Thursday, August 28, 2008

எங்கள் புதிய அடையாளம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ரேணுகா-மோகன்ராஜ் ஆகிய எங்கள் இருவரையும், தாய்-தந்தை என்று அடையாளம் கண்டு கொள்ள கடந்த 23ஆம் தேதி, சனிக்கிழமை(23-08-2008), மாலை 3.35 மணிக்குச் சென்னையில் எங்கள் மகள் பிறந்தாள் என்ற இனிப்பானச் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைக்கு "அர்ச்சனா" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.


மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தமையால் உடனே பதிவிட இயலவில்லை. தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட நண்பர்களுக்கும், தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு மகிழ்ந்த தலைவியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, July 13, 2008

ஒரு ஆண்டன் செகோவ் கதையும் ஒகேனக்கல் பயணமும்

பல வசந்தங்களுக்கு முன்னதான ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அது. வீடு வாசல், தோட்டம் துறவு, கன்னுக்குட்டி பன்னிக்குட்டி இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு புது தில்லியில் வேலை பார்க்கும் என்னை போன்ற பேச்சிலாத பையன்கள் தங்குவதற்காக எங்கள் அலுவலகத்தினர் கொடுத்திருந்த அந்த வீட்டில், எனது அப்போதைய உற்றத் தோழியான வெறுமையுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். வெறுமைக்கும் என் துணையானது சலிப்பினை உண்டாக்க, தொலைக்காட்சியின் துணையினைத் தேடிக் கொள்ளும் படி என்னை பணித்தாள். நோக்கம் ஏதுமின்றித் தொலைக்காட்சியின் அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்த போது தான் தூர்தர்ஷனின் அவ்வலைவரிசை கண்ணில் பட்டது. ஆண்டன் செகோவ் எனும் புகழ்பெற்ற உருசிய(உக்ரேனிய என்பதே சரியானது) எழுத்தாளரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்தி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. "செகோவ் கி துனியா"(Chekhov ki Duniya) எனும் பெயருடைய அத்தொடரை நான் சிறுவனாக இருந்த போது சென்னையில் பார்த்திருந்ததும் நினைவுக்கு வந்தது. இத்தொடரில் செகோவ் எழுதிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதை வரும். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகான மறு ஒளிபரப்பு என்றாலும், ஏனோ அத்தொடரைப் பார்ப்பது அன்று எனக்கும் என் தோழிக்கும் பிடித்திருந்தது.

சரியாக அத்தொடர் ஆரம்பிக்கும் வேளையில், என்னுடன் அவ்வீட்டில் தங்கியிருந்த என்னைப் போன்ற இன்னொரு பேச்சிலன் ஞாயிறு மதியத் தூக்கத்திற்குப் பின் துயிலெழுந்து வந்தான். வந்தவனது பார்வை நான் பார்த்துக் கொண்டிருந்த அத்தொடரின் மீது படிந்தது. தூர்தர்ஷன் என்பது ஏதோ கேவலமான சேனல் என்று நினைத்தானோ என்னவோ தெரியலை, என்னிடம் எதுவும் கேட்காமல் ரிமோட்டினை எடுத்து அலைவரிசை மாற்றத் துவங்கினான். கடுப்பான நான்"என்ன பண்ணறே?" என்று கேட்டேன். "சேனல் மாத்திக்கிட்டிருக்கேன்"என்றான் சர்வசாதாரணமாக. "நான் பாத்துக்கிட்டிருக்கிறது உனக்கு தெரியலையா?" என்றேன். "வீ சேனல் வைக்கப் போறேன். இதையா பாக்கப் போறே?"என்று ஏளனமாகக் கேட்டான். "ஆமாம், இதை தான் பாக்கனும். உனக்கு வேணும்னா அரை மணி நேரம் கழிச்சு வா" என்று சற்று கோபமாகவே சொன்னேன். ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் அத்தொடரை என்னோடு சேர்ந்து அவனும் பார்த்தான். பார்த்து முடித்து விட்டு "செம டச்சிங்கா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கில்ல? வீ-சேனல்ல பாத்த பாட்டையே பாக்கறதுக்காக, நல்ல ஒரு கதையை மிஸ் பண்ண இருந்தேன்"என்று மிகவும் நெகிழ்ந்து போய் சொன்னான்.

அவனை அந்தளவு நெகிழச் செய்ய கதை இது தான். எழுத்தாளர் ஒருவர் இருப்பார். அவருடைய வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பார். ஒரு மனமாறுதலுக்காக ஒரு நாள் மாலை வேளையில் கடற்கரைக்குச் செல்வார். எதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும் அவரை ஒரு குரல் திரும்பிப் பார்க்கச் செய்யும். நீளமான கோட்டும் தொப்பியும் அணிந்த ஒரு மனிதன் "ஐயா! இந்த இனிய மாலை வேளையில் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு காட்டட்டுமா?"என்று கேட்பார். இந்த கோட் அணிந்த மனிதனாக நடித்தவர் லில்லிபுட் என்ற நடிகர். கமல்ஹாசன் நடித்த 'சாகர்' என்ற இந்தித் திரைப்படத்தில் "ஓ மாரியா" என்ற பாடலில் கமலுடன் ஆடுவாரே குள்ளமான ஒரு ஆள், அவர் தான் இந்த லில்லிபுட். "எனக்கு ஆயிரம் பிரச்சினைகள். என்னை கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள். பொழுதுபோக்கெல்லாம் எனக்குத் தேவையில்லை" என்பார் எழுத்தாளர். "இல்லை சார்! நானும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கும் பணம் மிகவும் அவசியமாகத் தேவை படுகிறது. இரண்டு ரூபிள் கொடுத்தால் போதும். உங்கள் பொழுதுபோக்குக்கு வழிசெய்கிறேன். உங்கள் மனதுக்கு நான் காட்டும் பொழுதுபோக்கு வித்தை பிடித்திருந்தால் மட்டுமே பணம் கொடுக்கவும்" என்பார் கோட் மனிதர். "இரண்டு ரூபிளுக்கு என்ன வித்தை காட்டுவீர்கள்" என வேண்டாவெறுப்பாகக் கேட்பார் எழுத்தாளர். "அதோ தெரிகிறதே கடல், அதில் மூச்சை அடக்கி நீண்ட நேரம் மூழ்கி இருக்கும் வித்தையை உங்களுக்குக் காட்டுகிறேன்"என்பார். "நீங்கள் கடலில் மூழ்குவதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை" என்று கூறுவார் எழுத்தாளர்.

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ரொம்ப கஷ்டமான நிலையில இருக்கேன். நான் காட்டும் வித்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால் போதும்" என்று எழுத்தாளரைக் கெஞ்சுவார் கோட் மனிதர். "சரி! உங்கள் வித்தையைக் காட்டுங்கள். நீங்கள் கூறியது போல எனக்கு உங்கள் வித்தை பிடித்திருந்தால் மட்டுமே இரண்டு ரூபிள் தருவேன்" என்று சொல்வார் எழுத்தாளர். அவர் கூறியதற்கு உடன்பட்டு விட்டு கடலில் குதிப்பார் கோட் மனிதர். மூச்சினைப் பிடித்துக் கொண்டு ஒரு சில மணித்துளிகள் கடலில் மூழ்கி இருந்துவிட்டு, மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார். கரையில் நின்று கொண்டிருக்கும் எழுத்தாளரை நோக்கி "ஐயா! என் வித்தை பிடித்திருந்ததா?"என்பார். "இதில் ஒன்றும் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என பதிலிறுப்பார் எழுத்தாளர். "சரி ஐயா"என்று கூறிவிட்டு மறுபடியும் கடலில் மூழ்குவார் கோட் மனிதர். முன்னை விட நீண்ட நேரம் கடலில் மூழ்கியிருந்து விட்டு மறுபடியும் மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார் கோட் மனிதர். எழுத்தாளரோ "உங்கள் வித்தையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை" என்பார். இது போல இன்னுமிரண்டு மூன்று முறை, கோட் மனிதர் நீண்ட நேரம் கடலில் மூழ்குவதும், எழுத்தாளர் "உங்கள் வித்தை எனக்கு பிடிக்கவில்லை"என்று சொல்வதும் நடக்கும். இதற்குப் பின் மூச்சு வாங்குவதற்காக மேலே வரும் போது கோட் மனிதருக்கு மிகப் பலமாக மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். "ஐயா! இந்த முறை நான் காட்டும் வித்தை உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காமல் இருக்காது. வருகிறேன்" என்று கூறிவிட்டு கடலில் மூழ்குவார் கோட் மனிதர். கடலில் மூழ்கிய மனிதன் நீண்ட நேரமாகியும் மூச்செடுக்க மேலே வரமாட்டார். நேரம் சென்று கொண்டேயிருக்கும். எழுத்தாளரும் "வழக்கத்திற்கு மாறாக வெகு நேரம் ஆகியும் இம்மனிதர் ஏன் மேலே வரவில்லை" என யோசிக்கத் துவங்குவார். காலமும் சென்று கொண்டேயிருக்கும். அது வரை பெரிதாக அம்மனிதரைப் பற்றி அக்கறை காட்டாத எழுத்தாளரின் மனம் கவலை கொள்ளத் தொடங்கும். கடற்கரையில் குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்குவார். "ஐயா! நீங்கள் காட்டிய வித்தை போதும். தயவு செய்து மேலே வாருங்கள். நீங்கள் கேட்ட இரண்டு ரூபிளைக் கொடுத்து விடுகிறேன். மேலே வந்துவிடுங்கள்" எனக் கடலை நோக்கிக் கத்துவார் எழுத்தாளர். தொடர்ச்சியான அவருடைய கத்தலுக்கும் கதறலுக்கும், கடல் அலைகளின் ஓசையைத் தவிர எந்தவொரு பதிலும் இருக்காது. இவ்வாறாக முடியும் அக்கதை. "The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல விதமான எண்ணங்களையும், இரு கனத்த இதயங்களையும் அம்மாலை வேளையில் விட்டுச் சென்றது தொலைக்காட்சியில் கண்ட அக்கதை.

சமீபத்தில்(இவ்வாண்டு மே மாதத்தின் கடைசி நாள்) ஓகேனக்கல் சென்றிருந்தேன். உயர்ந்த பாறைகளுக்கு இடையில் காவிரி ஆறு நீர்வீழ்ச்சியாகிச் சீற்றத்துடன் கீழே விழுந்து ஓடுவதைக் காண்பதற்காகவும் பரிசலில் பயணிப்பதற்காகவும் ஏராளமானச் சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள். புகைப்படம் எடுப்பதற்காகப் பைத்தியக்காரர்கள் போல அலையும் என்னை போன்றோரின் கவனத்தை உடனடியாகக் கவருபவர்கள், பாறையின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள். பரிசலில் வருபவர்களைப் பார்த்ததும் "சார்! ஃபைவ் ருபீஸ் ஒன்லி, ஜம்ப்" என்று சைகை காட்டுவார்கள். நீங்கள் சரி என்றால் போதும், உடனே பாறை மீதிருந்து ஆற்றில் குதிப்பார்கள். பின்னர் உங்கள் பரிசல் அருகில் நீந்தி வந்து காசை வாங்கிக் கொண்டுச் சென்று விடுவார்கள்.

ஐந்து ரூபாய் தருவதாக வாக்களித்து இச்சிறுவர்களை பாறையின் மீதிருந்து குதிக்கச் செய்து எடுத்த படங்கள் கீழே. இவை எல்லாமே பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது எடுத்தவை.

பாறை மீது குதிக்கத் தயாராக இருக்கும் சிறுவன்.

குதிக்கும் போது...

என்னுடைய Flickr பக்கத்தில் நான் இட்டிருக்கும் படம் - பிற்தயாரிப்பு செய்தது.

குதிப்பதில் ஒவ்வொருவருக்கும்...

ஒவ்வொரு ஸ்டைல்

குதித்து விட்டு நீந்தி வந்த ஒரு சிறுவன். அவனுடன் பேச்சு கொடுத்த போது எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இது போல பாறை மீது குதிப்பதை விளையாட்டு போல செய்து வருவதாகவும் சொன்னான்.

நிற்க. ஒகேனக்கல்லில் அச்சிறுவர்களைப் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பும் போது, பாறை மீதிருந்து இச்சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து குதிக்கிறார்களே, எவ்வளவு அபாயகரமானது அது? அவர்களுடைய உயிருக்கு யார் பொறுப்பு என்று மனம் யோசிக்கத் தொடங்கியது. ஒரு நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருக்கும் போது மிகச் சிறிய ஆபத்து உள்ள பணியில் ஈடுபடுவது என்றால் கூட தலைகவசம் அணிய வேண்டும், உங்கள் பேரில் PF கணக்கு இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட வரைமுறைகள். ஐந்து ரூபாய் சில்லறை காசுக்காகப் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கும் இச்சிறுவர்களுடைய உயிரின் விலை என்ன என்று எண்ணத் தொடங்கினேன். போதாக் குறைக்குச் சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் கண்ட அந்த ஆண்டன் செக்கோவ் கதையும் நினைவுக்கு வந்தது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இது குறித்து பதிவெழுதும் எண்ணமும் அப்போதே உதித்தது. சற்று நேரம் கழித்து, இவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை, பையன்கள் பாக்கெட் மணிக்காக ஜாலியாகக் குதிக்கிறார்கள், நாமும் நம் மனதுக்குப் பிடித்த வண்ணம் படங்களை எடுத்து வந்துவிட்டோம். இதற்கு மேல் இது குறித்து அதிகமாக யோசித்து கவலை பட வேண்டியதில்லை என்று நினைத்து இச்சிறுவர்களைக் குறித்தான நினைப்பைக் கிடப்பில் போட்டேன்...

...Flickrஇல் வேறொரு புகைப்படக்காரர் எடுத்த ஒகேனக்கல் பாறை மீதிருந்து குதித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் படத்தைக் காணும் வரை. அதில் ஒரு வெளிநாட்டவர் சொல்லியிருந்த கருத்து மிகவும் வருத்தமடையச் செய்தது. பாறை மேலிருந்து குதிப்பதற்கு இச்சிறுவர்கள் ஐந்து ரூபாய் வாங்குவார்கள் என அறிந்த அவர் "எல்லாவற்றிற்கும் இக்காலத்தில் காசு வாங்குகிறார்கள். Its a sick world we live in" என்று சொல்லியிருந்தார். அதைப் படித்ததும் "Sick comment of a heartless westerner" என்று தான் எனக்கு தோன்றியது. அதோடு பல எண்ணங்களையும் கிளப்பி விட்டது அந்த கமெண்ட். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு அபாயகரமானச் செயலில் யாரும் இறங்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். வெளிநாடு செல்லும் போது டாலருக்கும் யூரோவுக்கும் நாம் ரூபாய் கணக்கு போடுவது போல, இந்த ஐந்து ரூபாய்க்கு டாலர்/யூரோ கணக்கு போட்டோமானால் ஒன்-டென்த் ஆஃப் எ அமெரிக்கன் டாலர் என்றோ ஒன்-ஃபிஃப்டீன்த் ஆஃப் எ யூரோ என்று தான் வரும். ஒரு மனித உயிரின் விலை ஐந்து ரூபாய்க்குக் கூட ஈடானதில்லையா? இல்லை எனில் இந்தியர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? இதே மாதிரி பாறை மீது குதிப்பதை அமெரிக்காவிலோ, அல்லது வேறொரு ஐரோப்பிய நாட்டிலோ ஒரு சிறுவன் செய்கிறான் என்றால், வெறும் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு செய்வானா? இல்லை அந்த கமெண்ட் இட்ட அவ்வெளிநாட்டவர் எதிர்பார்ப்பது போல ஓசியில் தான் குதிப்பானா? பாறை மீதிருந்து குதிக்கும் அபாயகரமான விளையாட்டுக்குத் துணை போக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மேலே நான் சொல்லியிருப்பதைப் படித்தாலே அது புரியும். அவ்வளவு அபாயகரமானச் செயலை அச்சிறுவர்கள் செய்வதை ரசித்துத் தானே பலரும் படம் எடுக்கிறார்கள். அபாயகரமான அச்செயலுக்கு வெறும் ஐந்து ரூபாய் கொடுப்பதற்குக் கணக்கு பார்க்கும் அந்த மனப்பான்மையைத் தான் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

ஒரு மனிதன் உயிரைப் பணயம் வைத்து செய்யும் சாகசங்கள் தான் இன்னொரு மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஹூடினி, டேவிட் ப்ளெயின் போன்ற சாகசக்காரர்களின் புகழே இதற்கு சான்று. அதே போல சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் தொடங்கி இக்கால வடிவேல், விவேக் வரை காமெடியன்கள், அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்கு செய்யும் மிக எளிமையான உத்தி, அடிவாங்கி/அடிபட்டு விழுவது. ஒருவன் அடிவாங்கி விழுவதை நினைத்துச் சிரிக்கும் மனித மனது, அவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு உதவ மறுக்கிறது. நான் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு உதவி செய் என்றொருவன் கேட்பதை பிச்சை என்று வரையறுக்கிறோம், சாகசம்/வித்தை காட்டி ஒருவன் பொருள் செய்ய நினைத்தலையும் பிச்சை என்கிறோம். கோட் மனிதன் இரண்டு ரூபிள் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டிருந்தாலோ, அல்லது ஓகேனக்கல்லில் சிறுவர்கள் ஐந்து ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வந்திருந்தாலோ அதற்கு என்ன பெயர் கொடுப்போம் என நாம் அனைவரும் அறிவோம். இரண்டு ரூபிள் என்பது செக்கோவ் கதையில் வரும் எழுத்தாளருக்குப் பொழுதுபோக்குக்கு செலவழிக்கும் ஒரு சிறு தொகை, ஆனால் அதுவே அந்த கோட் மனிதருக்கு வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் விஷயம். அதே போல ஐந்து ரூபாய் என்பது என்னைப் போன்றவனுக்கு ஃபோட்டோ எடுப்பதற்குச் செலவாகும் சில்லறை காசு. ஆனால் அதுவே வேறொருவனுக்கு அன்றாடம் அடுப்பெரிய வழிசெய்யும் பொருளாக இல்லாது போனாலும், சில்லறை காசை விட அதிக முக்கியத்துவம் உடைய ஒன்றாகவே இருக்கின்றது, எனவே தான் அபாயம் பற்றி எல்லாம் ஏதும் யோசிக்காமல் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கிறான்.

கோர்வையற்ற பல எண்ணங்களையும், என் கோபத்தையும் கொட்டுவதாகவும் இப்பதிவு அமைந்துவிட்டது. சில மாதங்களாக எதையும் எழுதாத நான், இன்று இரவு இரண்டு மணியாகியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், என் மூளையின் வசம் நானில்லாமல், என் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று தான் பொருள். பதிவு நீளமாத் தான் இருக்கு, முடிஞ்சாப் படிச்சிட்டு உங்கக் கருத்துகளையும் சொல்லிட்டுப் போங்க.

Monday, July 07, 2008

இரவு நேரம் - PIT சூலைத் திங்கள் போட்டிக்காக


அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்தேன். எத்தனையோ முறை மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் திருவான்மியூர் கடற்கரைக்கு ஒரு சில முறை தான் சென்றிருக்கிறேன். அங்கே எடுத்த படம் இது. சிறுவயதில் ரசித்த விஷயங்களை சிறிது வயதான பிறகு மறுபடியும் கண்டுகொள்வதென்பதும் ஒரு மகிழ்ச்சி தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சென்னையில் இது போல தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் தெருவில் இவ்வாறு சோன்பப்டி விற்பவர்களைக் காணமுடிவதில்லை. கடற்கரையில் சென்றால் மட்டும் காணும் வாய்ப்பிருக்கிறது. முன்னாளில் பெட்ரோமேக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் விற்றுக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் பேட்டரி விளக்கின் வெளிச்சத்தில் விற்பதைக் காணலாம். சோன் பப்டி வாங்கிச் சாப்பிடத் தோன்றவில்லை என்றாலும், அக்காட்சியைப் படம் பிடித்துக் கொள்ள கண்டிப்பாகத் தோன்றியது.


பெங்களூரில், எங்கள் வீட்டின் அருகில் தனியாக நின்றிருந்தத் தள்ளுவண்டி. கார்களும், பேருந்துகளும் சாலையில் ஏற்படுத்திய வெளிச்சத்தில் இவ்வண்டியைத் தனியாகப் படம் பிடித்துக் கொள்ளத் தோன்றியது. வண்டிக்குச் சொந்தக்காரர் சுற்றும் முற்றும் தென்படாததும் வசதியாக அமைந்தது.

இரண்டு ரூபாய்க்குச் சோளம் வாங்கிக் கொண்டு க்ளிக்கிய படம் இது. சோளத்தைத் தெளிவாகப் ஃபோகஸ் செய்ததால், சாலையில் செல்லும் வாகனங்களினால் படத்திற்குப் பெரிதாக இடையூறு ஏதுமில்லை.

தங்கமணி காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு ஓரமாக நின்று கொண்டு க்ளிக்கித் தள்ளியதில் தேறிய ஒரு படம். தெருவில் செல்பவர்களையும், இது போன்று பொருள்களை விற்பவர்களையும் படத்திற்குப் போஸ் தரச் சொல்லிக் கேட்பதில் இருக்கும் கூச்சம் இன்னும் விலகிய பாடில்லை. தங்க்ஸ் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த தைரியத்தில் எடுத்த படங்கள் இவை.

க்ளிக்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த உரையாடல்.

தங்க்ஸ் : "ஏங்க! காலிஃப்ளவர் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "வாழைக்காய் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "முள்ளங்கி வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "சேப்பங்கிழங்கு வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "அது தான் உங்களுக்குப் பிடிக்காதே?"
நான் : "பரவால்லை...வாங்கு...வாங்கு..."(மனதில் எக்ஸ்போசர், காம்போசிஷன், சப்ஜெக்ட், ஃபோகஸ் இது பற்றிய கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன...சேப்பங்கிழங்கு என்பது ஷட்டர் ஸ்பீடு என்று அநேகமாகக் காதில் விழுந்திருக்க வேண்டும்)
தங்க்ஸ் : "வாங்கி முடிச்சாச்சு. காசு குடுங்க"

சே! இவ்வளவு சீக்கிரம் வாங்கி முடிச்சாச்சான்னு நெனச்சிக்கிட்டே காசைக் கொடுத்துக் கொண்டே...வாங்கி வைத்திருந்த காய்கறிகளைப் பார்க்கிறேன்.

நான் : "சேப்பங்கிழங்கு தான் புடிக்காதுன்னு தெரியுமில்லை. அதை போய் வாங்கிருக்கே?"
தங்க்ஸ் : "காய் வாங்கப் போகும் போது கூட கேமரா கொண்டு வராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே?"
நான் : (
முதலில் இருக்கும் சோன்பப்டி விற்பவர் படத்தைப் போட்டிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன்.

Friday, June 13, 2008

A Day at Work - ஒரு முயற்சி

ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில
1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்

2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்

3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.

4. ஒசூர் - துணி வியாபாரி

5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு

6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா இல்லை)

முன்பே எடுத்த படங்கள் சில
7. பசவங்குடி, பப்பிள்ஸ் விற்பவர்.

8. பட்டு புடவை நெய்பவர். புடவையின் பெயர் படோலா. இடம் பாடன், குஜராத். ஒரு புடவையின் விலை...அதிகமில்லை ஜெண்டில்மென்...ஒன்லி 90,000 ரூபாய். வருடத்தில் எட்டு புடவைகள் தான் நெய்வார்களாம்.

9. "தால் பாட்டி" சமைச்சிட்டு இருக்காங்க. இடம் - தனேஷ்வர் தேவ், மத்திய பிரதேசம்

10. வேலையில் ஒட்டகம்


இதப் பாத்தா இது தோனுமே - "ஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது"...ஹி...ஹி...சும்மா லந்துக்கு

Monday, June 09, 2008

ஜன்னல் கதைகள்

ஆங்கிலத்துல "Great Leveller Great leveller"னு ஒரு பதம்(ஒன்னு தான்) இருக்கு. ஒரு நிகழ்வு அல்லது ஒரு விஷயம் நமக்குள்ள ஏற்படுத்தியிருக்கற தாக்கத்தையோ அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகளையோ குறைத்து சமமாக்கும் வல்லமை கொண்ட ஒரு விஷயத்தையோ பொருளையோ ஆங்கிலத்துல "Great Leveller"னு சொல்றாங்க. Cricket is a great leveller, Indian Railways is a great leveller, Death the great leveller இப்படின்னு இடத்திற்கேற்றாற் போல இந்த "great leveller" பதம் பல இடங்களில் உபயோகிக்கப் பெறுகிறது. எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை "Time is a great leveller" அப்படீங்கறதுல கண்டிப்பா இருவேறு கருத்துகள் கெடையாது. "காலம் என்பது ஒரு மாபெரும் சமனி" அப்படீங்கறது உண்மை இல்லைன்னா ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடி அந்த சமயத்துல என் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை மையமா வச்சி எழுதின "531 பங்காரப்பேட் பாசெஞ்சர்" என்கிற பதிவுக்குப் "பயணம் தொடரும்"னு பந்தாவா இடைவெளி விட்டுட்டு, மூனு மாசமா கெடப்புல போட்டதை கண்டிப்பா நியாயப்படுத்த முடியாது. இதை வெறும் பில்டப்புக்காகச் சொல்லலை. சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பாத்தா இதை விட மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திய பல விஷயங்களைக் கூட "காலம்" என்ற இயந்திரம் நிரவி, சமன்படுத்தி "A thing of the past"ஆக்கியிருக்கிறது. உதாரணத்துக்குக் கீழே உள்ள பதிவுகள்ல சொல்லிருக்கற நிகழ்வுகளைச் சொல்லலாம்.
1. மீள்பதிவுங்ணா
2. உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு

531 பங்காரப்பேட் பாசெஞ்சருக்கு இடைவேளை விட்டு மூனு மாசம் ஆச்சு. மூனு மாசமா அதை பத்தி எதுவும் எழுதாம இருக்கறதுக்குப் பல காரணங்கள். அதுல முக்கியமானது எழுதனும்னு நெனச்சி உக்காரும் போது ஒன்னுமே தோணாம மண்டைல மசாலா காலியான மாதிரி ஒரு உணர்வு. மனசுல நெனக்கறதை எழுத முடியாத மாதிரி ஒரு 'எழுத்து டிஸ்லெக்சியா:)" பங்காரப்பேட் பேசஞ்சரில் பயணம் செய்த போது கேட்ட தாவணி போட்ட தீபாவளி பாட்டு, புல்லா கி ஜானாங்கிற பஞ்சாபி மொழியில் இருக்கும் சூஃபி பாட்டு , வெளியில வேடிக்கை பாக்கும் போது தெரிஞ்ச காட்சிகள், வைட்ஃபீல்டுல பக்கத்து ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த "பேலஸ் ஆன் வீல்ஸ்" ரயில், இதைப் பற்றியெல்லாம் அடுத்த பதிவுல எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஆனா மூனு மாசம் கேப் விட்டதுனால இப்போ அதையெல்லாம் சொன்னா சுவாரசியமா இருக்காதுங்கிறதால லூசுல விட்டுடறேன். இரயில் பெட்டியின் ஜன்னலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்ட, கேட்ட சில சம்பவங்களை/கதைகளைப் பற்றியதே இந்த பதிவு.

இரயில் பயணத்தின் போது காணக் கிடைக்கும் காட்சிகள் வேறெங்கேயும் காணக் கிடைக்காதது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இரயில்வண்டி பயணித்துக் கொண்டிருக்கையில், இரயில் பாதையினை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி மண்பாதை எங்குச் சென்று சேர்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசை பலமுறை வந்திருக்கின்றது. அதே போல சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் மங்கலாய் தெரியும் வயல்களை ஒட்டிய ஒற்றை குடிசையில் வசிப்பவர்களைப் பற்றியும், யாருமே இல்லாதது போல இருக்கும் அவ்விடத்தில் அவர்கள் என்ன செய்துக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மேலிடும். ஆனால் சில நிமிடங்களிலேயே, என்னுடைய "இப்பயணத்தில்" குடிசையில் வசிக்கும் அம்மனிதர்களைப் பற்றி நான் ஒருக்கணம் நினைப்பது போலவே, அவர்களுடைய "அப்பயணத்தில்" மங்கும் மாலை வேளையில் தனியாகச் செல்லும் இரயில்வண்டியில் பயணிப்பவர்களைப் பற்றி அவர்கள் ஒருக்கணம் நினைத்துப் பார்க்கவும் வாய்ப்புண்டு என்று தோன்றும். ஆனால் வாழ்க்கை என்னும் துரிதமான நம்முடைய இப்பயணத்தில் அடுத்தவரின் "பயணத்தைப்" பற்றி எண்ணிப் பார்க்கவெல்லாம் நேரமேது என்பது போன்றான நெஞ்சை நக்கும் சிந்தனைகளும் வரும். கூடவே இந்த மாதிரியான கவிதைகளின் நினைவும்.

"Stopping by Woods on a Snowy Evening" by Robert Frost

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sounds the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

'காதல் தேசம்'னு ஒரு படம். அப்பாஸ், வினீத், தபு நடிச்சதுன்னு நெனைக்கிறேன். அதுல கிளைமேக்ஸ் காட்சியில் தபுவின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக் கொள்ளும். எதிர் திசையில் இருந்து ரயில் வரும். உடனே வினீத் ஓடிச் சென்று தண்டவாளத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு 'கொம்பை' அசைப்பார். உடனே ரயில் தடம் மாறி அடுத்த இருப்புப் பாதைக்குச் சென்று விடும். ஹீரோயின் தபு காப்பாற்றப்படுவார். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பயணம் செய்யக் கூடிய ஒரு ரயிலின் போக்கையே நிர்ணயிக்கக் கூடிய அந்த இரும்பு விசைக்கு(lever), தமிழ்த் திரைப்படங்களில் ஒரு 'கொம்புக்கு'க் கொடுக்கப்படும் மரியாதை தான் கொடுக்கப் படுகிறது :) ரயில்பெட்டியின் சாளரம் வழியாக வேடிக்கை பார்த்தால் முதலில் தெரிவது இருப்புப் பாதை. பெரும்பாலும், ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் இருந்து நாம் பார்த்தால் இரண்டு இருப்புப் பாதைகள் தெரியும். ரயில்வண்டி, ரயில் நிலையங்களை அடையும் போது கவனித்தால் இரண்டாக இருந்த இருப்புப் பாதை, நாலாக, எட்டாகப் பிரியும். அதோடு ரயில் ஒரு பாதையில் இருந்து இன்னொரு பாதைக்குப் ப்ளாட்ஃபார்ம் நோக்கி மாறுவதை கவனிக்கலாம்.

ஒரு பாதையில் இருந்து இன்னொரு பாதைக்கு ரயிலின் போக்கை மாற்றுவதற்கு "பாயிண்ட்" பயன்படுத்தப் படுகிறது. இந்தப் பாயிண்ட் எப்படி இயக்கப் படுகிறது என்று கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தாம்பரம் ரெயில்வே யார்டில்(கல்விச் சுற்றுலா..ஹி...ஹி...) காணும் வாய்ப்பு கிடைத்தது. இதை "பாயிண்ட் அடிக்கிறது"ன்னு சொல்றாங்க. மேலே சொன்ன கொம்பை இயக்குவதன் மூலம் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் அகலத்தைக் கூட்டலாம் குறைக்கலாம். சினிமால எல்லாம் காட்டறாங்களே...அந்த மாதிரி எல்லாம் யார் வேணும்னாலும் அந்தக் கொம்பை அசைத்து ரயிலின் போக்கை மாற்ற முடியுமா என்று எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த பணியாளரிடம் கேட்டோம். "நீங்க வேணா பாயிண்ட் அடிச்சிப் பாருங்களேன்"னு சொன்னார். பாயிண்ட் அடிக்கிறதை விடுங்க, உண்மையிலே அந்த விசையை எங்களால் அசைக்கக் கூட முடியவில்லை. ரயிலின் போக்கை மாற்றி ஹீரோவையோ ஹீரோயினையோ காப்பாற்றி விடுவது மாதிரியான காட்சிகளைப் பாக்கும் போதெல்லாம் தோணுவது "ஒரு வேளை பாயிண்ட் அடிக்க டிரெயினிங் எடுத்துருப்பாங்களோ?":)

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? ரயில் ஸ்நேகம் என்பது தற்காலிகமானது, நிலையில்லாததுன்னு எல்லாம் கேட்டிருந்தாலும் படிச்சிருந்தாலும், ரயிலில் சந்திக்கிற சிலரிடம் சில பெர்சனலான விஷயங்களைக் கூட பகிர்ந்துக் கொள்வோம். 'காதல்' திரைப்படம் கூட, இயக்குநர் பாலாஜி சக்திவேலுடன் ரயிலில் பயணித்த சகப்பயணி ஒருவர் பகிர்ந்துக் கொண்டச் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் உருவானது என்று படித்திருப்பீர்கள். இதுபோன்ற பகிர்வுகள் ஒரு புறமிருக்க, நம்மைப் பற்றிய சிறந்தவற்றை மட்டுமே சக பயணிகளுடன் பகிர்ந்துக் கொள்வதை உணர்ந்திருக்கிறீர்களா? சாதாரண நாள்ல பேப்ப்ரைப் பிரிச்சா விளையாட்டுச் செய்திகளை மட்டுமே படிக்கிற ஆள் கூட ரயில்ல போகும் போது அறிவியல், அரசியல்னு பூந்து வெளையாடுவாப்ல. ரயில்ல பயணம் செய்யற அந்த சில மணிநேரங்கள்ல, எதிர்ல இருக்கறவர் நம்மளைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் மட்டுமே எடுத்துட்டு போக வேண்டும் என்ற எண்ணமா இருக்குமோ? எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துல படிச்ச கதை ஒன்னு நியாபகம் வருது. ரஸ்கின் பாண்ட்(Ruskin Bond) அவர்கள் எழுதியது. "The Eyes have it"ங்கிறது கதையோட பேரு. நம்ம கதையின் நாயகன் ரயிலில் மசூரிக்குப் போயிட்டு இருப்பாரு. அவருக்குச் சுத்தமா கண்ணு தெரியாது. ரயில் ஒரு ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு ஏறும். மனுஷன் பொண்ணோட கடலை போட்டுக்கிட்டே போவாரு. ஆனா தான் கண் பார்வையில்லாதவர் அப்படீங்கறதை காண்பிச்சுக்கக் கூடாது அப்படீங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாரு. தான் நினைச்ச மாதிரியே, தனக்கு பார்வையில்லைங்கிறதை அந்தப் பொண்ணுக்குத் தெரியாத மாதிரியே சமாளிச்சுடுவாரு. அந்தப் பொண்ணு இடையில வர்ற ஸ்டேஷன்ல இறங்கிப் போயிடும். அதுக்கப்புறம் இன்னொரு ஆளு ஏறுவாரு. நம்ம ஹீரோவுக்குத் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துரும். இறங்கிப் போன பொண்ணு தன்னோட கூந்தலைப் பிரித்து விட்டிருந்தாளா இல்லை கொண்டையாக இட்டிருந்தாளா என்று? இதை புதுசா வந்த ஆளு கிட்ட கேப்பாரு நம்ம ஹீரோ. அதுக்கு அவரு "கூந்தலை எல்லாம் நான் கவனிக்கலைங்க. நான் கவனிச்சது அந்தப் பெண்ணோட கண்கள். அவ்வளவு அழகான கண்கள். ஆனால் அவற்றுக்குச் சுத்தமாகப் பார்வை இல்லை. நீங்கள் கவனித்தீர்களா?". ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்ளும் பார்வை இல்லாத இருவர், தங்கள் குறைபாட்டினைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடத்தும் உரையாடலை வெகு சுவாரசியமாக விவரித்திருப்பார் பாண்ட்.

ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், முன்பதிவு பட்டியலைச் சரி பார்ப்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு வழக்கம். ஆனால் அந்த தொன்று தொட்ட பழக்கத்தைக் கடைபிடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். வயசானவங்களா இருந்தா அப்பர் பெர்த்தை யாரு தலையில கட்டிட்டு லோயர் பெர்த் வாங்கலாம்னு திட்டமிடுறதுக்கா இருக்கும். வயசு பசங்களா இருந்தா கடலை போடறதுக்கு எதாச்சும் வழி இருக்கான்னு செக் பண்றதுக்கா இருக்கும். ரெண்டாவதாச் சொன்ன விஷயத்துக்கும் நமக்கும் எப்பவும் எட்டாம் பொருத்தமா இருந்தாலும், படிக்கும் போது புது தில்லியிலேருந்து சென்னைக்கு லீவுக்கு வரும் போது ஒரு வாட்டி எதிர்பாராம இந்த வாய்ப்பு கெடைச்சுது (ஆண்டவா...தங்கமணி கண்ணுல மட்டும் இது படக் கூடாது). தில்லிக்கு பக்கத்துல இருக்கற ஃபரீதாபாத்ல எதோ ஒரு பேரு தெரியாத மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு மேற்படிப்பு(எம்.டி.யா, எம்.எஸ்சான்னு தெரியலை) கவுன்சிலிங்குக்காக தன் அப்பாவோட சென்னைக்குப் போய்க்கிட்டு இருந்தது அந்தப் பொண்ணு. எனக்கு அப்போ தெரிஞ்ச இந்தியெல்லாம் வச்சி, என்னென்னமோ பேசிக்கிட்டு இருந்தேன், பயணக் களைப்பு தெரியக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல மட்டும் :). ஆனா அந்தப் பொண்ணு கிட்ட பேசுனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது வடமாநிலங்கள்ல இருக்கறவங்க "மதறாஸை"ப் பத்தி வச்சிருக்கற தப்பான எண்ணங்கள் என்னன்னு. இதுல என்ன கொடுமைன்னா அம்புட்டு பெரிய படிப்பு படிச்ச புள்ளைக்கு, தான் கவுன்சிலிங்குக்காகப் போயிக்கிட்டிருக்கற சென்னையில் என்ன மொழி பேசப்படுதுன்னு கூட தெரிஞ்சிருக்கலை. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில்(எம்.எம்.சி) இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்திருந்த போதிலும், அது மருத்துவத் துறையில் புகழ்பெற்ற கல்லூரி என்று அறிந்திருந்த போதிலும் அந்தப் பெண்ணிற்குச் சென்னையில் தங்கிப் படிக்க விருப்பம் இருக்கவில்லை. அதற்காக அவள் சொன்ன காரணங்கள் மிகவும் குழந்தைத் தனமாக இருந்தது. முதல்ல சென்னையில் யாரும் ஹிந்தி பேச மாட்டாங்களாம், ஆட்டோ டிரைவர்கள் யாருக்கும் இங்கிலீசு தெரியாதாம், அப்புறம் சாப்பிடுவதற்கு சப்பாத்தி கெடைக்காதாம். அதனால குஜராத் ஜாம்நகர் மெடிக்கல் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று சொன்னாள் அந்தப் பெண். "தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்"னு பாடின பாவேந்தர் பாரதிதாசன் வழியில் வந்தவன் அல்லவா நான். "என் தாய் மண்ணை இகழ்ந்தவளை அவள் ஃபிகர் என்றாலும் விடேன்"என்று வீறுகொண்டேன். "ஏம்மா தில்லியில் மட்டும் GRE பரிட்சை எழுதிட்டா எல்லாரும் ஆட்டோ ஓட்டறாங்க, நாங்களும் தான் தில்லியில இருக்கும் போது சோத்தைக் கண்ணுலயே பாக்காம தெனம் ரொட்டியே திங்குறோம், டாக்டருக்குப் படிச்சி முடிச்சிட்டு மேற்படிப்பு எல்லாம் படிக்கப் போறீங்க இப்பவும் சப்பாத்தி, மொழி, ஆட்டோகாரன்னு பேசிக்கிட்டு கெடைச்ச நல்ல வாய்ப்பை விட்டுறாதே. எம்.எம்.சி.யில் வாய்ப்பு கெடைச்சும் படிக்கலைன்னா நஷ்டம் உனக்கு தான்"னு என்னால ஆனவற்றை எடுத்துச் சொன்னேன். ஆனாலும் அந்த பொண்ணு புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலை. வாய்ப்பு கிடைச்சாலும் கிடைக்காட்டினாலும் கடலைக்கும் நமக்கும் எப்பவும் தூரம்னு மட்டும் நல்லா புரிஞ்சது எனக்கு.

சிறுவயதில் ரயில் பயணம் அனுபவம் என்றால் அது பள்ளி விடுமுறை நாட்களில், சென்னையிலிருந்து பெங்களூருக்குத் தாத்தாவைப் பார்த்து வருவதற்கு, பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பயணம் செய்த அனுபவங்கள் மட்டுமே. காலை 7.15க்குச் சென்னையிலிருந்து தொடங்கி மதியம் ஒன்றரை மணி போல பெங்களூர் சென்று சேரும். மறுவழியில் மதியம் 2.20க்கு பெங்களூரில் இருந்து துவங்கி இரவு 8.15க்குச் சென்னை வந்து சேர்ந்து விடும். ஒரு முறை கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு பெங்களூரில் இருந்து சென்னைக்குத் திரும்பி வருகையில் நான் கண்ட ஒரு சம்பவம் என்றென்றும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. எனக்கு அப்போது ஒரு பத்து வயது இருக்கும். மதியம் பெங்களூரில் இருந்து புறப்படும் பிருந்தாவன், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஆந்திர மாநிலத்தின் ஒரு சிறு பகுதியைக் கடக்கும். இங்கு ஒரு ரயில்நிலையமும் உள்ளது. குப்பம் என்று அதற்கு பெயர். அப்போதெல்லாம் அது ஒரு காட்டுப் பகுதியைப் போன்று தோற்றமளிக்கும். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் குப்பம் ஸ்டேஷனில் நிற்காது. சிக்னலுக்காக ஒரு நிமிடத்திற்கும் குறைவாக நிற்க வேண்டிய சூழ்நிலை பல நேரங்களில் ஏற்படும். இந்த குப்பம் என்ற ஊர் எதற்கு பெயர் பெற்றது என்றால் மலிவான விலையில் நன்றாகக் கிடைக்கும் காய்கறிகளுக்காக. கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலான காய்கறிகளை ரயில் நிற்கும் அந்த சில வினாடிகளில் சிறுவர்களும், பெண்களும் பையில் அடைத்து ரயிலில் இருப்பவர்களிடத்தில் விற்பார்கள். பெங்களூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் பலரும் மலிவான விலையில் கிடைக்கும் இக்காய்கறிகளை வாங்கிக் கொள்வர். பஸ்சானாலும் ரயில் ஆனாலும் வேடிக்கை பார்ப்பதற்காக எப்போதும் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொள்ளும் நான், குப்பத்தில் அன்று கண்ட காட்சி என் மனதில் தீராத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. நான் உக்கார்ந்திருந்த இருக்கை கூட்டத்தின் முன்புறம் உள்ள இருக்கை கூட்டத்தில்(bay) உக்கார்ந்திருந்த ஒரு பயணி சிறுவன் ஒருவனிடத்தில் காய்கறிகளை வாங்கிக் கொண்டார். குப்பத்தில் ரயில் நின்று விட்டு சிக்னல் கிடைத்ததும் புறப்படலானது. "ரயில் கெளம்புதுமா, சீக்கிரம் காசைக் குடுங்க"என்று பையன் சொல்வது கேட்டது. அதன் பிறகு சில்லறை இல்லை என்று அப்பயணி சொல்லவும், ரயில் இன்னும் வேகம் பிடிக்கலானது. "ரெண்டு ரூவாம்மா, காசைக் கீழே போட்டுருங்க, நான் எடுத்துக்கறேன்" என பையன் மறுபடியும் சொல்வதையும் அதற்கு அப்பயணி செவிமடுக்காதிருந்ததும் "காசைக் கீழே போட்டுருங்கம்மா, காசைக் கீழே போட்டுருங்கம்மா"என்று அவன் கத்திக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும், அந்த பையன் ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததையும் இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை. "காலம் ஒரு மாபெரும் சமனி" என்பதற்கு விதிவிலக்குகளும் இருக்கத் தான் செய்கின்றன.

நன்னி 1 : வல்லியம்மா - இந்தப் பதிவுக்குத் தலைப்பைப் போன பதிவுல பின்னூட்டமா கொடுத்ததுக்கு
நன்னி 2 : "குருவி ராவணன்" ஸ்ரீ கப்பிகிஷ்ணன் - Levellerன்னா சமனின்னு தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்ததுக்கு

Thursday, May 08, 2008

விரல்களின் ருசி

ஜனவரி 2006 - நான் தமிழில் வலைபதிய ஆரம்பித்த புதிது. அச்சமயத்தில் நான் மிகவும் ரசித்து எழுதிய ஒரு பதிவினைப் படித்துவிட்டு சரவணன் என்ற நண்பர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பதிவுக்கு அப்போது பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை எனினும் 'தேன்கூடு' அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகளில் இடம்பிடித்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'நியூ' படத்தில் பிடித்தது என்ற அப்பதிவில் நண்பர் சரவணன் இட்டுள்ள பின்னூட்டத்தினைக் கீழே பதிகிறேன்.

சரவணன் has left a new comment on your post "'நியூ' படத்தில் பிடித்தது":
வணக்கம்,
கைப்புள்ள நான் வலை பதிவுகளுக்கு புதியவன். இப்பதான் உங்க பதிவுகள் படித்து வருகிறேன். இது மிக நல்ல பதிவு. அன்னையர் தினம் வரும் நெருங்கி வரும் வேளையில் இதை நீங்கள் மீண்டும் பதிவிட வேண்டுகிறேன், அதன் மூலம் எங்கோ நமக்காக காத்திருக்கும் அம்மாக்களின் உண்மை தேவைகளை நமது மக்கள் உணர்வார்கள்.அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. Our presence is the present

அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. அவள் இன்றும் நமக்கு சோறு ஊட்ட காத்திருக்கிறாள், நாம்தான் வளர்ந்துவிட்டோம் (மறந்துவிட்டோம்?). MGR & மு. கருணாநிதி (அவர்கள் மேல் இருக்கும் விமர்சனங்கள் தனி) புகழுக்கு காரனம் அவர்கள் எப்பொழுதும் தாய் பக்தியொடு இருந்தார்கள். அனைத்தும் அவர்தம் தாயின் அசீர்வாதங்களே. நாம் என்ன அவர்களை விட பெரிய அளவில் பனம் சம்பதிக்க பொகிறோமா.. இல்லை அவர்களை விட நேர பற்றாகுறையா நமக்கு..

மீண்டும் இதை பதிவிடுவேர்கள் என்ற நம்பிக்கையோடு
சரவணன்

சரவணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்பதிவினை இங்கு மீண்டும் பதிகிறேன்.

'நியூ' திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகி ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்டு சமீபத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது அறிந்ததே. அப்படத்தை நான் காணவில்லை எனினும் டிவியில் பார்த்த ஒரு சிறு பகுதியிலேயே என் மனதினைக் கவர்ந்த காட்சி ஒன்று உண்டு.

அது தேவயானி தன் காணாமல் போன் மகனை நினைத்து அழுதுகொண்டே பேசுவதாக அமைந்த ஒரு காட்சி. "என் மகன் எப்போதும் என் கையால் தான் சாப்பிடுவான். சாப்பாடு ஊட்டும் போது சாப்பாட்டை மட்டும் சாப்பிட மாட்டான். என் விரலையும் சேர்த்து தான் சாப்பிடுவான்" - இந்த ஒரு இடத்தில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஏனேனில் இது நான் அனுபவித்த ஒன்று. வெறும் ரசம் சாதமே ஆனாலும் அம்மா கையால் ஊட்டிக் கோண்டால் எப்போதுமே ஒரு பிரமாதமான தனி ருசியை உணர்ந்திருக்கிறேன். அம்மாவைக் கேட்டால் உன் கையாலேயே நல்லா பெசஞ்சு சாப்பிட்டு பாருன்னு சொல்லுவாங்க. ஆனால் பல முறை முயன்றும் தோல்வி தான்.

தன் கையால் சாப்பிடும் போது கிடைக்காத அந்த ருசி அம்மா கையால் சாப்பிடும் போது மட்டும் எப்படி கிடைக்கிறது...நிஜமாகவே அம்மா விரலை சாப்பிடுகிறோமா? இந்த காட்சியை பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியப்படுத்துங்களேன்!


அப்பதிவில் நான் இட்டிருந்த ஒரு மறுமொழியையும் இங்கு பதிகிறேன். இப்பதிவில் தனியாக எதுவும் எழுதவில்லை. எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் தான் :)

"இச்சமயத்தில் நடிகர் சூர்யா 'மதர்ஸ் டே' அன்று ஜெயா டிவியில் டெலிசாய்ஸ் நிகழ்ச்சியில் சொல்லியது நினைவுக்கு வருகிறது. மதர்ஸ் டே அன்னிக்கு நீங்க உங்க அம்மாவுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?னு ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில், நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மரியாதையை அவர் மேல் ஏற்படுத்தியது. "மதர்ஸ் டே என்று தனியாக எதையும் கொண்டாடுவது கிடையாது. அந்த ஒரு நாள் மட்டும் கார்டோ அல்லது கிஃப்டோ அம்மாவுக்கு வாங்கி கொடுத்து வாழ்த்து சொல்வதில் உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு நாளும் மதர்ஸ் டேவாக அம்மாவின் அன்பையும் அம்மாவையும் மனதில் வைத்துக் கொண்டால் போதும்" சூர்யா சொன்னது எவ்வளவு உண்மை. நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?"

மனதிற்கு நெருக்கமான அப்பதிவினை மீள்பதிவு செய்யத் தூண்டுதலாக இருந்த சரவணன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 07, 2008

குழிக்குள்ள சோடியை இறக்கியாச்சு

அழகான சரி சோடி...



ஆனை மேல அம்பாரி...

கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்...




முதல் படம் போட்டிக்கு...மத்ததெல்லாம் ச்ச்ச்சும்மா...:)

Sunday, April 13, 2008

நானும் எனது தனிமையும்

தமிழில் புகைப்படக்கலை ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பைக் கேள்வி பட்டதும் தலைப்புக்கு ஏத்த படம் எடுக்கனும்னே தோணலை. தலைப்பைக் கேட்டதும் இரெண்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. தலைப்புக்கு கீழே இருக்கிற படங்கள் பொருந்துதோ இல்லையோ பாட்டுங்க 'சிக்'னு பொருந்தும்னு நெனக்கிறேன்.

முதல் பாட்டு ஒரு இந்திப் பாட்டு. அமிதாப் பச்சனின் கணீர் குரலில் வரும் ஒரு பாட்டு. வசனம்னு கூட சொல்லலாம். அமிதாப் உணர்ச்சி பூர்வமாப் பேசற வசனத்துக்கு நடுவுல லதா பாடுவாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அமிதாப் பகுதியை மொழிப்பெயர்த்து போட்டுருக்கேன். ஓகேவா இருக்கா?

படம் : சில்சிலா(1981)
பாடல் : ஜாவேத் அக்தர்
இசை : ஷிவ்ஹரி
பாடியது : அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர்

Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு
Tum hoti to kaisa hota, tum yeh kehti, tum voh kehti
நீ இருந்தால் இப்படி நடக்கும், நீ இதை சொல்வாய் நீ அதை சொல்வாய்
Tum is baat pe hairaan hoti, tum us baat pe kitni hansti
நீ இச்செயலால் கோபப்படுவாய், நீ அச்செயலால் எப்படி சிரிப்பாய்
Tum hoti to aisa hota, tum hoti to vaisa hota
நீ இருந்தால் அப்படி நடக்கும் நீ இருந்தால் இப்படி நடக்கும் இப்படியெல்லாம்
Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு

Yeh raat hai, yeh tumhaari zulfein khuli hui hai
இது இரவா அல்லது பரந்து விரிந்த உனது கூந்தலா?
Hai chaandni ya tumhaari nazrein se meri raatein dhuli hui hai
இது நிலவெளியா அல்லது உன் விழிகளால் வெள்ளையடிக்கப்பட்ட இரவா?
Yeh chaand hai ya tumhaara kangan
இது வெண்ணிலவா அல்லது உன் கைகளால் அலங்கரிக்கப்பட்ட வளையலா?
Sitaarein hai ya tumhaara aanchal
இவை நட்சத்திரங்களா அல்லது உனது புடவை தலைப்பா?
Hawa ka jhonka hai ya tumhaare badan ki khushboo
எனை மோதுவது காற்றின் அலையா அல்லது உன் தேகத்தின் வாசமா?
Yeh pattiyon ki hai sarsaraahat ke tumne chupke se kuch kaha hai
இவை இலைகளின் சலசலப்பா அல்லது உனது உதடுகளின் முணுமுணுப்பா?
Yeh sochta hoon main kab se gumsum
எப்போதிலிருந்து நான் வார்த்தைகளற்று போனேன் என்று நினைத்து பார்க்கும்
Ke jab ki mujhko bhi yeh khabar hai
வேளையில் எனக்கும் இது தெரிந்து தான் இருக்கின்றது
Ke tum nahin ho, kahin nahin ho
நீ இங்கு இல்லை, இல்லவே இல்லையென
Magar yeh dil hai ke keh raha hai
ஆனல் இந்த பாழும் இதயம் சொல்கின்றது
Ke tum yahin ho, yahin kahin ho
நீ இங்கு தான் இருக்கிறாய் இங்கு தான் எங்கோ இருக்கின்றாய் என்று





Get this widget


அடுத்த பாட்டும் இசையைக் குறைச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெல்லிசை மன்னர் போட்டுருக்கற ஒரு பாட்டு. எஸ்.பி.பி அப்படியே தன் குரலால் இப்பாட்டுக்கு உயிர் கொடுத்துருப்பார் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் இதுவும் ஒன்று.

படம் : வறுமையின் நிறம் சிவப்பு
பாடல் : மகாகவி பாரதியார்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியது : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ (2)

(தீர்த்தக்)





போட்டிக்குக் கொக்கு(முதல்) படத்தைக் கொடுக்கலாம்னு இருக்கேன். சரிங்களா?

Wednesday, March 12, 2008

பிரதிபலிப்பு - PIT மார்ச் மாத போட்டிக்காக

படம் 1:

Snow White

படம் 2:

Laughing Buddha

Sunday, March 09, 2008

531 பங்காரப்பேட் பாசெஞ்சர்

கடைசியா இதுக்கு முன்னாடி பயணிகள் தொடர்வண்டியில எப்போ பயணம் செய்தேன்னு ஞாபகம் இல்லை. அநேகமா பயணிச்சதே இல்லைன்னு தான்னு நெனக்கிறேன். ஆனா நேற்று எந்த வித முன்னேற்பாடோ, அவசியமோ இல்லாமல் பயணிகள் தொடர்வண்டியில் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுத்தான் 'அவன்'. மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காகப் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்திற்கு நேற்றுச் சென்றிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியாக இருந்த போதிலும் சனிக்கிழமை ஆதலால் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ஒரு பெட்டியில எத்தனை பேர் முன்பதிவு செய்திருக்காங்களோ அதை விட இரண்டு மடங்கு பேர் முன்பதிவு பெட்டியில முன்பதிவு செய்யாமல் ஏறுகிறார்கள். பகலில் சென்று இரவில் திரும்பி விடும் பிருந்தாவன், லால்பாக் ஆகிய தொடர்வண்டிகளில் வர வர நிலைமை மோசம் ஆகிக் கொண்டே செல்கிறது. முன்பதிவு செய்யப்பட்டப் பெட்டிகளில் அத்துமீறி ஏறுபவர்களைத் தடுக்க யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லும் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் அம்மா இரண்டு பைகளை எடுத்துக் கொண்டுத் தனியாக ஏறி அமர்வது கடினம் என்று எண்ணி நானும் ஏறினேன். ஆனால் ரயிலுக்குள் ஏறுவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. அதற்கு பின் அம்மாவுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரை எழுப்பி அம்மாவை அமர வைப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. நான் இறங்க முற்படும் போது யாருமே வழிவிடவில்லை. எடம் இல்லை, ஆவறதில்லை என்று சொல்லி என்னையும் ரயிலிலேயே பயணப் படுத்தினார்கள். சரி அடுத்த ஸ்டேஷனான வைட்ஃபீல்ட்டில் இறங்கிவிடலாம் என்று நினைக்க, அதிலும் விழுந்தது மண். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வைட்ஃபீல்டில் நிற்காது அடுத்தபடியாக பங்காரப்பேட்டில் தான் நிற்கும் என்று சொன்னார்கள். விதியை நொந்து கொண்டு பங்காரப்பேட் வரை டிக்கெட் இல்லாமல் நின்று கொண்டே பயணம் செய்தேன். ஏற்றிவிட வந்தவன் ரயிலில் பயணமான அனுபவமும் நமக்கு வாய்த்திருக்கிறதே என எண்ணி பின்னால் பெருமை பட்டுக் கொண்டேன். ஆக மொத்தம் இன்னும் நான் அனுபவிக்க நிறையவே இருக்கிறது :)

முக்கால் மணி நேரத்தில் அதிவேக விரைவு வண்டியில் கடந்தத் தூரத்தை பயணிகள் வண்டியில் கடப்பதற்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்திருந்த போதிலும் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பேருந்தைப் பிடிக்க ஏனோ தோன்றாததால் அங்கு நின்று கொண்டிருந்த 531 பங்காரப்பேட் பெங்களூர் பாசெஞ்சர் ரயிலில் ஏறிக் கொண்டேன். பாசெஞ்சர் ரயில் என்றதும் மரத்தினால் ஆன இருக்கைகளே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். எல்லாப் பெட்டிகளிலும் குஷன் இருக்கைகளே பொருத்தப்பட்டிருந்தன. உட்கார இடம் தேடிக் கொண்டிருக்கும் போது உண்ட களைப்பில் இருக்கைகளில் காலை நீட்டி சில பேரிளம்பெண்களும் மற்றும் சில பேரிளஆண்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்களுடைய சயனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் எப்படியோ ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்த நிலையிலேயே வண்டி புறப்பாட்டிற்காக 45 நிமிடங்கள் காத்திருந்தேன், எழுந்து நடமாடினால் உள்ள இடமும் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் தான். இது வரையிலான என்னை வளர்த்து ஆளாக்கிய, என்னுள் இருக்கும் இண்ட்ரோவெர்ட் அமர இடம் கிடைத்ததும் உயிர்த்தெழுந்தான். அது முதல் வண்டியிலிருந்து இறங்கும் வரை பல விதமான எண்ணங்களுக்கும் மன ஓட்டங்களுக்கும் காரணம் ஆனான். கோர்வையற்ற அம்மனவோட்டங்களின் பிரதிபலிப்பே இப்பதிவு.

"இந்த அம்மா மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தா இப்படி காரணம் இல்லாம பாசெஞ்சர் டிரெயினில் பயணிக்கிற நெலமை நமக்கு வந்திருக்குமா" என்று நினைத்தது என் மனம். ஏசி சேர் காரில் முன்பதிவு செய்கிறேன் என்ற கூறியதற்கு "வேணாம் வேணாம் ஏசியில எல்லாம் பண்ணாதே...எனக்கு ஏசி ஒத்துக்காது. குளுருல நடுங்கிக்கிட்டே போவனும்"னு சொன்னாங்க. "குளுருல நடுங்கற மாதிரி எல்லாம் இருக்காது...24 டிகிரி தான் மெயிண்டெயின் பண்ணுவாங்க"ன்னும் சொல்லிப் பார்த்தேன். "வேணாம்ப்பா, செகண்ட் க்ளாஸ்லேயே பண்ணு அப்படியே ஜன்னலோரம் உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டே போய்டுவேன், ஏசி எல்லாம் எனக்கு பழக்கமில்ல"ன்னு வந்தது பதில். "பழக்கமில்லன்னா என்ன? எப்பவுமே செகண்ட் க்ளாஸ்லே தானே போறீங்க? ஏசியில போனா தானே பழக்கம் ஆகும்" அப்படின்னேன். அதுக்கு வந்த பதிலான "நீ என்னப்பா பெரிய கம்பெனியில பெரிய வேலையில இருக்கே? எங்க வீட்டுக்காரரு ரிட்டையர்டு வாத்தியார் தானே?" என்னை யோசிக்க வைத்தது. நான் கூட வாத்தியார் பிள்ளையாக மட்டும் இருந்த நேரத்தில், தில்லியிலிருந்து சென்னைக்கு அனல் கக்கும் மே மாத வெயிலில் அச்சம் மடம் நாணம் இதை எல்லாம் மறந்து சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வெறும் பனியனோடு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தவன் தானே நானும். இப்போது சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்குக் கூட யோசிக்காமல் ஐராவதத்தில் டிக்கெட் எடுக்கிறேன். கையில் பொருள் சேரும் போது மனிதனின் தேவைகளும் அவன் நாடும் வசதிகளும் அதிகரிக்கிறது.

தமிழ் துணைப்பாட நூலில் படித்த ஒரு கதை "கலையின் விலை". ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதியது. கதையில் ஒரு எழுத்தாளர். திறம்பட எழுதக் கூடியவர். ஆனால் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வறுமையில் உழல்பவர். அவர் மனைவியும் மக்களும் அவருடைய இவ்வறுமையின் காரணமாக பல இன்னல்களை அனுபவிப்பர். யாரோ ஒருவர் வேலை தருகிறேன் நேர்காணலுக்கு வாருங்கள் என்று ரயில் டிக்கெட்டும் அனுப்பி அழைப்பார். தான் மிகவும் காதலிக்கும் எழுத்தைத் தியாகம் செய்கிறோமே என்ற வருத்தம் இருந்தாலும் தன் குடும்பத்தின் நிலையைக் கண்டு வெளியூர் செல்லத் தயாராகி ரயிலில் பயணப்படுவார். ரயில் எங்கோ ஒரு ஸ்டேஷனில் நிற்கும் போது யாரோ ஒருவர் - இவருடைய நெடுநாளைய வாசகராம், இவரை அடையாளம் கண்டு கொண்டு இவர் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார் "ஐயா! நான் உங்களுடைய பரம விசிறி..."இத்யாதி இத்யாதி என்று. வாசகர் சென்றதும் தன் கையைப் பார்ப்பார் எழுத்தாளர். அதில் அவர் காண்பது ஒரு துளி கண்ணீர். "ஆஹா! இதுவல்லவோ கலையின் விலை. இதற்கு எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும் ஈடாகுமா? பால்காரன் பாக்கியையும் மளிகைக் கடைகாரன் பாக்கியையும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். மனைவியை எதாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம். கலையை விடலாகாது"என்றெண்ணி அந்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிச் சென்று விடுவார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே இந்த கதை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. கலையின் மீது அவ்வளவு பற்றிருக்கும் போது எதற்காக ஐயா கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க? உங்களை நம்பி இருக்கும் உங்க மனைவியும் மக்களும் வறுமையில் வாடுவது எந்த விதத்தில் நியாயம்? நீ நேசிக்கும் தொழிலின் மூலமாக மனைவி மக்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை எனும் போது வேறு வேலை தேடிக் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே அழகு? அதையெல்லாம் வுட்டுட்டு கடனையெல்லாம் பாத்துக்கலாம் மனைவியை ஏமாத்திடலாம்னு இவரும் இறங்கிப் போய்டுவாராம். சுத்த ஹம்பக்கா இருந்தது படிக்கிறப்போ. ஒரு வேளை யாராச்சும் என்னை எங்கேயாச்சும் அடையாளம் கண்டுக்கிட்டு "ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"ன்னு சொல்லி என் கையில ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினா ஒரு வேளை நான் பொட்டித் தட்டறதை எல்லாம் வுட்டுப் போட்டு முழு நேர ப்ளாக்கர் ஆயிடுவேனோ என்னவோ? ஏனோ நேத்து இந்த கதை ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

ரயிலில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே மட்டும் வேடிக்கை பார்க்காமல் உள்ளே உட்கார்திருக்கும் மனிதர்களைக் கவனிப்பதும் ஒரு பொழுதுபோக்கு தான். ரயிலில் ஏறியதும் பசிக்கத் தொடங்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். எட்டு பழங்கள் பத்து ரூபாய்க்கு விற்கப் படும் சப்போட்டா பழங்களை அங்கேயே தின்று அதன் விதைகளை சீட்டுக்குக் கீழே போடுபவர்களையும், இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்ற அவித்த வேர்கடலை செவிக்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போகவே இன்னும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி அதன் குப்பைகளையும் பெட்டிக்குள்ளேயே போடுகிறவர்களையும் பார்த்துக் கொண்டே சென்றேன். எனக்கு எதிர் சீட்டில் ஒரு அப்பா, அம்மா, மகள் அடங்கிய மூவர் குழு வந்தமர்ந்தது. ரயில் பயணத்தில் வழி நெடுகத் தின்றுக் கொண்டே செல்பவர்கள் ஒரு ரகம் என்றால், ஏறி அமர்ந்ததும் தூங்கத் தொடங்குபவர்கள் இன்னொரு ரகம். நடுவில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த தந்தையின் மடியில் தலை வைத்து மகள் படுக்க, கணவரின் தோளில் சாய்ந்து மனைவி கண்ணயர்ந்தார். அம்மனிதர் இதை ஒரு பெருமையான நிகழ்வாகக் கருதியிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வளவு அசவுகரியமான நிலையிலும் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உயர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாரே ஒழிய, மகளிடமும் மனைவியிடமும் தன் அசவுகரியத்தைக் குறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. இன்னொன்னு கவனிச்சேன். மகளும் மனைவியும் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிக் கொண்டு வந்தாலும் மனிதர் சிறிது நேரம் கூட கண் அயரவில்லை. பொறுப்புகளைச் சுமக்கும் போது தூக்கம் எல்லாம் வராது என்பது உண்மை தானோ?

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போகும் சிறு ஸ்டேஷன்களிலும் நேற்று ரயில் நின்று நின்று சென்றது. அத்தகைய சிறு ஸ்டேஷன்களை நம்பியும் கிராமங்கள் இருக்கின்றன என்பதும் அதை நம்பி மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கைகளும் இருக்கின்றன என்பதும் புலனானது. ஒரு சனிக்கிழமை மதியம் பங்காரப்பேட்டை என்னும் ஊருக்கும் மாலூர் என்னும் ஊருக்கும் இடையே பாசெஞ்சர் ரயிலில் பயணிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என்றும் அவனுடைய சிந்தனைகள் எத்தகையதாக இருக்கும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். வாரத்தில் சில நாட்கள் ஒரு ஏசி ஆஃபீசில் உட்கார்ந்து பெட்டி தட்டிப் பிழைப்பை நடத்தும் என்னைப் போன்றவனுக்கு அது மட்டும் தானே செய்ய முடியும்?

பயணம் தொடரும்...

Saturday, March 01, 2008

கமலம்...பாத கமலம்...

படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்


கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்




பாடலைக் கேட்க :

Get this widget Track details eSnips Social DNA



கடந்த கால நினைவுகளில் இன்னும் பிரகாசமாக இருக்கக் கூடிய விஷயம் ஒன்று உள்ளது. அவ்விஷயம் இப்போது கிடைக்காமல் இருப்பது அந்த பழைய நினைவுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. அது - ஒத்த விருப்பம் உள்ள நண்பர்களுடன் இளையராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது. ராகம், தாளம் பற்றியெல்லாம் பேசியதில்லை...இருப்பினும் தலைவருடைய பாடல்கள் தரும் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு சுகம் தான். கல்லூரி படிக்கும் நாட்களில் நண்பன் தியானேசுவரன் தான் இளையராஜாவின் பழைய பாடல்களை எனக்கு அறிமுகப் படுத்தியவன். அதன் பின்னர் தில்லி சென்ற பிறகு இளையராஜாவின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்பது வழக்கம். இந்தூரில் இருக்கும் போது, எங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் ஹெட் ஒரு தீவிர இளையராஜா ரசிகர் என்று தெரிந்து கொண்டேன். சனிக்கிழமை மாலைகளில் சும்மாவே என்னை தன் அறைக்குக் கூப்பிட்டு இளையராஜாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். தேசிய விருது வாங்கிய திரைப்படம் என்று மோகமுள் திரைப்படத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருந்திருக்கிறேன். ஆனால் அப்படத்தில் மேற்கண்ட பாடலையும் அதன் அழகினையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர் அவர் தான்.

"எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்ப்பா. எங்க ஊருல ஒரு அதிகாலை நேரத்து காட்சியைப் பார்த்த மாதிரியே இருக்கும் - நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும் வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை - வரிகள். லிரிக்ஸும் ராஜாவோட மியூசிக்கும் ஜஸ்ட் அமேசிங்" அப்படின்னார். அதுக்கப்புறம் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் அதன் அழகு புரிந்தது. மாட்டின் மணியோசை தரும் மகிழ்ச்சியை இதுவரை உணர்ந்ததில்லை. ஆனால் அதை எப்போதாவது கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் அம்மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தன் வரிகளின் மூலம் ஏற்படுத்தியிருப்பார் கவிஞர் வாலி. செந்தமிழ்ப் பண்ணும் உயரிய இசையும் மனதுக்கு எவ்வாறு குதூகலத்தைக் கொடுக்கும் என்பதற்கு இப்பாடல் நல்லதோர் உதாரணம். இப்பாடலில் நானாகக் கவனித்த ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அது பாடலின் 1:50வது நிமிடத்திலிருந்து 2:13ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் முதல் சரணத்தில் "இதமான இளங்காற்று" எனும் தொடங்கும் வரிக்குச் சற்று முன்னர் வரும் ஒரு தபலா/மிருதங்கம் நோட். உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்...பாடல் வரிகளுக்கு நடுவில் தபலா/மிருதங்கத்தில் மெல்லமாகத் தட்டி இடைவெளி கொடுத்தது போல இருக்கும் அந்த நயம் உண்மையிலேயே மனதைத் துள்ளச் செய்யும். பாடலுக்கும் அழகு சேர்க்கும். அதே போல பாடலின் 3:39வது நிமிடத்திலிருந்து 4:02ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் இரண்டாம் சரணத்தில் "திருவீதி வலம் வந்த" எனும் தொடங்கும் வரிக்கு முன்னரும் இதை ரசிக்கலாம். நீங்களும் இப்பாடலின் வரிகளையும் இசையையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

படங்களைப் பற்றிய குறிப்புகள் :
1. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் சார்கேஜ் காந்திநகர் நெடுஞ்சாலையில் செல்லும் ஒட்டக வண்டி. அகமதாபாத்தில் இருந்த போது நிறைய ஒட்டகங்களைப் பார்த்திருக்கிறேன். காய்கறிகள் விற்கும் வண்டியைக் கூட அங்கு ஒட்டகம் இழுத்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.

2&3 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள "தக்ஷின சித்ரா" எனும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் எடுத்த படங்கள்.

Saturday, February 16, 2008

வாலாட்டி நின்னானாம் சீமைத்துரை...

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...பதிவின் தொடர்ச்சி.

பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர். கடுமையான பீரங்கித் தாக்குதலுக்குப் பின் அக்கோட்டை தகர்ந்தது. கன்னிமரா நூலகத்தில் நாங்கள் மிக ஆவலாகத் தேடிய ஜேம்ஸ் வெல்ஷ் எழுதிய 'போர் நினைவுகள்' புத்தகத்திலும் நாங்கள் எதிர்பார்த்த வகையில் கோட்டையின் கட்டுமானத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. கோட்டையின் நீளம், உயரம், அகலம் மற்றும் அமைப்பு ஆகியவற்றைப் பற்றி குறிப்புகள் இருந்த அளவுக்கு கட்டுமானத்தைப் பற்றி எதுவும் இருக்கவில்லை. ஒரு ஆங்கிலேய அதிகாரியினுடைய போர்க் குறிப்புகளில் எதிரியினுடைய கட்டுமானத் நுட்பத்தைப் பற்றிய குறிப்புகளை எதிர்பார்த்தது எங்கள் தவறு தான்.

அதன் பின்னர் போர்ட்லாண்ட் சிமெண்டின் மூலக்கூறுகளைக் குறித்து படித்தோம். அதிலிருந்து எதாவது பிடிபடுமா என்ற எண்ணத்தில். கட்டுமானத்தில் உபயோகப்படுத்தப் படும் எந்தவொரு பொருளுக்கும் தாங்குதிறன்(Strength) இன்றியமையாத மூலக்கூறு(attribute). இத்தாங்கு திறன் இருவகைப்படும் -அவையாவன அழுத்தம் தாங்குதிறன்(Compressive Strength), இழுவை தாங்குதிறன்(Tensile Strength). அழுத்தம் தாங்குதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் கொள்ளளவைக்(Volume) குறைக்கும் அழுத்தம் கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். இழுவை தாங்கிதிறன் ஆனது ஒரு பொருளின் மீது அதன் நீளத்தை அதிகரிக்கக் கூடிய இழுவை சக்தி கொடுக்கப்படும் போது அதனால் தாங்கக் கூடிய சக்தியின் அளவு ஆகும். சுண்ணாம்பு, சிலிகா மற்றும் பல கேல்சியம் தாதுக்கள் அடங்கிய வெறும் சிமெண்டுக்கு அழுத்தம் தாங்குதிறன் அதிகம், ஆனால் இழுவை தாங்குதிறன் குறைவு. சிமெண்டினை இந்த குறைபாட்டினைக் களையவே மணல், சிமெண்ட் மற்றும் கருங்கல் கலவையான கான்க்ரீட் உபயோகிக்கிறார்கள். இக்கலவை நீரோடு நடத்தும் வேதியியல் மாற்றத்தை Hydration என்கின்றனர். Hydration எனும் மாற்றத்தால் கான்க்ரீட் கல் போன்ற தோற்றத்தைப் பெறுகிறது. சிமெண்டினைக் காட்டிலும் கான்க்ரீட்டின் அழுத்தம் தாங்குதிறன் அதிகமானது. ஆயினும் இழுவை தாங்குதிறன் ஆனது அதே அளவீட்டில்(proportion) பெருகுவதில்லை.

சிமெண்டினை விட தாங்குதிறன் அதிகமாகக் கொண்ட கான்க்ரீட்டினால்(Plain Cement Concrete -P.C.C) கூட அதிகமான இழுவையைத் தாங்க இயலாது. இக்குறைபாட்டினைப் போக்குவதற்காக கான்க்ரீட்டுடன் அதிக இழுவை தாங்குதிறன் கொண்ட எஃகினைப்(steel) பயன்படுத்துகின்றனர். இவ்வகை கான்க்ரீட்டினை(Reinforced Cement Concrete -R.C.C) பயன்படுத்துகின்றனர். பாஞ்சாலங்குறிச்சி கோட்டையினைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கரும்புச் சக்கையின் பயன்பாடு களிமண், சுண்ணாம்பு, பதநீர் கலவையைப் பலப் படுத்துவதற்காகத்(reinforcement) தான் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் RCCயில் பயன்படுத்தப் பெறும் ஸ்டீல் வழங்கும் தாங்குதிறனைக் கரும்புச் சக்கை வழங்குமா என்பது சந்தேகமே. Reinforcement ஆன கரும்புச் சக்கையை விடுத்து வெறும் களிமண், பதநீர் கலவையானது போர்ட்லாண்ட் சிமெண்டினைக் காட்டிலும் அதிக அழுத்தத் தாங்குதிறன் கொண்டாலும் இழுவை தாங்குதிறன் இல்லாமல் தற்கால கட்டுமானப் பணிகளுக்கு நம் "பழங்கால சிமெண்டினைப்" பயன்படுத்துவது சிரமமே என்று சிறுவர்கள் ஆகிய நாங்கள் பரிசோதனை சாலைக்கு செல்லாமல் நாங்களாகவே ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் பிறகு நான் 'C' படிப்பதிலும் 'CAT'க்குத் தயார் செய்வதிலும், நண்பன் ஃப்ரான்சிஸ் GREக்குத் தயார் செய்வதிலும் கவனம் செலுத்தத் துவங்கி விட்டோம்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2008இல் அப்போது நாங்கள் அவ்வளவு கஷ்டப் பட்டு தேடிய "போர் நினைவுகள்" புத்தகம் கூகிளில் மின்நூல் வடிவில் கண்டேன். அப்புத்தகத்தை நீங்களும் தரவிறக்கம் செய்யலாம், படிக்கலாம். கல்லூரியில் படிக்கும் போது சிமெண்டிற்காக மட்டும் ஆராய்ச்சி செய்த அப்புத்தகத்தை தற்போது மீண்டும் "ஊமைத்துரை" எனும் தலைவனுக்காகப் படித்தேன். ஏன் எனில் ஊமைத்துரை பெரும்பங்கு வகித்து வெள்ளையர்களை எதிர்த்த இரண்டாம் பாளையக்காரர்கள் போர்(Second Poligar War), ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் மண்ணில் விளைந்த முக்கியமான ஒரு போராகும். 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்கு முன்னோடியாகவும் விளங்கியது இப்போர். அதுவரை கும்பினியர் கண்டிராத அளவு அவர்களுடைய தரப்பில் பெரும் உயிர்ச் சேதத்தையும் விளைவித்த ஒரு போருமாகும். அப்போரில் ஊமைத்துரையின் பங்கினைக் குறித்து தேடிக் கொண்டிருந்த போது, வெல்சின் "போர் நினைவுகள்(Military Reminiscences)" மின்நூலையும், தமிழ் அரங்கத்தில் வேல்ராஜன் அவர்கள் எழுதிய "தென்னிந்தியாவில் துவங்கிய முதல் சுதந்திரப் போரின் தமிழகக் களம்" என்ற பதிவையும் படித்தேன்.



"ஆங்கிலேயர்களால் தரைமட்டமாக்கப்பட்டு, உழுது, எருக்கு விதைக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆறே நாட்களில் அதிசயம் போல் எழுந்து நின்றது. தலித் மக்கள், மீனவர்கள் என்று எல்லாப் பிரிவு உழைக்கும் மக்களையும் திரட்டி ஊமைத்துரையும், சிவத்தையாவும் மக்களோடு மக்களாய் மண் சுமந்து இரவும் பகலும் அந்தக் கோட்டையைக் கட்டினார்கள். வெள்ளையனுக்கு எதிராக மக்களைத் திரட்டும் கலையில் தம்பிகள் அண்ணனை விஞ்சினார்கள். சிவத்தையா பாஞ்சாலங்குறிச்சியின் அரசனாக அறிவிக்கப்பட்டார்" என எழுதுகிறார் வேல்ராஜன்.

ஆறு நாட்களில் எழுந்து நின்ற கோட்டையையும் அதை பாதுகாத்துக் கொண்டிருந்த பாளையக்காரர்களையும் கண்டு மலைத்த ஆங்கிலேயப் படைகள், போரிட்டு மடிவது மூடத்தனம் என எண்ணி பாளையங்கோட்டைக்கு திரும்பச் சென்றனர் என எழுதுகிறார் வெல்சு.


பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பி வரும் அவசரத்தில், சிறை இருந்த வழியிலிருந்து ஒரு மைல் தூரத்தில் விருந்தில் கலந்துக் கொண்டிருந்த ஆங்கிலேயரைக் கவனிக்காமல் வந்துவிட்டனர் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள். சிறையிலிருந்து தப்பிய அவர்கள் மட்டும் ஆங்கிலேய உயரதிகாரி வீட்டில் விருந்தில் ஆயுதங்கள் ஏதுமின்றி கலந்து கொண்டிருந்த படையினர் மீது தாக்குதல் நடத்தியிருந்தால் நாங்கள் அனைவரும் மடிந்திருப்போம் என எழுதுகிறார் கர்னல் ஜேம்ஸ் வெல்ஷ். பாஞ்சாலங்குறிச்சி வரலாறும் வேறு விதமாக இருந்திருக்கும்.


"போர் நினைவுகள்" நூலில் அச்சிடப்பட்டிருக்கும் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் படம்.


1977 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை நினைவுச் சின்னம்.


திருச்சியிலிருந்து கர்னல் அக்னியூ தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி வந்து சேர்ந்த பீரங்கிப் படையினர், அக்கோட்டையைக் கண்டதும் இதை அழிக்கவா உங்களுக்குத் தளவாடங்கள் போதவில்லை என்று அங்கு ஏற்கனவே சண்டையிட்டுக் கொண்டிருந்த படையினரைப் பார்த்து ஏளனம் செய்தனராம். அக்கோட்டையை முதலில் கண்டவர்களுக்கு அக்கோட்டை "முட்டைக்கோசுகளைச் சேமித்து வைக்கும் ஒரு கிடங்கு போலத் தோன்றியதாம்".


சென்னையிலிருந்தும் திருச்சியிலிருந்தும் படைகள் வந்து சேருவதற்கு முன்னர், பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் காடல்குடியிலும் தூத்துக்குடியிலும் ஆங்கிலேயப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர். தூத்துக்குடி கோட்டையில் இருந்த ஆங்கிலேய அதிகாரி பேக்கார்ட் என்பாரைப் போர்க் கைதியாகத் தூக்கி வந்துவிட்டனர் வீரர்கள். அவர்களைத் தொடர்ந்து கோட்டைக்கு வந்த பேக்கார்ட்டுடைய மனைவி தன் கணவனுக்கு உயிர்ப் பிச்சை கொடுக்குமாறு வேண்டினார். அதற்கு செவிமடுத்து அவ்வதிகாரியின் உயிருக்கு ஆபத்தில்லாமல் விடுவித்த மனிதாபிமானம் 'கேட்' என்று ஆங்கிலேயரால் அழைக்கப்பட்ட 'கட்டபொம்மன் நாயக்"கிடம் இருந்தது என்று எழுதுகிறார் வெல்சு. ஆனால் 1799ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட கட்டபொம்முவைக் குறித்து 1801 ஆம் ஆண்டில் வெல்சு தன் குறிப்புகளில் ஏன் குறிப்பிட வேண்டும் என்ற ஐயம் எழுகிறது. வேல்ராஜன் அவர்கள் அவ்வாறு உயிர்ப்பிச்சை தந்தவர் ஊமைத்துரை என்றே எழுதுகிறார். அவர் சொல்வது போல் அது ஊமைத்துரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்.


மற்ற பாளையக்காரர்களோடு நெருக்கமாகப் பழகி அவர்கள் அன்பினைப் பெற்றது போல் அல்லாமல் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்மனோடு பேனர்மேன் தலைமையிலான ஆங்கிலேயர் கடுமையான முறையில் நடந்து கொண்டது ஏன் என்று தனக்கு தெரியவில்லை எனவும், அதன் காரணமாகவே அவர்கள் தங்களை எதிரிகளாகக் கருதினர் என்றும் தெரிவிக்கிறார் வெல்சு.


பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வீழ்ந்ததற்குப் பின் ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்துத் தப்பிக்கும் போது கடும் காயமடைகிறார். அச்சமயத்தில் அவரருகே இன்னொரு போர்வீரனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான். அவனைக் காண வரும் தன் தாயிடம் "அம்மா நான் பிழைக்க மாட்டேன், என் தலைவரைக் காப்பாற்றுங்கள்" எனக் கூறி உயிர் விடுகிறான். அச்சமயத்தில் எட்டையபுர படையினர் பின் தொடர அத்தாய் ஊமைத்துரையின் மீது வெள்ளைத் துணி போர்த்தி, பின் தொடர்ந்து வந்த படையினரிடம் "என் மகன் அம்மை நோயினால் இறந்து விட்டான்" எனக் கூறுகிறாள். இதைக் கேட்ட வீரர்கள் தலைதெறிக்க ஓடுகின்றனர். இவ்வாறாக ஊமைத்துரையின் உயிரைக் காப்பாற்றுகிறாள் அந்த ஏழைத்தாய். அதன் பின்னர் ஊமைத்துரை கமுதி சென்றடைகிறார். மருது சகோதரர்களின் துணையோடு போரைத் தொடர்கிறார். ஆனாலும் 1801ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளையரால் கைது செய்யப்பட்டுத் தன் சகோதரர் துரைசிங்கத்துடன் தூக்கிலிடப் படுகிறார்.

இரண்டாம் பாளையக்காரர் போரில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட கர்னல் ஜேம்ஸ் வெல்சு "தான் இதுவரை கண்ட மனிதர்களிலேயே மிகவும் மேன்மையும் சிறப்பும் கொண்ட தங்கிய மனிதனாக ஊமைத்துரையைக் காணுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். ஊமைத்துரையின் தலைமையை ஏற்று அவர் சொல்படி நடப்பதற்கு ஒவ்வொரு பாளையக்காரரும் தயாராக இருந்தனர் என்றும், அவருடைய வாக்கை வேதவாக்காக ஏற்றனர் என்றும் எழுதுகின்றார். ஒரு கையில் வைக்கோல் துண்டுகளை ஏந்தி தன் வாயால் அவற்றை ஊதி இது போல வெள்ளையர்களையும் ஊதி அழித்துவிடுவேன் என சைகையாலேயே தெரிவிப்பாராம்.


கடைசியாக, மே 2006இல் கீற்று இதழில் "கதையாடல்களில் கட்டபொம்மன் வரலாறு" எனும் தலைப்பில் பேராசிரியர்.மாணிக்கம் அவர்களுடனான பேட்டியில் அவர் சொல்லியுள்ள கருத்துகள் நினைவில் நிறுத்தத் தக்கன -
"கடந்த கால வரலாற்றைச் சரியாக உணர்ந்து கொண்டால் தான் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது வரலாற்றுத் தத்துவம். அது ஒருபுறம் இருக்க, கட்டபொம்மன் ஊமைத்துரை, மருது பாண்டியர் போன்றவர்கள் ஆதிக்க சக்தியின் அடக்குமுறையை எதிர்த்த ஒரு பண்பின் கூறு, அல்லது வடிவமாகும். இத்தகைய பண்பு மனித சமுதாயத்திற்கு வேண்டிய ஒன்று. எல்லாக் காலங்களிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள். அடக்கு முறையை ஏவி மக்களை ஒடுக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளதை வரலாறு உணர்த்துகிறது. எல்லாக் காலங்களிலும் ஏதாவது ஒரு இயக்கம் உரிமைக்காகப் போராடிக் கொண்டே இருக்கிறது"

"விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்த கட்டபொம்மன் கதைப்பாடல்கள் பாடப்பட்டதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். எனவே தென்னாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களாகிய அழகுமுத்து சேர்வை, புலித்தேவர், கட்டபொம்மன், மருதுபாண்டியர், ஊமைத்துரை, வ.உ.சி., பாரதி போன்றவர்களைச் சாதிக் கூண்டுக்குள் அடைத்துவிடாமல், ஆதிக்கச் சக்திகளின் கொடுமையை எதிர்த்த விடுதலைப் போராட்ட வீரப் பண்பின் அடையாளமாக - வடிவமாகக் கொண்டு சென்றால் மனித குலத்திற்கு நன்மை விளையும்."

ஒரு வாரமாக தமிழ்மண நட்சத்திரமாகப் பதிவிட வாய்ப்பளித்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கும், பின்னூட்டமிட்டு பெருமளவு ஆதரவு அளித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு என் நட்சத்திர வாரத்தை இனிய நினைவுகளுடன் நிறைவு செய்கிறேன். வணக்கம்.

வந்தானாம் வந்தானாம் ஊமைத்துரை...

சில சமயங்களில் வரலாற்றில் புகழ்பெற்ற மனிதர்களையும், வீரர்களையும் பற்றித் தெரிந்து கொள்ளும் எண்ணமில்லாமல் வரலாற்றைத் தோண்டும் தேவை ஏற்படலாம். அப்படி ஒரு தேவை/வாய்ப்பு எனக்கு 1995இல் ஏற்பட்டது. ஒரு ஆர்வத்தில் பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு படிக்கும் போது நண்பன் பிரான்சிஸ் சேவியர் துணையுடன் பாஞ்சாலங்குறிச்சியின் வரலாற்றைப் படிக்க ஆரம்பித்தேன். நான் தெரிந்து கொள்ள நினைத்தது ஒன்று, ஆனால் அதை தாண்டிப் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொண்டேன். அதைப் பற்றித் தான் இந்தப் பதிவு.

1995ஆம் ஆண்டு அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கும் போது "பொறியியல் - அறிமுகம்"(Introduction to Engineering) என்று ஒரு தாள் எங்கள் பாடத்தில் இருந்தது. கிட்டத்தட்ட வரலாறு பாடம் போலத் தான் இருக்கும் அது. பொறியியல் உருவாகக் காரணமாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்கள். உதாரணமாக கரிகாலன் கல்லணை கட்டியது, ஜார்ஜ் ஸ்டீவன்சன் நீராவி எஞ்சின் கண்டுபிடித்தது, சார்லஸ் பேப்பேஜ் கணிப்பொறியின் முன்னோடியான ஒரு கருவி கண்டுபிடித்தது, வில்லியம் ஆஸ்பிடின் என்பார் போர்ட்லாண்டு சிமெண்டு கண்டுபிடித்தது இப்படியாகப் பல வரலாற்றுச் செய்திகளும் இந்நிகழ்வுகள் பொறியியலின் வளர்ச்சியில் ஏற்படுத்திய தாக்கங்களைப் பற்றியும் அதில் சொல்லப்பட்டிருக்கும். இதில் கடைசியாகச் சொன்ன போர்ட்லாண்டு சிமெண்டு பற்றிப் படிக்கும் போது, இச்சிமெண்டினைக் கண்டுபிடிப்பதற்கு முன்னர் கட்டிடங்களையும், அணைகளையும் எவ்வாறு கட்டியிருப்பார்கள் என்ற ஒரு கேள்வி பிறந்தது.

அக்கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்த போது, வீரபாண்டிய கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் அடைபட்டிருந்த கட்டபொம்முவின் இளைய சகோதரர்களான ஊமைத்துரை, துரைசிங்கம் ஆகியோர் வீரர்களின் துணையோடு சிறையில் இருந்து தப்பி தங்கள் ஊரான பாஞ்சாலங்குறிச்சி வந்தடைந்து ஆறே நாட்களில் ஒரு கோட்டை கட்டியது, அக்கோட்டையின் வலிமை, அதை அழிக்க வெள்ளையர்களின் கும்பினிப் படை பட்டபாடு ஆகியவற்றை தமிழ் துணைப்பாட நூலில் படித்ததும் நினைவுக்கு வந்தது. அக்கோட்டை கட்டப்படுவதற்கு என்ன மாவுப் பொருளை(சிமெண்ட்) உபயோகித்திருப்பார்கள் என ஆராய்ச்சி செய்யலாம் என நானும், நண்பன் பிரான்சிசும் முடிவு செய்தோம். அப்போதெல்லாம் சுலபமாக ஒரு செய்தியைத் தேடுவதற்கு இப்போதிருப்பது போல இணையம் என்று ஒன்று இருக்கவே இல்லை. அதனால் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதிலும், எங்கிருந்து தொடங்க வேண்டும், எந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என அறிவதில் சில சிக்கல்கள் இருந்தன. முதற்கட்ட நடவடிக்கையாக எட்டாம் வகுப்பு(அது தான் என நினைக்கிறேன்) தமிழ்த் துணைப்பாட நூலைத் தேடினோம். அதிலிருந்து அக்கோட்டையைக் களிமண்ணும், சுண்ணாம்பும், பதநீரும் கலந்து கட்டினர் என்றுத் தெரிந்து கொண்டோம்.

அதன் பின்னர் ஜேம்ஸ் வெல்சு எனும் ஆங்கிலத் தளபதி, இந்தியாவில் தன்னுடைய போர் நினைவுகளை ஒரு தொகுப்பாக எழுதி வைத்திருந்ததையும், அப்போர்க் குறிப்புகள் பல வரலாற்று ஆசிரியர்களுக்குச் சான்றாகப் பயன்படுவதையும் அறிந்து கொண்டோம். அதிலும் நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் "பழங்கால சிமெண்ட்" பற்றிய குறிப்பு இருக்குமா எனத் தெரியாது. இருந்தபோதிலும் வெல்ஷ் எழுதிய "போர் நினைவுகள்"(Military Reminiscences) என்ற புத்தகத்தைத் தேடினோம். ஆனால் அப்புத்தகம், அண்ணாப் பல்கலைக்கழக நூலகம், சென்னைப் பல்கலைக்கழக நூலகம் என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அது கிடைக்காத பட்சத்தில் வேறு வரலாற்று புத்தகங்களைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடிப் படித்தோம். அப்போது ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது. பள்ளிக்கூடத்தில் வரலாற்றுப் புத்தகத்தில் ஒன்றிரண்டு பக்கங்களைப் படித்து ஒரு வரலாற்று நிகழ்வினை அறிந்து கொள்வதும், அதனை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறுவதும் சுலபமானது. அதே வரலாற்று நிகழ்வினை வெவ்வேறு வரலாற்றுச் சான்றுகளில் இருந்து தேடிக் கண்டுபிடித்து அதிலிருந்து நாமாகவே ஒரு முடிவுக்கு வருவது என்பது மிக மிகக் கடினமானது. சிமெண்டினைப் பற்றி நாங்கள் வரலாற்று நூல்களில் தேடும் போது கட்டபொம்மனைப் பற்றியும், ஊமைத்துரையைப் பற்றியும் கூட நிறைய படித்தோம். ஆனால் ஒவ்வொரு ஆசிரியருக்கும் இவர்களைப் பற்றியும் இவர்களுடைய விடுதலைப் போரினைப் பற்றியும் ஒவ்வொரு விதமான கண்ணோட்டம் இருந்தது. வரலாறு என்பது சுலபத்தில் திரிக்கப் படக்கூடிய தன்மை பெற்றது எனவும் அறிந்தோம்.

தேவநேயப் பாவாணர் நூலகத்தில் இருந்து கிடைத்தத் தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுப் புத்தகங்களில் ஒன்றில் பாளையங்கோட்டையில் இருந்து தப்பி வந்து ஊமைத்துரை கட்டிய அக்கோட்டை களிமண்ணும், பதநீர் பாகும், கரும்புச் சக்கையையும் கலந்து செய்யப்பட்ட "மாயக் கோட்டை" என்று ஒரு வரியில் எழுதியிருந்தது. அதற்கு மேல் கோட்டையைப் பற்றிய நாங்கள் தேடிய விரிவான குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அப்புத்தகங்களின் பெயர்களும், அதை எழுதிய வரலாற்று ஆசிரியர்களின் பெயர்களும் எதுவும் தற்போது நினைவில் இல்லை. (ம.பொ.சி அவர்கள் கட்டபொம்மன் வரலாறு குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் என்பதையும் சமீபகாலங்களில் தான் தெரிந்து கொண்டேன். அதை அப்போது நான் படித்திருக்கவில்லை). அச்சமயத்தில் தான், சென்னையில் உள்ள அரசு கன்னிமரா பொது நூலகத்தில் பழமையான நூல்கள் இருக்கும் என்றும் அங்குச் சென்று தேடலாம் என்றும் யாரோ சொன்னார்கள். அங்கு ஜேம்ஸ் வெல்சு எழுதிய "போர் நினைவுகள்" போன்ற புத்தகங்களைக் குறிப்பெடுப்பதற்காக பொதுமக்களுக்கும் தருகின்றனர். இதற்கெனவே அங்கு ஒரு தனிப் பகுதி உள்ளது. புத்தகத்தின் பெயரையும், நமது விவரங்களையும் சொல்லிப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு அங்கேயே குறிப்பெடுத்துக் கொண்டு திருப்பித் தந்துவிட வேண்டும். 1830 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தை கையில் வாங்கி நான் படித்தது அதுவே முதல்முறை. அதை நினைக்கும் போது மெய்சிலிர்த்தது.

அதை படித்த போது தெரிந்து கொண்டது - கட்டபொம்மனின் மறைவிற்குப் பின்னர், பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர்களால் பெரிதாகத் தொல்லை ஏதும் வரப் போவதில்லை என்ற நினைப்பிலேயே ஆங்கிலேயர் இருந்தனர். பாளை சிறையில் இருந்து தப்பிய ஊமைத்துரை மற்றும் ஏனைய வீரர்களையும் பின் தொடர்ந்து சென்ற கும்பினிப் படை, பாஞ்சாலங்குறிச்சி மண்ணில் ஒரு புல் பூண்டு கூட வளரக் கூடாது என்று எண்ணி ஆமணக்கு விதைகளை விதைத்து அழித்திருந்த கட்டபொம்மனின் கோட்டை ஆறே ஆறு நாட்களில் மாயமாய் எழுந்து நின்றது கண்டு வியந்தனர். ஆயினும் அதைப் பெரிதாக எண்ணாமல் போர்புரியத் தொடங்கியவர்களுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கும்பினிப் படையின்(இது 'கம்பெனி படை' என்பதின் திரிபாக இருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்) ஒவ்வொரு வீரனும் கோட்டையை நெருங்கிய மாத்திரத்திலேயே வேலாலும், வாளாலும் வெட்டித் தூக்கி எறியப் பட்டனர். ஆனால் தங்கள் படைவீரர்களைக் கொன்று குவிக்கும் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் கோட்டையின் எப்பகுதியில் ஒளிந்து தாக்குகிறார்கள் எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. பாளையங்கோட்டையிலிருந்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்கொண்ட சிறு படையினால் கோட்டையை வீழ்த்த முடியாது என அறிந்த வெள்ளையர்கள் சென்னையிலிருந்தும், திருச்சியிலிருந்தும் கூடுதல் படைகளையும், தளவாடங்களையும் தருவித்தனர்...

(நாளை நிறைவு பெறும்)

Friday, February 15, 2008

தடிப்பசங்க #8

காட்சி 8 : பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?

நமக்கு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்கங்கிறதை விட நாம எத்தனை பேருக்கு பாய் ஃப்ரெண்டா இருக்கோம்ங்கிறது தான் முக்கியம். பில்லா மொழியில் சொல்லனும்னா சரித்திரத்தின் பக்கங்களை மெல்லமா புரட்டிப் பாத்தா அது நமக்கு கத்துக் கொடுக்கறது ஒன்னே ஒன்னு தான் - நாம ஊருக்குள்ள பெரிய மனுஷனா நடமாடனும்னா எத்தனை பொண்ணுங்களுக்கு வேணாலும் பாய் ஃப்ரெண்டா இருக்கலாம். நல்லாருக்காங்க? மண்டபத்துல யாருகிட்டயும் எழுதி வாங்காம நானே சுயமா சிந்திச்சு எழுதுனது. நிற்க - இது ஒரு டோட்டல் டேமேஜ் பதிவு...சே...சே...அண்ணன் நல்லவரு வல்லவருன்னு இண்ட்ரோ எல்லாம் கொடுத்துட்டு என்னை நானே டேமேஜ் பண்ணிக்குவேனா? தடிப்பசங்களில் இளையவரு நம்ம இளவல் யார் யாருக்கெல்லாம் பாய் ஃப்ரெண்டாப் பணியாற்றியிருக்காருன்னு மனம் தெறந்து சொல்லப் போறேன் - அண்ணன் கல்யாணம் ஆனவன்ங்கிறதுனாலே அடிக்க மாட்டாருங்கிற நம்பிக்கையில்:) மறுபடியும் நிற்க - நீ யாருக்கும் பாய் ஃப்ரெண்டா இருந்ததில்லையான்னா கேக்கறீங்க? தடிப்பசங்க #3 இல் இளையவரு எங்கம்மா கிட்ட சொன்ன அதே பதிலை நானும் சொல்லிக்கிறேன் - "நான் பொண்ணுங்க கிட்டல்லாம் பேச மாட்டேன் :)))))".

சரி...நீங்க ஒரு அரை டவுசர் போட்ட பாயா(boy) இருக்கீங்க. அக்கா, ஆண்ட்டி, ஆயா, க்ளாஸ் டீச்சர் இப்படின்னு யாரு கிட்டயும் பாகுபாடு காட்டாம கலகலப்பா துறுதுறுன்னு பேசறீங்க. என்னாகும்னு நெனக்கிறீங்க? உங்களை விட பெரிய ஏஜ் க்ரூப்புல இருக்கற கேர்ள்ஸ்:) பாயான உங்களைத் தங்களோட ஃபிரெண்டா ஏத்துக்குவாங்க. அந்த ஃப்ரெண்ட்ஷிப்பை எடுத்துச் சொல்ற விதம் கேர்ளுக்குக் கேர்ள் மாறுபடும். ஆனா ஒன்னுங்க...அடக்கமான பையன் அமைதியான பையன்னு மட்டும் ஸ்கூல்ல வீட்டுல சுத்துவட்டாரத்துல பேர் எடுத்திட்டீங்கன்னு வையுங்க...நான் மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் அனுபவிக்க முடியாது...அதை எல்லாம் அனுபவிச்சங்கச் சொல்றதைக் கேட்டு நான் எழுதறேன் பாருங்க...அந்த மாதிரி படர்க்கையில் எழுத தான் முடியும். டிரேடிஷனலா பாத்தீங்கன்னா கூட கேர்ள்ஸ்க்கு துடுக்காப் பேசற கார்த்திக் மாதிரியான கேரக்டர்(மௌன ராகம் "மிஸ்டர் சந்திரமௌலி") தான் புடிக்கும், மழையில நனைஞ்சி ஊரெல்லாம் சுத்திட்டு வந்தாலும், பேக்கு மாதிரி உக்காந்து பொண்ணு பாத்துட்டு புடிச்சிருக்குன்னு சொல்ற அப்பாவி "மோகன்" கேரக்டர்ல அவ்வளவா விருப்பம் இருக்காது...என்ன நான் சொல்றது சரி தானே? :)))

இளையவர் இருக்காரே அவரோட குழந்தைப் பருவம் முழுவதும், எங்க வீட்டு ஓனர் ஆண்ட்டி அவங்களோட மூனு பொண்ணுங்க கிட்டத் தான் கழிஞ்சது. மூணு நாலு வயசு வரைக்கும் அவரு எங்க வீட்டுல இருந்ததை விட அக்காங்க வீட்டுல இருந்தது தான் அதிகம். தலைவர் காலையிலே குளிச்சி முடிச்சி சாப்பிட்டதும் வந்து அவங்க வீட்டுக்குத் தூக்கிட்டுப் போயிடுவாங்க. அதுக்கப்புறம் நடுவுல லஞ்ச் பிரேக்குக்கு ஒரு தடவை கீழே எறங்கி வருவார். கொஞ்ச நேரம் தூக்கத்துக்கு அப்புறம் மறுபடியும் ஈவினிங் செஷன் அக்காங்க வீட்டுல. நடுவுல பிஸ்கட், நொறுக்குத் தீனி இதெல்லாம் கூட அவங்களே பாத்து குடுத்துடுவாங்க. கொஞ்சம் பெரியவர் ஆகி கால் முளைக்கத் தொடங்கினதும், "அம்மா! நான் அக்கா வீட்டுக்குப் போறேன்"னு தானாவே மாடிப்படி ஏறி மேலே போயிடுவாரு. இப்படியாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் வளர்ந்து பெரிதான நம்ம கதையின் ஹீரோ பள்ளிக்கூடம் போற நாளும் வந்துச்சு.

தினம் தினம் பள்ளிக்கூடம் போகறதுக்கு அழுது அடம்பிடிச்சி அடிவாங்கிட்டுப் போன அவங்க அண்ணன் மாதிரி இல்லாம சமத்தா நல்லப் புள்ளையா சந்தோஷமாப் போயிட்டு வருவாரு இளைய தடிப்பையர். ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சு கொஞ்ச நெனைவு தெரிய ஆரம்பிச்சதுக்கப்புறம், வீட்டுக்கு வந்து தினமும் ஒரு கதை சொல்லுவாரு. ஆரம்பத்துல கூடப் படிக்கிற பசங்களைப் பத்தி மட்டும் இருக்கும் அவருடைய கதைகள்...அவங்க விட்ட பீலாக்கள், அதுக்குப் பதிலாக இவர் விட்ட எதிர் பீலாக்கள் இப்படின்னு. நாள் ஆக நாள் ஆக இவருடைய கதைகளில் பசங்க வர்றது குறைஞ்சு மிஸ்ஸுங்க வர்றது அதிகம் ஆகிடுச்சு. அப்பத் தான் தெரிஞ்சிச்சி...பாயான தலைவர் பாடம் சொல்லிக் குடுக்கற மிஸ்ஸுங்களுக்கு "ஃபிரெண்ட்" ஆன சமாச்சாரம். இந்த சமயத்துல ஒன்னு நான் சொல்லியே ஆகனும்ங்க...இந்த "அக்கறைக்கு இக்கறை பச்சை"ங்கிற பழமொழி உலகத்துல இருக்கற பெரும்பாலான அம்மாக்களுக்கு மிகச் சரியாப் பொருந்தும்ங்க. உதாரணத்துக்கு எங்க அம்மாவையே எடுத்துக்கங்களேன்...கண்ணுக்கு நெறைவா அழகா எருமை கன்னுக்குட்டி போல ரெண்டு தடிப்பசங்க இருந்தாலும் வீட்டுல ஒரு "பொம்பளப்புள்ள" இல்லியேன்னு ரொம்ப ஏக்கப்படுவாங்க. நாங்க செய்யறது, சொல்லறது எல்லாத்துக்கும் பொண்ணுங்களோட ஒரு கம்பேரிசன் வேற. ஆனா இதுவே பொண்ணுங்க மட்டும் இருக்கற வீட்டுல, அம்மாங்க "சே! ஒரு பையன் இருந்தா எவ்வளவு நல்லாருக்கும்"னு ஏங்குவாங்க.

இப்படித் தான் பாருங்க...இளவல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு இங்கிலீஷ் பாடம் எடுத்த ஒரு மிஸ் அவருகிட்ட "எனக்கு பசங்கன்னா ரொம்ப இஷ்டம்டா...ஆனா எங்க வீட்டுல ரெண்டும் பொண்ணுங்க"ன்னு சொல்லுவாங்களாம்.

என் தம்பி படிச்ச அதே ஸ்கூல்ல தான் நானும் படிச்சேன். அந்த மிஸ் எனக்கும் பாடம் எடுத்திருக்காங்க. ஆனா என்கிட்ட எல்லாம் அந்த மாதிரி எப்பவும் பேசுனதில்லையேன்னு சில சமயம் தோணும்.
ஆனாலும் "கார்த்திக் வேற - மோகன் வேற"ங்கிற புரிதல் வந்து என்னை சமாதானப் படுத்திடும். திடீர்னு ஒரு நாள் மிஸ் இவரைப் பாத்து "நான் குண்டாயிருக்கேனாடா? என் பொண்ணுங்க எல்லாம் என்னை குண்டு குண்டுன்னு சொல்றாங்க"ன்னு சொன்னதா வந்து வீட்டுலச் சொல்லுவாரு, திடீர்னு ஒரு நாள் மிஸ் எனக்கு சாக்லேட் குடுத்தாங்கன்னு சாக்லேட் எடுத்துட்டு வருவாரு. இவரும் பொறந்த நாளுக்கு ஸ்கூலுக்குப் போகும் போது பாடம் எடுக்கற எல்லா மிஸ்ஸுகளுக்கு மட்டும் ஃபைவ் ஸ்டாரோ டெய்ரி மில்கோ வாங்கிட்டுப் போய்க் குடுப்பாரு. சில சமயம் எனக்கு தோணியிருக்கு...ஒரு வேளை ஸ்கூல் பசங்க கிட்ட கதை விட்ட மாதிரி வீட்டுல வந்து மிஸ் சொன்னாங்கன்னு கதை விடறாரோன்னு. இந்தப் பதிவைப் படிக்கிற ஸ்கூல் டீச்சரா இருந்த/இருக்கிறவங்களே? இப்ப நான் உங்களை கேக்கறேன்...இப்படியெல்லாம் நெஜமாவே நடக்குமா? இல்லை தலைவர் சொன்னதெல்லாம் பீலாவா?

எல்லாப் பசங்க கிட்டயும் அன்பா இருக்கற டீச்சருங்க மட்டும் தான் பாயான உங்களை ஃபிரெண்ட் ஆக்கிக்குவாங்கன்னு இல்லை. லக் இருந்தா முழு ஸ்கூலுக்குமே டெரரா இருக்கற மிஸ்ஸுக்குக் கூட நீங்க ஃபிரெண்டா இருக்கலாம். இப்படித் தான் எங்க ஸ்கூல்ல "ஃபிலோ மிஸ்"னு ஒரு டீச்சர் இருந்தாங்க. ஸ்கூல்ல எல்லாப் பசங்களுக்கும் அவங்களைப் பாத்தா அப்படி ஒரு பயம். ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஹோம் வர்க் செய்யலைனாக்கா, களாஸ்ல பேசுனாக்கா அடி பிச்சி எடுத்துருவாங்க. குண்டா இருப்பாங்க, கிட்டத்தட்ட ஐம்பது வயசிருக்கும், கையில் எப்பவும் ஒரு ஸ்கேல் வச்சிருப்பாங்க...அவங்க நமக்கு க்ளாஸுக்கு டீச்சரா வரலைன்னா சந்தோஷம்ங்கிற நெலமையில பசங்க அவங்களைப் பாத்து பயப்படுவாங்க. அப்படிப்பட்ட அந்த மிஸ் இளவலுக்கு நாலாப்புல க்ளாஸ் டீச்சரா வந்தாங்க. என்ன மாயமோ தெரியலை...மந்திரமோ தெரியலை...இவரு அவங்களுக்கும் ஃப்ரெண்டு ஆயிட்டாரு. ஃபிலோ மிஸ்னு மட்டும் அவங்கப் பேரைத் தெரிஞ்ச எங்களுக்கு அவங்களோட ஃபுல் நேம் "ஃபிலோமினா ரோட்ரிக்ஸ் மச்சாடோ" அப்படின்னு மேய்டன் நேம், சர்நேம், ஃபேமிலி நேம் எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டு வந்துச் சொன்னாரு இளவல். அதோட அவங்க ஊரு கோவாவைப் பத்தியும் அவங்க பசங்களைப் பத்தியும் எல்லாம் கூட இவரு கிட்டச் சொல்லுவாங்களாம். எனக்கு நம்பறதுக்குக் கஷ்டமாவும், ஆச்சரியமாவும் இருக்கும்.

ஒரு முறை கிறிஸ்துமஸ் சமயத்துல மிஸ்ஸுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து அனுப்பனும்னு அம்மா கிட்ட வாங்கிட்டு வரச் சொன்னாரு. அவங்களும் போனாப் போகுதுன்னு ஒரு க்ரீட்டிங் கார்ட் வாங்கிட்டு வந்து குடுத்தாங்க. அந்த கார்டுல ரெண்டு பஞ்ச வர்ணக்கிளிகள் மரத்து மேலே உக்காந்திருக்குற மாதிரி இருக்கும். அதுக்குக் கீழே இளம் மஞ்சள் நிறத்துல "ஐ லவ் யூ"ன்னு எழுதிருந்துச்சு. அம்மா இதை பாக்காம வாங்கிட்டு வந்துட்டாங்க. கார்டு வாங்கிட்டு வந்து குடுக்கும் போதே ஆனா நான் பாத்துட்டேன். இருந்தாலும் என்ன தான் ஆகுதுன்னு பாப்போமேன்னு நான் ஃப்ரீயா விட்டுட்டேன் :). ஒரு நாள் கோவமா ஸ்கூல்லேருந்து வந்தாரு - "அம்மா! ஒரு நல்ல கடையில கார்டு வாங்காம, ரோட்டோரக் கடையில வாங்கி, உங்களால எனக்கு ஒரே வெக்கமாப் போச்சு"ன்னு வந்து ஆவேசமாக் கத்துனாரு. "என்னடா ஆச்சுன்னு" ரொம்பக் கரிசனமா உள்ளுக்குள்ளே சந்தோஷமா கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு "அந்த கார்டுல கிளிகளுக்குக் கீழே ஐ லவ் யூன்னு எழுதிருக்கும் போல, நான் பாட்டுக்கு அதைப் பாக்காம அனுப்பிட்டேன்". "அப்புறம் என்னாச்சி"ன்னு நானும் எங்கம்மாவும் ஆர்வமா கேட்டோம். "Mom! Who is the young chap who is loving you?"ன்னு அவங்க பெரிய பையன் கேட்டதாச் சொல்லி மிஸ் பெருசாச் சிரிச்சாங்கன்னு சொன்னதைக் கேட்டதும் என்னால நம்பவே முடியலை.

இது வரைக்கும் கேர்ள்ஸ் எப்படி இளவல் கிட்ட அன்பாப் பேசினாங்கன்னு பாத்தோம். ஆனா சில கேர்ஸ் "பாய் ஃபிரெண்டு"ன்னு கூட பாக்காம ஃபிசிக்கல் ஆயிடுவாங்க...அப்படியொரு அனுபவமும் தலைவருக்கு நடந்துருக்கு:). திருவல்லிக்கேணியில நாங்கத் தங்கியிருந்த வீட்டுல தண்ணி அடிக்கிறதுக்கு ரெண்டு வீட்டுக்குச் சேத்துப் பொதுவா ஒரு அடி பம்ப் இருக்கும். எப்பவாச்சும் ஒரு சின்ன வாளியில தண்ணி அடிச்சிட்டு வான்னு அம்மா சொல்லி அனுப்புவாங்க. இளவலும் போனாப் போவுதுன்னு ஒரு பக்கெட்டோ, ரெண்டு பக்கெட்டோ தண்ணி அடிச்சிக் கொடுப்பாரு. ஆனா கொஞ்ச நாளாத் தண்ணி நான் அடிச்சித் தர மாட்டேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாரு. அம்மாவும் என்ன என்னன்னு கேட்டுப் பாத்தாங்க...சொல்லவே இல்லை. ஒரு நாள் வீட்டுல முறைவாசல் பண்ணற ஒரு ஆயா வந்தாங்க, எங்கம்மா கிட்ட "என்னம்மா சின்னப்புள்ளயை கொஞ்ச நாளாப் பாக்கவே முடியலை...உடம்பு நல்லாருக்கா"ன்னு கேட்டாங்க. அம்மாவும் "டேய்! இங்கே வா...உன்னை பாக்கத் தான் ஆயா வந்திருக்காங்க. முன்னெல்லாம் கரெக்டா அவங்கப் பெருக்க வர்ற நேரத்துல நீ தண்ணியடிச்சிட்டிருப்பே...அவங்களும் உன்னை பாத்துட்டுப் போவாங்க. இப்பத் தான் நீ தண்ணி அடிக்கவே போறதில்லையே...வா வந்து அவங்க கிட்டப் பேசு"ன்னு சொன்னாங்க. அதை கேட்டுட்டு இளவல் அம்மா பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிட்டாரு. "என்னடா...உன்கிட்ட பேசத் தானே வந்திருக்காங்க? வந்து அவங்க கிட்டப் பேசாம போய் என்னமோ ஒளிஞ்சிக்கிறியே"ன்னாங்க. அதுக்கு அவரு "போங்கம்மா...நான் போக மாட்டேன் அந்த ஆயா என் 'ஜில்'லைத் தொட்டு முத்தம் குடுக்கறாங்க" அப்படின்னாரு. அதை கேட்டுட்டு எங்கம்மா "சீ! உள்ள போடா"ன்னு சிரிச்சிக்கிட்டேச் சொல்லவும் "சின்னப் புள்ளையா இருக்குதாம்மா...பாக்குறதுக்கு ரொம்ப ஆசையா கொஞ்சனும்னு இருக்கு"ன்னு முறைவாசல் பண்ணற ஆயா சொன்னதைக் கேட்டு பயங்கரச் சிரிப்பு. ஆனாலும் கிராமமானாலும் நகரமானாலும் வயசானக் கிழவிகளுக்கு ஒரு பிடித்தமான பொழுதுபோக்கான இது, ஒவ்வொரு சின்னப்பையனுக்கும் ஒரு 'nightmare'னு ஏன் தெரிஞ்சிக்க மறுக்கறாங்க? :)))

இளவலின் வாழ்க்கையில் நடந்த இந்த மேற்கூறிய சம்பவங்களை எல்லாம் வச்சிப் பாக்கும் போது "பாய் ஃப்ரெண்ட்ஸ் தானே கேர்ள்ஸின் பூஸ்ட் அல்லவா?"ன்னு சொல்றது சரி தானுங்களே?