"கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு, பாப்பாவைப் பாத்துக்கங்க" என்று தங்கமணி சொல்லிவிட்டுப் போன ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக, நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகள் அழுகையை அலாரம் வைத்துத் தொடக்கினாள். வயிறு பசிக்கும் போதோ, அல்லது உச்சா போய் நேப்பி ஈரமாகி தூக்கம் கலையும் போதோ தான் அமைதியாக இருக்கும் குழந்தைகள் அழத் தொடங்கும் என்பது, தந்தை ஆன கடந்த மூன்று மாதங்களில் நான் கற்றுக் கொண்ட பாலபாடம். இது போக இன்னொரு கதையும் கேள்வி பட்டேன். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கனவில் பிள்ளையார் வருவாராம். "உனக்கு அம்மா வேணுமா, அப்பா வேணுமா"ன்னு கேப்பாராம். அம்மாவிடம் பால் குடிப்பதனால் குழந்தைகள் "அம்மா வேணும்" என்று சொல்லுங்களாம். அதனால பிள்ளையார் நறுக்கென்று குழந்தையின் தொப்புளில் கிள்ளி விட்டுப் போய்விடுவாராம். அதனாலும் குழந்தைகள் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு, பயந்து போய் அழத் தொடங்குமாம். இது கேக்கும் போதே சிரிப்பை வரவழைத்த கதை. ஏனென்றால் பிள்ளையார் தான் இருப்பதிலேயே ஃப்ரெண்ட்லியான கடவுள். அவர் பிறந்த குழந்தைகளின் தொப்புளில் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிடுவார் என்று சொல்வதை சீரணிப்பது சற்று கடினமாகத் தான் இருக்கு:) அது போக என்னை வியக்க வைக்கும் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கு, அது எப்படித் தான் அம்மா தன்னருகில் இல்லை என்பது அவ்வளவு துல்லியமாகத் தெரியவருகிறதோ? என்பது தான். அதுவும் பல சமயங்களில், தங்கமணி சாப்பிடப் போகும் நேரத்தில் தான் அழுகை பலமாகும். விபரம் தெரிந்த சிலர்(பெரியவங்க தான்...) "அம்மாவை இந்த மாதிரி குழந்தைங்க சோதிக்கும். என்னை விட உனக்கு சாப்பாடு தான் முக்கியமான்னு சரியா அம்மா சாப்பிடப் போகும் போது தான் அழ ஆரம்பிக்கும்" என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.
மேல் சொல்லிய இந்த காரணங்களுள் ஒன்றினால் தான் மகள் அழுகிறாள் போலிருக்கிறது என்று எனக்கு பதில் தெரிந்த FAQக்களைப் பரிசோதித்து விட்டு troubleshooting நடவடிக்கைகளில் இறங்கினேன். "குழந்தை அழுவுது. சீக்கிரம் வந்து கொஞ்சம் என்னான்னு பாரு" என்று சத்தமாகக் கத்துவது தான் என்னிடம் இருந்த FAQக்களுக்குச் சொல்லப்பட்டிருந்த முதல் விடை. சே! சே! நாமெல்லாம் "road not taken"இல் பயணப்படும் ஆட்கள் இல்லையா? என்ற எண்ணம் சுலபமான முதல் விடையைத் தெரிவு செய்வதிலிருந்து என்னை தடுத்தது. பசி இல்லை, நேப்பி ஈரம் ஆகவில்லை என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு, இது பிள்ளையாருடைய வேலை தான் என்று முடிவுக்கு வந்தவனாய் குழந்தையைச் சமாதானம் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். நிற்க. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதனை அடி முதல் நுனி வரை நம்புவதால் அழும் குழந்தையை ஏன் சமாதானப் படுத்த வேண்டும் என்று கேள்வி கேட்டு என் மகளின் பாட்டியிடம்(எங்க அம்மா தான்) வாங்கிக் கட்டிக் கொண்டு ஆமாமாம் அழும் குழந்தையைச் சமாதானப் படுத்தத் தான் வேண்டும் என்று உணர்ந்து கொண்ட கதையையும் இந்நேரத்தில் சொல்லிவிடுகிறேன். "குழந்தைங்கன்னா அப்படித் தான் இருக்கும். தூக்கம் கலைஞ்சிடுச்சுன்னா அழத் தான் செய்யும். கொஞ்சி கிஞ்சி பேசித் தான் சமாதானப் படுத்தனும்" என்று அம்மா சொல்லியதற்கு "நானும் உங்களுக்குக் குழந்தை தானே? நான் தூக்கத்துலேருந்து எழுந்தா அழவாச் செய்யறேன்"னு எகத்தாளம் பேசினேன். "...இப்ப நாலு கழுதை வயசானதால அழாம இருக்கே...அர்ச்சனா வயசுல நீ எல்லாம் என்ன பாடுபடுத்தியிருக்கே தெரியுமா? என்ன காரணம்னே தெரியாம ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாம் எழுந்து அழுவே"அப்படின்னாங்க. "நான் குழந்தையா இருந்த போதும் இப்படித் தான் கொஞ்சி கிஞ்சி சமாதானப் படுத்துவீங்களா?" என்று கேட்டதற்கு "உஹும்...ஒரு கரண்டி எடுத்து மண்டையிலேயே மடார்னு போடுவேன். வேணா மண்டையைக் கொஞ்சம் தடவிப் பாரு. ஒடுக்கு விழுந்துருக்கும் பாரு" என்று சொல்லப் பட்டதைக் கேட்டதும் கைப்புள்ள F/o.அர்ச்சனா கப்சிப்.
சரி, குழந்தையைச் சமாதானப் படுத்துவது என்று முடிவாகிவிட்டது. அதை செயல்படுத்தும் முறைகள் என்று பார்த்தோமேயானால் தொட்டிலை வேகமாக ஆட்டிவிட்டு குழந்தையைத் தூங்க வைக்க முயல்வது, அதற்கு குழந்தை சமாதானம் ஆகவில்லை எனில் கிலுகிலுப்பையை ஆட்டிக் காட்டுவது, அதற்கும் குழந்தை டிமிக்கி கொடுத்துவிடுகிறது என்றால் தமிழ் உயிர்மெய் எழுத்துக்களான 'ரி' 'ர' 'ரோ' போன்ற எழுத்துகளை பசு மாட்டினைக் குறிக்கும் உயிரெழுத்துடன் சேர்த்து ஒரு ஒலி எழுப்ப வேண்டும். அந்த ஒலியானது பசுமாட்டின் குரலை ஒத்ததாக இல்லாமை சாலச் சிறந்தது, அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அதன் பலன் எதிர்மறையானதாக இருக்கும். இம்முறைகளைத் தனித் தனியாகவோ, அல்லது ஒன்றன் பின் ஒன்றனாகவோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ கையாளுவதனால் குழந்தை அழுகையை நிறுத்தி சமாதானம் ஆகிவிடும் என்று கத்துக்குட்டி babysitterக்கும் தெரியுமென்கிறது அகநானூறு. ஆனால் என் மகளோ, இந்த முறைகளில் எதற்கும் சம்மதிக்காமல் அழுகையைத் தொடர்ந்தாள். அவளுடைய அழுகையை நிறுத்த சினிமா பாணியில் எதாவது ஒரு தாலாட்டு பாடல் பாடித் தூங்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன். அச்சமயத்தில் சட்டென்று நினைவுக்கு வந்த தாலாட்டுப் பாடல்கள் இவை.
1. "தண்ணீர் தண்ணீர்" படத்தில் பி.சுசீலா அவர்கள் குரலில் "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" என்று திரையில் சரிதா பாடுவதாக வந்த பாடல்.
2. "சித்தி" என்ற படத்தில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா அவர்கள் பாடிய "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்று திரையில் பத்மினி அவர்கள் பாடுவதாக வரும் பாடல்.
3. "இணைந்த கைகள்" படத்தில் மனோஜ்-கியான் இசையில் திரையில் அருண் பாண்டியனும் ராம்கியும் பாடுவதாக வந்த "அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு" என்ற பாடல்.
4. "சின்னத்தம்பி" படத்தில் மனோ பாடிய "தூளியிலே ஆடுகின்ற வானத்து மின்விளக்கே" என்று திரையில் பிரபு பாடுவதாக வரும் பாடல்.
5. "முந்தானை முடிச்சு" படத்தில் பாக்யராஜ் பாடுவதாக வரும் "ஆரிராரிரோ ஆரிராரிரோ" என்ற பாடல்.
6. "என் தங்கை கல்யாணி" படத்தில் கரடி சார் தானே இசையமைத்து திரையிலும் பாடுவதாக வரும் "தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு" என்ற பாடல்.
ஆனா பாருங்க. இதுல எந்த பாட்டுமே நம்ம சிச்சுவேசனுக்குச் சரியா வரலை. அதாவது ஒரு அப்பா தன் மூன்று மாத மகளைச் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிற மாதிரி ஒரு பாட்டு. எனக்குத் தெரிஞ்சு இந்த சிச்சுவேசனுக்கு தமிழ் படங்கள்ல ஒரு பாட்டு கூட இல்லைன்னே நெனக்கிறேன். நல்ல சிச்சுவேசன் தான். ஆனா எந்த இயக்குனரும் இதை இது வரைக்கும் பயன்படுத்திக்கிட்டதாத் தெரியலை. சரி இப்போ...மேலே இருக்கற பாட்டுகளையே ஒன்னொன்னா பாப்போம். "கண்ணான பூமகனே"ங்கிற தண்ணீர் தண்ணீர் படப்பாட்டு வறட்சியில வாடற ஒரு கிராமத்துல இருக்கற ஒரு ஏழைத் தாய் தன் கஷ்டங்களையும் தாலாட்டுப் பாட்டுலேயே தன் மகனுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" அப்படீங்கற சித்தி படத்துப் பாட்டு பெண்ணாய்ப் பொறக்கறதுனால அனுபவிக்கிற கஷ்டங்களை ஒரு தாய்(சித்தி) தன் மகளுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. இரயிலில் போற ரெண்டு நண்பர்கள் இரயில் பெட்டியில் பாக்கற ஒரு குழந்தைக்காகப் பாடற பாட்டு தான் இணைந்த கைகள் படத்து "அந்திநேரத் தென்றல் காற்று" பாட்டு. குரல் நல்லாருக்கற ஒரு பேக்கு பாடற பாட்டு தான் சின்னத்தம்பி படத்து "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே". ஒரு சோகமான சிச்சுவேசன்ல ஒரு அப்பா தன் மகனுக்காகப் பாடற பாட்டு முந்தானை முடிச்சு படத்துல வர்ற "ஆரிராரிரோ ஆரிராரிரோ" பாட்டு. தன் தங்கச்சி மகனைத் தோள்ல போட்டுக்கிட்டு கரடி மாமா பாடற பாட்டு "தோள் மீது தாலாட்ட"ன்ற என் தங்கை கல்யாணி படத்துப் பாட்டு.
இப்போ நீங்களே சொல்லுங்க...மேல இருக்கற பாட்டுகள்ல எதாச்சும் ஒரு அப்பா தன் மகளுக்குப் பாடற சிச்சுவேசன்ல இருக்கா? இருந்தாலும் பாட்டு பாடணும்ங்கிறது முடிவானதுனால மேலே இருக்கற பாட்டுகள்ல, கவிஞர் வைரமுத்து எழுதி எம்.எஸ்.வி இசையமைச்ச எனக்கு புடிச்ச பாட்டான "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" படத்து பாட்டைப் பாடுனேன். அது மகனுக்காக ஒரு அம்மா பாடுற பாட்டுங்கிறதால ஒரு மகளுக்காக ஒரு அப்பா பாடற மாதிரி இருக்கற நம்ம சிச்சுவேசனுக்குத் தகுந்த மாதிரி
"கண்ணான பூமகளே கண்ணுறங்கு சூரியனே
அப்பா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை,
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கரை சர்க்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்"
அப்படின்னு லைட்டா மாத்தி பாடுனேன். பாடும் போது எனக்கே காமெடியாத் தான் இருந்துச்சு...ஆனா ஆச்சரியம் பாருங்க அது வரைக்கும் அழுதுட்டு இருந்த என் பொண்ணு அழுகையை நிறுத்திட்டு அமைதியாத் தூங்க ஆரம்பிச்சுட்டா. கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.
ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எப்போதும் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை வருவது வழக்கம். ஆனால் இவ்வாரம் வியாழக்கிழமை காலை பெங்களூரிலிருந்து கிளம்பி அன்று மாலையே சென்னை வந்து சேர்ந்து விட்டதால் மகளுக்காகத் தாலாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வியாழன் அன்றே வந்ததற்கான காரணம் - ஆயாவின் பிரிவு. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராணுவத்தில் பணியாற்றும் சித்தியுடன் தங்கியிருந்த ஆயா(அம்மாவின் அம்மா) 20ஆம் தேதி காலை எங்களை விட்டுப் பிரிந்தார். அம்மாவும், அப்பாவும் இறுதிச் சடங்குகளுக்காக விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார்கள். இந்த கதையில் கூட அவங்களைப் பத்திச் சொல்லிருக்கேன். ஏனோ நமக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட பிரிவை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியறதில்லை. ஆயா இறந்த செய்தியைக் கேட்டு பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்னை வந்த போதும், ஏன் அதற்கு பிறகும் கூட ரொம்ப நேரத்திற்கும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டும் தான் இவ்வாறு தோன்றுகிறதா என்ற சந்தேகமும் பல சமயங்களில் தோன்றும். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் "எல்லா காரியங்களும் முடிந்து விட்டது" என்று அம்மா தொலைபேசிய போது தான், நான் பிறந்ததிலிருந்து அறிந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை இனிமேல் பார்க்க போவதில்லை என்ற உண்மை உரைத்தது. தள்ளாத வயதிலும், தன் கொள்ளுப்பேத்தியான என் மகளைப் பார்ப்பதற்காக அக்டோபரில் சென்னை வந்திருந்ததையும், அது தான் நான் அவர்களை கடைசியாகப் பார்த்த சந்தர்ப்பம் என்றும் நினைத்த போது மனம் கனத்தது, கண்கள் பனித்தன.
Saturday, November 22, 2008
Well...
Monday, November 10, 2008
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
இன்னைக்கு காலையில அலுவலகத்துக்குப் போற வழியில ஒரு பாட்டைக் கேட்டேங்க. ரொம்ப வித்தியாசமா இருந்தது. கிராமத்து மணம் கமழும் இந்தப் பாடலோட வரிகள் ரொம்ப இயல்பா நல்லாருந்தது. அப்புறமா அலுவலகம் வந்து இணையத்துல தேடுனப்போ அந்தப் பாடல் "தவமாய் தவமாயிருந்து" படப்பாடல்னு தெரிய வந்தது. பாடலோட முதல் பாதியில வாத்தியங்கள் அதிகமா இல்லாம பாடகர் ஏத்த இறக்கத்தோட உணர்ச்சியோட பாடறது ரொம்ப நல்லாருக்கும். பாடலோட ரெண்டாவது பாதியில உருமி மேளம் பின்னிப் பெடலெடுத்துருக்கும். இந்தப் படம் 2005லேயே வந்துட்டாலும், நான் இப்பாடலை இன்னிக்குத் தான் முதல் முறையாக் கேட்டேன். இந்தப் படத்துல வர்ற "ஒரே ஒரு ஊருல ஒரே ஒரு அம்மா அப்பா" அளவுக்கு இந்த "ஆக்காட்டி" பாட்டைப் பத்தி கேள்வி பட்டதில்லை. அதனால உங்களோட பகிர்ந்துக்கலாம்னு இந்தப் பாட்டை இங்கே கொண்டாந்துருக்கேன்.
படம் : தவமாய் தவமிருந்து(2005)
பாடல் : சா.பெருமாள்
இசை : சபேஷ் - முரளி
பாடியது : ஜெயமூர்த்தி
அந்த உருண்ட மலை ஓரத்துல...
உருண்ட மலை ஓரத்துல
உருண்ட மலை ஓரத்துல
உளுந்து காயப் போட்டிருந்தேன்...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே...
அந்த உளுந்தைக் கூட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாளச் சீமையிலே இன்னைக்கு
உருமிச்சத்தம் தான் கேட்டதென்ன...
ஏ...ஆக்காட்டி ஆக்காட்டி
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே?
எங்கெங்கே முட்டையிட்டே...?
நாங் கல்லத் தொளைச்சி
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்
கருமலையில் முட்டையிட்டேன்...
நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
ஐயா நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூனு குஞ்சு
அந்த மூனு குஞ்சுல
மூத்த குஞ்சிக்கெரை தேடி
மூனு மலை சுத்தி வந்தேன்
நடு குஞ்சிக்கெரை தேடி
நாலு மல சுத்தி வந்தேன்
இளைய குஞ்சிக்கெரை
தேடப் போகையிலே...போகையிலே...போகையிலே...
என்னை கானாங்குறத்தி மகன்,
ஐயா என்ன கானா...கானா...ங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
என்னை கானாங்
குறத்திமயன் கண்டிருந்து கண்ணி போட்டான்
எங் காலு ரெண்டும் கண்ணிக்குள்ளே
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
றெக்க ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா
நான் அழுத கண்ணீரு
ஆறாப் பெருகி ஆனை குளிப்பாட்ட
குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான்... பெத்த... மக்கா...
நான் பெத்த மக்கா
உங்கள பாதியில விட்டு
நான் இப்போ பரலோகம்
போறேனே...போறேனே...போறேனே...
(வேகமாய்)
ஏ...ஏழைக்குருவியே நீ ஏங்கி அழக் கூடாது
கத்துங்குருவியே நீ கதறி அழக் கூடாது (2)
வலை என்ன பெருங்கனமா?
அதையறுக்க வழிகளும் இருக்குதம்மா (2)
சின்னக்குருவியே நீ சிணுங்கி அழக் கூடாது
நொய்க்குருவியே நீ நொந்து அழக் கூடாது (2)
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
அலகெனும் அரிவாளால் இந்த வலையினை அறுத்தெறிவோம்
வலியும் வேதனையும் வலையோடு போயிடுச்சி
வாழ்க்க என்னான்னு போராடி தெரிஞ்சிடுச்சி (2)
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
வாங்க பறந்திடுவோம் எங்குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம்
Get Your Own Hindi Songs Player at Music Plugin
நிற்க. மேலே பாட்டோட க்ரெடிட்ஸ் போட்டு இருக்கேன் இல்ல. ஆமா அதுக்கென்னங்கிறீங்களா? அது தான் பிரச்சனையே? இந்தப் பாட்டு அந்தப் படத்துல வெளிவரலை. காரணம் கோர்ட் தடை. இருபது வருஷங்களுக்கு முன்னாடி நான் இயற்றி, இசையமைச்சு பாடுன பாட்டு இதுன்னு புதுவை பல்கலைக்கழகப் பேராசிரியர் குணசேகரன் அப்படீங்கறவரு கோர்ட் தடை உத்தரவு வாங்குனதால இந்தப் பாட்டு அந்தப் படத்துல வரலை. அதை பத்தி இங்கே படிக்கலாம். ஒரு அற்புதமான பாட்டுக்கு அதுக்கு தகுந்த அங்கீகாரம் கொடுக்காத காரணத்தினால திரைப்படத்திலிருந்து தடை செய்யப்பட்ட பாடல் இது என்பது இந்தப் பாடலோட (dubious)சிறப்பு. என்னை பொறுத்த வரை இது ஒரு நல்ல தன்னம்பிக்கை ஊட்டும் பாடல், கிட்டத்தட்ட ஊமைவிழிகள் படத்துல வர்ற "தோல்வி நிலையென நினைத்தால்" பாட்டை மாதிரி. உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.
Friday, November 07, 2008
சினிமா சினிமா...தாமதத்துக்கு எச்சூஸ் மீ
பிட்டுக்காக மட்டும் தான் பதிவெழுதறேங்கிறேன்ற உண்மையை நாலு பேரு முன்னாடி போட்டு உடைச்சதோட இல்லாம சினிமா தொடர் வெளாட்டையும் தொடரணும்னு சொல்லி கொக்கி போட்டு வுட்டாரு நம்ம கொத்ஸ். ஏதோ நாம தான் தமிழ் சினிமாவவக் காப்பாத்த வந்த ஆபத்பாந்தவன்ங்கிற ரேஞ்சுக்கு சில கேள்விகள் இருந்தாலும், தொடரை லூஸ்ல விட்டுட்டா கொத்ஸ் மேலும் என் கதாபாத்திரத்தை கொலை செய்வாருங்கிறதாலே(அதாங்க character assassination)... அதை தடுத்து நிறுத்தவே இந்தப் பதிவு...ஹி...ஹி. வழக்கம் போல கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தமில்லாம் சுத்தப்படுகிற சில எக்ஸ்ட்ரா ரீல்களைப் பார்த்து கடுப்பாகி ப்ரவுசரில் ப்ளேடு எல்லாம் போடப்பிடாது...சரியா?
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஜப்பானில் கல்யாணராமன், சிந்து பைரவி மற்றும் இன்னும் எதோ ஒரு படம் - இம்மூன்று படங்களையும் ஒரு வாரத்திற்குள் அப்பா, அம்மாவுடன் சென்னை உட்லேண்ட்ஸ் மற்றும் லியோ(இப்போது ராஜ்) திரையரங்குகளில் போய் பார்த்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அதற்கு முன்னர் பார்த்தது எதுவும் நினைவில் இல்லை. ஜப்பானில் கல்யாணராமன் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது. சிந்து பைரவி பார்க்கும் போது பாதியிலேயே தூங்கிவிட்டேன். என்னை பொறுத்தவரை சினிமா பார்ப்பதை விட, சினிமா பார்க்கும் அந்த அனுபவம் பல நாட்கள் நினைவில் நிற்கும். உதாரணத்திற்கு கமலின் "நாயகன்" சென்னை ஆனந்த் தியேட்டரில் பார்த்தோம். அச்சமயம் மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ரெயின்கோட் எல்லாம் எடுத்து சென்றிருந்தோம். ஆனால் தலைக்குத் தொப்பி எடுத்துச் செல்ல மறந்துவிட்டதால், ரெயின்கோட் அணிந்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரைத் தலையில் போட்டுக் கொண்டு டி.வி.எஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து 25பி பஸ் பிடித்து திருவல்லிக்கேணி திரும்பியது நினைவில் இருக்கிறது. படங்களைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பார்ப்பதனால் சிறுவயதில் படம் பார்த்த தேதிகள் கூட சில நினைவில் உள்ளன. அபூர்வ சகோதரர்கள் - 15.07.1990(தேவி பாரடைஸ்), தேவர் மகன் - 31.12.1994(தேவி தியேட்டர்). மாயாஜாலில் தம்பியுடன் பிதாமகன் பார்த்த போது நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் க்ரிஸ் கெயின்ஸ், ஸ்டீபன் ஃப்ளெமிங் இருவரையும் நேரில் பார்த்தோம். என்னுடைய தலை தீபாவளி சமயத்தில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தைத் தம்பதி சமேதராகப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அப்படத்தில் டேனியல் பாலாஜியின் அண்ணனாக நடித்திருந்த கிஷோர் என்ற நடிகரை அடையாளம் கண்டுகொண்டு "நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க"ன்னு நான் பாராட்டியதும், என்னை பார்த்து நாலு பேரு அவரைச் சூழ்ந்து கொண்டு பாராட்டியதும் நினைவில் இருக்கிறது.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். தங்கமணியுடன் பெங்கையில்(சிங்கை, செங்கை, நாகை வரிசையில்...ஹி...ஹி) ஏற்கனவே ஒருமுறை பார்த்திருந்தாலும், சென்னை மாயாஜாலில் குடும்பத்துடன் கால் டேக்சி பிடித்துச் சென்று பார்த்த படம். படம் பார்த்து முடித்து விட்டு "இது ஒரு படம்னு வண்டிச் சத்தம் குடுத்து என்னை வேலை மெனக்கெட்டு கூட்டிட்டு வந்திருக்கே"ன்னு எங்க நைனா கிட்ட பாட்டு வாங்கியது வேற கதை :(
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
எனது கல்லூரி நண்பன் செந்தில்குமாரின் வீட்டிலுள்ள ஹோம் தியேட்டரில் பார்த்த அபூர்வ ராகங்கள். பாலச்சந்தர் ஒரு ஜீனியஸ் என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் அவரின் பெரும்பாலான படங்கள் எனக்கு புரிந்ததில்லை. உதாரணமாக அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி, கல்கி. ஒரு கதை ஒன்னு ஞாபகத்துக்கு வருது. ஒரு ராஜா இருந்தாராம் அவருக்கு இது வரை யாருமே அணியாத ஆடை அணிய வேண்டும் என்று ஆசை வந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்டு நாலு நெசவாளர்கள் ராஜாவின் செல்வத்தை எல்லாம் சுரண்டி ஒரு ஆடை நெய்தார்களாம். அது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொன்னார்களாம். ராஜாவும் அந்த ஆடையை அணிந்து கொண்டு ஊர்வலம் சென்றாராம். காண்பவர்கள் எல்லாம் ஆடை தெரியவில்லை என்று சொன்னால் நாம் முட்டாள்கள் ஆகிவிடுவோம் என்றெண்ணி ஆடையைப் பற்றி ஆஹா ஓஹோவென்று புகழ்ந்தார்களாம். அப்போ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சின்னப்பையன் சொன்னானாம் "ஐயயோ! ராஜா அம்மணமா வர்றாரு டோய்". பாலச்சந்தர் படங்களைப் பார்த்து பாராட்டுபவர்களை நான் கேலி செய்வதாக தயவு செய்து தவறாக எண்ணிவிட வேண்டாம். அவருடைய சில படங்களைப் பார்த்து அது புரியாமல் சூப்பரா இருக்கேனு சொல்லி என்னை நானே ஏமாத்திக் கொண்டு அந்த ராஜாவுடைய நிலைமை எனக்கு நாளை வந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்திலே தான் உண்மையைச் சொல்கிறேன்... ஏனோ எனக்கு அவர் அபூர்வ ராகங்கள் மூலமாகவும், சிந்து பைரவி மூலமாகவும் என்ன சொல்ல வருகிறார் என்று இதுவரை புரிந்ததில்லை. தெரிஞ்சுக்க உண்மையிலேயே மிக மிக ஆர்வமா இருக்கேன். என் ஃபிரெண்டு என்ன சொன்னான் என்றால் அப்படம் ஒரு விதமான Dark Humour என்று, சமூகத்தில் இருக்கும் போலித்தனங்களை நையாண்டி செய்திருக்கிறார் என்று சொன்னான். மிக மிக சீரியஸாக கேட்கிறேன்...அபூர்வ ராகங்கள் மூலமாக கே.பி. என்ன சொல்ல வந்திருக்கிறார் என யாராச்சும் எனக்கு கொஞ்சம் விம் போட்டு விளக்குங்க.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மிகவும் தாக்கியது அப்படின்னு நிரந்தரமா எதுவுமே கெடையாது. இரவு காட்சி தேவர் மகன் படம் பாத்து விட்டுத் திரும்பும் போது ஒரு ரெண்டு தலையையாச்சும் சீவனும் போல இருந்துச்சு. ஒவ்வொரு முறை மகாநதி பாக்கறப்ப எல்லாம் ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா ஆகியிருக்கேன். அன்பே சிவம் ஏன் சரியா ஓடலைங்கிறது இன்ன வரைக்கும் பிடிபட மறுக்குது(அதே மாதிரி சின்னத்தம்பி, ஜெயம் எல்லாம் எப்படி கூரையைப் பிச்சிக்கிட்டு ஓடுச்சுன்னு நெனக்கும் போது மண்டை காயுது) கார்த்திக் நடித்த அரிச்சந்திரா வந்த போது நான் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த நகைச்சுவை படம் இது தான் என்று அப்போது தோன்றியது. தண்ணீர் பம்பைப் பிடுங்கி வில்லனை ரஜினி அடிக்கும் காட்சி ஏனோ எனக்கு பாட்சா படத்திலேயே மிகவும் பிடித்தது. அது வந்த காலத்தில் பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை பொறுத்த வரை படம் பார்த்து முடித்த பின்னரும் அதை பற்றி ஒருமுறையாவது நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பகிர்ந்து கொள்ளச் செய்யும் எல்லா சினிமாக்களுமே என்னை தாக்கிய சினிமாக்கள் தான் என்று கொள்ள வேண்டும்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1992ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணாமலை படத்துல ரஜினி அரசியல்வாதிகளைத் தாக்கிப் பேசிருக்காருன்னு, படத்துக்குக் கொஞ்ச நாள் தடை விதிச்சதும், அதுக்கப்புறம் படம் தடைகளைத் தாண்டி வெளிவந்து நல்லா ஓடுனதும், இந்தப் படத்தை எழும்பூர் ஆல்பட் தியேட்டர்ல பாத்ததும் ஞாபகத்துக்கு வருது. அரசியல்வாதிகளைத் தாக்கிப் பேசிருக்காருங்கன்னு ரெகுலரான ஒரு மசாலா படத்தை வச்சி அரசியல் பண்ணி பயங்கரமா ஓட வச்சதும் ஞாபகத்துக்கு வருது. இது என்னை தாக்குன அரசியல் சம்பவம் எல்லாம் கெடையாது...எதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்.
மறைந்த திரு.ரிச்சர்ட் மதுரம் அவர்கள் நடித்த 'காமராஜர்' திரைப்படத்துல அப்போ முதல்வரா இருக்கற காமராஜர், தன்னுடைய உதவியாளர் கிட்ட பேசற மாதிரி ஒரு காட்சி வரும். "அசைவம் சாப்பிடணும் போல இருக்குய்யா. ரெண்டு முட்டை அவிச்சி கொண்டா"ம்பாரு காமராஜர். இன்னொரு காட்சியில "வீட்டுல வெயில் ரொம்ப அதிகமா இருக்குப்பா. புழுக்கம் தாங்கலை. ஒரு டேபிள் ஃபேன் இருந்தா நல்லாருக்கும்"னு சொல்ற தன்னோட தாய்கிட்ட "என்னோட சம்பளத்துல இப்ப அதெல்லாம் என்னால முடியாது. அப்புறம் பாக்கலாம்"அப்படீம்பாரு. முதல்வர் பதவியில இருக்கற ஒருத்தர் அசைவம் சாப்பிடனும்னு நெனச்சி அவிச்ச முட்டையைச் சாப்பிடறதும், உதவி கேக்கற தன்னைப் பெத்த தாய்க்கே அப்புறம் பாக்கலாம்னு சொல்ற நிலையில வாழ்ந்தாருங்கிறதையும், வசதியில்லாத போதும் நேர்மையா வாழ்ந்ததை நெனைக்கும் போதும் உண்மையிலேயே ஆச்சரியமாயிருக்கு.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சின்ன வயசுலே முப்பரிமாணத்துல பாத்த மை டியர் குட்டிச்சாத்தான் படம் கொடுத்த பிரமிப்பை மாதிரி வேறு ஒரு எந்த திரைப்படமும் கொடுத்ததில்லை. குட்டிச்சாத்தான் பூ கொடுக்கறது நம்ம முகத்து கிட்ட வர்றதை பாத்து சந்தோஷப்பட்டதும், மண்டை ஓடு தானாக எம்பி ஓடுவது போன்ற காட்சியைக் கண்டு பயந்ததும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும் இன்னும் நினைவில் நிற்கின்றது.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்டிப்பா உண்டு. அதை விட வேற என்ன வேலை? குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், வாரமலர் பத்திரிகைகள்னு இல்லாம Indiaglitz.com, Behindwoods.com போன்ற வலைத்தளங்கள்னு இல்லாம வலைப்பூக்களில் வரும் மொக்கைப் பட விமர்சனங்கள்னு இல்லாம எல்லாத்தையும் வாசிக்கிறது தான்.
7.தமிழ்ச்சினிமா இசை?
ராஜா. சினிமா இசைங்கிறதை மீறி, இசை மூலமாகும் வெளிப்படும் உணர்வுகளோட என்னை அடையாளங் கண்டுகொள்ளும்படியதாக நான் உணர்ந்த இசை ராஜாவினுடையது மட்டுமே. ஆனாலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையையும் ரசிப்பதுண்டு. ஹாலிவுட்டைப் பொறுத்தவரை இந்திய திரைப்படங்கள் "Musicals" எனும் வகையில்(genre) அடக்கம். எனக்கு ஏனோ நம் படங்கள் மியூசிக்கல்களாக இருப்பது தான் பிடிக்கிறது.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தாக்கறதை மட்டும் எந்தவொரு கேள்வியிலயும் விடவே இல்லை. தற்காலத்தில், வேறு இந்திய மொழி படங்கள்ன்னா பெரும்பாலும் இந்திப் படங்கள் தான். தில்லி தூர்தர்ஷன்ல ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30மணிக்கு வந்து கொண்டிருந்த படங்களில் மராட்டி, மலையாளம், பெங்காலி என அனைத்து மொழி படங்களையும் பார்த்திருக்கிறேன். சொல்லிக்கிற மாதிரின்னு பாத்தா ஸ்மிதா பாட்டில் தேன் எடுக்கற மலைவாசிப் பெண்ணா நடிச்ச "ஜைத் ரே ஜைத்" அப்படீங்கற மராட்டி மொழிப் படம் நினைவிலிருக்கு. மலையாளத்துல பாத்த "பஞ்சவடி பாலம்" அப்படிங்கற படம் ஒரு அருமையான அரசியல் நையாண்டி(satire). மம்முட்டியின் "ஒரு வடக்கன் வீரகதா", மோகன்லாலின் "ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா", நெடுமுடி வேணுவின் "ஸ்வாதி திருநாள்" ஆகிய படங்கள் நினைவிலிருக்கு. இந்தியில சொல்லனும்னா பணத்துக்காக தன் மகனையே தெரியாமல் கொலை செய்யும் ஒரு ராஜஸ்தானிய தம்பதியினரைப் பற்றிய"பரிணதி" அப்படீங்கற படமும் போர்ச்சுகலிடமிருந்து கோவா விடுதலை பெறும் நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட ஷாம் பெனிகலின் "த்ரிகால்" அப்படீங்கற படங்களையும் சொல்லலாம். உலக மொழி சினிமா இதுவரை ஒன்னு கூட முழுசா எதையும் பாத்ததில்லை(ஹாலிவுட்டில் தயாராகும் ஆங்கிலப் படங்களைத் தவிர்த்து).
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சின்னப்பையனா இருக்கும் போது இரவு சாப்பிடாம அடம்பிடிச்சா, வீட்டுக்கு வர அப்பாவின் நண்பர்களை, இந்த மாமா தான் ரஜினிகாந்த், இந்த மாமா தான் பாக்கியராஜ், இந்த மாமா தான் கமல்ஹாசன்னு ஏமாத்தி எங்கப்பாவும் எங்கம்மாவும் எனக்கு ஏமாத்தி சோறு ஊட்டுனது நினைவுக்கு வருது. அந்த வகையிலே ரஜினி, கமல், பாக்கியராஜ் எல்லாம் எங்க வீட்டுக்கே வந்து நான் சோறு தின்ன உதவி செஞ்சிருக்காங்க. நேரடித் தொடர்புன்னு பாத்தா இது மட்டும் தான். மீண்டும் செய்வீர்களாவா? எனக்கே குழந்தை இருக்கும் போது ரஜினி, கமல், பாக்கியராஜ் எல்லாம் வந்து எனக்கு சோறு ஊட்ட வழி பண்ணாங்கன்னா, என் பொண்ணே என்னை சும்மா விடமாட்டா. தமிழ்ச் சினிமா மேம்பட இது உதவுமான்னு கேட்டா என்ன சொல்லறது? அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்திஷ் மாமா வந்துருக்காங்க, இளைய தளபதி விஜய் மாமா வந்துருக்காங்க, புரட்சித் தளபதி விஷால் மாமா வந்துருக்காங்கன்னு ஏமாத்தி என் பொண்ணுக்கு சோறு ஊட்ட தமிழ்ச் சினிமா உதவும்னு வேணா சொல்லலாம்.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்ல கதையும், பொழுதுபோக்கு அம்சமும் கொண்ட படங்களை எடுக்கத் திறமையான இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரசிகன் என்பவன் ஒரு கேனைப்பய, அவனுக்கு இவ்வளவு கொடுத்தால் போதுமானதுன்னுனு குறைத்து மதிப்பிட்டு படம் எடுப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்றாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நல்லா இருக்குன்னு தான் நெனைக்கிறேன்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையைச் சொல்லனும்னா அப்படியொரு நிலைமையை நினைச்சு பார்க்கவே கஷ்டமாயிருக்கு. இப்படியொரு நிகழ்வுனால எந்த ஒரு மாற்றமும் என் வாழ்வில் இருக்காது என்று சொன்னால் அது பொய் சொல்வதைப் போன்றது தான் என்பது என் தாழ்மையான எண்ணம். ஏன்னா நாம பொறந்ததுலேருந்து சினிமாங்கிறது நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சினிமா நடிகர்கள் கடைதிறப்பு விழாவுக்கு வருகை தந்தால் கூட்டம் அதற்காகவே இன்னமும் கூடத் தான் செய்கிறது, ஒரு நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று தலைப்பு செய்தி வெளியிடும் பத்திரிகை கூடுதலாக விற்கத் தான் செய்கிறது, தலை போகிற அவசரத்தில் சென்று கொண்டிருந்தாலும் சினிமா சுவரொட்டிகளைக் கவனிக்க இன்னமும் நம் கண்கள் தவறுவதில்லை. நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று பல்வகையான இசைவடிவங்கள் இருந்தாலும் இசை என்றாலும் சினிமா இசை தான் நம் நினைவுக்கு வருகிறது. இவ்வளவு ஏன்...ஓசியிலே எம்பி3 தரவிறக்கம் செய்யறதுன்னா கூட சினிமா பாட்டோட எம்பி3க்களைத் தான் தரவிறக்கம் செய்யறோம். நம்மள்ல எத்தனை பேரு எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டையோ இல்லை விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாட்டையோ டவுன்லோடு பண்ணறோம்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமாவுக்கும், சினிமா நடிகர்களுக்கும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் எப்போதும் ஒரு "larger than life" அந்தஸ்து இருந்தே வந்திருக்கிறது. இந்த நிலை சரி என்றோ தவறென்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்குள் "சினிமா இல்லாமை" எனும் கைய்யறு நிலை வந்தால் கண்டிப்பாகப் பாதிப்பு இருக்கும் என்பது என் எண்ணம். அப்பாதிப்பு எத்தகையது என்று என்னால் அறுதியிட இயலவில்லை. மலையாளத் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நின்று பீடி பிடிக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் இருப்பது போல, நம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மாறும் போது வேண்டுமானால் ஒரு வருஷம் தமிழ் சினிமா இல்லைன்னாலும் ஒரு பாதிப்பும் இருக்காதுன்னு வேணா சொல்லலாம்.
இச்சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் ஐவர்.
1) புரட்சி போர்வாள் தேவ்
2) புரட்சி டியூப் ரெயில் நடிகர் டுபுக்கு அண்ணாச்சி
3) புரட்சி அட்மின் ராயல் ராமசாமி
4) புரட்சி கலாய்ப்பாளர் தளபதி சிபி
5) புரட்சி புலி நாகை சிவா