காட்சி #7 : செல்லமே செல்லம்
இந்த சின்ன வயசு, சின்ன வயசுன்னு ஒன்னு இருக்குதே...அந்த வயசுல தாங்க ஒரு மனுஷனால சக உயிர்களிடத்துல அதிக பட்சம் அன்பு பாராட்ட முடியும். இதுக்கு தடிப்பசங்களோட சின்ன வயசு மட்டும் விதிவிலக்கா என்ன? அன்புன்னா...சும்மா உங்க வீட்டு அன்பு எங்க வீட்டு அன்பு இல்ல...ரோட்டுல போறது வானத்துல பறக்குறது, இதையெல்லாம் வீட்டுல வச்சி வளர்த்து அழகு பாக்கறதுக்கு அம்மாவை நச்சரிக்கிற அளவுக்கு 'அன்போமேனியா' தான். ஆனா செல்லப் பிராணி வளர்க்க தடிப்பசங்க ஆசைப்பட்டா போதுமா, தடிப்பசங்களை வளர்க்கறவுங்க ஆசைப்பட வேணாமா? என்ன தான் பெட்(bet) கட்டி பெட்(pet) வளர்க்க ஆசை பட்டாலும் அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேணுமில்ல? பெட்டு வளர்க்கற ஆசையை எப்படியாச்சும் சாம பேத தான தண்டங்களை உபயோகிச்சு கெடப்புல போட்டுருவாங்க. அட போங்கப்பா...யாருன்னு வேற சொல்லனுமாக்கும்?
"ஒரு அல்சேஷன் நாயை வளர்த்து பெரிய சங்கிலியை ஒன்னை கழுத்துல போட்டு(நாய் கழுத்துல தான்) தெருவுல பந்தாவா, வாக்கிங் கூட்டிட்டுப் போவனும்டா"இது தான் நம்ம இளவலோட நெடுநாளைய ஆசை.
ஆனாலும் அல்சேஷன் வளக்கறதுக்கும் அஸ்டிராலஜில எடம் இருக்கனும் போலிருக்கு. அல்சேஷனுக்கும் தடிப்பசங்களுக்கும் எப்பவும் ஏழாம் பொருத்தம் தான். "நம்ம வீடே ரொம்ப சின்னது, இதுல நாய் வீட்டுக்கு வந்துச்சுன்னா எங்கே வச்சி வளர்ப்பீங்க?" அப்படீங்கறது தான் அல்சேஷன் வளர்ப்புக்கு எதிரா ஏவப்படற முதல் ஏவுகணை.
"நாயெல்லாம் ஒரு ஓரமா பால்கனியில படுத்துக்கும்மா. ஒரு சின்ன பப்பியாச்சும் வாங்கி குடுங்க" அப்படின்னு சொன்னா "சின்ன பப்பி மட்டும் சீப்புன்னு நெனக்கிறியா? அது என்ன வெலைன்னு தெரியுமா ஒங்களுக்கு? ஒரு சின்ன குட்டியே நாலாயிரம் அஞ்சாயிரம் இருக்குமாம். ஒங்களை வளக்கறதே பெருசு, இதுல நாய் வேற வளர்க்க போறீங்களா? அதெல்லாம் ஒன்னும் வேணாம்" அப்படின்னு தான் அநேகமா பதில் வரும்.
"சே! இந்த அம்மா எப்பவுமே இப்படி தாண்டா. எது கேட்டாலும் முடியாது முடியாதும்பாங்க. ஒரு சின்ன குட்டி நாலாயிரமா இருக்கும்? வாங்கித் தராம இருக்கறதுக்குன்னு ஓவரா டூப்படிக்கிறாங்கடா" - இது இளையவரு
"நாலாயிரமா இருந்தாலும் இருக்கும்டா"- இது நானு.
"அல்சேஷன் வெலை அதிகமா இருந்துச்சுன்னா ஒரு ராஜபாளையம் நாய் வாங்கி வளக்கலாமா? சின்ன குட்டியா வாங்குனா நூறு ரூபாக்குள்ள வாங்கிடலாம்" - வில்லு போல உடம்பு கொண்ட திமிறிக்கிட்டு ஓடற ஒரு அழகான நாயை வாக்கிங் கூட்டுட்டுப் போறதுன்னா சும்மாவா? அதுக்காக எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளத் தம்பி தயாராவே இருந்தாரு.
எடப் பிரச்சினையை அல்சேஷனுக்குக் காரணமா சொன்னவங்க "ராஜபாளையம் மட்டும் ஒனக்கு நூறு ரூபால குடுக்கறாங்க வா. ராஜபாளையம் ரொம்ப கோவக்கார நாய். நீ கொஞ்சம் சரியா கவனிக்கலைன்னா உன்னையே கடிச்சி வைக்கும். கடிக்கிற நாயெல்லாம் வேணாம். வயித்தை சுத்தி பதினாறு ஊசி போட்டுக்க ரெடின்னா சொல்லு"ம்பாங்க. வேணாம்னு சொல்லறதுக்குக் காரணத்துக்கா பஞ்சம்? ஆனாலும் நாய் கடிக்கு வயித்தைச் சுத்தி பதினாறு ஊசி போட்டுக்கிட்ட ஒரு பையனையும் அவன் அழுத அழுகையையும் பாத்ததுக்கப்புறம் நாய் கடின்னா லைட்டா(லைட்டாத் தான்) ஒரு பயம். அதுனால வயித்தைச் சுத்தி 16 ஊசி அப்படீங்கற காரணம் நல்லா வர்க்அவுட் ஆகும்.
அதுக்கப்புறம் ஒவ்வொரு சீசன்லயும் ஒவ்வொரு நாய் வளர்க்கனும்னு தோனும். சில சமயம் ஜெர்மன் ஷெப்பர்டு, சில சமயம் வாலில்லாத டாபர்மேன் நாய், சில சமயம் புசுபுசு பொமரேனியன் நாய் இப்படின்னு. ஒவ்வொரு நாய் வளக்கறதுக்கும் என்னெல்லாமோ தில்லாலங்கடி வேலை எல்லாம் பண்ணி பாத்தோம். ஆனா நம்மளைப் பெத்தவங்க நாம சின்னப்பசங்களா இருக்கறதுக்கு முன்னாடியே சின்னப்பசங்களா இருந்துட்டாங்களா? அதனால நமக்கு எல்லா சீசன்லயும் ஸ்டாண்டர்டா எதாச்சும் ஒரு காரணத்தைக் காட்டி பல்பு குடுத்துருவாங்க.
"ஜெர்மன் ஷெப்பர்டு மாட்டுக் கறியைத் தான் சாப்புடுமாம். அதெல்லாம் வேணாம்", "டாபர்மேனா? வாலில்லாம எவ்வளவு அசிங்கமா இருக்குப் பாரு","பொமரேனியன் முடி வீடெல்லாம் கொட்டும். வீடே அசிங்கம் ஆயிடும்" இப்படின்னு நாங்க கேக்கற கேள்விக்குத் தகுந்த மாதிரி எதாச்சும் ஒரு சால்ஜாப்பு வந்துரும்.
காசு குடுத்து தான் நாய் வாங்க முடியலை. எங்கேயாச்சும் வெளில போகும் போது ரொம்ப அழகா, குட்டியூண்டா இருக்கற ஒரு நாக்குட்டியைப் பாத்தா அப்படியே வீட்டுக்கு எடுத்துட்டு வந்து எதாச்சும் டாமி, ஜிம்மின்னு பேரு வச்சி வளக்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கும். ரோட்டுல திரிஞ்சிட்டு இருக்கற குட்டி நாயைத் தூக்கிட்டு வர காசா? பணமா? காஸ்லியான நாயை வாங்கித் தர சொன்னாத் தான் முடியாதுங்கறாங்க, ரோட்டோரத்துல ஃப்ரீயா கெடைக்கிற நாயைத் தூக்கி வளக்கலாம்னு நெனச்சா...அது தான் ராசா முடியாது.
"அம்மா அந்த குட்டி நாய் அழகா இருக்குதும்மா. அதை தூக்கிட்டுப் போய் நம்ம வீட்டுல வச்சி வளக்கலாம்மா"
"அதெல்லாம் ஒன்னும் வேணாம். அதோட அம்மா இங்க தான் எங்கேயோ பக்கத்துல போயிருக்கு. நீ குட்டியைத் தூக்கற நேரம் உன்னை பாஞ்சு வந்து கடிச்சிடும்" அப்படின்னு குட்டியோட அம்மா எதோ எங்கம்மா கிட்ட பாத்துக்கங்கன்னு சொல்லிட்டுப் போன மாதிரி ஒரு பதில் வரும்.
"ரோடு காலியா இருக்கு. அதோட அம்மாவையும் காணும். அது வர்றதுக்குள்ள தூக்கிட்டு வந்துடலாம்மா" இது தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனான தம்பி.
"சரி! சும்மா குட்டியைத் தூக்கிட்டு வரேன் வரேன்னு சொல்லறியே? அது சின்ன குட்டியா இருக்கே? அதாலத் தானா சாப்புட முடியாதே? அதுக்கு யாரு சாப்பாடு குடுப்பா. அதுனால அதோட அம்மா கிட்டவே அது இருக்கட்டும். வா போலாம்" அப்படின்னு ஒரு பதில் வரும்.
"இல்லம்மா. அதை வளக்கனும்னு ஆசையா இருக்கும்மா. ப்ளீஸ்மா" அப்படின்னு அடுத்த முயற்சி எடுக்கப்படும்.
"நாய் வீட்டுல வச்சி வளத்தேன்னா அது கண்ட எடத்துல டூ பாத்ரூம்லாம் போவுமே? அதையெல்லாம் யாரு சுத்தம் பண்ணுவா? நான்லாம் ஒன்னும் பண்ண மாட்டேன். அதெல்லாம் சரி படாது, வா போவலாம்"அப்படின்னு அடுத்த பிரம்மாஸ்திரம் ஏவப்படும்.
"டூ பாத்ரூம்லாம் போச்சுன்னா நான் பாத்துக்கறேன்மா. ப்ளீஸ்மா"
"ஆமா, இவருக்கே ஒரு ஆளு வேணும். இவுரு நாயைப் பாத்துக்கறாராம். அடம் புடிக்காம் பேசாம வா. சும்மா ரோட்டுல கெடக்கற சொறி நாயெல்லாம் வீட்டுல கூட்டிட்டு வந்து வச்சிக்கிட்டா நீயும் அதை மாதிரி தான் சொறிஞ்சிக்கிட்டு நிப்பே". கரெக்டா அந்த நேரம் பாத்து தான் நாய்க்கும் சொறிஞ்சிக்கனும் போல தோணனுமா? "பாத்தியா? நான் சொன்னேன்ல எப்படி சொறியுது பாரு? நாய் வளக்கறாராம் நாய். பேசாம வா" அப்படின்னு சாம பேத தான தண்டத்துல நாலாவதான தண்டமும் உபயோகிக்கப் படும்.
அதுக்கப்புறம் எங்கேருந்து நாயைத் தூக்கிட்டு வர முடியும்? திருவல்லிக்கேணியில ஒரு சின்ன வீட்டுல வாழ்ந்ததுனால, எட நெருக்கடியைக் காரணம் காட்டி காட்டி, நாய் வளக்கற ஆசை அப்படியே படிப்படியா குறைஞ்சி போச்சு. அதுக்கப்புறம் வீட்டு மொட்டை மாடில டிவி சரியா தெரியலைன்னு(டிவி ஸ்டேஷன் ரொம்ப கிட்டத்துல இருந்ததுனால) ஆண்டெனா திருப்பப் போகும் போது எப்பவாச்சும் உக்காந்துருக்கற கிளியைப் புடிச்சு வளக்கலாம்னும் முயற்சி பண்ணி பாத்தோம். ஆனா நாங்க கிளி புடிக்கிறதுல கில்லாடின்னா, கிட்டப் போய் "தோ புடிச்சிட்டோம்"னு கத்தற நேரத்துல எஸ்கேப் ஆகறதுல கிளி கில்லாடிகளின் கில்லாடி. வீட்டு பக்கத்துலேயே நெறைய பூனைங்க திரிஞ்சிட்டு இருக்கும்ங்கிறதுனால எப்பவுமே பூனை வளர்க்கனும்னு தோணுனதேயில்லை.
இப்படியெல்லாம் பெட்டு எதுவும் வளக்க முடியாத ஏக்கத்துனாலேயே ஸ்கூல் பசங்களுக்காக என் தம்பி மொதலை வளக்க ஆரம்பிச்சிட்டாரு. ஸ்கூல்ல யாராச்சும் "எங்க வீட்டுல நாய் இருக்கு"ன்னு சொன்னா, இவரும் "எங்க வீட்டுல கூடத் தான் மொதலை இருக்குடா"ம்பாரு.
"என்னது முதலையா? உங்க வீட்டுக்கு நான் நாளைக்கு வந்து பாக்கறேன்" அப்படின்னு இளிச்சவாயன் யாராச்சும் சொன்னா "இல்லடா, அதுக்கு ஒடம்பு சரியில்லை. மொதலைக்குத் தக்காளி மட்டும் குடுக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்தாரு. எங்கண்ணன் தெரியாம மொதலைக்குத் தக்காளி குடுத்துட்டான். அது சாப்புட்டுட்டு பயங்கரமா அழ ஆரம்பிச்சுடுச்சு. எங்கப்பா கூட ஏன் தக்காளி குடுத்தேன்னு எங்க அண்ணனை அடிச்சிட்டாரு. அதுனால அதை இப்ப ஆஸ்பிட்டல்ல சேத்துருக்கோம்"அப்படின்னு அவங்க அண்ணனை லூசாக்கி அடியும் வாங்க வச்சிடுவாரு.
சின்னப் பசங்களா இருந்த போது இருந்த "அன்போமேனியா" அப்படி அப்படியே குறைய ஆரம்பிச்சிட்டது. அதுக்கப்புறம் நாய் வளக்கனும்னு தோணவேயில்லை. புது வீட்டுக்குப் போன நேரம்(நான் அப்போ சென்னையில இல்லை), எதோ ஒரு ரோட்டுல போற நாய் க்கு ஒரு வேளை சோறு போட்டதும் அப்படியே வீட்டுப் பக்கமே சுத்த ஆரம்பிச்சுடுச்சு. போன்ல பேசறப்ப அம்மா இதெல்லாம் சொல்லிருந்தாங்க, ஆனா நான் அப்படியே மறந்துட்டேன்.
ரொம்ப நாளைக்கு அப்புறம் கடந்த மார்ச் மாசம் சென்னைக்கு வீட்டுக்குப் போயிருந்த போது...வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருந்துச்சு. புது ஆளான என்னைப் பாத்து மூடியிருந்த கேட்டுக்குள்ள படுத்துருந்த நாய் பயங்கரமா கொலச்சுது. என்னடா இது நம்ம வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருக்குது, அது என்னடான்னா நம்மளையே பாத்து கொலைக்குதேன்னு நெனச்சிக்கிட்டேன். ஆனா கேட்டைத் தெறந்து விட வந்த எங்கம்மா நாயை சமாதானம் படுத்த சொன்னதைக் கேட்டு தான் ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன்.
அப்படி என்ன சொன்னாங்கன்னா கேக்கறீங்க? "டேய் டைசன்! ஒன் அண்ணண்டா" அப்படின்னாங்க. உங்க வீட்டுல ஒரு நாய் வளத்தாங்கன்னா அந்த நாய்க்கு அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லாமுமா நீங்களாத் தான் இருக்கணும். அது வீட்டுக்குள்ள போன உடனே தான் தெரிஞ்சிக்கிட்டேன்.
"டேய்! அல்சேஷன், ஜெர்மன் ஷெப்பர்டு, ராஜபாளையம் இதெல்லாம் பந்தாவா வளக்கனும்னு சொல்லிட்டு எதோ ஒரு தெரு நாயை வளக்குறே, அதுக்கு வேற நான் எதோ அண்ணனாம், அம்மா சொல்றாங்க" இது தடிப்பசங்கள்ல இளையவரு கிட்ட நானு.
"ஆமா! டைசன் என் தம்பி தான்" அப்படின்னான்.
"என்னடா பேரு அது டைசன்னு, வைக்கிறது தான் வைக்கிறே...ஒரு நல்லவன் பேரை வைக்கக் கூடாது?"
"அப்படியெல்லாம் இருந்தா தான் ஒரு பந்தா. எல்லாரும் அதப் பாத்து பயப்படுவாங்க"
"பயப்படறதுக்கா? மத்த நாய்ங்களோட சண்டை எல்லாம் போடுமா" அப்படின்னு நான் கேட்டதுக்கு "உஹூம், வீட்டுக்குள்ளேருந்து சவுண்டு வுடறதுன்னா நல்லாச் சத்தமா விடுவாரு, வெளியே போனா செமத்தியா ஒத வாங்கிட்டுத் தான் வருவாரு"அப்படின்னான்.
"என்னமோ போ... ஒரு பயந்தாங்கொள்ளி நாய்க்கு ஒரு அக்யூஸ்டு பயலோட பேரு"
"டாய்! என் தம்பியைப் பத்தி எதாவது சொன்னே? அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்" - டைசனோட சின்ன அண்ணாத்தே.
"பாத்தியா இந்த டைசன் பயலுக்குக் திமிரை? எதிர் வீட்டுல எலும்பைத் தின்னுட்டு வந்துட்டு நான் சாம்பார் சாதத்தைப் போட்டதும் தின்ன மாட்டேங்கறான். அப்படியே ஒன் தம்பிங்களை(என் தம்பியும், என் சித்திப் பையனும்) மாதிரி தான் இவனும், எல்லாம் நாக்குக்கு ருசியாத் தான் கேக்கும்" -டைசனோட அம்மான்னு சரியாக் கண்டு பிடிச்சிருந்தீங்கன்னாலும் பரிசு எதுவும் கெடயாது.
"ஒரு வேளை டைசனுக்கும் கடக ராசியா இருக்குமோ?" - சொல்லிட்டு மொத்து வாங்கறதுக்கு முன்னாடி ஜூட் விட்டவரு திருவாளர் டைசன் அவர்களோட பெரிய அண்ணாத்தை.