Wednesday, January 27, 2010

This Day That Age

"The Hindu" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

நாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(

சொல்றோம்ல : மல்லிகட்டாணி

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?

மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.

இதனை விக்கிபீடியாவிலும் காணலாம்.

டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.

5 comments:

Geetha Sambasivam said...

//"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"//

கல்கி எழுதினபாடல், சிவகாமியின் சபதம் புத்தகத்தில் மாமல்லரை நினைச்சு சிவகாமி பாடுவதாய் வரும். புத்தகத்தைத் தேடணும், தேடிக்கிடைச்சால் பாட்டை அனுப்பறேன்.

கோபிநாத் said...

\\டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு\\

அருமை..அட்டகாசம் ;)))

மல்லிகட்டாணி இப்படி ஒரு பெயரை இப்போது தான் கேள்விபடுறேன்.

Anonymous said...

Bro, pl keep post your old / branded kalakkal new posts
Thanks

Geetha Sambasivam said...

மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"//

நீங்க பதில் சொல்லலை ஆனாலும் பாடல் எனக்குத் தற்செயலாக் கிடைச்சிருக்கு.

மறவேன் மறவேன் என்று வேலின்மேல் ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே

உருகி உருகி உள்ளம் அவரை நினைவதையும்
உயிரும் கரைவதையும்- அறியாரோ மயிலே!

அன்பர் வரவு நோக்கி இங்கு நான் காத்திருக்க
அன்ன நடை பய்ல்வாயோ -வன்னமயிலே!

பெம்மான் உன் மேலே வரும் பெருமிதம் தலைக்கேறி
பாதையை மறந்தாயோ-பேதை மயிலே!

வன்மம் மனதில் கொண்டு வஞ்சம் தீர்க்க நினைத்து
வழியில் உறங்கினாயோ- வாழி நீ மயிலே!

தன்னிகரில்லாதவன் தனயர் பால் மையல் கொண்ட
மங்கை மீதிரங்காயோ -தங்க மயிலே

சொன்னாலும் நீ அறியாய் சொந்த அறிவுமில்லாய்
உன்னை நொந்தாவதென்ன? வன்கண் மயிலே!

மன்னும் கரிபரிகள் புவியில் பல இருக்க
உன்னை ஊர்தியாகக் கொண்டார்- தன்னையே நோகவேணும்!

Simulation said...

this is where the soup was prepared for the first time.

http://archives.chennaionline.com/toursntravel/singaarachennai/adyar.asp