ஒருபோதும் வருந்தியதில்லை
நான் ஆணாய்ப் பிறந்ததற்கு
வெட்கித் தலைகுனிந்து
வேதனையில் உழன்று
ஆற்றாமையில் பிதற்றும்
அத்தருணங்களை உணரும்
நிலை உனக்கு வந்தால்
உலகை அழிக்காமல்
மாயர்கள் கணிப்பைப்
பொய்யாக்கிய குற்றவுணர்வில்
குன்றி நீ போவாய் இறைவா!
கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னர் வந்த தொலைக்காட்சி விளம்பரங்களை நினைவு படுத்திப் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம் உதித்தது. விளம்பரங்களின் பட்டியல் பெரியதாக இருந்ததால் அவற்றை எதாவது ஒரு வகையில்(criterion) கொண்டு பகுக்கலாமே என்று தோன்றியது.
ரோஜா படம் மூலமாகத் தான் முதன்முதலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களைக் கேட்டது என்றாலும், டிவி விளம்பரங்களின் மூலமாக மக்களிடம் நெருக்கமாகத் தான் இருந்துள்ளார் எனத் தெரிந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னர் அவர் விளம்பரப் படங்களுக்குத்(ad jingles) தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் என பலரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் பழைய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது, அக்காலத்தில் நாம் ரசித்த பல விளம்பரப் படங்களுக்கும் அவர் இசையமைத்திருப்பது தெரிய வந்தது. "அட! இந்த விளம்பரத்துக்கும் இவர் தான் இசையமைத்தாரா?" என ஆச்சரியமாய் இருந்தது. அதை எல்லாம் பதிந்து வைக்கலாமே எனத் தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு. சில விளம்பரங்கள் தூர்தர்ஷன் மட்டும் அல்லாமல் வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் வந்திருக்கலாம்.
Leo Coffee
ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் "லியோ காஃபி" விளம்பரம் என்று சொல்கிறார்கள். இவ்விளம்பரத்தைப் பார்த்து தான் இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார் என்று இணணயத்தில் படித்தேன். மணிரத்னத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது அப்போது விளம்பரப் படங்களில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் மேனன். இந்த விளம்பரம் வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுவன். எப்போது வந்தாலும் நின்று பார்த்து விட்டுச் செல்லும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. அவ்விளம்பரத்தில் வரும் அர்விந்த் சுவாமிக்கும் இப்போது இருக்கும் அர்விந்த் சுவாமிக்கும் எத்தனை மாற்றங்கள்? லியோ காஃபியின் தற்காலத்து விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா வருகிறார். ஆனால் பழைய விளம்பரம் ஏற்படுத்தும் பாதிப்பும் கிளறும் நினைவுகளும் இப்புதிய விளம்பரத்தில் இல்லை. ஆண்ட்ரியா வரும் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இங்கு சுட்டுங்கள்.
Old Cinthol
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக இருக்கும் சோப் "பழைய சிந்தால் சோப்". அட, இதுலயும் அர்விந்த் சுவாமி தான் வருகிறார். இந்த சோப்பின் விளம்பரத்தைப் பார்த்தால் எப்போதும் மிகைப்படுத்தப் படாமல் சிம்பிளாக இருக்கும். பல சமயங்களில் விளம்பரங்களே கூட இருக்காது. சிகப்பு நிற அட்டையில் வெளிவரும் சோப் இது, புதிய சிந்தால் சோப்புக்குச் சற்று கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் கோத்ரெஜ் நிறுவனம். பல வருடமாக உபயோகத்தில் இருக்கும் சோப் என்பதால் அந்த நற்பெயரிலேயே இன்னும் இந்த சோப் விற்றுக் கொண்டிருக்கிறது. தோல்நோய் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உண்மையிலேயே நல்ல சோப் இது. அத்தகையதொரு சோப்புக்கு, மிகையில்லாத மெல்லிய இசை சேர்த்திருப்பது இவ்விளம்பரத்தின் சிறப்பு, இன்றளவும் நினைவில் நிலைக்கச் செய்திருப்பது இசையமைப்பாளரின் திறமை.
Asian Paints - Pongal
சில நிறுவனங்கள், தனித்து நிற்கும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு பெயர் போனவை. அத்தகைய ஒரு நிறுவனம் தான் ஏசியன் பெயிண்ட்ஸ். கையில் பெயிண்ட் ப்ரஷுடன் நிற்கும் பையனின் மேஸ்காட்டைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாண்டு காலம் உபயோகித்து வந்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். அந்த சிறுவனின் பெயர் "கட்டூ(Gattu)". அவனை உருவாக்கியவர் பிரபல் கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள். இணையத்தில் தேடினால் ஏசியன் பெயிண்ட்ஸின் மார்க்கெட்டிங்கைப் பற்றி பல கேஸ் ஸ்ட்டிகள் கிடைக்கும், அந்த அளவுக்கு தங்களுடைய ப்ராண்ட்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தும் நிறுவனம் இது. பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் நம்ம ஊர் பழக்கத்தைக் குறி வைத்து, தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரமிது. இவ்விளம்பரத்தின் துவக்கத்தில் வரும் அதே "ஏலேலோ" இசையை ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலில் ஹோகேனக்கல்லில் பரிசல்கள் செல்லும் காட்சியிலும் பார்க்கலாம். 
Titan
முந்தைய மூன்று விளம்பரங்களும் தமிழ்நாட்டு ஆடியென்சை மட்டும் தொடுவன என்றால், இவ்விளம்பரமும் இனி வரும் விளம்பரங்களும் இந்தியா முழுவதும் பிரபலமானவை. "சாந்தி" என்னும் இந்தி சீரியலில் ராஜ்.ஜி.ஜே.சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அமர் தல்வார் தான் இவ்விளம்பரத்தில் வரும் தந்தை. மால்குடி சுபா பாடி வெளிவந்த "வால்பாறை வட்டப்பாறை" ஆல்பமில் நடித்த சம்யுக்தா தான் இதில் மகளாக வருபவர். இவர் முன்னாள் தூர்தர்ஷன் ஆங்கில செய்தி வாசிப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். இது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தது என்பதனை youtube பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.
MRF
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனம் MRF. Madras Rubber Factory என்று ஒருகாலத்தில் இருந்த பெயர் தான் MRF ஆனது. ஆயினும் இப்போது பழைய பெயரை எங்கும் அவர்கள் பிரபல படுத்துவதில்லை. ஏசியன் பெயிண்ட்ஸைப் போலவே விளம்பரங்களில் வெகுவாக கவனம் செலுத்தும் நிறுவனம் இது. இவ்விளம்பரம் வந்து கொண்டிருந்த காலங்களில், அதில் கடைசியில் வருவது போலவே கீபோர்டில் சர்ரென்று விரல்களைத் தேய்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டாலும், வெகுகாலம் கழித்து இந்த விளம்பரத்தைப் பார்த்த போது அந்த ஆசை எங்கிருந்து வந்தது என நினைவில் வந்தது :)
Garden Vareli
லிசா ரே(Lisa Ray) தோன்றும் இவ்விளம்பரத்தின் இசை வெகு பிரபலம். சிறுவயதில் கார்டன் புடவைகளை எல்லாரும் அணிவது போல அணிய முடியாது, இதில் காட்டுவது போல காற்றில் பறக்க விடுவது போல தான் அணிய முடியும் எனப் பல காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். லிசா ரே ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சமீபத்தில் அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.
Premier Pressure Cooker
"பாசமான அன்னை பரிசாய் தந்த ப்ரீமியர் ஆசை ஆசையாய் கணவர் வாங்கித் தந்த ப்ரீமியர்" என ஆரம்பிக்கும் விளம்பரம், டிவியில் அதிகமாக இவ்விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இருப்பினும் இப்போது பார்த்த போது நன்றாக இருப்பதாகத் தோன்றியது.
Spirit of Unity Concerts
முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும். இதில் துவக்கத்தில் வரும் title music கேட்பதற்காகவே காத்து கிடப்பேன். அந்நிகழ்ச்சியில் வரும் மற்ற கச்சேரிகள் எதையும் கூர்ந்து கவனித்ததில்லை. இந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
கடைசியாக ரோஜா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பின் சுரபி என்னும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பேட்டியைக் காணலாம். இதில் அவருடைய பெயரை அப்துல் ரகுமான் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம் காலம் செல்ல செல்ல குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெகுவாகப் பிரபலம் ஆவதற்கு முன் வந்த முதல் சில விளம்பரங்களில் ஒன்று இது.
வீட்டிற்கும் திருப்பெரும்புதூருக்கும் இடையேயான 65 கி.மீ (ஒரு வழி தூரம்) பயணத்தைக் காரில் கடக்கும் போது கேட்பதற்காக, என்னிடமிருந்த பாடல்கள் தொகுப்பிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நானே சில இசை குறுந்தகடுகளைத் தயாரித்தேன். நாங்கள் சப்போர்ட் அளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு ஒரு ப்ராஜெக்ட் செய்வது நிமித்தமாகவே தினசரி திருப்பெரும்புதூர் பயணம். ஆனால் ஆறு மாதமாகப் பதிவு எதையும் எழுதாமல் இருப்பதற்கு கழுத்தை நெரிக்கும் வேலை, நேரமின்மை என்று காரணம் சொல்வதில் உண்மை இல்லையென்று எனக்கே தெரிகிறது. இதை காட்டிலும் பிசியாக இருந்த போதும் பதிவெழுதிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போதோ..."எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" கதை தான்.
சரி அதை விடுவோம். குறுந்தகடு பத்தி சொன்னேன் இல்லையா...பயணத்தின் போது கேட்ட ஒரு பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 'கதர்'(Gadar) என்ற இந்தி திரைப்படத்தில் வரும் "உட் ஜா காலே காவான்" என்று பஞ்சாபி மொழியில் தொடங்கும் பாடல் தான் அது. இப்பாடலை இதற்கு முன்னர் பல முறை டிவியில் பார்த்திருந்த போது அறிந்திராத ஒரு இனிமை அன்று கார் ஸ்டீரியோவில் கேட்கும் போது உணர முடிந்தது. இது போல சில பாடல்களின் அருமையைக் கார் ஸ்டீரியோவில் கேட்டு தான் உணர்ந்திருக்கிறேன். தமிழ் விடு தூது, தத்தை விடு தூது, நாரை விடு தூது என்றெல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இப்பாடலில் கதாநாயகன் தன் உள்ளக்கிடக்கையை காகத்தினை தூதனுப்பி வெளிப்படுத்துகிறார். பாடலின் இசையமைப்பாளர் உத்தம் சிங், பாடியவர்கள் அல்கா யாக்னிக், உதித் நாராயண். தமிழ் பாடல்களைக் குதறி துப்பும் உதித், இந்தியில் சிறப்பாகவே பாடுகிறார்.
இப்பாடல் வரிகளின் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்குங்கள்.
http://www.ukindia.com/zip2/zgadar.htm
****************************************************
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிபடுத்தும் BCCI என்ற அமைப்பு பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வணிக அமைப்பு என்பது சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுகளைப் பார்த்த போது உறுதியானது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது பங்களாதேஷ் நாட்டு அணி. இந்திய அணி அச்சமயத்தில் நியூசிலாந்து நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. அதனால் அப்போட்டிகளில் இந்திய சர்வதேச அணியால் பங்குகொள்ள இயலாமையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவின் தரப்பிலிருந்து ஒரு இரண்டாம் தர அணியைக் கூட இப்போட்டிகளுக்கு அனுப்ப முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டது எப்படி என்பது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கோடிகளில் பணம் புரண்டால் மட்டுமே பிசிசிஐ கண்டு கொள்ளும் போலிருக்கிறது, ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் நம் தேசத்தின் சார்பாகப் பதக்கம் வாங்குவதில் பெருமை வேண்டுமானால் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்ற எண்ணம் தான் காரணமோ?
****************************************************
சமீபத்தில் ஒரு நாள் சாலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் "Hero Honda Pleasure" என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்ததுமே அந்த வாகனத்துக்கான விளம்பரம் நினைவுக்கு வந்தது. நடிகை பிரியங்கா சோப்ரா "Why should boys have all the fun?" என்று சொல்லி அது பெண்களுக்கான வாகனம் என்பது போல விளம்பரப் படுத்தியது நினைவுக்கு வந்தது. அவ்வளவு நல்ல வாகனமாக Hero Honda Pleasure இருக்கும் பட்சத்தில் "Why should girls have all the fun?" என்று அந்த இளைஞரும் நினைத்திருப்பாரோ? :)
****************************************************
சமீப காலங்களில் மனதை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று உண்டென்றால், அக்டோபர் இறுதியில் கோவையில் இரு பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொல்லப் பட்ட நிகழ்வு தான். அதை நினைத்து நினைத்து எத்தனை முறை அழுதேன் என்று நினைவில் இல்லை. கடத்திக் கொண்டு போன பாவிகள் பணம் வாங்கிக் கொண்டு விட்டிருந்திருக்கலாம் இல்லையா?, போலிஸ் பிடித்து விடுவார்கள் என்ற பயம் வந்ததும் பொள்ளாச்சி அருகிலேயே குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் இல்லையா? இவ்வாறாக பல "ifs and buts" நினைப்புகள். அதற்கு பின்னர் அந்த மிருகங்கள் செய்ததை கேள்வி பட்ட போதே நெஞ்சம் பதறியது. இதையெல்லாம் செஞ்சா மாட்டிக்குவோம்னு அந்த கயவர்களுக்குத் தோன்றியிருக்காதா? அப்படி தோன்றியிருந்தால் அவ்வாறு செய்திருப்பார்களா என மறுபடியும் ஒரு நினைப்பு. அக்குழந்தைகளின் பெற்றோர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கடினமாகவே இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அந்த சிறுவனின் சடலத்தை வாய்க்காலிலிருந்து மீட்டதைப் பார்த்த போது, அக்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கான எல்லா கதவுகளும் ஒரே நேரத்தில் மூடிக் கொண்டன, ஆனால் இந்த பாவிகளுக்கோ கோர்ட் கேஸ் அப்படின்னு பல கதவுகள் பல வருஷம் திறந்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நாட்களிலேயே இக்குற்றத்தில் தொடர்புடையவர்களில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் பலியான செய்தி கேட்டு ஒரு வித ஆறுதல் கிடைத்தது. என்கவுண்டர் நடைபெற்றதற்கான காரணங்களாகப் போலீஸ் தரப்பு சொல்லியதை கூட்டிக் கழித்து பார்த்தால் "இது என்கவுண்டர் அல்ல திட்டமிட்டு செய்யப் பட்டக் கொலை என்று "மனித உரிமை பேசுபவர்களது"(க்ரிமினல்களுக்கு மட்டும்) கூற்று உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்பு தென்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும் கூட "so what" என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. எஞ்சியிருக்கும் இன்னொரு கயவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் தண்டனை நீதிமன்றம் வழங்கப் போகும் தண்டனையை விட பெரிய தண்டனையே.
என்னை "கைப்புள்ள"யாக மட்டுமில்லாமல் அறிந்திருப்பவர்களுக்கு, இக்கொலை சம்பவம் பற்றிக் கேள்வி பட்டதும் என் நினைவு வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனதும் பெயரும் எனது இயற்பெயரும் ஒன்று தான். மோகன்ராஜ் என்கிற டாக்சி டிரைவர் தான் பிரதானக் குற்றவாளி என்று அறிந்ததும் "அட படுபாவி! நம்ம பேரை இப்படி கெடுத்து வச்சிருக்கானே" என்று தான் தோன்றியது. "Mohanraj" என்ற தேடுசொல் கொடுத்து கூகிளில் தேடினால் முதல் பக்கத்தில் இந்த பாதகனின் பெயர் இன்றும் வருகிறது, இன்னும் சில காலத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். எட்டு-பத்து வருடத்துக்கு முன்னர் எனது பெயர் "IIT Delhi" வலைதளத்தில் "மாணவர்" என்ற வகையில் கூகிளின் முதல் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போதெல்லாம் பிரபலம் ஆகாத என் பெயர் கடந்த இரு மாதங்களில் அனைவருக்கும் பரிச்சயமான பெயராகிப் போயிருந்தது. இந்த பெயரின் காரணமாக நான் எது நடக்கக் கூடாதுன்னு நினைத்தேனோ அது எனக்கு நடந்தது. குழந்தைகளின் கொலை செய்தி வந்த மறுநாள் காரில் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் நண்பரோடு திருப்பெரும்புதூர் சென்று கொண்டிருந்தேன். "கோயம்புத்தூர் குழந்தைகள் கொலை கேசில் கொலை செஞ்சவனோட பேரும் மோகன்ராஜ்"தானாம் என்றார் நண்பர். ஏற்கனவே இக்கொலை செய்தியைக் கேட்டு மனம் மிகவும் கனத்துப் போயிருந்தது, என் பெயரை இப்பாதகனோடு தொடர்பு படுத்தி யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். நண்பர் அவ்வாறு சொல்லியதும் என்ன சொல்வது என்றே ஒரு கணம் புரியவில்லை, நான் என்ன சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை, வெறுமனே "ஹ்ம்ம்" என்றேன். அவரும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
கடந்த ஆண்டில் "கான்" என்ற தன்னுடைய இரண்டாம் பெயரின்(Surname) காரணமாக இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், நியு ஆர்க் எனும் அமெரிக்க விமான நிலையத்தில் சந்தேகத்தின் காரணமாக விசாரிக்கப் பட்டார். இதற்கு தன்னுடைய மறைமுக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, கான் என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல என்று பொருள்படும் வண்ணம் "My Name is Khan" என்ற ஒரு திரைப்படத்தை தன் மனைவியைத் தயாரிக்க வைத்து அதில் நடித்தார். அவருக்கு இருக்கும் வசதிக்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாமும் "My name is Mohanraj" என்று நம்மால முடிஞ்சது ஒரு பதிவை எழுதி வைப்போமான்னு தோனுச்சு. ஆனால் கடந்த சில மாதங்களாக நடப்பது போலவே பதிவுக்கு தலைப்பு மட்டும் தான் தோனுச்சு, அதுல என்ன மேட்டர் எழுதறதுன்னு தெரியலை. கடந்த சில மாதங்களாகவே...வேணாம் விடுங்க...பதிவோட தலைப்பை படிச்சுக்கங்க :)
****************************************************
நந்தலாலா படம் பாத்தேன். நல்லாருந்துச்சு. படத்தில் சில இடங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. படம் முழுதும் பல குறியீடுகள் இருப்பதாக நான் உணர்ந்தேன். உதாரணமாக பாஸ்கர் மணிக்கும், அகிக்கும் வழிகாட்டும் கால் ஊனம் கொண்ட அந்த நபர். ஒற்றைக் காலுடன் கரடு முரடான காடு மலை எல்லாம் கடந்து செல்லக் கூடிய அந்நபரால், பாஸ்கர் மணி உதிர்த்த கடுஞ்சொல் ஒன்றினால் மன தைரியம் உடைந்து எழ முடியாமல் மறுபடியும் மறுபடியும் கீழே விழும் காட்சி அருமை.
படத்தில் இளையராஜாவின் இசையும் ஒரு கதாபாத்திரம் போலவே செயல்படுகிறது. இருப்பினும் இசை சில இடங்களில் பின்னணியில் இல்லாமல் முன்னணியில் இருப்பது போல எனக்கு தோன்றியது. சில இடங்களில் அது நெருடலாகத் தோன்றியது. ஒரு வேளை திரையரங்கத்தில் நான் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு வெகு அருகாமையில் ஸ்பீக்கர் இருந்ததும் ஒரு காரணமோ என்னவோ?
கலைஞர் தொலைக்காட்சியில் நந்தலாலா படத்துக்காக இளையராஜாவுடன் மிஷ்கின் நடத்திய நேர்காணலைக் கண்ட போது பல வருடங்களாக மனதில் இருந்த ஒரு சந்தேகத்துக்குப் பதில் கிடைத்தது. கீழே உள்ள காணொளியில் 3:24லிருந்து 4:30 வரை ராஜா சொல்வதை கேளுங்கள்.
"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு.
இப்பாடலின் வரிகள் மறைந்த தன் தாயினை நினைத்து பற்றி ஒரு மகன் பாடுவது போல அமைந்திருக்கும். கீழே உள்ள வரிகளில் பாடல் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என பல முறை யோசித்ததுண்டு. அப்பாடல் வரிகளின் பொருள் தெரிந்து கொள்வதற்கான என் தேடலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது, கலைஞர் டிவியில் நந்தலாலா படத்துக்கான இளையராஜாவின் நேர்காணலைக் காணும் வரை.
"வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை"
இப்பாடலையும் இளையராஜா தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், ஆனால் அதை இணையத்தில் இருந்து உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஆதிசங்கரரின் ஸ்லோகம் ஒன்றினால் இன்ஸ்பையர் ஆகி இப்பாடல் வரிகளை எழுதியிருப்பார் போலும்.
Vidhera gnanena dravina virahena alasathaya,
Vidheyasakya thaw thava charanayor yachyathirabhooth,
Hadethath kshanthavyam anani sa kalodharini shive,
Kuputhro jayetha kwachidapi, kumatha na bhavathi.
I forgot to salute your feet due to ignorance of rules,
In search of money, being lazy and inefficient.
Oh, mother of all the world and giver of all that is good,
It is easy for you to excuse me,
For a bad son may be born but there can be no bad mother.
என் அறியாமையின் காரணமாகவும், பொருள் தேடுவதில் முனைப்பாக இருந்ததினாலும், என்னுடைய சோம்பலின் காரணமாகவும் உலகத்தை எல்லாம் காக்கும் அன்னை உன்னை வழிபட தவறிவிட்டேன், என்னை மன்னிப்பது உனக்கு எளிதானது, ஏனெனில் கெட்ட மகன் ஒருவன் இருக்கலாம் ஆயினும் கெட்ட தாய் என்றொருவள் இருக்க முடியாது.
"இளையராஜா என் குரு" என்ற தலைப்பில் பதிவெழுத தலைப்பும் எழுத மேட்டரும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் அமையவில்லை என எண்ணுகிறேன். தலைவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது அவரிடமிருந்து கற்றுக் கொள்ள எப்போதும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நல்லாசானைப் போல இம்முறை என்னுடைய ஐயத்தையும் தீர்த்து வேறு வைத்திருக்கிறார்.
"பொன்னைப் போல ஆத்தா" பாடல் வரிகளுக்கான பொருள் புரிந்தது. ஆனால் தான் பெற்ற குழந்தையையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு அனாதையாக்கிச் செல்லும் தாய்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களை ஏன் மோசமான அல்லது கெட்ட தாய் என்று கூற முடியாது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை...தேடல் மீண்டும் தொடர்கிறது.
திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1-ன் தொடர்ச்சி
தப்பிச் சென்ற சிறை கைதியான ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள், மாயமாக ஒரு கோட்டை நிற்பதை கண்டு மலைக்கிறார்கள். இதன் பின்னர் உக்கிரமாக நடைபெறும் போரினை விரிவாகத் திரையில் சொல்கிறோம். ஆறு நாட்களில் உருவாக்கப் பட்ட கோட்டை ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததையும், போரின் போது ஆங்கிலேய படையினர் எவ்வளவு கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர் என்பதனையும் காட்டுகிறோம். பல நாட்கள் பீரங்கி தாக்குதலுக்குப் பின் வீழ்ந்த கோட்டைக்குள் உட்புகுந்த படையினர், கோட்டையைப் பாதுகாக்க பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எந்தளவு ஆக்ரோஷமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதனை வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கண்டு தெரிந்து கொள்வதை சொல்கிறோம்.
பின்னர் எட்டையபுர பாளையக்காரரின் படைகளின் உதவியைக் கொண்டு கோட்டை விழுந்ததும் தப்பித்துச் சென்ற ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து செல்வதையும், போரில் படுகாயமடைந்த ஊமைத்துரையைச் சுந்தரலிங்கம் என்ற தளபதி தன் தாயிடம் சொல்லி காப்பாற்றச் சொல்வதையும், எட்டையபுர வீரர்கள் ஊமைத்துரையை அடையாளம் காணாமல் இருக்க தன் மகன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லி காப்பாற்றுவதையும், அவர் உடல்நலன் தேறும் வரை பணிவிடை செய்வதையும் காட்டுகிறோம். பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஊமைத்துரையை மீட்டவர்களில் முதன்மையானவர் தான் இந்த சுந்தரலிங்கம் என்பதனையும் நிறுவுகிறோம்.
கோட்டையின் வீழ்ச்சிக்குப் பின் தப்பிச் செல்லும் ஊமைத்துரையும், அவருடைய வீரர்களும் சிவகங்கை பாளையக்காரர் மருதுபாண்டியரின் உதவி கோருவதையும், சின்ன மருதுவின் ஜம்பு தீபகர்ப்ப பிரகடனம், மற்றும் மருதிருவரின் உதவியோடு ஊமைத்துரை மறுபடியும் வெள்ளையரை எதிர்ப்பதையும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் ஊமைத்துரையை விருப்பாட்சி எனும் இடத்தில் சிறை பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் பீரங்கி மேட்டில் வைத்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டதையும் காட்டுகிறோம். இப்பதிவில் முதல் சில பத்திகளில் காட்சிகளை விரிவாகச் சொல்லியது போல பின்வரும் பத்திகளில் சொல்லாது போனதை நானறிவேன். அதற்கு காரணம் அக்காட்சிகளை இன்னும் விரிவாக வரலாற்று ஆய்வு செய்து வலுவாக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அக்காட்சிகளைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. மேலே சொன்ன வரலாற்று கதையினை ஆவணப்படம் போல் எடுப்பதா, குறும்படமாக எடுப்பதா இல்லை முழுநீள திரைப்படமாக எடுப்பதா என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. திரைப்படத்துக்கு தேவையான கதைக்கும், திரைக்கதைக்குமான வேறுபாடு எனக்கு தெரியாது. இவை இரண்டையும் எழுதுவது என்றால் எப்படி என்றும் எனக்கு தெரியாது. சரி, அந்த விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். மேலே சொல்லியிருப்பது ஒரு அவுட்லைன் தான்.
இந்தப் படத்துக்கான வரலாற்றுச் சான்றுகளாக இப்போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் பங்கு கொண்ட கர்னல் வெல்சு அவர்கள் எழுதிய "Military Reminiscences" என்ற புத்தகமும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டபொம்மன், ஊமைத்துரை பற்றிய வரலாற்று நூல்களும், மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களான கதை பாடல்களுமாக இருக்கும். வரலாற்று கதையை வேறொரு கலை வடிவமாக மாற்ற முற்படும் போது படைப்பாளிகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு படம் எடுக்க முடியுமா என ஒரு எண்ணமும் இருக்கிறது. உதாரணமாக ஊமைத்துரை மணமானவரா இல்லையா என்பது போன்ற அவருடைய தனிப்பட்ட வாழ்வினைப் பற்றிய குறிப்புகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. கதையின் நீளத்தைக் கூட்டுவதற்காகவும், காண்பவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுவதற்காகவும் அவருக்கு ஒரு காதலி இருப்பது போலவும் ஓரிரு டூயட் பாடல்கள் வைப்பது போன்ற சுதந்திரங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், ஊமைத்துரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையாக ஒரு படம் எடுக்க முடியுமா? தெரியவில்லை.
வரலாற்றை பிற்சேர்க்கைகள் இல்லாமல் உள்ளது உள்ளது உள்ள படி சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. உதாரணமாக கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது அண்டை பாளையங்களைச் சேர்ந்தவர்களின் உதவிகள் அவருக்குக் கிட்ட வில்லை. ஏன்? கட்டபொம்மன் அண்டை பாளையங்களில் புகுந்து கொள்ளையடித்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றை ஓளிவடிவமாக ஆவணப்படுத்திய முக்கிய சாட்சியங்களில் ஒன்றான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டதாக நினைவில்லை. ஆனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் போரிட்டு வீரமரணம் எய்தினார் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர்களும் ஒத்துக் கொள்கின்றனார். நம் திரைப்படத்தில் கதை நாயகனை ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய நிறைகளை நிரம்பச் சொல்லும் போது குறைகளையும் மறைக்காமல் சொல்லி சித்தரிக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. சமீப காலங்களில் கதை நாயகனின் குறைகளைச் சொல்லியும் அவனை நாயகனாக நிறுவிய படம் பருத்தி வீரன்.
ஊமைத்துரையை நேரில் கண்ட கர்னல் வெல்சு ஊமைத்துரையின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார். "He was a tall, slender lad, of a very sickly appearance, yet possessing that energy of mind which in troubled times always gains pre-eminence". ஆகவே ஊமைத்துரை வேடத்திற்கு மெலிதான, உயரமான ஒரு நடிகர் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஊமைத்துரை வாய் பேச முடியாதவர் என்பதால் கண்களால் உணர்வுகளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஊமைத்துரை இறக்கும் போதே அவருக்கு வயது முப்பத்தைந்தாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தினமும் ஜிம்முக்குப் போய் முறுக்கேறிய நரம்புகளுடன் சிக்ஸ் பேக் அல்லது எய்ட் பேக் கொண்ட நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எடுக்கும் படம் ஒரு 'metrosexual male'ஐப் பற்றியதல்ல. ஆகவே அத்தகைய நடிகர் நம்முடைய கதைக்கு சரிவர மாட்டார் என்று நினைக்கிறேன். ஊமைத்துரையாக நடிப்பவர் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். ஆனால் வெல்ஷ் அவர்கள் சொல்லும் எனர்ஜியைக் காட்டக் கூடிய நடிகராக இருக்க வேண்டும். ஒரு படி மேலே போய் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன் சந்ததியினரைச் சந்தித்து அவர்களில் ஒரு இளைஞருக்கு DNA பரிசோதனையின் மூலமாக அவருடைய முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஒன்று உள்ளது.
கர்னல் வெல்சின் ஊமைத்துரையைப் பற்றி மேலும் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"and he was generally the foremost in executing those plans, for our annihilation. Whatever undisciplined valour could effect, was sure to be achieved wherever he appeared ; though poor Oomee was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism. He had escaped, as it were, by miracle, in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain." ஆங்கிலேயர்களை அழிக்க திட்டம் பெரும்பங்கு திட்டம் தீட்டியது ஊமைத்துரை என்று வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதையும் "celebrated chieftain" என்று அவர் சொல்லியிருப்பதையும் காட்சிகளாக வடிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும், கதை சொல்லிகளும் ஊமைத்துரையைப் பற்றி இந்தளவுக்கு உயரிய வார்த்தைகளில் விவரித்திருப்பதாகத் தெரியவில்லை.
இசைக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான் - அது இளையராஜா என்று ஏற்கனவே சொல்லியாயிற்று. ஒளிப்பதிவாளர் - தாரே ஜமீன் பர் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு, நீரவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களில் யார் என்று முடிவு செய்யவில்லை. ஊமைத்துரை பற்றிய வரலாற்று சான்றுகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தென் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் பற்றி ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதை தெரிந்து கொண்டேன். அவரை வசனம் எழுதச் சொல்லலாம் என்று எண்ணம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் மூதாதையர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தவர்கள் என்ற காரணத்தினால் படத்தில் பேசப்படும் தமிழ் - நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேசப்படும் தமிழாக இருந்தாலும், அவர்களுடைய பேசுமொழியில் தெலுங்கு கலப்பு இருந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆயினும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன்/ஊமைத்துரை வம்சத்தினரைச் சந்தித்துப் பேசினால் ஓரளவு யூகிக்க முடியும் என நினைக்கிறேன்.
இப்போதுள்ள படங்களில் காட்டப்படும் நெல்லைத்தமிழைப் போல வெறும் வாலே, போலே என வார்த்தைக்கு வார்த்தை லே போடும் exaggerationsகளை எல்லாம் மீறி உண்மையில் அழகாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த அழகினையும் நம் படத்தில் ஆவனப் படுத்த முயல்வோம். நம்முடைய படம் ஆரம்பிப்பது கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னர். ஆகவே கட்டபொம்மனைப் பற்றிய காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகக் காட்ட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழில் உள்ள வரலாற்றுச் சான்றுகளில் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் இருக்கும் அளவிற்கு, ஊமைத்துரையைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இல்லை. ஊமைத்துரையைப் பற்றி ஏன் படம் எடுக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்?
கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துள்ள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஊமைத்துரையைப் பற்றி எதுவும் தவறாக எழுதி நான் பார்க்கவில்லை. மேலும் வெல்ஷ் அவர்களின் கூற்றுபடி ஊமைத்துரையை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் நினைத்ததை சிரமேற் கொண்டு செயல்படுத்த ஆயத்தமாக இருந்தனர். எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் வெற்றி பெற அது ஒரு மக்கள் புரட்சியாய் இருப்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் அனைத்து சாதி மக்களையும் புரட்சியில் பங்குபெற செய்த ஊமைத்துரை என்ற தலைவன் தன்னிகரற்றவனாகத் திகழ்ந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. அத்தோடு ஆங்கிலேயர்களின் ஏகாபத்தியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய முதல் கிளர்ச்சி இது என்ற வகையில் ஊமைத்துரை பங்குபெற்று சண்டையிட்டு மடிந்த பாளையக்காரர் போர் முக்கியமானதாகும். அந்த நிகழ்வை மிகையில்லாமல் சொல்வது என்ற எண்ணம் தான் ஊமைத்துரை பற்றிய படம் எடுப்பதற்குண்டான காரணம்.
பி.கு: பல நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை எழுத்து வடிவமாக வலையேற்றி இருக்கிறேன். சினிமா தான் என் கனவு, என் வாழ்க்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது உண்மையுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு. அவ்வளவு தான் :)
ஒரு பாதை. விலங்குகளும் மனிதர்களும் நடந்து சென்ற காலடித் தடங்களால் உருவான ஒரு மண் பாதை. அந்தப் பாதையில், தன்னுடைய இரண்டு ஆடுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் நடந்து செல்கிறார். அவருடைய நடையில் ஒரு வேகம் தெரிகிறது. முகத்தில் ஒரு வெறுமை தெரிகிறது. அப்பாதை, சில ஓலை குடிசைகள் அமைந்துள்ள மேடான ஒரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அம்மனிதர் தன் நடையை ஒரு குடிசையை நோக்கிச் செலுத்துகிறார். ஆடுகள் இரண்டையும் குடிசைக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு , குடிசையின் உள்ளே செல்கிறார். அவருடைய மனைவி குடிசையில் உள்ள ஒரு சில பொருட்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். வெகுநேரமாக அழுது களைத்த கண்களில் சோகம் தெரிகிறது. "நேரமாச்சு, வா கெளம்பலாம்" என்கிறார் தெலுங்கு மொழியில். "பெறந்து வளர்ந்த பூமியை விட்டு போகணும்ங்கிறீங்களே" என்கிறார் அவருடைய மனைவி. "என்ன பண்ணறது, இந்த மண்ணுல நாம உயிர் வாழ இனிமே ஒன்னும் இல்லை, போய் தான் ஆகனும்" என்று சொல்லி மனைவியை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார்.
பின்னர் தங்கள் உடைமைகளையும், தாங்கள் வைத்து வணங்கும் பெண் தெய்வத்தின் மண் சிலையையும் எடுத்துக் கொண்டு, வாசலில் கட்டியிருக்கும் ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். அவ்விடத்தில் வாழும் அம்மனிதரைப் போன்ற ஏனையோர்களும் தத்தம் மனைவி, மக்கள், விலங்குகள் ஆகியவற்றை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்கள். ஆண்கள் அனைவரும் கம்பளங்களைத் தங்கள் தோள் மேல் போர்த்தியிருக்கிறார்கள். இந்த இடத்துல மெலிந்து போன சில பசு மாடுகளும், சோக முகம் கொண்ட மனிதர்களும் நடந்து போறதை லோ-ஆங்கிளில் காட்டறோம். "வடக்கு ஆந்திர பிரதேசம், கி.பி.12 ஆம் நூற்றாண்டு" என சப்-டைட்டிலில் காட்டறோம். அம்மக்கள் பல துயரங்களை அனுபவித்து தென் தமிழ்நாட்டை அடைகிறார்கள். முதல் காட்சியில் காட்டப்பட்ட அம்மனிதர், அங்குள்ள மன்னன் ஒருவனிடத்தில் சேவகனாக சேர்கிறார். அம்மன்னனின் நன்மதிப்பை பெறுகிறார். நாட்டின் ஒரு சிறிய பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்குக் கிடைக்கிறது. இதை எல்லாம் ஒன்னரை-ரெண்டு நிமிஷத்துக்குள்ள, கோர்வையான சில காட்சிகளின் மூலமாக மிகைப் படுத்தாமல் சொல்கிறோம்.
அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைக்கும் ஒலி கேட்கிறது. காட்சி திரையில் ஆரம்பிக்கும் போது நாய்கள் ஒரு புதருக்குள்ளிலிருந்து வேகமாக வெளிப்பட்டு முன்னோக்கி வேகமாக ஓடுவது காண்பிக்கப் படுகிறது. நாய்களுக்குப் பின்னால் அம்மனிதர் ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். நாய்களுக்கு முன்னால் காட்டு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டை நாய்கள் வேகமாக ஓடுவது காட்டு முயலைப் பிடிக்க என்பது காட்சியிலிருந்து தெரிவிக்கப் படுகிறது. நாய்கள் காட்டு முயலைப் பிடித்தாக வேண்டும் என்ற ஆர்வம், நாய்களின் எஜமானரான அம்மனிதரின் முகத்தில் தெரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் நாய்கள் முயலைத் துரத்துவதும், மனிதர் குதிரையில் பின் தொடர்ந்து வருவதும் ஆக்சன் ஷாட்டாகக் காண்பிக்கப் படுகிறது. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தன் இது வரை ஓடி வந்த திசையை நோக்கித் திரும்புகிறது, வேட்டை நாய்களை நேருக்கு நேராகப் பார்க்கின்றது. அதுவரை பயந்து ஓடிக் கொண்டிருந்த முயல், வேட்டை நாய்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. நாய்களை ஒரு முயல் துரத்துவதையும், தன்னை கடந்து அவைகள் ஓடுவதையும் அத்திசையை நோக்கி அம்மனிதர் பார்க்கிறார்.
முயல் எந்த இடத்தில் திரும்பி நாய்களைத் துரத்த ஆரம்பித்ததோ அந்த இடத்திற்கு தன் குதிரையில் இருந்து இறங்கி நடநதுச் செல்கிறார். அவருடைய கண்களில் தெரியும் வியப்பைப் பார்வையாளருக்குக் காட்டுகிறோம். அவருடைய கருவிழிகளுக்குள்ளே, அவ்விடம் வளர்ச்சி பெறுவதையும் ஒரு கோட்டை உருவாவதையும் காட்டுகின்றோம். இப்போது கேமரா அம்மனிதரின் தலைக்கு மேல் செல்கிறது, மேலே எழும்பிக் கொண்டே இருக்கிறது, அவருடைய தலை ஒரு சிறு புள்ளியாகத் தெரியும் வரை. இவ்விடத்தில் அப்புள்ளி சேட்டிலைட் இமேஜரியாக(Satellite Imagery) மாறுகிறது. புள்ளி தெரிந்த அதே இடத்தில் சேட்டிலைட் இமேஜரியின் மீது ஒரு புள்ளி வைத்து "பாஞ்சாலங்குறிச்சி, கி.பி.12ஆம் நூற்றாண்டு" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து வலப் பக்கமாக சிறிது தூரம்(ஒரு சில மில்லிமீட்டர்கள்) சேட்டிலைட் இமேஜரியின் மீது கேமரா பயணிக்கிறது. அங்கு இன்னுமொரு புள்ளி தெரிகிறது. அப்புள்ளியின் அருகே "கயத்தாறு, அக்டோபர் 17, கி.பி.1799" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து கேமரா உள்நோக்கி கீழிறங்க ஆரம்பிக்கிறது. இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் எவ்வாறு பூமி தெரியுமோ அவ்வாறு நிலம் தெரியத் துவங்குகிறது.
மேலும் கேமரா கீழே இறங்குகிறது. பச்சையான மேற்பரப்பு தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கேமரா கீழிறங்குவது ஒரு மரத்தினூடாக என்பது பார்ப்பவருக்குத் தெளிவாகிறது. அம்மரம் ஒரு புளியமரம் என்று கேமரா கீழிறங்கும் போது தெரியும், புளிய மர இலைகள் மூலமாகவும், மரத்தில் தொங்கும் புளியம்பழங்களின் மூலமாகவும் பார்ப்பவர் தெரிந்து கொள்கிறார். கீழிறங்கிக் கொண்டிருக்கும் கேமராவுக்கு ஒரு பெரிய மரக்கிளை தெரிகிறது. அம்மரக் கிளையில் தடிமனான ஒரு கயிறு கட்டப் பட்டிருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைக் காட்டிக் கொண்டே கேமரா கீழிறங்குகிறது. இடுப்பு வரை வெற்றுடம்பாக இருக்கும் ஒரு சடலம் கயிறில் தொங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறோம். கேமரா காட்டுவது அச்சடலத்தின் முதுகு பகுதியை தான். கறுத்த உடல் நிறம் கொண்ட அம்மனிதனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கால்களில் வசதி படைத்தவர்கள் அணியும் காப்புகள் அணிந்திருப்பது தெரிகிறது. பின்னணியில் மக்கள் அழுது புலம்புவதையும், கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல உடையணிந்த இன்னும் சிலர் விலங்கிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்களால் இழுத்துச் செல்லப் படுவதையும் காட்டுகின்றோம். இக்காட்சி முழுவதும் சூரியன் மறைந்த மாலை நேரத்தில்(ஆனால் இருள் சூழாத) படமாக்கப் படுகிறது.
அடுத்த காட்சி விளக்கு வைத்த மாலை வேளையில் தொடங்குகிறது. விபூதி பட்டை அணிந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று காவடி தூக்கிக் கொண்டு, காவடி சிந்து பாடிக் கொண்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் காக்கும் ஒரு வாயிலை நோக்கி வருகிறது. அவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்ட காவலாளிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவடி எடுத்து வந்தவர்கள், காவலாளிகளின் கண்களிலிருந்து மறைந்ததும் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள். காவடிக்குள்ளிலிருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்து கொள்கிறார்கள். இருள் கவியத் தொடங்கியதும் வெவ்வேறு திசைகளிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல ஒரு கோட்டையை நோக்கி வருகின்றனர். அங்கு காவலாளிகளை மறைந்திருந்து தாக்கிக் கொன்று கோட்டைக்குள் புகுகின்றனர்.
கோட்டைக்குள் அவர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிறை கதவு தெரிகிறது. அதை தாக்கி உடைத்து, சிறைக்குள்ளிருக்கும் நபரின் கைவிலங்குகளை உடைக்கின்றனர். அவருடைய கைகளை முத்தமிடுகின்றனர். கோட்டையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வீரர்களும், அந்நபரும் வெளியேறுகின்றனர். அப்போது படத்தின் பெயர் போடுகின்றோம் - "ஊமைத்துரை". பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்டு கொண்டு வரும் போது ஆங்கிலேய தளபதிகளும், அவர்களுடைய படைவீரர்கள் அனைவரும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்து சற்றே விலகி ஒரு இடத்தில் விருந்தில் கலந்து கொண்டிருந்ததையும், வீரர்கள் அந்நேரத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கியிருந்தால் வரலாறு மாறியிருக்க வாய்ப்பிருந்ததையும் காட்டுகிறோம்.
சில நாட்கள் காலாட் பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணான பாஞ்சாலங்குறிச்சியை அடைகின்றனர். தமது அண்ணன் கட்டபொம்மனின் மறைவிற்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து சாதி மக்களின் உதவியையும் கொண்டு ஆறே நாட்களில் மறுபடியும் கட்டி முடிக்கின்றான். இந்த சிச்சுவேஷனில் ஒரு பாட்டு வருகிறது. படத்திற்கு இசை - இசைஞானி இளையராஜா. அதாவது இரவு பகலாக மக்கள் மண்சுமந்து அந்த கோட்டையைக் கட்டும் போது களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பாடுவது போல ஒரு பாட்டு வருகிறது. களிமண்ணும் சுண்ணாம்பும் பதநீரும் கரும்புச் சக்கையும் சேர்த்த கலவையை வைத்து கட்டும் போது எழுப்பப் படும் ஒலியோடு பாடல் தொடங்குகிறது.
வேட்டை நாயை விரட்டிய முயலின் கதையோடு ஆரம்பிக்கிறது பாடல். அத்தகைய பெருமைகளைக் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி என்பது வீரம் விளைந்த மண் என்பது நிறுவப் பெறுகிறது. அடுத்து கட்டபொம்மனின் பெருமைகளைச் சொல்கிறது, வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவர்க்கு வரி கொடுக்க மறுத்தது, அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது இவை எல்லாவற்றையும் இயல்பான மொழியில் ஒரு கதை பாடல் போல ஒலிக்கிறது இந்தப் பாடல். பாடலில் பல்வேறு உணர்ச்சிகள் காட்டப் படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமை சொல்லும் இடத்திலும், கட்டபொம்மனின் வீரதீர பெருமைகளைச் சொல்லும் இடத்திலும் ஒருவித மகிழ்ச்சி உணர்வும், கட்டபொம்மன் மறைந்தது பற்றிப் பாடும் போது சோகமும் கலந்த கலவையாக இப்பாடல் வரும். கடைசியாக நீங்களா? நாங்களா? மோதி பார்த்துடுவோம் வாங்கடா வெள்ளையர்களா என்று சவால் விடும் தொனியில் பாடல் முடிவடையும்.
(தொடரும்...)
திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2
வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)
நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.
தமிழ்
1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"
2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"
3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"
4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"
5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.
மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.
"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.
ஆங்கிலம்
1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!
2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’
3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."
4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"
5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.
உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.
நேத்து வழக்கம் போல கடுமையா உழைச்சிட்டு இருந்தேன். உங்க வீட்டு உழைப்பு எங்க வீட்டு உழைப்பு இல்லை...முத்து முத்தா முகத்துல வியர்த்து இருக்கறதைத் தொடைச்சிக் கூட விட்டுக்காத கடும் உழைப்பு. அதுவா பூமியின் புவி ஈர்ப்பு சக்தியின் காரணமா நிலத்துல கீழே விழுந்தா தான் உண்டு. நெத்தி வியர்வையை நிலமே கேட்டு வாங்கிக்கிற மாதிரியான உழைப்புன்னு வையுங்களேன். அந்த நேரத்தில் தான் என்னோட கூகிள் சாட் பொட்டியில், பார்த்தனின் தடந்தோள்களை அலங்கரிக்கும் காண்டீபத்தின் ரீங்காரத்தையும், பார்த்தனின் சாரதியின் இதழ்களைத் தழுவும் பேறு பெற்ற பஞ்சஜன்யத்தின் ஆஹாகாரத்தையும் ஒத்த ஒரு ஒலி கேட்டது "Are you there?"ன்னு.
அந்த ஒலிக்குச் சொந்தக்காரர், நான் வலையுலகில் நுழைந்த நாளிலிருந்தே அறிந்த ஒரு நண்பர். "உரையாடல் சிறுகதை போட்டிக்கு நான் ஒரு கதை எழுதிருக்கேன். கொஞ்சம் படிச்சிப் பாருங்க"ன்னு ஒரு லிங்க் கொடுத்தார். அவருடைய பல முகங்களை நான் பாத்திருக்கிறேன் - அறம் செய்ய விரும்புறவரா, ஆறுவது சிணுங்கறவரா,
இயல்வது கரக்கறவரா, ஈவது விலக்கறவரா, உடையது விளம்பறவரா, ஊக்கமது கைவிடாதவரா, எண் எழுத்து இகழாதவரா, ஏற்பது இகழாதவரா, ஐயமிட்டு உண்ணறவரா, ஒப்புரவு ஒழுகறவரா, ஓதுவது ஒழியறவரா, ஒளவியம் பேசறவரா இப்படின்னு பல முகங்கள். ஆனா அன்னிக்கு அந்த பதிவைப் படிச்சிட்டு நான் பாத்த முகம் "அடங்கொன்னியா! இந்த ஆளு இங்கே இருக்க வேண்டிய ஆளே இல்லைடா"ன்னு நெனைக்க வச்சது. "இங்கே இருக்க வேண்டிய ஆள் இல்லைன்னா, பின்ன வேலூர் ஜெயில்ல இருக்க வேண்டியவரா"ன்னு எல்லாம் கேக்கப்பிடாது.
இவ்வளவு சீரிய(ஸ்) இலக்கியவாதிக்கு, ஒரு இலக்கியவாதிக்கே இணையான புனைப்பெயரும் இருப்பது தேவையானது என நான் நினைத்தேன். "இலக்கியவாதியான உங்களுக்கு ஒரு இலக்கியத் தரமான புனைப்பெயர் வைக்கணுமே?" அப்படின்னேன். "நீங்களே வையுங்களேன்"னு ரொம்பப் பெருந்தன்மையோட அந்த பாக்கியத்தை எனக்கு அளிச்சார். எனக்கு ரெண்டு பேரு மனசுல தோனுச்சு. முதல் பேர் "விழிவிண்மீனுக்கடியவன்".
விழிவிண்மீனுக்கடியவன் = விழி + விண்மீனுக்கு + அடியவன்
விழி = நயனம்(நயன்)
விண்மீன் = தாரா
அடியவன் = தாசன்(தாஸ்)
இரண்டாவதா எனக்கு ஒரு பேரு தோனுச்சு. அது தான் தன்னோட இலக்கிய வாழ்க்கைக்கு ஏத்ததா இருக்கும்னு அதையே ஏத்துக்கிட்டாரு. அந்த பேரு...
"பகலவன் ப்ரமிளா"
அந்த பேருக்கான விளக்கம் - பகலவனான ஞாயிறு ஒளி பொருந்தியவன். அளவிலாத சக்தியைக் கொண்டவன் அவன். இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் சக்திக்குக் காரணமாயிருப்பவனும் அவனே. இவ்வளவு வலு பொருந்தியவனாய் இருந்தாலும் தடாகத்தில் மலரும் மெல்லிய தாமரை மலரை மலரச் செய்பவனும் அவனே. ஆயினும் பாலைவனத்தில் அகப்பட்டுக் கொள்ளும் உயிரினங்களைப் பாரபட்சமின்றிச் சுட்டெரிக்கவும் அவன் தயங்குவதில்லை. இத்தன்மைத்தாய பகலவனை ஒத்தவரான கவிஞர், தன்னுடைய மக்களை மகிழ்விக்கக் கூடிய எழுத்துகளின் காரணமாய் படிப்பவர் முகங்களை மலரச் செய்பவர், அதே சமயம் தவறு செய்பவர் என்று அவர் தம் மனதில் கருதி விட்டால் எந்த ஒரு பாரபட்சமுமின்றி சுட்டெரிக்கத் தயங்காதவர்.
பகலவன் சரி...அது என்ன ப்ரமிளா? எதுக்கு அந்த பேரு? ஒன்னுமில்லை சாரே. சீரியஸ் இலக்கியம் எழுதறவங்க தன் புனைப் பேருல ஒரு பாதியிலாவது ஒரு அம்மணி பேரை வச்சி எழுதாம சாதிச்சதா வரலாறே கெடையாது. ப்ரமிளாங்கிற பேரைக் கேட்டதும் என்ன தோனும்? பலருக்கு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம் படம் நியாபகத்துக்கு வரலாம், வெகு பலருக்கு சேச்சி நடிச்சி பிரபலமான தம்புராட்டி படம் நியாபகத்துக்கு வரலாம். க்ளாமரும் நடிப்பும் ஒரு சேர நிரம்பிய ஓல்டு ஆனாலும் கோல்டான ப்ரமிளாவைப் போன்ற கவர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரர் என்பது இந்த புனைப் பெயரின் இரண்டாம் பாகத்தில் தொக்கி நிற்கும் பொருள்.
எழுத்தாளர், இலக்கியவாதி, இதழியலாளர் இப்படியாக இன்னும் பல ஆளர்களை ஆளப் போகும் 'பகலவன் ப்ரமிளா'வின் வலைப்பூ கீழே.
பகலவனும் சரி ப்ரமிளாவும் சரி இரண்டு காண்டிராஸ்டிங் சிறப்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஆதலால் சிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் பெயரான "பகலவன் ப்ரமிளா" ஜனனம். பேரு பாக்க காமெடியா இருந்தாலும் பதிவெல்லாம் டெரரா தான் இருக்கும். சீரியஸ் இலக்கியம் மட்டும் தான் எழுதுவார் பகலவன் ப்ரமிளா. ஏகவசனமா இருந்தாலும் அவருடைய இலக்கிய படைப்புகளை வாசித்து விட்டு "நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா, நீ இலக்கியவாதிடா"ன்னு மயில்சாமி மாதிரி உணர்ச்சிவசப்பட்டு பாராட்டற காலமும் வரத் தான் போகுது. அதை நானும் பாக்கத் தான் போறேன். அந்த நாள் வரும் போது...வரும் போது...வேணாம்... வரும் போது சொல்றேன் என்ன பண்ணுவேன்னு.
நீர் ஊற்று