Tuesday, February 12, 2008

தமிழ் ப்ளஸ் டூ

நான் ப்ளஸ் டூ வரைக்கும் தாங்க தமிழ் படிச்சிருக்கேன். தமிழ் பாடப்புத்தகத்துல இருக்குற செய்யுள், உரைநடை அது தவிர துணைப்பாடப் புத்தகத்துல இருக்கற ஒரு சில கதைகளைத் தவிரத் தமிழில் இலக்கியம் சார்ந்தது சாராததுன்னு வேறு எதையும் படிச்சது கிடையாது. ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தபூ சங்கர் போன்ற இலக்கியவாதிகளின் பேர்களை எல்லாம் கூடத் தமிழ் வலைப்பூக்கள் படிக்க ஆரம்பிச்சப்புறம் தான் கேள்வியே படறேன். ப்ளஸ் டூ முடிச்சதுக்கப்புறம் நுழைவுத் தேர்வு, கட் ஆஃப் மார்க், எஞ்சினியரிங் காலேஜ் சீட், கேட்கற ப்ராஞ்ச் கெடைக்குதாங்கிற கவலை...பொறியியல் படிப்பு முடிச்சதும் மறுபடியும் நுழைவுத் தேர்வு, கலந்துரையாடல், பேட்டி(அதாங்க இண்டர்வியூ:) இப்படின்னே போயிடுச்சு நம்ம வாழ்க்கை. அப்பாடா படிச்சி முடிச்சாச்சுன்னு நெனைக்கிறதுக்குள்ள வேலை, சம்பளம் இப்படியாகப் பல சிந்தனைகள் மனதில் வந்து உக்காந்துக்கிச்சு.

என்ன தான் இருந்தாலும் இன்னைய வரைக்கும் நான் நெனச்சி பெருமை படற விஷயம் ஒன்னு இருக்குன்னா ப்ளஸ் டூ வரைக்குமாச்சும் தமிழ் படிச்சோமேங்கிறது தான். நான் தமிழ்ல தான் வீக், எனக்குத் தமிழ் தான் வராதுன்னு யாராச்சும் சொன்னா அப்பல்லாம் ரொம்ப கோவம் வரும். இப்ப கொஞ்சம் வயசானதுக்கு அப்புறம் அந்த கோவம் கொஞ்சம் தணிஞ்சுருக்கு. ஆனாலும் இப்பவும் அந்த மாதிரி எதாச்சும் கேட்டா வருத்தமா இருக்கும். பத்தாம் வகுப்பு முடிச்சதும் பதினொன்னாம் வகுப்புல பிரெஞ்சு, ஜெர்மன்(எங்க பள்ளிக்கூடத்துல ஜெர்மன் கூட இருந்துச்சு) இதெல்லாம் எடுத்து படிக்கிற பசங்களைப் பாத்தா சிரிப்பாத் தான் வரும். உன் சொந்த மொழித் தமிழை ஒழுங்காத் தெரிஞ்சிக்காம பிரெஞ்சு படிச்சி என்னடா பண்ணப் போறேன்னு கேட்டா அப்பத் தான் ப்ளஸ் டூல நெறைய மார்க் வாங்க முடியும்னு ஒரு நொண்டி சாக்கு சொல்லுவானுங்க. கட் ஆஃபுக்குக் கூட உதவாத ஒரு மொழியைப் படிக்கிறதுக்கு நம்ம மொழியை விட்டுத் தரனுமான்னு பல முறை தோணியிருக்கு.

சரி இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க. வாசிப்பனுபவம் இல்லாது போனாலும், ப்ளஸ் டூ வரைக்கும் நான் கற்ற தமிழ் இலக்கியங்கள் திடீர் திடீர் என ஞாபகத்துக்கு வரும். சில சமயம் அதுக்கு எதாவது ஒரு காரணி இருக்கும்...பல சமயங்கள் எந்த காரணமும் இல்லாம இந்த மாதிரி-இந்த மாதிரி எதோ படிச்சோமேன்னு ஞாபகத்துக்கு வரும். அதுக்கப்புறம் அது என்ன ஏதுன்னு கூகிளில் தேடிப் படிக்கிற வரைக்கும் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும். அந்த மாதிரி பைத்தியம் பிடிக்கிற அளவுக்குப் போய் நெட்ல தேடிக் கண்டுபிடிச்ச ப்ளஸ் டூ தமிழ் பாட செய்யுள்களைப் பற்றித் தான் இந்தப் பதிவு.

சமீபத்துல கல்லூரி திரைப்படம் பார்த்தேன். அதுல சலீமான்னு ஒரு பொண்ணு இருக்கும். ஒரு காட்சியில சொல்லும் "எங்க அத்தாவுக்கு இதயத்துல ஓட்டை இருக்குதாம். அதனால கவிச்சி சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு"ன்னு சொல்லும். இந்த வசனத்தைக் கேட்டதும் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் பெருமான் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. இதோ அந்தப் பாடல் :

"அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"


இந்தப் பாடலுக்குண்டானப் பொருள் விளக்கம் கொடுக்கும் போது எங்க தமிழ் மிஸ் சேதுராணி அவர்கள் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. "நாயன்மார்கள் ஒவ்வொருவரும் இறைவனுடன் உண்டானத் தங்கள் பிணைப்பை ஒவ்வொரு வடிவத்தில் கண்டனர். வேடுவ குலத்தில் பிறந்த கண்ணப்பர் இறைவன்பால் வைத்திருந்த அன்பு நண்பர்கள் இருவருக்கு மத்தியிலான அன்பு போன்றது. ஆனால் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் இறைவனைத் தன் தந்தையாகக் கண்டார். (சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் எனும் அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்) அத்தா என்னும் சொல்லுக்கு அப்பா என்று பொருள். நல்லவொரு தமிழ்ச் சொல்லான இதை தங்கள் தந்தையை விளிப்பதற்கு இசுலாமியர்கள் இன்றும் பயன்படுத்துகிறார்கள்" என்று சொன்னது ஞாபகம் வந்தது. இது கல்லூரி படத்தில் சலீமா பேசும் வசனத்தைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது.

இறைவனின் அளவிலாக் கருணையை வியந்து போற்றி கண்ணீர் மல்க அப்பர் பெருமான் பாடிய இப்பாடலின் பொருள் - "எந்தவொரு உணர்வுமில்லாத தூயபரமாக இருப்பதுபோக்கி, என் அத்தனாக அன்பின் பேருருவாகத் தோன்றி அடியேனை அன்பினாலே ஆர்த்து, நிறைத்து ஆட்கொண்டாய். மேலும் அருள் நோக்குத் தேற்றி என் அகம் படிந்துள்ள குற்றங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்யும் பொருட்டு கங்கை நீர் கொண்டு குளிப்பாட்டினாய். எத்தனையோ தவங்கள் செய்தாலும் காண்பதற்கும் அனுபவிப்பதற்கும் அரியையாகிய நீ, என் மேல் பரிவு கொண்டு எனக்கு எளியை ஆனாய் என்பதொடு என்னைத் தானாக்கி ஆண்டுகொண்டு என்னையும் உன் அடியார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டாய். நான் கொள்கை உறுதியில்லா பித்தன், சிவஞானம் யாதென்று அறியாத பேதை, பல தீய சக்திகள் உள்ளத்தில் நடமாடத் தரும் பேயேன், இதுவேண்டும் அதுவேண்டும் என்று நிலைகொள்ளாது தெருவெல்லாம் தேடித் திரியும் நாயேன். ஆயினும் இவ்வாறு ஒவ்வாத பல செய்து பிழைவழி சென்றாலும் அத்தனையுயும் பொறுத்து எனக்கு அருள்பாலித்ததை நினைத்து நினைத்து, ஐயகோ உன் அளப்பரும் பெருங்கருணை செயல்படுமாற்றைக் கண்டு கண்டு வியக்கின்றேன் காண்"

கணவனுடைய வீட்டில் மகள் எவ்வாறு வாழ்கிறாள் எனக் காண வரும் ஒரு தந்தையின் வாய்மொழியாக அமைந்த ஒரு குறுந்தொகை பாடல் ஒன்னு. தன் வீட்டில் செல்வச் செழிப்பில் அளவிலா பாசத்தில் வளர்ந்த தன் பெண், கணவன் வீட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்டு பெருமிதப்படும் தந்தையார் என்ன சொல்லிருக்காருன்னா

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"


இப்பாடலுக்கு வரிக்கு வரி பொருள் எனக்கும் தெரியவில்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்த வரை "மென்மையான காந்தள் மலர்களைப் போன்ற விரல்களைக் கொண்ட என் மகள், சமையலறையில் தயிர் தோய்ந்த கைகளுடன் எதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். குவளை மலர்களைப் போன்ற அவள் கண்களில் சமையலறையின் புகை எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதை பொருட்படுத்தாமல் தயிர் தோய்ந்த கைகளுடனேயே கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். என் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த என் மகள், கணவன் வீட்டில் இவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்கிறாளே என மகிழ்ந்தேன் யான்" என அத்தந்தை பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல். நான் இப்பாடலுக்குக் கூறிய பொருளில் தவறிருந்தால் தெரியப்படுத்துங்கள்.

"படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வராயினுமிடைபட
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டும் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குரை யில்லைத் தாம் வாழுநாளே"


மேலே உள்ள பாடலைப் பாருங்கள். பெருஞ்செல்வனாக இருந்தாலும், மெல்ல நடந்து சோறைக் கையில் வாங்கி பாதி உண்டும் மீதி கீழே இறைத்தும் காண்பவர்களை மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்கள் செல்வமில்லாதவர்களுக்கு ஒப்பானவர்கள் தான் எனக் கூறுகிறது இப்பாடல். இந்தப் பாடலிலிருந்து சில கருத்துகளைக் காப்பியடிச்சி நான் எழுதுனது இங்கே :)

உண்மையிலேயே தமிழ்ப் புலவர்களின் கற்பனை திறமையைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். அகமாகட்டும், புறமாகட்டும் - பாடலை வளமாக்கும் இக்கற்பனை நயம் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இத்தகையப் பாடல்களை இன்னும் மனதில் இருத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. உதாரணத்துக்கு கலிங்கத்துப்பரணி பாடல் ஒன்று. போர்க்களத்தில் காயமடைந்து உயிரை விடப் போகும் தருவாயில் இருக்கும் தன் கணவனின் உடல் கூட பூமி என்னும் பெண்ணைத் தழுவக் கூடாது என்ற எண்ணத்தில் கணவனின் உடலை தன் இருகைகளால் தாங்கிப் பிடித்துத் முதலில் தன்னுயிரை விடுகிறாள் அந்த மனைவி. அதன்பின் கணவன் இறந்து அவன் உடல் கீழே விழும் போது கூடத் தன் மனைவியின் உடல் மேலே விழுகிறது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா? அதே மாதிரி சிலப்பதிகாரத்துல ஒரு பாடல் கோவலனும் கண்ணகியும் பாண்டிய நாட்டுக்கு வரும் பொழுது, அங்கிருந்த கோட்டையின் மீதிருந்த கொடிகள் "வாரல் வாரல்" என அசைந்தாடினவாம். அதாவது உங்களுக்கு இங்கே ஆபத்து இருக்கு அதனால் நீங்க இங்கே வராதீங்க என்று வருந்திச் சொல்வது போல கொடிகள் அசைந்தனவாம். இது போக நோயினால் இறக்கும் குழந்தை கூட வீர மரணம் அடைந்தது போல இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நென்சைக் கீறிய பின்னரே புதைப்பர் எனக் கூறுகிறது புறநானூறு. தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்றால் கழுமரம் ஏறும் ஆண்கள்(யப்பா...சாகறதுக்கு வேற வழியே இல்லையா?), தலைவனைப் பிரிந்து பசலை நோய் காணும் தலைவி இப்படியாகப் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்ச தமிழ்லேயே பழந்தமிழர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை முறைமைகளைப் பற்றியும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

இதுலேயே அகம் சம்பந்தப்பட்ட பாடல்கள் படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இனிமையாகவும்...கிளுகிளுப்பாகவும் இருக்கும்:). அதுவும் என்னன்னு ஒன்னும் புரியாம பூஜ்யத்துலேருந்து இன்ஃபினிட்டி வரைக்கும் சைன் தீட்டாவையும் காஸ் தீட்டாவையும் இண்டக்ரேட் பண்ணி அதுக்கு ப்ரூபையும் எழுதற கணித க்ளாஸுக்கு அப்புறம் தமிழ் வகுப்பு வந்துச்சின்னா அது ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும். நான் படிச்சது வேற பாய்ஸ் ஸ்கூலா? கேக்கவே வேணாம். ப்ளஸ் டூல தமிழ் எடுத்தது வேற ஒரு தமிழ் ஐயா. தலைவன் தலைவின்னு வந்துட்டாலே ரோமான்சு தானே? அந்த ரோமான்சையே பாடமா படிக்கிற பாக்கியம் யாருக்கு கெடைக்கும். தலைவன் தலைவி பாடல் எதுவும் இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வரலை. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி என்னும் பெண் பந்தாடும் அழகை விவரிக்கிறாரு பாருங்க -


"செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்சொல் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
மலர்ப்பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!"

ஒன்னும் வேணாம்... "வசந்தவல்லி பந்தாடினாள்" அப்படின்னு தமிழ் ஐயா சொன்னாலே போதும், பசங்க காரணமே இல்லாம கெக்கேபிக்கேன்னு சிரிப்பானுங்க. எதோ பீச் வாலிபால் ஆடற ஒரு பொண்ணை ஸ்க்ரீன்ல பாத்த மாதிரி. ஐயாவும் "டேய் பாடத்துல மட்டும் கவனம் செலுத்துங்கடா"ன்னு சொல்லிட்டு சிரிப்பாரு. எங்கே ஸ்கூல்ல மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன். ஆனா அப்படியில்லை ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கற சில கிறித்தவ மேனிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புல பசங்க நல்லா எஞ்சாய் பண்ணியிருக்காங்கன்னு காலேஜ் படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன். இதை எல்லாம் தெரிஞ்சிக்கிறதை விட்டுட்டு ப்ளஸ் டூ வந்தும் "அ-அம்மா, ஆ-ஆடு", "பசு பால் குடிக்கும்"னு ப்ரெஞ்சுலேயும் ஜெர்மன்லயும் படிச்ச சில பசங்களை நெனச்சா இன்னும் கூட சிப்பு சிப்பா வருது :)

50 comments:

Thiru said...

எங்க பள்ளியிலும் (St. Ann's Boys Higher Sec School, Tindivanam) இப்படித் தான் (எல்லாருக்கும் ஒரே flashback தான் போல!). நாங்க english medium வேற. மத்த எந்த வகுப்பிலும் பேந்த, பேந்த முழிக்கிச்சிட்டு..சாரி தூங்கிக்கிட்டும் இருக்கும் நாங்க.. அடிச்சு புடிச்சு முதல் பெஞ்சுக்கு போட்டி போடுவோம்னா அது தமிழ் அய்யா கிளாசுக்கு தான். அதுலயும் அந்த தமிழ் செகண்ட் பேப்பர்-ல கேக்கிற கட்டுரை, கவிதை எல்லாம் பசங்க பட்டாசு கெளப்புவாங்க.

தமிழ்ல முதல் மதிப்பெண் வாங்கறதா மட்டும் யாருக்கும் விட்டு கொடுக்ககூடாது அப்படின்னு எனக்கு ஒரு குறிக்கோள் - சின்ன வயசிலேருந்து. கூடலூர் கிழார் எழுதின 'முளிதயிர்' எல்லாம் இன்னும் நினைவில இருக்கு. சொல்ல சொல்ல இனிக்குது தமிழ் நினைவுகள்.

இலவசக்கொத்தனார் said...

யப்பா ராசா பதிவைப் படிச்சுக்கிட்டே வந்தா அப்படியே மனசுக்குள்ள நம்ம அனுபவங்கள் எல்லாம் வட்ட வட்டமா சுத்துது. ஆனா இந்த கடைசியில் சொல்லி இருக்கும் குற்றாலக் குறவஞ்சியைப் படிச்சதும் ரொம்பவே எங்கயோ போயிடுச்சு.

நீர் போட்டு இருக்கும் பாடலாகட்டும் அதனைத் தொடர்ந்து வரும் பொங்கு கனங்குழை மண்டிய கெண்டையாகட்டும் இல்லை அதுக்குப் பின்னாடி வரும் இந்திரையோ இவள் சுந்தரியோ ஆகட்டும். சிலபஸில் இல்லாதாது எல்லாம் போய் தமிழ் ரீச்சர் கிட்ட கேட்டுப் படிச்சதாகட்டும்...

அந்த ஓசை நயம் ஒண்ணுக்கே சும்மா திரும்பத் திரும்பப் படிக்கலாம்பா. அப்படி இருக்கிறதுனாலதான் இன்னிக்கும் இந்த வரிகள் எல்லாம் அப்படியே ஞாபகத்துக்கு வருது. இதை எல்லாம் எழுத வந்தா ஒரு தனிப்பதிவே போடலாம். அது போகட்டும்.

நீர் சொன்ன வரிகள் ஞாபகத்துக்கு வந்தாலும் முழுப் பொருளும் ஞாபகத்துக்கு வரலையே... அது என்ன இடுப்பு உடையற மாதிரி ஆட்டம்? அப்புறம் அது என்ன அந்த பந்துக்கும் அவங்க மார்பகங்களும் பகை? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்....

ஆனா ஒண்ணுங்க. அந்த காலத்தில் பாருங்க பெண்கள் ஓடி குதித்து ஆட்டங்கள் ஆடுவதை நம்ம ஆளுங்க எப்படி ஊக்கப்படுத்தி இருக்காங்க. ஆனா நடுவில் வந்த கலாச்சாரத் தாக்குதல்கள் (அது ஆரியமோ, ஆங்கிலமோ அல்லது வேற என்ன எழவோ தெரியலை.) காரணமாக பொட்ட பிள்ளைக்கு என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்கு? ஒரு மூலையில் உட்காரு எனச் சொல்லத் தொடங்கி விட்டோம். பெண் சுதந்திரத்தை இந்த ஆண் ஆதிக்கம் சாப்பிட்டு விட்டதே.... :))

Geetha Sambasivam said...

//"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"//

கணவனுக்காக மோர்க்குழம்பு தயாரித்தலைப் பற்றி வரும் இந்தச் செய்யுள், ஹிஹிஹி, நானும் பள்ளி நாட்களிலே படிச்சது தான், அடுப்பில் இருந்து வரும் புகையைக் கூட லட்சியம் செய்யாமல் தன் தளிர் போன்ற விரல்களால் மோரையும், மற்ற சாமான்களையும் போட்டுக் குழைத்துப் பிசைந்து, அந்தக் கையுடனேயே தன் மையுண்ட கண்களின் எரிச்சலையும் துடைத்துக் கொள்ளும்போது, இந்த எரிச்சலும் சேர்ந்து கொள்கிறது என்று வரும்னு நினைக்கிறேன், நான் ஜகா வாங்கிக்கறேன், வேறே யாரானும் வந்து சொல்லுவாங்க, வர்ட்டா?
//

இலவசக்கொத்தனார் said...

இதோ அந்த பாடலின் பொருள்

குடும்பத்தில் தலைவியின் பங்கினைக் குறுந்தொகைப் பாடலொன்று அழகாக விளக்குகின்றது. ஒரு இலக்கியக் குடும்பம் அது. கணவனுக்கு முதன்முதலாக, தானே சமைத்து உணவிட மனைவி விரும்புகிறாள். தயிரைப் பிசைந்து மோர்க்குழம்பு ஆக்குகிறாள். தயிர் கட்டி பட்டிருக்கின்றது. அதனைத் தன் காந்தள் விரல் நோகத் தலைவி பிசைகின்றாள். பிசைந்த போது விரல்களின் இடுக்கில் தயிர்த்துளிகள் ஒட்டிக் கொள்கின்றன. பின் அதனைத் தக்கவாறு பாகம் செய்ய அடுப்பில் ஏற்றுகிறாள். அப்போது ஆடை சிறிது நெகிழ அதனையும் தன் கையால் எடுத்துச் சொருகிக் கொள்கிறாள். இப்போது ஆடையில் தயிர் துளிகள் பின் தாளிப்பதற்காக பாகங்களை எடுத்து அடுப்பில் வைக்கிறாள். கண்நோக புகை படிய, பார்த்துப் பாரத்துத் தாளிக்கின்றாள். ஒரு வழியாய் மோர்க்குழம்பு வைத்துவிட்டுத் தன் கணவனுக்கு உணவிடுகிறாள். கணவன் அதனை இனிதாய் இருக்கின்றது என உண்கின்றானாம். இந்தப் பெருமைப் பேச்சு, அவளின் துன்பத்தையெல்லாம் கரைத்து, அவளை நாணிப் போகச் செய்து விடுகிறது(6). அப்படிப்பட்ட இலக்கிய வாழ்வை நேற்றை தமிழகத்தோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

நன்றி திண்ணை

வல்லிசிம்ஹன் said...

இந்தப் பாடலை ஏதோ சினிமாவில் ஹீரோவொ இல்லை இன்னோரு புலவரோ படுவதாக நினைவு.

அம்பிகாபதியாஅ.... நினைவில்லை.
தமிழுக்காகவே பதிவு. அழகு.
நீங்கள் சொல்வது உண்மையே. கற்றுத்தரும் ஆசானை ஒட்டியே நம் தமிழும் இனிக்கும். வெகு சுவாரஸ்யம் கைப்ஸ்.

Unknown said...

உங்களுடைய இந்தப் பதிவைப் படிச்ச பிறகு எனக்கும் பள்ளி நாட்கள் ஞாபகம் வந்திருச்சி...நல்லா எழுதி இருக்கீங்க..

அந்தக் குறுந்தொகைப் பாடலுக்கு பொருள் கீழே :-)

காந்தள் மலர் போலும் மென்மையான விரல்களால் கெட்டித் தயிர் விட்டுப் பிசைந்த எச்சிற் கையை, சுத்தமான தன் ஆடையையும் பொருட்படுத்தாது, வேலைகவனத்தில் அதிலேயே துடைத்துக் கொண்டாள் அவள். குவளை மலர் போலும் அவளது அழகிய கண்களில் சமையல் புகை படிந்திருந்தது. அதையும் உணர்ந்தாளில்லை. தான் வைத்த புளிக்குழம்பை தயிர்சோற்றில் ஊற்றி இனிது என மகிழ்ந்து தன் கணவன் உண்ணுவதைப் பார்த்து அவள் முகம் பூரிக்க நின்றாள்...

இராம்/Raam said...

தல,

அட்டகாசமான பதிவு..... நானெல்லாம் காலேஜ்'லே படிக்கிறப்போ தமிழ் பாடம் இருந்துச்சே.... :))

மணியன் said...

//ப்ளஸ் டூ முடிச்சதுக்கப்புறம் நுழைவுத் தேர்வு, கட் ஆஃப் மார்க், எஞ்சினியரிங் காலேஜ் சீட், கேட்கற ப்ராஞ்ச் கெடைக்குதாங்கிற கவலை...பொறியியல் படிப்பு முடிச்சதும் மறுபடியும் நுழைவுத் தேர்வு, கலந்துரையாடல், பேட்டி(அதாங்க இண்டர்வியூ:) இப்படின்னே போயிடுச்சு நம்ம வாழ்க்கை. அப்பாடா படிச்சி முடிச்சாச்சுன்னு நெனைக்கிறதுக்குள்ள வேலை, சம்பளம் இப்படியாகப் பல சிந்தனைகள் மனதில் வந்து உக்காந்துக்கிச்சு.//

ஆகா, இது அப்படியே எனக்கும் பொருந்துகிறதே ! என்ன, உங்களுக்கு இளமையிலேயே தமிழ்பதிவுகள் கிடைத்துவிட்டன. எனக்கு பணிக்காலம் முடிவடையும் நேரத்தில் கிடைத்திருக்கிறது.

ஆன்மீகத்திற்கு புராணகதைகளை அசைபோட இதழ்கள் வருவதுபோல பழந்தமிழ் இலக்கியங்களை அசைபோட ஏதெனும் இதழ்கள் உண்டா எனத் தெரியவில்லை :(

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதானே எங்க காலேஜிலயும் தமிழ் இருந்தது.. காலேஜ்ல ப்ரொபசர் முத்துலெட்சுமி என்னை அப்பப்ப நியாபகப்படுத்தும்மா.. நான் பாடத்தை விட்டு ரொம்ப நேரம் உபகதை அதிலொரு உபகதைன்னு போயிட்டிருந்தேன்னா சார் பாடத்துக்குவாங்கன்னு சொல்லுன்னு சொல்வார்.. அது தான் நியாபகம் வருது..

பாச மலர் / Paasa Malar said...

பள்ளியில் தமிழ் வகுப்பில் போய் உட்கார்ந்த மாதிரி இருந்தது கொஞ்சம் நேரம்..

//இதை எல்லாம் தெரிஞ்சிக்கிறதை விட்டுட்டு ப்ளஸ் டூ வந்தும் "அ-அம்மா, ஆ-ஆடு", "பசு பால் குடிக்கும்"னு ப்ரெஞ்சுலேயும் ஜெர்மன்லயும் படிச்ச சில பசங்களை நெனச்சா இன்னும் கூட சிப்பு சிப்பாவருது//

இங்கே (ரியாத்) CBSE பாடத்திட்டம்..
தமிழ் இருக்கிறது..என்றாலும் French தேர்ந்தெடுக்கச் சொல்லும் பெற்றொர் உண்டு..3 வது வகுப்பில்தான் தமிழ் ஆரம்பம்..

தமிழைப் படிக்காமலே இங்கு தமிழ்ப்பிள்ளைகள் வளர்கிறார்கள்..

இத்தனைக்கும் French மொழியிலும் மதிப்பெண்கள் அதிகம் பெறுவது இங்கே அத்தனை சுலபமில்லை என்று புலம்ப வேறு செய்கிறார்கள்..பின் ஏன் தான் இப்படியோ?

Hariharan # 03985177737685368452 said...

//"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"//


குறுந்தொகையில் பெண்ணீயம் இவ்வாறு பேணியிருக்கின்றார்களா?
குறுந்தொகை ஒரு பிற்போக்கு நூல் அப்படின்னு டிபேட்க்கு நூல் விடலாம் பெண்ணீயவாதிகள்!

திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்"
"மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்!- அப்படின்னு படிக்கும்போது இதுவரையிலும் போய்ப்பார்க்காத குற்றால அருவிக்கரையில் மாமரத்தின் கீழே சிந்தும் மாங்கனிக்காக நானும் நிற்பதாய் உணர்வேன்!

இன்னொன்னு எப்படி ஒரு நபரின் பெர்சனாலிட்டி இருக்கவேண்டும் எனும் ஒரு தமிழ் வெண்பாப் பாடல்

இன்சொல் விளைநிலமாய் ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவூட்டி அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்!

தமிழ்ப்பாடத்திற்கும் கணிதத்திற்கும் சரியான ஆசிரியர்கள் கிடைத்துவிட்ட மாணவப்பருவம் வாழ்க்கைக்கும் வழிகாட்டும்!

நான்கு ஆண்டுகள் எனக்குத் தமிழாசிரியராக இருந்த எஸ்.எஸ் எனப்பட்ட திரு. சுப்பிரமணியன் நல்ல தமிழை போதித்தார்!

அல்ஜிப்ரா மூலமாக அலர்ஜியை கணிதத்தில் ஏற்படுத்திய இரண்டு கணக்காசிரியர்களையும் மறக்க முடியவில்லை! :-))

நானும் +2 வரையில் தமிழ்வழி மாணக்கன் தானுங்க கைப்புள்ள!

பினாத்தல் சுரேஷ் said...

அருமையான பதிவு கைப்ஸ். நானும்கூட இந்த ப்ரெஞ்சு ரஷ்யன் படிக்கறவங்களைப்பாத்து சிரிச்சதுண்டு.

எவ்ளோ இருக்கு படிக்கறதுக்கு, ரசிக்கறதுக்கு..

செங்கையில் வண்டு பாட்டு எனக்கு பாடமா வந்ததில்ல - ஆனா மனப்பாடம் - உபயம் ஆதிபராசக்தி பாடல் (மணியே, மணியின் மொழியே) காபி பேஸ்ட் வேலை :-)

7ஆம் கிளாஸ் அரிச்சந்திரபுராணம் ஏன் இன்னும் மனப்பாடமா இருக்குன்னு யோசிச்சிருக்கேன், சொல்ல்லிக்கொடுத்த வாத்தியாரின் ஈடுபாடு தவிரவேற காரணம் எதுவுமே புலப்படலை. பெரும்பான்மையான தமிழாசிரியர்களுக்கு இருக்கும் ஈடுபாடு மத்த ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை - அப்படின்னு - பொதுமைப்ப்படுத்தறது தெரிஞ்சும் - எனக்குத் தோணுது!

கப்பி | Kappi said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தல :))

நீங்க மெமரி ப்ளஸ் நிறைய சாப்பிடுவீங்கன்னு இன்னொரு முறை நிருபிச்சிட்டீங்க :))

Unknown said...

அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே!! ரொம்ப பிடிச்ச பாடம் தமிழ்ப் பாடம் தான். முழு வருடப் பாடத்தையும் முதல்லிலேயே படிச்சுக்குவோம்!

அது சரி, இவ்ளோ ஃபீலிங்ஸ் எனக்கு ஒத்து வராது என்பதால், "முளிதயிர்" பாடலுக்குப் (புதிய) பொருள்:

அடுப்புச் சாம்பலும் மனைவியின் அழுக்குப் புடவையில் தேய்த்த கையால் வைத்த குழம்பைப் பார்த்து வெறுத்த‌ கணவன், முளி (மூலி என்னும் முள்ளங்கி) போட்ட புளித்த மோர்க்குழம்பா என்று "குழம்பி"க் கண்கலங்கினாலும், (ஆம்லெட்டுக்கே ஒரு வெட்டு போடுவார்கள் என்று பின்புத்தி இருந்தமையால்) முகத்தில் மகிழ்ச்சி காட்டி இனிதாய் இருக்கின்றது என உண்கின்றானாம். "பிழைத்துப் போ" என்று எண்ணி நாணம் காட்டிப் போனாள் தலைவி.

இதில் புகை என்பது அக்காலச் சுருட்டுப் புகையாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது.

பெருசு said...

கைப்பு கைப்புதான்.

//அப்படியே மனசுக்குள்ள நம்ம அனுபவங்கள் எல்லாம் வட்ட வட்டமா சுத்துது//

எனக்குந்தான்.

ஆனா இப்புடி எல்லோருக்கும் வட்ட வட்டமா சுத்துறத pit போட்டிக்கு யாராவது படம் புடிச்சு போட்டா மொத பரிசுதான்.

நமக்கு திருவிளையாடல் படத்துலே

சிவாஜி அனல் பறக்க பட்டைய கிளப்புவாறே, அதான் ஞாபகம் வருது.

கொங்குதேர் வாழ்க்கை,

யாராவது எடுத்துக்குடுங்கப்பு.

குமரன் (Kumaran) said...

நானும் +2 வரைக்கும் தான் தமிழ் படிச்சேன் மோகன்ராஜ். அதுக்கப்புறம் பொறியியல் படிக்கிறப்ப எல்லாம் நூலகங்கள்ல போய் படிக்கிற புத்தகங்கள் தான். ஆனா அந்த மேல்நிலைப்பள்ளியில தமிழாசிரியர்கள் ஏற்படுத்துன சுவை தான் இன்னும் தமிழார்வம் தொடர வைக்குது.

அப்பர் பாடல், புறநானூறு, அகநானூறுன்னு அருமையா கலந்து குடுத்திருக்கீங்க. அருமை.

முளி தயிர் பாட்டு வளர்ப்புத் தாய் தன் மகளின் குடித்தனத்தைப் பார்த்து எழுதிய பாட்டுன்னு படிச்சிருக்கேன். இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்ன்னு பாடுனவர் ஒரு அரசன்னும் படிச்சிருக்கேன்.

காதலர்கள் கழுவேறுவார்களா? கேள்விப்பட்டதே இல்லையே. மடலேறுவார்கள்ன்னு சொல்லுவாங்க. அதைச் சொல்றீங்களோ?

வசந்த சவுந்தரின்னா எனக்கு இன்னொரு பாட்டு நினைவுக்கு வரும். பொங்கு கனங்குழை மண்டிய கெண்டைன்னு தொடங்குற பாட்டு.

சேதுக்கரசி said...

அப்படியே என் அனுபவங்கள், என் உணர்வுகள் போலத்தான் கைப்ஸ்!

அத்தா என்பது சிவபுராணத்திலும் வரும்:

"ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்"

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தங்கள் பழந்தமிழ் ரசிப்பும்,நினைப்பும்
படித்'தேன்'.
நன்று

கைப்புள்ள said...

//எங்க பள்ளியிலும் (St. Ann's Boys Higher Sec School, Tindivanam) இப்படித் தான் (எல்லாருக்கும் ஒரே flashback தான் போல!). நாங்க english medium வேற. மத்த எந்த வகுப்பிலும் பேந்த, பேந்த முழிக்கிச்சிட்டு..சாரி தூங்கிக்கிட்டும் இருக்கும் நாங்க.. அடிச்சு புடிச்சு முதல் பெஞ்சுக்கு போட்டி போடுவோம்னா அது தமிழ் அய்யா கிளாசுக்கு தான். அதுலயும் அந்த தமிழ் செகண்ட் பேப்பர்-ல கேக்கிற கட்டுரை, கவிதை எல்லாம் பசங்க பட்டாசு கெளப்புவாங்க//

ஹி...ஹி...எல்லாருக்கும் இந்த மாதிரி பள்ளிக்கூட ஃப்ளாஷ்பேக் இருக்கும் போலிருக்கு


//
தமிழ்ல முதல் மதிப்பெண் வாங்கறதா மட்டும் யாருக்கும் விட்டு கொடுக்ககூடாது அப்படின்னு எனக்கு ஒரு குறிக்கோள் - சின்ன வயசிலேருந்து. கூடலூர் கிழார் எழுதின 'முளிதயிர்' எல்லாம் இன்னும் நினைவில இருக்கு. சொல்ல சொல்ல இனிக்குது தமிழ் நினைவுகள்//

எனக்கும் அந்த மாதிரி ஒரு கொள்கை இருந்துச்சு. தமிழ்ல மதிப்பெண் குறைஞ்சா மட்டும் வருத்தமா இருக்கும். கூடலூர் கிழார் பெயர் ஞாபகப்படுத்துனதுக்கு நன்றிப்பா திரு.
:)

கைப்புள்ள said...

//யப்பா ராசா பதிவைப் படிச்சுக்கிட்டே வந்தா அப்படியே மனசுக்குள்ள நம்ம அனுபவங்கள் எல்லாம் வட்ட வட்டமா சுத்துது. ஆனா இந்த கடைசியில் சொல்லி இருக்கும் குற்றாலக் குறவஞ்சியைப் படிச்சதும் ரொம்பவே எங்கயோ போயிடுச்சு//

உங்களுக்கும் கொசுவத்தியா? ரொம்ப சந்தோஷம்ங்க.

//
நீர் போட்டு இருக்கும் பாடலாகட்டும் அதனைத் தொடர்ந்து வரும் பொங்கு கனங்குழை மண்டிய கெண்டையாகட்டும் இல்லை அதுக்குப் பின்னாடி வரும் இந்திரையோ இவள் சுந்தரியோ ஆகட்டும். சிலபஸில் இல்லாதாது எல்லாம் போய் தமிழ் ரீச்சர் கிட்ட கேட்டுப் படிச்சதாகட்டும்...

அந்த ஓசை நயம் ஒண்ணுக்கே சும்மா திரும்பத் திரும்பப் படிக்கலாம்பா. அப்படி இருக்கிறதுனாலதான் இன்னிக்கும் இந்த வரிகள் எல்லாம் அப்படியே ஞாபகத்துக்கு வருது. இதை எல்லாம் எழுத வந்தா ஒரு தனிப்பதிவே போடலாம். அது போகட்டும்.
//

//நீர் சொன்ன வரிகள் ஞாபகத்துக்கு வந்தாலும் முழுப் பொருளும் ஞாபகத்துக்கு வரலையே... அது என்ன இடுப்பு உடையற மாதிரி ஆட்டம்? அப்புறம் அது என்ன அந்த பந்துக்கும் அவங்க மார்பகங்களும் பகை? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்.... //

நீங்க குற்றாலக் குறவஞ்சியிலே எக்ஸ்பர்ட்னு மட்டும் நல்லாத் தெரியுது
நீங்க ஏன் குற்றாலக் குறவஞ்சி for dummiesனு ஒரு தொடர் எழுதக் கூடாது...அதுக்கு நான் வேணா வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கறேன்.
:)

//ஆனா ஒண்ணுங்க. அந்த காலத்தில் பாருங்க பெண்கள் ஓடி குதித்து ஆட்டங்கள் ஆடுவதை நம்ம ஆளுங்க எப்படி ஊக்கப்படுத்தி இருக்காங்க. ஆனா நடுவில் வந்த கலாச்சாரத் தாக்குதல்கள் (அது ஆரியமோ, ஆங்கிலமோ அல்லது வேற என்ன எழவோ தெரியலை.) காரணமாக பொட்ட பிள்ளைக்கு என்ன ஆட்டம் வேண்டிக்கிடக்கு? ஒரு மூலையில் உட்காரு எனச் சொல்லத் தொடங்கி விட்டோம். பெண் சுதந்திரத்தை இந்த ஆண் ஆதிக்கம் சாப்பிட்டு விட்டதே.... :))//

பெண் சுதந்திரத்துக்கு குரல் கொடுத்த எடிசன் வாழ் பாரதியே!வாழ்க நீவிர்...வளர்க நிம் கொற்றம்.
:)

கைப்புள்ள said...

//கணவனுக்காக மோர்க்குழம்பு தயாரித்தலைப் பற்றி வரும் இந்தச் செய்யுள், ஹிஹிஹி, நானும் பள்ளி நாட்களிலே படிச்சது தான், அடுப்பில் இருந்து வரும் புகையைக் கூட லட்சியம் செய்யாமல் தன் தளிர் போன்ற விரல்களால் மோரையும், மற்ற சாமான்களையும் போட்டுக் குழைத்துப் பிசைந்து, அந்தக் கையுடனேயே தன் மையுண்ட கண்களின் எரிச்சலையும் துடைத்துக் கொள்ளும்போது, இந்த எரிச்சலும் சேர்ந்து கொள்கிறது என்று வரும்னு நினைக்கிறேன், நான் ஜகா வாங்கிக்கறேன், வேறே யாரானும் வந்து சொல்லுவாங்க, வர்ட்டா?//

வாங்க தலைவியாரே,
எல்லாத்தையும் சரியாச் சொல்லிட்டு அப்புறம் என்ன ஜகா வாங்கறது? உங்க தமிழ்ப் புலமை இந்த நாடறிஞ்சது தானே? கல்க்கிட்டீங்க
:)

கைப்புள்ள said...

//கணவன் அதனை இனிதாய் இருக்கின்றது என உண்கின்றானாம். இந்தப் பெருமைப் பேச்சு, அவளின் துன்பத்தையெல்லாம் கரைத்து, அவளை நாணிப் போகச் செய்து விடுகிறது(6). அப்படிப்பட்ட இலக்கிய வாழ்வை நேற்றை தமிழகத்தோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

நன்றி திண்ணை //

வாங்க கொத்ஸ்,
அப்போ மகளைக் காண வந்த தந்தை சொல்லுவது போலன்னு நான் சொன்னது சரியில்லை போலிருக்கே? தேடிக் கண்டுபிடித்து பொருள் தெரிய தந்தமைக்கு நன்றிங்க.
:)

கைப்புள்ள said...

//இந்தப் பாடலை ஏதோ சினிமாவில் ஹீரோவொ இல்லை இன்னோரு புலவரோ படுவதாக நினைவு//

அப்படிங்களாம்மா? நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் தளபதி படத்தில் ராக்கம்மா கையத் தட்டுப் பாடலின் இடையில் வரும் இப்பாடலை நீங்களும் நிச்சயம் கேட்டிருப்பீர்கள்.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில்
குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

//
அம்பிகாபதியாஅ.... நினைவில்லை.
தமிழுக்காகவே பதிவு. அழகு.
நீங்கள் சொல்வது உண்மையே. கற்றுத்தரும் ஆசானை ஒட்டியே நம் தமிழும் இனிக்கும். வெகு சுவாரஸ்யம் கைப்ஸ்.//

கண்டிப்பாக. எல்லாப் புகழும் என் தமிழ் மிஸ்ஸையே சாரும். தமிழ் கற்பித்ததோடு நல்லொழுக்கத்தையும் கற்பித்தார்.
:)

கைப்புள்ள said...

//உங்களுடைய இந்தப் பதிவைப் படிச்ச பிறகு எனக்கும் பள்ளி நாட்கள் ஞாபகம் வந்திருச்சி...நல்லா எழுதி இருக்கீங்க..//

வாங்க பூங்கொடி,
மிக்க மகிழ்ச்சி.

//அந்தக் குறுந்தொகைப் பாடலுக்கு பொருள் கீழே :-)

காந்தள் மலர் போலும் மென்மையான விரல்களால் கெட்டித் தயிர் விட்டுப் பிசைந்த எச்சிற் கையை, சுத்தமான தன் ஆடையையும் பொருட்படுத்தாது, வேலைகவனத்தில் அதிலேயே துடைத்துக் கொண்டாள் அவள். குவளை மலர் போலும் அவளது அழகிய கண்களில் சமையல் புகை படிந்திருந்தது. அதையும் உணர்ந்தாளில்லை. தான் வைத்த புளிக்குழம்பை தயிர்சோற்றில் ஊற்றி இனிது என மகிழ்ந்து தன் கணவன் உண்ணுவதைப் பார்த்து அவள் முகம் பூரிக்க நின்றாள்...//

நல்லாச் சொல்லிருக்கீங்க. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
:)

கைப்புள்ள said...

//தல,

அட்டகாசமான பதிவு..... நானெல்லாம் காலேஜ்'லே படிக்கிறப்போ தமிழ் பாடம் இருந்துச்சே.... :))//

ரொம்ப நன்றிப்பா ராயல், கண்டிப்பா நீ எல்லாம் கொடுத்து வச்சவன் தான்
:)

கைப்புள்ள said...

//அதானே எங்க காலேஜிலயும் தமிழ் இருந்தது.. காலேஜ்ல ப்ரொபசர் முத்துலெட்சுமி என்னை அப்பப்ப நியாபகப்படுத்தும்மா.. நான் பாடத்தை விட்டு ரொம்ப நேரம் உபகதை அதிலொரு உபகதைன்னு போயிட்டிருந்தேன்னா சார் பாடத்துக்குவாங்கன்னு சொல்லுன்னு சொல்வார்.. அது தான் நியாபகம் வருது..///

வாங்க மேடம்,
மிக சுவாரசியமானதொரு பகிர்வு தங்களுடைய கருத்து. தமிழ் பாடம் எடுக்கும் போது அதற்கு மேலும் சுவை கூட்டி ரசிக்கச் செய்வது நமது ஆசிரியர்கள் சொல்லும் இக்கிளை கதைகள் தான். சில சமயம் ஒரு ரெண்டு வரி செய்யுள் எடுத்துட்டு அதற்கு சார்புடைய கிளை கதைகள் சொல்லிட்டு இருக்கும் போதே வகுப்பு முடிஞ்சிடும்.

கைப்புள்ள said...

//பள்ளியில் தமிழ் வகுப்பில் போய் உட்கார்ந்த மாதிரி இருந்தது கொஞ்சம் நேரம்..//

வாங்க பாசமலர்,
நல்லதொரு ஊக்க மருந்து போல இருந்தது உங்க பின்னூட்டம். நன்றி.

//

இங்கே (ரியாத்) CBSE பாடத்திட்டம்..
தமிழ் இருக்கிறது..என்றாலும் French தேர்ந்தெடுக்கச் சொல்லும் பெற்றொர் உண்டு..3 வது வகுப்பில்தான் தமிழ் ஆரம்பம்..

தமிழைப் படிக்காமலே இங்கு தமிழ்ப்பிள்ளைகள் வளர்கிறார்கள்..

இத்தனைக்கும் French மொழியிலும் மதிப்பெண்கள் அதிகம் பெறுவது இங்கே அத்தனை சுலபமில்லை என்று புலம்ப வேறு செய்கிறார்கள்..பின் ஏன் தான் இப்படியோ?//

அது தான் புரிய மாட்டேங்குது.
:(

அரை பிளேடு said...

தமிழ்ப்பாடம் "கோடையிலே இளைப்பாறக் கிடைத்த தரு நிழல்."

:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சுந்தரரின் "பித்தாப் பிறை சூடி" யிலும்... அத்தா....வரும்.

Unknown said...

நான் கொடைகானல் , கொடை சர்வதேச பள்ளியில் படித்தவன்......

சோ (so) எனக்கு ட்மில் அவ்வளவா வராதுன்னு...பீட்டர் விடாமே....!

பெருமையா தமிழ் பள்ளியில் படிச்சேன்னு சொன்னீங்க பாருங்க....

அது , அது....அழகு...

நானெல்லாம் படிக்காமலே தமிழ்ல பாசாயுடுவேன்... அம்புட்டு திறமை( பிட்டு)

கைப்புள்ள said...

//குறுந்தொகையில் பெண்ணீயம் இவ்வாறு பேணியிருக்கின்றார்களா?
குறுந்தொகை ஒரு பிற்போக்கு நூல் அப்படின்னு டிபேட்க்கு நூல் விடலாம் பெண்ணீயவாதிகள்!//
ஹி..ஹி...

//திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியில்

வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்"
"மந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்!- அப்படின்னு படிக்கும்போது இதுவரையிலும் போய்ப்பார்க்காத குற்றால அருவிக்கரையில் மாமரத்தின் கீழே சிந்தும் மாங்கனிக்காக நானும் நிற்பதாய் உணர்வேன்!//

இங்கே ஒரு குற்றாலக் குறவஞ்சி ஃபேன் க்ளப்பே ஆரம்பிக்கலாம் போலிருக்கு. கொத்ஸும் நேத்து கு.கு.பாடல்களில் இருக்கும் ஒலிநயம் பற்றி எல்லாம் நெறையச் சொன்னார். நீங்க சொல்ற இந்த மந்திப் பாட்டுப் படிச்ச ஞாபகம் இருக்கு.

//இன்னொன்னு எப்படி ஒரு நபரின் பெர்சனாலிட்டி இருக்கவேண்டும் எனும் ஒரு தமிழ் வெண்பாப் பாடல்

இன்சொல் விளைநிலமாய் ஈதலே வித்தாக வன்சொல் களைகட்டு வாய்மை எருவூட்டி அன்பு நீர் பாய்ச்சி அறக்கதிர் ஈன்றதோர் பைங்கூழ் சிறுகாலைச் செய்!

தமிழ்ப்பாடத்திற்கும் கணிதத்திற்கும் சரியான ஆசிரியர்கள் கிடைத்துவிட்ட மாணவப்பருவம் வாழ்க்கைக்கும் வழிகாட்டும்!//

நூற்றுல ஒரு சொல். சரியாச் சொன்னீங்க.

//நான்கு ஆண்டுகள் எனக்குத் தமிழாசிரியராக இருந்த எஸ்.எஸ் எனப்பட்ட திரு. சுப்பிரமணியன் நல்ல தமிழை போதித்தார்!

அல்ஜிப்ரா மூலமாக அலர்ஜியை கணிதத்தில் ஏற்படுத்திய இரண்டு கணக்காசிரியர்களையும் மறக்க முடியவில்லை! :-))

நானும் +2 வரையில் தமிழ்வழி மாணக்கன் தானுங்க கைப்புள்ள!//

இல்லீங்க நான் ஆங்கிலம் வழி கல்வி பயின்றவன் தான். +2 வரை தமிழ் பாடம் படிச்சதை தான் அந்த அழகுல எழுதிருக்கேன். மன்னிச்சிக்கங்க.
:(

கைப்புள்ள said...

//அருமையான பதிவு கைப்ஸ்//

வாங்க சார்,,
மிக்க நன்றி.

//நானும்கூட இந்த ப்ரெஞ்சு ரஷ்யன் படிக்கறவங்களைப்பாத்து சிரிச்சதுண்டு//
இதுக்கும் மருத்துவருக்கும் சம்பந்தமில்லைன்னே நம்பறேன் :)))

//எவ்ளோ இருக்கு படிக்கறதுக்கு, ரசிக்கறதுக்கு..//
கண்டிப்பா...சும்மாவே சில சமயம் அது என்ன நாம படிச்சதுன்னு ஒரு சந்தேகம் வந்துடுச்சின்னா வேற எந்த வேலையும் ஓடாது.

//செங்கையில் வண்டு பாட்டு எனக்கு பாடமா வந்ததில்ல - ஆனா மனப்பாடம் - உபயம் ஆதிபராசக்தி பாடல் (மணியே, மணியின் மொழியே) காபி பேஸ்ட் வேலை :-)

7ஆம் கிளாஸ் அரிச்சந்திரபுராணம் ஏன் இன்னும் மனப்பாடமா இருக்குன்னு யோசிச்சிருக்கேன், சொல்ல்லிக்கொடுத்த வாத்தியாரின் ஈடுபாடு தவிரவேற காரணம் எதுவுமே புலப்படலை. பெரும்பான்மையான தமிழாசிரியர்களுக்கு இருக்கும் ஈடுபாடு மத்த ஆசிரியர்களுக்கு இருப்பதில்லை - அப்படின்னு - பொதுமைப்ப்படுத்தறது தெரிஞ்சும் - எனக்குத் தோணுது!//

நீங்கச் சொல்ற மாதிரி எனக்கு வாய்த்த தமிழாசிரியர்களும் கூடத் தமிழின் மேல் ஒரு காதல் உண்டாகக் காரணமாக இருந்தார்கள்.
:)

கைப்புள்ள said...

//அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே தல :))

நீங்க மெமரி ப்ளஸ் நிறைய சாப்பிடுவீங்கன்னு இன்னொரு முறை நிருபிச்சிட்டீங்க :))//

வாய்யா பருத்தி வீரா,
வளர நன்னி
:)

கைப்புள்ள said...

//அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே!! ரொம்ப பிடிச்ச பாடம் தமிழ்ப் பாடம் தான். முழு வருடப் பாடத்தையும் முதல்லிலேயே படிச்சுக்குவோம்!
//

வாங்க கெ.பி,
நீங்களும் கப்பியும் ஒரே மாதிரி ஆரம்பிச்சிருக்கீங்க. சூப்பர்.
:)

//
அது சரி, இவ்ளோ ஃபீலிங்ஸ் எனக்கு ஒத்து வராது என்பதால், "முளிதயிர்" பாடலுக்குப் (புதிய) பொருள்:

அடுப்புச் சாம்பலும் மனைவியின் அழுக்குப் புடவையில் தேய்த்த கையால் வைத்த குழம்பைப் பார்த்து வெறுத்த‌ கணவன், முளி (மூலி என்னும் முள்ளங்கி) போட்ட புளித்த மோர்க்குழம்பா என்று "குழம்பி"க் கண்கலங்கினாலும், (ஆம்லெட்டுக்கே ஒரு வெட்டு போடுவார்கள் என்று பின்புத்தி இருந்தமையால்) முகத்தில் மகிழ்ச்சி காட்டி இனிதாய் இருக்கின்றது என உண்கின்றானாம். "பிழைத்துப் போ" என்று எண்ணி நாணம் காட்டிப் போனாள் தலைவி//

நல்ல விளக்கம்:))) நான் கூட தயிர் சோறு சாப்பிட்டுட்டு நல்லாருக்குன்னு சொல்லி மனைவியை அகம் மகிழ வைக்கிற அந்த அப்பாவி புருஷனைப் பத்தி நெனச்சிப் பாத்தேன். ஆனா வெளிய ஒன்னும் சொல்லலை :))

//இதில் புகை என்பது அக்காலச் சுருட்டுப் புகையாக இருக்கலாம் என்று கருதப் படுகிறது//

சுருட்டு யாரு பிடிச்சது
:)))

கைப்புள்ள said...

//கைப்பு கைப்புதான்//
நன்றிங்க பெருசு.

//அப்படியே மனசுக்குள்ள நம்ம அனுபவங்கள் எல்லாம் வட்ட வட்டமா சுத்துது//

எனக்குந்தான்.

ஆனா இப்புடி எல்லோருக்கும் வட்ட வட்டமா சுத்துறத pit போட்டிக்கு யாராவது படம் புடிச்சு போட்டா மொத பரிசுதான்//
ஹி...ஹி....

//நமக்கு திருவிளையாடல் படத்துலே

சிவாஜி அனல் பறக்க பட்டைய கிளப்புவாறே, அதான் ஞாபகம் வருது.

கொங்குதேர் வாழ்க்கை,

யாராவது எடுத்துக்குடுங்கப்பு//

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி...அம்புட்டுத் தான் எனக்கும் தெரியும் :(

கைப்புள்ள said...

//நானும் +2 வரைக்கும் தான் தமிழ் படிச்சேன் மோகன்ராஜ். அதுக்கப்புறம் பொறியியல் படிக்கிறப்ப எல்லாம் நூலகங்கள்ல போய் படிக்கிற புத்தகங்கள் தான். ஆனா அந்த மேல்நிலைப்பள்ளியில தமிழாசிரியர்கள் ஏற்படுத்துன சுவை தான் இன்னும் தமிழார்வம் தொடர வைக்குது//

வாங்க குமரன்,
நான் புத்தகம் எல்லாம் படிச்சது ரொம்பக் குறைவு தான். ஆனா தமிழார்வம் ஏற்பட ஆசிரியர்கள் மட்டுமே காரணம்.

//அப்பர் பாடல், புறநானூறு, அகநானூறுன்னு அருமையா கலந்து குடுத்திருக்கீங்க. அருமை//
மிக்க நன்றி.

//காதலர்கள் கழுவேறுவார்களா? கேள்விப்பட்டதே இல்லையே. மடலேறுவார்கள்ன்னு சொல்லுவாங்க. அதைச் சொல்றீங்களோ? //
தனனை ஒரு பெண் ஏற்க மறுத்தால், ஆண்கள் கழுமரம் ஏறுவாங்கன்னு எங்கேயோ படிச்ச ஞாபகம்.

//வசந்த சவுந்தரின்னா எனக்கு இன்னொரு பாட்டு நினைவுக்கு வரும். பொங்கு கனங்குழை மண்டிய கெண்டைன்னு தொடங்குற பாட்டு//

ஓவர் டு கொத்ஸ்...அவர் தான் குற்றாலக் குறவஞ்சில எக்ஸ்பர்ட் :)

கைப்புள்ள said...

//அப்படியே என் அனுபவங்கள், என் உணர்வுகள் போலத்தான் கைப்ஸ்!

அத்தா என்பது சிவபுராணத்திலும் வரும்:

"ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்"//

மிக்க நன்றி மேடம். வருகைக்கும் பகிர்தலுக்கும்.

கைப்புள்ள said...

//தங்கள் பழந்தமிழ் ரசிப்பும்,நினைப்பும்
படித்'தேன்'.
நன்று//

தங்கள் கருத்து கண்டு மகிழ்ந்'தேன்'. மிக்க நன்றி யோகன் ஐயா.

கைப்புள்ள said...

//தமிழ்ப்பாடம் "கோடையிலே இளைப்பாறக் கிடைத்த தரு நிழல்."

:)//

சுருக்கம் ஆனாலும் இரத்தினம். நன்றி அரைபிளேடு.
:)

உண்மைத்தமிழன் said...

கைப்புள்ள..

உங்களை என்னமோ நினைச்சேன்.. பின்னிட்டீங்க போங்க..

நல்லவேளை.. நான் இதையெல்லாம் மண்டைல ஏத்துறதுக்குள்ள ஸ்கூல்ல இருந்து ஓடிட்டேன்.. தப்பிச்சேன்..

பின்ன ஏன் ஸார் மொக்கை டீமோட கொலாபரேஷன் வைச்சு கும்மியடிக்கிறீங்க..

விட்டுட்டு வந்து 'ஜோதி'ல ஐக்கியமாகுங்க ஸார்..

கைப்புள்ள said...

//சுந்தரரின் "பித்தாப் பிறை சூடி" யிலும்... அத்தா....வரும்//

நன்றி ஐயா.

கைப்புள்ள said...

//நான் கொடைகானல் , கொடை சர்வதேச பள்ளியில் படித்தவன்......

சோ (so) எனக்கு ட்மில் அவ்வளவா வராதுன்னு...பீட்டர் விடாமே....!

பெருமையா தமிழ் பள்ளியில் படிச்சேன்னு சொன்னீங்க பாருங்க....

அது , அது....அழகு...//

வாங்க பேரரசன்,
மன்னிக்கனும். நான் படிச்சதுக்கு ஆங்கில மீடியம் பள்ளிக்கூடம் தான். சொல்ல வந்ததை நான் சரியாச் சொல்லலை போலிருக்கு.

//நானெல்லாம் படிக்காமலே தமிழ்ல பாசாயுடுவேன்... அம்புட்டு திறமை( பிட்டு)//
ஹி...ஹி...
:)

G.Ragavan said...

கொசுவத்திய ரொம்பப் பெருசாத்தான் சுத்தீட்டீரு...

பள்ளிக்கூடத்துல தமிழை விரும்பிப் படிச்சது உண்மைதான். ஒவ்வொரு செய்யுளையும் ரசிச்சுத்தான் படிச்சேன். உரைநடை அலுப்பூட்டும். செய்யுட்கள் களிப்பூட்டும்.

பலப்பலச் செய்யுட்களை ரசித்து ருசித்துச் சுவைத்திருக்கிறேன்.

ஒருமுறை வீட்டில் தங்கை கம்பராமாயணச் செய்யுள் படித்துக் கொண்டிருந்தாள். "செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் செல்வந்தேறி" என்று வரும் செய்யுள். அதுல இஞ்சின்னா இலங்கைத் திருநகர்னு அவங்க டீச்சர் சொல்லிக் குடுத்திருக்காங்க. ஆனா..இஞ்சின்னா மதில். அது தப்பு. டீச்சர் கிட்டயே போய்ச் சொல்லுன்னு சொல்லி அனுப்பிச்சேன். அதே மாதிரி அவளும் போய்ச் சொல்லி...தப்பாச் சொல்லிக் குடுத்துட்டீங்களே டீச்சர்னு சொல்லி மானத்தை வாங்கீட்டா. :))))))))))

பேச வந்த தூத செல்லரித்த ஓசை செல்லுமோ என்று தொடங்கி..
வாசலுக்கிடும் படல் கவித்து வந்த கவிகைமா என்று தொடரும் பாடலை நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறென். கிடைத்தால் தரவும்.

அப்புறம் கலிங்கத்துப்பரணி. படிக்கைலயே திக்குதிக்குன்னு இருக்குமேய்யா.. பொருதடக்கை வாளங்கே...மணிமார்பெங்கே....இப்பிடிப் போகுமே..

cheena (சீனா) said...

கொசு வத்தி சுத்த வைச்சிட்டீங்க - அக்காலத்தில் நன்னூல் சூத்திரமெல்லாம் படித்தது நினைவில் வருகிறது. தமிழாசான் அலங்காரம் ஐயா
இன்றும் நினைவில் வருகிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. ....... தமிழ் வழிக் கல்வி தான் அப்போது.

அருமையான பதிவு - அழகான மறு மொழி விவாதங்கள் - படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்.

நண்பர் ஜி.ரா வின் ஆசையை இங்கு நிறைவேற்றுகிறேன்.

பேச வந்த தூத செல்லரித்த ஓலை செல்லுமோ
திருவரங்கள் அருளரங்கர் பிண்ணை கேள்வர் தாளிலே

பாசம் வைத்து மறவர் பெண்ணை பட்ட மன்னர்
பட்டதெங்கள் பதி புகுந்து பாரடா

வாசலுக்கிடும் படல் கவித்து வந்த கவிகை மாமகுட கோடி
தினைஅளக்க வைத்த காலும் நாழியும்

வீசு சாமரம் குடில் தொடுத்த கற்றை வேலியிட்டதவர்
வில்லும் வாளும் வேலுமே


திருவரங்கக் கலம்பகம் :

பெண்மையின் சிறப்பால் வீரமே பிடரியில் கால் பட ஓடும் பெருமிதத்தைக் காட்டும் பாடலிது. நாடாளும் அரசனே ஆனாலும் வேட்டுவக் குலப் பெண்ணை வேகமாய்ப் பெற முடியாது. பெண் கேட்டு வந்தவர்கள் பட்ட பாட்டை, மறக்குலமா மறவன் வீரமாய் வீசும் வேற் சொற்கள் இவை. அவன் வீட்டிலே திணை அளக்கின்ற படிகள் மாமன்னர்கள் ஓடும் போது தலையிலிருந்து விழுந்த மாமகுடங்களாம் !! அவன் வீட்டின் கூரை வேயப் பட்டிருப்பது பனை ஓலையாலல்ல - வேந்தர்களின் வெஞ்சாமரத்தாலாம் !!! அவன் குடிசையின் வேலி முள் வேலியல்ல - வேந்தனும் வீரனும் விட்டுச் சென்ற வில்லும் வாளும் வேலுமாம் !! என்னே பெருமை!! பாராளும் வேந்தனாயினும் பாவை முன் பணியத்தான் வேண்டும்.

உபயம் : துணைவியின் நினைவாற்றல்.

கைப்புள்ள said...

//கொசுவத்திய ரொம்பப் பெருசாத்தான் சுத்தீட்டீரு...//
ஆமாங்க...ஒவ்வொரு முறையும் இப்படித் தான் நிறுத்த முடியாமப் பெருசாயிடுது.

//ஒருமுறை வீட்டில் தங்கை கம்பராமாயணச் செய்யுள் படித்துக் கொண்டிருந்தாள். "செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர் செல்வந்தேறி" என்று வரும் செய்யுள். அதுல இஞ்சின்னா இலங்கைத் திருநகர்னு அவங்க டீச்சர் சொல்லிக் குடுத்திருக்காங்க. ஆனா..இஞ்சின்னா மதில். அது தப்பு. டீச்சர் கிட்டயே போய்ச் சொல்லுன்னு சொல்லி அனுப்பிச்சேன்.//
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையான்னு ஒரு பழைய தமிழ் பாட்டு இருக்கு ஞாபகம் இருக்குங்களா? அந்தப் பாட்டு இந்த சிச்சுவேஷனுக்குச் சரியாப் பொருந்தும் :)

//பேச வந்த தூத செல்லரித்த ஓசை செல்லுமோ என்று தொடங்கி..
வாசலுக்கிடும் படல் கவித்து வந்த கவிகைமா என்று தொடரும் பாடலை நீண்ட நாட்களாகத் தேடிக் கொண்டிருக்கிறென். கிடைத்தால் தரவும்///

கீழே சீனா சார் தந்திருக்கார் பாருங்க

//அப்புறம் கலிங்கத்துப்பரணி. படிக்கைலயே திக்குதிக்குன்னு இருக்குமேய்யா.. பொருதடக்கை வாளங்கே...மணிமார்பெங்கே....இப்பிடிப் போகுமே..//
அடடா...நீங்க சொன்னதும் ப்ரணி பாட்டுல வர்ற அந்தச் சொற்கள் ஞாபகத்துக்கு வந்துச்சு. நன்றி.

கைப்புள்ள said...

//கொசு வத்தி சுத்த வைச்சிட்டீங்க - அக்காலத்தில் நன்னூல் சூத்திரமெல்லாம் படித்தது நினைவில் வருகிறது. தமிழாசான் அலங்காரம் ஐயா
இன்றும் நினைவில் வருகிறார். 45 ஆண்டுகளுக்கு முன்பு படித்தது. ....... தமிழ் வழிக் கல்வி தான் அப்போது//

வாங்க சீனா சார்,
45 வருஷ முந்தைய ஃப்ளாஷ்பேக்கா? ஆஹா :)

//அருமையான பதிவு - அழகான மறு மொழி விவாதங்கள் - படித்தேன் ரசித்தேன் மகிழ்ந்தேன்

நண்பர் ஜி.ரா வின் ஆசையை இங்கு நிறைவேற்றுகிறேன்//

மிக்க நன்றி ஐயா.

இம்சை அரசி said...

தல லேட்டா வரதுக்கு ரொம்ப சாரி. வீட்டு சிஸ்டத்துல ஏகப்பட்ட வைரஸ். சோ இன்னும் நெட் போடல. ஆபிஸ்ல ப்ளாக்குக்கு தடா. அதான் பதிவிடறதையே outsource பண்ணிட்டேன். அதான் இவ்ளோ லேட். உங்க கமெண்டுக்கு ரொம்ப நன்றி.

அவர் சுத்தசைவம். நான் சுத்த அசைவம். கல்யாணத்துக்கு அப்புறம் அவருக்காக நானும் சுத்த சைவமா மாறிட்டேன் :)))

ஓகே. கமிங் டு த பாயிண்ட்...

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"

இந்தப் பாடல் தலைவியோட வளர்ப்புத் தாய் தலைவியோட தாய்கிட்ட சொல்றது. அந்தக் காலத்துல செல்வந்தர்கள் வீட்டுல குழந்தையப் பாத்துக்கறதுக்காக ஆள் வச்சிருப்பாங்க. அவங்கள வளர்ப்புத் தாய்னுதான் சொல்லுவாங்க. புதுசா திருமணமாகிப் போன தன்னோட பொண்ணு எப்படி இருக்காளோனு வருத்தப்பட்ட தாய்க்காக வளர்ப்புத் தாய் போய் அவளப் பாத்துட்டு வந்து நான் போனப்போ இந்த மாதிரி நம்ம பொண்ணு கணவனுக்கு சமையல் செஞ்சு சாப்பாடு போட்டானு விளக்கற பாடல்.

இதுல நிறைய indirect meaning தான்.

எதாவது ஒரு காய் போட்டு குழம்பு வைக்கிறோம்னா அந்த டைம்ல அதாவது சமையல் செய்யற தினத்துல இன்ன குழம்பு வைக்கலாம்னு முடிவு பண்ணிக்கலாம். ஆனா மோர்க்குழம்பு வைக்கணும்னா அதுக்கு முன்னாடி நாளே முடிவு பண்ணிருக்கணும். அப்போதான் மோர்க்குழம்புக்காக பாலுக்கு பிரை போட்டு தனியா எடுத்து வைக்க முடியும்(மோர்க்குழம்புக்கு use பண்ற தயிர் போடறதுக்கு ஏதோ வழிமுறைகள் இருக்கு). முன்னாடி நாளே கணவனுக்கு என்ன பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கா நம்ம தலைவி. சோ இங்க மோர்க்குழம்பு வச்சானு சொல்றதுல தலைவி எப்போதும் கணவனையே நினைச்சு அவனுக்கு என்ன செஞ்சு தரலாம்னு நினைச்சுக்கிட்டே இருக்கற மாதிரி பொருள்.

அப்புறம் மோர்க்குழம்புக்கு தாளிக்கும்போது வெந்தயம் போட்டு தாளிப்பாங்க. வெந்தயம் தாளிக்கிறது கடுகு போட்டுத் தாளிக்கிற மாதிரி அவ்ளோ ஈஸி இல்ல. கடுகுனா சத்தம் வச்சே கண்டுபிடிச்சிடலாம். ஆனா வெந்தயம் அப்படி இல்ல. வெந்தயம் சரியா தாளிக்காம விட்டுட்டாலோ இல்ல கருக விட்டுட்டாளோ குழம்போட ருசியக் கெடுத்துடும். அதனால கணவனுக்கு வைக்கிற குழம்பு நல்லா இருக்கணும்ங்கறதுக்காக வெந்தயம் தாளிக்கும்போது அது நல்லா தாளிக்கணும்னு அதையே உத்து பாத்துட்டு இருந்ததால அவளோட குவளை மலர் போன்ற கண்கள்ல புகை படிஞ்சிருக்குனு அர்த்தம்.

மோர்க்குழம்பு எப்போமே சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும். ஆறிப் போனா அந்த டேஸ்ட் வராது. அதனால கணவன் வர நேரத்தை மனசுல வச்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி குழம்பு வைக்க ஆரம்பிச்சு அவன் வந்ததும் சுட சுட பரிமாற வேண்டியிருந்ததால குழம்புக்காக பிசைஞ்ச தயிர் கைகள்லயும் புடவைலயும் ஒட்டியிருக்கறத சரி செய்ய முடியாம போயிடுச்சு. அவன் வரதுக்குள்ள ஒரு டச்-அப்பும் பண்ண முடியாம போயிடுச்சு ;)))

சோ இதுல இருந்து தலைவியோட அம்மாவுக்கு வளர்ப்பு அம்மா சொன்ன மெசேஜ் பொண்ணு ரொம்ப பொறுப்பா இருக்கா. சந்தோஷமா இருக்கா. கணவன் மேல ரொம்ப ரொம்ப அன்பா இருக்கா.

எங்க தமிழ் சார் இந்த பாட்டுக்கு க்ளாஸ் எடுத்தது இன்னமும் என் கண்ணு முன்னாடி இருக்கு. அவ்ளோ சூப்பரா இண்ட்ரெஸ்டிங்கா எக்ஸ்ப்ளெயின் பண்ணுவார் :)))

இம்சை அரசி said...

தல லேட்டா வரதுக்கு ரொம்ப சாரி. வீட்டு சிஸ்டத்துல ஏகப்பட்ட வைரஸ். சோ இன்னும் நெட் போடல. ஆபிஸ்ல ப்ளாக்குக்கு தடா. அதான் பதிவிடறதையே outsource பண்ணிட்டேன். அதான் இவ்ளோ லேட். உங்க கமெண்டுக்கு ரொம்ப நன்றி.

அவர் சுத்தசைவம். நான் சுத்த அசைவம். கல்யாணத்துக்கு அப்புறம் அவருக்காக நானும் சுத்த சைவமா மாறிட்டேன் :)))

ஓகே. கமிங் டு த பாயிண்ட்...

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"

இந்தப் பாடல் தலைவியோட வளர்ப்புத் தாய் தலைவியோட தாய்கிட்ட சொல்றது. அந்தக் காலத்துல செல்வந்தர்கள் வீட்டுல குழந்தையப் பாத்துக்கறதுக்காக ஆள் வச்சிருப்பாங்க. அவங்கள வளர்ப்புத் தாய்னுதான் சொல்லுவாங்க. புதுசா திருமணமாகிப் போன தன்னோட பொண்ணு எப்படி இருக்காளோனு வருத்தப்பட்ட தாய்க்காக வளர்ப்புத் தாய் போய் அவளப் பாத்துட்டு வந்து நான் போனப்போ இந்த மாதிரி நம்ம பொண்ணு கணவனுக்கு சமையல் செஞ்சு சாப்பாடு போட்டானு விளக்கற பாடல்.

இதுல நிறைய indirect meaning தான்.

எதாவது ஒரு காய் போட்டு குழம்பு வைக்கிறோம்னா அந்த டைம்ல அதாவது சமையல் செய்யற தினத்துல இன்ன குழம்பு வைக்கலாம்னு முடிவு பண்ணிக்கலாம். ஆனா மோர்க்குழம்பு வைக்கணும்னா அதுக்கு முன்னாடி நாளே முடிவு பண்ணிருக்கணும். அப்போதான் மோர்க்குழம்புக்காக பாலுக்கு பிரை போட்டு தனியா எடுத்து வைக்க முடியும்(மோர்க்குழம்புக்கு use பண்ற தயிர் போடறதுக்கு ஏதோ வழிமுறைகள் இருக்கு). முன்னாடி நாளே கணவனுக்கு என்ன பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கா நம்ம தலைவி. சோ இங்க மோர்க்குழம்பு வச்சானு சொல்றதுல தலைவி எப்போதும் கணவனையே நினைச்சு அவனுக்கு என்ன செஞ்சு தரலாம்னு நினைச்சுக்கிட்டே இருக்கற மாதிரி பொருள்.

அப்புறம் மோர்க்குழம்புக்கு தாளிக்கும்போது வெந்தயம் போட்டு தாளிப்பாங்க. வெந்தயம் தாளிக்கிறது கடுகு போட்டுத் தாளிக்கிற மாதிரி அவ்ளோ ஈஸி இல்ல. கடுகுனா சத்தம் வச்சே கண்டுபிடிச்சிடலாம். ஆனா வெந்தயம் அப்படி இல்ல. வெந்தயம் சரியா தாளிக்காம விட்டுட்டாலோ இல்ல கருக விட்டுட்டாளோ குழம்போட ருசியக் கெடுத்துடும். அதனால கணவனுக்கு வைக்கிற குழம்பு நல்லா இருக்கணும்ங்கறதுக்காக வெந்தயம் தாளிக்கும்போது அது நல்லா தாளிக்கணும்னு அதையே உத்து பாத்துட்டு இருந்ததால அவளோட குவளை மலர் போன்ற கண்கள்ல புகை படிஞ்சிருக்குனு அர்த்தம்.

மோர்க்குழம்பு எப்போமே சூடா சாப்பிட்டாதான் நல்லா இருக்கும். ஆறிப் போனா அந்த டேஸ்ட் வராது. அதனால கணவன் வர நேரத்தை மனசுல வச்சுக்கிட்டு அதுக்கு தகுந்த மாதிரி குழம்பு வைக்க ஆரம்பிச்சு அவன் வந்ததும் சுட சுட பரிமாற வேண்டியிருந்ததால குழம்புக்காக பிசைஞ்ச தயிர் கைகள்லயும் புடவைலயும் ஒட்டியிருக்கறத சரி செய்ய முடியாம போயிடுச்சு. அவன் வரதுக்குள்ள ஒரு டச்-அப்பும் பண்ண முடியாம போயிடுச்சு ;)))

சோ இதுல இருந்து தலைவியோட அம்மாவுக்கு வளர்ப்பு அம்மா சொன்ன மெசேஜ் பொண்ணு ரொம்ப பொறுப்பா இருக்கா. சந்தோஷமா இருக்கா. கணவன் மேல ரொம்ப ரொம்ப அன்பா இருக்கா.

எங்க தமிழ் சார் இந்த பாட்டுக்கு க்ளாஸ் எடுத்தது இன்னமும் என் கண்ணு முன்னாடி இருக்கு. அவ்ளோ சூப்பரா இண்ட்ரெஸ்டிங்கா எக்ஸ்ப்ளெயின் பண்ணுவார் :)))

// அதே மாதிரி சிலப்பதிகாரத்துல ஒரு பாடல் கோவலனும் கண்ணகியும் பாண்டிய நாட்டுக்கு வரும் பொழுது, அங்கிருந்த கோட்டையின் மீதிருந்த கொடிகள் "வாரல் வாரல்" என அசைந்தாடினவாம். அதாவது உங்களுக்கு இங்கே ஆபத்து இருக்கு அதனால் நீங்க இங்கே வராதீங்க என்று வருந்திச் சொல்வது போல கொடிகள் அசைந்தனவாம். //

இதுக்குப் பேரு "தற்குறிப்பேற்ற அணி". அதாவது தானா நடக்கிற ஒரு விஷயத்துல தன்னோட கருத்த ஏற்றி சொல்றது. காத்துல கொடிகள் அசையறது இயல்பு. ஆனா அது அவங்களை வர வேணாம்னு அசைந்தாடியதுனு அவரோட கருத்த ஏற்றி சொல்றார். அதே மாதிரி சிலப்பதிகாரத்துல ஒரு பாடல் கோவலனும் கண்ணகியும் பாண்டிய நாட்டுக்கு வரும் பொழுது, அங்கிருந்த கோட்டையின் மீதிருந்த கொடிகள் "வாரல் வாரல்" என அசைந்தாடினவாம். அதாவது உங்களுக்கு இங்கே ஆபத்து இருக்கு அதனால் நீங்க இங்கே வராதீங்க என்று வருந்திச் சொல்வது போல கொடிகள் அசைந்தனவாம்.

sarav said...

Mohan, Excellent Blog.. I ws reading someother blog nd eventually ended up here....

"முளிதயிர்" paadalayum, athurkku matra nanbargal koduthulla vilakkamum arumai...

Bt, I interpret it in a different way...
thalaiviyin, thanthai / thaai / valarpu thaai, thangal magal varumayilum semmayaaga vaazgiraal endru porulpadumbadi epaadal amainthulathaaga enakku thoondrukirathu...

avelamppen, pirantha veetil getti tayir pisainthu sapittu vanthaval… ekkootru avaludaya pirantha veetin sezipai kurikkum.

kanavan veetil varumai kaaranamaaga, kuraintha alavilee aana (oruvar matumee unnakoodiya alavilaana) keezviragu kali (கழுவுறு கலிங்கம்) matumee erukirathu… samaikka porul ethuvum elaathathaal, aval theen, puli, veepam poovinai (தீம்புளிப் பாகர்) than keipakuvathil kalanthu (கை கமழ தான் uழந்த) veithirukiraal… kali yin alvu kurivaaga erupathaal, thaan unbathai vida kanavan unmbathee enithu ena ninaithu, erukum kali muzuvathayum thuzaavi, kuvalayai thalai keezaaga kavizthu (குவளையுண் கண் குய்ப்பு), தீம்புளிப் பாகர் udan seerthu kanavanukku unna koduthu maghigiraal… enbathee epaadalin porul aaga erukakoodum….


(Tamil-ish la type panrathukku manikavum... naan romba neeram tamil la type panna try paneen... bt couldnt make it out!)

பரதேசி said...

"துள்ளி திரிகின்ற காலத்திலே துடுக்கடக்கி பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே என்று பின்னாளில் சொல்வாய் "

என்று எனது தகப்பனார் எப்போதும் சொல்வார் நிரூபிச்டீங்களே பாஸ்

இன்று தான் எனது முதல் வருகை