Sunday, April 09, 2006

ஃபைவ் டே வீக் & other stories

இன்னிக்கு ஒரு மேட்டரும் இல்லாம அப்படியே மனம் போன போக்குல் கிறுக்கறதா உத்தேசம். (ஆமா! எப்பவும் ஐ.நா. சபையில் விவாதிக்க வேண்டிய விஷயத்தைப் பேசற மாதிரி தான்!!) கிட்டத்தட்ட அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் முதல் முறையா இந்த வாரம் "ஃபைவ் டே வீக் கொண்டாடுறேன்". பெருசா ஒன்னும் சாதிச்சிரலைன்னாலும், இன்னிக்கு நாள் ரொம்பவே நல்லாப் போச்சு. பாட்டு கேட்டுக்கிட்டே நாளைத் தொடங்குறது, டெல்லியில படிச்சிட்டு இருந்தப்ப ஆரம்பிச்ச பழக்கம். பெரும்பாலும் அந்த மாதிரி கேக்கறது எல்லாம் இளையராஜா பாட்டு தான். ராஜாவோட பாட்டுகளை கேசட்ல பதிவு பண்ணி வச்சிருப்பேன். பாடல்களை வகைப்படுத்துறது எல்லாம் ஒன்னும் கிடையாது. என்னோட ஸ்டைல் எப்படின்னா எனக்கு அந்த சமயத்துல என்ன பாட்டு தோணுதோ, அதை பேப்பர்ல ஒவ்வொண்ணா எழுதி வச்சு ரெகார்ட் பண்ணிக்குவேன். இந்தூர்ல இருக்கும் போது காலையில ஆபிசுக்கு பஸ்ல போகும் போது வாக்மேன்ல பாட்டு கேட்டுக்கிட்டே போறது பழக்கம். ஆனா வாக்மேன்ல கேக்கறதை விட கேசட்டை டூ-இன்- ஒன்ல போட்டு விட்டுட்டுப் பாட்டையும் கேட்டுக்கிட்டு நாம பண்ணற வேலையையும் பண்ணறது ஒரு தனி அனுபவம். தென்கச்சி கோ.சுவாமிநாதன் ஆல் இந்தியா ரேடியோவிலேருந்து ரிட்டையர் ஆகற வரைக்கும், என்ன தான் எஃப்.எம்ல நல்ல பாட்டு வந்தாலும், கேசட்ல பிரமாதமான பாட்டு பதிவு பண்ணி வச்சிருந்தாலும், அப்பா சரியா 'இன்று ஒரு தகவல்' வர்ற நேரத்துக்கு ஆகாசவாணியின் சென்னை வானொலி நிலையத்துக்கு மாத்திடுவாரு. தென்கச்சியார் ரிட்டையர் ஆனதும் ஆகாசவாணியும் எங்க வீட்டுலேருந்து ரிட்டையர் ஆயிடுச்சு. இருந்தாலும் கேபிள்ல வழக்கமா வீட்டுல பாக்குற நிகழ்ச்சிங்க இருக்கறதுனால கேசட் எல்லாம் கேக்கறதுக்குக் கொஞ்சம் மெனக்கெடனும்.ஆனா இன்னிக்கு நம்ம ராசி நல்லாருந்துச்சு.

இந்தூர்லேருந்து நான் தனியாளாப் புழங்குன சாமான் எல்லாம் நேத்து வந்து சேந்துச்சு. தனியா இருந்தவனுக்கு எதுக்கு இவ்வளவோ சாமான் செட்டுன்னு வீட்டுல கேக்கற அளவுக்குக் கணிசமான ஜாமான் தான். அதையெல்லாம் இடம் பாத்து அடுக்கி வைக்க வீட்டுல இருக்குற எல்லாரையும் முடுக்கி விட்டதுல யாருக்கும் டிவி ஞாபகம் வரலை. இது தான் சாக்குன்னு இளையராஜா பாடல் தொகுப்பு கேசட் ஒன்னைப் போட்டு விட்டுட்டு நானும் ஒவ்வொரு பொட்டியாத் திறந்து அடுக்க ஆரம்பிச்சிட்டேன். பாட்டை ரெகார்ட் செய்ய கொடுக்கும் போது நான் கடைபிடிக்கும் உத்தி, பாட்டு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகமா கொடுக்கறது. அதாவது நீங்க பாட்டைக் கேக்கும் போது ஒரு குறிப்பிட்ட மூட் செட் ஆகாத படிக்குப் பாட்டு கேட்டுக்கிட்டே வேலை செய்யணும். உதாரணத்துக்கு "விக்ரம்" படத்து மீண்டும் மீண்டும் வா பாட்டு முடிஞ்சதும் ஆரம்பிக்கிற பாட்டு "அன்புள்ள ரஜினிகாந்த் படத்து கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே பாட்டா இருக்கும். அந்த பாட்டு முடிஞ்சதுன்னா மலேசியா வாசுதேவன் "கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ"னு ஆரம்பிப்பாரு. இப்படி பாட்டு கேக்கறதுல ரெண்டு பயன் - ஒன்னு, பலவிதமான ரசங்களின் சுவையையும் (நவரசமுங்ண்ணா)முக்கா மணி நேரத்துல ஒரு சேர அனுபவிக்க முடியும். ரெண்டு, இளையராஜா போன்ற ஜீனியஸ்களின் திறமையையும், அவரு தன்னோட பாட்டுல காட்டுற வெரைட்டியையும் தெரிஞ்சிக்கலாம். அந்த மாதிரி பல முறை "மொட்டையோட" பரிமாணங்களைப் பாத்து வியந்திருக்கேன். மனுசன் இந்த சின்ன மண்டையை வச்சிக்கிட்டு எப்படிடா இப்படியெல்லாம் யோசிக்கிறாருன்னு. உதாரணத்துக்கு நான் இன்னிக்குக் கேட்டு திக்குமுக்காடி போன பாட்டு "அஞ்சலி" படத்துல வர்ற வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி பாட்டு. நான் SAP Consultant ஆகறதுக்கு முன்னாடி எங்க கம்பெனியிலேயே ஜி.ஐ.எஸ்(GIS - Geographic Information Systems) துறையில வேலை பாத்த அனுபவம் கொஞ்சம் உண்டு. ஒரு மேப்(வரைபடம்) போடணும்னா அதிலுள்ள features(மன்னிக்கணும் இணையானத் தமிழ்ச் சொல் நினைவுக்கு வரவில்லை), ஒவ்வொண்ணயும் ஒவ்வொரு அடுக்கு(லேயர்) ஆக பிரிக்க வேண்டும். உதாரணமாக கிண்டியின் வரைபடம் போடுகிறீர்கள் என்றால் கிண்டியிலுள்ள சாலைகள் எல்லாம் ஒரு லேயரில் இருக்கும், பூங்காக்கள் அனைத்தும் வேறொரு லேயரில் இருக்கும். இவ்வாறு ஒவ்வொரு பீச்சரும் ஒவ்வொரு லேயரில் இருக்கும். இவ்வடுக்குகள் ஒவ்வொன்றையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பார்த்தீர்களானால் ஒரு ஜி.ஐ.எஸ் வரைபடம்(மேப்) உருவாகும்(கீழே உள்ள படத்தைப் பாருங்க).

இவ்வாறு மேப் போடுவது, கடினமான வேலை ஒன்றுமில்லை. ஏனேனில் மேப்பில் என்னென்ன பீச்சர்ஸ் வருமென்று உங்களுக்கு முன்னரே தெரிந்திருக்கும். இதே உவமையை ஒரு பாடலின் இசைக்குக் கொண்டோமென்றால், ஆர்கெஸ்டிராவில் வரும் ட்ரம்ஸ் யாவும் ஒரு அடுக்கில் வரும் (இசையில் இதனை டிராக் என்று கூறுவார்கள் என நினைக்கிறேன்), இன்னொரு டிராக்கில் வயலின், இன்னொன்றில் கிடார் இப்படியாகப் பல வாத்தியங்கள். வேகம் வேகம் பாட்டை எடுத்துக் கொண்டால் ஒரு இரண்டு விநாடி இசையில் கிட்டத் தட்ட ஆறேழு விதமான வாத்திய டிராக்குகளை(என் சிற்றறிவுக்கு எட்டியது)காணலாம். இத்தணை டிராக்குகளுக்கு, மேல் உஷா உதூப்பின் குரல் ஒரு டிராக்காக ஒலிக்கும். இவ்வளவு காம்ப்ளெக்ஸான இசைக் கோர்வைக்கு இடையிலும் இப்பாடலின் முடிவில் ஒரு குறிப்பிட்ட பாடல் வரியை நிறைவு செய்யும் போது 'அ' என்று மிக ஸ்டைலாக முடிப்பார்....கேட்கும் போதெல்லாம் மெய் சிலிர்க்கும். மவனே! எப்படிடா இந்த ஆளு இப்படியெல்லாம் யோசிக்கிறான்னு தோணும். நெஜமாவே எனக்கு இந்த சந்தேகம் பல நாளா இருக்கு, ஒரு இசையமைப்பாளர் என்பவர், பல விதமான சிச்சுவேசன்களுக்காக மெட்டுக்களை இட வேண்டும். ஒவ்வொரு மெட்டிலும் பலவேறு விதமான இசைக்கருவிகள் வரும். அது எப்படி ஒவ்வொரு இசைக்கருவியும் இவ்விடத்தில் இம்மாதிரி தான் ஒலிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கிறார்கள்? கம்ப்யூட்டரில் இசையைப் ப்ரோக்ராம் செய்தால் இவற்றை சுலபமகச் செய்துவிடலாம் என்று கேள்வி. ஆனால் நோட்ஸைக் கைப்பட எழுதும் ராஜா போன்ற இசையமைப்பாளர்களின் மூளை இதையெல்லாம் யோசிக்க, எவ்வளவு துரிதமாகச் செயல்பட வேண்டும்? உண்மையிலேயே வியப்பு தான். மியூசிக் பத்தி என்னென்னமோ ஒளறி கொட்டியாச்சு...இதெல்லாம் முழுக்க முழுக்க என் மூளை யோசித்தது தான் for a change(உன்னை இப்படியெல்லாம் யோசிக்கச் சொல்லி யார்டா சொல்றாங்கன்னு சின்ன கவுண்டர் கவுண்டமணி பாணியில என்னை உதைக்க வராதீங்க). யாருக்காச்சும் இதப் பத்தி ஐடியா இருக்கா?

போன முறை சென்னை வந்ததுக்கும் இம்முறை சென்னை வந்ததற்கும் நடுவில், வீட்டில் நடந்த மாற்றம்னு பாத்தேன்னா, அம்மா வீட்டுத் தோட்டத்துல வச்ச பீர்க்கங்கொடி தன் வாழ்நாளைக் கழித்து டாட்டா பை-பை சொல்லிச் சென்றது. ஆனால் அது வீட்டுத் தோட்டத்துல இருந்த நேரத்துல ஒரே டார்ச்சர் தான் போங்க. என்ன டார்ச்சரா? பழமொழி டார்ச்சர் தான். பீர்க்கை கொடி மிக வேகமா வளர்றதை குறிக்கிறதுக்கு "பெண்ணை வளர்த்தியோ பீர்க்கை வளர்த்தியோ" அப்படின்னு யாரோ சொல்லிட்டுப் போனாலும் போனாங்க. வீட்டுக்கு வர்றவங்க(குறிப்பா பெரியவங்க), தெரியாத் தனமா அந்த கொடியைப் பாத்துட்டாங்கனா, இந்தப் பழமொழியைக் கண்டிப்பா ஒரு தரம் சொல்லிடுவாங்க. வெளையாட்டுக்குச் சொல்லல்ல பாக்குறவங்க எல்லாம் சொன்னதுனால தான் சொல்லறேன். ஆனா உண்மையாவே பீர்க்கையின் அபரிமிதமான வளர்ச்சியை நானே கண்கூடா பாத்திருக்கேன். மொத நாளு புதுசா ஒரு மெல்லிசான கிளையைப் பாத்தீங்கன்னா அதுக்கு அடுத்த நாளே அந்த கிளை அதுக்குப் பக்கத்துல இருக்குற குச்சியோ இல்லை சுவரோ எது கிடைக்குதோ அதை மிகப் பலமாகப் பிடிச்சுக்கும். அந்த பீர்க்கை கொடி கொடுக்க வேண்டிய காய்களை எல்லாம் கொடுத்துட்டு இப்ப "மைத்" ஆயிட்டாலும் அடுத்த வருசமும் அதே பழமொழி டார்ச்சருக்காக அம்மா விதையெல்லாம் எடுத்து வச்சிருக்காங்க. சரி! பீர்க்கை மாதிரி பொம்பளை புள்ளங்களும் கிடுகிடுன்னு வளர்ந்துடுவாங்களா என்னன்னு தெரியாது. ஆனா பன்னிரெண்டாம் வகுப்புல பெண்ணின் பருவங்கள் பத்தி படிச்சது ஞாபகத்துக்கு வருது. ஐவகை பருவங்களா? எழுவகை பருவங்களானு சரியா நினைப்பு இல்ல. அரிவை, தெரிவை,பேதை,பெதும்பை,பேரிளம்பெண். நடுவுல மங்கை,மடந்தைன்னு இன்னும் ரெண்டு பருவம் வருங்களா? யாருக்காச்சும் இதப் பத்தி மேற்கொண்டு விஷயம் தெரிஞ்சா சொல்லுங்கய்யா. பேரிளம்பெண் மட்டும் நல்லா ஞாபகம் இருக்கு, ஏன்னா இருக்கறதுலயே வயசான பா(ர்)ட்டிங்களைப் பேரிளம்பெண்ணுன்னு சொல்றாங்களேனு நெனச்சு நெனச்சு நல்லா மனப்பாடம் ஆகிடுச்சு.ட்வெல்த்ல பிரெஞ்சுலயும் ஜெர்மன்லயும் "பசு பால் குடிக்கும்" படிக்காம, தமிழ் படிச்சவங்க யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா...இப்பவே சொல்லிட்டேன் this is purely for academic interests only.

நேத்து விஜய் டிவியில "கலக்கப் போவது சாம்பியன்ஸ்"நிகழ்ச்சியைப் பாத்தேன். மக்கா...என்னா தெறமை ஒவ்வொருத்தருக்கும்...ரொம்பவே ரசிச்சது கடைசியா வந்த வைகை டேவிட், வடிவேலு மாதிரி ஒரு சலக்கு புலக்கு ஆட்டம் ஆடுனதும், வடிவேலு தண்ணி போட்டுட்டுப் பேசற மாதிரி சின்னி ஜெயந்த் கேட்ட கேள்விக்கெல்லாம் ஆன் தி ஸ்பாட் பதில் சொன்னதும். "கலக்கப் போவது..."பாணியிலே ஒரு சில சேதி சொல்லி முடிச்சிக்கிறேன்.

- ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு பஸ்ல டெர்மினஸ்ல உக்காந்திருந்தேன். அது அங்கேருந்து தான் கெளம்ப வேண்டிய பஸ். பஸ்ல கடைசியில ஒரே ஒரு சீட் தான் காலியா இருந்துச்சு...ஒரு நாலு பேரு ஒன்னா ஏறுனாங்க. அதுல மொதல்ல ஏறுன ஒருத்தரு அந்த சீட்ல வந்து உக்காந்துக்கிட்டாரு. இருந்தாலும் கூட வந்தவங்களை ஒரு பேச்சுக்காச்சும் கேக்கணுமே. அதுக்காகக் கேக்கறாரு "யாராச்சும் வயசானவங்க இருக்கீங்களாப்பா?" கூட வந்தவங்க எல்லாம் ஒத்த வயசானவங்களா இருந்தாலும், அவங்க சிரிச்சிக்கிட்டே, பரவாயில்லே நீங்களே ஒக்காந்துக்கங்கன்னு சொல்றாங்க. அதுக்கு ஒக்கார சொன்னவரு சீட்டை பலமாத் தக்க வச்சுக்கறதுக்காகச் சொல்றாரு"ஆமாமா! நீங்க எல்லாம் பேண்ட் போட்டிருக்கீங்க நான் ஒருத்தன் தான் வேட்டி கட்டியிருக்கேன்.நான் தான் வயசானவன்"னு சொல்றாரு. விழுந்து விழுந்து சிரிக்கற மாதிரி இல்லன்னாலும், அவரோட இயல்பான நகைச்சுவையைப் பகிர்ந்துக்கலாம்னு தோணுச்சு.

-இன்னிக்கு ஐதராபாத்திலிருந்து என்னோட ஸ்கூல் படிக்கிற தம்பி(சித்தி பையன்) வந்திருந்தான். மத்தியான சாப்பாட்டுக்கு அப்புறம் சும்மா உக்காந்திருக்கும் போது அவன் கிட்ட கேட்டேன் "ஒனக்கு எந்த பாட்டு புடிக்கும்" அப்படின்னு. அதுக்கு அவன் சொன்னான் "எனக்கு கர்நாட்டிக் பாட்டு தான்ணா புடிக்கும்" அப்படின்னு. எங்கே ஒனக்கு புடிச்ச ஒரு கர்நாட்டிக் பாட்டை பாடு" அப்படின்னேன். அதுக்கு அவனும் "வரவீணா ம்ருதுபாணீ"ங்கிற பாட்டை அழகாப் பாடிக் காட்டுனான். அந்த நிமிசமே ஒரு கொசுவர்த்தி சுருள் சுத்த ஆரம்பிச்சிட்டேன்(மனசுக்குள்ள தான்). சின்ன வயசுல யார் வீட்டுக்காச்சும் போனா அவங்க கேட்கற கேள்விக்கு நல்லா பதில் சொல்லணும் அப்ப தான் குட் பாய்னு பேர் எடுக்கலாம்னு சொல்லிக் கூப்பிட்டுட்டு போவாங்க. என்ன தான் இந்த குட் பாய் பேர் வாங்கலாம்னு சொல்லி உசுப்பேத்துனாலும் அதுக்கெல்லாம் மசியாம, கதை-பாட்டு இந்த மாதிரி எதாச்சும் கேட்டாங்கண்ணா ஒன்னும் தெரியாதுன்னு தத்தியா ஒக்காந்து தான் பழக்கம். ஒரு நாள் அப்பாவோட நெருங்கிய நண்பர் ஒருத்தர் வீட்டுக்குப் போனோம். அப்ப என்ன எனக்கு ஒரு ஏழு வயசிருக்கும். அந்த அங்கிள் ஒரு பாட்டு பாடேன் அப்படின்னு கேட்டாரு. வாயை மூடிக்கிட்டு ஒக்காந்திருந்திருக்கலாம்...விதி யாரை விட்டுச்சு? ஸ்கூல்ல பசங்க புதுசா பாடுன ஒரு பாட்டை பாடுனேன். பூவே பூச்சுடவா படப் பாட்டோட உல்டா. ஆரம்ப வரிகள் ஞாபகம் இல்லை...கடைசியில இப்படி முடியும் "சின்னக் குயில் பாடுது ஐயர் குடுமி ஆடுது"ன்னு. அந்த பாட்டை எங்கே பாடுனேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். அப்பா அங்கேயே சுள்ளுன்னு ஒன்னு வச்சாரு...அந்த அங்கிள் தான் அப்போதைக்கு என்னை காப்பாத்துனாரு...ஆனாலும் வீட்டுக்குப் போனதும் பிச்சி பீஸ் பீஸ் ஆக்கிட்டாரு நைனா. சே! இப்படியெல்லாம் லூசுத் தனமா இருந்திருக்கோமேனு நினைக்கும் போது சில சமயம் வெக்கமா இருக்கும் சில சமயம் சிரிப்பு வரும்...ஆனா இடம் பொருள் ஏவல் அறிந்து வாயைத் தொறக்குறதுக்கு நல்ல ஒரு பாடமா இருந்துச்சு.

-அடுத்ததா புதுசா வந்த ஒரு எஸ்.எம்.எஸ். ஒரு ஆமையும் ஒரு முயலும் ப்ளஸ் டூ பரிட்சை எழுதுதுங்க. ரெண்டுமே எண்பது சதவீதம் மார்க் எடுக்குதுங்க. ஆனா காலேஜ்ல சேர்றதுக்கு ஆன தகுதி மதிப்பெண்(கட் ஆஃப் மார்க்) 81%. முயலுக்குக் காலேஜ் சீட் கெடக்கலை, ஆனா ஆமைக்கு கெடச்சுருது...எப்படி?
.
.
.
.
யோசிங்க
.
.
.
நல்லா யோசிங்க
.
.
.
தெரியலியா?
ஆமைக்கு சீட் ஸ்போர்ட்ஸ் கோட்டால கெடச்சது.

13 comments:

இலவசக்கொத்தனார் said...

ஆக மொத்தம் வீட்டுக்கு வந்தாச்சு. சுத்தம் பண்ணறது. சட்டை, பேண்ட் துவைக்கறது எல்லாம் அம்மா பண்ணறாங்க. வேளா வேளைக்கு சாப்பாடு இருந்த இடத்திலேயே கிடைக்குது. அதான் நீ என்ன செய்வ பாவம்.

கையில கீ போர்ட் மாட்டிகிச்சு. அடிச்சு தள்ளி இருக்க. என்ன சொல்ல வரன்னுதான் புரியலை. என்னமோ போ. சீக்கிரம் தெளிஞ்சா சரி.

மால்கண்டில இணைய தொடர்பு உண்டுதானே?

Anonymous said...

பரிட்சைக்காக மனப்பாடம் செய்தது, வரிசையில் "பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்". பொருள் நினைவில்லை. கூகலில் தேடிய போது கிட்டியது.

பேதை (07), உலகம் தெரியாத குழந்தை.
பெதும்பை(11), குழந்தைக்கும் மங்கைக்கும் இடைப்பட்டவள்.
மங்கை(13) மாதவிடாய் வந்தவள்.
மடந்தை(19) என்பவள் கல்யாணமானவள்.
அரிவை(25) என்பவள் தாயானவள்.
தெரிவை(31) என்பவள் உலகம் தெரிந்தவள்.
பேரிளம்பெண்(40) என்பவள் அனுபவமும் அறிவுமுள்ளவள்.

கைப்புள்ள said...

//நகைச்சுவை உங்களுக்கு இயல்பாய் வருகிறது.. உங்கள பழைய சில பதிவுகள் படித்து ரசிகன் ஆனவன்.. வலைப்பூவுக்கு புதியவன்//

வாங்க ஷாஜி!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தஞ்சை தரணியிலிருந்து கவிஞர் ஒருவரை ரசிகராகக் கிடைக்கப் பெற்ற யான் பேறு பெற்றவன். அடிக்கடி வாங்க.

கைப்புள்ள said...

//கையில கீ போர்ட் மாட்டிகிச்சு. அடிச்சு தள்ளி இருக்க. என்ன சொல்ல வரன்னுதான் புரியலை. என்னமோ போ. சீக்கிரம் தெளிஞ்சா சரி.//

என்ன பண்றது? இந்த சப்பை மேட்டரைப் புரிஞ்சுக்கக் கூட, கோனார் நோட்ஸைத் தேடுற உங்க மாதிரி ஆளுங்களும் படிக்கிறாங்கங்கிறதை சுத்தமா மறந்துட்டேன்.இதுக்கெல்லாம் நான் ஒன்னும் பண்ண முடியாது. :)

//மால்கண்டில இணைய தொடர்பு உண்டுதானே?//
அது மால்கண்ட் இல்ல மால்கேட்(Malkhed) என்னும் புண்ணிய தலம். நான் அங்கே போறேன் இல்ல...அதனால தான் புண்ணிய தலம். இணைய வசதி இல்லன்னாலும் "தல" போனதும் ஆட்டோமேட்டிக்கா எல்லாம் வந்துரும்.

கைப்புள்ள said...

//பரிட்சைக்காக மனப்பாடம் செய்தது, வரிசையில் "பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்". பொருள் நினைவில்லை. கூகலில் தேடிய போது கிட்டியது.//

ஆகா! ஆழ்ந்த பின்னூட்டம். என் ஐயப்பாட்டை நீக்கும் அற்புத கருத்துகள். இணைய உலகில் விதண்டாவாதம் பேசும் சிலரின்(!) மத்தியில், தனி ஒருவராக அதுவும், இந்தூரில் இருந்து வந்து என் சந்தேகத்தைத் தீர்த்து வைத்த தமிழ்க் கடவுளின் பெயர் கொண்ட புலவர் பெருந்தகையே வாழ்க நீவிர்! வளர்க நிம் கொற்றம்.

//பேதை (07), உலகம் தெரியாத குழந்தை//
இப்பருவம் கேபிள் டிவி இல்லாத காலத்தில் பிறந்த குழந்தைகளைக் குறிக்கிறது எனக் கொள்ளுதல் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன்.

Radha N said...

நன்றாக இருந்தது.

கைப்புள்ள said...

//நன்றாக இருந்தது.//

வாங்க நாக்,
தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க. உங்களுக்கும் நம்மள மாதிரியே ரொம்ப சின்ன வயசு போலிருக்கே? ப்ரொஃபைல்ல இருக்குற படத்தைப் பாத்து தான் சொல்றேன்.
:)

Geetha Sambasivam said...

ஒரு வழியாக இந்த சிங்காரச் சென்னையிலே settle ஆகி விட்டீங்க. இனி சங்க வேலையெல்லாம் மும்முரமாக ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். ஆமா, இந்த Dev என்ன என்னை வயசானவ என்றெல்லாம் சொல்லிச் சங்க மகளிர் அணிப் பதவியிலே இருந்து இறக்க முயற்சி செய்கிறார். இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டீங்களா? ரொம்பக் கஷ்டப்பட்டு துளசி அவங்க ஆதரவையும் திரட்டியிருக்கிறேன்.சங்கத்திலே எல்லாருமே தலைமையாக இருப்பதால் துளசி மாதிரி ஒரு உறுப்பினர் தேவை இல்லையா?

பொன்ஸ்~~Poorna said...

தல.. என்ன தல இது.. நீ இப்படி பாட்டு கேட்டுகிட்டு, பேதை பெதும்பைன்னு ஆராய்ச்சி செஞ்சிகிட்டு, பீர்க்கை வளருமா வளராதான்னு சிறுபிள்ளத்தனமா யோசிச்சிகிட்டிருக்க.. அங்க அவனவன், அரசியல் பிரவேசம்ங்கறாங்க, மூன்றாவது அணிங்கறாங்க.. என்ன நடக்குதுன்னே தெரியல.. பொறுத்தது போதும் அண்ணாச்சி.. பொங்கி எழுங்க... அப்புறம் நான் பொங்கி எழுந்துட்டா நானும், கீதாக்காவும் சேர்ந்து தனியா வரு. மகளிர் சங்கம் ஆரம்பிச்சிடுவோம், ஆமாம், சொல்லிட்டேன்...

கீதாக்கா.. சங்கத்தலைவி நீங்க தான்.. உங்களை மாதிரி அனுபவமும் ஆற்றலும், நம் அண்ணன் பேரில் அசைக்க முடியா நம்பிக்கையும் உள்ள தலைமையை தாயுள்ளத்தோட நிர்வகிக்க வேற யார் இருக்காங்க.. நம்ம சங்க கட்டுக்கோப்பை அசைக்க சதி செய்யும் கட்ட துரை , பார்த்தி போன்ற விஷமிகளைப் பொருட்படுத்தாதீங்க அக்கா.. தேவ் பாவம்.. சின்ன புள்ள.. அது ஒண்ணியும் சொல்லலை, சரியா பாருங்க..

வெட்டிப்பயல் said...

//சங்கத்திலே எல்லாருமே தலைமையாக இருப்பதால் துளசி மாதிரி ஒரு உறுப்பினர் தேவை இல்லையா?
//

சங்கமே உடைஞ்சு போச்சாம்! இதுல உறுப்பினர் வேறயா? கீதா மேடம் வாங்க எங்களோட மூண்றாவது அணிக்கு! வரவேற்கிறோம்!

மூன்றாவது அணிக்கு துளசி மேடம் தனி மடல் மூலமாகவும், நாமக்கல் சிபி, பேராசிரியர் கார்த்திக் ஜெயந்த், ஏஜெண்டு, இளா, வெண்பா வாத்தி ஜீவா, மற்றும் மகளிர் அணித் தலைவலி பொன்ஸ், ராமச்சந்திரன் உஷா ஆகியோர் பகிரங்கமாகவும் ஆதரவு தெரிவிச்சிருக்காங்க!

நம்ம ஜொள்ளுப் பாண்டி பிரச்சார பீரங்கியா இருப்பேன்னு முதல் குரல் கொடுத்திருக்காரு!

Geetha Sambasivam said...

என்னங்க இது, இரண்டு நாளாகத் தமிழ் மணம் பக்கம் வரலைன்னால் உடனே சங்கத் தலைமைப் பதவிலேருந்து தூக்கறதா? இது நியாயமா? தருமமா? அடுக்குமா? சங்கத்துக்காக இத்தனை உழைத்த என்னை இந்த பொன்ஸ், பார்த்தி, தேவ், கட்டதுரை ஆகியோர் முதுகில் குத்திவிட்டார்கள். எத்தனை பெரிய கட்டுத் தெரியுமா? இந்த உஷா வேறே விஷயம் தெரியாமல் அவங்களுக்கு support பண்ணுகிறார். மகளிர் அணிக்கு இடம் ஒதுக்கவேண்டுமாம். நீங்கள் என்ன தலைவர், இது எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கீங்க.

Thiru said...

நல்ல சுவாரசியமான பதிவு. என்ன, இன்னும் உன்னுடைய வலைப்பதிவை என் கணிணியில்(Windows 2000, IE, I have all tamil fonts) படிக்க முடிவதில்லை. உன்னுடையது மட்டுமல்ல, 80% வலைபதிவுகளின் எழுத்துரு சரியாக தெரிவதில்லை. ஒரு குத்துமதிப்பாதான் படிக்கிறேன், ரசிக்கிறேன். அப்பா, டேய்.. ஆனா, இதால ஒண்ணே ஒண்ணு மிச்சம்டா, நேரத்தை வெட்டியாய் செலவழிப்பதில்லை (க்கும்..இப்ப மட்டும் என்ன வாழுது?). அது சரி, பத்ரி, பாலா, ரஜினி ராம்கி,தேசிகன் - இவர்களின் பதிவுகள் மட்டும் சரியாய் தெரிவதேனோ?

I used this for typing this unicode tamil http://www.geocities.com/csd_one/AWCUniWriter.html

ambi said...

வாங்க தல! வாங்க! full form la எறங்குங்க!