Monday, August 28, 2006

வெட்டேயாடூ விலயாடூ

மொதல்லயே ஒரு டிஸ்கி போட்டுக்கறேங்க. இது இந்தப் படத்தைப் பத்திய விமர்சனப் பதிவு இல்லீங்க. எக்கச்சக்கமா எல்லாரும் இதப் பத்தி எழுதிட்டாங்க, நான் புதுசா எழுத அப்படி ஒன்னியுமே இல்லீங்கோ. பட்டிக் காட்டான் முட்டாய் கடையைப் பாத்தா மாதிரி ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தமிழ் படம்...அதுவும் கொட்டாய்ல போய் ஒக்காந்து...அதுவும் மும்பையில...அதுவும் தனியாப் பாத்தது(தமிழ்ல சொல்லனும்னா "என்ன கொடுமை சார் இது?" கொஞ்சம் பீட்டரா சொல்லனும்னா "How unromantic? :)" ) - அப்படி பட்ட ஒரு படத்தைப் பத்தி எப்ப பாத்தோம், எங்கே பாத்தோம்னு எழுதி வச்சுக்கறதுக்காக ஈ செறியதொரு சிபிஐ டைரி குறிப்பு. கேட்டோ?

"கணபதி பப்பா மோரியா" - விநாயகர் சதுர்த்தி அன்னிக்குத் தான் வே.வி. பாத்தோம்னு இனிமே மறக்குமா என்ன?

டேய்! இதெல்லாம் ஒனக்கே ரொம்ப ஓவராத் தெரியலியாடானு கேக்கறவங்களுக்காக...கடைசியா நான் கொட்டாயில பாத்த படம் அமிதாப் பச்சனோட "ப்ளாக்"னு(Blog லேது... Black) நெனக்கிறேன். ரொம்ப யோசிச்சு பாத்ததுல கடைசியா கொட்டாய்ல பாத்த தமிழ் படம் சென்னை மாயாஜால்ல பாத்த "பிதாமகன்"னு ஞாபகம்.

டிஜிட்டல் தானே? காசா? பணமா? அதான் சும்மா மைக் டெஸ்டிங்...

ஒடனே இவன் விசிடி பார்ட்டி தான்னு முடிவு கட்டிடாதீங்க சாமி! நான் இருக்குற காட்டுல புதுசா ரிலீஸ் ஆன இந்தி படம் வர்றதுக்கே ஒரு மாசம் ஆகும். முன்ன இருந்த இந்தூர்லயும் தமிழ் படம் எதுவும் வராது. சித்தூர்கட்ல ஒரு தியேட்டர்ல 80களில் வெளியான ஒரு மிதுன் சக்ரவர்த்தி படம் இன்னும் ஓடிட்டு இருக்கு :) இதுல எங்கேருந்து தமிழ் படம் எல்லாம்? அப்பப்போ லீவுல மெட்ராஸுக்கு வரும் போதும், ஒரு வாரம் லீவுல வரோம் அதுலயும் இந்த பாடாவதி படத்தை எல்லாம் போய் அவசியம் பாக்கனுமான்னு நெனச்சிட்டே உருப்படியா எதாவது பண்ணலாம்னு வீட்டுலயே இருந்துடுவேன்.(சே! சே! நமக்கும் சோம்பேறித் தனத்துக்கும் ரொம்ப தூரமுங்க.)

பிதாமகன் படம் பாக்கப் போனது தீபாவளிக்கு மறுநாள்...எந்த வருசம்னு சரியா ஞாபகம் இல்ல. மாயாஜாலுக்குப் போனா அப்பச் சென்னையில கிரிக்கெட் வெளாட வந்த நியூசிலாந்து டீம் மொத்தமும் அங்கே நிக்குது. கிறிஸ் கெயிர்ன்ஸ் டிவியில பாக்க அப்படி ஒன்னும் வித்தியாசமாத் தெரியலன்னாலும் நெசத்துல பாக்க பார்ட்டி பூதாகரமா இருந்தான்(கொஞ்சம் லோக்கலாச் சொல்லனும்னா 'டெல்லி எருமை' மாதிரி). ஸ்டீபன் ஃப்ளெமிங் கிட்ட ஆட்டோகிராப் வாங்கிட்டு வர்றேன்னு என் தம்பி என்கிட்டச் சொன்னதும், சும்மா அவனை ஓட்டறதுக்காக "பிளடி இண்டியன்ஸ்! ஒங்களுக்கு எல்லாம் நான் ஆட்டோகிராப் போடற்தில்ல மேன்"னு அவன் சொல்லிட்டான்னா என்னடா பண்ணுவன்னு என் தம்பியைக் கேட்டதுக்கு அவன் சொன்ன பதில் தான் இன்னும் அந்த படம் பாத்ததை ஞாபகத்துல இருக்க வச்சிருக்கு. "அப்படி சொல்லிட்டு அவனால ஈஞ்சம்பாக்கம் கூட தாண்ட முடியாது. அவன் மூஞ்சை ஒடச்சிட மாட்டோம்" அப்படின்னான். என்னமோ நமக்கு படம் பாக்கப் போகும் போது நடக்கற சின்ன விஷயங்கன்னாலயும் படம் பாத்த சூழல்னாலயும் தான் படம் மனசுல நிக்குது.

சரிங்க இப்ப "வே.வி." பத்தி சில பல மேட்டர்ஸ்.

காமெடிக்குன்னு தனியாப் படத்துல யாரும் இல்ல. ஆனா அது இல்லாத குறையை(நக்கலுக்கு இல்ல) சில வசனங்கள் (and certain witty conversations) தீர்த்து வைக்குது. உதாரணத்துக்குச் சில

1. "I hate violence against women, even if its not my jurisdiction"
(இது போன்ற ரசிக்கத்தக்க, இன்னும் சில பீட்டர் வசனங்கள் படத்துல இருக்குதுங்க)

2. "ஸாஃப்ட்வேரா நானா?... இல்லீங்க நான் ஹார்ட்வேருங்க"

3. "உங்க கூட பேசுனதும் என்னோட கஷ்டங்கள் எல்லாம் கொறஞ்சா மாதிரி இருக்கு"
"என் கூட பேசுனதும் எல்லாரும் இத தான் சொல்றாங்க"
(இந்த டயலாக்குக்கு முன்னாடி தான், ஜோதிகா அவங்க வாழ்க்கையில் நடந்த சோகங்களைப் பத்தியும், கமல் அவருடைய சோகங்களைப் பத்தியும் பேசிப்பாங்க)

4. "நல்லதாப் போச்சு...நீங்க தமிழா போயிட்டீங்க"
"இல்லை...தெலுங்கா இருந்தாலும் காப்பாத்தியிருப்பேன்"



ஆகஸ்டு திங்கள் 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை...12 மணி ஆட்டம். அப்பா! வரலாற்றுல பதிவாயிடுச்சு.

படத்தோட ஒளிப்பதிவு கண்ணுலயே நிக்குது. குறிப்பா தெள்ளத்தெளிவான நீல வானம் வரும் ஒரு சில காட்சிகள், அமெரிக்காவில் படமாக்கப் பட்ட இன்னும் நெறைய காட்சிகள் visual treatனு சொன்னாத் தப்பாகாது. இசையும் நல்லாருக்கு. பாடல்களை முதல் முறையா நான் நேத்து படத்துல தான் பாத்ததுங்கிறதுனால பாடல் வரிகள் எதுவும் நினைவு இல்ல. ஆனா "வெண்ணிலவே"ன்னு(இல்ல வெள்ளி நிலவேவா) வர்ற பாட்டு ரொம்ப நல்லாருக்கு, படமாக்கிய விதமும் அருமை.

முக்கியமான ஒரு மேட்டரை விட்டுப் போட்டேனுங்க. அமைதியானவரு, நல்லவருன்னு நம்பியிருந்த விவசாயி "இளா", இந்த படத்துல செய்யற அழிசாட்டியத்தை எல்லாம் சொல்லி மாளாதுங்க. நீங்களே அவரை என்னான்னு கேளுங்க :)


நம்ம சிற்றறிவுக்கு எட்டுன, மிகவும் கவனம் எடுத்து சொல்லிருக்குற சில விஷயங்கள்.
1. ப்ளாஷ்பேக்குல கமல் ஓட்டுற புல்லட்டோட நம்பர் ப்ளேட் சரியா கறுப்பு பலகை மேலே வெள்ளை நிற பெயிண்டுல எழுதிருக்கு(8-10 வருசத்துக்கு முன்னாடிங்கிறதுனால). ஆனா ஒன்னு கவனிக்காம விட்டுட்டாங்க...அந்த மாடல் புல்லட் 2004ல தான் வந்தது.

2. கொலையில உபயோகப் படுத்தப் பட்ட துப்பாக்கி பேரு கூடச் சொல்லிருக்காங்க - அது வால்தர் பிபிகே(Walther PPK). ஹிட்லர் தற்கொலை பண்ணிக்க உபயோகப் படுத்துன அதே துப்பாக்கியோட பேரு. ஆராய்ச்சி எல்லாம் நல்லாத் தான் பண்ணிருக்காங்க.

3. ஜோ தமிழ் பொண்ணுங்கிறதை மேசை மேல இருக்குற திருவாசகம் சிடியை வச்சு கமல் கண்டுபிடிச்சுடறாரு(ஒரு வார்த்தை கூட பேசாம...ஆனா அதுனால தான் கண்டுபிடிச்சாருங்கிற மாதிரி படத்துல வலியுறுத்தி சொல்லலை)

4. டைம்ஸ் ஸ்குவேர்ல மும்பை மாதிரி எப்பவும் கூட்டம் இருந்துட்டே இருக்கும்னு ஜோ சொல்ற டயலாக்கைக் கேட்டதும் மும்பை மக்கள் சந்தோசம் ஆகி உய் உய்னு விசில் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

படத்தைப் பத்தி இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேனுங்க. நம்ம ஜோ சொல்ற மாதிரி(ஜோதிகா இல்லீங்க...கடற்புறத்தான் ஜோ:) ) "இது நிராகரிக்கப் பட வேண்டிய படம் இல்லீங்க". அம்புட்டு தான்.

படம் பாத்தது மும்பை, மாதுங்காவுல இருக்குற ஆரோரா(Aurora) தியேட்டர்ல. படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இந்த தியேட்டர்ல தேசிய கீதத்தை இசைச்சாங்க. தேசிய கீதத்தை இசைக்கும் போது எந்திரிச்சு நிக்கனும்னும் மறக்காம எழுதி வச்சிருந்தாங்க. படத்தைப் பாத்து முடிச்சிட்டு வரும் போது மைசூர் கேப்ங்கிற ஓட்டல்ல ஃபுல் மீல்ஸ்(கர்நாடகா ஸ்டைல்ல). சாம்பார்ல் மட்டும் வெல்லம் போட்டு விட்டுருவாங்கங்குறதுனால வித்தியாசமா இருந்துச்சு. மத்தபடி ஆந்திரா ஸ்டைல் சாப்பாடு (காரம் மட்டும் சரியா இருந்துச்சுன்னா) தமிழ் நாட்டு சாப்பாட்டுக்கு ரொம்ப நெருக்கம். எதோ கெடச்ச வரைக்கும் லாபம்னு நல்லா கொட்டிக்கிட்டு வெளியே வந்தா ஒரு பேப்பர் கடைல தமிழ் பேப்பர், புக் எல்லாம் விக்குறாங்க.

குமுதம், விகடன், குங்குமம் மூனும் வாங்குனேன். இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்சுடுச்சுன்னு தெரிஞ்சிக்கிற மாதிரி நான் தெரிஞ்சிக்கிட்ட ஒரு அதி முக்கியமான சமாச்சாரம் லைலாவுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுங்கிறது தான். விகடன்ல ஜோ-சூர்யா, சோனியா-செல்வராகவன் ஜோடிகளுக்கு அறிவுரை எல்லாம் சொல்லிருக்காங்க. பெரிய இவனாட்டம் பொது அறிவு பதிவெல்லாம் போடுறோம், நமக்கு இது கூட தெரியாமப் போச்சே...நம்ம பசங்களும் யாரும் சொல்லாம போயிட்டாங்களேன்னு கொஞ்சூண்டு "ஃபீலிங்ஸா" இருந்துச்சு :(

பெஸ்ட் கண்ணா பெஸ்ட்டு(மும்பை ஞாபகார்த்தமா)

(பி.கு: சனிக்கிழமை சாயந்திரம் ஆரோரா தியேட்டருக்குப் போன் பண்ணி "எந்த தமிழ் படங்க ஓடுது"ன்னு இந்தியில கேட்டதுக்குக் கெடச்ச பதில் தான் "வெட்டேயாடூ விலயாடூ" :))

Friday, August 25, 2006

குயி...குயி...குயிஜு பதில்கள்

குயி...குயி..குயி...குயிஜு பதிவின் பதில்கள் கீழே.

1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக் கண்டத்தவர் யார்?
பர்மாவைச் சேர்ந்த திரு.மஹா த்ராய் சித்து யூ.தாண்ட்(Maha Thray Sithu U Thant). ஐ.நா.பொதுச் செயலாளர்களாக இது வரை இருந்தவர்களில், ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர் இவர் ஒருவர் தான். பஹ்ரைன், யெமன் நாடுகளுக்குள் உள்நாட்டுப் போர் மூளாமல் தடுக்க சமாதான முயற்சிகளையும், அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்த ஆறு நாள் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் தனது பணிக் காலத்தின் போது தாண்ட் பணியாற்றினார்.

http://en.wikipedia.org/wiki/Thant

2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின் திரைப்பெயர் என்ன?
'லஜ்ஜாவதி' கோபிகா தானுங்கோ...

நண்பர் பவன் தரும் கூடுதல் தகவல் : 'கேர்ளி ஆண்டோ' என்ற கோபிகாவின் இயற்பெயரை மாற்றி 'கோபிகா' என வைத்தவர் மலையாள திரைப்பட இயக்குநர் துளசிதாஸ்.

http://www.hinduonnet.com/thehindu/mp/2005/08/20/
stories/2005082003450100.htm


3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். எனக்கு பிடித்த ரஜினி படங்களில் இதுவும் ஒன்று. சரி! இப்ப கேள்வி...இப்படத்தில் 'பாட்சா' ரஜினி அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?
Pince-nez - பே நே என்று உச்சரித்தல் வேண்டும். இவ்வகை கண்ணாடிகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரபலமாக இருந்தன. காதின் மீது அமராமல் அணிபவரின் மூக்கின் மீது ஒரு சிறிய முட்டுக் கொடுத்து அமருவதால் இக்கண்ணாடிகளுக்கு ஆங்கிலத்தில் "Pinch nose" என்ற பொருள்படும் பிரெஞ்சு மொழிச் சொல்லான "Pince-nez" கொண்டு அறியப் பெறுகிறது.(காது மேலே உக்காறது, மூக்கு மேல முட்டு அப்படி இப்படின்னு எழுதும் போது எனக்கே காமெடியாத் தான் இருக்கு...ஆனாலும் எப்படி எழுதுறதுன்னு தெரியாததுனால அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கிறேன்)


பாட்சா படத்தில் ரஜினி அணியும் இக்கண்ணாடியை, நிஜ வாழ்வில் முன்னாள் அமெரிக்க அதிபர் தியோடோர் ரூஸ்வெல்ட்டும்(Theodore Roosevelt), திரையில் மேட்ரிக்ஸ் ஆங்கிலத் திரைபடத்தில் மொட்டைபாஸ் மார்ஃபியஸ் ஆக வரும் லாரென்ஸ் ஃபிஷ்பர்னும்(Laurence Fishburne) அணிந்து பிரபலப் படுத்தியிருக்கிறார்கள்.

http://en.wikipedia.org/wiki/Pince-nez

4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து எதிர்பார்க்கப் படுவது என்ன?
வருவேன் அல்லது வரமாட்டேன் என்று பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. Respondevu Sil vou plait என்ற பிரெஞ்சு மொழி சொற்றொடரின் சுருக்கம் தான் RSVP. வரவேற்பைத் தங்களுக்கு அனுப்பியவர், எத்தனை விருந்தினர்கள் வருவார்கள் எத்தனை பேர் வரமாட்டார்கள் என்று முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கும் அதன் அடிப்படையில் திட்டமிடுதலுக்காகவும் தங்களை பதில் அளிக்கக் கோருகிறார்.

http://dictionary.reference.com/search?q=RSVP

5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?
சௌரி சௌரா சம்பவம். 1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தியர்களுக்கெதிரான அடக்குமுறை சட்டமான ரௌலத் சட்டத்தையும், மற்றும் சில உரிமை மீறல் சட்டங்களையும் எதிர்ப்பதற்காகவே காந்தியடிகள் பொது ஒத்துழையாமை இயக்கத்திற்கு அரைகூவல் விடுத்தார். இவ்வியக்கம் உச்சத்தில் இருந்த போது, பிப்ரவரித் திங்கள் 1922 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூருக்கு அருகில் உள்ள சிறிய ஊரான சௌரி சௌராவில், ஒரு காவல் சாவடியைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீ வைத்துக் கொளுத்தியதில் 22 போலிசார் பலியாயினர். அஹிம்சை வழியைத் தம்முடைய ஆதரவாளர்கள் இன்னும் சரி வரப் புரிந்து கொள்ளாததை உணர்ந்த காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் தொடங்கினார். அதன் விளைவாக அவருடைய ஆதரவாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டனர். அதன் பிறகு காந்தியடிகள், வெள்ளையர்களால் ஆறாண்டு காலம் சிறை வைக்கப் பட்டார்.

http://en.wikipedia.org/wiki/Chauri_Chaura

6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."

---------- = "சத்தி முத்த வாவியுள்"

நாரைவிடு தூது - முழுபாடலும் கீழே.

நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்!
நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
சத்தி முத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எம்கோ மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே!

மன்னருக்குக் குறிப்பால் தம்முடைய வறுமை நிலையை உணர்த்த புலவர், நாரையைத் தூதாக விடுவதாக அமைந்த ஒரு பாடல். எழுதியவர் பெயர் 'சத்திமுத்தப் புலவர்' என நினைவு. இது புறநானூற்றுப் பாடலா என நினைவில்லை. நம்ம தளபதி சிபி புறம் தான்னு சொல்றாரு...சரியாத் தான் இருக்கும். இப்பாடலின் சுட்டியை மேற்கோள் காட்டிய ப்ரியன் மற்றும் கொத்ஸ் இருவருக்கும் நன்றி. இக்கேள்வியை எழுதுவதற்கு முன் இப்பாடல் வரிகளை நானும் திரு.சங்கர் அவர்களின் பதிவில் தான் சரி பார்த்தேன்.

நன்றி : திரு.சங்கர் - சுவடு

7. இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?
ரியோ டி ஜெனிரோ(Rio de Janeiro) நகரம், பிரேசில் நாடு. 2330 அடி உயரம் கொண்ட கார்கோவாடோ(Corcovado) மலையின் மீது இச்சிலை 1931 ஆம் ஆண்டு நிர்மானிக்கப் பட்டது. சிலையின் பெயர் 'Christ the Redeemer' (மீட்பர் இயேசு - சரி தானுங்ளே?). கிறித்தவ சமய சின்னமாக காணப் படுவதுடன் ரியோ நகரத்திற்கு அடையாளம் வழங்கும் ஒரு சின்னமாகவும், இயேசுவின் விரிந்த கைகள் பிரேசில் மக்களின் நேசத்தைக் குறிப்பதாகவும் திகழ்கிறது.


கொசுறு : இந்தச் சிலையை நான் முதன்முதலில் பார்க்க நேர்ந்தது ஜீ-எம்ஜிஎம் சேனலில் கண்ட 'Blame it on Rio' என்ற ஆங்கிலப் படத்தில் தான். டெமி மூரின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று. டெமி மூர் போன்ற புகழ் பெற்ற நடிகைக்கே இந்தப் படத்தில் ஒரு சின்ன சைடு ரோல் தான்னா பாத்துக்கங்களேன். படம் அங்கங்கே மெதுவா நகர்ந்தாலும் "ஜில்" டைப்பு தான் :)
http://en.wikipedia.org/wiki/Christ_the_Redeemer_(statue)

8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?
'தா' அல்லது தைவதம். இசையின் அடிப்படையான ஸ்வரங்கள் ஏழு. "ஸ ரி க ம ப த நி". ஒவ்வொரு ஸ்வரமும் ஒவ்வொரு இயற்கையில் ஒரு மிருகத்தாலோ அல்லது ஒரு பறவையாலோ எழுப்பப் படும் ஒலியை ஆதாரமாகக் கொண்டது. இதில் 'த' என்னும் ஸ்வரம்குதிரையின் கணைப்பை அடிப்படையாகக் கொண்டது. மற்ற ஸ்வரங்கள் எந்த ஒலியை அடிப்படையாகக் கொண்டது என்று அறிந்து கொள்ள ப்ரியன் கொடுத்த கீழே உள்ள சுட்டியைப் பாருங்கள்.

நன்றி : http://janhaag.com/NP23thats.html


9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?
பிகினி. 1940களில் ஆணுஆயுத பரிசோதனைகளை பசிபிக் பெருங்கடலில் ஹவாய் தீவுகளுக்கு மேற்கே உள்ள தீவுக் கூட்டங்களில் அமெரிக்கா மேற்கொண்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப் பட்ட ஒரு தீவுக் கூட்டத்தின் பெயர் தான் பிகினி(Atoll of Bikini). 1946இல் லூயி ரியாட்(Louis Reard) என்ற பிரெஞ்சு நாட்டு கார் பொறியாளர்(பாருங்கைய்யா பாருங்க!!) இரத்தினச் சுருக்கமான(!?) ஒரு பெண்கள் நீச்சலுடையை வடிவமைத்தார். அதே சமயத்தில் அமெரிக்கா தன்னுடைய அணுஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டிருந்ததால் அதை போன்றே ஒரு பெரிய பரபரப்பை இவ்வுடை ஏற்படுத்தும் என்று எண்ணி அதற்கு 'பிகினி' என்று பெயர் சூட்டினார்.

ஆமா...இதுக்கு சுட்டி கொடுத்து தான் நீங்க வெவரம் தெரிஞ்சிக்கனுமாக்கும்? :)

10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?
ஜெர்ரி லூயிஸ். இவர் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற காமெடி நடிகர். நாகேஷ் இவரைத் தன் ரோல் மாடலாகக் கருதினாலும், மனோரமா ஆச்சி என்ன சொல்லிருக்காங்கன்னு கொஞ்சம் படிச்சுப் பாருங்க.

http://www.hindu.com/2005/08/01/stories/2005080113040200.htm

கேள்விகளுக்குப் பதில் அளித்து இப்பதிவைக் கலகலப்பாகக் கொண்டுச் சென்ற நண்பர்கள் மகேந்திரன், மின்னல், பவன், பொன்ஸ், ப்ரியன், சின்னத்தம்பி, வணக்கத்துடன், தேவ், தளபதி சிபி, கோவி.கண்ணன், தம்பி, கப்பி, இலவசக் கொத்தனார், ராம் மற்றும் ஹிட்களை எகிறச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய பாராட்டுதல்களும் நன்றிகளும்.

Wednesday, August 23, 2006

குயி...குயி...குயி...குயிஜு

பத்து கேள்விகளைக் கொண்ட ஒரு பொது அறிவு கேள்வி-பதில் பதிவுங்க. முயற்சி செஞ்சு பாருங்க.

1. ஐக்கிய நாடுகளின்(United Nations) பொதுச் செயலாளராக இருந்த ஒரே ஆசியக்
கண்டத்தவர் யார்?

2. கேர்ளி ஆண்டோ(Girly Anto) என்ற இயற்பெயர் கொண்ட திரைப்பட நடிகையின்
திரைப்பெயர் என்ன?

3. 'பாட்சா' திரைப்படத்தை நம்மில் பலரும் பார்த்திருப்போம். இப்படத்தில் 'பாட்சா' ரஜினி
அணியும் இவ்வகை கண்ணாடிகளுக்கு பெயர் என்ன?


4. நண்பர் ஒருவர் தங்களுக்கு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருக்கிறார். அழைப்பிதழின் கடைசியில் RSVP என்று எழுதியிருக்கிறது. தங்களிடமிருந்து
எதிர்பார்க்கப் படுவது என்ன?

5. 1922இல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது ஒத்துழையாமை இயக்கத்தை காந்தியடிகள் விலக்கிக் கொள்ளச் செய்த நிகழ்வு எது?

6. "நீயும்நின் மனையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்
---------- ---------- தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி..."

---------- = ???

7. புகழ்பெற்ற இயேசுநாதரின் இச்சிலையை எந்த உலக நகரத்தில் காணலாம்?


8. இந்திய பாரம்பரிய சங்கீதத்தில், குதிரையின் கனைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள ஸ்வரம் எது?

9. அணுகுண்டு பரிசோதனையோடு தொடர்பு படுத்தப் படும் பெண்கள் நீச்சல் உடையின் பெயர் என்ன?

10. நடிகர் நாகேஷ் தன்னுடைய வழிகாட்டியாக(role model) கருதிய ஹாலிவுட் நடிகரின் பெயர் என்ன?

பதிவு தலைப்பு உபயம் : கெக்கேபிக்குணி அக்கா

Saturday, August 19, 2006

தடிப்பசங்க #5

காட்சி #5 : இலங்கை குறும்பு

எல்லாரும் நெல்லை குறும்பு. கோயமுத்தூர் குறும்பு அப்படின்னு அவங்கவங்க ஊரு குறும்பைப் பத்தி எழுதியிருக்காங்க. நான் ஒரு மாறுதலுக்காக 'இலங்கை குறும்பை' பத்தி சொல்றேங்க. இதுல பியூட்டி என்னன்னா கடைசி வரைக்கும் அது குறும்பா இல்லியான்னு தெரியாமலே போச்சு...அப்படிப்பட்ட ஒரு ஜகஜால குறும்பு. சொல்ல வர்ற மேட்டரு ரொம்ப சிறுசுங்கிறதால வழக்கம் போல நடு நடுவால செவண்ட்டி எம்எம் படமெல்லாம் ஓட்டுவோம்...அதையெல்லாம் கண்டுக்கப்பிடாது சரியா?

நாம ஒருத்தரு கிட்ட போய் பல்பு வாங்கிறதுக்கும் இன்னொருத்தர் பல்பு வாங்கிட்டு வர்றதைப் பாக்கறதுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்னு நெனக்கிறீங்க? பெருசா ஒன்னும் வித்தியாசம்
இல்ல...அடுத்தவன் பல்பு வாங்குனா அதப் பாத்து ரசிக்கிறதுல ஒரு சந்தோஷம்...நாலு பேரு கிட்ட பெருமையாச் சொல்லலாம் இன்னாரு இன்னாரு கிட்ட இன்ன தேதிக்கு இன்ன பல்பு வாங்குனாருப்பான்னு...ஏன் அப்படி பட்ட சமாச்சாரங்களை இந்த மாதிரி ப்ளாக்ல எழுதி கூட உலகம் முழுக்க சந்தோஷமாச் சொல்லலாம். அதுவே நாம வாங்குன பல்பா இருந்தா கொஞ்சம் அடக்கி வாசிப்போம்...அம்புட்டுத் தான் வித்தியாசம். சரி...அதான் நீ பல்பு வாங்கலையே...சந்தோஷமாச் சொல்லு அப்படீங்கறீங்களா? அதுவும் சரி தான். யப்பா! பல்பு வாங்குனவனே! பாத்துக்கப்பா ஜனங்க எல்லாம் கேக்கறதுனால தான் சொல்றேன். இப்பவே சொல்லிட்டேன்.

சென்னை மாநகரிலே...அல்லி மலர்கள் பூத்துக் குலுங்கும் தடாகங்களையும், அர்ச்சுனனுக்கு டிரைவர் வேலை பாத்த சாமிக்கு என்று ஒரு பழம்பெரும் வைணவத் திருத்தலத்தையும், காலத்தின் கோலத்தால் கலர் கலரான டோக்கன்களைக் கையில் கொண்டு புவ்வாவிற்காகக் காத்து நிற்கும் பேச்சிலர்களையும், மகாகவி பாரதி தன் கடைசி நாட்களைக் கழித்த இடத்தையும், தில்லையம்பலனின் பெயர் கொண்ட கிரிக்கெட் விளையாட்டுத் திடலையும், சென்னையின் வற்றாத ஜீவநதியான 'கூவம் அன்னையின்' இளைய சகோதரி 'பக்கிங்காம் சித்தியையும்' தன்னகத்தே கொண்ட, மதிப்பிற்குரிய மாண்புமிகு திருவாளர் ஐயா திரு கைப்புள்ள அவர்கள் தன்னுடைய சில கழுதை வயது(எத்தனைன்னு சொல்ல மாட்டோம்ல) வரை ஆட்சி செய்த அந்த புண்ணிய தலத்தின் பெயர் 'திருவல்லிக்கேணி'. சான்றோர் இத்திருத்தலத்தை 'தில்லக்கேணி'
என்றும் 'டிரிப்ளிகேன்' என்றும் வழங்குவார்கள்.

அங்கே எங்க பக்கத்து வீட்டுல இருந்த ஆண்ட்டியின் பொறந்த வீடு கொழும்பு, இலங்கை, அவுங்க ஆத்துக்காரருக்கு நம்ம தளபதியாருடைய ஊரான நாமக்கல் பக்கம். ஆண்ட்டிக்கும் அங்கிளுக்கும் தூரத்துச் சொந்தமாம். அவங்களோட குட்டிப் பொண்ணு பிருந்தா, தடிப்பசங்களுக்குத் தங்கச்சி இல்லாத குறையையும் எங்கம்மாவுக்கு பொண்ணு இல்லாத
குறையையும் தீர்த்து வச்சது. எங்க வீட்டுல வணிலா க்ரீம் வேஃபர்ஸும், "கேண்டோஸ்" சாக்லேட்டும், "தில்மா" டீயும், தொத்தலும், மாசி கருவாடும் இருந்ததுன்னா பக்கத்து வீட்டுல சிலோன்லேருந்து யாரோ வந்துருக்காங்கன்னு அர்த்தம். நமக்கு குறிப்பா இந்த தொத்தல்னா ரொம்ப புடிக்குமுங்க. "தொத்தல்"னா என்னன்னு கேக்கறவங்க திருவான்மியூர்ல இலங்கை தமிழர் ஒருத்தர் நடத்தற 'தமிழினி இனிப்பகம்'னு ஒரு கடை இருக்குதுங்க அங்கே "யாழ்ப்பாணம் தொத்தல்"ங்கிற பேருல இந்த இனிப்பு பலகாரம் சென்னையிலேயே கெடைக்குது. வாங்கி சாப்புட்டு பாருங்க. டேஸ்ட் சூப்பரா இருக்கும். அல்வாவுக்கும் ஆப்பத்துக்கும் ஒரு ஹைப்ரிட் குழந்தை பொறந்துச்சுன்னா எப்படியிருக்கும்? கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்கும் 'தொத்தல்'.

அதோட அவங்க வீட்டுல பேசற தமிழை நானும் என் தம்பியும் ரொம்ப உன்னிப்பா கவனிப்போம். அப்போ, அது அந்த வயசுக்கு உரிய ஒரு amusement(வியப்புன்னு) வையுங்களேன். உதாரணத்துக்கு 'சின்னப் பசங்க'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'பொடியன்மார்'னு சொல்லுவாங்க, 'முடியாது'ன்னு சொல்றதுக்குப் பதிலா 'இயலாது'ன்னு சொல்லுவாங்க, அதே மாதிரி லுங்கிக்குப் பதிலா 'சாரம்', ஜட்டிக்குப் பதிலா 'ஜங்கி', காசுக்குப் பதிலா 'சல்லி'. அதோட பேச்சுல எப்பவும் யார் கிட்டயும் ஒரு மரியாதை இருக்கும். அவங்க வீட்டுல இருக்குற தம்மாத்தூண்டு பசங்களைக் கூட வாங்க, போங்கன்னு மரியாதையாத் தான் பேசுவாங்க. அப்ஸையே சில சமயம் "இன்னா நைனா எப்பிடிக்கீறே?"ன்னு கேக்கற நமக்கு இதை எல்லாம் பாத்தா பயங்கர ஆச்சரியமா இருக்கும். ஆனா நம்ம சென்னை மட்டும் லேசுப் பட்டதுங்களா? செம்பரம்பாக்கம் தண்ணி குடிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நாளிலேயே அந்த ஆண்ட்டியோட பேச்சு கிட்டத் தட்ட "மெட்ராஸிஃபைட்
சிலோன் தமிழ்" லெவலுக்கு வந்துடுச்சு. ஆனாலும் அவங்களோட அப்பா கொழும்புலேயே இருக்கறவரு, அவரு எப்பவாவாது அவங்க மகளைப் பாக்க சென்னைக்கு வருவாரு. அவரு பேசறதைக் கேக்கும் போது இங்கிலீஸைக் கலக்காம தமிழை இப்படியும் பேச முடியுமான்னு மலைப்பா இருக்கும்.

தாத்தா - அதான் ஆண்ட்டி அவங்க அப்பா, நல்லா ஆறு அடி ஒயரம், படபடன்னு பேசற டைப். ஆண்ட்டி அவுங்க தோப்பனாரைப் பத்தி சொன்ன வரைக்கும் அவங்க வீட்டுல எல்லாரும் அவருக்கு ரொம்ப பயப்படுவாங்கன்னு தெரிஞ்சது. ஆனாலும் நம்ம இளவல், அதாங்க தடிப்பசங்கள்ல சின்னவரு வீட்டுல இருக்குற "ரெண்டாம் நம்பர்" பசங்களுக்கே உரிய 'இளங் கன்று பயமறியாது'ங்கிற குணம் உடையவரு. எப்பவும் எங்க வீட்டுக்கு வரும் போது 'ஜெம்ஸ்' வாங்கிட்டு வர்ற அப்பாவின் நண்பர் ஒருத்தர் அவசரத்துல ஜெம்ஸ் வாங்காம வந்ததும் "என்ன அங்கிள்!
இன்னிக்கு ஜெம்ஸ் வாங்கிட்டு வரலையா?"ன்னு அவரைக் கேட்டு கதிகலங்க வச்சு, அதுக்கப்புறமா வீட்டுல டின்னு வாங்கிக் கட்டிக் கொண்டவர். அதோட ஸ்கூல்ல பசங்க கிட்ட கேக்கற கடி ஜோக்குகளை எல்லாம் கேட்டுட்டு வந்து பட்டித் தொட்டி எங்கும் பரப்புவாரு.

ஒரு கடி மன்னனுக்கே உரிய வீரத்தோட படை எடுத்துப் போய் அடுத்தவங்களைக் கடிச்சிட்டு வர்றவரு. வயசு வித்தியாசம் இல்லாம, தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு பாகுபாடு இல்லாம யாரு கண்ணுல பட்டாலும் அவங்களைக் கடியா ஒரு கேள்வி கேட்டு வப்பாரு. அவங்க பதில் தெரியாம "ஆளை வுடு சாமி"ன்னு சரெண்டர் ஆகும் போது கடியா பதில் சொல்றது நம்மாளோட வழக்கம். உதாரணத்துக்கு அவருடைய அப்போதைய டேட்டாபேஸிலிருந்து சில கடிகள்.
1. கொக்கு ஏன் ஒத்தைக் காலுல நிக்குது?.
இன்னொரு காலையும் எடுத்தா கீழே விழுந்துடும்

2. பஸ்ஸைப் பின்னால தள்ளுனா என்ன ஆகும்?
பின்(Pin) வளைஞ்சுடும்

3. கல்யாணத்துல வாழை மரத்தை ஏன் கட்டி வைக்கிறாங்க?
கட்டி வைக்கலன்னா விழுந்துடும்.

இந்த மாதிரி ஆனவை. கேக்கறவங்களும் சில சமயம் பதில் தெரியாம நீயே பதில சொல்லுப்பான்னு சொல்றதுண்டு, சில பேர் இந்த சின்ன வயசிலேயே ஒனக்கு இம்புட்டு அறிவா(!)ன்னு பாராட்டிட்டு போனதும் உண்டு. அந்த மாதிரி பாராட்டிட்டு போற பார்ட்டிகளால அண்ணாத்தைக்கு ரொம்ப தான் துளிர் விட்டுப் போச்சு. போற வர்றவங்களை எல்லாம் கடிச்சி ரணகளம் ஆக்குறதைப் பொழுதுபோக்கா வச்சிருந்தான்.

ஒரு தரம் இப்படித் தான் ஆண்ட்டியோட அப்பா கொழும்புலேருந்து வந்துருந்தார். என் தம்பி "அம்மா அம்மா ஸ்கூல் லீவு விட்டு எனக்கு ரொம்ப போர் அடிக்குது. பக்கத்து வீட்டுல தாத்தா வந்துருக்காரு அவரைப் போய் கொஞ்சம் கடிச்சிட்டு வர்றேன்" அப்படின்னான்.

அம்மா "அதெல்லாம் ஒன்னும் வேணாம். அவருக்கு சட்டுன்னு கோவம் வருமாம். அந்த ஆண்ட்டி சொல்லிருக்காங்க. நீ பாட்டுக்கு எதாச்சும் லூசுத்தனமா ஒளறி வச்சு அவரு தப்பா எடுத்துக்க போறாரு"ன்னு சொன்னாங்க.

இதுக்கெல்லாம் அசருறவரா நம்மாளு? "அவரு கோவக்காரருன்னா அது அவங்க ஊருல. இது மெட்ராஸு, எங்க ஊரு. இங்கே வந்தா நாங்க கடிக்கத்
தான் செய்வோம். அதெல்லாம் தாக்குப் புடிக்க முடியலைன்னா அவரு அவங்க ஊருக்கே போவட்டும்" அப்படி இப்படின்னு வீராப்பு பேச ஆரம்பிச்சிட்டான். அந்த நேரம் எனக்கு எதோ வேலை இருந்ததுனால நான் வெளியே கெளம்பி போயிட்டேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு நான் திரும்பி வந்து பாக்குறேன். என்னோட தம்பி வீட்டுல அமைதியா ஒக்காந்துருக்கான். "என்னாடா பக்கத்து வீட்டுத் தாத்தாவைக் கடிக்கப் போறேன்னு சொன்னே இப்ப இங்க ஒக்கார்ந்து இருக்கே" அப்படின்னு அவனைக் கேட்டேன்.

அதுக்கு அவன் "அட போடா! மனுசனாடா அவரு! நானும் எத்தனையோ பேரைக் கடிச்சிருக்கேன். கடிக்க வந்தவனையே கதற கதற கடிச்சு
கொதறுனவங்களை இது வரைக்கும் நான் பாத்ததில்லை. சின்ன பையன்னு கூட பாக்காம அவரு என்னை போட்டு கடிச்சிட்டாரு"ன்னான்.

அதை கேட்டதும் எனக்கு ஒரே சிரிப்பு. ஆனா சிரிச்சிட்டா என்ன நடந்துச்சுன்னு கதை சொல்ல மாட்டானேனு மனசுக்குள்ளயே சிரிச்சிக்கிட்டு
ரொம்ப கரிசனமா "அவரு என்ன உன்னை விட பெரிய ப்ளேடா?"ன்னு கேட்டேன்.

அதுக்கு அவன் "நான்லாம் அவரு முன்னாடி ஜுஜுபி"அப்படின்னான்.

"சரி என்ன தாண்டா நடந்துச்சு. சொல்லு" அப்படின்னேன்.

"அவங்க வீட்டுக்குப் போனேன்னா? தாத்தா நான் ஒங்களுக்கு ஒரு ஜோக் சொல்லவா? அப்படின்னேன்".

அவரும் "சொல்லுங்களேன்" அப்படின்னாரு.

நானும் "ஒரு ஊர்ல ஒரு கொசுவும் ஒரு யானையும் ருந்துச்சாம்"அப்படின்னு ஆரம்பிச்சேன்.

அவரு அதுக்கு "ஒரு ஊரிலே ஒரு கொசுவும் ஒரு யானையும் தானா
இருக்கும்?" அப்படின்னாரு.

நான் அதுக்கு "இல்லீங்க தாத்தா...இப்ப நம்ம ஜோக்ல ஒரு யானையும் ஒரு
கொசுவும் தான் இருக்குது" அப்படின்னேன்.

அதுக்கு அவரும்"சரி சொல்லுங்க" அப்படின்னாரு.

"ஒரு கொசுவும் ஒரு யானையும் மோட்டார் பைக்ல ரேஸ் போய்க்கிட்டு இருக்குதுங்க. அப்போ திடீர்னு ஒரு லாரி அதுங்க மோட்டார் பைக் மேலே வந்து மோதிடுது"

"அவரும் ஒரு ரியாக்ஷனும் காட்டாம அதற்குப் பிறகு அப்படின்னாரு. நானும் சரி இன்னிக்கு நமக்கு நல்ல வேட்டை தான் அப்படின்னு நெனச்சி மேலே சொல்ல ஆரம்பிச்சேன்"

"லாரி இடிச்சதுல யானை செத்துப் போச்சு ஆனா கொசு சாகலை. எப்படின்னு சொல்லுங்க பாக்கலாம்"னு அவரைப் பாத்து கேட்டேன்.

தாத்தா என்ன சொல்லிருப்பாருன்னு தெரிஞ்சிக்க எனக்கா பயங்கர ஆர்வம். "அதுக்கு அவரு என்ன சொன்னாரு"ன்னு நான் கேட்டேன்.

"தெரியலியே நீங்களே சொல்லுங்களேன்" அப்படின்னாருன்னு என் தம்பி சொன்னான்.

"இதான் சாக்குன்னு நீ அவரை வுழுந்து கடிச்சிருப்பியே" அப்படின்னேன்.

"அட போடா! நான் அவரு கிட்ட எல்லார் கிட்டயும் சொல்ற மாதிரி கொசு ஹெல்மெட் போட்டுருந்துச்சு, யானை ஹெல்மெட் போடலை அதான் செத்துப் போச்சு அப்படின்னேன். அதுக்கு அவரு சொன்னதைக் கேட்டுத் தான் ஆடிப் போயிட்டேன்" அப்படின்னான்.

"அப்படி என்ன தான்டா சொன்னாரு" அப்படின்னு ஆர்வத்தை அடக்க முடியாம கேட்டேன்.

"இந்த கேள்வியை நான் கேட்டா அதுக்கு முக்காவாசி பேரு கொசு பறந்து போயிருக்கும்னு தான் சொல்லுவாங்க. ஆனா இவரு பதில் தெரியலைன்னு சொல்லிட்டு நான் பதிலைச் சொன்னதும் முகத்தைப் படு சீரியசா வச்சிக்கிட்டு - அது எப்படிங்க முரளி! கொசு ஒரு சின்ன உருவம் தானே? அதனால் எப்படி ஹெல்மட் அணிய எயலும்" அப்படின்னு கேட்டு என்னையே போட்டு கலாய்ச்சிட்டாரு.

எனக்கா இதை கேட்டதும் பயங்கர சிரிப்பு "நீ அவரு கிட்ட சொல்லி புரிய வக்கலியா?" அப்படின்னேன்.

"போடா! நானும் அவரு கிட்ட எவ்வளவோ சொல்லிப் பாத்தேன் அது தாங்க தாத்தா ஜோக்கேன்னு கூட சொல்லிப் பாத்தேன். கடியிலயே பெரிய கடி நம்ம ஜோக்கை ஒருத்தரு புரிஞ்சுக்காம கேள்வி கேக்குறாங்க பாரு அது தான். அவரு அதுக்கு கூட இருக்கட்டும் முரளி! ஆனாலும் கொசு போன்ற ஒரு சின்ன உருவத்தால எப்படி அவ்வளவு பெரிய ஹெல்மட்டை அணிய எயலும். இதை நீங்க எனக்கு வெளக்குங்கோ" அப்படின்னு என்னையே திரும்ப கேள்வி கேக்கறாரு.

"மோட்டார் பைக்ல கொசு எப்படி ஏறும்னு கேக்காம, கொசுவால எப்படி ஹெல்மட் அணிய எயலும்னு மட்டும் கேக்கறாரு. உண்மையிலேயே அவருக்கு ஜோக் புரியலியா, இல்ல புரிஞ்சிக்கிட்டு நம்மளைக் கலாய்ச்சி வுட்டுட்டாரான்னே புரியலைடா"அப்படின்னான்.

"சே! இது சென்னைக்கே பெருத்த அவமானம். ஊரு பேரே கெடுத்து வச்சிருக்கே! சிலோன்லேருந்து ஒருத்தரு வந்து உலக மகா கடியன் உன்னையே கடிச்சி வுட்டுட்டாரே! அவமானம் அவமானம்" னு நான் என் பங்குக்கு கொஞ்சம் எண்ணை ஊத்துனேன்.

"இவ்ளோ பேசறியே? அப்போ! நீ அவரு கிட்ட ஒரு ஜோக் சொல்லி அவரைச் சிரிக்க வையேன் பாத்துடுவோம்" அப்படின்னான்.

எங்க அண்ணனும் அவரு கிட்ட கடிபட்டுட்டான்னு சொல்லிக்கறதுக்கு என் தம்பி பண்ண திட்டம் கூடவா எனக்குப் புரியாது? அதுக்கப்புறம் அவரு கிட்ட கடி பட நான் என்ன மாங்கா மடையனா? "ஒரு ஜோக் சொல்லி கூட புரிய வைக்க முடியல பெருசா வந்துட்டான் மெட்ராஸ் காரன்னு சொல்லிக்க"ன்னு சொல்லி அந்நேரத்துக்கு நான் எஸ்கேப் ஆயிட்டேன்.

அதுக்கு அப்புறம் இந்த மாதிரி கடி ஜோக் சொல்லி அது எதிர்ல இருக்குற ஆளுங்களுக்கு புரியலைன்னா "கொசு ஒரு சின்ன உருவம் தானே"ன்னு ஒருத்தரை ஒருத்தரு கலாய்ச்சிக்குவோம்.

Monday, August 14, 2006

யப்பா...ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா...

நானும் களுதை இந்தப் படம் போடப் பிடாது...போடப் பிடாதுன்னு தான் பாக்குறேன், ஹூ...ம் ஒன்னும் முடியலை. படமாப் போட்டுத் தள்ளுனா 'படம் எடுக்கற பய'ன்னு நம்மளை கட்டம் கட்டி ஓரமா ஒக்கார வச்சிடுவாங்கன்னு படத்தைக் கையிலே வச்சிக்கிட்டு வேற எதாச்சும் எழுதறதுக்கு ரெண்டு நாளா முயற்சி பண்ணேன். எதுவும் வர்க் அவுட் ஆகலை. அதுனால இதுவும் 'படம் பார்த்து கதை சொல்' தான்.

சித்தூர்கட்லேருந்து மும்பைக்கு வர்ற வழியில உதய்பூரைச் சுத்திப் பாக்கப் போனோம். காலையில உதய்பூரைச் சுத்திப் பாத்துப் போட்டு சாயங்காலமா வண்டி ஏறி மும்பைக்கு வந்துட்டேன்(அப்பா...தனி டிராக் ஓட்டாம மும்பைக்கு என்னை கொஞ்ச நாள் தொரத்தி வுட்டத வெற்றிகரமாச் சொல்லியாச்சு). உதய்பூர்ங்கிறது ராஜஸ்தான் மாநிலத்துல இருக்கு. அங்கே எடுத்த படங்களை எல்லாம் போட்டா இது ராஜஸ்தானான்னு ஆச்சரியமா இருக்கும். அந்தளவுக்கு ராஜஸ்தான் பத்தி இருந்த தப்பான நம்பிக்கைகளை எல்லாம் தகர்த்து எறிய வச்ச ஒரு ஊரு உதய்பூர். அக்பரை எதிர்த்து போரிட்ட மஹாராணா பிரதாப்பின் தலைநகர் உதய்பூர். ரக்ஷா பந்தன் அன்னிக்கு நான் உதய்பூர்ல இருந்தேன். அங்கே ஊர் சுத்திப் பாத்து, புடிச்சப் படங்களை அப்புறமாப் போடறேன்(பதிவு கணக்கை பின்னே எப்பிடி ஏத்துறதாம்?)

இப்பல்லாம் எந்தப் பக்கம் திரும்பனாலும் ஃப்ரேம் ஃப்ரேமாவே தெரியுதா...அதுனால கார்ல போவும் போது கேமராவைத் தயாரா வச்சிக்கறது. ஆனா நம்ம கலை தாகத்தைப் புரிஞ்சுக்க(!) முடியாத நம்ம கூட இருந்த பயலுக பைக்ல பாய் ஃப்ரெண்டோட போற புள்ளையையும், "டைட்டீஸ்" போட்டுக்கிட்டு உதய்பூர் பேலஸ்ல சுத்திப் பாத்துட்டு இருந்த ஒரு வெள்ளைக்காரப் புள்ளையையும் படம் புடிக்கச் சொல்லிப் படுத்தியெடுத்துட்டானுவ. "யய்யா...நான் ஒரு கலைஞன்யா...இந்த மாதிரி அடுத்தவங்க பிரைவேசியில தலையிடற பாவமெல்லாம் ஒரு கலைஞன் பண்ணப்பிடாது"ன்னு சொல்லிப் புரிய வக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு.

சரி...கீழே இருக்குற இந்தப் படத்தைப் பாருங்க. நான் எடுத்தப் படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தப் படங்களில் ஒன்றுன்னு இதை பத்திச் சொல்லலாம். கார்ல போய்க்கிட்டு இருக்கும் போது விண்ட்ஸ்க்ரீன் வழியாப் பாத்தா நமக்கு முன்னாடி ஒரு தாத்தாவும் பேத்தியும் ஸ்கூட்டர்ல போய்க்கிட்டு இருக்காங்க. ஸ்கூட்டர்ல பெரும்பாலும் சின்னக் குழந்தைகளை முன்னாடி நிக்க வச்சு கூட்டிட்டுப் போறதை தான் பாத்துருக்கேன். ஆனா தாத்தா பின்னாடி சமத்தா ஒக்காந்துட்டு போற அந்த குழந்தையைப் பாத்ததும் படம் எடுக்கனும்னு கை துறுதுறுன்னுச்சு. அந்த காட்சியைப் பாக்கறதுக்கே ரொம்ப க்யூட்டா இருந்துச்சு. என்னென்னமோ எண்ணங்கள்...சுருக்கமா சொல்லனும்னா ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அவ்வளவு தான் இப்போதைக்குச் சொல்ல முடியுது. கார்ல டிரைவர் சீட்டுக்குப் பின் சீட்டுல ஒக்காந்திருந்தேன். பயலுக ஓட்டு ஓட்டுன்னு ஓட்டுறானுங்க இனிமே படம் எடுக்கக் கூடாதுன்னு பொட்டலம் கட்டி ஜோபியில வச்சிருந்த கேமராவை அவசர அவசரமா வெளியில எடுத்து விண்ட்ஸ்க்ரீன் வழியாவே புடிச்சது இந்தப் படம். அப்புறம் இன்னுமொன்னு...இந்தப் படத்தைப் பாத்துட்டு "உறவுகள்"ங்கிற தலைப்புல கவிதை எழுதனும்னும் முயற்சி பண்ணேனுங்க. அதுவும் வேலைக்காவலை. நீங்க யாராச்சும் ஒரு ட்ரை வுடுங்களேன்.

பெரிய சைஸ்ல எடுக்கப்பட்ட இந்தப் படத்தைத் தாத்தாவையும் பேத்தியை மட்டும் ஜூம் பண்ணி தனியா கீழே போட்டுருக்கேன். படத்தை அப்புறமா பாக்கும் போது ஒரு ஆச்சரியம். எடுக்கும் போது தெரியாத ஒரு சேதி...இந்தப் படத்தைக் கம்ப்யூட்டர் திரையில பாக்கும் போது தெரிஞ்சது. ஒரு (ஒரு சின்ன க்ளூ: படத்திலுள்ள தாத்தாவுக்கும் பேத்திக்கும் தொடர்புள்ள ஒரு விசயம் தான்) உங்களுக்குத் தெரியுதுங்ளா ஷெர்லாக் ஹோம்ஸுங்ளா?

Thursday, August 03, 2006

கயவன் பதில்கள் (அ) ஹாய் கயவன்!

ஹலோ! நான் தாங்க கயவன் பேசறேன். கேள்வி எல்லாம் பெருசா கேட்டுப் புட்டு பதிலும் சொல்லாம, ரிசால்டும் சொல்லாம பசிக்குதுன்னு நைட்டு எட்டரை மணிக்கே ஓடிப் போன அதே கயவன் தானுங்க. இப்ப நேத்து கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதா சொல்லி ஒரேடியா ஒரு பதிவு கயமைத்தனமும் பண்ணிக்கிறேனுங்க.

1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?
பதில் : அன்னை தெரசா(Mother Teresa). இவர் அல்பேனியா(Albania) நாட்டைச் சேர்ந்தவர். பலர் சரியான பதிலைக் கூறியிருந்தார்கள்.


2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?
பதில் : முதல் மாஸ்டர் கம்போசர்களில் ஒருவர் என அழைக்கப்படும் மோசார்ட்(Wolfgang Amadeus Mozart). இசை கோர்வையின் பெயர் 'தி ரிகொய்ம்'(The Requiem'). தன்னுடைய இறப்பிற்கு சில தினங்களுக்கு முன்னர் வேறு ஒருவருடைய மனைவியின் நினைவு நாள் அன்று இசைக்க தேவை என்று ஒரு தூதுவர் வந்து கேட்க, The Requiem முயற்சியில் ஈடுபட்டார் மோசார்ட். ஆனால் முழுதும் எழுதி முடிப்பதற்கு முன்னர் மோசார்ட் மர்மமான ஒரு காய்ச்சல் கண்டு காலம் ஆனார். மோசார்ட்டின் சிறந்த படைப்புகளில்(Master piece) ஒன்றாகக் கருதப்படுவது 'The Requiem'. இசையமைப்பாளரின் பெயரைச் சிலர் கூறியிருந்தாலும், இசை கோர்வையின் பெயரை யாரும் சொல்லவில்லை.

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)

பதில் : வியட்நாம் போரின் போது விமானப்படையின் நபாம்(Napalm) என்ற ரசாயனத் தாக்குதலின் போது தன் உடம்பு பாதி எரிந்த நிலையில் ஓடி வரும் சிறுமியின் படம் அது. இப்போரின் அவலங்களையும், கொடுமைகளையும் உலகத்தினவர்களைத் திரும்பி பார்க்கச் செய்த படம். சிறுமியின் பெயர் ஃபான் தி கிம் ஃபுக்(Phan Thi Kim Phuc), படம் எடுக்கப்பட்ட நாள் ஜூன் 8, 1972. புகைப்படம் எடுத்தவர் Associated Pressஐச் சேர்ந்த நிக் உட்(Nick Ut). ஒடம்பு எரிஞ்ச நெலையில ஒடியாற புள்ளையைப் படம் எடுத்துருக்கானே பாவி, காப்பாத்தக் கூடாதுன்னு என்னைப் போலவே நெனக்கிறவங்களுக்கு அந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிரைக் காப்பாற்றியதும் நிக் தான்.

4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?
பதில் : டீபீ(Teepee). Red Indians என்று அழைக்கப் பட்டுக் கொண்டிருந்த இவர்களைத் தற்போது American Indians என்றோ Apache Indians என்றோ அழைக்கிறார்கள்.

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?
பதில் : கென்னத் பெயின்பிரிஜ்(Kenneth Bainbridge). மென்ஹட்டன் பிராஜக்ட்(Manhattan Project) என்று பெயர் கொண்டு இயங்கிக் கொண்டிருந்த அணுகுண்டு சோதனைகளின் முடிவுகளைப் பார்த்து பிராஜெக்டின் இயக்குநர் ஓபன்ஹெய்மரிடம்(J.Robert Oppenheimer) கூறியது. பலரும் ஓபன்ஹெய்மர் என்று பதிலளித்திருந்தனர். ஓபன்ஹெய்மர் கூறியது வேறு ஒரு மிகப் பிரபலமான வாக்கியம், பகவத் கீதையிலிருந்து எடுத்தாண்டது "I am become Death, the destroyer of worlds".

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?
பதில் : செப்புகு(Sepukku) அல்லது ஹராகிரி(Hara Kiri). எதிரியிடம் மாட்டிக் கொள்வதை விட மரணிப்பதே ஒரு சமுராய் வீரனுக்கு அழகு என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. எப்படி தற்கொலை செஞ்சிப்பாங்கன்னா கேக்கறீங்க? ரொம்ப சுலபம் ஜெண்டில்மென், உங்க வயித்தை நீங்களே கிழிச்சிக்கிட்டா நீங்களும் ஹரா கிரி செஞ்சிக்கிட்ட ஒரு சமுராய் வீரர் தான்.

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?
பதில் : கர்சன் துரை(Lord Curzon). கிழக்கு வங்காளம் என்றும் மேற்கு வங்காளம் என்றும் பிரிவினை நடந்த ஆண்டு 1905. கிழக்கு வங்காளத்தின் தற்போதைய பெயர் பங்கிளாதேஷ்.

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?
பதில் : பிரேணாக்(Brannock). ரொம்ப கடினமானதுன்னு நான் நெனச்ச கேள்வி. இதுக்கும் பல பேர் சரியான பதில் சொல்லிட்டாங்க. முதலில் விடை தந்தவர் ஒரு அனானிமஸ். அப்பா அனானிமஸுங்களா! உங்க பேரையும் கூட போட்டுக்கக் கூடாதா? தாவு தீந்துடுச்சு.

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.
பதில் : இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்(Winston Leonard Spencer Churchill). உலகத் தலைவர்களின் பேச்சுகளிலேயே மிகவும் தாக்கத்தை(inspirational) ஏற்படுத்திய ஒரு உரை.
http://www.winstonchurchill.org/i4a/pages/index.cfm?pageid=391

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?
பதில் : பவேரியா மோட்டர் வர்க்ஸ்(Bavaria Motor Works). ஜெர்மன் மொழியில் 'Bayerische Motoren Werke AG'

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?
பதில் : இந்திய மேலாண்மை கழகம்(Indian Institute of Management, Ahmedabad).

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?
பதில் : கே.பி.சுந்தராம்பாள். படத்தின் பெயர் 'நந்தனார்'. ஒளவையார் என்று பலரும் கூறியிருந்தார்கள். பெண் வேடமிட்டு ஆண்கள் நடித்த அக்காலத்தில் ஆண் வேடமிட்டு கதாநாயகனாக(!) ஒரு பெண் நடித்தப் படம். இப்படத்தில் நடிப்பதைத் தவிர்க்க ஒரு லட்சம் ரூபாய் வேண்டுமென்று கே.பி.சு கேட்க, தயாரிப்பாளரும் ஒத்துக் கொண்டதால் இப்படத்தில் இவர் நடித்தார் என்று எப்போதோ கேள்வி பட்டது.

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?
பதில் : ஸ்கிராபிள்(Scrabble). சிலர் விளையாட்டின் பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டு உருவாக்கப் படுகிறது என்று எண்ணிவிட்டனர் என நினைக்கிறேன்.

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?
பதில் : மொதல்ல என்னை மன்னிக்கனும். படத்தோட பேரு "Steam Boat Willie". நான் தவறுதலா 'Free Boat Willy'னு கொடுத்துட்டேன். இப்படத்தில் தோன்றிய அந்த ஹாலிவுட் கதாபாத்திரம் 'மிக்கி மவுஸ்'(Mickey Mouse)

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?
பதில் : ஜெனரல் நார்மன் ஸ்வார்ஸ்காஃப்(Gen.Norman Schwarzkopf)

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)
பதில் : டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனி(Danish East India Company). எங்கோ இருக்கும் ஸ்கேண்டினேவிய நாடான டென்மார்க்கிலிருந்தும் தமிழ்நாட்டில் வந்து வணிகம் செய்திருக்கிறார்கள் என நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது. ஆயினும் ஆங்கில மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிகளைப் போல டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவில் பலநாள் நிலைக்க இயலவில்லை. பலரும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்று கூறியிருந்தனர்.

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?
பதில் : ஒட்டகம். ஹி..ஹி...

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?
பதில் : திலிப் குமார். கொத்ஸ் சொன்னது போல 'மருதநாயகம்'(வரலாற்று நாயகன்) இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டதும் அவர் பெயர் முகமது யுசுப் கான் என்றானது.

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த வரலாற்றுச் சம்பவத்தினைத் தழுவி எடுக்கப் பட்டது?
பதில் : ஃபிரெஞ்சு அதிபரான சார்ல்ஸ் டி கால்(Charles de Gaulle)இன் மீது ஏற்பட்ட கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது.

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?
பதில் : சுப்பிரமணிய பாரதி. மிகச் சிலரே முயன்றிருந்தனர். சரியான பதில் அளித்தவர் ஒருவரே- அவர் நண்பர் முத்துகுமரன். சூப்பருங்க. இது எங்கோ எப்போதோ படித்தது. எனக்கும் மேற்கோள் எதுவும் நினைவில்லை. பாரதியாருக்கு அவருடைய இளைய சகோதரர் ஆங்கிலத்தில் கடிதம் எழுதியதும் அதை கண்டு 'நம் நாட்டில் எத்தனையோ மொழிகள் இருக்க அயலானின் மொழியான ஆங்கிலத்தில் ஏன் கடிதம் எழுதினாய். வேண்டுமானால் சம்ஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று தன் சகோதரருக்கு அறிவுறுத்தி பதில் மடல் இட்டார்.

கேள்வியைப் படித்ததும் தமிழை இகழ்ந்து சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது என்று பாரதியார் கூறியது போல தோன்றினாலும், இங்கு பாரதியார் அவ்வாறு எழுதியதின் காரணத்தை(context) ஆராய்வது நலம். பதினான்கு மொழிகளை அறிந்த ஒரு தமிழ் கவிஞன், 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று நவின்றவன் சமஸ்கிருதத்தில் காயிதம் எழுதச் சொல்வதன் காரணம் என எனக்குப் படுவது - நம்மை அடிமை படுத்தி வைத்திருக்கும் மாற்றானின் மொழியான ஆங்கிலத்தைப் பேசுவதிலும் வளர்ப்பதையும் காட்டிலும் நம்மவர்களின் மொழியினை அறிந்து கொள்வதும் வளர்ப்பதும் தேசப் பற்றையும் வளர்க்கும் என்ற சிந்தனை இருந்திருக்க வேண்டும். I also feel that Bharathiar tries to strike a right balance between மொழிப் பற்று(Linguistic fervour) and தேசப் பற்று(Patriotism). ரெண்டு வரி தாங்க சொல்லிருக்கேன். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.

என்னடா நேத்து க்யூஸ் ப்ரோக்ராம், இன்னிக்கு திடீர்னு அறிவுரை - என்னாச்சு இவனுக்கு? எதனால இப்படி பிளேடு போடுறான்னு தானே நெனக்கிறீங்க? ப்ளாக்கர் சொல்லுது இது என்னோட நூறாவது பதிவாம். சந்தோஷ் தன்னோட நூறாவது பதிவுல கார்கில் வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நல்ல பதிவு போட்டது போல நாமும் எதாச்சும் உருப்படியா செய்யனும்னு ஒரு ரோசனை இருந்துச்சுங்க...அதுக்குத் தான் கொஞ்சம் பீட்டரைக் கலந்து வுட்டு ஒரு கருத்து சொல்லிருக்கொம்ங்க. நீங்கல்லாம் நெனக்கிற மாதிரி இன்னும் முழுசா முத்தலீங்கோ.

அப்புறம் குவிஸ்ஸில் யார் ஜெயிச்சாங்கனு ஒரு கேள்வி வரும். நூறாவது பதிவைச் சாக்கா வெச்சு இன்னுமொரு கயமைத் தனம் பண்ணிக்கிறேன். நம்பர் ஒன்னு, ரெண்டுன்னு யாரும் இல்லீங்கோ. க்யூஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை நாம புதுசா என்ன தெரிஞ்சிக்கிட்டோம்ங்கிறதை மட்டும் தான் கணக்குல எடுத்துக்கனும்...நான் அப்படி தான் எடுத்துக்கிருவேன். படுவா! நீ வெளியே வாடா எங்களை எல்லாம் மாங்கு மாங்குன்னு ஒக்காந்து பதில் போட வச்சிட்டு பெலசாஃபியா பேசுறே...ஒனக்குன்னு ஆட்டோ வருதுடின்னு மக்கள்ஸ் சவுண்டு வுடறது கேக்குதுங்க. அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதீங்க. எனக்கு இன்னும் புள்ளக்குட்டி கூட இல்லீங்க. அதுனால பாவம் பாத்து வுட்டுடுங்க. அப்பிடியே தலை மேல துண்டைப் போட்டுக்கிட்டு குதிச்சு ஓடிப் போயிடுறேன்.

க்யூஸ்(குவிஸ் தான்) நடத்தறது எம்புட்டு கஷ்டம்னு புரிஞ்சிடுச்சுங்க. அமோக ஆதரவு தந்த நண்பர்கள் மகேந்திரன், மோகன் தாஸ், வியாபாரி, இளா, தேவ், கொத்தனார், உங்கள் நண்பன் சரவணன், மா.சிவகுமார், கோவி.கண்ணன், மின்னல், குமரன் எண்ணம், நியூஸ் ஃப்ரம் ப்ரசன்னா, லப்டப், மங்கை, ராசா, சிபி, நன்மனம், கப்பி பய, முத்துகுமரன், பிரபு ராஜா, ராம், ஹரிஹரன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பாத நாலு அப்ரெண்டிசுங்க...சே அனானிமஸ்கள் அனைவருக்கும் எனது நன்றி. வின்னர், ரன்னர் தான் சொல்லலை எங்க பேரைக் கூட ஏன் சொல்லலைனு கேட்கற மாதிரி யாரு பேராவது வுட்டுப் போயிருந்தா உங்க பேரையும் சேத்துக்கங்க. நூறு பதிவுகள் வரை என்னை வளர வைத்து அழகு பார்த்த அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள கடமை பட்டிருக்கிறேன்.

Wednesday, August 02, 2006

ஜிகே குவிஸ்(சிரிப்புக்காக இல்லீங்கோ...)

பாஸ்டன் பாலாவும், நம்ம வெங்கட்ரமணியும் கண்ணைக் காட்டி புதிர் எல்லாம் போட்டாங்க...அதப் பாத்து நமக்கும் ஒரு ஆசை. யாரையாச்சும் கேள்வி கேக்கனுமின்னு. ஆசை யாரை விட்டுச்சு சொல்லுங்க? சரி! இங்கே ஒரு 20 கேள்வி கேட்டிருக்கேன். இங்கண இருக்குற மண்டைங்க எல்லாம் அத நிமிசத்துல ஊதித் தள்ளிடுவாங்கன்னு தெரியும். அதுனால எல்லோரும் பங்கு பெறனும் என்ற நல்ல எண்ணத்தில்(குறிப்பா இந்திய குடிமகன்கள்) ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணிட்டு விடைகளை வெளியிடலாம்னு ஒரு எண்ணம்.

சரி இப்ப கேள்விகள்.
1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?

2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)


4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த பிரபலத்தின் மீது நடைபெற்ற கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது?

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?

தொப்பி தந்திரம்

"போனா போவுதுன்னு ஒரு மரியாதைக்கு எதோ நல்லாருக்குன்னு சொன்னா ஒரே படமாவாப் போட்டு ரவுசு பண்ணறேன்னு கேட்டு நீங்கல்லாம் என்னைய நாலு சாத்து சாத்துன்னா தான் நான் அடங்குவேன் போலிருக்கு. சாத்துறதுக்கு முன்னாடி கீழே இருக்குற படத்தை எல்லாம் பாத்துடுங்க. இல்லன்னா எடுத்ததெல்லாம் வீணாப் போயிடும்..."

1. ஞாயித்துக் கெழமை சாங்காலம் அப்பிடியே காலாற ரோட்டோரமா நடந்து வந்தேனா...பாத்தா கரெண்டு கம்பியில ஒரு காக்காவோ, குருவியோ...இல்ல எதோ ஒரு பறக்கற அனிமல்ஸ் ஒக்காந்துருக்கு. உடுவமா...லபக்குன்னு புடி ஒரு படம்


2. பறவை தான்னு மக்கள்ஸை நம்ப வைக்க ஒரு க்ளோசப் ஷாட்டு...


3. போன பதிவுல சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ஒரு கோணத்துல...


4. சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மாலையில்...


5. என் இனிய தமிழ் மக்களே...பூக்கள் விரியும் ஓசையையும், வண்டுகள் தேன் அருந்துவதையும் அந்த பூக்களுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன் அப்பிடின்னு பாரதிராஜா நாடோடித் தென்றல் படம் துவக்கத்துல சொல்லுவாருல்ல? அதே மாதிரி பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை பூக்களுக்கே தெரியாமல் ஒரு படம் எடுக்கனும்னு பாக்குறேன்...வண்டையும் காணலை...தேனியையும் காணலை. அட அத வுடுங்கப்பா அட்லீஸ்ட் ஒரு ஹம்மிங் பர்டாவது வந்துருக்கலாமில்ல. அதுவும் வரலை. நம்ம ஹேப்பி ஹவர்ஸூ...நமக்கு பூவாண்ட கெடச்சது ஒரு கட்டெறும்பு தான். கட்டெறும்போ, கழுதையோ அப்படியே அதையும் ஒரு கோழி அமுக்கு. சூப்பரா இருக்கில்ல? தேங்க்யூ...தேங்க்யூ.


6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...


7. காடு மேடெல்லாம் திரிஞ்சு படம் புடிக்கற வேலை வெக்காம அழகா கட்டை செவுத்து மேல வந்து ஒக்காந்துச்சு ஒரு ஓணான். தோள்பட்டையில ஆர்மோனியம், கையில மொபைல் இதெல்லாம் வச்சிக்கிட்டே புடிச்ச படம் இது.


8. கீழே இருக்குற படத்தைப் பத்தி கண்டிப்பா சொல்லியே தீரனும். நம்ம இளைய தளபதி விஜய் அவரே பாடுற பாட்டுங்க வரும் போது 'இப்பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்'னு திரையில போட்டு பாத்துருப்பீங்க, அது மாதிரி இந்தப் படத்தைப் பத்தி சொல்லனும்னா 'இப்படத்தைக் கெடுத்தவர் உங்கள் வேளாண் தமிழர் விவசாயி இளா'ன்னு கண்டிப்பாச் சொல்லியே தீரணும். சீதேவியை மூதேவி ஆக்குன பெருமை அவரையே சேரும். அது என்ன சீதேவி, மூதேவிங்கிறீங்களா? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. கேக்கறீங்களா?


ஒரு ஊர்ல ஒரு வெவசாயி இருந்தாராம். நம்ம வேளாண் தமிழரை மாதிரி இல்ல...இவரு ரொம்ப நல்லவரு. சிறந்த இறையாளர். ஒரு முறை என்னாவுதாம்... திடீர்னு அவரு முன்னாடி மகாலட்சுமியும்(சீதேவியும்) அவங்களோட மூத்த சகோதரியான பெரியம்மை(மூதேவியும்) வந்து நிக்கிறாங்களாம். ரெண்டு பேரும் "எங்க ரெண்டு பேத்துல யாரு ரொம்ப அழகுன்னு சொன்னாத் தான் ஆச்சுன்னு" நம்ம 'நல்ல வெவசாயி' இருக்காரில்ல அவரை அழகிப் போட்டி ஜட்ஜ் ஆக்கிட்டாங்களாம். "ஐயயோ என்னடா இது வம்பாப் போச்சு...சீதேவி அழகுன்னு சொன்னா மூதேவி கோச்சிக்கிட்டு நம்ம வீட்டுல வந்து ஒக்காந்துக்குவா...மூதேவி அழகுன்னு சொன்னா சீதேவி கோச்சிக்கிட்டு போயிடுவா...அப்புறம் நாம வெளங்குனா மாதிரி தான்"னு நெனச்சிக்கிட்டாராம். எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சுப் பாத்துட்டு "யம்மா சீதேவி! முன்னழகுல நீ ரொம்ப அழகு, பின்னழகுல உங்கக்கா ரொம்ப டாப்புன்னு சொல்லி சமாளிச்சாராம்". அதாவது சீதேவி வீட்டுக்குள்ள வரும் போதும் மூதேவி வீட்டை விட்டு போகும் போதும் அழகுன்னு ஒரு politically correct answerஐச் சொல்லி எஸ்கேப் ஆனாராம்.

இந்த கதைக்கும் நம்ம 'ஒரு மார்க்கமான வெவசாயிக்கும்' என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்களா? மேல இருக்கிற மொத ஓணான் படம் புடிக்கும் போது தான் இளா என்னோட மொபைலுக்கு ஃபோன் பண்ணாரு. "ஓணானைப் படம் புடிச்சிட்டு இருக்கேன் சாமி"ன்னு சொன்னாலும் வுட மாட்டேங்கிறாரு. அவரு டப்பாஸ் வெடிச்சி முட்டாய் குடுத்த ஒரு விடயத்தைச் சொல்லியே தீருவேன்னு பச்சப்புள்ளயாட்டம் அடம் புடிக்கிறாரு. "சரி ஃபோன் பண்ணிட்டீங்க...சொல்லுங்க"ன்னு சொல்லிட்டு கழுத்தைச் சாய்ச்சு பொபைல்ல அவரு பேசறதைக் கேட்டுக்கிடே மொதப் படத்தை எப்படியோ புடிச்சிட்டேன். ஆனா இது போதாது, அடுத்ததா க்ளோசப்ல ஓணானோட முட்டை கண்ணு மட்டும் தெரியற மாதிரி ஒரு சரித்திரப் புகழ் பெற்ற படம் புடிக்கணும்னு ஒணானுக்கு ரொம்ப கிட்ட போயிட்டேன். ஓணானும் ஆடாம அசையாம ஒக்காந்து இருந்துச்சு. வெவசாயி பேசறதை மெய்நிகரா கேட்டுக்கிட்டே நான் ஓணான் கிட்ட போய் கேமராவை ஃபோகஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரியா அந்த நேரம்னு பாத்து 'என்னய்யா சவுண்டே காணும்' னு நம்மாளு கொரலு வுட்டாரு பாருங்க...நானும் என் மெய்நிகர் நிலையிலேருந்து மெய்நிலைக்கு வந்து "இருக்கேஞ் சாமி"ன்னு கொரல் குடுத்தேன் பாருங்க...அந்த சத்தத்துல ஓணான் பயந்து போய் ஒரு 180 டிகிரி டர்ன் அடிச்சுடுச்சு. அதுனால ஓணானின் முன்னழகைப் பாத்து படம் எடுக்க இருந்த இருந்த நானு அதோட பின்னழகைப் படம் புடிக்கிற அவல நிலைக்கு ஆளாயிட்டேன். இப்ப சொல்லுங்க மகாஜனங்களே...சீதேவி மாதிரி இருந்த என்னோட ஓணானை மூதேவி ஆக்குனதுக்கு யாருங்க காரணம்? இவரை என்ன பண்ணா தகும்? ஆனாலும் அவருக்கு ரொம்பத் தான் ஓளவியமுங்க. நான் படம் எடுத்து பெரிய ஆள் ஆயிடக் கூடாதுன்னு அவரு பண்ண சூழ்ச்சியினால தான் இப்பிடி ஆகிப் போச்சு. "ஏற்கனவே நான் காதல் கவிதை எழுத டிரெயினிங் குடுங்க சாமி"ன்னு கேட்ட போதும் எதேதோ சொல்லி என்னை ஏமாத்திட்டாரு...இப்ப நானே என்னோட முயற்சியில பெரியாளு ஆக ட்ரை பண்ணறதுலயும் மண்ணள்ளிப் போடறாரு. ஒரு கலைஞனைத் தன்னோட கலை தாகதத்தைத் தணிச்சிக்க விடாம முட்டுக்கட்டை போடறாரு. நீங்களே என்னான்னு கேளுங்க. இதுக்கு எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்.

சரி...இவரு தான் இப்படின்னா...என் கூட இருக்குறவனுங்க அதுக்கு மேல "விவசாயி டு தி பவர் சிக்ஸ்". இவ்ளோ கஷ்டப் பட்டு ஓணான் படத்தை எடுக்க முயற்சி பண்ண எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஓணான் கடிக்குமா? ஓணான் கடிக்கு வெஷம் இருக்குமான்னு? அங்க பக்கத்துல நின்னுட்டு இருந்த என்னோட கலீக்(இந்தி பையன்) ஒருத்தன் கிட்ட கேட்டேன். "ஆமாங்க இதுக்குப் பேரு 'கிட்கிட்'(இந்தியில) இதோட கடிக்கு வெஷம் இருக்கு"ன்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டான். ஆனா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தியில 'கிட்கிட்'னா பச்சோந்தின்னு அர்த்தம். "இல்லீங்க நீங்க படம்புடிச்ச அனிமல்ஸ் பேரு தான் கிட்கிட்"ங்கிறான். அதோட சிவாஜி இந்த 'கிட்கிட்'டை வச்சுத் தான் எதோ ஒரு கோட்டையைப் பிடிச்சாருன்னு சொன்னான். சிவாஜின்னா நடிகர் திலகம் சிவாஜி இல்ல...சத்ரபதி சிவாஜி. சத்ரபதின்னா சரத்குமாரான்னு யார்னா கேட்டீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். அதாவது சிவாஜியின் வீரர்கள் 'கிட்கிட்' வாலுல கயித்தைக் கட்டி கீழே நின்னுக்கிட்டு தாங்க புடிக்க நினைக்கிற கோட்டை மதில் சுவரை நோக்கி வீசுவாங்களாம். நம்ம 'கிட்கிட்'டும் கோட்டை மதில் சுவத்தைக் கெட்டியமாப் பிடிச்சுக்குமாம்...அதுக்கப்புறம் வீரர்கள் கிடுகிடுன்னு(கிட்கிட்னு இல்ல)கயித்தைப் புடிச்சு மேலே ஏறி டிஷ்யூம் டிஷ்யூம் எல்லாம் போட்டு கோட்டையை மீட்டுடுவாங்களாம்.

"இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும்பு, இவன் என்னடான்னா ஓணானுக்குப் பச்சோந்தியோடப் பேரை வச்சி உடும்புங்கிறானே"னு எனக்கு ஒரே கொழப்பம். "ஆர் யூ ஷ்யூர்"னு கேட்டேன். அவனும் நம்மளை மாதிரியே நேட்ஜியோ பாக்குற பார்ட்டியா...அத வச்சி அடுத்ததா அடிச்சி விட்டான் ஒரு மெகா பீலா "ஐ ஆம் வெரி ஷ்யூர்...இந்தோனேசியாவுல இந்த சின்ன கிட்கிட் மாதிரியே பெரிய சைஸ்ல கிட்கிட் ஒன்னு இருக்கு...அதுக்கு கோமோடோ டிராகன்னு பேரு...அது ஆளையே அடிச்சித் தின்னுடும். பயங்கர வெஷம்" அப்படின்னான். "டேய் எனக்குத் தெரிஞ்சு ஓணானுக்கு இங்கிலீசுல Garden Lizardனு பேரு...நீ சொல்ற 'கிட்கிட்'ங்கிறது கலர் மாறுற பச்சோந்தி(Chameleon). சிவாஜி கோட்டையைப் புடிக்க உபயோகிச்சது உடும்பு(Iguana). அந்த உடும்போட தோலை வச்சித் தான் கஞ்சீராங்கிற இசை வாத்தியம் செய்யிறாங்க" அப்படின்னேன். இம்புட்டு நேரம் பக்கத்துல நின்னு கதை கேட்டுட்டு இருந்த என்னோட டீம் லீடு(தமிழ் காரர்) "இந்த டும்டும்டும்டும்னு கோயில்ல வேப்பிலை அடிக்கும் போது அடிப்பாங்களே அதுவா அப்படின்னு வெறுப்பேத்துனாரு". "ஐயோ அது உடுக்கைங்க...நான் சொல்றது கஞ்சீரா...இது கர்நாடக இசை வாத்தியம்" அப்படின்னேன். "என்னவோ போங்க Garden Lizard, Chameleon, Iguana, Comodo Dragonனு என்னென்னமோ சொல்றீங்க...ஒன்னும் புரியலை. இப்ப உடுக்கைக்கும் கஞ்சீராவுக்கும் நடுவுல வேற ஒரே கொழப்பம். நீங்க வேலை செய்யிற SAPல ஒன்னும் கொழப்பம் இல்லியே"அப்படின்னு சந்துல சிந்து பாடிட்டாரு.

"ஆஹா இன்னிக்கு நமக்கு நாளு சூப்பராத் தாண்டா விடிஞ்சிருக்கு"ன்னு நெனச்சிக்கிட்டேன். மொதல்ல முன்னழகைப் படம் புடிக்கப் போனவனைப் பின்னழகு படம் புடிக்க வச்சாரு வெவசாயிங்கிற எனிமி. அப்புறம் '16வயதினிலே' படத்துல கிராமத்துப் பசங்க அடிச்சி கொல்ற ஒரு சின்ன ஓணானை கோமோடோ டிராகன் லெவலுக்குக் கொண்டு போய் நம்மளை பேக்கு ஆக்குறான் இன்னொருத்தன். இந்த கொழப்பம் தீருறதுக்குள்ள ஓணான் தோலுல...சே உடும்பு தோலுல செய்யிறது உடுக்கையா கஞ்சீராவான்னு வேற ஒரே கன்ஃபியூசன். இந்த கொழப்பத்துக்கு எல்லாம் நடுவுல ஓணானின் விஷக்கடியையும் பொருட்படுத்தாமல் உசுரைப் பணயம் வச்சித் தான் படம் எல்லாம் எடுத்து போடறோம்...அதுனால லேசா நெனச்சிடாதீங்க. சரியா?

(பி.கு: தொடர்ச்சியா மூணு படப்பதிவுகள் போட்டதால இது ஒரு ஹாட் ட்ரிக் பதிவு. 'Hat Trick' உடைய தமிழாக்கம் தான் 'தொப்பி தந்திரம்'. 'ஆன்மீகப் பேரொளி சொல் ஒரு சொல்' அண்ணன் குமரன் தான் சொல்லனும் தந்திரத்துக்கு உகந்த தூய தமிழ் சொல் என்னன்னு? அதோட சொல் ஒரு சொல்லுலேருந்து சுட்டப் பழங்கள் இந்தப் பதிவுல எங்கே எங்கே என்ன என்ன இருக்குன்னு சரியா கண்டுபுடிச்சி சொன்னீங்கன்னா, கம்பெனியின் சார்பா சிறப்பு பம்பர் பரிசா ஒரு அழகிய கோமோடோ டிராகனும், தாளம் போட ஒரு கஞ்சீராவும் வழங்கப்படும்)