Sunday, July 13, 2008

ஒரு ஆண்டன் செகோவ் கதையும் ஒகேனக்கல் பயணமும்

பல வசந்தங்களுக்கு முன்னதான ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அது. வீடு வாசல், தோட்டம் துறவு, கன்னுக்குட்டி பன்னிக்குட்டி இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு புது தில்லியில் வேலை பார்க்கும் என்னை போன்ற பேச்சிலாத பையன்கள் தங்குவதற்காக எங்கள் அலுவலகத்தினர் கொடுத்திருந்த அந்த வீட்டில், எனது அப்போதைய உற்றத் தோழியான வெறுமையுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். வெறுமைக்கும் என் துணையானது சலிப்பினை உண்டாக்க, தொலைக்காட்சியின் துணையினைத் தேடிக் கொள்ளும் படி என்னை பணித்தாள். நோக்கம் ஏதுமின்றித் தொலைக்காட்சியின் அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்த போது தான் தூர்தர்ஷனின் அவ்வலைவரிசை கண்ணில் பட்டது. ஆண்டன் செகோவ் எனும் புகழ்பெற்ற உருசிய(உக்ரேனிய என்பதே சரியானது) எழுத்தாளரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்தி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. "செகோவ் கி துனியா"(Chekhov ki Duniya) எனும் பெயருடைய அத்தொடரை நான் சிறுவனாக இருந்த போது சென்னையில் பார்த்திருந்ததும் நினைவுக்கு வந்தது. இத்தொடரில் செகோவ் எழுதிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதை வரும். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகான மறு ஒளிபரப்பு என்றாலும், ஏனோ அத்தொடரைப் பார்ப்பது அன்று எனக்கும் என் தோழிக்கும் பிடித்திருந்தது.

சரியாக அத்தொடர் ஆரம்பிக்கும் வேளையில், என்னுடன் அவ்வீட்டில் தங்கியிருந்த என்னைப் போன்ற இன்னொரு பேச்சிலன் ஞாயிறு மதியத் தூக்கத்திற்குப் பின் துயிலெழுந்து வந்தான். வந்தவனது பார்வை நான் பார்த்துக் கொண்டிருந்த அத்தொடரின் மீது படிந்தது. தூர்தர்ஷன் என்பது ஏதோ கேவலமான சேனல் என்று நினைத்தானோ என்னவோ தெரியலை, என்னிடம் எதுவும் கேட்காமல் ரிமோட்டினை எடுத்து அலைவரிசை மாற்றத் துவங்கினான். கடுப்பான நான்"என்ன பண்ணறே?" என்று கேட்டேன். "சேனல் மாத்திக்கிட்டிருக்கேன்"என்றான் சர்வசாதாரணமாக. "நான் பாத்துக்கிட்டிருக்கிறது உனக்கு தெரியலையா?" என்றேன். "வீ சேனல் வைக்கப் போறேன். இதையா பாக்கப் போறே?"என்று ஏளனமாகக் கேட்டான். "ஆமாம், இதை தான் பாக்கனும். உனக்கு வேணும்னா அரை மணி நேரம் கழிச்சு வா" என்று சற்று கோபமாகவே சொன்னேன். ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் அத்தொடரை என்னோடு சேர்ந்து அவனும் பார்த்தான். பார்த்து முடித்து விட்டு "செம டச்சிங்கா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கில்ல? வீ-சேனல்ல பாத்த பாட்டையே பாக்கறதுக்காக, நல்ல ஒரு கதையை மிஸ் பண்ண இருந்தேன்"என்று மிகவும் நெகிழ்ந்து போய் சொன்னான்.

அவனை அந்தளவு நெகிழச் செய்ய கதை இது தான். எழுத்தாளர் ஒருவர் இருப்பார். அவருடைய வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பார். ஒரு மனமாறுதலுக்காக ஒரு நாள் மாலை வேளையில் கடற்கரைக்குச் செல்வார். எதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும் அவரை ஒரு குரல் திரும்பிப் பார்க்கச் செய்யும். நீளமான கோட்டும் தொப்பியும் அணிந்த ஒரு மனிதன் "ஐயா! இந்த இனிய மாலை வேளையில் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு காட்டட்டுமா?"என்று கேட்பார். இந்த கோட் அணிந்த மனிதனாக நடித்தவர் லில்லிபுட் என்ற நடிகர். கமல்ஹாசன் நடித்த 'சாகர்' என்ற இந்தித் திரைப்படத்தில் "ஓ மாரியா" என்ற பாடலில் கமலுடன் ஆடுவாரே குள்ளமான ஒரு ஆள், அவர் தான் இந்த லில்லிபுட். "எனக்கு ஆயிரம் பிரச்சினைகள். என்னை கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள். பொழுதுபோக்கெல்லாம் எனக்குத் தேவையில்லை" என்பார் எழுத்தாளர். "இல்லை சார்! நானும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கும் பணம் மிகவும் அவசியமாகத் தேவை படுகிறது. இரண்டு ரூபிள் கொடுத்தால் போதும். உங்கள் பொழுதுபோக்குக்கு வழிசெய்கிறேன். உங்கள் மனதுக்கு நான் காட்டும் பொழுதுபோக்கு வித்தை பிடித்திருந்தால் மட்டுமே பணம் கொடுக்கவும்" என்பார் கோட் மனிதர். "இரண்டு ரூபிளுக்கு என்ன வித்தை காட்டுவீர்கள்" என வேண்டாவெறுப்பாகக் கேட்பார் எழுத்தாளர். "அதோ தெரிகிறதே கடல், அதில் மூச்சை அடக்கி நீண்ட நேரம் மூழ்கி இருக்கும் வித்தையை உங்களுக்குக் காட்டுகிறேன்"என்பார். "நீங்கள் கடலில் மூழ்குவதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை" என்று கூறுவார் எழுத்தாளர்.

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ரொம்ப கஷ்டமான நிலையில இருக்கேன். நான் காட்டும் வித்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால் போதும்" என்று எழுத்தாளரைக் கெஞ்சுவார் கோட் மனிதர். "சரி! உங்கள் வித்தையைக் காட்டுங்கள். நீங்கள் கூறியது போல எனக்கு உங்கள் வித்தை பிடித்திருந்தால் மட்டுமே இரண்டு ரூபிள் தருவேன்" என்று சொல்வார் எழுத்தாளர். அவர் கூறியதற்கு உடன்பட்டு விட்டு கடலில் குதிப்பார் கோட் மனிதர். மூச்சினைப் பிடித்துக் கொண்டு ஒரு சில மணித்துளிகள் கடலில் மூழ்கி இருந்துவிட்டு, மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார். கரையில் நின்று கொண்டிருக்கும் எழுத்தாளரை நோக்கி "ஐயா! என் வித்தை பிடித்திருந்ததா?"என்பார். "இதில் ஒன்றும் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என பதிலிறுப்பார் எழுத்தாளர். "சரி ஐயா"என்று கூறிவிட்டு மறுபடியும் கடலில் மூழ்குவார் கோட் மனிதர். முன்னை விட நீண்ட நேரம் கடலில் மூழ்கியிருந்து விட்டு மறுபடியும் மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார் கோட் மனிதர். எழுத்தாளரோ "உங்கள் வித்தையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை" என்பார். இது போல இன்னுமிரண்டு மூன்று முறை, கோட் மனிதர் நீண்ட நேரம் கடலில் மூழ்குவதும், எழுத்தாளர் "உங்கள் வித்தை எனக்கு பிடிக்கவில்லை"என்று சொல்வதும் நடக்கும். இதற்குப் பின் மூச்சு வாங்குவதற்காக மேலே வரும் போது கோட் மனிதருக்கு மிகப் பலமாக மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். "ஐயா! இந்த முறை நான் காட்டும் வித்தை உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காமல் இருக்காது. வருகிறேன்" என்று கூறிவிட்டு கடலில் மூழ்குவார் கோட் மனிதர். கடலில் மூழ்கிய மனிதன் நீண்ட நேரமாகியும் மூச்செடுக்க மேலே வரமாட்டார். நேரம் சென்று கொண்டேயிருக்கும். எழுத்தாளரும் "வழக்கத்திற்கு மாறாக வெகு நேரம் ஆகியும் இம்மனிதர் ஏன் மேலே வரவில்லை" என யோசிக்கத் துவங்குவார். காலமும் சென்று கொண்டேயிருக்கும். அது வரை பெரிதாக அம்மனிதரைப் பற்றி அக்கறை காட்டாத எழுத்தாளரின் மனம் கவலை கொள்ளத் தொடங்கும். கடற்கரையில் குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்குவார். "ஐயா! நீங்கள் காட்டிய வித்தை போதும். தயவு செய்து மேலே வாருங்கள். நீங்கள் கேட்ட இரண்டு ரூபிளைக் கொடுத்து விடுகிறேன். மேலே வந்துவிடுங்கள்" எனக் கடலை நோக்கிக் கத்துவார் எழுத்தாளர். தொடர்ச்சியான அவருடைய கத்தலுக்கும் கதறலுக்கும், கடல் அலைகளின் ஓசையைத் தவிர எந்தவொரு பதிலும் இருக்காது. இவ்வாறாக முடியும் அக்கதை. "The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல விதமான எண்ணங்களையும், இரு கனத்த இதயங்களையும் அம்மாலை வேளையில் விட்டுச் சென்றது தொலைக்காட்சியில் கண்ட அக்கதை.

சமீபத்தில்(இவ்வாண்டு மே மாதத்தின் கடைசி நாள்) ஓகேனக்கல் சென்றிருந்தேன். உயர்ந்த பாறைகளுக்கு இடையில் காவிரி ஆறு நீர்வீழ்ச்சியாகிச் சீற்றத்துடன் கீழே விழுந்து ஓடுவதைக் காண்பதற்காகவும் பரிசலில் பயணிப்பதற்காகவும் ஏராளமானச் சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள். புகைப்படம் எடுப்பதற்காகப் பைத்தியக்காரர்கள் போல அலையும் என்னை போன்றோரின் கவனத்தை உடனடியாகக் கவருபவர்கள், பாறையின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள். பரிசலில் வருபவர்களைப் பார்த்ததும் "சார்! ஃபைவ் ருபீஸ் ஒன்லி, ஜம்ப்" என்று சைகை காட்டுவார்கள். நீங்கள் சரி என்றால் போதும், உடனே பாறை மீதிருந்து ஆற்றில் குதிப்பார்கள். பின்னர் உங்கள் பரிசல் அருகில் நீந்தி வந்து காசை வாங்கிக் கொண்டுச் சென்று விடுவார்கள்.

ஐந்து ரூபாய் தருவதாக வாக்களித்து இச்சிறுவர்களை பாறையின் மீதிருந்து குதிக்கச் செய்து எடுத்த படங்கள் கீழே. இவை எல்லாமே பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது எடுத்தவை.

பாறை மீது குதிக்கத் தயாராக இருக்கும் சிறுவன்.

குதிக்கும் போது...

என்னுடைய Flickr பக்கத்தில் நான் இட்டிருக்கும் படம் - பிற்தயாரிப்பு செய்தது.

குதிப்பதில் ஒவ்வொருவருக்கும்...

ஒவ்வொரு ஸ்டைல்

குதித்து விட்டு நீந்தி வந்த ஒரு சிறுவன். அவனுடன் பேச்சு கொடுத்த போது எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இது போல பாறை மீது குதிப்பதை விளையாட்டு போல செய்து வருவதாகவும் சொன்னான்.

நிற்க. ஒகேனக்கல்லில் அச்சிறுவர்களைப் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பும் போது, பாறை மீதிருந்து இச்சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து குதிக்கிறார்களே, எவ்வளவு அபாயகரமானது அது? அவர்களுடைய உயிருக்கு யார் பொறுப்பு என்று மனம் யோசிக்கத் தொடங்கியது. ஒரு நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருக்கும் போது மிகச் சிறிய ஆபத்து உள்ள பணியில் ஈடுபடுவது என்றால் கூட தலைகவசம் அணிய வேண்டும், உங்கள் பேரில் PF கணக்கு இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட வரைமுறைகள். ஐந்து ரூபாய் சில்லறை காசுக்காகப் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கும் இச்சிறுவர்களுடைய உயிரின் விலை என்ன என்று எண்ணத் தொடங்கினேன். போதாக் குறைக்குச் சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் கண்ட அந்த ஆண்டன் செக்கோவ் கதையும் நினைவுக்கு வந்தது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இது குறித்து பதிவெழுதும் எண்ணமும் அப்போதே உதித்தது. சற்று நேரம் கழித்து, இவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை, பையன்கள் பாக்கெட் மணிக்காக ஜாலியாகக் குதிக்கிறார்கள், நாமும் நம் மனதுக்குப் பிடித்த வண்ணம் படங்களை எடுத்து வந்துவிட்டோம். இதற்கு மேல் இது குறித்து அதிகமாக யோசித்து கவலை பட வேண்டியதில்லை என்று நினைத்து இச்சிறுவர்களைக் குறித்தான நினைப்பைக் கிடப்பில் போட்டேன்...

...Flickrஇல் வேறொரு புகைப்படக்காரர் எடுத்த ஒகேனக்கல் பாறை மீதிருந்து குதித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் படத்தைக் காணும் வரை. அதில் ஒரு வெளிநாட்டவர் சொல்லியிருந்த கருத்து மிகவும் வருத்தமடையச் செய்தது. பாறை மேலிருந்து குதிப்பதற்கு இச்சிறுவர்கள் ஐந்து ரூபாய் வாங்குவார்கள் என அறிந்த அவர் "எல்லாவற்றிற்கும் இக்காலத்தில் காசு வாங்குகிறார்கள். Its a sick world we live in" என்று சொல்லியிருந்தார். அதைப் படித்ததும் "Sick comment of a heartless westerner" என்று தான் எனக்கு தோன்றியது. அதோடு பல எண்ணங்களையும் கிளப்பி விட்டது அந்த கமெண்ட். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு அபாயகரமானச் செயலில் யாரும் இறங்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். வெளிநாடு செல்லும் போது டாலருக்கும் யூரோவுக்கும் நாம் ரூபாய் கணக்கு போடுவது போல, இந்த ஐந்து ரூபாய்க்கு டாலர்/யூரோ கணக்கு போட்டோமானால் ஒன்-டென்த் ஆஃப் எ அமெரிக்கன் டாலர் என்றோ ஒன்-ஃபிஃப்டீன்த் ஆஃப் எ யூரோ என்று தான் வரும். ஒரு மனித உயிரின் விலை ஐந்து ரூபாய்க்குக் கூட ஈடானதில்லையா? இல்லை எனில் இந்தியர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? இதே மாதிரி பாறை மீது குதிப்பதை அமெரிக்காவிலோ, அல்லது வேறொரு ஐரோப்பிய நாட்டிலோ ஒரு சிறுவன் செய்கிறான் என்றால், வெறும் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு செய்வானா? இல்லை அந்த கமெண்ட் இட்ட அவ்வெளிநாட்டவர் எதிர்பார்ப்பது போல ஓசியில் தான் குதிப்பானா? பாறை மீதிருந்து குதிக்கும் அபாயகரமான விளையாட்டுக்குத் துணை போக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மேலே நான் சொல்லியிருப்பதைப் படித்தாலே அது புரியும். அவ்வளவு அபாயகரமானச் செயலை அச்சிறுவர்கள் செய்வதை ரசித்துத் தானே பலரும் படம் எடுக்கிறார்கள். அபாயகரமான அச்செயலுக்கு வெறும் ஐந்து ரூபாய் கொடுப்பதற்குக் கணக்கு பார்க்கும் அந்த மனப்பான்மையைத் தான் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

ஒரு மனிதன் உயிரைப் பணயம் வைத்து செய்யும் சாகசங்கள் தான் இன்னொரு மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஹூடினி, டேவிட் ப்ளெயின் போன்ற சாகசக்காரர்களின் புகழே இதற்கு சான்று. அதே போல சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் தொடங்கி இக்கால வடிவேல், விவேக் வரை காமெடியன்கள், அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்கு செய்யும் மிக எளிமையான உத்தி, அடிவாங்கி/அடிபட்டு விழுவது. ஒருவன் அடிவாங்கி விழுவதை நினைத்துச் சிரிக்கும் மனித மனது, அவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு உதவ மறுக்கிறது. நான் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு உதவி செய் என்றொருவன் கேட்பதை பிச்சை என்று வரையறுக்கிறோம், சாகசம்/வித்தை காட்டி ஒருவன் பொருள் செய்ய நினைத்தலையும் பிச்சை என்கிறோம். கோட் மனிதன் இரண்டு ரூபிள் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டிருந்தாலோ, அல்லது ஓகேனக்கல்லில் சிறுவர்கள் ஐந்து ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வந்திருந்தாலோ அதற்கு என்ன பெயர் கொடுப்போம் என நாம் அனைவரும் அறிவோம். இரண்டு ரூபிள் என்பது செக்கோவ் கதையில் வரும் எழுத்தாளருக்குப் பொழுதுபோக்குக்கு செலவழிக்கும் ஒரு சிறு தொகை, ஆனால் அதுவே அந்த கோட் மனிதருக்கு வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் விஷயம். அதே போல ஐந்து ரூபாய் என்பது என்னைப் போன்றவனுக்கு ஃபோட்டோ எடுப்பதற்குச் செலவாகும் சில்லறை காசு. ஆனால் அதுவே வேறொருவனுக்கு அன்றாடம் அடுப்பெரிய வழிசெய்யும் பொருளாக இல்லாது போனாலும், சில்லறை காசை விட அதிக முக்கியத்துவம் உடைய ஒன்றாகவே இருக்கின்றது, எனவே தான் அபாயம் பற்றி எல்லாம் ஏதும் யோசிக்காமல் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கிறான்.

கோர்வையற்ற பல எண்ணங்களையும், என் கோபத்தையும் கொட்டுவதாகவும் இப்பதிவு அமைந்துவிட்டது. சில மாதங்களாக எதையும் எழுதாத நான், இன்று இரவு இரண்டு மணியாகியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், என் மூளையின் வசம் நானில்லாமல், என் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று தான் பொருள். பதிவு நீளமாத் தான் இருக்கு, முடிஞ்சாப் படிச்சிட்டு உங்கக் கருத்துகளையும் சொல்லிட்டுப் போங்க.

30 comments:

இலவசக்கொத்தனார் said...

உண்மையைச் சொல்லணுமுன்னா நாம எல்லாம் இதை என்கரேஜ் செய்யறதுனாலதான் இந்த பசங்க இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்கறாங்க. இதை அரசே தடை செய்யணும். இல்லைன்னா நாம ஊக்குவிக்காம இருக்கணும். இதைச் சொன்னா நம்ம பதிவுலகில் முத்திரை குத்துவாங்க. ஐ டோண்ட் கேர்!

gnani said...

manathaith thotta pathivu. thodarndhu ippadippatta vishayangalai ezudhungal.anbudan gnani.

Anonymous said...

அழகான பதிவு. "அந்த சிறுவர்கள் பாக்கெட் மணிக்காக குதிக்கிறார்கள் என்றால் அவர்களை இப்படி ஊக்குவிப்பது சரியா?" இதுதான் என் மனதில் இருக்கும் கேள்வி.

இந்த மாதிரி இருக்கும் மனிதர்களை பார்க்கும்போதுதான் நமக்கு இருக்கும் சில பெரிய பிரச்சினைகள் (இந்த வருஷம் salary increment கெடைக்குமா? குசேலன் நம்ம ஊருக்கு முதல் வாரத்திலேயே வருமா?) எல்லாம் எவ்ளோ trivial ன்னு தெரியுது.

நம்மோட தேவைக்கதிகமானப் பணத்தை இல்லாதவர்களுக்குக் கொடுப்பது ஒரு கடமைன்னு நினைக்கறேன். அதே போலதான் ஊனமற்றோர் ஊனமுற்றோர்க்கு உதவறதும். இதையெல்லாம் ஒரு கடமைன்னு மறந்து அதை ஒரு பெரிய சேவைன்னு ஒதுக்கி வைக்கிறமோன்னு தோணுது. நான் சின்ன வயசில எங்க அம்மாகிட்ட கேட்டிருக்கேன், 'எம்மா இந்த மாதிரி கை, கால் இல்லாத மனுஷங்களை கடவுள் படைக்கணும்?'. அதுக்கு எங்க அம்மா சொன்னது, 'அவங்களக்கு உதவி செய்யத்தான் உன்னை மாதிரி ஒண்ணுக்குப் பத்தா நல்ல மனுஷங்களை படைச்சிருக்காரே.'.

அதனால, இவர்களைப் பார்த்து வருத்தப்படறதோட நிறுத்திக்காம நம்மால ஏதாவது ஒரு சின்ன உதவி செய்ய முடியுமான்னு அவங்ககிட்டக் கேட்டு, உதவி செய்வது நலம்.

பினாத்தல் சுரேஷ் said...

கைப்புள்ள, நோ பீலிங்ஸ்..

எனக்குத் தெரிஞ்ச அளவுல, இந்தப்பசங்க காசுக்காக ரிஸ்க் எடுக்கலை, ரிஸ்க் எடுக்கறதுன்ற தங்களோட பொழுதுபோக்குக்கு காசும் வாங்கறாங்க.. சின்ன வயசுல (ஏறத்தாழ அதே சிறுவர்களின் வயசு) ஹொகேனக்கல் போயிருந்த போது நான் நினைத்தது இதுதான் - "நம்ம ஊர் கிணறுங்கள்லே நானும்தான் 40 அடி மேலே இருந்தெல்லாம்குதிக்கறேன்.. அப்பா அம்மா கூட திட்டத்தான் செய்யறாங்களே ஒழிய நாலணா பேறுதா? இவனுங்களுக்கு காசு கொடுக்கவாச்சும் ஆள் இருக்கே!"

ஆனா வெள்ளைத்தோல்காரன் கொழுப்பை நானும் கண்டிக்கிறேன்.

கைப்புள்ள said...

வாங்க கொத்ஸ்,
உங்கள் கருத்தோடு மாறுபடுகிறேன். அரசு இச்சிறுவர்கள் காசு வாங்கிக் கொண்டு குதிப்பதற்குத் தடை செய்யலாம். ஆனால் ஓகேனக்கல் பகுதியிலேயே இவர்கள் தலை காட்டக் கூடாது என்று தடையிட முடியாது. பெனாத்தலார் சொல்லியிருப்பது போல, தங்களுடைய பொழுதுபோக்கை நாலு பேர் ரசிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும், கொஞ்சம் காசு பண்ணலாமேன்னு காசு கேக்கறாங்க அவ்வளவு தான். காசு கெடைக்கவில்லை என்றாலும் குதிக்கத் தான் செய்வார்கள் என்பது என் எண்ணம். ஒரு நையா பைசா கூட வாங்காமல் இதை விட ரிஸ்கான டைவ்கள் அடிக்கும் சிறுவர்களின் புகைப்படங்கள் கூடத் தேடினால் கிடைக்கும். ஓகேனக்கல் புகழ்பெற்ற சுற்றுலா தலம் என்பதால் எல்லோர் கண்ணிலும் படுகிறது. அவ்வளவு தான்.

கைப்புள்ள said...

//manathaith thotta pathivu. thodarndhu ippadippatta vishayangalai ezudhungal.anbudan gnani//

வாங்க சார்,
தங்கள் முதல் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி.

கைப்புள்ள said...

//அழகான பதிவு. "அந்த சிறுவர்கள் பாக்கெட் மணிக்காக குதிக்கிறார்கள் என்றால் அவர்களை இப்படி ஊக்குவிப்பது சரியா?" இதுதான் என் மனதில் இருக்கும் கேள்வி//

சரியா தவறா என்பதைப் பற்றிய கருத்து ஒவ்வொருவருக்கும் வேறு படும் என்பது என் தாழ்மையான கருத்து. தவறு என்று நினைப்பவர், அவர்களை ஊக்குவிக்காமல் இருப்பார், அடடா நமக்கு நல்லதொரு புகைப்படம் கிடைத்ததே என வியக்கும் இன்னொருவர் சிறுவன் எதுவும் கேட்காவிட்டால் கூட பணம் தரலாம். Individual choice தான்.

//நம்மோட தேவைக்கதிகமானப் பணத்தை இல்லாதவர்களுக்குக் கொடுப்பது ஒரு கடமைன்னு நினைக்கறேன். அதே போலதான் ஊனமற்றோர் ஊனமுற்றோர்க்கு உதவறதும். இதையெல்லாம் ஒரு கடமைன்னு மறந்து அதை ஒரு பெரிய சேவைன்னு ஒதுக்கி வைக்கிறமோன்னு தோணுது. நான் சின்ன வயசில எங்க அம்மாகிட்ட கேட்டிருக்கேன், 'எம்மா இந்த மாதிரி கை, கால் இல்லாத மனுஷங்களை கடவுள் படைக்கணும்?'. அதுக்கு எங்க அம்மா சொன்னது, 'அவங்களக்கு உதவி செய்யத்தான் உன்னை மாதிரி ஒண்ணுக்குப் பத்தா நல்ல மனுஷங்களை படைச்சிருக்காரே.

அதனால, இவர்களைப் பார்த்து வருத்தப்படறதோட நிறுத்திக்காம நம்மால ஏதாவது ஒரு சின்ன உதவி செய்ய முடியுமான்னு அவங்ககிட்டக் கேட்டு, உதவி செய்வது நலம்.//

உண்மை தான்.
"ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று"ன்னு நம்ம பழந்தமிழ் பாடல்கள்ல கூட சொல்லிருக்காங்களே? பிச்சையிடறது சரின்னு சொல்ல வரவில்லை, உண்மையிலேயே உதவி தேவை படும் வறியவர்களுக்கு உதவி செய்வது மனிதத்தனம் என்றே நம்புகிறேன். மேலே சொல்லப்பட்ட பாடல் வரிகளையும் இப்பொருளிலேயே கொள்ள வேண்டும். உண்மையிலேயே உதவி தேவை படுபவர்கள் யார் என்று கண்டுகொள்வதில் பல சமயம் தவறு இழைத்து விடுகிறோம். Again, this judgment varies from person to person.

கைப்புள்ள said...

//கைப்புள்ள, நோ பீலிங்ஸ்..

எனக்குத் தெரிஞ்ச அளவுல, இந்தப்பசங்க காசுக்காக ரிஸ்க் எடுக்கலை, ரிஸ்க் எடுக்கறதுன்ற தங்களோட பொழுதுபோக்குக்கு காசும் வாங்கறாங்க.. சின்ன வயசுல (ஏறத்தாழ அதே சிறுவர்களின் வயசு) ஹொகேனக்கல் போயிருந்த போது நான் நினைத்தது இதுதான் - "நம்ம ஊர் கிணறுங்கள்லே நானும்தான் 40 அடி மேலே இருந்தெல்லாம்குதிக்கறேன்.. அப்பா அம்மா கூட திட்டத்தான் செய்யறாங்களே ஒழிய நாலணா பேறுதா? இவனுங்களுக்கு காசு கொடுக்கவாச்சும் ஆள் இருக்கே!"//

மிக மிகச் சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க. நான் நினைத்ததும் இதுவே தான். பொழுதுபோக்குக்காக எடுக்கற ரிஸ்கில் காசு கிடைக்கிறது என்பதால் இச்சிறுவர்கள் காசு வாங்கிக் கொண்டு குதிக்கிறார்கள். நாளைக்கே யாரும் காசு கொடுப்பதில்லை என முடிவெடுத்தாலோ அல்லது அரசாங்கமே காசு வாங்குவதை தடை செய்தாலோ கூட, இவர்கள் பாறை மீதிருந்து குதிப்பதை நிறுத்த மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

//ஆனா வெள்ளைத்தோல்காரன் கொழுப்பை நானும் கண்டிக்கிறேன்.//
நன்றி சார். உண்மையிலேயே அது கண்டிக்கத்தக்க மனப்பான்மையே.

Expatguru said...

இந்த பதிவை படிக்கும் போதே மனதை மிகவும் நெருடும்போது நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. இதற்கெல்லாம் காரணம் இளமையில் வறுமையும் படிப்பின்மையும் தான் என்பது எனது கருத்து. தமிழ்நாட்டில் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன். கேரளாவை எடுத்து கொள்ளுங்கள், சிறுவர்கள் எல்லோரும் பள்ளிக்கு சென்றிருப்பார்கள். எல்லோரும் தத்தம் வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள்.

வெட்டியாக இருக்கும் இது போன்ற சிறுவர்கள் தான் பெரியவர்கள் ஆனதும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பது, அவர்களுடைய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, கொடி கட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.

சிந்திக்க வைத்த நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி.

Geetha Sambasivam said...

//Its a sick world we live in" என்று சொல்லியிருந்தார். அதைப் படித்ததும் "Sick comment of a heartless westerner" என்று தான் எனக்கு தோன்றியது. அதோடு பல எண்ணங்களையும் கிளப்பி விட்டது அந்த கமெண்ட். //

சிந்திக்கவும், வருந்தவும் வைத்த ஒரு பதிவு, குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம் என்று கூறும் அரசு உண்மையிலேயே ஒழித்துவிட்டதா?

Geetha Sambasivam said...

மனதில் உறுத்தவும் செய்கின்றது அந்த கமெண்டின் வரிகள், வடுவாகப் பதிந்துவிடுமோ???????

Iyappan Krishnan said...

கிராமத்துப் பக்கம் வந்துப் பாக்கச் சொல்லுங்க அந்த வடக்கத்தி நாட்டான. கிணறு, அதுக்கு மேல கட்டி வச்சிருக்கிற கட்டிடம்னு ஏறி அதுல இருந்து குதிப்பாய்ங்க. அதெல்லாம் வெறும் விளையாட்டு மட்டுமே.

அவ்ளோ பேசுன ஆளை குதிச்சுக் காட்ட சொல்லுங்க. நாம $1000 தரேன்னாலும் ஓடிடுவானுங்க.

ambi said...

ரெம்ப நாள் கழிச்சு ஒரு டச்சிங்க் பதிவு உங்க கிட்ட இருந்து அதுவும் நைட் ரெண்டு மணிக்கா..? :(

Syam said...

இதுல பெருசா ரிஸ்க் இருக்கறமாதிரி எனக்கு தெரியல தல நான் போயிருந்த பொது அந்த பசங்களோட சேர்ந்து நானும் பல தடவை மேல ஏறி குதிச்சேன்... ஜாலியான அனுபவம்...

Syam said...

அந்த கத மனச ரொம்ப டச் பண்ணிடுச்சு...

Sathiya said...

//"The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல விதமான எண்ணங்களையும், இரு கனத்த இதயங்களையும் அம்மாலை வேளையில் விட்டுச் சென்றது தொலைக்காட்சியில் கண்ட அக்கதை.//
இப்போதான் இந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய இந்த தொடரை பற்றி கேள்வி படுகிறேன். அப்படியே "மால்குடி டேஸ்" மாதிரி இருக்கு. ரொம்ப டச்சிங்!

//"சார்! ஃபைவ் ருபீஸ் ஒன்லி, ஜம்ப்" என்று சைகை காட்டுவார்கள். நீங்கள் சரி என்றால் போதும், உடனே பாறை மீதிருந்து ஆற்றில் குதிப்பார்கள்.//
//எனக்குத் தெரிஞ்ச அளவுல, இந்தப்பசங்க காசுக்காக ரிஸ்க் எடுக்கலை, ரிஸ்க் எடுக்கறதுன்ற தங்களோட பொழுதுபோக்குக்கு காசும் வாங்கறாங்க//
மிக சரி! நானும் இந்த மாதிரி எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குதித்திருக்கிறேன் பள்ளிகூட பருவத்தில். கிட்டத்தட்ட இதே அளவு உயரம் தான். எங்க ஊர்ல மலைக்கு நடுவே வெட்டு பள்ளம்னு சொல்லுவாங்க, அங்க தான் இந்த மாதிரி குடிச்சி விளையாடுவோம். இதை எங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே நாங்க செய்வோம். அது எவ்வளோ ரிஸ்க் என்று எங்களுக்கு தெரியும், இருப்பினும் இளம் கண்று பயம் அறியாதே.

கைப்புள்ள said...

//இந்த பதிவை படிக்கும் போதே மனதை மிகவும் நெருடும்போது நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருக்கும் என்பது புரிகிறது. //
வாங்க சார்,
உண்மையை உள்ளபடி சொல்லனும்னா, பாறை மீதிருந்து குதிச்சுட்டு இருக்கற பசங்களை நேரடியாப் பாக்கும் போது நெருடல் எல்லாம் ஒன்னும் ஏற்படலை. என்னோட கவனம் எல்லாம் நல்லதா சில படங்கள் எடுக்கனும்ங்கிறல தான் இருந்தது. எடுத்து முடிச்சிட்டு வரப்போ தான் அவங்களைப் பத்தி யோசிச்சேன். ஆனால் அந்த பசங்களைப் பாக்கும் போது அவங்க இதை ரொம்பவும் ரசிச்சு செஞ்ச மாதிரி தான் இருந்தது.

//இதற்கெல்லாம் காரணம் இளமையில் வறுமையும் படிப்பின்மையும் தான் என்பது எனது கருத்து. தமிழ்நாட்டில் தான் இந்த மாதிரி எல்லாம் நடக்கும் என்று நினைக்கிறேன். கேரளாவை எடுத்து கொள்ளுங்கள், சிறுவர்கள் எல்லோரும் பள்ளிக்கு சென்றிருப்பார்கள். எல்லோரும் தத்தம் வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள்.//
நான் கேள்விப்பட்ட வரைக்கும் இச்சிறுவர்கள் படித்துக் கொண்டு இருப்பதாகவும், விடுமுறை நாட்களில் இவ்வாறு செய்வதாகவும் கேள்விப்பட்டேன்.

//வெட்டியாக இருக்கும் இது போன்ற சிறுவர்கள் தான் பெரியவர்கள் ஆனதும் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் வைப்பது, அவர்களுடைய கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வது, கொடி கட்டுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்//
என்னை கேட்டால் இவர்களிடத்தில் இருப்பது சிறப்பானதொரு திறமை. பயமறியாத குணமும், சிறப்பான நீச்சல் ஆற்றலும் உள்ள இச்சிறுவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஆகலாம். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தால், இவர்களின் திறமை வீணடிக்கப் படுகிறது. இன்று காலை யோசித்துப் பார்த்தேன். திறமை என்பது என்ன? பெரும்பாலானவர்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்யும் சக்தி நம்மிடத்தில் இருக்கிறதென்றால் அது திறமை தானே? ஐம்பது-அறுபது அடி உயரத்தில் இருந்து ஓடும் ஆற்றில் நம்மில் எத்தனை பேரால் குதிக்க முடியும்? விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்று ஒரு நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் அர்ஜுன் என்ற ஆறு வயது சிறுவன் ஒருவன், ஜோக்குகள் சொல்வதும், மிமிக்ரி செய்வதுமாகக் கலக்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவனது தந்தையின் வழிகாட்டுதலின் பேரில் டிவியில் தோன்றுவதும், புகழ்பெறுவதும் சுலபமாக வரப்பெற்றிருக்கிறது. அவனுடைய திறமையை அனைவரும் பாராட்டுகின்றோம். அவனை இளமையை வீணடிப்பதாகவும், குழந்தை தொழிலாளராகவும் யாரும் பார்ப்பதில்லையே? திறமையைக் காட்டுகிறான் என்று தானே சொல்கிறோம்.

இச்சிறுவர்களும், குதிப்பதினால் கிடைக்கும் காசைக் கொண்டு பீடி சிகரெட் பிடிப்பது, கட் அடித்து விட்டு சினிமாவுக்குச் செல்வது என்று இருந்தால் அது உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது தான். ஆனால் தங்கள் திறமையைக் காட்டி சிறிது பணம் ஈட்டி, அதை உபயோகமாகச் செலவழித்தால் தவறொன்றும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய வருத்தம் "its a sick world we live in"
என்று சொன்ன அந்த புகைப்படக்காரர் மீது தான். ஐந்து ரூபாய் கொடுத்து எடுத்த படத்தை Flickrஇல் போடுவது தவறாகத் தெரியவில்லையாம். அத்தளத்தில் இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் போட்டு பலரிடமிருந்தும் பாராட்டு பெறுவதும் தவறாகத் தெரியவில்லையாம். உங்கள் திறமையைப் பயன்படுத்தி நீங்கள் எடுத்த புகைப்படத்துக்கு உங்களுக்குப் பிரதிபலனாக எதோ ஒன்று கிடைக்கிறது தானே. தன் திறமையைக் காட்டுவதற்காக ஐந்து ரூபாய் அந்த பையன் கேட்டால் என்ன தவறு? இப்படத்தை சர்வேசன் சொல்வது போல ஒரு stock photo libraryஇல் விற்றால் 50 டாலர் கிடைக்கும். அதற்குப் பின்னால் அந்தப் பையனுடைய உழைப்பும் இருக்கிறதல்லவா? அவனுக்குக் கிடைத்தது என்ன?

//சிந்திக்க வைத்த நல்ல பதிவை தந்தமைக்கு நன்றி//
வருகைக்கும், மேலும் சிந்திக்கவைத்த தங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

Paavai said...

if there is any way to get to the westerner ( i dont understand how flickster works) please share your thoughts with him. Adventure is a way of life at that age, ilam kandru bayam ariyadhunu solramadiri.. at the same time, should we encourage such a high risk adventure is debatable.. we are providing a double reinforcement by rewarding their risk..

கைப்புள்ள said...

//சிந்திக்கவும், வருந்தவும் வைத்த ஒரு பதிவு, குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம் என்று கூறும் அரசு உண்மையிலேயே ஒழித்துவிட்டதா?//

நன்றி மேடம். ஆனால் எக்ஸ்பாட்குருவுக்கு அளித்த மறுமொழியில் சொல்லியிருப்பதைப் போல நான் குழந்தை தொழிலாளர்களைப் பற்றிப் பேசவில்லை. என்னுடைய் ஆதங்கத்தைக் கொட்டியிருக்கிறேன். அவ்வளவே.

கைப்புள்ள said...

//அவ்ளோ பேசுன ஆளை குதிச்சுக் காட்ட சொல்லுங்க. நாம $1000 தரேன்னாலும் ஓடிடுவானுங்க.//

வாங்க அண்ணாச்சி,
சரியாச் சொன்னீங்க. வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி.

கைப்புள்ள said...

//ரெம்ப நாள் கழிச்சு ஒரு டச்சிங்க் பதிவு உங்க கிட்ட இருந்து அதுவும் நைட் ரெண்டு மணிக்கா..? :(//

வாங்க அம்பி,
ரொம்ப நன்றி. உண்மையிலேயே ரெண்டு மணிக்கு எழுதுனது தான். வேணா முதல் கமெண்ட் போட்ட கொத்தனாரைக் கேட்டுப் பாருங்க.
:)

கைப்புள்ள said...

//இதுல பெருசா ரிஸ்க் இருக்கறமாதிரி எனக்கு தெரியல தல நான் போயிருந்த பொது அந்த பசங்களோட சேர்ந்து நானும் பல தடவை மேல ஏறி குதிச்சேன்... ஜாலியான அனுபவம்...//

ரிஸ்க் எடுக்கறது தான் நமக்கு ரஸ்க் சாப்புடற மாதிரியாச்சே. நான் சொல்றது ரஸ்க் சாப்பிடத் தெரியாத பெரும்பாலான மக்களை
:)

கைப்புள்ள said...

//அந்த கத மனச ரொம்ப டச் பண்ணிடுச்சு...//

எனக்கும் தான் 12பி

கைப்புள்ள said...

//இப்போதான் இந்த தூர்தர்ஷனில் ஒளிபரப்பிய இந்த தொடரை பற்றி கேள்வி படுகிறேன். அப்படியே "மால்குடி டேஸ்" மாதிரி இருக்கு. ரொம்ப டச்சிங்!//

வாங்க சத்தியா,
மால்குடி டேஸ் ஒளிபரப்பான கிட்டத்தட்ட அதே சமயத்துல தான் இத்தொடரும் வந்துச்சு. இதப் பாருங்க.
http://en.wikipedia.org/wiki/List_of_programs_broadcast_by_DD_National

//மிக சரி! நானும் இந்த மாதிரி எல்லாம் நண்பர்களுடன் சேர்ந்து குதித்திருக்கிறேன் பள்ளிகூட பருவத்தில். கிட்டத்தட்ட இதே அளவு உயரம் தான். எங்க ஊர்ல மலைக்கு நடுவே வெட்டு பள்ளம்னு சொல்லுவாங்க, அங்க தான் இந்த மாதிரி குடிச்சி விளையாடுவோம். இதை எங்கள் பொழுது போக்கிற்காக மட்டுமே நாங்க செய்வோம். அது எவ்வளோ ரிஸ்க் என்று எங்களுக்கு தெரியும், இருப்பினும் இளம் கண்று பயம் அறியாதே//

தமிழ்நாட்டுல் நெறைய இடத்துல இந்த மாதிரி வெளையாட்டு இருக்கு போல. இப்பவும் நீங்க இளம் கன்று தானா? அதாவது இப்பவும் இந்த மாதிரி பயமில்லாம குதிப்பீங்களான்னு கேக்கறேன் :)

முகவை மைந்தன் said...

பொழுதுபோக்குக்காக குதிப்பவனுக்கு காசு கொடுத்து பின் காசுக்காக அவன் குதிப்பதாகப் படுகிறது.

வெள்ளைக்காரரை குறை சொல்ல முடியாது. வேணுமானால் ஒரு வரியில் 'அட, பிச்சைக்காரப் பயமவனே'ன்னு தட்டிக் கொடுக்கலாம்.

கப்பி | Kappi said...

நல்ல பதிவு தல!

செகோவ் கதையை ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருக்கீங்களோ??

அந்த வெள்ளக்கார பேரிக்கா மண்டையன் சொன்னதுக்கு ஃபீலாவறத விடுங்க..காலங்காலமா இப்படித்தான் அறிவத்து திரியறானுங்க!

manikandan said...

அவருடைய அனைத்து சிறுகதை தொகுப்பையும் இணையத்தளத்தில் படிக்க ஆசைப்பட்டால்

http://www.ibiblio.org/eldritch/ac/jr/index.htm

Sathiya said...

//இப்பவும் நீங்க இளம் கன்று தானா? அதாவது இப்பவும் இந்த மாதிரி பயமில்லாம குதிப்பீங்களான்னு கேக்கறேன் :)//
நான் ரெடி தாங்க! எனக்கு இந்த வீர சாகசம் எல்லாம் பிடிக்கும், ஆனா தங்கமணி விட மாட்டறாங்களே;) ஒரு முறை பஞ்சீ ஜம்பிங் பண்ண எவ்வளோ கெஞ்சி அனுமதி கேட்டும் மறுத்துட்டாங்க:(

manikandan said...

பசங்கள பாத்த உடன உங்களுக்கு குதிக்க தோனிச்சா இல்லையா ?

சந்தனமுல்லை said...

செகோவ்-வின் கதைகளே நமது கண்முன் நடக்கும் நிகழ்வுகளை வேறு பார்வையில் கொடுப்பதுதான்! ஒரு போலீஸ்காரரின் நாய் பற்றிய கதை..அது ஒன்றே போதும், அவ்ரது படைப்புகளைப் பற்றிச் சொல்ல!
அந்த ஓகேனக்கல் சிறுவர்கள் பற்றி உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்! நல்ல வழிகாட்டுதல் இருந்தால் திறமையான விளையாட்டு வீரர்கள் நமக்குக் கிடைப்பார்கள்!