Friday, November 07, 2008

சினிமா சினிமா...தாமதத்துக்கு எச்சூஸ் மீ

பிட்டுக்காக மட்டும் தான் பதிவெழுதறேங்கிறேன்ற உண்மையை நாலு பேரு முன்னாடி போட்டு உடைச்சதோட இல்லாம சினிமா தொடர் வெளாட்டையும் தொடரணும்னு சொல்லி கொக்கி போட்டு வுட்டாரு நம்ம கொத்ஸ். ஏதோ நாம தான் தமிழ் சினிமாவவக் காப்பாத்த வந்த ஆபத்பாந்தவன்ங்கிற ரேஞ்சுக்கு சில கேள்விகள் இருந்தாலும், தொடரை லூஸ்ல விட்டுட்டா கொத்ஸ் மேலும் என் கதாபாத்திரத்தை கொலை செய்வாருங்கிறதாலே(அதாங்க character assassination)... அதை தடுத்து நிறுத்தவே இந்தப் பதிவு...ஹி...ஹி. வழக்கம் போல கேள்விக்குப் பதில் சொல்லாம சம்பந்தமில்லாம் சுத்தப்படுகிற சில எக்ஸ்ட்ரா ரீல்களைப் பார்த்து கடுப்பாகி ப்ரவுசரில் ப்ளேடு எல்லாம் போடப்பிடாது...சரியா?

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
ஜப்பானில் கல்யாணராமன், சிந்து பைரவி மற்றும் இன்னும் எதோ ஒரு படம் - இம்மூன்று படங்களையும் ஒரு வாரத்திற்குள் அப்பா, அம்மாவுடன் சென்னை உட்லேண்ட்ஸ் மற்றும் லியோ(இப்போது ராஜ்) திரையரங்குகளில் போய் பார்த்தது இன்றும் நினைவிலிருக்கிறது. அதற்கு முன்னர் பார்த்தது எதுவும் நினைவில் இல்லை. ஜப்பானில் கல்யாணராமன் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது. சிந்து பைரவி பார்க்கும் போது பாதியிலேயே தூங்கிவிட்டேன். என்னை பொறுத்தவரை சினிமா பார்ப்பதை விட, சினிமா பார்க்கும் அந்த அனுபவம் பல நாட்கள் நினைவில் நிற்கும். உதாரணத்திற்கு கமலின் "நாயகன்" சென்னை ஆனந்த் தியேட்டரில் பார்த்தோம். அச்சமயம் மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கையாக ரெயின்கோட் எல்லாம் எடுத்து சென்றிருந்தோம். ஆனால் தலைக்குத் தொப்பி எடுத்துச் செல்ல மறந்துவிட்டதால், ரெயின்கோட் அணிந்து கொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரைத் தலையில் போட்டுக் கொண்டு டி.வி.எஸ் பஸ் ஸ்டாப்பிலிருந்து 25பி பஸ் பிடித்து திருவல்லிக்கேணி திரும்பியது நினைவில் இருக்கிறது. படங்களைத் தேர்ந்தெடுத்து மட்டுமே பார்ப்பதனால் சிறுவயதில் படம் பார்த்த தேதிகள் கூட சில நினைவில் உள்ளன. அபூர்வ சகோதரர்கள் - 15.07.1990(தேவி பாரடைஸ்), தேவர் மகன் - 31.12.1994(தேவி தியேட்டர்). மாயாஜாலில் தம்பியுடன் பிதாமகன் பார்த்த போது நியுசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் க்ரிஸ் கெயின்ஸ், ஸ்டீபன் ஃப்ளெமிங் இருவரையும் நேரில் பார்த்தோம். என்னுடைய தலை தீபாவளி சமயத்தில் வெளிவந்த பொல்லாதவன் திரைப்படத்தைத் தம்பதி சமேதராகப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அப்படத்தில் டேனியல் பாலாஜியின் அண்ணனாக நடித்திருந்த கிஷோர் என்ற நடிகரை அடையாளம் கண்டுகொண்டு "நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க"ன்னு நான் பாராட்டியதும், என்னை பார்த்து நாலு பேரு அவரைச் சூழ்ந்து கொண்டு பாராட்டியதும் நினைவில் இருக்கிறது.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
தசாவதாரம். தங்கமணியுடன் பெங்கையில்(சிங்கை, செங்கை, நாகை வரிசையில்...ஹி...ஹி) ஏற்கனவே ஒருமுறை பார்த்திருந்தாலும், சென்னை மாயாஜாலில் குடும்பத்துடன் கால் டேக்சி பிடித்துச் சென்று பார்த்த படம். படம் பார்த்து முடித்து விட்டு "இது ஒரு படம்னு வண்டிச் சத்தம் குடுத்து என்னை வேலை மெனக்கெட்டு கூட்டிட்டு வந்திருக்கே"ன்னு எங்க நைனா கிட்ட பாட்டு வாங்கியது வேற கதை :(

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
எனது கல்லூரி நண்பன் செந்தில்குமாரின் வீட்டிலுள்ள ஹோம் தியேட்டரில் பார்த்த அபூர்வ ராகங்கள். பாலச்சந்தர் ஒரு ஜீனியஸ் என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் அவரின் பெரும்பாலான படங்கள் எனக்கு புரிந்ததில்லை. உதாரணமாக அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி, கல்கி. ஒரு கதை ஒன்னு ஞாபகத்துக்கு வருது. ஒரு ராஜா இருந்தாராம் அவருக்கு இது வரை யாருமே அணியாத ஆடை அணிய வேண்டும் என்று ஆசை வந்ததாம். இதை பயன்படுத்திக் கொண்டு நாலு நெசவாளர்கள் ராஜாவின் செல்வத்தை எல்லாம் சுரண்டி ஒரு ஆடை நெய்தார்களாம். அது புத்திசாலிகளின் கண்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொன்னார்களாம். ராஜாவும் அந்த ஆடையை அணிந்து கொண்டு ஊர்வலம் சென்றாராம். காண்பவர்கள் எல்லாம் ஆடை தெரியவில்லை என்று சொன்னால் நாம் முட்டாள்கள் ஆகிவிடுவோம் என்றெண்ணி ஆடையைப் பற்றி ஆஹா ஓஹோவென்று புகழ்ந்தார்களாம். அப்போ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சின்னப்பையன் சொன்னானாம் "ஐயயோ! ராஜா அம்மணமா வர்றாரு டோய்". பாலச்சந்தர் படங்களைப் பார்த்து பாராட்டுபவர்களை நான் கேலி செய்வதாக தயவு செய்து தவறாக எண்ணிவிட வேண்டாம். அவருடைய சில படங்களைப் பார்த்து அது புரியாமல் சூப்பரா இருக்கேனு சொல்லி என்னை நானே ஏமாத்திக் கொண்டு அந்த ராஜாவுடைய நிலைமை எனக்கு நாளை வந்துவிடக் கூடாதே என்ற எண்ணத்திலே தான் உண்மையைச் சொல்கிறேன்... ஏனோ எனக்கு அவர் அபூர்வ ராகங்கள் மூலமாகவும், சிந்து பைரவி மூலமாகவும் என்ன சொல்ல வருகிறார் என்று இதுவரை புரிந்ததில்லை. தெரிஞ்சுக்க உண்மையிலேயே மிக மிக ஆர்வமா இருக்கேன். என் ஃபிரெண்டு என்ன சொன்னான் என்றால் அப்படம் ஒரு விதமான Dark Humour என்று, சமூகத்தில் இருக்கும் போலித்தனங்களை நையாண்டி செய்திருக்கிறார் என்று சொன்னான். மிக மிக சீரியஸாக கேட்கிறேன்...அபூர்வ ராகங்கள் மூலமாக கே.பி. என்ன சொல்ல வந்திருக்கிறார் என யாராச்சும் எனக்கு கொஞ்சம் விம் போட்டு விளக்குங்க.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
மிகவும் தாக்கியது அப்படின்னு நிரந்தரமா எதுவுமே கெடையாது. இரவு காட்சி தேவர் மகன் படம் பாத்து விட்டுத் திரும்பும் போது ஒரு ரெண்டு தலையையாச்சும் சீவனும் போல இருந்துச்சு. ஒவ்வொரு முறை மகாநதி பாக்கறப்ப எல்லாம் ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியா ஆகியிருக்கேன். அன்பே சிவம் ஏன் சரியா ஓடலைங்கிறது இன்ன வரைக்கும் பிடிபட மறுக்குது(அதே மாதிரி சின்னத்தம்பி, ஜெயம் எல்லாம் எப்படி கூரையைப் பிச்சிக்கிட்டு ஓடுச்சுன்னு நெனக்கும் போது மண்டை காயுது) கார்த்திக் நடித்த அரிச்சந்திரா வந்த போது நான் பார்த்ததிலேயே மிகவும் ரசித்த நகைச்சுவை படம் இது தான் என்று அப்போது தோன்றியது. தண்ணீர் பம்பைப் பிடுங்கி வில்லனை ரஜினி அடிக்கும் காட்சி ஏனோ எனக்கு பாட்சா படத்திலேயே மிகவும் பிடித்தது. அது வந்த காலத்தில் பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னை பொறுத்த வரை படம் பார்த்து முடித்த பின்னரும் அதை பற்றி ஒருமுறையாவது நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ பகிர்ந்து கொள்ளச் செய்யும் எல்லா சினிமாக்களுமே என்னை தாக்கிய சினிமாக்கள் தான் என்று கொள்ள வேண்டும்.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
1992ஆம் ஆண்டு வெளிவந்த அண்ணாமலை படத்துல ரஜினி அரசியல்வாதிகளைத் தாக்கிப் பேசிருக்காருன்னு, படத்துக்குக் கொஞ்ச நாள் தடை விதிச்சதும், அதுக்கப்புறம் படம் தடைகளைத் தாண்டி வெளிவந்து நல்லா ஓடுனதும், இந்தப் படத்தை எழும்பூர் ஆல்பட் தியேட்டர்ல பாத்ததும் ஞாபகத்துக்கு வருது. அரசியல்வாதிகளைத் தாக்கிப் பேசிருக்காருங்கன்னு ரெகுலரான ஒரு மசாலா படத்தை வச்சி அரசியல் பண்ணி பயங்கரமா ஓட வச்சதும் ஞாபகத்துக்கு வருது. இது என்னை தாக்குன அரசியல் சம்பவம் எல்லாம் கெடையாது...எதோ சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன்.

மறைந்த திரு.ரிச்சர்ட் மதுரம் அவர்கள் நடித்த 'காமராஜர்' திரைப்படத்துல அப்போ முதல்வரா இருக்கற காமராஜர், தன்னுடைய உதவியாளர் கிட்ட பேசற மாதிரி ஒரு காட்சி வரும். "அசைவம் சாப்பிடணும் போல இருக்குய்யா. ரெண்டு முட்டை அவிச்சி கொண்டா"ம்பாரு காமராஜர். இன்னொரு காட்சியில "வீட்டுல வெயில் ரொம்ப அதிகமா இருக்குப்பா. புழுக்கம் தாங்கலை. ஒரு டேபிள் ஃபேன் இருந்தா நல்லாருக்கும்"னு சொல்ற தன்னோட தாய்கிட்ட "என்னோட சம்பளத்துல இப்ப அதெல்லாம் என்னால முடியாது. அப்புறம் பாக்கலாம்"அப்படீம்பாரு. முதல்வர் பதவியில இருக்கற ஒருத்தர் அசைவம் சாப்பிடனும்னு நெனச்சி அவிச்ச முட்டையைச் சாப்பிடறதும், உதவி கேக்கற தன்னைப் பெத்த தாய்க்கே அப்புறம் பாக்கலாம்னு சொல்ற நிலையில வாழ்ந்தாருங்கிறதையும், வசதியில்லாத போதும் நேர்மையா வாழ்ந்ததை நெனைக்கும் போதும் உண்மையிலேயே ஆச்சரியமாயிருக்கு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
சின்ன வயசுலே முப்பரிமாணத்துல பாத்த மை டியர் குட்டிச்சாத்தான் படம் கொடுத்த பிரமிப்பை மாதிரி வேறு ஒரு எந்த திரைப்படமும் கொடுத்ததில்லை. குட்டிச்சாத்தான் பூ கொடுக்கறது நம்ம முகத்து கிட்ட வர்றதை பாத்து சந்தோஷப்பட்டதும், மண்டை ஓடு தானாக எம்பி ஓடுவது போன்ற காட்சியைக் கண்டு பயந்ததும் இருபது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டாலும் இன்னும் நினைவில் நிற்கின்றது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்டிப்பா உண்டு. அதை விட வேற என்ன வேலை? குமுதம், ஆனந்த விகடன், குங்குமம், வாரமலர் பத்திரிகைகள்னு இல்லாம Indiaglitz.com, Behindwoods.com போன்ற வலைத்தளங்கள்னு இல்லாம வலைப்பூக்களில் வரும் மொக்கைப் பட விமர்சனங்கள்னு இல்லாம எல்லாத்தையும் வாசிக்கிறது தான்.

7.தமிழ்ச்சினிமா இசை?
ராஜா. சினிமா இசைங்கிறதை மீறி, இசை மூலமாகும் வெளிப்படும் உணர்வுகளோட என்னை அடையாளங் கண்டுகொள்ளும்படியதாக நான் உணர்ந்த இசை ராஜாவினுடையது மட்டுமே. ஆனாலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையையும் ரசிப்பதுண்டு. ஹாலிவுட்டைப் பொறுத்தவரை இந்திய திரைப்படங்கள் "Musicals" எனும் வகையில்(genre) அடக்கம். எனக்கு ஏனோ நம் படங்கள் மியூசிக்கல்களாக இருப்பது தான் பிடிக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
தாக்கறதை மட்டும் எந்தவொரு கேள்வியிலயும் விடவே இல்லை. தற்காலத்தில், வேறு இந்திய மொழி படங்கள்ன்னா பெரும்பாலும் இந்திப் படங்கள் தான். தில்லி தூர்தர்ஷன்ல ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30மணிக்கு வந்து கொண்டிருந்த படங்களில் மராட்டி, மலையாளம், பெங்காலி என அனைத்து மொழி படங்களையும் பார்த்திருக்கிறேன். சொல்லிக்கிற மாதிரின்னு பாத்தா ஸ்மிதா பாட்டில் தேன் எடுக்கற மலைவாசிப் பெண்ணா நடிச்ச "ஜைத் ரே ஜைத்" அப்படீங்கற மராட்டி மொழிப் படம் நினைவிலிருக்கு. மலையாளத்துல பாத்த "பஞ்சவடி பாலம்" அப்படிங்கற படம் ஒரு அருமையான அரசியல் நையாண்டி(satire). மம்முட்டியின் "ஒரு வடக்கன் வீரகதா", மோகன்லாலின் "ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லா", நெடுமுடி வேணுவின் "ஸ்வாதி திருநாள்" ஆகிய படங்கள் நினைவிலிருக்கு. இந்தியில சொல்லனும்னா பணத்துக்காக தன் மகனையே தெரியாமல் கொலை செய்யும் ஒரு ராஜஸ்தானிய தம்பதியினரைப் பற்றிய"பரிணதி" அப்படீங்கற படமும் போர்ச்சுகலிடமிருந்து கோவா விடுதலை பெறும் நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட ஷாம் பெனிகலின் "த்ரிகால்" அப்படீங்கற படங்களையும் சொல்லலாம். உலக மொழி சினிமா இதுவரை ஒன்னு கூட முழுசா எதையும் பாத்ததில்லை(ஹாலிவுட்டில் தயாராகும் ஆங்கிலப் படங்களைத் தவிர்த்து).


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
சின்னப்பையனா இருக்கும் போது இரவு சாப்பிடாம அடம்பிடிச்சா, வீட்டுக்கு வர அப்பாவின் நண்பர்களை, இந்த மாமா தான் ரஜினிகாந்த், இந்த மாமா தான் பாக்கியராஜ், இந்த மாமா தான் கமல்ஹாசன்னு ஏமாத்தி எங்கப்பாவும் எங்கம்மாவும் எனக்கு ஏமாத்தி சோறு ஊட்டுனது நினைவுக்கு வருது. அந்த வகையிலே ரஜினி, கமல், பாக்கியராஜ் எல்லாம் எங்க வீட்டுக்கே வந்து நான் சோறு தின்ன உதவி செஞ்சிருக்காங்க. நேரடித் தொடர்புன்னு பாத்தா இது மட்டும் தான். மீண்டும் செய்வீர்களாவா? எனக்கே குழந்தை இருக்கும் போது ரஜினி, கமல், பாக்கியராஜ் எல்லாம் வந்து எனக்கு சோறு ஊட்ட வழி பண்ணாங்கன்னா, என் பொண்ணே என்னை சும்மா விடமாட்டா. தமிழ்ச் சினிமா மேம்பட இது உதவுமான்னு கேட்டா என்ன சொல்லறது? அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்திஷ் மாமா வந்துருக்காங்க, இளைய தளபதி விஜய் மாமா வந்துருக்காங்க, புரட்சித் தளபதி விஷால் மாமா வந்துருக்காங்கன்னு ஏமாத்தி என் பொண்ணுக்கு சோறு ஊட்ட தமிழ்ச் சினிமா உதவும்னு வேணா சொல்லலாம்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நல்ல கதையும், பொழுதுபோக்கு அம்சமும் கொண்ட படங்களை எடுக்கத் திறமையான இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஆனால் ரசிகன் என்பவன் ஒரு கேனைப்பய, அவனுக்கு இவ்வளவு கொடுத்தால் போதுமானதுன்னுனு குறைத்து மதிப்பிட்டு படம் எடுப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்றாலும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் நல்லா இருக்குன்னு தான் நெனைக்கிறேன்.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
உண்மையைச் சொல்லனும்னா அப்படியொரு நிலைமையை நினைச்சு பார்க்கவே கஷ்டமாயிருக்கு. இப்படியொரு நிகழ்வுனால எந்த ஒரு மாற்றமும் என் வாழ்வில் இருக்காது என்று சொன்னால் அது பொய் சொல்வதைப் போன்றது தான் என்பது என் தாழ்மையான எண்ணம். ஏன்னா நாம பொறந்ததுலேருந்து சினிமாங்கிறது நம் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்து வந்திருக்கிறது. சினிமா நடிகர்கள் கடைதிறப்பு விழாவுக்கு வருகை தந்தால் கூட்டம் அதற்காகவே இன்னமும் கூடத் தான் செய்கிறது, ஒரு நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று தலைப்பு செய்தி வெளியிடும் பத்திரிகை கூடுதலாக விற்கத் தான் செய்கிறது, தலை போகிற அவசரத்தில் சென்று கொண்டிருந்தாலும் சினிமா சுவரொட்டிகளைக் கவனிக்க இன்னமும் நம் கண்கள் தவறுவதில்லை. நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று பல்வகையான இசைவடிவங்கள் இருந்தாலும் இசை என்றாலும் சினிமா இசை தான் நம் நினைவுக்கு வருகிறது. இவ்வளவு ஏன்...ஓசியிலே எம்பி3 தரவிறக்கம் செய்யறதுன்னா கூட சினிமா பாட்டோட எம்பி3க்களைத் தான் தரவிறக்கம் செய்யறோம். நம்மள்ல எத்தனை பேரு எம்.எஸ்.சுப்புலட்சுமி பாட்டையோ இல்லை விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாட்டையோ டவுன்லோடு பண்ணறோம்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சினிமாவுக்கும், சினிமா நடிகர்களுக்கும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கும் எப்போதும் ஒரு "larger than life" அந்தஸ்து இருந்தே வந்திருக்கிறது. இந்த நிலை சரி என்றோ தவறென்றோ சொல்ல வரவில்லை. ஆனால் அடுத்த ஒரு வருடத்திற்குள் "சினிமா இல்லாமை" எனும் கைய்யறு நிலை வந்தால் கண்டிப்பாகப் பாதிப்பு இருக்கும் என்பது என் எண்ணம். அப்பாதிப்பு எத்தகையது என்று என்னால் அறுதியிட இயலவில்லை. மலையாளத் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நின்று பீடி பிடிக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் இருப்பது போல, நம் தமிழ் திரையுலக ரசிகர்கள் மாறும் போது வேண்டுமானால் ஒரு வருஷம் தமிழ் சினிமா இல்லைன்னாலும் ஒரு பாதிப்பும் இருக்காதுன்னு வேணா சொல்லலாம்.

இச்சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் ஐவர்.

1) புரட்சி போர்வாள் தேவ்
2) புரட்சி டியூப் ரெயில் நடிகர் டுபுக்கு அண்ணாச்சி
3) புரட்சி அட்மின் ராயல் ராமசாமி
4) புரட்சி கலாய்ப்பாளர் தளபதி சிபி
5) புரட்சி புலி நாகை சிவா

Tuesday, October 14, 2008

J&J - அக்டோபர் மாத PIT போட்டிக்கு

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக நானே(!) பண்ண விளம்பரம் ஒன்னு கீழே இருக்குது பாருங்க. அது தான் இந்த மாச PIT போட்டிக்கான எனது புகைப்படம். நானே படம் எடுத்து, நானே ஒரு கான்செப்ட் தயாரிச்சு, நானே காப்பி எழுதி செஞ்சிருக்கேன். எப்படி இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க. தாங்கள் தயாரிக்கும் பொருட்களின் தன்மையைப் பற்றியோ அதன் மூலக்கூறுகளைப் பற்றியோ, அல்லது பயன்களைப் பற்றியோ அதிகமாக எதையும் சொல்லாமல், சில சமயம் தாங்கள் எத்தனை பொருட்களைத்(Products) தயாரிக்கிறோம், எங்கள் நிறுவனம் எவ்வளவு பெரிது, எத்தனை நாடுகளில் இருக்கிறோம், எத்தனை வருடங்களாக இருக்கிறோம் என்று சும்மா வெயிட் காட்டுவதற்காகக் கூட பல சமயங்களில் நிறுவனங்கள் சில கேம்பெயின்களை நடத்துவார்கள். அத்தகைய ஒரு வெயிட் காட்டும் விதமான விளம்பரம் தான் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்காக என் கற்பனையில் நானே தயாரித்தது. என் மகளுக்காக வாங்கி வைத்திருந்ததை எல்லாம் அடுக்கி ஒரு படம் புடிச்சி ஒப்பேத்தியாச்சு :)


இது முன்ன எடுத்து வைச்சது. சும்மா பார்வைக்கு.


படங்களின் மேலே க்ளிக் செய்து பார்த்தால் இன்னும் பெரிதாகத் தெரியும்.

Friday, September 26, 2008

செம்மறி ஆடும் மறந்துபோனவைகள் சிலவும்

ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி மகளைப் பார்க்கறதுக்குச் சென்னைக்குப் போயிருந்தப்போ, எங்க வீட்டு கிட்ட ஒரு கூட்டமா செம்மறி ஆடுங்க மேஞ்சிக்கிட்டு இருந்ததை பாத்தேன். செவப்பு ரோமம் கொண்ட அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தோடவே கூடவே ரெண்டு கறுப்பு ஆடுங்களும் மேஞ்ச்சிக்கிட்டு இருந்துச்சு. சின்ன வயசுல வெள்ளையா இருக்கற ஆடுங்களை மட்டும் தான் வெள்ளாடுன்னு சொல்லுவாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா பெரும்பாலான வெள்ளாடுங்க கறுப்பாத் தான் இருக்கும்னு அப்புறமாத் தான் தெரிஞ்சிச்சு. வெள்ளையா இருக்கற ஆடுங்க தான் வெள்ளாடுன்னு நெனச்சிட்டு இருந்தத் தப்பான அந்த எண்ணத்தைப் போலவே, சின்ன வயசுல (கிட்டத்தட்ட ஒரு இருபது வருஷத்துக்கு முந்தி) கேட்ட சில பாடல்களைப்(சினிமா பாடல்கள் தான்) பத்தியும் தப்பான எண்ணம் இருந்துச்சு. சுத்தமாக வெறுத்தப் பாடல்களா இல்லாது போனாலும், இந்த சில பாடல்களை விரும்பி ரசிச்சு எல்லாம் கேட்டதில்லை. கண்டிப்பா விருப்பப் பாடல்களா இருந்தது கெடையாது.

சரி, இப்ப நேரா விஷயத்துக்கு வரேன். வீட்டு கிட்ட அந்த செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் பாத்ததும் ஒரு பாட்டு நியாபகத்துக்கு வந்துச்சு. சரின்னுட்டு இணையத்துல அந்த பாட்டைத் தேடிக் கண்டுபிடிச்சி கேட்டேன். சின்ன வயசுல கேட்டப்போ பெருசா மனசைக் கவராத அந்தப் பாட்டு இப்போ ஏனோ கேக்கறதுக்கு நல்லாருக்கற மாதிரி இருந்துச்சு. இது மாதிரி வேற என்னென்ன பாட்டுங்க மனசுக்கு வருதுன்னு யோசிச்சப்போ, ஒரு சில பாட்டுங்க தேறுச்சு. அந்த பாட்டுங்களை நீங்களும் கேட்கறதுக்காகத் தேடிப் பிடிச்சு கொண்டாந்திருக்கேன். இதெல்லாம் ரொம்ப இனிமையான பாடல்கள்னோ, படம் ரிலீஸான காலக்கட்டத்துல ரொம்ப ஹிட்டான பாடல்கள்னோ சொல்லமாட்டேன். எங்கேயோ எப்பவோ கேட்ட மாதிரி இருக்கலாம். பிடிச்சாலும் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்.

முதல் பாட்டு, செம்மறி ஆட்டுக் கூட்டத்தைப் பாத்ததும் ஞாபகம் வந்த அந்த பாட்டு. உழவன் மகன் படத்துல விஜயகாந்தும், ராதிகாவும் பாடற மாதிரி வர்ற ஒரு பாட்டு. ஆட்டைக் கருப்பொருளா வச்சி தலைவனும், தலைவியும் தங்கள் காதலைப் பகிர்ந்துக்கற ஒரு பாட்டு. "ஆடு விடு தூது"ன்னு கூட சொல்லலாம்:) பாடலுக்கு இடையில சின்னப் பையன் குரல்ல ரெண்டு வரி வரும் "இய்யா இய்யா இய்யாவோ எல்லாம் தெரிஞ்ச ஐயாவோ" அப்படின்னு. அந்த போர்ஷன் ரொம்ப வித்தியாசமா இருக்கும். பாடலில் வரும் பெண்குரலைக் கேட்டுட்டு அது B.S.சசிரேகாவோன்னு நெனச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது பாடுனவங்க பேரு விஜயான்னு. இவங்க வேற எதாச்சும் பாட்டு பாடிருக்காங்களான்னு தெரியலை. "செவத்த பொண்ணு இவத்த நின்னு தவிக்கலாமோ சொல்" அப்படின்னு ஒரு வரி வரும். "இவத்த" அப்படீங்கற வார்த்தை பிரயோகத்தை அப்பல்லாம் நான் எங்கேயும் கேட்டதேயில்லை. மதுரை பக்கம் உபயோகிப்பாங்க போலிருக்கு. ரொம்ப நாளைக்கப்புறம் விருமாண்டி படத்துல இளையராஜா எழுதுன "சண்டியரே சண்டியரே" பாட்டுல "அங்கிட்டு போனீன்னா ஒன் றெக்கையா பிப்பாங்கிய, இவத்த ஓடியா இவத்த ஓடியா" அப்படின்னு வரும். இதே உழவன் மகன் படத்துல டி.எம்.எஸ் குரலில் வர்ற "பூந்தோட்டம் தாங்காதம்மா பூப்பறிக்க நாளாகுமா?"ங்கிற பாட்டும் நல்லாருக்கும். அந்த பாட்டுல முதல் பகுதியில டி.எம்.எஸ் பாடற முதல் சில வரிகள் ரொம்ப நல்லாருக்கும். "தோல்வி என்ன கால்களுக்கு" அப்படின்னு முடியும். மத்த வரிகள் சரியா நினைவில்லை. மனோஜ் பட்நாகர் - கியான் வர்மா அப்படீங்கற ரெண்டு வடக்கத்தி இசையமைப்பாளர்கள் இசையமைச்சிருந்தாலும் சர்ப்ரைசிங்கா நம்மூரு நேட்டிவிட்டியைப் பாடல்கள்ல மெயிண்டேன் செய்து இருக்கற மாதிரி இருக்கும். "பொன்நெல் ஏரிக்கரையோரம் பொழுது சாயுது நதியோரம்" அப்படீங்கற பாட்டும் ஜல்ஜல்னு மாட்டு வண்டி ஓடற சந்தத்துக்குக் கேக்க நல்லாவே இருக்கும்.

படம் : உழவன் மகன் (1987)
இசை : மனோஜ்-கியான்
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம், விஜயா

Get Your Own Hindi Songs Player at Music Plugin

அடுத்த பாட்டும் மனோஜ்-கியான் இசையமைப்புல வெளியான ஒரு படத்தோட பாட்டு தான். படத்தோட பேரு தாய்நாடு. சத்தியராஜோட கரியர்ல ரொம்ப முக்கியமானதொரு படம்னு நெனக்கிறேன். ஏன்னா இந்தப் படத்துக்கப்புறம் தான் அவரு கதாநாயகனா நடிக்க ஆரம்பிச்சாருன்னு நெனக்கிறேன். மனோஜ்-கியானுக்கு டி.எம்.எஸ் ரொம்ப ஃபேவரிட் போல. இந்தப் பாட்டையும் இந்தப் படத்துல வர்ற இன்னொரு பாட்டையும் டி.எம்.எஸ் தான் பாடியிருப்பாரு. அதே மாதிரி அவங்க இசையில வெளியான செந்தூரப்பூவே படத்துலயும் சில பாடல்களை டி.எம்.எஸ் தான் பாடிருப்பாரு. "ஒரு முல்லை பூவனம்"அப்படின்னு தொடங்கும் இந்த பாட்டும் துள்ளல் இசையோட அந்த காலத்து இந்தி இசையமைப்பாளரான ஓ.பி.நய்யர் அவர்களின் இசையில் வந்த பாடல்களை நினைவு படுத்தற மாதிரி இருக்கும். இதே படத்துல இருக்கற இன்னொரு பாட்டான "தாய்மாமன் கைகள் பட்டு"ங்கிற பாட்டைத் திருவல்லிக்கேணில எங்க பக்கத்து வீட்டுல குடியிருந்த சிலோன் கார ஆண்ட்டியோட தம்பிகள் ரெண்டு பேரும் அடிக்கடி கேசட்ல போடுவாங்க. அதனால அதை கேட்ட நியாபகம் நல்லா நெனைவிருக்கு,

படம் : தாய்நாடு (1987)
இசை : மனோஜ்-கியான்
பாடியது : T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா


Get Your Own Hindi Songs Player at Music Plugin


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மனோஜ் கியான் இசையில செந்தூரப்பூவே படத்துல ஒரு பாட்டு ஒன்னு இருக்கு. "கானக்கரிசலிலே களை எடுக்கும் பூங்குயிலே, நீலக் கருங்குயிலே நிக்கட்டுமா போகட்டுமா" அப்படின்னு வரும். இந்தப் பாட்டை இணையத்துல எங்கே தேடியும் கெடைக்கலை. ஆனா பாடல் வரிகள் திண்ணை இணையதளத்துல எதோ ஒரு கட்டுரையில கையாளப் பட்டிருக்கறதை பாத்தேன். அநேகமா இந்தப் பாடலின் வரிகள், எதோ ஒரு உண்மையான நாட்டுப்புறப் பாட்டுலேருந்து எடுத்துருப்பாங்க போலிருக்கு. இந்தப் பாட்டு நடுவுல ஒரு ஃபீமேல் கோரஸ் ஒன்னு வரும். "வாராங்க வாராங்க பன்னாடி வாராங்க! பச்சை குடை பிடிச்சு பயிர் பாக்க வாராங்க"அப்படின்னு வரும். "பன்னாடி" அப்படீங்கற வார்த்தைக்கு அர்த்தம் என்னான்னு அப்போ எங்க நைனாவைக் கேட்டதும் நியாபகத்துக்கு வருது. கோயம்புத்தூர் பக்கம் பண்ணையாரைத் தான் அப்படி சொல்லுவாங்கன்னு சொன்னாரு. யாராச்சும் இந்தப் பாட்டைக் கேட்டிருக்கீங்களா? இந்தப் பாடலைக் கேக்கறதுக்கான சுட்டி எங்கேயாச்சும் இணையத்துல கெடைச்சதுன்னா தெரியப்படுத்துங்க. இந்தப் பாட்டைக் கண்டுபிடிக்க தேன்கிண்ணம் வலைப்பூ அமைப்பாளர்களுக்கும், கானா பிரபா அண்ணாச்சிக்கும் ஒரு ஸ்பெசல் ரிக்வெஸ்ட்.

அடுத்து வர்ற பாட்டு, அது வெளியான காலத்துலே உண்மையாவே நான் வெறுத்த ஒரு பாட்டு. இந்தப் பாட்டின் முதல் வரிகளைக் கேட்டாலே, பாட்டை நிறுத்திடுவேன் இல்ல அப்படி நிறுத்த முடியலைன்னா வேற எங்கேயாச்சும் போயிடுவேன். உண்மையிலேயே எரிச்சலைக் கெளப்புற பாட்டா இருந்துச்சு அப்போ எனக்கு. ஈரமான ரோஜாவே படத்துல ஹீரோவா நடிச்ச சிவா பெரிய மீசை, கையில தடி எல்லாம் வச்சிக்கிட்டு பாடற ஒரு சோகப்பாட்டு இது. இந்தப் பாட்டு புடிக்காமப் போனதுக்குக் காரணம்னு சொல்லனும்னா இதன் முதல் வரிகள் - "எட்டு மடிப்பு சேலை இடுப்பில் சுத்தப்பட்ட ஒரு சோலை" இது தான். எங்கேயாச்சும் இடுப்புல சோலையைச் சுத்த முடியுமா, சுத்தக் கிறுக்குத் தனமா பாட்டு எழுதிருக்கான்னு அப்போ நெனச்சேன். உண்மையிலேயே அந்த வித்தியாசமான கற்பனை தான் அந்தப் பாட்டை இன்னும் நியாபகத்துல நிறுத்தி இருக்கு. எனக்கு தான் இந்தப் பாட்டு அப்போ புடிக்காதே ஒழிய, தென்னாற்காடு மாவட்டத்துல இருக்கற எங்க கிராமத்துல இருக்கற சின்னப்பசங்களுக்கு எல்லாம் அப்பவே ரொம்ப புடிச்ச பாட்டா இது இருந்துச்சு. எவனைப் பாத்தாலும் "எட்டு மடிப்பு சேலை எட்டு மடிப்பு சேலை"ன்னு பாடிக்கிட்டு சுத்திட்டு இருப்பானுங்க. சௌந்தர்யன் இசையில ஒரு சிம்பிளான நல்ல பாட்டு இது. இப்போ புரியுது நல்ல பாட்டுன்னு. எஸ்.பி.பி. இந்தப் பாட்டுக்குத் தன் குரலால உயிர் கொடுத்துருப்பாரு கேட்டுப் பாருங்க. இதே மாதிரி கரகாட்டக்காரன் படத்துல வர்ற "பாட்டாலே புத்தி சொன்னார்" பாட்டும் அப்போ எனக்கு புடிக்கவே புடிக்காது. "பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்" அப்படின்னு பாட்டு வரும் போதே "பாட்டாலே பருப்பு கடைஞ்சாரு"அப்படின்னு பக்கத்து வீட்டு அண்ணன்(அதே ஆண்ட்டியோட தம்பி தான்) தானாவே ஒரு லைனை சொருகினதைக் கேட்டதால வந்த வெறுப்பு தான் அது. ஆனா உண்மையிலேயே சூப்பர் பாட்டு அது. "எனக்கு தான் தலைவர்கள் என் ரசிகர்கள் அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்" அப்படீங்கற வரிகளில் இவங்க இத பாடச் சொன்னாங்க, அவங்க அதை பாடச் சொன்னாங்கன்னு எல்லாம் சொல்லிட்டு கடைசியில முத்தாய்ப்பா முடிக்கிறது ரொம்ப நல்லாருக்கும். அந்த கடைசி வரிகளைக் கேக்கும் போது எனக்கு என்னமோ வானத்தில் பல இடங்களில் ஒரு விமானம் வானளாவ பறந்து விட்டு அருமையா லேண்ட் ஆன மாதிரி இருக்கும்.


படம் : முதல் சீதனம் (1992)
இசை : சௌந்தர்யன்
பாடியது : S.P.பாலசுப்பிரமணியம்


Get Your Own Hindi Songs Player at Music Plugin

மேலே இருக்கற பாட்டுங்க எல்லாம் அவ்வளவு பிரபலம் ஆகாத பாடல்கள். ஹிட்டுன்னு சொல்ல முடியாது. ஆனா வி.எஸ்.நரசிம்மன் அவர்கள் இசையில் வெளிவந்த பாட்டு ஒன்னு இருக்குதுங்க. இந்தப் பாடலை அதிகமா வானொலிகள்லயோ, டி.விக்கள்லயோ கேட்டுருக்க முடியாது. ஆனா இது ஒரு டாப் க்வாலிட்டி மெலடி பாட்டு அப்படிங்கறதை யாராலயும் மறக்க முடியாது. ஒரு தடவை கேட்டீங்கன்னா மனசுல் நின்னுடும். திரும்பத் திரும்ப கேக்கத் தூண்டும். கே.பாலச்சந்தர் இயக்கத்துல வெளிவந்த கல்யாண அகதிகள் அப்படீங்கற படத்துல வர்ற "மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் என் மவுனத்தை இசையாக மொழிப்பெயர்த்தாய்"ங்கிற பாட்டு தான். திடீர்னு இந்தப் பாட்டு நியாபகத்துக்கு வந்து பாடாப் படுத்துது. பாடாப் படுத்துதுன்னு ஏன் சொல்றேன்னா இந்தப் பாட்டோட டியூனும், இண்டர்லியூட்ஸ் நியாபகத்துக்கு வந்து கேக்கனும்னு ஒரு வெறியை ஏற்படுத்திடுச்சு. ஆனா இணையத்துல எங்கேயும் கெடைக்கலை. கானா பிரபா அண்ணாச்சி தன்னோட ரேடியோஸ்பதி வலைப்பூவுல இந்தப் பாட்டைப் போட்டிருக்காரு. ஆனாலும் எனக்கு அந்த பாட்டு கேக்கலை. உங்களுக்குக் கேக்குதான்னு பாருங்க.

கானா அண்ணாச்சியின் ரேடியோஸ்பதியில் மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் கேட்க...

இந்தப் படம் வெளிவந்த காலத்துல என் கூட படிச்ச பசங்கல்லாம் பாடும் வானம்பாடி, தங்கமகன், காக்கிச் சட்டை, அடுத்த வாரிசு அப்படின்னு மசாலா படங்களை எல்லாம் பாத்துட்டு கிளாசுல வந்து கதை சொல்லும் போது, நான் மட்டும் "கல்யாண அகதிகள்", "அவள் ஒரு தமிழச்சி" அப்படின்னு பாலச்சந்தர் இயக்குன சரிதா நடிச்ச பாடாவதி(அப்போ எனக்கு அப்படித் தான் இருக்கும்) படங்களைப் பாக்கப் போய் பாதியிலேயே தியேட்டர்ல தூங்கிருக்கேன். கூட வேலை செய்யறவங்க "நல்ல படம் பிரஃபஸர் இது"ன்னு சர்டிபிகேட் குடுத்தா தான் எங்க நைனா எங்களைப் படத்துக்கே கூட்டிட்டுப் போவாரு. "அடியே அம்முலு"அப்படின்னு ஆரம்பிக்கும் கவிஞர் வைரமுத்து எழுதுன இந்தப் பாட்டு. எண்பதுகளில் தூர்தர்ஷனில் செய்திகள் வாசித்த ஒருவரே அந்தப் படத்துல ஹீரோவா நடிச்சிருப்பாருன்னு நெனக்கிறேன். அதோட இது நாசரோட முதல் படம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளான கண்மணி பூங்கா, காண்போம் கற்போம், வயலும் வாழ்வோம், முன்னோட்டம், எதிரொலி இதெல்லாம் இந்தப் பாடலோட வரிகளிலேயே வர்றது சிறப்பு. மத்த எந்த பாட்டு புடிக்கலைன்னாலும் இந்தப் பாட்டு உங்களுக்குப் புடிக்கும்.

ரொம்ப நாளா போட்டோ படத்தைத் தவிர வேற எதுவும் நம்ம ப்ளாக்ல போடறதுல்லைங்கற களங்கத்தைத் துடைக்கும் விதமா இந்தப் பதிவு அமையும்னு நம்பறேன்.

Monday, September 15, 2008

அடாலஜ் படிகிணறு - PIT கட்டமைப்பு போட்டிக்காக

மக்களே! பில்டப் எல்லாம் பலமா குடுத்து ஒரு மறுநுழைவு பதிவு போடணும்னு தான் எண்ணம். ஆனா ரொம்ப நாளா எதுவும் எழுதாம் டச்சு விட்டதுனால "தேவர் மகன்" ரேவதி சொல்ற மாதிரி "வெறும் காத்து தாங்க வருது". இது தமிழில் புகைப்படக்கலை குழுமம் அறிவிச்சிருக்குற கட்டமைப்பு புகைப்படப் போட்டிக்கான ஒரு பதிவு, கூடவே 2007 ஆம் ஆண்டின் துவக்கத்தில் குஜராத் மாநிலத்தில் சுற்றி பார்த்த அடாலஜ் எனும் இடத்தைப் பற்றிய ஒரு சிறு பயணக் குறிப்பு.

அடாலஜ் என்னும் இடம் குஜராத் மாநிலத்தில் வணிகத் தலைநகரமான அகமதாபாத்துக்கும், தலைநகரமான காந்திநகருக்கும் இடையே சார்கேஜ்-காந்திநகர் சாலையில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரின் எந்த ஒரு பயணக் கையேட்டை(Tourist Guide)எடுத்தாலும் இவ்விடம் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடம் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. அகமதாபாத்திலிருந்து இவ்விடத்திற்கு அரசு பேருந்துகளில் செல்லலாம், அல்லது நம்மூர் ஷேர் ஆட்டோ போல அகமதாபாத்தில் ஷேர் ஜீப் இயக்குகிறார்கள், அதிலும் செல்லலாம். என்ன ஒன்று ஒரு சீட்டில் ஐந்து பேரைத் திணித்து விடுவார்கள்.

அடாலஜில் நமக்கு காணக் கிடைப்பது ஒரு படிகிணறு. ஆங்கிலத்தில் இதை Stepwell என்று சொல்கிறார்கள். குஜராத்தி மொழியில் வாவ்(Vav) என்றும் இந்தியில் பாவ்டி(Bhaoli) என்றும் சொல்கிறார்கள். சாதாரண ஒரு கிணற்றை இப்படியெல்லாம் கலைநயத்துடன் அழகாகக் கட்ட முடியும் என்பதைக் கண்டு வியந்து போனேன். இக்கிணறை அரசக் குடும்பத்தினர் நீராடப் பயன்படுத்தினர் என்று அங்கு சென்று தெரிந்து கொண்டேன். ஆனால் விவசாயத்துக்கு நீர்பாசனத்துக்காகவும் இவ்வகை கிணறுகள் பயன்படுத்தப்பட்டதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

அடாலஜ் படிகிணறு - அறிவிப்பு பலகை

சாதாரண ஒரு கிணற்றில் எப்பேர்ப்பட்ட வேலைபாடுகள் பாருங்கள். அந்த காலத்துல ஆணிபுடுங்கறது எல்லாம் வேறுவிதமா இருந்துருக்கு :(

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் Sandstone என்னும் கல்லில் வேலைபாடுகள் செய்யப்பட்ட பல புராதன சின்னங்கள் உள்ளன. தற்கால கட்டுமானங்களான ஸ்வாமிநாராயண் கோயில்(துப்பாக்கிச் சூடு புகழ்) மற்றும் பல இந்து, சமண கோவில்களிலும் இத்தகைய அதிசயத்தக்க வேலைபாடுகளைக் காணலாம்.

படிகிணறுச் சுவற்றில் ஜோடிகிளிகள்.

மேலே இருக்கற படம் தான் போட்டிக்கு. படிகிணறு செல்வதற்கு அழகிய வேலைபாடுகள் நிறைந்த ஒரு மாளிகையின்(மாளிகைன்னு சொன்னா மிகையாகாது)வழியாகச் செல்ல வேண்டும். அதன் முகப்புத் தோற்றம் தான் இது. Horizontal(தமிழ்ல என்னங்க)ஆகவும் பல அடுக்குகளைக் கொண்டது இம்மாளிகை. பாத்தா தெரியுதுல்ல...நிழல்கள் படத்துல பூங்கதவே தாழ்திறவாய் பாட்டுல வர்ற மாதிரி நுழைவாயிலுக்குள்ள நுழைவாயில். இந்த பல்லடுக்கு Horizontal Layerகளின் கடைசி லேயரில் தான் படிகிணறு இருக்கின்றது. Horizontalஆக மட்டுமில்லாம Verticalஆகவும் ஐந்தடுக்கு கொண்டது இந்த அடாலஜ் படிகிணறு.

மேலே குறிப்பிட்டுள்ள மாளிகை வழியாக படிகிணறுக்குச் செல்லும் வழி.

படி கிணறு போகும் வழியை மேலிருந்து ஃபோகஸ் செய்து எடுத்த படம்.

ஐந்தடுக்கு கொண்ட படிகிணறின் பிரமாண்டத்தை மேலே உள்ள படத்தில் காணலாம். எட்டு கோணங்களைக் கொண்ட இக்கிணறின் சுற்றளவை வான் நோக்கி எடுக்கப் பட்ட இப்படத்தின் மூலமாக அரிதியிடலாம். உண்மையிலேயே மிகப் பெரிய ஒரு கட்டிடம் இந்த படிகிணறு. இந்தப் படத்தை கிணற்றின் நீர் துவாரம்(Water Hole) அருகே நின்று கொண்டு எடுத்தேன். சுற்றிலும் சுவர்களில் கண்கவரும் அழகிய வேலைபாடுகளும், இப்படிகிணறின் பிரம்மாணடமும் உங்கள் மனதைக் கண்டிப்பாகக் கவரும். அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் அடாலஜ் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு இடம். ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்த பதிவு எழுதியிருக்கேன். பதிவைப் பத்தியும் படங்களைப் பத்தியும் உங்க மேலான கருத்துகளைச் சொல்லிட்டு போங்க. அப்புறம்...படங்கள் மேலே க்ளிக்கி பாத்தா இன்னும் கொஞ்சம் பெருசாத் தெரியும்.

Thursday, August 28, 2008

எங்கள் புதிய அடையாளம்

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

ரேணுகா-மோகன்ராஜ் ஆகிய எங்கள் இருவரையும், தாய்-தந்தை என்று அடையாளம் கண்டு கொள்ள கடந்த 23ஆம் தேதி, சனிக்கிழமை(23-08-2008), மாலை 3.35 மணிக்குச் சென்னையில் எங்கள் மகள் பிறந்தாள் என்ற இனிப்பானச் செய்தியைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். குழந்தைக்கு "அர்ச்சனா" என்று பெயர் சூட்டி இருக்கிறோம்.


மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் அலைந்து கொண்டிருந்தமையால் உடனே பதிவிட இயலவில்லை. தொலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்ட நண்பர்களுக்கும், தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு மகிழ்ந்த தலைவியாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, July 13, 2008

ஒரு ஆண்டன் செகோவ் கதையும் ஒகேனக்கல் பயணமும்

பல வசந்தங்களுக்கு முன்னதான ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை அது. வீடு வாசல், தோட்டம் துறவு, கன்னுக்குட்டி பன்னிக்குட்டி இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு புது தில்லியில் வேலை பார்க்கும் என்னை போன்ற பேச்சிலாத பையன்கள் தங்குவதற்காக எங்கள் அலுவலகத்தினர் கொடுத்திருந்த அந்த வீட்டில், எனது அப்போதைய உற்றத் தோழியான வெறுமையுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். வெறுமைக்கும் என் துணையானது சலிப்பினை உண்டாக்க, தொலைக்காட்சியின் துணையினைத் தேடிக் கொள்ளும் படி என்னை பணித்தாள். நோக்கம் ஏதுமின்றித் தொலைக்காட்சியின் அலைவரிசைகளை மாற்றிக் கொண்டிருந்த போது தான் தூர்தர்ஷனின் அவ்வலைவரிசை கண்ணில் பட்டது. ஆண்டன் செகோவ் எனும் புகழ்பெற்ற உருசிய(உக்ரேனிய என்பதே சரியானது) எழுத்தாளரின் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு இந்தி தொலைக்காட்சித் தொடர் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. "செகோவ் கி துனியா"(Chekhov ki Duniya) எனும் பெயருடைய அத்தொடரை நான் சிறுவனாக இருந்த போது சென்னையில் பார்த்திருந்ததும் நினைவுக்கு வந்தது. இத்தொடரில் செகோவ் எழுதிய சிறுகதைகளை மையமாகக் கொண்டு ஓவ்வொரு வாரமும் ஒவ்வொரு கதை வரும். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகான மறு ஒளிபரப்பு என்றாலும், ஏனோ அத்தொடரைப் பார்ப்பது அன்று எனக்கும் என் தோழிக்கும் பிடித்திருந்தது.

சரியாக அத்தொடர் ஆரம்பிக்கும் வேளையில், என்னுடன் அவ்வீட்டில் தங்கியிருந்த என்னைப் போன்ற இன்னொரு பேச்சிலன் ஞாயிறு மதியத் தூக்கத்திற்குப் பின் துயிலெழுந்து வந்தான். வந்தவனது பார்வை நான் பார்த்துக் கொண்டிருந்த அத்தொடரின் மீது படிந்தது. தூர்தர்ஷன் என்பது ஏதோ கேவலமான சேனல் என்று நினைத்தானோ என்னவோ தெரியலை, என்னிடம் எதுவும் கேட்காமல் ரிமோட்டினை எடுத்து அலைவரிசை மாற்றத் துவங்கினான். கடுப்பான நான்"என்ன பண்ணறே?" என்று கேட்டேன். "சேனல் மாத்திக்கிட்டிருக்கேன்"என்றான் சர்வசாதாரணமாக. "நான் பாத்துக்கிட்டிருக்கிறது உனக்கு தெரியலையா?" என்றேன். "வீ சேனல் வைக்கப் போறேன். இதையா பாக்கப் போறே?"என்று ஏளனமாகக் கேட்டான். "ஆமாம், இதை தான் பாக்கனும். உனக்கு வேணும்னா அரை மணி நேரம் கழிச்சு வா" என்று சற்று கோபமாகவே சொன்னேன். ரிமோட்டைக் கீழே வைத்து விட்டு வேண்டா வெறுப்பாக உட்கார்ந்து தூர்தர்ஷனில் அத்தொடரை என்னோடு சேர்ந்து அவனும் பார்த்தான். பார்த்து முடித்து விட்டு "செம டச்சிங்கா இருந்தது. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கை ஒவ்வொரு மாதிரி இருக்கில்ல? வீ-சேனல்ல பாத்த பாட்டையே பாக்கறதுக்காக, நல்ல ஒரு கதையை மிஸ் பண்ண இருந்தேன்"என்று மிகவும் நெகிழ்ந்து போய் சொன்னான்.

அவனை அந்தளவு நெகிழச் செய்ய கதை இது தான். எழுத்தாளர் ஒருவர் இருப்பார். அவருடைய வாழ்வில் பல இன்னல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பார். ஒரு மனமாறுதலுக்காக ஒரு நாள் மாலை வேளையில் கடற்கரைக்குச் செல்வார். எதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும் அவரை ஒரு குரல் திரும்பிப் பார்க்கச் செய்யும். நீளமான கோட்டும் தொப்பியும் அணிந்த ஒரு மனிதன் "ஐயா! இந்த இனிய மாலை வேளையில் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு காட்டட்டுமா?"என்று கேட்பார். இந்த கோட் அணிந்த மனிதனாக நடித்தவர் லில்லிபுட் என்ற நடிகர். கமல்ஹாசன் நடித்த 'சாகர்' என்ற இந்தித் திரைப்படத்தில் "ஓ மாரியா" என்ற பாடலில் கமலுடன் ஆடுவாரே குள்ளமான ஒரு ஆள், அவர் தான் இந்த லில்லிபுட். "எனக்கு ஆயிரம் பிரச்சினைகள். என்னை கொஞ்சம் தனியாக இருக்க விடுங்கள். பொழுதுபோக்கெல்லாம் எனக்குத் தேவையில்லை" என்பார் எழுத்தாளர். "இல்லை சார்! நானும் மிகுந்த கஷ்டத்தில் இருக்கிறேன். எனக்கும் பணம் மிகவும் அவசியமாகத் தேவை படுகிறது. இரண்டு ரூபிள் கொடுத்தால் போதும். உங்கள் பொழுதுபோக்குக்கு வழிசெய்கிறேன். உங்கள் மனதுக்கு நான் காட்டும் பொழுதுபோக்கு வித்தை பிடித்திருந்தால் மட்டுமே பணம் கொடுக்கவும்" என்பார் கோட் மனிதர். "இரண்டு ரூபிளுக்கு என்ன வித்தை காட்டுவீர்கள்" என வேண்டாவெறுப்பாகக் கேட்பார் எழுத்தாளர். "அதோ தெரிகிறதே கடல், அதில் மூச்சை அடக்கி நீண்ட நேரம் மூழ்கி இருக்கும் வித்தையை உங்களுக்குக் காட்டுகிறேன்"என்பார். "நீங்கள் கடலில் மூழ்குவதைப் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை" என்று கூறுவார் எழுத்தாளர்.

"ஐயா! அப்படியெல்லாம் சொல்லாதீங்க. ரொம்ப கஷ்டமான நிலையில இருக்கேன். நான் காட்டும் வித்தை உங்களுக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நீங்கள் எனக்கு பணம் கொடுத்தால் போதும்" என்று எழுத்தாளரைக் கெஞ்சுவார் கோட் மனிதர். "சரி! உங்கள் வித்தையைக் காட்டுங்கள். நீங்கள் கூறியது போல எனக்கு உங்கள் வித்தை பிடித்திருந்தால் மட்டுமே இரண்டு ரூபிள் தருவேன்" என்று சொல்வார் எழுத்தாளர். அவர் கூறியதற்கு உடன்பட்டு விட்டு கடலில் குதிப்பார் கோட் மனிதர். மூச்சினைப் பிடித்துக் கொண்டு ஒரு சில மணித்துளிகள் கடலில் மூழ்கி இருந்துவிட்டு, மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார். கரையில் நின்று கொண்டிருக்கும் எழுத்தாளரை நோக்கி "ஐயா! என் வித்தை பிடித்திருந்ததா?"என்பார். "இதில் ஒன்றும் சிறப்பாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை" என பதிலிறுப்பார் எழுத்தாளர். "சரி ஐயா"என்று கூறிவிட்டு மறுபடியும் கடலில் மூழ்குவார் கோட் மனிதர். முன்னை விட நீண்ட நேரம் கடலில் மூழ்கியிருந்து விட்டு மறுபடியும் மூச்சு வாங்குவதற்காக மேலே வருவார் கோட் மனிதர். எழுத்தாளரோ "உங்கள் வித்தையில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை" என்பார். இது போல இன்னுமிரண்டு மூன்று முறை, கோட் மனிதர் நீண்ட நேரம் கடலில் மூழ்குவதும், எழுத்தாளர் "உங்கள் வித்தை எனக்கு பிடிக்கவில்லை"என்று சொல்வதும் நடக்கும். இதற்குப் பின் மூச்சு வாங்குவதற்காக மேலே வரும் போது கோட் மனிதருக்கு மிகப் பலமாக மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். "ஐயா! இந்த முறை நான் காட்டும் வித்தை உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்காமல் இருக்காது. வருகிறேன்" என்று கூறிவிட்டு கடலில் மூழ்குவார் கோட் மனிதர். கடலில் மூழ்கிய மனிதன் நீண்ட நேரமாகியும் மூச்செடுக்க மேலே வரமாட்டார். நேரம் சென்று கொண்டேயிருக்கும். எழுத்தாளரும் "வழக்கத்திற்கு மாறாக வெகு நேரம் ஆகியும் இம்மனிதர் ஏன் மேலே வரவில்லை" என யோசிக்கத் துவங்குவார். காலமும் சென்று கொண்டேயிருக்கும். அது வரை பெரிதாக அம்மனிதரைப் பற்றி அக்கறை காட்டாத எழுத்தாளரின் மனம் கவலை கொள்ளத் தொடங்கும். கடற்கரையில் குறுக்கும் நெடுக்கும் நடக்கத் தொடங்குவார். "ஐயா! நீங்கள் காட்டிய வித்தை போதும். தயவு செய்து மேலே வாருங்கள். நீங்கள் கேட்ட இரண்டு ரூபிளைக் கொடுத்து விடுகிறேன். மேலே வந்துவிடுங்கள்" எனக் கடலை நோக்கிக் கத்துவார் எழுத்தாளர். தொடர்ச்சியான அவருடைய கத்தலுக்கும் கதறலுக்கும், கடல் அலைகளின் ஓசையைத் தவிர எந்தவொரு பதிலும் இருக்காது. இவ்வாறாக முடியும் அக்கதை. "The Drowned Man" என்பது அக்கதையின் பெயர். பல விதமான எண்ணங்களையும், இரு கனத்த இதயங்களையும் அம்மாலை வேளையில் விட்டுச் சென்றது தொலைக்காட்சியில் கண்ட அக்கதை.

சமீபத்தில்(இவ்வாண்டு மே மாதத்தின் கடைசி நாள்) ஓகேனக்கல் சென்றிருந்தேன். உயர்ந்த பாறைகளுக்கு இடையில் காவிரி ஆறு நீர்வீழ்ச்சியாகிச் சீற்றத்துடன் கீழே விழுந்து ஓடுவதைக் காண்பதற்காகவும் பரிசலில் பயணிப்பதற்காகவும் ஏராளமானச் சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள். புகைப்படம் எடுப்பதற்காகப் பைத்தியக்காரர்கள் போல அலையும் என்னை போன்றோரின் கவனத்தை உடனடியாகக் கவருபவர்கள், பாறையின் உச்சியில் நின்று கொண்டிருக்கும் சிறுவர்கள். பரிசலில் வருபவர்களைப் பார்த்ததும் "சார்! ஃபைவ் ருபீஸ் ஒன்லி, ஜம்ப்" என்று சைகை காட்டுவார்கள். நீங்கள் சரி என்றால் போதும், உடனே பாறை மீதிருந்து ஆற்றில் குதிப்பார்கள். பின்னர் உங்கள் பரிசல் அருகில் நீந்தி வந்து காசை வாங்கிக் கொண்டுச் சென்று விடுவார்கள்.

ஐந்து ரூபாய் தருவதாக வாக்களித்து இச்சிறுவர்களை பாறையின் மீதிருந்து குதிக்கச் செய்து எடுத்த படங்கள் கீழே. இவை எல்லாமே பரிசலில் சென்று கொண்டிருக்கும் போது எடுத்தவை.

பாறை மீது குதிக்கத் தயாராக இருக்கும் சிறுவன்.

குதிக்கும் போது...

என்னுடைய Flickr பக்கத்தில் நான் இட்டிருக்கும் படம் - பிற்தயாரிப்பு செய்தது.

குதிப்பதில் ஒவ்வொருவருக்கும்...

ஒவ்வொரு ஸ்டைல்

குதித்து விட்டு நீந்தி வந்த ஒரு சிறுவன். அவனுடன் பேச்சு கொடுத்த போது எட்டாம் வகுப்பு படிப்பதாகவும், விடுமுறை நாட்களில் இது போல பாறை மீது குதிப்பதை விளையாட்டு போல செய்து வருவதாகவும் சொன்னான்.

நிற்க. ஒகேனக்கல்லில் அச்சிறுவர்களைப் புகைப்படம் எடுத்துவிட்டுத் திரும்பும் போது, பாறை மீதிருந்து இச்சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து குதிக்கிறார்களே, எவ்வளவு அபாயகரமானது அது? அவர்களுடைய உயிருக்கு யார் பொறுப்பு என்று மனம் யோசிக்கத் தொடங்கியது. ஒரு நிறுவனத்தில் நிரந்தர வேலையில் இருக்கும் போது மிகச் சிறிய ஆபத்து உள்ள பணியில் ஈடுபடுவது என்றால் கூட தலைகவசம் அணிய வேண்டும், உங்கள் பேரில் PF கணக்கு இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட வரைமுறைகள். ஐந்து ரூபாய் சில்லறை காசுக்காகப் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கும் இச்சிறுவர்களுடைய உயிரின் விலை என்ன என்று எண்ணத் தொடங்கினேன். போதாக் குறைக்குச் சில வருடங்களுக்கு முன் தூர்தர்ஷனில் கண்ட அந்த ஆண்டன் செக்கோவ் கதையும் நினைவுக்கு வந்தது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் இது குறித்து பதிவெழுதும் எண்ணமும் அப்போதே உதித்தது. சற்று நேரம் கழித்து, இவ்வளவு எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை, பையன்கள் பாக்கெட் மணிக்காக ஜாலியாகக் குதிக்கிறார்கள், நாமும் நம் மனதுக்குப் பிடித்த வண்ணம் படங்களை எடுத்து வந்துவிட்டோம். இதற்கு மேல் இது குறித்து அதிகமாக யோசித்து கவலை பட வேண்டியதில்லை என்று நினைத்து இச்சிறுவர்களைக் குறித்தான நினைப்பைக் கிடப்பில் போட்டேன்...

...Flickrஇல் வேறொரு புகைப்படக்காரர் எடுத்த ஒகேனக்கல் பாறை மீதிருந்து குதித்துக் கொண்டிருக்கும் சிறுவனின் படத்தைக் காணும் வரை. அதில் ஒரு வெளிநாட்டவர் சொல்லியிருந்த கருத்து மிகவும் வருத்தமடையச் செய்தது. பாறை மேலிருந்து குதிப்பதற்கு இச்சிறுவர்கள் ஐந்து ரூபாய் வாங்குவார்கள் என அறிந்த அவர் "எல்லாவற்றிற்கும் இக்காலத்தில் காசு வாங்குகிறார்கள். Its a sick world we live in" என்று சொல்லியிருந்தார். அதைப் படித்ததும் "Sick comment of a heartless westerner" என்று தான் எனக்கு தோன்றியது. அதோடு பல எண்ணங்களையும் கிளப்பி விட்டது அந்த கமெண்ட். உலகத்தின் எந்த ஒரு மூலையிலும் ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு அபாயகரமானச் செயலில் யாரும் இறங்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். வெளிநாடு செல்லும் போது டாலருக்கும் யூரோவுக்கும் நாம் ரூபாய் கணக்கு போடுவது போல, இந்த ஐந்து ரூபாய்க்கு டாலர்/யூரோ கணக்கு போட்டோமானால் ஒன்-டென்த் ஆஃப் எ அமெரிக்கன் டாலர் என்றோ ஒன்-ஃபிஃப்டீன்த் ஆஃப் எ யூரோ என்று தான் வரும். ஒரு மனித உயிரின் விலை ஐந்து ரூபாய்க்குக் கூட ஈடானதில்லையா? இல்லை எனில் இந்தியர்கள் என்றால் அவ்வளவு இளக்காரமா? இதே மாதிரி பாறை மீது குதிப்பதை அமெரிக்காவிலோ, அல்லது வேறொரு ஐரோப்பிய நாட்டிலோ ஒரு சிறுவன் செய்கிறான் என்றால், வெறும் ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு செய்வானா? இல்லை அந்த கமெண்ட் இட்ட அவ்வெளிநாட்டவர் எதிர்பார்ப்பது போல ஓசியில் தான் குதிப்பானா? பாறை மீதிருந்து குதிக்கும் அபாயகரமான விளையாட்டுக்குத் துணை போக வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மேலே நான் சொல்லியிருப்பதைப் படித்தாலே அது புரியும். அவ்வளவு அபாயகரமானச் செயலை அச்சிறுவர்கள் செய்வதை ரசித்துத் தானே பலரும் படம் எடுக்கிறார்கள். அபாயகரமான அச்செயலுக்கு வெறும் ஐந்து ரூபாய் கொடுப்பதற்குக் கணக்கு பார்க்கும் அந்த மனப்பான்மையைத் தான் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

ஒரு மனிதன் உயிரைப் பணயம் வைத்து செய்யும் சாகசங்கள் தான் இன்னொரு மனிதனைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. ஹூடினி, டேவிட் ப்ளெயின் போன்ற சாகசக்காரர்களின் புகழே இதற்கு சான்று. அதே போல சார்லி சாப்ளின், லாரல் அண்ட் ஹார்டி, என்.எஸ்.கிருஷ்ணன், நாகேஷ் தொடங்கி இக்கால வடிவேல், விவேக் வரை காமெடியன்கள், அடுத்தவர்களைச் சிரிக்க வைப்பதற்கு செய்யும் மிக எளிமையான உத்தி, அடிவாங்கி/அடிபட்டு விழுவது. ஒருவன் அடிவாங்கி விழுவதை நினைத்துச் சிரிக்கும் மனித மனது, அவன் கஷ்டத்தில் இருக்கும் போது அவனுக்கு உதவ மறுக்கிறது. நான் கஷ்டத்தில் இருக்கிறேன், எனக்கு உதவி செய் என்றொருவன் கேட்பதை பிச்சை என்று வரையறுக்கிறோம், சாகசம்/வித்தை காட்டி ஒருவன் பொருள் செய்ய நினைத்தலையும் பிச்சை என்கிறோம். கோட் மனிதன் இரண்டு ரூபிள் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டிருந்தாலோ, அல்லது ஓகேனக்கல்லில் சிறுவர்கள் ஐந்து ரூபாய் கொடுங்கள் என்று கேட்டு வந்திருந்தாலோ அதற்கு என்ன பெயர் கொடுப்போம் என நாம் அனைவரும் அறிவோம். இரண்டு ரூபிள் என்பது செக்கோவ் கதையில் வரும் எழுத்தாளருக்குப் பொழுதுபோக்குக்கு செலவழிக்கும் ஒரு சிறு தொகை, ஆனால் அதுவே அந்த கோட் மனிதருக்கு வாழ்வையும் சாவையும் நிர்ணயிக்கும் விஷயம். அதே போல ஐந்து ரூபாய் என்பது என்னைப் போன்றவனுக்கு ஃபோட்டோ எடுப்பதற்குச் செலவாகும் சில்லறை காசு. ஆனால் அதுவே வேறொருவனுக்கு அன்றாடம் அடுப்பெரிய வழிசெய்யும் பொருளாக இல்லாது போனாலும், சில்லறை காசை விட அதிக முக்கியத்துவம் உடைய ஒன்றாகவே இருக்கின்றது, எனவே தான் அபாயம் பற்றி எல்லாம் ஏதும் யோசிக்காமல் பாறை மீதிருந்து ஆற்றில் குதிக்கிறான்.

கோர்வையற்ற பல எண்ணங்களையும், என் கோபத்தையும் கொட்டுவதாகவும் இப்பதிவு அமைந்துவிட்டது. சில மாதங்களாக எதையும் எழுதாத நான், இன்று இரவு இரண்டு மணியாகியும் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், என் மூளையின் வசம் நானில்லாமல், என் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று தான் பொருள். பதிவு நீளமாத் தான் இருக்கு, முடிஞ்சாப் படிச்சிட்டு உங்கக் கருத்துகளையும் சொல்லிட்டுப் போங்க.

Monday, July 07, 2008

இரவு நேரம் - PIT சூலைத் திங்கள் போட்டிக்காக


அண்மையில் சென்னைக்குச் சென்றிருந்தேன். எத்தனையோ முறை மெரினா கடற்கரைக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் திருவான்மியூர் கடற்கரைக்கு ஒரு சில முறை தான் சென்றிருக்கிறேன். அங்கே எடுத்த படம் இது. சிறுவயதில் ரசித்த விஷயங்களை சிறிது வயதான பிறகு மறுபடியும் கண்டுகொள்வதென்பதும் ஒரு மகிழ்ச்சி தான். எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சென்னையில் இது போல தள்ளுவண்டியில் சோன்பப்டி விற்பவர்களைக் கண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் தெருவில் இவ்வாறு சோன்பப்டி விற்பவர்களைக் காணமுடிவதில்லை. கடற்கரையில் சென்றால் மட்டும் காணும் வாய்ப்பிருக்கிறது. முன்னாளில் பெட்ரோமேக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் விற்றுக் கொண்டிருந்தவர்கள், இப்போதெல்லாம் பேட்டரி விளக்கின் வெளிச்சத்தில் விற்பதைக் காணலாம். சோன் பப்டி வாங்கிச் சாப்பிடத் தோன்றவில்லை என்றாலும், அக்காட்சியைப் படம் பிடித்துக் கொள்ள கண்டிப்பாகத் தோன்றியது.


பெங்களூரில், எங்கள் வீட்டின் அருகில் தனியாக நின்றிருந்தத் தள்ளுவண்டி. கார்களும், பேருந்துகளும் சாலையில் ஏற்படுத்திய வெளிச்சத்தில் இவ்வண்டியைத் தனியாகப் படம் பிடித்துக் கொள்ளத் தோன்றியது. வண்டிக்குச் சொந்தக்காரர் சுற்றும் முற்றும் தென்படாததும் வசதியாக அமைந்தது.

இரண்டு ரூபாய்க்குச் சோளம் வாங்கிக் கொண்டு க்ளிக்கிய படம் இது. சோளத்தைத் தெளிவாகப் ஃபோகஸ் செய்ததால், சாலையில் செல்லும் வாகனங்களினால் படத்திற்குப் பெரிதாக இடையூறு ஏதுமில்லை.

தங்கமணி காய்கறி வாங்கிக் கொண்டிருந்த போது ஒரு ஓரமாக நின்று கொண்டு க்ளிக்கித் தள்ளியதில் தேறிய ஒரு படம். தெருவில் செல்பவர்களையும், இது போன்று பொருள்களை விற்பவர்களையும் படத்திற்குப் போஸ் தரச் சொல்லிக் கேட்பதில் இருக்கும் கூச்சம் இன்னும் விலகிய பாடில்லை. தங்க்ஸ் காய்கறி வாங்கிக் கொண்டிருந்த தைரியத்தில் எடுத்த படங்கள் இவை.

க்ளிக்கிக் கொண்டிருந்த போது நிகழ்ந்த உரையாடல்.

தங்க்ஸ் : "ஏங்க! காலிஃப்ளவர் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "வாழைக்காய் வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "முள்ளங்கி வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "சேப்பங்கிழங்கு வாங்கட்டுமா?"
நான் : "உம்ம்ம்"
தங்கஸ் : "அது தான் உங்களுக்குப் பிடிக்காதே?"
நான் : "பரவால்லை...வாங்கு...வாங்கு..."(மனதில் எக்ஸ்போசர், காம்போசிஷன், சப்ஜெக்ட், ஃபோகஸ் இது பற்றிய கணிப்புகள் ஓடிக் கொண்டிருக்கின்றன...சேப்பங்கிழங்கு என்பது ஷட்டர் ஸ்பீடு என்று அநேகமாகக் காதில் விழுந்திருக்க வேண்டும்)
தங்க்ஸ் : "வாங்கி முடிச்சாச்சு. காசு குடுங்க"

சே! இவ்வளவு சீக்கிரம் வாங்கி முடிச்சாச்சான்னு நெனச்சிக்கிட்டே காசைக் கொடுத்துக் கொண்டே...வாங்கி வைத்திருந்த காய்கறிகளைப் பார்க்கிறேன்.

நான் : "சேப்பங்கிழங்கு தான் புடிக்காதுன்னு தெரியுமில்லை. அதை போய் வாங்கிருக்கே?"
தங்க்ஸ் : "காய் வாங்கப் போகும் போது கூட கேமரா கொண்டு வராதீங்கன்னு சொன்னா கேட்டா தானே?"
நான் : (
முதலில் இருக்கும் சோன்பப்டி விற்பவர் படத்தைப் போட்டிக்குக் கொடுக்கலாம்னு இருக்கேன்.

Friday, June 13, 2008

A Day at Work - ஒரு முயற்சி

ஜூன் மாத PIT புகைப்படப் போட்டி அறிவித்த பிறகு எடுக்கப்பட்ட படங்கள் சில
1. ஒகேனக்கல் - படகைச் சுமந்து செல்லும் போட்மேன்

2. ஐந்து ரூபாய் கொடுத்தால் பாறை மீதிருந்து தண்ணீரில் குதிக்க தயாராக இருக்கும் சிறுவன்

3. ஐந்து ரூபாய் சிறுவன் at work.

4. ஒசூர் - துணி வியாபாரி

5. கப்பன் பார்க், பெங்களூரு - நாய் பொழப்பு

6. கப்பன் பார்க், பெங்களூரு - பலூன் விற்கும் பெண்ணும், குழந்தையும்(அவ்வளவு தெளிவா இல்லை)

முன்பே எடுத்த படங்கள் சில
7. பசவங்குடி, பப்பிள்ஸ் விற்பவர்.

8. பட்டு புடவை நெய்பவர். புடவையின் பெயர் படோலா. இடம் பாடன், குஜராத். ஒரு புடவையின் விலை...அதிகமில்லை ஜெண்டில்மென்...ஒன்லி 90,000 ரூபாய். வருடத்தில் எட்டு புடவைகள் தான் நெய்வார்களாம்.

9. "தால் பாட்டி" சமைச்சிட்டு இருக்காங்க. இடம் - தனேஷ்வர் தேவ், மத்திய பிரதேசம்

10. வேலையில் ஒட்டகம்


இதப் பாத்தா இது தோனுமே - "ஏ. சும்மா உக்காந்துருக்கற நாயையோ, மனுசனையோ போட்டோ எடுத்துட்டு, இவுங்களோட அன்னாட வேலை சும்மா உக்காந்துருக்கறது தான்னு லந்து பண்ணப்பிடாது"...ஹி...ஹி...சும்மா லந்துக்கு

Monday, June 09, 2008

ஜன்னல் கதைகள்

ஆங்கிலத்துல "Great Leveller Great leveller"னு ஒரு பதம்(ஒன்னு தான்) இருக்கு. ஒரு நிகழ்வு அல்லது ஒரு விஷயம் நமக்குள்ள ஏற்படுத்தியிருக்கற தாக்கத்தையோ அல்லது சமூக ஏற்றத்தாழ்வுகளையோ குறைத்து சமமாக்கும் வல்லமை கொண்ட ஒரு விஷயத்தையோ பொருளையோ ஆங்கிலத்துல "Great Leveller"னு சொல்றாங்க. Cricket is a great leveller, Indian Railways is a great leveller, Death the great leveller இப்படின்னு இடத்திற்கேற்றாற் போல இந்த "great leveller" பதம் பல இடங்களில் உபயோகிக்கப் பெறுகிறது. எது எப்படியோ, என்னைப் பொறுத்தவரை "Time is a great leveller" அப்படீங்கறதுல கண்டிப்பா இருவேறு கருத்துகள் கெடையாது. "காலம் என்பது ஒரு மாபெரும் சமனி" அப்படீங்கறது உண்மை இல்லைன்னா ஒரு மூனு மாசத்துக்கு முன்னாடி அந்த சமயத்துல என் மனசுல ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு நிகழ்வை மையமா வச்சி எழுதின "531 பங்காரப்பேட் பாசெஞ்சர்" என்கிற பதிவுக்குப் "பயணம் தொடரும்"னு பந்தாவா இடைவெளி விட்டுட்டு, மூனு மாசமா கெடப்புல போட்டதை கண்டிப்பா நியாயப்படுத்த முடியாது. இதை வெறும் பில்டப்புக்காகச் சொல்லலை. சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பாத்தா இதை விட மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திய பல விஷயங்களைக் கூட "காலம்" என்ற இயந்திரம் நிரவி, சமன்படுத்தி "A thing of the past"ஆக்கியிருக்கிறது. உதாரணத்துக்குக் கீழே உள்ள பதிவுகள்ல சொல்லிருக்கற நிகழ்வுகளைச் சொல்லலாம்.
1. மீள்பதிவுங்ணா
2. உண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு

531 பங்காரப்பேட் பாசெஞ்சருக்கு இடைவேளை விட்டு மூனு மாசம் ஆச்சு. மூனு மாசமா அதை பத்தி எதுவும் எழுதாம இருக்கறதுக்குப் பல காரணங்கள். அதுல முக்கியமானது எழுதனும்னு நெனச்சி உக்காரும் போது ஒன்னுமே தோணாம மண்டைல மசாலா காலியான மாதிரி ஒரு உணர்வு. மனசுல நெனக்கறதை எழுத முடியாத மாதிரி ஒரு 'எழுத்து டிஸ்லெக்சியா:)" பங்காரப்பேட் பேசஞ்சரில் பயணம் செய்த போது கேட்ட தாவணி போட்ட தீபாவளி பாட்டு, புல்லா கி ஜானாங்கிற பஞ்சாபி மொழியில் இருக்கும் சூஃபி பாட்டு , வெளியில வேடிக்கை பாக்கும் போது தெரிஞ்ச காட்சிகள், வைட்ஃபீல்டுல பக்கத்து ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த "பேலஸ் ஆன் வீல்ஸ்" ரயில், இதைப் பற்றியெல்லாம் அடுத்த பதிவுல எழுதனும்னு நெனச்சி வச்சிருந்தேன். ஆனா மூனு மாசம் கேப் விட்டதுனால இப்போ அதையெல்லாம் சொன்னா சுவாரசியமா இருக்காதுங்கிறதால லூசுல விட்டுடறேன். இரயில் பெட்டியின் ஜன்னலுக்கு உள்ளேயும் வெளியேயும் கண்ட, கேட்ட சில சம்பவங்களை/கதைகளைப் பற்றியதே இந்த பதிவு.

இரயில் பயணத்தின் போது காணக் கிடைக்கும் காட்சிகள் வேறெங்கேயும் காணக் கிடைக்காதது. மணிக்கு 80 கி.மீ வேகத்தில் இரயில்வண்டி பயணித்துக் கொண்டிருக்கையில், இரயில் பாதையினை ஒட்டிச் செல்லும் ஒற்றையடி மண்பாதை எங்குச் சென்று சேர்கிறது என்று தெரிந்து கொள்ளும் ஆசை பலமுறை வந்திருக்கின்றது. அதே போல சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளையில் மங்கலாய் தெரியும் வயல்களை ஒட்டிய ஒற்றை குடிசையில் வசிப்பவர்களைப் பற்றியும், யாருமே இல்லாதது போல இருக்கும் அவ்விடத்தில் அவர்கள் என்ன செய்துக் கொண்டிருப்பார்கள் எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் மேலிடும். ஆனால் சில நிமிடங்களிலேயே, என்னுடைய "இப்பயணத்தில்" குடிசையில் வசிக்கும் அம்மனிதர்களைப் பற்றி நான் ஒருக்கணம் நினைப்பது போலவே, அவர்களுடைய "அப்பயணத்தில்" மங்கும் மாலை வேளையில் தனியாகச் செல்லும் இரயில்வண்டியில் பயணிப்பவர்களைப் பற்றி அவர்கள் ஒருக்கணம் நினைத்துப் பார்க்கவும் வாய்ப்புண்டு என்று தோன்றும். ஆனால் வாழ்க்கை என்னும் துரிதமான நம்முடைய இப்பயணத்தில் அடுத்தவரின் "பயணத்தைப்" பற்றி எண்ணிப் பார்க்கவெல்லாம் நேரமேது என்பது போன்றான நெஞ்சை நக்கும் சிந்தனைகளும் வரும். கூடவே இந்த மாதிரியான கவிதைகளின் நினைவும்.

"Stopping by Woods on a Snowy Evening" by Robert Frost

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sounds the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

'காதல் தேசம்'னு ஒரு படம். அப்பாஸ், வினீத், தபு நடிச்சதுன்னு நெனைக்கிறேன். அதுல கிளைமேக்ஸ் காட்சியில் தபுவின் கால் ரயில் தண்டவாளத்தில் மாட்டிக் கொள்ளும். எதிர் திசையில் இருந்து ரயில் வரும். உடனே வினீத் ஓடிச் சென்று தண்டவாளத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒரு 'கொம்பை' அசைப்பார். உடனே ரயில் தடம் மாறி அடுத்த இருப்புப் பாதைக்குச் சென்று விடும். ஹீரோயின் தபு காப்பாற்றப்படுவார். கிட்டத்தட்ட ஆயிரம் பேர் பயணம் செய்யக் கூடிய ஒரு ரயிலின் போக்கையே நிர்ணயிக்கக் கூடிய அந்த இரும்பு விசைக்கு(lever), தமிழ்த் திரைப்படங்களில் ஒரு 'கொம்புக்கு'க் கொடுக்கப்படும் மரியாதை தான் கொடுக்கப் படுகிறது :) ரயில்பெட்டியின் சாளரம் வழியாக வேடிக்கை பார்த்தால் முதலில் தெரிவது இருப்புப் பாதை. பெரும்பாலும், ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் இருந்து நாம் பார்த்தால் இரண்டு இருப்புப் பாதைகள் தெரியும். ரயில்வண்டி, ரயில் நிலையங்களை அடையும் போது கவனித்தால் இரண்டாக இருந்த இருப்புப் பாதை, நாலாக, எட்டாகப் பிரியும். அதோடு ரயில் ஒரு பாதையில் இருந்து இன்னொரு பாதைக்குப் ப்ளாட்ஃபார்ம் நோக்கி மாறுவதை கவனிக்கலாம்.

ஒரு பாதையில் இருந்து இன்னொரு பாதைக்கு ரயிலின் போக்கை மாற்றுவதற்கு "பாயிண்ட்" பயன்படுத்தப் படுகிறது. இந்தப் பாயிண்ட் எப்படி இயக்கப் படுகிறது என்று கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது தாம்பரம் ரெயில்வே யார்டில்(கல்விச் சுற்றுலா..ஹி...ஹி...) காணும் வாய்ப்பு கிடைத்தது. இதை "பாயிண்ட் அடிக்கிறது"ன்னு சொல்றாங்க. மேலே சொன்ன கொம்பை இயக்குவதன் மூலம் தண்டவாளங்களுக்கு இடையே இருக்கும் அகலத்தைக் கூட்டலாம் குறைக்கலாம். சினிமால எல்லாம் காட்டறாங்களே...அந்த மாதிரி எல்லாம் யார் வேணும்னாலும் அந்தக் கொம்பை அசைத்து ரயிலின் போக்கை மாற்ற முடியுமா என்று எங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த பணியாளரிடம் கேட்டோம். "நீங்க வேணா பாயிண்ட் அடிச்சிப் பாருங்களேன்"னு சொன்னார். பாயிண்ட் அடிக்கிறதை விடுங்க, உண்மையிலே அந்த விசையை எங்களால் அசைக்கக் கூட முடியவில்லை. ரயிலின் போக்கை மாற்றி ஹீரோவையோ ஹீரோயினையோ காப்பாற்றி விடுவது மாதிரியான காட்சிகளைப் பாக்கும் போதெல்லாம் தோணுவது "ஒரு வேளை பாயிண்ட் அடிக்க டிரெயினிங் எடுத்துருப்பாங்களோ?":)

ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? ரயில் ஸ்நேகம் என்பது தற்காலிகமானது, நிலையில்லாததுன்னு எல்லாம் கேட்டிருந்தாலும் படிச்சிருந்தாலும், ரயிலில் சந்திக்கிற சிலரிடம் சில பெர்சனலான விஷயங்களைக் கூட பகிர்ந்துக் கொள்வோம். 'காதல்' திரைப்படம் கூட, இயக்குநர் பாலாஜி சக்திவேலுடன் ரயிலில் பயணித்த சகப்பயணி ஒருவர் பகிர்ந்துக் கொண்டச் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தான் உருவானது என்று படித்திருப்பீர்கள். இதுபோன்ற பகிர்வுகள் ஒரு புறமிருக்க, நம்மைப் பற்றிய சிறந்தவற்றை மட்டுமே சக பயணிகளுடன் பகிர்ந்துக் கொள்வதை உணர்ந்திருக்கிறீர்களா? சாதாரண நாள்ல பேப்ப்ரைப் பிரிச்சா விளையாட்டுச் செய்திகளை மட்டுமே படிக்கிற ஆள் கூட ரயில்ல போகும் போது அறிவியல், அரசியல்னு பூந்து வெளையாடுவாப்ல. ரயில்ல பயணம் செய்யற அந்த சில மணிநேரங்கள்ல, எதிர்ல இருக்கறவர் நம்மளைப் பத்தி ஒரு நல்ல அபிப்ராயம் மட்டுமே எடுத்துட்டு போக வேண்டும் என்ற எண்ணமா இருக்குமோ? எட்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்துல படிச்ச கதை ஒன்னு நியாபகம் வருது. ரஸ்கின் பாண்ட்(Ruskin Bond) அவர்கள் எழுதியது. "The Eyes have it"ங்கிறது கதையோட பேரு. நம்ம கதையின் நாயகன் ரயிலில் மசூரிக்குப் போயிட்டு இருப்பாரு. அவருக்குச் சுத்தமா கண்ணு தெரியாது. ரயில் ஒரு ஸ்டேஷன்ல நிக்கும் போது ஒரு பொண்ணு ஏறும். மனுஷன் பொண்ணோட கடலை போட்டுக்கிட்டே போவாரு. ஆனா தான் கண் பார்வையில்லாதவர் அப்படீங்கறதை காண்பிச்சுக்கக் கூடாது அப்படீங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாரு. தான் நினைச்ச மாதிரியே, தனக்கு பார்வையில்லைங்கிறதை அந்தப் பொண்ணுக்குத் தெரியாத மாதிரியே சமாளிச்சுடுவாரு. அந்தப் பொண்ணு இடையில வர்ற ஸ்டேஷன்ல இறங்கிப் போயிடும். அதுக்கப்புறம் இன்னொரு ஆளு ஏறுவாரு. நம்ம ஹீரோவுக்குத் திடீர்னு ஒரு சந்தேகம் வந்துரும். இறங்கிப் போன பொண்ணு தன்னோட கூந்தலைப் பிரித்து விட்டிருந்தாளா இல்லை கொண்டையாக இட்டிருந்தாளா என்று? இதை புதுசா வந்த ஆளு கிட்ட கேப்பாரு நம்ம ஹீரோ. அதுக்கு அவரு "கூந்தலை எல்லாம் நான் கவனிக்கலைங்க. நான் கவனிச்சது அந்தப் பெண்ணோட கண்கள். அவ்வளவு அழகான கண்கள். ஆனால் அவற்றுக்குச் சுத்தமாகப் பார்வை இல்லை. நீங்கள் கவனித்தீர்களா?". ஒரு ரயில் பயணத்தில் சந்தித்துக் கொள்ளும் பார்வை இல்லாத இருவர், தங்கள் குறைபாட்டினைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நடத்தும் உரையாடலை வெகு சுவாரசியமாக விவரித்திருப்பார் பாண்ட்.

ரயில் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னர், முன்பதிவு பட்டியலைச் சரி பார்ப்பது தொன்று தொட்டு நடந்து வரும் ஒரு வழக்கம். ஆனால் அந்த தொன்று தொட்ட பழக்கத்தைக் கடைபிடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். வயசானவங்களா இருந்தா அப்பர் பெர்த்தை யாரு தலையில கட்டிட்டு லோயர் பெர்த் வாங்கலாம்னு திட்டமிடுறதுக்கா இருக்கும். வயசு பசங்களா இருந்தா கடலை போடறதுக்கு எதாச்சும் வழி இருக்கான்னு செக் பண்றதுக்கா இருக்கும். ரெண்டாவதாச் சொன்ன விஷயத்துக்கும் நமக்கும் எப்பவும் எட்டாம் பொருத்தமா இருந்தாலும், படிக்கும் போது புது தில்லியிலேருந்து சென்னைக்கு லீவுக்கு வரும் போது ஒரு வாட்டி எதிர்பாராம இந்த வாய்ப்பு கெடைச்சுது (ஆண்டவா...தங்கமணி கண்ணுல மட்டும் இது படக் கூடாது). தில்லிக்கு பக்கத்துல இருக்கற ஃபரீதாபாத்ல எதோ ஒரு பேரு தெரியாத மெடிக்கல் காலேஜ்ல எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு மேற்படிப்பு(எம்.டி.யா, எம்.எஸ்சான்னு தெரியலை) கவுன்சிலிங்குக்காக தன் அப்பாவோட சென்னைக்குப் போய்க்கிட்டு இருந்தது அந்தப் பொண்ணு. எனக்கு அப்போ தெரிஞ்ச இந்தியெல்லாம் வச்சி, என்னென்னமோ பேசிக்கிட்டு இருந்தேன், பயணக் களைப்பு தெரியக் கூடாதுங்கிற நல்ல எண்ணத்துல மட்டும் :). ஆனா அந்தப் பொண்ணு கிட்ட பேசுனதுக்கப்புறம் தான் தெரிஞ்சது வடமாநிலங்கள்ல இருக்கறவங்க "மதறாஸை"ப் பத்தி வச்சிருக்கற தப்பான எண்ணங்கள் என்னன்னு. இதுல என்ன கொடுமைன்னா அம்புட்டு பெரிய படிப்பு படிச்ச புள்ளைக்கு, தான் கவுன்சிலிங்குக்காகப் போயிக்கிட்டிருக்கற சென்னையில் என்ன மொழி பேசப்படுதுன்னு கூட தெரிஞ்சிருக்கலை. மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில்(எம்.எம்.சி) இருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்திருந்த போதிலும், அது மருத்துவத் துறையில் புகழ்பெற்ற கல்லூரி என்று அறிந்திருந்த போதிலும் அந்தப் பெண்ணிற்குச் சென்னையில் தங்கிப் படிக்க விருப்பம் இருக்கவில்லை. அதற்காக அவள் சொன்ன காரணங்கள் மிகவும் குழந்தைத் தனமாக இருந்தது. முதல்ல சென்னையில் யாரும் ஹிந்தி பேச மாட்டாங்களாம், ஆட்டோ டிரைவர்கள் யாருக்கும் இங்கிலீசு தெரியாதாம், அப்புறம் சாப்பிடுவதற்கு சப்பாத்தி கெடைக்காதாம். அதனால குஜராத் ஜாம்நகர் மெடிக்கல் கல்லூரியில் தான் சேரப் போகிறேன் என்று சொன்னாள் அந்தப் பெண். "தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்"னு பாடின பாவேந்தர் பாரதிதாசன் வழியில் வந்தவன் அல்லவா நான். "என் தாய் மண்ணை இகழ்ந்தவளை அவள் ஃபிகர் என்றாலும் விடேன்"என்று வீறுகொண்டேன். "ஏம்மா தில்லியில் மட்டும் GRE பரிட்சை எழுதிட்டா எல்லாரும் ஆட்டோ ஓட்டறாங்க, நாங்களும் தான் தில்லியில இருக்கும் போது சோத்தைக் கண்ணுலயே பாக்காம தெனம் ரொட்டியே திங்குறோம், டாக்டருக்குப் படிச்சி முடிச்சிட்டு மேற்படிப்பு எல்லாம் படிக்கப் போறீங்க இப்பவும் சப்பாத்தி, மொழி, ஆட்டோகாரன்னு பேசிக்கிட்டு கெடைச்ச நல்ல வாய்ப்பை விட்டுறாதே. எம்.எம்.சி.யில் வாய்ப்பு கெடைச்சும் படிக்கலைன்னா நஷ்டம் உனக்கு தான்"னு என்னால ஆனவற்றை எடுத்துச் சொன்னேன். ஆனாலும் அந்த பொண்ணு புரிஞ்சிக்கிட்ட மாதிரி தெரியலை. வாய்ப்பு கிடைச்சாலும் கிடைக்காட்டினாலும் கடலைக்கும் நமக்கும் எப்பவும் தூரம்னு மட்டும் நல்லா புரிஞ்சது எனக்கு.

சிறுவயதில் ரயில் பயணம் அனுபவம் என்றால் அது பள்ளி விடுமுறை நாட்களில், சென்னையிலிருந்து பெங்களூருக்குத் தாத்தாவைப் பார்த்து வருவதற்கு, பிருந்தாவன் எக்ஸ்பிரசில் பயணம் செய்த அனுபவங்கள் மட்டுமே. காலை 7.15க்குச் சென்னையிலிருந்து தொடங்கி மதியம் ஒன்றரை மணி போல பெங்களூர் சென்று சேரும். மறுவழியில் மதியம் 2.20க்கு பெங்களூரில் இருந்து துவங்கி இரவு 8.15க்குச் சென்னை வந்து சேர்ந்து விடும். ஒரு முறை கோடை விடுமுறையை முடித்துக் கொண்டு பெங்களூரில் இருந்து சென்னைக்குத் திரும்பி வருகையில் நான் கண்ட ஒரு சம்பவம் என்றென்றும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. எனக்கு அப்போது ஒரு பத்து வயது இருக்கும். மதியம் பெங்களூரில் இருந்து புறப்படும் பிருந்தாவன், கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் ஆந்திர மாநிலத்தின் ஒரு சிறு பகுதியைக் கடக்கும். இங்கு ஒரு ரயில்நிலையமும் உள்ளது. குப்பம் என்று அதற்கு பெயர். அப்போதெல்லாம் அது ஒரு காட்டுப் பகுதியைப் போன்று தோற்றமளிக்கும். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் குப்பம் ஸ்டேஷனில் நிற்காது. சிக்னலுக்காக ஒரு நிமிடத்திற்கும் குறைவாக நிற்க வேண்டிய சூழ்நிலை பல நேரங்களில் ஏற்படும். இந்த குப்பம் என்ற ஊர் எதற்கு பெயர் பெற்றது என்றால் மலிவான விலையில் நன்றாகக் கிடைக்கும் காய்கறிகளுக்காக. கத்தரிக்காய், வெண்டைக்காய் முதலான காய்கறிகளை ரயில் நிற்கும் அந்த சில வினாடிகளில் சிறுவர்களும், பெண்களும் பையில் அடைத்து ரயிலில் இருப்பவர்களிடத்தில் விற்பார்கள். பெங்களூரில் இருந்து சென்னை வரும் பயணிகள் பலரும் மலிவான விலையில் கிடைக்கும் இக்காய்கறிகளை வாங்கிக் கொள்வர். பஸ்சானாலும் ரயில் ஆனாலும் வேடிக்கை பார்ப்பதற்காக எப்போதும் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து கொள்ளும் நான், குப்பத்தில் அன்று கண்ட காட்சி என் மனதில் தீராத ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. நான் உக்கார்ந்திருந்த இருக்கை கூட்டத்தின் முன்புறம் உள்ள இருக்கை கூட்டத்தில்(bay) உக்கார்ந்திருந்த ஒரு பயணி சிறுவன் ஒருவனிடத்தில் காய்கறிகளை வாங்கிக் கொண்டார். குப்பத்தில் ரயில் நின்று விட்டு சிக்னல் கிடைத்ததும் புறப்படலானது. "ரயில் கெளம்புதுமா, சீக்கிரம் காசைக் குடுங்க"என்று பையன் சொல்வது கேட்டது. அதன் பிறகு சில்லறை இல்லை என்று அப்பயணி சொல்லவும், ரயில் இன்னும் வேகம் பிடிக்கலானது. "ரெண்டு ரூவாம்மா, காசைக் கீழே போட்டுருங்க, நான் எடுத்துக்கறேன்" என பையன் மறுபடியும் சொல்வதையும் அதற்கு அப்பயணி செவிமடுக்காதிருந்ததும் "காசைக் கீழே போட்டுருங்கம்மா, காசைக் கீழே போட்டுருங்கம்மா"என்று அவன் கத்திக் கொண்டே வண்டியின் பின் ஓடி வந்ததும், அவனுடைய கத்தல் அழுகையாக மாறியதையும், வண்டியின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் அழுது கொண்டே நின்று விட்டதையும், அந்த பையன் ஒரு புள்ளியாக மறையும் வரை நான் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்ததையும் இன்று வரை என்னால் மறக்க இயலவில்லை. "காலம் ஒரு மாபெரும் சமனி" என்பதற்கு விதிவிலக்குகளும் இருக்கத் தான் செய்கின்றன.

நன்னி 1 : வல்லியம்மா - இந்தப் பதிவுக்குத் தலைப்பைப் போன பதிவுல பின்னூட்டமா கொடுத்ததுக்கு
நன்னி 2 : "குருவி ராவணன்" ஸ்ரீ கப்பிகிஷ்ணன் - Levellerன்னா சமனின்னு தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்ததுக்கு

Thursday, May 08, 2008

விரல்களின் ருசி

ஜனவரி 2006 - நான் தமிழில் வலைபதிய ஆரம்பித்த புதிது. அச்சமயத்தில் நான் மிகவும் ரசித்து எழுதிய ஒரு பதிவினைப் படித்துவிட்டு சரவணன் என்ற நண்பர் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார். அப்பதிவுக்கு அப்போது பின்னூட்டங்கள் அவ்வளவாக வரவில்லை எனினும் 'தேன்கூடு' அதிகம் வாசிக்கப்பட்ட இடுகைகளில் இடம்பிடித்தது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'நியூ' படத்தில் பிடித்தது என்ற அப்பதிவில் நண்பர் சரவணன் இட்டுள்ள பின்னூட்டத்தினைக் கீழே பதிகிறேன்.

சரவணன் has left a new comment on your post "'நியூ' படத்தில் பிடித்தது":
வணக்கம்,
கைப்புள்ள நான் வலை பதிவுகளுக்கு புதியவன். இப்பதான் உங்க பதிவுகள் படித்து வருகிறேன். இது மிக நல்ல பதிவு. அன்னையர் தினம் வரும் நெருங்கி வரும் வேளையில் இதை நீங்கள் மீண்டும் பதிவிட வேண்டுகிறேன், அதன் மூலம் எங்கோ நமக்காக காத்திருக்கும் அம்மாக்களின் உண்மை தேவைகளை நமது மக்கள் உணர்வார்கள்.அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. Our presence is the present

அது நாம் அனுப்பும் வாழ்த்து அட்டை, குறுன்செய்தி, அன்பளிப்பு, ஒரு போன் கால் அல்ல என்று நமது மக்கள் உணர்ந்தால் நல்லது. அவள் இன்றும் நமக்கு சோறு ஊட்ட காத்திருக்கிறாள், நாம்தான் வளர்ந்துவிட்டோம் (மறந்துவிட்டோம்?). MGR & மு. கருணாநிதி (அவர்கள் மேல் இருக்கும் விமர்சனங்கள் தனி) புகழுக்கு காரனம் அவர்கள் எப்பொழுதும் தாய் பக்தியொடு இருந்தார்கள். அனைத்தும் அவர்தம் தாயின் அசீர்வாதங்களே. நாம் என்ன அவர்களை விட பெரிய அளவில் பனம் சம்பதிக்க பொகிறோமா.. இல்லை அவர்களை விட நேர பற்றாகுறையா நமக்கு..

மீண்டும் இதை பதிவிடுவேர்கள் என்ற நம்பிக்கையோடு
சரவணன்

சரவணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அப்பதிவினை இங்கு மீண்டும் பதிகிறேன்.

'நியூ' திரைப்படம் சர்ச்சைக்குள்ளாகி ஆபாசமான படம் என்று முத்திரை குத்தப்பட்டு சமீபத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டது அறிந்ததே. அப்படத்தை நான் காணவில்லை எனினும் டிவியில் பார்த்த ஒரு சிறு பகுதியிலேயே என் மனதினைக் கவர்ந்த காட்சி ஒன்று உண்டு.

அது தேவயானி தன் காணாமல் போன் மகனை நினைத்து அழுதுகொண்டே பேசுவதாக அமைந்த ஒரு காட்சி. "என் மகன் எப்போதும் என் கையால் தான் சாப்பிடுவான். சாப்பாடு ஊட்டும் போது சாப்பாட்டை மட்டும் சாப்பிட மாட்டான். என் விரலையும் சேர்த்து தான் சாப்பிடுவான்" - இந்த ஒரு இடத்தில் நிற்கிறார் எஸ்.ஜே.சூர்யா. ஏனேனில் இது நான் அனுபவித்த ஒன்று. வெறும் ரசம் சாதமே ஆனாலும் அம்மா கையால் ஊட்டிக் கோண்டால் எப்போதுமே ஒரு பிரமாதமான தனி ருசியை உணர்ந்திருக்கிறேன். அம்மாவைக் கேட்டால் உன் கையாலேயே நல்லா பெசஞ்சு சாப்பிட்டு பாருன்னு சொல்லுவாங்க. ஆனால் பல முறை முயன்றும் தோல்வி தான்.

தன் கையால் சாப்பிடும் போது கிடைக்காத அந்த ருசி அம்மா கையால் சாப்பிடும் போது மட்டும் எப்படி கிடைக்கிறது...நிஜமாகவே அம்மா விரலை சாப்பிடுகிறோமா? இந்த காட்சியை பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரியப்படுத்துங்களேன்!


அப்பதிவில் நான் இட்டிருந்த ஒரு மறுமொழியையும் இங்கு பதிகிறேன். இப்பதிவில் தனியாக எதுவும் எழுதவில்லை. எல்லாம் கட் அண்ட் பேஸ்ட் தான் :)

"இச்சமயத்தில் நடிகர் சூர்யா 'மதர்ஸ் டே' அன்று ஜெயா டிவியில் டெலிசாய்ஸ் நிகழ்ச்சியில் சொல்லியது நினைவுக்கு வருகிறது. மதர்ஸ் டே அன்னிக்கு நீங்க உங்க அம்மாவுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?னு ஒரு நேயர் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில், நடிகர் என்பதைத் தாண்டி ஒரு மரியாதையை அவர் மேல் ஏற்படுத்தியது. "மதர்ஸ் டே என்று தனியாக எதையும் கொண்டாடுவது கிடையாது. அந்த ஒரு நாள் மட்டும் கார்டோ அல்லது கிஃப்டோ அம்மாவுக்கு வாங்கி கொடுத்து வாழ்த்து சொல்வதில் உடன்பாடு கிடையாது. ஒவ்வொரு நாளும் மதர்ஸ் டேவாக அம்மாவின் அன்பையும் அம்மாவையும் மனதில் வைத்துக் கொண்டால் போதும்" சூர்யா சொன்னது எவ்வளவு உண்மை. நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?"

மனதிற்கு நெருக்கமான அப்பதிவினை மீள்பதிவு செய்யத் தூண்டுதலாக இருந்த சரவணன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, May 07, 2008

குழிக்குள்ள சோடியை இறக்கியாச்சு

அழகான சரி சோடி...



ஆனை மேல அம்பாரி...

கணக்கா வழக்கா கடல் போல் ஏராளம்...




முதல் படம் போட்டிக்கு...மத்ததெல்லாம் ச்ச்ச்சும்மா...:)

Sunday, April 13, 2008

நானும் எனது தனிமையும்

தமிழில் புகைப்படக்கலை ஏப்ரல் மாதப் போட்டி தலைப்பைக் கேள்வி பட்டதும் தலைப்புக்கு ஏத்த படம் எடுக்கனும்னே தோணலை. தலைப்பைக் கேட்டதும் இரெண்டு பாட்டு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. தலைப்புக்கு கீழே இருக்கிற படங்கள் பொருந்துதோ இல்லையோ பாட்டுங்க 'சிக்'னு பொருந்தும்னு நெனக்கிறேன்.

முதல் பாட்டு ஒரு இந்திப் பாட்டு. அமிதாப் பச்சனின் கணீர் குரலில் வரும் ஒரு பாட்டு. வசனம்னு கூட சொல்லலாம். அமிதாப் உணர்ச்சி பூர்வமாப் பேசற வசனத்துக்கு நடுவுல லதா பாடுவாங்க. என்னால முடிஞ்ச அளவுக்கு அமிதாப் பகுதியை மொழிப்பெயர்த்து போட்டுருக்கேன். ஓகேவா இருக்கா?

படம் : சில்சிலா(1981)
பாடல் : ஜாவேத் அக்தர்
இசை : ஷிவ்ஹரி
பாடியது : அமிதாப் பச்சன், லதா மங்கேஷ்கர்

Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு
Tum hoti to kaisa hota, tum yeh kehti, tum voh kehti
நீ இருந்தால் இப்படி நடக்கும், நீ இதை சொல்வாய் நீ அதை சொல்வாய்
Tum is baat pe hairaan hoti, tum us baat pe kitni hansti
நீ இச்செயலால் கோபப்படுவாய், நீ அச்செயலால் எப்படி சிரிப்பாய்
Tum hoti to aisa hota, tum hoti to vaisa hota
நீ இருந்தால் அப்படி நடக்கும் நீ இருந்தால் இப்படி நடக்கும் இப்படியெல்லாம்
Main aur meri tanhaai aksar yeh baatein karte hain
நானும் எனது தனிமையும் அடிக்கடி பேசிக் கொள்வதுண்டு

Yeh raat hai, yeh tumhaari zulfein khuli hui hai
இது இரவா அல்லது பரந்து விரிந்த உனது கூந்தலா?
Hai chaandni ya tumhaari nazrein se meri raatein dhuli hui hai
இது நிலவெளியா அல்லது உன் விழிகளால் வெள்ளையடிக்கப்பட்ட இரவா?
Yeh chaand hai ya tumhaara kangan
இது வெண்ணிலவா அல்லது உன் கைகளால் அலங்கரிக்கப்பட்ட வளையலா?
Sitaarein hai ya tumhaara aanchal
இவை நட்சத்திரங்களா அல்லது உனது புடவை தலைப்பா?
Hawa ka jhonka hai ya tumhaare badan ki khushboo
எனை மோதுவது காற்றின் அலையா அல்லது உன் தேகத்தின் வாசமா?
Yeh pattiyon ki hai sarsaraahat ke tumne chupke se kuch kaha hai
இவை இலைகளின் சலசலப்பா அல்லது உனது உதடுகளின் முணுமுணுப்பா?
Yeh sochta hoon main kab se gumsum
எப்போதிலிருந்து நான் வார்த்தைகளற்று போனேன் என்று நினைத்து பார்க்கும்
Ke jab ki mujhko bhi yeh khabar hai
வேளையில் எனக்கும் இது தெரிந்து தான் இருக்கின்றது
Ke tum nahin ho, kahin nahin ho
நீ இங்கு இல்லை, இல்லவே இல்லையென
Magar yeh dil hai ke keh raha hai
ஆனல் இந்த பாழும் இதயம் சொல்கின்றது
Ke tum yahin ho, yahin kahin ho
நீ இங்கு தான் இருக்கிறாய் இங்கு தான் எங்கோ இருக்கின்றாய் என்று





Get this widget


அடுத்த பாட்டும் இசையைக் குறைச்சு வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மெல்லிசை மன்னர் போட்டுருக்கற ஒரு பாட்டு. எஸ்.பி.பி அப்படியே தன் குரலால் இப்பாட்டுக்கு உயிர் கொடுத்துருப்பார் பாருங்க. எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளில் இதுவும் ஒன்று.

படம் : வறுமையின் நிறம் சிவப்பு
பாடல் : மகாகவி பாரதியார்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியது : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ (2)

(தீர்த்தக்)





போட்டிக்குக் கொக்கு(முதல்) படத்தைக் கொடுக்கலாம்னு இருக்கேன். சரிங்களா?

Wednesday, March 12, 2008

பிரதிபலிப்பு - PIT மார்ச் மாத போட்டிக்காக

படம் 1:

Snow White

படம் 2:

Laughing Buddha

Sunday, March 09, 2008

531 பங்காரப்பேட் பாசெஞ்சர்

கடைசியா இதுக்கு முன்னாடி பயணிகள் தொடர்வண்டியில எப்போ பயணம் செய்தேன்னு ஞாபகம் இல்லை. அநேகமா பயணிச்சதே இல்லைன்னு தான்னு நெனக்கிறேன். ஆனா நேற்று எந்த வித முன்னேற்பாடோ, அவசியமோ இல்லாமல் பயணிகள் தொடர்வண்டியில் ஒரு பயணத்தை அமைத்துக் கொடுத்தான் 'அவன்'. மகனையும் மருமகளையும் பார்க்க வந்திருந்த அம்மாவை வழியனுப்பி வைப்பதற்காகப் பெங்களூர் கிருஷ்ணராஜபுரம் ரயில்நிலையத்திற்கு நேற்றுச் சென்றிருந்தேன். பிருந்தாவன் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியாக இருந்த போதிலும் சனிக்கிழமை ஆதலால் கூட்டம் முண்டியடித்துக் கொண்டிருந்தது. இப்போதெல்லாம் ஒரு பெட்டியில எத்தனை பேர் முன்பதிவு செய்திருக்காங்களோ அதை விட இரண்டு மடங்கு பேர் முன்பதிவு பெட்டியில முன்பதிவு செய்யாமல் ஏறுகிறார்கள். பகலில் சென்று இரவில் திரும்பி விடும் பிருந்தாவன், லால்பாக் ஆகிய தொடர்வண்டிகளில் வர வர நிலைமை மோசம் ஆகிக் கொண்டே செல்கிறது. முன்பதிவு செய்யப்பட்டப் பெட்டிகளில் அத்துமீறி ஏறுபவர்களைத் தடுக்க யாருமே இல்லை என்றே தோன்றுகிறது. தமிழ்நாட்டுக்குள்ளேயே செல்லும் பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ்களில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை. முண்டியடிக்கும் கூட்டத்தில் அம்மா இரண்டு பைகளை எடுத்துக் கொண்டுத் தனியாக ஏறி அமர்வது கடினம் என்று எண்ணி நானும் ஏறினேன். ஆனால் ரயிலுக்குள் ஏறுவதற்கே போதும் போதும் என்றாகி விட்டது. அதற்கு பின் அம்மாவுக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தவரை எழுப்பி அம்மாவை அமர வைப்பதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது. நான் இறங்க முற்படும் போது யாருமே வழிவிடவில்லை. எடம் இல்லை, ஆவறதில்லை என்று சொல்லி என்னையும் ரயிலிலேயே பயணப் படுத்தினார்கள். சரி அடுத்த ஸ்டேஷனான வைட்ஃபீல்ட்டில் இறங்கிவிடலாம் என்று நினைக்க, அதிலும் விழுந்தது மண். பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் வைட்ஃபீல்டில் நிற்காது அடுத்தபடியாக பங்காரப்பேட்டில் தான் நிற்கும் என்று சொன்னார்கள். விதியை நொந்து கொண்டு பங்காரப்பேட் வரை டிக்கெட் இல்லாமல் நின்று கொண்டே பயணம் செய்தேன். ஏற்றிவிட வந்தவன் ரயிலில் பயணமான அனுபவமும் நமக்கு வாய்த்திருக்கிறதே என எண்ணி பின்னால் பெருமை பட்டுக் கொண்டேன். ஆக மொத்தம் இன்னும் நான் அனுபவிக்க நிறையவே இருக்கிறது :)

முக்கால் மணி நேரத்தில் அதிவேக விரைவு வண்டியில் கடந்தத் தூரத்தை பயணிகள் வண்டியில் கடப்பதற்கு எப்படியும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று தெரிந்திருந்த போதிலும் ரயில் நிலையத்திற்கு வெளியே சென்று பேருந்தைப் பிடிக்க ஏனோ தோன்றாததால் அங்கு நின்று கொண்டிருந்த 531 பங்காரப்பேட் பெங்களூர் பாசெஞ்சர் ரயிலில் ஏறிக் கொண்டேன். பாசெஞ்சர் ரயில் என்றதும் மரத்தினால் ஆன இருக்கைகளே இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம். எல்லாப் பெட்டிகளிலும் குஷன் இருக்கைகளே பொருத்தப்பட்டிருந்தன. உட்கார இடம் தேடிக் கொண்டிருக்கும் போது உண்ட களைப்பில் இருக்கைகளில் காலை நீட்டி சில பேரிளம்பெண்களும் மற்றும் சில பேரிளஆண்களும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்களுடைய சயனத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் எப்படியோ ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்து கொண்டேன். உட்கார்ந்த நிலையிலேயே வண்டி புறப்பாட்டிற்காக 45 நிமிடங்கள் காத்திருந்தேன், எழுந்து நடமாடினால் உள்ள இடமும் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் தான். இது வரையிலான என்னை வளர்த்து ஆளாக்கிய, என்னுள் இருக்கும் இண்ட்ரோவெர்ட் அமர இடம் கிடைத்ததும் உயிர்த்தெழுந்தான். அது முதல் வண்டியிலிருந்து இறங்கும் வரை பல விதமான எண்ணங்களுக்கும் மன ஓட்டங்களுக்கும் காரணம் ஆனான். கோர்வையற்ற அம்மனவோட்டங்களின் பிரதிபலிப்பே இப்பதிவு.

"இந்த அம்மா மட்டும் நான் சொன்ன பேச்சைக் கேட்டிருந்தா இப்படி காரணம் இல்லாம பாசெஞ்சர் டிரெயினில் பயணிக்கிற நெலமை நமக்கு வந்திருக்குமா" என்று நினைத்தது என் மனம். ஏசி சேர் காரில் முன்பதிவு செய்கிறேன் என்ற கூறியதற்கு "வேணாம் வேணாம் ஏசியில எல்லாம் பண்ணாதே...எனக்கு ஏசி ஒத்துக்காது. குளுருல நடுங்கிக்கிட்டே போவனும்"னு சொன்னாங்க. "குளுருல நடுங்கற மாதிரி எல்லாம் இருக்காது...24 டிகிரி தான் மெயிண்டெயின் பண்ணுவாங்க"ன்னும் சொல்லிப் பார்த்தேன். "வேணாம்ப்பா, செகண்ட் க்ளாஸ்லேயே பண்ணு அப்படியே ஜன்னலோரம் உக்காந்து வேடிக்கை பாத்துக்கிட்டே போய்டுவேன், ஏசி எல்லாம் எனக்கு பழக்கமில்ல"ன்னு வந்தது பதில். "பழக்கமில்லன்னா என்ன? எப்பவுமே செகண்ட் க்ளாஸ்லே தானே போறீங்க? ஏசியில போனா தானே பழக்கம் ஆகும்" அப்படின்னேன். அதுக்கு வந்த பதிலான "நீ என்னப்பா பெரிய கம்பெனியில பெரிய வேலையில இருக்கே? எங்க வீட்டுக்காரரு ரிட்டையர்டு வாத்தியார் தானே?" என்னை யோசிக்க வைத்தது. நான் கூட வாத்தியார் பிள்ளையாக மட்டும் இருந்த நேரத்தில், தில்லியிலிருந்து சென்னைக்கு அனல் கக்கும் மே மாத வெயிலில் அச்சம் மடம் நாணம் இதை எல்லாம் மறந்து சட்டையைக் கழட்டி வைத்து விட்டு வெறும் பனியனோடு கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் செய்தவன் தானே நானும். இப்போது சென்னையிலிருந்து பெங்களூர் செல்வதற்குக் கூட யோசிக்காமல் ஐராவதத்தில் டிக்கெட் எடுக்கிறேன். கையில் பொருள் சேரும் போது மனிதனின் தேவைகளும் அவன் நாடும் வசதிகளும் அதிகரிக்கிறது.

தமிழ் துணைப்பாட நூலில் படித்த ஒரு கதை "கலையின் விலை". ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் அகிலன் அவர்கள் எழுதியது. கதையில் ஒரு எழுத்தாளர். திறம்பட எழுதக் கூடியவர். ஆனால் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காமல் வறுமையில் உழல்பவர். அவர் மனைவியும் மக்களும் அவருடைய இவ்வறுமையின் காரணமாக பல இன்னல்களை அனுபவிப்பர். யாரோ ஒருவர் வேலை தருகிறேன் நேர்காணலுக்கு வாருங்கள் என்று ரயில் டிக்கெட்டும் அனுப்பி அழைப்பார். தான் மிகவும் காதலிக்கும் எழுத்தைத் தியாகம் செய்கிறோமே என்ற வருத்தம் இருந்தாலும் தன் குடும்பத்தின் நிலையைக் கண்டு வெளியூர் செல்லத் தயாராகி ரயிலில் பயணப்படுவார். ரயில் எங்கோ ஒரு ஸ்டேஷனில் நிற்கும் போது யாரோ ஒருவர் - இவருடைய நெடுநாளைய வாசகராம், இவரை அடையாளம் கண்டு கொண்டு இவர் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணில் ஒற்றிக் கொள்வார் "ஐயா! நான் உங்களுடைய பரம விசிறி..."இத்யாதி இத்யாதி என்று. வாசகர் சென்றதும் தன் கையைப் பார்ப்பார் எழுத்தாளர். அதில் அவர் காண்பது ஒரு துளி கண்ணீர். "ஆஹா! இதுவல்லவோ கலையின் விலை. இதற்கு எத்தனை ஆயிரங்கள் கொடுத்தாலும் ஈடாகுமா? பால்காரன் பாக்கியையும் மளிகைக் கடைகாரன் பாக்கியையும் பின்னால் பார்த்துக் கொள்ளலாம். மனைவியை எதாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம். கலையை விடலாகாது"என்றெண்ணி அந்த ஸ்டேஷனில் இறங்கித் திரும்பிச் சென்று விடுவார். எட்டாம் வகுப்பில் படிக்கும் போதே இந்த கதை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. கலையின் மீது அவ்வளவு பற்றிருக்கும் போது எதற்காக ஐயா கல்யாணம் செஞ்சிக்கிட்டீங்க? உங்களை நம்பி இருக்கும் உங்க மனைவியும் மக்களும் வறுமையில் வாடுவது எந்த விதத்தில் நியாயம்? நீ நேசிக்கும் தொழிலின் மூலமாக மனைவி மக்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை எனும் போது வேறு வேலை தேடிக் குடும்பத்தைக் காப்பாற்றுவது தானே அழகு? அதையெல்லாம் வுட்டுட்டு கடனையெல்லாம் பாத்துக்கலாம் மனைவியை ஏமாத்திடலாம்னு இவரும் இறங்கிப் போய்டுவாராம். சுத்த ஹம்பக்கா இருந்தது படிக்கிறப்போ. ஒரு வேளை யாராச்சும் என்னை எங்கேயாச்சும் அடையாளம் கண்டுக்கிட்டு "ஐயா கைப்புள்ள! உங்க எழுத்துக்கு நான் அடிமை. நீங்க நல்லவரு...வல்லவரு"ன்னு சொல்லி என் கையில ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தினா ஒரு வேளை நான் பொட்டித் தட்டறதை எல்லாம் வுட்டுப் போட்டு முழு நேர ப்ளாக்கர் ஆயிடுவேனோ என்னவோ? ஏனோ நேத்து இந்த கதை ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

ரயிலில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியே வெளியே மட்டும் வேடிக்கை பார்க்காமல் உள்ளே உட்கார்திருக்கும் மனிதர்களைக் கவனிப்பதும் ஒரு பொழுதுபோக்கு தான். ரயிலில் ஏறியதும் பசிக்கத் தொடங்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். எட்டு பழங்கள் பத்து ரூபாய்க்கு விற்கப் படும் சப்போட்டா பழங்களை அங்கேயே தின்று அதன் விதைகளை சீட்டுக்குக் கீழே போடுபவர்களையும், இரண்டு ரூபாய்க்கு வாங்கித் தின்ற அவித்த வேர்கடலை செவிக்கும் வயிற்றுக்கும் பற்றாமல் போகவே இன்னும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி அதன் குப்பைகளையும் பெட்டிக்குள்ளேயே போடுகிறவர்களையும் பார்த்துக் கொண்டே சென்றேன். எனக்கு எதிர் சீட்டில் ஒரு அப்பா, அம்மா, மகள் அடங்கிய மூவர் குழு வந்தமர்ந்தது. ரயில் பயணத்தில் வழி நெடுகத் தின்றுக் கொண்டே செல்பவர்கள் ஒரு ரகம் என்றால், ஏறி அமர்ந்ததும் தூங்கத் தொடங்குபவர்கள் இன்னொரு ரகம். நடுவில் உட்கார்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்த தந்தையின் மடியில் தலை வைத்து மகள் படுக்க, கணவரின் தோளில் சாய்ந்து மனைவி கண்ணயர்ந்தார். அம்மனிதர் இதை ஒரு பெருமையான நிகழ்வாகக் கருதியிருக்க வேண்டும். ஏனெனில் இவ்வளவு அசவுகரியமான நிலையிலும் தன்னுடைய மூக்குக் கண்ணாடியை உயர்த்தி உயர்த்தி பேப்பர் படித்துக் கொண்டிருந்தாரே ஒழிய, மகளிடமும் மனைவியிடமும் தன் அசவுகரியத்தைக் குறித்து எதுவும் சொன்னதாகத் தெரியவில்லை. இன்னொன்னு கவனிச்சேன். மகளும் மனைவியும் சிறு சிறு இடைவெளிகளில் தூங்கிக் கொண்டு வந்தாலும் மனிதர் சிறிது நேரம் கூட கண் அயரவில்லை. பொறுப்புகளைச் சுமக்கும் போது தூக்கம் எல்லாம் வராது என்பது உண்மை தானோ?

எக்ஸ்பிரஸ் ரயில்களில் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து போகும் சிறு ஸ்டேஷன்களிலும் நேற்று ரயில் நின்று நின்று சென்றது. அத்தகைய சிறு ஸ்டேஷன்களை நம்பியும் கிராமங்கள் இருக்கின்றன என்பதும் அதை நம்பி மனிதர்களும் அவர்களுடைய வாழ்க்கைகளும் இருக்கின்றன என்பதும் புலனானது. ஒரு சனிக்கிழமை மதியம் பங்காரப்பேட்டை என்னும் ஊருக்கும் மாலூர் என்னும் ஊருக்கும் இடையே பாசெஞ்சர் ரயிலில் பயணிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் என்றும் அவனுடைய சிந்தனைகள் எத்தகையதாக இருக்கும் என்று ஒரு கணம் எண்ணிப் பார்த்தேன். வாரத்தில் சில நாட்கள் ஒரு ஏசி ஆஃபீசில் உட்கார்ந்து பெட்டி தட்டிப் பிழைப்பை நடத்தும் என்னைப் போன்றவனுக்கு அது மட்டும் தானே செய்ய முடியும்?

பயணம் தொடரும்...

Saturday, March 01, 2008

கமலம்...பாத கமலம்...

படம் : மோகமுள்
பாடல் : வாலி்
இசை : இளையராஜா
பாடியது : K.J.யேசுதாஸ்


கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...
கமலம் பாத கமலம்...

உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

ஆகாயம் வெளுக்கும்
அதிகாலை அழகில்
காகங்கள் விழித்து
கரைகின்ற பொழுதில்
நெல்மூட்டை நிரப்பி
நெடுஞ்சாலை கடக்கும்
வில்வண்டி இழுக்கும்
மாட்டின் மணியோசை
மயக்கும் இதமான இளங்காற்று
எனைத் தீண்டித் திரும்பும்
மெதுவாக இசைஞானம்
மனதோடு அரும்பும்
ஸ்வரங்கள் எனக்குள் பிறக்க
அருள் எனும் பேரமுதினைப் பொழிந்திடும்
கமலம் பாத கமலம்


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம்...

நாவாறப் பெரியோர்
நிதமிங்கு இசைக்கும்
தேவாரப் பதிகம்
திசைதோறும் ஒலிக்கும்
மும்மூர்த்தி பிறந்து
சாகித்யம் புனைந்து
செம்மூர்த்தி நினைவில்
தெய்வ சங்கீதம் வளர்த்து
திருவீதி வலம் வந்த
தலம் இந்த தலம் தான்
இசைமாரி நிதம் பெய்த
இடமிந்த இடம் தான்
நினைத்தால் மனத்தால்
துதித்தால் நலமுறும்
இசைநயங்களை வழங்கிடும்
கமலம் பாத கமலம்...


உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்...
இசையான வடிவான
இறைவன் நீதான் என்று
நான் தொழும்
தலைவன் நீ தான்
என்று போற்றிடும்
கமலம் பாத கமலம்...
உயர் மறையெலாம் புகழும்
கமலம் பாத கமலம்




பாடலைக் கேட்க :

Get this widget Track details eSnips Social DNA



கடந்த கால நினைவுகளில் இன்னும் பிரகாசமாக இருக்கக் கூடிய விஷயம் ஒன்று உள்ளது. அவ்விஷயம் இப்போது கிடைக்காமல் இருப்பது அந்த பழைய நினைவுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றுகிறது. அது - ஒத்த விருப்பம் உள்ள நண்பர்களுடன் இளையராஜாவின் பாடல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பது. ராகம், தாளம் பற்றியெல்லாம் பேசியதில்லை...இருப்பினும் தலைவருடைய பாடல்கள் தரும் மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஒரு சுகம் தான். கல்லூரி படிக்கும் நாட்களில் நண்பன் தியானேசுவரன் தான் இளையராஜாவின் பழைய பாடல்களை எனக்கு அறிமுகப் படுத்தியவன். அதன் பின்னர் தில்லி சென்ற பிறகு இளையராஜாவின் பாடல்களைத் தேடித் தேடிக் கேட்பது வழக்கம். இந்தூரில் இருக்கும் போது, எங்கள் நிறுவனத்தின் ஃபைனான்ஸ் ஹெட் ஒரு தீவிர இளையராஜா ரசிகர் என்று தெரிந்து கொண்டேன். சனிக்கிழமை மாலைகளில் சும்மாவே என்னை தன் அறைக்குக் கூப்பிட்டு இளையராஜாவின் பாடல்களைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருப்பார். தேசிய விருது வாங்கிய திரைப்படம் என்று மோகமுள் திரைப்படத்தைப் பற்றிக் கேள்வி பட்டிருந்திருக்கிறேன். ஆனால் அப்படத்தில் மேற்கண்ட பாடலையும் அதன் அழகினையும் எனக்கு அறிமுகப் படுத்தியவர் அவர் தான்.

"எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர்ப்பா. எங்க ஊருல ஒரு அதிகாலை நேரத்து காட்சியைப் பார்த்த மாதிரியே இருக்கும் - நெல்மூட்டை நிரப்பி நெடுஞ்சாலை கடக்கும் வில்வண்டி இழுக்கும் மாட்டின் மணியோசை - வரிகள். லிரிக்ஸும் ராஜாவோட மியூசிக்கும் ஜஸ்ட் அமேசிங்" அப்படின்னார். அதுக்கப்புறம் அந்தப் பாடலைக் கேட்ட பிறகு தான் அதன் அழகு புரிந்தது. மாட்டின் மணியோசை தரும் மகிழ்ச்சியை இதுவரை உணர்ந்ததில்லை. ஆனால் அதை எப்போதாவது கேட்கும் வாய்ப்பு கிடைத்தால் அம்மகிழ்ச்சியை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தன் வரிகளின் மூலம் ஏற்படுத்தியிருப்பார் கவிஞர் வாலி. செந்தமிழ்ப் பண்ணும் உயரிய இசையும் மனதுக்கு எவ்வாறு குதூகலத்தைக் கொடுக்கும் என்பதற்கு இப்பாடல் நல்லதோர் உதாரணம். இப்பாடலில் நானாகக் கவனித்த ஒரு விஷயம் ஒன்று உள்ளது. அது பாடலின் 1:50வது நிமிடத்திலிருந்து 2:13ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் முதல் சரணத்தில் "இதமான இளங்காற்று" எனும் தொடங்கும் வரிக்குச் சற்று முன்னர் வரும் ஒரு தபலா/மிருதங்கம் நோட். உன்னிப்பாகக் கேட்டுப் பாருங்கள்...பாடல் வரிகளுக்கு நடுவில் தபலா/மிருதங்கத்தில் மெல்லமாகத் தட்டி இடைவெளி கொடுத்தது போல இருக்கும் அந்த நயம் உண்மையிலேயே மனதைத் துள்ளச் செய்யும். பாடலுக்கும் அழகு சேர்க்கும். அதே போல பாடலின் 3:39வது நிமிடத்திலிருந்து 4:02ஆம் நிமிடத்துக்கு இடையில் வரும் இரண்டாம் சரணத்தில் "திருவீதி வலம் வந்த" எனும் தொடங்கும் வரிக்கு முன்னரும் இதை ரசிக்கலாம். நீங்களும் இப்பாடலின் வரிகளையும் இசையையும் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்.

படங்களைப் பற்றிய குறிப்புகள் :
1. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தில் சார்கேஜ் காந்திநகர் நெடுஞ்சாலையில் செல்லும் ஒட்டக வண்டி. அகமதாபாத்தில் இருந்த போது நிறைய ஒட்டகங்களைப் பார்த்திருக்கிறேன். காய்கறிகள் விற்கும் வண்டியைக் கூட அங்கு ஒட்டகம் இழுத்துச் செல்வதைக் கண்டிருக்கிறேன்.

2&3 சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள "தக்ஷின சித்ரா" எனும் பாரம்பரியப் பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் எடுத்த படங்கள்.