Wednesday, August 02, 2006

ஜிகே குவிஸ்(சிரிப்புக்காக இல்லீங்கோ...)

பாஸ்டன் பாலாவும், நம்ம வெங்கட்ரமணியும் கண்ணைக் காட்டி புதிர் எல்லாம் போட்டாங்க...அதப் பாத்து நமக்கும் ஒரு ஆசை. யாரையாச்சும் கேள்வி கேக்கனுமின்னு. ஆசை யாரை விட்டுச்சு சொல்லுங்க? சரி! இங்கே ஒரு 20 கேள்வி கேட்டிருக்கேன். இங்கண இருக்குற மண்டைங்க எல்லாம் அத நிமிசத்துல ஊதித் தள்ளிடுவாங்கன்னு தெரியும். அதுனால எல்லோரும் பங்கு பெறனும் என்ற நல்ல எண்ணத்தில்(குறிப்பா இந்திய குடிமகன்கள்) ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பின்னூட்டக் கயமைத் தனம் பண்ணிட்டு விடைகளை வெளியிடலாம்னு ஒரு எண்ணம்.

சரி இப்ப கேள்விகள்.
1. 'ஆக்னெஸ் கான்சே பொஜாசியூ' (Agnes Gonxhe Bojaxhiu) - இப்பெண்மணியை நாம் எவ்வாறு பிரபலமாக அறிகிறோம்?

2. தன்னுடைய இறப்பிற்காகத் தானே இசைகோர்வை எழுதியதாக அறியப் பெறும் மேற்கத்திய இசை மேதை யார்? அவர் எழுதிய அந்த கடைசி இசைக் கோர்வையின் பெயர் என்ன?

3. புலிட்சர் பரிசு பெற்ற இப்புகைப்படத்தின் தொடர்பு, எந்த வரலாற்று சம்பவத்தோடு உள்ளது? மேலதிக விபரங்கள் (புகைப்படம் எடுத்தவர், உடையின்றி ஓடி வரும் அப்பெண் குழந்தையின் பெயர் இவற்றையும் தெரிந்தவர்கள் கூறலாம்)


4. செவ்விந்தியர்களுடன்(American Indians) தொடர்பு படுத்தப் பெறும் தோலிலான கூடாரங்களின்(tents) பெயர் என்ன?

5. '"Now we are all sons of bitches"' என்று கூறியவர் யார்? இவ்வாறு கூறுவதற்குப் பின்னணியாக அமைந்த வரலாற்று நிகழ்வு எது?

6. ஒரு ஜப்பானிய சமுராய் வீரனுக்கு 'மரியாதைக்குரிய மரணம்' எனக் கருதப் பெறும் தற்கொலைக்குப் பெயர் என்ன?

7. பெங்கால் பிரிவினைக்குக் காரணமாகக் கருதப் பெறும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் பெயர் என்ன?

8. காலணி வாங்கச் செல்லும் போது 7,8 என்று காலின் அளவை எடுக்கப் பயன்படும் அந்தப் பலகையின்(instrumentனு சொல்லலாமா?) பெயர் என்ன?

9. 'I have nothing to offer but blood, toil, tears and sweat' - இது எந்த உலகத் தலைவரின் பேச்சின்(speech) புகழ்பெற்ற வரிகள்.

10. BMW என்பதன் ஆங்கில விரிவாக்கம் என்ன?

11. வஸ்திரபூர், அகமதாபாத் - இவ்விடத்தில் எந்த நிறுவனத்தைக் காணலாம்?

12. 1940களில் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க அக்காலத்தில் பெருந்தொகையாகக் கருதப்படும் ரூ.1 லட்சம் ஊதியமாகப் பெற்ற தமிழ் திரைப்பட நடிகை யார்? படத்தின் பேர் என்ன?

13. ஏழு எழுத்துகளைக் கொண்டு ஆங்கில வார்த்தைகளை உருவாக்கும் வார்த்தை விளையாட்டின்(board game) பேர் என்ன?

14. ஃப்ரீ போட் வில்லி(Free Boat Willy) - இது எந்த ஹாலிவுட் கதாபாத்திரத்தின் அறிமுகப் படம்?

15. ஆபரேசன் டெசர்ட் ஸ்டார்ம்(Gulf war)இன் போது அமெரிக்கா தலைமையிலான allied forcesஇன் கமாண்டராக இருந்த ஜெனரலின் பெயர் என்ன?

16. நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி(Tranquebar) முதன்முதலில் எந்த வணிகக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது? (ஒரு சின்ன க்ளூ: இதுவும் ஒரு கிழக்கிந்திய கம்பெனி தான்)

17. டிரோமடரி(Dromedary) என்பது என்ன?

18. முகமது யுசுப் கான் என்ற இயற்பெயர் கொண்ட பிரபல இந்தி திரைப்பட நடிகரின் திரை பெயர் என்ன?

19. 'The Day of the Jackal' என்ற ஆங்கிலத் திரைப்படம் எந்த பிரபலத்தின் மீது நடைபெற்ற கொலை முயற்சியைத் தழுவி எடுக்கப் பட்டது?

20. 'சமஸ்கிருதத்தில் காயிதம் எழுது' என்று அறிவுறுத்தி தன் இளைய சகோதரருக்கு கடிதம் எழுதியவர் யார்? யார் வேண்டுமானாலும் இவ்வாறு கடிதம் எழுதலாம், அதில் என்ன சிறப்பு? இவ்வாறு எழுதியவர் ஒரு தமிழர். மிக மிகப் புகழ்பெற்றவர். யார் அவர்?

தொப்பி தந்திரம்

"போனா போவுதுன்னு ஒரு மரியாதைக்கு எதோ நல்லாருக்குன்னு சொன்னா ஒரே படமாவாப் போட்டு ரவுசு பண்ணறேன்னு கேட்டு நீங்கல்லாம் என்னைய நாலு சாத்து சாத்துன்னா தான் நான் அடங்குவேன் போலிருக்கு. சாத்துறதுக்கு முன்னாடி கீழே இருக்குற படத்தை எல்லாம் பாத்துடுங்க. இல்லன்னா எடுத்ததெல்லாம் வீணாப் போயிடும்..."

1. ஞாயித்துக் கெழமை சாங்காலம் அப்பிடியே காலாற ரோட்டோரமா நடந்து வந்தேனா...பாத்தா கரெண்டு கம்பியில ஒரு காக்காவோ, குருவியோ...இல்ல எதோ ஒரு பறக்கற அனிமல்ஸ் ஒக்காந்துருக்கு. உடுவமா...லபக்குன்னு புடி ஒரு படம்


2. பறவை தான்னு மக்கள்ஸை நம்ப வைக்க ஒரு க்ளோசப் ஷாட்டு...


3. போன பதிவுல சீபியா டோன்ல போட்ட சட்டி இப்ப சாதாரண கலருல வேற ஒரு கோணத்துல...


4. சித்தூர்கட்டில் ஒரு மழைக்கால மாலையில்...


5. என் இனிய தமிழ் மக்களே...பூக்கள் விரியும் ஓசையையும், வண்டுகள் தேன் அருந்துவதையும் அந்த பூக்களுக்கே தெரியாமல் படம் பிடித்தது வழக்கம் போல என் கேமராமேன் கண்ணன் அப்பிடின்னு பாரதிராஜா நாடோடித் தென்றல் படம் துவக்கத்துல சொல்லுவாருல்ல? அதே மாதிரி பூக்களிலிருந்து வண்டு தேன் அருந்துவதை பூக்களுக்கே தெரியாமல் ஒரு படம் எடுக்கனும்னு பாக்குறேன்...வண்டையும் காணலை...தேனியையும் காணலை. அட அத வுடுங்கப்பா அட்லீஸ்ட் ஒரு ஹம்மிங் பர்டாவது வந்துருக்கலாமில்ல. அதுவும் வரலை. நம்ம ஹேப்பி ஹவர்ஸூ...நமக்கு பூவாண்ட கெடச்சது ஒரு கட்டெறும்பு தான். கட்டெறும்போ, கழுதையோ அப்படியே அதையும் ஒரு கோழி அமுக்கு. சூப்பரா இருக்கில்ல? தேங்க்யூ...தேங்க்யூ.


6. மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் போட்டா புடிச்சேன் தோழீ...


7. காடு மேடெல்லாம் திரிஞ்சு படம் புடிக்கற வேலை வெக்காம அழகா கட்டை செவுத்து மேல வந்து ஒக்காந்துச்சு ஒரு ஓணான். தோள்பட்டையில ஆர்மோனியம், கையில மொபைல் இதெல்லாம் வச்சிக்கிட்டே புடிச்ச படம் இது.


8. கீழே இருக்குற படத்தைப் பத்தி கண்டிப்பா சொல்லியே தீரனும். நம்ம இளைய தளபதி விஜய் அவரே பாடுற பாட்டுங்க வரும் போது 'இப்பாடலைப் பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்'னு திரையில போட்டு பாத்துருப்பீங்க, அது மாதிரி இந்தப் படத்தைப் பத்தி சொல்லனும்னா 'இப்படத்தைக் கெடுத்தவர் உங்கள் வேளாண் தமிழர் விவசாயி இளா'ன்னு கண்டிப்பாச் சொல்லியே தீரணும். சீதேவியை மூதேவி ஆக்குன பெருமை அவரையே சேரும். அது என்ன சீதேவி, மூதேவிங்கிறீங்களா? இதுக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு. கேக்கறீங்களா?


ஒரு ஊர்ல ஒரு வெவசாயி இருந்தாராம். நம்ம வேளாண் தமிழரை மாதிரி இல்ல...இவரு ரொம்ப நல்லவரு. சிறந்த இறையாளர். ஒரு முறை என்னாவுதாம்... திடீர்னு அவரு முன்னாடி மகாலட்சுமியும்(சீதேவியும்) அவங்களோட மூத்த சகோதரியான பெரியம்மை(மூதேவியும்) வந்து நிக்கிறாங்களாம். ரெண்டு பேரும் "எங்க ரெண்டு பேத்துல யாரு ரொம்ப அழகுன்னு சொன்னாத் தான் ஆச்சுன்னு" நம்ம 'நல்ல வெவசாயி' இருக்காரில்ல அவரை அழகிப் போட்டி ஜட்ஜ் ஆக்கிட்டாங்களாம். "ஐயயோ என்னடா இது வம்பாப் போச்சு...சீதேவி அழகுன்னு சொன்னா மூதேவி கோச்சிக்கிட்டு நம்ம வீட்டுல வந்து ஒக்காந்துக்குவா...மூதேவி அழகுன்னு சொன்னா சீதேவி கோச்சிக்கிட்டு போயிடுவா...அப்புறம் நாம வெளங்குனா மாதிரி தான்"னு நெனச்சிக்கிட்டாராம். எப்படி சமாளிக்கலாம்னு யோசிச்சுப் பாத்துட்டு "யம்மா சீதேவி! முன்னழகுல நீ ரொம்ப அழகு, பின்னழகுல உங்கக்கா ரொம்ப டாப்புன்னு சொல்லி சமாளிச்சாராம்". அதாவது சீதேவி வீட்டுக்குள்ள வரும் போதும் மூதேவி வீட்டை விட்டு போகும் போதும் அழகுன்னு ஒரு politically correct answerஐச் சொல்லி எஸ்கேப் ஆனாராம்.

இந்த கதைக்கும் நம்ம 'ஒரு மார்க்கமான வெவசாயிக்கும்' என்ன சம்பந்தம்னு கேக்கிறீங்களா? மேல இருக்கிற மொத ஓணான் படம் புடிக்கும் போது தான் இளா என்னோட மொபைலுக்கு ஃபோன் பண்ணாரு. "ஓணானைப் படம் புடிச்சிட்டு இருக்கேன் சாமி"ன்னு சொன்னாலும் வுட மாட்டேங்கிறாரு. அவரு டப்பாஸ் வெடிச்சி முட்டாய் குடுத்த ஒரு விடயத்தைச் சொல்லியே தீருவேன்னு பச்சப்புள்ளயாட்டம் அடம் புடிக்கிறாரு. "சரி ஃபோன் பண்ணிட்டீங்க...சொல்லுங்க"ன்னு சொல்லிட்டு கழுத்தைச் சாய்ச்சு பொபைல்ல அவரு பேசறதைக் கேட்டுக்கிடே மொதப் படத்தை எப்படியோ புடிச்சிட்டேன். ஆனா இது போதாது, அடுத்ததா க்ளோசப்ல ஓணானோட முட்டை கண்ணு மட்டும் தெரியற மாதிரி ஒரு சரித்திரப் புகழ் பெற்ற படம் புடிக்கணும்னு ஒணானுக்கு ரொம்ப கிட்ட போயிட்டேன். ஓணானும் ஆடாம அசையாம ஒக்காந்து இருந்துச்சு. வெவசாயி பேசறதை மெய்நிகரா கேட்டுக்கிட்டே நான் ஓணான் கிட்ட போய் கேமராவை ஃபோகஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். சரியா அந்த நேரம்னு பாத்து 'என்னய்யா சவுண்டே காணும்' னு நம்மாளு கொரலு வுட்டாரு பாருங்க...நானும் என் மெய்நிகர் நிலையிலேருந்து மெய்நிலைக்கு வந்து "இருக்கேஞ் சாமி"ன்னு கொரல் குடுத்தேன் பாருங்க...அந்த சத்தத்துல ஓணான் பயந்து போய் ஒரு 180 டிகிரி டர்ன் அடிச்சுடுச்சு. அதுனால ஓணானின் முன்னழகைப் பாத்து படம் எடுக்க இருந்த இருந்த நானு அதோட பின்னழகைப் படம் புடிக்கிற அவல நிலைக்கு ஆளாயிட்டேன். இப்ப சொல்லுங்க மகாஜனங்களே...சீதேவி மாதிரி இருந்த என்னோட ஓணானை மூதேவி ஆக்குனதுக்கு யாருங்க காரணம்? இவரை என்ன பண்ணா தகும்? ஆனாலும் அவருக்கு ரொம்பத் தான் ஓளவியமுங்க. நான் படம் எடுத்து பெரிய ஆள் ஆயிடக் கூடாதுன்னு அவரு பண்ண சூழ்ச்சியினால தான் இப்பிடி ஆகிப் போச்சு. "ஏற்கனவே நான் காதல் கவிதை எழுத டிரெயினிங் குடுங்க சாமி"ன்னு கேட்ட போதும் எதேதோ சொல்லி என்னை ஏமாத்திட்டாரு...இப்ப நானே என்னோட முயற்சியில பெரியாளு ஆக ட்ரை பண்ணறதுலயும் மண்ணள்ளிப் போடறாரு. ஒரு கலைஞனைத் தன்னோட கலை தாகதத்தைத் தணிச்சிக்க விடாம முட்டுக்கட்டை போடறாரு. நீங்களே என்னான்னு கேளுங்க. இதுக்கு எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்.

சரி...இவரு தான் இப்படின்னா...என் கூட இருக்குறவனுங்க அதுக்கு மேல "விவசாயி டு தி பவர் சிக்ஸ்". இவ்ளோ கஷ்டப் பட்டு ஓணான் படத்தை எடுக்க முயற்சி பண்ண எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம் வந்துச்சு. ஓணான் கடிக்குமா? ஓணான் கடிக்கு வெஷம் இருக்குமான்னு? அங்க பக்கத்துல நின்னுட்டு இருந்த என்னோட கலீக்(இந்தி பையன்) ஒருத்தன் கிட்ட கேட்டேன். "ஆமாங்க இதுக்குப் பேரு 'கிட்கிட்'(இந்தியில) இதோட கடிக்கு வெஷம் இருக்கு"ன்னு ஒரு குண்டைத் தூக்கி போட்டான். ஆனா எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இந்தியில 'கிட்கிட்'னா பச்சோந்தின்னு அர்த்தம். "இல்லீங்க நீங்க படம்புடிச்ச அனிமல்ஸ் பேரு தான் கிட்கிட்"ங்கிறான். அதோட சிவாஜி இந்த 'கிட்கிட்'டை வச்சுத் தான் எதோ ஒரு கோட்டையைப் பிடிச்சாருன்னு சொன்னான். சிவாஜின்னா நடிகர் திலகம் சிவாஜி இல்ல...சத்ரபதி சிவாஜி. சத்ரபதின்னா சரத்குமாரான்னு யார்னா கேட்டீங்கன்னா நான் மனுசனா இருக்க மாட்டேன். அதாவது சிவாஜியின் வீரர்கள் 'கிட்கிட்' வாலுல கயித்தைக் கட்டி கீழே நின்னுக்கிட்டு தாங்க புடிக்க நினைக்கிற கோட்டை மதில் சுவரை நோக்கி வீசுவாங்களாம். நம்ம 'கிட்கிட்'டும் கோட்டை மதில் சுவத்தைக் கெட்டியமாப் பிடிச்சுக்குமாம்...அதுக்கப்புறம் வீரர்கள் கிடுகிடுன்னு(கிட்கிட்னு இல்ல)கயித்தைப் புடிச்சு மேலே ஏறி டிஷ்யூம் டிஷ்யூம் எல்லாம் போட்டு கோட்டையை மீட்டுடுவாங்களாம்.

"இந்த மாதிரி டைட்டா புடிக்கக் கூடியது உடும்பு, இவன் என்னடான்னா ஓணானுக்குப் பச்சோந்தியோடப் பேரை வச்சி உடும்புங்கிறானே"னு எனக்கு ஒரே கொழப்பம். "ஆர் யூ ஷ்யூர்"னு கேட்டேன். அவனும் நம்மளை மாதிரியே நேட்ஜியோ பாக்குற பார்ட்டியா...அத வச்சி அடுத்ததா அடிச்சி விட்டான் ஒரு மெகா பீலா "ஐ ஆம் வெரி ஷ்யூர்...இந்தோனேசியாவுல இந்த சின்ன கிட்கிட் மாதிரியே பெரிய சைஸ்ல கிட்கிட் ஒன்னு இருக்கு...அதுக்கு கோமோடோ டிராகன்னு பேரு...அது ஆளையே அடிச்சித் தின்னுடும். பயங்கர வெஷம்" அப்படின்னான். "டேய் எனக்குத் தெரிஞ்சு ஓணானுக்கு இங்கிலீசுல Garden Lizardனு பேரு...நீ சொல்ற 'கிட்கிட்'ங்கிறது கலர் மாறுற பச்சோந்தி(Chameleon). சிவாஜி கோட்டையைப் புடிக்க உபயோகிச்சது உடும்பு(Iguana). அந்த உடும்போட தோலை வச்சித் தான் கஞ்சீராங்கிற இசை வாத்தியம் செய்யிறாங்க" அப்படின்னேன். இம்புட்டு நேரம் பக்கத்துல நின்னு கதை கேட்டுட்டு இருந்த என்னோட டீம் லீடு(தமிழ் காரர்) "இந்த டும்டும்டும்டும்னு கோயில்ல வேப்பிலை அடிக்கும் போது அடிப்பாங்களே அதுவா அப்படின்னு வெறுப்பேத்துனாரு". "ஐயோ அது உடுக்கைங்க...நான் சொல்றது கஞ்சீரா...இது கர்நாடக இசை வாத்தியம்" அப்படின்னேன். "என்னவோ போங்க Garden Lizard, Chameleon, Iguana, Comodo Dragonனு என்னென்னமோ சொல்றீங்க...ஒன்னும் புரியலை. இப்ப உடுக்கைக்கும் கஞ்சீராவுக்கும் நடுவுல வேற ஒரே கொழப்பம். நீங்க வேலை செய்யிற SAPல ஒன்னும் கொழப்பம் இல்லியே"அப்படின்னு சந்துல சிந்து பாடிட்டாரு.

"ஆஹா இன்னிக்கு நமக்கு நாளு சூப்பராத் தாண்டா விடிஞ்சிருக்கு"ன்னு நெனச்சிக்கிட்டேன். மொதல்ல முன்னழகைப் படம் புடிக்கப் போனவனைப் பின்னழகு படம் புடிக்க வச்சாரு வெவசாயிங்கிற எனிமி. அப்புறம் '16வயதினிலே' படத்துல கிராமத்துப் பசங்க அடிச்சி கொல்ற ஒரு சின்ன ஓணானை கோமோடோ டிராகன் லெவலுக்குக் கொண்டு போய் நம்மளை பேக்கு ஆக்குறான் இன்னொருத்தன். இந்த கொழப்பம் தீருறதுக்குள்ள ஓணான் தோலுல...சே உடும்பு தோலுல செய்யிறது உடுக்கையா கஞ்சீராவான்னு வேற ஒரே கன்ஃபியூசன். இந்த கொழப்பத்துக்கு எல்லாம் நடுவுல ஓணானின் விஷக்கடியையும் பொருட்படுத்தாமல் உசுரைப் பணயம் வச்சித் தான் படம் எல்லாம் எடுத்து போடறோம்...அதுனால லேசா நெனச்சிடாதீங்க. சரியா?

(பி.கு: தொடர்ச்சியா மூணு படப்பதிவுகள் போட்டதால இது ஒரு ஹாட் ட்ரிக் பதிவு. 'Hat Trick' உடைய தமிழாக்கம் தான் 'தொப்பி தந்திரம்'. 'ஆன்மீகப் பேரொளி சொல் ஒரு சொல்' அண்ணன் குமரன் தான் சொல்லனும் தந்திரத்துக்கு உகந்த தூய தமிழ் சொல் என்னன்னு? அதோட சொல் ஒரு சொல்லுலேருந்து சுட்டப் பழங்கள் இந்தப் பதிவுல எங்கே எங்கே என்ன என்ன இருக்குன்னு சரியா கண்டுபுடிச்சி சொன்னீங்கன்னா, கம்பெனியின் சார்பா சிறப்பு பம்பர் பரிசா ஒரு அழகிய கோமோடோ டிராகனும், தாளம் போட ஒரு கஞ்சீராவும் வழங்கப்படும்)

Thursday, July 27, 2006

கிறுக்கு புடிச்சுடுச்சு...

என்ன கிறுக்குன்னு ஒரு எட்டு வந்து பாத்தீங்கனாலே புரிஞ்சிடும்...


1. வந்ட்டாருடா வெண்ரு வெட்டுக்கிளி கண்ணால அவுட் ஆஃப் ஃபோகஸ் படம் புடிக்க...


2. சில்ஹுவெட் படம் ஜஸ்ட் மிஸ் மாமே


3. ஹி...ஹி...வெள்ளை கலர் செம்பா :)



4. பயலுங்களோட ஒரு "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல்"


5. நேட் ஜியோ பாக்குறியா அவுட் ஆப் ஃபோகஸ்ல?


6. கலர்ஃபுல்லா சிரிச்சா கொறஞ்சா போய்டுவே?


7. ஏபிசிடி உங்கொப்பன் தாடி


8. சீபியா டோனில் ஒரு மெகா சைஸ் சட்டி


9. மேகம் கொட்டட்டும்...


10. மழை பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி


11. ஹ்ம்ம்...இப்பிடி கேப்மாரித்தனம் செஞ்சாத் தான் பளாக் எல்லாம் படிக்க முடியுது :(

படத்தை எல்லாம் பாத்துட்டு உங்க ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவையும் சொல்லுங்க சாமிகளா...

Saturday, July 22, 2006

செம்பருத்தி விநாயகர்

புதுசா வாங்கின டிஜிட்டல் கேமராவுக்குப் பளாக்ல செம்பருத்தி விநாயகரோட பிள்ளையார் சுழி போடறேன். இங்கே க்ளையண்ட் ஆபீசுல வச்சிருக்கிற விநாயகர் சிலைக்கு தினமும் ஒரு பூ அலங்காரம் நடக்கும். இன்னிக்கு செம்பருத்தி பூவுக்கு சான்ஸ்.

டிஜிட்டல் கேமரா வாங்க ஆலோசனைகளை வழங்கிய நாகை சிவா, பேராசிரியர் கார்த்திக், ஜனா, ஐயப்பன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. நான் வாங்குன கேமரா Canon Ixus750. இது வரைக்கும் எடுத்த படம் எல்லாம் நல்லா வந்திருக்கு.


கெஸ்ட அவுஸ் வெளியில தன்னுடைய வேலையைப் பாத்துட்டு இருக்குற குருவி. (சிட்டுக் குருவி இல்லப்பா!). இதோட பேரு என்னன்னு சொன்னீங்கன்னா நல்லாருக்கும்.


மரத்து மேல அனகோண்டா. ஆனா எங்களை எல்லாம் ஒன்னும் செய்யாதில்ல...ஹ...ஹ...ஹஹ்ஹ


ஒரு மழை நாள் இரவில் சுவற்றில் மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் அட்டை. ஈரத்தின் மீது ஊர்ந்து செல்வதினால் அது வாலுக்குப் பின்னாடி பாருங்க ஈரமும் ஊறு(ர்)கிறது.

இந்த படங்களை பதிவிறக்கம் செஞ்சு Photo Editor இல்ல வேற எதாச்சும் image editing softwareஇல் ஜூம் செஞ்சு பாத்தீங்கன்னா இன்னும் பெருசாத் தெளிவாத் தெரியும்.
மேலே இருக்குற குருவியை மட்டும் ஜூம் செஞ்சு கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன் பாருங்க.

கீழே இன்னொரு படம் போட்டிருக்கேன்னு எழுதிட்டு படத்தை ஏத்த முயற்சி பண்ணறேன்...ஏறவே மாட்டேங்குது. இந்த மாதிரி கப்பித் தனமா எதாச்சும் பண்ணிட்டு அசடு வழியறதுக்காகவே வெள்ளைக்காரன் சூப்பரா ஒரு வார்த்தை கண்டுபுடிச்சி வச்சிருக்குறான்...Oops!!!


ஊப்ஸுக்குக் காரணமா இருந்த அந்த குருவி படம் தான் மேலே நீங்க பாக்குறது. இதோட பேரு என்னன்னு யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க.

நான் எடுக்க முயற்சி செய்யும் அவுட் ஆப் போகஸ் படங்கள் இந்த மாதிரியானவை.
Philly
Bokeh
யாராச்சும் விஷயம் தெரிஞ்சவங்க உதவி செஞ்சா நல்லாருக்கும்.

Tuesday, July 04, 2006

'வருத்தப்படாத' அப்பாவிற்கு...

இவ்வளவு நாள் வெறும் வருத்தப்படாத வாலிபராய் இருந்து நேற்றிரவு ஒரு பெண் குழந்தைக்குத் தந்தை ஆனதன் மூலம் 'வருத்தப்படாத அப்பா'வாகப் பதவி உயர்வு பெறும் வ.வா.ச.வின் போர்வாள் கை தேவிற்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குட்டி பாப்பாவிற்கும் அங்கிளுடைய வாழ்த்துகள்.

Sunday, July 02, 2006

ஆறு போட கூப்புட்டாக

இத்தனை வருச சர்வீசுல நாம செஞ்ச சாதனைகளைப் பத்தி ஆறு ஆறா எழுதச் சொல்லி 'மனதின் ஓசை' ஹமீது கூப்புட்டாக, நம்ம விவசாயி இளா கூப்புட்டாக... இப்பிடியே இன்னும் ஒரு நாலு "கூப்புட்டாக" வரிசையாப் போட்டா ரைமிங்கா படிக்கிறதுக்கு நல்லாத் தான் இருக்கும். அதுக்குன்னு பொய்யாச் சொல்ல முடியும்? இல்ல அதெல்லாம் சொல்லித் தான் நமக்குப் பழக்கமா?(சரி...சரி :) அடங்குறேன்) நம்மளப் பத்தி நாமளே தமுக்கு அடிச்சிக்கிறதுக்குத் தானே இப்பிடி ப்ளாக்கைத் தொறந்து வச்சி கல்லாவுல ஒக்காந்துருக்கோம்? அதுக்குன்னே ரெண்டு பேரு வெத்தலை பாக்கு வெச்சு அழைக்கும் போது கசக்குமா என்ன? நம்ம பதிவுகள்ல எங்கேயாச்சும் எப்படியாச்சும் சொருவிடனும்னு நெனச்சி ஸ்டாக்ல வச்சிருந்த பைசா பொறாத சில பல வெசயங்களை,, 'அவுக கூப்புட்டாக'வை சாக்கா வெச்சி இப்ப இங்கே கொண்டாந்து கொட்டறேன். கொட்டறதுக்கு வழிவகை ஏற்படுத்தி கொடுத்த மாவீரன்'மனசின் மைக்செட்' ஹமீது, எம்.ஏ.எல்.எல்.பி அவர்களே, வேளாண் தமிழன் 'விவ்' ரிச்சர்ட்ஸ் அவர்களே...ஒங்க ரெண்டு பேத்துக்கும் டேங்ஸ்பா.

மொதல்ல என்னைப் பத்தி ஆறு
1. பேரு : பேருக்கா பஞ்சம்? சென்னையில் வாழும்/வாழ்ந்த பல்லாயிரக் கணக்கான மோகன்களின் ஒரே பட்டப்பேரான 'லூஸ் மோகன்', மேல் வீட்டு ஆண்ட்டி சூட்டிய 'மோகு', வடநாட்டில் 'வாக்கப்பட்ட' பாவத்துக்காக 'மோகன் பியாரே', ஸ்கூலில் 'மோசி', காலேஜில் 'மாம்ஸ்' அல்லது 'மோகனா', ப்ளாக்கில் கைப்புள்ள

2. ஊரு : பல நாளா வெளியூரு தான். ஆனா நாப்பது வருசத்துக்கும் மேலா சென்னையில இருந்து, செம்பரம்பாக்கம் தண்ணி குடிச்சாலும் தோப்பனார் இன்னும் தன்னோட ஊரு சிதம்பரம்னு தான் சொல்லிக்கிறாரு.

3. படிப்பு/வேலை : எந்த கட்டைவிரலால கைநாட்டு வச்சா செல்லும்னு தெரியுற அளவுக்கு இருக்குது/ப்ளாக் படிக்கிறதுக்கு நடுவுல வேலை செய்யறதுக்கு வெளியூருல ஒக்காத்தி வச்சு பஞ்சப்படி அளக்கற ஒரு வேலையும் இருக்குது.

4. கடவுள் : இருக்காரு. நம்மோட மனசாட்சியும் கடவுளும் ஒன்னு தான் என்பது பல நாள் நம்பிக்கையா இருந்துச்சு. அதாவது இறை வழிபாடு என்பது அவசியமானது இல்ல அப்படிங்கிற மாதிரி. கொஞ்சம் பெரியவனா ஆனதும், நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கு. அந்த சக்தியின் தாக்கத்தினாலும் அருளினாலும் தான் நம்முடைய மனசாட்சியும் நல்வழியில் இயங்கி நமக்கு நல்வழி காட்டுகிறது, அதனால் அந்த சக்தியை(supreme power) வழிபடுதல், நம் மனசாட்சியினை(conscience) நல்வழியில் இட்டுச் செல்லவும், நாம் நல்ல செயல்களைச் செய்யவும், நல்ல எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் உதவும் என்ற அளவில் தற்போது உள்ளது என்னுடைய கடவுள் நம்பிக்கை.

5. கொளுகை : அவரும் இருக்காருங்க. அவங்கவங்க அவங்கவங்களோட 'சொந்த வியாபாரத்தைக்' கவனிச்சாலே எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்ங்கிறது நம்ம கொளுகை. என்னைப் போல ஒருவனும் இல்லை என நான் எண்ணுவது எவ்வாறு தவறாகாதோ அதே போல அடுத்தவன் எண்ணுவதிலும் தவறில்லை என்ற எண்ணம் எந்நாளும் என் மனதில் இருக்க வேண்டும். என்னைப் போலவே அனைத்து மனிதர்களும் இருக்க முடியாது என்பதனால் தான் பல நிறங்களிலும், உருவங்களிலும், மொழிகளிலும், மதங்களிலுமான மனிதர்கள் இருக்கிறார்கள். என்னை எவ்வாறு(எனது அனைத்து குறை நிறைகளுடன்)அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேனோ, அதே கண்ணோட்டத்தில் அடுத்தவனையும் நான் காண முற்பட வேண்டும். முடிந்தவரை அடுத்தவனிடம் உள்ள நல்லவற்றைக் கற்பதிலும் காப்பியடிப்பதிலும் தவறொன்றுமில்லை. யாருக்கும் அறிவுரை சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இல்ல, அதே சமயத்தில் அடுத்தவர் நமக்கு சொல்லும் அறிவுரையை நாம் கற்றுக் கொள்வதில்(சரியானதாக படும் பட்சத்தில்) குறைந்து விடமாட்டோம், அடுத்தவர் நம்மிடம் அறிவுரை கேட்டால், 'கேட்டால் மட்டுமே' நமக்கு சரியென தோன்றுவதைச் சொல்லுவது என்பது இன்னொரு கொளுகை.

6. கொசுறு: பலவிதமான எதிர்மறைகளால்(paradox) உருவாக்கப் பட்டவன். அசைவம் சாப்பிட்டாலும் ஆட்டையோ, கோழியையோ அறுப்பதைப் பார்க்கப் பிடிக்காதவன். உணவுக்காக ஒரு உயிர் கொலையாவதைப் பார்ப்பதைத் தவிர்க்க frozen foodஐ தேடி ஒரு சூப்பர் மார்க்கெட் போய் வாங்குவேனே ஒழிய அதை உண்பதை நிறுத்தாதவன். இவ்வாறாகப் பல paradoxகளின் கூட்டே அடியேன்.

ஒன்னும் பிரிலை இல்ல? எப்படி பிரியும்? அல்லாமே பெளாசாஃபியாச்சே? :). அய்யா சாமிங்ளா! இதை படிக்கிற புண்ணியவான்களே, இது வரைக்கும் படிச்சிட்டு போர் அடிக்குதுன்னு அப்படியே ஓடிப் போயிடாதீங்க. இன்னும் கொஞ்சூண்டு தான் இருக்கு, அதையும் படிச்சிருங்க. ப்ளீஸ்!

இளையராஜாவின் அறுசுவை
மீஜிக்கைப் பத்தி வாயைத் தொறந்தாலே இளையராஜா பேரு தான் வரணுமான்னு என்னை நானே கேட்டுக்கறதுண்டு. ஆனா அதுக்குப் பதிலும் ஒடனே கெடச்சிடும் இவரு பாட்டுகள்ல இருக்குற 'கிக்' வேற எங்கேயும் கெடக்கறதில்ல...அதான். காலேஜ் படிக்கும் போது, இளையராஜா பாடல்களின் சிறப்பைப் பத்தி பேசி பரவசப்பட்ட அனுபவங்களும் பல உண்டு, நானும் எனது தனிமையும் ராஜா பாடல்களினால் உணர்ச்சி வயப்பட்டு திக்குமுக்காடி நின்ற அனுபவங்களும் பல உண்டு. இசைஞானியின் இசையில் ஆறு வெவ்வேறு சுவைகளைப்(சுவை என்பதை mood என்ற பொருளில் கொள்க) பத்தி எழுதறேன்.
1. வெகுளித் தனம்(Innocence) - இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுகளில் ஒன்னு. சின்னப் பசங்க(வளர்சிதை பசங்க!) ஒரு தோப்புக்குள்ள டிராமா போட்டு வெளாடுற மாதிரியான ஒரு வித்தியாசமான பாட்டு. அவுங்களோட சின்ன சின்ன ஆசைகள், கனவுகள் இதெல்லாம் சொல்ற மாதிரி பாடல் வரிகள். படம் கல்லுக்குள் ஈரம். கேக்கும் போதே ஒரு உற்சாகம் வந்து தொற்றிக் கொள்ளும். இதே மாதிரியான இன்னொரு பாட்டு அழகி படத்துல வர்ற டமக்கு டமக்கு டம்.

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங் கிளியே...

2. காதல் - காதலைப் பத்தி பல பாடல்கள் இருந்தாலும், வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இந்த பாட்டைப் போடறேன். சுரேஷும், சுலோச்சனாவும் தெலுங்கு படத்துல வர்ற மாதிரியான ஸ்டெப் எல்லாம் போட்டு 'உடற்பயிற்சி' நடனம் எல்லாம் ஆடியிருந்தாலும் இன்னும் இந்த பாட்டைக் கேக்கும் போது ஃபிரெஷ்ஷாத் தான் இருக்கு. பாட்டுக்கு நடுவுல வர்ற இண்டர்லூட்ஸ்(interludes)க்கு எவ்வளவு மெனக்கெட்டிருக்காருன்னு பாருங்க. ராஜாவின் பல பாடல்களைப் போல, இப்படத்து இசைநிரப்பிகளும்(interludesக்கு நான் வச்ச பேரு ஹி...ஹி...) மனதில் நிக்கும். படம் வெள்ளை ரோஜா.

சோலைப்பூவில் வாடைத் தென்றல் ஆடும் நேரம்...

3. கோபம் - இந்த பாட்டோட ஆரம்பத்துல ஒரு வயலின் இசை வரும் பாருங்க. அதுவே ரொம்ப சிறப்பா இருக்கும், அதிலேருந்து மெதுவா நகர்ந்து கோபம் கொப்பளிக்கும் ஒரு டியூனுக்குக் கொண்டு போயிருப்பாரு பாருங்க. கேட்டதும் ரௌத்திரம் பழகத் தூண்டும் ஒரு பாடல். பாடலின் வெற்றிக்கு அதை எழுதிய கவிஞரின் பங்களிப்பும் உண்டு என்பதில் ஐயமில்லை. படம் கண் சிவந்தால் மண் சிவக்கும். இதை விட ஆக்ரோஷமான கோவமான பாட்டு வேணும்னா பிதாமகன் படத்து 'அடடா அகங்கார கைகளில்' பாட்டைக் கேட்டு பாருங்க.

மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால்...

4. சோகம் - இந்த படத்துல எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு இது. கமலையும், மறைந்த கன்னட நடிகர் டாக்டர். ராஜ்குமாரையும் பின்னணி பாட வைத்ததும் இளையராஜா தான். மனதைப் புழியும் சோகத்தைக் கமலும் வெகு அருமையாக வெளிக் கொணர்ந்திருப்பார். படம் விருமாண்டி.

மாட விளக்கே யாரு இப்போ தெருவோரம்...

5. நகைச்சுவை - இந்த பாட்டு ஒரு காதலிக்கும் காதலனுக்கும் நடுவுல இருக்குற ஒரு மெல்லிய நகைச்சுவை(subtle humour) கலந்த உரையாடலை ஆதாரமாக வைத்து எழுதப்பட்ட நையாண்டி பாடல். 'கோவணத்தில் ஒரு காசிருந்தா கோழி கூவ ஒரு பாட்டு வரும், பாட்டு படிக்கிற என் மாமா உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா?' என்று அவள் டீஸ் செய்ய 'கோவணமும் இல்ல கையில் காசுமில்ல, பாட்டு வருதே என்ன புள்ள, கோயில் சிலை போல உன்னை கண்டதால் ஏத்தம் கெடுதே கன்னி புள்ள' அப்படின்னு அண்ணல் காமெடியா பதிலும் சொல்லி தன்னோட லவ்ஸையும் வெளிப்படுத்தறாரு. பாடலாசிரியரும் இளையராஜா என்பது இப்பாடலின் சிறப்பு. படம் நினைவே ஒரு சங்கீதம்.

ஏத்தமய்யா ஏத்தம் ஒனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்...

6. பல சுவை - இத மாதிரி ஒரு பாட்டை என்னால போட முடிஞ்சதுன்னா, நான் பெருசா சாதிச்சிட்டதா நெனச்சிக்குவேன்னு ராஜாவோட புதல்வர் யுவன் சங்கர் ராஜா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தது ஞாபகம் வருது. ஒரு பாட்டுக்குள் இவ்வளவு உணர்வுகளா அப்படின்னு மலைக்க வைக்கிற ஒரு 'உணர்வுகளின் களஞ்சியம்' இந்த பாட்டு. மகிழ்ச்சி, சோகம், எதிர்பார்ப்பு இப்படின்னு பல வித 'மூட்களைப்' பார்க்க முடியும். இந்த இசையை சி மேஜர், டி மேஜர்னு பிரிக்கத் தெரியாதுன்னாலும் இது ஒரு 'class composition'ன்னு மட்டும் புரியுது. படம் அவதாரம்.

தென்றல் வந்து தீண்டும் போது...

ஆறு நிகழ்ச்சிகள்
நிஜ வாழ்வில் நிகழ்ந்த ஆறு குட்டி குட்டி சம்பவங்கள்.
1. புது தில்லியில் இருந்த போது கி.பி,2003இல் ஆர்.கே. புரத்தில் உள்ள தில்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு வயலின் அரங்கேற்ற நிகழ்ச்சியைக் காணும் வாய்ப்பு கிடைச்சது. ரெண்டு சின்ன பசங்க, ஒரு சின்னப் பொண்ணு மூணு பேருக்கும் ஒரே நேரத்துல ஒரே மேடையில அரங்கேற்றம். அவர்களுக்கு வாழ்த்து சொல்ல இசை விமர்சகர் சுப்புடு வந்திருந்தார். பெரிய பெரிய வித்வானுகளுக்கே சிம்ம சொப்பனமா இருக்கும் சுப்புடு சின்னப் பசங்க வாசிப்பைப் பத்தி என்ன சொல்றாருன்னு கேக்க ஆவலா இருந்தேன். ஆனா மூணு பேருமே அருமையா வாசிச்சாங்க. சுப்புடு மேடையில ஏறினார் "மூணு கொழந்தைகளும் ரொம்ப நன்னா வாசிச்சா. குறிப்பா இந்த ராகத்துல இந்த கீர்த்தனைல வர்ற இந்த சங்கதி பெரியவாளுக்கே சிக்கலா இருக்கும்(அவரு எதைப் பத்தி சொன்னாருன்னு இப்ப எனக்கு நியாபகமில்ல). அதையே ரொம்ப நன்னா வாசிச்சா" அப்படின்னு அவரு பேசிட்டு இருக்கும் போது சால்வையைக் கொண்டாந்து போத்தினாங்க. அப்போ ஆன் தி ஸ்பாட் அடிச்சாரு பாருங்க ஒரு டைமிங் ஜோக் - "ஹ்ம்ம்...சால்வை எல்லாம் போத்துறான்னு தெரிஞ்சிருந்தா, ஆத்துக்காரியையும் கூட்டிண்டு வந்திருப்பேன்". ஹ்ம்ம்ம்...இப்பவே இந்த போடு போடறாரே...இவரு சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாருன்னு அப்ப நெனச்சுக்கிட்டேன்.

2. "பத்து வருசத்துக்கு முன்னால பெங்களூர் பக்கத்துல ஒரு விமான விபத்து. அதுல பொழச்சவங்க பன்னிரண்டு பேரு தான். அதுல நான் ஒருத்தன். ஆறு எடத்துல மல்டிபிள் ஃபிராக்சர்ஸ். இருந்தாலும் அடுத்த முப்பதாவது நாள் நான் ஆபீஸ்ல இருந்தேன். யூ கைஸ் டோண்ட் ஹேவ் ஸ்டேமினா(You guys don't have stamina)" - வைரல் ஃபீவருன்னு மூணு நாள் லீவு போட்டதுக்கு இப்படி ஒரு முழு நீல பீலாவை அவுத்து வுட்டவரு எங்க முன்னாள் பாஸ். இது ஒரு சின்ன உதாரணம் தான். இதை விட பெரிய பெரிய கதையெல்லாம் இருக்கு.

3. மேலே குறிப்பிட்ட பெரிய பெரிய கதையெல்லாம் நானும் என் கூட அப்ப வேலை செஞ்ச மூணு பேரும் பகிர்ந்துக்கறது மிதுன் என்ற நண்பருடன். பெங்காலி காரர். இதெல்லாம் ஒரு புக்காப் போடுங்களேன்னு உசுப்பேத்துவார். எங்களை விட மூணு லெவல் சீனியர்னாலும் ஜாலியாகப் பழகக் கூடியவர். போன வருடம் ஜூன் மாதம் 20ஆம் தேதி பேன்க்ரியாஸ் கேன்சருடன் இரண்டாண்டு காலம் போராடிவிட்டு இயற்கை எய்தினார். அவருடைய கடைசி சில தினங்களில் அவரைப் பார்க்கச் சென்ற போது அவருடைய துணைவியார் அழுததைக் கண்டது, நெஞ்சைக் கனக்கச் செய்த ஒரு நிகழ்வு. அந்த கம்பெனியை விட்டும் இப்ப நான் வெளியே வந்தாச்சு. இன்னும் கொஞ்சம் நாட்களில் பல விஷயங்களைப் போலவே மிதுனும் மறக்கப் பட்டு விட்டிருப்பார். எப்பவாச்சும் இதை திரும்ப படிச்சேன்னா அவருடன் பழகிய நினைவுகள் ஞாபகம் வர்றதுக்காக இதை எழுதி வெச்சிக்கிறேன்.

4. ப்ள்ஸ் டூ முடிச்சிட்டு காலேஜுல் சேர்றதுக்காக டோட்(DOTE) பொறியியல் கல்லூரிகளின் விண்ணப்பப் படிவம் வாங்கிக் கொண்டு பல்லவன் பஸ்ஸுல் உக்காந்து வந்துட்டுருந்தேன். என் பக்கத்துல உக்காந்திருந்தவரு "தம்பி! DOTE காலேஜ் அப்ளிகேஷன் பார்ம் குடுக்க ஆரம்பிச்சிட்டாங்களா?" அப்படின்னு கேட்டாரு. "ஆமாங்க! நேத்துலேருந்து ஆரம்பிச்சிட்டாங்க"ன்னு சொன்னேன். "என் பொண்ணு கூட 95% வாங்கிருக்குப்பா. ஆனா எஞ்சினியரிங் வேணாம், நான் மெடிக்கல் தான் போவேன்னு சொல்றா" என்றார். நான் அதற்கு முந்தின வருடம் இருந்த கட் ஆஃப் விவரங்களைச் சொல்லிக்கிட்டிருந்தேன். எங்களுக்கு முன்னாடி உக்காந்திருந்த ஒருத்தரு "95%க்கெல்லாம் மெடிக்கல் சீட் கெடக்காது"ன்னு தானாவே வலிய வந்து ஒரு 'கருத்து' சொன்னாரு. என் பக்கத்துல உக்காந்திருந்தவருக்கு வந்துச்சு பாருங்க கோவம்"ஏங்க! உங்களை யாராச்சும் கேட்டாங்களா? அவன் அவன் எவ்வளவு டென்சன்ல இருக்கான்... இதுல வந்துட்டாங்க கெடக்காதுன்னு சொல்றதுக்கு. நான் அந்த தம்பி கிட்ட பேசிட்டிருக்கேன், உங்களுக்கு என்னங்க வந்தது. உங்க வேலை என்னமோ அத மட்டும் பாருங்க." அப்படின்னு பொரிஞ்சுத் தள்ளிட்டாரு. குழந்தைகளின் எதிர்காலத்தைக் குறித்து பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் எவ்வாறு இருக்கிறது என்று உணர்த்தியது அந்த நிகழ்வு.

5. நாலு ஆச்சா? ஆங்...ஒரு வாட்டி காலேஜ்ல ஃபிசிக்ஸ் லேப்ல சில பசங்க ரீடிங்கைத் தானாவே எழுதிக் கொண்டு போய் வாத்தியார் கிட்ட நீட்டுனதும், அவரு அதைப் பாத்துட்டு கூலாத் தமிழ்ல சொன்னது "தம்பி சீக்கிரம் போய் உண்மையா ஒரு தரம் ரீடிங் எடுத்துட்டு வந்துடுப்பா".

6. ஒரு வாட்டி நம்ம கூட்டாளி காட்டான் 'செல்வான் கான்' யாஹூ மெசஞ்சர்ல ஆன்லைன் வந்தப்போ 'ஹை'ன்னு சொன்னேன். அந்த நாய் எனக்குப் பதில் அனுப்புது 'a/s/l please'ன்னு. எனக்கு பல்பு குடுத்தை நெனச்சி கடுப்பு வந்தாலும் அப்புறமா பலமுறை நெனச்சி சிரிச்சிருக்கேன்.

ரசிக்கும்/ரசித்த/விரும்பும்/விரும்பிய ஆறு
1. ஒரு காலத்தில் தாவரங்களின் தாவரவியல் பேர்களைச்(Botanical names) சேகரிப்பதில் பயங்கரமான ஒரு ஆர்வம். காடு மேடு எல்லாம் சுத்தி புல், பூண்டெல்லாம் பொறுக்கிருக்கேன்.
2. கேலிகிராஃபி - நெடுங்காலமாக இருக்கும் ஒரு ஆர்வம். இப்பவும் அப்பப்போ(ஆடிக்கும் அமாவாசைக்கும்) பயிற்சி செய்யறதுண்டு.
3. தபால் தலை சேகரிப்பு - ஒரு 6 மாசத்துக்கு முந்தி வெறியாய் இருந்த இவ்விருப்பம் இப்போது கிடப்பது Cold storageஇல்.
4. பல மொழிகளைக் கற்றல் - அப்பப்போ பட்லர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் இதெல்லாம் பேச பிடிக்கும். ஞான் அப்பப்போ, மலையாளத்துல சம்சாரிக்கிறதைப் பாத்துட்டு என்னைக் குறிச்சு சிலருக்குச் சில சம்சயங்கள் உண்டு. பக்ஷே அதெல்லாம் நிங்களோட சொப்பனம்னு பரஞ்சிக்கிறேன். எனிக்கி இதில் வளர inderest...வேறொந்தும் இல்லா கேட்டோ:)
5. இப்பல்லாம் எங்கனா போறதுன்னா விமானத்துல அனுப்புறாங்களா? அதுல ஜன்னலோர சீட் வாங்கிட்டு எட்டிப் பாத்துட்டே வர்றது ரொம்ப பிடிக்கும். கீழே கண்ணு முன்னாடி ஒரு மேப் போட்ட மாதிரி இருக்குறதைப் பாக்குறது ஒரு தனி அழகு தான்.
6. சமீபகாலமா ஒரு நல்ல கேமரா வாங்கி The Hindu Folioல வர்ற மாதிரியான பயங்கரமான புகைப்படங்கள் எடுக்கணும்னு ஒரு விபரீத ஆசை. எந்த டிஜிட்டல் கேமரா வாங்கினா நல்லாருக்கும்னு யாராச்சும் சொன்னீங்கனா நல்லாருக்கும்.

அழைக்கும் அறுவர்
1. பேராசிரியர் முனை(னி)வர். க.பி. கார்த்திக் ஜெயந்த் - ஜாவா கோடிங் பத்தி மக்களுக்கு டிப்ஸ் குடுக்க ஆரம்பிச்ச இவரோட ப்ளாக், இப்ப கமலினி முகர்ஜி(யா?), அவுங்களைப் பாத்து "ஈ வேசவி சல்லாக்கா உந்தி"ன்னு சொல்ற லெவல்ல வந்து நிக்குது. டேட்டாபேஸ் சர்வரை ரீஸ்டார்ட் செய்யும் கடினமான பணிகளுக்கு நடுவேயும், போராளி 'காம்ரேட்' பாலாவின் துணையோடு க.பி.கழகத்தை நடத்தும் மருதைக்காரத் தம்பி.

2. 'வாரியார் புகழ்' மெட்டி ஒலி கோபி மாமா - பொட்டு வச்சு, ரிப்பன் கட்டி சிண்டு போட்டுக்கிட்டு இன்னும் பச்சப்புள்ள மாதிரி தெரிஞ்சாலும், வாரியார் சாமிகளைப் பத்திப் பெரிய விசயம் எல்லாம் எழுதறவரு. தமிழ், தெலுகு, மலையாளம் எல்லா மொழிகளுக்கும் எடிட்டர்(தமிழ்ல என்னப்பா?) போன்ற பெரிய பெரிய விசயத்தை எல்லாம் கண்டு புடிச்சு வச்சிக்கிட்டு மெட்டி ஒலி கோபி போலவே அமைதியா ஒக்காந்திருக்குற 'கோபி மாமா'.

3. வரிசங்கம் புகழ் சேதுக்கரசி 'மேடம்' - இவுங்க ப்ளாக்குக்கு 'பொல்லாத மௌனம்'னு பேரு. சரி வெறும் மௌனம் தானேன்னு நினைச்சா 'மௌனம் கலையும் வரை'னு ஒரு அபாய எச்சரிக்கை வேற குடுத்துருக்காங்க. ஆண்டாள் பாசுரத்துல வர்ற 'வரிசங்கத்துக்கு' அர்த்தம் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. ஆனாலும் இவுங்க எங்க தமிழ் மிஸ் இல்ல :) இந்த அழைப்பை ஏத்துக்கிட்டு ஆறு பதிவு போட்டாச்சும் மௌனத்தைக் கலைக்கிறாங்களான்னு பாப்போம்.

4. காலேஜ் சீனியர் 'ஐயனார்' வி.எஸ்.எஸ்.ரவி - நம்ம காலேஜ் சீனியர். இவுரு காலத்துல நான் படிச்சிருந்தா எனக்கு டின்னு கட்டிருப்பாரு. அப்படிப்பட்ட பொல்லாத ராகிங் அனுபவங்களை அவரு ஃபர்ஸ்ட் இயர் படிக்கறப்போ "அக்காலத்துலேயே" சந்திச்சவரு. படிச்சது ஈ.சி.ஈ.ன்னாலும் ஒரு பாசத்துக்குக் கட்டுப்படு மெக்கானிக்கல் சீனியர்களுக்கு அஸைன்மெண்ட் எல்லாம் எழுதி குடுத்து, பத்தொன்பதாம் முனியாண்டின்னு பேரு வாங்குனவரு. இப்ப இணையத்துல ஐயனாரு கோயில் கட்டிக்கிட்டு இருக்கும் தஞ்சை தரணியின் தவப்புதல்வன்.

5. 'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' புகழ் அனுசுயா'மேடம்' - 'நான் இன்னும் சின்னப்புள்ள தான்' இது தான் இவுங்களுக்கு ரொம்பப் பிடிச்ச டயலாக். நான் ஒரு வாரம் டேரா போட்ட ஜிசிடியில் நாலு வருசம் படிச்சிப் போட்டவுங்க. மாற்றான் வீட்டு அல்லியைக் கண்டு அல்லியா, லில்லியா, குமுதவல்லியான்னு இவுங்களுக்குச் சமீப காலமா ஒரு பெருத்த சந்தேகம். தீர்த்து வைக்கிறவங்களுக்கு பரிசெல்லாம் குடுக்கறாங்களாம்.

6. 'நாயகன்' நன்மனம் ஸ்ரீதர் - நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்து ஒற்றர்படைத் தலைவர். 'நீங்க நல்லவரா கெட்டவரா'ன்னு லார்டு மெக்காலேவைப் பாத்து கேள்வி கேக்குற நல்ல மனம் கொண்ட 'நாயகன்'. காதலிக்க நேரமில்லை படம் எடுத்ததும் இவுரு தான்னு ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

ரோல் நம்பர் 3 மற்றும் 5 - என்னையும் அறியாம அந்தத் தடை செய்யப்பட்ட சொல் வந்துடுச்சு. இந்த ஒரு தரம் மன்னிச்சு விட்டுருங்க. ப்ளீஸ் :)

யய்யா! சங்கிலி தொடர் ஆரம்பிக்கிற பெரியவங்களே! நாலு போயி ஆறு வந்துச்சு. ஆறுக்கு அப்புறம் நம்பரைக் கூட்டாதீங்கய்யா! அடுத்த தபா ஒன்னுலேருந்து ஆறுக்குள்ளே எதனா ஒரு ஒத்தப்படை நம்பரைக் குடுங்க, இல்லன்னா ஒன்னேகால் பதிவு அஞ்சேமுக்கால் பதிவுன்னு எதனா ஆரம்பிங்க. இத எழுதி முடிக்கிறதுக்குள்ள பெண்டு நிமிந்துடுச்சு.

சம்திங் டெல்ஸ் மீ டா கைப்புள்ள! இம்மாம் பெரிய பதிவைப் பாத்துட்டு உன்னைய பிச்சி பீஸ் பீஸ் ஆக்கப் போறாங்கனு.

Saturday, June 17, 2006

இல்லாத காதலிக்காக

கடந்த சில நாளா நமக்கு ஒரு ஆசைங்க. களுதை...இந்த காதல் கவிதை காதல் கவிதைங்கிறாங்களே...அதை ஒன்னாவது எப்படியாச்சும் எளுதிப் போடோணுங்கிறது தாங்க அது. ஊருக்குள்ர நாலு பேரு நம்மளை பெரிய மனுசன்னு மதிக்கத் தேவையில்ல? அதுக்குத் தாங்க. நியாயமான ஆசை தானுங்ளே? ஆனானப் பட்ட ப்ளாக்கையே நாம மேட்டரு இல்லாமல்லாம் எழுதும் போது, காதல் கவிதை எழுதறது என்ன பெரிய கம்ப சூத்திரம், அப்படியே புஸ்ஸுன்னு ஊதித் தள்ளிரலாம்னு மண்டைக்குள்ள ஒரே கொடச்சலு. ஆனா நம்ம கூட்டாளி ஒருத்தன் அப்பப்ப சொல்ற "ஆசை இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க"ங்கிற பொன்மொழியும் வேண்டாத நேரத்துல நெனப்பு வந்துருச்சு.

கழுதை மேய்க்க...சாரி தாசில் பண்ண ஆசை வந்துருச்சு, என்ன பண்ணா ஒத வாங்காம மேய்க்க முடியும்னு யோசிச்சப்போ, காதல் கவிதை எழுதியிருக்குற எடத்துலெல்லாம் வேவு பார்க்கறது, "கவிஞ்சருங்க" யூஸ் பண்ணற வார்த்தையை எல்லாம் பொறுக்கி வச்சிக்கிறது, கிளாசிகல் ஸ்டைல்ல காதல் கவிதை எழுதணும்னா தேனு, மானு, வேல்விழி, கொடியிடை அப்படின்னு போட்டுக்கறது, இதுவே ஆரம்ப காலத்து பழனிபாரதி ஸ்டைல்ல வேணும்னா எஃப் எம்,அனகோண்டா,தோனி,ரூனி இந்த மாதிரி பொது அறிவு விசயத்துக்கு நடு நடுவால is, was போட்டு எப்படியாச்சும் ஒரு உவம-உவமேயம்-உவமானம் குடுத்துக்கறது, காதல்ல பல்பு வாங்கினவரு எழுதற மாதிரி எழுதனும்னா கொலைகாரி, சதாம் உசேன், சொல்லடி, செய்யடி இப்படின்னு, நேரா யாரையாச்சும் பாத்து சொன்னா விளக்குமாத்துக்கு வலி எடுக்கச் செய்யற வார்த்தைங்களை எல்லாம் போட்டு தெகிரியமா எழுதறது, இதுவே கொஞ்சம் கில்மாவா எழுதனும்னா அல்வா, ரங்கோலி, உதட்டுச் சிவப்பு, கூலிங் கிளாஸ் இந்த மாதிரியான குளுகுளு வார்த்தைங்களைப் போட்டுக்கறது, அப்படி இப்படின்னு குத்துமதிப்பா சேர்த்தோம்னா காதல் கவிதை மாதிரி ஒன்னு எப்படியும் வந்துரும்...அத ப்ளாக்ல போட்டு 'பெரிய மனுசன்' ஆகிடலாம்னு ஒரு அதிரடித் திட்டம் தயாராச்சு.

ஆனா பாருங்க...நமக்கு சில்பான்ஸாத் தோனுன இந்த காதல் கவிதை எல்லம் எழுதறதுக்கு மெய்யாலுமே நெறைய கிட்னி வேணும் போலிருக்கு. கிளாசிகல், செமிகிளாசிகல், கண்டெம்பரரி, கில்மா இப்படின்னு அததுக்குமுரிய கலைச் சொற்களை எல்லாம் சேர்த்து வச்சும் கூட நம்மால ஒன்னியும் கிழிக்க முடியலை. சத்தியமா தாவு தீர்ந்துடுச்சுங்க சாமியோவ். சே...சே...இந்த பழம் புளிக்கும்னு காதல் கவிதை கடையை ஏற கட்டறதுக்கு முன்னாடி ஏற்கனவே பெரிய மனுசனுங்களா இருக்கறவங்க கிட்ட கடைசியா ஒரு தடவை உதவி கேக்கலாம்னு வரப்போரம் குந்தியிருந்தவரு கிட்ட போய் கேட்டா, அதெல்லாம் ரொம்ப சுலபமுங்க...தானா வருமுங்கன்னு எதோ குக்கர்லேருந்து ஆவி சுலபமா வர்ற மாதிரி சொன்னாரு. கச்சேரி நடத்துறவரு, காதல் கவிதை எழுதறதுக்கெல்லாம் ஆட்டீன்(இதயம்ங்க...இது கூடவா புரியல்ல?) வேணும் அப்படின்னு நம்மளை "Iam a bad man" ரேஞ்சுக்கு கலாய்ச்சி விட்டுட்டாரு. என்னடா இந்த மதுரைக்கு வந்த சோதனை...ஆஃப்டரால் ஒரு காதல் கவிதை கூட நம்மால எழுத முடியலை அப்படின்னு சோர்ந்து போய் உக்காந்துட மாட்டேன் மகாஜனங்களே! உங்கள் கலாய்ப்புகளுக்குப் பாத்திரமான கைப்புள்ளயால ஒரு ருபையத்தையோ, ஒரு மேகதூதத்தையோ, இல்ல ஒரு ஜில்ஜில் நானூறையோ எழுத முடியா விட்டாலும் எங்கேருந்தாவது சுட்டாச்சும் சில காதல் கவிதைகளை உங்களுக்காக...கவனிக்க உங்களுக்காண்டி போட பாடுபடுவான். பாடுபடுவான் என்ன பாடுபடுவான்... பாடுபட்டுட்டான்யா... பாடுபட்டுட்டான்யா.

நான் இன்னிக்கு நாட்டு மக்களுக்காக கொண்டாந்திருக்குற காதல் கவிதைங்க சாதாரணமானது கிடையாதுங்க(நான் எழுதலியே...அதனால தான்..ஹி ஹி). காதல்னு சொன்னதும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே இருக்கும் ஒரு மென்மையான மெல்லிதான உணர்வு தான் ஞாபகத்துக்கு வரும். ஆனா பக்தி நெறியிலயும் இந்த காதலோட பங்கு இருக்குன்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். தன்னை காதலியாகவும் இறைவனைக் காதலனாகவும் உருவகப்படுத்திக்கிட்டு பலரும் பல பாடல்களைப் பாடியிருக்காங்க. முண்டாசு கவிஞர் தன்னை ஒரு பெண்ணா உருவகப்படுத்திக் கொண்டு கண்ணனைத் தன் காதலனா நினைச்சு எழுதுன இந்த பாடலைப் பாருங்க.

கண்ணன் - என் காதலன்

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ!

பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம்

உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை

பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான்

கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ!

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்ததடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ!

எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ!


பல நாளாய் காணாதத் தன் தலைவனானக் கண்ணனை நினைந்து வருந்தி, தன் தோழியிடம் முறையிடும் ஒரு பெண்ணின் வாய்மொழியாய் அமைந்துள்ளது இப்பாடல். இறைவனின் திருவடியை அடைவது குறித்தானக் கவிஞரின் மன வெளிப்பாடே இதில் சொல்லப் பட்டிருக்கும் உட்கருத்து. பல வருடங்கள் கழித்து அழகு தமிழில் ஒரு எளிய பாடலைப் படித்ததும் மகிழ்ச்சி மேலிட்டது. உங்களுக்கும் பிடித்திருக்குமென நினைக்கிறேன். பாரதியாரின் கண்ணன் பாட்டை இங்கு வாசிக்கலாம்.

"வாரணமாயிரம்" என்ற ஆண்டாள் பாசுரப் பாடலை கேளடி கண்மணி படத்தில் தான் முதன்முதலாய்க் கேட்டேன். இசைஞானி வெகு அருமையாக இசையமைத்திருப்பார். இசையுடன் இப்பாடலை முதலில் கேட்க நேரிட்டதால் இப்போது இப்பாடலைப் படிக்கும் போது கூட இசையோடு சேர்ந்து தான் படிக்கிறேன். இறைவனுடனான தன்னுடைய திருமணக் கோலத்தை எண்ணி மகிழும் ஆண்டாளின் இப்பாசுரத்தையும் மேலும் பல பாசுரங்களையும் இங்கு காணலாம்.

வாரண மாயிரம் சூழவ லம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான்

இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை,
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே


மேலே உள்ள பாடலில் இந்த 'அந்தரி', 'வரிசந்தம்' இச்சொற்களுக்குப் பொருள் யாருக்காச்சும் தெரிஞ்சாச் சொல்லுங்க.

கடைசியாக சுஃபி குருவான கபீர்தாஸ் 'வ்ரஜ் பாஷா' என்ற வட்டார வழக்கில் பாடிய 'தோஹா' (தமிழில் இரண்டடியார், ஆங்கிலத்தில் கப்லெட் 'Couplet')ஒன்றைக் காணலாம். நெசவாளரான கபீர்தாஸ் முறையான கல்வி இல்லாதவர், தானறிந்த ஞானக் கருத்துகளை இரண்டடிகளாக அவர் பாடுவதை, அவரது சீடர்கள் கேட்டு எழுதி வைத்துள்ளது தான் இன்று தோஹாக்களாக உள்ள இப்பாடல்கள். இறைவனின் பெருமைகளை அறிந்து அதை பாடுபவராக இருந்த போதிலும், கபீர்தாஸ் உருவ வழிபாட்டிலும், இறைவனின் பல்வேறு வடிவங்களிலும் நம்பிக்கையற்றவர். அவரைப் பொறுத்தமட்டிலும் இறைவன் 'நிற்குண' வடிவமானவன்.(Nirguna - attributeless). அவ்வாறு தன்னுள் இரண்டறக் கலந்திருக்கும் இறைவனைத் தன் காதலனாக உருவகப்படுத்தி அவர் பாடிய ஒரு பாடல்.

"ப்ரீத்தம் கோ பதியான் லிகூன் ஜோ கஹு ஹோய் விதேஸ்
தன்மே மன்மே நைன்மே வாகோ காஹே சந்தேஸ்"


இதன் பொருள் "என்னை விட்டு நீ பிரிந்திருந்தால் தலைவா என் உள்ளக்கருத்தை எடுத்துரைக்க உனக்கு மடல் வரைய இயலும், ஆயின் என்னுள் ஊனாய் உயிராய்க் கலந்துள்ளவனே உனக்கு என்ன மடல் நான் வரைய?"

Saturday, June 10, 2006

பைத்தியக்காரத் தவளையும் பாப்கார்னும்

சில பழைய விஷயங்களை...நாம ஒரு காலத்துல ரொம்பவே ரசிச்ச விஷயங்களை...கால ஓட்டத்துல நாம மறந்து போன விஷயங்களை...எங்கேயாச்சும் எப்பவாச்சும் திரும்ப நினைவு படுத்திப் பார்க்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாருங்க...அதை என்னன்னு சொல்ல? இந்த விஷயம் எதுவா வேணா இருக்கலாங்க...ஒரு திரைப்படமாவோ, நண்பர் ஒருத்தரு நமக்கு எப்பவோ செஞ்ச ஒரு உதவியாவோ...குடும்பமா போன ஒரு சுற்றுலாவோ, இல்லை எதோ ஒரு சில்லறை விஷயமாக் கூட இருக்கலாம். அப்படி என்னத்த கண்டுட்டு இப்பிடி குதிச்சிட்டிருக்கேன்?

இன்னிக்கு காலையிலே ஆபீசு கெளம்பும் போது ஜீ மியூசிக் சேனல்ல ஒரு பாட்டு (பாட்டுன்னு சொல்ல கூடாது - இன்ஸ்ட்ருமெண்டல் இசை) கேட்டேங்க. அந்த இசையைச் சின்ன வயசுல கேட்ட ஞாபகம். அடிக்கடி நம்ம சென்னை தொலைக்காட்சி நிலையத்துல அந்த இசை வரும். பல முறை அதை கேட்டிருந்தாலும், அதை நான் அப்பத்துலேருந்து ரசிச்சிருக்கேங்கிறதை இன்னிக்குத் தான் உணர முடிஞ்சுது. நான் கேட்ட அந்த ஆல்பத்தோட பேரு "பைத்தியகார தவளையோட பாப்கார்ன்" (ஹி...ஹி...Popcorn by "Crazy Frog"என்பதோட தமிழாக்கம் தான் அது). இந்த ஆல்பத்தை 3டி அனிமேஷனோட டிவியில பாக்க நல்லாருந்துச்சு. கையைக் காலை ஆட்ட வைக்கிற துள்ளல் இசை. கேட்டுப் பாருங்களேன்...அட இதுவான்னு தோணும்.



நாம சின்னப் பையனா கேட்ட இசை இதுன்னா கண்டிப்பா ரீமிக்ஸாத் தான் இருக்கும்னு நினைச்சு கூகிளாடியதில் தெரிஞ்சது - பாப்கார்ன் என்றழைக்கப்படும் இந்த ஆல்பம் கெர்ஷான் கிங்ஸ்லி என்ற இசையமைப்பாளரால் 1969ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இசைக்கும் கணினிக்கும் சம்பந்தம் இல்லாதிருந்த அக்காலத்தில், கணினி மூலம் உருவாக்கப் பெற்ற இசையாக இது அறியப் பெறுகிறது. கிங்ஸ்லீ உருவாக்கிய ஒரிஜினலின் சின்ன பிட் கீழே.


அதன் பிறகு பல்வேறு இசையாளுநர்களால் எடுத்தாளப்பட்டு வெவ்வேறு வடிவங்களில் இவ்வால்பம் வெளிவந்துள்ளது. பல்வேறு விளம்பரங்களிலும் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. மேலே உள்ள பைத்தியக்காரத் தவளையின்(Crazy Frog) ரீமிக்ஸ் 2005இல் வெளிவந்தது. பூம்டேன்(Boomtan) என்ற இன்னுமொரு குழுவின் கைவண்ணத்தில் 2002இல் வெளியான இசை கீழே.


மேலும் விபரங்களுக்கு இருக்கவே இருக்கு நம்ம விகிபீடியா. இங்கேயும் பாருங்க

Monday, June 05, 2006

மீள்பதிவுங்ணா

நமக்கு ரொம்ப நாளா ஒரு ஆசைங்ண்ணா...இந்த மீள்பதிவு மீள்பதிவுன்னு சொல்றாங்களே...அது ஒன்னாச்சும் நம்ம வலைப்பூ வாழ்க்கையிலே எழுதிரணும்னு. எதுக்கு எனக்கு இந்த மாதிரி ஆசையெல்லாம்னு கேக்கிறீங்க...அதானே? தமிழ் வலைப்பூவை எல்லாம் படிக்க ஆரம்பிச்ச புதுசுல...இந்த பின்னூட்டம்னா என்னன்னு தெரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப கஷ்டப் பட்டேன். பின்னூட்டத்துக்கு அர்த்தம் தெரிஞ்சதும், திடீர்னு மீள்பதிவு நம்ம கண்ணு முன்னால வந்து நிக்குறாரு. மீள்பதிவுன்னா இன்னான்னு தெரிஞ்சதும் - இந்த மைக்கேல் மதன காமராஜன் படத்துல தீயணைப்பு வீரரா வர்ற ராஜன் சொல்லுவாரே - "சோக்கா சொன்னய்யா...கேச் மை பாயிண்ட்...நானும் இதையெல்லாம் அப்பப்ப யூஸ் பண்ணறேன்"னு... அது மாதிரி ஒரு அல்ப ஆசை வந்து நம்மளை பாடாப் படுத்துது. முன்னே ஒரு தரம் கஷ்டப் பட்டு மீள்பதிவு எழுதுன போது, நம்ம ஆசையை நிரைவேத்திக்காம கோட்டை விட்டுட்டேன். ஆனா இந்த தடவை அந்த மாதிரி மிஸ்டேக் நடக்காது. அதனால பல்லாயிரக் கணக்கான நேயர்களின் விருப்பத்திற்கிணங்க நானே கஷ்டப்பட்டு எளுதுன ஒரு மீள்பதிவு...அதுவும் இங்கிலிபீசுல.

இது நான் சின்னப்பில்லயா இருக்கறச்சே எழுதுனது...கீழே அதோட சுட்டி இருக்குது...

ஏழு ரூபா பில்லு

முழுசையும் படிக்கிற அளவுக்குப் பொறுமை இருக்குறவங்க படிச்சிட்டு அங்கேயே மொத்தலாம்...இல்லை இங்கே வந்தும் மொத்தலாம். அப்பா...ஒரு மீள்பதிவு எழுதியாச்சு.

Friday, June 02, 2006

இசை பிறந்தது...


...இன்று.

ஹே! காயத்ரி...

வா.மணிகண்டன் தன்னோட பேசலாம்ல நேத்து ஒரு சோக்கு சொல்லியிருந்தாரு. அதப் படிச்சி சிரிச்சிட்டு கீழே பாத்தா நம்ம தளபதி போதும் போதும்ங்கிற அளவுக்குக் கொம்பை நட்டு சங்கத்து கொடியை ஏத்திட்டிருக்காரு...ஒரே நேரத்துல ரெண்டு வருத்தப்படாத வாலிபர்களை(!) சமாளிக்கிறது அவருக்குக் கஷ்டம்னு நெனச்சி அந்நேரத்துக்கு ஜூட்டு வுட்டுக்கிட்டேன் :)- இன்னிக்கு காலையில என்னோட செல்போன்ல இருந்த பழைய எஸ்.எம்.எஸ்சை எல்லாம் அழிக்கும் போது, மணிகண்டனோட பதிவுல படிச்சது போலவே ஒரு எஸ்.எம்.எஸ் சிக்குச்சு. அது என்னாங்குறீங்களா?

நாலு கோவமான எறும்புங்க(Angry young ants) ஒரு காட்டுப் பாதையில போயிட்டிருக்காம். அதுங்க கண்ணுல ஒரு யானை மாட்டுதாம்.

முதல் எறும்பு கேக்குதாம்"டேய்! நான் அவன் காலை ஒடச்சிடவா?"

ரெண்டாவது எறும்பு சொல்லுதாம்"இல்ல மச்சான்! அவன் தும்பிக்கையைப் புடுங்கிடலாம்"

இதை கேட்டுட்டு மூணாவது எறும்பு சொல்லுதாம்"வேணாண்டா மாப்ளே! அவன் வயித்துல குத்தலாம்டா"

நாலாவது எறும்பு என்ன சொல்லியிருக்கும்னு நெனக்கிறீங்க?

என்னது தெரியலியா...அட உண்மையிலேயே தெரியலீங்களா?

நாலாவது எறும்பு சொல்லுச்சாம்"விடுங்கடா! நாம நாலு பேரு...அவன் ஒருத்தன்...பொழச்சுப் போட்டும்".

தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கேக்கிறீங்களா? இந்த மாதிரி விசயத்துல எல்லாம் படு ஸார்ப்பா இருப்பீங்களே? ஒங்களை ஏமாத்த முடியுமா...

"ஹே! காயத்ரி! என்னயா...காலேஜ் விட்டதும் தனியாப் பேசணும்னு சொன்னியே? என்ன விஷயம்?"

"ஆமாம்யா..."

"ஹ்ம்ம்...என்னடா சொல்லு...உன் முகமெல்லாம் வாடியிருக்கு...எனிதிங் ராங்?"

"எப்படி சொல்றதுன்னு தெரியல்ல யா"

"என்ன காயூ...சொல்லு...எதாச்சும் லவ்...பாய்ஃபிரெண்ட்... அப்படின்னு..."

"சே...சே! அப்படியெல்லாம் ஒன்னுமில்லை யா..."

"அப்புறம் என்னடா?"

"ஃபாத்திமா! ஒனக்குத் தெரியாதது இல்ல...என்னோட கனவு லட்சியம் எல்லாம் காயத்ரி ஐ.ஏ.எஸ்னு என் பேருக்குப் பின்னாடி வரப் போற அந்த மூணு எழுத்து தான்...அதுக்காக நான் படற கஷ்டமெல்லாமும் ஒனக்குத் தெரியும்"

"சரி...அதுக்கு என்ன இப்போ?"

"அந்த கனவு பொய்யாயிடுமோன்னு எனக்கு கவலையாயிருக்குது யா...என்ன ஒருத்தன் ஒரு வாரமா ஃபாலோ பண்ணி தெனமும் தொல்லை குடுத்துட்டே இருக்கான்"

"சே! இவ்வளவு தானா? நீ அவனை இக்னோர் பண்ணிட்டு ஒன் பாட்டுக்கு ஒன் வேலையைப் பாத்துட்டே இரு"

"இல்லை ஃபாத்ஸ்...அவன் நான் போற எடமெல்லாம் என் பின்னாடியே வரான்...மோசமா கமெண்ட்ஸ் வேற பாஸ் பண்ணறான்பா"

"ஸ்கவுண்டிரல்ஸ்! நீ என் கூட வா... நான் வந்து அவனை நாலு கேள்வி கேக்கறேன்."

"வேணாம்யா! அவன் கிட்ட போக வேணாம்...அவனும் அவன் லேங்குவேஜும்...பாத்தா பெரிய ரவுடி மாதிரி வேற இருக்கான்"

"சே! உன்னை மாதிரி பயந்தாங்கொள்ளிங்க இருக்குறதுனால தான், செய்யறதை எல்லாத்தையும் செஞ்சிட்டு... தீஸ் ரோக்ஸ் ஆர் ரோமிங் ஸ்காட் ஃப்ரீ"

"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு யா...அவன் எவ்வளோ மோசமானவன்னு ஒனக்குத் தெரியாது...நேத்து செமிகண்டக்டர் கிளாஸ் முடிய லேட் ஆயிடுச்சு...ஈவினிங் சிக்ஸ் பி.எம், நான் பஸ் ஸ்டாப்ல பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கும் போது...அவன் என் பக்கத்துல வந்து நின்னுட்டு...ஏதேதோ பேச ஆரம்பிச்சிட்டான்...இதப் பாருங்க இந்த மாதிரி பேச்செல்லாம் என்கிட்ட பேசாதீங்கன்னு சொன்னேன்...ஆனாலும் அவன் கேக்கலை...விசில்...சினிமா பாட்டு...கமெண்ட்ஸ் அப்படின்னு ரொம்ப டார்ச்சர் பண்ணான். அப்புறம் பஸ் வந்ததும் என் பின்னாடியே அவனும் ஏறுனான்...அப்புறம்...அப்புறம்... வந்து... வந்து... புஹூ...ஹூ"

"அழாதேடா காயூ...என்ன நடந்துதுன்னு சொல்லு"

"...புஹூ...ஹூ...ஐ லவ் யூ டா செல்லம்னு சொன்னான் யா...இன் ஃப்ரண்ட் ஆஃப் ஸோ மெனி பீப்பிள்"

"நீ அந்த ரேஸ்கலைச் சும்மாவா விட்ட? அங்கேயே செருப்பைக் களட்டி அவனை அடிச்சிருக்க வேணாம்? சே...இவனுங்கல்லாம் அக்கா தங்கச்சியோட பொறந்திருக்க மாட்டானுங்க?"

"இல்ல ஃபாத்ஸ்..."

"என்ன இல்ல ஃபாத்ஸ்?"

"..ஹூ..ஹூ...அவன் சொல்ற படியெல்லாம் கேக்கலைன்னா என் தங்கச்சி மாலதியையும் இதே மாதிரி ஃபாலோ பண்ணுவேன்னு மெரட்டனான்யா. அவச் சின்னப் பொண்ணு...இதெல்லாம் தாங்க மாட்டா...எங்க வீட்டுல ஜெண்ட்ஸ் யாரும் இல்லன்னு தெரிஞ்சிட்டு வீட்டு வரைக்கும் வேற வரான்...அதான் இது என்னோடேயே போகட்டும்னு..."

"திஸ் இஸ் இட்! திஸ் இஸ் தி லிமிட்!! ஸச் கேரக்டர்ஸ் டிஸர்வ் டு பீ பீட்டன் டு டெத்!!! நீ ஒன்னும் கவலை படாதே காயூடா...நாளைக்கு நான் எங்க பெரிய அண்ணன் தாஹிர் கிட்டச் சொல்லி, உன்னை ஃபாலோ பண்ணறவனை நல்லா கவனிக்கச் சொல்றேன்"

"எனக்கு ரொம்ப பயமாயிருக்கு யா"

"ஒனக்கு என்ன பயம்டா?...நான் இருக்கேன்...அவன் எப்படி இருப்பான் எங்கே இருப்பான்னு மட்டும் சொல்லு"

"அதோ பாரு...அங்கே விசில் அடிச்சிட்டு வேகமாப் போயிட்டிருக்கானே... அவனே தான்"

"ஹே! காயூ....வா...வா...நாம இப்போதைக்கு இங்கேருந்து போயிரலாம்...நீ சொல்லும் போது கூட நான் நம்பலை...பாத்தா பொறுக்கியாட்டம் தான் இருக்கான்"


Saturday, May 27, 2006

நல்ல கருத்துள்ள பதிவு

"ஏன்டா கோமுட்டித் தலையா கால நொண்டறே?"

"வயித்தை வலிக்குதுண்ணே"

"வயித்து வலிக்கு ஏன் கால் நொண்டறே?"

"எதாச்சும் மருந்து இருந்தா சொல்லுங்கண்ணே"

"வயித்து வலிக்கு மருந்தா? ...ரெண்டு இட்லி கெட்டிச் சட்னி வச்சி சாப்பிடு... வலி நின்னு போயிடும்"

"வெளயாடாதீங்கண்ணே"

"ஒன் கிட்ட என்னடா வெளயாட்டு வேண்டி கெடக்குது?"

"நான் என்ன டாக்டர்.ஆல் இன் ஆல் அழகுராஜா எம்.பி.பி.எஸ்னு போர்டாடா மாட்டி வச்சிருக்கேன்?"

"சைக்கிள் கடையில வந்து வயித்து வலிக்கு மருந்து கேக்கிறியே? மண்டையில எதாச்சும் இருக்கா?"

"...."

"போங்கடா...அடுத்த ஜென்மத்துலயாச்சும் மனுஷனாப் பொறங்கடா"

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

"ஏண்டா எப்பவும் எருமை சாணியை மூஞ்சுல அப்புன மாதிரியே திரியறே?"

"வாழ்க்கையிலே நிம்மதியே இல்லண்ணே"

"ஹாஹாஹா...ஒனக்கும் வாழ்க்கையில நிம்மதியில்லையா?"

"அப்படி நடுத்தண்ணியில போய் நில்லு...நிம்மதியான எடத்துக்குப் போய் சேந்திரலாம்"

"சந்தோஷம் வர்றதுக்கு வழி எதாவது இருந்தா சொல்லுங்கண்ணே?"

"ஆங்...அப்படி வா? இதுக்குத் தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணுங்கிறது"

"ஒக்காருடா"

"அட சீ...நல்லா ஒக்காருடா"

"அடேய்! எனக்கு சந்தோஷம் வரனும்னா என்ன பண்ணுவேன் தெரியுமா?"

"உம்"

"நேரா கடைக்குப் போவேன்..."

"அங்.."

"காலே கால் கிலோ அல்வா வாங்குவேன்..."

"அங்..."

"ரெண்டு மொழம் மல்லிகைப்பூ வாங்குவேன்.."

"அங்..."

"அத எடுத்துக்கிட்டு நேரா வீட்டுக்குப் போயி... எம் பொண்டாட்டி கிட்ட குடுப்பேன்"

"அங்..."

"அவ என்ன வேலை செஞ்சிட்டிருக்காளோ அத அப்படியே போட்டுட்டு என் கூட ஆத்தங்கரைக்கு வந்துருவா"

"அங்..அங்.."

"அப்புறம் அவ மடியில நான் படுக்க... என் மடியில அவ படுக்கன்னு... இப்படியே பொழுது போற வரைக்கும் ஒரே கிளுகிளுப்பா இருக்கும்"

"கி...கி....கி...கி..."

"வேணா நீயும் செஞ்சு பாரு"

"ஆன்...செஞ்சிர்றேன்"

"டேய்! அந்த பக்கம் போனா சந்தோஷம் வராது... சாவு தான் வரும்...இப்பிடி போடா"

"கேப்பியா...கேப்பியா..."

"கேப்பியா..கேப்பியா...?"

"அடியேய் ஏண்டி இந்த கறுப்பனைப் போட்டு இந்த அடி அடிக்கிறீங்க?"

"இவனோட சவகாசம் வச்சதுக்கு ஒங்களைத் தான் மொதல்ல நாலு சாத்து சாத்தோனும்"

"அடே...நான் இவனோட சவகாசம் வச்சேனா? அப்படின்னு இந்த நாய் சொல்லுச்சா?"

"எந்திரிடா மேலே...ஏண்டா கோமுட்டித் தலையா என்னடா நடந்துச்சு?"

"அண்ணே! உங்க சம்சாரம் உங்களவுக்கு இல்ல"

"ஆமா! அவ ஒயரம் கொஞ்சம் கம்மி இப்ப அதுக்கு என்ன?"

"நீங்க எவ்வளவு நல்லவரு?"

".....மேலே"

"நீங்க என்ன சொன்னீங்க... உங்க சம்சாரத்துக்கு பூவும் அல்வாவும் வாங்கிக் குடுத்தா ஆத்தங்கரைக்கு வருவாங்கன்னு சொன்னீங்க"

"ஹ்ம்!!!!"

"அதே மாதிரி வாங்கிக் குடுத்தா வர மாட்டேங்கறாங்க"

"ஹ்ம்!!!!"

"இதுக்கு நீங்களே ஒரு பைசல் பண்ணுங்க...எவ்வளவு செலவழிஞ்சாலும் நான் பாத்துக்கறேன்"

"டேய் சைக்கிள எடுறா"

"அண்ணே! இவுங்க வரலை?"

"என்ன மாட்டி வுடவா பாக்கறே?"

".........."

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
"தண்ணீர் வருவதென்ன...சரம் சரமாய் பாய்வதென்ன?"

"சரம் சரமா பாயுதா?"

"பொம்பளைங்க குளிக்கிறாங்கல்லோ...இந்த பக்கம் நீ வரலாமா?"

"யாரு இந்த சொரூபராணிங்க...இவளுங்கல்லாம் பொம்பளைங்க இவளுங்க குளிக்கிறத பாக்க நாங்க சைக்கிளை எடுத்து அமுத்திட்டு வரோமாக்கும்"

"எங்கே நீ இந்த பக்கம் வந்ததுக்கு ஒரு காரணம் சொல்லு பாப்போம்"

"ஏன் எங்களால காரணம் சொல்ல முடியாதாக்கும்? ஆத்துல தண்ணி நெறைய வரதா சொன்னாங்க...அதான் பாத்துட்டு போலாம்னு வந்தேன்"

"......."

"ஏன் மாரக்கா...இந்த தண்ணி ஏன் இம்புட்டு ருசியா இருக்குன்னு தெரியுமா?"

"இது எங்க ஊரு ஆனைப்பட்டி மேலே வர்றதுன்னால தான் இம்புட்டு ருசியா இருக்குது"

"ஊஹும்...இன்னிக்குக் காரணம் சொல்லறேன் தெரிஞ்சிக்க...இது என்ற ஊரு மாரப்பட்டி மேலே வர்றதுன்னால தான் இம்புட்டு ருசியா இருக்குது"

"ஆமாண்டி... நீங்க பொறந்தது ஒரு ஊரு அதுக்கு ஒரு பேரு அது மேலே வருதாம் இந்த ஆறு...அதனால இந்த தண்ணி ருசியா இருக்குதாம்"

"அடியே...நீ சொல்றதெல்லாம் காரணம் கெடயாது...இந்த தண்ணி இம்புட்டு ருசியா இருக்கறதுக்குக் காரணம் என்னன்னு தெரியுமா?"

"அந்தா பாரு... அஞ்சு ஆர்ஸ்பவர் மோட்டரு தொறந்து வுட்ட மாதிரி சல்லுன்னு வுடறானுங்க"

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அதொன்னுமில்லீங்க...கொஞ்சம் பொடலங்கா பொறியலு...மூணு ரொட்டி...உளுத்தம்பருப்புல செஞ்ச தாலு, கொஞ்சம் நெல்லு சோறு...இது எல்லாத்தியும் போட்டு தின்னுட்டு...நம்மாளுங்க வெஸ்ட் இண்டீஸோட நாப்பத்தி ரெண்டாவது ஓவருலயும் தடவு தடவுன்னு தடவறதை கொஞ்ச நேரம் பாத்துட்டு... சித்த தூரம் தனியா நடக்கையிலே நம்ம செரிபெல்லத்துல நிழல் படமா ஓடுன வாழ்வியல் கோட்பாடுகள்(என்னன்னு யாருக்குத் தெரியும்) தான் மேலே.

இதெல்லாம் இப்ப எதுக்கு? இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நாம சொல்ல விரும்பும் கருத்து ஒன்னு இருக்கே? அதாவதுங்க...பொடலங்காயில எம்புட்டு ஃபவரு இருந்தா... தின்ன பத்து நிமிசத்துல, இம்புட்டும் எனக்கு சீன் சீனா நெனப்பு வந்திருக்கும்? அட பொடலங்காயை வுடுங்கைய்யா...இந்த உளுத்தம்பருப்பு குடுத்த ஊட்டச் சத்துல பாருங்க...கிறிஸ் கெய்ல் இர்பான் படானைப் பொளந்து கட்டறதைக் கடுப்போட பாத்துக்கிட்டே, கடமையே கண்ணா ராவோட ராவா என்னையும் அறியாம இதையெல்லாம் தட்டச்சி முடிச்சியிருக்கேன். ஆகவே மக்களே...என்னைய மாதிரியே நீங்களும் Be Vegetarian...Eat Healthy...Think Healthy...னு மிகத் தாழ்மையுடன் உங்களை மன்றாடி கேட்டுக்கறேன். சைவ உணவு சாப்பிட்டீங்கனா ஒடம்பும், மூளையும் சுறுசுறுப்பா இருக்கும். முப்பால் புலவர் ஐயன் வள்ளுவனும் இதுனால தானே புலால் மறுத்தல்னு தனியா ஒரு அதிகாரமே எழுதியிருக்காரு? சரி! அப்போ இதையெல்லாம் படிச்சிட்டு என்னை மாதிரியே நீங்களும் சாப்பாட்டு விஷயத்துல நீங்களும் 100% ப்யூர் வெஜிட்டேரியனா மாறிடுவீங்க தானே...

...சிக்கனும், மட்டனும், மீனும், முட்டையும் கண்ணுல அம்புடற வரைக்கும் :)

(கண்ணா! ராஜா! உளுத்தம்பருப்பை சோத்துல போட்டு பெசஞ்சுத் திங்கும் போதே ஒனக்கு இவ்ளோ கொயிப்பு...சாம்பார்,ரசம்,கூட்டு,பொறியல்னு வக்கணையா தின்னின்னா எவ்ளோ இருக்கும்னு... யார்மா அங்கேருந்து சவுண்டு?)

Thursday, May 25, 2006

மதுமிதா அவர்களின் ஆய்விற்காக...

ஆராய்ச்சின்னு சொன்னதும் ஒரு கொஸ்டியனேரை(Questionnaire) எங்கிருந்தோ சுட்டு, ஆபீசு பக்கத்துல இருக்கற டீக்கடையில நண்பர்(நண்பி)ஒருத்தரின் உதவியோட நீலம், கறுப்பு, செவப்பு, பச்சைன்னு கலர் கலரா பேனா வச்சிக்கிட்டு வலது கையாலயும், எடது கையாலயும்(கையெழுத்தை வித விதமா காட்ட தான்) ஒரு எடத்துல் 1ன்னும்,ஒரு எடத்துல 2ன்னும் இல்ல ரேண்டமா ஒரு டிக்குன்னும் எல்லா கேள்விக்கும் "Strongly agree"னு பதில் குடுத்தும்(ஓபன் எண்டட் கேள்விகளை சாய்ஸில் விட்டுவிட்டும்) கப்பு கப்புன்னு தீஸீசை முடிக்கிறத விட்டுட்டு நேர்மையா ஒரு ஆராய்ச்சி (அதுவும் வலைப்பூக்களைப் பத்தி) பண்ணனும்னு நெனக்கிற மதுமிதா மேடம் அவர்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்தி என்னுடைய முடிந்த வரை(!) நேர்மையானதொரு பதிலை அளிக்கிறேன்)

வலைப்பதிவர் பெயர்: சி. மோகன் ராசு(S.மோகன் ராஜ்) அட - உண்மையான பேரு இது தாங்க

வலைப்பூ பெயர் : Kaipullai Calling

சுட்டி(url) : http://kaipullai.blogspot.com
http://smohanraj.blogspot.com(ஆங்கில கைப்புள்ள - தூங்கிக்கிட்டிருக்காரு)

ஊர்: தற்போதைக்கு சித்தூர்கட், ராஜஸ்தான். (நிரந்தரமாக : சென்னை)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: திருமுருகன்(http://thirumurugan.blogspot.com)
தமிழில் முதலில் காணக் கிடைத்தது நிலவு நண்பனுடைய பதிவு(http://nilavunanban.blogspot.com)

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம்: 29.12.2005

இது எத்தனையாவது பதிவு: 87 (மூன்று மாதமாக ப்ளாக்கரில் கிடக்கும் 4 டிராஃப்ட்கள் இல்லாமல்)

இப்பதிவின் சுட்டி(url): http://kaipullai.blogspot.com/2006/05/blog-post_25.html

வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: வட இந்தியாவில் நான் 7 ஆண்டு காலமாக வசித்து வருவதால், தமிழில் பேசுவது வெகுவாகக் குறைந்து விட்டது.தமிழில் சிந்தித்து இந்தியில் மொழிபெயர்த்து பேசுவது குறைந்து, இந்தி மொழியிலேயே சுலபமாகச் சிந்தித்து பேசவும் தொடங்கி விட்டேன்.
அவ்வப்போது தமிழில் எழுதிக் கொண்டும், படித்துக் கொண்டும் இருந்தால், தமிழில் சிந்திப்பது குறைந்துவிடாது என்ற நம்பிக்கையிலும், தனிமையைப் போக்கும் ஒரு கருவியாகவும் இருக்கும் என்ற எண்ணத்திலும், என்னை பற்றியும் நான் "பட்டு பட்டு" தெரிந்து கொண்ட சில
விஷயங்களை மறந்து விடாமல் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தொடங்கினேன்.

சந்தித்த அனுபவங்கள்: பலவிதம். இது-இது என்று இத்தருணத்தில் கூறுவது கடினம். நம்மைப் போலவே(!) சிந்திப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என எண்ணுகையில் மகிழ்ச்சி.

பெற்ற நண்பர்கள்: "Brand Kaipullai"யை நான் எவ்விதமான முயற்சியும் செய்யாமல் பட்டி தொட்டி எங்கும் தெரியச் செய்த அனைவரும், குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் அனைத்து அங்கத்தினர்களும்.

கற்றவை:
//என்னை பற்றியும் நான் "பட்டு பட்டு" தெரிந்து கொண்ட சில விஷயங்களை மறந்து விடாமல் எழுதி வைத்துக் கொள்ள கூடிய ஒரு புத்தகமாகவும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் தொடங்கினேன். //
Kaipullai Calling என்று பெயர் வைத்து விட்டாலும்...நக்கல், நையாண்டி பதிவுகள் மட்டும் அல்லாமல் சற்று சீரியசான(பாருங்க... இதுக்கு கூட தமிழ்ல என்னன்னு சட்டுன்னு நெனப்பு வரலை) விஷயங்களையும் நற்றமிழில் எழுத வேண்டும் என்பதே முதல் எண்ணம். "நற்றமிழில்" என்பது எண்ணத்தில் மட்டுமே உள்ளது...அதை செயலில் கொண்டு வரும் அளவுக்கு நம் தமிழ் அறிவு இல்லை...அது வெகுவாக மழுங்கி விட்டது என்ற ஞானோதயம். அவ்வப்போது பெருமுயற்சி செய்து பயனுள்ள பதிவுகளைக்(!) கொண்டு வந்து விடலாம் என்ற புரிதலும்(இதுவும் தமிழ் வலைப்பூக்களில் கற்றுக் கொண்டது தான் :)- ).

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: கைப்புள்ள என்கிற பெயர் இருப்பதால் ஆங்கில கலப்பையும், தமிழ் கொலையையும் என் பதிவுகளைப் படிப்பவர்கள் மன்னிக்கிறார்கள் என்பதே பெரிய சுதந்திரம் தான்.

இனி செய்ய நினைப்பவை: வலைப்பதிவுலகில் நகைச்சுவைக்குக் குறைவே இல்லை. மொழியே இல்லாமல் படங்களின் மூலம் சொல்லும் நகைச்சுவை ஆகட்டும், இலைமறை காய் மறைவான மெலிதான நகைச்சுவை ஆகட்டும்(subtle humour), வயிறு குலுங்கச் சிரிக்கச் செய்யும் சினிமா
தொடர்புடைய காமெடி ஆகட்டும் - வலைப்பதிவாளர்களின் ஆற்றல் அளப்பற்கரியது. என்னால் எழுதவே முடியாவிட்டாலும், என் கற்பனைக்கு(டூப்படிப்பதற்கு என்று படிக்கவும்) வறட்சி ஏற்பட்டாலும், வலைப்பூக்களில் நகைச்சுவையான விஷயங்களையும், அவ்வப்போது
பொருள் பொதிந்த பதிவுகளையும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும். செய்ய நினைப்பவை என்று எதுவும் இல்லை...கைப்புள்ள(அட ஒரிஜினலுங்க!) சினிமால செய்யறதை எழுத்துல காப்பி அடிச்சிட்டே இருப்போம்ல?

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நான் நினைப்பது உண்மை. நம்மால் யாரும் எவ்விதத்திலும் புண்படக் கூடாது, மனம் நோகக் கூடாது என்ற எண்ணம் எனது ஒவ்வொரு நடவடிக்கையிலும், செயலிலும் இருக்கிறது என்று பெரிதும் நம்புபவன். நான் பிறந்ததின் பயனைத் தேடிக் கொண்டே இருக்கிறேன். இன்னும் அதற்கு விடை கிடைத்த பாடில்லை. வேறொன்றும் பெரிதாகச் சொல்லிக் கொள்வதற்கில்லை.

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: சொன்னா திட்டப் படாது. இப்பல்லாம் கிறுக்குத் தனமாத் தான் இந்த மூளை யோசிக்குது. இப்படி ஒரு பதிவை எழுத வேண்டும் என்று நினைத்ததும் முதன்முதலில் எனக்குத் தோன்றிய தலைப்பு : ஹாய் ரே ஹாய் ரே ஹாய் ரப்பா (மதுமிதா மேடம் அவங்களோட வலைப்பூவுல எப்பவாச்சும் ரெண்டு தரம் எட்டிப் பாத்துருப்போம் அதுவும் பின்னூட்டம் எதுவும் போடாமல்...மத்தபடி நாம யாருன்னு அவங்களுக்குத் தெரியாது, அவங்களைப் பத்தி நமக்கும் அவ்வளவாத் தெரியாது...இப்படி இருக்க திடீர்னு இந்த மாதிரி ஒரு தலைப்பு வச்சா தப்பா எடுத்துக்குவாங்கன்னு ரொம்பவே யோசிச்சு தலைப்பை மாத்திட்டேன்)

இப்பதிவின் முன்னுரைக்கும் எனக்கும் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை என்று காட் ப்ராமிஸ்(!) செஞ்சு இத்தோட உத்தரவு வாங்கிக்கிறேன் :))-

Tuesday, May 23, 2006

3டி திருவிழா - 9

3டி பாத்து ரொம்ப நாள் ஆச்சுங்களா? அதான் இன்னிக்கு நாமும் பாத்து நம்ம ப்ளாக்லயும் ஒன்ன போடலாமின்னு ஆஸ் பட்டு இந்த பதிவு.

க்ளூ கண்டிப்பா வேணுமாங்க? சரி இந்தாங்க..."ஒத்தையா புடிச்சா மூணு ரெட்டையா புடிச்சா ஆறு".

3டி எப்படி பாக்குறதுன்னு மறந்து போயிந்தியா? டோண்ட் வொரி பாவா? அதி கோசம் ரீவிஷன் இக்கட உந்தி

Sunday, May 21, 2006

மஹாகாலேஷ்வர்

இந்தூரில் இருந்த போது இவ்வருடம் ஜனவரி மாதம் 26ஆம் தேதி, உஜ்ஜைன் நகரில் உள்ள மஹாகாலேஷ்வர் என்னும் சிவத் தலத்தைத் தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதனைப் பற்றிய விவரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில் இப்பதிவினை இடுகின்றேன்.

மஹாகாலேஷ்வர் என்பது இந்தியாவில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. ஒளிவடிவாக வழிபடப்படும் சிவலிங்கங்களை ஜோதிர்லிங்கம் என்கின்றனர். இப்பன்னிரெண்டு சிவலிங்கங்களின் மாதிரியையும் பெங்களூரில் ஏர்போர்ட் ரோடில் உள்ள கெம்ப் ஃபோர்ட் எனும் இடத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கண்டிருக்கிறேன். ஆனால் பன்னிரெண்டில் இரண்டினை நேரில் காணும் வாய்ப்பு, பணி நிமித்தம் இந்தூர் நகரத்தில் இரண்டாண்டு காலம் வசிக்க நேரிட்டதால் கிடைத்தது. பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ள இங்குச் சுட்டுக. ஜோதிர்லிங்கமும் தானாக அவதரிப்பதாகச் சொல்லப்படும் சுயம்பு லிங்கங்களுக்கும் வேறுபாடு உள்ளதா? அல்லது இரண்டுமே ஒன்று தானா? யாரேனும் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.

உஜ்ஜைன் எனப்படும் இடம் இந்தூரிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை வழியாகச் சென்றால் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்தில் இவ்விடத்தை அடையலாம். சென்னையிலிருந்து ஜெய்பூர் செல்லும் சென்னை ஜெய்பூர் எக்ஸ்பிரஸ் உஜ்ஜைன் வழியாகச் செல்லுகிறது. இவ்வூர் பல விதங்களிலும் வரலாற்றுச் சிறப்பு பெற்ற ஒரு ஊர். தேவர்களும் அசுரர்களும் பார்க்கடலைக் கடைந்து கிடைக்கப் பெற்ற அமுதத்தைத் தாங்கிய கலசத்தில் இருந்து ஒரு சில துளிகள் பூவுலகில், பிரயாக்(அலகாபாத்),ஹரித்வார்,நாசிக் மற்றும் உஜ்ஜைன் ஆகிய இவ்விடங்களில் விழுந்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது. இவ்வமுதத் துளிகள் விழுந்த இடங்களில் "கும்ப மேளா" என்னும் திருவிழாக்கள் ஒவ்வொரு 12 ஆண்டும் நடக்கின்றது. உஜ்ஜைனில் நடைபெறும் கும்ப மேளாவினை "சிம்ஹஸ்த" என்று அழைக்கின்றனர். குரு பகவான் சிம்ம ராசியில் வந்து அமரும் போது உஜ்ஜைனில் கும்ப மேளா நடை பெறுவதால் இதனை "சிம்ஹஸ்த" என்கின்றனர். 2002ஆம் ஆண்டு நடைபெற்ற "சிம்ஹஸ்த" திருவிழாவிற்கான ஏற்பாட்டின் போது அரசுப் பேருந்துகளின் மீது "சிம்ஹஸ்த பர்வ" என எழுதி வைத்திருந்தனர். நான் இதை அங்கு இருக்கும் போது கண்டிருந்தாலும், அதற்கு என்ன பொருள் என்று இப்பதிவினை எழுதுவதற்காக இங்குச் சுட்டிய போது அறிந்து கொண்டேன். ஒரு பூகோளச் சிறப்பும் உஜ்ஜைன் நகருக்கு உள்ளது. பூமியின் மீது செல்லும் ரேகையான டிராபிக் ஆப் கேன்சர்(Tropic of Cancer), இந்நகரின் வழியாகச் செல்லுகின்றது. விக்ரமாதித்தன் என்ற அரசன் ஆண்ட பழம்பெரும் நாடு இந்த உஜ்ஜைன். விக்ரமாதித்தனும் வேதாளமும் என்னும் கதையின் கதை களமும் இஃதே.

நண்பர் ஒருவர் குஜராத் மாநிலத்தில் உள்ள வெராவல் என்னும் ஊருக்குச் செல்ல ரயிலைப் பிடிப்பதற்காக உஜ்ஜைன் செல்ல வேண்டியிருந்ததால் இத்தலத்தைத் தரிசித்து விட்டு அவரையும் வழியனுப்பி விட்டு மறுபடியும் இரவு இந்தூர் திரும்புவதைத் திட்டமாகக் கொண்டு நாங்கள் ஆறு பேர் குவாலிசில் சென்றோம். நாங்கள் சென்ற நேரத்தில் மஹாகாலேஷ்வர் கோயிலில் புணரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்பிற்குப் பின் கோயிலின் உள்ளே நுழைந்தோம். இச்சிவலிங்கத்தைத் தரிசிக்க கோயிலுக்குள் நுழைந்து கீழிறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது இத்தலத்தின் புனிதத் தீர்த்தத்தையும் இன்னும் சில கடவுளரையும் தரிசித்தோம்.

மஹாகாலேஷ்வர் ஆலயத்தின் புனித தீர்த்தம்.

கடைசியில் மஹாகாலேஷ்வர் என்னும் இச்சிவலிங்கத்தைத் தரிசித்தோம். கற்பகிருகத்திற்கு அருகாமையில் கேமராக்களை உபயோகிப்பது பல ஆலயங்களிலும் தடை செய்யப் பட்டிருந்தாலும், இங்கு பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். கோயிலில் இருந்தவர்களும் அதை தடுக்கவில்லை. மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்கத்தின் புகைப்படம் கீழே.


அங்கிருந்து ஷிப்ரா எனும் புனித நதிக்கரையின் அருகாமையில் அமைந்துள்ள சாந்தீபணி ஆசிரமத்திற்குச் சென்றோம். பகவான் கிருஷ்ணர் இவ்வாசிரமத்தில் தங்கி சாந்தீபணி என்னும் முனிவரிடத்தில் கல்வி கற்றதாக அறிந்து கொண்டேன். இதெல்லாம் முன்னரே கேள்வி படாத செய்திகள் ஆக இருந்ததால் அதை காணும் போதும் அதை பற்றி அறியும் போதும் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் சாந்தீபணி முனிவர் கிருஷ்ணருக்குக் குருவாக இருந்ததை அன்று தான் அறிந்து கொண்டேன். சாந்தீபணி ஆசிரமத்தில் எடுத்த புகைபடங்கள் கீழே.



அங்கிருந்து உஜ்ஜைன் ரெயில் நிலையம் செல்லும் வழியில் "காலபைரவ்" என்னும் ஆலயத்திற்குச் சென்றோம். உஜ்ஜைனைச் சுற்றிலும் பல கோயில்கள் இருந்தாலும் நேரத்தினைக் கருதி சிலவற்றை மட்டுமே காண முடிந்தது. காலபைரவ் கோயிலின் சிறப்பு, தேங்காய பழம் வைத்து படைப்பது போல ஒரு சிறிய பாட்டிலில் சாராயத்தைப் படைக்கின்றனர்(ஆனால் படைத்தே ஆக வேண்டும் எனக் கட்டாயமில்லை). குடியரசு தினத்தன்று ஒரு புத்துணர்ச்சி ஊட்டிய சுற்றுலாவாகவும், பழைய நண்பர்கள்(புது இடத்திற்கு வந்ததும், அவர்கள் பழைய நண்பர்கள் தானே :))- ) பற்றிய நினைவு வர ஏதுவான ஒரு பயணமாகவும், இறைவனைத் தொழுத போது கிடைத்த மன அமைதிக்காகவும் அப்பயணம் மனதில் நிற்கும். நண்பர் அவரை உஜ்ஜைன் ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு இரவு இந்தூர் திரும்பினோம்.

உஜ்ஜைன் ரெயில் நிலையத்திற்கு வெளியே

(மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலங்களைத் தரிசிக்க விரும்பினால் இந்தூரில் தங்கிக் கொண்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலையும், இந்தூரிலிருந்து கண்ட்வா என்னும் ஊருக்குச் செல்லும் வழியில் 75 கி.மீ தொலைவில் உள்ள ஓங்காரேஷ்வர் என்னும் தலத்தையும் தரிசிக்கலாம். ஓங்காரேஷ்வருக்குச் சென்ற வருடமே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இத்தலம் நர்மதை நதியினால் சூழப்பட்ட ஒரு தீவில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் செல்லும் போது, நர்மதை நதிக்கரை வரை சாலை வழியாகச் சென்று, நதியினைப் படகு மூலமாகக் கடக்க வேண்டும். நர்மதை நதி, இத்திருத்தலத்தை "ஓம்" என்னும் வடமொழி எழுத்தின் வடிவில் சூழ்ந்திருப்பதால் இத்தலத்திற்கு ஓங்காரேஷ்வர் என்று பெயர். உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஹரித்வாருக்குச் சென்றுள்ளீர்கள் ஆனால் பல விதங்களில் இவ்விரண்டு தலங்களுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தோன்றும். இந்தூரிலிருந்து 14 மணி நேரப் பயணம் செய்தீர்கள் ஆனால் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகருக்கு அருகில் த்ரியம்பகேஷ்வரர் என்னும் மற்றுமொரு ஜோதிர்லிங்கத்தையும், அங்கிருந்து சற்றுத் தொலைவில் ஷீரடியில் சாய்பாபாவின் கோயிலையும் கண்டு வரலாம்.

Thursday, May 18, 2006

முட்டாய் எடுத்துக்கங்க

இண்டர்நெட்டை உபயோகிச்சு, யார் யாரோ என்னென்னமோ பண்ணறாங்க. நம்ம லெவலுக்கு நம்மால என்ன பண்ண முடியும்...வழக்கமா நாம போடற ப்ளடைத் தவிர?... ரொம்ப யோசிச்சதுல முட்டாய் கொடுக்கலாம்னு தோணுச்சு.

எதுக்கா? அதொன்னுமில்லீங்ணா...நம்ம "தம்ஃப்ரீ" (தடிப்பசங்கள்ல சின்னவரு)இப்ப முதுகலை சுளுக்கு டாக்டர் பட்டம் வாங்கறதுக்குத் தகுதியாயிட்டாரு...அதாவது Master of Physiotherapy பாஸ் பண்ணிட்டாரு. நெஜ முட்டாய் குடுக்கற அளவுக்குப் பக்கத்துல இல்லாததுனால இப்போதைக்கு டிஜிட்டல் முட்டாய் எடுத்துக்கங்க.

Monday, May 15, 2006

ஒரு நாள் ஒரு கனவு

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு கனவு...கொஞ்ச நாள் என்ன கொஞ்ச நாள்? முந்தா நேத்து... சனிக்கிழமை தான். கடந்த இரண்டாண்டு காலமா தூக்கத்துல கனவு எதுவும் வந்ததா ஞாபகம் இல்லை. ஆனா இதே போலொரு சம்பவம் நமக்கு ஏற்கனவே நடந்திருக்கே...எதிர்ல இருக்குறவரு கேட்ட கேள்விக்கு இதே மாதிரியான பதிலை நாம ஏற்கனவே எதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொன்ன ஞாபகம் இருக்குதே என்று சொல்லக் கூடிய மாதிரியான "தே ஜா வூ"(De ja vu feeling ) பலமுறை வந்திருக்கு. நம்மள்ல பல பேருக்கும் இந்த தே ஜா வூ வந்திருக்கும். ஆனா நம்ம கனவு கொஞ்சம் வித்தியாசமானது. என்னாங்குறீங்களா?

நான் வீட்டுல உக்காந்திருக்கேன். திடீர்னு வீட்டுக்குள்ள ஒரு குரங்கு புகுந்துடுது. மேலேயும் கீழேயும் தாவிக் குதிச்சு ரொம்ப அட்டகாசம் பண்ணுது. வீட்டுலே வேற யாரும் இருக்குற மாதிரி தெரியலை. குரங்கை நான் தான் தனியா சமாளிக்கணும் போல இருக்கு. அப்ப கையில கிடைச்ச ஒரு துடைப்பத்தை எடுத்துக் காட்டி சூ...சூ...போ...போன்னு அதை விரட்டறேன். அதுவும் நான் என்ன பண்ணறேனோ அதே மாதிரி பண்ணுது. அது கையில மாட்டுன ஒரு பொருளைக் காட்டி என்னை அது விரட்டுது. நம்ம மேலே, அந்தப் பொருளை எடுத்து வீசிடுச்சுன்னா என்ன பண்ணறதுன்னு நெனச்சு கையில இருக்குற துடைப்பத்தைக் கீழே போட்டுட்டு சின்னப் பசங்க சொல்ற மாதிரி தலையைச் சாய்ச்சு "சீ...போ"னு சொல்றேன். அதுவும் என்னை மாதிரியே தலையைச் சாய்ச்சு சீ...போன்னு சொல்ல முயற்சி பண்ணுது. ஆனா பாவம் அந்த குரங்குக்கு தமிழ் தெரியாது போலிருக்கு... அதனால தலையை மட்டும் அதே ஸ்டைல்ல சாய்ச்சுக்குது. அப்புறம் குரங்கு ஓட அது பின்னாடி நான் ஓட இப்படின்னு கொஞ்ச நேரம் வீட்டுல ஒரே களேபரமா இருக்கு. எப்படியோ கஷ்டப்பட்டு அதுக்கு வாசக் கதவு வழியைக் காட்டிட்டு சோபாவுல வந்து உக்காருறேன். ஆனா பாருங்க அவசரத்துல கதவைச் சாத்த மறந்துட்டேன். திரும்பவும் குரங்கு உள்ள வருது. அதோட கால்ல எதோ கட்டியிருக்கு. சந்திரமுகி ஜோதிகா கணக்கா அது காலை ஆட்டிக் காட்டனதை யோசிச்சா, அது கால்ல சலங்கை தான் கட்டியிருக்கணும். கொஞ்ச நேரம் பழிச்சுக் காட்டிட்டு குரங்கு வாசக் கதவு வழியா ஓடிப் போயிடுது.

இப்ப நான் கதவு ஜன்னல் எல்லாத்தையும் சாத்திட்டு வந்து உக்காருறேன். அப்பாடான்னு உக்காருறதுக்குள்ள எங்கிருதோ ஒரு வெண்டிலேட்டர் வழியா இப்ப ஒரு குட்டிக் குரங்கு உள்ள வந்துடுது. முன்ன வந்த சந்திரமுகி குரங்கை விட இது ரொம்ப விஷமம் பண்ணுது. திடீர்னு பாத்தா என் தலைமுடியைப் பிடிச்சு இழுக்குது. தலைமுடியை விடுன்னு கத்தலாம்னு நெனக்கிறதுக்குள்ள தூக்கம் கலைஞ்சிடுது. அட சே! என்ன ஒரு விசித்திரமான கனவு. அதுவும் மால்கேட்டை விட்டுப் போகப் போகும் கடைசி நாளில். யாருக்காச்சும் அந்த "ஜோதிகா"வைப் பத்திச் சொல்லணும்னு தோணுனதுனால அதிகாலையில அம்மா வீட்டுக்குப்(ஏன் இந்த வார்த்தையைப் பொண்ணுங்க மட்டும் தான் சொல்லணுமா...நாங்களும் சொல்லுவோம்) போன் பண்ணறேன். அவங்க அவசரமா அப்ப கோயிலுக்குக் கிளம்பிட்டிருக்குறதுனால அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.

அதுக்கப்புறம் மால்கேட்டை (Malkhed) விட்டுக் கிளம்பி வந்துட்டேன். நம்ம க்ளையண்ட் மால்கேட் மாதிரி சித்தூர்கட்(Chittorgarh) என்ற இன்னுமொரு குளிர் பிரதேசத்திலும்(!) சிமெண்ட் ப்ளாண்ட்டைக் கட்டி வைத்திருப்பதால், தம்பி உன் சேவை அங்கே ஆகஸ்ட் வரை தேவை அப்படின்னு எங்க ப்ராஜெக்ட் மானேஜர் என்னை அங்கே அனுப்பி வச்சிட்டாரு. சித்தூர்கட்னா சென்னையிலிருந்து பாரதிவேலு பஸ் சர்வீஸ்னு ஒரு பஸ் போகுதே அந்த ஊரான்னு கேக்கப் பிடாது. அது சித்தூர்...இது சித்தூர்கட். அது ஆந்திரா...இது ராஜஸ்தான். மால்கேட்டிலிருந்து சித்தூர்கட் போகும் வழியில் மும்பையில் ஓட்டல் ரூமில் உக்காந்து கொண்டு லேப்டாப்பில் ப்ளேடு போட்டுக் கொண்டிருக்கிறேன். இண்டர்நெட் கிடைச்சதும் நம்ம பிளேடு உங்களுக்காக ப்ளாக்கரில் அரங்கேறும்.

சரி! யாராச்சும் சிக்மண்ட் ஃப்ராய்டின் இண்டர்பிரெடேஷன் ஆஃப் ட்ரீம்ஸ்(Interpretation of Dreams) படிச்சிருக்கீங்களா? படிச்சிருந்தீங்கனா என் சந்தேகத்தைக் கொஞ்சம் தீத்து வையுங்கண்ணே! இது தான் சாக்குன்னு போடா கோமுட்டித் தலையானு திட்டப் படாது. ஏன்னா இந்த குரங்கு மேட்டர்ல எனக்கு எதோ ஒரு விட்டக்குறை தொட்டக்குறை இருக்கறதா ஒரு நம்பிக்கை. உடனே என்னை வேட்டைய மகாராஜாவாக்கி ஒரு கதை எழுதிடாதீங்கப்பா(யப்பா பார்த்தீ...கட்டதுரை உங்களுக்குத் தான் இது). ஏன்னா ப்ளாக்கரே வாழ்க்கை என்று இந்தூரில் உக்காந்திருந்த அடியேன், இப்போ ஒரு பின்னூட்டம் போடுவதற்குக் கூட கஷ்டப் பட வேண்டிய அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். செங்கல் வச்சு வீடு கட்ட வேண்டிய கொத்ஸு புரோட்டா மாஸ்டர் ஆனதையும், தமக்கையாருக்காகத் தன் ஜொள்ளு விரதத்தைத் துறந்த ஜொள்ளுப் பாண்டியின் தியாக உள்ளத்தையும், புது வெண்பா வாத்தியாரம்மாவான தங்கச்சி பொன்ஸ் 100 அடிச்சதையும், நமக்கு சோறு போடும் பர்சேஸ் ஆர்டரையும், குட்ஸ் ரெசிப்டையும் ஓரங்கட்டிவிட்டு மாட்யூல் லீடருக்கும் கல்தா கொடுத்துவிட்டு திருட்டுத் தனமா நுனிப்புல் மேஞ்சாலும் பின்னூட்டம் போடுவது என்பது இருக்குற டென்சனுக்கு இடையே புது வேலைக்கே உலை வைக்கும் விசயமாகி விடக் கூடும் என்பதால் கையைக் கஷ்டப் பட்டு கட்டி வைத்துக் கொண்டு உக்காந்திருக்கிறேன். ஏன்னா பின்னூட்டம் போடுவது நமக்கு மிகவும் பிடித்தமான விசயம்...உயிரைக் குடுத்து ஒருத்தர் எழுதியிருக்குற எடத்துல எதாச்சும் ஒளறி வச்சிட்டு ஓடியாந்துடலாம். அதுக்கு அவரும் நம்மளை மதிச்சு எதாச்சும் பதில் குடுத்தாருன்னா மறுபடியும் ஒரு ஒளறல்...இதை இப்படியே i=1 to infinityன்னு லூப்ல போட்டு ஓட விட்டோம்னா பொழுது போற வரைக்கும் ஆபீஸ்ல ஒரே கிளு கிளுப்பா இருக்கும்(வேணா நீங்களும் செஞ்சு பாருங்க). ஆனா பதிவு எழுதுறது அப்படியில்லை...கொஞ்சூண்டு இருக்குற மூளையையும் கசக்கிப் பிழிஞ்சாத் தான் நம்ம தகுதிக்கு நாலு வரியாச்சும் தேத்த முடியும். ராத்திரி ஒரு மணிக்கு ஆபிசுலேருந்துத் திரும்ப வந்து எதாச்சும் இளையராஜா பாட்டு வரும்னு சன் டிவியை வச்சா அந்த நேரத்துலேயும் மூக்களகியும் ஆனந்தமும் வந்து இம்சை குடுக்கறாங்க. அந்த ஆனந்தத்துலேயே ஆபிசுலேருந்து வீட்டுக்குத் திரும்பனதும் பதிவெழுதறது எல்லாத்தையும் மறந்துட்டுத் தூங்கிடுவேன்.

விட்டக்குறை தொட்டக்குறை என்னன்னு கூர்ந்து கவனித்து கேட்க நினைக்கும் ஷார்ப்பான பார்ட்டிங்களுக்காக - இந்தூரில் நான் என் முந்தைய கம்பெனியில் இருந்த கடைசி சில நாட்களில் ஒரு நாள், ஒரு குரங்கு ஆபிசுக்குள்ள புகுந்துடுச்சு. குரங்கா...அதுவும் ஆபிசுக்குள்ளேயா? இது கதையல்ல...கனவுமல்ல...நிஜம். உற்பத்தி நடக்கும் தொழிற்சாலைகள் யாவும் குரங்குகளும், பாம்புகளும் கந்த சஷ்டிக் கவசத்தில் வரும் ஏனைய பிற உயிரினங்களும் புழங்கும் இடங்கள் என அறிவாய் டைடல் பார்க்கிலும், நாவலூரிலும், சோழிங்கநல்லூரிலும் ஜாவா கோட் எழுதும் மானிடனே! மனுசனே ஸ்வைப் கார்ட் இல்லாம உள்ளே நுழைய கூடிய இடங்களில் குரங்குக்கு என்ன தடை? அதான் அது கிட்ட ஸ்வைப் கார்ட் இல்லாம போனாலும் சுலபமா உள்ளே நுழைஞ்சிடுச்சு, குரங்குன்னா இராம.நாராயணன் படத்துல வர்ற சிகப்பு முகம் கொண்ட "ஆடு ராமா ஆடு " குரங்கு கிடையாது. கிண்டி சிறுவர் பூங்காவில் சிங்கவால் குரங்குன்னு ஒரு குரங்கோட படம் இருக்கு(போய் பாருங்க)...அந்த மாதிரியான கிட்டத்தட்ட நான்கடி உயரம் கொண்ட கொஞ்சம் கூட பஞ்சத்தில அடிபடாத திடகாத்திரமான கறுப்பான முகம் கொண்ட ஒரு குரங்கு தான் உள்ளே புகுந்துச்சு. உள்ளே வந்த குரங்கு எனக்கு நேர் எதிரில் இருக்குற ஃபைல் அடுக்கி வைக்கிற ஒரு கேபினெட்டின் மேலே ஏறி உக்காந்துக்கிச்சு.

அந்த கம்பெனியில் என்னோட கடைசி சில நாட்கள் என்பதால் நண்பர்களோடு புகைப்படம் எடுப்பதற்காக எடுத்து வந்திருந்த என் கேமரா என் பையிலேயே இருந்தது. அந்த நேரத்திலும் "கேபினெட் மேல் குரங்கு" என்ற தலைப்பில் ஒரு போட்டோ பதிவு போடலாம் என்ற ஒரு பிரகாசமான ஐடியாவை நம்ம மூளை நமக்குக் கொடுத்தது. எனக்கு முன்னாடி இருந்த க்யூபிக்கிள் காலியாக இருந்துச்சு...பாஸ்ஸுங்க தான் எப்பவும் மாட்டிவிட்டுட்டு எஸ்கேப் ஆகிடுவாங்களே. இந்த விஷயத்திலும் அது உண்மையாயிடுச்சு. நம்மளை மாதிரி இன்னும் ரெண்டு பேரு நம்ம பின்னாடி க்யூபிக்கிள்ல உக்காந்து இருக்கானுங்க. சரின்னு கேமராவை எடுக்க பையைக் கூட தொறந்திட்டேன். திடீர்னு குரங்கு நற நறன்னு பல்லைக் கடிக்குது. அது பல்லைக் கடிக்கிற சத்தம் நல்லாத் தெளிவாக் கேக்குது. அப்பத் தான் குரங்கை யாரும் ரொம்ப நாளா நகம் வெட்டச் சொல்லிக் கட்டாயப் படுத்தலைங்கறதையும் கவனிச்சேன். குரங்கைப் படம் எடுக்கப் போய் புது கம்பெனியில் சேர்றதுக்கு முன்னாடி நம்ம படத்துக்கு மாலை போடற மாதிரி ஆகிடக் கூடாது என்பதற்காக குரங்கைக் கண்டும் காணாமல், அப்போது என் கம்ப்யூட்டரில் திறந்திருந்த தமிழ்மணத்தையும், யாஹூ மெசஞ்சரையும் மாற்றி மாற்றி க்ளிக்கி கொண்டு உக்காந்திருக்கிறேன். வேலை செய்பவர்களைக் குரங்கு தொந்தரவு செய்யாது என்ற ஒரு எண்ணத்தில். அப்போது என்னை கவனிச்ச, (குரங்கிலிருந்து பாதுகாப்பான தொலைவில்) இருந்த ரெண்டு மூனு பேரு நான் குரங்கைக் கவனிக்கலைன்னு நினைச்சு அங்கே பாரு குரங்கு குரங்குன்னு என்ன பார்த்து கையை காட்டுறானுங்க. அடப் பாவிங்களா! நீங்க கையைக் காட்டுறதைப் பாத்து குரங்கு இறுக்கி அணைச்சு உம்மா கிம்மா கொடுத்துடுச்சுன்னா என்ன பண்றதுன்னு நெனச்சதும் குருதிப்புனல் படத்துல ஆதி "பயம்னா வீரம் இல்லாத மாதிரி நடிக்கிறதுன்னு" சொன்னது ஞாபகத்துக்கு வந்துச்சு. அப்படியே கொஞ்சம் நேரம் வீரம் இல்லாத மாதிரி நடிச்சிக்கிட்டும் கிளிக்கிக் கொண்டும் உக்காந்திருக்கோம் நாங்க மூணு பேரும்.

"கைப்புள்ள ஒன்னோட கண்ணுல பயம் தெரியுது. அதை நான் பார்த்துட்டேன்"னு சொல்லற மாதிரி இன்னும் கொஞ்சூண்டு குலை நடுங்க வைக்க குரங்கு கேபினெட் மேலிருந்து நல்ல காலமாக No- man's landஇல் குதிக்குது. இப்ப குரங்குக்கு மிக நெருக்கத்தில் இருந்த டார்கெட் நான் தான். அந்த ஒரு நொடி அட்ரினலின், பெனாஃப்தலீன், அனாசின், க்ரோசின், மெடாசின் எல்லாம் நம்ம உடம்புல லிட்டர் கணக்குல சுரந்துச்சுப் பாருங்க. அதை வார்த்தையா எழுத முடியாது. ஆனா பாஸ்ஸோட க்யூபிக்கிள் பக்கத்துல இருக்குற கதவை தெறந்துட்டு குரங்கு நாங்க உக்காந்திருந்த முதல் மாடியிலிருந்து கீழே குதிச்சு ஓடிப் போயிடுச்சு. அது குதிக்கும் போது உண்டான சத்தத்தில் குரங்குடைய வெயிட் தெரிய வந்தது. கண்டிப்பா மூணு வேளையும் மூக்கு முட்ட சாப்பிடற பார்ட்டியாத் தான் இருக்கும் போலிருக்கு. அப்பாடா...குரங்கு போயிடுச்சின்னு நெனச்சி பின்னாடி க்யூபிக்கிளுக்குப் போய் அங்கிருந்த கமாண்டோக்களிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரங்கு திரும்ப வந்துடுச்சுன்னு கீழேருந்து ரெண்டு பேர் ஓடியாறானுங்க. ஒருத்தனைப் பாத்ததும் குரங்குக்கு மடிப்பு அம்சா ஞாபகம் வந்துடுச்சு போலிருக்கு ...அவனுக்கு இடுப்புல ஒரு பொறாண்டு. இன்னொருத்தனுக்குத் தலையைப் படிய சீவாம ஆபீசுக்கு வருவியானு பொறுப்பா வகிடு எடுக்க ஒரு முயற்சி பண்ணுச்சாம் அந்த தாயுள்ளம் கொண்ட குரங்கு. அப்ப தான் குரங்கு வியாபார நிமித்தமாத் தான் வந்துருக்குன்னு புரிஞ்சிச்சு.(அதாவது "the monkey means business"). திரும்பவும் குரங்கு மேலே ஏறி வந்து அதே கேபினெட் மேலே உக்காந்து சுத்துமுத்தும் பாக்குது...இப்ப வேலை செய்யிற மாதிரி நடிக்க நம்ம கிட்ட தமிழ்மணமும் இல்லை யாஹூ மெசஞ்சரும் இல்ல. நானும் கமாண்டோ தனுஷும் நின்னுக்கிட்டு இருக்கறோம். கதவைத் தெறந்து ஓடிடலாம்னு நெனச்சு கதவு பக்கம் போன அதே நேரத்துல குரங்கு திரும்பவும் ஒரு ஜம்ப். இப்ப சிங்க வால் பத்ரிக்கு எதிரில் ஆதி, தனுஷ் ரெண்டு பேரும் ஒரு மூலையில் மாட்டிக்கிட்டோம். அந்த நேரம் தோன்றிய இன்னுமொரு யோசனை கதவைத் திறந்து ஓடுவதுக்குப் பதிலா க்யூபிக்கிள் தடுப்பை எகிறிக் குதிச்சு ஓடிடலாம்னு. ஆனா பாருங்க..."ரகசியமானது காதலு"ங்கிற பாட்டுல வர்ற புள்ளையோட கன்னத்துல விழற குழியை "சோ க்யூட் நோ"னு சன் டிவியிலப் பாத்து கொஞ்ச நேரம் ரசிச்சதுக்கு அப்புறம், உதயா டிவி, ஜெமினி டிவி, ஈநாடு மராட்டி, ஆல்ஃபா டிவி குஜராத்தி சேனல்களை எல்லாம் பாத்ததுக்கப்புறமும் போர் அடிச்சதனால கலைச் சேவை செய்யலாம்னு நெனைச்சு நான் கிறுக்குனதை இவ்வளவு நேரம் படிக்கணும்னு உங்க தலையில எழுதியிருக்குப் போலிருக்கு. அதனால கதவைத் தெறக்கற உரிமை எனக்கு மட்டுமே இருக்குன்னு குரங்கு திரும்பவும் கதவைத் திறந்து ஓடிப்போச்சு.

ஆகையால் மகாஜனங்களே! இப்ப சொல்லுங்க விட்டக்குறை தொட்டக்குறை இருக்கா இல்லியான்னு? அந்த சந்திரமுகி ஜோதிகாவுக்கும், குருதிப்புனல் பத்ரிக்கும் நமக்கும் என்ன தொடர்புன்னு? Interpretation of dreams படிக்கல்லன்னாலும் பரவாயில்ல...உங்களுக்குத் தோணுனதைச் சொல்லுங்க. பின்னூட்டத்துக்குப் பதிலும், மத்தவங்க பதிவுக்குப் பின்னூட்டமும் போடாத நீயெல்லாம் எந்த தைரியத்துலடா பின்னூட்டத்தை எதிர்பாக்குறேன்னு உங்களில் சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்று தான்னு எழுத மிக வீரமா ஆரம்பிச்சிட்டாலும் "நீங்க சொல்றது எல்லாம் சரி தானுங்க. அதை மனப்பூர்வமா ஒத்துக்கறேன்"னு கால்ல விழுந்துக்கறேன். ஹூம்...இப்படியே போனா ஒரு நாள், ஸ்டார் ஆகற கனவை மறந்துடனும் போலிருக்கே? மவனே! ஒனக்கு இப்படியெல்லாம் வேற ஆசையா? ஆமா...ஆகஸ்ட் மாசம் சித்தூர்கட்லேருந்து ரிலீஸ் ஆனதுக்கப்புறம் பதிவு எழுதுறதுக்கும் படிக்கிறதுக்கும் துட்டுக் குடுக்கற மாதிரி ஒரு ப்ராஜெக்ட் கெடைக்காமலா போயிடும். அது வரைக்கும்...ஒரு நாள் ஒரு கனவு தான்.

தடிப்பசங்க #4

காட்சி # 4 : கலர் கலராம் காரணமாம்
"Diamonds are a girl’s best friend"னு எங்க நடு அத்தை பாடுன பாட்டு ஒன்னு "Gentlemen prefer blondes" அப்படிங்கற படத்துல இருக்குது. சரி...கேர்ள்ஸ்க்கு டயமண்டு பெஸ்ட் ஃப்ரெண்ட்... ஒத்துக்கறோம். மேரீட் லேடீஸுக்கு?? என்னை கேட்டீங்கனா "Her grown up sons (or daughters) are a married woman's best friend(or worst enemy for that matter)" அப்படின்னு சொல்லுவேன். இருந்தாப்புல இருந்து இப்ப எதுக்கு பீட்டருன்னு தானே கேக்கறீங்க? என்னங்க பண்ணுறது...என்ன தான் உங்களுக்கெல்லாருக்கும் புரியறதுக்காக, நான் டேமில்ல ரைட் பண்ணாலும், எங்க நைனா டங்கை என்னால மறக்க முடியுமா? அதுக்குத் தான் அப்பப்ப, இப்பிடி பீட்டர் தெளிச்சு கோலம் போடறது. என்னது?... 'அடி செருப்பால'யா?....நோ...நோ...மீ பாவம்யா.

சரி! பெஸ்ட் ஃப்ரெண்ட் காட்சியெல்லாம் இப்ப எடுத்து வுட்டா நெஞ்சை நக்கீஸ் மேட்டர் ஆகிப் போவும்ங்கிறதுனால இப்போதைக்கு ஒரு வர்ஸ்ட் எனிமி காட்சி.

"டேய்! முரளி...இதை கொஞ்சம் அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா...சீக்கிரம்"

"த..து..என்னது இது?" சாட்சாத் பூர்ணம் விசுவநாதனே தான் (!)

"புடவை"

"அது தெரியுது...என்ன புடவை?"

"பட்டு புடவை"

"வெளையாடாதீங்கம்மா...என்ன கலர்?"

"மாம்பழக் கலர்...டபுள் கலர் புடவை. காலையில ஒரு கல்யாணத்துக்குப் போகணும்னு நேத்தே தான் சொன்னேனே?"

"இந்த புடவையை எல்லாம் கட்டிக்கிட்டு எங்க கூட வராதீங்க. இத கட்டிக்கிட்டு நீங்க எங்க கூட வந்தா எங்களுக்கு ஒரே அவமானமா இருக்கும். "

"ஏன் இந்த புடவைக்கு என்னா?. "

"இந்த புடவை ஒரே பளபளனு இருக்கு. இதை கட்டுனீங்கனா அலங்கார பூஷணியா ஒரே பகட்டா இருக்கும். பாரு இந்தம்மா எப்பிடி பந்தாவா புடவை கட்டிக்கிட்டு போறாங்கன்னு எல்லாரும் பேசுவாங்க"

"எது இது அலங்கார பூஷணியா? இந்தப் புடவையில ஜரிகை கூட முந்தியில மட்டும் தான் இருக்கு. ஊர் உலகத்துல போய் பாருங்க. அவங்கவங்க எப்படி உடம்பு முழுசும் ஜரிகையோட புடவை கட்டுறாங்கன்னு...கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை கட்டாம வேற என்ன கட்டுவாங்க? உனக்கு அவமானமா இருந்தா நீ என் கூட வராதே"

"நாளைக்குக் கல்யாணத்துக்குப் போவணும்னு தெரியுமில்ல. கடைசி நேரம் வரைக்கும் புடவையை அயர்ன் பண்ணாம என்ன பண்ணிக்கிட்டிருந்தீங்க? " - தம்பியோட வசனத்தை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குல்ல? "சனி,ஞாயிறு ரெண்டு நாளா லீவுல தானே இருந்தீங்க. திங்கக் கிழமை காலையிலே ஸ்கூலுக்குக் கிளம்பும் போது தான் சட்டை அயர்ன் பண்ணல, பேண்ட் அயர்ன் பண்ணலைன்னு ஞாபகம் வருமா? சாகப் போற நேரத்துல தான் சங்கரா சங்கராம்பீங்களா"னு அம்மா எடுத்து விடற நீளமான டயலாக்கோட உல்டா தான் மேலே பார்த்தது. An eye for an eye, a tooth for a tooth. பீட்டர் இல்லாம பரயணுமெங்கில் பழிக்குப் பழி ரத்தத்துக்கு ரத்தம்.

"அடிக்கிற வெயில்ல எதுக்குப் பட்டு புடவை?" - இது 'நானே தான்' தம்பிக்கு ஆதரவாக.

"என்னடா நீயும் அவன் கூட சேந்துக்கிட்டு... கல்யாணத்துக்குப் பட்டுப் புடவை கட்டாம வேற எத கட்டுறது?"

"சிம்பிளா க்ரிஸ்பா ஒரு காட்டன் சாரி" - தி ஹிண்டு சண்டே மேகசின்ல யாரோ ஒரு சமூக சேவகியை விவரிக்கும் போது வந்த "க்ரிஸ்ப் காட்டன் சாரி" என்ற பதத்தைச் சரியான எடத்துல சரியான நேரத்துல சரியாகப் பிரயோகித்துத் தங்கள் பாராட்டுகளுக்குப் பாத்திரம் ஆகுபவர் உங்கள் கைப்புள்ள.

" 'மறுபடியும்' படம் பாத்தீங்கல்ல?"

"நான் பாக்கலை"

"நேத்து கூட ஒலியும் ஒளியும்ல அந்த படத்து பாட்டு போட்டானே. அதுல ரேவதி கட்டிக்கிட்டு வர மாதிரி சிம்பிளா லைட் கலர்ல் அழகா ஒரு காட்டன் சாரி கட்டிக்கிட்டு வாங்க"

"அது சரி! அதுக்கெல்லாம் உங்க ரெண்டு பேரோட பொண்டாட்டிங்க வருவாளுங்க. கல்யாணத்துக்கு காட்டன் புடவை கட்டி கூட்டிக்கிட்டு போய் அழகு பாருங்க. எங்க வீட்டுக்காரரு எனக்கு வாங்கிக் குடுத்துருக்காரு...நான் இதை தான் கட்டிக்கிட்டு வருவேன்" ஷேவ் பண்ணிக் கொண்டு இருக்கும் அப்ஸின் ஆதரவுக்காக அவரை நோக்கி ஒரு ஏக்கப் பார்வை.

"நீயாச்சு...உன் மவனுங்களாச்சு. நம்மளை வுட்டுராயா. உங்க பேச்சுக்கே நான் வரலை" இத இத இத தானே நாங்க எதிர்பார்த்தோம்.

"உங்க கிட்ட போய் சொன்னேன் பாருங்க..."அப்ஸ் எதையும் கண்டுக்காத மாதிரி நைஸா எல்லாத்தையும் ரசிச்சிக்கிட்டுத் தான் இருக்காரு. ரெண்டு எருமைங்களுக்கு நடுவுலே தனியா கிளேடியேட்டரா அம்மா எவ்வளவு தான் சமாளிப்பாங்க?

"எங்க பொண்டாட்டிங்க வந்தாங்கன்னா இந்த மாதிரி பந்தாவெல்லாம் கூடாது, சிம்பிளா இருக்கணும்னு முன்னாடியே கண்டிஷனா சொல்லிடுவோம்...என்னடா?"

"ஆமாம்" - தம்பியின் ஏகோபித்த ஆதரவும் நமக்கிருக்கு.

"இந்த மாதிரி லூசுத் தனமானக் கண்டிஷன் எல்லாம் போட்டா நாளைக்கு வர்றவ கொமட்டுலயே குத்துவா"

"கொமட்டுல குத்துற ராட்சசிங்க தான் பொண்டாட்டியா கெடப்பாங்கனா நாங்க கல்யாணமே பண்ணிக்க மாட்டோம். சிம்பிளா டிரெஸ் பண்ணறது என்ன தப்பா?"

"சரியான ஜோக்கு. ஆமாண்டா...எல்லாரும் இப்ப இப்பிடி தான் சொல்லுவீங்க. நாளைக்குப் பொண்டாட்டிங்க வந்ததும் அவளுங்களுக்கு அவனவனும் கூஜா தூக்குவீங்க. அப்ப அலங்கார பூஷணியா அவளுங்க வெளியில கெளம்பும் போது என்ன பண்றீங்கன்னு நானும் பாக்கத் தானே போறேன். சிம்பிளா டிரெஸ் பண்ணறது தப்பில்லை...ஆனா அது அதுக்குன்னு ஒரு நேரங்காலம் இருக்கு. கறிகாய் வாங்கப் போகும் போது பட்டுப் புடவை கட்டுனா நீ சொல்லுறது சரி. கல்யாணத்துல கூட காட்டன் சாரியைக் கட்ட சொன்னா பிற்காலத்துல பஹுத் முஷ்கில் ஹை பேட்டா"

"டேய் லேட்டாவுது...சீக்கிரம் அயர்ன் பண்ணி வாங்கிட்டு வா?"

"நான் குளிக்கப் போறேன்...எனக்கும் லேட்டாவுது" - இன்னும் கொஞ்சம் வெறுப்பேத்தறதுக்காகத் தம்பி பாத்ரூமுக்குள்ள நுழையற மாதிரி ஒரு ஆக்டிங் குடுக்கறாரு.

"டேய்! அம்மா கேக்குறாங்கல்ல. அயர்ன் பண்ணி வாங்கிக் குடுத்துட்டு குளிக்கப் போயேன்" முதன்முறையா அம்ஸுக்கு சப்போர்ட்டாகத் தோப்பனார்.

"சரி குடுங்க" இளவல் இறங்கி வருகிறார்.

"ஒன்னும் வேணாம். ஏற்கனவே அயர்ன் பண்ணியிருக்குற வேற புடவையையே கட்டிக்கிட்டு வர்றேன். மவனே! இந்தம்மா கிட்ட கல்யாணத்துல கட்டிக்க ஒரு நல்ல பட்டுப் புடவை கூட இல்லன்னு எல்லாரும் சொல்லணும். நீங்களும் உங்க டாடியும் அதை கேட்டு அவமானப் படணும்" இப்ப முருங்கை மரம் ஏறுறதுக்கு அம்மாவோட சான்ஸ்.

"என்னை உங்க சண்டையில இழுக்காதே" - அப்புச்சி ஐ ஆம் தி எஸ்கேப்

"இதுக்குத் தான் வீட்டுல ஒரு பொம்பளைப் புள்ள வேணுங்கிறது. பொம்பளைப் புள்ள இருந்துச்சுன்னா அம்மாவுக்குக் கொஞ்சமாச்சும் ஆதரவாப் பேசும்" அப்பப்போ தடிப்பசங்க ரெண்டு பேரையும் வெறுப்பேத்த அம்மா உபயோகிக்கும் சுலபமான ஆனா பலன் தருகிற ஒரு டெக்னிக் இது.

"ஆ...ஊன்னா பொம்பளைப் புள்ள பொம்பளைப் புள்ளம்பீங்களே? எவ்வளவு செஞ்சாலும் உங்களுக்கு நன்றியே இருக்காதும்மா. பொம்பளைப் புள்ள இருந்தா மட்டும் என்ன பண்ணுமாம்?" இது நாங்க ரெண்டு பேரும் கோரஸ்.

"ஆமாம் இப்ப நீங்க மட்டும் என்ன பண்றீங்களாம். காலங்காத்தால உயிரை எடுக்குறீங்களே? எனக்கு மாமியாரே வேணாண்டா நீங்க ரெண்டு பேருமே போதும். எங்க மாமியார் கூட இப்படியெல்லாம் என்னை கேள்வி கேட்டது கிடையாது"

"சினிமால காட்டுற மாதிரி உங்க மாமியார் உங்களைக் கொடுமை படுத்தி இருந்தாங்கன்னா இப்ப இந்த மாதிரியெல்லாம் அட்டகாசம் பண்ணுவீங்களா?"

"உங்களால ஒரு பைசா பிரயோஜனம் இல்லன்னாலும் வெட்டிப் பேச்சுக்கு ஒன்னும் குறைச்சலில்லை"

இதுக்கு மேலே வெறுப்பேத்துனா அப்ஸ் கிட்ட நல்லா பாட்டு விழும்னு தெரிஞ்சிக்கிட்டு தம்முடு விறுவிறுன்னு புடவையை எடுத்துக்கிட்டு லாண்டிரிக்கு ஓடறாரு. புடவை அயர்ன் பண்ணி வந்தாலும் அம்மா பிடிவாதமா பளபளப்பு குறைச்சலான வேறொரு பச்சை கலர் பட்டுப் புடவையைத் கட்டிக்கிட்டுத் தான் கல்யாணத்துக்கு வர்றாங்க.

தி.நகர்ல இருக்குற கல்யாண மண்டபத்துக்கு திருவல்லிக்கேணி ஆராதனா ஓட்டல் கிட்டருந்து 13 இல்ல 13பி பஸ்ஸைப் பிடிச்சா அழகா அரை மணி நேரத்துல போயிடலாம். இப்படி இருக்கையிலே இருபத்தி அஞ்சு ரூபா(அப்பல்லாம் அவ்வளவு தான்) குடுத்து அப்ஸை ஆட்டோ பிடிக்க வைக்க கொஞ்சம் மெனக்கெடனும். அப்ஸ் ஆட்டோல போக ஒத்துக்கிட்டாலும் அம்மாவை ஒத்துக்க வைக்க பகீரத பிரயத்தனம் பண்ணனும். ஆனா ஆட்டோல நாலு பேரையும் ஏத்தறதுல இளவல் ஏழு எட்டு வயசுலேயே போஸ்ட் டாக்டரல் ஃபெல்லோ பட்டம் வாங்கனவரு. அத்தோட தி.நகர்லேருந்து திரும்பி வரும் போது சரவண பவன்ல சாப்பாட்டுக்கும் சில பல டெக்னிக்குகளைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்து விடுவார். கல்யாணத்துல புவ்வா உண்டு என்பதால் சரவண பவன் மட்டும் கட்.

வீட்டுலேருந்து நடந்து அக்பர் சாகிப் தெரு முனை வந்ததும் "டாடி! கல்யாணத்துக்கு நேரமாகலை? ஏற்கனவே நாம ரொம்ப லேட்டுன்னு நெனக்கிறேன். ஒன்பது மணி பஸ்ஸும் போயிருக்கும்" பல்லவன் பஸ்ஸுல பார்ட்-டைம் வேலை பாக்குற மாதிரி ஒரு பீலா.

"அதெல்லாம் ஒண்ணும் நேரமாகலை. பஸ்ஸூலேயே போகலாம். ஆட்டோவுக்கு வேற இருபது ரூபா குடுக்கணும்" அம்மா இப்பவும் 1970களின் விலைவாசியிலேயே இருக்காங்களே.

"சரி! அங்கே நிக்குதே ஆட்டோ...அவரைப் போய் தி.நகர் பனகல் பார்க் வருவாரான்னு கேளு" - இது அப்ஸ்.

எள்ளுன்னா எண்ணெய்யா நிக்கிற பழக்கம் தானே பிரதர்ஸ் ரெண்டு பேருக்கும் (நமக்கு ஆதாயமான விஷயத்துல மட்டும்). அப்ஸ் சொல்லி முடிக்கிறதுக்குள்ள இளவல் ஆட்டோ டிரைவரோட பேச்சு குடுத்துட்டு இருக்காரு. பேசி முடிச்சிட்டு, நின்னுக்கிட்டிருக்குற எங்களை நோக்கி வர்றாரு. பின்னாடியே ஆட்டோவும் வருது.

"டாடி! அவரு முப்பத்தைஞ்சு ரூபா கேட்டாரு. நான் முப்பது ரூபாய்க்குப் பேசி முடிச்சிட்டேன்" ஆஹா இதுவல்லவோ பேச்சுத் திறமை.

"முப்பது ரூபாயா? இருபது ரூபாயே அதிகம்னு சொல்றேன். முப்பது ரூபாய்க்குப் பேசிட்டு வந்துருக்கே?" அம்மா முகத்துல கடுகு வெடிக்குது.

"இருபது ரூபாய்க்கு ராயப்பேட்டைக்குத் தான் போக முடியும்" தன்னுடைய பேரத்தின் மீது தம்பிக்கு அப்படி ஒரு அபார நம்பிக்கை.

"முப்பது ரூபான்னா வேண்டாம்னு சொல்லிடுங்க" இது யாருன்னு அநாவசியமா கேக்கப் பிடாது.

"முப்பது ரூபா அதிகம்டா" - அப்ஸ்

அப்ஸ் ஆட்டோ டிரைவர் கிட்ட "தி.நகர் தானே? இருபது ரூபா தான் ஆவும். பரவால்ல இருபத்தியஞ்சு ரூபா வாங்கிக்குங்க"

சென்னை ஆட்டோ டிரைவர்களின் அக்மார்க் பதில் ஆன"இருபத்தியஞ்சு ரூபா கட்டாது சார். சர்ச் பார்க் ஸ்கூல் வரைக்குமே இருபது ரூபா மீட்டர் போட்டாலே வந்துடும். அப்புறம் அங்கிருந்து பனகல் பார்க் எவ்வளவு தூரம்னு நீங்களே யோசிச்சுப் பாருங்க" வைக் கொடுக்கிறார் ஆட்டோ டிரைவர்.

ஆட்டோவைப் பேசிக் கூப்பிட்டு விட்டதால் "சரி ஏறுங்க"ஒன்று வருகிறது.

ஜன்னலோர சீட்டைத் தம்பி உஷாராக முதலிலேயே பிடித்துக் கொள்கிறார். நாலு பேர் ஆட்டோவில் உக்காருவது கொஞ்சம் கஷ்டமாத் தான் இருக்கு. இருபத்து மூன்று அத்தியாவசிய ஊட்டச் சத்துக்கள் அடங்கிய காம்ப்ளானைக் காலையும் மாலையும் இரண்டு "வளரும் பையன் இவன்"களும் குடிச்சா ஆட்டோவுல எங்க எடம் இருக்கும்?.

"அழகா பஸ்ஸுலே நாலு பேரும் உக்காந்துட்டு போயிருக்கலாம். ஒன்னே கால் ரூபா தான் டிக்கெட். முப்பது ரூபா குடுத்து இறுக்கத்துல போக வேண்டியதாயிருக்கு" முப்பது ரூபா அநாவசிய செலவு என்பது அம்மாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

"இந்த நேரத்துல உங்களுக்கு பதிமூணாம் நம்பர் பஸ்ஸுலே உக்காந்துட்டு போக எடம் கெடைக்குதா? நீங்க கட்டிக்கிட்டு வந்துருக்குற பட்டுப் புடவையால தான் இறுக்கமே" - இது எப்படி இருக்கு?

முப்பது ரூபாயும் ஒன்னே கால் ரூபாயும் அமீர் மகால் வரும் வரை அம்மாவின் உதட்டை விட்டுப் பிரிய மறுக்கிறது.

"அதான் ஆட்டோவுல ஏறியாச்சுல்ல. அப்புறம் என்ன சும்மா அதேயே பிடிச்சுக்கிட்டு" ஆட்டோ பயணத்தின் ஆனந்தத்திற்கு பங்கம் ஏற்படாத படி தம்பி பார்த்துக் கொள்கிறார்.

சிறிது நேரம் அமைதிக்குப் பிறகு "டேய் மோகன்ராஜ்! சூப்பர் ஹிட் முகாப்லாவுல ஞாயித்துக் கிழமை ஏதோ பரிசு போட்டின்னு சொன்னானே? உனக்குக் கூட அதுக்குப் பதில் தெரிஞ்சிருந்துதே? ஒரு நாலணா காம்பெடிஷன் போஸ்ட் கார்ட் வாங்கி எழுதி போடலாமில்ல?"

"எனக்கு அதுலெல்லாம் இண்டரெஸ்ட் இல்லை"

"உனக்கு எதுல தான் இண்டரெஸ்ட்?"

"ஏன்மா எப்பவும் அடுத்தவன் பொருளுக்கு ஆசை படறீங்க?"

"சீ! கழுதை...ஒரு கார்ட் எழுதி போட சொன்னா அது அடுத்தவன் பொருளுக்கு ஆசை படறதா?"

"அவன் கொடுக்குற பரிசுப் பொருள் டிவி, பிரிஜ் இதெல்லாம் உங்க வீட்டுல இல்ல? உங்க வீட்டுக்காரர் உங்களுக்கு அதெல்லாம் கஷ்டப் பட்டு வாங்கித் தரலை. போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. எதுவா இருந்தாலும் நாமளே உழைச்சு சம்பாதிக்கணும். வீணா ஓசியிலே கெடக்கறதுக்கு ஆசை படக் கூடாது"

"சோம்பேறி நாய்ங்களா! சும்மா எருமை மாட்டு மேலே மழை பேஞ்ச மாதிரி உக்காந்து இருந்தாலும் இருப்பீங்க...ஒரு வேலை சொன்னா செய்ய மாட்டீங்க. டிவி, பிரிஜ் எல்லாம் இருக்கு தான்... ஆனா பம்பர் பரிசா மாருதி கார் குடுக்கறானாமே. அது உங்க கிட்ட இருக்கா? அது இருந்தா இப்பிடி ஆட்டோவுல நெருக்கிக்கிட்டு உக்கார வேணாமில்ல?" மடக்கிட்டதா ஒரு அநாவசியமானத் தப்புக்கணக்கு.

"மாருதி கார் நெஜமாலேயே குடுக்கறான்னு உங்களுக்குத் தெரியுமா? அவன் கம்பெனியிலேயே வேலை செய்யிற ஆளு எவனையாச்சும் செட்டப் பண்ணி சும்மா குடுக்கற மாதிரி குடுத்து ஊரை ஏமாத்தறானுங்க. எல்லாம் கேமரா ட்ரிக்" இந்தளவு யோசிச்சு கதை சொல்லுவோமே ஒழிய, ஒரு நாளும் ஒரு கார்டு எழுதி போட மாட்டோமே!

"முயற்சியே பண்ணாத சோம்பேறி பயலுங்களை என்ன சொல்லித் திருத்த முடியும்?" - பனகல் பார்க் தரிசனம் தந்து சூப்பர் ஹிட் முகாப்லாவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கல்யாணத்துக்குப் போனா "அலங்கார பூஷணி" என்ற சொல்லுக்கு (அது முதன்முறையா எப்படி எங்க அகராதில வந்ததுன்னு சரியா ஞாபகமில்ல) உண்மையான அர்த்தம் தெரிகிறது. பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தையும் கதையாக வடித்த புடவைகளையும் காதுலயும் கழுத்துலயும் இடுப்புலயும்(!) "வளர்ப்பு மகன்" திருமணத்துக்கு வந்தவர்கள் தோற்கிற அளவுக்கு அணிந்திருக்கிற ஆண்டீஸ்களை எல்லாம் பார்க்கும் போது அம்மா மாம்பழக் கலர் புடவையையே கட்டி வந்திருந்தால் கூட ஒன்னும் பெருசாக வித்தியாசம் தெரிந்திருக்காது என்று தோன்றுகிறது. அந்த மாம்பழக் கலர் புடவையை முதன்முதலில் அம்மா கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ஒரு ஆண்ட்டி கையில் இருந்து பிடுங்காத குறை தான். இந்த விஷயத்தில் அப்பாவிடமிருந்து ஒரு உதவியும் கிடைக்காது அம்மாவுக்கு. "லேடீஸ் புடவை எடுக்கிற எடத்துல நாம நின்னுக்கிட்டு என்ன பண்றது"ன்னு புடவை கடையில் நடுவில் போட்டிருக்கும் ஸ்டூலே கதின்னு அப்பாவும் அப்பாவுக்குத் துணையாக நாங்களும் உக்காந்துக்குவோம்.

அம்மா எடுக்கிற கலர் அவ்வளவாக "அடிக்கிற" கலரா இல்லாவிட்டாலும் அதைப் பத்திக் குத்தம் சொல்லி 'மாமியார்' கொடுமை படுத்துவது தடிப்பசங்க எங்க ரெண்டு பேரோட வழக்கம். நான் புது தில்லியில் இருந்த வரைக்கும், தீபாவளிக்குச் சென்னை வரும் போது புது தில்லி சவுத் எக்ஸ்டென்ஷன் பார்ட் ஒன்னில் இருக்கிற 'நல்லி'யில் புடவை எடுத்து வருவது வழக்கம். பெண்களின் கண்களுக்குக் மட்டுமே தெரியும் ஆஸ்தான கலர்களான ராமர் கலர், கண்ணன் கலர், வாடாமல்லி கலர், கத்திரிப்பூ கலர், அரக்கு கலர், பொடி கலர்(இது வரைக்கும் அது என்ன கலர்ன்னு எவ்வளவு முயற்சி பண்ணியும் கண்டு பிடிக்க முடியலை) ...அப்புறம் இந்த யானை கலர், மயில் கழுத்துக் கலர் இந்த எல்லா கலருக்கும் நம்ம இரண்டு கண்ணும் "வண்ணக் குருடு"(அதாங்க ...Colour Blind). அம்பது ஆயிரம் கலரே இருந்தாக் கூட நாம புடவை எடுக்கிற கலர் எல்லாம், நமக்கு சட்டை எடுக்கிற இங்கிலீஷ் கலரான Cream, Mauve, Lilac, Biege... இப்படித் தான்...சுருக்கமாச் சொன்னா எல்லாம் டல்லான சோப்ளாங்கி கலர். இருந்தாலும் இது வரைக்கும் நம்ம தேர்வு நல்லாயிருக்குன்னு தான் வீட்டுல சான்றிதழ். சென்னை நல்லியில் கிடைக்காத புடவையா? இருந்தாலும் பையன் டெல்லியிலே இருந்து வாங்கிட்டு வரானேன்னு ஒரு பெருமிதம் தான் காரணம்னு நெனக்கிறேன்.

இப்ப இதையெல்லாம் நெனச்சா இந்த கலர் விஷயத்தில் அம்மாவின் சாய்ஸைப் பெருமளவுக்குக் குறைத்ததில் நம்ம பங்கு அளப்பிடற்கரியதுன்னு தோணும். சில சமயம் "தவறிழைத்தான் பாண்டிய மன்னன்"னு கூடத் தோணும். ஆனா தவறிழைத்தால் தானே அவன் பாண்டிய மன்னன்? அப்பத் தானே தவறிழைத்தான் பாண்டிய மன்னன் என்ற டயலாக்குக்கும் மரியாதை, அப்பத் தானே மும்பையில் ஓட்டல் ரூமில் உக்காந்து கொண்டு அன்னையர் தினத்தன்னிக்கு லேப்டாப்பில் "தடிப்பசங்க#4"னு கதை எழுத முடியும்?
:)-