம் சேர்ந்து நம்ம கொள்கைகள் எல்லாத்தயும் கப்பலேத்திடுது.உங்க இரண்டுவித இந்தியா பதிவைப் படிச்சேன். சிந்திக்க வைக்கும் கட்டுரை. இன்னொன்னையும் கூடிய சீக்கிரமே படிக்கிறேன்.

Ravichandran Somu said...

Kaipulla,

Very touching and impressive post. My wishes for your friend to achieve his ambitions.

-Ravi

P.S: Could you pls send your e-mail address to me (vssravi@gmail.com)

கைப்புள்ள said...

//Kaipulla,

Very touching and impressive post. My wishes for your friend to achieve his ambitions.

-Ravi//

வாங்க ரவி சார்,
தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

உங்களுக்கு நீங்க தந்த அந்த ஐடியில ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்.

Karthik Kumar said...

nenja thottitinga thaliva

Thekkikattan|தெகா said...

என்ன அருமையான சிந்தனையூட்டும் கடிதம்...

//ஆஸ்திரேலியா வந்து இறங்கிய ஆறு மாதம், எல்லா தேசிகளைப் போல மிகச் சுலபமாய் இந்திய நாட்டைப் பொரிந்து தள்ளினேன். இதையே தான் எல்லோரும் பேசித் தீர்ந்து, ஓய்ந்து போகிறார்கள். அமைதியாய் அசை போட ஆரம்பித்தேன், கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்தன - ஒற்றுமைகளும் வேற்றுமைகளும்.//

மேலே இருப்பது மிகவும் உண்மை... நான் புலம் பெயருவதற்கு முன்பு என் நண்பர்கள் அனைவரும் நானும் அப்படித்தான் திரும்ப வரும் பொழுது இந்தியாவைப் பற்றி (சாலைகள், மக்கட் கூட்டம், இத்யாதிகளை) சாடிச் செல்வேன் என்று கூறினார்கள். நான் அன்றே அவர்களிடத்தே மறுத்துக் கூறி சொல்லிய வார்த்தை... நான் வரலாற்றையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ள விரும்பவில்லையென்று...

கைப்புள்ள...அருமையான கடிதம் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி...!

தெகா.

Srikanth said...

தல,

"மலர் போன்ற மலர்கின்ற" பாட்டு (MP3)என்னிடம் இருக்கு, உங்ககிட்ட இருக்கா? இல்லையென்றால் வேண்டுமா ?

எனக்கு நிரம்ப பிடித்த பாட்டு, 3 வருஷம் வலையில் தேடி சமீபத்தில் தான் கண்டுபிடித்தேன். என் பதிவிலோ, அல்லது உங்களுடய புது பதிவிலோ பதில் சொல்லுங்கள்.

கைப்புள்ள said...

கார்த்திக் குமார், தெகா - பல மாதங்களுக்குப் பிறகு உங்கள் கருத்துகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.