ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! சித்தூர்கட்லேருந்து அகமதாபாத்துக்கு வந்து ஒரு வாரம் ஆச்சுங்க. ஆறு மாசமா சாஃப்ட்வேர் கம்பெனில வேலை செய்றேன்னு தான் பேரு. படுபாவிங்க ஆறு மாசமும் வரப்பட்டிக்காட்டுலேயே ப்ராஜெக்ட்னு சொல்லி வறுத்து எடுத்துட்டானுங்க. இப்ப தான் மொதல் முறையா ஒரு நகரத்தில் தங்கும் வாய்ப்பு கெடச்சிருக்கு. ஆனா இங்கே வேறு விதமான மனிதர்கள், வேறு விதமான க்ளையண்ட், வேறு விதமான ப்ரச்சனைகள். சரி அதெல்லாம் இப்ப எதுக்கு? பதிவெல்லாம் போட்டு ரொம்ப நாள் ஆன மாதிரி ஒரு ஃபீலிங். புதுசா எழுதறதுக்கு மேட்டர் ஒன்னும் இல்ல..."சித்தூர்கட் செலவு நிறைவு பகுதி" எழுதற அளவுக்கு இப்ப நேரமும் இல்ல. வெள்ளி கிழமை, தீபாவளிக்கு சென்னைக்கு வேற போவனும். அதுனால அப்படியே விட்டுட முடியுங்களா? மேட்டரே இல்லன்னாலும் சில த்ரீ மச் போட்டா படங்களை வச்சி ஒப்பேத்திடலாம்ங்கிற தெகிரியத்துல தொடங்கிட்டேன்.
அதுக்கு முன்னாடி அது என்ன பதிவு ஆரம்பத்துல 'ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா'? குஜராத்துக்கு வந்ததும் கவனிச்சது இங்கேயிருக்குற மக்கள், தங்களுக்குள்ளே வாழ்த்து சொல்லிக்கும் போது "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா"ன்னு சொல்லிக்கிறத. நாம வணக்கம், குட் மார்னிங்(!) இதெல்லாம் சொல்றோமில்லியா அதே மாதிரி. எல்லாரும் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணான்னு சொல்லலைன்னாலும் நெறைய பேர் இப்படி சொல்லறதை இங்கே பாத்தேன். டெல்லியில என் கூட தங்கியிருந்த குஜ்ஜு(குஜராத்தி தான் சுருக்கமா குஜ்ஜு:D) பையன் கூட அவங்க வீட்டுலேருந்து போன் வரும் போதெல்லாம் ஹலோ சொல்றதுக்குப் "ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா"ன்னு சொல்றதை கவனிச்சிருக்கேன். 'பி.கு'ன்னு பதிவோட கடைகோடியில போட்டுட்டு படிக்கிறவங்களுக்கு, கடைசியில வெளக்கம் குடுக்கற டார்ச்சர் ஒவ்வொரு வாட்டியும் வேணாமேன்னு தான் இந்த தடவை மொதல்லயே காரணத்தைச் சொல்லியாச்சு :)
கொஞ்சம் "தேநீர் நிறைய ஆகாயம்" அப்படின்னு தலைப்பு வைக்கனும்னு ஒரு நாள் காலங்காத்தால மூளை அலை(அதாங்க brainwave)அடிச்சு ஓஞ்சுச்சு. தேநீர் தெரிஞ்சதுன்னா ஆகாயம் தெரிய மாட்டேங்குது. ஆகாயம் தெரிஞ்சா தேநீர் தெரிய மாட்டேங்குது. சரி...நம்ம கெபாகிட்டிக்கு இம்புட்டுத் தான் நம்மால எடுக்க முடியும்னு நெனச்சி எடுத்த படம் இது. 'கொஞ்சம் தேநீர் கொஞ்சம் தார் ரோடு'ன்னு வேணா பேர் வைக்கலாம் :(
இடம் : கெஸ்ட் அவுஸ், சித்தூர்கட், ஒரு செப்டம்பர் மாத காலை நேரம்.
கேமரா கையில இருந்துச்சுன்னா என்ன வேணா பண்ணலாமா? தார் ரோட்டு மேல ஊர்ந்து போற அட்டையை க்ளோசப்ல எடுத்ததுக்கப்புறம் எனக்கே ரொம்ப த்ரீ மச்னு தோனுன ஒரு படம்.
இடம் : நடு ரோடு, c/o.சித்தூர்கட், ஒரு செப்டம்பர் மாத ஞாயித்துக் கெழமை.
மத்தியபிரதேசம், ராஜஸ்தான் இங்கெல்லாம் தங்குனீங்கன்னா, காலையில் நாஸ்தாவுக்கு பெரும்பாலும் கெடக்கிறது இது தான். போஹாவும் ஜிலேபியும். காலங்காத்தால டிபன்ல இனிப்பான்னு கேப்பீங்கன்னு தெரியும். ஏன்னா நானும் அப்படி கேட்டவன் தானே? சித்திரமும் கைப்பழக்கம் ஜிலேபியும் நாப்பழக்கம்னு பெரியவங்க தெரியாமலையா சொல்லிருக்காங்க? கெடச்சத தின்னனுங்கிறது தலையெழுத்துங்கிறதை தான் கொஞ்சம் மருவாதியா சொல்லிக்கிட்டேன். போஹாங்கிறது(Poha) அவல் உப்புமாங்க. அவலை தண்ணில லேசா அலசிட்டு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் போட்டுத் தாளிச்சு எறக்கிட்டு அது மேல சேவு(Sev) (கிட்டத்தட்ட நம்ம ஓமப்பொடி மாதிரி இருக்கும், ஆனா its different) தூவி சாப்பிட வேண்டியது தான். வெங்காயத்தைப் பச்சையா நறுக்கி போஹா மேல தூவி சாப்பிடறவங்களும் உண்டு. இந்த போஹால, நீங்க உங்க கைவண்ணத்தை எப்படி வேணாலும் காட்டலாம். வேர்கடலை, உருளைக்கிழங்கு, மாதுளை, கொஞ்சூண்டு சர்க்கரை இப்படி எது வேணாலும் சேர்த்துக்கலாம்.
இடம் : கெஸ்ட் அவுஸ், சித்தூர்கட், நாஸ்தா துண்ணற நேரம்
ஒரு மைனா எங்க ஃப்ளாட்டுல இருக்குற எக்ஸாஸ்ட் ஃபேன் துவாரத்துல கூடு கட்டிருந்துச்சு. ஒரு வைல்ட் லைஃப் போட்டாகிராஃபர் தங்கிருக்குற எடத்துல மைனா கூடு கட்டறது போட்டாகிராஃபர் தப்பா? நீங்களே சொல்லுங்க. அதான் மைனாவை(அட பறவைதாம்பா) தொரத்தி தொரத்தி படம் புடிச்சி தள்ளியாச்சு.
இடம் : கெஸ்ட் அவுஸ், சித்தூர்கட், ஒரு ஒளி ஓவியர்(!!) தொழில் பண்ணற நேரம்
அக்கடான்னு நாங்க நடை போட்டா(கேட்வாக்)
அப்படி தான்...நேரா வா
ஏய் கழுதை! கழுத்தை எல்லாம் திருப்பாதே...படம் புடிக்கிறாங்கல்லோ?
டாய்! எவண்டா அவன் படம் புடிக்கிறவன்?
ஏய் வேணாம்! இத்தோட நிறுத்திக்குவோம்
பறந்து போகாம தில்லா போசு குடுக்கறதின் காரணம் என்னவோ?
மவனே! நான் இங்கே கூடு கட்டி இருக்கேன். புள்ளைங்கல்லாம் உள்ளே இருக்கு. அதுக மட்டும் இல்லன்னா உனக்கு ஆப்பு தாண்டி!
வாழைமரம் புதுசா குலை தள்ளியிருக்குன்னு அம்மா சொன்னதும், தோட்டத்துக்குப் போய் பாத்தா, வாழைப்பூ மேல(வடை ஆகறதுக்கு முன்னாடி) பெருசா வண்டு ஒன்னு ஒக்காந்துருந்துச்சு. சரி! நம்ம தம்பி தான் பாட்டனி, சுவாலஜின்னு தனித் தனியா +2வுல ப்யூர் சையின்ஸ் க்ரூப் எடுத்து படிச்சவனாச்சே அவனை கேட்டா இது என்ன வண்டுன்னு தெரியும்னு அவனை போய் கேட்டேன். "இது தான் ராணி தேனீ(Queen Bee)" அப்படின்னான். நாம +2ல 200 மார்க்குக்கு ஜுவாலஜி படிக்கலன்னாலும், நாம 50 மார்க்குக்கு முழிபிதுங்குன ஜுவாலஜி ப்ராக்டிகல்ல, நயிமுனிசா மிஸ் ரெகார்ட்ல தப்பு போட்டு "redraw" பண்ண சொன்ன ராணி தேனீ, ஜார்ல பாக்கும் போது இப்படியா இருந்துச்சு அப்படின்னு ஒரு டவுட். தோப்பனாருக்கு ஒரு வேளை தெரிஞ்சிக்கலாம்னு அவரைக் கேட்டதும் 'ராணி தேனீயெல்லாம் கூட்டை விட்டே வெளியே வராது.அதெல்லாம் எங்கே வாழைப்பூ மேல வந்து ஒக்காரப் போவுது'ன்னாரு.
அப்போ தான் வர்க்கர், குயின், ட்ரோன் அப்படின்னு ஹனிபீ அசோசியேஷன் பத்தி பயாலஜில படிச்சது லேசா நியாபகம் வந்துச்சு. தம்பி கிட்ட போய் "டேய்! வர்க்கர் பீ தாண்டா தேன் சேகரிக்கும். ராணி வெளியே வந்து தேன் எல்லாம் சேகரிக்காது"ன்னேன். அதுக்கு அவன் "ஒனக்கு ரொம்ப தெரியுமா? நீ மூணு மணி நேர பயாலஜி எக்சாம்ல வெறும் ஒன்னரை மணி நேரம் மட்டும் ஜுவாலஜி எழுதுனவன். நாங்கல்லாம் அதே ஜுவாலஜியை மூனு மணி நேரம் எழுதுனவங்க. எங்க கிட்டவே சவாலா? ப்ரெக்ணண்ட் ஆவுறதுக்கு முன்னாடி ராணி தேனீயும் வெளியே போய் தேன் சேகரிக்கும். நீ யாரா வேணா போய் கேட்டுப் பாரு"அப்படின்னு அடிச்சு விட்டான். எதோ எட்டாவது மாசம் வரைக்கும் தாராளமா ஆஃபிஸ் போலாங்கிற மாதிரி. இதை வேற நான் யாருகிட்ட கேக்கறது? எங்கேருந்து தான் எனக்கு மட்டும் இப்படி கதை சொல்ல ஒவ்வொருத்தனும் சந்து பொந்துலேருந்து எல்லாம் கெளம்பி வர்றானுங்களோன்னு நெனச்சிக்கிட்டேன். வெளியே இருக்குறவனுங்க தான் பல்பு குடுக்கறானுங்கன்னா வீட்டுல இருக்கறவனும் அப்படியா இருப்பான்? எல்லாம் நமக்குன்னே ஒக்காந்து யோசிப்பானுங்களோ?
ஐயயோ! அரசியல் பிரச்சாரம் எல்லாம் இல்லீங்கோ. போன தபா வூட்டுக்குப் போயிருந்த போது எல்.பி. ரோட்டுல நாய் ஒன்னு ஒக்காந்து இருந்துச்சு. அதை பாத்ததும் ஆர்.கே.நாராயணனோட மால்குடி டேஸ் டிவி தொடர் ஞாபகம் வந்துடுச்சு. ஒவ்வொரு எபிசோடும் முடியும் போதும் ஆர்.கே.நாராயணனோட தம்பி ஆர்.கே.லக்ஷ்மன்(ஹ்ம்ம்...அப்படியும் இருக்காங்க தம்பிங்க?) வரைஞ்ச கார்டூனோட சேர்த்து பேரு போடுவாங்க. அப்படி ஒரு கார்டூன்ல சோம்பலா நாய் ஒன்னு படுத்து கெடக்கும். மால்குடி டேலைப் பத்தி சுதர்சன் கோபாலைக் கேட்டா கரீட்டா சொல்லுவாரு. சரி கார்டூன் போட முடியலைன்னாலும், நாமளும் ஒரு சோம்பேறி நாயைப் படம் புடிப்போம், வருங்கால சந்ததிகள் நம்மளைப் பாராட்டுங்கிற நம்பிக்கைல ஓடற ஆட்டோவுலேருந்து புடிச்ச படம் தான் கீழே. படம் எடுத்த நாயும் சோம்பேறியா இருந்ததுனால நடு செண்டருக்குப் பக்கத்துல வர வேண்டிய சோம்பேறி நாய், படத்துல ரைட் சைடு மூலையில குந்தியிருக்குது.
மால்குடி டேஸ் தொடர்ல எல்.வைத்தியநாதன் இசையமைச்ச "தாநானா நானா நனானா...னா..." அப்படிங்கிற பின்னனி இசை நமக்கு ரொம்ப புடிக்குமே, கேட்டு ரொம்ப நாளாச்சே? இணையத்துல எங்கேயாச்சும் கெடக்குமான்னு தேடுனேன். தேடுனது வீண் போகலை. அர்ஜுன் பிரபுவோட ப்ளாக்ல கெடச்சுது.
Thursday, October 19, 2006
இதெல்லாம் த்ரீ மச்
Saturday, October 07, 2006
எனது சித்தூர்கட் செலவு
வேலை விஷயமா சித்தூர்கட்(Chittorgarh) வந்து அஞ்சு மாசம் ஆச்சுங்க. இந்த அஞ்சு மாசங்களும் இனிமையாப் போனதுன்னு தான் சொல்லனும். பல தரப்பட்ட அனுபவங்கள், பல தரப்பட்ட மனிதர்களோடு பழகற வாய்ப்பு, புது வகையான வாழ்க்கைமுறை(ஒரு சிறிய ஊரில் டவுன் ஷிப்புக்குள்ள இருக்குற அனுபவம்), புது வகையான உணவுமுறை இதெல்லாம் கெடச்சது. குறிப்பா ராஜஸ்தான்ங்கிற மாநிலத்தைப் பத்தி இருந்த தப்பான அபிப்பிராயங்கள்(பாலைவனம், ஒட்டகம் மேயற இடம் போன்றவை) எல்லாம் தவிடு பொடியானது. இதுலேருந்து என்ன தெரியுதுன்னா ஒரு இடத்தைப் பற்றியோ, அல்லது ஒரு பொருளைப் பற்றியோ தீர விசாரிச்சி தெரிஞ்சிக்காம, அதப் பத்தி நாமாவே ஒரு அபிப்பிராயம் அமைச்சிக்கிறது தப்புன்னு(மெய்ப்பொருள் காண்பதறிவு).
இந்தியாவில் இருக்குற மாநிலங்கள்லேயே, எங்க மாநிலத்தில் காணக் கிடைக்கிற மாதிரி விருந்தோம்பல் எங்கேயும் கெடக்காதுன்னு இங்கிருக்குற மக்கள் பெருமையாச் சொல்லிக்கிறாங்க. இந்தியாவுலேயே சிறப்பானதா இல்லியான்னு என்னால சொல்ல முடியாது. ஏனா நான் பாத்தது ஒரு சில மாநிலங்கள் தான். ஆனா கண்டிப்பா இங்கிருக்குற மக்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர்கள். வாய்ப்பு கெடச்சதுன்னா என்னிக்காச்சும் ஒரு ராஜஸ்தானி உணவகத்துக்குப் போய் பாருங்களேன். பரிமாறுற விதமே வித்தியாசமா இருக்கும். "இன்னும் கொஞ்சம் நீங்க சாப்புட்டே ஆகனும்"னு பச்சப்புள்ள கணக்கா அடம்புடிப்பாங்க. கிட்டத் தட்ட எல்லா உணவுலயும் நெய் இருக்கும்ங்கிறதுனால "இன்னும் கொஞ்சம்"ங்கிறதுல முழி பிதுங்கிடும். நீங்க வெஜிட்டேரியனா இருந்தா நார்த் இண்டியன் உணவுல பனீரைத் தவிர வேறெதுவும் பொதுவாப் பாக்க முடியாது...ஆனா ராஜஸ்தான்ல சைவத்துலேயே பல வெரைட்டி காட்டுவாங்க. முன்னாடியே சொன்ன மாதிரி நீங்க அசைவமா இருந்தா கொஞ்சம் கஷ்டம் தான்...ஏன்னா பெரும்பாலான மக்கள் இங்கே வெஜிட்டேரியன் தான்.
அதோட விருந்து வைக்கிறவங்களுக்கு நீங்க கொஞ்சம் தெரிஞ்சவங்களா இருந்தா வரிஞ்சு கட்டிக்கிட்டு ஊட்டி விட ஆரம்பிச்சிடுவாங்க. இப்படி தான் தனேஷ்வர் தேவ் என்கிற எடத்துக்கு ஒரு குடும்ப பிக்னிக்(அட...குடும்பம் இருக்குறவங்களுக்குக் குடும்ப பிக்னிக்கப்பா) போயிருக்கும் போது "மால்புவா"ங்கிற இனிப்பை இன்னும் கொஞ்சம் சாப்பிடனும் இன்னும் கொஞ்சம் சாப்பிடனும்னு ஊட்டி விட ஆரம்பிச்சிட்டாங்க. மால்புவாங்கிறது ஒரு சின்ன ஆப்பம் மாதிரி கோதுமையில செஞ்சி அதை நெய்யுல வறுத்து, சக்கரை பாகுல ஊறப் போட்டு சாப்புடற ஒரு டேஞ்சரான ஐட்டம். ஒன்னு சாப்பிட்டால பாதி வயிறு ரொம்பிடும். ஆனா அன்னிக்கு மூனு மால்புவா( அதுவும் ஃபுல் மீல்சுக்கு அப்புறம்) சாப்பிட்டது எல்லாம் ஒரு அன்புக்குக் கட்டுப்பட்டு தான். அதே மாதிரி அவுங்க(அவுங்கன்னு சொல்லறது கிளையண்ட் கம்பெனியைச் சேர்ந்தவங்க) சாப்பிடும் போது நாங்களும் தமிழ்நாட்டு அன்புக்குக் கட்டுப்பட வச்சிட்டோம்ல? இதெல்லாம் பிற்காலத்துல சித்தூர்கட்டின் ஸ்வீட் மெமரீஸ் ஆகிடும்:) சண்டை போட்டுக் கொண்டோ ஏன் சத்தமாகப் பேசிக் கொண்டிருப்பவர்களையே நான் மிகக் குறைவாத் தான் கடந்த அஞ்சு மாசங்கள்ல பாத்துருக்கேன். நம்ம தலைவி கீதா சாம்பசிவம் மேடம் கூட ராஜஸ்தான் மாநிலத்தைப் பத்தி சொல்லும் போது 'எங்க ஊரு எங்க ஊரு'ன்னு புகுந்த வீடு லெவலுக்குப் பெருமையா பேசுவாங்கன்னா பாத்துக்கங்களேன்.
சித்தூர்கட்டில் இருக்கும் கோட்டை வரலாற்று புகழ்பெற்றது. உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பல சுற்றுலா பயணிகள் இதை பாக்க வர்றாங்க. 560அடி உயரமுள்ள ஒரு மலையின் மீது இந்த கோட்டை அமைஞ்சிருக்கு. கோட்டையைத் தவிர்த்து ஒரு ஊரே அந்த மலை மேலே காலகாலமா குடியிருக்கு. மலை என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு 'plateau'.(தமிழ்ல என்னங்க?). மலையின் மேல் பகுதி சமத்தளமாக இருக்கும். நாங்க இருக்குற எடத்துலேருந்து இக்கோட்டை கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில், சித்தூர்கட் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. இது வரைக்கும் நான் இருக்குற எடம் சித்தூர்கட்னு சொல்லி வந்தாலும் நாங்க இருந்த எடத்தோட பேரு ஷம்பூபுரா...அங்க எங்க சிமெண்ட் கம்பெனி மற்றும் சில சுண்ணாம்புக் கல் மைன்ஸ்களைத்(Limestone Mines)தவிர வேறொன்னுமில்லை. சில பேரை நீ எந்த ஊருடான்னு கேட்டா மெட்ராஸ்னு சொல்லுவாங்க, மெட்ராஸ்ல எங்கேடான்னு கேட்டா அச்சிறுப்பாக்கம்னு சொல்லி அச்சிறுப்பாக்கம் பஞ்சாயத்து யூனியனையும் மெட்ராஸோடு இணைச்சிடுறதில்லையா? அது மாதிரி தான் இதுவும்:). சித்தூர்கட்டிலிருந்து ராஜஸ்தானின் பல சுற்றுலா தளங்கள் 3-4 மணி நேர தூரத்தில் அமைந்திருக்கிறது. சித்தூர்கட்டிலிருந்து உதய்பூர் 120 கி.மீ, அஜ்மேர் 160 கி.மீ(உலகப் புகழ் பெற்ற தர்கா இங்குள்ளது, புஷ்கர் ஒட்டக சந்தையும் அஜ்மேருக்கு அருகாமையில் உள்ளது), பீல்வாடா(Bhilwara) 60 கி.மீ, மவுண்ட் ஆபு 250 கி.மீ.
சித்தூர்கட்டோட வரலாற்றைப் பாத்தா, இது மவுரிய அரசர்களின் வசம் இருந்ததாகச் சொல்கிறார்கள். சித்தூர்கட்ங்கிற ஊரோட பேரே சித்திராங்கத மவுரியா என்கிற அரசனின் பேரிலிருந்து தான் வந்ததுன்னு சொல்றாங்க. பழங்காலத்தில் இவ்வூரை சித்திரகூட் (Chitrakoot) என்ற பேரில் அழைத்திருக்கிறார்கள், அது நாளடைவில் சித்தூர்கட் அகி விட்டது. தமிழில் எழுதும் போது சித்தூர்கட் என்றும் ஆங்கிலத்தில் எழுதும் போது Chittorgarh என்றும் எழுதினாலும் "கட்"(Garh) என்ற சொல் கோட்டையைக் குறிப்பதால் ஊரைப் பத்தி மட்டும் பேசும் போது இங்கிருக்கும் லோக்கல் மக்கள் இவ்வூரை "சித்தோட்" என்றே குறிப்பிடுகிறார்கள். சித்தூர்கட் என்பது மேவாட்(Mewar) எனும் பழைய ராஜியத்தின் கீழ் வருகிறது. இம்மேவாட் ராஜியத்தின் சிறப்பு இது கடைசிவரை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாமலிருந்தது என்பதே. ராஜஸ்தானின் பல ராஜியத்தவர்களும் முதலில் முகலாயர்களுக்கும் பின்னர் ஆங்கிலேயர்களுக்கும் கட்டுப்பட்ட போதிலும் மேவாடைச் சேர்ந்தவர்கள் மட்டும் வணங்காமுடியாகவே இருதிருக்கிறார்கள். இக்கோட்டையோடு தொடர்புடைய சில வரலாற்று முக்கியம் பெற்ற பெயர்கள் - ராணா உதய்சிங், மஹாராணா பிரதாப் சிங், ராஜா ரதன் சிங், ராணி பத்மினி மற்றும் பக்த மீரா.
கீழே நீங்கள் காண்பது சித்தூர்கட் கோட்டை மேல் ஏறுவதற்கு முன்னால் வரும் ஆறு. பேரு கம்பீரி(Gambheeri) நதி. 
சாலையிலிருந்து லாங் ஷாட்ல பாக்கும் போது கோட்டை இப்படித் தான் தெரியுது. படத்தை ஒரு முறை கிளிக் பண்ணி பாத்தீங்கன்னா இன்னும் கொஞ்சம் பெருசா தெளிவாத் தெரியும். இந்த படத்துக்கு மட்டுமில்லை...எல்லா படத்துக்குமே தான்.
மலை மேல் ஏறும் போது 'போல்'(Pole) என்ற இது போன்ற முகப்புகளைக் காணலாம். வழிநெடுக பல போல்கள் உள்ளன. ராம் போல், லட்சுமண் போல், ஹாத்தி (யானை போல்), ஹனுமான் போல் போன்றவை. 
கோட்டையின் மதில் சுவர்கள்(Ramparts). லைம்ஸ்டோனுக்கும், மார்பிளுக்கும் பஞ்சமில்லை என்பதால் இவ்வகை கற்களைக் கொண்டே இங்கு கோயில்கள், பெரிய கட்டிடங்கள் ஆகியவற்றை நிர்மானிக்கிறார்கள். கோட்டை மதிற் சுவர்களும் சுண்ணாம்பு கற்களால் ஆனது. 
ராணா பிரதாப் சிங், உதய்சிங் போன்ற புகழ் பெற்ற வழித்தோன்றல்களை வரலாற்றில் கேள்வி பட்டிருப்போம். அவர்களுடைய மூதாதையர் ராணா கும்பா என்ற அரசரின் மாளிகையின் நுழைவாயிலில் இருக்கும் 'tombstone'. Archaeological Survey of Indiaவின் பாதுகாப்பின் கீழ் இந்த கோட்டை இருந்தாலும் இங்கிருக்கும் மாளிகைகள் பாழடைந்தே காணப்படுகின்றன. கோயில்களை நன்றாகப் பராமரித்து வைத்து உள்ளார்கள். அதனுடன் மலை மேலேயே ஒரு அருங்காட்சியகமும் இருக்கிறது. அலாவுத்தீன் கில்ஜியின் படையெடுப்பின் போது பல சிலைகளும், கலை பொக்கிஷங்களும் சேதப் படுத்தப் பட்டதாகச் சொல்கிறார்கள். 
மலை மேலிருந்து கோட்டையின் ஒரு காட்சி. இம்மாதிரியான வரலாற்றுச் சின்னங்களுக்குச் செல்லும் போது நமக்கு அவ்விடத்தைப் பற்றி எதுவும் தெரியாத போது ஒரு கைடு(Guide) வைத்துக் கொள்வது உத்தமம். அவ்வப்போது சில புருடாக்களை இவர்கள் விட்டாலும், பல புது விஷயங்களையும்(புருடாக்களையும்) தெரிந்து கொள்ளலாம். கீழே தெரியும் பசேலேன்ற இந்த இடத்தில் தான் "தி கைடு" இந்தி திரைப்படத்தில் தேவ் ஆனந்தும், வஹிதா ரெஹ்மானும் ஆடிப் பாடும் "ஆஜ் முஜே ஜீனே கி தமன்னா ஹை" பாடல் படமாக்கப்பட்டதாக நம்ம கைடு சொன்னார்.
கீழே படத்தில் தெரிவது - உயரமாக இருக்கும் கோயில் கோபுரம் பலராமர், கிருஷ்ணர், ராதை இவர்களுக்காக அமைக்கப் பட்டிருக்கும் கோயில். அதனருகே இருக்கும் சிறிய கோபுரம் "மீரா பாய்" கோயிலின் கோபுரம்.
பழைய அரண்மனையைக் காட்டும் படம். முகலாயர்கள் படையெடுப்பின் போது தன்னுடைய இளவரசர் உதய்சிங்கைக்(அப்போது குழந்தை) காப்பாறுவதற்காக பன்னா தாய்(Panna Dhai) என்ற பணிப்பெண், இளவரசருக்குப் பதிலாகத் தன் குழந்தையைப் பலி கொடுத்த கதையைக் கேட்க முடிந்தது. பகைவர்கள் இளவரசரைத் தேடிக் கொண்டு அரண்மனைக்குள் நுழைந்து "எங்கே குழந்தை" என்று கேட்டதும், இளவரசருக்குப் பதிலாகத் தன் சொந்தக் குழந்தையை மாற்றியிருந்த பன்னா "இதோ" என தூங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையைக் காட்ட, தன் கண் முன்னரே தன் குழந்தை வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தவள். இதை விவரிக்கும் ஒரு ஓவியமும் அங்கு அருங்காட்சியகத்தில் இருந்தது. பன்னாவின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'ராஜஸ்தானி'யில்(இது ஒரு வட்டார வழக்கு) பல நாட்டுப்புறப் பாடல்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன்.
மீரா கோயிலின் படம்
நான் கேள்வி பட்ட/தெரிந்து கொண்ட இன்னொரு விஷயம் கிருஷ்ணரைத் துதித்த மீரா பாய் இந்த வம்சத்தின் மருமகள் என்பது(சித்தூர்கட் கோட்டையை ஆண்டவர்கள் சூரியவம்சத்தினர் என்று கேள்வி பட்டேன்). மீரா பாயின் கணவர் சித்தூர்கட் கோட்டையை ஆண்ட அரசர்களில் ஒருவர். தன் மனைவி எப்போதும் கடவுளின் நினைவாகவே இருப்பதை அறிந்து கொண்ட அரசர்(பெயர் மறந்து போச்சு) தன் மனைவி வழிபட கோயில் ஒன்றை கட்டிக் கொடுத்தாராம். அதுவே இந்த கோயில். இதுலேருந்து என்ன தெரியுதுன்னா "Behind every 'devoted' wife, there is an equally 'devoted' husband".(Pun intended!)
ஆனால் மீரா பாயின் கணவரின் மறைவுக்குப் பின்னால் அரியணை ஏறிய அவரது தம்பி, தனது அண்ணி எப்போதும் சாதுக்களுடன் ஆடிப் பாடிக் கொண்டிருக்கிறாளே அதனால் குடும்பத்துக்குக் கெட்டப் பெயர் வருகிறதே என எண்ணி அவளைக் கொல்ல விஷம் கொடுத்து பருகச் சொன்னானாம். ஆனால் பக்தியில் சிறந்தவளான மீரா பாய் அதை பருகியதும், விஷமும் அமிர்தமானதாம். அதன் பின் இனி இவ்விடத்தில் நான் இருக்க மாட்டேன் என்று மனம் வெதும்பி மீரா பாய் துவாரகாவிற்குச் சென்று விட்டாளாம்.
உதய்பூரிலிருந்து இவ்வம்சத்தினவர்களின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றது போல சித்தூர்கட்டிலிருந்து என்றுமே நடைபெற்றதில்லையாம். எப்போதும் சச்சரவுகளுக்குட்பட்ட கோட்டையாகவே இருந்திருக்கிறதாம். அதற்கு காரணம் பக்த மீரா பாயின் சாபம் என எங்கள் வழிகாட்டி(கைடு) சொன்னார். பெண் பாவம் பொல்லாதுன்னு சும்மாவாச் சொன்னாங்க. அவர் சொன்ன இன்னொரு விஷயம் பெண்களுக்கு ராஜபுத்(Rajput) குடும்பங்களில் மிக்க மதிப்பும் மரியாதையும் இருந்த போதிலும், அவர்கள் நாலு சுவருக்குள்ளேயே அடைந்து இருந்து தான் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டுமாம். அரசவை நடைபெறுவதை பார்க்க வேண்டும் என்றால் கூட உப்பரிகையில் ஜன்னலின் சிறு துவாரங்கள் வழியாகத் தான் பார்க்க முடியுமாம். இதனை எங்கள் கைடு "சோனே கே பிஞ்ச்டே மே பந்த் சிடியா" எனக் குறிப்பிட்டார். அதாவது 'தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட பறவை'.
கிருஷ்ணரும், பக்த மீரா பாயும் கோயிலுக்குள்ளே
[பி.கு : தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார்(திரு.வி.க) எழுதிய ஒரு பயணக் கட்டுரையின் பெயர் 'எனது இலங்கை செலவு'. எட்டாம் வகுப்பு(என நினைக்கிறேன்) தமிழ் பாடப் புத்தகத்தில் அமைந்திருந்தது இக்கட்டுரை. இத்தலைப்பில் 'செலவு' என்ற சொல் இலங்கைக்குச் சென்று வர ஆன பொருட் செலவைக் குறிக்கவில்லை, இலங்கைக்குச் சுற்றுலா சென்று வந்ததனைச் 'செலவு' என்ற சொல்லின் மூலம் குறிக்கிறார் திரு.வி.க. (இச்சொல்லுக்கான பொருளையும், திரு.வி.க. அவர்களே அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்). இத்தலைப்பினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் My Journey to Sri Lanka. காப்பியடிக்கிறது தான் நமக்கு கைவந்த கலையாச்சே? :)
இன்னிக்கு எனக்கு சித்தூர்கட்ல கடைசி நாள். இன்னியோட இங்கே பிராஜெக்ட் முடியுது. பல மகிழ்ச்சியான நினைவுகளையும், பல அனுபவங்களையும் ஒரு எக்ஸ்ட்ரா லக்கேஜையும்(என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்:) ?) சுமந்துக்கிட்டு சித்தூர்கட்டிலிருந்து அடுத்த பிராஜெக்ட் சைட்டான குஜராத் மாநிலம் அஹமதாபாத்துக்கு இன்றிரவு செல்லவிருக்கிறேன். அஹமதாபாத்தில் புது பிராஜெக்ட், புது டீம்- அதுனால போன கொஞ்ச நாளைக்கு ப்ளாக், இண்டர்நெட் இதெல்லாம் கொறச்சிக்கிட்டு அடக்க ஒடுக்கமா வாலாட்டாம இருப்போம். ஆனா கொஞ்சம் குளிர் விட்டதும் ஆட்டத்தை ஸ்டார்ட் பண்ணிடுவோம். அதோட சித்தூர்கட் பத்திய இந்த பதிவு பாதி தான் செலவாகியிருக்கு. மீதி செலவை இன்னும் கொஞ்ச நாள்ல வாய்ப்பு கெடச்சதும் சொல்லறேன்.]
Thursday, October 05, 2006
கர்பா நடனம்
நவராத்திரி அப்போ போன பதிவுல போட்டிருக்கற படங்களோட ஒரு சின்ன வீடியோவும் எடுத்தேன். அங்கே வேலை செய்யறவங்களோட குழந்தைகள் ஆடி காட்டிய கர்பா(Garba) நடனம். ஒரு வாரத்துல இந்த கர்பா நடனத்துலேயே பல வகைகளைப் பார்த்தேன். பெண்கள் வட்டமா சுத்தி வந்து கும்மி அடிக்கிற மாதிரி இருக்கற நடனத்தையும் கர்பா நடனம்னு தான் சொல்றாங்க. இத மாதிரி சின்ன குழந்தைகள் வேகமா ஆடற நடனத்தையும் கர்பான்னு தான் சொல்றாங்க. பின்னாடி ஒலிக்கிற பாடல் குஜராத்தி மொழியில அமைஞ்சது. பள்ளிக் கூடத்து டான்ஸ் மாஸ்டரோட பயிற்சியில பசங்க நல்லாவே ஆடுனாங்க. பாரம்பரிய உடை அணிஞ்சு சந்தோஷமா ஆடற பாத்ததும் நமக்கும் ஒரு குத்து குத்தனும் போல தான் இருந்தது. ஆனா நம்ம கூட இருந்த பசங்க எவனும் கம்பெனி குடுக்காததுனால ஒரு நல்ல கலைஞனின் நடனத் திறமைகளை மக்களால கண்டுகளிக்க முடியலை :)
வீடியோவைப் பகிர்ந்துக்கனும்னு நேத்து தான் Photobucketல அக்கவுண்ட் தெறந்தேன். படம் ஒழுங்காத் தெரியுதா இல்லியான்னு பாத்துட்டுச் சொல்லுங்க.
Wednesday, October 04, 2006
தசரா
கடந்த பத்து நாளாவே இங்கே நான் இருக்குற இடத்துல(சித்தூர்கட்) ஒரே திருவிழாக் கோலம் தாங்க. காரணம் தசரா பண்டிகை. வட இந்தியாவில்(வட இந்தியா என்று சொன்னாலும் மேற்கு, கிழக்கு பகுதிகளும் இதில் அடங்கும்) மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. நம்ம ஊருல நவராத்திரின்னு சொல்றதை இங்கே 'நவராத்திரா'ன்னு சொல்றாங்க. நவராத்திரா நடக்கற ஒன்பது நாட்களும் பகல் முழுக்க எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள், காலையில் சிற்றுண்டி சாப்பிடாமல் மதிய உணவில் வெங்காயம், பூண்டு போன்றவற்றைச் சேர்க்காமல் ஜவ்வரிசி கிச்சடி, தயிர், வாழைப்பழம் என்று மட்டும் சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.
நாம் நவராத்திரி கொண்டாடுவதற்கும் இங்கு கொண்டாடுவதற்கும் கண்கூடான வித்தியாசம் என நான் கருதுவது 'நவராத்திரி கொலு' வட இந்தியாவில் வைப்பதாக நான் கேள்விபட்டதில்லை. கொலு என்று சொன்னாலே "மிக்சட் மெமரிஸ்" தான். சிறு வயதில் கொலு வைத்திருக்கும் வீட்டில் அழகழகான பொம்மைகளைக் காண்பது மிக மகிழ்ச்சியான ஒரு விஷயமாக இருந்திருக்கிறது. ரயில், கோயில், தெப்பக்குளம், யானை, குதிரை என்று அனைத்தையும் மினியேச்சராகக் காண்பதில் அந்த வயதுக்கே உரிய ஒரு சின்ன சந்தோஷம். பல வீடுகளில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு ப்ளவுஸ் பீஸ், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் டப்பா இத்யாதிகளைத் தருவார்கள். எது எப்படியோ கூடப் போகும் நமக்கும் எதாவது ஒரு சீப்போ, ஒரு சிறு கண்ணாடியோ இல்லை வேறு எதாவது ஒரு சிறு சொப்பு சாமான் பரிசாகக் கிடைத்தால் வந்ததுக்கு ஒரு லாபம். ஆனால் அதே சமயம், கொலு மண்டபத்தில் இருக்கும் எதாவது ஒரு 'பெருசு' சின்னப்பசங்க எதாச்சும் ஒரு பாட்டு பாடுங்க என்று கிளப்பி விடுவதைக் கேட்கும் போதே அங்கிருந்து ஓடி வந்து விட வேண்டும் போல இருக்கும். அப்படியே எதாச்சும் பாட்டு பாடினாலும் மிக உஷாராகப் பாட வேண்டும். அந்த வயதில் எதாச்சும் எசகுப்பிசகா காதல்-கத்திரிக்கா பாட்டைத் தெரியாத் தனமாப் பாடி விட்டால் 'கொலுவுல இந்தப் பாட்டைத் தான் பாடுவாங்களா?'ன்னு வீட்டுக்குப் போனதும் செமத்தியா திட்டு கிடைக்கும். அதற்கு பயந்து கொண்டே கொலு வைக்கும் வீட்டில் பாடச் சொன்னால் வாயை மூடிக் கொண்டு இருந்து விடுவது. ஒரு சோதனையாக அந்த மாதிரி நேரங்களில் 'சாமி பாட்டு' எதுவும் நினைவுக்கு வராது 'நிலா அது வானத்து மேலே' தான் நினைவுக்கு வரும் :)
நாம் இங்கு விஜயதசமிக்கு முதல் நாள் ஆயுத பூஜை என்று நவராத்திரி நாட்களில் கொண்டாடுவதை இங்கு இவர்கள் 'விஷ்வகர்மா தினம்' என்ற பெயரில் நவராத்திரி தினங்களுக்கு முன்னரே கொண்டாடி விடுகின்றனர். இவ்வர்டம் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று நான் இருக்கும் இடத்தில் விஷ்வகர்மா பூஜை செய்யப்பட்டது. வர்க் ஷாப்பில் இயந்திரங்களுக்கும் உபகரணங்களுக்கும் பூஜை செய்து எல்லோருக்கும் பிரசாதம் வழங்கினார்கள். தமிழ்நாட்டில் ஆயுத பூஜை அன்று பேக்டரிகளில் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடுவது போலவே இங்கு விஷ்வகர்மா தினத்தன்று வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்(நான் இந்தூரில் இருந்த போதும், அங்கும் இதே போல இத்தினத்தன்று பூஜை செய்து கொண்டாடினார்கள்). கீழே உள்ளது விஷ்வகர்மா பூஜை நடந்த இடத்தில் இருந்த பொம்மைகளின் படம். நரைத்த தாடியுடன் கொக்கு மேல் அமர்ந்திருப்பவர் தான் விஷ்வகர்மா கடவுளாம். இந்த பொம்மைகள் அனைத்திலும் மோட்டர் பொருத்தப்பட்டு அழகாக அசைந்தாடி கொண்டிருந்தது. குறிப்பாக நிற்கும் அந்த பெண்களின் பொம்மைகள் இடுப்பை அசைத்து ராஜஸ்தானி முறையில் நடனமாடியதைக் காண அழகாக இருந்தது.
நாங்கள் இருக்கும் இடத்தில் வெறும் சிமெண்ட் தொழிற்சாலை மட்டும் அல்லாமல், அதை ஒட்டியே அங்கு பணிபுரியும் ஊழியர்கள் வசிக்கும் காலனியும்(நாங்கள் தங்கி இருந்ததும் இக்காலனியில் உள்ள விருந்தினர் விடுதியில் தான்), அழகிய கோயிலும், ஸ்கூலும் கொண்ட ஒரு பெரிய வளாகம் உள்ளது(சுருக்கமாகச் சொன்னால் ஒரு மினி டவுன்ஷிப்). வேலை முடித்து இரவு கெஸ்ட் அவுஸ் திரும்பியதும் கோயிலை ஒட்டிய இடத்தில் ஒவ்வொரு நாள் இரவும் டாண்டியா(Dandia) மற்றும் கர்பா(Garba) நடனங்கள் நடைபெறும். டாண்டியா என்பது நம்மூர் கோலாட்டம் போல குச்சிகளைக் கொண்டு ஆடப்படும் நடனம். கர்பா என்பது கைகளைத் தட்டி ஒரு வட்டமாக சுற்றி வந்து ஆடும் நடனம்(கிட்டத்தட்ட நம்மூர் கும்மி மாதிரி தான்). ஆண்கள் பெண்கள் இருவரும் இந்நடனங்களில் பங்கு பெறுவார்கள். இந்நடனங்களுக்கான போட்டிகளும் அங்கு நடைபெற்றது. டாண்டியா கர்பா இரண்டுமே குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நடனங்கள் என்பதால் இதற்கான பாடல்களும் குஜராத்தி மொழியில் அமைந்திருந்தன. ஆனால் தற்போது இந்தி திரைப்பட பாடல்களும் அதே பாரம்பரிய மெட்டில் அமைத்து ரீமிக்ஸ் நவராத்திரி பாடல்களையும் புகுத்திவிட்டார்களாம்.
கீழே காண்பது ஆண்கள் பங்கு பெற்ற டாண்டியா நடனம்.
பள்ளிக் குழந்தைகள் பங்கு பெற்ற கர்பா நடனம்.
இந்நடனங்கள் முடிவடைந்ததும் ஒவ்வொரு நாளும் இரவு கீழே உள்ள துர்கா தேவிக்குப் பூஜை நடைபெறும். இப்பூஜையை 'ஆரத்தி' என்றழைக்கிறார்கள். இந்த அம்மனையும் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கிறார்கள். 'அம்பே தேவி, 'ஷேரோ வாலி' என பல பெயர்கள். ஜம்மு மாநிலத்தில் உள்ள "வைஷ்ணோதேவி" ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கும் வைஷ்ணோ தேவி சிம்மவாஹினியாகக் காட்சி தருகிறாள். நமக்கு திருப்பதி போல அங்கு வடக்கில் 'வைஷ்ணோ தேவி'. பிராப்தம் இருந்தால் தான் அங்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது. 
அஷ்டமி, நவமி என்று நவராத்திரா நடைபெற்ற ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். கிட்டத் தட்ட ஒவ்வொரு ஊரிலும் ஒன்பது நாள் நவராத்திரா முடிவடைந்து பத்தாவது நாளான தசரா அல்லது விஜயதசமிக்கு முன்னர் ஒரு திருவிழா நடத்துகின்றனர். இதை 'மேளா'(Mela) என்கிறார்கள். பல நகரங்களில் இது போன்ற மேளாக்களை நடத்துவதற்கென்றே 'தசரா மைதான்'களும் இருக்கின்றன. இங்கு பெருமளவில் மக்கள் குழுமுகிறார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று தசராவிற்கு முதல் நாள் சித்தூர்கட் தசரா மேளாவிற்குச் சென்றோம். சென்னை சுற்றுலா பொருட்காட்சி போல(எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது) பல விதமான கடைகளும், சிற்றுண்டி சாலைகளும், வகை வகையான ராட்டினங்களும், குழந்தைகளை மகிழ்விக்கப் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்திருந்தன. கீழே காணும் படம் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தில் வருவது போன்ற ஒரு 'மரணக் கிணறு' ஆகும். காரும், மோட்டார் சைக்கிளும் மரணக் கிணற்றுக்குள் ஓட்டுவதை பார்க்க மக்களை அவர்கள் அழைத்த விதம் வேடிக்கையாக இருந்தது. 
தசரா அன்று நடக்கும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி 'ராவண் தஹண்' என்பது. அதாவது ராவணன் பொம்மையை எரித்தல். தீமையை நன்மை வெற்றி கொண்டதை குறிக்கும் வகையில் இந்த எரியூட்டு விழா நடக்கிறது. தில்லியில் நானிருந்த போதே இதை பலமுறை கண்டிருக்கிறேன்.
அக்டோபர் இரண்டாம் தேதி தசரா அன்று ராம லட்சுமணர், வானர வேடம் அணிந்த குழந்தைகள் ராவணன் எரியூட்டலுக்கு முன் ஊர்வலமாகச் சென்று கொண்டிருக்கும் போது எடுத்த படம். ஊர்வலமாக வந்தவர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டுக்கொண்டே வந்தனர்.
கீழே இருப்பது பள்ளி விளையாட்டு மைதானத்தில் எரிப்பதற்கு தயாராக ராவணன் பொம்மை. தில்லியில் தசரா நிகழ்ச்சிகளில் ராவணனுடன், கும்பகர்ணன், ராவணனின் புதல்வன் இந்திரஜித்(வடக்கில் மேக்நாத் என்றும் அழைக்கிறார்கள் - புலவர் குழந்தையின் இராவண காவியத்தில் வரும் சேயோன்) ஆகிய மூன்று பொம்மைகளையும் எரியூட்டக் கண்டிருக்கிறேன். ஆனால் இங்கு ஒரே ஒரு ராவணன் பொம்மை மட்டுமே இருந்தது. பெரிய நகரங்களில் இடம் நிறைய இருப்பதால் அவ்வாறு செய்கிறார்கள் என்றும் உண்மையில் சூரியன் மறையும் வேளையில் ராவணன் மட்டும் தான் ராமனின் அம்பால் கொல்லப்பட்டான் என்றும் கும்பகர்ணனும், சேயோனும் அதற்கு முன்னரே கொல்லப்பட்டு விட்டிருப்பார்கள் என்றும் இம்முறை தெரிந்து கொண்டேன். 
வேடம் அணிந்து வந்த குழந்தைகள் நடத்திக் காட்டிய 'இராவண வதம்'. இராமனின் அம்பினால் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கும் இராவணன்.
இராவணன் பொம்மை எரிகிறது
ராவணனை எரியூட்டற சிச்சுவேஷனுக்குச் பொருந்துற பாட்டு ஒன்னு ஞாபகத்துக்கு வருதுங்க. 'ஹே ராம்' படத்துல ராஜா இசையில 'அஜய் சக்கரவர்த்தி'ங்கிற பாடகர் பாடுன பாட்டு. இந்துஸ்தானி இசை முறையில் அமைந்த மிக அருமையான பாடல். அஜய் சக்கரவர்த்தி இந்துஸ்தானி சங்கீத உலகில் மிகப் புகழ் பெற்றவர், பெங்காலி மொழியிலும் இவர் குரலில் பல ஆல்பங்கள் வெளி வந்துள்ளன.
இந்த சுட்டியைக் க்ளிக் செய்து "இசையில் தொடங்குதம்மா" பாடலைக் கேட்டு பாருங்கள்
பாட்டோட மூன்றரையாவது நிமிடத்துல "டும்டாக் டும்டாக் டும்டாக்"னு மேளச் சத்தம் போயிக்கிட்டு இருக்கும் போது திடீர்னு சாரங்கி இசை வந்து குழையும் பாருங்க...என்னன்னு சொல்றது...pure listening pleasure.
இராவணனை எரித்து விட்டு பள்ளி மைதானத்தில் இருந்து அனைவரும் ஊர்வலமாக 'ராம் தர்பார்' கோயிலுக்குச் சென்று வழிபட்டு விட்டு பிரசாதம் வாங்கி கொண்டு கிளம்பினோம். கோயிலைச் சுற்றி உள்ள இடத்தில் இராமபிரானின் வாழ்க்கையை விவரிக்கும் பல படங்களை வைத்திருந்தார்கள். கீழே காண்பது விஸ்வாமித்திர முனிவரிடம் இராம லட்சுமணர்கள் வில்வித்தை பயில்வது. 
ராஜஸ்தான் மாநிலத்தில் நான் கொண்டாடிய முதல் நவராத்திரா(அல்லது நவராத்திரி) என்பதாலும், நவராத்திரியின் ஒவ்வொரு கட்டத்திலும் புகைப்படம் எடுத்ததாலும், அதை பற்றி என் வலைப்பூவில் விரிவாக எழுதி பதிவிட்டதாலும் 2006ஆம் ஆண்டின் இந்த தசரா பண்டிகை பல காலம் என் நினைவில் நிற்கும் என்பதில் ஐயம் இல்லை.
Sunday, October 01, 2006
நான்கு சியாமள மங்கைகள்
இந்த இங்கிலீஷ் பாட்டு இருக்கு இல்லீங்க இங்கிலீஷ் பாட்டு...அதை எல்லாம் கேக்க ஆரம்பிச்சது நான் எட்டாவது படிக்கும் போது தூர்தர்ஷன் செகண்ட் சேனல்ல வந்த "Michael Jackson is the King of Pop"ங்கிற நிகழ்ச்சியைப் பாத்துட்டு தான். ஜாக்சன் துரை என்ன பாடுறாருன்னு ஒன்னும் புரியலைன்னாலும் சும்மா அந்த பீட்டைக் கேட்டு கையைக் காலை அசைச்சிட்டு கெடப்போம். உதாரணத்துக்கு "Black or White"ங்கிற பாட்டுல "Black or White"னு அவரு சத்தமா கத்துறதை தவிர வேற எதுவும் பெருசா புரிஞ்சதில்லை. இப்ப கூட பெருசா எதுவும் முன்னேத்தமில்ல. இருந்தாலும் டெல்லியில என் கூட வேலை செஞ்ச பசங்க புண்ணியத்துல, மைக்கேல் ஜாக்சனை மீறி வேற பல ஆர்ட்டிஸ்டுங்க (அப்படித் தான் சொல்லனுமாம்)பாட்டையும் கேக்கறதுண்டு. அப்படி எனக்கு புடிச்ச பாட்டுகள்ல ஒரு பாட்டு '4 Non Blondes'ங்கிற குரூப்போட 'What's goin on'ங்கிற பாட்டு. அந்த பாட்டுல மெல்லிய கிடார் இசையும் வித்தியாசமா இருக்குற "Hi-pitch" பெண் குரலும் ரொம்ப புடிக்கும்.
இந்த பாட்டைக் கேக்கும் போதெல்லாம் ஊப்பி கோல்டுபெர்க்(Whoopi Goldberg) மாதிரி இருக்குற ஒரு 40-45 வயசுள்ள யாரோ ஒரு 'கருத்தம்மா' பாடுன பாட்டுன்னு தான் நெனச்சிக்குவேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இணையத்துல தேடும் போது தான் இந்த பாட்டு வரிகளும் இதப் பாடுனவங்க லிண்டா பெர்ரிங்கிற(Linda Perry) வெள்ளைக்கார அக்கான்னு தெரிஞ்சது. இந்த பாட்டை இதுக்கு முன்னாடி பல முறை கேட்டுருந்தாலும், சத்தியமா சொல்றேன் ஒரு தடவை கூட என்ன பாடுறாங்கன்னு புரிஞ்சதில்லை(அமெரிக்கால வேலை செய்யறவங்க, படிக்கிறவங்க எல்லாம் எப்படித் தான் இதெல்லாம் சமாளிக்கிறீங்களோ?). கொடுமை என்னன்னா பாட்டு வரிகளை பதிவிறக்கம் செஞ்சும் கூட, நமக்கு என்ன சொல்ல வர்றாங்கன்னு புரியலை. அதனால அதை அப்படியே விட்டுட முடியுமா என்ன? கீழே இங்கிலீஷ் பாட்டு வரிகளைப் பாருங்க. என்ன நெனச்சிப் பாடிருப்பாங்கன்னு நானே தமிழ்ல பாட்டு வரிகளை மொழி "பேத்துட்டேன்".
பாடல் : What's Up?
ஆல்பம் : 4 Non Blondes(1992)
பாடியவர் : லிண்டா பெர்ரி (Linda Perry)
Thursday, September 28, 2006
இது ஒரு "அசைவ" பதிவு
எச்சரிக்கை : ரொம்ப நாளா யோசிச்சி யோசிச்சி யெஸ்-நோ, யெஸ்-நோனு புத்தி குழம்பி, கடைசியா 'ஒன் ஃபைன் டே' என்னோட மிருக இச்சைகள் மேலோங்குனதால இந்தப் பதிவு. நானும் சாதாரண ஒரு மனுஷன் தானே! அதுனால தான். இப்படி பட்ட மேட்டர்ஸ் ஆஃப் இந்தியா பதிவை கஷ்டப் பட்டு எழுதிட்டு "Readers' discretion is advised"னு ஒரு வார்னிங் குடுக்கலைன்னா ஊருக்குள்ள பெரிய மனுசனா மதிக்க மாட்டாங்க. அதுனால "This presentation does not contain graphic images, it may be suitable for all readers, but still readers' discretion is advisedங்கோ சாமியோவ்"
தமிழ்நாட்டை விட்டு வெளியூருக்குப் போய் பொழப்பைத் தேடுற என்னை மாதிரி பேச்சிலர் பசங்களோட மாஸ்லோ முக்கோணத்துல(Maslow's triangle)என்னென்ன அடிப்படை தேவைகள் இருக்கும்னு நெனக்கிறீங்க? கஷ்டப்பட்டு(அட நம்புங்கப்பா!) வேலை செஞ்சிட்டோ படிச்சிப்பிட்டோ வந்தாக்கா ராத்திரி ஒண்டறதுக்கு ஒரு எடம், எட்டு மணி நேரமோ பத்து மணி நேரமோ ஆபீசுல நேரத்தைப் போக்க நாலு சேத்தாளிவ, வவுத்துக்கு ரெண்டு வேளை சோறு(மூணாவது வேளை தான் ஆபிசுலேயே போட்டுடறாங்களே)...இது தானே? இதுக்கு மேல வர்ற எந்த தேவையையும் இதெல்லாம் முக்கோணத்துல அடுத்தக் கட்ட ஒஸ்தி ரக தேவைன்னு தூர தள்ளிடலாம். ஆனாலும் இந்த மூனு அடிப்படை தேவைகள்லயும், இந்த மூனாவதாச் சொன்ன விஷயம் சில சமயத்துல ரொம்ப கஷ்டம் குடுக்கும். தமிழ் நாட்டுக்குள்ளேயே வேற ஒரு ஊர்ல வேலை பாத்தீங்கன்னா இந்த பிரச்சனை அவ்வளவு பெருசாத் தெரியாது. ஆனா என்னைய மாதிரி வடநாட்டுல போயி குப்பையைக் கொட்டுற பயலுங்களைக் கேட்டுப் பாருங்க...கதை கதையாச் சொல்லுவாங்க. குறிப்பா நீங்க அசைவம் சாப்புடறவரா இருந்து அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் "நோ நான் வெஜ் டுடே"னு நான்-வெஜ் ஓட்டல்காரர்களே சொல்லக் கூடிய ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்கள்ல இருந்தீங்கன்னா...அய்யோ பாவம்.
ஒரு பொருளோட அருமை எப்பங்க ஒருத்தனுக்குத் தெரியும்? அது தூரத்துல இருக்கும் போதோ இல்ல அது நமக்கு கெடக்காமப் போனாலோ தானே? நம்ம கதையும் அப்படித் தாங்க. வீட்டுல சிக்கனும், மீனும் செஞ்சி வச்சி சாப்புடு சாப்புடுன்னு வலிய வலிய விருந்து வச்சாலும் இன்னிக்கு சாம்பார் ஏன் வக்கலைன்னு கேட்கற அரக்க குணம் படைத்தவன் தான் அடியேன். வீட்டுல இருந்த போதும் அசைவ சமாச்சாரங்கள் எதையும் "ராஜ்கிரண்" மாதிரியெல்லாம் வச்சி வெளாசனதும் கெடயாது. எல்லாம் ரெண்டு துண்டு மூனு துண்டு தான். ஆனா அது கூட கெடக்காம போகும் போது வர்ற 'craving' இருக்கே...ரொம்ப கொடுமையா இருக்கும். வீட்டுல நாளு கெழமையெல்லாம் பாத்து சாப்புட்டாலும், வீட்டை விட்டு வெளியே போயிட்டா வெள்ளி சனின்னு பாக்காம, அசைவம் எப்ப கெடச்சாலும் தின்ன சொல்லும். அசைவம் சாப்புடறவங்க யாராயிருந்தாலும் நாம தமிழ்நாட்டுல, வீட்டுலியோ இல்ல ஓட்டலிலேயோ சாப்பிடற அசைவ உணவுக்கு வெளி மாநில அசைவ உணவுகள் ஈடாவாதுங்கறதை ஒத்துப்பாங்க.
என்ன தான் நீங்க பஞ்சாபி, மொகலாய் மெக்சிகன், இட்டாலியன், தாய், சைனீஸ்னு அசைவம் சாப்பிட்டாலும் தமிழ்நாட்டுல தமிழ்நாட்டு ஸ்டைல்ல சாப்புடற மாதிரி வருமா? உதாரணத்துக்கு இந்த மீன் குழம்பையே எடுத்துக்குவோமே? வெறும் வெங்காயம், தக்காளி, மொளகா தூள், கொஞ்சம் வடகம் போட்டு வேற எங்கேயாச்சும் மீன் குழம்பு கெடக்குமா? வட இந்தியாவுக்கெல்லாம் போனீங்கன்னா இஞ்சி பூண்டு மசாலாவுல மீனைப் போட்டு சிக்கன், மட்டன் குருமா மாதிரி வச்சிடுவாங்க. அந்த மாதிரி இஞ்சி பூண்டு மசாலாவுல மீன் குழம்பு வச்சா ஏனோ நமக்கு புடிக்கிறதே இல்ல. இந்த மீன் குழம்பு விஷயத்துல கிட்டத்தட்ட நம்ம டேஸ்டுக்கு ஒத்து வர்றது "மேங்களூரியன்" உணவகங்கள்ல கெடைக்கிற "மீன் கஸ்ஸி" தாங்க(கொஞ்சம் தேங்கா தூக்கலாவும் புளி கம்மியாவும் இருக்கும்). அதே போல பட்டர் சிக்கனோ, கடாய் சிக்கனோ இல்ல கீரை போட்டு வைக்கிற 'சாக்வாலா முர்க்' இதெல்லாம்(அப்புறம் சிக்கனுக்கு மட்டுமே வாயில நுழையாத பல பேர்கள்) எனமோ அந்த நேரத்துக்குச் சப்பாத்தியோட சாப்பிட நல்லாருந்தாலும், மிளகு போட்டு ஒரு சிக்கன் குழம்பை வச்சு அதை நெல்லு சோத்துல பெசஞ்சு கூட ஒரு வஞ்சிர மீன் வறுவலோடவோ இல்ல ஒரு எறா வறுவலோடவோ நல்லா சாப்புட்டுட்டு ஞாயித்துக் கெழமை மதியானம் கும்முன்னு ஒரு தூக்கம் போட்டு எந்திரிச்சா...ஆஹா அதுவல்லவோ சொர்க்கம்? இல்லன்னா என்னிக்காச்சும் குடும்பத்தோட பொன்னுசாமில போய் ஒரு சிக்கன் பிரியாணி, ஒரு காடை ஃபிரை(குடும்பத்தோட போனா அம்மா அப்பா வாங்குற ஐட்டத்துலயும் சில துண்டு நமக்கு வந்து விழுந்துடும்...அப்ப செம வெரைட்டியோ வெரைட்டி தான்) இதெல்லாம் ஒரு வெட்டி வெட்டிப்பிட்டு ஒரு ஸ்வீட் பீடாவை மெல்லும் போது கிடைக்கும் அந்த திருப்திக்குப் பேரு என்னங்கோ?
ஹ்ம்ம்ம்ம்...ஆனா படிக்கிறதுக்கு புது தில்லி போன நேரத்துலேருந்தே, இந்த மாதிரி ரசிச்சி சுவைச்சி அசைவம் சாப்புடறது எல்லாம் மறந்து போச்சுங்கோ. ஹாஸ்டல்ல இருக்கும் போது வாரத்துல என்னிக்காச்சும் ஒரு நாள் ஒரு பீஸ் சிக்கன் உள்ள "சிக்கன் கறி" கெடக்கும். என்னோட ஃபிரெண்டு ஒருத்தன் இந்த விசயத்துல ரொம்ப லக்கி. அவனோட டிப்பார்ட்மெண்ட்ல வேலை செய்யற தமிழ்காரரு ஒருத்தரு ஞாயித்துக் கெழமை ஆனா அவனை அவங்க வீட்டுக்குக் கூப்பிட்டுருவாரு. மதியானம் சிக்கன், மட்டன், மீன், முட்டைன்னு மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு அந்த பய சாயந்திரம் ஹாஸ்டல்ல வந்து அவங்க வீட்டுல என்ன விருந்துன்னு மெனு சொல்லுவான் பாருங்க...அப்படியே ஆத்திரம் ஆத்திரமா வரும்(படையப்பா மாதிரி படம் புடிக்கிறேன்னு போட்டோ படம் எடுத்தே ஆப்பு வச்சானே அதே பய தான்). அதுக்கப்புறம் வேலை செய்ய ஆரம்பிச்சு கொஞ்சம் கையில துட்டு பாக்க ஆரம்பிச்சதும் "நன்றி கடவுளே இன்னிக்கு வெள்ளிக்கிழமை", "மரகத செவ்வாய்கிழமை"(நான் போன அன்னிக்கு எதோ ஹேலோவீன் பார்ட்டியாம்...ஹேலோவீன்னா என்னன்னு அன்னிக்குத் தான் தெரிஞ்சிக்கிட்டேன்), "கபாப் பேக்டரி", "ராஜிந்தர் தா டாபா", "பார்க் பலூச்சி" அப்படின்னு பல இடங்கள்ல போய் தின்னுருந்தாலும், இங்கே எங்கேயும் நம்ம மண்ணின் மகிமை நமக்கு தெரியாதுங்க. டெல்லி சாகர் ரத்னா க்ரூப்போட(நம்ம சரவண பவன் மாதிரி) "ஸ்வாகத்"னு ஒரு அசைவ உணவகத்தை தெறந்துருக்காங்க(இங்கே செட்டிநாடு, மங்களூரியன், கேரள ஸ்டைல்ல அசைவம் கெடக்கும்), ஆனா நம்ம நேரம்... அது ஆரம்பிச்ச கொஞ்ச நாள்லேயே நான் டெல்லியிலிருந்து இந்தூருக்கு வந்துட்டேன்.
நமக்கும் இந்த மாதிரி சவுத் இண்டியன் ஸ்டைல் அசைவம் சாப்பிட்டுட்டு யாரு கிட்டவாச்சும் மெனு சொல்லி வெறுப்பேத்தனும்னு ரொம்ப நாளா ஆசைங்கோ. எப்பவாச்சும் அந்த மாதிரி சாப்பிட சான்ஸ் கெடச்சுதுன்னா வெறுப்பேத்த எவனும் ஆள் கெடைக்க மாட்டான். கல்லைக் கண்டா நாயைக் காணோம் நாயைக் கண்டா கல்லைக் காணோம் கதை தான். ஆனா நாம நாயா இருக்கும் போது, கல்லு எப்பவும் சுலபமாக் கெடச்சிடும் போல. நாம வாங்கி வந்த வரம் அப்படி போலிருக்கு? இப்படித் தான் பாருங்க...போன மாசம் மும்பைல க்ளையண்ட் ஆபிஸ்ல இருந்தேன். அங்கே என் பின்னாடி சீட்டுல ஒக்காந்துருக்கற ஒரு ஆண்ட்டி எப்பவும் யாரோடவாச்சும் எதனா போன்ல பேசிட்டே இருப்பாங்க...அப்படி என்ன தான் மணிக் கணக்காப் பேசுவாங்களோ தெரியாது. நாம தான் கடுமையான உழைப்பாளியாச்சே. அதோட நான் உண்டு என் ப்ளாக் உண்டுன்னு இருக்கறவனாச்சே நானு? இதுல அவங்க என்ன பேசறாங்கன்னு "e(a)vesdrop" பண்ண நமக்கு ஏது நேரம்? ஆனா ஒரு நாளு சாயந்திரம் பாருங்க...ஆபிஸ் விடற நேரம் என் பின்னாடி சீட்டு ஆண்ட்டி அவுங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசுனது என் காதுல விழுந்தது. ஒடனே நான் ஒட்டுக்கேட்டேன்னு நெனக்காதீங்கப்பா...ஒரு வழிப்போக்கனா நான் பாட்டுக்கு என் போக்குல ஒக்காந்துருக்கும் போது தற்செயலா, மிகத் தற்செயலா என் காதுல தெளிவா விழுந்தது.
"ஹோம்வர்க் எல்லாம் பண்ணிட்டியா?"
".............." (அடங்க! அந்தப் பக்கம் பேசறது எனக்கு எப்படிங்க கேக்கும்? இதெல்லாம் கொஞ்சம் ஓவரு! அத சிம்பாலிக்காச் சொல்றதுக்காவத் தானே அடைப்புக்குறிக்குள்ள நெறைய புள்ளிஸ்டாப்பு எல்லாம் வச்சிருக்கோம்?)
"எல்லாத்தயும் பண்ணி முடிச்சிட்டா என்ன...அந்த ஹிஸ்டரி போர்ஷனை எடுத்து வச்சு ரிவைஸ் பண்ணு. இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்"
".............."
"ஹ்ம்ம்ம்...சரி சரி...க்ராண்ட்மா கிட்ட குடு"
".............."
"மம்மி! நான் வரும் போது நைட்டு டின்னருக்கு எறா வாங்கிட்டு வந்துடறேன். நீங்க படாட்டாவை வேக வச்சி வையுங்க. தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியா அரிஞ்சு வச்சிடுங்க"
"............."
படாட்டான்னா மராட்டியில உருளைக்கிழங்குன்னு இந்தூர்ல இருக்கும் போது தெரிஞ்சிக்கிட்டேன். அவங்க வீட்டுல நைட்டு எறா கொழம்புன்னு தெரிஞ்சதும் ஜனகராஜ் மாதிரி "யம்மாடி! எனக்குக் கூட இந்த எறான்னா ரொம்ப புடிக்கும். ஆனா படாட்டாவையும் எறாவையும் போட்டுகொழம்பு வச்சா நல்லாவா இருக்கும்? அந்த காம்பினேஷன் வர்க் அவுட் ஆவாது. பேசாம உருளைக்கெழங்கை எடுத்து ஃபிரிஜ்ல வச்சிட்டு, எறாவையும் முருங்கைக்காயையும் மல்லித்தூளைப் போட்டு வெங்காயம் கொஞ்சம் தக்காளியோட எண்ணையில தாளிச்சி, உப்பு மஞ்ச மொளகாத்தூள் போட்டு சட்டுன்னு ஒரு கொழம்பு வச்சிப் பாரு...சூப்பரா இருக்கும்"னு சொல்லறதுக்கு இந்த நாக்கு இருக்கில்ல நாக்கு... அது டிப் வரைக்கும் வந்துடுச்சு. அப்புறம் எதுக்கு நம்ம தொழில் ரகசியத்தை எல்லாம் மராட்டிய தேசத்துக்குப் பரப்பனும்னு அப்படியே கையதைக் கொண்டு மவுத் அதைப் பொத்திக்கிட்டு கப்சிப்னு அடங்கிட்டேன். ஆனா ஒன்னு மட்டும் எனக்கு இன்னமும் புரியலைங்க...பகலெல்லாம் மராட்டியில போன் பேசற அந்த ஆண்ட்டி எதுக்கு அன்னிக்கு அவங்க வீட்டுல இந்தியில பேசுனாங்கன்னு தான். எது எப்படியோ...வழக்கம் போல நமக்கு மெனுவைக் கேட்டு சந்தோஷப் பட்டுக்கற பொழப்புத் தான், இதுல மராட்டி எறாவா இருந்தா என்ன இந்தி எறாவா இருந்தா நமக்கென்ன?
அப்படியே கட் பண்ணாக்கா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நான் டெல்லியில இருக்கும் போது நடந்தது நெனப்பு வந்துச்சுங்க. இதே எறா முருங்கைக்காய் கொழம்புக்கு ஒருநாள் ரொம்பவே ஆஸ்பட்டு "அல்கபீர்ஸ்"(Al-Kabeers') குளிர்பதனம் செய்யப்பட்ட "ஃப்ரோசன் எறா" வாங்கி வச்சிட்டேன். ஆனா நான் இருந்த ஏரியாவுல முருங்கைக்காய் எல்லாம் கெடக்காதுன்னு வண்டியை எடுத்துக்கிட்டு முனிர்கா ராமா ஸ்டோர்ஸுக்குப் போனேன். முனிர்காவுக்குப் போனா டெல்லியில இருக்குற நெனப்பே வராது...எதோ தமிழ்நாட்டுலேயே இருக்குற ஒரு ஃபீலிங் வரும். அந்தக் கடை வாசல்ல எப்பவும் நம்ம காய்கறி ஐட்டங்களான முருங்கைக்காய், கறிவேப்பிலை, கீரை இதெல்லாம் கெடக்கும். அங்கே முருங்கைக்காயைக் கூறு கட்டி வச்சி வித்துட்டு இருந்தாரு ஒரு ஆளு. முறுக்கி பாக்கத் தேவையில்லாத படிக்கு நல்லா பிஞ்சு முருங்கைக்காயாத் தான் இருந்துச்சு....ஆனா பத்து முருங்கைக்காய் உள்ள ஒரு கூறு அஞ்சு ரூவான்னு இல்ல சொல்லறாரு? நானு, என் கூட இருந்த இன்னொரு பையன் ரெண்டு பேரும் சாப்புடறதுக்கு ஒரு பாக்கெட் ஃப்ரோசன் எறாவைப் (என்னா ஒரு கால் கிலோ இருக்கும்) போட்டு கொழம்பு வைக்க பத்து முருங்கைக்காயா? இத்தினி முருங்கைக்காய்ல முருங்கைக்காய் எறா போட்டு கொழம்பு வச்சிட்டு, முருங்கைக்கா ரசம், முருங்கைக்கா பொரியல், முருங்கைக்கா தயிரு எல்லாம் பண்னலாமே? இம்புட்டை வாங்கிட்டு நாம என்ன பண்ணறது அப்படின்னு நெனச்சி வாங்கலாமா வேணாமான்னு தயங்கி மயங்கி நின்னுட்டு இருந்தேன்.
இந்த நேரம்னு பாத்து, பாவம் ஒரு பய கொழம்பி போய் கெடக்கானேன்னு நெனச்சி என் பின்னாடி நின்னுட்டு இருந்த நடுத்தர வயசுள்ள ஒரு அம்மா "நல்ல பிஞ்சு முருங்கைக்காங்க! மாசமா இருக்கறவங்களுக்கு பொரியல் செஞ்சு குடுத்தா ஒடம்புக்கு ரொம்ப நல்லது'ன்னு ஒரு ரெகமெண்டேஷனும், இலவசமா ஒரு பேறுகால சமையல் குறிப்பும் குடுத்தாங்க. "ஆஹா கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கய்யா! இப்ப மாசமா இருக்குறவங்களுக்கு நான் எங்கே போறது... முருங்கைக்கா பொரியல் வச்சிக் குடுக்க. இருந்தாலும் பரவால்லை பிற்காலத்துல என்னிக்காச்சும் யூஸ் ஆகும்"ன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன். அதோட எனக்கு வந்த பயங்கரமான சிரிப்பைக் கஷ்டப் பட்டு அடக்கிக்கிட்டு "இல்லீங்க முருங்கைக்கா எறா போட்டு கொழம்பு வக்கலாம்னு ..."உண்மையையே அப்படியே இழுத்து சொன்னேன். "ஓ அப்படியா?...அதுக்கு கூட இந்த காய் நல்லாத் தான் இருக்கும்"அப்படின்னாங்க. முந்தானை முடிச்சு பாக்கியராஜுக்கு அப்புறம் முருங்கைக்காயோட பயன்களை எடுத்து சொல்லி என் ஞானக்கண்ணைத் திறந்த அந்த அம்மா சொன்னா சரியாத் தான் இருக்கும்னு நம்பி முருங்கைக்காய் ஒரு கூறு வாங்கிக்கிட்டேன். அவங்க சொன்ன மாதிரியே கொழம்பு நல்லாத் தான் இருந்துச்சு...என்னா ஒன்னு? ரெண்டு பேரு சாப்புட கால் கிலோ எறாவுக்கு அஞ்சு முருங்கைக்கா போட்டு கொழம்பு வச்சதுல எறாவே கண்ணுக்குத் தெரியல..."எங்கெங்கும் முருங்கை மய(ர)ம் தான்!"
Saturday, September 09, 2006
எதிலும் இங்கு இருப்பான்...
பாரதி படத்துல வர்ற "எதிலுமிங்கு இருப்பானவன் யாரோ?"ங்கிற பாட்டை சமீபத்துல பல நாளுக்கப்புறம் கேட்டேங்க. முன்னல்லாம் கேட்டப்ப தெரியாத ஒரு பிரமிப்பு இந்த முறை அந்த பாட்டோட பாடல் வரிகளைக் கேட்டப்போ உணர முடிஞ்சதுங்க. இறைவனின் எங்கும் நிறைந்த தன்மையை உணர்த்தற மாதிரி இருந்தது. இவ்வளவு நாள் கூர்ந்து கவனிக்காம விட்டுட்டோமேனு இருந்துச்சு. அந்த பாட்டை இப்ப இந்தப் பதிவுல போட்டிருக்கேன். நீங்களும் கேட்டுப் பாருங்க. சித்தூர்கட்லயும், உதய்பூர்லயும், தனேஷ்வர் தேவ் என்கிற இடத்துலயும் எடுத்த சில புகைப்படங்களையும் போட்டுருக்கேன்.
படம் : பாரதி(2000)
பாடியவர் : மது பாலகிருஷ்ணன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
Thursday, September 07, 2006
சவுத் இண்டியன்ஸால மட்டும்...?
பெனாத்தலார் வ.வா.சங்கத்தில் எழுதிய அட்லாஸ் வாலிபன்? பதிவைப் பார்த்ததும் ஒரு பதிவு நினைவுக்கு வந்துச்சு. மின்னஞ்சல்களில் ஃபார்வர்டுகள் தாராளமாக வந்துக் கொண்டிருந்த ஒரு காலத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து எனக்கு வந்த ஒரு ஆங்கில படைப்பு. எழுதுனது யாருன்னு தேடிப் பாத்ததுல தெரிஞ்சது, அதை எழுதுனது ஒரு வலைப்பதிவர்னு ...அவரோட பேரு சிடின் வடுகுட். எக்கச்சக்கமா படிச்சுப் போட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில வேலை பாத்துப்புட்டு, அதெல்லாம் புடிக்காம இப்ப ஒரு முழு நேர ப்ளாக்கர்/எழுத்தாளர் ஆகிட்டாரு. அவரைப் பத்தி தி ஹிண்டுல கூட செய்தி வந்துருக்கு. நெறைய பேருக்கு இவரைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்.
http://www.hindu.com/2006/07/25/stories/2006072515020200.htm
பெனாத்தலாரோட பதிவைப் பாத்த உடனே, இந்தப் பதிவு தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. பதிவுல எழுதியிருக்குற மேட்டர் என்னன்னா "நம்ம சவுத் இண்டியன் பசங்களால மட்டும் ஏன்யா ஒரு கேர்ள்பிரெண்டு தேத்த முடிய மாட்டேங்குறது தான்". பீட்டரான இங்கிலீசுல தனக்கே உரிய நகைச்சுவையான பாணியில கலக்கலா எழுதியிருப்பாரு.
அவரோட பதிவுலேருந்து ஒரு சிறு பகுதி :
"Our futures are shot to hell as soon as our parents bestow upon us names that are anything but alluring. I cannot imagine a more foolproof way of making sure the child remains single till classified advertisements or that maternal uncle in San Francisco thinks otherwise. Name him "Parthasarathy Venkatachalapthy" and his inherent capability to combat celibacy is obliterated before he could even talk. He will grow to be known as Partha. Before he knows, his smart, seductively named northy classmates start calling him Paratha. No woman in their right minds will go anyway near poor Parthasarathy. His investment banking job doesn't help either. His employer loves him though. He has no personal life you see.
By this time the Sanjay Singhs and Bobby Khans from his class have small businesses of their own and spend 60% of their lives in discos and pubs. The remaining 40% is spent coochicooing with leather and denim clad muses in their penthouse flats on Nepean Sea Road. Business is safely in the hands of the Mallu manager. After all with a name like Blossom Babykutty he cant use his 30000 salary anywhere. Blossom gave up on society when in school they automatically enrolled him for Cookery Classes. Along with all the girls."
முழு பதிவையும் படிக்க இங்கே சுட்டுங்க :
"The Travails of Single South Indian men of conservative upbringing"
நம்ம பெனாத்தலாரும் இதே மேட்டரைப் பத்தி நேத்து எழுதிட்டாரா? அதை படிச்சதும் இந்த பேச்சலர் மனச்சுக்கு ஒரே "ஃபீலிங்ஸ் ஆஃப் சித்தூர்கட்" ஆகிப் போச்சு நைனா. சிடினோட ஆங்கிலப் பதிவை அப்படியே தமிழ்ல உல்டா பண்ணி நம்மூரு காரப் புள்ள காவ்யா விஸ்வநாதன் பண்ண ப்லெஜியரிஸம்ங்கிற கில்மா வேலை பண்ணிடலாமான்னு கூட யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா அப்படிப் பட்ட கில்மா வேலை பண்ணறதுக்கு இப்படி பட்ட கில்மா வேலை எல்லாம் பண்ணலாம்னு ரோசனை குடுத்த கோவி.கண்ணனுக்கு நன்றி. எல்லாப் பதிவுகளையும் படிச்சுப் பாருங்க...நல்லாருக்கும்.
Sunday, September 03, 2006
தடிப்பசங்க #6
காட்சி 6 : டிசிபி ராகவன் பேசறேன்
டிரிங்...டிரிங்...டிரிங்...டிரிங்...
டெலிபோன் மணி போல சிரிக்கிறது சாட்சாத் டெலிபோன் மணியே தான்.
"ஹலோ"
"ஹலோ. நான் டிசிபி ராகவன் பேசறேன்"
"......"
"ஹலோ. நான் டிசிபி ராகவன் பேசறேன்"
"மீ டூ"
"என்னது மீ டுவா? நான் டிசிபி ராகவன் பேசறேன்னு சொன்னேன்".
"ஏன் நீங்க டிசிபி ராகவனாயிருக்கும் போது,
டிசிபியோட அப்பாவும் ஒரு டிசிபியா இருக்கக் கூடாதா?"
கேட்சி தி பாயிண்ட் ஆச்சே. என்ன சொல்ல முடியும்? கப்சிப்...
"சரிங்க டிசிபி...சென்னை சிட்டியில சட்டம் ஒழுங்கு எல்லாம் எப்படியிருக்கு"
"மொதல்ல சல்யூட் அடி...நீ மொதல்ல சித்தூர்கட் ஜூரிஸ்டிக்சனைப் பத்தி சொல்லு"
"நீங்களும் டிசிபி...நானும் டிசிபி. ரெண்டு பேருக்கும் ஒரே நம்பர் ஆப் ஸ்டாரு. நமக்குள்ள எதுக்குங்க சல்யூட்"
"இருந்தாலும் நான் சீனியரு..."
"கும்ட்டுக்கறேன் ஐயா! செக் எழுதி அனுப்பி இருக்கேன். கொஞ்சம் சின்ன டிசிபி கிட்ட சொல்லி உங்க வூட்டாண்ட எதனா டிராப் பாக்ஸ்ல போட்டுட சொல்லுங்க. இந்த ஊருல டிராப் பாக்ஸ் எங்கே இருக்குன்னு தேடி கண்டுபுடிக்கிறதுக்குள்ள டியூ டேட்டே முடிஞ்சுடும் போலிருக்கு"
"சரி. போட்டுட சொல்றேன். என்ன சாப்பிட்டியா?"
"ஊஹும் இனிமே தான்"
"சரி இருப்பா...ஒரு ரெண்டு வார்த்தை ஏட்டம்மாவோடயும் பேசிடு...போன் பக்கத்துலயே நிக்கிறாங்க, இல்லன்னா அப்பனும் புள்ளயும் மட்டும் பேசிட்டு வச்சிட்டீங்களான்னு என்னை உண்டு இல்லன்னு ஆக்கிடுவாங்க"
"ஹலோ"
"நான் டிசிபி ராகவன் பேசறேன்"
"என்ன திடீர்னு டிஜிபி?"
"டிஜிபி இல்ல டிசிபி"
"எதோ ஒன்னு. இப்ப என்ன திடீர்னு?"
"வேட்டையாடு விளையாடு பாத்ததுலேருந்து போலீஸ் ஆபீசர் ஆகறதுன்னு முடிவு பண்ணிட்டேன்"
"என்னது முடிவு பண்ணிட்டியா? ஏன் எதாவது லஞ்சம் கிஞ்சம் வாங்கப் போறியா?"
"நான் சீரியஸாத் தான் சொல்றேன்! ஒரு நேர்மையான போலீஸ் ஆபிஸர் ஆகப் போறேன். அதுக்கப்புறம் கிரைம்னா கிலோ என்ன வெலைன்னு கேக்கப் போறீங்க பாருங்க!"
"உக்கும். ஒனக்கும் ஒன் தம்பிக்கும் என்ன படம் பாக்குறீங்களோ அதுல எவன் என்ன பண்ணறானோ அந்த மாதிரியே ஆவனும்...அவனுங்க பண்ணற மாதிரியே பண்ணனும். அப்போலேருந்து இப்ப வரைக்கும் சினிமா படத்தப் பாத்துட்டு ஏர்போர்ஸ் பைலட்டு, ப்ளாக் கேட், போலீசு, ஆட்டோகாரன், பால்காரன், மாடு மேய்க்கிறவன், பைக் ஓட்டறவன்னு நீங்களும் தான் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கதை சொல்றீங்க. அதையெல்லாம் இத்தனை நாளா நாங்களும் கேட்டுட்டு தானே இருக்கோம்?"
"சரிடா மகனே! ஒரு போலீசு ஆபிசர் ஆகு, கொடியவர்களைப் போய் பந்தாடுன்னு வெற்றித் திலகம் வச்சு வழியனுப்புறீங்களா? எப்ப பாத்தாலும் இத மாதிரி எதாச்சும் தடை சொல்லி தடை சொல்லித் தான் எங்க கனவு கோட்டையெல்லாம் இடிஞ்சு நாசமாப் போச்சு. சின்ன வயசுல நீங்க எங்க ஆசைகளைப் பாத்து எள்ளி நகையாடாம இருந்துருந்தா நாங்க அப்பவே பைலட்டோ இல்ல போலீசோ ஆயிருப்போம்"
"சரிடா மகனே! போலீசு ஆகி நல்லா லஞ்சம் வாங்கு"
"அம்மா. சும்மா இப்பிடி நக்கல் தான் பண்ணுவீங்க?"
"(சிரிச்சிக்கிட்டே)பின்ன என்ன பண்ண சொல்றே? இவ்ளோ வருஷத்துக்கு அப்புறம் போலீஸ் ஆவறதுக்கு எதுக்கு டெல்லியில போய் படிச்சுட்டு இப்போ ஜெய்பூர்ல ஒக்காந்து போய் வேலை செஞ்சிட்டு இருக்குறியாம்? ஓடியாடற வழியைக் காணோம். இதுல போலீஸ் ஆயி என்னத்தப் பண்ணப் போறீங்களோ? தொப்பை இருந்துட்டா மட்டும் போலீசு ஆயிட முடியாது கண்ணா...இப்பல்லாம் போலீசு காரங்களையே நெறைய எக்சர்சைஸ் பண்ணச் சொல்றாங்களாம்".
"மொதல்ல பெத்த மகன் வேலை செய்யிற ஊரு பேரைச் சரியாச் சொல்லுங்க"
"நாங்க படிச்ச மூணாப்புக்கெல்லாம் எங்களுக்கு அவ்வளவு தான் வரும். சரி! இவ்வளவு வயசுக்கு அப்புறம் எப்படி போலீசுல சேருவே?"
"படிப்படியா ஒழைச்சு முன்னேறி தான். சூர்யவம்சம் சரத்குமார் மாதிரி, அண்ணாமலை ரஜினி மாதிரி"
"படிப்படியான்னு சொல்லிட்டு கான்ஸ்டபிள், ஏட்டு, சப் இன்ஸ்பெக்டர் எல்லாம் ஆகாமயே நேரா டிஜிபி ஆவப் போறேங்கிறே?"
"ஐயோ! எப்பவும் சின்னதாவே யோசிங்க"
"சரி! நீ டிஜிபியோ டிசிபியோ ஆனதும் அப்படியே என்னையும் ஒரு சிஐடி ஆக்கிடு"
"புள்ள வேலை செய்யிற ஊரு சித்தூர்கட்டையே ஜெய்ப்பூர்ன்னு சொல்றீங்க. உங்களுக்கு எஜிகேசன்ஸ் பத்தாது. உங்க வூட்டுல இருக்காரே எங்கப்பாரு...சென்னை சர்க்கிள் டிசிபி, அவரு சொன்ன ஏட்டு போஸ்டே ஒங்களுக்கு அதிகம். இந்த அழகுல சிஐடி கேக்குதா சிஐடி?"
"போலீசே ஆவலை அதுக்குள்ளவே ஒங்களுக்கு இந்த பந்தா..."
"அம்மா திடீர்னு எனக்கு ஒரு மெகா ஐடியா வந்துருக்கு... நாம ஏன் குடும்பத்தோட போலீசு வேலைல சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யக் கூடாது?"
"குடும்பத்தோடவா?"
"ஆமா...குடும்பத்தோட போலீஸ் புடிச்சாத் தான் தப்பு. குடும்பத்தோட போலீஸ் ஆனா தப்பில்லை"
"மொதல்ல நீங்க டிஎஸ்பி ஆவுங்க...அப்புறம் நாங்க போலீஸ்ல சேர்றதைப் பத்தி யோசிக்கிறோம்"
"ஒன்னு டிஜிபிங்கிறீங்க இல்ல டிஎஸ்பிங்கிறீங்க...ஒங்களுக்கு மனசுக்குள்ள என்ன தெனாலி பட ரமேஷ் கண்ணான்னு நெனப்பா?"
"(சிரிச்சிக்கிட்டே)அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. போலீஸ்ல நான் சேர்ந்துட்டா, ஒன் தம்பிக்கும் ஒங்க டாடிக்கும் போலீஸ் டிஐஜி வந்து சமைச்சுப் போடுவாரானு சொல்லு...ஒக்காந்த எடத்துலேருந்தே அதை கொண்டாங்க இத கொண்டாங்கன்னு வேலை வாங்குறானே ஒன் தம்பி அவனுக்கு வேலை செய்ய யாராவது இன்ஸ்பெக்டர் வருவாங்களான்னு சொல்லு. நான் இப்பவே போலீஸ்ல சேந்திடறேன்?"
"கொஞ்சமாச்சும் நாட்டு மேலயும் இந்த சமுதாயத்து மேலயும் உங்களுக்கு அக்கறை இருக்குதா. எப்ப பாத்தாலும் சமைக்கிறதும், சாப்பிடறதுலயுமே இருங்க. ராஜஸ்தான்லேருந்து ரோமிங்ல எஸ்டிடி போட்டு பேசிட்டு இருக்குறேன்...இப்பிடி கிண்டல் பேச்சு பேசிட்டு இருக்கீங்களே?"
"இருக்குற வேலை எல்லாத்தயும் வுட்டுட்டு ராஜஸ்தான்லேருந்து எஸ்டிடி போட்டு, போலீஸ் ஆகப் போறேன்னு நீ பிளேடு போட்டுட்டு இருக்கே...உன் கிட்ட எப்பிடி பேசுவாங்களாம்?"
"இப்ப கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் அதோ போறாங்க பாரு பச்சை புடவை கட்டிக்கிட்டு ஒரு அம்மா...அவங்க தான் டிசிபி ராகவனோட அம்மான்னு ஊருல எல்லாரும் பெருமையாப் பேசத் தான் போறாங்க...நீங்களும் பாக்கத் தான் போறீங்க"
"மொதல்ல உங்க தொப்பையைத் தூக்கிட்டு ஓடிப் போயி நாலு திருட்டுப் பசங்களைப் புடிச்சி காட்டுங்க...அப்புறம் பாக்கலாம்"
சே! யாருமே என்னைய புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்குளே? சின்ன வயசுல "இது தாண்டா போலீஸ்" பாத்துட்டு போலீஸ் ஆகனும்னு வந்த ஆசை, இப்ப "வே.வி." பாத்ததும் திரும்ப வந்து நம்மளை கவ்விக்கிச்சு. ஆனாலும் இந்த வாட்டி போலீஸ் ஆகாம வுடறதில்லைன்னு டிசிபி ராகவரு உறுதியா இருக்காருங்க. இளா, அமுதன்னு பேரு வச்சிட்டு திரியறவிங்கிய எல்லாம் எதுக்கும் கொஞ்சம் சாக்கிரதையாவே இருந்துக்கங்கப்பு. கோவத்துல போட்டுற கீட்டுற போறேன்? அப்ப மேலே படிச்ச நக்கலும், கிண்டலும் என்னான்னு கேக்கறீங்களா...அது "Another episode in a Police Officer's Life"
