Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, March 30, 2009

தமிழ் எத்தனை வகைப்படும்? + ழகர, ளகர ஐயம்

நேற்று(29.03.2009அன்று) ஞாயிற்றுக் கிழமை வெளியான தினமலர், வாரமலர் இதழில் "இது உங்கள் இடம்" பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பிரசுரமாகியிருந்த 1000ரூபாய் பரிசு பெற்ற ஒரு கடிதத்தைக் கண்டதும் அதிர்ந்து போனேன். தென்காசியைச் சேர்ந்த ஒரு வாசகி(தமிழாசிரியராம்) தேர்வில் மாணவர்களை "தமிழ் எத்தனை வகைப்படும்?" என்று கேள்வி கேட்டிருந்தாராம். எல்லா கேள்விகளுக்கும் தப்பு தப்பாக பதில் சொல்லிய ஒரு மாணவி அந்த ஒரு கேள்விக்கு மட்டும் சரியாக(!) "முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என மூவகைப்படும்..." என பதிலளித்திருந்தாளாம். அதை பார்த்ததும் "இந்த ஒரு கேள்விக்கு மட்டும் எப்படி சரியாக பதிலெழுதினாய்?" என்று அம்மாணவியைப் பார்த்து தமிழாசிரியர் கேட்டாராம். அதற்கு அவள் "தான் நடிகர் விஜயின் தீவிர ரசிகை என்றும், அவருடைய படப் பாடல் ஒன்றில் - நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...என்று பாடியது நினைவில் இருந்ததால் சரியான பதில் எழுத முடிந்தது" என்று கூறினாளாம். இதே கடிதத்தைப் பற்றிய திரு.சுந்தரராஜன் அவர்களுடைய பதிவையும் பாருங்கள்.

தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!

இ.உ.இ. பகுதியில் இடம்பெறும் பல கடிதங்கள் வெறும் கற்பனையே என்பது என் கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ளது நேற்று பிரசுரமான இக்கடிதம். ஒன்று யாரோ ஒருவர் எழுதியதாக தினமலரே எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். இல்லை என்றால யாரோ ஒரு விஜய் பித்து தலைக்கேறிய ஒரு வாசகர்/கி, விஜய் பாடல்களின் பெருமையை நிலைநாட்டுவதற்காக இப்படியெல்லாம் எழுதிப் போட்டிருக்கக் கூடும். (இப்படி எல்லாம் ஏன் யோசிக்க வேண்டியுள்ளதென்றால் தமிழாசிரியர்களின் தமிழறிவு இவ்வளவு தான் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது). இதெல்லாம் எதுவும் இல்லையென்றால் உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் இது. அதற்கு ஒரு பத்திரிகை 1000ரூபாய் பரிசு வழங்கியிருப்பது இன்னும் வேதனையானது. இயல், இசை, நாடகத்தை முத்தமிழ் என்று கொண்டாலும் கூட தமிழின் வகைகள் இயல், இசை, நாடகம் என்று எழுத வில்லை என்றால் எந்த தமிழாசிரியரும் இதற்கு மதிப்பெண் அளிக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

சரி அதை விடுவோம். சில நாட்களாக மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஐயம் ஒன்று உள்ளது. அண்மை காலங்களில் வலைப்பதிவுகளில் கண்ட சில சொற்களின் பயன்பாட்டைப் பற்றியது. அதாவது ழகரத்தினை ளகரம் வர வேண்டிய இடங்களில் பயன்படுத்தும் வழக்கத்தினைப் பற்றியது. உதாரணமாக 'ஒளித்து வைத்தல்', 'ஒளிந்து கொண்ட' என்ற பொருள் தருகின்ற வாக்கியங்களில் வலைப்பதிவுகளில் 'ஒழித்து வைத்தல்' என்றும் 'ஒழிந்து கொண்ட' என்றோ எழுதப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதே போல 'சுளிக்க வைக்கும்' என்பதனை 'சுழிக்க வைக்கும்' என்று எழுதப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன். ஒளித்தல், ஒழித்தல், சுளித்தல், சுழித்தல் ஆகிய சொற்களுக்குப் பொருட்கள் கிட்டத்தட்ட நிகராக இருந்தாலும் இது நாள் வரை நான் பயன்பாட்டில் அறிந்த வரையில் இவை அவற்றுக்கேற்ற இடங்களில் மட்டுமே பயன்படுத்த வந்துள்ளன. உதாரணத்திற்கு "அவன் அருவெறுப்பினால் முகம் சுளித்தான்" என்பதனை "அவன் அருவெறுப்பினால் முகம் சுழித்தான்" என்று எழுதுவது சரியா? "முகத்தினை சுழித்தல்" என்று எழுதினாலும் பொருள் தரும். ஆனால் நான் இது நாள் வரை அறிந்திருப்பது "அருவெறுப்பினால் முகம் சுளித்தான்" என்பதனை தான். அதே போல "புத்தகத்தை ஒழித்து வைத்தான்" என வலைப்பதிவுகளில் எழுதப்படுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் பதுக்கி வைத்தல் எனும் பொருள்பட எழுதும் போது "ஒளித்து வைத்தான்" என்றே நான் எழுதி வந்திருக்கிறேன். ளகரம் வரும் இடங்களில் இவ்வாறு ழகரத்தை இடைமாற்றி எழுதலாமா? அப்படி எழுதலாம் எனில் அதற்குண்டான விளக்கம் என்ன? என் ஐயத்தை யாராவது தீர்த்து வையுங்களேன்? நன்றி.

Tuesday, February 12, 2008

தமிழ் ப்ளஸ் டூ

நான் ப்ளஸ் டூ வரைக்கும் தாங்க தமிழ் படிச்சிருக்கேன். தமிழ் பாடப்புத்தகத்துல இருக்குற செய்யுள், உரைநடை அது தவிர துணைப்பாடப் புத்தகத்துல இருக்கற ஒரு சில கதைகளைத் தவிரத் தமிழில் இலக்கியம் சார்ந்தது சாராததுன்னு வேறு எதையும் படிச்சது கிடையாது. ஜெயமோகன், நாஞ்சில்நாடன், தபூ சங்கர் போன்ற இலக்கியவாதிகளின் பேர்களை எல்லாம் கூடத் தமிழ் வலைப்பூக்கள் படிக்க ஆரம்பிச்சப்புறம் தான் கேள்வியே படறேன். ப்ளஸ் டூ முடிச்சதுக்கப்புறம் நுழைவுத் தேர்வு, கட் ஆஃப் மார்க், எஞ்சினியரிங் காலேஜ் சீட், கேட்கற ப்ராஞ்ச் கெடைக்குதாங்கிற கவலை...பொறியியல் படிப்பு முடிச்சதும் மறுபடியும் நுழைவுத் தேர்வு, கலந்துரையாடல், பேட்டி(அதாங்க இண்டர்வியூ:) இப்படின்னே போயிடுச்சு நம்ம வாழ்க்கை. அப்பாடா படிச்சி முடிச்சாச்சுன்னு நெனைக்கிறதுக்குள்ள வேலை, சம்பளம் இப்படியாகப் பல சிந்தனைகள் மனதில் வந்து உக்காந்துக்கிச்சு.

என்ன தான் இருந்தாலும் இன்னைய வரைக்கும் நான் நெனச்சி பெருமை படற விஷயம் ஒன்னு இருக்குன்னா ப்ளஸ் டூ வரைக்குமாச்சும் தமிழ் படிச்சோமேங்கிறது தான். நான் தமிழ்ல தான் வீக், எனக்குத் தமிழ் தான் வராதுன்னு யாராச்சும் சொன்னா அப்பல்லாம் ரொம்ப கோவம் வரும். இப்ப கொஞ்சம் வயசானதுக்கு அப்புறம் அந்த கோவம் கொஞ்சம் தணிஞ்சுருக்கு. ஆனாலும் இப்பவும் அந்த மாதிரி எதாச்சும் கேட்டா வருத்தமா இருக்கும். பத்தாம் வகுப்பு முடிச்சதும் பதினொன்னாம் வகுப்புல பிரெஞ்சு, ஜெர்மன்(எங்க பள்ளிக்கூடத்துல ஜெர்மன் கூட இருந்துச்சு) இதெல்லாம் எடுத்து படிக்கிற பசங்களைப் பாத்தா சிரிப்பாத் தான் வரும். உன் சொந்த மொழித் தமிழை ஒழுங்காத் தெரிஞ்சிக்காம பிரெஞ்சு படிச்சி என்னடா பண்ணப் போறேன்னு கேட்டா அப்பத் தான் ப்ளஸ் டூல நெறைய மார்க் வாங்க முடியும்னு ஒரு நொண்டி சாக்கு சொல்லுவானுங்க. கட் ஆஃபுக்குக் கூட உதவாத ஒரு மொழியைப் படிக்கிறதுக்கு நம்ம மொழியை விட்டுத் தரனுமான்னு பல முறை தோணியிருக்கு.

சரி இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க. வாசிப்பனுபவம் இல்லாது போனாலும், ப்ளஸ் டூ வரைக்கும் நான் கற்ற தமிழ் இலக்கியங்கள் திடீர் திடீர் என ஞாபகத்துக்கு வரும். சில சமயம் அதுக்கு எதாவது ஒரு காரணி இருக்கும்...பல சமயங்கள் எந்த காரணமும் இல்லாம இந்த மாதிரி-இந்த மாதிரி எதோ படிச்சோமேன்னு ஞாபகத்துக்கு வரும். அதுக்கப்புறம் அது என்ன ஏதுன்னு கூகிளில் தேடிப் படிக்கிற வரைக்கும் பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆகிடும். அந்த மாதிரி பைத்தியம் பிடிக்கிற அளவுக்குப் போய் நெட்ல தேடிக் கண்டுபிடிச்ச ப்ளஸ் டூ தமிழ் பாட செய்யுள்களைப் பற்றித் தான் இந்தப் பதிவு.

சமீபத்துல கல்லூரி திரைப்படம் பார்த்தேன். அதுல சலீமான்னு ஒரு பொண்ணு இருக்கும். ஒரு காட்சியில சொல்லும் "எங்க அத்தாவுக்கு இதயத்துல ஓட்டை இருக்குதாம். அதனால கவிச்சி சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு"ன்னு சொல்லும். இந்த வசனத்தைக் கேட்டதும் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் பெருமான் சிவனைத் தன் தந்தையெனக் கருதி இயற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. இதோ அந்தப் பாடல் :

"அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய்
அருள் நோக்கில் தீர்த்த நீராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியை நீ எளியை ஆனாய்
எனை ஆண்டு கொண்டு இரங்கி ஏன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
பிழைத்தனன் அத்தனையும் பொறுத்தாயன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறே"


இந்தப் பாடலுக்குண்டானப் பொருள் விளக்கம் கொடுக்கும் போது எங்க தமிழ் மிஸ் சேதுராணி அவர்கள் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்கு. "நாயன்மார்கள் ஒவ்வொருவரும் இறைவனுடன் உண்டானத் தங்கள் பிணைப்பை ஒவ்வொரு வடிவத்தில் கண்டனர். வேடுவ குலத்தில் பிறந்த கண்ணப்பர் இறைவன்பால் வைத்திருந்த அன்பு நண்பர்கள் இருவருக்கு மத்தியிலான அன்பு போன்றது. ஆனால் சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான அப்பர் இறைவனைத் தன் தந்தையாகக் கண்டார். (சைவ சமயக் குரவர்கள் நால்வர். அவர்கள் - திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் எனும் அப்பர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்) அத்தா என்னும் சொல்லுக்கு அப்பா என்று பொருள். நல்லவொரு தமிழ்ச் சொல்லான இதை தங்கள் தந்தையை விளிப்பதற்கு இசுலாமியர்கள் இன்றும் பயன்படுத்துகிறார்கள்" என்று சொன்னது ஞாபகம் வந்தது. இது கல்லூரி படத்தில் சலீமா பேசும் வசனத்தைக் கேட்டதும் நினைவுக்கு வந்தது.

இறைவனின் அளவிலாக் கருணையை வியந்து போற்றி கண்ணீர் மல்க அப்பர் பெருமான் பாடிய இப்பாடலின் பொருள் - "எந்தவொரு உணர்வுமில்லாத தூயபரமாக இருப்பதுபோக்கி, என் அத்தனாக அன்பின் பேருருவாகத் தோன்றி அடியேனை அன்பினாலே ஆர்த்து, நிறைத்து ஆட்கொண்டாய். மேலும் அருள் நோக்குத் தேற்றி என் அகம் படிந்துள்ள குற்றங்களை எல்லாம் கழுவி சுத்தம் செய்யும் பொருட்டு கங்கை நீர் கொண்டு குளிப்பாட்டினாய். எத்தனையோ தவங்கள் செய்தாலும் காண்பதற்கும் அனுபவிப்பதற்கும் அரியையாகிய நீ, என் மேல் பரிவு கொண்டு எனக்கு எளியை ஆனாய் என்பதொடு என்னைத் தானாக்கி ஆண்டுகொண்டு என்னையும் உன் அடியார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டாய். நான் கொள்கை உறுதியில்லா பித்தன், சிவஞானம் யாதென்று அறியாத பேதை, பல தீய சக்திகள் உள்ளத்தில் நடமாடத் தரும் பேயேன், இதுவேண்டும் அதுவேண்டும் என்று நிலைகொள்ளாது தெருவெல்லாம் தேடித் திரியும் நாயேன். ஆயினும் இவ்வாறு ஒவ்வாத பல செய்து பிழைவழி சென்றாலும் அத்தனையுயும் பொறுத்து எனக்கு அருள்பாலித்ததை நினைத்து நினைத்து, ஐயகோ உன் அளப்பரும் பெருங்கருணை செயல்படுமாற்றைக் கண்டு கண்டு வியக்கின்றேன் காண்"

கணவனுடைய வீட்டில் மகள் எவ்வாறு வாழ்கிறாள் எனக் காண வரும் ஒரு தந்தையின் வாய்மொழியாக அமைந்த ஒரு குறுந்தொகை பாடல் ஒன்னு. தன் வீட்டில் செல்வச் செழிப்பில் அளவிலா பாசத்தில் வளர்ந்த தன் பெண், கணவன் வீட்டில் பொறுப்புடன் நடந்து கொள்வதை கண்டு பெருமிதப்படும் தந்தையார் என்ன சொல்லிருக்காருன்னா

"முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்
குவளையுண் கண் குய்ப்புகை கமழத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்
றெண்ணுதன் முகனே"


இப்பாடலுக்கு வரிக்கு வரி பொருள் எனக்கும் தெரியவில்லை. இணையத்தில் தேடியும் கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்த வரை "மென்மையான காந்தள் மலர்களைப் போன்ற விரல்களைக் கொண்ட என் மகள், சமையலறையில் தயிர் தோய்ந்த கைகளுடன் எதோ வேலையில் ஈடுபட்டிருக்கிறாள். குவளை மலர்களைப் போன்ற அவள் கண்களில் சமையலறையின் புகை எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதை பொருட்படுத்தாமல் தயிர் தோய்ந்த கைகளுடனேயே கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். என் வீட்டில் செல்வச் செழிப்புடன் வளர்ந்த என் மகள், கணவன் வீட்டில் இவ்வளவு பொறுப்புடன் நடந்து கொள்கிறாளே என மகிழ்ந்தேன் யான்" என அத்தந்தை பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல். நான் இப்பாடலுக்குக் கூறிய பொருளில் தவறிருந்தால் தெரியப்படுத்துங்கள்.

"படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்
உடைப்பெரும் செல்வராயினுமிடைபட
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டும் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குரை யில்லைத் தாம் வாழுநாளே"


மேலே உள்ள பாடலைப் பாருங்கள். பெருஞ்செல்வனாக இருந்தாலும், மெல்ல நடந்து சோறைக் கையில் வாங்கி பாதி உண்டும் மீதி கீழே இறைத்தும் காண்பவர்களை மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்கள் செல்வமில்லாதவர்களுக்கு ஒப்பானவர்கள் தான் எனக் கூறுகிறது இப்பாடல். இந்தப் பாடலிலிருந்து சில கருத்துகளைக் காப்பியடிச்சி நான் எழுதுனது இங்கே :)

உண்மையிலேயே தமிழ்ப் புலவர்களின் கற்பனை திறமையைக் கண்டு மலைத்துப் போயிருக்கிறேன். அகமாகட்டும், புறமாகட்டும் - பாடலை வளமாக்கும் இக்கற்பனை நயம் தான் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இத்தகையப் பாடல்களை இன்னும் மனதில் இருத்தியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. உதாரணத்துக்கு கலிங்கத்துப்பரணி பாடல் ஒன்று. போர்க்களத்தில் காயமடைந்து உயிரை விடப் போகும் தருவாயில் இருக்கும் தன் கணவனின் உடல் கூட பூமி என்னும் பெண்ணைத் தழுவக் கூடாது என்ற எண்ணத்தில் கணவனின் உடலை தன் இருகைகளால் தாங்கிப் பிடித்துத் முதலில் தன்னுயிரை விடுகிறாள் அந்த மனைவி. அதன்பின் கணவன் இறந்து அவன் உடல் கீழே விழும் போது கூடத் தன் மனைவியின் உடல் மேலே விழுகிறது. எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா? அதே மாதிரி சிலப்பதிகாரத்துல ஒரு பாடல் கோவலனும் கண்ணகியும் பாண்டிய நாட்டுக்கு வரும் பொழுது, அங்கிருந்த கோட்டையின் மீதிருந்த கொடிகள் "வாரல் வாரல்" என அசைந்தாடினவாம். அதாவது உங்களுக்கு இங்கே ஆபத்து இருக்கு அதனால் நீங்க இங்கே வராதீங்க என்று வருந்திச் சொல்வது போல கொடிகள் அசைந்தனவாம். இது போக நோயினால் இறக்கும் குழந்தை கூட வீர மரணம் அடைந்தது போல இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நென்சைக் கீறிய பின்னரே புதைப்பர் எனக் கூறுகிறது புறநானூறு. தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்றால் கழுமரம் ஏறும் ஆண்கள்(யப்பா...சாகறதுக்கு வேற வழியே இல்லையா?), தலைவனைப் பிரிந்து பசலை நோய் காணும் தலைவி இப்படியாகப் ப்ளஸ் டூ வரைக்கும் படிச்ச தமிழ்லேயே பழந்தமிழர்களைப் பற்றியும் அவர்கள் வாழ்க்கை முறைமைகளைப் பற்றியும் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

இதுலேயே அகம் சம்பந்தப்பட்ட பாடல்கள் படிப்பதற்கும் தெரிந்து கொள்வதற்கும் இனிமையாகவும்...கிளுகிளுப்பாகவும் இருக்கும்:). அதுவும் என்னன்னு ஒன்னும் புரியாம பூஜ்யத்துலேருந்து இன்ஃபினிட்டி வரைக்கும் சைன் தீட்டாவையும் காஸ் தீட்டாவையும் இண்டக்ரேட் பண்ணி அதுக்கு ப்ரூபையும் எழுதற கணித க்ளாஸுக்கு அப்புறம் தமிழ் வகுப்பு வந்துச்சின்னா அது ஒரு பெரிய ரிலாக்சேஷனா இருக்கும். நான் படிச்சது வேற பாய்ஸ் ஸ்கூலா? கேக்கவே வேணாம். ப்ளஸ் டூல தமிழ் எடுத்தது வேற ஒரு தமிழ் ஐயா. தலைவன் தலைவின்னு வந்துட்டாலே ரோமான்சு தானே? அந்த ரோமான்சையே பாடமா படிக்கிற பாக்கியம் யாருக்கு கெடைக்கும். தலைவன் தலைவி பாடல் எதுவும் இப்போ எனக்கு ஞாபகத்துக்கு வரலை. திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி என்னும் பெண் பந்தாடும் அழகை விவரிக்கிறாரு பாருங்க -


"செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்சொல் என்றாட - இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட - இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து குழைந்தாட
மலர்ப்பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே!"

ஒன்னும் வேணாம்... "வசந்தவல்லி பந்தாடினாள்" அப்படின்னு தமிழ் ஐயா சொன்னாலே போதும், பசங்க காரணமே இல்லாம கெக்கேபிக்கேன்னு சிரிப்பானுங்க. எதோ பீச் வாலிபால் ஆடற ஒரு பொண்ணை ஸ்க்ரீன்ல பாத்த மாதிரி. ஐயாவும் "டேய் பாடத்துல மட்டும் கவனம் செலுத்துங்கடா"ன்னு சொல்லிட்டு சிரிப்பாரு. எங்கே ஸ்கூல்ல மட்டும் தான் இப்படின்னு நினைச்சேன். ஆனா அப்படியில்லை ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கற சில கிறித்தவ மேனிலைப் பள்ளிகளிலும் தமிழ் வகுப்புல பசங்க நல்லா எஞ்சாய் பண்ணியிருக்காங்கன்னு காலேஜ் படிக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன். இதை எல்லாம் தெரிஞ்சிக்கிறதை விட்டுட்டு ப்ளஸ் டூ வந்தும் "அ-அம்மா, ஆ-ஆடு", "பசு பால் குடிக்கும்"னு ப்ரெஞ்சுலேயும் ஜெர்மன்லயும் படிச்ச சில பசங்களை நெனச்சா இன்னும் கூட சிப்பு சிப்பா வருது :)