இத்தனை வருச சர்வீசுல நாம செஞ்ச சாதனைகளைப் பத்தி ஆறு ஆறா எழுதச் சொல்லி 'மனதின் ஓசை' ஹமீது கூப்புட்டாக, நம்ம விவசாயி இளா கூப்புட்டாக... இப்பிடியே இன்னும் ஒரு நாலு "கூப்புட்டாக" வரிசையாப் போட்டா ரைமிங்கா படிக்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். அதுக்குன்னு பொய்யாச் சொல்ல முடியும்? இல்ல அதெல்லாம் சொல்லித் தான் நமக்குப் பழக்கமா?(சரி...சரி :) அடங்குறேன்) நம்மளப் பத்தி நாமளே தமுக்கு அடிச்சிக்கிறதுக்குத் தானே இப்பிடி ப்ளாக்கைத் தொறந்து வச்சி கல்லாவுல ஒக்காந்துருக்கோம்? அதுக்குன்னே ரெண்டு பேரு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கும் போது கசக்குமா என்ன? நம்ம பதிவுகள்ல எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்களை,, 'அவுக கூப்புட்டாக'வை சாக்கா வெச்சி இப்ப இங்கே கொண்டாந்து கொட்டறேன். கொட்டறதுக்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த மாவீரன்'மனசின் மைக்செட்' ஹமீது, எம்.ஏ.எல்.எல்.பி அவர்களே, வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் அவர்களே...ஒங்க ரெண்டு பேத்துக்கும் டேங்ஸ்பா.
மொதல்ல என்னைப் பத்தி ஆறு
1. பேரு : பேருக்கா பஞ்சம்? சென்னையில் வாழும்/வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மோகன்களின் ஒரே பட்டப்பேரான 'லூஸ் மோகன்', மேல் வீட்டு ஆண்ட்டி சூட்டிய 'மோகு', வடநாட்டில் 'வாக்கப்பட்ட' பாவத்துக்காக 'மோகன் பியாரே', ஸ்கூலில் 'மோசி', காலேஜில் 'மாம்ஸ்' அல்லது 'மோகனா', ப்ளாக்கில் கைப்புள்ள
2. ஊரு : பல நாளா வெளியூரு தான். ஆனா நாப்பது வருசத்துக்கும் மேலா சென்னையில இருந்து, செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சாலும் தோப்பனார் இன்னும் தன்னோட ஊரு சிதம்பரம்னு தான் சொல்லிக்கிறாரு.
3. படிப்பு/வேலை : எந்த கட்டைவிரலால கைநாட்டு வச்சா செல்லும்னு தெரியுற அளவுக்கு இருக்குது/ப்ளாக் படிக்கிறதுக்கு நடுவுல வேலை செய்யறதுக்கு வெளியூருல ஒக்காத்தி வச்சு பஞ்சப்படி அளக்கற ஒரு வேலையும் இருக்குது.
4. கடவுள் : இருக்காரு. நம்மோட மனசாட்சியும் கடவுளும் ஒன்னு தான் என்பது பல நாள் நம்பிக்கையா இருந்துச்சு. அதாவது இறை வழிபாடு என்பது அவசியமானது இல்ல அப்படிங்கிற மாதிரி. கொஞ்சம் பெரியவனா ஆனதும், நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தியின் தாக்கத்தினாலும் அருளினாலும் தான் நம்முடைய மனசாட்சியும் நல்வழியில் இயங்கி நமக்கு நல்வழி காட்டுகிறது, அதனால் அந்த சக்தியை(supreme power) வழிபடுதல், நம் மனசாட்சியினை(conscience) நல்வழியில் இட்டுச் செல்லவும், நாம் நல்ல செயல்களைச் செய்யவும், நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் என்ற அளவில் தற்போது உள்ளது என்னுடைய கடவுள் நம்பிக்கை.
5. கொளுகை : அவரும் இருக்காருங்க. அவங்கவங்க அவங்கவங்களோட 'சொந்த வியாபாரத்தைக்' கவனிச்சாலே எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்ங்கிறது நம்ம கொளுகை. என்னைப் போல ஒருவனும் இல்லை என நான் எண்ணுவது எவ்வாறு தவறாகாதோ அதே போல அடுத்தவன் எண்ணுவதிலும் தவறில்லை என்ற எண்ணம் எந்நாளும் என் மனதில் இருக்க வேண்டும். என்னைப் போலவே அனைத்து மனிதர்களும் இருக்க முடியாது என்பதனால் தான் பல நிறங்களிலும், உருவங்களிலும், மொழிகளிலும், மதங்களிலுமான மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை எவ்வாறு(எனது அனைத்து குறை நிறைகளுடன்)அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அதே கண்ணோட்டத்தில் அடுத்தவனையும் நான் காண முற்பட வேண்டும். முடிந்தவரை அடுத்தவனிடம் உள்ள நல்லவற்றைக் கற்பதிலும் காப்பியடிப்பதிலும் தவறொன்றுமில்லை. யாருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இல்ல, அதே சமயத்தில் அடுத்தவர் நமக்கு சொல்லும் அறிவுரையை நாம் கற்றுக் கொள்வதில்(சரியானதாக படும் பட்சத்தில்) குறைந்து விடமாட்டோம், அடுத்தவர் நம்மிடம் அறிவுரை கேட்டால், 'கேட்டால் மட்டுமே' நமக்கு சரியென தோன்றுவதைச் சொல்லுவது என்பது இன்னொரு கொளுகை.
6. கொசுறு: பலவிதமான எதிர்மறைகளால்(paradox) உருவாக்கப் பட்டவன். அசைவம் சாப்பிட்டாலும் ஆட்டையோ, கோழியையோ அறுப்பதைப் பார்க்கப் பிடிக்காதவன். உணவுக்காக ஒரு உயிர் கொலையாவதைப் பார்ப்பதைத் தவிர்க்க frozen foodஐ தேடி ஒரு சூப்பர் மார்க்கெட் போய் வாங்குவேனே ஒழிய அதை உண்பதை நிறுத்தாதவன். இவ்வாறாகப் பல paradoxகளின் கூட்டே அடியேன்.
ஒன்னும் பிரிலை இல்ல? எப்படி பிரியும்? அல்லாமே பெளாசாஃபியாச்சே? :). அய்யா சாமிங்ளா! இதை படிக்கிற புண்ணியவான்களே, இது வரைக்கும் படிச்சிட்டு போர் அடிக்குதுன்னு அப்படியே ஓடிப் போயிடாதீங்க. இன்னும் கொஞ்சூண்டு தான் இருக்கு, அதையும் படிச்சிருங்க. ப்ளீஸ்!
இளையராஜாவின் அறுசுவை
மீஜிக்கைப் பத்தி வாயைத் தொறந்தாலே இளையராஜா பேரு தான் வரணுமான்னு என்னை நானே கேட்டுக்கறதுண்டு. ஆனா அதுக்குப் பதிலும் ஒடனே கெடச்சிடும் இவரு பாட்டுகள்ல இருக்குற 'கிக்' வேற எங்கேயும் கெடக்கறதில்ல...அதான். காலேஜ் படிக்கும் போது, இளையராஜா பாடல்களின் சிறப்பைப் பத்தி பேசி பரவசப்பட்ட அனுபவங்களும் பல உண்டு, நானும் எனது தனிமையும் ராஜா பாடல்களினால் உணர்ச்சி வயப்பட்டு திக்குமுக்காடி நின்ற அனுபவங்களும் பல உண்டு. இசைஞானியின் இசையில் ஆறு வெவ்வேறு சுவைகளைப்(சுவை என்பதை mood என்ற பொருளில் கொள்க) பத்தி எழுதறேன்.
1. வெகுளித் தனம்(Innocence) - இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுகளில் ஒன்னு. சின்னப் பசங்க(வளர்சிதை பசங்க!) ஒரு தோப்புக்குள்ள டிராமா போட்டு வெளாடுற மாதிரியான ஒரு வித்தியாசமான பாட்டு. அவுங்களோட சின்ன சின்ன ஆசைகள், கனவுகள் இதெல்லாம் சொல்ற மாதிரி பாடல் வரிகள். படம் கல்லுக்குள் ஈரம். கேக்கும் போதே ஒரு உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ளும். இதே மாதிரியான இன்னொரு பாட்டு அழகி படத்துல வர்ற டமக்கு டமக்கு டம்.