Monday, September 19, 2011

ஒரு செப்டம்பர் மாசப் புலரியில்...




"My momma always said, Life is like a box of chocolates. You never know what you're gonna get".
அது ஒரு செப்டம்பர் மாத திங்கட் கிழமை. எல்லா திங்கட்கிழமைகளைப் போலத் தான் அன்றும் இருநாட்கள் விடுமுறை கழிந்து அலுவலகம் செல்வது அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது. அவன்...நம் எல்லோரையும் போல ஒருவன். தன்னுடைய மொபைல் ஃபோனின் இயர்ஃபோனைக் காதில் செருகும் போது "Forrest Gump" திரைப்படத்தின் அவ்வசனம் அவனுக்கு நினைவுக்கு வந்தது. எந்த ஒரு பயணமுமே, வாழ்க்கை என்னும் பெரும்பயணத்தின் ஒரு infinitesimal part என்பதும் ஒவ்வொரு சிறிய பயணத்தையும் நினைவு தெரிந்த நாள் முதல் மண்ணோடு மண்ணாகிற நாள் வரை "over the years integrate" செய்தால் கிடைக்கும் net result ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை என்பதும் அவனுடைய நம்பிக்கை. பயணத்தின் போது மெல்வதற்கு எந்த நேரத்தில் எந்த சுவையுடைய சாக்லேட் கிடைக்கும் என்று தெரியாமல் இருப்பது தான் வாழ்க்கையினைச் சுவாரசியமாக வைத்திருக்க உதவுவது என்பது அவனுடைய கருத்து. அக்காரணத்தினாலேயே, தான் மேற்கொள்ளும் எந்த ஒரு பயணத்தின் போதும் தான் கேட்கும் பாடல்கள் ஒரே சுவையுடையதாக இல்லாமல் இருப்பதற்காக shuffle play மோடில் ஒலிக்க விடுவான். தான் தோன்றித் தனமாகப் பாடல்கள் ஒலிக்கும் போது வாழ்க்கையோட அந்த சிறு பகுதியில் எப்போ எந்த சுவையுடைய சாக்லேட் வரும் என்று தெரியாதென்பதால் எத்தனை முறை கேட்ட பாட்டானாலும் ஒரு சர்ப்ரைஸ் எலிமெண்ட் இருக்கும்.

"காலம்... நீ கைகள் தந்து இங்கு வந்த நேரம் உன் காதில் வந்து அன்று சொன்ன வேதம்" என்று டிஎம்எஸ் பாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிலிருந்து மெயின் ரோடு வரை வந்துவிட்டான். ஷேர் ஆட்டோ ஒன்று வந்தது. டிரைவருடன் சீட்டைப் பங்கு போட்டுக் கொண்டு ஒருவர் உட்கார்ந்திருந்தார். காலியாய் இருந்த பின் சீட்டில் திருவான்மியூர் என்று சொல்லி விட்டு ஏறி அமர்ந்து கொண்டான். அதன்பிறகு கொஞ்ச தூரம் வரை ஆட்டோவில் யாரும் ஏறவில்லை...அமைதி. அதன் காரணம் எம்எஸ்வி இசையமைத்த அந்த பாட்டு முடிந்திருந்தது. அடுத்த பாட்டு தானா வந்திருக்கனுமே ஏன் வரவில்லை என்று செல்ஃபோனைப் பாத்த போது தான் அந்த பாட்டை அவன் ஞாயிற்றுக் கிழமை இரவு பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து கேட்டது நினைவுக்கு வந்தது. அன்று ஏனோ அவனுக்கு 'என் உயிர் தோழன்' படத்தில் வரும் "ஏ ராசாத்தி" பாடல் கேட்க வேண்டும் போலிருந்தது. எப்போது கேட்டாலும் ஃபாஸ்ட் பார்வர்டு செய்யாமல் முழுவதுமாக அவன் விரும்பிக் கேட்கும் பாடல்களில் அதுவும் ஒன்ற. திருவான்மியூரில் ECR பஸ்ஸில் உட்கார்ந்து செல்ல இடம் கிடைக்குமா? எட்டரை மணிக்கு முன் ஷேர் ஆட்டோ காரர் திருவான்மியூரில் இறக்கி விட்டு விடுவாரா என்று பலவாறாக நினைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருந்த போதே 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்' என்று நெற்றிக்கண்ணைத் திறக்க ஆரம்பித்திருந்தார் ஜேசுதாஸ்.

அவன் கண் முன்னே ஒரு பெரியார் பஸ்...சாரி...விழுப்புரம் அரசுப் பேருந்து கல்பாக்கத்திலிருந்து வந்து அவனுடைய ஆட்டோவைக் கடந்து செல்லத் தொடங்கியிருந்தது. பஸ் அவ்வளவு கூட்டமில்லாமலும் இருந்தது. "கொஞ்சம் சீக்கிரம் போங்க அந்த பஸ்ஸைத் தான் நான் பிடிக்கனும்" என்று மனசுக்குள் நினைத்ததை அவன் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லவில்லை. அந்த நேரம் பார்த்து ஆட்டோவிலிருந்து ஒருவர் இறங்கினார். சில்லறை இல்லை என்று வீட்டுக்குப் போய் ஆளிடம் கொடுத்தனுப்புகிறேன் என்று விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். "அட பாவி மனுஷா காலங்காத்தால வண்டியில ஏறுறவன் ஒரு ஏழு ரூபாய் சில்லறை காசு எடுத்துட்டு வரக் கூடாது. அவனவனுக்கு எவ்வளவு ஆத்திரம் அவசரம் இருக்கும்?" என்று நினைத்துக் கொண்டான். நினைத்ததை விட சீக்கிரமாய் ஒரு ஆள் ஓடி வந்து சில்லறையைத் தரவும் ஆட்டோ புறப்பட்டது. 'ராமாயணம் பாராயணம் காதல் மந்திரம்' என்று ஜேசுதாஸ் பாடுவதில் மனம் கொஞ்சமும் ஒட்டவில்லை. "சே! கண்ணு முன்னாடி ஒரு காலியான பஸ்ஸை மிஸ் பண்ணிட்டோமே" என்ற நினைப்பு தான் அவனுக்கு மேலோங்கியிருந்தது. ஆட்டோ திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்றதும் கண் முன்னே ஒரு ஆச்சர்யம். கல்பாக்கம் பேருந்து இன்னும் நின்று கொண்டிருந்தது. ஆட்டோவுக்குப் பத்து ரூபாயைக் கொடுத்து விட்டு மடிகணினி அடங்கிய பையையும் சாப்பாட்டு பையையும் அவசர அவசரமாகத் தூக்கிக் கொண்டு ஓடி பேருந்தில் ஏறிக் கொண்டான்.

நடத்துனரிடம் எதுவும் சொல்லாமல் பத்து ரூபாய் எடுத்து நீட்டினான். அவரும் எதுவும் சொல்லாமல் திருவான்மியூர் டு சென்னை என மின்னணு
இயந்திரத்தில் அச்சிட்டு வெளிவந்த பயணச்சீட்டை அவனிடம் கொடுத்தார். திருவான்மியூர் டு சென்னைன்னா அப்போ திருவான்மியூர் என்ன சென்னைக்கு வெளியிலா இருக்கு என நினைத்துக் கொண்டான். "ஷிவஷக்தியா யுக்தோ யதி பவதி ஷக்த ப்ரபவிதும்" என இளையராஜா ஜனனி ஜனனி பாடலைத் துவங்கி விட்டிருந்தார். பேருந்தும் கிடைத்து, உட்கார இடமும் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் பாட்டில் கவனத்தைச் செலுத்தினான். 2005ஆம் ஆண்டு நேரு உள்விளையாட்டரங்கில் 'அன்றும் இன்றும் என்றும்' என பெயரிடப்பட்ட தன்னுடைய கச்சேரியை இளையராஜா இப்பாட்டுடன் தொடங்கிய போது பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு இஸ்லாமிய பெண்மணி உணர்ச்சிவயப்பட்டு கண்கலங்கியதை ஜெயா தொலைக்காட்சியில் கண்டது அவனுக்கு நினைவுக்கு வந்தது. அப்பாடலின் துவக்கத்தில் வரும் சமஸ்கிருத சுலோகம் ஆதிசங்கரர் பாடிய சவுந்தர்ய லஹரி எனும் கோவையில் உள்ள ஒரு பாடல் என்பதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. "மேகம் கொட்டட்டும்" பாடல் ஆரம்பிக்கும் போது பஸ் டைடல் பார்க் சிக்னலில் திரும்பி ராஜிவ் காந்தி சாலையில் பயணித்துக் கொண்டிருந்தது. துள்ளலான அப்பாடலை அதிவேகமாகப் பயணிக்கும் ஒரு பேருந்தில் சன்னல் ஓரத்தில் அமர்ந்து இளஞ்சூடான மெல்லிய காலை நேரக் காற்று முகத்தில் மோதும் போது மனதில் பொங்கும் உவகையை விவரிக்க வார்த்தைகள் ஏதும் வராமல் சிம்பிளாக "Simple pleasures of Life" என்று நினைத்துக் கொண்டான்.

மத்திய கைலாஷ் ஸ்டாப்பில் பஸ் நின்றது. எட்டே முக்காலுக்கு முன்னராக பஸ் அங்கு வந்து சேர்ந்துவிட்டது. அவன் எதிர்பார்த்தது போலவே "லல்லு பிரசாத் யாதவ்" தன்னுடைய வழக்கமான briefcase பெட்டியுடன் ஏறினார். தன்னுடைய வழக்கமான கடைசி இருக்கையின் இடது கை சன்னலோர சீட்டில் அமர்ந்து கொண்டார். "லாலு பிரசாத்" என அவருக்கு அவன் பெயர் வைக்க காரணம் லாலு மாதிரியே அவருக்கும் தலையில் சட்டி கவிழ்த்தது போன்றதான ஒரு ஹேர்ஸ்டைல், லாலு மாதிரியே அவருக்கும் 'காதோரம் நரைச்ச முடி கன்னத்துல சொக்குது சொக்குது' தான். அவனுடைய லாலு, பேண்ட் சர்ட் அணிந்திருப்பார், ஆனால் சட்டையை இன் செய்ய மாட்டார், அந்த காலத்து ஜெமினி கணேசன் போல மிக மிக மெல்லிய மீசை ஒன்று வைத்திருப்பார். "சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோனுதடி" என்று கமல் பெண் பார்க்கும் போது பாட்டி வெற்றிலை வரக் வரக் என்று இடித்துக் கொண்டிருக்கும் போது பேருந்தில் பெருத்த கூட்டம் ஏறியிருந்தது. மத்திய கைலாயத்தில் பேருந்து நிற்கும் போது பெரும்பாலும் முதலில் ஏறுபவர் லாலுவாகத் தான் இருப்பார், பெரும்பாலும் அவருக்கு அவருடைய சீட் கிடைத்துவிடுவதையும் அவன் கவனித்திருக்கிறான். "சிறு கண்ணே செந்தமிழ்த் தேனே தந்தையின் பாசம் வென்றதடி" என்று கமல் பாடிக் கொண்டிருக்கும் போது சன்னல் வழியாகப் பார்த்தான். ஒரு தந்தை வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் தன் மகளை ஸ்கூட்டரில் கூட்டிச் சென்று கொண்டிருந்தார். ஸ்கூட்டர் பின்சீட்டில் அமர்ந்து புத்தகத்தைத் திறந்து படித்துக் கொண்டிருக்கும் அப்பெண்ணைப் பார்த்ததும் பரீட்சைக்குச் சென்று கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொள்ள அவனுக்கு வெகு நேரம் ஆகவில்லை. அவனுடைய சிறுவயதில் அவன் பெரிதும் ரசித்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த படித்த பள்ளி அது என்பதால் வித்யா மந்திரையும் அதன் சீருடையையும் நன்கு நினைவில் கொண்டிருந்தான்.

காந்தி மண்டபம் நிறுத்தத்தில் இறங்குவதற்காக பேருந்தில் அமர்ந்திருப்பவர்கள் முன்கூட்டியே எழுந்து கூட்டத்தில் முன்னேறி இறங்குமிடம் அருகே நின்று கொள்வது வழக்கம். அவனுக்கு இரு இருக்கைகளுக்கு முன்னர் இருவர் எழுந்து கொண்டனர். கம்பியைப் பிடித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு பெண் விரைவாகச் சென்று அமர்ந்து கொண்டாள். தன் பக்கத்தில் காலியாக இருந்த இன்னொரு இருக்கையில் தன் இடது கையை வைத்து இடம் பிடித்துக் கொண்டு "மாமா! சீக்கிரம் இங்கே வாங்க...சீட் இருக்கு" என்று பின்னால் நின்று கொண்டிருந்த தன் கணவனை அழைத்ததை அவன் உட்பட பேருந்தில் இருந்த பலரும் கவனித்திருந்தார்கள். தன் கணவர் தன் பக்கத்தில் வந்தமர்ந்ததும் அவள் முகத்தில் தோன்றிய உண்மையான மகிழ்ச்சியையும் அவள் உதட்டில் தவழ்ந்த மெல்லிய புன்னகையையும் அவன் கவனிக்கத் தவறவில்லை. தன் அன்பின் வெளிப்பாட்டை மற்றவர்கள் கண்டுவிட்டதை அவள் கண்டுகொண்டதாக அவனுக்குத் தோன்றவில்லை. "அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்" என்று நினைத்துக் கொண்டான் அவன். "ஒரு சிரி கண்டால் கனி கண்டால் அது மதி" என்று மலையாளத்தில் பாடிக் கொண்டிருந்தனர் விஜய் யேசுதாசும் மஞ்சரியும். தன்னுடைய வாழ்வில் சினிமாவும், சினிமா பாடல்களும், சினிமா இசையும், சினிமா வசனங்களும் எந்தளவு வியாபித்துள்ளது என நினைத்துக் கொண்டான் அவன். காதல் என்ற உணர்வை அவனுக்கு அறிமுகப்படுத்தியது சினிமா தான், பலவிதமான எண்ணங்களைத் தூண்டும் சினிமா பாடல்களின் இசை அவனை பல விஷயங்களிலும் இன்ஸ்பையர் செய்துள்ளதை அவன் நினைவுகூர்ந்தான். வடிவேலு என்ற கலைஞன் வந்ததன் பின்னர் முயன்றும் கிடைக்காத ஒரு விஷயத்தை "வடை போச்சே" என்று பலரும் கூறுவதையும் நோட் செய்திருக்கிறான்.

ராஜ்பவனைப் பேருந்து தாண்டியதும் "உழைப்பால் உயர்ந்த உத்தமர் P.ஆறுமுக நாயக்கர்" என்று ஓரிடத்தில் எழுதப்பட்டிருக்குமே அவ்விடத்தைக் கடந்து விட்டோமா என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். வேளச்சேரி சிக்னலுக்கு முன் Shepherd அண்ட் கம்பெனிக்கு அருகில் அவன் தேடியது கிடைத்தது. "வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என்று யேசுதாஸ் பாடியதைக் கேட்ட போது எதை குறிப்பதற்காக பாரதி "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" என நினைத்துக் கொண்டான். செல்லம்மாள் மகளிர் கல்லூரி வாயிலில் "Abstinence Club" என்றிருந்த தட்டியைப் பார்த்ததும் "அடங்கொன்னியா! கட்டுன புருஷனைக் கஷ்டப்படுத்த இப்பெல்லாம் காலேஜ்லேயே கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" என அவனுடைய கிரிமினல் புத்தி யோசித்தது. அதே தட்டியில் சிகப்பு வண்ணத்தில் வரையப்பட்டிருந்த ரிப்பனைப் பார்த்ததும் தான் இது ஏதோ எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட சமாச்சாரமாக இருக்கும் என சமாதானம் ஆனான் அவன். கிண்டி ரயில்நிலையம் நிறுத்தத்தில் வழக்கம் போல லாலு முதலில் இறங்கினார். இறங்கியதும் சிட்டாகப் பறந்து விடுவார்...பலமுறை அவர் அங்கிருந்து எங்கு செல்கிறார் எனப் பார்க்க முயற்சித்திருக்கிறான். ஆனால் அவன் அதில் வெற்றியடைந்ததில்லை. அவன் இறங்க வேண்டிய நிறுத்தமும் அது தான். பேருந்தினின்று இறங்கினான். காவலர்கள் விரட்டுவதைப் பொருட்படுத்தாமல் வரிசையாக நின்று கொண்டிருந்த ஷேர் ஆட்டோக்களில் ஒன்றில் ஏறிக் கொண்டான். ஆட்டோ அங்கேயே நிரம்பி விட்டது. அவன் முதுகுக்குப் பின்னர் பின்னிருக்கையில் மூன்று பேர் அமர்ந்திருந்தனர். முன்னிருக்கையில் அவனுடைய இருபக்கமும் இருவர் அமர்ந்திருந்தனர். முன்புறம் டிரைவருடன் இரண்டு பேர்...மொத்தம் எட்டு பேருடைய பாரத்தையும் சுமந்த பொதி கழுதையாக எந்த ஜென்மத்திலோ எந்த பிறவியிலோ செய்த பாவத்துக்குப் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தது அந்த ஆட்டோ.

புனித தோமையார் மலை தேவாலயத்துக்குச் செல்லும் வழிக்கு மிக அருகாமையில் பட் ரோட்டில் அமைந்திருக்கும் புனித ஹெலன்ஸ் பெண்கள் மேனிலைப் பள்ளி அருகே ஆட்டோ நின்றது. அப்பள்ளியின் காவலாளி சாலையின் மறுபுறம் நின்று கொண்டிருந்த பிள்ளைகளைச் சாலையைக் கடக்க உதவி செய்து கொண்டிருந்தார். குண்டான வயதான மனிதர். காதில் இயரிங் எய்ட் அணிந்திருப்பார். இயக்குனர் பாலுமகேந்திரா போல ஒரு தொப்பி அணிந்திருப்பார். சில நாட்களாக அவ்விடத்தில் ஒரு போக்குவரத்து காவலர் நின்று அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்தை நெறிபடுத்திக் கொண்டிருந்ததை அவன் கவனித்தான். போக்குவரத்து காவலர் இல்லாத காலத்திலும் அவ்வயதான பள்ளி காவலாளி கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு சாலையின் குறுக்கே வந்து வாகனங்களை நிறுத்தி குழந்தைகள் சாலையைக் கடக்க உதவி செய்வார். சாலையைக் கடக்காமல் மறுபுறம் 'மசமச்'வென நிற்கும் குழந்தைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு "வாம்மா! நின்னுக்கிட்டிருக்காதே" என்று மிரட்டுவதையும் அவன் கவனித்திருக்கிறான். ஆனால் அம்மிரட்டலில் பிள்ளைகள் பத்திரமாகச் சாலையைக் கடக்க வேண்டுமே என்ற உண்மையான அக்கறையை மட்டுமே கண்டிருக்கிறான் அவன். நாயகி என்னும் மிகவும் அபூர்வமான ராகத்தில் அமைந்த "வாரணமாயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி நடக்கின்றான்" என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்த போது மவுண்ட் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் உள்ள சாம்ராஜ்ய யுத்த கல்லறைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தது அவனது ஆட்டோ. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கோ வந்து இறுதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அந்த முதலாம் உலகப் போர் வீரர்கள் "யார் பெத்த பிள்ளைகளோ?" என நினைத்துக் கொண்டான்.

நந்தம்பாக்கம் சென்னை வர்த்தக மையத்துக்கு எதிரில் உள்ள கவிதா டிரைவிங் ஸ்கூலின் பெயர் பலகையில் ஒரு பெரியவரின் படம் வரையப்பட்டிருக்கும். அவர் தான் டிரைவிங் ஸ்கூலின் ஓனரோ? தன் மகளின் பெயரில் டிரைவிங் ஸ்கூலைத் துவங்கியிருப்பாரோ என்று யோசித்திருக்கிறான். "கிறுக்குப் பயலாடா நீ" என்று அவனை அவனே பலமுறை கேட்டுக் கொண்டுள்ளான். அதற்கான விடை தான் கிடைத்தபாடில்லை. ஆனால் அந்த கிறுக்குத்தனமும் அவனுக்குப் பிடித்து தானிருந்தது. திருவான்மியூருக்கு எட்டு மணிக்கு முன்னர் வந்து சேர்ந்திருந்தால் அவனுக்குக் கிடைத்திருக்கக் கூடிய M49 பேருந்து அவனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. "அஞ்சு ரூபா பஸ் டிக்கட்டுல முடிய வேண்டியது, தேவையில்லாமல் 20 ரூபா ஷேர் ஆட்டோவுக்குக் கொடுக்கறோம்" என நினைத்துக் கொண்டான்...ஆனால் குற்ற உணர்வெல்லாம் இல்லை. வருத்தப்பட நிறைய விஷயங்கள் இருக்கும் போது இதை பற்றியெல்லாம் கவலை படத் தொடங்கினால் கவலை மட்டுமே மிஞ்சும் என உணர்ந்திருந்தான் அவன். "காற்றினில் தேர் போல ஓடிடும் மானே தன்வழி போனாளே கனிமொழி எங்கே" என யேசுதாஸ் ரஜினி அங்கிளுக்காக மீனாவைத் தூங்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்த போது அவனுடைய ஆட்டோ L&T Infotech வளாகத்துக்கு அருகில் இருந்தது. அவனுக்கு மோட்டார் சைக்கிளில் விபத்து ஏற்படுவதற்கு முன்னர் அவ்வளாகத்துக்குள்ளே தான் கறுப்பு நிற பல்சர் பைக்கை ஓட்டிச் சென்ற ஒரு பெண் செல்வதைத் தன்னுடைய பைக்கிலிருந்து அவன் கவனித்திருக்கிறான். சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி ஒருகாலத்தில் "Definitely male" என்று விளம்பரப்படுத்தப் பட்ட பைக் ஒன்றினை tame செய்து படு லாவகமாக ஓட்டிச் சென்றதையும் அவள் ஓட்டிய வேகத்தினையும் கண்டு வியந்திருக்கிறான். ஸ்டீரியோடைப்பை உடைத்தெறியும் அந்தப் பெண்ணின் துணிச்சல், பல ஸ்டீரியோடைப்களை இன்னும் கட்டிக் காத்து சோறு போடும் அவனுக்குப் பிடித்திருந்தது என்பது நகைமுரண். ஆனால் அவனைக் கேட்டால் அதை ஒத்துக்கொள்ள மாட்டான். அக்காட்சியில் கண்ட காண்ட்ராஸ்ட் எனக்குப் பிடித்திருந்தது என்று வாதிடுவான்.

"கோடி கோடி அடியவரில் நான் தான் கடைகோடி ஐயா" என நெக்குருகி ராஜா பாடும் போது அவனுடைய அலுவலகம் வந்திருந்தது. அவனை ஒத்த இயர்ஃபோன் பாவிப்பவர்கள் பலரும் தத்தம் ஷேர் ஆட்டோக்களிலிருந்தும் பேருந்துகளிலிருந்தும் இறங்கி அடுத்து என்ன சுவையுள்ள சாக்லேட் கிடைக்கிறது எனத் தெரிந்து கொள்ள அலுவலகத்துக்கு உள்ளே சென்று கொண்டிருந்தனர்.