நேத்து சாயந்திரம் நந்தலாலா படத்து ஒலித் தகடு வாங்குனதுலேருந்து இந்த பாட்டை ஒரு 25-30 வாட்டி கேட்டிருப்பேங்க. சில பாடல்களைக் கேட்டால் ரொம்ப சந்தோஷமா இருக்கும். இது அந்த மாதிரியான அருமையான ஒரு டூயட் பாட்டு. டூயட் பாட்டுன்னாலும் இது காதல் பாட்டு இல்லை. பெரும்பாலும் இயற்கையை வர்ணிச்சு இருக்கற ஒரு துள்ளலான பாட்டு. நந்தலாலா ஆல்பத்துல மொத்தம் ஆறு பாட்டு. மூனு பாட்டை இளையராஜா பாடிருக்காரு, அதுல ஒரு பாட்டுல அவரோட பேரன் யதீஸ்வரனும்(கார்த்திக்ராஜா பையன்) ரெண்டு வரி பாடிருக்காரு. ஒரு பாட்டு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவங்க மொழியிலேயே பாடற பாட்டு, ஒரு பாட்டு யேசுதாஸ் பாடிருக்காரு. கைவீசி நடக்கற காத்தேங்கிற இந்தப் பாட்டும், இளையராஜாவும் அவங்க பேரனும் பாடிருக்கற "ஒரு வாண்டுக் கூட்டமே"ங்கிற பாட்டும் படத்துல இல்லையாம். படத்துல இல்லன்னாலும் இந்த பாட்டு ஒரு ரவுண்டு வரும்னு நான் நெனைக்கிறேன்.
இளையராஜா- பழனிபாரதி கூட்டணி பத்தி சொல்லியே ஆகனும். ராஜாவின் பாடல்களுக்கு அநேகமா வாலி தான் பாட்டெழுதுவாரு. ஆனா எப்பவாச்சும் ஒரு பாட்டு எழுதுற பழனிபாரதி பாட்டுங்க செம ஹிட்டு ஆகிடும். உதாரணத்துக்குச் சொல்லனும்னா - காதலுக்கு மரியாதையில் வர்ற "என்னைத் தாலாட்ட வருவாளா?", பிதாமகன்ல வர்ற "இளங்காத்து வீசுதே" இதையெல்லாம் சொல்லலாம். இந்த பாட்டுலயும் பழனிபாரதியின் வரிகள் ரொம்ப அருமையா இருக்கு. நந்தலாலா படத்துல மத்த பாட்டுகளும் நல்லாருந்தாலும்(எனக்கு பிடிச்சிருந்தாலும்), எல்லாருக்கும் பிடிக்குமாங்கிறது சந்தேகம் தான்...ஏன்னா பாட்டுங்க கொஞ்சம் ஸ்லோவா இருக்கும். ஸ்லோவா இருந்தாலும் திரைக்கதைக்குப் பொருத்தமா இருக்கும்னு நினைக்கிறேன். ஆனா நான் சொல்லற இந்தப் பாட்டு இசையிலயும் சரி, வரிகள்லயும் சரி, குரல்லயும் சரி எல்லாருக்கும் பிடிக்கும்னு நெனக்கிறேன். கேட்டுப் பாருங்க.
படம் : நந்தலாலா(2009)
பாடல் : பழனிபாரதி
இசை : இளையராஜா
பாடியது : விஜய் ஜேசுதாஸ், ஸ்வேதா, மது பாலகிருஷ்ணன், ராகுல், சந்திரசேகர்
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
அழகான கிளிக் குஞ்சே மெது மெதுவா கிளையில் நடந்திடப் பழகு
சிவப்பான இதழ் கூட்டி சுகமா சுகமா ஒரு சொல் பேசிடப் பழகு
பழக பழக உலகம் முழுதும் சொந்தம் ஒன்னு உண்டாகும்
பறந்து பறந்து ரசிக்கும் உறவில் வானமின்னும் பெரிதாகும்
மலரும் மலர்கள் உதிர்கிற பொழுதிலும்
குலுங்கி குலுங்கி சிரிப்பதை பாரு
கவலை மறந்து சிரிக்கிற இடம் தான்
கடவுள் இருந்து வசிக்கிற வீடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
விளையாடும் அணில் குஞ்சே அழகாய் முதுகில் தடவிக் கொடுத்தது யாரு
உனக்காகப் பசியாற மரங்கள் முழுதும் பழங்கள் பழுக்குது பாரு
உருட்டி உருட்டி அழகா அழகா கோலிக் குண்டு கண்ணாலே
துருவித் துருவி தேடுவதென்ன சொல்லு உந்தன் மொழியாலே
வளைஞ்சு நெளிஞ்சி ஓடுது வழிகளில் உனக்கு தெரிஞ்ச திசையினில் ஓடு
வழியில் கெடைச்ச குயில்களின் பாட்டை உனக்கு புரிஞ்ச இசையினில் பாடு
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்
ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி மலர்வனம் வளர்த்திட பாரு
அதை கொஞ்சம் அதை கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே காத்தோடு குலுங்கற பூவே
கேட்டுப் பாருங்கன்னு சொல்லிட்டு...பாட்டு கேக்கறதுக்கு லிங்க் தரவேயில்லையேன்னு தானே கேக்கறீங்க? சிடி விக்கறதுக்காகத் தான் படத்துல இல்லாத பாட்டைக் கூட சிடில வச்சிருக்காங்க. அதை கூட சுட்டு நெட்டுல போடறது நியாயமா? சிடியில கேட்டுப் பாருங்க. இங்க இருக்கற வரிகள் மாதிரி பாட்டும் அருமை...அதுக்கு நான் கியாரண்டி.
Friday, January 16, 2009
நந்தலாலா - கைவீசி நடக்கற காத்தே - சில்லுன்னு ஒரு பாட்டு
Thursday, January 01, 2009
மூனைத் தொட்டது யாரு - பதில்கள்
முதல்ல நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இப்போ, போன பதிவுல கேட்டிருந்த கேள்விகளுக்கு பதில்களைச் சொல்லிக்கிறேன்.
1. மகாபாரதம் மற்றும் பாபர்/அக்பர் காலத்து மொகலாயப் போர்களுடன் தொடர்புடைய இந்நகரம் நெசவாளர்களின் நகரம் என அழைக்கப்பட்டது. இந்த இந்திய நகரம் எது?
பானிபத்(Panipat). முன்னொரு காலத்தில் கைத்தறி போட்டு நெசவுத் தொழில் நடந்து கொண்டிருந்த காலத்தில் பானிபத் நகரம், புகழ்பெற்று விளங்கியது. பானிபத்தில் நெய்யப்படும் 'பாஞ்சா' எனப்படும் Dhurries(ஜமக்காளங்கள்), உலகெங்கிலும் புகழ்பெற்றவை.
2. பின்னோக்கி நடக்கத் தெரியாத/இயலாத ஒரே காரணத்தினாலேயே இப்பறவையும் இவ்விலங்கும் இந்நாட்டின் அரச முத்திரையில்(Coat of Arms) இடம் பெற்றிருக்கின்றன. பறவையோட விலங்கோட நாட்டோட பேரையும் சொல்லணும்.
ஈமு(Emu)எனும் பறவை, சிகப்பு கங்காரு(Red Kangaroo) எனும் விலங்கு, நாடு ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியா எனும் நாடு எப்போதும் முன்னோக்கியே செல்லும்(Advance Australia), எப்போதும் பின்னடைவு பெறாது என்பதை குறிப்பதனால், இவை தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
3. முதன்முதலில் நிலவில் கால் பதித்தவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங். அவருடன் நிலவில் இறங்கிய இன்னுமொரு ஆஸ்ட்ரோநாட்(Astronaut), இவர். நம்ம விஜய டி.ஆர். மாதிரி இவரோட பேருக்குப் பின்னாடி தங்கச்சி பாசக் கதை ஒன்னு இருக்கு.
பஸ் ஆல்ட்ரின்(Buzz Aldrin). அப்போலோ 11 எனும் விண்கலத்தில் 20 ஜூலை 1969 ஆம் ஆண்டு, நீல் ஆர்ம்ஸ்ட்ராங் உடன் முதன் முதலில் நிலவில் காலடி எடுத்து வைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்ம்ஸ்ட்ராங் அளவு திறமையும் அனுபவமும் வாய்ந்தவராக இவர் விளங்கிய போதிலும், ஆர்ம்ஸ்ட்ராங் இவரை விட பொறுமை மிக்கவராகவும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தன்மையுடையவராகவும் விளங்கிய காரணத்தால், நிலவில் முதல் அடி எடுத்து வைக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டவில்லை. இவருடைய பெயருக்குப் பின்னால் ஒரு "என் தங்கை கல்யாணி" கதை இருக்கிறது. எட்வின் யூஜின் அல்ட்ரின் ஜுனியர்(Edwin Eugene Aldrin Jr.) என்ற தன்னுடைய இயற்பெயரை இவர் பஸ் அல்ட்ரின் என்று பல ஆண்டுகள் கழித்து மாற்றிக் கொண்டார். இப்பெயருக்கான காரணம் - சிறுவயதில் அவருடைய தங்கை மழலை மொழியில் "Brother" என்று அழைக்க முற்படும் போது "Buzzer" என்று கூறுவாராம். பஸ்ஸர் என்பதனைச் சுருக்கி பஸ் என்று 1988 ஆம் ஆண்டு தன் பெயரை மாற்றி வைத்துக் கொண்டார்.
4. உலகிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய முதல் நாடு எது?
நியுசிலாந்து. 1893 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய நாடு இது. அச்சமயத்தில் இந்நாடு இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் இருந்தாலும், அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்கும் முன்னதாகவே பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கி விட்டது. இச்சமயத்தில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவில் வருகிறது. பாரதியார் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்ததைப் பற்றித் தமிழ் வகுப்பில் எங்கள் தமிழாசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். இந்நேரத்தில் நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல் என்று தெரிவித்துக் கொள்ளக் கடமை பட்டிருக்கின்றேன். என் நண்பன் ஒருவன் "பாரதியார் காலத்துல வேணா ஆணாதிக்கம் இருந்திருக்கலாம். இப்பல்லாம் அப்படி எதுவும் கெடையாது. நீங்க வேணா பாருங்க, லேடீஸ்க்காக தனி பஸ் விட்டுருக்கோம். எல்லாருக்கும் பொதுவான பஸ்ல கூட லேடீஸ் சீட் தனியா குடுத்துருக்கோம். எங்கேயாச்சும் ஜெண்ட்ஸ் பஸ், ஜெண்ட்ஸ் சீட்னு தனியா எங்கேயாவது இருக்குன்னு கேள்வி பட்டுருக்கீங்களா மிஸ். இதுக்கு மேல இன்னும் என்ன குடுக்கனும்னு எதிர்பார்க்கறீங்க"னு கேட்டான். அதுக்கு மிஸ் சொன்ன பதில் இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு. "நீ சொல்றதெல்லாம் சரிதாம்பா. ஆனா இதெல்லாம் நீங்க குடுத்து தான் பெண்கள் எடுத்துக்கனும்னு நெனக்கிறே பாரு அது தான் ஆணாதிக்கம்" அப்படின்னாங்க. ஏனோ அதை இன்னும் மறக்க முடியலை. இதெல்லாம் கேட்டுத் திரிந்திட்டோம்னு மட்டும் நெனச்சிக்காதீங்க...இன்னும் தம்பி புலிக்குட்டி நாகை சிவாவைச் சேர்ந்த எம்சிபி தான் நாங்களும் :)
5. "If it doesn't sell, it isn't creative" என்பது எந்த விளம்பரத்துறை பிரபலத்தின் கூற்று?
டேவிட் ஒகில்வி(David Ogilvy). இங்கிலாந்தில் பிறந்த இவர், விளம்பரத்துறையின் ஜாம்பவானாக ஆவதற்கு முன்னர் ஒரு சமையல்காரராகவும், ஒரு விற்பனை பிரதிநிதியாகவும், ஒரு காப்பி ரைட்டராகவும் பணியாற்றியிருக்கிறார். மேற்கண்ட இக்கூற்று ஒரு விளம்பரம் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகச் சுலபமான மொழியில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லியிருக்கிறார் என்பது என் எண்ணம். அவரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கு சுட்டவும்.
6. தபால் அட்டைகளைச் சேகரிக்கும் பொழுதுபோக்கின்(Hobby) பெயர் என்ன?
டெல்டியாலஜி(Deltiology). நினைத்தது போலவே பலரும் தபால் அட்டைகளை தபால் தலைகள் என்றெண்ணி "Philately" என்று பதில் அளித்திருந்தனர். உலகிலேயே மூன்றாவது பிரபலமான பொழுதுபோக்கு இது. வண்ணமிகு படங்கள் கொண்ட Picture Postcards சேகரிப்பதில் ஃபின்லாந்து நாட்டினர் மிக அதிக ஆர்வம் செலுத்துகின்றனர். இதை பற்றி விரிவாக வேறொரு சமயத்தில் எழுதுகிறேன்.
7. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இராமலிங்க அடிகளார் இயற்றிய "திருவருட்பா" என்பது மருட்பா அல்ல என்று அதன் பெருமைகளை சைவ சமயப் பெரியவர்களுடன் வாதிட்டு நிலைநிறுத்திய இஸ்லாமிய தமிழறிஞர் யார்?
சதாவதானி செய்குத் தம்பி பாவலர். எட்டாவது படிக்கும் போது என நினைக்கிறேன் - அப்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மாலை 7.30 அல்லது 8 மணியளவில் "உலாவரும் ஓளிக்கதிர்" எனும் நிகழ்ச்சி ஒன்று வரும். தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் நடக்கும் முக்கியமான நிகழ்வுகளைப் பற்றிய செய்தி தொகுப்பு தான் இந்நிகழ்ச்சி. அதில் ஒரு நாள் "சதாவதானி செய்குத் தம்பி பாவலர் அவர்களுக்கான விழா" பற்றிய செய்தி வந்தது. அதில் அப்போது என்ன சொன்னார்கள் என்றெல்லாம் எதுவும் நினைவில் இல்லை. ஆனால் அவருடைய பெயர் ஏனோ நினைவில் நின்றுவிட்டது. பின்னொரு நாள் அதே தூர்தர்ஷனில் "தசாவதானம்" நிகழ்ச்சியை ஒருவர் செய்துக் காட்டினார். ஒரே நேரத்தில் பத்து வெவ்வேறு செயல்களைச் செய்யக் கூடிய திறமை படைத்தவரை "தசாவதானி" என்றுச் சொல்வர். அப்போது தான் தசாவதானியே இவ்வளவு திறமையானவர் என்றால் நூறு வெவ்வேறு செயல்களைச் செய்யக் கூடிய "சதாவதானி" எத்தகையவர் என்ற வியப்பு மேலிட்டது. இணையம் என்ற ஒன்று வந்த பின் தான் சதாவதானி செய்குத் தம்பி பாவலர் குறித்து தேடினேன். தேர்ந்த தமிழறிஞரான இவர் வள்ளலார் எழுதிய திருவருட்பா அருளுடையது அன்று அது ஒரு "மருட்பா" எனும் யாழ்ப்பாணம் ஆறுமுகத்து நாவலர் கருத்தை மறுதலித்து திருவருட்பா மருட்பா அன்று என வாதிட்டுப் பேசி அதன் பெருமையையும் நிலைநிறுத்தினார்.
வள்ளலார் பற்றிய ஒரு வலைத்தளத்தில் எழுதப்பட்டிருப்பதிலிருந்து ஒரு பத்தியை எல்லோரும் படிப்பதற்காக இங்கு தருகிறேன். முழுவதும் வாசிக்க இங்குச் சுட்டுங்கள்.
"ஓர் இஸ்லாமியப் புலவர் சைவ சமய வாதிகளுக்கிடையே நுழைந்து, அவர்களது குதர்க்க வாதங்களைத்தம் தருக்கவாதத் திறமையால் தகர்த்துத் தவிடு பொடியாக்கியதைப் பாராட்டி காஞ்சிபுரத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அவரது இனிய சொற்பொழிவைப் பாராட்டி ' தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் ' என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாவலரை யானை மேல் அமர்த்தி நகர்வலம் செய்வித்தனர். காஞ்சி ஆலயத்தார் ஓர் இஸ்லாமியப் புலவருக்கு பூரணகும்ப மரியாதை செய்து வரவேற்றனர். இந்நிகழ்ச்சிகளால் கவரப்பட்டு பாவலரையே குருவாக ஏற்றுக்கொண்டார் திரு.வி.க. பாவலர் என் குருத்தானத்தில் இருக்கிறார். இராமலிங்க சுவாமிகளின் பாடல்களை என் குரு கதிரைவேற்பிள்ளை 'மருட்பா' என்ற பொழுது, அவருக்கு எதிராகப் பாவலர் ' அவை அருட்பாதாம் ' என்று சொற்பொழிவாற்றினார். அவருடைய சொற்பெருக்கை நான் குறிப்பெழுதிக்கொண்டு போய் என் குருவிடம் காட்டுவேன் இப்பொழுது என் குரு இறந்து விட்டதால் தமிழ் மரபுப்படி அவருடைய எதிரியாகிய பாவலர் தாம் என் குருவாகின்றார் என்று தம் நாட்குறிப்பில் எழுதினார்"
8. மண்ணரிப்பைத் தடுக்க பயன்படுவது இத்தாவரம். இதன் தாவரவியல் பெயர்(Botanical name - இலத்தீன் மொழியில்), தமிழில் இது அறியப்பெறும் பெயரை ஒட்டியே இருக்கும். இத்தாவரம் எது?
வெட்டிவேர். இதன் தாவரவியல் பெயர் Vetiveria zizanioides. வாசனாதி திரவியங்கள் தயாரிக்கவும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும் புல் வகையைச் சார்ந்த இத்தாவரம் பெரிதும் பயன்பெறுகிறது. வெட்டிவேரின் பயன்களைக் குறித்து தமிழ்மணத்தில் வின்செண்ட் எனும் பதிவர் எழுதியிருக்கும் பதிவுகளைக் காணலாம். உண்மையில் வின்செண்ட் அவர்களின் பதிவுகளைப் பார்த்த பின்னர் தான் வெட்டிவேரைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது. வெட்டிவேர் என்பது ஏதோ வெட்டித் தனமான ஒரு வேர் என்று இருந்த கருத்து அதன் பின்னர் பல நாடுகளிலும், வெட்டிவேர் எந்தளவுக்கு பயன்பாட்டில் இருக்கிறது எனத் தெரிந்ததும் தகர்ந்து போனது.
9. ஒரு நிறுவனத்துக்குள்ளேயே மற்ற துறைகளை விட கூடுதல் தன்னாட்சியையும்(autonomy), கூடுதல் ரகசியத்தன்மையையும், குறைவான அதிகாரிகளின் கண்காணிப்பும்(bureaucracy) கொண்ட ஒரு துறையை இவ்வாறு அழைப்பர். இப்பெயர் போர் விமானங்கள் தயாரிக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தினால் முதன்முதலாகப் பயன்படுத்தப் பட்டு இன்னமும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.
ஸ்கன்க் வர்க்ஸ்(Skunk Works). இக்கேள்விக்கு யாருமே பதில் சொல்லவில்லை. போதுமான அளவு க்ளூ கொடுத்திருக்கேன்னு தான் நெனச்சேன். க்ளூவை வச்சே பாப்போமா? போர் விமானம் அதுவும் அமெரிக்கப் போர் விமானம் என்றால் சட்டென்று எது நினைவுக்கு வரும்? F-16 வருமா? F-16 தயாரிக்கும் நிறுவனம் என்று கூகிளினால் Lockheed Martin என்று பதில் வரும். Lockheed Martin+Secrecy+Bureaucracy என்று கூகிளில் தேடினால முதல் பக்கத்தில் இரண்டாவது ரிசல்ட்டே "Skunk works" தான். லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தில் 1943ஆம் ஆண்டிலிருந்தே இப்பதம் பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. கட்டுப்பாடுகள் குறைவாகவும், அதிக ரகசியத்தன்மை உடைய ப்ராஜெக்ட்களை லாக்ஹீட் நிறுவனத்தில் "ஸ்கன்க் வர்க்ஸ்" எனும் இத்துறை குறைந்த கால அவகாசத்தில் முடித்துக் கொடுத்திருக்கின்றது. இந்நிறுவனத்துக்கு மட்டும் ப்ரத்யேகமாக இருந்த இப்பதம், இப்போது மற்ற நிறுவனங்களாலூம் பயன்படுத்தப் படுகிறது. லாக்ஹீட் நிறுவனத்தின் ஸ்கன்க் வர்க்ஸ் லோகோ கீழே.
ஸ்கன்க் வர்க்ஸ் எனும் இப்பெயர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த "Skonk Works" எனும் காமிக் தொடரிலிருந்து வந்ததாகும்.
10. பத்ருத்தீன் ஜமாலுதீன் காஃஜி எனும் இயற்பெயர் கொண்ட இந்நகைச்சுவை நடிகரின் திரைப்பெயர் ஒரு உலகப் புகழ்பெற்ற மதுபானத்தின் வியாபாரப் பெயராகும்(Brand name). இவர் யார்?
ஜானி வாக்கர்(Johnny Walker). இந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகராக இவர் விளங்கினார். மும்பையில் பெஸ்ட் பேருந்தில் நடத்துனராய் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், மக்களை மகிழ்விக்க சிலபல செயல்களைச் செய்வாராம். ஒரு முறை பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பல்ராஜ் சஹானி எனும் கதாசிரியரின் பார்வை இவர் மேல் படிந்த காரணத்தால் இவர் நடிகரானார். தன்னுடைய முதல் திரைப்படத்தில் ஒரு குடிகாரனுடைய வேடமேற்று நடித்தார். அதன் பின் புகழ்பெற்ற ஸ்காட்ச் விஸ்கி மதுபான பிராண்டான ஜானி வாக்கர் என்பதே இவருடைய பெயரானது.
ரொம்ப நாளா, குவிஸ் பதிவுகளைப் பத்தி ஒரு விஷயம் சொல்லணும்னு நெனச்சி வச்சிருந்தேன். அது என்னன்னா இத்தகைய குவிஸ்களின் மூலம் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் உருவாக வேண்டியது அவசியம். தனக்கு தெரிஞ்சதை எல்லாம் காட்டிக் கொள்வதை போல ஒரு குவிஸ் பதிவு இருக்கக் கூடாது என்பதில் முடிந்த வரை கவனமாக இருந்து வருகிறேன். குவிஸ் என்றால் ஒரு 'teasing quality' இருக்க வேண்டும். எங்கோ கேள்வி பட்டது மாதிரி இருக்கே, க்ளூக்களைக் கொஞ்சம் யோசித்தால் பதில் தெரிந்து விடும் போலிருக்கே என்று முயற்சி செய்யத் தூண்ட வேண்டும். என்னுடைய குவிஸ் பதிவுகள் குறித்து மேலும் தங்கள் கருத்துகளைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நான் குவிஸ்ஸில் கேட்கும் கேள்விகள் எல்லாமே குவிஸ் புக்குகளிலிருந்தோ அல்லது இணைய தளத்திலிருந்து எடுப்பது கிடையாது. சில கேள்விகள் எங்கோ எப்போதோ கேள்வி பட்டவையாக இருக்கும், நான் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாகவும் இதை பார்க்கிறேன். உதாரணத்திற்கு பஸ் ஆல்ட்ரின் குறித்த கேள்வி. அப்போலோ 13 என்பது வெற்றிபெறாத ஒரு நிலவுப் பயணம். அப்போலோ 13 என்ற பெயரில் வெளிவந்த திரைப்படத்தை மிகவும் விரும்பி ரசித்துப் பார்த்தேன். அப்பயணத்தில் பங்கேற்ற விமானிகளின் பெயர் அனைத்தும் நெடுநாட்கள் வரை நினைவில் இருந்தது. ஏனோ அப்போலோ 11 பயணத்தில் பங்கேற்ற பஸ் ஆல்ட்ரினின் பெயரை அப்போலோ 13 பயணத்துடன் தொடர்பு படுத்திவிட்டேன். ஒவ்வொரு முறையும் குவிஸ் பதிவினன வலையேற்றுவதற்கு முன்பும் சில மணி நேரங்கள் செலவிட்டு விபரங்களைச் சரி பார்ப்பேன். இம்முறை அதை ஸ்ட்ரிக்டாகச் செய்யாத காரணத்தால் கேள்வியில் பிழைகள் புகுந்து விட்டதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனிமேல இன்னும் கொஞ்சம் கவனமா இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
அப்படியே இன்னொரு விஷயம் - பெங்களூரில் என்னுடைய ப்ராஜெக்ட் முடிவுக்கு வந்துவிட்டது. 1 ஜனவரி 2009 முதல் வேலை நிமித்தமாகவும் அடியேன் சென்னைவாசி என்பது நியூஸ்.