தமிழ் வலைப்பதிவுலகுல மொத்த பதிவுகளின் எண்ணிக்கை இருபத்தியோரு லட்சத்து ஐந்நூத்தி அறுபத்தியேழு. அதை எழுதுன மொத்த பதிவர்களின் எண்ணிக்கை எழுநூத்தி இருபத்தியஞ்சரை. இதுல ஆன்மீகப் பதிவர்கள் தொன்னூத்தி ரெண்டு பேர். அறிவியல் பதிவர்கள் நூத்தி நாப்பத்தியாறு பேர். நகைச்சுவை பதிவர்கள் முன்னூத்தி முப்பத்தி மூனரை பேர். சீறியஸ் பதிவர்கள் இருநூத்தி இருபத்தி ரெண்டு பேர் சீறாத பதிவர்கள் எண்பத்தி எட்டு பேர். அது போக 2007ல தமிழ் திரையுலகில்...சே...வலைப்பூவுலகில் வெளிவந்த பதிவுகளின் எண்ணிக்கை ஆறே முக்கால் லட்சத்து தொள்ளாயிரத்தி பதினாறு. அதுல நகைச்சுவை என்கிற வகையில் வெளிவந்த பதிவுகளின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து முன்னூத்தி ஐம்பத்தி ஒன்னு...மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தோட பொது விஷயங்களையும் சமூக அக்கறையையும் தாங்கி வெளிவந்த பதிவுகளின் எண்ணிக்கை ஆயிரத்தி எண்ணூத்தி இருபத்தி ரெண்டு. இது போக ஆன்மீகம் இருபத்திரெண்டாயிரத்தி அறுநூத்தி எண்பத்தி எட்டு, விளையாட்டு பதினேழு ஆயிரத்தி நானூத்தி நாப்பத்து நாலு, புகைப்படம் ஏழாயிரத்தி எழுநூத்தி ஏழு, மொக்கை நாலு லட்சத்து நூத்தி பதினொன்னு. ஒரு பதிவர் சராசரியா ஒரு வருஷத்துல சராசரியா எழுதற பதிவுகளின் எண்ணிக்கை எழுபத்தி ரெண்டு.
இப்படியெல்லாம் இருக்க போன வருஷத்து ஆவரேஜைக் கூட எட்டாத கூட்டல் கழித்தல் கணக்கு வழக்கு தெரியாம ஸ்டாட்டிஸ்டிக்ஸ் போடற என்னை போய் 2007ல எழுதுனதுல பிடிச்ச பதிவுகளைப் பத்தி ஒரு பதிவு எழுதச் சொல்லி ரெண்டு பேரு கொக்கி போட்டுருக்காங்க. எழுதுன பதினெட்டு பதிவுகள்ல முக்காவாசி படம் புடிச்சிப் போட்டு ஒப்பேத்துன பதிவு, மத்ததெல்லாம் என்னன்னு எனக்கே தெரியாது. இந்த அழகுல இது தான் எனக்கு புடிச்சதுன்னு நான் பதிவு போடறதும், அதைப் படிச்சிட்டு 'தூ'ன்னு டீசண்டா நீங்க துப்பிட்டுப் போறதும் வேணுமான்னு யோசிச்சேன். அதுனால என்னை எழுதுனதுல பிடிச்சதை எழுதச் சொன்ன அந்த ரெண்டு பேரைப் பத்தி எனக்கு தெரிஞ்சதை எல்லாம் எழுதி அவங்க புகழைப் பதினெட்டுப் பட்டியிலயும் பரப்பலாம்னு முடிவு ஜெஞ்ஜிட்டேன்.
முதல்ல, என்னை இந்த டேக்ல மாட்டிவிட்ட அல்வா தேசத்து அந்நியனைப் பத்திச் சொல்றேன். கிட்டத்தட்ட நான் தமிழ் பதிவுகள் எழுத ஆரம்பிச்ச சமயத்துல தான் இவரும் எழுத ஆரம்பிச்சாரு. இவரைப் பத்திச் சுருக்கமாச் சொல்லனும்னா ஒரு multi-faceted பதிவர். திடீர்னு அம்பியா தங்கமணி ரங்கமணி கதை எல்லாம் எழுதிட்டு இருப்பாரு, திடீர்னு பாத்தா ராம்ப்வாக் ரெமோவா ஆகி அசிம் ப்ரேம்ஜி வீட்டு விருந்தாளியா இருக்கறப்போ பஞ்சாப் கோதுமைகளோடு அடிச்ச லூட்டிகளைப் பத்திச் சொல்லுவாரு, திடீர்னு பாத்தா அப்படியே அந்நியனா சேஞ்ச் ஆகி கும்பிபாதம்...சே...சே...எங்கள் தானைத் தலைவியோட 'வம்பிபாதம்' செஞ்சிட்டு இருப்பாரு. குடும்பஸ்தனா ஆனதுக்கப்புறமும், தங்கமணியும் ஒரு ப்ளாக்கரா இருக்கறதுக்கப்புறமும் "எல்லா கண்களும் எந்தன் மேலே" ஸ்ரேயாவைப் பாத்து பரவசமடைஞ்சதைப் பத்தி தைரியமா பதிவிடற ஒரு மாவீரரு. வெறும் கில்பான்சியாத் தான் எழுதுவாருன்னு எதிர்பாத்தா யூ ஆர் ராங்...சுந்தரகாண்டத்தைப் பத்தியும் அவருக்கு ரொம்பப் பிடிச்ச அனுமானைப் பத்தியும் கூட அக்மார்க் ஆன்மீகமாவும் எழுதுவாரு. போன வருஷத்துல இவர் எழுதுன "2007 ப்ளாக்கர் அவார்டுகள்", "ஓம் ஷாந்தி ஓம் விமர்சனம்", "விளம்பரங்கள்", "பெண் பார்க்கும் படலம்" எல்லாமே பட்டையைக் கெளப்பும்.
என்னைப் பத்தி "கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம்"ன்னு சொன்னதுனால இவரு ரொம்ப நல்லவரு. "இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)"ன்னு நான் மாவாட்ட கஷ்டப் படறதைப் பாத்து கருணை காட்டாம நக்கல் பண்ணதுனால கொஞ்சம் கொடியவர் :)
அடுத்ததா நம்மளை இந்த டேக்ல கொக்கி போட்டவரு ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவன். இவரைப் பத்தி என்னான்னு சொல்றது. இந்த சின்ன வயசிலேயே இம்புட்டு ஞானமான்னு டக்கு டக்குன்னு மலைக்க வைக்கும் ஒரு "ஞானக்குழந்தை". 2006 ஆம் வருஷம் செப்டம்பர் மாசத்தில் ஒரு நாள். கப்பி உருகுவே ஜனாதிபதியாவும் நான் சித்தூர்கட்ல சித்தாளாவும் வேலை பாத்துட்டு இருந்த சமயம். சூடான் புலியின் அறிமுகத்தால ரெண்டு பேரும் ஜிடாக்ல பேசிக்க ஆரம்பிச்சோம். அப்போ தான் கப்பியின் ஞானத்தின் பரிச்சயம் எனக்கு கிடைச்சது. இந்த ஜிடாக் உரையாடலைக் கொஞ்சம் படிச்சிப் பாருங்களேன். நான் சொல்றது உங்களுக்கே புரியும்.
நான் : நேத்து எதோ நாத்திகம் அது இதுன்னு சொன்னியே...என்னப்பா மேட்டரு?
கப்பி : ஹி ஹி...அன்பே சிவம் :)
நான் : யாருமே நாத்திகன் கிடையாது. அதை தெரிஞ்சிக்கோ...கடவுள் இல்லைன்னு சொல்லலாம். ஆனா நம்பிக்கை இல்லைன்னு உன்னால சொல்ல முடியுமா?
கப்பி : நான் atheistனு சொல்றது விட agnosticனு சொல்லலாம். தமிழ்ல அதுக்கும் நாத்திகம் தானே?
நான் : Agnosticனா என்ன?
கப்பி : agnostic-னா கடவுள் இருப்பை அறியாமல் இருக்கிறேன்..அதனால் கடவுள் என்ற ஒன்னு மேல எனக்கு நம்பிக்கை கிடையாது.
நான் : மனுஷனை மீறுன பவர் ஒன்னு இருக்குன்னு நம்பறியா?
கப்பி : இருக்கலாம்..எனக்கு தெரியாது...ஆனா மனுசனுக்குள்ள இருக்க கடவுளைப் பாக்கனும்
நான் : இதெல்லாம் யார் கிட்ட கத்துக்கிட்டது?
கப்பி : எனக்கு கமல் சொல்லி குடுத்தது
நான் : அதே கமலுக்கு இளையராஜா சொன்னது தான் "நாத்திகர்னு யாருமே கிடையாது"ன்னு :)
கப்பி : கமலை சும்மா இழுத்துவிட்டேன்...எங்க பெரியப்பா பார்த்து கொஞ்சம் கத்துகிட்டது...
பத்தாங் க்ளாஸ் வரைக்கும் அம்மா கையை புடிச்சுகிட்டு தினம் கோயிலுக்கு போன பையன் தானே :))
நான் : மனுஷனுக்கு உதவனும்னு நினைக்கிற உன் கருத்து வரவேற்கத்தக்கது. ஆனா மனுஷனை மீறுன சக்தி ஒன்னு இருக்குப்பா. சாமியைக் கும்பிட்டுக்கிட்டும் மனுஷனுக்கு உதவலாம்ப்பா.
கப்பி : இயற்கை..இருக்கு...சூரியன்ல ஆரம்பிச்சு இயற்கை கடவுள்களா கும்பிட ஆரம்பிச்சது தான் இப்படி வந்து இருக்குன்னு என் சின்ன அபிப்ராயம்.
கப்பி : சாமியை கும்பிட்டு மனுசனுக்கு உதவலாம்தான்...சாமியைக் கும்பிடாமலும் பண்ணலாம்ல :)
"வேதம் புதிது படத்துல வர்ற சின்னப்பையன் சத்யராஜைப் பாத்து "நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறலையா"ன்னு கேக்கற மாதிரியே இருந்துச்சு :)"
நான் : உன் கருத்துக்கு நான் மதிப்பு குடுக்கறேன்.
கப்பி : நானும் சாமி கும்பிடறவங்களை தப்பா சொல்ல மாட்டேன்
நான் : சாமி கும்பிடறதும் கும்பிடாததும் உன்னோட தனிப்பட்ட விருப்பம்னு புரிஞ்சிக்கிட்டேன்.
கப்பி : எல்லாருக்கும் அவங்க நம்பிக்கை இருக்கு...சொல்லபோனா எங்கம்மா என்னை பைக்ல கோயிலுக்கு கூட்டிட்டு போன்னு சொன்னா நான் கூப்பிட்டு போகனும். அங்க போய் சாமி கும்பிடாம வெளிய நிக்கறது என் விருப்பம்..அதுக்காக அவங்களை கூட்டிட்டு போக மாட்டேன்னு சொல்ல கூடாதுல்ல
நான் : சூப்பர்
நமக்கு பிடிப்புள்ள ஒரு விஷயத்தை மத்தவங்களும் ஏத்துக்கனும்னு நெனச்சி நாம சொல்லும் போது அதை சொல்றதுக்குன்னு ஒரு முறை இருக்குன்னு எனக்கு உணர்த்துனவரு. அதோட எழுத்தில் ஒரு பக்குவம், நிதானம் ஒரு ஒரு முதிர்ச்சி இதெல்லாம் இவரோட ஹால்மார்க். இவரோட கொசுவத்தி சுத்தல் பதிவுகள்ல அந்த ஞானம் மில்லிகிராம் அளவுகளில் அப்பப்போ வெளியே வந்தாலும், இவர் ஒரு ஞானப்பிழம்பு...ஞான ஊற்று...ஒரு ஞான நிறைக்குடம்...ஒரு...ஒரு...ஞானக் குழந்தைங்கிறதுல இருவேறு கருத்துகள் இருக்கவே முடியாது. நான் சொல்றதை அப்படியே ஒத்துக்கறவங்க எல்லாம் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கப்பா...சாரி ரெண்டு கையையும் தூக்குங்கப்பா.
கப்பிநிலவன் மட்டுமில்ல நாங்களும் ஞானக்குழந்தைகள் தான்னு சித்தெறும்பின் படைப்பின் ரகசியத்தைக் கண்டறிய முற்பட்ட தம்பியும், 'எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால், ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்"னு மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவும் வேற வந்து சேந்துக்கிட்டாங்க.
பன்னிக்குட்டி ராமசாமி பாஷையில சொல்லனும்னா "வர வர இந்த ஞானக்குழந்தைகள் தொல்லை தாங்கலைடா" :))
Thursday, January 24, 2008
ஒரு அல்வா தேசத்து அந்நியனும் ஒரு ஞானக்குழந்தையும்
Sunday, January 13, 2008
Scribbles on Akka
ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பதிவு இது:) 12 ஜனவரி, 2007 அன்னிக்கு அகமதாபாளையத்துல ஒரு க்யூஸ் போஸ்டைப் போட்டுட்டு பொங்கலுக்காக சென்னை கெளம்பி வந்தாச்சு. அந்தப் பதிவுக்கான பதில்களை எல்லாம் தொகுத்து சரியா ஒரு வருஷம் கழிச்சு ஒரு பதிவு போடனும்னு தோனுனதே அது வரலாற்றுச் சிறப்பு இல்லாம வேற என்னங்க? யாருப்பா அங்கேருந்து அடங்குடான்னு சவுண்ட் விடறது? கிட்டத் தட்ட நாலஞ்சு மாசமா டிராஃப்ட் மோட்ல என்னுடைய சோம்பேறித் தனத்துக்கெல்லாம் விட்னெஸா இருந்துட்டு சரியா ஒரு வருஷம் கழிச்சு வெளி வர்ற சீக்வெல் பதிவு இது. சீக்வெல் பதிவுங்கிறதை தவிர்த்து இன்னுமொரு வரலாற்றுச் சிறப்பும் இந்தப் பதிவுக்கு உண்டு. அதை கடைசியா சொல்றேன்...இப்ப 2007ல கேட்ட கேள்விகளுக்கான பதில்களை நல்ல புள்ளையா ஒரு தடவை படிச்சிடுங்க பாப்போம்.
1. மென்பொருள் துறைக்கும், BPO துறைக்கும் மிகப் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றான இவ்விடத்தில் பஞ்சப் பாண்டவர்கள் குரு துரோணாச்சாரியாரிடம் கல்வி கற்றனர். ஊரின் பெயர் என்ன?
குர்காவ்(Gurgaon). குரு துரோணாச்சாரியாரின் பூர்வீகமாக அறியப் பெறும் இவ்வூர் ஹரியானா மாநிலத்தில் தில்லிக்கு வெகு அருகாமையில் உள்ளது. தில்லியின் கிளைநகரங்களில்(Satellite Town) ஒன்றாகவும் அறியப் பெறுகிறது. குரு கிராம் எனச் சமஸ்கிருத மூலத்தைக் கொண்ட இவ்வூரின் பெயர் நாளடைவில் குர்காவ் ஆனது.
2. ஃபவுஜி(Fauji) எனும் இந்தித் தொலைக்காட்சித் தொடரின் மூலமாக அறிமுகமான பிரபல நடிகர் யார்?
ஷாருக் கான். இத்தொடரில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் கமாண்டோ அபிமன்யூ ராய்.
3. AJJ எனும் குறியீட்டைக்(Station Code) கொண்டு இந்திய இரயில்வே துறையினரால் அறியப்பெறும் ஊர் எது?
அரக்கோணம் சந்திப்பு. ரயில்வே முன்பதிவு சிஸ்டெத்தில்(சிஸ்டெம்-தமிழ்ல என்னங்க?) இந்த ரயில் நிலைய குறியீட்டுக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. அத்துடன் இந்திய ரயில் விசிறிகள் என்று ஒரு சாரார் இருக்கின்றனர். முறைபடுத்தப்பட்ட ஒரு குழுமமாக ரயில் விசிறிகளால்(Rail fans or Rail enthusiasts) நடத்தி வரும் இக்குழுமத்துக்குப் பெயர் IRFCA - Indian Railways Fan Club. இங்கு ரயில்வே துறையைப் பற்றியும், ரயில்களின் தொழில்நுட்ப அம்சங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்கள். இரயில் நிலையக் குறியீட்டை அறிந்து கொள்ளும் ஆர்வலர்களும் இருக்கிறார்கள். Rail fanning என்னும் ஒரு பொழுதுபோக்கும் உள்ளது. அதாவது ஓடுகின்ற ரயிலின் அழகை ரசிப்பதும்(தமாஷ் இல்லீங்க...உண்மையாத் தான்), ரயிலை வாடகைக்கு அமர்த்தி அது செல்லுகின்ற இடங்களை ரசிப்பதும் இரெயில் ஃபேனிங்கின் ஒரு பகுதி. "She chugged into Dadar Station" அப்படின்னெல்லாம் ரயிலைப் பார்த்து சிலாகிப்பவர்களை எல்லாம் இங்கு காணலாம்.
4. மேக்யார்(Magyar) எனும் இயற்பெயர் கொண்ட ஐரோப்பிய நாட்டை நாம் எவ்வாறு அறிகிறோம்?
விக்கிபீடியாவில் ஹங்கேரி. மேக்யார் என்பது தான் ஹங்கேரி நாட்டின் மொழியின் பெயரும் என்பது கூடுதல் தகவல்.
5. பன்னிரண்டாம் நூற்றாண்டில் தற்போதைய கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் பிறந்து இறைவன் 'சென்ன மல்லிகார்ஜுனா'வின் பால் தீராத காதல் கொண்டு பற்றுகளைத் துறந்து நிர்வாண நிலை எய்திய பெண் துறவியின் பெயர் என்ன?
அக்கா மகாதேவி. இப்பதிவுக்குத் தலைப்பு கொடுத்த கேள்வி இது. இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படங்களைப் பற்றி ஒரு நாள் இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது, மதுஸ்ரீ தத்தா என்ற இயக்குநர் இயக்கிய 'Scribbles on Akka' என்ற குறும்படத்திற்கு இசையமைத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். அக்கா மகாதேவி எனும் துறவியின் பாடல்களை (வசனாஸ் என அறியப்படுபவை) இசை படுத்தியிருக்கிறார் ராஜா. யாரிந்த அக்கா என அறிய முற்பட்ட போது தெரிந்து கொண்ட விஷயங்கள் பல. மேலும் விபரங்களுக்கு விகிபீடியாவைப் பாருங்கள். கன்னடத்தில் அக்கா மகாதேவி பாடிய வசனப் பாடல் ஒன்றில் ஆங்கில் மொழிபெயர்ப்பு கீழே.
You can confiscate
money in hand;
can you confiscate
the body's glory?
Or peel away every strip
you wear,
but can you peel
the Nothingness, the Nakedness
that covers and veils?
To the shameless girl
wearing the white jasmine Lord's
light of morning,
you fool, where's the need for cover and jewel?
6. செளத்ரி எனும் கதாபாத்திர பெயர் ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்தத் தமிழ் திரைப்படம் எது?
தங்கப்பதக்கம். நடிகர் திலகத்தின் மிடுக்கையும் கம்பீரத்தையும் கண்டு நான் வியந்த படம். சௌத்ரி கதாபாத்திரத்தின் இமேஜ் இணையத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை :(
7. முதலாம் உலகப் போரின் போது சென்னை உயர்நீதிமன்ற கட்டிடத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்திய ஜெர்மானிய கப்பலின் பெயர் என்ன?
எம்டன். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தின் ஒரு மூலையில் ரிசர்வ் வங்கி சப்வே அருகில் இந்த நினைவுச் சின்னம் இருக்கிறது. செந்தில் அவர்களின் ஆங்கிலப் பதிவிலிருந்து எடுத்தப் படம் கீழே.
http://chennaitriviae.blogspot.com/2005/10/chennai-trivia-1.html
8. பூ வேலைப்பாட்டினைப் பற்றிய ஜப்பானிய கலையின் பெயர் என்ன?
இகிபானா. ஜப்பானிய துறவி ஒருவர் இக்கலையை அறிமுகப்படுத்தியதாக அறிகிறோம்.
9. 'உலகின் மிகப் பெரிய வைரம்' எனும் அறியப்பெறும் வைரக்கல்லின் பெயர் என்ன?
கல்லினன் ஜனவரி 26, 1905 அன்று தென்னாப்பிரிக்காவில் கல்லினன் எனும் இடத்தில் வெட்டி எடுக்கப்பட்ட இவ்வைரம் 3106.75 காரட்(கிட்டத்தட்ட 622 கிராம்) எடைகொண்டிருந்ததாம்.
10. நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'ஒரு தூரத்து இடிமுழக்கம்' என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார்?
சலில் சவுத்ரி. ஜி.ராகவன் மிகச் சரியாக பதில் அளித்ததோடு, கூடுதல் தகவலையும் தந்திருந்தார். அதனால் அவர் அப்பதிவில் இட்ட பதிலையே இங்கு வெட்டி ஒட்டுகிறேன்.
ஒரு கிடையாது. தூரத்து இடி முழக்கம்-தான் படத்தின் பெயர். பி.விஜயன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை சலீல்தா என்றழைக்கப்படும் சலீல் சௌத்ரி. இந்தப் படத்தில் இவரது மனைவியான சபீதா சௌத்ரி ஜெயச்சந்திரனோடு சேர்ந்து ஒரு பாடலைப் பாடியுள்ளார். அழியாத கோலங்கள் படத்திற்கும் இசை சலீல் சௌத்ரிதான். அதில் ஜெயச்சந்திரனும் பி.சுசீலாவும் இணைந்து பாடிய "பூவண்ணம் போல மின்னும்" என்ற பாடல் மிகப் பிரபலம். இவர் கரும்பு என்ற வெளிவராத திரைப்படத்திற்காக சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பாடல்களுக்கு பி.சுசீலாவையும் ஏசுதாசையும் பாட வைத்து இசையமைத்தார். பி.சுசீலா பாடியது மகிழ்ச்சியான மெட்டில். ஏசுதாஸ் பாடியது சோக மெட்டில்.
11. கப்பல்களில் அதிகப் படியான சரக்கு ஏற்றப்பட்டுள்ளதா எனக் கண்டறிய கப்பலின் இருபுறங்களிலும் வரையப்பட்டிருக்கும் கோடுகளின் பெயர் என்ன?
ப்ளிம்சால் கோடுகள்(Plimsoll Lines) கப்பலின் பாதுகாப்பிற்கான ஒரு சர்வதேச தரக்கோட்பாடாகவும் ப்ளிம்சால் கோடுகள் அறியப் பெறுகின்றன.
12. உலகின் மிகச்சிறிய நாய் இனத்தின் பெயர் என்ன?
சிஹுவாஹுவா. மெக்சிகோ நாட்டில் உள்ள ஒரு மாநிலமான சிஹுவாஹுவாவில் கண்டுபிடிக்கப் பட்ட இந்த நாயினம் ஆறு முதல் ஒன்பது அங்குலம் மட்டுமே உயரம் கொண்டது. மிகவும் துறுதுறுப்பான நாயினமாக இது அறியப் பெறுகிறது.
13. வீரபாண்டிய கட்டபொம்மனின் இளைய சகோதரரான ஊமைத்துரையின் இயற்பெயர் என்ன?
குமாரசாமி என்பது இயற்பெயர் என்று பல தளங்கள் சொல்கின்றன. சிவத்தையா என்ற பெயராலும் அறியப்பெறுகிறார். கட்டபொம்மன் கருத்தையா என்ற பெயரால் அறியப்பெற்றார். தகவல்களை வழங்கிய வவ்வால் அவர்களுக்கு மிக்க நன்றி. துரைசிங்கம் என்பது இன்னொரு சகோதரரின் பெயர். முன்னர் குறிப்பிட்டது போல ஊமைத்துரையின் இயற்பெயர் துரைசிங்கம் அல்ல. வரலாற்று ஆசிரியர்களுக்குக் கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும் அவருடைய இளைய சகோதரரான ஊமைத்துரையின் வீரத்தையும் திறமையையும் பற்றிப் பெருமையாகவே சொல்கிறார்கள்.
14. 17ஆம் நூற்றாண்டில், இத்தாலி நாட்டினைச் சேர்ந்த ஸ்டிரேடிவேரி(Stradivari) குடும்பத்தினர் தயாரித்த இக்கருவிகள்(ஸ்டிரேடிவேரியஸ் Stradivarius என்று அறியப்படுபவை) தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 700 மட்டுமே உள்ளன. பல்லாயிரக் கணக்கான டாலர்கள் மதிப்பு கொண்டவை இக்கருவிகள். எந்த கருவியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?
வயலின் அண்டோனியோ ஸ்டிரேடிவாரி என்பவரால் 17ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வயலின்கள் தங்களின் உன்னதமான இசைக்காக உலகப்புகழ் பெற்றவை. வயலின் தயாரிக்கப்படும் மரத்தினைப் பதப்படுத்துவதில் உபயோகப்படுத்தப் படும் விசேட முறையால் இத்தனித்துவமான இசை உருவாகுவதாகச் சொல்கிறார்கள். வயலினைத் தவிர ஸ்டிரேடிவாரி குடும்பத்தினர் தயாரித்த செல்லோ, வயோலா இசைக்கருவிகளும் தங்கள் தனித்துவமான இசைக்காகப் புகழ்பெற்றவை.
15. இஸ்ரேல் நாட்டின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பெயர் என்ன?
எல் அல்(El Al) ஹீப்ரூ மொழியில் எல்-அல்லை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் 'Skyward' எனப் பொருள்படும். அதையே தமிழ்ல மொழிபெயர்த்தால் "மானத்தைப் பாத்த...". மானம் பாத்த ஏர்லைன் தான் எல்-அல்.
இன்னொரு வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி இருக்கேன்னு சொன்னேனே...அது என்னன்னா இந்தப் பதிவை ஜனவரி 12, 2007 அன்று அகமதாபாத்தில் போட்டு விட்டு ஜனவரி 13,2007 அன்று பொண்ணு பாக்க போனேன். கொஞ்சம் பின்நவீனத்துவமா சொல்லனும்னா நான் இப்ப ரங்கமணியா வேலை பாத்துக்கிட்டு இருக்கறவங்க கிட்ட போய் என்னை காட்டிட்டு வந்த நாளு:). பொண்ணு பாக்க போறதுக்கு முன்னாடி கூட அந்த குவிஸ் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்திக்கிட்டு இருந்தேன். அது தான் வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டிய செய்தி.
Friday, January 11, 2008
என்ன சத்தம் இந்த நேரம்?
2007ல எடுத்ததுல பிடிச்ச படத்தைப் போட்டு ஒரு போஸ்ட் போடனும்னு கொத்ஸ் போட்ட
கொக்கில (அதாங்க tag) மாட்டுனதால - டிசம்பர் மாசம் பெங்களூருக்குப் பக்கத்துல இருக்கற நந்தி ஹில்ஸ் போனப்ப எடுத்த படம் ஒன்னு தேறுச்சு. திப்புஸ் டிராப்ங்கிற இடத்துக்குப் பாறை மேலே ஏறி போயிட்டிருக்கறப்ப இந்த காட்சி என் கண்ணுல பட்டுச்சு. டேஞ்சர்னு எழுதிருக்கற பாறை மேல அதல பாதாளத்தை நோக்கி உக்காந்துருக்கற ஜோடியைப் பாத்ததும் சட்டுன்னு எதையும் யோசிக்காம instinctiveஆ எடுத்த படம். வீட்டுக்கு வந்து கொஞ்சம் பிற்தயாரிப்பு செஞ்சிட்டு பாத்தா 'அட! நாமளா எடுத்தோம்'னு சொல்ற அளவுக்கு இருந்துச்சு.
உண்மையைச் சொல்றேங்க...படத்துல எனக்கு பாக்க கிடைக்கற அந்த ஒரு பிரம்மாண்டமான ஃபீலிங் நேர்ல பாக்கும் போது கெடைக்கல. பிடிச்சதுக்குக் காரணம்னு சொல்லப் போனா ஒரு நல்ல கதையோ கவிதையோ எழுதும் போது, நாம சொல்ல வர்ற கருத்தைத் தாண்டி படிக்கிறவங்க கற்பனைக்குக் கொஞ்சம் தீனி போட்டுச்சின்னா அது இன்னும் சிறப்பா அமையும்னு எங்கேயோ படிச்சதா ஞாபகம். அதே மாதிரி இந்த படத்துலயும் "What they are upto"அப்படின்னு நம்ம கற்பனைக்குத் தீனி போடற மாதிரி அமைஞ்ச விஷயம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அதுக்கேத்தா மாதிரி திப்புஸ் டிராப் பாத்துட்டுத் திரும்பி வரும் போது டேஞ்சர்னு எழுதியிருந்த பாறை மட்டும் தான் இருந்தது...அந்த ஜோடி அங்கே இல்லை. அபவுட் டர்ன் எடுத்து தான் திரும்பி தான் கீழே இறங்கி போயிருப்பாங்கன்னு நம்புவோமாக. ஒரு சிச்சுவேசன் பாட்டு ஞாபகத்துக்கு வருது. நான் ரசிச்சேன்...நீங்களும் ரசிப்பீங்கன்னு நம்பறேன் :)
படம் : புன்னகை மன்னன்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம்
என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம் நதியின் ஒலியா
கிளிகள் முத்தம் தருதா அதனால் சத்தம் வருதா
அடடா..
(என்ன சத்தம் இந்த நேரம்...)
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
கண்களில் ஏனிந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தைப் பார்த்தால் மணமாகவில்லையே
காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூப்போலே
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
ஆதரவாய்ச் சாய்ந்துவிட்டாள் ஆரிரரோ பாடு
ஆரிரரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
(என்ன சத்தம் இந்த நேரம்...)
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
தன்னிலை மறந்த பெண்மை அதைத் தாங்காதோ
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசையாகாதோ
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகைப்பூ வாசம்
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
யாரிவர்கள் இரு பூங்குயில்கள்
இளங்காதல் மான்கள்
(என்ன சத்தம் இந்த நேரம்...)
மூனு பேரைக் கொக்கி போடணுமாமில்லே...கொக்கில மாட்டுன அந்த மூனு மீனுங்க...
1. தேவ்
2. மருதம்
3. வடக்குப்பட்டு ராமசாமி