Wednesday, February 13, 2008

'தலை' நகரம் - 5 : ஷ்ரீ லங்கா?!

தபால் தலைகள் குறித்த பதிவான 'தலை' நகரம் - 4இல் கீழே உள்ள நத்தார் தின(கிறிஸ்துமஸ் நாள்) தபால் தலையில் ஒரு சிறப்பு உள்ளது என்றும் அது என்னவென்றும் கேட்டிருந்தேன். அதை பற்றித் தான் இந்தப் பதிவு.

ஒரு நாட்டின் தபால் தலையை எடுத்துக்கிட்டோம்னா, அதை வேறு ஒரு நாட்டுத் தபால் தலையோடு ஒப்பிடும் போது வேறுபடுத்திக் காட்டுவது - அத்தலையில் அச்சிடப்பட்டிருக்கும் அந்நாட்டின் பெயர். சில நாடுகள் தங்கள் நாட்டின் பெயரை ஆங்கிலத்திலும், அதிகாரப்பூர்வப் பெயரை தங்கள் சொந்த மொழியிலும் அச்சிடுவர். உதாரணத்திற்கு இந்தியா. INDIA என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தாலும் தேசிய மொழியான இந்தியில் எழுதப்பட்டிருப்பது "பாரத்" என்று தான். சில நாடுகள் தங்கள் சொந்த மொழியில் மட்டுமே நாட்டின் பெயரை அச்சிடுவர். உதாரணமாக ஸ்வீடன் நாட்டுத் தபால் தலைகளைக் கண்டோம் ஆனால் SVERIGE என்று தான் அச்சிடப்பட்டிருக்கும், அதே போல நார்வே(NORGE), சுவிட்சர்லாந்து(HELVETIA). வேறு சில நாடுகள் ஆங்கில எழுத்தையும் தவிர்த்து தங்கள் சொந்த மொழி எழுத்திலேயே நாட்டின் பெயரை அச்சிடுவர். உதாரணமாக கொரியா, க்ரோஏஷியா ஆகியவை. இவற்றிலும் சில நாடுகள் சில சமயங்களில் ஆங்கிலத்திலும் தங்கள் நாட்டின் பெயரை அச்சிடுவது உண்டு.

மேலே உள்ள இலங்கை தபால்தலையைப் பாருங்கள். நாட்டின் பெயரைக் கவனித்தீர்களா? ஆங்கிலத்தில் SHRI LANKA என்றும் தமிழில் இலங்கை என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது. இலங்கையை SRI LANKA என்ற பெயரிலும் CEYLON என்ற பெயரிலும் அறிந்திருக்கிறோம். இவ்விரு பெயர்களையும் தவிர இலங்கைக்கும் இன்னும் பல பெயர்களும் இருக்கின்றன. அதற்காகவே விக்கிபீடியாவில் தனியாக ஒரு பக்கமும் உள்ளது.

இலங்கையின் மற்ற பெயர்கள் :
இலக்திவா - Lakdiva
சிலோன் - Ceylon
சிஹலம் - Sihalam
சீலா கே - Siela Keh
செரண்டிப் - Serendip
ஹெலாதிவா - Heladiva
தாமிரபரணி - Tamraparni

மேலே உள்ள பெயர்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னும் ஒவ்வொரு காரணம் உள்ளது. முழுவிபரமும் வேண்டுமென்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள விக்கிபீடியா சுட்டியைச் சுட்டுங்கள். முக்கியமான சிலவற்றைப் பற்றி மற்றும் இங்கே கூறுகிறேன். Serendip என்ற பெயர் அரேபிய மூலத்தைக் கொண்டது. இப்பெயரைக் கொண்டு எழுதப்பட்ட 'The Three Princes of Serendip' என்கின்ற கதையின் வழியாக, ஆங்கில மொழிக்கு 'Serendipity' என்ற சொல் கிடைத்தது. த்ரீ ப்ரின்சஸ் கதையில் மூன்று இளவரசர்களும் தற்செயலாகப் பல புதிய விஷயங்களைக் கண்டுபிடிப்பார்கள். அது போல தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படும் அல்லது கண்டறியப்படும் செயலை ஆங்கிலத்தில் 'Serendipity' என்கின்றனர்.

அசோக மன்னரின் வழி வந்தவரான 'விஜயன்' என்ற அரசர், இலங்கையை தாமிரபரணி என்று அழைத்தாராம். அதற்கு தாமிர(Copper) நிறம் கொண்ட இலை என்று பொருளாம். தென் தமிழ்நாட்டில் ஓடும் நதிக்கு இப்பெயர் இருப்பதை அறிந்திருப்போம், ஆனால் இலங்கைக்கும் இப்பெயர் முன்பு இருந்திருக்கிறது என்று அறியும் போது ஆச்சரியம் மேலிடுகிறது. தாமிரபரணி என்ற பெயர் கிரேக்கர்களால் 'Taprobane' என்று அழைக்கப்பட்டது. உலகின் முதல் வரைபடம் இயற்றிய ப்டாலமி(Ptolemy) என்ற கிரேக்க அறிவியலாளரும் அவ்வரைபடத்தில் இலங்கையை 'Taprobane' என்றே அழைக்கிறார்.

சரி...இத்தனை பெயர்கள் இந்த நாட்டுக்கு இருக்கு. ஆனால் அத்தபால் தலையில் உள்ளது போல 'SHRI LANKA' என்ற பெயரில் இலங்கை அறியப்பெற்றதில்லை என வினவுகிறீர்களா? ஆம்...இலங்கையின் தபால் தலைகள் அனைத்திலும் 'SRI LANKA' என்றும் பழைய தபால் தலைகளில் 'CEYLON' என்று மட்டுமே அச்சடிக்கப் பட்டிருக்கும். ஆனால் 'SHRI LANKA' - ஷ்ரீ லங்கா என்று அச்சிடப்பட்டிருப்பது இத்தபால் தலையின் சிறப்பு. அப்படியென்றால் இது போலி தபால் தலையா என்றால் அதுவுமில்லை. இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தபால் தலை தான்.

இலங்கையின் முன்னாள் அதிபரான ரணசிங்கே பிரேமதாசா ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் பெயர் SRI LANKA என்று இருந்தால் நாட்டின் தலைவரின் உயிருக்கு ஆபத்து வரலாம் என ஒரு ஜோசியர் சொன்னாராம். அதை கேட்ட பிரேமதாசா அரசியல் சாசன மாற்றம் எதையும் செய்யாமல் தபால் தலைகளிலும், அரசாங்கக் கடிதத் தாள்களிலும்(Letterheads) SRI LANKA என்பதை SHRI LANKA என்று மாற்றிவிட்டாராம். SHRI LANKA என்ற பெயர் தாங்கிய இன்னொரு தபால் தலை கீழே.



ஆனால் இப்பெயர் 1992ஆம் ஆண்டிற்கும் 1993ஆம் ஆண்டிற்கும் இடையில் தான் நடைமுறையில் இருந்திருக்கின்றது. மே 1, 1993 ஆம் ஆண்டு தற்கொலைப்படைத் தாக்குதலினால் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்ட பிறகு மறுபடியும் நாட்டின் பெயரை SHRI LANKAவில் இருந்து SRI LANKA ஆக்கிவிட்டார்கள். SRI என்பது SHRI ஆனதையும், அது 1993க்குப் பிறகு மறுபடியும் SRI ஆனதையும் யாரும் கண்டுகொள்ளவுமில்லை :)

31 comments:

இலவசக்கொத்தனார் said...

இதைத்தான் 'தலை'எழுத்துன்னு சொல்லுவாங்களோ!! :))

Anonymous said...

//அத்தலையில் அச்சிடப்பட்டிருக்கும் அந்நாட்டின் பெயர். சில நாடுகள் தங்கள் நாட்டின் பெயரை ஆங்கிலத்திலும், அதிகாரப்பூர்வப் பெயரை தங்கள் சொந்த மொழியிலும் அச்சிடுவர். //
முதலில் இந்த வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்!!

இங்கிலாந்து மட்டும் விதிவிலக்கு. ராணியின் தலை மட்டும் இருக்கும். இதனால் தான் தபால் தலை என்ற பெயர் வந்ததோ?
பழைய நினைவுகள். சேர்த்து வைத்திருந்த தபால் தலைகள்
எங்கே போனதோ!
புடான் நாடு ஒலிப்பதிவுத் தட்டை தபால் தலையாக வெளியிட்டிருந்தது. வேல செய்த்ததா தெரியவில்லை.
பள்ளி மாணவர்களிடையே, பண்ட மாற்று முறையில்
பரிமாற்றங்கள் நடக்கும்!

துளசி கோபால் said...

'தலை'க்குப் பின்னாலே இத்தனை விஷயம் இருக்கா?

தாம்ரபரணி ஆச்சரியம்தான்.

முந்தாநேத்துதான் ஒரு சின்னப்பொதி (மொத்தம் 200 எண்ணிக்கை) தபால்தலைகளை மார்கெட்லே இருந்து
புடிச்சியாந்தேன்.

நல்லவேளை ஞாபகம் படுத்தும் பதிவு போட்டீங்க.

பொதியைத் திறந்து பார்க்கணும்.
அபூர்வா கிடைக்குமான்னு:-)

கானா பிரபா said...

எல்லாம் நம்ம "தலை" விதி கைப்பு, வேறென்ன சொல்ல

M.Rishan Shareef said...

இந்த விஷயமே எனக்கு இப்போதான் தெரிஞ்சுருக்கு.நன்றிகள் நண்பரே.

மெளலி (மதுரையம்பதி) said...

ரொம்ப அபூர்வமான தகவல்.
ஆக, இலங்கை அரசியல்வாதிகளும் நம்மூர்காரவுக மாதிரிதான் போல.

வல்லிசிம்ஹன் said...

தாமிரபரணி அங்கேயுமா!!
பெயரை மாத்தியும் விதியை மாத்த முடியலை. வெகு அபூர்வமான தகவல்கள். வாழ்த்துகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்த சேரன்டீப் என்பது பற்றி, குமரி அனந்தன் வேறு தகவல் சொன்னார். அரேபியர்கள் வியாபாரம் செய்த போது இலங்கையில் சேரனில் ஆட்சி நடந்ததாகவும்; அதனால் சேரன் +தீவு =சேரன்டீப் ஆனதாகவும்
,இலங்கையில் உள்ள சில பழக்கவழக்கங்கள் சேரநாட்டுக்குரியது எனவும் கூறினார்.
இந்தப் பெயர் மாற்ற விபகாரம் அப்போது அறிந்ததே...இதைக் கூறியது ஒரு மலயாள மாந்திரீகர்
எனும் கதையும் உண்டு. அவர் வெளிநாட்டுப் பயணம் பிரேமதாசாவுக்கு ஆபத்தாகும் என அறிவுறுத்தி
தவிர்க்கும் படி கூறியதாக அன்றைய "ரைம் "சஞ்சிகை எழுதியது.

கல்வெட்டு said...

// தேசிய மொழியான இந்தியில் எழுதப்பட்டிருப்பது "பாரத்" என்று தான்.//

இந்தி தேசிய மொழி என்று நீங்கள் மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல.
இந்தியாவில் தேசிய மொழி என்ற ஒரு புண்ணாக்கும் கிடையாது.

இது பற்றி பல இடங்களில் பேசியாகிவிட்டது (http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_22.html) என்றாலும்..மீண்டும்
--

இந்தியாவில் national language என்று ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எல்லாம் official language தான். அதுவும் மாநில அரசாங்கம் நினைத்தால் நரிக்குறவர் மொழியைக்கூட அவர்கள் மாநிலத்திற்கு official language ஆக வைத்துக் கொள்ளலாம்.

ஹிந்தி "தேசிய மொழி" (National language) என்பது உண்மையல்ல.

THE CONSTITUTION OF INDIA
PART XVII
OFFICIAL LANGUAGE

(பி.கு:
CONSTITUTION OF INDIA வின் வேறு எந்தப் பிரிவிலும் தேசிய மொழி பற்றி இருப்பதாகத் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொன்னால் நல்லது.)

PART XVII
OFFICIAL LANGUAGE
CHAPTER I.—LANGUAGE OF THE UNION

CHAPTER II.—REGIONAL LANGUAGES

CHAPTER III.—LANGUAGE OF THE SUPREME COURT,
HIGH COURTS, ETC.

http://india.gov.in/
Home > Government > Constitution of India : English Version

Anonymous said...

"பேரை மட்டும் மாத்திடுங்க தலைவா, ஆட்சியைப் புடிச்சிடலாம்" அப்படின்னு ஆளாளுக்கு இப்படி ஊர், நாட்டின் பெயர் எல்லாம் மாத்திட்டு திரியாம இருந்தா சரி. நியுமராலஜி எப்படி எல்லாம் மயக்குது.

Geetha Sambasivam said...

பல அரிய தகவல்கள், நன்றி.

கப்பி | Kappi said...

தகவல்களுக்கு நன்றி தல!!

Anonymous said...

This series is Very informative. Kalakareenga
(sorry tamil font thideernu konjam problema irukku)

cheena (சீனா) said...

பல அரிய தகவல்கள் - நன்றி - நட்சத்திரப் பதிவருக்கு நல் வாழ்த்துகள்.

Anonymous said...

நன்றி அருமையான தகவல்!

கைப்புள்ள said...

//இதைத்தான் 'தலை'எழுத்துன்னு சொல்லுவாங்களோ!! :))//

ஆமாங்க...விதிகளை மீறி நாட்டோட பேரை மாத்தியும் தன்னோட உயிரைக் காப்பாத்திக்க முடியலியே?

கைப்புள்ள said...

//இங்கிலாந்து மட்டும் விதிவிலக்கு. ராணியின் தலை மட்டும் இருக்கும். இதனால் தான் தபால் தலை என்ற பெயர் வந்ததோ?
பழைய நினைவுகள். சேர்த்து வைத்திருந்த தபால் தலைகள்
எங்கே போனதோ!
புடான் நாடு ஒலிப்பதிவுத் தட்டை தபால் தலையாக வெளியிட்டிருந்தது. வேல செய்த்ததா தெரியவில்லை.
பள்ளி மாணவர்களிடையே, பண்ட மாற்று முறையில்
பரிமாற்றங்கள் நடக்கும்!//

வாங்க அனானி,
தபால் தலை வெளியிட்ட முதல் நாடு என்பதால் இங்கிலாந்து தபால் தலைகளில் நாட்டின் பெயர் இருக்காது. நானும் இந்த மாதிரி நிறைய பரிமாற்றங்கள் எல்லாம் செஞ்சிருக்கேன். வருகைக்கு நன்றி.

கைப்புள்ள said...

//'தலை'க்குப் பின்னாலே இத்தனை விஷயம் இருக்கா?

தாம்ரபரணி ஆச்சரியம்தான்.//

வாங்கக்கா,
எனக்கும் அதை கேள்விப்பட்டதும் பயங்கர ஆச்சரியம் தான்.

//முந்தாநேத்துதான் ஒரு சின்னப்பொதி (மொத்தம் 200 எண்ணிக்கை) தபால்தலைகளை மார்கெட்லே இருந்து
புடிச்சியாந்தேன்.

நல்லவேளை ஞாபகம் படுத்தும் பதிவு போட்டீங்க.

பொதியைத் திறந்து பார்க்கணும்.
அபூர்வா கிடைக்குமான்னு:-)//

நீங்க பயங்கரமான கலெக்டரா இருப்பீங்க போலிருக்கே? அபூர்வா சேலை தெரியும் அதென்ன ஆபூர்வா ஸ்டாம்ப்பு?
:)

கைப்புள்ள said...

///எல்லாம் நம்ம "தலை" விதி கைப்பு, வேறென்ன சொல்ல//

வாங்க கானா பிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//இந்த விஷயமே எனக்கு இப்போதான் தெரிஞ்சுருக்கு.நன்றிகள் நண்பரே//

வாங்க ரிஷான்,
வருகைக்கு மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//ரொம்ப அபூர்வமான தகவல்.
ஆக, இலங்கை அரசியல்வாதிகளும் நம்மூர்காரவுக மாதிரிதான் போல//

வாங்க சார்,
வீட்டுக்கு வீடு வாசப்படி தான் போல
:)

கைப்புள்ள said...

//தாமிரபரணி அங்கேயுமா!!
பெயரை மாத்தியும் விதியை மாத்த முடியலை. வெகு அபூர்வமான தகவல்கள். வாழ்த்துகள்//

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி வல்லியம்மா.
:)

கைப்புள்ள said...

//இந்த சேரன்டீப் என்பது பற்றி, குமரி அனந்தன் வேறு தகவல் சொன்னார். அரேபியர்கள் வியாபாரம் செய்த போது இலங்கையில் சேரனில் ஆட்சி நடந்ததாகவும்; அதனால் சேரன் +தீவு =சேரன்டீப் ஆனதாகவும்
,இலங்கையில் உள்ள சில பழக்கவழக்கங்கள் சேரநாட்டுக்குரியது எனவும் கூறினார்.
இந்தப் பெயர் மாற்ற விபகாரம் அப்போது அறிந்ததே...இதைக் கூறியது ஒரு மலயாள மாந்திரீகர்
எனும் கதையும் உண்டு. அவர் வெளிநாட்டுப் பயணம் பிரேமதாசாவுக்கு ஆபத்தாகும் என அறிவுறுத்தி
தவிர்க்கும் படி கூறியதாக அன்றைய "ரைம் "சஞ்சிகை எழுதியது//

சேரன் தீவு = Serendip. புதிய தகவல் யோகன் ஐயா. Sri Lanka எவ்வாறு Shri Lanka ஆனது என்பதை மிகச் சமீபத்தில் தான் இணையத்தில் தேடி அறிந்து கொண்டேன்.

கைப்புள்ள said...

//இந்தி தேசிய மொழி என்று நீங்கள் மட்டும் அல்ல பெரும்பான்மையான மக்கள் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல//

வாங்க கல்வெட்டு சார்,
இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறுதலாகச் சொல்லிவிட்டேன். விளக்கியமைக்கும் தகுந்த சுட்டிகளையும் அளித்தமைக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//"பேரை மட்டும் மாத்திடுங்க தலைவா, ஆட்சியைப் புடிச்சிடலாம்" அப்படின்னு ஆளாளுக்கு இப்படி ஊர், நாட்டின் பெயர் எல்லாம் மாத்திட்டு திரியாம இருந்தா சரி. நியுமராலஜி எப்படி எல்லாம் மயக்குது//

இதுல என்ன கொடுமைன்னா நாட்டோட பேரை மாத்தறதுக்கான அரசியல் சாசன் உரிமை கூட இல்லாம மாத்திருக்காரு மனுசன்...தில்லு தான்.

கைப்புள்ள said...

கீதா மேடம், கப்பி, டுபுக்கு சார், சீனா சார், மயூரேசன் -
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

pudugaithendral said...

தம்பாபாணி அப்படின்னு தான் சொல்வாங்க. மகனின் வரலாறுபாடத்தில் இருக்கு.

(தம்பாபாணிங்கற பேர்ல ஒரு ரெஸ்டாரண்ட் கூட இருக்கு)

லங்காதீவிப என்பதும் ஒரு பேருங்க.

pudugaithendral said...

தம்பாபாணி அப்படின்னு தான் சொல்வாங்க. மகனின் வரலாறுபாடத்தில் இருக்கு.

(தம்பாபாணிங்கற பேர்ல ஒரு ரெஸ்டாரண்ட் கூட இருக்கு)

லங்காதீவிப என்பதும் ஒரு பேருங்க.

HK Arun said...

//இலங்கையின் மற்ற பெயர்கள் :
இலக்திவா - Lakdiva
சிலோன் - Ceylon
சிஹலம் - Sihalam
சீலா கே - Siela Keh
செரண்டிப் - Serendip
ஹெலாதிவா - Heladiva
தாமிரபரணி - Tamraparni//

நீங்கள் இலங்கையின் பெயர்கள் தொடர்பாக கொடுத்திருக்கும் சுட்டி ஆங்கில விக்கிபீடியாவிற்கே செல்கின்றது.

அங்கேயும் எமக்கு காணக்கிடைத்த கவலையான ஒரு விடயமெனில் சிஹலம் - Sihalam, ஹெலாதிவா - Heladiva, போன்றப்பெயர்கள் சிங்கள அரசர்களது ஆட்சிப்பகுதிகளான ஒரு பகுதிக்கு மட்டுமே இடப்பட்ட பெயர்களை முழு நாட்டிற்கு வழங்கப்பட்ட பெயராக சித்தரித்துள்ளனர்.

தற்போதும் "சிஹல உருமய" என்று ஒரு சிங்கள் இனவாத கட்சியும் இலங்கையில் உள்ளது.

சிஹல - என்றால் அனைத்தும்,
உருமய - என்றால் உரிமை, அதாவது 'அனைத்து உரிமை'யும் சிங்களவர்களுக்கே என்பதே இவர்களது இக்கட்சியின் எண்ணப்பாடாகும்.

அதேவேலை பூர்வீக இலங்கை தமிழர்களால் வழங்கப்பட்ட பெயர்களான
இலங்காபுரி
நாகதீபம்
தர்மதீபம்
போன்றப் பெயர்களை அங்கே காணமுடியவில்லை. வேண்டுமென்றே தமிழர்களால் வழங்கப்பட்ட பெயர்களையும் ஆங்கில விக்கிபீடியாவில் மறைக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா பகுதியைப் பாருங்கள்.

நன்றி

கைப்புள்ள said...

//தம்பாபாணி அப்படின்னு தான் சொல்வாங்க. மகனின் வரலாறுபாடத்தில் இருக்கு.

(தம்பாபாணிங்கற பேர்ல ஒரு ரெஸ்டாரண்ட் கூட இருக்கு)

லங்காதீவிப என்பதும் ஒரு பேருங்க//

வாங்க தென்றல் மேடம்,
வருகைக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//சிஹல - என்றால் அனைத்தும்,
உருமய - என்றால் உரிமை, அதாவது 'அனைத்து உரிமை'யும் சிங்களவர்களுக்கே என்பதே இவர்களது இக்கட்சியின் எண்ணப்பாடாகும்.

அதேவேலை பூர்வீக இலங்கை தமிழர்களால் வழங்கப்பட்ட பெயர்களான
இலங்காபுரி
நாகதீபம்
தர்மதீபம்
போன்றப் பெயர்களை அங்கே காணமுடியவில்லை. வேண்டுமென்றே தமிழர்களால் வழங்கப்பட்ட பெயர்களையும் ஆங்கில விக்கிபீடியாவில் மறைக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா பகுதியைப் பாருங்கள்//

வாங்க அருண்,
புதிய தகவல்கள் தந்து விளக்கியமைக்கு மிக்க நன்றி. தமிழ் விக்கிபீடியாவையும் படித்தேன். ஆங்கிலப் பக்கத்துக்கும் தமிழ் பக்கத்துக்கும் வேற்றுமைகள் இருக்கத் தான் செய்கின்றன.