Monday, February 23, 2009

TN-07 BC-2308

ஹலோ மை டியர் டாட்டர்,

காதலுக்கு மரியாதை படத்துல காகா ராதாகிருஷ்ணன் ஷாலினியைக் கூப்பிடற மாதிரி நான் உன்னை கூப்பிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டே தானே? என்னம்மா பண்ணறது? சினிமா படம் பாத்து அதை உல்டா பண்ணி எழுதி எழுதியே பழகிப் போச்சு. காப்பியடிக்கிறது என்னமோ நமக்கு கஸாட்டா சாப்பிடற மாதிரி குளிர்ச்சியா இருக்கு. இப்ப இந்த பதிவையே எடுத்துக்கயேன். வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்காக எழுதுன பதிவைப் பாத்து தான் பதிவு மூலமா கூட அப்பாக்கள் மகள்களுக்கு லெட்டர் எழுதலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்கப்பாவுக்கு ஒரிஜினலா ஐடியாக்களை உருவாக்கத் தெரியாட்டினாலும் காப்பியடிச்சு உல்டா பண்ணறது என்னமோ கைவந்த கலையாவே இருக்கு.

சென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகப் போகுதுமா. என்னமோ ஆன்சைட்ல அமெரிக்கால இருந்துட்டு வந்த மாதிரி என்ன பில்டப்பு வேண்டிக் கெடக்குன்னு ப்ளாக் படிக்கிற ஆண்ட்டிகளும் அங்கிள்களும் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியா? போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. "நான் ஆன்சைட்ல இருக்கேன்"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி "யூ.எஸ்ஸா?" அப்படின்னு தான். இல்லீங்க...
"சித்தூர்கட்"னோ "அகமதாபாத்"னோ நான் சொல்றதை கேட்டு பல பேரு நான் என்னமோ நக்கல் பண்ணறதா நெனச்சிருக்காங்க.

அதெல்லாம் இருக்கட்டும். மூனு வருஷமா ஆன்சைட்லேயே இருந்துட்டு...சரி...சரி...மூனு வருஷமா இந்தியாவுக்குள்ளேயே வெவ்வேறு இடங்கள்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு...முதன்முறையா சென்னையில வேலை செய்யற வாய்ப்பு கெடைச்சிருக்குமா. வாய்ப்பென்ன வாய்ப்பு? "ஐயா நான் புள்ளைக்குட்டி காரன்...எனக்கு ஒரு சின்ன குழந்தை இருக்குது, குழந்தை வளர்றப்போ பக்கத்துல இருந்து பாத்துக்கனும். சென்னையில தான் ப்ராஜெக்ட் வேணும்னு" உன்னை காரணம் காட்டி தான் சென்னை வந்திருக்கேன். எனக்கு சென்னையில ப்ராஜெக்ட் கெடைச்சதுக்கு காரணம் நீ தான்மா. க்ளையண்ட் சைட்ல வேலை செய்யும் போது, தங்கியிருக்கற இடத்துலேருந்து ஆஃபிசுக்குப் போறதுக்கு பலவிதமான வழிகள் இருந்திருக்கு. சித்தூர்கட்ல இருந்தப்போ ஃபேக்டரிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா ஜீப் அனுப்புவாங்க. சில சமயம் அந்த ஜீப் மைனுக்கு(mine) அதாவது லைம்ஸ்டோன் சுரங்கத்துக்குப் போயிட்டு வந்த ஜீப்பா இருக்கும். சீட்டு மேல செம்மண் ஒரு ரெண்டு லேயர் ஒட்டியிருக்கும். நாங்க அந்த ஜீப்புல போய் அந்த சீட்டைக் கம்பெனி காரங்களுக்காக பல தடவை இலவசமா சுத்தம் பண்ணிக் குடுத்துருக்கோம். அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ. கடைசியா பெங்களூருல வேலை செய்யறப்போ தான்மா ரொம்ப வசதியா இருந்துச்சு. கேக்கற நேரத்துல கேப்(Cab) கெடைச்சிட்டிருந்தது. BMTC பஸ்ல முண்டியடிக்காம சொகுசா கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.

இப்போ சென்னை வந்துட்டேன். ஆனா இப்ப நான் வேலை செய்யறது க்ளையண்ட் சைட் கெடையாது, அதாவது ஆன்சைட் கெடையாது. எங்க கமபெனியோட சொந்த ஆஃபிசுல இருக்கேன். க்ளையண்ட் சைட்ல இருந்தா தான் ஜீப், கேப் எல்லாம் கெடைக்கும். சொந்த ஆஃபிசுல வேலை செஞ்சா அதெல்லாம் கெடைக்காது. கிழக்கு கடற்கரை சாலைல இருக்கற நம்ம வீட்டுலேருந்து எம்ஜிஆர் தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கற எங்க ஆஃபிசுக்கு லேப்டாப்பைத் தூக்கிட்டு பஸ்சுல போனா முழி பிதுங்கிடுதுமா. நீ பொறக்கறதுக்கு ரொம்ப முன்னாடி, 2002ல வாங்குன ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்னு என்கிட்ட இருந்துச்சு. மூனு வருஷமா சென்னைக்கு வெளியே இருந்ததுனால, அந்த வண்டி ரொம்ப நாளா ஓட்டாம கொஞ்சம் மோசமான நெலைமையில இருந்துச்சு. அதையும் சரி பண்ணி கொஞ்ச நாள் ஓட்டுனேன். இருந்தாலும் ஏழு வருஷம் ஆயிட்டதுனால, அதிகமா ஓட்டாததுனாலயும் அதுக்கு மேல என்னென்ன செலவு வைக்குமோன்னு நெனச்சி ஸ்ப்ளெண்டரை வித்துட்டு ஒரு புது பைக் வாங்குனேன். அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக். பைக் புக் பண்ணும் போது உன் நெனப்பு தான்மா முதல்ல வந்துச்சு. வண்டியோட பதிவு எண் 2308 தான் வேணும்னு தனியா பணம் கொடுத்து கேட்டு வாங்குனேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி நீ பொறந்தது தான் அதுக்கு காரணம்னு நான் சொல்லாமலேயே நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நம்பறேன். ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே வண்டியை புக் பண்ணிட்டாலும் லாரி ஸ்ட்ரைக் காரணமா பல நாளு வண்டி கெடைக்காமலேயே இருந்துச்சு. நான் ரொம்ப நச்சரிச்சதுக்கப்புறம் "வண்டி வந்துடுச்சு, இன்னிக்கு வந்து டெலிவரி எடுத்துக்கங்க"னு பஜாஜ் டீலர் ஃபோன் பண்ணி சொன்ன அந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி. நான் வண்டி எடுத்த அன்னிக்கு சரியா உனக்கு வயசு ஆறு மாசம் முடிஞ்சிருந்தது.


வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்குப் பேரு வச்சதுக்கான காரணத்தைத் தன்னோட பதிவுல எழுதிருக்காரு. அந்த ஐடியாவையும் நான் காப்பியடிச்சிட்டேன். உங்க அம்மாவும் நானும் சேர்ந்து உனக்கு "அர்ச்சனா ராஜ்"னு பேரு வச்சிருக்கோம். உனக்கு பிடிச்சிருக்காம்மா? கார்த்திகை நட்சத்திரத்துல நீ பொறந்ததுனால உனக்கு பேரு வைக்க அ, ஊ, இ, ஏ ன்னு நாலு எழுத்துகள் சொன்னாங்க. உனக்கு பேரு வைக்க, நீ பிறக்கறதுக்கு முன்னாடி நானும் உங்க அம்மாவும் பெங்களூர்ல நேம் புக் எல்லாம் வாங்குனோம். அதுல பல பேருங்க வாய்ல நுழையாத பேருங்களா இருந்துச்சு. பெரும்பாலான பேருங்க எதோ இதிகாச புத்தகத்துலேருந்து சுட்ட பேருங்களா இருந்துச்சு. "தாடகா"ன்னு(Tadaka) ஒரு பேரை பெண் குழந்தைகளுக்கு ஏத்த பேருன்னு அந்த புக்ல போட்டிருந்ததைப் பாத்ததும் தீ வைச்சு கொளுத்தனும் போல ஒரு கோபம் வந்துச்சு. தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும். எந்த அம்மா, அப்பா தங்களோட குழந்தைக்கு தாடகான்னு பேரு வைப்பாங்க. அதுக்கப்புறம் அந்த பேரு வைக்கற புஸ்தகத்தை நாங்க தொடவே இல்லை. பேரு வைக்க நாலெழுத்து சொன்னதும் முதல்ல 'அ' எழுத்துல தான் யோசிச்சேன். எனக்கு "அர்ச்சனா"ன்னு பேரு வச்சா நல்லாருக்குமேன்னு தோனுச்சு. உங்கம்மாவுக்கு, உங்க தாத்தா, பாட்டி எல்லாருக்கும் அந்த பேரே ரொம்ப புடிச்சிப் போச்சு. அதுக்கப்புறம் ரொம்பெல்லாம் யோசிக்கலை. நீ பொறந்த 24 மணி நேரத்துக்குள்ள "அர்ச்சனா"னு உனக்கு பேரு வச்சாச்சு. ஜோசியர் உன்னோட பேரு ரெண்டு பகுதியா வர்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுனால அர்ச்சனாங்கிற பேர் கூட என் பேரில் பாதியான ராஜ்-ஐ எடுத்து, கூடுதலா நியுமராலஜியும் பார்த்து 'Archanaa Raj'னு பேரு பதிவு பண்ணிட்டோம். உனக்கு இனிஷியல் எல்லாம் கெடையாதும்மா. பிற்காலத்துல பாஸ்போர்ட் அப்ளிகேஷன், வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் நிரப்பும் போது First name, Last name பிரச்சனை எல்லாம் வராது. Archanaa-ங்கிறது First name, Raj-ங்கிறது Last name.

அப்புறம் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும். என்னோட நண்பர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கற செய்தியை மெயில் மூலமா தெரிவிப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு ஆசை இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பற வாய்ப்பு எனக்கு வரும் போது "We have been blessed with a Baby Girl"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே. நீ பொறந்ததும் உங்கம்மாவுக்கு முன்னாடி உன்னை பார்த்தது நான் தான். உங்கம்மாவுக்குப் பிரசவம் பாத்த டாக்டரும் நெறைய தமிழ் சினிமா பாப்பாங்க போல. ஆகஸ்ட் 23ஆம் தேதி சாயந்திரம் 3.35 மணிக்கு நீ பொறந்தே. ஒரு 20 நிமிஷத்துல உன்னை ஒரு துணியில சுத்தி வெளில நின்னுட்டிருந்த எனக்கு வாழ்த்து சொல்லி என் கைல குடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஆனா என் வாழ்க்கைல என்னால மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. அவ்ளோ சின்ன குழந்தையை என் கைல நான் எடுத்து பாத்ததே இல்லை. ஏசி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்து குளிர் தாங்க முடியாம உதடு துடிக்க நீ அழுதுக்கிட்டு இருந்தே. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது. இதே மாதிரி தான் விவசாயி அங்கிளும், சூரியா அண்ணன் பொறந்த அந்த தருணத்தை அழகா "ஜனனம்"னு பேரு வச்சி கவிதையா சொல்லிருக்காரு. உன்னோட ஒவ்வொரு அசைவையும், அழுகையையும், சிரிப்பையும் பாக்கும் போது அப்படியே நான் கரைஞ்சி போயிடறேன். "பெண் குழந்தைகள் அப்பாக்களுக்கு வரப்பிரசாதம்"னு ஒரு "பின்நவீனத்துவ பெருமான் அங்கிளும்" சொல்லிருக்காரு. அவரு பின்நவீனத்துவமா பல மேட்டர் சொன்னதுல இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு புரிஞ்சிருக்கு. ஏனா இது நான் அனுபவிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.

உன்னை பாக்கனும்னு நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்தே நண்பர்களா இருக்கற அங்கிள்ஸ் அண்ட் ஆண்ட்டீஸ் பல பேரு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக உன்னோட இந்த படங்களை இங்கே போட்டிருக்கேன்.

இது 25-12-2008 அன்னிக்கு எடுத்தது. நீ முதன் முதல்ல குப்புற கவிழ்ந்தது 17-12-2008. ஆனா நான் அப்போ பெங்களூர்ல இருந்தேன், அதனால உன்னோட அந்த முதல் achievementஐ என்னால பாக்க முடியலை.

இது 27-12-2008 அன்னிக்கு எடுத்தது. உங்க ஆயா(நீ எப்படி கூப்பிட போறியோ தெரியாது) புடிச்சிருக்க, சாயந்திரம் நம்ம வீட்டுல எடுத்தது.

இது நாம திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்த போது 03-01-2009 அன்னிக்கு எடுத்தது. உன்னை உங்க சித்தப்பாவும் ஆயாவும் கார்(வாடகை கார் தான்) மேல உக்கார வச்சிருக்காங்க.

Wednesday, February 18, 2009

மீ ராத் டாக்கலி

ரெண்டு வாரத்துக்கு முன்னாடி ஞாயித்துக் கெழமை கலைஞர் டிவியில அப்துல் அமீது அவர்கள் நடத்துற "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்தேன். அதுல ஒரு ஆண் பாடகர் 16 வயதினிலே படப் பாட்டான "செந்தூரப் பூவே" பாட்டு பாடுனாரு. ரொம்ப அருமையா உணர்வு பூர்வமா பாடுனாரு. அப்துல் அமீது கூட அவரை அந்த பாட்டைச் சிறப்பா பாடுனதுக்காக நல்லா பாராட்டினாரு. நான் கூட அந்த நேரம் யோசிச்சிப் பார்த்தேன், நமக்கு ரொம்ப புடிச்ச பாட்டுகள்ல பல பாட்டுகள் ஃபீமேல் சோலோக்களாச்சென்னு(Female Solos). என் ப்ளேலிஸ்டுல இருக்கற எனக்கு ரொம்ப புடிச்ச அடிக்கடி விரும்பிக் கேக்கற பாடல்கள் என்னன்னு பட்டியல் போட்டப்போ கீழே இருக்கற பாடல்கள் எல்லாம் உடனே நியாபகத்துக்கு வந்துச்சு.
1. "காற்றுக்கென்ன வேலி", எஸ்.ஜானகி, அவர்கள்
2. "இவள் ஒரு இளங்குருவி", எஸ்.ஜானகி, பிரம்மா
3. "செந்தூரப்பூவே செந்தூரப்பூவே", எஸ்.ஜானகி, 16 வயதினிலே
4. "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்", எஸ்.ஜானகி, இன்று நீ நாளை நான்
5. "கண்கள் எங்கே", பி.சுசீலா, கர்ணன்
6. "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்", பி.சுசீலா, அன்பே வா
7. "மாலை பொழுதின் மயக்கத்திலே", பி.சுசீலா, பாக்கியலட்சுமி
8. "கற்பூர பொம்மையொன்று", பி.சுசீலா, கேளடி கண்மணி
9. "மாலையில் யாரோ", ஸ்வர்ணலதா, சத்ரியன்
10. "வானவில்லே வானவில்லே", சாதனா சர்கம், ரமணா
இந்தப் பாடல்களைப் பத்தித் தனித்தனியாவே பதிவெழுதி போடலாம். அவ்ளோ ஃபீலிங்ஸும் அவ்ளோ சிறப்புகளும் இருக்கு இந்த பாடல்கள்ல.

மேலே இருக்கற இந்த லிஸ்டுல இல்லாத, எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு தனி பெண்குரல் பாடல் ஒன்னு இருக்குங்க. அது இன்னான்றீங்களா? அது ஒரு மராட்டி பாட்டு. லதா மங்கேஷ்கர் பாடுனது. "கைப்புள்ளையாரே உமக்கென்ன விசறே? மராட்டிய மொழிப் பாட்டினைக் கூட்டிக் கொண்டு தமிழ்வலையுலகில் வந்துள்ளீர்?" அப்படின்னு கன்னத்தில் முத்தமிட்டால்" பசுபதி போல தானே கேக்கறீங்க. அதுக்கும் முன்னாடி இன்னொன்னும் சொல்லிடறேன் மராட்டி எனக்கு தாய் மொழியோ, தந்தை மொழியோ, புகுந்த வீட்டு மொழியோ இப்படி எதுவுமே கெடையாது. ஒரு சில வார்த்தைகளைத் தவிர எனக்கும் மராட்டி சுத்தமாப் புரியாது.

ஆனா என்ன பொறுத்தவரை இசைக்கு மொழி கெடையாது. இது தொடர்பா நான் அடிக்கடி சொல்ற உதாரணம் - மைக்கேல் ஜாக்சன். ஒரு காலத்துல நான் மைக்கேல் ஜாக்சனோட பயங்கரமான ரசிகன். அவரோட பாப் பாடல்களைக் கேட்டா ரொம்ப உற்சாகமா, துள்ளலா, எழுந்து ஆடணும் போல இருக்கும். இவ்வளோ ரசிச்ச மைக்கேல் ஜாக்சனோட பாடல்கள் எதுவும் எனக்கு அப்போல்லாம் புரிஞ்சது கெடையாது. இப்ப கூட பெருசா புரியறது இல்ல, ஆனா லிரிக்ஸ் தெரியணும்னா இணையத்தில் தேடுனா சுலபமா கெடைச்சுடுது. எல்லாத்தையும் நெட்ல தேடிப் பார்த்து படிச்சிட்டு பொறந்ததுலேருந்து நான் இங்கிலீஷ் பாட்டு தவிர எதையுமே கேட்டதில்லைங்கிற ரேஞ்சுக்குப் பீலா விடறதுக்கு வழியும் வகையும் இப்ப இருக்கு:) சரி அதையெல்லாம் விடுங்க. இந்த இங்கிலீஷ் பாட்டுகளை மாதிரியே நம்ம நாட்டு மொழிகள்ல வந்த சில திரைப்படப் பாடல்கள்லயும் மொழி புரியாட்டியும் பிடிச்சிப் போற பாடல்கள் இருக்கத் தான் செய்யுது. இசைக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் மொழி புரியாட்டியும் நாம அந்த பாடல்களை ரசிப்போம்.

ரெண்டு பத்தி பில்டப்புக்கப்புறம் உண்மையான மேட்டருக்கு இப்போ வருவோம். இந்த பாட்டைப் பத்தி முதல்லேயே ஒரு விஷயம் சொல்லிடறேன். இது ஒரு 100% அக்மார்க் "இஸம்" பாடல். இதை நான் சொல்லலை. நெட்ல பாத்தீங்கன்னா இந்த படத்தைப் பத்தி பல பேரும் இந்த மாதிரி தான் சொல்றாங்க. மராட்டி திரைப்பட உலகின் க்ளாசிக் பாடல்களில் ஒன்றாக இப்பாட்டைக் கருதுறாங்க. "மீ ராத் டாக்கலி"ன்னு தொடங்குற இந்த பாட்டு இடம்பெற்றிருக்கும் படத்தின் பேரு "ஜைத் ரே ஜைத்"(Jait re Jait). ஒரு காலத்தில் இந்தி திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்மிதா பாட்டில் அவர்கள் நடிச்ச படம் இது. அருமையான மெலடி இது. கீழே இருக்கற வீடியோல இந்த பாட்டோட ஆங்கில மொழிபெயர்ப்பும் இருக்கு பாருங்க. "என்னோட பழசை எல்லாம் கழித்து இன்று நான் புதிதாய் பிறந்தேன்" அப்படின்னுட்டு ரொம்ப சந்தோஷமா இயற்கையை ரசிச்சுக்கிட்டே ஸ்மிதா பாட்டில் பாடிக்கிட்டே போகிற மாதிரியும் "எவ்ளோ திமிராப் போறா பாரு இந்த பொம்பள" அப்படின்னு ரெண்டு காலிப்பசங்க பாறை மேல குந்திக்கிட்டு கிண்டல் பண்ணிப் பாடற மாதிரியும் இந்தப் பாடல் படமாக்கப் பட்டிருக்கும். ஆனா அந்த கிண்டலை எல்லாம் பொருட்படுத்தாம புதிய வாழ்க்கையை எதிர் நோக்கி ரொம்ப எதிர்பார்ப்போட உற்சாகத்தோட நடந்து போய்க்கிட்டே பாடிட்டுப் போகிற மாதிரி இருக்கும் இந்த பாட்டு.

படம் : ஜைத் ரே ஜைத்(Jait re Jait 1977)
பாடல் : என்.டி.மஹானோர் (N.D.Mahanor)
இசை : ஹிருதயநாத் மங்கேஷ்கர்
பாடியது : லதா மங்கேஷ்கர்



mi raat taakli.mp3 - smita patil

பாட்டைக் கேட்டீங்களா? ஒரு சிலருக்காச்சும் இந்த பாட்டு பிடிச்சிருக்கும்னு நம்பறேன். இதை படிக்கிறவங்கள்ல யாராவது ஒருத்தராச்சும், இந்தப் பதிவைப் படிக்கிறதுக்கு முன்னாடியே கேட்டிருப்பீங்கன்னும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கு. முன்னொரு காலத்தில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக் கிழமை மதியங்களில் அவார்டு வாங்கிய பிற மொழித் திரைப்படங்கள் போடுவாங்க பாத்திருக்கீங்களா? அந்த வரிசையில் நானும் இந்த படத்தைப் பாத்துருக்கேன். இந்த படம் பாக்கும் போது எனக்கு ஒரு பத்து-பதினொரு வயசு இருக்கும். தக்கர் எனப்படும் பழங்குடியின வகுப்பினரைப் பற்றிய படம், மேளம் அடிச்சு பிழைப்பு நடத்தும் ஒரு ஆணுக்கும் விவாகரத்தான ஒரு பெண்ணுக்கும் நடக்கும் காதல் கதைனு விக்கிபீடியால சொல்லிருக்கு. ஆனா அதெல்லாம் எனக்கு எதுவும் ஞாபகமில்லை. க்ளைமாக்ஸ் மட்டும் தான் லேசா ஞாபகம் இருக்கு. ஸ்மிதா பாட்டிலோட வேலை தேன் எடுக்கறது. க்ளைமாக்ஸ் சீன்ல மலைமேல கூடு கட்டி இருக்கற ராணி தேனீயோட கூட்டைக் கலைக்கற மாதிரி எதோ ஒரு வேலை வரும் ஸ்மிதா பாட்டிலுக்கு. அதுக்குப் பின்னாடி எதோ காரணமும் இருக்கும், ஆனா என்னன்னு இப்போ ஞாபகம் இல்லை. மலை மேல ஏறி தனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை முடிச்சிடுவாங்க. ஆனா அந்த சமயம் தேனீக்கள் கொட்டுறதுனால உயரத்துலேருந்து கீழே விழுந்து இறந்துடற மாதிரி படம் முடியும். இறக்கும் போது தான் கர்ப்பிணின்னு சொல்ற மாதிரி ஒரு காட்சி வரும்னு நெனைக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு இந்த படம் பார்த்து - யாராச்சும் பை சான்ஸ் இந்த படம் பாத்துருந்தீங்கன்னா நான் சொல்றது சரியா தப்பான்னு சொல்லுங்க. இருந்தாலும் கண்டிப்பா இந்த காட்சியைப் பாத்த மாதிரி தான் ஞாபகம். அப்புறம் ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி இதே பாட்டு ரீ-மிக்ஸ் பண்ணி ஒரு ஆல்பமா வெளியிட்டாங்க. பாலே நடனம் கத்துக்க நெனக்கிற தன்னோட பெண்ணுக்கு ஒரு அம்மா எப்படி ஊக்கமாயிருந்து வழிநடத்துறாங்கன்னு அந்த வீடியோல சொல்லப் பட்டிருக்கும். பின்னணியில் இந்த பாட்டு ஒலிச்சிட்டிருக்கும். அந்த ஆல்பத்தைப் பாத்து தான் இந்த பாட்டு பல வருஷங்களுக்கு அப்புறம் ஞாபகம் வந்துச்சு. வழக்கம் போல நெட்ல தேடுனா ஒரிஜினல் பாட்டைப் பத்தி பல தகவல்கள் கெடைச்சது.


இந்த நேரத்துல இந்த பாட்டுல நடிச்சிருக்கற ஸ்மிதா பாட்டில் பத்தி சொல்லி ஆகணும். 31 வயதில் தன்னுடைய பிரசவத்தின் போது இவங்க இறக்கலைன்னா கண்டிப்பா மிகப் பெரிய நடிகையா வந்துருக்க வேண்டியவங்க. அவங்களோட பையன் ப்ரதீக், அமீர்கானின் தயாரிப்பான "ஜானே தூ யா ஜானே நா" அப்படீங்கற இந்தி படத்தில் ஜெனீலியாவோட சகோதரரா நடிச்சிருக்காராம். தூர்தர்ஷன்ல செய்தி வாசிப்பாளரா தன்னுடைய பணியைத் தொடங்குன இவங்க மெல்ல திரைப்படங்கள்ல நடிக்க வந்தாங்க. இந்திலயும், மராட்டிலயும் முத்திரை பதித்த பல திரைப்படங்கள்ல நடிச்சிருக்காங்க. ஜைத் ரே ஜைத், அர்த் சத்யா மாதிரியான ஆர்ட் படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. பல மசாலா படங்கள்லயும் நடிச்சிருக்காங்க. பாயும் புலி படப் பாட்டான "பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்" இந்தி பதிப்புல அமிதாப்போட இவங்க நடிச்சிருக்கறதை நீங்க பாத்துருக்கலாம்.
'அழகி' படத்துல நந்திதா தாஸுக்குப் பதிலா வேற யாராச்சும் நடிக்கலாம்னா, இவங்க மட்டும் தான் பொருந்துவாங்கங்கிறது என்னோட தாழ்மையான எண்ணம். இவங்களைப் பத்தி சொல்றதானா என்னோட "சைல்ட் ஹூட் க்ரஷ்"னு சொல்லலாம். சில முகங்களைப் பாத்தா கறுப்பா களையா இருக்காங்கன்னு சொல்லுவாங்க இல்லை...அப்பேர்ப்பட்ட ஒரு களையான அழகான முகம் ஸ்மிதா ஆண்ட்டியோடது. ஐயயோ! கறுப்பு தான் எனக்கு புடிச்ச கலருன்னு சொல்லிட்டனா? பரவால்ல...இருந்துட்டு போவுது. சொல்லாம விட்டுப் போனது ஒன்னே ஒன்னு இருக்கு இன்னும்...இந்த பதிவு 16.02.2006லேருந்து அதாவது நான் பதிவெழுத ஆரம்பிச்ச ரெண்டாவது மாசத்துலேருந்து ட்ராஃப்டல இருந்த பதிவுங்கிறது தான் அது.

Saturday, February 14, 2009

காதலர் தின ஸ்பெஷல் வெண்பா

"குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்" என்னும் பதிவை அம்மாக்களின் உலகம் வலைப்பூவில் படிச்சேன். குழந்தைகளுக்காக விற்பனைக்கு உள்ள விளையாட்டு பொம்மைகள் தற்போதெல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டுத் தயாரிப்புகளாகவே அதுவும் குறிப்பாக சீனத் தயாரிப்புகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார் ஆகாய நதி. ஆறு மாதக் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் அக்கூற்று சரியானதே என நம்புகிறேன். Fisher Price, Funskool, Mattel ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்கள் தான் இப்போது பல கடைகளிலும் மலிந்துக் கிடக்கிறது.

அந்தப் பதிவைப் படிச்சதும் சங்க காலத்துல தமிழ் இலக்கியங்கள்ல சொல்லிருக்கற பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் திடீர்னு ஞாபகம் வந்தது. ஊஞ்சல், அம்மானை, கழங்கு இப்படின்னு விளையாட்டு பேர்கள் எல்லாம் திடீர்னு ஞாபகம் வந்துச்சு. நம்ம குழந்தையைச் சங்க கால முறைப்படி விளையாட்டுகள் விளையாடச் சொல்லி பழக்குனா என்னன்னு ஒரு ஐடியா தோனுச்சு. அந்த தாய் ஐடியாவை ஒரு வெண்பாவா வடிச்சா எப்படியிருக்கும்னு இன்னொரு பிள்ளை ஐடியா உதிச்சுச்சு. சோ...கவிதை எழுதுறதுக்கே கைடு கேட்டுட்டு இருந்த நான் என் பொண்ணு பொறந்த நேரம் வெண்பா எழுதுற அளவுக்கு முன்னேறிட்டேன். இப்போ அந்த வெண்பாவைப் பாக்கலாமா...

"செம்மீனாடிடு காகமு மாலவன்தாள் தொழுநெடும்
புன்னை பாக்கமுறை கடைபருவ மலையவள்
மொழியாம் புள்ளும்பூவும் பூண்டும் கண்டனன்
இட்டும் தொட்டுமாடி பழக பார்பி பாவை
வேண்டுவ கரும்பனை தடந்தோள் இனிதுயில்
வயிரவன் வெள்ளை கொடியோன் வேல்தீட்டி
வினைசெய் போதினிலி றுத்தான் பிடிநடை
பெண்டிர் முறமது புலிபுறம்பட ஓடுவநாடே
வான்தொடு ஊசலாடி அம்மானைபாடி பின்நல்
தோழியர் களித்திட கழங்காடி மகிழுவ
புல்வேண்டா சிகையினன் இளையவன் பகரவே
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்
வளை தவழ்கையள் கிள்ளை மொழியாள்
லூசாப்பாநீ என்றனள ங்கையற் கண்ணினளே!"


அசை, சீர், தளை எல்லாம் சரியாத் தானிருக்கும்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆனா இப்படியொரு அருமையான வெண்பாவைப் படிச்சி புரிஞ்சிக்க உங்களுக்கெல்லாம் கஷ்டமாயிருக்கலாம். அதுக்காகத் தான் நான் எழுதுன வெண்பாவுக்கு நானே கோனார் நோட்ஸ் போட்டுருக்கேன் கீழே -

செந்நிறம் கொண்ட சங்கரா மீன்கள் மூச்செடுக்க கடல்பரப்பின் மீது வரும் போது கொத்தித் தின்னும் நீர் காகங்களும், கடற்கரை கோயிலின் தலவிருட்சமான புன்னை மரம் திருமாலின் கருணையை நினைத்து உருகி அவன் அடி தொடும் பொருட்டு வானம் தொட எண்ணுவதை போல மேல்நோக்கி உயர்ந்து வளரும் கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகிய பாக்கம் என்பது இப்பாடல் பாடப்பட்ட இடம்.

நீர் காகமும், புன்னை மரமும் கருப்பொருளாய்க் கொண்ட நெய்தல் திணை நகரமாகிய சென்னை மாநகரிலே வசிக்கும், பிள்ளைத்தமிழ் பருவங்களில் பெண்பிள்ளைகளின் கடைசிப் பருவம் எனச் சொல்லப்படும் ஊஞ்சலாடு பருவத்தில் இருக்கும் சிறு பெண்குழந்தையவள். அப்பெண் குழந்தையானவள் அறிவிலும் அழகிலும் சிறந்தவளாகப் போற்றப் பெறும் சிவபெருமானின் துணையான மலைமகள் பார்வதி தேவிக்கு ஒப்பானவள்.

அக்குழந்தை சொல்கிறாள் "பறவைகளையும்(புள்), பூக்களையும், செடிகொடிகளையும்(பூண்டு) வேடிக்கை பார்த்து பார்த்து எனக்கு அலுத்து விட்டது. ஆகவே நான் தொட்டு கீழே போட்டு பேசிப் பழகி விளையாட ஒரு பார்பி (Barbie) பொம்மை வாங்கித் தாருங்கள்" என்று கேட்கிறாள்.

யாரிடம் கேட்கிறாள்? கருமையான நிறத்தினைக் கொண்ட பனைமரங்களைப் போன்ற வலிமையான தோள்களையும், அல்வா எனும் இனிப்பினை மதிய உணவுக்குப் பின் உண்டு விட்டு தினமும் தூங்கிய காரணத்தால் செல்லமான தொப்பை விழுந்த வயிறையும் கொண்ட என்றுமே அமைதியையே விரும்பும் வெள்ளை கொடியோன் ஆகிய தன் தந்தையிடம் கேட்கின்றாள்.

வேலினைத் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தன் குழந்தையின் வேண்டுதலுக்கு அத்தந்தையானவன் பதில் சொல்லுகின்றான். நிற்க. அமைதியையே விரும்புபவன் வேல் தீட்டும் காரணம் என்ன என்பதை நீங்கள் இங்கு யோசிக்க வேண்டும். இரவு உணவிற்காக வெங்காயங்களையும், தக்காளிகளையும் நறுக்குவதற்காக மேலிட உத்தரவின் பேரில் கத்தியைத்(வேல்) தீட்டிக் கொண்டிருக்கிறான் என்பது இவ்வரிகளில் புலவர் நமக்கு குறிப்பால் உணர்த்துவது.

காய்கறிகளை அரிந்து கொண்டே குழந்தைக்கு என்ன பதில் சொல்லுகிறான்? "பெண் யானையின் நடையைப் போன்ற ஒயிலைக் கொண்டவர்கள் தமிழ் பெண்கள். ஒயில் கொண்ட பெண்கள் ஆனாலும் வீரத்திலும் அவர்கள் மிகச் சிறந்தவர்கள். எத்தகைய வீரம் என்றால் அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்க்கும் புலியை முறத்தைக் கொண்டு அதன் பின்புறத்தில் அடித்து ஓட ஓட விரட்டியடிக்கும் வீரம் கொண்ட பெண்கள். அத்தகைய அழகும் வீரமும் ஒருசேர அமைந்த தமிழ் பெண்கள் கொண்ட நாட்டில் அவர்கள் வழியில் வந்தவள் நீ. பார்பி பொம்மை வைத்து விளையாடுவதற்குப் பதிலாய் வானம் தொடுமாறு ஊஞ்சலாடி, அம்மானை பாடி, தோழியருடன் மகிழ்ந்து கழங்கு ஆடுவாய் ஆனால் புத்துணர்ச்சி பெருகும், குரல் வளம் பெருகும், ஞாபக சக்தியும், செய்யும் செயல்களில் கவனமும் கூடும்" என்று தன் ஆருயிர் மகளுக்கு அறிவுரை சொல்கின்றான். அறிவுரை சொல்கின்றவன் எத்தகையவன் என்றும் பாடலாசிரியர் குறிப்பிட மறக்கவில்லை. புல்வேண்டா - புல்லினை எப்போதும் விரும்பாத, சிகை- கேசம்...அப்படின்னா புலி + கேசி...புலிகேசி. அதாவது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் வழிவந்த இளையவன் என்று சொல்கிறார்.

தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதாம். அத்தகைய தத்தித் தத்தி நடக்கும் சிறுகால்களைக் கொண்ட சிறிய வளையல்களைத் தன் கையில் அணிந்துள்ள கிளியைப் போன்ற இனிய மொழியினைக் கொண்ட அழகிய பெரிய கண்களைக் கொண்ட அப்பெண் குழந்தை தன் தந்தையைப் பார்த்து கேட்கின்றாள் "லூசாப்பா நீ?".

(இப்போ பதிவுக்கும் அதன் தலைப்புக்குமான தொடர்பைச் சொல்லிடறேன். காதலர் தினத்தன்னிக்கு ஸ்பெஷலா முயற்சி பண்ணி எழுதுன வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்)