Saturday, December 02, 2006

பஸ் பயணங்களில் #1

இது ஒரு இன்ஸ்பிரேஷன் பதிவு. ஜூலை மாதம் கப்பி எழுதுன 'பஸ் பயணங்களில்' பதிவு படிச்சதுலேருந்து அதை போலவே நானும் ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாளா நெனச்சி வச்சிருந்தேன். பொருத்தமான வேற தலைப்பு எதுவும் தோணாததால என் பதிவுக்கும் அதே பேரை வச்சிட்டேன். கப்பி பதிவுல நான் போட்ட பின்னூட்டத்தையும் ராயல்டி தராம இங்கே யூஸ் பண்ணிக்கிட்டேன். சின்ன வயசுல எனக்கும் என் தம்பிக்கும் பிடிச்சமான விளையாட்டுன்னு ஒன்னு சொல்லனும்னா அது பஸ் விளையாட்டு தாங்க. அது வெளையாடும் போது தான் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்காம, அடிச்சிக்காம இருப்போம். இல்லன்னா ரெண்டு பேரையும் மேக்கிறதுக்கே எங்க அம்மாவுக்குச் சரியா இருக்கும்.

டீச்சர் விளையாட்டு, டாக்டர் விளையாட்டு இதெல்லாம் கேள்வி பட்டுருப்போம்...அது என்ன பஸ் வெளையாட்டு? ஒன்னும் இல்லீங்க என் தம்பி டிரைவர், நான் கண்டக்டர் ரெண்டு பேரும் வாயாலேயே பஸ்சை ஓட்டிக்கிட்டுப் போவோம். எங்க வீட்டு மாடிக்குப் போற ஒரு படிக்கட்டுல என் தம்பி ஒக்காந்துக்குவான், படிக்கட்டுக்கும் செவுத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன இடுக்குல ஒரு மொத்தமான குச்சியைச் சொருகி வச்சிக்குவான், அது தான் எங்க பஸ்சோட கியரு. நான் கண்டக்டராச்சே? என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. அதுக்குள்ளே ரெண்டு விசில் கெடக்கும்...10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும்(அப்போ தான் பையைக் குலுக்குன்னா கண்டக்டர் பையைக் குலுக்கற ஒரு எஃபெக்ட் கெடைக்கும்), அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும். நாங்க பஸ்ல போகும் போதெல்லாம் கெடைக்கிறது, எங்க வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அவங்க கிட்ட கேட்டு வாங்கறது இப்படின்னு 40காசு, 50காசு, 90காசு, 1.10ரூ இப்படின்னு பலவிதமான பஸ் டிக்கட் கண்டக்டர் பைல இருக்கும். பஸ் விளையாட்டு வெளையாடும் போது டிக்கட் எல்லாம் அழகா அடுக்கி என் கையில இருக்கும்...விசில் வாயில இருக்கும். நான் விசில் குடுத்ததும் டிரைவர் கியரைப் போட்டு டுர்ர்ர்...டுர்ர்ன்னு பஸ்சை எடுத்துக்கிட்டு கெளம்பிடுவாரு.

நெஜ பஸ்சுல கியர் போடும் போது ஏற்படற ஒரு உராய்வு சத்தம் (எனக்கென்னமோ அதை கேக்கும் போதெல்லாம் அரிசி கீழே கொட்டற மாதிரி இருக்கும்), பிரேக் போடும் போது ஏற்படற சத்தம் இப்படின்னு டிரைவர் வாயாலேயே ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்லாம் வேற தருவாரு. நடுவுல நடுவுல "யோவ் பாத்து போயா"ன்னு சவுண்டு வேற விடுவாரு எங்க கோவக்கார டிரைவரு(ரோட்டுல வண்டி ஓட்டிக்கிட்டு போறவரைக் கண்டிக்கிறாராம்) கண்டக்டர் நானு "டிக்கட் வாங்கிக்கங்க, டிக்கட் வாங்கிக்கங்க"னு குரல் விடுவேன். அது போதாதுன்னு"எங்க சார் டி.நகரா? பத்து ரூவா குடுத்தா எப்படி? சில்லறை இல்லியா?"ன்னு காத்தைப் பாத்து ஒரு அலம்பல் வேற. எங்களுக்குப் பிடிச்ச பஸ் ரூட்னு பாத்தா அது 6V தான். ஏன்னா சென்னையில அப்போ தான் எல்.எஸ்.எஸ் பஸ் விட்ட புதுசு. ஆனா நார்த் மெட்ராஸ்லே இருக்கற எடத்தோட பேரு எதுவும் தெரியாததுனால எங்க 6V பஸ் அமீர் மஹால், பெரிய தெரு, ராயப்பேட்டைன்னு எங்களுக்குத் தெரிஞ்ச எடங்களுக்குள்ளாவே போகும். அப்போ திருவல்லிக்கேணியிலிருந்து சுங்கச்சாவடி வரைக்கும் போயிட்டு இருந்த பஸ் அது. இப்போ அது பெசண்ட் நகர்லேருந்து சுங்கச்சாவடி போற 6Aன்னு நெனக்கிறேன். ஹ்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்!!!

படிக்கிறதுக்கு டெல்லிக்குப் போன புதுசுல பிராஜெக்ட் விஷயமா எங்கேயாச்சும் வெளியே போகனும்னா நண்பர்க்ள கிட்ட "பஸ்ல போலாம்டா"ன்னு சொல்லுவேன். என் கூட படிச்ச சில பசங்க "நான் என் வாழ்க்கையிலேயே இது வரைக்கும் பஸ்ல ஏறுனதில்லை. பஸ்ஸெல்லாம் நமக்கு ஒத்துவராது. இன்னிக்குக் காரை எங்க அண்ணன் எடுத்துட்டுப் போயிட்டான். வேணா ஆட்டோல போலாம்"பானுங்க. இப்படி அவங்க பேசறதைக் கேட்டுட்டு எனக்கு எப்பவும் மொதல்ல தோணுறது என்னன்னா "பஸ்லயே ஏறாம வாழ்க்கையில நெறைய எழந்திருக்கீங்கடா"ன்னு தான். ஏன்னா அந்த அளவு பஸ் பயணம் மனிதர்களைச் சந்திக்கிறதுக்கும், அவங்களோட பழக்க வழக்கங்களைத் தெரிஞ்சிக்கிறதுக்கும் ஒரு வழி ஏற்படுத்திக் குடுக்குது. பஸ்களில் காணக் கிடைக்கும் சில உரையாடல்களும், நகைச்சுவை சம்பவங்களும் எங்கும் காணக் கிடைக்காதவை. அதே சமயம் இன்றளவும் சில மனதைக் கஷ்டப் படுத்தும் சம்பவங்களும், பேருந்து பயணங்களில் நடக்கத் தான் செய்கின்றன என்றாலும் வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை நினைவுகளாக்கிப் பொக்கிஷமாகப் பாதுகாக்கறவங்களா நீங்க இருந்தீங்கன்னா பஸ் பயணம் என்பது நிரம்பி வழியும் கூட்டத்தையும், எல்லையில்லா காத்திருப்பையும் கூட சிறியதாய் தோன்றச் செய்யும் ஒரு சுகானுபவம் தான்.

என் வாழ்நாளின் பெரும்பகுதியைச் சென்னையிலும், நான்கில் ஒரு பகுதியை வெளிமாநிலங்களிலும் கழித்தவன் நான். அதிகமாக கிராமங்களையும் சிறு நகரங்களையும் கண்டதில்லை. இருந்தாலும் தென்னாற்காடு மாவட்டத்தில் எங்க ஆயா(பாட்டி) வசித்த கிராமத்தை நான் பார்த்தவரை, பஸ் என்பது கிராமத்து வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று என அறிந்து கொண்டேன். வள்ளிகந்தன் வந்துட்டானா? மீனாம்பிகா போயிட்டானா? என்று பிரைவேட் பஸ்களின் பெயரைச் சொல்லித் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரிப்பதிலாகட்டும், 'விழுப்புரத்திலிருந்து பாண்டி நாப்பது கிலோ மீட்டர். ராமன் ரோடுவேஸ்ல போனீன்னா நாப்பது நிமிஷத்துல அடிச்சித் தள்ளிக்கிட்டுப் போயிடுவான்" எனப் பெருமையாகப் பேசுவதிலாகட்டும், "சீக்கிரம் கெளம்பு, பத்தரை மணி பெரியார் போயிடும்" என நம்பிக்கை தெரிவித்துத் தங்கள் வேலைகளை அதற்கேற்றாற் போல அமைத்துக் கொள்வதிலாகட்டும் பஸ் என்பது வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் என்பதை மீறிய ஒரு எமொஷனல் அட்டாச்மெண்டைக் காணலாம். அரசியல் காரணங்களை மேற்கோள் காட்டி போக்குவரத்துக் கழகங்களுக்கு வைத்திருந்த தலைவர்களின்(மக்களுக்காக உழைத்தவர்கள்) பெயர்களை எடுத்துவிட்டு அத்தகைய சக்தி வாய்ந்த ஒரு சாதனத்துக்கு வெறும் அரசு பேருந்து,மதுரை,திண்டுக்கல் எனப் பெயர் கொடுத்திருப்பதை ஏனோ ஜீரணிக்க முடியவில்லை. தோழர் ஜீவா, நேசமணி போன்றோர்கள் யார் என்றே தெரியாமல் வருங்கால சந்ததியினர் வாழ்ந்து மறைந்து விடக் கூடும். பஸ்களுக்கு அவர்கள் பெயர் இருந்தால், அவர்கள் யார் எனத் தெரிந்து கொள்ளும் ஒரு உந்துதலாவது ஏற்படும். இன்றளவும் என்னைப் பொறுத்தவரை ஆரஞ்சு வண்ண பஸ்கள் எல்லாம் பெரியார் தான், சாய்வு நாற்காலி கொண்ட பஸ்கள் எல்லாம் திருவள்ளுவர் தான்.

எழுதுனதுக்கப்புறம் தான் பாத்தேன்...பதிவு ரொம்ப பெருசாப் போச்சு. அதனால இதோட ரெண்டாம் பகுதியை நாளைக்குப் போடறேன்.

60 comments:

கப்பி | Kappi said...

//இது ஒரு இன்ஸ்பிரேஷன் பதிவு. ஜூலை மாதம் கப்பி எழுதுன 'பஸ் பயணங்களில்' பதிவு படிச்சதுலேருந்து அதை போலவே நானும் ஒரு பதிவு எழுதனும்னு ரொம்ப நாளா நெனச்சி வச்சிருந்தேன்//

தன்யனானேன் கைப்ஸ்!

//என் தம்பிக்கும் பிடிச்சமான விளையாட்டுன்னு ஒன்னு சொல்லனும்னா அது பஸ் விளையாட்டு தாங்க. //

இதே மாதிரி வீடு கட்டும் இடங்களில் ஆற்றுமணல்ல ரோடு போட்டு செங்கல் பஸ் ஓட்டியிருக்கீங்களா? ;)
பதிவில் எழுதியிருக்க ஒவ்வொரு வரிக்கும் சேம் ப்ளட் சொல்லனும் ;)

அருமையான பதிவு தல! இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்!!

நாமக்கல் சிபி said...

சரி.. முதல் கமெண்ட் நான் போட்டதா இருக்கட்டும்...

இன்னும் தூங்கலையா??? வயசான காலத்துல சீக்கிரம் தூங்கனும்னு தெரியாது? ;)

jolythaan said...

mmmm. I have also played like this. Almost all boys would have played like bus driver, postman, police etc.

Ok. Have you got the 100o usd DD that I sent to your permanent address. Please acknowldge.

Anonymous said...

ரைரை ரைட்
கைப்புள்ள மிச்ச சில்லறை கொடுங்க..

பஸ் பிராயாணம் அநுபவித்து இருப்போரின் நினைவுகளை மலர செய்து உள்ளீர்கள்.

சேரன் பஸ் ஸீபீடா பாண்டியன் பஸ் ஸீபீடான்னு நானும் சின்ன வயசுல பேசியது எல்லாம் ஞாபகம் வருது.

கைப்புள்ள ஜன்னல் ஓரமா எனக்கு ஒரு சீட்டு போட்டு ரொம்ப தூரம் போறதுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க

சேதுக்கரசி said...

என்ன ஆச்சரியம்.. நேத்து தான் இணைய நண்பர்களோட பழைய பஸ் அனுபவங்கள் சிலது பகிர்ந்துக்கிட்டு இருந்தேன்.. இன்னிக்கு நீங்க!

//அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும். நாங்க பஸ்ல போகும் போதெல்லாம் கெடைக்கிறது, எங்க வீட்டுக்கு யாராவது வந்தாங்கன்னா அவங்க கிட்ட கேட்டு வாங்கறது இப்படின்னு//

:-)

ஒரு 'சேஞ்சு'க்கு நீங்க டிரைவர் வேலை பார்க்கவேயில்லையா? இல்ல, கண்டக்டரா இருக்கும்போது தானே 'சேஞ்சு' இருக்கும்னு சொல்றீங்களா? :-D

சேதுக்கரசி said...

உங்க பதிவப் படிச்சிட்டு "கப்பி பய" பதிவையும் படிச்சேன். எல்லாம் ரொம்ப டீசண்டா எழுதிட்டுப் போயிட்டீங்க.. ஆமா கல்லூரிக் காலத்தில் சைட் அடிச்சதெல்லாம் பதிவுல காணோமே?

Divya said...

\"என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. \"

அம்மாவின் ஹேண்ட்பேக் இப்படியெல்லாம் பயன் பட்டதா??
ரசிக்கும் படியான பஸ் பயனம்.

VSK said...

ரை...ரை..!!

அடுத்த ஷ்டாப்[பதிவு]ல தான் வண்டி நிக்கும்!


:))

SP.VR. SUBBIAH said...

கைப்புள்ள அண்ணே! ( அண்ணேங்கிறது ஒரு விகுதிக்குததான் - அப்பத்தானே சொல்லவரும்)

நானும் சின்ன வயசிலே பஸ் விளையாட்டு நிறைய விளையாடியிருக்கேன்.
அதுல காமெடி என்னன்னா அந்தப் பஸ் விளயாட்டை எப்படி நிறுத்தினோம்கிறதுதான்!

உங்களை மாதிரி நானும் கண்டக்டர் ரோலதான் போடுவேன். எங்க அண்ணன் தான் டிரைவர். கூட பத்துப் பசங்களை பாசெஞ்சாரா சேர்த்துக்கிருவோம்.

உங்களுக்குதான் தெரியுமே எங்க பக்கத்தில (செட்டிநாடு) எல்லாமே பெரிய பெரிய வீடுகள். அகலம் 90 அடி நீளம் 150 அடி. வீட்டைச் சுத்தி சவுண்டு குடுத்துக்கிட்டே ஓடி ப்ஸ் விளையாட்டை அமர்க்களமா விளையாடுவோம்.

வீட்டில - கூட்டுக்குடுமப்த்தில இருக்கிற பெரிசுகளெல்லாம் கண்டுக்கிற மாட்டாக - நம்மளைப் பிராண்டாம இருந்தாச் சரின்னு விட்டிருவாக!

கண்டக்டர்னா பை இல்லாமலா? ஒரு பழைய சைக்கிள் சீட்ல கயித்தக் கட்டி - ஸ்பான்ச்சுக்கும் ரெக்ஸினுக்கும் இடைப்பட்ட பகுதியில் டிக்கெட்டெல்லாம் வச்சிருப்பேன். கூட ஆடுற பையன்களுக்கு வீட்டில கெடந்த பழைய அரையணா , ஒரணா, ரெண்டானா காசையெல்லாம் கொடுத்து வச்சிருப்போம்.

ஆட்டம் முடிஞ்சவுடனே அதெல்ல்லாம் கரெக்டா திருப்பி வாங்கி செக் பண்ணி - மறுபடியும் அந்தக் கண்டக்டர் பைக்குள்ளாரயே வைக்கிறதும் என்னோட வேலைதான். அதை ஒரு சின்ன மர பீரொ மேலே வச்சிருப்போம்

ஒருநாள் என்னாச்சுன்னா பஸ் விளயாட்டு விளையாடுறதுன்னு முடிவு பண்ணினோன்ன, எங்கண்ணன் ஒரு சவுண்டு கொடுத்தாரு, " டேய் சுப்பா, உன் பையை எடுத்துக்கிட்டு வாடான்னாரு."

என் கெட்ட நேரம், நானும் ஓடிப்போயி ஆசையா அந்தப்பையை எடுத்து, பீரொவிற்குப் பக்கத்திலே சடக்குன்னு உக்கார்ந்து பைக்குள்ள கையை விட்டு காசெல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க ஆரம்பித்தேன்.

அப்பத்தான் அது நடந்தது!

பைக்குள்ள இருந்த கருந்தேள் ஒண்ணு என்னை ஒரு போடு போட்டுது பாருங்க - நான் கத்துன கத்துல தெருவே கூடிப்போச்சு

அப்புறம் என்ன?

அன்னைக்கு விட்டதுதான் அந்த பஸ் விளையாட்டை!

SP.VR.SUBBIAH

Santhosh said...

தலை,
பதிவு நல்லா வந்து இருக்கு தலை.. சேம் பிளட் ஆனா என்ன தம்பி இல்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டு பிகர் இல்லாட்டி அத்தை பொண்ணு(இது எல்லாம் பாட்டி வீட்டுல சொந்த ஊர்ரில் நோ Indoor Games full time Road than ) :))..
//10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும//
இந்த விளையாட்டு விளையாடுகிறேன் அப்படின்னே கணிசமான சில்லறையை அம்மா/பாட்டி/சித்தி/மாமா/தாத்தா முடிஞ்சா எலலர்கிட்டேயும் கறந்து விடுவேன் விளையாட்டு முடிஞ்ச உடனே நேரா மிட்டாய் கடை தான் காசு தீர்ந்த உடனே அடுத்த கேம் துவங்கிவிடு ம் அப்ப தானே மறுபடுயும் காசு வாங்க முடியும் :))...

கதிர் said...

மலரும் நினைவுகளா?

அப்புறம் பக்கத்து ஊட்டு புள்ளயோட சின்ன வயசில ஆத்துலருந்து கூழாங்கல்லா பொறுக்கிட்டு வந்து அஞ்சாங்கல்லு ஏழாங்கல்லு விளையாண்டது எல்லாம் ஒரு பதிவா போடுவேன் சொல்லிட்டேன்.

கைப்ஸ் தென்னாற்காடு மாவட்டத்துல எந்த ஊரு நம்ம ஆயா ஊரு?

கதிர் said...

மலரும் நினைவுகளா?

அப்புறம் பக்கத்து ஊட்டு புள்ளயோட சின்ன வயசில ஆத்துலருந்து கூழாங்கல்லா பொறுக்கிட்டு வந்து அஞ்சாங்கல்லு ஏழாங்கல்லு விளையாண்டது எல்லாம் ஒரு பதிவா போடுவேன் சொல்லிட்டேன்.

கைப்ஸ் தென்னாற்காடு மாவட்டத்துல எந்த ஊரு நம்ம ஆயா ஊரு?

Anonymous said...

எப்படி இருக்கிங்க கைப்புள்ள :)

நாங்களும் பஸ் விளையாட்டு விளையாடி இருக்கோம்ல. ஒரு பெரிய கயிறு தான் பஸ்.. ஒரு முனையில டிரைவர் மறு முனையில கண்டக்டர்.. நடுவில ஏறி இறங்க பயணிகள்.. எங்க பஸ் ஓடிட்டே இருக்கும்..

ம்ம்

நியாபகபடுத்தினதுக்கு நன்றி.

அன்புடன்
கீதா

லதா said...

//எங்களுக்குப் பிடிச்ச பஸ் ரூட்னு பாத்தா அது 6V தான் //

எங்க ரூட் 1A.

//வாழ்வின் சின்ன சின்ன சந்தோஷங்களை நினைவுகளாக்கிப் பொக்கிஷமாகப் பாதுகாக்கறவங்களா நீங்க இருந்தீங்கன்னா பஸ் பயணம் என்பது நிரம்பி வழியும் கூட்டத்தையும், எல்லையில்லா காத்திருப்பையும் கூட சிறியதாய் தோன்றச் செய்யும் ஒரு சுகானுபவம் தான். //

அதே அதே. ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்த ஸ்டெல்லா புரூஸின் நாவல் (அது ஒரு நிலாக்காலம் ? ) ஒன்றில் வரும் நிகழ்ச்சிகளை நினைவூட்டிவிட்டீர்கள்

// ஒரு 'சேஞ்சு'க்கு நீங்க டிரைவர் வேலை பார்க்கவேயில்லையா? //

அப்போதிலிருந்தே நம்ப தலைக்கு ஓட்டுவது பிடிக்காது - ஓட்டப்படுவதுதான் பிடிக்கும் என்பதாலா அல்லது டிரைவராக இருந்தால் விசிலடிக்கமுடியாது என்பதாலா ?

// ஆமா கல்லூரிக் காலத்தில் சைட் அடிச்சதெல்லாம் பதிவுல காணோமே? //

முற்றும் போடவில்லையே அதனால் அடுத்த பகுதிகளில் எதிர்பார்க்கலாம்.

துளசி கோபால் said...

ஆஹா.... பஸ்!!

பல்லவன்லே பொண்ணு பார்த்த பார்ட்டிங்கெல்லாம் இருக்குதுப்பா இங்கே.

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் நல்லா இருந்தது. ஆனா அந்த பெயர் வைக்கறதுல மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. அதுனால நன்மைகள் விட பிரச்சனைகள்தான் அதிகம். இப்போ இருக்கற மாதிரியே இருக்கட்டும்.

Anonymous said...

கைப்புள்ள, ரசித்துப் படித்தேன்.

நாமக்கல் சிபி said...

//இருந்தாலும் தென்னாற்காடு மாவட்டத்தில் எங்க ஆயா(பாட்டி) வசித்த கிராமத்தை நான் பார்த்தவரை, பஸ் என்பது கிராமத்து வாழ்க்கையில் இரண்டற கலந்துவிட்ட ஒன்று என அறிந்து கொண்டேன். வள்ளிகந்தன் வந்துட்டானா? மீனாம்பிகா போயிட்டானா? என்று பிரைவேட் பஸ்களின் பெயரைச் சொல்லித் தங்கள் வீட்டுப் பிள்ளை போல விசாரிப்பதிலாகட்டும், 'விழுப்புரத்திலிருந்து பாண்டி நாப்பது கிலோ மீட்டர். ராமன் ரோடுவேஸ்ல போனீன்னா நாப்பது நிமிஷத்துல அடிச்சித் தள்ளிக்கிட்டுப் போயிடுவான்" எனப் பெருமையாகப் பேசுவதிலாகட்டும், "சீக்கிரம் கெளம்பு, பத்தரை மணி பெரியார் போயிடும்" என நம்பிக்கை தெரிவித்துத் தங்கள் வேலைகளை அதற்கேற்றாற் போல அமைத்துக் கொள்வதிலாகட்டும் பஸ் என்பது வெறும் ஒரு போக்குவரத்து சாதனம் என்பதை மீறிய ஒரு எமொஷனல் அட்டாச்மெண்டைக் காணலாம். //

எங்க மாவட்டத்தை பற்றி எழுதியதார்க்காக ஒரு ஸ்பெஷல் நன்றி!!!

சின்ன வயசுல இந்த மாதிரி நிறைய விளையாட்டு விளையாடுவோம்... கல்லா மண்ணா விளையாட்டு தெரியுமா?

கைப்புள்ள said...

//தன்யனானேன் கைப்ஸ்!//

இன்ஸ்பையர் பண்ணதுக்கு நான் தான் நன்னி சொல்லனும் கப்பி. உன் பாஷையிலேயே சொல்றேன். வளர நன்னி :)

//இதே மாதிரி வீடு கட்டும் இடங்களில் ஆற்றுமணல்ல ரோடு போட்டு செங்கல் பஸ் ஓட்டியிருக்கீங்களா? ;)//

மிஸ் பண்ணிட்டேன் போலிருக்கே?
:(

//பதிவில் எழுதியிருக்க ஒவ்வொரு வரிக்கும் சேம் ப்ளட் சொல்லனும் ;)

அருமையான பதிவு தல! இரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறேன்!! //
ரொம்ப டேங்கீஸ்பா. சீக்கிரம் போட்டுடறேன்.

கைப்புள்ள said...

//சரி.. முதல் கமெண்ட் நான் போட்டதா இருக்கட்டும்...//
ஹி...ஹி...இன்னிக்கு கப்பி முதல் கமெண்டு போட்டுட்டாருங்க.

//இன்னும் தூங்கலையா??? வயசான காலத்துல சீக்கிரம் தூங்கனும்னு தெரியாது? ;)//
கேள்வி கேக்க ஆளு யாரும் இல்லையா? எல்லாம் அந்த தைரியம் தான் வெட்டி
:)

கைப்புள்ள said...

//mmmm. I have also played like this. Almost all boys would have played like bus driver, postman, police etc//

ஆமாங்க. ஆனா நாங்க உக்காந்த எடத்துலேயே வெளாடுவோம், ஓடி எல்லாம் வெளாட மாட்டோம். எங்க பஸ் விளையாட்டுல திரைக்கதை அண்ட் வசனத்துக்குத் தான் முன்னுரிமை.
:)

//Ok. Have you got the 100o usd DD that I sent to your permanent address. Please acknowldge.//
ரொம்ப பாசக்காரரா இருக்கீங்களே? என்ன சொல்றதுன்னு புரியலியே...எந்தப் பக்கத்துலேருந்து ஆப்பு வருமோ? சரி துணிஞ்சவனுக்குப் பஞ்சு மெத்தையும் தூக்கு மேடை...சமாளிப்போம்.

வந்துடுச்சுங்க. அக்னாலெட்ஜ்ட் ஆஃப் துபாய்.

கைப்புள்ள said...

//ரைரை ரைட்
கைப்புள்ள மிச்ச சில்லறை கொடுங்க..

பஸ் பிராயாணம் அநுபவித்து இருப்போரின் நினைவுகளை மலர செய்து உள்ளீர்கள்.//

வாங்க அகில்,
ரொம்ப நன்றிங்க.

//சேரன் பஸ் ஸீபீடா பாண்டியன் பஸ் ஸீபீடான்னு நானும் சின்ன வயசுல பேசியது எல்லாம் ஞாபகம் வருது.//
உண்மை தாங்க. சின்ன வயசுல எந்த பஸ் வேகமாப் போவுதுன்னு நாங்க நெனக்கிறோமோ அந்த பஸ்சைத் தான் ஓட்டுவோம்.

//கைப்புள்ள ஜன்னல் ஓரமா எனக்கு ஒரு சீட்டு போட்டு ரொம்ப தூரம் போறதுக்கு ஒரு டிக்கெட் கொடுங்க//
உங்க கமெண்டால என்னை மகிழ்ச்சியில ஆழ்த்திட்டீங்க. ரொம்ப ரொம்ப நன்றி. என்னால் முயன்ற வரை முயற்சிக்கிறேன்.

கைப்புள்ள said...

//என்ன ஆச்சரியம்.. நேத்து தான் இணைய நண்பர்களோட பழைய பஸ் அனுபவங்கள் சிலது பகிர்ந்துக்கிட்டு இருந்தேன்.. இன்னிக்கு நீங்க!//
வாங்க மேடம்,
அப்படியா? ரொம்ப சந்தோஷம்.

//
:-)

ஒரு 'சேஞ்சு'க்கு நீங்க டிரைவர் வேலை பார்க்கவேயில்லையா? இல்ல, கண்டக்டரா இருக்கும்போது தானே 'சேஞ்சு' இருக்கும்னு சொல்றீங்களா? :-D //

உங்க சேஞ்சு சிலேடையை ரொம்ப ரசிச்சேன். எங்கயாவது வெளியூருக்குப் போயிட்டு வந்தா என் தம்பி சண்டை போட்டு கண்டக்டர் ரோலை வாங்கிக்குவான்...ஏன்னா ஊர் கார கண்டக்டருங்க மேனரிசம் எல்லாம் ஆக்ட் குடுக்க சூப்பராருக்கும். அதோட இ.புலியூர், சி.பாளையம் அப்படின்னு இனிஷியல் வச்ச ஊரு பேரெல்லாம் சொல்லி டிக்கட் குடுக்கலாம். அதான்.
:)

கைப்புள்ள said...

//உங்க பதிவப் படிச்சிட்டு "கப்பி பய" பதிவையும் படிச்சேன். எல்லாம் ரொம்ப டீசண்டா எழுதிட்டுப் போயிட்டீங்க.. ஆமா கல்லூரிக் காலத்தில் சைட் அடிச்சதெல்லாம் பதிவுல காணோமே?//

ஓ! அதுவா? :) அதெல்லாம் அடுத்த பதிவுல வரலாம்...வராமலும் போகலாம்!
:)

கைப்புள்ள said...

//அம்மாவின் ஹேண்ட்பேக் இப்படியெல்லாம் பயன் பட்டதா??
ரசிக்கும் படியான பஸ் பயனம்.//

ஆமாங்க. எல்லாம் வறுமை தான் காரணம். இல்லாத கொடுமைக்கு லேடீஸ் ஹேண்ட்பேக் வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டோம். என்ன பண்றது? :)

பஸ் வெளாட்டு வெளையாட கண்டக்டர் பை வாங்கி குடுங்கன்னு கேட்டா வாங்கிக் குடுத்துருப்பாங்கன்னு நெனக்கிறீங்க? ஒத தான் கெடச்சிருக்கும்.
:)

கைப்புள்ள said...

//ரை...ரை..!!

அடுத்த ஷ்டாப்[பதிவு]ல தான் வண்டி நிக்கும்!


:)) //

வாங்க எஸ்கே சார்,
ஆமாங்க. இப்போதைக்கு ஒரு 24 அவர்ஸுக்கு நம்ம வண்டி ஹோல்டன்.
:)

கைப்புள்ள said...

//என் கெட்ட நேரம், நானும் ஓடிப்போயி ஆசையா அந்தப்பையை எடுத்து, பீரொவிற்குப் பக்கத்திலே சடக்குன்னு உக்கார்ந்து பைக்குள்ள கையை விட்டு காசெல்லாம் சரியா இருக்கான்னு பார்க்க ஆரம்பித்தேன்.

அப்பத்தான் அது நடந்தது!

பைக்குள்ள இருந்த கருந்தேள் ஒண்ணு என்னை ஒரு போடு போட்டுது பாருங்க - நான் கத்துன கத்துல தெருவே கூடிப்போச்சு//

வாங்க சுப்பையா சார்,
அடடா...சின்ன பசங்கன்னு தெரியாம தேள் கொட்டிருக்கும் போலிருக்கு. பாவம்.நீங்க உங்க வெளயாட்டை நிறுத்த இப்படி ஒரு சம்பவம் நடந்துருக்க வேணாம். இந்தப் பதிவைப் படிச்சிட்டு நீங்க உங்க நினைவுகளைப் பகிர்ந்துகிட்டதுக்கு ரொம்ப நன்றி சார்.

கைப்புள்ள said...

//பதிவு நல்லா வந்து இருக்கு தலை.. சேம் பிளட் ஆனா என்ன தம்பி இல்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டு பிகர் இல்லாட்டி அத்தை பொண்ணு(இது எல்லாம் பாட்டி வீட்டுல சொந்த ஊர்ரில் நோ Indoor Games full time Road than ) :))..//

ஹ்ம்ம...குடுத்து வச்சவரு தான் நீங்க சந்தோஷ்.
:)

//இந்த விளையாட்டு விளையாடுகிறேன் அப்படின்னே கணிசமான சில்லறையை அம்மா/பாட்டி/சித்தி/மாமா/தாத்தா முடிஞ்சா எலலர்கிட்டேயும் கறந்து விடுவேன் விளையாட்டு முடிஞ்ச உடனே நேரா மிட்டாய் கடை தான் காசு தீர்ந்த உடனே அடுத்த கேம் துவங்கிவிடு ம் அப்ப தானே மறுபடுயும் காசு வாங்க முடியும் :))...//
ஹி...ஹி...இதெல்லாம் அந்த வயசுக்குரிய சின்ன சின்ன சந்தோஷங்கள். பகிர்ந்துகிட்டதுக்கு நன்றி சந்தோஷ்.

கைப்புள்ள said...

//மலரும் நினைவுகளா?//
அதே தான்.
:)

//அப்புறம் பக்கத்து ஊட்டு புள்ளயோட சின்ன வயசில ஆத்துலருந்து கூழாங்கல்லா பொறுக்கிட்டு வந்து அஞ்சாங்கல்லு ஏழாங்கல்லு விளையாண்டது எல்லாம் ஒரு பதிவா போடுவேன் சொல்லிட்டேன்.//
போடுப்பா...ஐ ஆம் தி வெயிட்டிங்.

//கைப்ஸ் தென்னாற்காடு மாவட்டத்துல எந்த ஊரு நம்ம ஆயா ஊரு?//
வள்ளிகந்தன் டிரான்ஸ்போர்ட் பேரு கேட்டதும் கள்ளக்குறிச்சி ஞாபகம் வந்துடுச்சா? :) கள்ளக்குறிச்சி டு விருத்தாசலம் வள்ளிகந்தனோட ரூட். விருத்தாசலத்துலேருந்து வரும் போது திட்டக்குடி, வாகையூர் இதெல்லாம் தாண்டி அரங்கூர்னு ஒரு கிராமம் வரும். கேள்விபட்டிருப்பீங்களான்னு தெரியலை. அதான் நம்ம ஆயா ஊரு. இப்பிடிக்கா பாத்தீங்கன்னா திருச்சி NH45லேருந்து ஒரு 5-6 கிமீ தூரம்.

கைப்புள்ள said...

//எப்படி இருக்கிங்க கைப்புள்ள :)//
வாங்க கீதா மேடம்,
ரொம்ப நல்லாருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? நிவேதனா பாப்பா எப்படியிருக்கு?

//நாங்களும் பஸ் விளையாட்டு விளையாடி இருக்கோம்ல. ஒரு பெரிய கயிறு தான் பஸ்.. ஒரு முனையில டிரைவர் மறு முனையில கண்டக்டர்.. நடுவில ஏறி இறங்க பயணிகள்.. எங்க பஸ் ஓடிட்டே இருக்கும்..

ம்ம்

நியாபகபடுத்தினதுக்கு நன்றி.//
உங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கும் வாழ்த்தியதற்கும் ரொம்ப நன்றி மேடம்.

இலவசக்கொத்தனார் said...

கப்பி பதிவில் போட்ட பின்னூட்டம்.

//பள்ளி செல்லும் போதும் கல்லூரி செல்லும் போது கிடைத்த வேறுபட்ட அனுபவங்கள், அடித்த லூட்டிகள், டவுண் பஸ்ஸுக்கும், மொபஸல் வண்டிக்கும் வித்தியாசம் தெரியாத சிட்டி பசங்களை பார்த்து சிரித்தது, டிக்கெட் எடுக்காமல் செல்லும் த்ரில், பஸ் டோக்கன் தீர்க்கவே அடிக்கும் வெத்து ட்ரிப்கள், புட் போர்டில் தொங்கி கண்டக்டர் இரத்த கொதிப்பை ஜாஸ்தியாக்குவது, ட்ரைவருடன் செண்டி போட்டு ஸ்டாப்பில் இல்லாமல் வீட்டு வாசலில் இறங்கிக் கொள்வது, 20 வருடங்களுக்கு முன்னால் கே.டி.சி (கட்டபொம்மன்) 4-ம் நம்பர் ரூட்டில் வரும் கருப்பசாமி பாண்டியன் கண்டக்டர் என என்னென்னவோ ஞாபங்களைக் கிளப்பி விட்டுட்டீங்களே....//

Udhayakumar said...

நான் சின்ன வயசுல NP (National Permit) லாரி எல்லாம் ஓட்டிருக்கேன் :-)

12, 7C, K1, CSBS, Sivambiga ஞாபகத்தை கிளறி விட்டீங்களே, இது ஞாயமா???

கதிர் said...

//அரங்கூர்னு ஒரு கிராமம் வரும். கேள்விபட்டிருப்பீங்களான்னு தெரியலை//

என்ன தல இப்படி கேட்டுபுட்ட?

நான் ஒரு பெரிய ஊருசுத்தி தெரியும்ல, எனக்கு நல்லாவே தெரியும் அந்த ஊரு, ஆத்துக்கு இந்த பக்கம் லெப்பைகுடிக்காடு, அந்த பக்கம் அரங்கூர், தொழுதூர் என்கிற ராமநத்தத்தில இருந்து அஞ்சாறு கிலோமீட்டர்ல இருக்கு.

இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

அந்த ஊர்ல அங்கமுத்து சக்கரை தெரியுமா?
நல்லமுத்து?, அவங்க அண்ணன்?
அந்த ஊருக்கு பக்கத்துலதான் தமிழ்ர்களின் பாரம்பரிய சோமபானமான ஸ்டோன் கிடைக்கும். நல்லா இருக்கும்.

சேதுக்கரசி said...

//அதெல்லாம் அடுத்த பதிவுல வரலாம்...வராமலும் போகலாம்!//

சப்ரெஷன் ஆஃப் இன்ஃபர்மேஷன் இஸ் இல்லீகல்.

இராம்/Raam said...

தல,

பார்த்திய்யா அடுத்த எதிர்வினை பதிவு போட ஐடியா கொடுத்திட்டியே...


;)

இராம்/Raam said...

ஆகா சொல்லமறந்துட்டேன். பதிவு சூப்பரா இருந்துச்சு தல.....

கைப்புள்ள said...

//எங்க ரூட் 1A//

1Aன்னு சொன்னீங்க? எந்த ஊருன்னு சொல்லலியே மேடம்? திருவான்மியூர்-திருவொற்றியூர் 1Aவா?

//அதே அதே. ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்த ஸ்டெல்லா புரூஸின் நாவல் (அது ஒரு நிலாக்காலம் ? ) ஒன்றில் வரும் நிகழ்ச்சிகளை நினைவூட்டிவிட்டீர்கள்//
ஆமாம் மேடம், சின்ன வயசு நினைவுகளை அசை போடுவதும் ஒரு சுகம் தான்.

//அப்போதிலிருந்தே நம்ப தலைக்கு ஓட்டுவது பிடிக்காது - ஓட்டப்படுவதுதான் பிடிக்கும் என்பதாலா அல்லது டிரைவராக இருந்தால் விசிலடிக்கமுடியாது என்பதாலா ?//
ஹி...ஹி...என்னமோ கண்டக்டர்னாவே ஒரு இண்டரெஸ்ட். கையில டிக்கட், விசில் இதெல்லாம் இருக்குமில்ல?
:)

//முற்றும் போடவில்லையே அதனால் அடுத்த பகுதிகளில் எதிர்பார்க்கலாம்.//
பத்த வைக்கிறீங்களே?
:))

கைப்புள்ள said...

//ஆஹா.... பஸ்!!

பல்லவன்லே பொண்ணு பார்த்த பார்ட்டிங்கெல்லாம் இருக்குதுப்பா இங்கே.//

வாங்கக்கா,
யாரு அது? சொல்லவேயில்ல?
:)

கைப்புள்ள said...

//எல்லாம் நல்லா இருந்தது. ஆனா அந்த பெயர் வைக்கறதுல மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை. அதுனால நன்மைகள் விட பிரச்சனைகள்தான் அதிகம். இப்போ இருக்கற மாதிரியே இருக்கட்டும்.//

வாங்க கொத்ஸ்,
என்னமோ நாங்க சொன்னதும் பேரை மாத்திட போற மாதிரி இல்ல சொல்றீங்க? எல்லாம் அளுவாச்சி தாங்க அளுவறோம்...வேற ஒன்னும் இல்ல. இதுல என்ன மேட்டர்னா மக்களுக்கு உழைத்த தலைவர்கள் யாருன்னு தேர்ந்தெடுக்கறது மக்கள் கிடையாது...அது சில vested interests கிட்ட தான் இருக்கு. அது வரைக்கும் நீங்க சொல்ற மாதிரி தலைவருங்க பேரு வைக்கும் போது பிரச்சனை தான். வந்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றிங்க.

கைப்புள்ள said...

//கைப்புள்ள, ரசித்துப் படித்தேன்//

வாங்க பரணீ,
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க.

கைப்புள்ள said...

//எங்க மாவட்டத்தை பற்றி எழுதியதார்க்காக ஒரு ஸ்பெஷல் நன்றி!!!//

வாங்க பாலாஜி,
நம்ம பூர்வீகமும் அந்த பக்கம் தானுங்களே?
:)

//சின்ன வயசுல இந்த மாதிரி நிறைய விளையாட்டு விளையாடுவோம்... கல்லா மண்ணா விளையாட்டு தெரியுமா? //
நான் கூட வெளாடிருக்கேன் பாலாஜி. இப்ப ஒரே ஃபீலிங்ஸா இருக்கு அதெல்லாம் ஆட முடியலியேன்னு
:(

கைப்புள்ள said...

//ட்ரைவருடன் செண்டி போட்டு ஸ்டாப்பில் இல்லாமல் வீட்டு வாசலில் இறங்கிக் கொள்வது, 20 வருடங்களுக்கு முன்னால் கே.டி.சி (கட்டபொம்மன்) 4-ம் நம்பர் ரூட்டில் வரும் கருப்பசாமி பாண்டியன் கண்டக்டர் என என்னென்னவோ ஞாபங்களைக் கிளப்பி விட்டுட்டீங்களே....//

கொத்ஸ்,
உங்களுக்கும் பஸ்ல பல நினைவுகள் இருக்கும் போல இருக்கே...எடுத்து வுட வேண்டியது தானே ஒரு பதிவா?
:)

கைப்புள்ள said...

//நான் சின்ன வயசுல NP (National Permit) லாரி எல்லாம் ஓட்டிருக்கேன் :-)//

உங்களுக்கு சின்ன வயசுலியே கனரக ஓட்டுநர் உரிமம்லாம் கூட குடுத்துட்டாங்களா?

//12, 7C, K1, CSBS, Sivambiga ஞாபகத்தை கிளறி விட்டீங்களே, இது ஞாயமா???//
ஹி...ஹி...நியாயம் தர்மம் பாத்தா தொழில் பண்ண முடியாதுங்களே? ஃபீலிங்ஸ் ஆகி தானே நாங்களும் இப்படி பொலம்பிட்டிருக்கோம்?
:)

கைப்புள்ள said...

//சப்ரெஷன் ஆஃப் இன்ஃபர்மேஷன் இஸ் இல்லீகல்//

சும்மா சொல்லக் கூடாது. நல்லாத் தான் உசுப்பேத்தறீங்க நீங்க.
:))

கைப்புள்ள said...

//தல,

பார்த்திய்யா அடுத்த எதிர்வினை பதிவு போட ஐடியா கொடுத்திட்டியே...

//

ஐடியாவைச் செயல் படுத்திட வேண்டியது தானே?
:)

கைப்புள்ள said...

//ஆகா சொல்லமறந்துட்டேன். பதிவு சூப்பரா இருந்துச்சு தல..... //

மறுக்கா வந்து வாழ்த்து சொன்னதுக்கு டேங்கீஸ்பா.

கைப்புள்ள said...

//என்ன தல இப்படி கேட்டுபுட்ட?

நான் ஒரு பெரிய ஊருசுத்தி தெரியும்ல, எனக்கு நல்லாவே தெரியும் அந்த ஊரு, ஆத்துக்கு இந்த பக்கம் லெப்பைகுடிக்காடு, அந்த பக்கம் அரங்கூர், தொழுதூர் என்கிற ராமநத்தத்தில இருந்து அஞ்சாறு கிலோமீட்டர்ல இருக்கு.//

தம்பி கதிரு,
பயங்கர சந்தோஷமா இருக்குப்பா. சும்மா புல்லரிக்குது. லப்பைகுடிகாடு வரைக்கும் புட்டு புட்டு வக்கிறியே. சூப்பர்.

//இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?//

ஒத்துக்கறேன்...நீ அரங்கூர் அரசன்னு ஒத்துக்கறேன்.
அந்த பகுதியைக் கதைகளமா வச்சி ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு கதை எழுதுனேன். அதையும் கொஞ்சம் பாரு...
http://kaipullai.blogspot.com/2006/01/blog-post_113673753232809325.html

//அந்த ஊர்ல அங்கமுத்து சக்கரை தெரியுமா?
நல்லமுத்து?, அவங்க அண்ணன்?//
தெரியாதே தம்பி! நான் அங்க போயி இப்ப பத்து வருஷத்துகிட்ட ஆகப் போவுதுங்க.
:(

//அந்த ஊருக்கு பக்கத்துலதான் தமிழ்ர்களின் பாரம்பரிய சோமபானமான ஸ்டோன் கிடைக்கும். நல்லா இருக்கும். //
அடப்பாவி...உன்ன நல்லவன்னு நம்புனேனேயா? உனக்கு குடிப்பழக்கம் வேற இருக்கா?

Srikanth said...

@ தல,

என்னாது, பஸ் ல நீ ஏறுனியா ? உன் வெஹிகிள் தவிர எதுலையும் ஏற மாட்டேன்னு முழங்கின என் சிங்கமா இப்படி...? ப்ரேமானந்தா...

Srikanth said...

ஏறுனது ஏறிட்ட யப்பா கன்ரக்டர், 2 காலேஜ் ரோட், 2 தார் ரோட் கு சீக்கிரம் டிக்கட் குடுப்பா...

கைப்புள்ள said...

//என்னாது, பஸ் ல நீ ஏறுனியா ? உன் வெஹிகிள் தவிர எதுலையும் ஏற மாட்டேன்னு முழங்கின என் சிங்கமா இப்படி...?//

நம்ம வண்டியை ஓட்டற உங்கள மாதிரி அப்ரண்டீசுங்க கெடக்கற வரைக்கும் பஸ்ல தான் போய்க்கிட்டு இருந்தேன். என்ன பண்ணறது?

கைப்புள்ள said...

//ஏறுனது ஏறிட்ட யப்பா கன்ரக்டர், 2 காலேஜ் ரோட், 2 தார் ரோட் கு சீக்கிரம் டிக்கட் குடுப்பா...//

ஆஹா ஸ்ரீ...எந்த ஊரு ராசாய்யா நீயு?
:)

Srikanth said...

// ஆஹா ஸ்ரீ...எந்த ஊரு ராசாய்யா நீயு? //

கைப்பு, நாங்க பெரம்பூர் 29C ரூட் அப்போய்...

கைப்புள்ள said...

//கைப்பு, நாங்க பெரம்பூர் 29C ரூட் அப்போய்... //

காலேஜ் ரோட்னும் போதே நெனச்சேன்...மெட்ராஸ் தான்னு. ஆனா தார் ரோடுன்னதும் சந்தேகம் வந்துடுச்சு..அந்த பேருல எந்த ரோடு இருக்குன்னு?

ஆமா கேக்கனும்னு நெனச்சேன்...அது என்னா ரெண்டு ரெண்டு டிக்கெட்? கூட யாரு?
:)

குமரன் (Kumaran) said...

மோகனா. நல்லா இருந்ததுங்க உங்க பஸ் விளையாட்டு. ஹ்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்!!!ன்னு பெருமூச்சு விடறதுக்கு முன்னாடி சூப்பரா எழுதிட்டீங்க. உங்க கோவக்கார டிரைவரு இப்ப எப்படி இருக்காரு? என்ன பண்றாரு?

கைப்புள்ள said...

//மோகனா. நல்லா இருந்ததுங்க உங்க பஸ் விளையாட்டு. ஹ்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு காலம்!!!ன்னு பெருமூச்சு விடறதுக்கு முன்னாடி சூப்பரா எழுதிட்டீங்க. உங்க கோவக்கார டிரைவரு இப்ப எப்படி இருக்காரு? என்ன பண்றாரு?//

வாங்க குமரன் சார்,
கண்டிப்பாங்க...ஏக்கப் பெருமூச்சு விடறதுனால தான் கண் காணாத எடத்துல ஒக்காந்துக்கிட்டு இதையெல்லாம் எழுதிக்கிட்டு இருக்கேன். நம்ம கோவக்கார டிரைவரு சென்னையில தான் இருக்காரு. டிசம்பர் ஒன்னாந் தேதியிலிருந்து ஒரு தனியார் பிசியோதெரபி(தமிழ்ல என்னங்க?) கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்துள்ளார். தங்களுடைய வாழ்த்துகளுக்கும் விசார்ப்புக்கும் மிக்க நன்றி.

Unknown said...

மாப்ளே கைப்பு அழகான வர்ணனைடா.. சும்மா அப்படியே பின்னாலே போக வைச்சுட்டே..

தூத்துக்குடி பக்கம் இருக்க எங்க கிராமத்தில் இருந்து மறுபடியும் சென்னை திரும்ப 2.30 மணி ரத்னா ( பஸ் தான்ப்பா) பிடிச்ச ஞாபகம் வந்துறுச்சுடா... இன்னும் அந்த ரத்னா அங்கே ஓடுதுடா.. ஆனா எங்க கிராமத்துல்ல அதுக்கான பயணிகள் குறைஞ்சுப் போயிட்டாங்களாம்... ஒரு தடவ ஊருக்கும் போகணும்ன்னு ஏங்க வைச்சுருச்சு உன் பதிவு

லதா said...

// திருவான்மியூர்-திருவொற்றியூர் 1Aவா? //
திருவல்லிக்கேணி - சீதக்காதி நகர்
( தெரியும்தானே ? )

கைப்புள்ள said...

//மாப்ளே கைப்பு அழகான வர்ணனைடா.. சும்மா அப்படியே பின்னாலே போக வைச்சுட்டே.. //

மச்சி! ரொம்ப தேங்க்ஸ்டா. சந்தோஷப் படுத்திட்டே என்னை.

//தூத்துக்குடி பக்கம் இருக்க எங்க கிராமத்தில் இருந்து மறுபடியும் சென்னை திரும்ப 2.30 மணி ரத்னா ( பஸ் தான்ப்பா) பிடிச்ச ஞாபகம் வந்துறுச்சுடா... இன்னும் அந்த ரத்னா அங்கே ஓடுதுடா.. ஆனா எங்க கிராமத்துல்ல அதுக்கான பயணிகள் குறைஞ்சுப் போயிட்டாங்களாம்... ஒரு தடவ ஊருக்கும் போகணும்ன்னு ஏங்க வைச்சுருச்சு உன் பதிவு //

ஏக்கத்தைத் தணிக்க நான் எழுதுனதைப் படிச்சு ஒனக்கும் ஏக்கம் ஆஃப் தூத்துக்குடியா? சாரி ராசா...மன்னிச்சுக்க.
:)

கைப்புள்ள said...

//திருவல்லிக்கேணி - சீதக்காதி நகர்
( தெரியும்தானே ? )//

சீதக்காதி நகர் தெரியும். ஆனா இருபது வருஷம் திருவல்லிக்கேணியில குப்பை கொட்டுனவன் கிட்ட 1Aன்னு நான் கேள்விப்படாத பஸ் நம்பர் சொல்றீங்க? அதான் கொழப்பமா இருக்கு? இப்ப 1Aன்னு ஓடற பஸ் திருவான்மியூர்லேருந்து போறது. நீங்க சொல்ற 1A எப்ப இருந்தது? கி.மு...சே...கி.பி. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பத்தி...??
:))

லதா said...

// நீங்க சொல்ற 1A எப்ப இருந்தது? கி.மு...சே...கி.பி. ஆயிரத்து தொள்ளாயிரத்து நாப்பத்தி...??
:)) //

1978
:-))