இரண்டாம் பகுதி
முதல் பகுதி
2008 ஆம் ஆண்டு ஜூலை மாசம் 12 ஆம் தேதி - திப்பசந்திராவில் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அந்த பூங்காவுக்கு முதன் முதலா நான் போன நாள். காரணம், அதுக்கு சில நாளுங்களுக்கு முன்னாடி தான் புகைப்படக் கலை பிதாமகர் "ஜீவ்ஸ் அண்ணாச்சி"யின் ஆற்றுபடுத்துதலின் பேரில் Panasonic Lumix DMC-FZ18 கேமரா வாங்கியிருந்தேன். முன்னே வச்சிருந்த Canon Ixusஐ விட இந்த கேமராவில் வசதிகள் அதிகம், ஜூம் செய்யும் திறனும் அதிகம். "நீ புரொபஷனல் குரியர் ஆயிட்டே...DSLR வாங்கிக்க"ன்னு பயங்கரமா உற்சாகம் குடுத்ததும் அவரே தான். ஆனா DSLR வாங்கி படம் பிடிக்கற அளவுக்கு நான் இன்னும் வளரலியோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. அதனால சாதாரண பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவுக்கும் உயர்தர DSLR கேமராவுக்கும் இடைபட்ட Prosumer கேமராவான பேனசானிக் கேமராவைத் தேர்வு செய்தேன். அந்த கேமராவைப் பழ(க்)குவதற்காகப் படங்களை எடுக்கலாம் என்று எண்ணி அன்னிக்கு அந்த பூங்காவுக்குப் போனேன்.
ஜூலை மாசம் 12 ஆம் தேதி ஒரு சனிக்கிழமை. அப்போ தங்கமணியும் பெங்களூர்ல தான் இருந்தாங்க. ஏன்னா வளைகாப்பு ஜூலை 18ஆம் தேதி சென்னையில் எங்க வீட்டில் நடந்தது. அதுக்கப்புறம் தான் அவங்களை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்டாங்க. தங்கமணி ஊர்ல இருந்தப்போ நான் பூங்காவுக்கு எப்படி தனியாப் போனேன்னு ஞாபகம் வரமாட்டேங்குது. ஏன்னா நான் பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த சில இடங்களுக்கு, மக்கள் போன சில டூர்களை மிஸ் பண்ணியிருக்கேன் - உதாரணத்துக்கு ஜீவ்ஸ்/சிவிஆர்/சிபி ஆர்கனைஸ் பண்ண இம்சை அரசி அவங்களோட திருமணம் கம் கொல்லிமலை டூர், அப்புறம் எங்க ஆஃபிஸ்ல ப்ராஜெக்ட் சார்பாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட மசினகுடி டூர். உண்மையிலேயே மலை சார்ந்த குறிஞ்சி திணை இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றாலும், என்னமோ போகனும்னே தோனலை...பொண்டாட்டி பிரசவத்துக்குப் போகப் போற சமயத்திலே "விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்"னு தான் இருந்துச்சு:) இதே காரணத்துக்காகவே ஆபீசில் ஏற்பாடு செய்திருந்த இன்னொரு டூருக்கும் நான் போகலை. அதனால எனக்கு கொஞ்சம் கெட்ட பேரு...இப்போ சமீபத்துல ஒரு கெட் டுகெதர் ஒரு ரிசார்ட்ல ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க. எங்க ப்ராஜெக்ட் மேனேஜர் "நீ இதுக்காச்சும் வருவே இல்லை"ன்னு ஒரு சந்தேகத்தோட கேட்டார், நான் ஏதோ வேணும்னே அவாய்ட் பண்ண மாதிரி. ஆனா அந்த நேரத்துல டூர் போகறதை பத்தி யோசிச்சு கூட பார்க்க முடியலை, மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமும் படலை.
மாலை ஆறு மணி போல அந்த பூங்காவுக்கு நான் போனேன். அது புகைப்படம் எடுக்கறதுக்கு ஏத்த சமயம் கெடையாது. வெளிச்சம் கம்மியா இருந்ததுனால படங்கள் அவ்வளவு திருப்திகரமா வரலை. உடனே ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு ஃபோன் பண்ணி 'background blur' எல்லாம் வரலைன்னு வருத்தப்பட்டு சொன்னேன். அவரு "அட! என்ன நீரு இப்போ தான் கேமரா வாங்கிருக்கீரு...அதுக்குள்ள எல்லாம் வந்துருமா? முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க ஓய்"னு ஆறுதல் சொன்னாரு. அவரு சொன்னதை கேட்டதும் கொஞ்சம் தெம்பா இருந்துச்சு. வெளிச்சம் கம்மியா இருந்தாலும், வானத்தை நோக்கிப் பார்த்தா ஓரளவுக்கு வெளிச்சம் ஓகேவா இருக்கற மாதிரி இருந்துச்சு. சரி கேமராவோட 18x ஜூமைப் பரிசோதிச்சுப் பார்த்துடுவோம்னு நிலாவை படமெடுத்தேன். நிலவிலிருக்கும் craterகள்(பள்ளங்கள்) கூடத் தெரிஞ்சது. மனசுக்குச் சந்தோஷம் தர்ற ஒரு படம் கெடைச்சுச்சு. அது மேலும் நல்ல படங்கள் எடுக்க ஊக்கமா அமைஞ்சது.
அந்த நேரம் பார்க்ல ஒரு பையன் சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருந்தான். "அங்கிள் ஒன் ஃபோட்டோ" என்றான். நானும் ஒரு படம் எடுத்தேன். படம் எடுக்கிறேன் என்று தெரிந்ததும் சைக்கிளில் சுற்றி சுற்றி வந்து போஸ் கொடுத்து சைக்கிள் ஓட்டுவது போல படம் எடுக்கச் சொன்னான். யாரையாச்சும் உங்களை படம் எடுக்கட்டுமான்னு கேக்கறதுக்கு எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் இருக்கும். தானாகவே வர்ற வாய்ப்பை எதுக்கு விடனும்னு நானும் நிறைய படங்களை எடுத்தேன். நான் ஃபோட்டோ எடுப்பதை தெரிந்து கொண்டு அந்த பையனின் நண்பர்கள் சில பேரும் வந்து ஃபோட்டோ எடுக்க போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். டிஜிட்டல் கேமராவில் ஃபோட்டோ எடுத்து விட்டு, எடுத்த படத்தை அவர்களுக்கு LCD திரையில் காண்பிக்க வேண்டும். அதை பார்த்து விட்டு அவர்கள் மகிழ்வார்கள், அவங்க மகிழ்ச்சியை பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. எனக்கு எப்போதுமே கேமரா முன்னே நிற்பதை விட, கேமராவுக்குப் பின்னே நின்று புகைப்படம் எடுப்பதில் நாட்டம் அதிகம். அதிலும் குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது இன்று வரை எனக்கு சவாலாகவே இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களுடைய அசைவுகள் மின்னல் வேகத்தில் இருக்கும். அதற்கேற்றாற் போல படம் எடுப்பது என்பது என்னை பொறுத்த வரை மிகவும் சவாலானது மற்றும் சந்தோஷம் அளிக்கும் விஷயம்.
அன்று நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம் தான். அக்குழந்தையின் முகத்தில் தெரியும் innocence(வெகுளித்தனம்) தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். அன்று நிலவை புகைப்படம் எடுத்தபோது எந்தளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி இந்த பிள்ளை நிலவைப் புகைப்படம் எடுத்த போது கிடைத்தது. கேமராவின் ஆட்டோ மோடில் ஃப்ளாஷ் உபயோகித்து எடுத்த படம் இது.
வீட்டுக்குப் போனதும் நான் எடுத்த படங்களைத் தங்கமணிக்கும் காட்டினேன். அவங்களும் சந்தோஷப் பட்டாங்க. அதுக்கப்புறம் ஜூலை 18ஆம் தேதி வளைகாப்பு முடிஞ்சதும் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்க. இந்த நேரத்துல ஒரு சின்ன கிளை கதை ஓட்டுவோம். உலகத்துலேயே அதிக பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரினம் எதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கரப்பான் பூச்சி. பல கோடி ஆண்டுகளா இந்த உயிரினம் தன்னை தானே மேம்படுத்திக்கிட்டே வந்துருக்காம், தனக்கு ஏற்படக் கூடிய எல்லாவிதமான தடங்கல்களையும் சமாளிக்கிறதுக்காக மிகவும் evolve ஆன உயிரினம் அது. ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நாகசாகியில அணுகுண்டு வீசப்பட்டு பல லட்சம் மக்கள் மாண்ட போதும் அந்நகரில் வாழ்ந்த கரப்பான்பூச்சிகள் மட்டும் மடியவில்லையாம். அப்படின்னா அது எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும் யோசிச்சிப் பாருங்க. அப்பேர்ப்பட்ட கரப்பான் பூச்சிக்கே தாய்க்குலத்தைப் பார்த்தா பயம் போலிருக்கு. நமக்கு இருக்கற மாதிரியே கரப்பான்களுக்கும் கரப்பான் இனத்து தாய்க்குலத்து கிட்ட பயம் இருக்கும், அது இயல்பானது தான் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.
ஆனா அதுங்களுக்கு மனித இனத்தின் தாய்க்குலத்தின் மீது அதை விட பயம் போல இருக்கு. ஏன்னா தங்கமணி வீட்டுல இருக்கற வரைக்கும் கரப்பான்பூச்சி வீட்டுல இல்லை. அவங்க அந்தாண்ட போனதும் வீட்டுக்குள்ளே குட்டி குட்டியா நிறைய கரப்பான்பூச்சிகள் வந்து சேர ஆரம்பிச்சது. இதுக்கே வீட்டை நான் சுத்தமா தான் வச்சிருந்தேன். பனீர்ல(பாலாடை கட்டி) போரிக் ஆசிட் பவுடரை(Boric Acid) சிறு சிறு உருண்டைகளா சேர்த்து உருட்டி வச்சா அதை சாப்பிட்டுட்டு கரப்பான் பூச்சிகள் எல்லாம் செத்துடும்னு யாரோ சொன்னதை கேட்டு அதையும் செய்து பார்த்தேன். ஆனா ப்ரேக்ஃபாஸ்டுக்கும் லஞ்சுக்கும் "பனீர் பட்டர் மசாலா" சாப்பிடற மாதிரி கரப்பான் பூச்சிகள் எல்லாம் சாப்புட்டு கொழுத்த மாதிரி தெரிஞ்சதே தவிர ஒழிஞ்ச மாதிரி தெரியலை. அதுங்க பாட்டுக்கு ஜாலியா வீட்டுல அங்கேயும் இங்கேயும் சுத்தி வந்ததுங்க, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை. ஹ்ம்ம்ம்....கரப்பான்பூச்சிகளுக்குக் கூட நம்ம மேல பயம் இல்லை...அதுங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கு இவன் ஒரு டம்மி பீஸ்னு.
இப்படியே கரப்பான்களோட உலகப் போரை நடத்திக்கிட்டு ஆஃபிசுக்கும் போய்க்கிட்டுன்னு இப்படியே சில தினங்கள் கழிஞ்சது. ஜூலை மாசம் 24ஆம் தேதி ஒரு ஐடியா தோனுச்சு, இருட்டுற வேளையில சில நாட்களுக்கு முன்னாடி போன அந்த பூங்காவுக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போதே போனா என்னன்னு. அதனால அன்னிக்கு நாலு மணிக்கே ஆஃபீசுலேருந்து கெளம்பி வீட்டுக்குப் போய் கேமராவை எடுத்துக்கிட்டு பூங்காவுக்குப் போனேன். கிட்டத்தட்ட அஞ்சு மணி இருக்கும். ஆனா பெருத்த ஏமாற்றம். குழந்தைகள் யாரும் அப்போ இல்லை. அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே சுத்திக்கிட்டு இருந்தேன். போன முறை நான் பார்த்த குழந்தைகள்ல சிலர் அஞ்சரை மணிக்கு வந்தாங்க. ஆனா அவங்க பாட்டுக்கு வெளையாடிக்கிட்டு இருந்தாங்க. என்னை ஃபோட்டோ எடுக்கச் சொல்லி யாரும் கேக்கலை. ஆஃபீசுலேருந்து சீக்கிரம் வந்தும் பயன் இல்லையேன்னு கொஞ்சம் ஏமாத்தமா தான் இருந்துச்சு. அப்போ அன்னைக்கு நான் படம் எடுத்த போது இருந்த நெட்டையான ஒரு பொண்ணு "அங்கிள்! எங்களை படம் எடுக்கறீங்களா?"ன்னு ஆங்கிலத்துல கேட்டுச்சு. சரி, எடுக்கறேன்னு ஒத்துக்கிட்டதும் தான் தாமதம், தன்னோட மூனு தோழிகளை அழைச்சுக்கிட்டு வந்துடுச்சு.
கீழே இருக்கற படங்கள் எல்லாம் மிக மிக இயல்பா, spontaneousஆ அந்த குழந்தைகள் போஸ் கொடுக்க கொடுக்க நானா எடுத்தது. அப்படி நில்லுங்க, இப்படி பாருங்கன்னு நான் எதுவுமே சொல்லலை. அவங்க எப்படி விருப்பப் பட்டு எடுக்கனும்னு நெனைச்சாங்களோ அது மாதிரி தான் நான் எடுத்தேன். ஒவ்வொரு படம் எடுத்ததும் அதுல ஒரு வாண்டு ஒடி வந்து "அங்கிள்! தோசி" அப்படின்னு கன்னடத்துல சொல்லி கேமராவைப் பிடிச்சு இழுக்கும். நானும் எல்சிடி திரையில நான் அவங்களை எடுத்த படங்களைக் காட்டுவேன். அதாவது "தோசி" அப்படின்னா கன்னடத்துல கேமராவைக் காட்டச் சொல்லி கேக்கறதுன்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். உக்காந்துக்கிட்டு, படுத்துக்கிட்டு, புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி இப்படின்னு பலவிதமான போஸ் கொடுத்தாங்க அந்த குழந்தைங்க. வெளிச்சம் கம்மியாயிட்டதனாலயும், அந்த கேமரா எனக்கே புதுசுங்கிறதுனாலயும் நான் எடுத்த நிறைய படங்கள் அவ்வளவு நல்லா வரலை. அன்னிக்கு நான் எடுத்ததுல ஓரளவுக்கு சுமாரான படங்களைக் கீழே போட்டுருக்கேன்.
அந்த தோழிகள் நாலு பேரும் ரொம்ப இயல்பா, எந்த கவலையும் இல்லாம, சந்தோஷமா புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்ததை பாத்தப்போ எனக்கு பிரம்மா படத்துல வர்ற "இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி" அப்படிங்கிற பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. குறிப்பா ஏன் அந்த பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சுன்னு இப்போ யோசிச்சா ஒரு விதமான "free spirit" அந்த குழந்தைகளிடம் பாக்க முடிந்ததாக நினைவு. இதுக்கு மேல இதை எப்படி விளக்குறதுன்னு தெரியலை. அதோட எட்டாம் வகுப்பு ஆங்கில துணைப்பாடத்துல படிச்ச "The Little Women" அப்படிங்கிற சுருக்கப்பட்ட புதினமும்(abridged novel) நியாபகத்துக்கு வந்தது. லூயிஸா எம்.ஆல்காட்(Louisa M.Alcott) என்ற எழுத்தாளர் நூற்றி நாற்பது வருடங்களுக்கு முன்னர் எழுதிய நாவல் அது. அந்த கதையில நாலு பெண்கள் இருப்பாங்க - மெக்(Meg), ஜோ(Jo), பெத்(Beth) மற்றும் ஏமி(Amy). சகோதரிகளான அந்த நாலு பெண்களுக்கு நடுவில் நடக்கும் கதையே அந்த புதினம். பாசம், கோபம், துரோகம்னு பல விதமான உணர்ச்சிகள் அந்த கதையில் சொல்லப் பட்டிருந்ததாக நினைவு. அந்த கதையோட ஞாபகம் இருக்குன்னு யோசிச்சு பார்த்தா, மைக்கேல மதன காமராஜன் படத்துல காமேசுவரன் கமல் சொல்லுவாரே "எனக்கு அக்கா கெடையாது, தங்கச்சி கெடையாது"ன்னு அதே மாதிரி தான் எனக்கும்...ஒரு வேளை அக்கா, தங்கச்சி உள்ள குடும்பங்கள் இப்படி தான் இருக்குமோங்கிற ஆர்வத்தை அந்த நாவல் தூண்டி இருக்கலாம்.
இப்படி அவங்களோட அந்த நட்பைப் பார்த்ததும் என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை குலைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது. போட்டோ எடுத்துக் கொள்ளும் மும்முரத்தில் தோழிகள் நால்வரும் ஒருவரை ஒருவர் முந்தி நின்று படம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் தான் முன்னால் நிற்க வேண்டும் என்று அடம்பிடிக்க மற்ற தோழிகள் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் போக அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. கன்னடத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு "தூ தூ" என்று துப்பிக் கொண்டு சண்டை போட்டுக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்னால் நிற்க வேண்டும் என்று அடம்பிடித்த பெண் கோவித்துக் கொண்டு போய்விட்டாள். எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாய் போய்விட்டது. "ஃபோட்டோ எடுக்கறேன்னு ஆரம்பிச்சதுனால தானே ஒத்துமையா விளையாடிட்டு இருந்த அந்த தோழிகளுக்குள் சண்டை வந்தது, அவர்களுக்குள் பிரிவினை வர நான் காரணமாகி விட்டேனே" என்ற குற்றவுணர்ச்சிக்கு நான் ஆளானேன். எனக்கு கன்னடம் ஓரளவுக்குப் புரிந்தாலும் பேச வராததால் அவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் "Please don't fight" என்று சமாதானப் படுத்த முயற்சி செய்தேன். மற்ற மூவரும் அதை பற்றி கவலை படவில்லை. "எங்க மூனு பேரையும் ஃபோட்டோ எடுங்க" என்று போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
திடீர் என்று என்னை முதன் முதலில் ஃபோட்டோ எடுக்கச் சொன்ன நெட்டையான அந்த பெண், "ஒன் மினிட்" என்று சொல்லிவிட்டு ஓடினாள். சண்டையிட்டு விட்டுச் சென்ற தங்களுடைய அந்த தோழியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு வந்தாள். கோபித்துக் கொண்டு போன அந்தப் பெண் அழுதிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே மற்ற மூவரும் சேர்ந்து "சாரி" சொல்லி சமாதானப் படுத்தினார்கள். ஒரு படி மேலே போய் அவளுக்கு முத்தமிட்டு சமாதானப் படுத்தினார்கள் இருவர்.
ஒரு வழிப்போக்கனாய், ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்தாலும் அந்த நேரம் அங்கிருந்து அந்த "little women" நால்வருக்கிடையில் நடந்த அந்த நிகழ்வுகளைப் பார்த்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என் குற்ற உணர்வில் இருந்தும் நான் விடுபட்டேன். அதன்பிறகும் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிலையின் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தார்கள். இதுவும் நான் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.
அதன் பிறகு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எந்தெந்த வகுப்பில் படிக்கிறார்கள், அவர்களுக்குத் தமிழ் தெரியுமா என்றெல்லாம்.
ஒவ்வொரும் ஒவ்வொரு வகுப்பு நெட்டையான அந்த பெண் மட்டும் தான் ஐந்தாம் வகுப்பு, மற்ற வாண்டுகள் எல்லாம் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு இப்படி தான். தமிழில் அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகளே தெரிந்திருந்தது. அதன் பின்னர் "உங்க பேரை எல்லாம் சொல்லுங்க" என்றேன் நான். "ராஜேஸ்வரி" என்றாள் நெட்டைப் பெண். "நௌஷீன் ஃபாத்திமா" என்றாள் சண்டையிட்டுக் கொண்டு சென்ற அந்த பெண். "ரம்யா" என்றாள் தோசி தோசி என்று கேமராவைப் பிடுங்கிய அந்த பெண். நாலாவது பெண்ணும் தன் பேரைச் சொன்னாள், ஆனால் எனக்கு அது தற்போது நினைவில் இல்லை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை "என் பேரு பிரதீபா அங்கிள், நான் சும்மா சொன்னேன்" என்றாள் அந்த நெட்டைப் பெண். அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற பெண்களும் தாங்கள் சொல்லிய பெயர் தங்கள் உண்மையான பெயர் இல்லையென்று தங்கள் பெயர் வேறு என்று வெவ்வேறு பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும், அவர்கள் முதலில் சொல்லிய பெயர் தான் அவர்களுடைய உண்மையான பெயரென்றும் எனக்குத் தெரியும். ஏனென்றால் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் போது ஒருவரை ஒருவர் கூப்பிடும் போது அவர்கள் பெயரை நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். நான் பெயரைக் கேட்டதன் நோக்கம் நான்காவது பெண்ணின் பெயர் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது...அது என்ன என்று உறுதிபடுத்திக் கொள்வதற்காகத் தான்.
அந்த நேரம் பார்த்து தங்கமணி சென்னையிலிருந்து என்னை என் கைபேசியில் இருந்து அழைத்தார். நான் பார்க்கில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். ரம்யா என்ற வாண்டு "யார் அங்கிள்" என்று கேட்டாள். என்ன சொல்வது என்று புரியாமல் "ஆண்ட்டி" என்றேன். தெளிவாகப் புரிய வைப்பதற்காக "நன்ன ஹெண்ட்தி"(என் மனைவி) என்றேன். உடனே கைபேசியை என் கையில் இருந்து பிடுங்க ஆரம்பித்து விட்டாள். சரி என்று கைபேசியை அவளிடம் ஒப்படைத்தேன். அவளும் தங்கமணியுடன் சில நிமிடங்கள் எதோ பேசிக் கொண்டிருந்தாள், "யெஸ் ஆண்ட்டி", "நோ ஆண்ட்டி" என்று மட்டும் பதில் வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு நால்வரிடமும் என் செல்பேசி கைமாறி விட்டு ஒரு ஐந்து நிமிஷத்துக்கு அப்புறம் என் கைக்குத் திரும்ப வந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு சில நிமிடங்களில் அந்த பெண்களின முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அப்படி என்ன தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற ஆர்வம் தாங்க மாட்டாமல் "அப்படி என்ன தான் பேசிட்டு இருந்தீங்க" என்று தங்கமணியைக் கேட்டேன். "ஒன்னுமில்லை...சும்மா ஜெனரலாத் தான்" என்றார்கள். சும்மா ஜெனரலாப் பேசுனதுக்கா அவர்களின் முகங்களில் அவ்வளவு பூரிப்பு என்று எனக்கு ஒரு ஆச்சரியம். அப்புறம் தான் இந்த மரமண்டையில் உரைத்தது - பெத்த புருஷனாவே இருந்தாலும்...சே...கட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு girl-to-girl talkஇலோ or for that matter ஒரு girl-to-woman talkஇலோ உடம்பில் Y க்ரோமோசோம்கள் கொண்டவர்களுக்கு இடமில்லை என்ற உண்மை :)
அதன் பிறகு அந்த பெண்கள் என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். "அங்கிள்! என் உண்மையான பெயர் ராஜேஸ்வரி தான்" என்றாள் நெட்டைப் பெண். அவள் தான் அந்த நால்வருக்கும் கேங் லீடராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் அவ்வாறு சொன்னதும் மற்ற மூவரும் தாங்கள் என்னிடம் முன்னர் தெரிவித்த பெயர் தான் தங்கள் உண்மையான பெயர் என்று சொன்னார்கள். அவர்கள் பேசியதை கேட்டது என்னை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் சென்றது. முதலில் ஏன் பொய்யான பெயரைச் சொன்னார்கள் என்று கேட்க எனக்கு அப்போது தோன்றவில்லை. அதாவது ஃபோட்டோ எடுக்கும் என்னுடைய பின்புலத்தைப் பற்றித் தெரியாத காரணத்தால் முதலில் உண்மையான பெயரைச் சொல்லியதை மாற்றிச் சொல்லியதாகவும், பின்னர் நான் திருமணமானவன் என்றும் என்னை நம்பியும் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டதும் ஆணான என் மீது அவர்களுக்கு ஒரு நம்பகத் தன்மை தோன்றியதாகவும் நானே யூகித்துக் கொள்கிறேன். எது எப்படியோ எட்டு ஒன்பது வயதே நிரம்பிய அக்குழந்தைகளின் "defence mechanism" கண்டு நான் மலைத்துப் போனேன் என்பது உண்மை.
இதே போல சமீபத்தில் சென்னையில் எங்கள் வீட்டுக்கு அருக்கில் என் நண்பன் திருமுருகனும் நானும் இதை போலவே அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கேட்டார்கள் என்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் மட்டும் "ஏன் ஃபோட்டோ எடுக்கறீங்க" என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளும் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்தாள் என்றாலும் "சும்மா தான் நீங்க கேட்டீங்கன்னு எடுக்கறோம்" என்று நாங்கள் அளித்த பதில் அவளுக்கு அவ்வளவு திருப்தியாய் இருக்கவில்லை. காலம் கெட்டுக் கிடக்கும் இந்த வேளையில் முன் பின் தெரியாதவர்களிடம்(குறிப்பாக ஆண்களிடம்) அந்த பெண் குழந்தைகள் என்னுடைய பின்புலம் பற்றி தெரியாத போது தங்கள் உண்மையான பெயர் சொல்லாமல் இருந்தது சரி தான் என்று கொண்டாலும், ஒரு முன்னாள் பேச்சிலன்(ர்) என்ற முறையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் கல்யாணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் எல்லாரும் அயோக்கியர்களும் இல்லை, கல்யாணம் ஆன ஆண்கள் எல்லாரும் உத்தமர்களும் இல்லை. அப்போ யார் நல்லவன், யார் கெட்டவன் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது? என்னிடம் அதற்கான விடையில்லை. சண்டையிட்டு பிரிந்து சென்ற தோழியை சமாதானப் படுத்தி அழைத்து வரச் சொல்லித் தூண்டிய இயற்கையே "Raghavan Instinct" மாதிரி ஒரு instinctஐத் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள அக்குழந்தைகளுக்கு அருளும் என்று நம்புவோமாக.
இந்தப் படங்களை எடுத்து, சில நாட்களுக்கு அப்புறம் Flickr வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். அங்கு நான் பெரிதும் மதிக்கும் "Light and Life" என்ற பெயரில் தான் எடுக்கும் புகைப்படங்களை வலையேற்றும் திரு.முரளி எனும் நண்பர் பெங்களூரு மடிவாலா காய்கறி சந்தையில், காய்கறி விற்பவர்களைத் தான் எடுத்திருந்த புகைப்படங்களை வலையேற்றி இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு தான் எடுத்தப் படங்களைப் ப்ரிண்ட் போட்டு தான் படம் எடுத்தவர்களிடம் அப்படங்களைக் கொடுக்கும் போது மேலும் சில படங்கள் எடுத்து அதனையும் வெளியிட்டிருந்தார். படத்தைப் பெற்றுக் கொண்டவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. "சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப் படுத்திப் பார்ப்பது" என்று அவரே தன்னுடைய தளத்தில் சொல்லியிருந்ததைப் பார்த்ததும் "அட! இந்த ஐடியாவை நாமும் காப்பி அடிக்கலாமே"ன்னு தோனுச்சு. முரளி அவர்களின் படங்களை கீழே உள்ள சுட்டிகளில் காணலாம்.
http://www.flickr.com/photos/murali-art/2881332696
http://www.flickr.com/photos/murali-art/2896947339
http://www.flickr.com/photos/murali-art/2877215473
http://www.flickr.com/photos/murali-art/2896946339
நானும் அதே மாதிரி நான் எடுத்த படங்களைப் ப்ரிண்ட் போட்டேன். ப்ரிண்ட் போட்டுக் கொண்டு அந்த குழந்தைகளைச் சந்திக்கலாம் என்று நான் நினைத்தது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. காரணம் அதன் பிறகு ஓரிரு வாரங்கள் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் மழை பேய்ந்ததால் குழந்தைகள் யாரும் பூங்காவுக்கு வரவில்லை. ஒரு நாள் ஆஃபிசிலிருந்து நாலரை மணிக்கே கிளம்பி பூங்காவுக்குச் சென்று ஏழு மணி வரைக்கும் காத்திருந்து பார்த்த போதும் யாரும் வரவில்லை...அப்போது செப்டம்பர் மாதம் துவங்கியிருந்தது...ஒரு வேளை தசரா விடுமுறைக்கு எங்காவது ஊருக்குப் போய்விட்டார்களா என்று தோன்றியது. அதன் பிறகு மனைவி பிரசவத்திற்குச் சென்று விட்டதால், திப்பசந்திராவில் உள்ள வீட்டைக் காலி செய்து விட்டு கோரமங்கலாவில் உள்ள கம்பெனியின் தங்கும் விடுதிக்குச் செல்லும் நாள் நெருங்க ஆரம்பித்து விட்டது. நான் ப்ரிண்ட் போட்டு வைத்திருக்கும் படங்களைக் கொடுக்காமலேயே செல்ல நேரிடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படங்களைக் கொடுப்பதற்காக நான்காவது முயற்சி ஒன்றை மேற்கொண்டேன். அன்றும் பூங்காவில் நான் அறிந்திருந்த குழந்தைகள் யாரும் இல்லை. பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
அப்போது அதிருஷ்டவசமாக ராஜேஸ்வரி என்ற அந்த பெண் பூங்காவுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கீழே நின்று சைகை காட்டி அவளை கீழே வரச் சொன்னேன். முதலில் "வர மாட்டேன்" என்று தலையாட்டினாள். பின்பு என்ன நினைத்தாளோ தெரியவில்லை, தனியாகக் கீழே இறங்கி வந்தாள். "வாட் அங்கிள்" என்றாள். நான் ப்ரிண்ட் போட்டு எடுத்து வந்திருந்த படங்களை "ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கொடுத்து விடு" என்று சொல்லி நான் படங்களைப் போட்டு எடுத்து வந்திருந்த கவரை அவளிடம் நீட்டினேன். அவள் படங்களை எடுத்துப் பார்த்து விட்டு "ஹவ் மச் அங்கிள்?" என்றாள். படங்களைப் பார்த்த மாத்திரத்தில் வெள்ளப் பெருக்கு போல அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த எனக்குச் சப்பென்றாகி விட்டது. "எனக்கு எதுவும் வேண்டாம். மறக்காமல் எல்லோருக்கும் ஒவ்வொரு படம் கொடுத்து விடு" என்று சொன்னேன். அவளும் "தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அவளுடைய வீட்டுக்குள் ஓடி விட்டாள். முரளி அவர்கள் மடிவாலா மார்க்கெட்டில் பார்க்க முடிந்த மகிழ்ச்சியை நான் அந்த குழந்தைகளின் முகத்தில் கடைசி வரை பார்க்கவே முடியவில்லை.
பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிய சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளை ஒருவாறாக எழுதி முடிச்சிட்டேன். அடுத்த பதிவு(எப்போ வருமோ!) வரும் வரை...அவ்ளோ தான்.
Sunday, July 25, 2010
பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு நிறைவு பகுதி...
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
ஏஞ்சாமி... இம்புட்டு பெருசாவா பதிவு போடுறது.. உண்மைதமிழன் பக்கம் கூட தேவலாம் போல இருக்கே......
போட்டோ பிரிண்ட் சூப்பர் மேட்டரு....
ஆனா பதிவோடு தலைப்பை இப்படி கிக்கா வச்சுட்டு இப்படி செண்டியை போட்டு தாக்கினா என்னையா அர்த்தம்?
//ஏஞ்சாமி... இம்புட்டு பெருசாவா பதிவு போடுறது.. உண்மைதமிழன் பக்கம் கூட தேவலாம் போல இருக்கே......//
ஹி...ஹி...உண்மையாவே நான் கூட உண்மைதமிழன் அண்ணாச்சி பேரை இணைச்சு ஒரு தலைப்பு வச்சா வியாபாரம் அமோகமா நடக்கும்னு நெனச்சேன்...ஆனா செயல் படுத்தலை :)
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் சொல்ல வேண்டியத எல்லாம் சிவா ஏற்கனவே சொல்லிட்டாரு! ஏன் பாஸ் ஏன்? ஏன் இந்த செண்டி வெறி? (நிஜமாவே இவ்ளோ விவரமா நினைவு இருக்கா!!!!)
//போட்டோ பிரிண்ட் சூப்பர் மேட்டரு.... //
டாங்கீஸ்பா
//ஆனா பதிவோடு தலைப்பை இப்படி கிக்கா வச்சுட்டு இப்படி செண்டியை போட்டு தாக்கினா என்னையா அர்த்தம்?//
கலி முத்திடுச்சுன்னு அர்த்தம் :)
//அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நான் சொல்ல வேண்டியத எல்லாம் சிவா ஏற்கனவே சொல்லிட்டாரு! ஏன் பாஸ் ஏன்? ஏன் இந்த செண்டி வெறி? (நிஜமாவே இவ்ளோ விவரமா நினைவு இருக்கா!!!!)//
வாங்க அவிவா!
சத்தியமா எனக்கு நினைவுல இருக்கறதை தான் எழுதிருக்கேன். பின்னே மண்டபத்துல யாரோ நெஞ்சை நக்குனதை கொண்டாந்தா இங்கே போட்டுருக்கேன்? நினைவுலேருந்து எழுதுனது தான்...எழுதுனது தான் :)
அந்த தனித்து எடுத்த குட்டி பாப்பா படம் நம்பர் - 1 செமை க்யூட்டா பாக்குறாங்க :)
//அட! என்ன நீரு இப்போ தான் கேமரா வாங்கிருக்கீரு...அதுக்குள்ள எல்லாம் வந்துருமா? முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க ஓய்"//
குருஜி இப்பவும் இப்பிடித்தான் என்கிட்ட சொல்லிக்கிட்டிருக்காரு நான் இன்ன்ன்ன்னும் வளரணும் போல அவ்வ்வ்வ்வ்வ்வ் :)
அந்த நிலா படம் - நானும் டிரை செஞ்சு செஞ்சு பாக்குறேன் இந்த அளவுக்கு வர்ல :( எனி அட்வைசு! [பால் போல் நிலா மாதிரி மொழுக்குன்னு ரவுண்டா வருது டீடெயில்ஸ் கிடைக்கமாட்டிக்கிது அதுக்கு நான் என்ன செய்யணும்? இப்ப நான் என்ன செய்யணும் :))
அந்த நிலா படம் - நானும் டிரை செஞ்சு செஞ்சு பாக்குறேன் இந்த அளவுக்கு வர்ல :( எனி அட்வைசு! [பால் போல் நிலா மாதிரி மொழுக்குன்னு ரவுண்டா வருது டீடெயில்ஸ் கிடைக்கமாட்டிக்கிது அதுக்கு நான் என்ன செய்யணும்? இப்ப நான் என்ன செய்யணும் :))
\\அப்பேர்ப்பட்ட கரப்பான் பூச்சிக்கே தாய்க்குலத்தைப் பார்த்தா பயம் போலிருக்கு. நமக்கு இருக்கற மாதிரியே கரப்பான்களுக்கும் கரப்பான் இனத்து தாய்க்குலத்து கிட்ட பயம் இருக்கும், அது இயல்பானது தான் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.
\\
நோ நோ! சினிமா பார்ப்பது இல்லியா? எத்தனை கதாநாயகிங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி பார்த்து பயப்பட்டு....என்னவோ போங்க! அதுக்காவது பயப்படுறாங்க பெண்கள்ன்னு நினைச்சதுல மண்ணை அள்ளி போடுறீங்க கைப்ஸ்!
\\மைக்கேல மதன காமராஜன் படத்துல காமேசுவரன் கமல் சொல்லுவாரே "எனக்கு அக்கா கெடையாது, தங்கச்சி கெடையாது"ன்னு அதே மாதிரி தான் \\
எனக்கு தெரிஞ்சது எல்லாம் வரதுகுட்டி, சமையல் கட்டு... இதவுட்டுடீங்க பாஸ்!
\\வர்களுக்குள் சண்டை வந்து விட்டது. கன்னடத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு "தூ தூ" என்று துப்பிக் கொண்டு சண்டை போட்டுக்க ஆரம்பிச்சிட்டாங்க.\\
ஒருவேளை தமிழ் பிளாக் படிக்கும் பசங்களோ என்னவோ?
நானும் நல்லா தான் கும்மி அடிச்சுகிட்டு வந்தேன். ஆனா அந்த போட்டோ பிரிண்ட் செண்டி போட்டு தாக்கீட்டீங்க. நல்ல பசங்க. உங்களையும் அந்த போட்டோக்களையும் மறக்க மாட்டாங்க!
நல்லா இருந்துச்சு கைப்ஸ் இந்த தொடர்.
ஜீவ்ஸ் கிட்ட போட்டோ டிப்ஸுக்கு பிறகு எம்.ஜி ரோட்டில் அந்த குறிப்பிட்ட பஃப் எங்கே இருக்கு?னு நீர் கேட்டதை எல்லாம் இந்த பதிவில் பதியாததுக்கு கன்டனங்கள். :))
நல்ல போஸ்ட்.
ரொம்ப தயங்கினா நியூஸ்பேப்பர்ல இருந்து வர்றேன்னு சொல்லிட வேண்டியதான்.
நானும் பிரிண்ட் போட்டு குடுத்து இருக்கேன். அதை அவங்க பாக்கிற மாதிரி போட்டோ எடுத்து பாத்ததில்லை.
போட்டோ பிரிண்டு விஷயம் நல்ல விஷயம்...எதிர்பாத்துகிட்டு போனால் இப்படி தான் பல்பு கிடைக்கும் போல! ;))
அப்புறம் ஏன் எங்க மேல இப்படி ஒரு பாச கொலைவெறி...யம்மா பெரிய பதிவு ;)))
Post a Comment