Monday, March 15, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1-ன் தொடர்ச்சி

தப்பிச் சென்ற சிறை கைதியான ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள், மாயமாக ஒரு கோட்டை நிற்பதை கண்டு மலைக்கிறார்கள். இதன் பின்னர் உக்கிரமாக நடைபெறும் போரினை விரிவாகத் திரையில் சொல்கிறோம். ஆறு நாட்களில் உருவாக்கப் பட்ட கோட்டை ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததையும், போரின் போது ஆங்கிலேய படையினர் எவ்வளவு கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர் என்பதனையும் காட்டுகிறோம். பல நாட்கள் பீரங்கி தாக்குதலுக்குப் பின் வீழ்ந்த கோட்டைக்குள் உட்புகுந்த படையினர், கோட்டையைப் பாதுகாக்க பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எந்தளவு ஆக்ரோஷமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதனை வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கண்டு தெரிந்து கொள்வதை சொல்கிறோம்.

பின்னர் எட்டையபுர பாளையக்காரரின் படைகளின் உதவியைக் கொண்டு கோட்டை விழுந்ததும் தப்பித்துச் சென்ற ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து செல்வதையும், போரில் படுகாயமடைந்த ஊமைத்துரையைச் சுந்தரலிங்கம் என்ற தளபதி தன் தாயிடம் சொல்லி காப்பாற்றச் சொல்வதையும், எட்டையபுர வீரர்கள் ஊமைத்துரையை அடையாளம் காணாமல் இருக்க தன் மகன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லி காப்பாற்றுவதையும், அவர் உடல்நலன் தேறும் வரை பணிவிடை செய்வதையும் காட்டுகிறோம். பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஊமைத்துரையை மீட்டவர்களில் முதன்மையானவர் தான் இந்த சுந்தரலிங்கம் என்பதனையும் நிறுவுகிறோம்.

கோட்டையின் வீழ்ச்சிக்குப் பின் தப்பிச் செல்லும் ஊமைத்துரையும், அவருடைய வீரர்களும் சிவகங்கை பாளையக்காரர் மருதுபாண்டியரின் உதவி கோருவதையும், சின்ன மருதுவின் ஜம்பு தீபகர்ப்ப பிரகடனம், மற்றும் மருதிருவரின் உதவியோடு ஊமைத்துரை மறுபடியும் வெள்ளையரை எதிர்ப்பதையும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் ஊமைத்துரையை விருப்பாட்சி எனும் இடத்தில் சிறை பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் பீரங்கி மேட்டில் வைத்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டதையும் காட்டுகிறோம். இப்பதிவில் முதல் சில பத்திகளில் காட்சிகளை விரிவாகச் சொல்லியது போல பின்வரும் பத்திகளில் சொல்லாது போனதை நானறிவேன். அதற்கு காரணம் அக்காட்சிகளை இன்னும் விரிவாக வரலாற்று ஆய்வு செய்து வலுவாக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அக்காட்சிகளைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. மேலே சொன்ன வரலாற்று கதையினை ஆவணப்படம் போல் எடுப்பதா, குறும்படமாக எடுப்பதா இல்லை முழுநீள திரைப்படமாக எடுப்பதா என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. திரைப்படத்துக்கு தேவையான கதைக்கும், திரைக்கதைக்குமான வேறுபாடு எனக்கு தெரியாது. இவை இரண்டையும் எழுதுவது என்றால் எப்படி என்றும் எனக்கு தெரியாது. சரி, அந்த விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். மேலே சொல்லியிருப்பது ஒரு அவுட்லைன் தான்.

இந்தப் படத்துக்கான வரலாற்றுச் சான்றுகளாக இப்போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் பங்கு கொண்ட கர்னல் வெல்சு அவர்கள் எழுதிய "Military Reminiscences" என்ற புத்தகமும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டபொம்மன், ஊமைத்துரை பற்றிய வரலாற்று நூல்களும், மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களான கதை பாடல்களுமாக இருக்கும். வரலாற்று கதையை வேறொரு கலை வடிவமாக மாற்ற முற்படும் போது படைப்பாளிகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு படம் எடுக்க முடியுமா என ஒரு எண்ணமும் இருக்கிறது. உதாரணமாக ஊமைத்துரை மணமானவரா இல்லையா என்பது போன்ற அவருடைய தனிப்பட்ட வாழ்வினைப் பற்றிய குறிப்புகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. கதையின் நீளத்தைக் கூட்டுவதற்காகவும், காண்பவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுவதற்காகவும் அவருக்கு ஒரு காதலி இருப்பது போலவும் ஓரிரு டூயட் பாடல்கள் வைப்பது போன்ற சுதந்திரங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், ஊமைத்துரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையாக ஒரு படம் எடுக்க முடியுமா? தெரியவில்லை.

வரலாற்றை பிற்சேர்க்கைகள் இல்லாமல் உள்ளது உள்ளது உள்ள படி சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. உதாரணமாக கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது அண்டை பாளையங்களைச் சேர்ந்தவர்களின் உதவிகள் அவருக்குக் கிட்ட வில்லை. ஏன்? கட்டபொம்மன் அண்டை பாளையங்களில் புகுந்து கொள்ளையடித்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றை ஓளிவடிவமாக ஆவணப்படுத்திய முக்கிய சாட்சியங்களில் ஒன்றான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டதாக நினைவில்லை. ஆனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் போரிட்டு வீரமரணம் எய்தினார் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர்களும் ஒத்துக் கொள்கின்றனார். நம் திரைப்படத்தில் கதை நாயகனை ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய நிறைகளை நிரம்பச் சொல்லும் போது குறைகளையும் மறைக்காமல் சொல்லி சித்தரிக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. சமீப காலங்களில் கதை நாயகனின் குறைகளைச் சொல்லியும் அவனை நாயகனாக நிறுவிய படம் பருத்தி வீரன்.

ஊமைத்துரையை நேரில் கண்ட கர்னல் வெல்சு ஊமைத்துரையின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார். "He was a tall, slender lad, of a very sickly appearance, yet possessing that energy of mind which in troubled times always gains pre-eminence". ஆகவே ஊமைத்துரை வேடத்திற்கு மெலிதான, உயரமான ஒரு நடிகர் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஊமைத்துரை வாய் பேச முடியாதவர் என்பதால் கண்களால் உணர்வுகளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஊமைத்துரை இறக்கும் போதே அவருக்கு வயது முப்பத்தைந்தாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தினமும் ஜிம்முக்குப் போய் முறுக்கேறிய நரம்புகளுடன் சிக்ஸ் பேக் அல்லது எய்ட் பேக் கொண்ட நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எடுக்கும் படம் ஒரு 'metrosexual male'ஐப் பற்றியதல்ல. ஆகவே அத்தகைய நடிகர் நம்முடைய கதைக்கு சரிவர மாட்டார் என்று நினைக்கிறேன். ஊமைத்துரையாக நடிப்பவர் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். ஆனால் வெல்ஷ் அவர்கள் சொல்லும் எனர்ஜியைக் காட்டக் கூடிய நடிகராக இருக்க வேண்டும். ஒரு படி மேலே போய் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன் சந்ததியினரைச் சந்தித்து அவர்களில் ஒரு இளைஞருக்கு DNA பரிசோதனையின் மூலமாக அவருடைய முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஒன்று உள்ளது.

கர்னல் வெல்சின் ஊமைத்துரையைப் பற்றி மேலும் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"and he was generally the foremost in executing those plans, for our annihilation. Whatever undisciplined valour could effect, was sure to be achieved wherever he appeared ; though poor Oomee was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism. He had escaped, as it were, by miracle, in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain." ஆங்கிலேயர்களை அழிக்க திட்டம் பெரும்பங்கு திட்டம் தீட்டியது ஊமைத்துரை என்று வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதையும் "celebrated chieftain" என்று அவர் சொல்லியிருப்பதையும் காட்சிகளாக வடிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும், கதை சொல்லிகளும் ஊமைத்துரையைப் பற்றி இந்தளவுக்கு உயரிய வார்த்தைகளில் விவரித்திருப்பதாகத் தெரியவில்லை.

இசைக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான் - அது இளையராஜா என்று ஏற்கனவே சொல்லியாயிற்று. ஒளிப்பதிவாளர் - தாரே ஜமீன் பர் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு, நீரவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களில் யார் என்று முடிவு செய்யவில்லை. ஊமைத்துரை பற்றிய வரலாற்று சான்றுகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தென் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் பற்றி ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதை தெரிந்து கொண்டேன். அவரை வசனம் எழுதச் சொல்லலாம் என்று எண்ணம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் மூதாதையர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தவர்கள் என்ற காரணத்தினால் படத்தில் பேசப்படும் தமிழ் - நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேசப்படும் தமிழாக இருந்தாலும், அவர்களுடைய பேசுமொழியில் தெலுங்கு கலப்பு இருந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆயினும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன்/ஊமைத்துரை வம்சத்தினரைச் சந்தித்துப் பேசினால் ஓரளவு யூகிக்க முடியும் என நினைக்கிறேன்.

இப்போதுள்ள படங்களில் காட்டப்படும் நெல்லைத்தமிழைப் போல வெறும் வாலே, போலே என வார்த்தைக்கு வார்த்தை லே போடும் exaggerationsகளை எல்லாம் மீறி உண்மையில் அழகாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த அழகினையும் நம் படத்தில் ஆவனப் படுத்த முயல்வோம். நம்முடைய படம் ஆரம்பிப்பது கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னர். ஆகவே கட்டபொம்மனைப் பற்றிய காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகக் காட்ட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழில் உள்ள வரலாற்றுச் சான்றுகளில் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் இருக்கும் அளவிற்கு, ஊமைத்துரையைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இல்லை. ஊமைத்துரையைப் பற்றி ஏன் படம் எடுக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்?

கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துள்ள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஊமைத்துரையைப் பற்றி எதுவும் தவறாக எழுதி நான் பார்க்கவில்லை. மேலும் வெல்ஷ் அவர்களின் கூற்றுபடி ஊமைத்துரையை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் நினைத்ததை சிரமேற் கொண்டு செயல்படுத்த ஆயத்தமாக இருந்தனர். எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் வெற்றி பெற அது ஒரு மக்கள் புரட்சியாய் இருப்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் அனைத்து சாதி மக்களையும் புரட்சியில் பங்குபெற செய்த ஊமைத்துரை என்ற தலைவன் தன்னிகரற்றவனாகத் திகழ்ந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. அத்தோடு ஆங்கிலேயர்களின் ஏகாபத்தியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய முதல் கிளர்ச்சி இது என்ற வகையில் ஊமைத்துரை பங்குபெற்று சண்டையிட்டு மடிந்த பாளையக்காரர் போர் முக்கியமானதாகும். அந்த நிகழ்வை மிகையில்லாமல் சொல்வது என்ற எண்ணம் தான் ஊமைத்துரை பற்றிய படம் எடுப்பதற்குண்டான காரணம்.

பி.கு: பல நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை எழுத்து வடிவமாக வலையேற்றி இருக்கிறேன். சினிமா தான் என் கனவு, என் வாழ்க்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது உண்மையுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு. அவ்வளவு தான் :)

10 comments:

வெட்டிப்பயல் said...

All the best Thala :)

Iyappan Krishnan said...

அண்ணாச்சி... ஃபைனான்ஸ் பண்றதுக்கு ஆளைப்பிடிங்க.. வேணும்னா ஊமைத்தொரையா நான் ஃப்ரீயா நடிச்சுத்தாரேன்

ambi said...

தல,
சூப்பர். உங்களுக்குள்ள இப்படி ஒரு ஜேம்ஸ் கேமரூன் குப்புற படுத்து இருக்காரா..? :)))

நீங்க சொன்ன அங்க அடையாளம் எல்லாம் வெச்சு பாத்தா பதிவுலகத்துல ஊமைத் துரை வேசத்துக்கு நம்ம அபி அப்பா தான் சரியா இருப்பாருன்னு எனக்கு தோணுது. என்ன, காதலியா தீபா வெங்கடை தான் நீங்க புக் பண்ணியாகனும். :)))

Dubukku said...

அருமையான முயற்சி கைப்புள்ள. நீங்கள் விவரித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. என் மனதில் பட்டு சொல்ல நினைத்தற்கெல்லாம் நீங்களே பெரும்பாலும் விடை சொல்லிவிட்டீர்கள். முதலில் மிக டீட்டெயிலாக கேமிரா ஆங்கிள் முதற்கொண்டு ஆரம்பித்த விவரணை பிறகு வேறொரு ஸ்கேலுக்குப் போக ஆரம்பித்தது. திரையுலக ஃபார்மல் விதிகளின் படி நிறைய விதிகளை மீறியிருந்தாலும் இதை ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தவேண்டுமென்றால் (அத்துமீறல்களை எல்லாம் ஓரம்கட்டி) ஒரு ட்ரீட்மென்ட்டாக வகைப்படுத்தலாம். எந்த சினிமா இம்பேக்டும் இல்லாமல் எழுதினீர்களனால் அது கதை அதை காட்சி வடிவப் படுத்தும் போது அது திரைக் கதை ஆகுகிறது ஆனால் அங்கும் கேமிரா கோணம் எல்லாம் வராது. இந்த விதிகளையெல்லாம் விட்டுத் தள்ளுங்க...எல்லத்துக்கும் தேவை ஒரு உயிரோட்டம் அது உங்கள் விவரணையில் நிச்சியம் இருக்கிறது. வாழ்த்துகள் !! Kudos ஆஹா காம்படிஷன் கூடிகிட்டே போகுதே :)))

கைப்புள்ள said...

வாழ்த்துக்கு நன்றிப்பா பாலாஜி :)

கைப்புள்ள said...

அண்ணாச்சி,
நீங்க காசு போட்டீங்கன்னா நாளைக்கே உங்களை ஹீரோவா புக் பண்ணிடறேன்.
:)

கைப்புள்ள said...

அம்பி,
வாழ்த்துக்கு நன்னி. அபிஅப்பா ஃபெர்ஃபெக்டா பொருந்துவாருன்னு நினைக்கிறேன்.
:)

கைப்புள்ள said...

டுபுக்கு சார்,
உங்கள் கமெண்ட் மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. மிக்க நன்றி. ஆனா காம்பெடிஷன்னு சொல்லற அளவுக்கு நான் வர்றதுக்கே இன்னும் நெறைய தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு.
:)

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் அண்ணாத்த. ஊமைத்துரையா ஜூவ்ஸ் அண்ணன் ஒத்துகிட்டதால நான் வேணா வெள்ளைக்கார துரையா நடிக்கிறேன் :)

எனிவே வாழ்த்துகள்ண்ணே.

எல் கே said...

nice narration