Sunday, December 19, 2010

தூர்தர்ஷனும் இசைப்புயலும்

கடந்த சில நாட்களாக முன்னைப் போல ஆக்டிவாகப் பதிவெழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன் பல வருடங்களுக்கு முன்னர் வந்த தொலைக்காட்சி விளம்பரங்களை நினைவு படுத்திப் பார்க்கலாமே என்ற ஒரு எண்ணம் உதித்தது. விளம்பரங்களின் பட்டியல் பெரியதாக இருந்ததால் அவற்றை எதாவது ஒரு வகையில்(criterion) கொண்டு பகுக்கலாமே என்று தோன்றியது.
ரோஜா படம் மூலமாகத் தான் முதன்முதலாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களைக் கேட்டது என்றாலும், டிவி விளம்பரங்களின் மூலமாக மக்களிடம் நெருக்கமாகத் தான் இருந்துள்ளார் எனத் தெரிந்தது. திரைப்படங்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னர் அவர் விளம்பரப் படங்களுக்குத்(ad jingles) தான் இசையமைத்துக் கொண்டிருந்தார் என பலரும் கேள்வி பட்டிருப்போம். ஆனால் பழைய விளம்பரங்களைத் தேடிக் கொண்டிருந்த போது, அக்காலத்தில் நாம் ரசித்த பல விளம்பரப் படங்களுக்கும் அவர் இசையமைத்திருப்பது தெரிய வந்தது. "அட! இந்த விளம்பரத்துக்கும் இவர் தான் இசையமைத்தாரா?" என ஆச்சரியமாய் இருந்தது. அதை எல்லாம் பதிந்து வைக்கலாமே எனத் தோன்றியதன் விளைவு தான் இந்தப் பதிவு. சில விளம்பரங்கள் தூர்தர்ஷன் மட்டும் அல்லாமல் வேறு தொலைக்காட்சி சேனல்களிலும் வந்திருக்கலாம்.

Leo Coffee
ஏ.ஆர்.ரகுமானின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் "லியோ காஃபி" விளம்பரம் என்று சொல்கிறார்கள். இவ்விளம்பரத்தைப் பார்த்து தான் இயக்குனர் மணிரத்னம் ரோஜா படத்தில் இசையமைக்க வாய்ப்பளித்தார் என்று இணணயத்தில் படித்தேன். மணிரத்னத்திடம் அவரை அறிமுகப்படுத்தியது அப்போது விளம்பரப் படங்களில் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ராஜீவ் மேனன். இந்த விளம்பரம் வெளிவந்த காலத்தில் நான் பள்ளி செல்லும் சிறுவன். எப்போது வந்தாலும் நின்று பார்த்து விட்டுச் செல்லும் விளம்பரங்களில் இதுவும் ஒன்று. அவ்விளம்பரத்தில் வரும் அர்விந்த் சுவாமிக்கும் இப்போது இருக்கும் அர்விந்த் சுவாமிக்கும் எத்தனை மாற்றங்கள்? லியோ காஃபியின் தற்காலத்து விளம்பரத்தில் நடிகை ஆண்ட்ரியா வருகிறார். ஆனால் பழைய விளம்பரம் ஏற்படுத்தும் பாதிப்பும் கிளறும் நினைவுகளும் இப்புதிய விளம்பரத்தில் இல்லை. ஆண்ட்ரியா வரும் விளம்பரத்தைப் பார்க்க வேண்டும் என்றால் இங்கு சுட்டுங்கள்.


Old Cinthol
கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டு காலமாக இருக்கும் சோப் "பழைய சிந்தால் சோப்". அட, இதுலயும் அர்விந்த் சுவாமி தான் வருகிறார். இந்த சோப்பின் விளம்பரத்தைப் பார்த்தால் எப்போதும் மிகைப்படுத்தப் படாமல் சிம்பிளாக இருக்கும். பல சமயங்களில் விளம்பரங்களே கூட இருக்காது. சிகப்பு நிற அட்டையில் வெளிவரும் சோப் இது, புதிய சிந்தால் சோப்புக்குச் சற்று கவர்ச்சியான விளம்பரங்களை வெளியிடும் கோத்ரெஜ் நிறுவனம். பல வருடமாக உபயோகத்தில் இருக்கும் சோப் என்பதால் அந்த நற்பெயரிலேயே இன்னும் இந்த சோப் விற்றுக் கொண்டிருக்கிறது. தோல்நோய் மருத்துவர்களும் பரிந்துரைக்கும் உண்மையிலேயே நல்ல சோப் இது. அத்தகையதொரு சோப்புக்கு, மிகையில்லாத மெல்லிய இசை சேர்த்திருப்பது இவ்விளம்பரத்தின் சிறப்பு, இன்றளவும் நினைவில் நிலைக்கச் செய்திருப்பது இசையமைப்பாளரின் திறமை.


Asian Paints - Pongal
சில நிறுவனங்கள், தனித்து நிற்கும் விளம்பரங்கள் வெளியிடுவதற்கு பெயர் போனவை. அத்தகைய ஒரு நிறுவனம் தான் ஏசியன் பெயிண்ட்ஸ். கையில் பெயிண்ட் ப்ரஷுடன் நிற்கும் பையனின் மேஸ்காட்டைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்தாண்டு காலம் உபயோகித்து வந்தது ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். அந்த சிறுவனின் பெயர் "கட்டூ(Gattu)". அவனை உருவாக்கியவர் பிரபல் கார்ட்டூன் ஓவியர் ஆர்.கே.லக்ஷ்மண் அவர்கள். இணையத்தில் தேடினால் ஏசியன் பெயிண்ட்ஸின் மார்க்கெட்டிங்கைப் பற்றி பல கேஸ் ஸ்ட்டிகள் கிடைக்கும், அந்த அளவுக்கு தங்களுடைய ப்ராண்ட்களின் மீது கவனமும் அக்கறையும் செலுத்தும் நிறுவனம் இது. பொங்கலுக்கு வெள்ளை அடிக்கும் நம்ம ஊர் பழக்கத்தைக் குறி வைத்து, தமிழ்நாட்டில் மட்டும் வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு விளம்பரமிது. இவ்விளம்பரத்தின் துவக்கத்தில் வரும் அதே "ஏலேலோ" இசையை ரோஜா படத்தில் சின்ன சின்ன ஆசை பாடலில் ஹோகேனக்கல்லில் பரிசல்கள் செல்லும் காட்சியிலும் பார்க்கலாம்.



Titan
முந்தைய மூன்று விளம்பரங்களும் தமிழ்நாட்டு ஆடியென்சை மட்டும் தொடுவன என்றால், இவ்விளம்பரமும் இனி வரும் விளம்பரங்களும் இந்தியா முழுவதும் பிரபலமானவை. "சாந்தி" என்னும் இந்தி சீரியலில் ராஜ்.ஜி.ஜே.சிங் எனும் கதாபாத்திரத்தில் நடித்த அமர் தல்வார் தான் இவ்விளம்பரத்தில் வரும் தந்தை. மால்குடி சுபா பாடி வெளிவந்த "வால்பாறை வட்டப்பாறை" ஆல்பமில் நடித்த சம்யுக்தா தான் இதில் மகளாக வருபவர். இவர் முன்னாள் தூர்தர்ஷன் ஆங்கில செய்தி வாசிப்பாளர் பி.சி.ராமகிருஷ்ணா அவர்களின் மகள். இது ஏ.ஆர்.ரகுமானின் இசையில் வெளிவந்தது என்பதனை youtube பார்த்து தான் தெரிந்துகொண்டேன்.


MRF
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பிரபலமான நிறுவனம் MRF. Madras Rubber Factory என்று ஒருகாலத்தில் இருந்த பெயர் தான் MRF ஆனது. ஆயினும் இப்போது பழைய பெயரை எங்கும் அவர்கள் பிரபல படுத்துவதில்லை. ஏசியன் பெயிண்ட்ஸைப் போலவே விளம்பரங்களில் வெகுவாக கவனம் செலுத்தும் நிறுவனம் இது. இவ்விளம்பரம் வந்து கொண்டிருந்த காலங்களில், அதில் கடைசியில் வருவது போலவே கீபோர்டில் சர்ரென்று விரல்களைத் தேய்க்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அது இப்போது நிறைவேறி விட்டாலும், வெகுகாலம் கழித்து இந்த விளம்பரத்தைப் பார்த்த போது அந்த ஆசை எங்கிருந்து வந்தது என நினைவில் வந்தது :)


Garden Vareli
லிசா ரே(Lisa Ray) தோன்றும் இவ்விளம்பரத்தின் இசை வெகு பிரபலம். சிறுவயதில் கார்டன் புடவைகளை எல்லாரும் அணிவது போல அணிய முடியாது, இதில் காட்டுவது போல காற்றில் பறக்க விடுவது போல தான் அணிய முடியும் எனப் பல காலம் நினைத்துக் கொண்டிருந்தேன். லிசா ரே ஒரு அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப் பட்டு சமீபத்தில் அதில் இருந்து மீண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ளார்.


Premier Pressure Cooker
"பாசமான அன்னை பரிசாய் தந்த ப்ரீமியர் ஆசை ஆசையாய் கணவர் வாங்கித் தந்த ப்ரீமியர்" என ஆரம்பிக்கும் விளம்பரம், டிவியில் அதிகமாக இவ்விளம்பரத்தைப் பார்த்த ஞாபகம் இல்லை. இருப்பினும் இப்போது பார்த்த போது நன்றாக இருப்பதாகத் தோன்றியது.


Spirit of Unity Concerts
முன்னொரு காலத்தில் ஞாயிறு காலை 10.30 மணிக்கு தூர்தர்ஷனில் தேசிய தொலைக்காட்சியில் "Spirit of Unit Concerts" என்ற நிகழ்ச்சி ஒன்று வெளிவரும். இதில் துவக்கத்தில் வரும் title music கேட்பதற்காகவே காத்து கிடப்பேன். அந்நிகழ்ச்சியில் வரும் மற்ற கச்சேரிகள் எதையும் கூர்ந்து கவனித்ததில்லை. இந்த டைட்டில் இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.


கடைசியாக ரோஜா திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றதற்குப் பின் சுரபி என்னும் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பேட்டியைக் காணலாம். இதில் அவருடைய பெயரை அப்துல் ரகுமான் என்று தவறாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தன்னுடைய இசையில் மேற்கத்திய இசையின் தாக்கம் காலம் செல்ல செல்ல குறையும் என்று குறிப்பிட்டிருக்கிறார். வெகுவாகப் பிரபலம் ஆவதற்கு முன் வந்த முதல் சில விளம்பரங்களில் ஒன்று இது.

Tuesday, December 07, 2010

பாடி ஸ்டெடியா இருக்கு, மைண்ட் ஆஃப் ஆயிடுச்சு

வீட்டிற்கும் திருப்பெரும்புதூருக்கும் இடையேயான 65 கி.மீ (ஒரு வழி தூரம்) பயணத்தைக் காரில் கடக்கும் போது கேட்பதற்காக, என்னிடமிருந்த பாடல்கள் தொகுப்பிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து நானே சில இசை குறுந்தகடுகளைத் தயாரித்தேன். நாங்கள் சப்போர்ட் அளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு நிறுவனத்தின் இந்திய பிரிவிற்கு ஒரு ப்ராஜெக்ட் செய்வது நிமித்தமாகவே தினசரி திருப்பெரும்புதூர் பயணம். ஆனால் ஆறு மாதமாகப் பதிவு எதையும் எழுதாமல் இருப்பதற்கு கழுத்தை நெரிக்கும் வேலை, நேரமின்மை என்று காரணம் சொல்வதில் உண்மை இல்லையென்று எனக்கே தெரிகிறது. இதை காட்டிலும் பிசியாக இருந்த போதும் பதிவெழுதிக் கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இப்போதோ..."எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" கதை தான்.

சரி அதை விடுவோம். குறுந்தகடு பத்தி சொன்னேன் இல்லையா...பயணத்தின் போது கேட்ட ஒரு பாடல் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 'கதர்'(Gadar) என்ற இந்தி திரைப்படத்தில் வரும் "உட் ஜா காலே காவான்" என்று பஞ்சாபி மொழியில் தொடங்கும் பாடல் தான் அது. இப்பாடலை இதற்கு முன்னர் பல முறை டிவியில் பார்த்திருந்த போது அறிந்திராத ஒரு இனிமை அன்று கார் ஸ்டீரியோவில் கேட்கும் போது உணர முடிந்தது. இது போல சில பாடல்களின் அருமையைக் கார் ஸ்டீரியோவில் கேட்டு தான் உணர்ந்திருக்கிறேன். தமிழ் விடு தூது, தத்தை விடு தூது, நாரை விடு தூது என்றெல்லாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் இப்பாடலில் கதாநாயகன் தன் உள்ளக்கிடக்கையை காகத்தினை தூதனுப்பி வெளிப்படுத்துகிறார். பாடலின் இசையமைப்பாளர் உத்தம் சிங், பாடியவர்கள் அல்கா யாக்னிக், உதித் நாராயண். தமிழ் பாடல்களைக் குதறி துப்பும் உதித், இந்தியில் சிறப்பாகவே பாடுகிறார்.



இப்பாடல் வரிகளின் பொருளைத் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள சுட்டியைக் க்ளிக்குங்கள்.
http://www.ukindia.com/zip2/zgadar.htm

****************************************************
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நெறிபடுத்தும் BCCI என்ற அமைப்பு பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வணிக அமைப்பு என்பது சமீபத்தில் சீனாவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டுகளைப் பார்த்த போது உறுதியானது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் முதன்முறையாக 2010 ஆம் ஆண்டில் அறிமுகப் படுத்தப்பட்டது. இப்போட்டிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது பங்களாதேஷ் நாட்டு அணி. இந்திய அணி அச்சமயத்தில் நியூசிலாந்து நாட்டுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்தது. அதனால் அப்போட்டிகளில் இந்திய சர்வதேச அணியால் பங்குகொள்ள இயலாமையைப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இந்தியாவின் தரப்பிலிருந்து ஒரு இரண்டாம் தர அணியைக் கூட இப்போட்டிகளுக்கு அனுப்ப முடியாத நிலை பிசிசிஐக்கு ஏற்பட்டது எப்படி என்பது புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. கோடிகளில் பணம் புரண்டால் மட்டுமே பிசிசிஐ கண்டு கொள்ளும் போலிருக்கிறது, ஒரு சர்வதேச விளையாட்டுப் போட்டியில் நம் தேசத்தின் சார்பாகப் பதக்கம் வாங்குவதில் பெருமை வேண்டுமானால் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு என்ன செய்ய என்ற எண்ணம் தான் காரணமோ?

****************************************************
சமீபத்தில் ஒரு நாள் சாலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் "Hero Honda Pleasure" என்ற இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்ததுமே அந்த வாகனத்துக்கான விளம்பரம் நினைவுக்கு வந்தது. நடிகை பிரியங்கா சோப்ரா "Why should boys have all the fun?" என்று சொல்லி அது பெண்களுக்கான வாகனம் என்பது போல விளம்பரப் படுத்தியது நினைவுக்கு வந்தது. அவ்வளவு நல்ல வாகனமாக Hero Honda Pleasure இருக்கும் பட்சத்தில் "Why should girls have all the fun?" என்று அந்த இளைஞரும் நினைத்திருப்பாரோ? :)


****************************************************
சமீப காலங்களில் மனதை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று உண்டென்றால், அக்டோபர் இறுதியில் கோவையில் இரு பள்ளிக் குழந்தைகள் கடத்திக் கொல்லப் பட்ட நிகழ்வு தான். அதை நினைத்து நினைத்து எத்தனை முறை அழுதேன் என்று நினைவில் இல்லை. கடத்திக் கொண்டு போன பாவிகள் பணம் வாங்கிக் கொண்டு விட்டிருந்திருக்கலாம் இல்லையா?, போலிஸ் பிடித்து விடுவார்கள் என்ற பயம் வந்ததும் பொள்ளாச்சி அருகிலேயே குழந்தைகளை இறக்கி விட்டுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் இல்லையா? இவ்வாறாக பல "ifs and buts" நினைப்புகள். அதற்கு பின்னர் அந்த மிருகங்கள் செய்ததை கேள்வி பட்ட போதே நெஞ்சம் பதறியது. இதையெல்லாம் செஞ்சா மாட்டிக்குவோம்னு அந்த கயவர்களுக்குத் தோன்றியிருக்காதா? அப்படி தோன்றியிருந்தால் அவ்வாறு செய்திருப்பார்களா என மறுபடியும் ஒரு நினைப்பு. அக்குழந்தைகளின் பெற்றோர்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே கடினமாகவே இருக்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அந்த சிறுவனின் சடலத்தை வாய்க்காலிலிருந்து மீட்டதைப் பார்த்த போது, அக்குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கான எல்லா கதவுகளும் ஒரே நேரத்தில் மூடிக் கொண்டன, ஆனால் இந்த பாவிகளுக்கோ கோர்ட் கேஸ் அப்படின்னு பல கதவுகள் பல வருஷம் திறந்து இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு சில நாட்களிலேயே இக்குற்றத்தில் தொடர்புடையவர்களில் ஒருவன் போலீஸ் என்கவுண்டரில் பலியான செய்தி கேட்டு ஒரு வித ஆறுதல் கிடைத்தது. என்கவுண்டர் நடைபெற்றதற்கான காரணங்களாகப் போலீஸ் தரப்பு சொல்லியதை கூட்டிக் கழித்து பார்த்தால் "இது என்கவுண்டர் அல்ல திட்டமிட்டு செய்யப் பட்டக் கொலை என்று "மனித உரிமை பேசுபவர்களது"(க்ரிமினல்களுக்கு மட்டும்) கூற்று உண்மையாக இருக்கக் கூடிய வாய்ப்பு தென்படுகிறது. அது உண்மையாகவே இருந்தாலும் கூட "so what" என்று மட்டுமே நினைக்கத் தோன்றுகிறது. எஞ்சியிருக்கும் இன்னொரு கயவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் தண்டனை நீதிமன்றம் வழங்கப் போகும் தண்டனையை விட பெரிய தண்டனையே.

என்னை "கைப்புள்ள"யாக மட்டுமில்லாமல் அறிந்திருப்பவர்களுக்கு, இக்கொலை சம்பவம் பற்றிக் கேள்வி பட்டதும் என் நினைவு வந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவனதும் பெயரும் எனது இயற்பெயரும் ஒன்று தான். மோகன்ராஜ் என்கிற டாக்சி டிரைவர் தான் பிரதானக் குற்றவாளி என்று அறிந்ததும் "அட படுபாவி! நம்ம பேரை இப்படி கெடுத்து வச்சிருக்கானே" என்று தான் தோன்றியது. "Mohanraj" என்ற தேடுசொல் கொடுத்து கூகிளில் தேடினால் முதல் பக்கத்தில் இந்த பாதகனின் பெயர் இன்றும் வருகிறது, இன்னும் சில காலத்துக்கு வந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். எட்டு-பத்து வருடத்துக்கு முன்னர் எனது பெயர் "IIT Delhi" வலைதளத்தில் "மாணவர்" என்ற வகையில் கூகிளின் முதல் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அப்போதெல்லாம் பிரபலம் ஆகாத என் பெயர் கடந்த இரு மாதங்களில் அனைவருக்கும் பரிச்சயமான பெயராகிப் போயிருந்தது. இந்த பெயரின் காரணமாக நான் எது நடக்கக் கூடாதுன்னு நினைத்தேனோ அது எனக்கு நடந்தது. குழந்தைகளின் கொலை செய்தி வந்த மறுநாள் காரில் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் நண்பரோடு திருப்பெரும்புதூர் சென்று கொண்டிருந்தேன். "கோயம்புத்தூர் குழந்தைகள் கொலை கேசில் கொலை செஞ்சவனோட பேரும் மோகன்ராஜ்"தானாம் என்றார் நண்பர். ஏற்கனவே இக்கொலை செய்தியைக் கேட்டு மனம் மிகவும் கனத்துப் போயிருந்தது, என் பெயரை இப்பாதகனோடு தொடர்பு படுத்தி யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என்றே நினைத்திருந்தேன். நண்பர் அவ்வாறு சொல்லியதும் என்ன சொல்வது என்றே ஒரு கணம் புரியவில்லை, நான் என்ன சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்தாரோ தெரியவில்லை, வெறுமனே "ஹ்ம்ம்" என்றேன். அவரும் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

கடந்த ஆண்டில் "கான்" என்ற தன்னுடைய இரண்டாம் பெயரின்(Surname) காரணமாக இந்தி திரைப்பட நடிகர் ஷாருக் கான், நியு ஆர்க் எனும் அமெரிக்க விமான நிலையத்தில் சந்தேகத்தின் காரணமாக விசாரிக்கப் பட்டார். இதற்கு தன்னுடைய மறைமுக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக, கான் என்ற பெயர் உள்ளவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல என்று பொருள்படும் வண்ணம் "My Name is Khan" என்ற ஒரு திரைப்படத்தை தன் மனைவியைத் தயாரிக்க வைத்து அதில் நடித்தார். அவருக்கு இருக்கும் வசதிக்கு அவர் எதை வேண்டுமானாலும் செய்யலாம். நாமும் "My name is Mohanraj" என்று நம்மால முடிஞ்சது ஒரு பதிவை எழுதி வைப்போமான்னு தோனுச்சு. ஆனால் கடந்த சில மாதங்களாக நடப்பது போலவே பதிவுக்கு தலைப்பு மட்டும் தான் தோனுச்சு, அதுல என்ன மேட்டர் எழுதறதுன்னு தெரியலை. கடந்த சில மாதங்களாகவே...வேணாம் விடுங்க...பதிவோட தலைப்பை படிச்சுக்கங்க :)

****************************************************
நந்தலாலா படம் பாத்தேன். நல்லாருந்துச்சு. படத்தில் சில இடங்களில் எனக்கு ஒப்புதல் இல்லை, இருந்தாலும் இது ஒரு நல்ல படம் என்பதில் சந்தேகமில்லை. படம் முழுதும் பல குறியீடுகள் இருப்பதாக நான் உணர்ந்தேன். உதாரணமாக பாஸ்கர் மணிக்கும், அகிக்கும் வழிகாட்டும் கால் ஊனம் கொண்ட அந்த நபர். ஒற்றைக் காலுடன் கரடு முரடான காடு மலை எல்லாம் கடந்து செல்லக் கூடிய அந்நபரால், பாஸ்கர் மணி உதிர்த்த கடுஞ்சொல் ஒன்றினால் மன தைரியம் உடைந்து எழ முடியாமல் மறுபடியும் மறுபடியும் கீழே விழும் காட்சி அருமை.

படத்தில் இளையராஜாவின் இசையும் ஒரு கதாபாத்திரம் போலவே செயல்படுகிறது. இருப்பினும் இசை சில இடங்களில் பின்னணியில் இல்லாமல் முன்னணியில் இருப்பது போல எனக்கு தோன்றியது. சில இடங்களில் அது நெருடலாகத் தோன்றியது. ஒரு வேளை திரையரங்கத்தில் நான் உட்கார்ந்திருந்த சீட்டுக்கு வெகு அருகாமையில் ஸ்பீக்கர் இருந்ததும் ஒரு காரணமோ என்னவோ?

கலைஞர் தொலைக்காட்சியில் நந்தலாலா படத்துக்காக இளையராஜாவுடன் மிஷ்கின் நடத்திய நேர்காணலைக் கண்ட போது பல வருடங்களாக மனதில் இருந்த ஒரு சந்தேகத்துக்குப் பதில் கிடைத்தது. கீழே உள்ள காணொளியில் 3:24லிருந்து 4:30 வரை ராஜா சொல்வதை கேளுங்கள்.



"என்னை விட்டுப் போகாதே" திரைப்படத்தில் ராமராஜன் பாடுவதாக வரும் "பொன்னைப் போல ஆத்தா" பாடல் நான் அடிக்கடி விரும்பிக் கேட்கும் பாடல்களில் ஒன்று. கர்நாடக சங்கீத கச்சேரிகளில் மட்டுமே பயன்படுத்தப் படும் 'முகர்சிங்' இசை கருவியின் இசையுடன் தொடங்குவது இப்பாடலின் சிறப்பு.


இப்பாடலின் வரிகள் மறைந்த தன் தாயினை நினைத்து பற்றி ஒரு மகன் பாடுவது போல அமைந்திருக்கும். கீழே உள்ள வரிகளில் பாடல் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என பல முறை யோசித்ததுண்டு. அப்பாடல் வரிகளின் பொருள் தெரிந்து கொள்வதற்கான என் தேடலும் தொடர்ந்து கொண்டேயிருந்தது, கலைஞர் டிவியில் நந்தலாலா படத்துக்கான இளையராஜாவின் நேர்காணலைக் காணும் வரை.

"வெட்டியில ஊரைச் சுத்தும் வேலையத்த மகனும் உண்டு
வெட்டிப் பய என்னை போல எத்தனையோ பேரும் உண்டு
கெட்டுப் போன மகளும் உண்டு
தட்டுக் கெட்ட தங்கையும் உண்டு
கேடு கெட்ட தந்தையும் உண்டு
கூறு கெட்ட தாரமும் உண்டு
கெட்டுப் போன தாயி இல்லையடி ஆத்தா
கெட்டுப் போன தாயி எங்கும் இல்லவே இல்லை"

இப்பாடலையும் இளையராஜா தான் எழுதியிருப்பார் என நினைக்கிறேன், ஆனால் அதை இணையத்தில் இருந்து உறுதி செய்து கொள்ள முடியவில்லை. ஆதிசங்கரரின் ஸ்லோகம் ஒன்றினால் இன்ஸ்பையர் ஆகி இப்பாடல் வரிகளை எழுதியிருப்பார் போலும்.

Vidhera gnanena dravina virahena alasathaya,
Vidheyasakya thaw thava charanayor yachyathirabhooth,
Hadethath kshanthavyam anani sa kalodharini shive,
Kuputhro jayetha kwachidapi, kumatha na bhavathi.

I forgot to salute your feet due to ignorance of rules,
In search of money, being lazy and inefficient.
Oh, mother of all the world and giver of all that is good,
It is easy for you to excuse me,
For a bad son may be born but there can be no bad mother.

என் அறியாமையின் காரணமாகவும், பொருள் தேடுவதில் முனைப்பாக இருந்ததினாலும், என்னுடைய சோம்பலின் காரணமாகவும் உலகத்தை எல்லாம் காக்கும் அன்னை உன்னை வழிபட தவறிவிட்டேன், என்னை மன்னிப்பது உனக்கு எளிதானது, ஏனெனில் கெட்ட மகன் ஒருவன் இருக்கலாம் ஆயினும் கெட்ட தாய் என்றொருவள் இருக்க முடியாது.

"இளையராஜா என் குரு" என்ற தலைப்பில் பதிவெழுத தலைப்பும் எழுத மேட்டரும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரம் தான் இன்னும் அமையவில்லை என எண்ணுகிறேன். தலைவர் ஒவ்வொரு முறையும் பேசும் போது அவரிடமிருந்து கற்றுக் கொள்ள எப்போதும் ஏதாவது ஒன்று இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு நல்லாசானைப் போல இம்முறை என்னுடைய ஐயத்தையும் தீர்த்து வேறு வைத்திருக்கிறார்.
"பொன்னைப் போல ஆத்தா" பாடல் வரிகளுக்கான பொருள் புரிந்தது. ஆனால் தான் பெற்ற குழந்தையையே குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டு அனாதையாக்கிச் செல்லும் தாய்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களை ஏன் மோசமான அல்லது கெட்ட தாய் என்று கூற முடியாது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை...தேடல் மீண்டும் தொடர்கிறது.

Sunday, July 25, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு நிறைவு பகுதி...

இரண்டாம் பகுதி

முதல் பகுதி

2008 ஆம் ஆண்டு ஜூலை மாசம் 12 ஆம் தேதி - திப்பசந்திராவில் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அந்த பூங்காவுக்கு முதன் முதலா நான் போன நாள். காரணம், அதுக்கு சில நாளுங்களுக்கு முன்னாடி தான் புகைப்படக் கலை பிதாமகர் "ஜீவ்ஸ் அண்ணாச்சி"யின் ஆற்றுபடுத்துதலின் பேரில் Panasonic Lumix DMC-FZ18 கேமரா வாங்கியிருந்தேன். முன்னே வச்சிருந்த Canon Ixusஐ விட இந்த கேமராவில் வசதிகள் அதிகம், ஜூம் செய்யும் திறனும் அதிகம். "நீ புரொபஷனல் குரியர் ஆயிட்டே...DSLR வாங்கிக்க"ன்னு பயங்கரமா உற்சாகம் குடுத்ததும் அவரே தான். ஆனா DSLR வாங்கி படம் பிடிக்கற அளவுக்கு நான் இன்னும் வளரலியோன்னு எனக்கு ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருந்தது. அதனால சாதாரண பாயிண்ட் அண்ட் ஷூட் கேமராவுக்கும் உயர்தர DSLR கேமராவுக்கும் இடைபட்ட Prosumer கேமராவான பேனசானிக் கேமராவைத் தேர்வு செய்தேன். அந்த கேமராவைப் பழ(க்)குவதற்காகப் படங்களை எடுக்கலாம் என்று எண்ணி அன்னிக்கு அந்த பூங்காவுக்குப் போனேன்.

ஜூலை மாசம் 12 ஆம் தேதி ஒரு சனிக்கிழமை. அப்போ தங்கமணியும் பெங்களூர்ல தான் இருந்தாங்க. ஏன்னா வளைகாப்பு ஜூலை 18ஆம் தேதி சென்னையில் எங்க வீட்டில் நடந்தது. அதுக்கப்புறம் தான் அவங்களை அவங்க வீட்டுக்குக் கூட்டிட்டு போயிட்டாங்க. தங்கமணி ஊர்ல இருந்தப்போ நான் பூங்காவுக்கு எப்படி தனியாப் போனேன்னு ஞாபகம் வரமாட்டேங்குது. ஏன்னா நான் பார்க்கனும்னு நினைச்சிட்டிருந்த சில இடங்களுக்கு, மக்கள் போன சில டூர்களை மிஸ் பண்ணியிருக்கேன் - உதாரணத்துக்கு ஜீவ்ஸ்/சிவிஆர்/சிபி ஆர்கனைஸ் பண்ண இம்சை அரசி அவங்களோட திருமணம் கம் கொல்லிமலை டூர், அப்புறம் எங்க ஆஃபிஸ்ல ப்ராஜெக்ட் சார்பாக ஆர்கனைஸ் செய்யப்பட்ட மசினகுடி டூர். உண்மையிலேயே மலை சார்ந்த குறிஞ்சி திணை இடங்களைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் என்றாலும், என்னமோ போகனும்னே தோனலை...பொண்டாட்டி பிரசவத்துக்குப் போகப் போற சமயத்திலே "விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்"னு தான் இருந்துச்சு:) இதே காரணத்துக்காகவே ஆபீசில் ஏற்பாடு செய்திருந்த இன்னொரு டூருக்கும் நான் போகலை. அதனால எனக்கு கொஞ்சம் கெட்ட பேரு...இப்போ சமீபத்துல ஒரு கெட் டுகெதர் ஒரு ரிசார்ட்ல ஆர்கனைஸ் பண்ணியிருந்தாங்க. எங்க ப்ராஜெக்ட் மேனேஜர் "நீ இதுக்காச்சும் வருவே இல்லை"ன்னு ஒரு சந்தேகத்தோட கேட்டார், நான் ஏதோ வேணும்னே அவாய்ட் பண்ண மாதிரி. ஆனா அந்த நேரத்துல டூர் போகறதை பத்தி யோசிச்சு கூட பார்க்க முடியலை, மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமும் படலை.

மாலை ஆறு மணி போல அந்த பூங்காவுக்கு நான் போனேன். அது புகைப்படம் எடுக்கறதுக்கு ஏத்த சமயம் கெடையாது. வெளிச்சம் கம்மியா இருந்ததுனால படங்கள் அவ்வளவு திருப்திகரமா வரலை. உடனே ஜீவ்ஸ் அண்ணாச்சிக்கு ஃபோன் பண்ணி 'background blur' எல்லாம் வரலைன்னு வருத்தப்பட்டு சொன்னேன். அவரு "அட! என்ன நீரு இப்போ தான் கேமரா வாங்கிருக்கீரு...அதுக்குள்ள எல்லாம் வந்துருமா? முயற்சி பண்ணிக்கிட்டே இருங்க ஓய்"னு ஆறுதல் சொன்னாரு. அவரு சொன்னதை கேட்டதும் கொஞ்சம் தெம்பா இருந்துச்சு. வெளிச்சம் கம்மியா இருந்தாலும், வானத்தை நோக்கிப் பார்த்தா ஓரளவுக்கு வெளிச்சம் ஓகேவா இருக்கற மாதிரி இருந்துச்சு. சரி கேமராவோட 18x ஜூமைப் பரிசோதிச்சுப் பார்த்துடுவோம்னு நிலாவை படமெடுத்தேன். நிலவிலிருக்கும் craterகள்(பள்ளங்கள்) கூடத் தெரிஞ்சது. மனசுக்குச் சந்தோஷம் தர்ற ஒரு படம் கெடைச்சுச்சு. அது மேலும் நல்ல படங்கள் எடுக்க ஊக்கமா அமைஞ்சது.


அந்த நேரம் பார்க்ல ஒரு பையன் சைக்கிள் ஓட்டிக்கிட்டு இருந்தான். "அங்கிள் ஒன் ஃபோட்டோ" என்றான். நானும் ஒரு படம் எடுத்தேன். படம் எடுக்கிறேன் என்று தெரிந்ததும் சைக்கிளில் சுற்றி சுற்றி வந்து போஸ் கொடுத்து சைக்கிள் ஓட்டுவது போல படம் எடுக்கச் சொன்னான். யாரையாச்சும் உங்களை படம் எடுக்கட்டுமான்னு கேக்கறதுக்கு எனக்கு எப்பவுமே ஒரு தயக்கம் இருக்கும். தானாகவே வர்ற வாய்ப்பை எதுக்கு விடனும்னு நானும் நிறைய படங்களை எடுத்தேன். நான் ஃபோட்டோ எடுப்பதை தெரிந்து கொண்டு அந்த பையனின் நண்பர்கள் சில பேரும் வந்து ஃபோட்டோ எடுக்க போஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள். டிஜிட்டல் கேமராவில் ஃபோட்டோ எடுத்து விட்டு, எடுத்த படத்தை அவர்களுக்கு LCD திரையில் காண்பிக்க வேண்டும். அதை பார்த்து விட்டு அவர்கள் மகிழ்வார்கள், அவங்க மகிழ்ச்சியை பார்ப்பதில் நமக்கு ஒரு மகிழ்ச்சி. எனக்கு எப்போதுமே கேமரா முன்னே நிற்பதை விட, கேமராவுக்குப் பின்னே நின்று புகைப்படம் எடுப்பதில் நாட்டம் அதிகம். அதிலும் குழந்தைகளைப் புகைப்படம் எடுப்பது இன்று வரை எனக்கு சவாலாகவே இருந்து வருகிறது. ஏனெனில் அவர்களுடைய அசைவுகள் மின்னல் வேகத்தில் இருக்கும். அதற்கேற்றாற் போல படம் எடுப்பது என்பது என்னை பொறுத்த வரை மிகவும் சவாலானது மற்றும் சந்தோஷம் அளிக்கும் விஷயம்.





அன்று நான் எடுத்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது இந்த படம் தான். அக்குழந்தையின் முகத்தில் தெரியும் innocence(வெகுளித்தனம்) தான் அதற்கு காரணம் என நினைக்கிறேன். அன்று நிலவை புகைப்படம் எடுத்தபோது எந்தளவு மகிழ்ச்சி அடைந்தேனோ அதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி இந்த பிள்ளை நிலவைப் புகைப்படம் எடுத்த போது கிடைத்தது. கேமராவின் ஆட்டோ மோடில் ஃப்ளாஷ் உபயோகித்து எடுத்த படம் இது.


வீட்டுக்குப் போனதும் நான் எடுத்த படங்களைத் தங்கமணிக்கும் காட்டினேன். அவங்களும் சந்தோஷப் பட்டாங்க. அதுக்கப்புறம் ஜூலை 18ஆம் தேதி வளைகாப்பு முடிஞ்சதும் அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டாங்க. இந்த நேரத்துல ஒரு சின்ன கிளை கதை ஓட்டுவோம். உலகத்துலேயே அதிக பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரினம் எதுன்னு சொல்லுங்க பார்க்கலாம்? கரப்பான் பூச்சி. பல கோடி ஆண்டுகளா இந்த உயிரினம் தன்னை தானே மேம்படுத்திக்கிட்டே வந்துருக்காம், தனக்கு ஏற்படக் கூடிய எல்லாவிதமான தடங்கல்களையும் சமாளிக்கிறதுக்காக மிகவும் evolve ஆன உயிரினம் அது. ஜப்பான் நாட்டில் ஹிரோஷிமா நாகசாகியில அணுகுண்டு வீசப்பட்டு பல லட்சம் மக்கள் மாண்ட போதும் அந்நகரில் வாழ்ந்த கரப்பான்பூச்சிகள் மட்டும் மடியவில்லையாம். அப்படின்னா அது எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும் யோசிச்சிப் பாருங்க. அப்பேர்ப்பட்ட கரப்பான் பூச்சிக்கே தாய்க்குலத்தைப் பார்த்தா பயம் போலிருக்கு. நமக்கு இருக்கற மாதிரியே கரப்பான்களுக்கும் கரப்பான் இனத்து தாய்க்குலத்து கிட்ட பயம் இருக்கும், அது இயல்பானது தான் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை.

ஆனா அதுங்களுக்கு மனித இனத்தின் தாய்க்குலத்தின் மீது அதை விட பயம் போல இருக்கு. ஏன்னா தங்கமணி வீட்டுல இருக்கற வரைக்கும் கரப்பான்பூச்சி வீட்டுல இல்லை. அவங்க அந்தாண்ட போனதும் வீட்டுக்குள்ளே குட்டி குட்டியா நிறைய கரப்பான்பூச்சிகள் வந்து சேர ஆரம்பிச்சது. இதுக்கே வீட்டை நான் சுத்தமா தான் வச்சிருந்தேன். பனீர்ல(பாலாடை கட்டி) போரிக் ஆசிட் பவுடரை(Boric Acid) சிறு சிறு உருண்டைகளா சேர்த்து உருட்டி வச்சா அதை சாப்பிட்டுட்டு கரப்பான் பூச்சிகள் எல்லாம் செத்துடும்னு யாரோ சொன்னதை கேட்டு அதையும் செய்து பார்த்தேன். ஆனா ப்ரேக்ஃபாஸ்டுக்கும் லஞ்சுக்கும் "பனீர் பட்டர் மசாலா" சாப்பிடற மாதிரி கரப்பான் பூச்சிகள் எல்லாம் சாப்புட்டு கொழுத்த மாதிரி தெரிஞ்சதே தவிர ஒழிஞ்ச மாதிரி தெரியலை. அதுங்க பாட்டுக்கு ஜாலியா வீட்டுல அங்கேயும் இங்கேயும் சுத்தி வந்ததுங்க, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கலை. ஹ்ம்ம்ம்....கரப்பான்பூச்சிகளுக்குக் கூட நம்ம மேல பயம் இல்லை...அதுங்களுக்குக் கூட தெரிஞ்சிருக்கு இவன் ஒரு டம்மி பீஸ்னு.

இப்படியே கரப்பான்களோட உலகப் போரை நடத்திக்கிட்டு ஆஃபிசுக்கும் போய்க்கிட்டுன்னு இப்படியே சில தினங்கள் கழிஞ்சது. ஜூலை மாசம் 24ஆம் தேதி ஒரு ஐடியா தோனுச்சு, இருட்டுற வேளையில சில நாட்களுக்கு முன்னாடி போன அந்த பூங்காவுக்குக் கொஞ்சம் வெளிச்சம் இருக்கும் போதே போனா என்னன்னு. அதனால அன்னிக்கு நாலு மணிக்கே ஆஃபீசுலேருந்து கெளம்பி வீட்டுக்குப் போய் கேமராவை எடுத்துக்கிட்டு பூங்காவுக்குப் போனேன். கிட்டத்தட்ட அஞ்சு மணி இருக்கும். ஆனா பெருத்த ஏமாற்றம். குழந்தைகள் யாரும் அப்போ இல்லை. அப்படியே கொஞ்ச நேரம் அங்கேயே சுத்திக்கிட்டு இருந்தேன். போன முறை நான் பார்த்த குழந்தைகள்ல சிலர் அஞ்சரை மணிக்கு வந்தாங்க. ஆனா அவங்க பாட்டுக்கு வெளையாடிக்கிட்டு இருந்தாங்க. என்னை ஃபோட்டோ எடுக்கச் சொல்லி யாரும் கேக்கலை. ஆஃபீசுலேருந்து சீக்கிரம் வந்தும் பயன் இல்லையேன்னு கொஞ்சம் ஏமாத்தமா தான் இருந்துச்சு. அப்போ அன்னைக்கு நான் படம் எடுத்த போது இருந்த நெட்டையான ஒரு பொண்ணு "அங்கிள்! எங்களை படம் எடுக்கறீங்களா?"ன்னு ஆங்கிலத்துல கேட்டுச்சு. சரி, எடுக்கறேன்னு ஒத்துக்கிட்டதும் தான் தாமதம், தன்னோட மூனு தோழிகளை அழைச்சுக்கிட்டு வந்துடுச்சு.

கீழே இருக்கற படங்கள் எல்லாம் மிக மிக இயல்பா, spontaneousஆ அந்த குழந்தைகள் போஸ் கொடுக்க கொடுக்க நானா எடுத்தது. அப்படி நில்லுங்க, இப்படி பாருங்கன்னு நான் எதுவுமே சொல்லலை. அவங்க எப்படி விருப்பப் பட்டு எடுக்கனும்னு நெனைச்சாங்களோ அது மாதிரி தான் நான் எடுத்தேன். ஒவ்வொரு படம் எடுத்ததும் அதுல ஒரு வாண்டு ஒடி வந்து "அங்கிள்! தோசி" அப்படின்னு கன்னடத்துல சொல்லி கேமராவைப் பிடிச்சு இழுக்கும். நானும் எல்சிடி திரையில நான் அவங்களை எடுத்த படங்களைக் காட்டுவேன். அதாவது "தோசி" அப்படின்னா கன்னடத்துல கேமராவைக் காட்டச் சொல்லி கேக்கறதுன்னு அப்புறமா தெரிஞ்சுக்கிட்டேன். உக்காந்துக்கிட்டு, படுத்துக்கிட்டு, புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி இப்படின்னு பலவிதமான போஸ் கொடுத்தாங்க அந்த குழந்தைங்க. வெளிச்சம் கம்மியாயிட்டதனாலயும், அந்த கேமரா எனக்கே புதுசுங்கிறதுனாலயும் நான் எடுத்த நிறைய படங்கள் அவ்வளவு நல்லா வரலை. அன்னிக்கு நான் எடுத்ததுல ஓரளவுக்கு சுமாரான படங்களைக் கீழே போட்டுருக்கேன்.




அந்த தோழிகள் நாலு பேரும் ரொம்ப இயல்பா, எந்த கவலையும் இல்லாம, சந்தோஷமா புகைப்படத்துக்குப் போஸ் கொடுத்ததை பாத்தப்போ எனக்கு பிரம்மா படத்துல வர்ற "இவள் ஒரு இளங்குருவி எழுந்து ஆடும் மலர்க்கொடி" அப்படிங்கிற பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. குறிப்பா ஏன் அந்த பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சுன்னு இப்போ யோசிச்சா ஒரு விதமான "free spirit" அந்த குழந்தைகளிடம் பாக்க முடிந்ததாக நினைவு. இதுக்கு மேல இதை எப்படி விளக்குறதுன்னு தெரியலை. அதோட எட்டாம் வகுப்பு ஆங்கில துணைப்பாடத்துல படிச்ச "The Little Women" அப்படிங்கிற சுருக்கப்பட்ட புதினமும்(abridged novel) நியாபகத்துக்கு வந்தது. லூயிஸா எம்.ஆல்காட்(Louisa M.Alcott) என்ற எழுத்தாளர் நூற்றி நாற்பது வருடங்களுக்கு முன்னர் எழுதிய நாவல் அது. அந்த கதையில நாலு பெண்கள் இருப்பாங்க - மெக்(Meg), ஜோ(Jo), பெத்(Beth) மற்றும் ஏமி(Amy). சகோதரிகளான அந்த நாலு பெண்களுக்கு நடுவில் நடக்கும் கதையே அந்த புதினம். பாசம், கோபம், துரோகம்னு பல விதமான உணர்ச்சிகள் அந்த கதையில் சொல்லப் பட்டிருந்ததாக நினைவு. அந்த கதையோட ஞாபகம் இருக்குன்னு யோசிச்சு பார்த்தா, மைக்கேல மதன காமராஜன் படத்துல காமேசுவரன் கமல் சொல்லுவாரே "எனக்கு அக்கா கெடையாது, தங்கச்சி கெடையாது"ன்னு அதே மாதிரி தான் எனக்கும்...ஒரு வேளை அக்கா, தங்கச்சி உள்ள குடும்பங்கள் இப்படி தான் இருக்குமோங்கிற ஆர்வத்தை அந்த நாவல் தூண்டி இருக்கலாம்.

இப்படி அவங்களோட அந்த நட்பைப் பார்த்ததும் என் மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை குலைப்பது போல ஒரு சம்பவம் நடந்தது. போட்டோ எடுத்துக் கொள்ளும் மும்முரத்தில் தோழிகள் நால்வரும் ஒருவரை ஒருவர் முந்தி நின்று படம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். அதில் ஒரு பெண் தான் முன்னால் நிற்க வேண்டும் என்று அடம்பிடிக்க மற்ற தோழிகள் அதற்கு ஒத்துக் கொள்ளாமல் போக அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. கன்னடத்தில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு "தூ தூ" என்று துப்பிக் கொண்டு சண்டை போட்டுக்க ஆரம்பிச்சிட்டாங்க. முன்னால் நிற்க வேண்டும் என்று அடம்பிடித்த பெண் கோவித்துக் கொண்டு போய்விட்டாள். எனக்கு மனசுக்கு மிகவும் கஷ்டமாய் போய்விட்டது. "ஃபோட்டோ எடுக்கறேன்னு ஆரம்பிச்சதுனால தானே ஒத்துமையா விளையாடிட்டு இருந்த அந்த தோழிகளுக்குள் சண்டை வந்தது, அவர்களுக்குள் பிரிவினை வர நான் காரணமாகி விட்டேனே" என்ற குற்றவுணர்ச்சிக்கு நான் ஆளானேன். எனக்கு கன்னடம் ஓரளவுக்குப் புரிந்தாலும் பேச வராததால் அவர்களுக்குப் புரியும் வகையில் ஆங்கிலத்தில் "Please don't fight" என்று சமாதானப் படுத்த முயற்சி செய்தேன். மற்ற மூவரும் அதை பற்றி கவலை படவில்லை. "எங்க மூனு பேரையும் ஃபோட்டோ எடுங்க" என்று போஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

திடீர் என்று என்னை முதன் முதலில் ஃபோட்டோ எடுக்கச் சொன்ன நெட்டையான அந்த பெண், "ஒன் மினிட்" என்று சொல்லிவிட்டு ஓடினாள். சண்டையிட்டு விட்டுச் சென்ற தங்களுடைய அந்த தோழியை எங்கிருந்தோ கூட்டிக் கொண்டு வந்தாள். கோபித்துக் கொண்டு போன அந்தப் பெண் அழுதிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே மற்ற மூவரும் சேர்ந்து "சாரி" சொல்லி சமாதானப் படுத்தினார்கள். ஒரு படி மேலே போய் அவளுக்கு முத்தமிட்டு சமாதானப் படுத்தினார்கள் இருவர்.


ஒரு வழிப்போக்கனாய், ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்தாலும் அந்த நேரம் அங்கிருந்து அந்த "little women" நால்வருக்கிடையில் நடந்த அந்த நிகழ்வுகளைப் பார்த்தது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. என் குற்ற உணர்வில் இருந்தும் நான் விடுபட்டேன். அதன்பிறகும் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு சிலையின் மீது ஏறி நின்று போஸ் கொடுத்தார்கள். இதுவும் நான் எடுத்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று.


அதன் பிறகு அவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். எந்தெந்த வகுப்பில் படிக்கிறார்கள், அவர்களுக்குத் தமிழ் தெரியுமா என்றெல்லாம்.
ஒவ்வொரும் ஒவ்வொரு வகுப்பு நெட்டையான அந்த பெண் மட்டும் தான் ஐந்தாம் வகுப்பு, மற்ற வாண்டுகள் எல்லாம் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு இப்படி தான். தமிழில் அவர்களுக்கு ஒரு சில வார்த்தைகளே தெரிந்திருந்தது. அதன் பின்னர் "உங்க பேரை எல்லாம் சொல்லுங்க" என்றேன் நான். "ராஜேஸ்வரி" என்றாள் நெட்டைப் பெண். "நௌஷீன் ஃபாத்திமா" என்றாள் சண்டையிட்டுக் கொண்டு சென்ற அந்த பெண். "ரம்யா" என்றாள் தோசி தோசி என்று கேமராவைப் பிடுங்கிய அந்த பெண். நாலாவது பெண்ணும் தன் பேரைச் சொன்னாள், ஆனால் எனக்கு அது தற்போது நினைவில் இல்லை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை "என் பேரு பிரதீபா அங்கிள், நான் சும்மா சொன்னேன்" என்றாள் அந்த நெட்டைப் பெண். அவள் சொன்னதைக் கேட்டதும் மற்ற பெண்களும் தாங்கள் சொல்லிய பெயர் தங்கள் உண்மையான பெயர் இல்லையென்று தங்கள் பெயர் வேறு என்று வெவ்வேறு பெயரைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்றும், அவர்கள் முதலில் சொல்லிய பெயர் தான் அவர்களுடைய உண்மையான பெயரென்றும் எனக்குத் தெரியும். ஏனென்றால் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுக்கும் போது ஒருவரை ஒருவர் கூப்பிடும் போது அவர்கள் பெயரை நான் ஏற்கனவே கேட்டிருந்தேன். நான் பெயரைக் கேட்டதன் நோக்கம் நான்காவது பெண்ணின் பெயர் ரொம்பவும் வித்தியாசமாக இருந்தது...அது என்ன என்று உறுதிபடுத்திக் கொள்வதற்காகத் தான்.

அந்த நேரம் பார்த்து தங்கமணி சென்னையிலிருந்து என்னை என் கைபேசியில் இருந்து அழைத்தார். நான் பார்க்கில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். ரம்யா என்ற வாண்டு "யார் அங்கிள்" என்று கேட்டாள். என்ன சொல்வது என்று புரியாமல் "ஆண்ட்டி" என்றேன். தெளிவாகப் புரிய வைப்பதற்காக "நன்ன ஹெண்ட்தி"(என் மனைவி) என்றேன். உடனே கைபேசியை என் கையில் இருந்து பிடுங்க ஆரம்பித்து விட்டாள். சரி என்று கைபேசியை அவளிடம் ஒப்படைத்தேன். அவளும் தங்கமணியுடன் சில நிமிடங்கள் எதோ பேசிக் கொண்டிருந்தாள், "யெஸ் ஆண்ட்டி", "நோ ஆண்ட்டி" என்று மட்டும் பதில் வந்து கொண்டிருந்தது. அதன் பிறகு நால்வரிடமும் என் செல்பேசி கைமாறி விட்டு ஒரு ஐந்து நிமிஷத்துக்கு அப்புறம் என் கைக்குத் திரும்ப வந்தது. அவர்கள் பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு சில நிமிடங்களில் அந்த பெண்களின முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அப்படி என்ன தான் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற ஆர்வம் தாங்க மாட்டாமல் "அப்படி என்ன தான் பேசிட்டு இருந்தீங்க" என்று தங்கமணியைக் கேட்டேன். "ஒன்னுமில்லை...சும்மா ஜெனரலாத் தான்" என்றார்கள். சும்மா ஜெனரலாப் பேசுனதுக்கா அவர்களின் முகங்களில் அவ்வளவு பூரிப்பு என்று எனக்கு ஒரு ஆச்சரியம். அப்புறம் தான் இந்த மரமண்டையில் உரைத்தது - பெத்த புருஷனாவே இருந்தாலும்...சே...கட்டுன புருஷனாவே இருந்தாலும் ஒரு girl-to-girl talkஇலோ or for that matter ஒரு girl-to-woman talkஇலோ உடம்பில் Y க்ரோமோசோம்கள் கொண்டவர்களுக்கு இடமில்லை என்ற உண்மை :)

அதன் பிறகு அந்த பெண்கள் என்னிடம் பேச ஆரம்பித்தார்கள். "அங்கிள்! என் உண்மையான பெயர் ராஜேஸ்வரி தான்" என்றாள் நெட்டைப் பெண். அவள் தான் அந்த நால்வருக்கும் கேங் லீடராக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் அவ்வாறு சொன்னதும் மற்ற மூவரும் தாங்கள் என்னிடம் முன்னர் தெரிவித்த பெயர் தான் தங்கள் உண்மையான பெயர் என்று சொன்னார்கள். அவர்கள் பேசியதை கேட்டது என்னை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் சென்றது. முதலில் ஏன் பொய்யான பெயரைச் சொன்னார்கள் என்று கேட்க எனக்கு அப்போது தோன்றவில்லை. அதாவது ஃபோட்டோ எடுக்கும் என்னுடைய பின்புலத்தைப் பற்றித் தெரியாத காரணத்தால் முதலில் உண்மையான பெயரைச் சொல்லியதை மாற்றிச் சொல்லியதாகவும், பின்னர் நான் திருமணமானவன் என்றும் என்னை நம்பியும் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டதும் ஆணான என் மீது அவர்களுக்கு ஒரு நம்பகத் தன்மை தோன்றியதாகவும் நானே யூகித்துக் கொள்கிறேன். எது எப்படியோ எட்டு ஒன்பது வயதே நிரம்பிய அக்குழந்தைகளின் "defence mechanism" கண்டு நான் மலைத்துப் போனேன் என்பது உண்மை.

இதே போல சமீபத்தில் சென்னையில் எங்கள் வீட்டுக்கு அருக்கில் என் நண்பன் திருமுருகனும் நானும் இதை போலவே அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கேட்டார்கள் என்று ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்தோம். ஒரு பெண் மட்டும் "ஏன் ஃபோட்டோ எடுக்கறீங்க" என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். அவளும் ஃபோட்டோவுக்குப் போஸ் கொடுத்தாள் என்றாலும் "சும்மா தான் நீங்க கேட்டீங்கன்னு எடுக்கறோம்" என்று நாங்கள் அளித்த பதில் அவளுக்கு அவ்வளவு திருப்தியாய் இருக்கவில்லை. காலம் கெட்டுக் கிடக்கும் இந்த வேளையில் முன் பின் தெரியாதவர்களிடம்(குறிப்பாக ஆண்களிடம்) அந்த பெண் குழந்தைகள் என்னுடைய பின்புலம் பற்றி தெரியாத போது தங்கள் உண்மையான பெயர் சொல்லாமல் இருந்தது சரி தான் என்று கொண்டாலும், ஒரு முன்னாள் பேச்சிலன்(ர்) என்ற முறையில் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் கல்யாணம் ஆகாமல் இருக்கும் இளைஞர்கள் எல்லாரும் அயோக்கியர்களும் இல்லை, கல்யாணம் ஆன ஆண்கள் எல்லாரும் உத்தமர்களும் இல்லை. அப்போ யார் நல்லவன், யார் கெட்டவன் என்று எப்படி அடையாளம் கண்டு கொள்வது? என்னிடம் அதற்கான விடையில்லை. சண்டையிட்டு பிரிந்து சென்ற தோழியை சமாதானப் படுத்தி அழைத்து வரச் சொல்லித் தூண்டிய இயற்கையே "Raghavan Instinct" மாதிரி ஒரு instinctஐத் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள அக்குழந்தைகளுக்கு அருளும் என்று நம்புவோமாக.

இந்தப் படங்களை எடுத்து, சில நாட்களுக்கு அப்புறம் Flickr வலைதளத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். அங்கு நான் பெரிதும் மதிக்கும் "Light and Life" என்ற பெயரில் தான் எடுக்கும் புகைப்படங்களை வலையேற்றும் திரு.முரளி எனும் நண்பர் பெங்களூரு மடிவாலா காய்கறி சந்தையில், காய்கறி விற்பவர்களைத் தான் எடுத்திருந்த புகைப்படங்களை வலையேற்றி இருந்தார். சில நாட்களுக்குப் பிறகு தான் எடுத்தப் படங்களைப் ப்ரிண்ட் போட்டு தான் படம் எடுத்தவர்களிடம் அப்படங்களைக் கொடுக்கும் போது மேலும் சில படங்கள் எடுத்து அதனையும் வெளியிட்டிருந்தார். படத்தைப் பெற்றுக் கொண்டவர்களின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. "சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை சந்தோஷப் படுத்திப் பார்ப்பது" என்று அவரே தன்னுடைய தளத்தில் சொல்லியிருந்ததைப் பார்த்ததும் "அட! இந்த ஐடியாவை நாமும் காப்பி அடிக்கலாமே"ன்னு தோனுச்சு. முரளி அவர்களின் படங்களை கீழே உள்ள சுட்டிகளில் காணலாம்.

http://www.flickr.com/photos/murali-art/2881332696

http://www.flickr.com/photos/murali-art/2896947339

http://www.flickr.com/photos/murali-art/2877215473

http://www.flickr.com/photos/murali-art/2896946339

நானும் அதே மாதிரி நான் எடுத்த படங்களைப் ப்ரிண்ட் போட்டேன். ப்ரிண்ட் போட்டுக் கொண்டு அந்த குழந்தைகளைச் சந்திக்கலாம் என்று நான் நினைத்தது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை. காரணம் அதன் பிறகு ஓரிரு வாரங்கள் தொடர்ச்சியாக மாலை வேளைகளில் மழை பேய்ந்ததால் குழந்தைகள் யாரும் பூங்காவுக்கு வரவில்லை. ஒரு நாள் ஆஃபிசிலிருந்து நாலரை மணிக்கே கிளம்பி பூங்காவுக்குச் சென்று ஏழு மணி வரைக்கும் காத்திருந்து பார்த்த போதும் யாரும் வரவில்லை...அப்போது செப்டம்பர் மாதம் துவங்கியிருந்தது...ஒரு வேளை தசரா விடுமுறைக்கு எங்காவது ஊருக்குப் போய்விட்டார்களா என்று தோன்றியது. அதன் பிறகு மனைவி பிரசவத்திற்குச் சென்று விட்டதால், திப்பசந்திராவில் உள்ள வீட்டைக் காலி செய்து விட்டு கோரமங்கலாவில் உள்ள கம்பெனியின் தங்கும் விடுதிக்குச் செல்லும் நாள் நெருங்க ஆரம்பித்து விட்டது. நான் ப்ரிண்ட் போட்டு வைத்திருக்கும் படங்களைக் கொடுக்காமலேயே செல்ல நேரிடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். படங்களைக் கொடுப்பதற்காக நான்காவது முயற்சி ஒன்றை மேற்கொண்டேன். அன்றும் பூங்காவில் நான் அறிந்திருந்த குழந்தைகள் யாரும் இல்லை. பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

அப்போது அதிருஷ்டவசமாக ராஜேஸ்வரி என்ற அந்த பெண் பூங்காவுக்கு அருகில் இருந்த ஒரு வீட்டின் பால்கனியில் நின்று கொண்டு இன்னொரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். கீழே நின்று சைகை காட்டி அவளை கீழே வரச் சொன்னேன். முதலில் "வர மாட்டேன்" என்று தலையாட்டினாள். பின்பு என்ன நினைத்தாளோ தெரியவில்லை, தனியாகக் கீழே இறங்கி வந்தாள். "வாட் அங்கிள்" என்றாள். நான் ப்ரிண்ட் போட்டு எடுத்து வந்திருந்த படங்களை "ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று கொடுத்து விடு" என்று சொல்லி நான் படங்களைப் போட்டு எடுத்து வந்திருந்த கவரை அவளிடம் நீட்டினேன். அவள் படங்களை எடுத்துப் பார்த்து விட்டு "ஹவ் மச் அங்கிள்?" என்றாள். படங்களைப் பார்த்த மாத்திரத்தில் வெள்ளப் பெருக்கு போல அவள் முகத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்று எதிர்பார்த்திருந்த எனக்குச் சப்பென்றாகி விட்டது. "எனக்கு எதுவும் வேண்டாம். மறக்காமல் எல்லோருக்கும் ஒவ்வொரு படம் கொடுத்து விடு" என்று சொன்னேன். அவளும் "தாங்க்ஸ்" என்று சொல்லிவிட்டு அவளுடைய வீட்டுக்குள் ஓடி விட்டாள். முரளி அவர்கள் மடிவாலா மார்க்கெட்டில் பார்க்க முடிந்த மகிழ்ச்சியை நான் அந்த குழந்தைகளின் முகத்தில் கடைசி வரை பார்க்கவே முடியவில்லை.

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிய சில மாதங்களில் நடந்த நிகழ்வுகளை ஒருவாறாக எழுதி முடிச்சிட்டேன். அடுத்த பதிவு(எப்போ வருமோ!) வரும் வரை...அவ்ளோ தான்.

Saturday, July 10, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு பார்ட் டூ...

"பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு..." பதிவோட தொடர்ச்சி.

ஒரு மன்னிப்பு கேட்டுக்கிட்டு இந்தப் பதிவைத் துவங்கிக்கிறேன்...கிட்டத்தட்ட மூனு மாசத்துக்கு அப்புறம் இரண்டாம் பகுதி போடறதுக்காக. போன பதிவுக்கு தலைப்பை வைக்கும் போது அதை படிச்சவங்க பலரும் புரிஞ்சிக்கிட்ட மாதிரி ஒரு அர்த்தம் பதிவுல இருக்குன்னு சத்தியமா எனக்கு தோனவே இல்லை. ஒரு அப்பாவி கெடச்சதும் எல்லாரும் ஒன்னா சேர்ந்து ஓட்டி எடுத்துட்டாங்க. அதுலயும் கிட்டத்தட்ட ஒரு வருஷமா தலைமறைவா இருந்த 'மாயவரம் ஷேக்' அபி அப்பா "கேப்"புல கிடா வெட்டி ரெண்டு கமெண்டு போட்டுட்டாரு(ரெண்டும் ஒரே கமெண்ட் வேற). இருங்க அப்பாஜி...உங்களைத் தனியா கவனிச்சிக்கிறேன். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வராமலயா போகும்? இதுக்கு மேலயும் இந்தப் பதிவுக்கு "கேப்" விட்டா ரெண்டாவது புள்ளைக்கு "ஃபர்ஸ்ட் பர்த்டே"வும் கொண்டாடிடுவாங்கங்கிறதுனால கமெண்டுல பலரும் சொன்னா மாதிரி "இரண்டாம் குழந்தை" அது இதுன்னு எதுவும் இல்லைன்னு(இப்போதைக்கு) ஆணித்தரமா சொல்லிக்கிறேன் :) முதல் குழந்தையைப் பெறுவதற்காக அம்மணி ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தாய் வீட்டுக்குப் போனப்போ நடந்தவைக்களை நினைவு கூறுவதே இந்தப் பதிவுகளின் நோக்கம்.

பொண்டாட்டியைத் தாய் வீட்டுக்கு அனுப்புனதுக்கும் குழந்தை பிறக்கறதுக்கும் நடுவிலான இந்த இடைபட்ட காலத்தில் தான் பெரும்பாலான கணவன்மார்களுக்கு 'கொம்பு' முளைச்சது போல இருக்குமாம்னு "கொம்பு சீவும் மென்பொருள் நிறுவனங்கள்" ங்கிற தலைப்புல சமீபத்துல நடந்து முடிஞ்ச உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தான் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரையில சொல்லிருக்காரு நம்ம அம்பி. அதன் காரணமாகவே பன்னெடுங்காலமாக தாய் வீட்டுக்குச் சென்றிருக்கும் தன் மனைவி திரும்பி வரும் போது அவளுக்குத் துணையாக இருக்கட்டுமேங்கிற எண்ணத்தில் ஒரு 'சக கிழற்றியை' ஏற்பாடு செய்யும் வழக்கம் இருந்ததாம். ஆனா மனைவியான கிழற்றியும், துணையா இருக்கட்டுமேன்னு கொண்டு வரப்பட்ட சக கிழற்றியும், களத்தில் இறங்கி ஒருவருக்கு ஒருவர் குடுமிப்புடி சண்டை போடும் போது "சக களத்தி" ஆகி நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் "சக்களத்தி" ஆகி விடுகிறார்கள் என்று சொல்கிறது அம்பி அவர்களின் ஆய்வு.

ஆனா அந்த பழக்கம் இப்போ கணவர்கள் மத்தியில் வழக்கொழிஞ்சு போயிடுச்சாம். மேலும் டேமேஜர், அப்புரைசல், டிராபிக் ஜாம் இப்படின்னு எந்தவிதமான பிரச்சினைகளுமில்லாத ஒரு காலக்கட்டத்துக்கு ஏத்த சமூக வழக்கம் அது என்கிறார். இக்காலக்கட்டத்துக்கு அது ஒவ்வாதென்பதும் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்த பழங்கால சமூக முறையைப் பின்பற்றும் வாய்ப்பு வேலை பளுவின் காரணமாக அவர்களுடைய நிறுவனங்களாலேயே மறைமுகமாக மறுக்கப்பட்டு விடுவதாகவும், அதனால இந்த தொன்மையான தமிழர் பண்பாடு அழிந்துவிட்டதாகவும் சொல்றாரு. OMRனு பேர் உள்ள ரோடு சென்னையிலயும் இருக்கு, பெங்களூர்லயும் இருக்கு...ஆறு மணிக்கு மேல இந்த ரோட்டுல எந்த ஊர்ல மாட்டுனாலும் சரி, வீடு போய் சேர ரெண்டு மணி நேரம் ஆகும் அதுக்கப்புறம் எங்கேருந்து மேல சொன்னதெல்லாம் சாத்தியப்படும்னு தன்னுடைய ஆய்வை இந்த சமூகத்தை நோக்கிய ஒரு கேள்வியோட நிறைவு செஞ்சிருக்காரு அம்பி. அம்பியோட ஆய்வைப் பத்தி கருத்து சொல்லற அளவுக்குத் தகுதியோ அனுபவமோ இல்லாத காரணத்தால நான் என் சொந்தக் கதைக்கு நகர்ந்துக்கறேன் :)

கல்யாணம் முடிஞ்சதும் கிட்டத்தட்ட ஒன்னரை வருஷம் நானும் என் மனைவியும் பெங்களூரில்(2007-2008)இருந்தோம்...பழைய HAL ஏர்போர்ட் பக்கத்துல திப்பசந்திரா அப்படிங்கற இடத்துல தான் வீடு. கல்யாணத்துக்கு முன்னாடி தன்னோட வேலையைத் தானே செஞ்சிக்கனும், யாரையும் எதிர்பார்க்கக் கூடாது அப்படின்னு அம்மா சொல்லிக் குடுத்த நல்ல விஷயங்கள் எல்லாம் கல்யாணம் ஆன சில நாட்கள்லேயே மறந்து போயிடும் போலிருக்கு. காரணம், கல்யாணத்துக்கப்புறம் மனைவி கிட்ட நம்மோட சில பொறுப்புகளை ஒப்படைச்சிட்டு கொஞ்சம் ஃப்ரீ ஆகிடறோம். ஆனா தன்னோட வேலைகளை எப்போதும் தானே செஞ்சி பழகிக்கறது நல்லதுங்கிறது மனைவி பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகும் போது தான் உரைக்க ஆரம்பிக்குது. காலையில எழுந்து தானே டீ போட்டு குடிச்சிட்டு, துணியைத் துவைச்சு காய வச்சிட்டு, ஓட்ஸோ மேகியோ பொங்கித் தின்னுட்டு, சாயந்திரம் வந்து காய வச்ச துணிகளைக் கொடியிலேருந்து எடுத்து ஐயன் பண்ணக் குடுத்துட்டு, ராத்திரி சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம் இப்படின்னு யோசிச்சிக்கிட்டு, இதுக்கு நடுவால வீட்டுல யாருமில்லைங்கிற காரணத்தால மிஸ் ஆகிப் போகற குரியர்களும், ஃபோன் பில்களும், கேபிள் பில்களையும் எப்படியோ சரி பண்ணி...யப்பப்பா...பொண்டாட்டி பாத்து பாத்து நமக்காக எல்லா வேலைகளையும் செஞ்சு அனுபவிச்சு பழக்கப் பட்டுட்டு தனக்கு தானே ஹவுஸ் வைஃபா வேலை பாக்கறது ரொம்ப கஷ்டமான காரியம் தான்.

ஆயிரம் தான் சொல்லுங்க...இந்த பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்குப் போகற மாதிரி ஒரு சந்தோஷமான விஷயம் வேற எதுவும் இருக்காதுன்னு நெனக்கிறேன். பொறந்து வளர்ந்த இடம்ங்கிறதுனால அங்கே ரொம்ப சந்தோஷமாவும் பாதுகாப்பாவும் உணர்வாங்கன்னு நெனக்கிறேன். அதனால தான் முதல் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்குப் போகற வழக்கம் இருக்கும் போலிருக்கு. அதை நான் கண்கூடாவே பார்த்திருக்கறேன். பெங்களூர்ல இருக்கறப்போ ரெகுலர் செக்கப்புக்காக மாசா மாசம் டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போவேன். பொதுவா ஆட்டோவுல தான் போவோம். சில சமயம் அஞ்சு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற க்ளினிக்குக்கு டாக்சில கூட போயிருக்கோம். அப்போல்லாம் ஆட்டோ ஸ்பீட் பிரேக்கர்லயோ பள்ளத்துலயோ ஏறி இறங்கும் போது "வயிறு வலிக்கிற மாதிரி இருக்குங்க...கொஞ்சம் மெதுவா போகச் சொல்லுங்க"ன்னு சொல்லுவாங்க. நானும் ஆட்டோ டிரைவர் கிட்ட எனக்கு தெரிஞ்ச கன்னடத்துல "சொல்பா ஸ்லோ ஹோகி"ன்னு எதோ உளறி புரிய வைப்பேன். ஒன்பதாவது மாசத்துல பிரசவத்துக்கு ரெண்டு வாரமே இருக்கும் போது சென்னையில அவங்க அம்மா வீட்டுல இருக்கறப்போ ஒரு முறை செக்கப்புக்கு அதே மாதிரி கூட்டிக்கிட்டு போனேன். ரோடு ரொம்ப குண்டும் குழியுமா இருந்துச்சு. எதாச்சும் சொல்லுவாங்கன்னு எதிர்பார்த்தேன். ஒன்னுமே சொல்ல காணோம்.

ஆச்சரியம் தாங்க முடியாம "ரோடு ரொம்ப மோசமா இருக்கு, ஒன்னும் கஷ்டமா இல்லியா"ன்னு கேட்டேன். அதுக்கு அவங்க சிரிச்சிக்கிட்டே சொன்ன பதில் "பழகிப் போச்சுங்க". மூனாவது மாசத்துலேருந்து எட்டாவது மாசம் வரை பெங்களூரில் இருந்த போது ஒரு நாளும் "பழகிடுச்சு" என்ற வார்த்தை வெளியே வந்தது கெடையாது. நானும் ஒவ்வொரு வாட்டியும் ஆட்டோ டிரைவர் கிட்ட 'சொல்ப ஸ்லோ ஹோகி' னு சொல்ல மறந்தது கிடையாது. உண்மையிலேயே ஒன்பதாவது மாசத்துல ஆட்டோ பள்ளத்துல எறங்கும் போது வலி தெரியாம இருந்துருக்கலாம்...ஆனா முதல் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போனப்புறம் பொண்ணுங்களுக்கு ஒரு அசாத்திய தைரியம் வந்துடும்ங்கிறது என்னுடைய கணிப்பு. அது வரைக்கும் பார்த்து பயந்த எந்த கஷ்டமும் பெருசா தெரியாது போலிருக்கு, அவங்க முகத்துலயும் ஒரு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பார்க்கலாம். ஒரு வேளை அதனால தான் அந்த காலத்துல பெரியவங்க முதல் பிரசவத்துக்கு பொண்ணுங்க தாய் வீட்டுக்குப் போகனும்னு ஒரு முறையை ஏற்படுத்தி வச்சிருக்காங்களோ என்னவோ? எனக்கு ஏனோ என் மனைவியின் முதல் பிரசவத்தை என் கிட்ட வச்சி பார்க்கனும்னே இருந்துச்சு. மத்த சம்பிரதாயங்களைக் குத்தம் சொல்றவங்க கூட யாரும் முதல் பிரசவத்துக்குத் தாய் வீட்டுக்கு அனுப்பறதை பத்தி 'எதுக்கு இந்த தேவையில்லாத பழைய சம்பிரதாயங்கள்'னு சொல்லறது இல்லை. முதல் பிரசவம்ங்கிறது தாய்வீட்டுல நடத்தறதே நல்லதுங்கிற ஞானம் எனக்கு ஒரு ஆட்டோவில் பிறந்தது :)

இந்த காலத்துல பொறக்கற குழந்தைகளில் பெரும்பாலானவர்களுக்கும் பண்டைய ரோமானிய(Roman) அரசியலில் இருந்த ஒருவருக்கும் தொடர்பு இருக்குன்னு சொன்னா ஆச்சரியப் படுவீங்க தானே? என்னோட பொண்ணு அர்ச்சனாவுக்குக் கூட இந்த ரோமானியரோட ஒரு தூரத்து தொடர்பு இருக்கு. யாரு அந்த ரோமானியர்? சீசர்(Caesar). வெறும் சீசர் தான்...ஷேக்ஸ்பியரால் ஆங்கில இலக்கியத்தில் ஏத்தி வைக்கப்பட்ட ஜூலியஸ் சீசர்(Julius Caesar) கிடையாது. சரி யார் அவர்? அது என்ன தொடர்பு? ஜூலியஸ் சீசரோட முன்னோர்களில் ஒருவர்...அவரோட பேரும் சீசர் தான்னு சொல்றாங்க. அவர் தான் பெண்ணின் வயிற்றை மருத்துவ முறையில் அறுத்து பிறக்க வைக்கப்பட்ட உலகின் முதல் குழந்தைன்னு சொல்றாங்க. அதனால தான் இந்த மாதிரியான ஒரு அறுவை சிகிச்சைக்கு "Caesarean Operation" அல்லது சிசேரியன் செக்ஷன் அப்படின்னு பேரு. சீசர் வழி வந்ததால சீசரியன் ஆப்பரேஷன்னு தானே பேரு இருக்கனும் எதுக்கு 'சிசேரியன்' னு சொல்றாங்கன்னு இன்னும் புரியலை. முன்னொரு காலத்துல சிசேரியன் ஆப்பரேஷனோட ஸ்பெல்லிங் 'Scissorian Operation'னு நெனச்சிட்டிருந்தேன்:)

அர்ச்சனாவைப் பொறுத்த வரை அவ பொறக்கறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி செக்கப்புக்குப் போனப்போ கூட தங்கமணியோட உடல்நிலை நல்லாருக்கு, நார்மல் டெலிவரியே ஆகும்னு சொன்னாங்க. ஆனா அதுக்கு அடுத்த வாரம் செக்கப்புக்குப் போனப்போ குழந்தையைத் தாயின் வயித்துக்குள்ள பாதுகாப்பா வைத்திருக்க உதவும் amniotic fluid ரொம்ப குறைஞ்சுடுச்சு, உடனே ஆப்பரேஷன் செய்யனும் அப்படின்னு சொல்லிட்டாங்க. சிசேரியன் ஆப்பரேஷனோட பின்விளைவுகளை(காயம் ஆறும் போது ஏற்படும் வலி, வெயிட் தூக்கப் பிடாது, நடமாடப் பிடாது அப்படின்னு சில கட்டுப்பாடுகள்) நெனச்சி மனைவியும் நானும் தயங்குனப்போ "இது ப்ரைமி-Primy (ஒரு பெண்ணுக்குப் பிறக்கும் முதல் குழந்தை என்பதை குறிப்பிட பயன்படும் மருத்துவச் சொல்), பின்னால எதாச்சும் பிரச்சனை வந்துச்சுன்னா என்னை சொல்லக் கூடாது"ன்னு சொல்லிட்டாங்க. சரின்னு எங்க குழந்தை சீசரிய வழிப்படி பிறப்பதற்கு இருவரும் ஒப்பு கொண்டோம். கடைசி வரைக்கும் அந்த இறுதி செக்கப்பின் போது எடுக்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை எங்களுக்குத் தரவே இல்லை. இப்போ தரோம் அப்போ தரோம்னு ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பிட்டாங்க. நாங்களும் குழந்தை நல்லபடியா பொறந்த சந்தோஷத்துல அதை ஒரு பொருட்டா எடுத்துக்கலை. அப்புறமா தான் தெரிஞ்சுச்சு என் மனைவி அந்த மருத்துவமனையில் தங்கியிருந்த நான்கு நாட்களில் பிறந்த ஆறு குழந்தைகளுமே 'சீசரியன் குழந்தைகள்' என்று. ஆக பிரசவத்துக்கு மனைவியை சேர்க்கப் போற மருத்துவமனை மற்றும் பிரசவம் பார்க்கப் போகும் டாக்டரின் வரலாறையும் தீர விசாரித்துக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஞானம் என் குழந்தை பிறந்தப்போ எனக்கு பிறந்தது.

நிற்க. ஆக்சுவலி வாட் ஐ வாண்ட்டட் டு சே இஸ்...அதாவது...சொல்ல வந்த மேட்டர் இன்னும் சொன்ன பாடில்லை :( கிளை கதைகளே மைல் நீளத்துக்குப் போனதால அடுத்த பதிவுல பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்புனதுக்கப்புறம் ஏற்பட்ட சில மறக்க முடியாத அனுபவங்களைச் சொல்றேன். கண்டிப்பா போன பதிவைப் போல நாலு மாசம் இடைவெளி விழாதுன்னு நம்பறேன். அதோட நம்பிக்கை தான் வாழ்க்கைன்னும் சொல்லிக்கிறேன்...எனக்கு நானே:)

Monday, March 29, 2010

பொண்டாட்டியைப் பிரசவத்துக்கு அனுப்பிட்டு...

"பிரசவம்ங்கிறது ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒரு மறு ஜென்மம் மாதிரி" அப்படிங்கற உண்மை தமிழ்ப் படங்களைப் பார்க்கும் எந்தவொரு சராசரி ரசிகனுக்கும் தெரியும். ஒரு ஆணுக்குப் பிரசவம் குறித்த மெய்யும் பொய்யுமான பல விஷயங்களைப் போதிப்பது திரைப்படங்கள் தான் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். தமிழ்த் திரைப்படங்களில் பிரசவம் குறித்த காட்சிகள் பல விஷயங்களுக்காகப் பல விதங்களில் பயன்படுகிறது. உதாரணமாக கர்ப்பமாக இருக்கும் தங்கையின் வளைகாப்பில் அண்ணன் பாட்டு பாடுவதற்காகவும், தனக்கு பிறக்கப் போகும் குழந்தையை நினைத்து கதாநாயகன் பாடுவது போலவும், ஒரு காட்சியில் "மூன்று மாதம் முழுகாமல்" இருக்கும் கதாநாயகி அல்லது ஹீரோவுக்கு மிகவும் வேண்டப்பட்ட பெண்மணி அதற்கடுத்த காட்சியிலேயே "நிறைமாத கர்ப்பிணியாக மாறி" பிரசவ வேதனையில் துடிக்கும் போது, வில்லன்களின் தாக்குதலைத் துவம்சம் செய்து க்ளைமாக்ஸ் காட்சியில் அழகான குழந்தை பிறந்து "சுபம்" போடவும் உதவும். இவ்வளவு ஏன்...ஏதாவது ஒரு நடிகை கால்ஷீட் ப்ராப்ளம் செய்கிறார் என்றார் அவருடைய கதாபாத்திரத்தின் கதையை முடித்துக் கொள்ளவும் இந்த "பிரசவ மேட்டர்" உதவும். பிரசவம் குறித்த சில கலைச் சொற்களைக் கற்றுக் கொள்ளவும் சினிமா மிகவும் உதவுகிறது. உதாரணமாக மசக்கை, பச்சை உடம்புகாரி, வாயும் வயிறுமா இருக்கா, முழுகாம இருக்கா, மாசமா இருக்கா, இரட்டை நாடி, வவுத்து புள்ளைக்காரி போன்ற technical termsஐ எல்லாம் கற்றுக் கொள்ள சினிமாவை விட்டால் வேறு வழி ஏது? :)

சினிமா பிரசவங்கள் நகைப்புக்குரியதாய்த் தோன்றினாலும், நம் சொந்த வாழ்க்கையில் நமக்கு தெரிந்த/அல்லது வேண்டப்பட்ட ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறக்கப் போகிறது எனத் தெரியும் போது அவளுக்கு நல்ல படியாகக் குழந்தை பிறக்க வேண்டுமே என்ற ஒரு எதிர்பார்ப்பு நம்மை அறியாமலேயே வந்து ஒட்டிக் கொள்கிறது. மருத்துவத் துறையில் நிறைய வளர்ச்சிகள் ஏற்பட்டு குழந்தை பிறப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வு என்ற நிலை வந்தாலும் கூட நமது சொந்தங்கள் அல்லது நமக்கு வேண்டப்பட்டவர்களுடைய குழந்தை பிறப்பு எனும் போது ஒரு விதப் பதற்றம் நம் மனதில் குடி கொள்வது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. இதுவே பிரசவம் தன்னுடைய மனைவிக்கு எனும் போதும் பிறக்கப் போவது தன்னுடைய வாரிசு எனும் போதும் ஒருவனுடைய மனதில் இருக்கும் உணர்வுகளை வார்த்தைகளால் வடிப்பது கடினம் என்றே எண்ணுகிறேன். மகிழ்ச்சி, அச்சம், எதிர்பார்ப்பு, கவலை போன்ற பலவித உணர்வுகளும் சேர்ந்த ஒரு வித விசித்திர கலவை அந்த உணர்வு. அதை அனுபவித்தவர்களுக்கே அது எவ்வாறு இருக்கும் எனத் தெரியும். பிரசவத்தின் போது வலியும் வேதனையும் ஒரு பெண்ணுக்குத் தான் என்பதும் அவள் மனதாலும், உடலாலும் தாங்கிக் கொள்ள வேண்டிய கணம் அதிகம் என்பதை பலவிடங்களில் படித்துத் தெரிந்து கொண்டாலும் பலர் சொல்லக் கேட்டிருந்தாலும் அதை எந்நாளும் உணரும் சக்தியற்றவன் ஆண் என்னும் நினைக்கும் போது ஒரு வித குற்றவுணர்ச்சி தோன்றி மறைகிறது. பாலைவன ரோஜாக்கள் படத்தின் பாடல் வரிகளான "காதல் என்பது பொதுவுடைமை கஷ்டம் மட்டும் தானே தனி உடைமை" என்னும் வரிகள் நான் என் குழந்தையின் பிறப்பை எதிர்நோக்கியிருந்த காலங்களில் பல முறை என் நினைவுக்கு வந்து சென்றதுண்டு.

பொதுவாகவே நம் சமூகத்தில் கருவுற்றிருக்கும் ஒரு பெண்ணின் மீது அவளை சுற்றியிருப்பவர்கள் கூடுதல் அக்கறை எடுத்து கவனிப்பதுண்டு. பேறு காலத்தில் செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை, உண்ணக் கூடியவை, உண்ணக் கூடாதவை என்பது பற்றிய பலவிதமான அறிவுரைகள் பலரிடமிருந்தும் கிடைக்கும். அவ்வறிவுரைகளை அப்பெண் செயல்படுத்துகிறாளா இல்லையா என்று பார்த்துக் கொள்ளக் கூடிய கடமை அவளுடய கணவனுடையதானது. அவள் அதை செயல்படுத்த வில்லை என அறிவுரை சொன்னவருக்குத் தெரிய வரும் போது "மாசமாருக்கற பொண்ணுப்பா கொஞ்சம் கவனமா பாத்துக்கக் கூடாதா? நீ தான் இதெல்லாம் பாத்து செய்யனும்" என்ற அறிவுரை அவளுடைய கணவனுக்குக் கிடைக்கும். பேருந்துகளிலோ பொது இடங்களிலோ கர்ப்பிணி பெண் உட்கார இடமில்லாமல நின்று கொண்டிருந்தால் எழுந்து இடம் தர வேண்டும் என்று பெற்றோர்கள் மூலமாக சிறுவர்களாக இருக்கும் போதே அறிவுறுத்தப் படுகிறது நம் சமூகத்தில். டெல்லியில் என்னுடன் பணிபுரிந்த ஒரு நண்பன் பின்னாளில் பெங்களூரில் பணிபுரிந்தான். அவனுடைய மனைவி கருவுற்றிருந்த போது அவன் குடியிருந்த வீட்டு ஓனரே வளைகாப்பு விழா நடத்தினாராம். கன்னடப் பெண்மணியான அவர் வட இந்தியாவைச் சேர்ந்த நண்பனின் மனைவிக்கு தென்னிந்திய முறைப்படி நடத்திய வளைகாப்பு விழாவின் படங்களை நண்பன் எனக்கு அனுப்பி வைத்தான். மற்ற நேரங்களில் எப்படியோ, பெரும்பாலான குடும்பங்களில் ஒரு பெண் இன்னொரு உயிரைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருக்கும் போது அவளுக்குண்டான மரியாதையும், அவள் மீது மற்றவர்கள் காண்பிக்கும் அக்கறையும் அதிகரிக்கத் தான் செய்கிறது.

"Exceptions are always a rule" என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. ஒரு விஷயம் இவ்வாறு இருக்கும் அல்லது இவ்வாறு நடக்கும் என்ற தீர்மானத்திற்கு வருவதற்கு முன் அவ்வாறு இல்லாது போதலுக்கான சாத்தியக்கூறுகளும் இருக்கத் தான் செய்கின்றன என்பதை ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். துரதிருஷ்ட வசமாக நான் அவ்வாறான 'exception' ஒன்றைத் தான் முதலில் தெரிந்து கொண்டேன். முன்ஷி பிரேம்சந்த் என்பவர் இந்தி மொழி இலக்கிய உலகின் தூண்களில் ஒருவராகக் கருதப் படுகிறார். ஒரு பத்து-பதினைந்து வருடங்களுக்கு முன் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாலை வேளைகளில் இந்தி வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தேன். நான் எட்டாம் வகுப்போ ஒன்பதாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் போது இந்தி வகுப்புகளில் பிரவேஷிகாவோ(Praveshika) விஷாரத்தோ (Visharadh Poorvardh) படித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு தாளில் பிரபல எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் அடங்கிய புத்தகம் ஒன்று உண்டு. அதில் பிரேம்சந்த் அவர்கள் எழுதிய 'மதுவா'(Madhua) என்ற ஒரு கதை படித்திருக்கிறேன். கதையின் பெயர் அது தான் என்று நினைக்கிறேன்...சரியாக நினைவில்லை. வட இந்திய கிராமம் ஒன்றில் இரவு வேளையில் நடக்கும் நிகழ்வு ஒன்றினை கதைகளமாக ஆக்கியிருப்பார் ஆசிரியர். ஒரு குடிகார கணவன், அவனுக்கு ஒரு குடிகார தகப்பன். மனைவி கருவுற்றிருப்பாள். நிறைமாத கர்ப்பிணி. ஆள் அரவமற்ற ஒரு அத்துவான சூழ்நிலையில் அவர்கள் குடிசை அமைந்திருக்கும். தந்தையும், மகனும் குடிசையின் வெளியில் ஒரு லேண்டர்ன் விளக்கின் ஒளியில் அமர்ந்து கொண்டு குடித்துக் கொண்டிருப்பார்கள். குடித்துக் கொண்டிருக்கும் கணவன் தன் மனைவியை மதுவுடன் சேர்த்து சாப்பிடுவதற்காக உருளைக் கிழங்குகளை அவித்துத் தரச் சொல்வான். அவளால் இயலாத நிலைமையிலும் அவள் உருளைக்கிழங்குகளை வேக வைத்து தருவாள். சூடான உருளைக்கிழங்கின் தோலினை உரித்து வாயில் போட்டு இருவரும் தின்பார்கள். வாய் சுடுவதையும் பொருட்படுத்தாது மது அருந்துவதுமாகவும் கிழங்கு தின்பதுமாகவும் இருப்பார்கள்.

இந்நிலையில் அப்பெண்ணுக்குப் பிரசவ வலி எடுத்துக் கொள்ளும். வலி தாங்க முடியாது அவள் கதறுவாள். அதை பொருட்படுத்தாது அப்பனும் மகனும் குடித்துக் கொண்டிருப்பார்கள். பிரசவத்தின் போது கூட இருந்து உதவுவதற்கு யாருமில்லாது அப்பெண் இறந்து போவாள். கதையில் குழந்தை பிறந்து அத்தாய் இறப்பாளா, அல்லது சிசுவோடு சேர்ந்து அவள் மரித்தாளா என்பது இப்போது சரியாக நினைவில் இல்லை. ஆனால் நான் மேலே சொன்னவற்றை 'graphic detail'இல் எழுதியிருப்பார் ஆசிரியர். அக்கதை என்னை ஆழமாகப் பாதித்தது மட்டும் உண்மை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்ற எண்ணம் அப்போது என் மனதில் எழுந்தது. இவ்வளவு வருடமாகியும் இக்கதை நினைவில் இருப்பதற்கு அது ஏற்படுத்திய பாதிப்பு தான் காரணம். காலம் செல்ல செல்ல கதையில் சொல்லப் பட்டது போன்றதும் இதை விட அவலமானதுமான சம்பவங்களைப் பற்றிப் படிக்கும் போது இலக்கியம் என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பது உறுதியானது. "பூந்தோட்டக் காவல்காரன்" என்றொரு படம். விஜயகாந்த், ராதிகா நடித்திருப்பார்கள். அதில் ஒரு காட்சியில் வில்லன்களுடன் விஜயகாந்துக்கு மோதல் ஏற்படும். சண்டையின் போது விஜயகாந்தை அடியாள் ஒருவன் பலமான உருட்டுக் கட்டை கொண்டு ஓங்கி அடிப்பான். அதை தடுக்க வரும் ராதிகாவின் வயிற்றில் உருட்டுக் கட்டையின் அடி விழும். இக்காட்சியை சிறு வயதில் சில முறை பார்த்திருக்கிறேன். சமீபத்தில் ஒரு நாள் அப்படத்தின் பாடல் ஒன்றைப் பார்க்க நேரிட்டது. மேலே சொன்ன அக்காட்சி நினைவுக்கு வந்தது. ஆனால் இம்முறை ஏனோ அக்காட்சியை நினைத்த மாத்திரத்தில் உடம்பு நடுங்கியது, ஒரு வித வேதனை மனதில் உருவானது, . அக்காட்சியை நினைக்காமல் மறக்க வேண்டும் என்று மனம் கட்டளையிட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வேளை அச்சமயம் ஒரு குழந்தைக்குத் தந்தையாகியிருந்ததால் அத்தகைய ஒரு காட்சியை நினைத்துப் பார்க்கக் கூட கஷ்டமாக இருந்ததோ என்னவோ?

பொதுவாகவே ஒரு ஆணின் மனதில் கருவுற்றிருக்கும் பெண்ணைப் பார்க்கும் போது அவள் ஒரு vulnerable நிலையில் இருக்கிறாள் என்ற ஒரு 'ஐயோ பாவம்' உணர்வு தான் மேலிடும். சமூகத்தால் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் 'டிரெய்னிங்' அத்தகையது. ஆறாவது மாதம் வரை நீச்சல் பயிற்சி மேற்கொள்ளலாம், ஏரோபிக்ஸ் செய்யலாம், கார் ஓட்டலாம் என்றெல்லாம் 'What to expect when you are expecting' புத்தகத்தில் எழுதப் பட்டிருந்ததைப் படித்த போது ஆச்சரியமே மேலிட்டது. பிரசவ வலி எடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போது "இது 'false pain' தான் சிறிது நேரம் கழித்து வாருங்கள்" என்று சொல்லித் திருப்பி அனுப்பப் பட்டதையும், "வலி அதிகமாக இருக்கிறது ஸ்ட்ரெச்சர் கொண்டு வாருங்கள்" என்று கதறும் பெண்ணிடம் "அதெல்லாம் முடியாது பிரசவ அறை வரை நடந்தே தான் வர வேண்டும்" என்று கூறியதையும் எனக்குத் தெரிந்த சில பெண்களின் மூலமாகக் கேள்வி பட்ட போது ஆச்சரியமாக இருந்த போதிலும் அத்தகைய சூழ்நிலையில் மருத்துவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் எனத் தெரிந்து கொள்ள முடிந்தது.

நிற்க. இந்த பதிவின் தலைப்பில் நான் எழுத நினைத்தது ஒரு வரி கூட இன்னும் எழுதவில்லை. அப்பதிவிற்கு ஒரு முன்னோட்டம் கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பதிவின் அளவிற்கு நீண்டு விட்டதால், சொல்ல வந்த மேட்டர் வேறொரு பதிவில்...

Monday, March 15, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1-ன் தொடர்ச்சி

தப்பிச் சென்ற சிறை கைதியான ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள், மாயமாக ஒரு கோட்டை நிற்பதை கண்டு மலைக்கிறார்கள். இதன் பின்னர் உக்கிரமாக நடைபெறும் போரினை விரிவாகத் திரையில் சொல்கிறோம். ஆறு நாட்களில் உருவாக்கப் பட்ட கோட்டை ஆங்கிலேயர்களின் பீரங்கிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்ததையும், போரின் போது ஆங்கிலேய படையினர் எவ்வளவு கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர் என்பதனையும் காட்டுகிறோம். பல நாட்கள் பீரங்கி தாக்குதலுக்குப் பின் வீழ்ந்த கோட்டைக்குள் உட்புகுந்த படையினர், கோட்டையைப் பாதுகாக்க பாஞ்சாலங்குறிச்சி மக்கள் எந்தளவு ஆக்ரோஷமாகப் போராடியிருக்கிறார்கள் என்பதனை வீழ்ந்து கிடக்கும் சடலங்களைக் கண்டு தெரிந்து கொள்வதை சொல்கிறோம்.

பின்னர் எட்டையபுர பாளையக்காரரின் படைகளின் உதவியைக் கொண்டு கோட்டை விழுந்ததும் தப்பித்துச் சென்ற ஊமைத்துரையைப் பின் தொடர்ந்து செல்வதையும், போரில் படுகாயமடைந்த ஊமைத்துரையைச் சுந்தரலிங்கம் என்ற தளபதி தன் தாயிடம் சொல்லி காப்பாற்றச் சொல்வதையும், எட்டையபுர வீரர்கள் ஊமைத்துரையை அடையாளம் காணாமல் இருக்க தன் மகன் அம்மை நோய் கண்டு இறந்து விட்டதாகப் பொய் சொல்லி காப்பாற்றுவதையும், அவர் உடல்நலன் தேறும் வரை பணிவிடை செய்வதையும் காட்டுகிறோம். பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஊமைத்துரையை மீட்டவர்களில் முதன்மையானவர் தான் இந்த சுந்தரலிங்கம் என்பதனையும் நிறுவுகிறோம்.

கோட்டையின் வீழ்ச்சிக்குப் பின் தப்பிச் செல்லும் ஊமைத்துரையும், அவருடைய வீரர்களும் சிவகங்கை பாளையக்காரர் மருதுபாண்டியரின் உதவி கோருவதையும், சின்ன மருதுவின் ஜம்பு தீபகர்ப்ப பிரகடனம், மற்றும் மருதிருவரின் உதவியோடு ஊமைத்துரை மறுபடியும் வெள்ளையரை எதிர்ப்பதையும், கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கடும் சண்டைக்குப் பின் ஊமைத்துரையை விருப்பாட்சி எனும் இடத்தில் சிறை பிடித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் பீரங்கி மேட்டில் வைத்து ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டதையும் காட்டுகிறோம். இப்பதிவில் முதல் சில பத்திகளில் காட்சிகளை விரிவாகச் சொல்லியது போல பின்வரும் பத்திகளில் சொல்லாது போனதை நானறிவேன். அதற்கு காரணம் அக்காட்சிகளை இன்னும் விரிவாக வரலாற்று ஆய்வு செய்து வலுவாக்க வேண்டும். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அக்காட்சிகளைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. மேலே சொன்ன வரலாற்று கதையினை ஆவணப்படம் போல் எடுப்பதா, குறும்படமாக எடுப்பதா இல்லை முழுநீள திரைப்படமாக எடுப்பதா என்றெல்லாம் எதுவுமே யோசிக்கவில்லை. திரைப்படத்துக்கு தேவையான கதைக்கும், திரைக்கதைக்குமான வேறுபாடு எனக்கு தெரியாது. இவை இரண்டையும் எழுதுவது என்றால் எப்படி என்றும் எனக்கு தெரியாது. சரி, அந்த விவாதத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். மேலே சொல்லியிருப்பது ஒரு அவுட்லைன் தான்.

இந்தப் படத்துக்கான வரலாற்றுச் சான்றுகளாக இப்போரில் ஆங்கிலேயர்கள் தரப்பில் பங்கு கொண்ட கர்னல் வெல்சு அவர்கள் எழுதிய "Military Reminiscences" என்ற புத்தகமும், தமிழிலும் ஆங்கிலத்திலும் பல்வேறு வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்பட்ட கட்டபொம்மன், ஊமைத்துரை பற்றிய வரலாற்று நூல்களும், மற்றும் பாரம்பரிய கலை வடிவங்களான கதை பாடல்களுமாக இருக்கும். வரலாற்று கதையை வேறொரு கலை வடிவமாக மாற்ற முற்படும் போது படைப்பாளிகள் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளாமல் ஒரு படம் எடுக்க முடியுமா என ஒரு எண்ணமும் இருக்கிறது. உதாரணமாக ஊமைத்துரை மணமானவரா இல்லையா என்பது போன்ற அவருடைய தனிப்பட்ட வாழ்வினைப் பற்றிய குறிப்புகள் இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. கதையின் நீளத்தைக் கூட்டுவதற்காகவும், காண்பவர்களுக்கு ஆர்வத்தைக் கூட்டுவதற்காகவும் அவருக்கு ஒரு காதலி இருப்பது போலவும் ஓரிரு டூயட் பாடல்கள் வைப்பது போன்ற சுதந்திரங்கள் எதனையும் எடுத்துக் கொள்ளாமல், ஊமைத்துரை வாழ்ந்த வாழ்க்கைக்கு உண்மையாக ஒரு படம் எடுக்க முடியுமா? தெரியவில்லை.

வரலாற்றை பிற்சேர்க்கைகள் இல்லாமல் உள்ளது உள்ளது உள்ள படி சொல்ல முடியுமா என்ற சந்தேகமும் உள்ளது. உதாரணமாக கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுடன் போரிடும் போது அண்டை பாளையங்களைச் சேர்ந்தவர்களின் உதவிகள் அவருக்குக் கிட்ட வில்லை. ஏன்? கட்டபொம்மன் அண்டை பாளையங்களில் புகுந்து கொள்ளையடித்தார் என்று பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்கிறார்கள். ஆனால் பாளையக்காரர்களின் வரலாற்றை ஓளிவடிவமாக ஆவணப்படுத்திய முக்கிய சாட்சியங்களில் ஒன்றான வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் அவ்வாறு எதுவும் சொல்லப்பட்டதாக நினைவில்லை. ஆனால் கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடி பணியாமல் போரிட்டு வீரமரணம் எய்தினார் என்பது உண்மை. இதை ஆங்கிலேயர்களும் ஒத்துக் கொள்கின்றனார். நம் திரைப்படத்தில் கதை நாயகனை ஒரு சாதாரண மனிதனாக அவனுடைய நிறைகளை நிரம்பச் சொல்லும் போது குறைகளையும் மறைக்காமல் சொல்லி சித்தரிக்க முடியுமா என்ற ஒரு எண்ணம் இருக்கிறது. சமீப காலங்களில் கதை நாயகனின் குறைகளைச் சொல்லியும் அவனை நாயகனாக நிறுவிய படம் பருத்தி வீரன்.

ஊமைத்துரையை நேரில் கண்ட கர்னல் வெல்சு ஊமைத்துரையின் தோற்றத்தை இவ்வாறு விவரிக்கிறார். "He was a tall, slender lad, of a very sickly appearance, yet possessing that energy of mind which in troubled times always gains pre-eminence". ஆகவே ஊமைத்துரை வேடத்திற்கு மெலிதான, உயரமான ஒரு நடிகர் யார் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஊமைத்துரை வாய் பேச முடியாதவர் என்பதால் கண்களால் உணர்வுகளைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். ஊமைத்துரை இறக்கும் போதே அவருக்கு வயது முப்பத்தைந்தாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். தினமும் ஜிம்முக்குப் போய் முறுக்கேறிய நரம்புகளுடன் சிக்ஸ் பேக் அல்லது எய்ட் பேக் கொண்ட நடிகராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நாம் எடுக்கும் படம் ஒரு 'metrosexual male'ஐப் பற்றியதல்ல. ஆகவே அத்தகைய நடிகர் நம்முடைய கதைக்கு சரிவர மாட்டார் என்று நினைக்கிறேன். ஊமைத்துரையாக நடிப்பவர் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களில் ஒருவரைப் போன்று இருக்கலாம். ஆனால் வெல்ஷ் அவர்கள் சொல்லும் எனர்ஜியைக் காட்டக் கூடிய நடிகராக இருக்க வேண்டும். ஒரு படி மேலே போய் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன் சந்ததியினரைச் சந்தித்து அவர்களில் ஒரு இளைஞருக்கு DNA பரிசோதனையின் மூலமாக அவருடைய முன்னோர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் ஒன்று உள்ளது.

கர்னல் வெல்சின் ஊமைத்துரையைப் பற்றி மேலும் இவ்வாறு எழுதியிருக்கிறார்.
"and he was generally the foremost in executing those plans, for our annihilation. Whatever undisciplined valour could effect, was sure to be achieved wherever he appeared ; though poor Oomee was at last doomed to grace a gallows, in reward for the most disinterested and purest patriotism. He had escaped, as it were, by miracle, in every previous engagement, although every soldier in our camp was most anxious to destroy so notorious and celebrated a chieftain." ஆங்கிலேயர்களை அழிக்க திட்டம் பெரும்பங்கு திட்டம் தீட்டியது ஊமைத்துரை என்று வெல்ஷ் குறிப்பிட்டுள்ளதையும் "celebrated chieftain" என்று அவர் சொல்லியிருப்பதையும் காட்சிகளாக வடிக்க மிகவும் சிரமப் பட வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்களும், கதை சொல்லிகளும் ஊமைத்துரையைப் பற்றி இந்தளவுக்கு உயரிய வார்த்தைகளில் விவரித்திருப்பதாகத் தெரியவில்லை.

இசைக்கு ஒரே ஒரு சாய்ஸ் தான் - அது இளையராஜா என்று ஏற்கனவே சொல்லியாயிற்று. ஒளிப்பதிவாளர் - தாரே ஜமீன் பர் இந்தி படத்துக்கு ஒளிப்பதிவு செய்த திரு, நீரவ் ஷா, ரவி.கே.சந்திரன் இவர்களில் யார் என்று முடிவு செய்யவில்லை. ஊமைத்துரை பற்றிய வரலாற்று சான்றுகளுக்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தென் தமிழ்நாட்டு பாளையக்காரர்கள் பற்றி ஏற்கனவே ஆய்வு செய்திருப்பதை தெரிந்து கொண்டேன். அவரை வசனம் எழுதச் சொல்லலாம் என்று எண்ணம். பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர்களின் மூதாதையர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட கம்பளத்தவர்கள் என்ற காரணத்தினால் படத்தில் பேசப்படும் தமிழ் - நெல்லை சுற்றுவட்டாரத்தில் பேசப்படும் தமிழாக இருந்தாலும், அவர்களுடைய பேசுமொழியில் தெலுங்கு கலப்பு இருந்திருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும். அது இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆயினும் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் கட்டபொம்மன்/ஊமைத்துரை வம்சத்தினரைச் சந்தித்துப் பேசினால் ஓரளவு யூகிக்க முடியும் என நினைக்கிறேன்.

இப்போதுள்ள படங்களில் காட்டப்படும் நெல்லைத்தமிழைப் போல வெறும் வாலே, போலே என வார்த்தைக்கு வார்த்தை லே போடும் exaggerationsகளை எல்லாம் மீறி உண்மையில் அழகாக இருக்கும் என்பது என் எண்ணம். அந்த அழகினையும் நம் படத்தில் ஆவனப் படுத்த முயல்வோம். நம்முடைய படம் ஆரம்பிப்பது கட்டபொம்மனின் மறைவுக்குப் பின்னர். ஆகவே கட்டபொம்மனைப் பற்றிய காட்சிகளை ஃப்ளாஷ்பேக்காகக் காட்ட வேண்டுமா கூடாதா என்ற கேள்வியும் இருக்கிறது. தமிழில் உள்ள வரலாற்றுச் சான்றுகளில் கட்டபொம்மனைப் பற்றிய செய்திகள் இருக்கும் அளவிற்கு, ஊமைத்துரையைப் பற்றிய செய்திகள் அவ்வளவாக இல்லை. ஊமைத்துரையைப் பற்றி ஏன் படம் எடுக்க வேண்டும் என என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்?

கட்டபொம்மனைப் பற்றி மாற்று கருத்துள்ள வரலாற்று ஆசிரியர்கள் கூட ஊமைத்துரையைப் பற்றி எதுவும் தவறாக எழுதி நான் பார்க்கவில்லை. மேலும் வெல்ஷ் அவர்களின் கூற்றுபடி ஊமைத்துரையை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் நினைத்ததை சிரமேற் கொண்டு செயல்படுத்த ஆயத்தமாக இருந்தனர். எந்தவொரு சுதந்திரப் போராட்டமும் வெற்றி பெற அது ஒரு மக்கள் புரட்சியாய் இருப்பது இன்றியமையாததாகும். அந்த வகையில் அனைத்து சாதி மக்களையும் புரட்சியில் பங்குபெற செய்த ஊமைத்துரை என்ற தலைவன் தன்னிகரற்றவனாகத் திகழ்ந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளன. அத்தோடு ஆங்கிலேயர்களின் ஏகாபத்தியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் தோன்றிய முதல் கிளர்ச்சி இது என்ற வகையில் ஊமைத்துரை பங்குபெற்று சண்டையிட்டு மடிந்த பாளையக்காரர் போர் முக்கியமானதாகும். அந்த நிகழ்வை மிகையில்லாமல் சொல்வது என்ற எண்ணம் தான் ஊமைத்துரை பற்றிய படம் எடுப்பதற்குண்டான காரணம்.

பி.கு: பல நாட்களாக மனதில் இருந்த ஒரு எண்ணத்தை எழுத்து வடிவமாக வலையேற்றி இருக்கிறேன். சினிமா தான் என் கனவு, என் வாழ்க்கை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். அது உண்மையுமில்லை. ஒரு வரலாற்று நிகழ்வை சினிமாவாக எடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இந்த பதிவு. அவ்வளவு தான் :)

Sunday, March 14, 2010

திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 1

ஒரு பாதை. விலங்குகளும் மனிதர்களும் நடந்து சென்ற காலடித் தடங்களால் உருவான ஒரு மண் பாதை. அந்தப் பாதையில், தன்னுடைய இரண்டு ஆடுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு மனிதர் நடந்து செல்கிறார். அவருடைய நடையில் ஒரு வேகம் தெரிகிறது. முகத்தில் ஒரு வெறுமை தெரிகிறது. அப்பாதை, சில ஓலை குடிசைகள் அமைந்துள்ள மேடான ஒரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது. அம்மனிதர் தன் நடையை ஒரு குடிசையை நோக்கிச் செலுத்துகிறார். ஆடுகள் இரண்டையும் குடிசைக்கு வெளியே கட்டிப் போட்டு விட்டு , குடிசையின் உள்ளே செல்கிறார். அவருடைய மனைவி குடிசையில் உள்ள ஒரு சில பொருட்களை மூட்டை கட்டுவதில் மும்முரமாக இருக்கிறார். வெகுநேரமாக அழுது களைத்த கண்களில் சோகம் தெரிகிறது. "நேரமாச்சு, வா கெளம்பலாம்" என்கிறார் தெலுங்கு மொழியில். "பெறந்து வளர்ந்த பூமியை விட்டு போகணும்ங்கிறீங்களே" என்கிறார் அவருடைய மனைவி. "என்ன பண்ணறது, இந்த மண்ணுல நாம உயிர் வாழ இனிமே ஒன்னும் இல்லை, போய் தான் ஆகனும்" என்று சொல்லி மனைவியை ஆதரவாகப் பிடித்துக் கொள்கிறார்.

பின்னர் தங்கள் உடைமைகளையும், தாங்கள் வைத்து வணங்கும் பெண் தெய்வத்தின் மண் சிலையையும் எடுத்துக் கொண்டு, வாசலில் கட்டியிருக்கும் ஆடுகளை அவிழ்த்துக் கொண்டு வீட்டை விட்டுக் கிளம்புகிறார்கள். அவ்விடத்தில் வாழும் அம்மனிதரைப் போன்ற ஏனையோர்களும் தத்தம் மனைவி, மக்கள், விலங்குகள் ஆகியவற்றை கூட்டிக் கொண்டு அங்கிருந்து செல்கிறார்கள். ஆண்கள் அனைவரும் கம்பளங்களைத் தங்கள் தோள் மேல் போர்த்தியிருக்கிறார்கள். இந்த இடத்துல மெலிந்து போன சில பசு மாடுகளும், சோக முகம் கொண்ட மனிதர்களும் நடந்து போறதை லோ-ஆங்கிளில் காட்டறோம். "வடக்கு ஆந்திர பிரதேசம், கி.பி.12 ஆம் நூற்றாண்டு" என சப்-டைட்டிலில் காட்டறோம். அம்மக்கள் பல துயரங்களை அனுபவித்து தென் தமிழ்நாட்டை அடைகிறார்கள். முதல் காட்சியில் காட்டப்பட்ட அம்மனிதர், அங்குள்ள மன்னன் ஒருவனிடத்தில் சேவகனாக சேர்கிறார். அம்மன்னனின் நன்மதிப்பை பெறுகிறார். நாட்டின் ஒரு சிறிய பகுதியை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்குக் கிடைக்கிறது. இதை எல்லாம் ஒன்னரை-ரெண்டு நிமிஷத்துக்குள்ள, கோர்வையான சில காட்சிகளின் மூலமாக மிகைப் படுத்தாமல் சொல்கிறோம்.

அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கு முன்னர் நாய்கள் ஆக்ரோஷமாகக் குரைக்கும் ஒலி கேட்கிறது. காட்சி திரையில் ஆரம்பிக்கும் போது நாய்கள் ஒரு புதருக்குள்ளிலிருந்து வேகமாக வெளிப்பட்டு முன்னோக்கி வேகமாக ஓடுவது காண்பிக்கப் படுகிறது. நாய்களுக்குப் பின்னால் அம்மனிதர் ஒரு குதிரையில் வந்து கொண்டிருக்கிறார். நாய்களுக்கு முன்னால் காட்டு முயல் ஒன்று வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வேட்டை நாய்கள் வேகமாக ஓடுவது காட்டு முயலைப் பிடிக்க என்பது காட்சியிலிருந்து தெரிவிக்கப் படுகிறது. நாய்கள் காட்டு முயலைப் பிடித்தாக வேண்டும் என்ற ஆர்வம், நாய்களின் எஜமானரான அம்மனிதரின் முகத்தில் தெரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் நாய்கள் முயலைத் துரத்துவதும், மனிதர் குதிரையில் பின் தொடர்ந்து வருவதும் ஆக்சன் ஷாட்டாகக் காண்பிக்கப் படுகிறது. தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்த முயல் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், தன் இது வரை ஓடி வந்த திசையை நோக்கித் திரும்புகிறது, வேட்டை நாய்களை நேருக்கு நேராகப் பார்க்கின்றது. அதுவரை பயந்து ஓடிக் கொண்டிருந்த முயல், வேட்டை நாய்களைத் துரத்த ஆரம்பிக்கிறது. நாய்களை ஒரு முயல் துரத்துவதையும், தன்னை கடந்து அவைகள் ஓடுவதையும் அத்திசையை நோக்கி அம்மனிதர் பார்க்கிறார்.

முயல் எந்த இடத்தில் திரும்பி நாய்களைத் துரத்த ஆரம்பித்ததோ அந்த இடத்திற்கு தன் குதிரையில் இருந்து இறங்கி நடநதுச் செல்கிறார். அவருடைய கண்களில் தெரியும் வியப்பைப் பார்வையாளருக்குக் காட்டுகிறோம். அவருடைய கருவிழிகளுக்குள்ளே, அவ்விடம் வளர்ச்சி பெறுவதையும் ஒரு கோட்டை உருவாவதையும் காட்டுகின்றோம். இப்போது கேமரா அம்மனிதரின் தலைக்கு மேல் செல்கிறது, மேலே எழும்பிக் கொண்டே இருக்கிறது, அவருடைய தலை ஒரு சிறு புள்ளியாகத் தெரியும் வரை. இவ்விடத்தில் அப்புள்ளி சேட்டிலைட் இமேஜரியாக(Satellite Imagery) மாறுகிறது. புள்ளி தெரிந்த அதே இடத்தில் சேட்டிலைட் இமேஜரியின் மீது ஒரு புள்ளி வைத்து "பாஞ்சாலங்குறிச்சி, கி.பி.12ஆம் நூற்றாண்டு" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து வலப் பக்கமாக சிறிது தூரம்(ஒரு சில மில்லிமீட்டர்கள்) சேட்டிலைட் இமேஜரியின் மீது கேமரா பயணிக்கிறது. அங்கு இன்னுமொரு புள்ளி தெரிகிறது. அப்புள்ளியின் அருகே "கயத்தாறு, அக்டோபர் 17, கி.பி.1799" எனக் காட்டுகிறோம். அந்த புள்ளியிலிருந்து கேமரா உள்நோக்கி கீழிறங்க ஆரம்பிக்கிறது. இறங்கிக் கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தில் இருந்து கீழே பார்த்தால் எவ்வாறு பூமி தெரியுமோ அவ்வாறு நிலம் தெரியத் துவங்குகிறது.

மேலும் கேமரா கீழே இறங்குகிறது. பச்சையான மேற்பரப்பு தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கேமரா கீழிறங்குவது ஒரு மரத்தினூடாக என்பது பார்ப்பவருக்குத் தெளிவாகிறது. அம்மரம் ஒரு புளியமரம் என்று கேமரா கீழிறங்கும் போது தெரியும், புளிய மர இலைகள் மூலமாகவும், மரத்தில் தொங்கும் புளியம்பழங்களின் மூலமாகவும் பார்ப்பவர் தெரிந்து கொள்கிறார். கீழிறங்கிக் கொண்டிருக்கும் கேமராவுக்கு ஒரு பெரிய மரக்கிளை தெரிகிறது. அம்மரக் கிளையில் தடிமனான ஒரு கயிறு கட்டப் பட்டிருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் கீழிறங்குகிறது. கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கயிறைக் காட்டிக் கொண்டே கேமரா கீழிறங்குகிறது. இடுப்பு வரை வெற்றுடம்பாக இருக்கும் ஒரு சடலம் கயிறில் தொங்கிக் கொண்டிருப்பதை காட்டுகிறோம். கேமரா காட்டுவது அச்சடலத்தின் முதுகு பகுதியை தான். கறுத்த உடல் நிறம் கொண்ட அம்மனிதனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டிருக்கிறது. கால்களில் வசதி படைத்தவர்கள் அணியும் காப்புகள் அணிந்திருப்பது தெரிகிறது. பின்னணியில் மக்கள் அழுது புலம்புவதையும், கயிற்றில் பிணமாகத் தொங்கிக் கொண்டிருக்கும் மனிதனைப் போல உடையணிந்த இன்னும் சிலர் விலங்கிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய வீரர்களால் இழுத்துச் செல்லப் படுவதையும் காட்டுகின்றோம். இக்காட்சி முழுவதும் சூரியன் மறைந்த மாலை நேரத்தில்(ஆனால் இருள் சூழாத) படமாக்கப் படுகிறது.

அடுத்த காட்சி விளக்கு வைத்த மாலை வேளையில் தொடங்குகிறது. விபூதி பட்டை அணிந்த பக்தர்கள் கூட்டம் ஒன்று காவடி தூக்கிக் கொண்டு, காவடி சிந்து பாடிக் கொண்டு துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் காக்கும் ஒரு வாயிலை நோக்கி வருகிறது. அவர்களிடம் விபரம் கேட்டுக் கொண்ட காவலாளிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர். காவடி எடுத்து வந்தவர்கள், காவலாளிகளின் கண்களிலிருந்து மறைந்ததும் வெவ்வேறு திசைகளில் பிரிகிறார்கள். காவடிக்குள்ளிலிருந்து அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து தங்கள் உடைகளுக்குள் மறைத்து கொள்கிறார்கள். இருள் கவியத் தொடங்கியதும் வெவ்வேறு திசைகளிலிருந்து மறைந்து மெல்ல மெல்ல ஒரு கோட்டையை நோக்கி வருகின்றனர். அங்கு காவலாளிகளை மறைந்திருந்து தாக்கிக் கொன்று கோட்டைக்குள் புகுகின்றனர்.

கோட்டைக்குள் அவர்கள் எதையோ தேடிக் கொண்டே இருக்கின்றனர். அப்போது அங்கு ஒரு சிறை கதவு தெரிகிறது. அதை தாக்கி உடைத்து, சிறைக்குள்ளிருக்கும் நபரின் கைவிலங்குகளை உடைக்கின்றனர். அவருடைய கைகளை முத்தமிடுகின்றனர். கோட்டையின் ஒரு பகுதியை உடைத்துக் கொண்டு வீரர்களும், அந்நபரும் வெளியேறுகின்றனர். அப்போது படத்தின் பெயர் போடுகின்றோம் - "ஊமைத்துரை". பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஊமைத்துரையை மீட்டு கொண்டு வரும் போது ஆங்கிலேய தளபதிகளும், அவர்களுடைய படைவீரர்கள் அனைவரும் அவர்கள் தப்பிச் சென்ற பாதையில் இருந்து சற்றே விலகி ஒரு இடத்தில் விருந்தில் கலந்து கொண்டிருந்ததையும், வீரர்கள் அந்நேரத்தில் ஆங்கிலேயர்களைத் தாக்கியிருந்தால் வரலாறு மாறியிருக்க வாய்ப்பிருந்ததையும் காட்டுகிறோம்.

சில நாட்கள் காலாட் பயணத்திற்குப் பிறகு தங்கள் சொந்த மண்ணான பாஞ்சாலங்குறிச்சியை அடைகின்றனர். தமது அண்ணன் கட்டபொம்மனின் மறைவிற்குப் பின் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை அனைத்து சாதி மக்களின் உதவியையும் கொண்டு ஆறே நாட்களில் மறுபடியும் கட்டி முடிக்கின்றான். இந்த சிச்சுவேஷனில் ஒரு பாட்டு வருகிறது. படத்திற்கு இசை - இசைஞானி இளையராஜா. அதாவது இரவு பகலாக மக்கள் மண்சுமந்து அந்த கோட்டையைக் கட்டும் போது களைப்பு தெரியாமல் இருக்க அவர்கள் பாடுவது போல ஒரு பாட்டு வருகிறது. களிமண்ணும் சுண்ணாம்பும் பதநீரும் கரும்புச் சக்கையும் சேர்த்த கலவையை வைத்து கட்டும் போது எழுப்பப் படும் ஒலியோடு பாடல் தொடங்குகிறது.

வேட்டை நாயை விரட்டிய முயலின் கதையோடு ஆரம்பிக்கிறது பாடல். அத்தகைய பெருமைகளைக் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி என்பது வீரம் விளைந்த மண் என்பது நிறுவப் பெறுகிறது. அடுத்து கட்டபொம்மனின் பெருமைகளைச் சொல்கிறது, வணிகம் செய்ய வந்த வெளிநாட்டவர்க்கு வரி கொடுக்க மறுத்தது, அவர்களுடன் போரிட்டு வீர மரணம் அடைந்தது இவை எல்லாவற்றையும் இயல்பான மொழியில் ஒரு கதை பாடல் போல ஒலிக்கிறது இந்தப் பாடல். பாடலில் பல்வேறு உணர்ச்சிகள் காட்டப் படுகிறது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் பெருமை சொல்லும் இடத்திலும், கட்டபொம்மனின் வீரதீர பெருமைகளைச் சொல்லும் இடத்திலும் ஒருவித மகிழ்ச்சி உணர்வும், கட்டபொம்மன் மறைந்தது பற்றிப் பாடும் போது சோகமும் கலந்த கலவையாக இப்பாடல் வரும். கடைசியாக நீங்களா? நாங்களா? மோதி பார்த்துடுவோம் வாங்கடா வெள்ளையர்களா என்று சவால் விடும் தொனியில் பாடல் முடிவடையும்.

(தொடரும்...)
திரைப்படம் எடுக்கும் எண்ணம் - 2

Thursday, March 11, 2010

பள்ளிக்கூட நினைவுகள் - Back to School - குவிஸ் பதிவு

வணக்கம் நண்பர்களே. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடக்கும் நேரமிது. இது போக பள்ளியில் படிக்கும் பிற வகுப்புகளில் உள்ள மாணவர்களும் தத்தம் ஆண்டுத் தேர்வுகளுக்காகத் தம்மை தாமே தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். இந்த நேரத்தில், பள்ளிப் படிப்பை பல ஆண்டுகளுக்கு முன்னால் முடித்த நாம், அப்போது நாம் படித்ததை நினைவு கூர்ந்து ஒரு தேர்வு எழுதினால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது. தேர்வு என்ற சொல் உங்களுக்கு ஒவ்வாது போனால் குவிஸ் போட்டி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் :)

நாம் பள்ளிக் கூடத்தில் படித்த தமிழ் செய்யுள், துணைப்பாட நூலிலிருந்தும் ஆங்கில செய்யுள்(Poetry) மற்றும் உரைநடை(Prose) நூலிலிருந்தும் சில வரிகளை எடுத்து இங்கே கொடுத்திருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் - செய்யுள் அல்லது கதையின் பெயர், ஆசிரியர் பெயர் இவற்றைக் குறிப்பிட வேண்டும்.

தமிழ்

1. "ஆற்று வெள்ளம் நாளை வரத்தோற்று தேகுறி - மலை
யாளமின்னல் ஈழ மின்னல் சூழமின்னுதே
நேற்று இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே - கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே"

2. "இதுபொறுப்ப தில்லை - தம்பி
எரிதழல் கொண்டுவா
கதிரை வைத்திழந்தான் - அண்ணன்
கையை எரித்திடுவோம்"

3. "உலகம் யாவையுந் தாமுள வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க்கேசர ணாங்களே"

4. "பலசான் றீரே பல்சான் றீரே
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல்சான் றீரே
கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ"

5. "மாட்டையவிழ்த்தாய்விட்டது.

மனைவி 'மாடு' எழுபது ரூபாயிற்றே. 'குழந்தைகளுக்குப் பாலாயிற்றே' என்று தடுத்தாள். மே வரும்படி வேறு வருகிறதாம்.

"என் புள்ளெகள் நீத்தண்ணி குடிச்சு வளந்துக்கிடும்" என்று விட்டார்.


ஆங்கிலம்

1. But he fancied his English, finished and refined at no less a place than the University of Oxford. He was fond of conversation, and like a cultured Englishman, he could talk on almost any subject—books, politics, people. How frequently had he heart English people say that he spoke like an Englishman!

2. He ran his hand along the trunk of the tree and put his finger to the tip of a leaf. ‘I wonder,’ he whispered. ‘Is this what it feels to be God?’

3. "His state Is kingly: thousands at his bidding speed,
And post o'er land and ocean without rest;
They also serve who only stand and wait."

4. "I was angry with my friend:
I told my wrath, my wrath did end.
I was angry with my foe;
I told it not, my wrath did grow"

5. Another bus, the last on the road, sailed by indifferent to the shouts of the passengers to stop. “They stick by each other—the villains” was the comment.

உங்கள் பதில்கள் உடனடியாக வெளியிடப் படாது. சரியா? தவறா? என்று மட்டும் சொல்கிறேன். கூடுதலாகப் பாடலின் பொருள், கதையின் கரு கொடுத்தாலும் நலம். இவ்வரிகளைப் படிக்கும் போது தங்கள் மனதில் தோன்றும் நினைவுகளையும், எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். சரியான பதில்களோடு இன்னுமொரு பதிவோடு வருகிறேன். நன்றி.

Wednesday, January 27, 2010

This Day That Age

"The Hindu" ஆங்கில நாளிதழில் கடைசி பக்கத்தை கவனித்தவர்களுக்கு இந்தப் பதிவின் தலைப்புக்கான காரணம் புரியும். இதே நாளில் பல வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளை 'This Day That Age" பகுதியில் நினைவு கூர்வார்கள். உதாரணமாக 1945ஆம் ஆண்டு அதே நாள் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஹிண்டுவில் பிரசுரமான சில செய்திகளைத் தருவார்கள். அதே பாணியில் இதே நாள் ஜனவரி 27 ஆம் தேதி 2006 ஆம் ஆண்டு இவ்வலைப்பூவில் என்ன எழுதியிருந்தேன் என்று புரட்டிப் பார்த்தன் விளைவே இப்பதிவு. ஒரே நாளில் இரண்டு பதிவுகள் எழுதி பதிப்பிக்கும் அளவிற்கு ப்ளாக் பைத்தியமாக இருந்தது நினைவுக்கு வருகிறது. ஹ்ம்ம்ம்....அதெல்லாம் ஒரு காலம் :(

மறவேன் மறவேன் என்று...


"மறவேன் மறவேன் என்று வேலின் மேல்
ஆணையிட்ட மன்னரும் மறந்தாரோ மயிலே"

தூர்தர்ஷன் மட்டுமே ஒரே தொலைக்காட்சி சேனல் என்று இருந்த காலத்தில், இரவு 9.00 மணிக்கு தேசிய ஒளிபரப்பு தொடங்குவதற்கு முன் மெல்லிசை பாடல்கள் ஒளிபரப்பப்படும். டி.கே.கலா(கில்லி புகழ்) பாடிய மேற்கண்ட பாடல் அடிக்கடி வரும். ராஜா ரவி வர்மாவின் இவ்வோவியத்தைக் கண்டதும் அப்பாடல் தான் நினைவுக்கு வந்தது. அப்பாடலை எவரேனும் நினைவில் கொண்டிருந்தால் மற்ற வரிகளையும் தெரியப்படுத்துங்கள்.

நாலு வருஷமாத் தேடியும் இந்த பாடலைக் இணையத்தில் கேட்பதற்கான சுட்டிகளோ, ஒலிப்பேழைகளோ, குறுந்தகடுகளோ எங்கும் கிடைத்தபாடில்லை :(

சொல்றோம்ல : மல்லிகட்டாணி

ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மல்லிகட்டாணி(Mulligatawny) சூப் என்பது ரொம்பவே பிரபலம். இந்த மல்லிகட்டாணி சூப்புக்கும், தமிழர் உணவு முறைமைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில்(நான் அறிந்த வரை) ஏனோ நாம் வீட்டிலோ அல்லது சாதாரண ஓட்டல்களிலோ சாப்பிடும் போது கிடைக்கும் பாரம்பரிய சுவை கிடைத்ததில்லை. அப்படி இருக்க மல்லிகட்டாணிக்கும் தமிழ் உணவு முறைக்கும் என்ன தொடர்பு?

மல்லிகட்டாணி நாம் சாப்பிடும் எந்த ஒரு உணவு வகை போலவும் இல்லையே என்று தோன்றும். சுவையில் வேண்டுமானால் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்...ஆனால் பெயரில் தொடர்பு கண்டிப்பாக இருக்கிறது. மல்லிகட்டாணி என்ற பெயர் "மிளகு + தண்ணி"யிலிருந்து மறுவி வந்ததேயாகும். Mulligatawny = Milagu + Tanni. ஆங்கிலோ-இந்திய வம்சாவழியினர்(Anglo-Indians) தமிழர்களிடமிருந்து கற்ற ஒரு உணவு வகை 'ரசம்'. இதை அவர்கள் மிளகு தண்ணி என்று அழைத்தார்கள். சோற்றுடனும் நூடுல்சுடனும் சேர்த்து அவர்கள் இதை உண்டனர். ஆங்கிலேயர்கள் ஆங்கிலோ-இந்தியர்களிடமிருந்து 'மிளகு தண்ணியைக்' கற்றுச் சென்று அதனை மல்லிகட்டாணி ஆக்கி விட்டார்கள். அடுத்த முறை மல்லிகட்டாணி சூப் குடிக்கும் போது ரசத்தை தான் வேறு பெயரில் நிறைய காசு குடித்து குடிக்கிறோம்னு ஞாபகம் வச்சுக்குங்க.

இதனை விக்கிபீடியாவிலும் காணலாம்.

டிஸ்கி : பதிவெழுத நேரமும் சரக்கும் இல்லாத போது பழைய பதிவுகளை வச்சே 2010ஆம் வருஷத்தை ஒரு கொசுவத்தியோடத் தொடங்கியாச்சு.

Monday, December 21, 2009

படு ரொமாண்டிக்கான பாடல் ஒன்னு...

பழைய பாடல்கள் அப்பப்போ கேக்கறதுண்டுன்னாலும், ஒரு சில பாடல்களைக் கேக்கும் போது "பலமுறை இந்த பாட்டைக் கேட்டுருக்கோம், ஆனா இந்த பாட்டோட அழகை இது நாள் வரைக்கும் கவனிக்காம இருந்துட்டோமே" அப்படின்னு தோனும். அப்படி பட்ட பாடல் ஒன்னைப் பத்தி இன்னிக்குச் சொல்றேன். படு ரொமாண்டிக்கான அழகான காதல் ரசம் ததும்பும் பாடல்...வேற யாரு எழுதிருக்க முடியும். கவியரசர் கண்ணதாசன் தான். கர்ணா படத்துல வர்ற "மலரே மௌனமா?" பாடல் அமைஞ்ச தர்பாரி கானடா ராகத்துல அமைஞ்ச இன்னொரு சூப்பர் பாடல் இது. எனக்கு இப்பாடலில் மிகவும் பிடித்த சில பஞ்ச் வரிகளை சிவப்புல குறிச்சிருக்கேன்.

படம் : போலீஸ்காரன் மகள்
இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் : கண்ணதாசன்
பாடியவர்கள் : P.B.ஸ்ரீநிவாஸ் & S.ஜானகி

PBS:
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்
Both:
ஆஹாஹா ... ஓஹோஹோ ...

PBS:
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்
கொத்துமலர் எடுத்து முத்துச் சரம் தொடுத்து
சிட்டு முகம் பார்த்தே சிரித்திருப்பேன்

SJ:
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்
தொட்டவுடன் நெஞ்சில் துள்ளி வரும் வெள்ளம்
கண்டு கண்டு நானும் களித்திருப்பேன்

PBS:
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன் என்னை நீ அறிவாய்

SJ:
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்
நம்மை நாம் அறிவோம் வேறு யார் அறிவார்


PBS (Background humming by SJ):
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
பொன் என்பேன் சிறு பூவென்பேன்
காணும் கண்ணென்பேன்
வேறு என்னென்பேன்

SJ:
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்
சின்னச் சின்ன பறவை அன்னை அவள் மடியில்
தவழ்வது போல் நான் தவழ்ந்திருப்பேன்

PBS:
கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

கண்ணை மெல்ல மறைத்து உன்னைக் கையில் எடுத்து
காலமெல்லாம் நான் அணைத்திருப்பேன்

SJ:
உன்னை நினைத்திருப்பேன் என்னை மறந்திருப்பேன்

PBS:
கண்ணில் கலந்திருப்பேன் நெஞ்சில் நிறைந்திருப்பேன்

SJ (Background humming by PBS):
என்னென்பேன் கலை ஏடென்பேன்
என்னென்பேன் கலை ஏடென்பேன்
கண்கள் நானென்றால் பார்வை நீயென்பேன்

This feature is powered by Dishant.com - Home of Indian Music


'வர்ல்ட் மூவிஸ்' சேனல்ல எப்பவோ அரைகுறையா பாத்துட்டு நிறுத்திய இரானிய திரைப்படம் ஒன்னு ஞாபகத்துக்கு வந்துச்சு. இரானிய படங்கள் பாத்தா தான் உலகத் திரைப்படங்கள் பாத்ததா ஒத்துக்குவாங்கன்னு தமிழ் வலையுலகில் இயங்கி வர்ற இந்த மூனு வருஷ காலத்துல புரிஞ்சிக்கிட்டேன். இரானிய திரைப்படம் பத்தி ஞாபகத்துக்கு வந்துச்சுன்னு சொன்னேன் இல்லியா? சென்னை திரும்பறதுக்காகப் பாரிஸ்லேருந்து துபாய் வந்துட்டுருந்த போது எமிரேட்ஸ் விமானத்துல இருந்த தொலைக்காட்சி திரையில 'Arabic Movies' அப்படீங்கற லிஸ்டைப் பார்த்துட்டு வந்தது. ஆனா இரானிய படங்கள் வேறு அரேபிய திரைப்படங்கள் வேறுன்னு அஞ்சு நிமிஷம் பாத்ததுமே புரிஞ்சுடுச்சு. அரேபிய நாடுகளில் பாலிவுட் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கறது ஏன்னும் புரிஞ்சது.

ஏன்னா நான் பார்த்த படம் அப்படி. படத்தோட பேரு Omar w.Salma. இதே படத்தோட இரண்டாவது பகுதியும் வந்துட்டதா கேள்வி பட்டேன். பாலிவுட் மசாலா திரைப்படங்களே தோத்துப் போற அளவுக்கு பயங்கர மசாலா கதை. "கோகுலத்தின் சீதை" மாதிரி ப்ளேபாய்களான அப்பா-மகன் இருவர். அப்படி பட்ட ப்ளேபாயான ஓமரை எப்படி சல்மாவின் காதல் திருத்துகிறது என்பதே கதை.



படத்தை பயங்கர கில்மாவா எடுத்துருக்காங்க. சல்மாவா நடிச்சிருக்கற அம்மணி மாய் அஸ் எல்தீன்(Mai Ezz El Din) செம க்யூட்டுங்க. சிரிச்சா ரொம்பா அழகா இருக்காங்க. திருத்தம்...சிரிச்சாலும் ரொம்ப அழகா இருக்காங்க. இரானிய படங்கள் மாதிரி இருக்கும்னு எதிர்பார்த்த நான் பார்த்த அந்த அரேபிய படம் எனக்கு பல ஆச்சரியங்களைத் தந்தது. மேற்கத்திய நாடுகளுக்கு இணையான உடைகள். துள்ளலான இசை. இன்னும் பல பல :)






இந்த மாதிரி படங்கள் எல்லாம் எந்த அரேபிய நாட்டுல எடுக்கறாங்க சாமி? துபாய் மக்கள்ஸ் யாராச்சும் இந்த மொழி படங்களைப் பாத்துருக்கீங்களா? உங்களுக்கு தெரிஞ்ச விபரங்களைச் சொல்லிட்டு போங்கங்கோ!

பி.கு: நான் ஓமர் சல்மா படத்தை sub-title இல்லாம தான் பார்த்தேன் :)

Tuesday, December 08, 2009

பாரிமுனையில் கைப்புள்ள

"அடுத்த வாரம் நான் பாரிசுக்குப் போறேன்"

"பஸ்லியா? டிரெயின்லயா?"

ஒரு சோதனையா ரெண்டு மூனு பேரு இதே கேள்வியைக் கேட்டுட்டாங்க. அதனால ஒரு வரலாற்றுச் சான்றா இருக்கட்டுமேன்னு -




மேல இருக்கும் படம் மோனாலிசா ஓவியம் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தில்(Louvre Museum) எடுத்தது.



ரொம்ப நாளா ஒரு பதிவு டிராஃப்டலேயே இருக்கு. அப்போ எழுதி வச்சதை அப்படியே இப்ப இந்த பதிவுல போடறேன். நாய் சேகராகிய நான், கிம்ச்சீ நினைவுகள் அப்படின்னு எல்லாம் தலைப்பு யோசிச்சு வச்சு இன்று "light of the day" காணப் போகும் அந்த அரைகுறை பதிவுக்கு வயசு மூனு.

"நாய் சேகராகிய நான்
11.11.2003

கிம்ச்சீ நினைவுகள்


நானும் பயணம் சம்பந்தப் பட்ட பதிவு எதுவும் எழுதக் கூடாது எழுதக் கூடாதுன்னு பாத்து பாத்துருந்து, ஒரு வாரமா கை துறுதுறுன்னும் போதெல்லாம் கூட கட்டிப் போட்டு வச்சிருந்தேன். சொம்மா பயணத்தையே எழுதிட்டிருந்தாலும் போர் அடிச்சிடுமில்லியா...அதான். ஆனா பாருங்க இன்னிக்கு நம்ம தம்பி ராயல் ராம் சாமியோட பேசிட்டு இருக்கும் போது "நீங்க எங்கேயும் ஃபாரின்லாம் போனதில்லியா"ன்னு ஒரு கேள்வி கேட்டு வச்சாரு. (கறி தோசை, ஈரல் இட்லி இது போல இன்னும் சில சமாசாரங்களைப் பத்தி சொல்லி நாக்கு ஊற வச்சி வெறுப்பேத்தி விட்டுட்டு தான் இந்த கேள்வியைக் கேட்டாரு. கறி தோசையோட ரெசிப்பி எல்லாம் வேணும்னா
ராயலைக் கேளுங்க). "அட ஆமா இல்லை...நாம கூட மூனு வருசத்துக்கு முன்னாடியே ஃபாரின் ரிட்டன் இல்ல?:)"அப்படின்னு நினைச்சிக்கிட்டேன். "போயிருக்குறேம்பா ஒரே ஒரு வாட்டி போயிருக்குறேன்" அப்படின்னேன். "எந்த ஊரு"ன்னு கேட்டாரு ராம். "கொரியா"ன்னு சொல்லி வாயை மூடறதுக்குள்ள லகலகன்னு ஒரு சிரிப்பு. "உங்களுக்கு இந்த நாடு தான் கெடச்சிதா...அமெரிக்கா, யூகே மாதிரி வேற நல்ல ஊரே கெடக்கலியா?"ன்னு ஒரு கேள்வி கேட்டாரு.

அப்பவே தலைபாடா அடிச்சிக்கிட்ட்டாரு ஆப்டெக்ல நமக்கு ப்ரொக்ராமிங் சொல்லிக் குடுத்த வாத்தியாரு... "பாயிண்டர்ஸையும், அரேஸையும் டர்போ சில ஒழுங்கா படிச்சிக்க... அப்ப தான் கஷ்டமான ப்ராப்ளங்களுக்கும் சுலபமா ப்ரோகிராம் எழுத முடியும்னு". கேட்டோமா அதையெல்லாம்? இல்லியே...லேப்ல போய் ஒக்காந்தா கை தானாவே graphics.hக்கும் conio.hக்கும் தானே போவும்? அப்பவே ஒழுங்கா ஒரு ஃபாக்டோரியல், ஃபிபோனேசி இந்த மாதிரி எதாச்சும் ஒரு புரோகிராம் உருப்படியா எழுத கத்துக்கிட்டிருந்தோம்னா இந்நேரம் நமக்கும் ஆஃபிஸ்ல ஃபைவ் டே வீக் கிடைச்சிருக்கும், அமெரிக்கா, ஆஸ்திரேலியான்னு ஆன்சைட்டும் கெடச்சிருக்கும், நம்ம 12பி ஸ்யாம் மாதிரி "
"ஹியர் டு கோ"ன்னு சோக்கா பீட்டரும் வுட்டுருக்கலாம். நமக்கு எங்கே...மலைக்கு நடுவுலேருந்து சூரியன் உதிக்கற மாதிரியும், சக்கரம் சுத்தற மாதிரியும் அவுட்புட் வர்ற கிராஃபிக்ஸ் ப்ரோகிராம்ல தானே மனசு லயிச்சிச்சு?




கொசுவத்தி சுத்தனும்னு நெனச்சி எழுத உக்காந்தா, கொசு மட்டும் தான் வருது, வத்தி வர மாட்டேங்குது. சரி எதோ ஒப்பேத்தறேன். இன்னைய தேதியிலிருந்து ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி...முன்னாடி என்னானு கேக்கறீங்க? அதானே? இன்னைய தேதியிலிருந்து இருபது வருஷத்துக்கு முன்னாடி இப்போ இருக்கறதை விட ஒரு இருபது வயசு இளமையா இருந்தேன். இப்ப பெருத்து கறுத்தக்குட்டியா ஆயிட்டாலும் அப்போ சிறுத்தை குட்டியா இருந்தேன். அந்த சிறுத்தை..."



இப்போ படிச்சிப் பாக்கும் போது எனக்கே அந்த டிராஃப்ட் ரொம்ப சில்லறையா தெரியுது. கொடுமை என்னன்னா கறுத்தக் குட்டி, சிறுத்தை குட்டின்னு எல்லாம் பில்டப் குடுத்து எழுதுன அந்த பத்தி ஏன் எழுதனேன்னு எவ்வளோ யோசிச்சாலும் இன்னும் நியாபகத்துக்கு வர மாட்டேங்குது.

இந்த பதிவு இன்னிக்கு வருதுன்னா அதுக்கு காரணம் இந்த பாட்டு தான். ஏனோ இரவு பதினோரு மணிக்குக் கேட்டுக்கிட்டு இருக்கும் போது மனசு கொஞ்சம் லேசான நேரத்துல எதாச்சும் எழுதுவோமேன்னு தோனுச்சு. நீங்களும் கேட்டுப் பாருங்க.



அடுத்த வாரம் இந்த நேரமெல்லாம்...ரிட்டர்ன் ஆஃப் தி கைப்புள்ள.