Monday, March 30, 2009

தமிழ் எத்தனை வகைப்படும்? + ழகர, ளகர ஐயம்

நேற்று(29.03.2009அன்று) ஞாயிற்றுக் கிழமை வெளியான தினமலர், வாரமலர் இதழில் "இது உங்கள் இடம்" பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பிரசுரமாகியிருந்த 1000ரூபாய் பரிசு பெற்ற ஒரு கடிதத்தைக் கண்டதும் அதிர்ந்து போனேன். தென்காசியைச் சேர்ந்த ஒரு வாசகி(தமிழாசிரியராம்) தேர்வில் மாணவர்களை "தமிழ் எத்தனை வகைப்படும்?" என்று கேள்வி கேட்டிருந்தாராம். எல்லா கேள்விகளுக்கும் தப்பு தப்பாக பதில் சொல்லிய ஒரு மாணவி அந்த ஒரு கேள்விக்கு மட்டும் சரியாக(!) "முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என மூவகைப்படும்..." என பதிலளித்திருந்தாளாம். அதை பார்த்ததும் "இந்த ஒரு கேள்விக்கு மட்டும் எப்படி சரியாக பதிலெழுதினாய்?" என்று அம்மாணவியைப் பார்த்து தமிழாசிரியர் கேட்டாராம். அதற்கு அவள் "தான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்றும், அவருடைய படப் பாடல் ஒன்றில் - நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...என்று பாடியது நினைவில் இருந்ததால் சரியான பதில் எழுத முடிந்தது" என்று கூறினாளாம். இதே கடிதத்தைப் பற்றிய திரு.சுந்தரராஜன் அவர்களுடைய பதிவையும் பாருங்கள்.

தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!

இ.உ.இ. பகுதியில் இடம்பெறும் பல கடிதங்கள் வெறும் கற்பனையே என்பது என் கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ளது நேற்று பிரசுரமான இக்கடிதம். ஒன்று யாரோ ஒருவர் எழுதியதாக தினமலரே எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். இல்லை என்றால யாரோ ஒரு விஜய் பித்து தலைக்கேறிய ஒரு வாசகர்/கி, விஜய் பாடல்களின் பெருமையை நிலைநாட்டுவதற்காக இப்படியெல்லாம் எழுதிப் போட்டிருக்கக் கூடும். (இப்படி எல்லாம் ஏன் யோசிக்க வேண்டியுள்ளதென்றால் தமிழாசிரியர்களின் தமிழறிவு இவ்வளவு தான் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது). இதெல்லாம் எதுவும் இல்லையென்றால் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் இது. அதற்கு ஒரு பத்திரிகை 1000ரூபாய் பரிசு வழங்கியிருப்பது இன்னும் வேதனையானது. இயல், இசை, நாடகத்தை முத்தமிழ் என்று கொண்டாலும் கூட தமிழின் வகைகள் இயல், இசை, நாடகம் என்று எழுத வில்லை என்றால் எந்த தமிழாசிரியரும் இதற்கு மதிப்பெண் அளிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி அதை விடுவோம். சில நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஐயம் ஒன்று உள்ளது. அண்மை காலங்களில் வலைப்பதிவுகளில் கண்ட சில சொற்களின் பயன்பாட்டைப் பற்றியது. அதாவது ழகரத்தினை ளகரம் வர வேண்டிய இடங்களில் பயன்படுத்தும் வழக்கத்தினைப் பற்றியது. உதாரணமாக 'ஒளித்து வைத்தல்', 'ஒளிந்து கொண்ட' என்ற பொருள் தருகின்ற வாக்கியங்களில் வலைப்பதிவுகளில் 'ஒழித்து வைத்தல்' என்றும் 'ஒழிந்து கொண்ட' என்றோ எழுதப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதே போல 'சுளிக்க வைக்கும்' என்பதனை 'சுழிக்க வைக்கும்' என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன். ஒளித்தல், ஒழித்தல், சுளித்தல், சுழித்தல் ஆகிய சொற்களுக்குப் பொருட்கள் கிட்டத்தட்ட நிகராக இருந்தாலும் இது நாள் வரை நான் பயன்பாட்டில் அறிந்த வரையில் இவை அவற்றுக்கேற்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்த வந்துள்ளன. உதாரணத்திற்கு "அவன் அருவெறுப்பினால் முகம் சுளித்தான்" என்பதனை "அவன் அருவெறுப்பினால் முகம் சுழித்தான்" என்று எழுதுவது சரியா? "முகத்தினை சுழித்தல்" என்று எழுதினாலும் பொருள் தரும். ஆனால் நான் இது நாள் வரை அறிந்திருப்பது "அருவெறுப்பினால் முகம் சுளித்தான்" என்பதனை தான். அதே போல "புத்தகத்தை ஒழித்து வைத்தான்" என வலைப்பதிவுகளில் எழுதப்படுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் பதுக்கி வைத்தல் எனும் பொருள்பட எழுதும் போது "ஒளித்து வைத்தான்" என்றே நான் எழுதி வந்திருக்கிறேன். ளகரம் வரும் இடங்களில் இவ்வாறு ழகரத்தை இடைமாற்றி எழுதலாமா? அப்படி எழுதலாம் எனில் அதற்குண்டான விளக்கம் என்ன? என் ஐயத்தை யாராவது தீர்த்து வையுங்களேன்? நன்றி.

Wednesday, March 18, 2009

பட்டர்ஃப்ளை வைத்த ஆப்பு

ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். டேமேஜர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டுருப்பீங்க, ஸ்கூல்ல டீச்சர் ஆப்பு வைக்கிறதை பத்தி கேள்வி பட்டிருப்பீங்க. பட்டர்ஃப்ளையினால் ஆப்பு வைக்கப் பட்டவனைப் பத்தி கேள்வி பட்டிருக்கீங்களா? இன்னிக்கு கேள்வி படுங்க.

என் வாழ்க்கையில் முதன் முதலா நான் நேர்காணல் எடுத்த நாள் நேத்திக்கு. அப்பா...இதையும் பதிவு பண்ணி வச்சாச்சு. நான் இப்போ இருக்கற ப்ராஜெக்டுல சில புதிய தேவைகள் இருப்பதால், ஒரு CVயைக் கொடுத்து தொலைபேசி நேர்காணல் எடுக்கச் சொன்னார் எங்க ப்ராஜெக்ட் மேனேஜர். உண்மையைச் சொல்லப் போனா நேர்காணல் எடுக்கனும்னு சொன்னதுமே ஒரு படபடப்பு. வழக்கம் போல "இது முதன்முறையாச்சே" அப்படீங்கற ஸ்டார்ட்டிங் டிரபிள் தான். நேத்திக்குத் தான் முதன்முதலா நேர்காணல் எடுத்தேன்னாலும் எப்படி எடுக்கனும்னு கேட்டுத் தெரிஞ்சும் ஓரளவு படிச்சும் வச்சிருந்தேன். நேர்காணல் எடுக்கும் போது எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு கேள்வி கேப்பவரை எப்படி நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும். கேள்விகளைக் கேட்டு எப்படி மடக்கலாம் என நினைத்து நேர்காணல் எடுப்பவரிடம் நம்முடைய புத்திசாலித் தனத்தை எல்லாம் காட்ட வேண்டும் என்று நினைத்தால் இழப்பு நம்முடையது தான்னு எங்கேயோ படிச்சிருக்கேன். இதையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டு CVயில் கொடுக்கப் பட்டிருந்த செல்பேசி எண்ணை அழைத்தேன். அந்த நபர் ஏற்கனவே எங்கள் நிறுவன ஊழியர் என்பதால், எங்கள் ப்ராஜெக்டுக்கு அவர் தகுதியானவர் தானா என்பதை முடிவு செய்யும் பொறுப்பு மட்டுமே எனது. ஆகையால் எல்லோரும் வழக்கமாகக் கேட்கும் "Tell me about yourself" என்ற கேள்வி கேட்க வேண்டிய தேவை இருக்கவில்லை. முந்தைய பணியிடங்களில் அவருடைய அனுபவத்தைப் பற்றிக் கேட்டுக் கொண்டு SAP பற்றிய எனக்கு தெரிந்த கேள்விகளைக் கேட்கத் தொடங்கினேன்.

ஓரிரு கேள்விகளுக்குச் சரியான பதில் சொன்னார் என்றாலும், பெரும்பாலான கேள்விகளுக்கு அவருக்கு விடை தெரிந்திருக்க வில்லை. ஓரளவுக்குத் தெரிந்திருந்தாலும், அவரை எங்கள் ப்ராஜெக்டில் அமர்த்தினால் விரைவாகக் கற்றுக் கொண்டு செயல்படுவார் என்ற நம்பிக்கையை அவர் எனக்கு நேர்காணலின் போது ஊட்டவில்லை. அதற்குண்டான ஆர்வமும் அவரிடம் இருந்ததாகத் தெரியவில்லை. "தொன்னூறு நாட்களாக பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். புதிதாக எங்களுக்குக் குழந்தை பிறந்திருப்பதால் என்னுடைய நிலை க்ரிடிகலாக இருக்கிறது, அதனால் உங்கள் ப்ராஜெக்டில் சேர நான் ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். அவர் கூறியதைக் கேட்டு பரிதாபப்பட முடிந்தது என்றாலும் அவர் எங்கள் ப்ராஜெக்டுக்குத் தகுதியானவர் இல்லை என்பது மட்டும் நேர்காணல் எடுத்து முடிக்கும் போது தெரிந்தது. "இந்நேர்காணலைப் பற்றி உங்களுடைய ஃபீட்பேக் என்ன?" என்று என்னை கேட்டார். முதல்முறை என்பதால் என்ன சொல்வது என எனக்கு தெரியவில்லை. "We will let you know" என்று முடித்து விட்டேன். "உங்களை நீங்களே இன்னும் நன்றாக நேர்காணலுக்குத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என்று உபயோகமான ஒரு ஃபீட்பேக் கொடுத்திருக்கலாமோ என்று பின்னர் தான் எனக்கு உரைத்தது. நேர்காணல் எடுப்பது எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. அதன் மூலமாக நேர்காணல் எடுப்பவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று ஓரளவு தெரிந்து கொள்ளவும் முடிந்தது. உங்களுடைய நேர்காணல் அனுபவங்களையும் டிப்ஸ்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

வழக்கமாக பைக் ஓட்டும் போது மனதில் எந்த விதமான சிந்தனைகளும் இருக்காது. ஆனால் ஓரிரு நாட்களாக வண்டி ஓட்டும் போது வேறு சில சிந்தனைகள் மனதில் ஓடுகின்றன. நேற்று மாலை அலுவலகத்தில் இருந்து திரும்பும் போது மேலே நேர்காணல் எடுத்த அனுபவத்தை மனதில் அசைபோட்டுக் கொண்டே வண்டி ஓட்டி வந்தேன். வருத்தப்பட்டாத வாலிபர் சங்கத்தில் நேற்று காலையிட்ட 501வது பதிவு, அப்பதிவு ஐம்பது அடிக்குமா அடிக்காதா, எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்துள்ள நாகை சிவா, ஜி.ரா அவர்கள் அன்புக்கிணங்க என்ன பதிவு போடுவது இப்படியாகப் பலவாறு யோசித்துக் கொண்டே ராமாபுரத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து கிண்டியைத் தாண்டி அடையாறு மத்திய கைலாஷ் சிக்னல் வரை வந்துவிட்டேன். சிக்னலிலிருந்து நான் வலது புறம் திரும்ப வேண்டும். எனக்கு முன்னாடியுள்ள வண்டிகள் திரும்பிக் கொண்டிருக்க நானும் திரும்பினேன். அப்போது தான் கவனித்தேன் எதிர்புறத்திலிருந்து வாகனங்கள் புறப்பட்டு வருவதை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த காரை ஒரு போக்குவரத்து காவலர் நிறுத்தினார். காருக்குப் பின்னாடி வந்து கொண்டிருந்த என்னை சார்ஜெண்ட் ஒருவர் கைகாட்டி நிறுத்தினார். தன்னருகே வருமாறு அழைத்தார். நான் அருகில் சென்றதும் என் பைக்கில் இருந்து சாவியை உருவி கையில் எடுத்துக் கொண்டார். "ஏன் சிக்னல் ஜம்ப் பண்ணீங்க? வந்து ஃபைன் கட்டுங்க" என்றார். "சாரி சார்" என்றேன். "லைசன்ஸ் எடுங்க" என்றார். கொடுத்தேன். "எங்கே வேலை செய்யறீங்க" என்றார். கம்பெனி என்ன என்றும் என் வேலை என்றும் சொல்லாமல் "ராமாபுரத்தில் சார்" என்றேன். என் போதாத நேரம் கழுத்தில் ஐடி கார்டு தொங்கிக் கொண்டிருந்தது. அவர் அதை பார்த்து விட்டார். "சிக்னல் ஜம்ப் பண்ணதுக்கு ஃபைன் ஆயிரத்து ஐம்பது ரூபாய்" என்றார். மறுபடியும் "சாரி சார்" இது நான். "ஃபைன் இங்கே கட்டறீங்களா? இல்லை கோர்ட்டுல கட்டறீங்களா?" என்றார். "சார் ஃபர்ஸ்ட் டைம் சார், கவனிக்காம வந்துட்டேன்" என்றேன். "கவனிக்காம வந்ததுக்கு தாங்க சார் ஃபைன்" என்றார். மறுபடியும் "ஃபர்ஸ்ட் டைம் சார், சாரி சார்" என்றேன். "ஃபைவ் ஃபிப்டி குடுத்துட்டு எடுத்துட்டு போங்க" என்றார். ஐநூறைக் கொடுத்து விட்டு ஐம்பதை தேடிக் கொண்டிருந்தேன். "பரவால்லை எடுத்துட்டு போங்க" என்று ரிசெஷனை முன்னிட்டு பத்து சதவீதம் சிறப்புத் தள்ளுபடி கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் என் தம்பி நல்லா திட்டுனான். "மாங்கா மாதிரி ஐடி கார்டை மாட்டிக்கிட்டு வண்டி ஓட்டுவியா? நீ சாஃப்ட்வேர் ஆளுன்னு தெரிஞ்சிக்கிட்டு ஐநூறு ரூவா தாளிச்சிட்டாங்க. மத்தவங்கன்னா மேக்சிமமே முன்னூறு ரூவா தான்"அப்படின்னான். என்ன இருந்தாலும் தப்பு செஞ்சதுனால தான் தண்டம் கட்டுனேன்ற திருப்தி எனக்கிருக்கு:) அப்படி "தூ"ன்னு டீசெண்டா துப்பிட்டு போற வழியைப் பாருங்க. இப்ப எனக்கே துப்பனும் போல தான் இருக்கு. ப்ளாக்ல உக்காந்துக்கிட்டு "உத்தம புத்திரன்" மாதிரி பேசுறதுங்கிறது வேற. ஆனா நமக்குன்னு வரும் போது நாம நடந்துக்கற விதம்ங்கிறது வேற. தசாவதாரம் படம் மாதிரி... பட்டாம்பூச்சி விருதை ப்ளாக்ல போடறதுக்காக போலீஸ் கிட்ட கப்பம் கட்டி "பட்டர்ப்ஃளை எஃபெக்ட்"னா என்னன்னு ஒரு பாடமும் கத்துக்கிட்டேன். உன் முட்டாள் தனத்துக்கு ஏண்டா பட்டாம்பூச்சி விருதைக் காரணம் சொல்லறேன்னு விருது கொடுத்த புலியும், ஜி.ரா வும் கண்டிப்பா கேப்பாங்க. அவங்க கிட்ட மாப்பு கேட்டுக்கிட்டு அவங்க அன்புக்குத் தலை வணங்கி அவங்க குடுத்த விருதை சந்தோஷமா போட்டுக்கிடறேன். ஆனா எனக்கு ஒரு சந்தேகமும் இருக்கு...சங்கத்து 501வது பதிவைப் பாத்த கையோட ஒருத்தரு காலங்காத்தால பல்லு கூட வெளக்காம யாரோ ஒரு மலையாள மாந்த்ரீகரை வச்சி எதாச்சும் சாத்தானை ஏவி விட்டுருக்காங்களோன்னும் அந்த சாத்தான் தான் சார்ஜெண்டா வந்திருச்சோன்னும் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவே இருக்கு.


நான் பட்டாம்பூச்சி விருது கொடுக்க விரும்பும் மூவர்.

1. வெட்டிப்பயல்
2. கப்பி பய
3. நீங்க ஆதவன்


1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

Sunday, March 08, 2009

நினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள்

"ராமகிருஷ்ணன்"

"வரது குட்டி"

நான் சொல்றேன் "ராமகிருஷ்ணன் தான்".

நீ வேணா பாருடா "வரது குட்டி தான்"

7:59:56

7:59:57

7:59:58

7:59:59

8:00:00

ஒரு அஞ்சு நொடிக்கு இசை வருது...அடுத்ததா
"செய்திகள்"னு தலைப்பு. "வணக்கம் தலைப்புச் செய்திகள்"னு H.ராமகிருஷ்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு செய்தி வாசிக்கத் தொடங்கறப்போ ராமகிருஷ்ணன் தான் இன்னிக்கு நியூஸ் வாசிக்க வருவாருன்னு பெட்டு கட்டுன தம்பி முகத்துல ஒரு சந்தோஷம். மெகா சீரியல்னும், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக'ன்னும், 'லைவ் அண்ட் எக்ஸ்க்ளூசிவ்'னும் இந்தியாவில் தொலைக்காட்சி பார்த்தல் என்பது சிக்கலாய் இல்லாமல் இருந்த காலக்கட்டத்து நினைவுகள் தான் நான் மேலே சொன்னது. போட்டியில்லாத, உலகமயமாக்கல் இல்லாத, தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஏதுமில்லா அக்காலக் கட்டத்தில் இந்தியாவின் அரசுத் தொலைக்காட்சி நிறுவனமான 'தூர்தர்ஷன்' கோலோச்சிக் கொண்டிருந்தது. நம்முடைய வளர்கின்ற பருவத்தில் நாம் காணும், தெரிந்து கொள்ளும் விஷயங்கள் என்பது பல காலம் நம் நினைவில் இருக்கும். அதை பின்னொரு நாளில் நினைவு மீட்டும் பொழுது அது ஒரு சுகமான அனுபவமாக இருக்கும். இந்த அனுபவங்களை நம் வாழ்க்கையின் முக்கியமான மைல்கல்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்தால் இன்னும் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் திடீர்னு தூர்தர்ஷனின் ஆர்ப்பாட்டமில்லாத, சிம்பிளான செய்தி வாசிப்பாளர்களைப் பற்றிய நினைவு வந்தது. இப்போ தான் எதுவா இருந்தாலும் இணையத்துல தேடிப் பார்க்கலாமே...அதனால தூர்தர்ஷன்னு தட்டச்சு செய்து ஆங்கிலத்துலயும், தமிழ்லயும் தேடிப் பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க...வளர்ற வயசுல வெறுத்த தொலைக்காட்சியான தூர்தர்ஷனுக்கு அப்படியொரு ரசிகர் வட்டம் இருக்கறது தெரிஞ்சது. அந்த ரசிகர்களில் பெரும்பாலானவங்க தூர்தர்ஷனின் பொற்காலத்தின் போது பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகளா இருந்தவங்க. அவங்க எழுதியிருக்கற பதிவுகளைப் படிச்சா அந்த நினைவுகள் இப்போது நினைவுகளாக மட்டும் இருக்கிறதே என்று கண்டிப்பாக ஏக்கப் பெருமூச்சும் தோன்றும். முதல் பத்தியில இருக்கற admiration, adulation எல்லாம் இப்போ தான். அப்போல்லாம் நான் கூட சே...என்னடா இது சொத்தை டிவி சேனல்னு வெறுத்திருக்கேன். இப்போ யோசிச்சுப் பாத்தா அந்த ஒத்தை சொத்தை டிவி சேனல் மூலமா நான் கத்துக்கிட்டதும் தெரிஞ்சிக்கிட்டதும் கொஞ்ச நஞ்சம் இல்லைன்னு புரியுது.

தூர்தர்ஷனின் தமிழ் செய்தி வாசிப்பாளர்களை நினைவு கூர்ந்தால் அவர்களில் முதலில் நம் நினைவுக்கு வருபவர் திரு.H.ராமகிருஷ்ணன். 1985ல எங்க வீட்டுல முதன் முதல்ல டிவி வாங்குன காலத்துலேருந்து '90களின் இறுதி வரை இவரை நான் செய்தி வாசிப்பாளராகப் பார்த்த நியாபகம். சில சமயம் வானொலியிலும்(ஆகாசவாணி) இவர் செய்தி வாசிப்பதை கேட்டிருக்கிறேன்.

1990களில் வெளிவந்த 'வானமே எல்லை' படம் வெளிவரும் வரை இவர் போலியோவினால் ஊனமுற்றவர் என்பது எனக்கு தெரியாது. ஏன்னு தெரியலை...என்னால அதை நம்பறது ரொம்ப கஷ்டமா இருந்தது. அந்த படத்துக்காக எதாச்சும் ட்ரிக் செய்து அந்த மாதிரி எடுத்துருப்பாங்களோன்னு ரொம்ப நாள் நெனச்சிட்டிருந்தேன். அவரைப் பத்தி இணையத்துல தேடும் போது அவரு தன்னோட சொந்த வலைதளத்தையும் வச்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அதோட கர்நாடக சங்கீதத்தில் புலமை பெற்றவருன்னும் பல இசை கச்சேரிகள்ல பாடியிருக்காருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். கர்நாடக இசை வித்வான்களை எல்லாம் நோண்டி நொங்கெடுக்கிற இசை விமர்சகர் சுப்புடு அவருக்கு பக்க வாத்தியமா கீபோர்டு வாசிக்கற படத்தையும் அவரோட வலைதளத்தில் பார்க்கலாம்.

செய்தி வாசிப்பாளர்கள்ல ராமகிருஷ்ணன் என் தம்பிக்கு ஃபேவரிட்னா என்னோட ஃபேவரிட் திரு.வரதராஜன். அப்போல்லாம் அவரை 'வரதுகுட்டி'னு தான் சொல்லுவேன். ஏன்னு சரியா நியாபகம் இல்லை. 1980களில் சிவாஜி கணேசன் நடிச்சி வெளிவந்த "பரிட்சைக்கு நேரமாச்சு"ங்கிற படம். அதுல சிவாஜியோட பையனா ஒரு கதாபாத்திரம் வரும். அந்த கதாபாத்திரமா வரதராஜனே நடிச்சிருக்கிறாரா இல்லை ஒய்.ஜி.மகேந்திரன் நடிச்சிருக்கிறாரான்னு நியாபகம் இல்லை.
ஆனா அந்த கேரக்டரோட பேரு "வரதுகுட்டி"னு நியாபகம். அதுலேருந்து வரதராஜனை "வரதுகுட்டி"ன்னு கூப்பிடறது பழக்கமாயிடுச்சு. இரவு எட்டு மணி செய்திகள்ல "வரதுகுட்டி" வருவாருன்னு தான் நான் அதிகமா பெட் வச்சிருக்கேன் :) இவர் ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடி வந்த சன் டிவி தொலைக்காட்சித் தொடர் ஒன்னில் அப்பா கேரக்டரிலும் நடித்தார். அவரோட படமும் இன்னிக்குக் கெடைச்சிடுச்சு :) அதையும் வலையேத்தியாச்சு. இப்போது இவர் ஒரு பிரபலமான நாடக நடிகராவும் இருக்கிறார். இவருக்கு http://tvvvaradharajen.com எனும் சொந்தமான வலைத்தளம் ஒன்று உள்ளது.

தமிழ் செய்தி வாசிப்பாளர்கள்ல ஒரு ஸ்டார் அந்தஸ்து இருக்குன்னா...அது கண்டிப்பா இவருக்குத் தான். அவர் ஷோபனா ரவி. இவர் செய்தி வாசிக்கும் போது ரொம்ப தன்னம்பிக்கையோட வாசிக்கிறா மாதிரி தெரியும். பொதுவாக இவர் உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். செய்திகளை முடிச்சிட்டு வணக்கம் சொல்லும் போது கூட பெரும்பாலும் புன்னகைக்க மாட்டார். ஆனா பெண்களுக்கு இவர் கட்டும் புடவைகளின் மீது ஒரு தனி கண்ணு இருக்கும். "நேத்து ஷோபனா ரவி கட்டியிருந்த புடவையின் கலர்..." அப்படின்னு மேல் வீட்டு ஆண்ட்டி ஆரம்பிச்சாங்கன்னா அந்த பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடும்.

இவர் ஒரு புடவையை ஒரு முறைக்கு மேல் கட்டுவதில்லை அப்படின்னும் இவர் வீட்டில் புடவைகளை அடுக்கி வைக்க ஒரு மிகப் பெரிய பீரோ இருக்கு அப்படின்னு அவங்க வீட்டு சுத்து வட்டாரத்துல பேசிக்குவாங்கன்னு ஒரு இணைய நண்பர் எழுதிருக்கறதை படிச்சேன். இவரும் ராமகிருஷ்ணனும் மட்டும் தான் தூர்தர்ஷனின் நிரந்தர ஊழியர்களாக இருந்தார்கள் என்றும், மற்றவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் செய்தி வாசித்ததாகத் தெரிந்து கொண்டேன். இவருடைய மகள் ராஜ் டிவியில் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருக்கிறார்னு நெனைக்கிறேன்.

ஷோபனா ரவிக்கு அடுத்தபடியா பெண்கள்ல பிரபலமா இருந்தவங்க சந்தியா ராஜகோபாலும், ஃபாத்திமா பாபுவும். இவங்க ரெண்டு பேரும் இன்னைக்கும் தனியார் சேனல்களில் செய்தி வாசிச்சிக்கிட்டுத் தான் இருக்காங்க. மத்த செய்தி வாசிப்பாளர்கள்னு பாத்தா பாலசுப்பிரமணியன், செந்தமிழ் அரசு(நன்றி : நிலாக்காலம்/ஸ்ரீ), தமிழன்பன், இனியன் சம்பத், ஸ்ரீதர், ஹெலன் ப்ரமிளா, நிஜந்தன், நசீமா சிக்கந்தர், கண்ணாத்தாள், நிர்மலா சுரேஷ் இவங்க பேரெல்லாம் ஞாபகம் இருக்கு. இதுல தமிழன்பன் ரொம்ப திருத்தமாகவும் அழுத்தமாகவும் வாசிப்பார். எதோ ஒரு காரணத்துக்காக "இந்திய தேசிய கொடியை கோமணமாக அணிவேன்"ன்னு இவர் சொன்னதால இவரைத் தூக்கிட்டாங்கன்னு அப்பல்லாம் சொல்லுவாங்க.



நிஜந்தன் இன்னும் ராஜ் டிவியில செய்தி வாசிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் இருந்து கொண்டு இருக்கிறார். ஸ்ரீதரின் குரலை அவர் தொலைக்காட்சியிலிருந்து காணாத போன பின்பும் வானொலியில் கேட்டிருக்கிறேன். இணையத்தில் ஒருவர், ஸ்ரீதர் செய்தி வாசித்து முடித்து விட்ட பின் புன்னகைப்பதை பார்ப்பதற்காகவே அவருடைய அம்மா அடுப்படி வேலையில் ஈடுபட்டிருந்தாலும் வந்து தொலைக்காட்சியைப் பார்ப்பார் என்று எழுதியிருக்கிறார். இதை தவிர 'கல்யாண அகதிகள்' அப்படீங்கற கே.பாலச்சந்தர் திரைப்படத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த ஒருவர் கதாநாயகனாகவும் நடித்தார். அந்த படத்துலயும் அவர் தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளராவே நடிச்சிருப்பாரு. அவர் பேரு சௌந்தர்னு நெனக்கிறேன். ஆனா அதுக்கப்புறம் அவரை தொலைக்காட்சியில் அதிகமாப் பாக்க முடியலை.

சென்னை தொலைக்காட்சியில் தமிழ் செய்தி வாசிப்பாளர்களுக்குன்னு ஒரு ரசிகர் வட்டம் இருக்கறா மாதிரி தில்லி தூர்தர்ஷன்ல ஆங்கில செய்தி வாசிப்பாளர்களுக்கும் பெரிய ரசிகர் வட்டம் இருக்கு. கீழே சில ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள் படங்களைத் தேடிப் பிடிச்சிப் போட்டிருக்கேன். யாராச்சும் உங்க நியாபகத்துக்கு வர்றாங்களான்னு பாருங்க.

தேஜேஷ்வர் சிங்(Tejeshwar Singh) - இவர் போன வருஷம் காலமாயிட்டார். ஒரு ஆழமான குரலுக்குச் சொந்தக்காரர். "Sage Publications" எடிட்டராகவும் இருந்திருக்கிறார்.

சுனித் டண்டன்(Sunit Tandon) - இவருக்கும் இணையத்தில் ஏகப்பட்ட விசிறிகள் இருக்காங்க.

ரினி கன்னா(Rini Khanna) - இவங்க Facebookலயும் இருக்காங்க பாருங்க.

உஷா அல்புகெர்க்(Usha Albuquerque) - ரொம்ப சாந்தமான முகம் இவருக்கு. மத்தவங்க அளவுக்கு இவர் அவ்வளவு பிரபலம் இல்லைன்னாலும், இவர் முகமும் பெயரும் எனக்கு இன்னும் நல்லா நினைவில் இருக்கு.

நிர்மல் ஆண்ட்ரூஸ்(Nirmal Andrews) - இவரும் அவ்வளவு பிரபலமானவரு கிடையாது. ஆனா இவரோட பேரை வச்சித் தேடும் போது இணையத்துல இவரோட படம் கெடைச்சது. இப்போ ஐ.நா. சம்பந்தப்பட்ட ஒரு பணியில் வெளிநாட்டில் இருக்கிறார்.

ஆங்கில செய்தி வாசிப்பாளர்கள்ல பிரபலமானவங்கன்னு பாத்தீங்கன்னா சுகன்யா பாலகிருஷ்ணன், கோமல் ஜி.பி.சிங், கீதாஞ்சலி ஐயர், மீனு, நீத்தி ரவீந்திரன் (நன்றி: திரு.மாலன்), ரினி கன்னா(திருமணத்துக்கு முன் ரினி சைமன்), சங்கீதா பேடி(திருமணத்துக்கு முன் சங்கீதா வர்மா). இதுல சுகன்யா பாலகிருஷ்ணன் டெல்லியில் செட்டில் ஆகிவிட்ட தமிழர். நான் தில்லியில் இருந்த போது "The Asian Age" என்னும் பத்திரிகையில் தில்லி தமிழர்களைப் பற்றிய ஒரு ரிப்போர்ட் வந்தது. அதில் சுகன்யாவின் குடும்பத்தினர் பல வருடங்களாக தில்லியில் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. கல்கட்டா தூர்தர்ஷனில் என்.விஸ்வநாதன் என்பவர் பிரபல ஆங்கில செய்தி வாசிப்பாளர் என்று இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார். அநேகமாக இவர் "மூன்று முடிச்சு" படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடித்த நடிகர் கல்கட்டா விஸ்வநாதனாகத் தான் இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இவரை தூர்தர்ஷனில் கல்லூரி மாணவர்களுக்காக ஒளிபரப்பாகும் யூ.ஜி.சி(UGC) நிகழ்ச்சியில் ஒரு முறை நான் பார்த்திருக்கிறேன். அத்துடன் திரைப்படங்களிலேயே இவர் அருமையாக ஆங்கிலம் பேசுவார்.

'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் P.C.ராமகிருஷ்ணா(நன்றி : திரு.மாலன்)
மால்குடி சுபா 'வால்பாறை வட்டப்பாறை' என்று ஒரு ஆல்பம் வெளியிட்டார் தெரியுமா? அந்த ஆல்பத்தின் வீடியோவில் நடித்த பெண் P.C.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். 'மே மாதம்' திரைப்படம் வெளிவந்த காலத்தில் இவரை அடிக்கடி சின்னத் திரையிலும் பெரிய திரையிலும் பார்த்த ஞாபகம். தமிழ் நியூஸ் பாத்தாச்சு, ஆங்கில நியூஸ் பாத்தாச்சு. காது கேளாதோருக்கான நியூஸ் பாத்துருக்கீங்களா? நானும் என் தம்பியும் ஞாயிறு மதியம் காது கேளாதோருக்கான செய்தி அறிக்கையை தவறாமல் பார்ப்போம். அந்த செய்தி அறிக்கையின் வாசிப்பாளர்கள்ல ஷஷி பால்(Shashi Pal), சங்கீதா இவங்க ரெண்டு பேரு பேரும் நியாபகம் இருக்கு. அப்போல்லாம் ஒரு சில சைகைகளக் கத்து வச்சிக்கிட்டு அம்மா கிட்ட வம்பு பண்ணதுண்டு. சில சைகைகள் இன்னும் நியாபகம் இருக்கு. நெத்தியில பொட்டைத் தொட்டைக் காட்டுனா "இந்தியா"ன்னு அர்த்தம். கையோட முன் பாதி, பின் பாதியை முறையே முற்பகல், பிற்பகல் இதை தெரிவிக்க உபயோகிப்பாங்க.

திரு.மாலன் அவர்களின் பின்னூட்டம் எல்லோருக்கும் பயன் தரும் விதமாக :

>>'மே மாதம்' திரைப்படம் பாத்திருக்கீங்களா? அதுல கதாநாயகி சோனாலி குல்கர்னியின் அப்பாவாக வரும் நடிகர் கூட முன்னாள் ஆங்கில செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்று என் அம்மா சொல்கிறார்கள். அவருடைய பெயர் இப்போது நினைவில் வர மாட்டேன் என்கிறது<<

அவரது பெயர் பி.சி.ராமகிருஷ்ணா. சென்னையில் பிரபலமான ஆங்கில நாடகக் குழுவான The Madras Playersஐச் சேர்ந்தவர். இப்போதும் நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலகட்டம் வரை ஆங்கிலச் செய்தி என்பதும் அந்தந்த மாநிலச் செய்தியறிக்கைகள் போல அந்தந்த மாநிலத்திலேயே தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. அப்போது சென்னைத் தொ.கா.வில் ராமகிருஷ்ணா, விசாலம் (தாமஸ் குக் நிறுவனத்தில் அதிகாரியாக இருந்தார்)சசிகுமார் (பின்னாளில் ஏசியாநெட்டை ஆரம்பித்தவர், இப்போது ஏசியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசத்தின் தலைவர்) ஆகியோர் ஆங்கிலச் செய்திகளை வாசித்து வந்தார்கள். தில்லி ஆங்கிலச் செய்தியாளர்களில் நீதி ரவீந்திரன் பெயரை மறந்து விட்டீர்கள்.

நிர்மலா சென்னைத் தொ.க.வில் செய்திவாசித்தாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தார்.லோகேஸ்வரி செல்வக்குமார் என்று இன்னொரு பெண்மணி வாசித்து வந்தார். அவர் பின்னால் அங்கு தயாரிப்பாளராகவும் ஆனார்.

தூர்தர்ஷனில் செய்திவாசிப்பாளருக்கான தேர்வில் உச்சரிப்புக்கு முக்கியத்துவம் உண்டு.தேர்வுக்கு வருகிறவர்களை தொழிலாளி என்ற சொல்லை உச்சரிக்கச் சொல்வார்கள்.ஏனெனில் ழ,ள,ல மூன்றும் வருகிற ஒரு சொல் அது (நான் அந்தத் தேர்வுக் குழு உறுப்பினராக இருந்திருக்கிறேன்) ஆரம்ப நாள்களில் வானொலி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்தி வந்தார்கள். வானொலி அறிவிப்பாளர்கள் என்பதால் உச்சரிப்பில் அவர்கள் தெளிவாக இருப்பார்கள்.

அதுபோல சட்ட மன்ற நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களுக்கும் வானொலி/தொலைக்காட்சிதான் நம்பத்தகுந்த ஆதாரம். அந்த செய்திகளை வழங்கும் போது தவறு நேர்ந்துவிட்டால் சட்டமன்றமே தண்டிக்க முடியும். அதனால் அச்சுப் பத்திரிகைக்கள் அந்த செய்தியாளர்களையும் consult செய்து கொள்வார்கள். அதில் ராமகிருஷ்ணன்தான் கிங்.

மாலன்


தூர்தர்ஷன் பத்தி எழுதுறதுன்னா கண்டிப்பா எக்கச்சக்கமா இருக்கு. செய்தி வாசிப்பாளர்களுக்காக மட்டுமே தனியா ஒரு கொசுவத்தி பதிவு போடுவேன்னு நானே நெனைக்கலை. எனக்கு எழுதும் போது ஒரு சுகமான நினைவு மீட்டலா இருந்தது. படிச்சவங்களுக்கு எப்படின்னு தான் தெரியலை :). வரும் நாட்களில் தூர்தர்ஷனைப் பத்திய இன்னும் சில நினைவுகளைப் பகிர்ந்துக்கறேன். நன்றி.