Showing posts with label மகள். Show all posts
Showing posts with label மகள். Show all posts

Monday, April 20, 2009

இப்படிக்கு செவ்வாழை சித்தப்பு...

அன்பு மகள் அர்ச்சனாவிற்கு,
உன் தந்தை உனக்காக எழுதும் இரண்டாம் கடிதம் இது. 'Letters from a Father to his Daughter'னு நம்ம நாட்டோட முதல் பிரதமர் பண்டித நேரு அவரோட மகளான இந்திரா பிரியதர்ஷினிக்கு(இந்திரா காந்தி) நிறைய கடிதங்கள் எழுதிருக்காரு. ஆனா என் கிட்ட நீ அந்த லெவலுக்கு எல்லாம் எதையும் எதிர்பாக்காதே. சரி...இப்போ அதை ஏன் என்கிட்ட சொல்றீங்கன்னு கேக்கறியா? நான் இதுக்கு மேல, நேரு போல பெரிய ஆளு ஆகப் போறதில்லை. ஒரு வேளை நீ வருங்காலத்துல இந்திரா காந்தி மாதிரி உலகத்தவரால் பேசப்படற ஒரு பெண்ணா ஆனால், அப்போ உன் நைனாவான என் பேரும் பேசப்படும்ங்கிற ஒரு நப்பாசை தான்.

இந்த லெட்டர் நான் உனக்கு எழுதிருக்கேன்னு தானே கேக்கறே? உனக்கு வந்த ரெண்டு லெட்டர்களைப் பத்திச் சொல்றதுக்குத் தான் நான் இந்த லெட்டரை எழுதறேன். என்னது? லூசாப்பா நீயா? அதுல என்ன சந்தேகம் உனக்கு. ஜார்கண்ட மாநிலம் ராஞ்சியில இருக்கற உங்க சின்ன சித்தப்பா ஹேமந்த் அவங்க மகளுக்காகன்னு ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. உங்க பெரிய சித்தப்பா முரளிக்கும் எனக்கும் மூனு வயசு வித்தியாசம், ஆனா உங்க சின்ன சித்தப்பாவுக்கும் எனக்கும் பதினெட்டு வயசு வித்தியாசம். ஏன்னா உங்க சின்ன பாட்டிக்கும்(அதாவது ஹேமந்த் சித்தப்பாவோட மம்மி, அதாவது எங்க சித்தி) எனக்குமே பதினோரு வயசு தான் வித்தியாசம். இப்ப எட்டாவது பாஸ் பண்ணிட்டு ஒன்பதாவது போறாரு உங்க சின்ன சித்தப்பு. நீ உங்க அம்மா வயித்துல இருக்கும் போது உங்க ரெண்டு செவ்வாழை சித்தப்புக்களும் கூட்டிக்கிட்டு காடு மேடெல்லாம் சுத்தறதுக்கு ஒரு 'பருத்தி வீரன்' தான் மகனா வேணும்னு கேட்டாங்க.

ஆனா அவங்க எதிர்பார்த்த 'பருத்தி வீரன்' ஒரு கேர்ளா(girl) பொறந்ததுக்கு அப்புறமாவும் அவங்க உன் மேல வைக்கிற அன்புக்கு எந்த குறைவும் இல்லை. உங்க பெரிய செவ்வாழை சித்தப்பு காலைல உன்னை தூக்கி வச்சிக்கிட்டு வேடிக்கை வெளையாட்டு எல்லாம் காட்டறாரு. நீ ரொம்ப விரும்பி வெளையாடற ட்ரம்ஸ் வாசிக்கிற யானை பொம்மையும் வாங்கிட்டு வந்து குடுத்தாரு. மகள் உக்காந்து சாப்பிடறதுக்காக எங்கிருந்தோ அலைஞ்சு திரிஞ்சு உனக்காக குட்டி சைஸ்ல ஒரு ஈஸி சேர் வாங்கிட்டு வந்தாரு. உங்க சின்ன செவ்வாழை சித்தப்பு, எந்த கடைக்குப் போனாலும் அர்ச்சனாவுக்கு அர்ச்சனாவுக்குன்னு கவுன், வளையல், க்ளிப்னு என்னென்னமோ தேடித் தேடி வாங்கி போன தடவை ஆனுவல் லீவுக்குச் சென்னைக்கு வந்தப்போ உனக்காக குடுத்துட்டு போயிருக்காரு. இப்ப... உனக்காக ஜார்கண்ட்லேருந்து 'தமிழ்லேயே' ரெண்டு லெட்டர் எழுதி அனுப்பிருக்காரு. ஏன் 'தமிழ்லேயே'ன்னு இழுக்கறேன்னு பாக்கறியா? உங்க சித்தப்பு எல்கேஜி படிக்கும் போது சென்னையில இருந்தாரு... அப்போ மட்டும் தான் பள்ளிக்கூடத்துல தமிழ் படிச்சாரு. இப்போ அவரு படிக்கிறது எல்லாம் கேந்திரிய வித்யாலயா ஸ்கூல்ல. அங்கே அவர் தமிழ் ஒரு பாடமா இல்லை. இந்தி மட்டும் தான். தமிழ் அவரு எப்படியோ கத்துக்கிட்டு உனக்காக ரெண்டு கடுதாசி போட்டுருக்காரு. அவரு எழுதிருக்கற லெட்டரை உனக்குப் புரியற மாதிரி கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை எல்லாம் குறைச்சு இன்னொரு தடவை நான் எழுதிருக்கேன். Girl Child Day, ராணி வேலு நாச்சியார் அப்படின்னு உனக்கு கடுதாசி அனுப்பறதுக்கு First Day Coverகளைத் தேடித் தேடி வாங்கிருக்காரு சின்ன சித்தப்பு.

கடிதம் 1

20 மார்ச் 09, வெள்ளி

To
Dr. அர்ச்சனா ராஜ்

அன்பு மகள் அர்ச்சனாவுக்கு சித்தப்பு ஹேமந்த் எழுதுவது. நான் இங்கு நலம். நீ உந்தன் பாட்டி, தாத்தா, அம்மா, அப்பா மற்றும் செவ்வாழை சித்தப்பு நலமா? இங்கே உந்தன் சின்னபாட்டி, நான் மற்றும் அத்தை நலம். உன்னை விசாரிக்க தான் இந்த கடிதம் எழுதியிருக்கிறேன்.
- ஹேமந்த் சித்தப்பா

Note : This was my first letter in தமிழ்.
சிரிக்கவும்.
Happy Family
Daddy, Amma, Periya Anna, Anni, Chinna Anna, Archanaa, Rani, Dhava, Hemu




கடிதம் 2

01 ஏப்ரல் 09
டு
டாக்டர்.அர்ச்சனா ராஜ்

அன்புள்ள மகளுக்கு குட்டி சித்தப்பா எழுதுவது. நான் இங்கே நலம். நீ அங்கே நலமா. ஏப்ரல் 1ஆம் தேதிக்கு தேவையான ஒரு சில குறிப்பிட்ட செய்தி அது என்னவென்றால் எப்பவும் முட்டாள் ஆவக் கூடாது மற்றும் முட்டாள் ஆக்கக் கூடாது. இது தான் என் வேண்டுகோள்.
பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, பெரிய சித்தப்பா மற்றும் அனைவரையும் கவனமாகக் கவனித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்
ஹேமந்த்

அதோட இந்தியில வேற உனக்கு அன்பும் வாழ்த்துகளும் சொல்லிருக்காரு.





உனக்காக உங்க சித்தப்பு செஞ்சி அனுப்பன க்ராஃப்ட் ஐட்டம்

போன தடவை டாக்டர் கிட்ட போனப்போ டிவில வர்ற இந்த "Rota Virus Vaccination" பத்தி நானும் உங்கம்மாவும் கேட்டோம். அது என்ன நான் கேள்விப்பட்டதில்லையேன்னு டாக்டரே சொன்னாங்க. உனக்கு அந்த ரோட்டா வைரஸ் தடுப்பூசி மறக்காம போடச் சொல்லி உங்க சித்தப்பு நியாபகப் படுத்திருக்காரு.


இது 12 ஏப்ரல் 2009 அன்னிக்கு எடுத்தது - உங்க பாட்டி வாங்கிக் குடுத்த கவுனில்.


இது 18 ஏப்ரல் 2009 அன்னிக்கு எடுத்தது - குளிச்சு முடிச்சிட்டு ஃப்ரெஷா. உனக்கு இன்னும் நிக்க வராததுனால சேர்ல சாய்ச்சு நிக்க வச்சி இந்த ஃபோட்டோ எடுத்தோம்.


19 ஏப்ரல் 2009 அன்னிக்கு மாலை கப்பி மாமா உனக்கு வாங்கி குடுத்த Sphagetti Tops மற்றும் Overall போட்டு எடுத்த படம்.

Monday, February 23, 2009

TN-07 BC-2308

ஹலோ மை டியர் டாட்டர்,

காதலுக்கு மரியாதை படத்துல காகா ராதாகிருஷ்ணன் ஷாலினியைக் கூப்பிடற மாதிரி நான் உன்னை கூப்பிட்டிருக்கேன்னு கண்டுபிடிச்சிட்டே தானே? என்னம்மா பண்ணறது? சினிமா படம் பாத்து அதை உல்டா பண்ணி எழுதி எழுதியே பழகிப் போச்சு. காப்பியடிக்கிறது என்னமோ நமக்கு கஸாட்டா சாப்பிடற மாதிரி குளிர்ச்சியா இருக்கு. இப்ப இந்த பதிவையே எடுத்துக்கயேன். வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்காக எழுதுன பதிவைப் பாத்து தான் பதிவு மூலமா கூட அப்பாக்கள் மகள்களுக்கு லெட்டர் எழுதலாம்னு தெரிஞ்சிக்கிட்டேன். உங்கப்பாவுக்கு ஒரிஜினலா ஐடியாக்களை உருவாக்கத் தெரியாட்டினாலும் காப்பியடிச்சு உல்டா பண்ணறது என்னமோ கைவந்த கலையாவே இருக்கு.

சென்னை வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகப் போகுதுமா. என்னமோ ஆன்சைட்ல அமெரிக்கால இருந்துட்டு வந்த மாதிரி என்ன பில்டப்பு வேண்டிக் கெடக்குன்னு ப்ளாக் படிக்கிற ஆண்ட்டிகளும் அங்கிள்களும் கேக்கற மாதிரியே நீயும் கேக்கறியா? போன மூனு வருஷமா கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்னு இந்தியாவுக்குள்ளேயே சுத்திக்கிட்டு இருந்தாலும் நானும் ஆன்சைட்ல தான்மா இருந்தேன். இந்தியாவுக்குள்ளேயே ஆன்சைட் போற மக்களும் இருக்காங்கன்னு இப்ப அவங்க கூட சேர்ந்து நீயும் தெரிஞ்சிக்கிட்டே தானே. ஆனா வெளிநாடு போனா தான் அது ஆன்சைட்னு ஒரு கருத்து ரொம்ப பிரபலமா நிலவிக்கிட்டு இருக்கு. "நான் ஆன்சைட்ல இருக்கேன்"னு சொன்னா வர்ற அடுத்த கேள்வி "யூ.எஸ்ஸா?" அப்படின்னு தான். இல்லீங்க...
"சித்தூர்கட்"னோ "அகமதாபாத்"னோ நான் சொல்றதை கேட்டு பல பேரு நான் என்னமோ நக்கல் பண்ணறதா நெனச்சிருக்காங்க.

அதெல்லாம் இருக்கட்டும். மூனு வருஷமா ஆன்சைட்லேயே இருந்துட்டு...சரி...சரி...மூனு வருஷமா இந்தியாவுக்குள்ளேயே வெவ்வேறு இடங்கள்ல ப்ராஜெக்ட் பண்ணிட்டு...முதன்முறையா சென்னையில வேலை செய்யற வாய்ப்பு கெடைச்சிருக்குமா. வாய்ப்பென்ன வாய்ப்பு? "ஐயா நான் புள்ளைக்குட்டி காரன்...எனக்கு ஒரு சின்ன குழந்தை இருக்குது, குழந்தை வளர்றப்போ பக்கத்துல இருந்து பாத்துக்கனும். சென்னையில தான் ப்ராஜெக்ட் வேணும்னு" உன்னை காரணம் காட்டி தான் சென்னை வந்திருக்கேன். எனக்கு சென்னையில ப்ராஜெக்ட் கெடைச்சதுக்கு காரணம் நீ தான்மா. க்ளையண்ட் சைட்ல வேலை செய்யும் போது, தங்கியிருக்கற இடத்துலேருந்து ஆஃபிசுக்குப் போறதுக்கு பலவிதமான வழிகள் இருந்திருக்கு. சித்தூர்கட்ல இருந்தப்போ ஃபேக்டரிக்கு ஃபோன் பண்ணிச் சொன்னா ஜீப் அனுப்புவாங்க. சில சமயம் அந்த ஜீப் மைனுக்கு(mine) அதாவது லைம்ஸ்டோன் சுரங்கத்துக்குப் போயிட்டு வந்த ஜீப்பா இருக்கும். சீட்டு மேல செம்மண் ஒரு ரெண்டு லேயர் ஒட்டியிருக்கும். நாங்க அந்த ஜீப்புல போய் அந்த சீட்டைக் கம்பெனி காரங்களுக்காக பல தடவை இலவசமா சுத்தம் பண்ணிக் குடுத்துருக்கோம். அகமதாபாத்ல இருக்கறப்போவும் ஜீப் தான்...ஆனா இது கொஞ்சம் நல்ல ஜீப்...ஸ்கார்பியோ. கடைசியா பெங்களூருல வேலை செய்யறப்போ தான்மா ரொம்ப வசதியா இருந்துச்சு. கேக்கற நேரத்துல கேப்(Cab) கெடைச்சிட்டிருந்தது. BMTC பஸ்ல முண்டியடிக்காம சொகுசா கேப்ல போய் பழக்கமானதுனால உங்க டாடிக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் எல்லாம் டெவலப் ஆயிடுச்சு.

இப்போ சென்னை வந்துட்டேன். ஆனா இப்ப நான் வேலை செய்யறது க்ளையண்ட் சைட் கெடையாது, அதாவது ஆன்சைட் கெடையாது. எங்க கமபெனியோட சொந்த ஆஃபிசுல இருக்கேன். க்ளையண்ட் சைட்ல இருந்தா தான் ஜீப், கேப் எல்லாம் கெடைக்கும். சொந்த ஆஃபிசுல வேலை செஞ்சா அதெல்லாம் கெடைக்காது. கிழக்கு கடற்கரை சாலைல இருக்கற நம்ம வீட்டுலேருந்து எம்ஜிஆர் தாத்தா வீட்டு பக்கத்துல இருக்கற எங்க ஆஃபிசுக்கு லேப்டாப்பைத் தூக்கிட்டு பஸ்சுல போனா முழி பிதுங்கிடுதுமா. நீ பொறக்கறதுக்கு ரொம்ப முன்னாடி, 2002ல வாங்குன ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் ஒன்னு என்கிட்ட இருந்துச்சு. மூனு வருஷமா சென்னைக்கு வெளியே இருந்ததுனால, அந்த வண்டி ரொம்ப நாளா ஓட்டாம கொஞ்சம் மோசமான நெலைமையில இருந்துச்சு. அதையும் சரி பண்ணி கொஞ்ச நாள் ஓட்டுனேன். இருந்தாலும் ஏழு வருஷம் ஆயிட்டதுனால, அதிகமா ஓட்டாததுனாலயும் அதுக்கு மேல என்னென்ன செலவு வைக்குமோன்னு நெனச்சி ஸ்ப்ளெண்டரை வித்துட்டு ஒரு புது பைக் வாங்குனேன். அது தான் இப்போ நான் காலைல கிக் பண்ணும் போது சத்தம் கேட்டு நீ பயப்படறியே அந்த பஜாஜ் டிஸ்கவர் பைக். பைக் புக் பண்ணும் போது உன் நெனப்பு தான்மா முதல்ல வந்துச்சு. வண்டியோட பதிவு எண் 2308 தான் வேணும்னு தனியா பணம் கொடுத்து கேட்டு வாங்குனேன். ஆகஸ்ட் 23ஆம் தேதி நீ பொறந்தது தான் அதுக்கு காரணம்னு நான் சொல்லாமலேயே நீ புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்னு நம்பறேன். ஜனவரி மாசம் ஆரம்பத்துலேயே வண்டியை புக் பண்ணிட்டாலும் லாரி ஸ்ட்ரைக் காரணமா பல நாளு வண்டி கெடைக்காமலேயே இருந்துச்சு. நான் ரொம்ப நச்சரிச்சதுக்கப்புறம் "வண்டி வந்துடுச்சு, இன்னிக்கு வந்து டெலிவரி எடுத்துக்கங்க"னு பஜாஜ் டீலர் ஃபோன் பண்ணி சொன்ன அந்த நாள் ஜனவரி 23ஆம் தேதி. நான் வண்டி எடுத்த அன்னிக்கு சரியா உனக்கு வயசு ஆறு மாசம் முடிஞ்சிருந்தது.


வெட்டி அங்கிள் பர்மிதா பாப்பாவுக்குப் பேரு வச்சதுக்கான காரணத்தைத் தன்னோட பதிவுல எழுதிருக்காரு. அந்த ஐடியாவையும் நான் காப்பியடிச்சிட்டேன். உங்க அம்மாவும் நானும் சேர்ந்து உனக்கு "அர்ச்சனா ராஜ்"னு பேரு வச்சிருக்கோம். உனக்கு பிடிச்சிருக்காம்மா? கார்த்திகை நட்சத்திரத்துல நீ பொறந்ததுனால உனக்கு பேரு வைக்க அ, ஊ, இ, ஏ ன்னு நாலு எழுத்துகள் சொன்னாங்க. உனக்கு பேரு வைக்க, நீ பிறக்கறதுக்கு முன்னாடி நானும் உங்க அம்மாவும் பெங்களூர்ல நேம் புக் எல்லாம் வாங்குனோம். அதுல பல பேருங்க வாய்ல நுழையாத பேருங்களா இருந்துச்சு. பெரும்பாலான பேருங்க எதோ இதிகாச புத்தகத்துலேருந்து சுட்ட பேருங்களா இருந்துச்சு. "தாடகா"ன்னு(Tadaka) ஒரு பேரை பெண் குழந்தைகளுக்கு ஏத்த பேருன்னு அந்த புக்ல போட்டிருந்ததைப் பாத்ததும் தீ வைச்சு கொளுத்தனும் போல ஒரு கோபம் வந்துச்சு. தாடகா எவ்வளோ நல்ல பேராவே இருக்கட்டுமே...அது ராமாயணத்துல ஒரு அரக்கியோட பேருன்னு உலகத்துக்கே தெரியும். எந்த அம்மா, அப்பா தங்களோட குழந்தைக்கு தாடகான்னு பேரு வைப்பாங்க. அதுக்கப்புறம் அந்த பேரு வைக்கற புஸ்தகத்தை நாங்க தொடவே இல்லை. பேரு வைக்க நாலெழுத்து சொன்னதும் முதல்ல 'அ' எழுத்துல தான் யோசிச்சேன். எனக்கு "அர்ச்சனா"ன்னு பேரு வச்சா நல்லாருக்குமேன்னு தோனுச்சு. உங்கம்மாவுக்கு, உங்க தாத்தா, பாட்டி எல்லாருக்கும் அந்த பேரே ரொம்ப புடிச்சிப் போச்சு. அதுக்கப்புறம் ரொம்பெல்லாம் யோசிக்கலை. நீ பொறந்த 24 மணி நேரத்துக்குள்ள "அர்ச்சனா"னு உனக்கு பேரு வச்சாச்சு. ஜோசியர் உன்னோட பேரு ரெண்டு பகுதியா வர்ற மாதிரி இருந்தா நல்லாருக்கும்னு சொன்னதுனால அர்ச்சனாங்கிற பேர் கூட என் பேரில் பாதியான ராஜ்-ஐ எடுத்து, கூடுதலா நியுமராலஜியும் பார்த்து 'Archanaa Raj'னு பேரு பதிவு பண்ணிட்டோம். உனக்கு இனிஷியல் எல்லாம் கெடையாதும்மா. பிற்காலத்துல பாஸ்போர்ட் அப்ளிகேஷன், வேலைக்கு அப்ளிகேஷன் எல்லாம் நிரப்பும் போது First name, Last name பிரச்சனை எல்லாம் வராது. Archanaa-ங்கிறது First name, Raj-ங்கிறது Last name.

அப்புறம் உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும். என்னோட நண்பர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்திருக்கற செய்தியை மெயில் மூலமா தெரிவிப்பாங்க. எனக்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடியே ஒரு ஆசை இருந்துச்சு. இந்த மாதிரி ஒரு மெயில் அனுப்பற வாய்ப்பு எனக்கு வரும் போது "We have been blessed with a Baby Girl"னு அனுப்பனும்ங்கிறது தான் அது. அந்த ஆசையையும் நீ நிறைவேத்தி வச்சிருக்கே. நீ பொறந்ததும் உங்கம்மாவுக்கு முன்னாடி உன்னை பார்த்தது நான் தான். உங்கம்மாவுக்குப் பிரசவம் பாத்த டாக்டரும் நெறைய தமிழ் சினிமா பாப்பாங்க போல. ஆகஸ்ட் 23ஆம் தேதி சாயந்திரம் 3.35 மணிக்கு நீ பொறந்தே. ஒரு 20 நிமிஷத்துல உன்னை ஒரு துணியில சுத்தி வெளில நின்னுட்டிருந்த எனக்கு வாழ்த்து சொல்லி என் கைல குடுத்துட்டுப் போயிட்டாங்க. நான் அதை கொஞ்சம் கூட எதிர்பாக்கவே இல்லை. ஆனா என் வாழ்க்கைல என்னால மறக்கவே முடியாத ஒரு தருணம் அது. அவ்ளோ சின்ன குழந்தையை என் கைல நான் எடுத்து பாத்ததே இல்லை. ஏசி ஆப்பரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்து குளிர் தாங்க முடியாம உதடு துடிக்க நீ அழுதுக்கிட்டு இருந்தே. அதை பாத்து என் கண்ணு கலங்குனதுக்கான காரணம் என்னங்கிறது எந்த logic-க்குள்ளேயும் reasoning-க்குள்ளேயும் வராதது. இதே மாதிரி தான் விவசாயி அங்கிளும், சூரியா அண்ணன் பொறந்த அந்த தருணத்தை அழகா "ஜனனம்"னு பேரு வச்சி கவிதையா சொல்லிருக்காரு. உன்னோட ஒவ்வொரு அசைவையும், அழுகையையும், சிரிப்பையும் பாக்கும் போது அப்படியே நான் கரைஞ்சி போயிடறேன். "பெண் குழந்தைகள் அப்பாக்களுக்கு வரப்பிரசாதம்"னு ஒரு "பின்நவீனத்துவ பெருமான் அங்கிளும்" சொல்லிருக்காரு. அவரு பின்நவீனத்துவமா பல மேட்டர் சொன்னதுல இந்த ஒரு விஷயம் மட்டும் தான் எனக்கு புரிஞ்சிருக்கு. ஏனா இது நான் அனுபவிச்சித் தெரிஞ்சிக்கிட்டது.

உன்னை பாக்கனும்னு நீ பொறக்கறதுக்கு முன்னாலேருந்தே நண்பர்களா இருக்கற அங்கிள்ஸ் அண்ட் ஆண்ட்டீஸ் பல பேரு கேட்டிருந்தாங்க. அவங்களுக்காக உன்னோட இந்த படங்களை இங்கே போட்டிருக்கேன்.

இது 25-12-2008 அன்னிக்கு எடுத்தது. நீ முதன் முதல்ல குப்புற கவிழ்ந்தது 17-12-2008. ஆனா நான் அப்போ பெங்களூர்ல இருந்தேன், அதனால உன்னோட அந்த முதல் achievementஐ என்னால பாக்க முடியலை.

இது 27-12-2008 அன்னிக்கு எடுத்தது. உங்க ஆயா(நீ எப்படி கூப்பிட போறியோ தெரியாது) புடிச்சிருக்க, சாயந்திரம் நம்ம வீட்டுல எடுத்தது.

இது நாம திருவண்ணாமலை கோயிலுக்குப் போயிருந்த போது 03-01-2009 அன்னிக்கு எடுத்தது. உன்னை உங்க சித்தப்பாவும் ஆயாவும் கார்(வாடகை கார் தான்) மேல உக்கார வச்சிருக்காங்க.

Saturday, February 14, 2009

காதலர் தின ஸ்பெஷல் வெண்பா

"குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள்" என்னும் பதிவை அம்மாக்களின் உலகம் வலைப்பூவில் படிச்சேன். குழந்தைகளுக்காக விற்பனைக்கு உள்ள விளையாட்டு பொம்மைகள் தற்போதெல்லாம் பெரும்பாலும் வெளிநாட்டுத் தயாரிப்புகளாகவே அதுவும் குறிப்பாக சீனத் தயாரிப்புகளாக இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தார் ஆகாய நதி. ஆறு மாதக் குழந்தையின் தகப்பன் என்ற முறையில் அக்கூற்று சரியானதே என நம்புகிறேன். Fisher Price, Funskool, Mattel ஆகிய பன்னாட்டு நிறுவனங்களின் விளையாட்டுப் பொருட்கள் தான் இப்போது பல கடைகளிலும் மலிந்துக் கிடக்கிறது.

அந்தப் பதிவைப் படிச்சதும் சங்க காலத்துல தமிழ் இலக்கியங்கள்ல சொல்லிருக்கற பெண் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் திடீர்னு ஞாபகம் வந்தது. ஊஞ்சல், அம்மானை, கழங்கு இப்படின்னு விளையாட்டு பேர்கள் எல்லாம் திடீர்னு ஞாபகம் வந்துச்சு. நம்ம குழந்தையைச் சங்க கால முறைப்படி விளையாட்டுகள் விளையாடச் சொல்லி பழக்குனா என்னன்னு ஒரு ஐடியா தோனுச்சு. அந்த தாய் ஐடியாவை ஒரு வெண்பாவா வடிச்சா எப்படியிருக்கும்னு இன்னொரு பிள்ளை ஐடியா உதிச்சுச்சு. சோ...கவிதை எழுதுறதுக்கே கைடு கேட்டுட்டு இருந்த நான் என் பொண்ணு பொறந்த நேரம் வெண்பா எழுதுற அளவுக்கு முன்னேறிட்டேன். இப்போ அந்த வெண்பாவைப் பாக்கலாமா...

"செம்மீனாடிடு காகமு மாலவன்தாள் தொழுநெடும்
புன்னை பாக்கமுறை கடைபருவ மலையவள்
மொழியாம் புள்ளும்பூவும் பூண்டும் கண்டனன்
இட்டும் தொட்டுமாடி பழக பார்பி பாவை
வேண்டுவ கரும்பனை தடந்தோள் இனிதுயில்
வயிரவன் வெள்ளை கொடியோன் வேல்தீட்டி
வினைசெய் போதினிலி றுத்தான் பிடிநடை
பெண்டிர் முறமது புலிபுறம்பட ஓடுவநாடே
வான்தொடு ஊசலாடி அம்மானைபாடி பின்நல்
தோழியர் களித்திட கழங்காடி மகிழுவ
புல்வேண்டா சிகையினன் இளையவன் பகரவே
தென்னன் தமிழின் உடன்பிறந்த சிறுகால்
வளை தவழ்கையள் கிள்ளை மொழியாள்
லூசாப்பாநீ என்றனள ங்கையற் கண்ணினளே!"


அசை, சீர், தளை எல்லாம் சரியாத் தானிருக்கும்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும். ஆனா இப்படியொரு அருமையான வெண்பாவைப் படிச்சி புரிஞ்சிக்க உங்களுக்கெல்லாம் கஷ்டமாயிருக்கலாம். அதுக்காகத் தான் நான் எழுதுன வெண்பாவுக்கு நானே கோனார் நோட்ஸ் போட்டுருக்கேன் கீழே -

செந்நிறம் கொண்ட சங்கரா மீன்கள் மூச்செடுக்க கடல்பரப்பின் மீது வரும் போது கொத்தித் தின்னும் நீர் காகங்களும், கடற்கரை கோயிலின் தலவிருட்சமான புன்னை மரம் திருமாலின் கருணையை நினைத்து உருகி அவன் அடி தொடும் பொருட்டு வானம் தொட எண்ணுவதை போல மேல்நோக்கி உயர்ந்து வளரும் கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகிய பாக்கம் என்பது இப்பாடல் பாடப்பட்ட இடம்.

நீர் காகமும், புன்னை மரமும் கருப்பொருளாய்க் கொண்ட நெய்தல் திணை நகரமாகிய சென்னை மாநகரிலே வசிக்கும், பிள்ளைத்தமிழ் பருவங்களில் பெண்பிள்ளைகளின் கடைசிப் பருவம் எனச் சொல்லப்படும் ஊஞ்சலாடு பருவத்தில் இருக்கும் சிறு பெண்குழந்தையவள். அப்பெண் குழந்தையானவள் அறிவிலும் அழகிலும் சிறந்தவளாகப் போற்றப் பெறும் சிவபெருமானின் துணையான மலைமகள் பார்வதி தேவிக்கு ஒப்பானவள்.

அக்குழந்தை சொல்கிறாள் "பறவைகளையும்(புள்), பூக்களையும், செடிகொடிகளையும்(பூண்டு) வேடிக்கை பார்த்து பார்த்து எனக்கு அலுத்து விட்டது. ஆகவே நான் தொட்டு கீழே போட்டு பேசிப் பழகி விளையாட ஒரு பார்பி (Barbie) பொம்மை வாங்கித் தாருங்கள்" என்று கேட்கிறாள்.

யாரிடம் கேட்கிறாள்? கருமையான நிறத்தினைக் கொண்ட பனைமரங்களைப் போன்ற வலிமையான தோள்களையும், அல்வா எனும் இனிப்பினை மதிய உணவுக்குப் பின் உண்டு விட்டு தினமும் தூங்கிய காரணத்தால் செல்லமான தொப்பை விழுந்த வயிறையும் கொண்ட என்றுமே அமைதியையே விரும்பும் வெள்ளை கொடியோன் ஆகிய தன் தந்தையிடம் கேட்கின்றாள்.

வேலினைத் தீட்டிக் கொண்டிருக்கும் வேளையில் தன் குழந்தையின் வேண்டுதலுக்கு அத்தந்தையானவன் பதில் சொல்லுகின்றான். நிற்க. அமைதியையே விரும்புபவன் வேல் தீட்டும் காரணம் என்ன என்பதை நீங்கள் இங்கு யோசிக்க வேண்டும். இரவு உணவிற்காக வெங்காயங்களையும், தக்காளிகளையும் நறுக்குவதற்காக மேலிட உத்தரவின் பேரில் கத்தியைத்(வேல்) தீட்டிக் கொண்டிருக்கிறான் என்பது இவ்வரிகளில் புலவர் நமக்கு குறிப்பால் உணர்த்துவது.

காய்கறிகளை அரிந்து கொண்டே குழந்தைக்கு என்ன பதில் சொல்லுகிறான்? "பெண் யானையின் நடையைப் போன்ற ஒயிலைக் கொண்டவர்கள் தமிழ் பெண்கள். ஒயில் கொண்ட பெண்கள் ஆனாலும் வீரத்திலும் அவர்கள் மிகச் சிறந்தவர்கள். எத்தகைய வீரம் என்றால் அரிசி புடைத்துக் கொண்டிருக்கும் போது எட்டிப் பார்க்கும் புலியை முறத்தைக் கொண்டு அதன் பின்புறத்தில் அடித்து ஓட ஓட விரட்டியடிக்கும் வீரம் கொண்ட பெண்கள். அத்தகைய அழகும் வீரமும் ஒருசேர அமைந்த தமிழ் பெண்கள் கொண்ட நாட்டில் அவர்கள் வழியில் வந்தவள் நீ. பார்பி பொம்மை வைத்து விளையாடுவதற்குப் பதிலாய் வானம் தொடுமாறு ஊஞ்சலாடி, அம்மானை பாடி, தோழியருடன் மகிழ்ந்து கழங்கு ஆடுவாய் ஆனால் புத்துணர்ச்சி பெருகும், குரல் வளம் பெருகும், ஞாபக சக்தியும், செய்யும் செயல்களில் கவனமும் கூடும்" என்று தன் ஆருயிர் மகளுக்கு அறிவுரை சொல்கின்றான். அறிவுரை சொல்கின்றவன் எத்தகையவன் என்றும் பாடலாசிரியர் குறிப்பிட மறக்கவில்லை. புல்வேண்டா - புல்லினை எப்போதும் விரும்பாத, சிகை- கேசம்...அப்படின்னா புலி + கேசி...புலிகேசி. அதாவது இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியின் வழிவந்த இளையவன் என்று சொல்கிறார்.

தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! சிறுகால் = தென்றல்; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதாம். அத்தகைய தத்தித் தத்தி நடக்கும் சிறுகால்களைக் கொண்ட சிறிய வளையல்களைத் தன் கையில் அணிந்துள்ள கிளியைப் போன்ற இனிய மொழியினைக் கொண்ட அழகிய பெரிய கண்களைக் கொண்ட அப்பெண் குழந்தை தன் தந்தையைப் பார்த்து கேட்கின்றாள் "லூசாப்பா நீ?".

(இப்போ பதிவுக்கும் அதன் தலைப்புக்குமான தொடர்பைச் சொல்லிடறேன். காதலர் தினத்தன்னிக்கு ஸ்பெஷலா முயற்சி பண்ணி எழுதுன வெறும்+பாடல் = வெண்பா ன்னு அர்த்தம்)

Saturday, November 22, 2008

Well...

"கிச்சன்ல கொஞ்சம் வேலையிருக்கு, பாப்பாவைப் பாத்துக்கங்க" என்று தங்கமணி சொல்லிவிட்டுப் போன ஐந்து நிமிடங்களுக்கு உள்ளாக, நேற்று தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகள் அழுகையை அலாரம் வைத்துத் தொடக்கினாள். வயிறு பசிக்கும் போதோ, அல்லது உச்சா போய் நேப்பி ஈரமாகி தூக்கம் கலையும் போதோ தான் அமைதியாக இருக்கும் குழந்தைகள் அழத் தொடங்கும் என்பது, தந்தை ஆன கடந்த மூன்று மாதங்களில் நான் கற்றுக் கொண்ட பாலபாடம். இது போக இன்னொரு கதையும் கேள்வி பட்டேன். தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் கனவில் பிள்ளையார் வருவாராம். "உனக்கு அம்மா வேணுமா, அப்பா வேணுமா"ன்னு கேப்பாராம். அம்மாவிடம் பால் குடிப்பதனால் குழந்தைகள் "அம்மா வேணும்" என்று சொல்லுங்களாம். அதனால பிள்ளையார் நறுக்கென்று குழந்தையின் தொப்புளில் கிள்ளி விட்டுப் போய்விடுவாராம். அதனாலும் குழந்தைகள் தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு, பயந்து போய் அழத் தொடங்குமாம். இது கேக்கும் போதே சிரிப்பை வரவழைத்த கதை. ஏனென்றால் பிள்ளையார் தான் இருப்பதிலேயே ஃப்ரெண்ட்லியான கடவுள். அவர் பிறந்த குழந்தைகளின் தொப்புளில் நறுக்கென்று கிள்ளிவிட்டு ஓடிவிடுவார் என்று சொல்வதை சீரணிப்பது சற்று கடினமாகத் தான் இருக்கு:) அது போக என்னை வியக்க வைக்கும் இன்னொரு விஷயம் குழந்தைகளுக்கு, அது எப்படித் தான் அம்மா தன்னருகில் இல்லை என்பது அவ்வளவு துல்லியமாகத் தெரியவருகிறதோ? என்பது தான். அதுவும் பல சமயங்களில், தங்கமணி சாப்பிடப் போகும் நேரத்தில் தான் அழுகை பலமாகும். விபரம் தெரிந்த சிலர்(பெரியவங்க தான்...) "அம்மாவை இந்த மாதிரி குழந்தைங்க சோதிக்கும். என்னை விட உனக்கு சாப்பாடு தான் முக்கியமான்னு சரியா அம்மா சாப்பிடப் போகும் போது தான் அழ ஆரம்பிக்கும்" என்று சொல்லவும் கேட்டிருக்கிறேன்.

மேல் சொல்லிய இந்த காரணங்களுள் ஒன்றினால் தான் மகள் அழுகிறாள் போலிருக்கிறது என்று எனக்கு பதில் தெரிந்த FAQக்களைப் பரிசோதித்து விட்டு troubleshooting நடவடிக்கைகளில் இறங்கினேன். "குழந்தை அழுவுது. சீக்கிரம் வந்து கொஞ்சம் என்னான்னு பாரு" என்று சத்தமாகக் கத்துவது தான் என்னிடம் இருந்த FAQக்களுக்குச் சொல்லப்பட்டிருந்த முதல் விடை. சே! சே! நாமெல்லாம் "road not taken"இல் பயணப்படும் ஆட்கள் இல்லையா? என்ற எண்ணம் சுலபமான முதல் விடையைத் தெரிவு செய்வதிலிருந்து என்னை தடுத்தது. பசி இல்லை, நேப்பி ஈரம் ஆகவில்லை என்பதை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டு, இது பிள்ளையாருடைய வேலை தான் என்று முடிவுக்கு வந்தவனாய் குழந்தையைச் சமாதானம் படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினேன். நிற்க. ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை என்பதனை அடி முதல் நுனி வரை நம்புவதால் அழும் குழந்தையை ஏன் சமாதானப் படுத்த வேண்டும் என்று கேள்வி கேட்டு என் மகளின் பாட்டியிடம்(எங்க அம்மா தான்) வாங்கிக் கட்டிக் கொண்டு ஆமாமாம் அழும் குழந்தையைச் சமாதானப் படுத்தத் தான் வேண்டும் என்று உணர்ந்து கொண்ட கதையையும் இந்நேரத்தில் சொல்லிவிடுகிறேன். "குழந்தைங்கன்னா அப்படித் தான் இருக்கும். தூக்கம் கலைஞ்சிடுச்சுன்னா அழத் தான் செய்யும். கொஞ்சி கிஞ்சி பேசித் தான் சமாதானப் படுத்தனும்" என்று அம்மா சொல்லியதற்கு "நானும் உங்களுக்குக் குழந்தை தானே? நான் தூக்கத்துலேருந்து எழுந்தா அழவாச் செய்யறேன்"னு எகத்தாளம் பேசினேன். "...இப்ப நாலு கழுதை வயசானதால அழாம இருக்கே...அர்ச்சனா வயசுல நீ எல்லாம் என்ன பாடுபடுத்தியிருக்கே தெரியுமா? என்ன காரணம்னே தெரியாம ராத்திரி ரெண்டு மணி, மூனு மணிக்கெல்லாம் எழுந்து அழுவே"அப்படின்னாங்க. "நான் குழந்தையா இருந்த போதும் இப்படித் தான் கொஞ்சி கிஞ்சி சமாதானப் படுத்துவீங்களா?" என்று கேட்டதற்கு "உஹும்...ஒரு கரண்டி எடுத்து மண்டையிலேயே மடார்னு போடுவேன். வேணா மண்டையைக் கொஞ்சம் தடவிப் பாரு. ஒடுக்கு விழுந்துருக்கும் பாரு" என்று சொல்லப் பட்டதைக் கேட்டதும் கைப்புள்ள F/o.அர்ச்சனா கப்சிப்.

சரி, குழந்தையைச் சமாதானப் படுத்துவது என்று முடிவாகிவிட்டது. அதை செயல்படுத்தும் முறைகள் என்று பார்த்தோமேயானால் தொட்டிலை வேகமாக ஆட்டிவிட்டு குழந்தையைத் தூங்க வைக்க முயல்வது, அதற்கு குழந்தை சமாதானம் ஆகவில்லை எனில் கிலுகிலுப்பையை ஆட்டிக் காட்டுவது, அதற்கும் குழந்தை டிமிக்கி கொடுத்துவிடுகிறது என்றால் தமிழ் உயிர்மெய் எழுத்துக்களான 'ரி' 'ர' 'ரோ' போன்ற எழுத்துகளை பசு மாட்டினைக் குறிக்கும் உயிரெழுத்துடன் சேர்த்து ஒரு ஒலி எழுப்ப வேண்டும். அந்த ஒலியானது பசுமாட்டின் குரலை ஒத்ததாக இல்லாமை சாலச் சிறந்தது, அவ்வாறாக இருக்கும் பட்சத்தில் அதன் பலன் எதிர்மறையானதாக இருக்கும். இம்முறைகளைத் தனித் தனியாகவோ, அல்லது ஒன்றன் பின் ஒன்றனாகவோ அல்லது எல்லாவற்றையும் சேர்த்தோ கையாளுவதனால் குழந்தை அழுகையை நிறுத்தி சமாதானம் ஆகிவிடும் என்று கத்துக்குட்டி babysitterக்கும் தெரியுமென்கிறது அகநானூறு. ஆனால் என் மகளோ, இந்த முறைகளில் எதற்கும் சம்மதிக்காமல் அழுகையைத் தொடர்ந்தாள். அவளுடைய அழுகையை நிறுத்த சினிமா பாணியில் எதாவது ஒரு தாலாட்டு பாடல் பாடித் தூங்க வைக்கலாம் என்று முடிவு செய்தேன். அச்சமயத்தில் சட்டென்று நினைவுக்கு வந்த தாலாட்டுப் பாடல்கள் இவை.
1. "தண்ணீர் தண்ணீர்" படத்தில் பி.சுசீலா அவர்கள் குரலில் "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" என்று திரையில் சரிதா பாடுவதாக வந்த பாடல்.
2. "சித்தி" என்ற படத்தில் கண்ணதாசன் எழுதி பி.சுசீலா அவர்கள் பாடிய "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" என்று திரையில் பத்மினி அவர்கள் பாடுவதாக வரும் பாடல்.
3. "இணைந்த கைகள்" படத்தில் மனோஜ்-கியான் இசையில் திரையில் அருண் பாண்டியனும் ராம்கியும் பாடுவதாக வந்த "அந்தி நேரத் தென்றல் காற்று அள்ளித் தந்த தாலாட்டு" என்ற பாடல்.
4. "சின்னத்தம்பி" படத்தில் மனோ பாடிய "தூளியிலே ஆடுகின்ற வானத்து மின்விளக்கே" என்று திரையில் பிரபு பாடுவதாக வரும் பாடல்.
5. "முந்தானை முடிச்சு" படத்தில் பாக்யராஜ் பாடுவதாக வரும் "ஆரிராரிரோ ஆரிராரிரோ" என்ற பாடல்.
6. "என் தங்கை கல்யாணி" படத்தில் கரடி சார் தானே இசையமைத்து திரையிலும் பாடுவதாக வரும் "தோள் மீது தாலாட்ட என் தங்கமே நீ தூங்கு" என்ற பாடல்.

ஆனா பாருங்க. இதுல எந்த பாட்டுமே நம்ம சிச்சுவேசனுக்குச் சரியா வரலை. அதாவது ஒரு அப்பா தன் மூன்று மாத மகளைச் சமாதானப்படுத்தி தூங்க வைக்கிற மாதிரி ஒரு பாட்டு. எனக்குத் தெரிஞ்சு இந்த சிச்சுவேசனுக்கு தமிழ் படங்கள்ல ஒரு பாட்டு கூட இல்லைன்னே நெனக்கிறேன். நல்ல சிச்சுவேசன் தான். ஆனா எந்த இயக்குனரும் இதை இது வரைக்கும் பயன்படுத்திக்கிட்டதாத் தெரியலை. சரி இப்போ...மேலே இருக்கற பாட்டுகளையே ஒன்னொன்னா பாப்போம். "கண்ணான பூமகனே"ங்கிற தண்ணீர் தண்ணீர் படப்பாட்டு வறட்சியில வாடற ஒரு கிராமத்துல இருக்கற ஒரு ஏழைத் தாய் தன் கஷ்டங்களையும் தாலாட்டுப் பாட்டுலேயே தன் மகனுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. "காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே" அப்படீங்கற சித்தி படத்துப் பாட்டு பெண்ணாய்ப் பொறக்கறதுனால அனுபவிக்கிற கஷ்டங்களை ஒரு தாய்(சித்தி) தன் மகளுக்குச் சொல்லற மாதிரி வர்ற பாட்டு. இரயிலில் போற ரெண்டு நண்பர்கள் இரயில் பெட்டியில் பாக்கற ஒரு குழந்தைக்காகப் பாடற பாட்டு தான் இணைந்த கைகள் படத்து "அந்திநேரத் தென்றல் காற்று" பாட்டு. குரல் நல்லாருக்கற ஒரு பேக்கு பாடற பாட்டு தான் சின்னத்தம்பி படத்து "தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே". ஒரு சோகமான சிச்சுவேசன்ல ஒரு அப்பா தன் மகனுக்காகப் பாடற பாட்டு முந்தானை முடிச்சு படத்துல வர்ற "ஆரிராரிரோ ஆரிராரிரோ" பாட்டு. தன் தங்கச்சி மகனைத் தோள்ல போட்டுக்கிட்டு கரடி மாமா பாடற பாட்டு "தோள் மீது தாலாட்ட"ன்ற என் தங்கை கல்யாணி படத்துப் பாட்டு.

இப்போ நீங்களே சொல்லுங்க...மேல இருக்கற பாட்டுகள்ல எதாச்சும் ஒரு அப்பா தன் மகளுக்குப் பாடற சிச்சுவேசன்ல இருக்கா? இருந்தாலும் பாட்டு பாடணும்ங்கிறது முடிவானதுனால மேலே இருக்கற பாட்டுகள்ல, கவிஞர் வைரமுத்து எழுதி எம்.எஸ்.வி இசையமைச்ச எனக்கு புடிச்ச பாட்டான "கண்ணான பூமகனே கண்ணுறங்கு சூரியனே" படத்து பாட்டைப் பாடுனேன். அது மகனுக்காக ஒரு அம்மா பாடுற பாட்டுங்கிறதால ஒரு மகளுக்காக ஒரு அப்பா பாடற மாதிரி இருக்கற நம்ம சிச்சுவேசனுக்குத் தகுந்த மாதிரி
"கண்ணான பூமகளே கண்ணுறங்கு சூரியனே
அப்பா அழுத கண்ணீர் ஆறாகப் பெருகிவந்து
தொட்டில் நனைக்கும்வரை உன் தூக்கம் கலைக்கும்வரை,
ஊத்துமலை தண்ணீரே என் உள்ளங்கரை சர்க்கரையே
நீ நான் பெத்த தங்கரதம் இடுப்பிலுள்ள நந்தவனம்"
அப்படின்னு லைட்டா மாத்தி பாடுனேன். பாடும் போது எனக்கே காமெடியாத் தான் இருந்துச்சு...ஆனா ஆச்சரியம் பாருங்க அது வரைக்கும் அழுதுட்டு இருந்த என் பொண்ணு அழுகையை நிறுத்திட்டு அமைதியாத் தூங்க ஆரம்பிச்சுட்டா. கண்டிப்பா மனசுக்குள்ள "லூசாப்பா நீ"ன்னு சொல்லிக்கிட்டே வேற வழியில்லாம தான் தூங்கிருப்பான்னு நெனக்கிறேன்.

ஒவ்வொரு வாரமும் பெங்களூரிலிருந்து சென்னைக்கு எப்போதும் வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சனிக்கிழமை காலை வருவது வழக்கம். ஆனால் இவ்வாரம் வியாழக்கிழமை காலை பெங்களூரிலிருந்து கிளம்பி அன்று மாலையே சென்னை வந்து சேர்ந்து விட்டதால் மகளுக்காகத் தாலாட்டு பாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வியாழன் அன்றே வந்ததற்கான காரணம் - ஆயாவின் பிரிவு. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ராணுவத்தில் பணியாற்றும் சித்தியுடன் தங்கியிருந்த ஆயா(அம்மாவின் அம்மா) 20ஆம் தேதி காலை எங்களை விட்டுப் பிரிந்தார். அம்மாவும், அப்பாவும் இறுதிச் சடங்குகளுக்காக விமானம் மூலம் ராஞ்சி புறப்பட்டுச் சென்றார்கள். இந்த கதையில் கூட அவங்களைப் பத்திச் சொல்லிருக்கேன். ஏனோ நமக்கு ரொம்ப நெருக்கமானவங்களோட பிரிவை அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க முடியறதில்லை. ஆயா இறந்த செய்தியைக் கேட்டு பெங்களூரிலிருந்து கிளம்பிச் சென்னை வந்த போதும், ஏன் அதற்கு பிறகும் கூட ரொம்ப நேரத்திற்கும் என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு மட்டும் தான் இவ்வாறு தோன்றுகிறதா என்ற சந்தேகமும் பல சமயங்களில் தோன்றும். இறுதிச் சடங்குகள் முடிந்ததும் "எல்லா காரியங்களும் முடிந்து விட்டது" என்று அம்மா தொலைபேசிய போது தான், நான் பிறந்ததிலிருந்து அறிந்த ஒரு நெருங்கிய சொந்தத்தை இனிமேல் பார்க்க போவதில்லை என்ற உண்மை உரைத்தது. தள்ளாத வயதிலும், தன் கொள்ளுப்பேத்தியான என் மகளைப் பார்ப்பதற்காக அக்டோபரில் சென்னை வந்திருந்ததையும், அது தான் நான் அவர்களை கடைசியாகப் பார்த்த சந்தர்ப்பம் என்றும் நினைத்த போது மனம் கனத்தது, கண்கள் பனித்தன.

Thursday, August 28, 2008

எங்கள் புதிய அடையாளம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ரேணுகா-மோகன்ராஜ் ஆகிய எங்கள் இருவரையும், தாய்-தந்தை என்று அடையாளம் கண்டு கொள்ள கடந்த 23ஆம் தேதி, சனிக்கிழமை(23-08-2008), மாலை 3.35 மணிக்குச் சென்னையில் எங்கள் மகள் பிறந்தாள் என்ற இனிப்பானச் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைக்கு "அர்ச்சனா" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.


மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தமையால் உடனே பதிவிட இயலவில்லை. தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட நண்பர்களுக்கும், தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு மகிழ்ந்த தலைவியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.