Monday, June 09, 2008

ஜன்னல் கதைகள்

ஆங்கிலத்துல "Great Leveller Great leveller"னு ஒரு பதம்(ஒன்னு தான்) இருக்கு. ஒரு நிகழ்வு அல்லது ஒரு விஷயம் நமக்குள்ள ஏற்படுத்தியிருக்கற தாக்கத்தையோ அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகளையோ குறைத்து சமமாக்கும் வல்லமை கொண்ட ஒரு விஷயத்தையோ பொருளையோ ஆங்கிலத்துல "Great Leveller"னு சொல்றாங்க. Cricket is a great leveller, Indian Railways is a great leveller, Death the great leveller இப்படின்னு இடத்திற்கேற்றாற் போல இந்த "great leveller" பதம் பல இடங்களில் உபயோகிக்கப் பெறுகிறது. எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை "Time is a great leveller" அப்படீங்கறதுல கண்டிப்பா இருவேறு கருத்துகள் கெடையாது. "காலம் என்பது ஒரு மாபெரும் சமனி" அப்படீங்கறது உண்மை இல்லைன்னா ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடி அந்த சமயத்துல என் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை மையமா வச்சி எழுதின "531 பங்காரப்பேட் பாசெஞ்சர்" என்கிற பதிவுக்குப் "பயணம் தொடரும்"னு பந்தாவா இடைவெளி விட்டுட்டு, மூனு மாசமா கெடப்புல போட்டதை கண்டிப்பா நியாயப்படுத்த முடியாது. இதை வெறும் பில்டப்புக்காகச் சொல்லலை. சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பாத்தா இதை விட மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திய பல விஷயங்களைக் கூட "காலம்" என்ற இயந்திரம் நிரவி, சமன்படுத்தி "A thing of the past"ஆக்கியிருக்கிறது. உதாரணத்துக்குக் கீழே உள்ள பதிவுகள்ல சொல்லிருக்கற நிகழ்வுகளைச் சொல்லலாம்.
1. மீள்பதிவுங்ணா
2. உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு

531 பங்காரப்பேட் பாசெஞ்சருக்கு இடைவேளை விட்டு மூனு மாசம் ஆச்சு. மூனு மாசமா அதை பத்தி எதுவும் எழுதாம இருக்கறதுக்குப் பல காரணங்கள். அதுல முக்கியமானது எழுதனும்னு நெனச்சி உக்காரும் போது ஒன்னுமே தோணாம மண்டைல மசாலா காலியான மாதிரி ஒரு உணர்வு. மனசுல நெனக்கறதை எழுத முடியாத மாதிரி ஒரு 'எழுத்து டிஸ்லெக்சியா:)" பங்காரப்பேட் பேசஞ்சரில் பயணம் செய்த போது கேட்ட தாவணி போட்ட தீபாவளி பாட்டு, புல்லா கி ஜானாங்கிற பஞ்சாபி மொழியில் இருக்கும் சூஃபி பாட்டு , வெளியில வேடிக்கை பாக்கும் போது தெரிஞ்ச காட்சிகள், வைட்ஃபீல்டுல பக்கத்து ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த "பேலஸ் ஆன் வீல்ஸ்" ரயில், இதைப் பற்றியெல்லாம் அடுத்த பதிவுல எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஆனா மூனு மாசம் கேப் விட்டதுனால இப்போ அதையெல்லாம் சொன்னா சுவாரசியமா இருக்காதுங்கிறதால லூசுல விட்டுடறேன். இரயில் பெட்டியின் ஜன்னலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்ட, கேட்ட சில சம்பவங்களை/கதைகளைப் பற்றியதே இந்த பதிவு.

இரயில் பயணத்தின் போது காணக் கிடைக்கும் காட்சிகள் வேறெங்கேயும் காணக் கிடைக்காதது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இரயில்வண்டி பயணித்துக் கொண்டிருக்கையில், இரயில் பாதையினை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி மண்பாதை எங்குச் சென்று சேர்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசை பலமுறை வந்திருக்கின்றது. அதே போல சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் மங்கலாய் தெரியும் வயல்களை ஒட்டிய ஒற்றை குடிசையில் வசிப்பவர்களைப் பற்றியும், யாருமே இல்லாதது போல இருக்கும் அவ்விடத்தில் அவர்கள் என்ன செய்துக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மேலிடும். ஆனால் சில நிமிடங்களிலேயே, என்னுடைய "இப்பயணத்தில்" குடிசையில் வசிக்கும் அம்மனிதர்களைப் பற்றி நான் ஒருக்கணம் நினைப்பது போலவே, அவர்களுடைய "அப்பயணத்தில்" மங்கும் மாலை வேளையில் தனியாகச் செல்லும் இரயில்வண்டியில் பயணிப்பவர்களைப் பற்றி அவர்கள் ஒருக்கணம் நினைத்துப் பார்க்கவும் வாய்ப்புண்டு என்று தோன்றும். ஆனால் வாழ்க்கை என்னும் துரிதமான நம்முடைய இப்பயணத்தில் அடுத்தவரின் "பயணத்தைப்" பற்றி எண்ணிப் பார்க்கவெல்லாம் நேரமேது என்பது போன்றான நெஞ்சை நக்கும் சிந்தனைகளும் வரும். கூடவே இந்த மாதிரியான கவிதைகளின் நினைவும்.

"Stopping by Woods on a Snowy Evening" by Robert Frost

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sounds the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

'காதல் தேசம்'னு ஒரு படம். அப்பாஸ், வினீத், தபு நடிச்சதுன்னு நெனைக்கிறேன். அதுல கிளைமேக்ஸ் காட்சியில் தபுவின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக் கொள்ளும். எதிர் திசையில் இருந்து ரயில் வரும். உடனே வினீத் ஓடிச் சென்று தண்டவாளத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு 'கொம்பை' அசைப்பார். உடனே ரயில் தடம் மாறி அடுத்த இருப்புப் பாதைக்குச் சென்று விடும். ஹீரோயின் தபு காப்பாற்றப்படுவார். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பயணம் செய்யக் கூடிய ஒரு ரயிலின் போக்கையே நிர்ணயிக்கக் கூடிய அந்த இரும்பு விசைக்கு(lever), தமிழ்த் திரைப்படங்களில் ஒரு 'கொம்புக்கு'க் கொடுக்கப்படும் மரியாதை தான் கொடுக்கப் படுகிறது :) ரயில்பெட்டியின் சாளரம் வழியாக வேடிக்கை பார்த்தால் முதலில் தெரிவது இருப்புப் பாதை. பெரும்பாலும், ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் இருந்து நாம் பார்த்தால் இரண்டு இருப்புப் பாதைகள் தெரியும். ரயில்வண்டி, ரயில் நிலையங்களை அடையும் போது கவனித்தால் இரண்டாக இருந்த இருப்புப் பாதை, நாலாக, எட்டாகப் பிரியும். அதோடு ரயில் ஒரு பாதையில் இருந்து இன்னொரு பாதைக்குப் ப்ளாட்ஃபார்ம் நோக்கி மாறுவதை கவனிக்கலாம்.

ஒரு பாதையில் இருந்து இன்னொரு பாதைக்கு ரயிலின் போக்கை மாற்றுவதற்கு "பாயிண்ட்" பயன்படுத்தப் படுகிறது. இந்தப் பாயிண்ட் எப்படி இயக்கப் படுகிறது என்று கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தாம்பரம் ரெயில்வே யார்டில்(கல்விச் சுற்றுலா..ஹி...ஹி...) காணும் வாய்ப்பு கிடைத்தது. இதை "பாயிண்ட் அடிக்கிறது"ன்னு சொல்றாங்க. மேலே சொன்ன கொம்பை இயக்குவதன் மூலம் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் அகலத்தைக் கூட்டலாம் குறைக்கலாம். சினிமால எல்லாம் காட்டறாங்களே...அந்த மாதிரி எல்லாம் யார் வேணும்னாலும் அந்தக் கொம்பை அசைத்து ரயிலின் போக்கை மாற்ற முடியுமா என்று எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த பணியாளரிடம் கேட்டோம். "நீங்க வேணா பாயிண்ட் அடிச்சிப் பாருங்களேன்"னு சொன்னார். பாயிண்ட் அடிக்கிறதை விடுங்க, உண்மையிலே அந்த விசையை எங்களால் அசைக்கக் கூட முடியவில்லை. ரயிலின் போக்கை மாற்றி ஹீரோவையோ ஹீரோயினையோ காப்பாற்றி விடுவது மாதிரியான காட்சிகளைப் பாக்கும் போதெல்லாம் தோணுவது "ஒரு வேளை பாயிண்ட் அடிக்க டிரெயினிங் எடுத்துருப்பாங்களோ?":)

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? ரயில் ஸ்நேகம் என்பது தற்காலிகமானது, நிலையில்லாததுன்னு எல்லாம் கேட்டிருந்தாலும் படிச்சிருந்தாலும், ரயிலில் சந்திக்கிற சிலரிடம் சில பெர்சனலான விஷயங்களைக் கூட பகிர்ந்துக் கொள்வோம். 'காதல்' திரைப்படம் கூட, இயக்குநர் பாலாஜி சக்திவேலுடன் ரயிலில் பயணித்த சகப்பயணி ஒருவர் பகிர்ந்துக் கொண்டச் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் உருவானது என்று படித்திருப்பீர்கள். இதுபோன்ற பகிர்வுகள் ஒரு புறமிருக்க, நம்மைப் பற்றிய சிறந்தவற்றை மட்டுமே சக பயணிகளுடன் பகிர்ந்துக் கொள்வதை உணர்ந்திருக்கிறீர்களா? சாதாரண நாள்ல பேப்ப்ரைப் பிரிச்சா விளையாட்டுச் செய்திகளை மட்டுமே படிக்கிற ஆள் கூட ரயில்ல போகும் போது அறிவியல், அரசியல்னு பூந்து வெளையாடுவாப்ல. ரயில்ல பயணம் செய்யற அந்த சில மணிநேரங்கள்ல, எதிர்ல இருக்கறவர் நம்மளைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் மட்டுமே எடுத்துட்டு போக வேண்டும் என்ற எண்ணமா இருக்குமோ? எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துல படிச்ச கதை ஒன்னு நியாபகம் வருது. ரஸ்கின் பாண்ட்(Ruskin Bond) அவர்கள் எழுதியது. "The Eyes have it"ங்கிறது கதையோட பேரு. நம்ம கதையின் நாயகன் ரயிலில் மசூரிக்குப் போயிட்டு இருப்பாரு. அவருக்குச் சுத்தமா கண்ணு தெரியாது. ரயில் ஒரு ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு ஏறும். மனுஷன் பொண்ணோட கடலை போட்டுக்கிட்டே போவாரு. ஆனா தான் கண் பார்வையில்லாதவர் அப்படீங்கறதை காண்பிச்சுக்கக் கூடாது அப்படீங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாரு. தான் நினைச்ச மாதிரியே, தனக்கு பார்வையில்லைங்கிறதை அந்தப் பொண்ணுக்குத் தெரியாத மாதிரியே சமாளிச்சுடுவாரு. அந்தப் பொண்ணு இடையில வர்ற ஸ்டேஷன்ல இறங்கிப் போயிடும். அதுக்கப்புறம் இன்னொரு ஆளு ஏறுவாரு. நம்ம ஹீரோவுக்குத் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துரும். இறங்கிப் போன பொண்ணு தன்னோட கூந்தலைப் பிரித்து விட்டிருந்தாளா இல்லை கொண்டையாக இட்டிருந்தாளா என்று? இதை புதுசா வந்த ஆளு கிட்ட கேப்பாரு நம்ம ஹீரோ. அதுக்கு அவரு "கூந்தலை எல்லாம் நான் கவனிக்கலைங்க. நான் கவனிச்சது அந்தப் பெண்ணோட கண்கள். அவ்வளவு அழகான கண்கள். ஆனால் அவற்றுக்குச் சுத்தமாகப் பார்வை இல்லை. நீங்கள் கவனித்தீர்களா?". ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்ளும் பார்வை இல்லாத இருவர், தங்கள் குறைபாட்டினைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடத்தும் உரையாடலை வெகு சுவாரசியமாக விவரித்திருப்பார் பாண்ட்.

ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், முன்பதிவு பட்டியலைச் சரி பார்ப்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு வழக்கம். ஆனால் அந்த தொன்று தொட்ட பழக்கத்தைக் கடைபிடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். வயசானவங்களா இருந்தா அப்பர் பெர்த்தை யாரு தலையில கட்டிட்டு லோயர் பெர்த் வாங்கலாம்னு திட்டமிடுறதுக்கா இருக்கும். வயசு பசங்களா இருந்தா கடலை போடறதுக்கு எதாச்சும் வழி இருக்கான்னு செக் பண்றதுக்கா இருக்கும். ரெண்டாவதாச் சொன்ன விஷயத்துக்கும் நமக்கும் எப்பவும் எட்டாம் பொருத்தமா இருந்தாலும், படிக்கும் போது புது தில்லியிலேருந்து சென்னைக்கு லீவுக்கு வரும் போது ஒரு வாட்டி எதிர்பாராம இந்த வாய்ப்பு கெடைச்சுது (ஆண்டவா...தங்கமணி கண்ணுல மட்டும் இது படக் கூடாது). தில்லிக்கு பக்கத்துல இருக்கற ஃபரீதாபாத்ல எதோ ஒரு பேரு தெரியாத மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு மேற்படிப்பு(எம்.டி.யா, எம்.எஸ்சான்னு தெரியலை) கவுன்சிலிங்குக்காக தன் அப்பாவோட சென்னைக்குப் போய்க்கிட்டு இருந்தது அந்தப் பொண்ணு. எனக்கு அப்போ தெரிஞ்ச இந்தியெல்லாம் வச்சி, என்னென்னமோ பேசிக்கிட்டு இருந்தேன், பயணக் களைப்பு தெரியக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல மட்டும் :). ஆனா அந்தப் பொண்ணு கிட்ட பேசுனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது வடமாநிலங்கள்ல இருக்கறவங்க "மதறாஸை"ப் பத்தி வச்சிருக்கற தப்பான எண்ணங்கள் என்னன்னு. இதுல என்ன கொடுமைன்னா அம்புட்டு பெரிய படிப்பு படிச்ச புள்ளைக்கு, தான் கவுன்சிலிங்குக்காகப் போயிக்கிட்டிருக்கற சென்னையில் என்ன மொழி பேசப்படுதுன்னு கூட தெரிஞ்சிருக்கலை. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில்(எம்.எம்.சி) இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்திருந்த போதிலும், அது மருத்துவத் துறையில் புகழ்பெற்ற கல்லூரி என்று அறிந்திருந்த போதிலும் அந்தப் பெண்ணிற்குச் சென்னையில் தங்கிப் படிக்க விருப்பம் இருக்கவில்லை. அதற்காக அவள் சொன்ன காரணங்கள் மிகவும் குழந்தைத் தனமாக இருந்தது. முதல்ல சென்னையில் யாரும் ஹிந்தி பேச மாட்டாங்களாம், ஆட்டோ டிரைவர்கள் யாருக்கும் இங்கிலீசு தெரியாதாம், அப்புறம் சாப்பிடுவதற்கு சப்பாத்தி கெடைக்காதாம். அதனால குஜராத் ஜாம்நகர் மெடிக்கல் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று சொன்னாள் அந்தப் பெண். "தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்"னு பாடின பாவேந்தர் பாரதிதாசன் வழியில் வந்தவன் அல்லவா நான். "என் தாய் மண்ணை இகழ்ந்தவளை அவள் ஃபிகர் என்றாலும் விடேன்"என்று வீறுகொண்டேன். "ஏம்மா தில்லியில் மட்டும் GRE பரிட்சை எழுதிட்டா எல்லாரும் ஆட்டோ ஓட்டறாங்க, நாங்களும் தான் தில்லியில இருக்கும் போது சோத்தைக் கண்ணுலயே பாக்காம தெனம் ரொட்டியே திங்குறோம், டாக்டருக்குப் படிச்சி முடிச்சிட்டு மேற்படிப்பு எல்லாம் படிக்கப் போறீங்க இப்பவும் சப்பாத்தி, மொழி, ஆட்டோகாரன்னு பேசிக்கிட்டு கெடைச்ச நல்ல வாய்ப்பை விட்டுறாதே. எம்.எம்.சி.யில் வாய்ப்பு கெடைச்சும் படிக்கலைன்னா நஷ்டம் உனக்கு தான்"னு என்னால ஆனவற்றை எடுத்துச் சொன்னேன். ஆனாலும் அந்த பொண்ணு புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலை. வாய்ப்பு கிடைச்சாலும் கிடைக்காட்டினாலும் கடலைக்கும் நமக்கும் எப்பவும் தூரம்னு மட்டும் நல்லா புரிஞ்சது எனக்கு.

சிறுவயதில் ரயில் பயணம் அனுபவம் என்றால் அது பள்ளி விடுமுறை நாட்களில், சென்னையிலிருந்து பெங்களூருக்குத் தாத்தாவைப் பார்த்து வருவதற்கு, பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பயணம் செய்த அனுபவங்கள் மட்டுமே. காலை 7.15க்குச் சென்னையிலிருந்து தொடங்கி மதியம் ஒன்றரை மணி போல பெங்களூர் சென்று சேரும். மறுவழியில் மதியம் 2.20க்கு பெங்களூரில் இருந்து துவங்கி இரவு 8.15க்குச் சென்னை வந்து சேர்ந்து விடும். ஒரு முறை கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு பெங்களூரில் இருந்து சென்னைக்குத் திரும்பி வருகையில் நான் கண்ட ஒரு சம்பவம் என்றென்றும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. எனக்கு அப்போது ஒரு பத்து வயது இருக்கும். மதியம் பெங்களூரில் இருந்து புறப்படும் பிருந்தாவன், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஆந்திர மாநிலத்தின் ஒரு சிறு பகுதியைக் கடக்கும். இங்கு ஒரு ரயில்நிலையமும் உள்ளது. குப்பம் என்று அதற்கு பெயர். அப்போதெல்லாம் அது ஒரு காட்டுப் பகுதியைப் போன்று தோற்றமளிக்கும். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் குப்பம் ஸ்டேஷனில் நிற்காது. சிக்னலுக்காக ஒரு நிமிடத்திற்கும் குறைவாக நிற்க வேண்டிய சூழ்நிலை பல நேரங்களில் ஏற்படும். இந்த குப்பம் என்ற ஊர் எதற்கு பெயர் பெற்றது என்றால் மலிவான விலையில் நன்றாகக் கிடைக்கும் காய்கறிகளுக்காக. கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலான காய்கறிகளை ரயில் நிற்கும் அந்த சில வினாடிகளில் சிறுவர்களும், பெண்களும் பையில் அடைத்து ரயிலில் இருப்பவர்களிடத்தில் விற்பார்கள். பெங்களூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் பலரும் மலிவான விலையில் கிடைக்கும் இக்காய்கறிகளை வாங்கிக் கொள்வர். பஸ்சானாலும் ரயில் ஆனாலும் வேடிக்கை பார்ப்பதற்காக எப்போதும் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொள்ளும் நான், குப்பத்தில் அன்று கண்ட காட்சி என் மனதில் தீராத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. நான் உக்கார்ந்திருந்த இருக்கை கூட்டத்தின் முன்புறம் உள்ள இருக்கை கூட்டத்தில்(bay) உக்கார்ந்திருந்த ஒரு பயணி சிறுவன் ஒருவனிடத்தில் காய்கறிகளை வாங்கிக் கொண்டார். குப்பத்தில் ரயில் நின்று விட்டு சிக்னல் கிடைத்ததும் புறப்படலானது. "ரயில் கெளம்புதுமா, சீக்கிரம் காசைக் குடுங்க"என்று பையன் சொல்வது கேட்டது. அதன் பிறகு சில்லறை இல்லை என்று அப்பயணி சொல்லவும், ரயில் இன்னும் வேகம் பிடிக்கலானது. "ரெண்டு ரூவாம்மா, காசைக் கீழே போட்டுருங்க, நான் எடுத்துக்கறேன்" என பையன் மறுபடியும் சொல்வதையும் அதற்கு அப்பயணி செவிமடுக்காதிருந்ததும் "காசைக் கீழே போட்டுருங்கம்மா, காசைக் கீழே போட்டுருங்கம்மா"என்று அவன் கத்திக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும், அந்த பையன் ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததையும் இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை. "காலம் ஒரு மாபெரும் சமனி" என்பதற்கு விதிவிலக்குகளும் இருக்கத் தான் செய்கின்றன.

நன்னி 1 : வல்லியம்மா - இந்தப் பதிவுக்குத் தலைப்பைப் போன பதிவுல பின்னூட்டமா கொடுத்ததுக்கு
நன்னி 2 : "குருவி ராவணன்" ஸ்ரீ கப்பிகிஷ்ணன் - Levellerன்னா சமனின்னு தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்ததுக்கு

23 comments:

கைப்புள்ள said...

இம்மாம் பெரிய பதிவா?

:(

இலவசக்கொத்தனார் said...

//இம்மாம் பெரிய பதிவா?//

ரிப்பீட்டேய்!!

அடுத்தது

தொடரும் போட்ட போன பகுதிக்கும் இதுக்கும் இம்மாம் பெரிய கேப்பா?

கப்பி | Kappi said...

+ + +

நல்ல பதிவு தல!!

Anonymous said...

பதிவு பெருசெல்லாம் ஒண்ணும் இல்ல. படிக்கறவங்க மனசிலே தங்களுடைய ரயில் அனுபவங்களை கண்டிப்பா இந்த பதிவு கிளறி விடும். நெறைய அனுபவங்கள் எனக்கு இருக்கறதால பதிவு சின்னதா தோணுது. நல்ல பதிவு.

காதல் தேசம் பத்திகள் இந்த பதிவோட ஒத்து போகலன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

All that you have written about train travel, seems to relate only to the second class compt. passengers... in a/c and first class, I always get a feeling that we are traveling with robots and not with people, most of them seem have a potato farm &%@$...up.

I wish I could find the boy and give him the two rupees..it is disturbing to read that incident...... in a local train in Chennai, I happened to hear a vendor who couldnt see, tell his friend, dei romba varuthama irukkuda ..kalaila otha ruvaiya engeyo pottuten ...i share this with kids to make them realize the value of money

கைப்புள்ள said...

//ரிப்பீட்டேய்!!

அடுத்தது

தொடரும் போட்ட போன பகுதிக்கும் இதுக்கும் இம்மாம் பெரிய கேப்பா?//

வாங்க கொத்ஸ்,
அதை தானே நானே பதிவுல சொல்லி இருக்கேனே. திட்டறதா ஆனாலும் புதுசா எதனா திட்டுங்க சுவாமி
:)

கைப்புள்ள said...

//+ + +

நல்ல பதிவு தல!!//

வாப்பா கப்பி,
வருகைக்கும் மூனு ப்ளஸ் குத்துனதுக்கும் ரொம்ப டாங்கீஸ்பா.
:)

கைப்புள்ள said...

//பதிவு பெருசெல்லாம் ஒண்ணும் இல்ல. படிக்கறவங்க மனசிலே தங்களுடைய ரயில் அனுபவங்களை கண்டிப்பா இந்த பதிவு கிளறி விடும். நெறைய அனுபவங்கள் எனக்கு இருக்கறதால பதிவு சின்னதா தோணுது. நல்ல பதிவு//

ஆஹா! பதிவு நீளம் அதிகம் இல்லைன்னு சொல்ற முதல் ஆளையும் பாத்துட்டேன். ரொம்ப நன்றிப்பா.


//காதல் தேசம் பத்திகள் இந்த பதிவோட ஒத்து போகலன்னு நினைக்கிறேன்//

முழுசா எழுதி முடிச்சிட்டு பாக்கும் போது எனக்கும் அப்படித் தான் தோனுது
:(

கைப்புள்ள said...

//All that you have written about train travel, seems to relate only to the second class compt. passengers... //
வாங்க அனானி சார்,
அது உண்மை தாங்க. ரொம்ப நாள் வரைக்கும் நான் இரண்டாம் வகுப்பு பெட்டியைத் தவிர வேறு எதுலயும் பயணிச்சதில்லை

//in a/c and first class, I always get a feeling that we are traveling with robots and not with people, most of them seem have a potato farm &%@$...up//
இதுவும் உண்மை

//I wish I could find the boy and give him the two rupees..it is disturbing to read that incident...... in a local train in Chennai, I happened to hear a vendor who couldnt see, tell his friend, dei romba varuthama irukkuda ..kalaila otha ruvaiya engeyo pottuten ...i share this with kids to make them realize the value of money//
ஒவ்வொருத்தரும் பணம் சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு இந்த மாதிரி பொது இடங்களில் மனிதர்களைப் பார்க்கும் போது தான் புரிகிறது.
:(

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா வந்திருக்கு பதிவு..
அப்ப நாமெல்லாம் யாரையும் அந்த லிவரை நகர்த்தி காப்பாத்த முடியாதா?? :( :))

அய்யோ அந்த பையன் பாவம் .. அப்ப உங்ககிட்டயும் இல்லையாங்க சில்லறை..

கைப்புள்ள said...

//ரொம்ப நல்லா வந்திருக்கு பதிவு..//

வாங்க மேடம்!
ரொம்ப நன்றி.

//அப்ப நாமெல்லாம் யாரையும் அந்த லிவரை நகர்த்தி காப்பாத்த முடியாதா?? :( :))//
காதல் தேசம் வினீத் மாதிரி பாயிண்ட் அடிக்க டிரெயினிங் எடுத்துக்கிட்டா லிவரையோ, லீவரையோ நகர்த்தி காப்பாத்தலாம் :)

//அய்யோ அந்த பையன் பாவம் .. அப்ப உங்ககிட்டயும் இல்லையாங்க சில்லறை..//

நானே அப்போ சின்ன பையன் தான். அப்போல்லாம் கால்சட்டையில ஜோபி மட்டும் தான் இருக்கும். ஜோபிக்குள்ள சில்லறை எல்லாம் ஒன்னும் இருக்காது. எங்க அம்மா கிட்ட சொல்லி ஒரு ரெண்டு ரூபா வாங்கி ஜன்னல் வழியா போடனும்னு அப்போ எனக்கு வெவரம் பத்தலை
:(

கதிர் said...

அழகா எழுதிருக்கிங்க தல.

கைப்புள்ள said...

//அழகா எழுதிருக்கிங்க தல//

பாராட்டுக்கு ரொம்ப நன்றிப்பா தம்பி.
:)

Geetha Sambasivam said...

//கொண்டையாக இட்டிருந்தாளா என்று? இதை புதுசா வந்த ஆளு கிட்ட கேப்பாரு நம்ம ஹீரோ. அதுக்கு அவரு "கூந்தலை எல்லாம் நான் கவனிக்கலைங்க. நான் கவனிச்சது அந்தப் பெண்ணோட கண்கள். அவ்வளவு அழகான கண்கள். ஆனால் அவற்றுக்குச் சுத்தமாகப் பார்வை இல்லை. நீங்கள் கவனித்தீர்களா?". //

சூப்பரு!!!!!

அதென்ன இத்தனை பெரிய பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க???
தங்கமணிக்குத் தொலைபேசித் தெரிவிச்சாச்சு, நீங்க தெரியக் கூடாதுனு சொன்ன தகவலை!! வீட்டுக்குப் போனா இருக்கு, பூரிக்கட்டையோ, இல்லை, அம்மிக் குழவியோ, தெரியலை!! :P

Geetha Sambasivam said...

அந்தப் பையன் ரயிலுக்குப் பின்னால் ஓடி வந்தாப்போல இப்போவும் நடக்குது கொடுமை!!!!!

அது சரி, யாருமே வரலைனா, இப்படித் தான் உங்களுக்கு நீங்களே கமெண்டிக்கிறதா??? :P

கைப்புள்ள said...

//சூப்பரு!!!!!

அதென்ன இத்தனை பெரிய பதிவெல்லாம் எழுத ஆரம்பிச்சிருக்கீங்க???//

வாங்க தலைவியாரே!
வணக்கம். ஹி...ஹி...என்ன பண்ண? பழக்க தோஷம். முன்னெல்லாம் மைல் நீள பதிவுகளை எழுதிட்டு இருந்தவன் தானே?
:)

//தங்கமணிக்குத் தொலைபேசித் தெரிவிச்சாச்சு, நீங்க தெரியக் கூடாதுனு சொன்ன தகவலை!! வீட்டுக்குப் போனா இருக்கு, பூரிக்கட்டையோ, இல்லை, அம்மிக் குழவியோ, தெரியலை!! :P//
போட்டுக் குடுக்கறதுல அப்படி ஒரு சந்தோஷமா?
:(

கைப்புள்ள said...

//அந்தப் பையன் ரயிலுக்குப் பின்னால் ஓடி வந்தாப்போல இப்போவும் நடக்குது கொடுமை!!!!!//

கொடுமை :(

//அது சரி, யாருமே வரலைனா, இப்படித் தான் உங்களுக்கு நீங்களே கமெண்டிக்கிறதா??? :P//

எங்கேன்னு சொன்னா நானும் தெரிஞ்சிக்குவேன்.
:)

VIKNESHWARAN ADAKKALAM said...

//ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும்,//

:-((

Geetha Sambasivam said...

//'காதல் தேசம்'னு ஒரு படம். அப்பாஸ், வினீத், தபு நடிச்சதுன்னு நெனைக்கிறேன். அதுல கிளைமேக்ஸ் காட்சியில் தபுவின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக் கொள்ளும். எதிர் திசையில் இருந்து ரயில் வரும். உடனே வினீத் ஓடிச் சென்று தண்டவாளத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு 'கொம்பை' அசைப்பார். உடனே ரயில் தடம் மாறி அடுத்த இருப்புப் பாதைக்குச் சென்று விடும். ஹீரோயின் தபு காப்பாற்றப்படுவார். //
நேத்திக்கே சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு, இதே மாதிரி, ஹீரோயினும், ஹீரோவும், ரயிலை அபாயச் சங்கிலியைப் பிடிச்சு இழுத்துட்டு, (கிளைமாக்ஸில் தான்) எந்த விதமான அபராதமும் கட்டாமல் ரயிலில் இருந்து இறங்கி, ஜோடியாய்க் கையைக் கோர்த்துக் கொண்டு போவதையும் சொல்லி இருக்கலாமோ??????

அட, டிடிஆரோ, அல்லது, கார்டோ, டிரைவரோ கூட இறங்கி வந்து என்னனு கூடக் கேட்க மாட்டாங்கப்பா!!! நம்ம தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயினுக்கு அம்புட்டு மரியாதை, அதைச் சொல்ல வேண்டாமா?????

கைப்புள்ள said...

////ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும்,//

:-((//

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி விக்னேஷ்வரன்.

கைப்புள்ள said...

//அட, டிடிஆரோ, அல்லது, கார்டோ, டிரைவரோ கூட இறங்கி வந்து என்னனு கூடக் கேட்க மாட்டாங்கப்பா!!! நம்ம தமிழ் சினிமா ஹீரோ, ஹீரோயினுக்கு அம்புட்டு மரியாதை, அதைச் சொல்ல வேண்டாமா?????
//

அதான் தலைவீ நீங்க சொல்லிட்டீங்களே? பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி இல்லையா?
:)

புதுகை.அப்துல்லா said...

ச்சும்மா இரயிலு மாதிரி விறுவிறுன்னு இருக்குங்க உங்க இரயில் பதிவு

திவாண்ணா said...

//, உண்மையிலே அந்த விசையை எங்களால் அசைக்கக் கூட முடியவில்லை. ரயிலின் போக்கை மாற்றி ஹீரோவையோ ஹீரோயினையோ காப்பாற்றி விடுவது மாதிரியான காட்சிகளைப் பாக்கும் போதெல்லாம் தோணுவது "ஒரு வேளை பாயிண்ட் அடிக்க டிரெயினிங் எடுத்துருப்பாங்களோ?":)//

you have a point there! :-))

இவ்வளோ நாள் கழிச்சு பின்னூட்டமான்னா இவ்வளோ நாள் கழிச்சு பதிவான்னு கேக்கிறேன்!
அலுத்து போய் லைவ் புக் மார்க்ஸ் லிங்கையே தூக்கிட்டேன்.