Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Monday, February 11, 2008

அண்ணன் நல்லவரு...வல்லவரு

கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி ஒவ்வொரு நாள் காலையும் பள்ளிக்கூடம் கிளம்பறதுக்கு முன்னாடி 'கவுண்டமணி காமெடி' எனும் ஒலிப்பேழையைக் கேட்காமல் தொடங்கியதே இல்லை. கவுண்டமணியும் செந்திலும் தங்கள் புகழின் உச்சியில் இருந்த போது வெளிவந்த படங்களான உதயகீதம், வைதேகி காத்திருந்தாள், உன்னை நான் சந்தித்தேன், மலையூர் மம்பட்டியான் இப்படியாகப் பல படங்களின் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளின் ஒலிவடிவம் தான் கவுண்டமணி காமெடி.

அதுல வர்ற ஒரு நகைச்சுவை காட்சி - வைதேகி காத்திருந்தாள் படத்தில் இருந்து.

"வீலா இது வில்லு மாதிரி இருக்கு"

"டேய்! கோமுட்டித் தலையா...என்னோட அறிவுக்கு நான் அமெரிக்காவுல இருக்க வேண்டியவண்டா...எதோ என் கஷ்ட காலம் இப்படி பழனியப்பன் சைக்கிள் வீலுக்குப் பெண்டு எடுத்துட்டிருக்கேன்"

"இதையெல்லாம் நீ போய் சொல்லோணும்டா...அழகுராஜ் அண்ணன் ஒரு நல்லவரு...அவர் ஒரு வல்லவரு...பெண்டு நிமித்திறதுல...இப்படியெல்லாம் போய் சொல்லோணும்டா"

"ஆம்பளைங்க கிட்ட சொல்லோணும்னு முக்கியம் இல்லை...குறிப்பா நம்மூரு பொம்பளைங்க கிட்ட போய் சொல்லோனும்"

"இந்த ஊருல உன்னை எவனும் கிட்ட சேக்க மாட்டான்...ஏன்னா கிட்ட வந்தா நீ கடிச்சி வச்சிடுவே. இருந்தாலும் உன்னை ஏன் நான் வச்சிருக்கேன்...இதை எல்லாம் போய் சொல்லுவேனு தான்"

பிப்ரவரி 11 முதல் 17 வரை தமிழ்மணத்தின் நட்சத்திர பதிவராக இருக்க தமிழ்மண நிர்வாகியிடமிருந்து மின்னஞ்சல் வந்ததும், வரிக்கு வரி மனப்பாடமான இந்த காமெடி தான் என் நினைவுக்கு வந்தது. ஆல் இன் ஆல் அழகுராஜா அளவுக்குத் திறமை எல்லாம் எனக்கு இருக்கா இல்லையான்னு தெரியாது. ஆனா அண்ணன் நல்லவரு...வல்லவருன்னு போய் சொல்றதுக்குக் கோமுட்டித் தலையன் யாரும் இல்லாத பட்சத்துல நம்மளைப் பத்தி நாமளே பெருமையா நல்லவரு வல்லவருன்னு எழுதிக்கிறதை ஒரு வாரத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டற வாய்ப்பா இந்த நட்சத்திர பதிவர்ங்கிற வாய்ப்பைப் பார்க்குறேன். இதை எனக்கு அளித்தத் தமிழ்மணம் நிர்வாகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாடா...தலைப்புக்கும் பதிவுக்கும் எப்படியோ முட்டி மோதி ஒரு தொடர்பை ஏற்படுத்தி விட்டாச்சு. ஒவ்வொரு முறையும் இதுக்குத் தான் அதிகமா மண்டை காயுது :)

"தமிழ் பதிவாம்...தமிழ் டைப்பிங்காம்...எல்லாம் வெட்டி வேலை...அதை செய்யற நேரத்துல வேற வேலை இருந்தாப் போய் பாக்கலாம்" அப்படின்னு என் நண்பன் திருமுருகன் கிட்ட சாட்ல பேசுன அன்னிக்கு சாயங்காலமே என் தமிழ் வலைப்பூவை ஆரம்பிச்சேன். பார்வர்டட் மெசேஜ்களையெல்லாம் காப்பியடிச்சி ஒட்டிக்கிட்டிருந்த என் ஆங்கில வலைப்பூ கமெண்ட் இல்லாமல் ஈயோட்டற கடுப்புல அப்படிச் சொன்னேன். ஆனா என்ன தான் இருக்குன்னு பாப்போமே அப்படின்னு பாக்க ஆரம்பிச்சப்போ வலைப்பூக்களில் தமிழ் எனக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டியது. சிலரைப் போல நெடுங்காலம் அடுத்தவரின் பதிவுகளைப் படித்திருந்து விட்டு என் வலைப்பூவைத் தொடங்கவில்லை...அப்போ தான் பாத்தேன்...அப்போவே ஆரம்பிச்சிட்டேன். தமிழ் வலைப்பூன்னு சொன்னாலும் என்னோட முதல் சில பதிவுகள் தங்கிலிஷ்ல தான் இருக்கும்...அதுக்குக் காரணம் மூனு பதிவு இருந்தா தான் தமிழ்மணத்துல இணைப்பாங்க அப்படீங்கறதுனால தான்.

நான் முதன் முதலில் பார்த்தது கவிஞர் நிலவு நண்பன் அவர்களுடைய வலைப்பூ...அதுக்கப்புறம் அங்கே பின்னூட்டம்(ஆரம்பிச்ச புதுசுல பின்னூட்டம்னா கமெண்ட்னு எனக்கு புரியலை) போட்டிருந்த ஜி.ராகவனோட வலைப்பூவைப் பார்த்தேன் "ஃப்ளைட்டில் வந்த பூர்ணிமா"??(னு நெனக்கிறேன்) அப்படின்னு ஒரு கதை எழுதிருந்தாரு...அங்கே இலவசக்கொத்தனார்ங்கிற பேரைப் பாத்தேன்...வித்தியாசமா இருக்கே...அப்படின்னு அங்கே போனா டுபுக்கு இண்டீப்ளாக்கர்ஸ் அவார்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கு வோட்டு போட்டா சோப்பு டப்பா ஸ்பூன் எல்லாம் கொடுக்கறதா விளம்பரம் பண்ணிருந்தாரு. இப்படியே நாளாக நாளாகத் தமிழ்ல எழுதறதுக்கும் குறிப்பா படிக்கிறதுக்கும் அடிமை ஆகிட்டேன். நாளடைவில் நண்பர்கள் வட்டம் அதிகம் ஆச்சு...காதலுக்கு மரியாதை படத்துல வர்ற "ஹே பேபி பேபி" பாட்டு பாத்திருக்கீங்களா? அதுல சார்லி, தாமு, விஜய் எல்லாம் கைகுடுத்து நண்பர்கள் ஆகற ஒரு காட்சி இருக்கும்...அதுல குறிப்பா சார்லியோட முகபாவம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்...அது மாதிரி பதிவுகள்ல கைகுலுக்கி(கமெண்ட் போட்டு) பல நண்பர்கள் அறிமுகம் ஆனாங்க. நான் எழுத வந்த ஆரம்ப காலத்தில் எனக்கு பெருமளவு ஊக்கம் கொடுத்தது தேவ், இளா, நம்ம தங்கத்தலைவி கீதா மேடம், இன்னொரு கீதா மேடம், தளபதியார் சிபி, இலவசக்கொத்தனார், எஸ்கே(இப்போ விஎஸ்கே), சிவஞானம்ஜி ஐயா, நிலவுநண்பன், இயக்குனர் இமயம் ஜி.ரா, பாலராஜன் கீதா சார் இவங்கல்லாம். அதோட கமெண்டு மட்டுமில்லாம கூடுதல் தகவல்களைச் சேர்த்து பதிவுக்கு வளம் சேர்த்த பல பதிவர்களும் இருக்குறாங்க. மிகத்திறம்பட நற்றமிழில் எழுதும் பல பதிவர்கள் இருக்கும் இத்தளத்தில் எனக்கும் இந்தளவு ஆதரவு கொடுத்த அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிவைப் போட்டுட்டு அதுக்கு கமெண்ட் வராதான்னு F5 அழுத்தி அழுத்தி பாக்கறது...நாம அடுத்தவங்கப் பதிவுல போட்ட கமெண்டுக்குப் பதிலு வந்துருக்கான்னு பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை எட்டிப் பார்த்துட்டே இருக்கறதுன்னு இல்லாத வேலை எல்லாம் பண்ணிருக்கேன். அப்போதெல்லாம் இந்தூரில் நானே தனியாகச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். பதிவெழுதும் ஆர்வத்தில் சமைக்க மறந்து இரவு 11.30 மணிக்கு ஃப்ரூட்டி குடித்து தூங்கிய அனுபவமும் உண்டு. முதன் முதலில் 'நியூ படத்தில் பிடித்தது' என்ற என் பதிவு கில்லி பரிந்துரையிலும், தேன்கூடு அதிகம் பார்வையிடப்பட்ட பதிவுகளிலும் இடம்பெற்ற போது கிடைத்த மகிழ்ச்சி அளப்பிடற்கரியது. ஒரு பதிவுக்கு 4-5 கமெண்டு வந்துச்சுன்னா அன்னிக்கு சாப்பிட்ட சாப்பாட்டோட கூடுதலா இன்னொரு அன்லிமிட்டெட் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி ஒரு நிறைவு வரும் :) அதுக்கப்புறம் 20-30ன்னு வந்துட்டிருந்த கமெண்டு இந்தப் பதிவுல:) முதன் முறையா 100ஐத் தாண்டுச்சு. நாம எழுதறதுக்குப் பின்னூட்டம் மூலமா கெடைக்கற ஃபீட்பேக் தரும் மகிழ்ச்சியும் போதையும் இருக்கே...அதை அனுபவிச்சாத் தான் புரியும். நகைச்சுவையா எழுதறேன்னு பல பேரும் சொல்லிருக்காங்க...மத்த விஷயங்களை விட என்னை முன்னிலை படுத்தி காமெடி பண்ணிக்கிறது எனக்கு சுலபமா வருதுன்னு நினைக்கிறேன். ஆனா நிஜ வாழ்க்கையில் நான் பயங்கர கடியன். எல்லா விஷயமும் பர்ஃபெக்டா ப்ளான் பண்ணி நடக்கனும்னு எதிர்பார்ப்பேன். பயங்கரமா அலைபாயற மனசு எனக்கு...ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போது சம்பந்தமே இல்லாம இன்னொரு விஷயத்துல மனசு அலைபாயும். ஒரு சாம்பிள் கேக்கறீங்களா? கேட்டுட்டு அடிக்க வரப்படாது இப்பவே சொல்லிட்டேன். என்னைத் தாலாட்ட வருவாளா பாட்டுல மஞ்சள் நிற சுடிதார் போட்டுக்கிட்டு ஷாலினி ஓடற மாதிரி ஒரு காட்சி வரும், அதைப் பாத்துட்டு இருக்கும் போது ஃப்ரேம்ல டாப் ரைட் கார்னர்ல தெரியற மஞ்சள் நிற பூவோட தாவரவியல் பேரு(Botanical name) "சீஸால்பினியா பல்செரிமா"(Caesalpinia pulcherrima) தானேன்னு திடீர்னு சந்தேகம் வந்துரும். அப்படியே +2ல படிச்ச ஃபைலம், ஜீனஸ் இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துரும்...அதுக்கப்புறம் காதலுக்கு மரியாதை செஞ்ச மாதிரி தான்:)

தமிழில் பெரிதாக வாசிப்பனுபவம் எதுவும் இல்லாத எனக்கு தமிழ் வலைப்பூக்கள் கற்றுக் கொடுத்தது ஏராளம். வலைப்பூக்களுக்கே உரிய தனித்தமிழ் சொற்களாகட்டும்(பின்னிப் பெடலெடுக்கறது, சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறது, ஆணி புடுங்கறது, பொட்டித் தட்டறது...), கதை/கவிதை/புகைப்படம் எனப் பல துறைகளிலும் மிளிரும் விற்பன்னர்களின் திறமையைக் கண்டு அவர்களைப் போலவே நாமும் பலவற்றையும் செய்ய வேண்டும் எனும் ஊக்கம் ஆகட்டும்..நான் கற்றதும் பெற்றதும் பல என்பதில் ஐயம் ஏதும் எனக்கில்லை. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டிய முக்கியமான ஒரு புரிதல் எனக்கு வாய்த்திருக்கிறது. அது வலைப்பூ என்பது என் கருத்துகளை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு தளம். எனக்கு பிடித்தமான கருத்துகளை எவ்வாறு அடுத்தவர்கள் கேட்க வேண்டும் என நினைக்கிறேனோ...அதே போல அடுத்தவர்கள் சொல்வதையும் கேட்க நான் தயாராக இருக்க வேண்டும் என்பதே அது. அதே போல உன் கருத்து முட்டாள்தனமானது என்று அடுத்தவரை பார்த்து இடித்துரைப்பதை விடுத்து சொல்ல வேண்டிய விதத்தில் பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்ளும் திறமை அனைவரிடமும் இருக்கவே செய்கிறது என முதலில் நாம் நம்ப வேண்டும் என்ற ஒரு பக்குவம். ஜொள்ளுப்பாண்டி என்ற பெயரை வைத்துக் கொண்டு எழுதும் நம்ம பாண்டியின் பதிவுகளைப் பெண் பதிவர்களும் படித்து கமெண்ட் போடுகிறார்கள் என்பதிலேயே அதற்கு ஆதாரம் இருக்குதில்லையா? சுருக்கமாச் சொல்லனும்னா மொக்கை பதிவாகட்டும், இலக்கியமாகட்டும், நமக்கு ஆணித்தரமான நம்பிக்கை உள்ள ஒரு கருத்தாகட்டும், நம்முடைய கருத்தை ஒருத்தர் ஏத்துக்கறதாகட்டும், நாம சொல்ல வர்றதை சரியா புரிஞ்சிக்கறதாகட்டும் - எல்லாம் நாம சொல்ற விதத்தில் தான் இருக்கு :)