நினைவு மீட்டல் : தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் என்கிற பதிவில் பழம்பெரும் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் பத்திய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். இப்பதிவில் வேறு சில தொலைக்காட்சி பிரபலங்களைக் குறித்த நினைவுகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பிரபலங்கள் தொலைக்காட்சியில் பலவிதமான பொறுப்புகளை வகித்திருக்கிறார்கள் - Performerஆக, தொகுப்பாளராக, பேச்சாளராக இப்படி பல வித பொறுப்புகள். ஆனால் தொலைக்காட்சியில் தோன்றியதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு வேறு பெருமைகளும், சிறப்புகளும், திறமைகளும் இருக்கின்றன. அத்தகையவர்களைப் பற்றிய நினைவு பகிர்தலே இப்பதிவு. தொலைக்காட்சின்னு பொதுவா சொன்னாலும் இவர்கள் தூர்தர்ஷன் ஒற்றைத் தமிழ் அலைவரிசையோடு இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் மிகப் பிரபலமாக இருந்தவர்கள். இவர்களைப் பற்றி இணையத்தில் தேடிக் கொண்டிருந்த போது மேலும் சில தகவல்களும் கிடைத்தன. அந்தச் சுட்டிகளையும் நான் ஆங்காங்கே கொடுத்திருக்கிறேன். அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் "ஆ சுட்டிகளைக் கொறைச்சு ஆலோசிச்சால் மதி".
முனைவர் மா.நன்னன்

தொலைக்காட்சி பிரபலம் என்றதும், முதலில் என் மனதில் தோன்றியவர் முனைவர் மா.நன்னன் அவர்கள் தான். தூர்தர்ஷனில் 80-களின் பிற்பகுதியில் வெகு பிரபலமாக இருந்த "வாழ்க்கை கல்வி" நிகழ்ச்சியின் மூலம் மாலை வேளைகளில் தமிழ் மொழி பாடங்களை நடத்துவார். கனிவான குரலில் அவர் பேசுவதும் எளிமையான முறையில் தமிழ் கற்பித்ததும் நினைவுகளாக இன்னும் மனதில் பதிந்துள்ளன. தமிழில் எழுதும் போதும் பேசும் போதும் நாம் செய்யும் தவறுகளை உதாரணங்களுடன் ஒரு வகுப்பறைச் சூழலில் விளக்குவார். ஒரு முறை பாடங்களை விளக்கி விட்டு கரும்பலகையில் ஒவ்வொரு மாணவியாகக் கூப்பிட்டு எழுத வைத்தார். ஒரு மாணவி எழுதி முடித்ததும், அடுத்த மாணவியைக் கூப்பிடுவதற்காக அவர் சொன்னது "அடுத்த பாப்பா ஓடியா". இது கிட்டத்தட்ட 20+ ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தது, ஆனால் இன்றளவும் எங்கள் வீட்டில் மிகப் பிரபலமான வசனம் இது:) நன்னன் ஐயாவை இன்றும் 'மக்கள்' தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
சாரதா நம்பி ஆரூரான்

பட்டிமன்றப் பேச்சாளர், தமிழ் ஆர்வலர் என்பதனை மீறி சாரதா நம்பி ஆரூரன் அவர்கள் எனக்கு நினைவிருப்பதற்குக் காரணம் இவர் நன்றாகப் பாடக் கூடியவர் என்பதனால் தான். சைவ சமயப் பாடல்களை இவர் தூர்தர்ஷனில் சில நிகழ்ச்சிகளில் பாடக் கேட்டிருக்கிறேன். அதற்கென்றே ஒரு நிகழ்ச்சி இருந்தது தூர்தர்ஷனில். அந்நிகழ்ச்சியின் பெயர் நினைவிலில்லை. ஒரு வேளை "தேன் துளி"யா? இவர் சென்னை ராணி மேரி கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர். இவர் மறைமலை அடிகள் குடும்பத்து மருமகள் என்பதனை 'தி ஹிண்டு' சுட்டியின் வழியாகத் தெரிந்து கொண்டேன்.
மேலும் தெரிந்து கொள்ள
சுவையாகவும் அதே நேரம் வாசகர்களின் கவனத்தைக் கவரக் கூடிய வகையில் சமய சொற்பொழிவுகள் ஆற்றுவதில் சிறந்தவராக இருந்தவர் புலவர் கீரன். இவருடைய நிகழ்ச்சிகளையும் தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவு தொலைக்காட்சியில் வந்தால் அதை கண்டிப்பாகப் பார்ப்பார் என் தந்தையார். திருவல்லிக்கேணியில் நாங்கள் இருந்த போது இரவு நேரங்களில் மேடைகளில் இவர் சொற்பொழிவாற்றுவதை குறித்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதை கேட்க என் தந்தையார் சென்றதும் நினைவிலிருக்கிறது. இவர் இறைவனடிச் சேர்ந்து பல்லாண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அவர் பேச்சுக்கள் எதுவும் எனக்கு நினைவில் இல்லாது போனாலும் அவருடைய சொற்பொழிவுகள் சிறப்பானவை என்று மனதில் இன்னும் பதிந்திருக்கிறது.
சுப்பு ஆறுமுகம்


"தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட...ஆமாம் வில்லினில் பாட வந்தருள்வாய் கலைமகளே" அப்படின்னு இவர் வில்லுப்பாட்டை ஆரம்பிச்சா சின்ன வயசுல செஞ்சிட்டிருக்கற வேலையை(படிக்கிற மாதிரி நடிக்கிறதை) எல்லாம் அப்படியே போட்டுட்டு டிவி பாக்க உக்காந்துருவோம். அப்பெல்லாம் வீட்டில் இருக்கும் எல்லாரும் இவருடைய நிகழ்ச்சிகளைப் பார்ப்போம் என்பதனால், மாலை ஆறு மணியளவில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இவருடைய பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு நிகழ்வினைப் பற்றி எடுத்து சொல்வதற்கோ, அல்லது ஒரு செய்தியினைப் பரப்புவதற்கோ வில்லுப்பாட்டு நிகழ்ச்சியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இவருடைய மகளையும், மகனையும் நான் இவருடைய வில்லுப்பாட்டு பார்க்கத் தொடங்கிய நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றளவும் மக்கள் தொலைக்காட்சியில் சுப்பு ஆறுமுகம் ஐயா இருபதாண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த அதே சுறுசுறுப்போடும், அதே சுவையோடும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை வழங்குவதைப் பார்க்கும் போது ஆச்சரியம் மேலிடுகிறது.
மேலும் தெரிந்து கொள்ள 1
மேலும் தெரிந்து கொள்ள 2
மேலும் தெரிந்து கொள்ள 3
ரேவதி சங்கரன்

சந்தனக் கூடு உருஸ் என்ற இசுலாமியத் திருவிழாவினைப் பற்றியும், கிறித்தவர்களின் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் பற்றியும், கும்பாபிஷேகம் என்பதனை தமிழில் குடமுழுக்கு என்றழைப்பர் என்பதனையும் நான் கேள்விபட காரணமாயிருந்தது தூர்தர்ஷனில் மாலை வேளைகளில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்த "உலாவரும் ஒளிக்கதிர்" என்ற நிகழ்ச்சி. தமிழகம் எங்கிலும் நடைபெறும் விழாக்களைப் படம்பிடித்து அரை மணி நேரத் தொகுப்பாக்கி ஒளிபரப்புவார்கள். அந்த நிகழ்ச்சியில் தான் ரேவதி சங்கரன் அவர்களின் குரலை முதன்முறையாகக் கேட்டேன். இவருடைய குரலில் உச்சரிப்பு, ஏற்ற இறக்கம் அனைத்துமே பிரமாதமாக இருக்கும். 2005ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட ஒரு ஆண்டு நான் இந்தூரில் வேலை செய்துக் கொண்டிருந்த போது, பல நாட்களில் நான் கேட்ட ஒரே தமிழ் குரல் இவருடையதாக மட்டுமே இருந்திருக்கும். காலை ஏழு மணிக்கு அலுவலகப் பேருந்து பிடிக்க ஓடுவதற்கு முன்னர் சன் டிவியில் காலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இவர் தொகுத்து வழங்கி வந்த ஏவிஎம்மின் மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சியைப் பார்த்து விட்டுச் செல்வது வழக்கம். வடிவேலு, பிரபு நடித்த ஒரு திரைப்படத்தில் ஹக்கீஸ் கட்டிக் கொண்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் மருமகனைக் கண்டு "குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா"என்று இவர் நக்கல் விடுவதும் ரசிக்கும் படியாக இருக்கும். இவர் சில காலம் மங்கையர் மலர் இதழின் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்வி.
மேலும் தெரிந்து கொள்ள 1
மேலும் தெரிந்து கொள்ள 2
பர்வீன் சுல்தானா

சில சமயங்களில் எதோ ஒரு காரணத்தினால் நம்முடைய மனதில் ஒரு நம்பிக்கை விதைக்கப் பட்டிருக்கும். அது எப்படி நம் மனதில் வந்தமர்ந்தது என்று யோசித்துப் பார்த்தால் நம்மாலேயே அதற்கு விளக்கம் சொல்ல முடியாது. சிறு வயதில் இருந்த அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை தான் "இந்தி பேசுபவர்கள் வடநாட்டில் வசிப்பவர்களும் முஸ்லிம்களும்" என்பதாகும். இசுலாமியர்கள் பேசுவது உருது என்று கூட அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதற்கேற்றாற் போல பள்ளியில் என்கூட படித்த பையன்களும் அவர்களுக்குள் உருதுவில் தான் பேசிக் கொள்வார்கள், அத்தோடு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கே மிகவும் சிரமப் படுவார்கள். இந்நிலையில் தான் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பட்டிமன்றங்களில் செல்வி பர்வீன் சுல்தானா(அப்போது அவர் மாணவியாகத் தான் இருந்தார்) அவர்கள் ராமனைப் பற்றியும், அனுமனைப் பற்றியும் கம்பராமாயணத்திலிருந்து மேற்கொள்கள் காட்டி விவாதம் செய்வதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டேன். கவிக்கோ அப்துல் ரகுமான், சதாவதானி செய்கு தம்பி பாவலர் போன்ற மதத்தினை மீறிய தமிழ் மொழிப் பற்று கொண்ட அறிஞர்களைப் பற்றி பின்னாளில் தான் தெரிந்து கொண்டேன். உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் தமிழை நன்றாகப் படிக்கக் கூடிய இசுலாமிய நண்பர்களும் பின்னாளில் அறிமுகம் ஆனார்கள். ஆயினும் நெடுநாளைய மூ(ம)டநம்பிக்கை தகர்வதற்கு காரணமாயிருந்தவர் பேராசிரியர் பர்வீன் சுல்தானா அவர்கள்( இவர் இப்போது சென்னை SIET கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்). விஜய் டிவியில் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சுட்டிகள்" நிகழ்ச்சியில் இவரை நடுவராகக் காணலாம்.
திருமதி.சுதா சேஷையன் என்றொரு பட்டிமனறப் பேச்சாளர் நினைவுக்கு வருகிறார். புள்ளிவிவரங்களோடு, மிகவும் தெளிவாகவும் அழகாகவும் விவாதம் செய்வார். ஆனால் ஜோக்கெல்லாம் அடிக்க மாட்டார், சீரியஸாகத் தான் பேசுவார். அவரை "ஸ்ரேயா அப்பா" ராஜா, பேராசிரியர் அறிவொளி(நீண்ட தாடி வைத்திருப்பார்) அவர்கள் எல்லாம் மிகச் சுலபமாக நகைச்சுவையாகப் பேசி அவருடைய வாதத்தை எதிர்த்து ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று விடுவார்கள். ஆனால் சுதா சேஷையன் அவர்களுடைய வாதத்தில் எப்போதும் நேர்மை இருக்கும்.
மாலா மணியன்

தூர்தர்ஷனின் இரண்டாவது அலைவரிசை தொடங்கிய புதிதில் செவன்த் சேனல் நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் பலவும் ஒளிபரப்பாகும். அந்நிறுவனத்தைச் சேர்ந்த மாலா மணியன் அவர்கள் அக்காலத்தில் வெகு பிரபலம். நிகழ்ச்சித் தொகுப்பாளராக, பேட்டி காண்பவராக, தயாரிப்பாளராகப் பல பொறுப்புகளில் இருந்த இவர் "சின்னத்திரையின் புன்னகை அரசி" என்றால் அது மிகையாகாது.
மேலும் தெரிந்து கொள்ள
ரவி ராகவேந்தர்

இவர் சினிமாவில் பெரியளவு பேசப்படாதது கண்டு உண்மையிலேயே எனக்கு மிகவும் ஆச்சரியம் தான். எனக்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவர் இவர். Handsome, Dignified, Charismatic இவ்வாறு இவருக்குப் பல adjectiveகளைச் சொல்லலாம். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஒரு தொடர் 'நிலாப் பெண்ணே'. அதில் இவருடைய பெயர் ரேவந்த். இவரைக் காதலிக்கும் ஒரு பெண் தன் முகம் காட்டாமல் இவருக்குத் தொலைப்பேசியில் பேசி தன்னை கண்டுபிடிப்பதற்காகப் பல புதிர்களைப் போடுவார். அப்புதிர்களை எல்லாம் விடுவித்து கடைசியில் அப்பெண்ணை அவர் சந்திப்பாரா என்பதே அப்பபதின்மூன்று வாரத் தொடரின் கதை. இவர் இப்போது ஜீ டிவியில் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' என்ற தொடரில் நடித்து வருகிறார்.
வி.வி.சுப்பிரமணியம்

'சிந்திக்க ஒரு நொடி', 'வினாடி வினா' ஆகியவை தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வந்த குவிஸ் நிகழ்ச்சிகள். எனக்கு க்விஸ் போட்டிகளின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாயிருந்தது இந்நிகழ்ச்சிகள் தான். இந்நிகழ்ச்சிகள் சிலவற்றின் குவிஸ் மாஸ்டராகச் செயல்பட்டவர் திரு.வி.வி.சுப்பிரமணியம் அவர்கள். இவர் விவேகானந்தா கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியாராகவும் தலைவராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் பெயரை வைத்து கூகிளில் தேடியதில் அதே பேரில் வயலின் வாத்தியக் கலைஞர் ஒருவர் இருப்பதும் தெரிய வந்தது. இருவரும் ஒன்று தானா என்ற ஐயமும் மனதில் உள்ளது. இவருடைய க்விஸ் கேள்வி பதில்களை இன்றும் தி ஹிண்டுவின் "Young World" வார இதழில் காணலாம்.
ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர்

Hugh and Colleen Gantzer - இவர்களைப் பற்றி பலருக்குத் தெரிந்திருக்காதென நினைக்கிறேன். ஏனெனில் இவர்கள் தொலைக்காட்சியில் நேரடியாகத் தோன்றியதில்லை. ஆங்கிலோ இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஹியூக் மற்றும் கொலீன் கேண்ட்சர் இவ்விருவரும் இந்தியாவின் தலைசிறந்த பயண எழுத்தாளர்கள். 1987-88 வாக்கில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'Looking Beyond with Hugh and Colleen Gantzer' தான் நான் தொலைக்காட்சியில் கண்ட முதல் பயண நிகழ்ச்சி. மகாபலிபுரத்தை முதன்முதலில் தொலைக்காட்சியில் கண்டது இந்நிகழ்ச்சியில் தான்.
மேலும் தெரிந்து கொள்ள
சுமந்த் சி.ராமன்

தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி வரும் 'BSNL Sports Quiz' பற்றிக் கேள்வி பட்டிருப்பீர்கள். அதை தொகுத்து வழங்குபவர் டாக்டர் சுமந்த் சி.ராமன் அவர்கள். இவரையும் டிவியில் வெகுநாட்களாகக் கண்டு வருகிறேன். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் விளையாட்டு வர்ணனைகள் திறம்படச் செய்வார். சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்ற இவர், தற்போது டிசிஎஸ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
BSNL Sports Quiz நிகழ்ச்சியில் இருமுறை நான் இவருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள
நரோத்தம் பூரி

இவரை நியாபகம் இருக்குதுங்களா? இவரும் ஒரு டாக்டர் கம் வர்ணனையாளர் தான். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏதுமில்லாதிருந்த காலத்தில் தூர்தர்ஷனில் விளையாட்டு குறிப்பாக கிரிக்கெட்டின் ஆங்கில வர்ணனையாளராக இருந்தவர் இவர். இவரும் அனுபம் குலாட்டி என்ற பெயர் கொண்ட தாடிக்காரர் ஒருவரும் ஞாயிறு மாலைகளில் வரும் "World of Sport" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்கள். ESPN, Star Sportsஇல் வரும் ஆங்கில வர்ணனையாளர்களான ஹர்ஷா போக்லே, ரவி சாஸ்திரி போன்ற சிறந்த வர்ணனையாளர் என்று சொல்ல மாட்டேன். இருப்பினும் அக்காலத்தில் மிகப் பாடாவதியான இந்தி வர்ணனைகளுக்கு நடுவில் இவருடைய ஆங்கில வர்ணனை சற்று ஆறுதலாக இருக்கும்.
மேலும் தெரிந்து கொள்ள
டாம் ஆல்டர்

ஜூனூன் இந்தி தொடரில் 'கேஷவ் கல்சி' என்ற கதாபாத்திரத்திலும் பல இந்தி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர் இவர். அமெரிக்கக் கிறித்தவ போதகர்களின் மகனாகப் பிறந்த இவர், இந்தியாவில் மசூரியில் தன்னுடைய இளமையைக் கழித்தார். மிகவும் சுத்தமான உருது மொழி பேசக் கூடிய இவர் நாடகங்களிலும் நடித்து வருகிறார். புகழின் படிக்கட்டுகளில் ஏறிக் கொண்டிருந்த பதினைந்து வயது சச்சின் டெண்டுல்கரை 1988இல் இவர் எடுத்த நேர்காணல் சச்சினுடைய முதல் தொலைக்காட்சி நேர்காணல் ஆகும்.
மேலும் தெரிந்து கொள்ள