Showing posts with label கொசுவத்தி. Show all posts
Showing posts with label கொசுவத்தி. Show all posts

Friday, July 22, 2016

தோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...

"எண்டே கண்ட்ரி யுனைட்டெட் கிங்டம், எண்டே சிட்டி லண்டன், எண்டே அம்மே எலிசபெத் அம்மே, எண்டே ஆஹாரம் ஃபிஷ் அண்ட் சிப்ஸ்" அப்படீங்கற விஷயங்கள் எல்லாம், கடையை மூடிட்டுப் போய் சில வருஷம் ஆனாலும் என்னோடு தொடர்புல இருக்கற சில பேருக்குத் தெரிஞ்சிருக்கலாம்.  "டேய்! நீ இருக்கற ஊரு லண்டனா?" அப்படின்னு விஷயம் தெரிஞ்சவங்க சிலர் கேக்கலாம்.  லண்டன்னா லண்டனே இல்லை...லண்டனுக்குப் பக்கத்துல...லண்டனுக்கு மிக அருகாமையில்...லண்டனின்  திருவள்ளூர்னு சொல்லலாம்.

அப்படியாகப் பட்ட லண்டன் மாநகரிலே...சரி...சரி...லண்டனின் திருவள்ளூர் நகராட்சியில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்னு நெனைக்கிறேன்.  சம்பவம் நடந்து ஒரு வருஷத்துக்கு மேல ஆனதுக்கப்புறம் இப்ப ஏன்...?

இவ்வளோ நாளா எழுதாம இருந்ததுக்குக் காரணம் "Writer's Block" அப்படின்னு எனக்கு நானே சொல்லிக்கறேன்.  ஆனா "ரைட்டர்ஸ் ப்ளாக்" எல்லாம் ரைட்டருங்களுக்குத் தானே..."பீட் காண்ஸ்டபிள்" ஒனக்கு என்ன கேடுன்னு என் மனசாட்சி வந்து லந்து பண்ணுது.  இருந்தாலும் பீட் காண்ஸ்டபிளுக்கும் ப்ளாக் வரும்னு எழுதச் சொல்லி உற்சாகப்படுத்துன ஆண்டிப்பட்டிக்காரங்க சில பேரோட ஒரே மன உறுதியைப் பாராட்டி கம்பெனி தர்ற அன்புப் பரிசு தான் இந்தப் பதிவு.

"ஹலோ! உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?" - எதோ ஒரு வேலையா தெருவுல நடந்துப் போயிட்டு இருந்த என்னை நிறுத்திப் பேச்சுக் கொடுத்தது ஒரு நாற்பத்தஞ்சு வயசு மதிக்கத் தக்க ஒரு வெள்ளைக்காரர்.

கண்ணாடி போட்டு தாடி வச்சிருந்த அந்த மனிதர் எதுவும் முகவரி கேக்கத் தான் நம்மக் கிட்ட பேசப் போறாருன்னு நெனைச்சேன்.  நானே வெளிநாட்டுக்காரன்...அது ஏன் என்னைப் பாத்து பேசனும்ங்கிறாருங்கிற ஒரு வித சந்தேகத்தோடயே பேச ஆரம்பிச்சேன்.

"யெஸ்! ப்ளீஸ் டெல் மீ" - இது நான்,

"இந்த ஊருல யாருக்கும் மனுசங்க மேலே மரியாதையே இல்லை" அப்படின்னாரு.

முகவரி தான் கேக்கப் போறாருன்னு நெனைச்சுப் பேச ஆரம்பிச்ச எனக்கு ரொம்ப ஆச்சரியமாப் போச்சு.  அதுக்கு மேலே அவர் கிட்ட பேசனுமா வேணாமான்னு ஒரு சந்தேகம் வேற.
இருந்தாலும் "ஏன் அப்படி சொல்றீங்க"ன்னு கேட்டு வச்சேன்.

"இங்கே இங்கிலாந்துல யார் கிட்டயாச்சும் சும்மா பேசப் போனா, பேசக் கூட மாட்டேங்கிறாங்க"

வெறுமனே தலையாட்டிக்கிட்டு அவர் சொல்றதை கேட்டுட்டு இருந்தேன்.  "உன் கிட்ட யாரும் பேசலைன்னா அதுக்கு நான் என்னய்யா பண்ணறது?"ன்னு மனசுக்குள்ளே நெனச்சுக்கிட்டேன்.

"இங்கே பணக்காரங்களுக்கு மட்டும் தான் மரியாதை.  நல்ல பணம் இருந்து ஒரு ஃபெராரி கார் ஓட்டிக்கிட்டு வந்தா இந்த ஊரு பொண்ணுங்க பேசுவாங்க"

"அடப் பாவி மனுஷா! இங்கிலாந்துப் பொண்ணுங்க உன் கிட்ட பேசலைங்கிற ஆதங்கத்தை ஒரு இந்தியா காரனைப் புடிச்சு மொக்கைப் போட்டுத் தீர்த்துக்கிட்டிருக்கியா?"ன்னு ஹை பிட்ச்சுல கேட்டது என் மைண்ட் வாய்ஸ் தான்.

"எங்க நாட்டுல எல்லாம் அப்படி கெடையாது தெரியுமா?"

"நீங்க எந்த நாடு?

"இத்தாலி.  ஐ ஆம் ஃப்ரம் மிலன்.  நீங்க?" அப்படின்னாரு அவரு.

இந்தியான்னு சொன்னா சண்டைக்கு வருவாரோன்னு ஒரு சின்னப் பயம் வேற இருந்தது.  ஏன்னா இத்தாலி கடற்படையைச் சேர்ந்த ரெண்டு வீரர்கள் கேரள மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்னுட்டாங்கன்னு கைது பண்ணி வச்சு அப்போ கொஞ்ச நாள் தான் ஆகி இருந்தது.

இருந்தாலும் உண்மையைச் சொன்னேன்.

"இந்தியா ரொம்ப அழகான நாடு"

"நீங்க இந்தியாக்குப் போயிருக்கீங்களா?"ன்னு கேக்க நெனைச்சாலும் கேக்கலை.  சோனியா காந்தியோட சொந்தக்காரரா இருப்பாருன்னு நெனைச்சிக்கிட்டேன்.

"இத்தாலியும் அழகான நாடு தான். நான் ரோமுக்கும் பைசாவுக்கும் போயிருக்கேன்"அப்படின்னேன்.

"ஓ! அப்படியா" அதுக்கு மேல அவரு நாட்டைப் பத்திப் பேசறதுல விருப்பம் காட்டலை.  மறுபடியும் சமுதாயப் பிரச்சினைக்கே திரும்ப வந்தாரு.

"ஒருத்தன் கிட்டப் பணம் இருக்கான்னு மட்டும் தான் இந்த ஊருப் பொண்னுங்க பாக்கறாங்க.  அவன் கிட்ட இருக்கற நல்ல மனசை அவங்க பாக்கறதில்லை.  தே டோண்ட் சீ த குட் ஹாற்ட்ட்(Heart)"

ஹார்ட்ங்கிறதை அவர் 'ஹாற்ட்ட்'னு சொல்றப்போ தான் கவனிச்சேன் இத்தாலி மொழி பேசறவங்க ஆங்கிலம் பேசும் போது அதிகமா வல்லினம் உபயோகிக்கறாங்கன்னு.

"எங்க நாட்டுல பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா அட்லீஸ்ட் பேசவாவது செய்வாங்க.  புடிக்கலியா ஒதுங்கிக்குவாங்க.  I respect that. ஆனா இங்கேயோ நம்மைப் பார்த்ததும் நீ இங்கிலாந்து நாட்டவன் கெடையாது.  உன் கிட்டெல்லாம் பேச முடியாது"ன்னு சொல்லுவாங்க.

"அதையும் மீறிப் பேச முயற்சிப் பண்ணா I will call the Police"ன்னு கத்துவாங்க.

இங்கே வந்தப் புதுசுல வெள்ளையா இருக்கிறவன் எல்லாம் இங்கிலீஷ் பேசுவான்னு பல முறை நினைச்சதுண்டு.  ஆனா இங்கிலாந்துல குறிப்பா லண்டன் சுத்துவட்டாரத்துல ஆங்கிலம் தெரியாத மத்த ஐரோப்பிய நாட்டவர்கள் பலர் இருக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.  ஆனா வெள்ளையா இருக்கறவனைப் பாத்து இவன் இங்கிலாந்து காரனா இல்லை மத்த ஐரோப்பிய நாட்டவனான்னு கண்டுபிடிக்கிற தெறமை இன்னும் எனக்கு வரலை.  ஆனா அப்படி கண்டுபிடிக்க முடியும்னு இங்கேயே பல வருஷங்களா இருக்கற சில இந்தியர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கேன்.

"ஒருத்தர் கிட்டப் பேசாமலேயே அவன் நல்லவனா கெட்டவனான்னு எப்படி சொல்ல முடியும்?  பேசிப் பாருங்க...புடிக்கலைன்னா விட்டுடுங்க.  They are very rude and they have hurt me many times"அப்படின்னு தன்னோட ஆதங்கத்தை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.

"இந்தாளு இதையே ஒரு வேலையா வச்சிட்டுத் தான் சுத்தறாரு போல"ன்னு நெனச்சிக்கிட்டேன்.

"உங்க நாட்டுல எப்படி? பொண்ணுங்க கிட்டப் போய்ப் பேசுனா பேசுவாங்களா?  Are they friendly?"அப்படின்னு கேட்டார்.

"Yes! Yes! எங்க நாட்டுல எல்லாம் பொண்ணுங்கக் கிட்டப் போய் பேசுனீங்கன்னா உடனே பேசிடுவாங்க" அப்படின்னு சும்மா அடிச்சு விட்டேன்.
நான் சொன்னதைக் கேட்டதும் அவர் முகத்தில் ஒரு புன்னகை.

பின்னே"போய் பேசித் தான் பாரேன்.  சப்பல்ஸ் பிஞ்சிப் போயிடும்டா படுவா"ன்னு உண்மையையாச் சொல்ல முடியும்?

"பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்" - அப்படிங்கிறது உண்மை தான் போலிருக்கு?

"Thanks for your time.  Thanks for speaking to me.  Have a nice day" அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.

காலாகாலத்துல கல்யாணம் ஆகியிருந்தா பேரன் பேத்திக்கெல்லாம் பேறு காலம் நடந்திட்டு இருக்கும்.  அப்பேர்ப்பட்ட ஒரு ஆள் சுயமா தன்னுடைய துணையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத, அம்மா அப்பா பார்த்து கல்யாணம் பண்ணி வச்ச ஒரு பையனைப் பார்த்துப் புலம்பிவிட்டுப் போவதை காலக் கொடுமை என்று சொல்லாமல் என்ன சொல்வது?

"தனி ஒருவனுக்கு கேர்ள் ஃப்ரெண்டு இல்லையெனில் தனி ஒருவனாக இல்லாது துணைக்கு ஆள் சேர்த்துப் புலம்பிடுவோம்"னு இத்தாலியின் பாரதியார் யாராச்சும் எழுதி வச்சிருக்காங்களா தெரியலையே? :)

Sunday, December 19, 2010

தூர்தர்ஷனும் இசைப்புயலும்

கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னர் வந்த தொலைக்காட்சி விளம்பரங்களை நினைவு படுத்திப் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம் உதித்தது. விளம்பரங்களின் பட்டியல் பெரியதாக இருந்ததால் அவற்றை எதாவது ஒரு வகையில்(criterion) கொண்டு பகுக்கலாமே என்று தோன்றியது.
ரோஜா படம் மூலமாகத் தான் முதன்முதலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களைக் கேட்டது என்றாலும், டிவி விளம்பரங்களின் மூலமாக மக்களிடம் நெருக்கமாகத் தான் இருந்துள்ளார் எனத் தெரிந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னர் அவர் விளம்பரப் படங்களுக்குத்(ad jingles) தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் என பலரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் பழைய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது, அக்காலத்தில் நாம் ரசித்த பல விளம்பரப் படங்களுக்கும் அவர் இசையமைத்திருப்பது தெரிய வந்தது. "அட! இந்த விளம்பரத்துக்கும் இவர் தான் இசையமைத்தாரா?" என ஆச்சரியமாய் இருந்தது. அதை எல்லாம் பதிந்து வைக்கலாமே எனத் தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு. சில விளம்பரங்கள் தூர்தர்ஷன் மட்டும் அல்லாமல் வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் வந்திருக்கலாம்.

Leo Coffee
ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் "லியோ காஃபி" விளம்பரம் என்று சொல்கிறார்கள். இவ்விளம்பரத்தைப் பார்த்து தான் இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார் என்று இணணயத்தில் படித்தேன். மணிரத்னத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது அப்போது விளம்பரப் படங்களில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் மேனன். இந்த விளம்பரம் வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுவன். எப்போது வந்தாலும் நின்று பார்த்து விட்டுச் செல்லும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. அவ்விளம்பரத்தில் வரும் அர்விந்த் சுவாமிக்கும் இப்போது இருக்கும் அர்விந்த் சுவாமிக்கும் எத்தனை மாற்றங்கள்? லியோ காஃபியின் தற்காலத்து விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா வருகிறார். ஆனால் பழைய விளம்பரம் ஏற்படுத்தும் பாதிப்பும் கிளறும் நினைவுகளும் இப்புதிய விளம்பரத்தில் இல்லை. ஆண்ட்ரியா வரும் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இங்கு சுட்டுங்கள்.


Old Cinthol
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக இருக்கும் சோப் "பழைய சிந்தால் சோப்". அட, இதுலயும் அர்விந்த் சுவாமி தான் வருகிறார். இந்த சோப்பின் விளம்பரத்தைப் பார்த்தால் எப்போதும் மிகைப்படுத்தப் படாமல் சிம்பிளாக இருக்கும். பல சமயங்களில் விளம்பரங்களே கூட இருக்காது. சிகப்பு நிற அட்டையில் வெளிவரும் சோப் இது, புதிய சிந்தால் சோப்புக்குச் சற்று கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் கோத்ரெஜ் நிறுவனம். பல வருடமாக உபயோகத்தில் இருக்கும் சோப் என்பதால் அந்த நற்பெயரிலேயே இன்னும் இந்த சோப் விற்றுக் கொண்டிருக்கிறது. தோல்நோய் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உண்மையிலேயே நல்ல சோப் இது. அத்தகையதொரு சோப்புக்கு, மிகையில்லாத மெல்லிய இசை சேர்த்திருப்பது இவ்விளம்பரத்தின் சிறப்பு, இன்றளவும் நினைவில் நிலைக்கச் செய்திருப்பது இசையமைப்பாளரின் திறமை.


Asian Paints - Pongal
சில நிறுவனங்கள், தனித்து நிற்கும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு பெயர் போனவை. அத்தகைய ஒரு நிறுவனம் தான் ஏசியன் பெயிண்ட்ஸ். கையில் பெயிண்ட் ப்ரஷுடன் நிற்கும் பையனின் மேஸ்காட்டைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாண்டு காலம் உபயோகித்து வந்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். அந்த சிறுவனின் பெயர் "கட்டூ(Gattu)". அவனை உருவாக்கியவர் பிரபல் கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள். இணையத்தில் தேடினால் ஏசியன் பெயிண்ட்ஸின் மார்க்கெட்டிங்கைப் பற்றி பல கேஸ் ஸ்ட்டிகள் கிடைக்கும், அந்த அளவுக்கு தங்களுடைய ப்ராண்ட்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தும் நிறுவனம் இது. பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் நம்ம ஊர் பழக்கத்தைக் குறி வைத்து, தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரமிது. இவ்விளம்பரத்தின் துவக்கத்தில் வரும் அதே "ஏலேலோ" இசையை ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலில் ஹோகேனக்கல்லில் பரிசல்கள் செல்லும் காட்சியிலும் பார்க்கலாம்.



Titan
முந்தைய மூன்று விளம்பரங்களும் தமிழ்நாட்டு ஆடியென்சை மட்டும் தொடுவன என்றால், இவ்விளம்பரமும் இனி வரும் விளம்பரங்களும் இந்தியா முழுவதும் பிரபலமானவை. "சாந்தி" என்னும் இந்தி சீரியலில் ராஜ்.ஜி.ஜே.சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அமர் தல்வார் தான் இவ்விளம்பரத்தில் வரும் தந்தை. மால்குடி சுபா பாடி வெளிவந்த "வால்பாறை வட்டப்பாறை" ஆல்பமில் நடித்த சம்யுக்தா தான் இதில் மகளாக வருபவர். இவர் முன்னாள் தூர்தர்ஷன் ஆங்கில செய்தி வாசிப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். இது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தது என்பதனை youtube பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.


MRF
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனம் MRF. Madras Rubber Factory என்று ஒருகாலத்தில் இருந்த பெயர் தான் MRF ஆனது. ஆயினும் இப்போது பழைய பெயரை எங்கும் அவர்கள் பிரபல படுத்துவதில்லை. ஏசியன் பெயிண்ட்ஸைப் போலவே விளம்பரங்களில் வெகுவாக கவனம் செலுத்தும் நிறுவனம் இது. இவ்விளம்பரம் வந்து கொண்டிருந்த காலங்களில், அதில் கடைசியில் வருவது போலவே கீபோர்டில் சர்ரென்று விரல்களைத் தேய்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டாலும், வெகுகாலம் கழித்து இந்த விளம்பரத்தைப் பார்த்த போது அந்த ஆசை எங்கிருந்து வந்தது என நினைவில் வந்தது :)


Garden Vareli
லிசா ரே(Lisa Ray) தோன்றும் இவ்விளம்பரத்தின் இசை வெகு பிரபலம். சிறுவயதில் கார்டன் புடவைகளை எல்லாரும் அணிவது போல அணிய முடியாது, இதில் காட்டுவது போல காற்றில் பறக்க விடுவது போல தான் அணிய முடியும் எனப் பல காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். லிசா ரே ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சமீபத்தில் அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.


Premier Pressure Cooker
"பாசமான அன்னை பரிசாய் தந்த ப்ரீமியர் ஆசை ஆசையாய் கணவர் வாங்கித் தந்த ப்ரீமியர்" என ஆரம்பிக்கும் விளம்பரம், டிவியில் அதிகமாக இவ்விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இருப்பினும் இப்போது பார்த்த போது நன்றாக இருப்பதாகத் தோன்றியது.


Spirit of Unity Concerts
முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும். இதில் துவக்கத்தில் வரும் title music கேட்பதற்காகவே காத்து கிடப்பேன். அந்நிகழ்ச்சியில் வரும் மற்ற கச்சேரிகள் எதையும் கூர்ந்து கவனித்ததில்லை. இந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.


கடைசியாக ரோஜா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பின் சுரபி என்னும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பேட்டியைக் காணலாம். இதில் அவருடைய பெயரை அப்துல் ரகுமான் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம் காலம் செல்ல செல்ல குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெகுவாகப் பிரபலம் ஆவதற்கு முன் வந்த முதல் சில விளம்பரங்களில் ஒன்று இது.

Wednesday, January 27, 2010

This Day That Age

"The Hindu" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

நாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(

சொல்றோம்ல : மல்லிகட்டாணி

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?

மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.

இதனை விக்கிபீடியாவிலும் காணலாம்.

டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.

Wednesday, August 08, 2007

ஹுடுகி...ஹுடுகி...

சின்ன வயசுல ஹிஸ்டரி மிஸ் திட்டித் திட்டித் தலையில ஏத்துன ஒரு விஷயம் - கேள்விகளுக்குப் பதில் எழுதும் போது வளவளன்னு பத்தி பத்தியா எழுதாம சுருக்கமா பாயிண்ட் பாயிண்டா எழுதனும்ங்கிறது தான். இதுக்காகவே நம்ம தோஸ்த் 'மன்னாரு'(பட்டப்பேரு தான்), பச்சை, சேப்பு, நீலம்னு கலர் கலரா பேனா கொண்டாருவான். அப்படி பேனா கெடக்கலைன்னா ஒரு க்ரேயான் பென்சில் வச்சாவது ஒரு நாலு வரி எழுதிட்டு நாப்பது அண்டர்லைன் பண்ணிக் காட்டிடுவான். சும்மா சொல்லப்பிடாது...இந்த உத்தியால மார்க்குகளையும் அள்ளிடுவான். கடந்த சில மாதங்களா அவ்வளவா ப்ளாக் பக்கம் வர முடியாத படிக்கு ஏகப்பட்ட ஆணி. அந்த அக்யாத வாசம் பீரியட்ல நடந்ததையெல்லாம் பாயிண்ட் பாயிண்டா அண்டர்லைன் பண்ணி எழுதலாம்னு தோணுனதுல விளைஞ்சது இந்தப் பதிவு.

1. ஆச்சுங்க...மாஸ்டர்லேருந்து மிஸ்டர் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஆச்சு :))) அவுட்.....டேய்னு போட்ட பதிவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். வாழ்த்துனவங்க, கலாய்ச்சவங்கன்னு லிஸ்ட் போட்டா அது ரொம்ப பெருசா போயிடும். எல்லாரோட அன்புக்கும் என்ன கைம்மாறு செய்யப் போறேன்னு தெரியலை. மனசு நெறைஞ்ச மகிழ்ச்சியோட எல்லாரோட அன்புக்கும் தலைவணங்கி எனது நன்றிகளைத் தெரிவிச்சிக்கிறேன்.

2. கிடாவெட்டு விழாவுக்கு சங்கத்து சிங்கங்கள் தேவ், பாண்டி, கப்பி, தள சிபி, பாலராஜன் கீதா சார், சென்னப்பட்டிண உறவுகள் பேராசிரியர் பாலா பாய், பொன்ஸ், மா.சிவகுமார் சார், ஆகியோர் வந்து சிறப்பிச்சிருந்தாங்க. தம்பி, கோவி கண்ணன்(உங்க ரெண்டு பேத்து பேருலயும் கள்ள வோட்டு போட்டுட்டாய்ங்கய்யா...பதிவர் பட்டறையிலும் ரிப்பீட்டேய்...யாரு அந்த கறுப்பு ஆடுன்னு கண்டுபிடிங்கோ). தனித்தனியா யாரையும் கவனிக்க முடியலை...மன்னிக்கனும். எல்லாமே ஜெட் ஸ்பீட்ல போய்க்கிட்டிருந்துச்சு.

3. ஆமதாபாளையத்துல இருந்த ஆணி எல்லாம் புடுங்கி முடிச்சதும். தேவையில்லாத ஆணியெல்லாம் புடுங்க விதி நம்மளை அனுப்பி வச்ச ஊரு பெங்களூரு...(பெண்களூருன்னு எல்லாரைப் போலவும் தெகிரியமா சொல்ல ஆசையிருந்தாலும், முழி நோண்டப்படும் அபாயம் இருக்கறதுன்னால அடக்கியே வாசிச்சிக்கிறேன்...அதோட எட்டப்பனுங்க எல்லா பக்கமும் வேற இருக்காய்ங்க). அப்புறம் பெங்களூர்ல, 'கண்டேன் ராயலை டேஷ் டேஷுக்கு அணியாய்', டேஷ் டேஷ்ல யாராருக்கு என்னென்ன தோணுதோ நிரப்பிக்கோங்க. ராயல் நல்ல புள்ளன்னு எனக்கு முன்னாலேயே தெரியும். ஆனா ராயல் கூட இருந்தவரு தான் 'பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று'ன்னு பாட வச்சிட்டாரு :)

4. உலகம் சுற்றும் வாலிபி அம்மா, அவுட்...டேய் பதிவுல எல்லாரோடையும் சேர்ந்து என்னை கலாய்ச்சிட்டு, மறுநாள் ரொம்ப அன்போட வாழ்த்தி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தாங்க. படிச்சிட்டு உண்மையிலேயே ரொம்ப நெகிழ்ந்து போயிட்டேன்...உங்களுக்கும் ரொம்ப நன்றிம்மா.

5. என்னிக்காச்சும் சன் டிவி நீங்கள் கேட்ட பாடல்ல விஜயசாரதி பேட்டி எடுத்து 'திருமணத்துக்கப்புறம் நீங்க பார்த்த முதல் படம் எது'ன்னு கேட்டா 'சிவாஜி'ன்னு சொல்லிக்கலாம். ஷ்ரேயா ஓவரா க்ளாமர் காட்டியிருக்காங்கன்னு ஏற்கனவே கேள்விபட்டிருந்ததுனாலயும், பக்கத்துல தங்கமணி இருந்ததுனாலயும் ஷ்ரேயா வர சீன்கள்ல மட்டும் நல்ல புள்ளயா கண்ணை மூடிக்கிட்டேன். அட...ஒரு நல்ல இம்ப்ரெஷன் பில்ட் பண்ணா உங்களுக்கெல்லாம் பொறுக்காதே...உடனே தாக்கி பின்னூட்டம் போட்டுருவீங்களே? பேராசிரியர் சாலமன் பாப்பையா...என்னத்த சொல்ல? ரொம்ப வருத்தப்பட வச்சிட்டாரு...நல்லாத் தானேங்கய்யா இருந்தீங்க? என்னாச்சு?

6. கிண்டி டைம்ஸ் : ஜிசிடி நினைவுகள்ங்கிற பதிவு எழுதி ஒரு வருஷம் ஆன போதிலும், ஒரு வருஷத்துக்கப்புறமும் அதை படிச்சிட்டு மறக்காம பின்னூட்டம் போட்டிருந்தாங்க மங்கை மேடம். அப்பவே அவங்களுக்கு நன்றி சொல்லனும்னு நெனைச்சேன்...better late than never...ரொம்ப நன்றி மேடம்.

7. பதினாறு வயசு சின்னப்பொண்ணு சங்கத்தின் நிரந்தர தலைவி(வலி) பாட்டியாகிட்டாங்க. பாட்டியான சந்தோஷத்துல எப்பவும் மொக்கை பதிவா போட்டு அம்பியைக் கதி கலங்கடிச்சிட்டு இருந்தவங்க ஜாலியான பதிவெல்லாம் போட ஆரம்பிச்சிட்டாங்க. பின்னூட்டம் போடலைன்னாலும் உங்க வீட்டு பக்கம் அப்பப்போ வந்துக்கிட்டுத் தான் இருக்கேங்கிறதுக்கு இதுவே சாட்சி.

8. தடிப்பசங்கள்ல சின்னவரு...முரளி...அதாங்க என் தம்பி, அகில இந்திய வானொலியின் ரெயின்போ எஃப் எம்ல பகுதி நேர வானொலி குதிரையோட்டியா(அதாங்க பார்ட் டைம் ரேடியோ ஜாக்கி) இருக்காரு. மாலை ஐந்து மணிக்கு ஒலிபரப்பாகும் 'நெட்வர்க் நேரம்'ங்கிற நிகழ்ச்சியையும், ஆறு மணிக்கு ஒலிபரப்பாகும் 'மெலடிஸ் ஃப்ரம் மெரினா'ங்கிற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிட்டிருக்காரு. எத்தனை பேரு இன்னும் வானொலியைத் தவறாம கேக்கறாங்கங்கிறதுக்கு நேயர்களிடமிருந்து அவருடைய நிகழ்ச்சிக்கு வரும் பாராட்டு கடிதங்களே சான்று. ஒரு சகோதரனாய் நான் மகிழ்ச்சியடையும், பெருமைப்படும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. ஆகஸ்டு 15 அன்னிக்கு டிவி நாடக பிரபலம் பாஸ்கி அவர்களை என் தம்பி எடுத்த பேட்டி சென்னை பண்பலை வரிசை 101.4 MHZ ரெயின்போ எஃப் எம்மில் ஒலிபரப்பாகிறது. முடிஞ்சா கேட்டுப் பாருங்க.

9. மலேசிய மாரியாத்தா மை ஃபிரெண்டோட(இந்தப் பதிவில செமத்தியா சாமியாடிட்டாங்க) கூட்டு சேர்ந்துக்கிட்டு ராயல், பாண்டியா, போலீஸ்கார் இவங்களோட சின்ன குழந்தை பவன் கூட என்னை கலாய்ச்சதை கண்டு எக்கச்சக்கமா ஃபீல் பண்ணிப் பின்னூட்டம் போட்டிருக்கற மாயவரத்து அசாருதீன், துபாய் கா தோஸ்த் அபி அப்பாவுக்கு டன் கணக்குல டேங்கீஸுங்கோ. உங்க பாசத்தைக் கண்டு...எக்கச்சக்கமா கண்ணு கலங்குதுங்க...நீங்க ரொம்ப நல்லவருங்கோ...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். உங்க ஆசை படியே அடுத்த ஜென்மத்துலயாவது தீபா வெங்கட்டுக்கு நீங்க தாத்தாவா பொறக்க மனமாற வாழ்த்திக்கிறேன்.

10. தலைப்பு? மேட்டர் இல்லாம தலைப்பு வெப்பேனா. காலையில ஆப்பீஸ் போகும் போது எஃப் எம்ல கேட்ட ஒரு கன்னட பாட்டு கேக்கறதுக்கு ரொம்ப நல்லாருந்துச்சு. அந்த பாட்டு தான் ஹுடுகி...ஹுடுகி...(தமிழ்ல பாடுனா 'பெண்ணே...பெண்ணே). கீழே இருக்கு பாருங்க. படத்தோட பேரு ஐஸ்வர்யா. நடிச்சிருக்கறவங்க பேரு தீபிகா படுகோனே...முன்னாள் பூப்பந்தாட்ட வீரர் பிரகாஷ் படுகோனேவின் மகள் இவர்...பிரபல மாடல்...லீவைஸ் விளம்பரப் படத்துலயும் நடிச்சிருக்காங்க. அவங்க கூட உடற்பயிற்சி பண்ணறவரு பேரு உபேந்திரா. என்ன தான் வீடியோன்னாலும் அடக்க ஒடுக்கமா கண்ணை மூடிக்கிட்டதால அம்மணியைப் பாத்துட்டு 'சக்க த ஹாட் மகா'ன்னு(செம ஹாட் மச்சின்னு) பசங்க எல்லாம் சொல்லறதை வெறுமனே காதால மட்டும் தான் கேக்க முடிஞ்சது. அவங்க சொல்றது நெசம் தானுங்களா? :)