Sunday, March 14, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1

ஒரு பாதை. விலங்குகளும் மனிதர்களும் நடந்து சென்ற காலடித் தடங்களால் உருவான ஒரு மண் பாதை. அந்தப் பாதையில், தன்னுடைய இரண்டு ஆடுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் நடந்து செல்கிறார். அவருடைய நடையில் ஒரு வேகம் தெரிகிறது. முகத்தில் ஒரு வெறுமை தெரிகிறது. அப்பாதை, சில ஓலை குடிசைகள் அமைந்துள்ள மேடான ஒரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அம்மனிதர் தன் நடையை ஒரு குடிசையை நோக்கிச் செலுத்துகிறார். ஆடுகள் இரண்டையும் குடிசைக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு , குடிசையின் உள்ளே செல்கிறார். அவருடைய மனைவி குடிசையில் உள்ள ஒரு சில பொருட்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். வெகுநேரமாக அழுது களைத்த கண்களில் சோகம் தெரிகிறது. "நேரமாச்சு, வா கெளம்பலாம்" என்கிறார் தெலுங்கு மொழியில். "பெறந்து வளர்ந்த பூமியை விட்டு போகணும்ங்கிறீங்களே" என்கிறார் அவருடைய மனைவி. "என்ன பண்ணறது, இந்த மண்ணுல நாம உயிர் வாழ இனிமே ஒன்னும் இல்லை, போய் தான் ஆகனும்" என்று சொல்லி மனைவியை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார்.

பின்னர் தங்கள் உடைமைகளையும், தாங்கள் வைத்து வணங்கும் பெண் தெய்வத்தின் மண் சிலையையும் எடுத்துக் கொண்டு, வாசலில் கட்டியிருக்கும் ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். அவ்விடத்தில் வாழும் அம்மனிதரைப் போன்ற ஏனையோர்களும் தத்தம் மனைவி, மக்கள், விலங்குகள் ஆகியவற்றை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்கள். ஆண்கள் அனைவரும் கம்பளங்களைத் தங்கள் தோள் மேல் போர்த்தியிருக்கிறார்கள். இந்த இடத்துல மெலிந்து போன சில பசு மாடுகளும், சோக முகம் கொண்ட மனிதர்களும் நடந்து போறதை லோ-ஆங்கிளில் காட்டறோம். "வடக்கு ஆந்திர பிரதேசம், கி.பி.12 ஆம் நூற்றாண்டு" என சப்-டைட்டிலில் காட்டறோம். அம்மக்கள் பல துயரங்களை அனுபவித்து தென் தமிழ்நாட்டை அடைகிறார்கள். முதல் காட்சியில் காட்டப்பட்ட அம்மனிதர், அங்குள்ள மன்னன் ஒருவனிடத்தில் சேவகனாக சேர்கிறார். அம்மன்னனின் நன்மதிப்பை பெறுகிறார். நாட்டின் ஒரு சிறிய பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்குக் கிடைக்கிறது. இதை எல்லாம் ஒன்னரை-ரெண்டு நிமிஷத்துக்குள்ள, கோர்வையான சில காட்சிகளின் மூலமாக மிகைப் படுத்தாமல் சொல்கிறோம்.

அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைக்கும் ஒலி கேட்கிறது. காட்சி திரையில் ஆரம்பிக்கும் போது நாய்கள் ஒரு புதருக்குள்ளிலிருந்து வேகமாக வெளிப்பட்டு முன்னோக்கி வேகமாக ஓடுவது காண்பிக்கப் படுகிறது. நாய்களுக்குப் பின்னால் அம்மனிதர் ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். நாய்களுக்கு முன்னால் காட்டு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டை நாய்கள் வேகமாக ஓடுவது காட்டு முயலைப் பிடிக்க என்பது காட்சியிலிருந்து தெரிவிக்கப் படுகிறது. நாய்கள் காட்டு முயலைப் பிடித்தாக வேண்டும் என்ற ஆர்வம், நாய்களின் எஜமானரான அம்மனிதரின் முகத்தில் தெரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் நாய்கள் முயலைத் துரத்துவதும், மனிதர் குதிரையில் பின் தொடர்ந்து வருவதும் ஆக்சன் ஷாட்டாகக் காண்பிக்கப் படுகிறது. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தன் இது வரை ஓடி வந்த திசையை நோக்கித் திரும்புகிறது, வேட்டை நாய்களை நேருக்கு நேராகப் பார்க்கின்றது. அதுவரை பயந்து ஓடிக் கொண்டிருந்த முயல், வேட்டை நாய்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. நாய்களை ஒரு முயல் துரத்துவதையும், தன்னை கடந்து அவைகள் ஓடுவதையும் அத்திசையை நோக்கி அம்மனிதர் பார்க்கிறார்.

முயல் எந்த இடத்தில் திரும்பி நாய்களைத் துரத்த ஆரம்பித்ததோ அந்த இடத்திற்கு தன் குதிரையில் இருந்து இறங்கி நடநதுச் செல்கிறார். அவருடைய கண்களில் தெரியும் வியப்பைப் பார்வையாளருக்குக் காட்டுகிறோம். அவருடைய கருவிழிகளுக்குள்ளே, அவ்விடம் வளர்ச்சி பெறுவதையும் ஒரு கோட்டை உருவாவதையும் காட்டுகின்றோம். இப்போது கேமரா அம்மனிதரின் தலைக்கு மேல் செல்கிறது, மேலே எழும்பிக் கொண்டே இருக்கிறது, அவருடைய தலை ஒரு சிறு புள்ளியாகத் தெரியும் வரை. இவ்விடத்தில் அப்புள்ளி சேட்டிலைட் இமேஜரியாக(Satellite Imagery) மாறுகிறது. புள்ளி தெரிந்த அதே இடத்தில் சேட்டிலைட் இமேஜரியின் மீது ஒரு புள்ளி வைத்து "பாஞ்சாலங்குறிச்சி, கி.பி.12ஆம் நூற்றாண்டு" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து வலப் பக்கமாக சிறிது தூரம்(ஒரு சில மில்லிமீட்டர்கள்) சேட்டிலைட் இமேஜரியின் மீது கேமரா பயணிக்கிறது. அங்கு இன்னுமொரு புள்ளி தெரிகிறது. அப்புள்ளியின் அருகே "கயத்தாறு, அக்டோபர் 17, கி.பி.1799" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து கேமரா உள்நோக்கி கீழிறங்க ஆரம்பிக்கிறது. இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் எவ்வாறு பூமி தெரியுமோ அவ்வாறு நிலம் தெரியத் துவங்குகிறது.

மேலும் கேமரா கீழே இறங்குகிறது. பச்சையான மேற்பரப்பு தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கேமரா கீழிறங்குவது ஒரு மரத்தினூடாக என்பது பார்ப்பவருக்குத் தெளிவாகிறது. அம்மரம் ஒரு புளியமரம் என்று கேமரா கீழிறங்கும் போது தெரியும், புளிய மர இலைகள் மூலமாகவும், மரத்தில் தொங்கும் புளியம்பழங்களின் மூலமாகவும் பார்ப்பவர் தெரிந்து கொள்கிறார். கீழிறங்கிக் கொண்டிருக்கும் கேமராவுக்கு ஒரு பெரிய மரக்கிளை தெரிகிறது. அம்மரக் கிளையில் தடிமனான ஒரு கயிறு கட்டப் பட்டிருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைக் காட்டிக் கொண்டே கேமரா கீழிறங்குகிறது. இடுப்பு வரை வெற்றுடம்பாக இருக்கும் ஒரு சடலம் கயிறில் தொங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறோம். கேமரா காட்டுவது அச்சடலத்தின் முதுகு பகுதியை தான். கறுத்த உடல் நிறம் கொண்ட அம்மனிதனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கால்களில் வசதி படைத்தவர்கள் அணியும் காப்புகள் அணிந்திருப்பது தெரிகிறது. பின்னணியில் மக்கள் அழுது புலம்புவதையும், கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல உடையணிந்த இன்னும் சிலர் விலங்கிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்களால் இழுத்துச் செல்லப் படுவதையும் காட்டுகின்றோம். இக்காட்சி முழுவதும் சூரியன் மறைந்த மாலை நேரத்தில்(ஆனால் இருள் சூழாத) படமாக்கப் படுகிறது.

அடுத்த காட்சி விளக்கு வைத்த மாலை வேளையில் தொடங்குகிறது. விபூதி பட்டை அணிந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று காவடி தூக்கிக் கொண்டு, காவடி சிந்து பாடிக் கொண்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் காக்கும் ஒரு வாயிலை நோக்கி வருகிறது. அவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்ட காவலாளிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவடி எடுத்து வந்தவர்கள், காவலாளிகளின் கண்களிலிருந்து மறைந்ததும் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள். காவடிக்குள்ளிலிருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்து கொள்கிறார்கள். இருள் கவியத் தொடங்கியதும் வெவ்வேறு திசைகளிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல ஒரு கோட்டையை நோக்கி வருகின்றனர். அங்கு காவலாளிகளை மறைந்திருந்து தாக்கிக் கொன்று கோட்டைக்குள் புகுகின்றனர்.

கோட்டைக்குள் அவர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிறை கதவு தெரிகிறது. அதை தாக்கி உடைத்து, சிறைக்குள்ளிருக்கும் நபரின் கைவிலங்குகளை உடைக்கின்றனர். அவருடைய கைகளை முத்தமிடுகின்றனர். கோட்டையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வீரர்களும், அந்நபரும் வெளியேறுகின்றனர். அப்போது படத்தின் பெயர் போடுகின்றோம் - "ஊமைத்துரை". பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்டு கொண்டு வரும் போது ஆங்கிலேய தளபதிகளும், அவர்களுடைய படைவீரர்கள் அனைவரும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்து சற்றே விலகி ஒரு இடத்தில் விருந்தில் கலந்து கொண்டிருந்ததையும், வீரர்கள் அந்நேரத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கியிருந்தால் வரலாறு மாறியிருக்க வாய்ப்பிருந்ததையும் காட்டுகிறோம்.

சில நாட்கள் காலாட் பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணான பாஞ்சாலங்குறிச்சியை அடைகின்றனர். தமது அண்ணன் கட்டபொம்மனின் மறைவிற்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து சாதி மக்களின் உதவியையும் கொண்டு ஆறே நாட்களில் மறுபடியும் கட்டி முடிக்கின்றான். இந்த சிச்சுவேஷனில் ஒரு பாட்டு வருகிறது. படத்திற்கு இசை - இசைஞானி இளையராஜா. அதாவது இரவு பகலாக மக்கள் மண்சுமந்து அந்த கோட்டையைக் கட்டும் போது களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பாடுவது போல ஒரு பாட்டு வருகிறது. களிமண்ணும் சுண்ணாம்பும் பதநீரும் கரும்புச் சக்கையும் சேர்த்த கலவையை வைத்து கட்டும் போது எழுப்பப் படும் ஒலியோடு பாடல் தொடங்குகிறது.

வேட்டை நாயை விரட்டிய முயலின் கதையோடு ஆரம்பிக்கிறது பாடல். அத்தகைய பெருமைகளைக் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி என்பது வீரம் விளைந்த மண் என்பது நிறுவப் பெறுகிறது. அடுத்து கட்டபொம்மனின் பெருமைகளைச் சொல்கிறது, வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவர்க்கு வரி கொடுக்க மறுத்தது, அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது இவை எல்லாவற்றையும் இயல்பான மொழியில் ஒரு கதை பாடல் போல ஒலிக்கிறது இந்தப் பாடல். பாடலில் பல்வேறு உணர்ச்சிகள் காட்டப் படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமை சொல்லும் இடத்திலும், கட்டபொம்மனின் வீரதீர பெருமைகளைச் சொல்லும் இடத்திலும் ஒருவித மகிழ்ச்சி உணர்வும், கட்டபொம்மன் மறைந்தது பற்றிப் பாடும் போது சோகமும் கலந்த கலவையாக இப்பாடல் வரும். கடைசியாக நீங்களா? நாங்களா? மோதி பார்த்துடுவோம் வாங்கடா வெள்ளையர்களா என்று சவால் விடும் தொனியில் பாடல் முடிவடையும்.

(தொடரும்...)
திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

4 comments:

Unknown said...

Nice..

கைப்புள்ள said...

கருத்துக்கு மிக்க நன்றி அருள்.

Prema said...

Nalla ennam. Nalla screenplay. I liked that situation song. Sunnambu oli!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா இருக்குங்க.. கைப்ஸ்